Author: வலசு - வேலணை
•7:01 AM
அண்மையில் எனது மச்சாள்முறையான ஒருவருடன் தொலைபேசியில் உரையாடுகையில், தனது சிறுபிராயத்தில் எம்மூரில், எங்கள் வீட்டில் தனக்கு ஏற்பட்டவொரு அனுபவத்தினை என்னுடன் பகிர்ந்திருந்தார். அது நடந்தபோது எனக்கு ஏறத்தாழ மறை நான்கு (-4) வயதிருந்திருக்கும். எனவே அச்சம்பவம் எனக்கு இப்போதும் நினைவிற்கு வரவில்லை(!). அது, எங்கள் வீட்டில், அவருக்கு புதிதாக ஒரு கச்சான் முளைத்திருந்த, சொறி சொறி மச்சான் தொட்டிலில் ஆடிக்கொண்டிருந்த நேரம். புது மச்சானைப் பார்ப்பதற்காய் ஆவலுடன் வந்திருந்தார். வந்தவரிடம் அயல் வீட்டுக்காரர் ஒரு பொதியைக் கொடுத்து, இது புதிய மச்சானின் பரிசு என்றும் அதைப் பிரித்துப் பார்க்குமாறும் கூறினார். அதைப்பிரித்துப் பார்க்கையில் ஒரு விடயத்தைக்கூறி அதைக்கட்டாயம் செய்யவேண்டும் என்றும் கூறினாராம். பொதிக்குள் இருந்ததோ ஒரு இரணை மிளகாய். இவருக்கோ அடியும் விளங்கவில்லை நுனியும் விளங்கவில்லை. எதற்காக ஒரு இரணை மிளகாயைப் பொதி செய்து தந்து விட்டு இப்படி ஒரு செயலையும் செய்யச் சொல்கிறார் என்று குழம்பியவர் அழுதுவிட்டாராம். அப்போது அவரும் சிறுபிள்ளை. பின்னர் அருகிலிருந்த எம்மூரவர்கள் அவரை சமாதானப்படுத்தி, பரவாயில்லை உனக்கு இதைத் தந்தவர் உனக்கு மச்சான், மச்சாள்முறை இல்லாததால் அவர் கூறியதைச் செய்யத்தேவையில்லை என்று கூறிய பின்னர்தானாம் அழுகையை நிறுத்தினாராம். அவர் இப்படியான ஒரு விடயத்தை இதற்கு முன்னர் கேள்விப்பட்டதில்லையாம்.

எங்கள் ஊரில் (வேலணையில்) இரணைப் பொருட்களை மச்சான் அல்லது மச்சாள் முறையானவர்களிடம் பொதிசெய்து கொடுத்து விட்டு அவர் அதனைப் பிரித்து அநத இரணைப் பொருளினை காண்கையில் தங்களுக்கு விருப்பமான ஒரு கோரிக்கையையும் சொல்லிவிடுவார்கள். அந்தக் கோரிக்கையினை இரணைப் பொருளினைப் பெற்றவர் நிறைவேற்றியேயாக வேண்டிய கட்டாயம் எங்களூரில் நிலவி வந்தது. இரணைப் பொருட்களாகப் பொதுவாக மிளகாய், வாழைப்பழம், பனங்கிழங்கு போன்றவையே பயன்பாட்டில் இருக்கிறது.

எனக்குத் தெரிந்து எனது மச்சாள் ஒருவரிடம் இவ்வாறு மாட்டுப்பட்டிருக்கிறேன். அப்போது எனக்கு எட்டு வயதிருக்கும். அவர் இருந்த இடத்திற்கு நான் சென்றிருந்த போது என்னிடம் ஒரு பொதியைத் தந்துவிட்டு அதைத்ததிறந்து பார்க்கச் சொன்னார். அதற்குள் இருந்தது ஒரு இரணை வாழைப்பழம். அவர் உடனே என்னிடம் 50 கொழுக்கட்டைகள் அவித்துக் கொண்டுவந்து தருமாறு கேட்டிருந்தார். கொடுத்தேனா இல்லையோ என்பது நினைவில் இல்லை. 95இல் இடப்பெயர்ந்திருந்த காலத்தில் எனது மச்சாள் ஒருவருக்கு நான் இரணைப் பனங்கிழங்கைக் கொடுத்துவிட்டு 100 கொழுக்கட்டைகள் கேட்டிருந்தேன். அப்போது அது சின்னப்பிள்ளை. அதற்கு இரணைப்பொருட்களைப் பற்றிய பழக்கவழக்கங்கள் எதுவும் தெரிந்திருக்கவில்லை. அது தனது தந்தையைப் பார்த்தது. அவர் இடம்பெயர்ந்திருப்பதால் கொழுக்கட்டை அவிக்கமுடியாதெனவும் வேறு ஏதாவது கேட்கச் சொல்லியும் கூறிப் பின்னர், வேறொரு உணவுப் பண்டத்தில் அந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைநதது.

