Author: வந்தியத்தேவன்
•7:18 PM
எங்கட விஜெயின் எல்லுபோலை என்ரை சுயபுராணம் என்ட பதிவிலை நாங்க பின்னூட்டத்திலை இயத்துகள் பற்றிக் கொஞ்சம் கதைச்சிருக்கோம். அதனைப் பற்றி கொஞ்சம் விரிவாக இந்தப் பதிவில்.

பொதுவாக எங்கடை ஊர்களிலை சைவத்திற்க்கு பிறம்பாக மச்சத்திற்க்கு பிறம்பாக இயத்துகள் இருக்கும். சில இடங்களில் இரண்டு குசினி கூட இருக்கும். அதவாது ஒரு குசினி சைவச் சமையலுக்கு இன்னொரு குசினி மச்சத்துக்கு, திருவிழாக்காலங்களில் மச்சக்குசினி பூட்டியபடியே இருக்கும். திருவிழா முடிந்து திறந்துபார்த்தால் சந்திரமுகி அறைபோல் இருக்கும்.

பொதுவாக ஈழத்து சைவசமயத்தவர்கள் வெள்ளிக்கிழமைகளில் சைவச் சாப்பாடுதான். பொதுவாக தமிழர்களின் கடவுளாக முருகனைச் சொல்லுவார்கள் அதனால் தான் என்னவோ எங்கடை ஆட்கள் முருகனிற்க்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமையில் சைவம் தான். எங்கடை வடமராட்சி கடற்கரைக் கிராமத்தைச் சேர்ந்த மீன் பிடிப்பவர்கள் வியாழக்கிழமை இரவு பெரும்பாலும் மீன் பிடிக்கச் செல்வதில்லை. ஏனென்டால் அடுத்த நாள் விற்கமுடியாது. நல்லூர்த் திருவிழா நாட்களிலும் யாழ்ப்பாணத்தில் மீன் இறைச்சி விற்பனை குறைவு என்பார்கள். எங்கடை ஊரிலை ஒரு சில கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் கூட வெள்ளிக்கிழமை மச்சம் சாப்பிடுவதில்லை.

பொதுவாக திங்கள் தொடக்கம் வியாழக்கிழமை மச்சம் காய்ச்சுகிறவர்கள். வெள்ளிக்கிழமை விரதம் காய்ச்ச பிறம்பான இயத்தையே பயன்படுத்துவார்கள். அந்த நாளிலை பாருங்கோ மண் சட்டிகள், மண் பானைகள் தான் உணவு சமைக்கப் பயன்படுத்துவது. அப்போ ஒவ்வொரு கறிக்கு ஒவ்வொரு சட்டியே பாவிக்கலாம் தானே.

வியாழக்கிழமை இரவே மச்ச இயத்துகளை கழுவி வீட்டுக்குப் பின்புறம் ஒரு உறியிலை போட்டுவிடுவார்கள். இரண்டு குசினி இருந்தால் மச்சக் குசினிக்கையே வைத்துவிடுவார்கள். வெள்ளிக்கிழமைகளில் தற்செயலாக மச்சச் சட்டிகளைத் தொட்டால் அவ்வளவுதான் பெரிசுகள் உடனே குளிச்சிட்டுத்தான் வீட்டுக்கை எடுப்பார்கள். இதெல்லாம் ஒரு பத்து பதினைந்து வருசத்துக்கு முந்தின கதைகள். இப்போ பிறம்பான சட்டிகள் பாவிச்சாலும் அவ்வளவும் கெடுபிடிகள் இல்லை.

இதிலை பிறகு கோயில்த் திருவிழா நாட்களுக்கு பிறம்பாக இன்னொரு வகையான சட்டிகள். வெள்ளிக்கிழமை சமைக்கும் விரதச் சட்டிகள் விரத நாட்களில் பாவிப்பது குறைவு. திருவிழா முடிந்ததும் அவற்றைக் கழுவி இன்னொரு இடத்தில் கவிழ்ந்து விடுவார்கள். பிறகு இன்னொரு கோயில்த் திருவிழாவுக்குத் தான் எடுப்பார்கள்.

ஆனால் கந்த சட்டிகாலங்களில் புதிய சட்டிகள், பானை வாங்கித் தான் சமையல். கந்த சட்டிக்கு சாதாரண வெள்ளிக்கிழமைகளில் பாவிக்கும் சட்டிகளோ, இல்லை கோயில்த் திருவிழாக்களுக்கு பாவிக்கும் சட்டிகளோ பாவிப்பதில்லை. கந்த சட்டி தொடங்கும் காலத்தில் புதிய சட்டிகள் வாங்குவார்கள். முதல் நாள் வீடெல்லாம் தூசி தட்டி வடிவாக கழுவித் தான் விரதம் தொடங்குவார்கள்.

எங்கட சனம் கந்தபுராணக் கலாச்சாரத்தை பின்பற்றுவதாலோ என்னவோ கந்த சட்டி விரதத்திற்க்கு அனைத்து இயத்துகளும் பிறம்பாகவே இருக்கும்.

வெள்ளிக்கிழமை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தின் சில இடங்களில் செவ்வாய்க்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் சைவம் சாப்பிடுகிற பழக்கம் இருக்கிறது. இதற்கான காரணம் அந்தப் பக்கங்களில் உள்ள கோயில்களே காரணமாகும்.