எமது காலத்தில் பொதுவாக இரணைப்பொருட்களைக் கொடுத்துவிட்டுப் பதிலாக உணவுப்பொருட்களையே கேட்பது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் எனக்கு இரண்டு தலைமுறைகள் முநதிய காலத்தில் கல்யாண வீட்டிற்கு பந்தல் போடுவது, மேளம் பிடிப்பது போன்ற கோரிக்கைகளும் இருந்து வந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மனக்கசப்புகளினால், பிற்காலத்தில் உணவுப் பண்டங்களை மட்டுமே கோரிக்ககைகளாக வைக்கலாம் என்றும் விதியினை மாற்றிவிட்டார்கள். அத்துடன் பொதியினைப் பெறுபவர், தந்தவர் தனது கோரிக்கையினைச் சொல்லிமுடிக்கு முன்னர் தரப்பட்ட இரணைப் பொருளை உட்கொண்டு விட்டால் அந்தக்கோரிக்கையினை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. மேலும் இது பற்றி விழிப்பாக இருப்பவர்கள் மச்சான் அல்லது மச்சாள் முறையானவர்களிடமிருந்து பொதிகளினைப் பெறுவதைத் தவிர்த்தும் வந்திருக்கின்றனர். ஆனாலும் ஒருமுறை பொதியினைப் பெற்றவர், அநதக் கோரிக்கையை நிறைவேற்றும் பொழுது உணவுப்பண்டங்களுடன் வேறொரு இரணைப் பொருளை வைத்து தனது கோரிக்கையையும் சொல்லிவிடுவதும் நடப்பதுண்டு.

இப்போதும் இந்தப் பழக்கவழக்கம் அங்கே நடைமுறையில் இருக்கிறதா என்பது சந்தேகமே. ஏனெனில் ஊரில் தான் யாருமே இல்லையே. மேலும் வேலணையின் எல்லாப் பிரதேசங்களிலும் இந்த பழக்கவழக்கம் நடைமுறையில் இருந்துவந்ததா என்பதும் தெரியவில்லை.
Author: மணிமேகலா
•6:28 AM
ஆருக்கு மாங்காய் சம்பல் வேணும்?

இந்த பாண் சாப்பிடுறவை, புட்டுச் சாப்பிடுறவை, தோசை சாப்பிடுறவை, இட்லி சாப்பிடுறவை மரவெள்ளிக்கிழங்கும் சம்பலும் வேணுமெண்ணுறவை இல்ல ரொட்டி தான் எனக்கு வேணும் எண்ணுறவை எல்லாரும் இப்ப என்னோட சண்டைக்கு வரக் கூடாது.ஏனெண்டா நீங்கள் தான் இண்டைக்குச் சம்பல் செய்யப் போறீங்கள்.அதோட இதுக்குத் தேவையான பொருளுக்குள்ள முக்கியம் அம்மி குழ(ள?)வி, உரல் உலக்கை.அதோட குனிஞ்சு வளைஞ்சு வேலை செய்யிறவையும் வேணும்.எல்லாரும் ஓமோ?

இப்ப குல குலயா முந்திரிக்கா விளையாடிக் களைச்சுப் போனன் எண்டு ஒருத்தரும் சாட்டுச் சொல்லிப் போட்டு ஓடக்கூடாது.எல்லாரும் கால் முகம் கழுவி சாமியக் கும்பிட்டுட்டு ஓடி வாங்கோ. இப்ப பள்ளிக் கூட லீவு தானே? ஆன படியா இனி வீட்டு வேலையும் கொஞ்சம் பழகுங்கோ! ஆம்மிளைப்பிள்ளயள், பொம்பிளப்பிள்ளயள் எல்லாரும் தெரிஞ்சிருக்க வேண்டிய விசயம் இது.

25 வருசத்துக்கு முன்னம் ஈழத் தமிழரின்ர சாப்பாட்டில இந்தச் சம்பலும் அம்மிகுழவி, உரல்உலக்கையும் முக்கிய சாமான்கள்.

சரி, வந்திட்டியளோ?சம்பலில கன வகை இருக்கு பிள்ளயள்.தேங்காய் சம்பல், அதிலையும் உவன் பிள்ள சொன்ன மாதிரி சிவப்புச் சம்பல், பச்சை சம்பல்(வெள்ளச் சம்பல்?),சட்னி - இதுகள விட இஞ்சிச் சம்பல், மாங்காய் சம்பல் எண்டும் சிலது இருக்கு.இப்ப சட்னியப் பற்றி எழுதினா பிறகு இட்லி எப்பிடிச் செய்யிறதெண்டு கேப்பீங்கள்.இடிச்ச சம்பல் எண்டு சொன்னா ஆச்சியாச்சி தோசை சுடணை எண்ணுவியள்.அதில பிறகு எண்ணை தோசை, வெங்காயத் தோசை ஆளாளுக்குச் சுடச் சுடத் தாணை எண்ணுவியள்.பிறகு இது சமையலறையாப் போடுமோ எண்டு தான் எனக்குப் பயம்.கூழ் காரரும் காவல் நிக்கினம்.அதால இஞ்சிச் சம்பல் மாங்காய் சம்பல் இதுகளப் பற்றி மட்டும் சொல்லுறன்.எல்லாத்திலயும் சின்னச் சின்ன மாற்றங்கள் தான்.பிறகு உங்கட ரசனை, விருப்பம், ருசிக்கேற்ற படி நீங்கள் மாத்திறது தானே!

அதோட இன்னொரு விசயம் பிள்ளயள். கவனமாக் கேக்கிறியளே? சமையல் ஒரு கலை. இதுக்கு ஆர்வம் இருக்க வேணும்.கைப் பதம் எண்டு ஒண்டு இருக்குது.ஏனோதானோ எண்டு செய்யக் கூடாது.முழு மன ஈடுபாட்டோட செய்யவேணும். அதுக்கொரு மனம், ரசனை, விருப்பம் எல்லாம் வேணும்.கலை உணர்வோட, மன விருப்பத்தோட, அளவான சூட்டோட,அன்போட,பரிமாறுறதில எல்லாம் ஒரு ருசி இருக்குது.நான் சொன்னா நம்ப மாட்டியள். இதெல்லாம் அனுபவத்தோட தான் வரும்.அதோட சாப்பிடுறவையும் ரசனையோட சாப்பிடுறவையா இருந்தா இன்னும் விசேசம்.

என்ன அங்க நெளியிறியள்! நான் கனக்க கதைக்கிறனே? கோவிக்காதைங்கோ பிள்ளயள். முதல் தொடக்கத்திலேயே இந்த அடிப்படையளச் சொல்லிப் போட்டால் நீங்கள் மறக்க மாட்டீங்கள் தானே! அதுக்காகத் தான் சொன்னனான். கோவிக்காதைங்கோ. எனக்குத் தெரியும் நீங்கள் நல்ல ரசனையான பிள்ளையள்:-)

சரி மாங்காய்சம்பல் அரைப்பமே?

தேவையான பொருட்கள்;

காம்பு நீக்கிக் கழுவிய செத்தல் மிளகாய் 8-10 ( உங்கள் உறைப்பின் தேவைக் கேற்ப)
கறள் இல்லாமல் துருவிய தேங்காய் பூ - பாதி மூடி.
நாரில்லாத தோல் சீவிய மாங்காய் -பாதி
உடைத்துக் கழுவிய சின்ன வெண்காயம் - 3-4
உப்பு - தேவையான அளவு
கழுவிய கருவேப்பிலை - ஒரு நெட்டு

செய்முறை;-

இவை எல்லாவற்றையும் ஒரு தட்டில் தனித்தனியாக வைத்துக் கொண்டு ஒரு கிண்ணத்தில தண்ணியும் கொண்டு அம்மியடிக்குப் போகவும்.

அம்மியையும் குளவியையும் நன்றாகக் கழுவவும். பின் செத்தல் மிளகாயையும் உப்பையும் வைத்து சற்று நீர் தெளித்து விழுதாக (நன்றாக) அரைக்கவும்.பின் மாங்காயை வைத்து அரைக்கவும். (இது வழுகி விழப் பார்க்கும், கவனமாக அரைக்க வேண்டும்.) நன்றாக அரைபட்டதும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிப் போடாமல் தேங்காய்ப் பூவை வைத்து அரைக்க வேண்டும். கரைப் பக்கம் போயிருக்கும் தேங்காய்ப்பூ கலவையை வழித்து நடுவில் வைத்து எல்லாப் பூவும் நன்றாகக் அரைபடும் படி உங்கள் கைகள் லாவகமாக இயங்க வேண்டும். (கையைச் சம்பலுக்குள் வைத்தால் அருகில் வைத்திருக்கும் தண்ணீரில் கையைக் கழுவி விட்டு குளவியைப் பிடிக்கவும்).இறுதியாக இறக்குவதற்கு முன் வெங்காயத்தையும் கருவேப்பிலையையும் வைத்து சற்று நசித்து(அரைவாசி அரைத்து) அவை எல்லாவற்றோடும் சேருமாறு செய்யவும்.(வாசமும் சாரமும் அப்போது தான் தூக்கலாக இருக்கும்.) மீண்டும் ஒரு முறை எல்லாவற்றையும் ஒன்றாக வழித்து நடுவில் ஒன்றாகச் சேர்த்து குளவியை உயர்த்தி , குளவியிலிருக்கும் சம்பலையும் அம்மியிலிடுக்கும் சம்பலையும் ஒன்றாக்கி வட்டமாக உருட்டி கழுவிய கிண்ணமொன்றில் வைக்கவும்.(அம்மி குளவியை கழுவி விட மறக்க வேண்டாம்)

மாங்காய் சம்பல் ரெடி.
இது புளிப்பும் உறைப்புமாக நல்லொரு சுவை பேசும்.

பிற்குறிப்பு;

* இதற்கு தேசிப் புளி விடத்தேவை இல்லை.
* இது இட்லி தோசையைத் தவிர மற்றய பாகங்களுக்கு உகந்தது.

*கீழ் வரும் சம்பல் வகைகளுக்கு தேசிப்புளி பாதி மூடி வேண்டும்.
*இதில் மாங்காய்க்குப் பதிலாக ஒரு கை விரலளவு இஞ்சி வைத்தரைத்தால் இஞ்சிச் சம்பல் ரெடி.
*இவை இரண்டும் வைக்காமல் அரைத்தால் சிவப்புச் சம்பல் ரெடி.
*செத்தல் மிளகாய்க்குப் பதிலாக பச்சைமிளகாய் வைத்தரைத்தால் பச்சைச் சம்பல் ரெடி.
*செத்தல் மிளகாயை பொரித்து உரலில் இடித்தால் இடிச்ச சம்பல் ரெடி.இதற்கு பழப்புளி விட வேண்டும்.தாளித்தும் போடலாம்.தோசைக்கு உகந்தது.
*அடுப்பில் வெங்காயம்,,செத்தல் மிளகாய்,கடுகு, சீரகம்,கருவேப்பிலை போட்டு தாளித்து, அளவான தண்ணீரில் பழப்புளி கரைத்து விட்டு, ஒரு கொதி வந்ததும் அதற்குள் அரைத்து வைத்த சம்பலைக் கலந்து ஒரு சூடு வந்ததும் இறக்கினால் சட்னி ரெடி.இது இட்லிக்கு.