வலிகாமத்தில் உள்ள மக்கள் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவிலுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமைகளில் விரதம் சாப்பிடுவார்கள், தென்மராட்சி மக்களும் அங்கேயும் ஒரு துர்க்கை அம்மன் கோயில் இருப்பதால் செவ்வாய்க்கிழமை விரதம் தான். அதே போல் அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன் கோயில் பக்கம் இருக்கும் மக்களும் செவ்வாய்க்கிழமை விரதம்.

வடமராட்சி மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஸ்பெசல் ஏனென்றால் அவர்கள் வல்லிபுரக் கோயில் விரதம் என்பதால் அன்றைக்கும் சைவம் தான். கீத்தின் வல்லிபுரக்கோவில் பதிவில் சாயினி கூட இதனைக் குறிப்பிட்டிருகிறார். என்டை கூட்டாளி ஒருவன் அவனும் வடமராட்சிதான் வெள்ளிக்கிழமை மச்சம் சாப்பிட்டாலும் ஞாயிற்றுக்கிழமை கடைசிவரை மச்சம் சாப்பிடமாட்டான் எனென்டு கேட்டால் பிறகு இரவு கனவிலை பாம்பு வரும் என்பான்.

இடப்பெயர்புகளும், புலம் பெயர்களும் இந்த சட்டிக் கலாச்சாரத்தை அந்த இடங்களின் இயந்திர வாழ்க்கைகளினால் சிலவேளை கைவிட்டிருக்கலாம். ஆனாலும் இன்றும் ஒவ்வொரு விரதத்திற்க்கும் தனித்தனியாக சட்டிகள் வைத்திருக்கும் கலாச்சாரம் எங்கள் கிராமங்களில் நிலவுகின்றது.
This entry was posted on 7:18 PM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On August 14, 2009 at 4:52 AM , Unknown said...

இயத்து எண்டுறதை நாங்கள் ஏதனம் எண்டு சொல்லிறனாங்கள்.. ஆக, யாழ்ப்பாணத் தமிழுகுள்ளையே இவ்வளவு வித்தியாசம்... நீங்கள் ஊரில சரியா எவ்விடம் வந்தியண்ணா?

 
On August 14, 2009 at 11:08 AM , துபாய் ராஜா said...

எங்கள் ஊர்ப்பக்கமும் இதே பழக்கம் உண்டு.முட்டை ஆம்லேட் போட தனி தோசைக் கல்தான்.

 
On August 16, 2009 at 2:34 AM , யசோதா.பத்மநாதன் said...

வந்தியத் தேவர் பெரிய பணக்காரர் போல! சட்டி பானையே இவ்வளவா? எங்களிடம் மச்சத்திற்கு ஒரு செட், சைவத்திற்கு ஒரு செட் அவ்வளவு தான்.

சுகமா இருக்கிறியளோ வந்தியத் தேவரே?

 
On August 16, 2009 at 10:30 AM , வந்தியத்தேவன் said...

/Kiruthikan Kumarasamy said...
இயத்து எண்டுறதை நாங்கள் ஏதனம் எண்டு சொல்லிறனாங்கள்.. ஆக, யாழ்ப்பாணத் தமிழுகுள்ளையே இவ்வளவு வித்தியாசம்... நீங்கள் ஊரில சரியா எவ்விடம் வந்தியண்ணா?//

இயத்து கரவெட்டிப்பக்கம் சில ஊர்களில் பாவிக்கபடும் சொல். கே.டானியல், தெணியான் கதைகளில் வருகின்ற சொல். பொது இடத்திலை ஊரையெல்லாம் கேட்ககூடாது சரியோ. ஹாட்லியில் தான் படித்தேன். எந்த ஆண்டு போன்றவற்றைச் சொன்னால் வயதைக் கண்டுபிடித்துப்போடுவார்கள். நானும் கானா அண்ணை போல யூத்.

 
On August 16, 2009 at 10:33 AM , வந்தியத்தேவன் said...

// துபாய் ராஜா said...
எங்கள் ஊர்ப்பக்கமும் இதே பழக்கம் உண்டு.முட்டை ஆம்லேட் போட தனி தோசைக் கல்தான்.//

அப்படியா? தகவலுக்கு நன்றிகள்.

 
On August 16, 2009 at 10:38 AM , வந்தியத்தேவன் said...

//மணிமேகலா said...
வந்தியத் தேவர் பெரிய பணக்காரர் போல! சட்டி பானையே இவ்வளவா? எங்களிடம் மச்சத்திற்கு ஒரு செட், சைவத்திற்கு ஒரு செட் அவ்வளவு தான்.

சுகமா இருக்கிறியளோ வந்தியத் தேவரே?//

இல்லையெணை மண்சட்டி பானை அவ்வளவு விலை இல்லைத்தானே. அத்துடன் எங்கடை வீட்டிலை மச்ச சட்டி இல்லை(ஹிஹிஹி) நாங்கள் சைவச் சாப்பாடுகாரர். ஆனாலும் திருவிழாவுக்கு பிறம்பு, கந்தசட்டிக்கு பிறம்பு என சட்டி பானை இருக்கிறது.

அப்புறம் ஆச்சி இலங்கை வலைப்பதிவர் சந்திப்பை நடத்துகிற குழுவிலை இருப்பதாலை கொஞ்சம் வேலை அதிகம். முதன்முறை சந்திக்கபோறம் அதுதான் நிறைய வேலைகள். சந்திப்பு முடிஞ்சாப்பிறகு அதைப் பற்றி உங்களுக்குச் சொலுகிறன் எணை.

அதுசரியெணை நீங்கள் எங்கையணை போனணீடர்கள் இவ்வளவு நாளும். எங்கட சினேகிதி வெள்ளி காட்டுகிறா? வர்மா பேய் காட்டுகிறார்.