ஆருக்கு என்ன வேணும்?
Author: சுபானு
•5:02 AMமுற்றம் என்றவுடன் என் ஞாபகத்திற்கு வருகின்ற ஒரு விடயம் நாங்கள் எங்கள் வீட்டு முற்றத்தில் சிறுபிள்ளைகளாக இருந்த போது விளையாடிய விளையாட்டுக்கள்தான். பின்னேரமாகி விட்டாலே சிறுவர்களுக்குச் சந்தோசம் தான். என் வயதையொத்த சிறுவர் சிறுமியர், என் கூடப்பிறந்தவர்கள் என எல்லாம் ஒன்றாகக் கூடிவிடுவோம். பொதுவான நாங்கள் கூடுவத எங்கள் வீட்டு முற்றமாகத்தான் இருக்கும். பின்னர் என்ன விளையாடுவது எனத்தீர்மானிப்போம். அப்போதெல்லமாம் எங்களுக்குக் கிரிக்கட் என்றால் என்னவென்றே தெரியாது. அந்தச் சின்ன வயதில் நாங்கள் எல்லோரும் கீறோ கீறோயின்கள் தான். பொதுவாக எல்லோரும் பங்கேற்கக் கூடிய விளையாட்டைத்தான் தேர்ந்தெடுப்போம்.


நேற்றைக்கு கெந்திப் பிடிச்சு விளையாடினாங்க, அதுக்கு முத நாள் ஒளிச்சுப் பிடிச்சு விளையாடினாங்க, அப்ப இன்னைக்கு என்னத்த விளையாடுவம்.. கிளித்தட்டு, இல்லாட்டிக்கு இன்னைக்கும் ஒளிச்சுப் பிடிச்சு விளையாடுவோமா..? வேண்டாம் இனைக்கு ஓடிப்பிடிச்சு பிளையாடுவம்.. குல குலயா முந்திரிக்கா.... கன..காலம் விளையாடி...


விளையாட்டு என்னமோ ஓடிப்பிடிச்சு பாணிதான். ஆனாலும் ஓடுகின்ற இடத்தையும் அளவையும் துரத்துகின்ற ஆளையும் தெரிவுசெய்து விளையாடும் பாணிதான் இந்த குல குலயா முந்திரிக்கா, என்ற பாடலுன் விளையாடும் விளையாட்டில் உள்ள வித்தியாசம். எனக்குத் தெரிந்து ஈழத்து முற்றங்களை மாலை நேரப்பொழுதுகளில் அலங்கரிக்கும் விளையாட்டுக்களில் இந்த விளையாட்டும் ஒன்று. அதுவும் சிறுபிள்ளைகளிடையே பாடலிசைடன் ஆண் பெண் பால் வேறுபாடுகளின் வித்தியாசம் தெரியதா, புரியாத காலகட்டங்களில் மகிழ்ச்சியாக விளையாடும் விளையாட்டுத்தான் இந்த குல குலயா முந்திரிக்கா ஓடிப்பிடிச்சு விளையாட்டு.


எல்லோரும் ஒரு வட்ட வடிவில் நிலத்தில் வெறும் தரையில் உட்காந்து கொள்வோம். ஒருவர் மட்டும் நின்றுகொண்டிருப்பார். அவரின் கையில் சிறு மரக் குளையைக் கொடுத்து
விடுவோம். பின்னர் அந்த நபர் அந்த வட்டவடிவத்தை வெளிப்புறமாக அதாவது அனைவருக்கும் பின்னால் சுற்றிவருவார். அப்படி வரும்போது அந்த நபர் ..


குல குலயா முந்திரிக்கா..
நிறைய நிறைய சுத்தி வா ..
குல குலயா முந்திரிக்கா..
நிறைய நிறைய சுத்தி வா ..
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டதில் இருக்கான் கண்டுபிடி..என்ற பாடலைப் பாடிக்கொண்டு சுற்றிவரவேண்டும். அப்படி வரும்போது அவர் கையில் உள்ள அந்த குளையை யாரும் ஒருவர் பின்னால் போட்டு விடுவார். அதாவது கையில் உள்ள குளை முந்திரிக் குலையாகவும் அதனைக் கொள்ளையடித்தவர் அந்தக் கூட்டத்தில் உள்ள ஒருவர் அதாவது யாருக்குப் பின்னால் அந்தக் குழை கிடக்கின்றதோ அவர்தான். அந்தப் பாடல் முடிக்கும்போது குளை யாருக்குப் பின்னால் உள்ளதோ அவர் எழுந்து குளை போட்ட நபரைப் பிடிக்கவேண்டும். அதுவும் குளை போட்ட நபர் வந்து ஓடிவந்த ஒரு முழுச்சுற்று வட்டத்தைச் சுற்றி எழும்பியவரின் இடத்தில் அவர் பிடிப்ப முதல் இருந்து விட்டார் என்றால் போட்டியில் கிளை போட்ட நபர் வெற்றிபெற்றதாக அர்த்தம். மாறாக வந்து உட்கார முதல் அவர் பிடிபட்டார் என்றால் வேறு என்ன குளை போட்ட நபர் தோல்விதான். இதில் சுவார்சியம் என்னவென்றால் பின்னால் வந்து அந்தக் குளையினைப் போடுவதால் முன்னால் பார்த்துக்கொண்டு இருக்கும் அவருக்குத் தெரியாமலே போய்விடும் தனக்குத்தான் போடப்பட்டது என்று. அப்படியிருக்கும் போது போட்டவர் மீண்டும் அனைவரையும் சுற்றிவந்தால் வெற்றியவருக்கே...


பாடிப்பாடி விளையாடுவது என்பது எவ்வளவு சந்தோசம் என்பது அந்த விளையாட்டை விளையாடியவர்களுக்குத்தான் தெரியும்.

இதனை விடவும் பாடிப்பாடி விளையாடும் விளையாட்டுக்கள் பல ஈழத்தில் வழக்கத்தில் உள்ளன. எதிர்வரும் பதிவுகளில் அவற்றையும் தருகின்றேன்.

Author: வந்தியத்தேவன்
•12:30 AM
இப்பத்தான் எங்கட வேலணை வலசுண்ட கூழ் குடித்துவிட்டு உங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அப்படியே போற வழியில் இடியப்பமும் சொதியும் சாப்பிட்டுக்கொண்டுபோங்கோ.

பொதுவாக இடியப்பத்தை காய்ச்சல்காரர்டை சாப்பாடு என்பார்கள். ஏனென்றால் பெரும்பாலும் காய்ச்சல் நேரம் இடியப்பம்தான் சாப்பிடுவது. இதற்க்கு இன்னொரு காரணமும் உண்டு தோசை இட்டலிபோல இடியப்பம் அவ்வளவு கடினமான (ஹார்ட்) சாப்பாடல்ல. கொஞ்சம் லைட்டான சாப்பாடு. இடியப்பம் உடனடியாக சமிச்சும்போம் இதனாலும் பெரும்பாலானவர்கள் வெளியிடத்திற்க்குச் சென்றால் இடியப்பம் சாப்பிடுவார்கள்.

எங்கட நாட்டிலையே இடியப்பம் சொதி தேங்காய்ப்பூச் சம்பல் உழுந்துவடை கூட்டணி சரியான பேமஸ். இலங்கையின் சகலபகுதியிலும் கிடைக்கும் சாப்பாடுகளில் இதுவும் ஒன்று. சிங்களப்பகுதியில் கூட இடியாப்பையும் கிரி ஒதியும் என அழைப்பார்கள்.

சொதி என்பது தேங்காய்ப்பாலில் செய்யப்படும் ஒரு தண்ணி உணவு. சரியான விளக்கம் தெரியவில்லை. சைவச் சொதி என்றால் வெங்காயம், கறிவேப்பிலை, சில இடங்களில் தக்காளி எல்லாம் போடுவார்கள். மச்சச் சொதி என்றால் மீன் சொதி பிரபலம். கடைகளில் கூடுதலாக சைவச் சொதிதான் கொடுப்பார்கள்.

தமிழகத்தில் சட்னி எனப்படும் உணவுதான் நம்ம நாட்டில் சம்பல் என்ற பெயருடன் அழைக்கப்படுகின்றது. இதிலும் அரைச்ச சம்பல் இடிச்ச சம்பல் என வகைகள் உண்டு. அத்துடன் வெள்ளைச் சம்பல் சிவப்புச் சம்பல் என கலரைவைத்துக்கூட சம்பல் உண்டு. வெள்ளைச் சம்பல் தேங்காய்ப்பூவுடன் பச்சைமிளகாய் சேர்த்து அரைப்பது. சிவப்புச் சம்பல் தேங்காய்ப்பூவுடன் சிவத்த் செத்தல் மிளகாய் போட்டு அரைப்பது. சம்பல் பற்றிய மேலதிக விபரங்களை சமையல் ஆச்சிகள் தருவார்கள். எனக்கு சாப்பிட மட்டும்தான் தெரியும்.

வடை என்றால் உடனே ஞாபகத்திற்க்கு வருவது யாழ்ப்பாணம் மலாயன் கபே வடையும் கொழும்பு சரஸ்வதி லொட்ஜ் வடையும் தான். ஒருமுறை மாத்தளையில் ஒரு சைவக்கடையில் சுடச்சுட பருப்பு வடை சாப்பிட்டேன் நல்ல உருசியும் மலிவும். இப்போ ஒரு வடை 30 ரூபாவிற்க்கு விற்கிறார்கள். திருகோணமலையில் ஐயர் கடை தோசை நல்ல பேமஸ்.

நெல்லியடியிலிருந்து யாழ்ப்பாணம் சைக்கிளில் சென்ற காலத்தில் வல்லை கழிந்ததும் ஆவரங்காலிலோ கொஞ்சம் சைக்கிள் ஓடத் தெம்பிருந்தால் கோப்பாயிலோ ஒரு கடையிலை இறங்கில் காலையிலை என்றால் இடியப்பம் சொதி வடையும் பின்னேரத்தில் என்றால் வடையும் பிளேன் டீயும் குடித்துவிட்டு நல்ல உசாராக பயணம் செய்வது.

யாழ்ப்பாணம் ட‌வுணில்(டவுணா? ரவுணா?)சைவம் என்றால் மலேயன் கபேயிலும் மச்சம் என்றால் வேறுகடையிலும் மத்தியானம் சாப்பிட்டுவிட்டு அபப்டியே லிங்கத்தில் ஒரு ஐஸ்கிறீமையும் குடித்துவிட்டு ஒரு பீடா சப்பும் இன்பம் மீண்டும் எப்போ வரும்.
Author: வலசு - வேலணை
•8:43 AM
மணியாச்சிட்ட (மணிமேகலா) கூழ்காய்ச்சச் சொல்லிக்கேட்டா, அவா இழுத்தடிச்சுக்கொண்டே போறா. அவ எப்ப கூழ் காய்ச்சிறாவோ? அப்ப எனக்கு குடிக்கிறதுக்கு நேரம் கிடைக்குமோ? இதெல்லாத்தையும் இந்தக்காலத்தில சொல்லேலாது கண்டியளோ. அதுதான் இப்ப நேரம் இருக்கேக்க சும்மா நானும் கூழ்காய்ச்சுவம் எண்டொரு சின்ன ஐடியா. அம்மாணச் சொல்லுறன் எனக்கு முன்னப்பின்ன கூழ்காய்ச்சிப் பழக்கமில்லை. எப்பிடிக் கூழ்காய்ச்சிறதெண்டும் தெரியாது. ஆனா நல்லா முக்குமுட்டக் குடிக்க மட்டும் தெரியும். இப்பதான் முதல்முறையா கூழ்காய்ச்சிப் பாப்பமெண்டு.

நீங்களே சொல்லுங்க பாப்பம் (பார்ப்போம்), ஒடியல்கூழ் குடிச்சு எவ்வளவு காலமாச்சு. இப்ப நெச்சாலும் வாயூறுது கண்டியளோ. 2004-இல கொழும்பில இருக்கேக்குள்ள, வெள்ளவத்தையில இருக்கிற நளபாகத்தில ஒடியல்கூழ் விக்கிறவங்கள் (விற்கிறவர்கள்) எண்டு சொல்லி நானும் என்ரை சிநேகிதப்பெடியன் ஒருத்தனுமாச் சேர்ந்து கூழ் குடிக்கப் போனா, அதுக்குள்ள ஒரு பெரிய நண்டும் மிச்சமெல்லாம் மீன்செதில்களுமாத் தான் கிடந்துது. உறைப்பெண்டா, இப்ப நெச்சாலும் (நினைத்தாலும்) சொண்டெல்லாம் எரியுது. அடுத்தநாள் விடியக்காலமை கக்கூசுக்குள்ள போயிருக்கையுக்கை கீழையிருககிற வாயும் எரிஞ்சுதெண்டதையும் சொல்லோணுமோ? இல்லைத்தானே!

மணிஆச்சி! நீங்க ஆறுதலா நல்ல ரேஸ்ற்றா கூழ்காச்சித் தரோணும். மறந்திடாதைங்கோ. இது சும்மா இப்போதையத் தினவுக்குத்தான்.

கூழ்காச்சுறதெண்டு சொன்னோடனை (சொன்னவுடன்) தான் நாபகம் (ஞாபகம்) வருது, அதுக்கு முதலில பச்சை ஒடியல் மாவும் எல்லோ வேணும். அதுக்கு இஞ்ச எங்க போறது. போன சனிக்கிழமைதான் சிநேகிதப் பெடியன் ஒருத்தன் வீட்ட போகேக்கை அவன் கொடிகாமத்தில இருந்து மாமி கொண்டந்ததெண்டு சொல்லி புழுக்கொடியல் கொஞ்சம் தந்துவிட்டவன் வீட்ட கொண்டுபோய்ச் சப்பெண்டு (சாப்பிடு என்று). அத இடிச்சு மாவெடுத்தாலும் ஒடியல்கூழுக்குப் பாவிக்கேலாது (பயன்படுத்த முடியாது). அப்ப ஒடியல்மாவுக்கு என்ன செய்யிறது?

ஆ! நாபகம் (ஞாபகம்) வந்திற்று. போனமாசம் கடைசி ஞாயித்துக்கிழமை (31-05-2009) பின்னேரம் போல இன்னொரு தெரிஞ்ச அம்மா (அவாவை மணி அக்கா எண்டும் கூப்பிடுறவையாம்) வீட்ட போனனான். வெளிக்கிடேக்க சொன்னன் இண்டைக்கு இரவு மலேசியா போறனென்டு. அப்ப அவா, இலங்கயிலயிருந்து ஒடியல்மா வந்திருக்கு. அங்க மலேசியாவில ஆருக்கும் குடுக்க வேணுமோ எண்டும் கேட்டவா. அவவிட்டக் கொஞ்ச ஒடியல்மா தருவியளோ எண்டு கேட்டுப்பாக்கலாம்.

அட! சத்தியமாச் சொன்னா நம்ப மாட்டியள்! அவவுக்குப் பாருங்கோ ஆயுசு நூறு. இப்ப இத எழுதிக் கொண்டிருக்கேக்க அவவிட்டவிருந்து email ஒண்டு வருகுதெண்டு google talk காட்டுது. கொஞ்சம் பொறுங்கோ, வந்து கதைக்கிறன்.

அப்பாடா! உங்களுக்கும் அடிச்சுது luck பாருங்கோ!. அவவிட்ட கூழ்காச்சுறது எப்பிடியெண்டொரு குப்பி (அட! இது எங்க ஊரு பாசையில்ல. குப்பியெண்டுறது கம்பஸ் பாசையில, விளங்கப்படுத்திறது எண்டு அர்த்தம்) எடுத்தாச்சு. அதோட வாற சனிக்கிழமை வந்தா ஒடியல்மாவும் தந்துவிடுறதெண்டு சொல்லியிருக்கிறா. கொஞ்சக்காலம் பொறுத்தீங்களெண்டால் அவாவையும் எங்கட முத்தத்துக்குள்ள (முற்றத்திற்குள்) கூட்டிக் கொண்டு வந்திரலாம். இப்பதான் அவா தமிழில type பண்ணிப் பழகிறா. அந்தக்காலத்தில அவாவின்ரை கதைகள் எல்லாம் வீரகேசரிப் பேப்பரிலையெல்லாம் வந்திருக்கு. இப்பையும், இந்த தள்ளாடுற வயதிலையும் அவவுக்கு இருக்கிற ஆர்வம், என்னை வியக்க வைக்குது. அவா ஒரு தமிழ்ப் பண்டிதரும் கூட. முடிஞ்சால் அவாவைப் பற்றியே பிறகு ஒரு பதிவிடுகிறேன். அப்ப என்ன மாதிரி நீங்களெல்லாம் வாற சனிக்கிழமை ஒடியல்கூழ் குடிக்க வருவியள்தானே?

முந்தி எங்கட ஊரில, வீட்டில ஒடியல்கூழ் காய்ச்சுறதெண்டால், அண்டைக்கொரு பெரிய கொண்டாட்டம்தான். மீன், நண்டு, றால் (இறால்) எண்டு எல்லாம் வேண்டுறதே (வாங்குவதே) ஒரு பெரிய பம்பல் எங்களுக்கு. நாங்களெல்லாம் அப்ப சின்னப்பிள்ளையள். மாமாவையோட மீன் வாங்கிறதுக்காகக் கடலுக்கே போயிருவம். பொதுவா கூழ்காய்ச்சிறதுக்கு மீன் வேண்டுறதெண்டா தெற்குக் கரைக்கடைக்குத் (கடற்கரை) தான் போறது வழக்கம். அங்கதான் நல்ல கலவாய் மீன் கிடைக்கும். வேறமீனுகள் வேண்டுறதெண்டால் கிழக்குக் கரைக்கடைக்குத்தான் (இதை செட்டிபுலம் கடற்கரை என்றும் சொல்வதுண்டு) போறனாங்கள். எனக்கு கலவாய்மீனக் கண்ணிலயும் காட்டக்கூடாது. அதப் பொரிச்சாக்கூட விழுவிழெண்டு இருக்கும். எண்டாலும் கூழுக்குள்ள போட்டா மட்டும் ஒண்டும் கதைக்காம குடிச்சிடுவன். சிலவேளைல, புங்குடுதீவுப் பாலத்தில போயும் மீன் வேண்டுறது வழக்கம். அதில வெடிபோட்டும் மீன்பிடிக்கிறவை. வெடிபோட்டுப் பிடிக்கிற மீனுகளை அண்டைக்கே சாப்பிட்டிரோணும். அடுத்தநாள் வைச்சாப் பழுதாப் போயிரும். மீன், சின்னநண்டு, கூனிறால் எல்லாம் வாங்கியாந்து (வாங்கிவந்து) வீட்டில சமைக்கச் சொல்லிக் குடுத்திற்று சாட்டி வெள்ளக் கரைக்கடைக்கு குளிக்கப் போயிருவம். குளிக்கப் போறதெண்டா சும்மா பக்கத்து வீடுகளில இருக்கிற அண்ணமார், மாமாமார் எல்லாரும் சேந்தே (சேர்ந்தே) போறது வழக்கம். சைக்கிளில தான் போறனாங்கள். போய்வாறதுக்குள்ள ஒரு சின்ன சைக்கிளோட்டப்போட்டியும் நடந்திரும். குளிச்சிற்று வரேக்குள்ள அங்கனேக்குள்ள எங்கையும் வடலிப் பனைகளைக் கண்டா, இறங்கி பச்சோலையும் வெட்டிக்கொண்டு வாறது வழக்கம். பிறகு அதை வீட்டில வைச்சு சத்தகக்காம்பால கிளிச்சு பிளா (இந்தப் பிளாவிலதான் கள்ளும் குடிக்கிறது) செய்து கொதிக்கக்கொதிக்க கூழ அதுக்குள்ள ஊத்திக்குடிச்சால், பனையோலையின்ர வாசமும் சேர, சொல்லி வேலையில்ல.
Author: geevanathy
•7:48 AM

களத்து மேட்டிலும் தேன் காட்டிலும் பொலிவை நாடும் புதுவார்த்தைகள்


திருகோணமலையில் உள்ள தம்பலகாமப் பகுதி தமிழ் முன்னோர்கள், உயிர்காக்கும் நெல்லைச் சேமிக்கும் களத்து மேட்டிலும், பூலோக அமிர்தம் என்று போற்றப்படும் தேன் எடுக்கும் பொதுக்காட்டிலும் பேசுவதற்கெனத் தங்கள் தாய் மொழியான தமிழில் இருந்து பாஷைகளைத் தோற்று வித்துப் பேசிவந்துள்ளனர். இந்த விசித்திர மொழிகள் இன்று பேச்சு வழக்கற்று மறைந்து கொண்டிருக்கின்றன. கால மாற்றத்தின் காரணமாக களத்து மேட்டில் விவசாயிகள் பேசிவந்த பாஷை தேவையற்றதாகவும் ஆகியுள்ளது.


தமிழ் மொழியில் இருந்து தோற்றிவிக்கப்பட்டவைகளாயினும் இம் மொழிகளின் வார்த்தைகள் தமிழ் மொழியின் நின்று வேறு வேறு அர்த்தமுடையவையாகவும் காணப்படுகின்றன.நெல் வயல் அறுவடை ஆனதும் வயல்களின் மத்தியிலுள்ள களத்து மேட்டில் வட்ட அணியாக சூடு வைக்கப்பட்டிருக்கும். பொங்கி விட்டு இறைவழிபாடாற்றி சூடுமிதிப்பு தொடங்கியதும் சூடுமிதிப்பாளர்களிடையே ஒரு விநோதமான மொழி பேசப்படும். களத்து மேட்டில் பேசப்படும் இப்புதிய மொழியின் வார்த்தைகள் அதிக நெல்லைப் பெறும் ஆவல் உடையதாகவே அமைந்துள்ளன.உதாரணமாக களத்தில் பேசப்படும் வார்த்தைகளில் சில பின்வருமாறு: நெற்கதிர்கள் சூடு என்று குறிப்பிடுவது வழமை. ஆனால் களப்பாஷையில் சூட்டை - போலன் என்று சொல்வார்கள். சூடுமிதிப்புக்கு ஈடுபடுத்தும் எருமைக் கடாக்களை வாரிக்காலன் என்று அழைப்பார்கள். வாரிக்காலன் என்றால் அதிகமாக நெல்லைத்தரும் கால்களை உடையவை என்பது பொருள். வைக்கோலை விட்டு உதிர்த்த நெல்குவியலை பொலி என்று குறிப்பிடுவார்கள். பொலிஎன்றால் பொலிந்து அதிகப்படுவது என்பது பொருள். களத்தில் சூடு மிதிப்பில் ஈடுபடுவோரின் வாய்களில் பொலி,பொலி என்ற சொல் தாராளமாகவே புழங்கும். இதே போல் நெற்கதிருக்கு வயலில் வளைந்து வளைந்து மிதித்து நெல் மணிகளை உதிர்க்கும் எருமைக்கடாக்கள் போடும் சாணியைப் போல் என்றும் வைக்கோலை மிதிஞ்சான் என்றும், நெல்லில் உள்ள பதரைக் கள்ளன் என்றும், சாப்பிடுவதை அல்லது குடிப்பதைப் பெருகுவதென்றும், தண்ணீரைக் கலங்கள் என்றும், தண்ணீர் குடிப்பதைக் கலங்கள் பெருகுவதென்றும், இப்படி களத்திலுள்ள தேவைகளுக்காகப் பேசப்படும் வார்த்தைகள் எல்லாம் தமிழுக்கு வேறான ஒரு புதிய மொழியாகவே தோன்றும்.தேன் காட்டுக் காரர்கள் பேசும் மொழி


பூலோக அமிர்தம் எனப்போற்றப்படுகின்ற தேன் பெறுவதற்காகக் காட்டுக்குச் செல்லும் தேன்காட்டுக்காரர்கள் தேனை ஒரு தெய்வீகப் பொருளாக மதிப்பதால் அவர்கள் காட்டில் பேசுவதற்கென ஒரு புதிய மொழியை உருவாக்கிப் பேசிவந்துள்ளனர். வனவேட்டையில் தேன் காடு போவது தான் மிகவும் அபாயகரமானது என்பது வேட்டைக்காரர்களின் கருத்தாகும். பத்து அல்லது பதினைந்து பேர்கள் ஒருங்கு சேர்ந்து தேன் காட்டுக்குச் சென்றாலும் காட்டில் முப்பது யார், நாற்பது யார் தூரத்துக்கு ஒருவராக காடெல்லாம் பரந்து தனித்தனியாகவே தேன் தேடிச்செல்வார்கள்.தேன் காட்டுக்காரர்களின் முழுக்கவனமும் மரங்களில் தேனீக்கள் மேல் நோக்கிப் பார்ப்பதிலே நிலைத்திருப்பதால் கீழே காடுகளில் பதுங்கி இருக்கும் மிருகங்களைக் கவனிக்கத்தவறி விடுவார்கள். ஆகவே புதர்களில் மறைந்திருக்கும் புலிகளினாலோ, கரடிகளினாலோ தேன் காட்டுக் காரர்கள் தாக்கப்படுவது மிகச் சர்வசாதாரண விஷயம். இந்த அபாயகரமான தொழிலைச் செய்பவர்கள் தேன் காட்டில் பேசிக் கொள்ளும் மொழியும் தமிழ் அல்லாத ஒரு புதிய மொழியாகவே தோன்றுகின்றுது.


முப்பது நாற்பது யார்களுக்கு ஒருவராக காட்டில் வரிசையாகத் தேன் பார்த்து வருபவர்களில் ஒருவர் ஒரு மரக்கொம்பில் தேனைக் கண்டு விட்டாரானால் தன் சகாக்களுக்கு அதை தெரியப்படுத்த கோ என்று குரல் கொடுப்பார். அவர் குரலைக் கேட்ட சகா ஒருவர் அவர் என்ன சொல்கிறார் என்பதை அறிந்து கொள்வதற்காக கோ என்று ஒற்றைக் குரல் கொடுப்பார். அப்பதில் குரல் கேட்டதும் தேன் கண்டவர் கோ, கோ என்று இரட்டையாகச் சமிக்ஞையைவெளிப்படுத்துவார். இதை இரட்டிப்பதென்று தேன் வேட்டைக்காரர் குறிப்பிடுவார். தேன் கண்டவர் முதல் கோ என்றது நண்பர்களே! என்று காட்டில் தேன் பார்த்து வரும் தன் சகாக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல முயல்வதாகும். அதற்கு அடுத்து வந்தவர் கோ என்றது என்ன என்று கேட்பதைப் போன்று அர்த்தமுடையதாகும். அதற்கு தேன் கண்டவர் கோ கோ என்று இரட்டித்தது தேன் இங்கே இருக்கிறது எல்லோரும் இங்கே வாருங்கள் என்று கொடுக்கும் காட்டுச் சமிக்ஞை ஆகும். இந்த சமிக்ஞையைக் கேட்டதும் காடெல்லாம் வலையிட்டதைப் போல் பரவி வந்த தேன் காட்டுக்காரர்கள் தேன் இருக்கும் மரத்துக்கு வந்து கூடித் தேன் கூடுகளை வெட்டி வதைகளை எடுத்து பரப்பப்பட்ட இலைகளில் குவிப்பார்கள். எல்லோரும் அமர்ந்திருந்து தேன் வதைகளை உண்பார்கள்.தேன் வதைகளை எடுத்துப் புசிக்குமாறு ஒருவருக்கொருவர் சொல்ல விரும்பினால் இன்றுள்ளவர்கள் ஆங்கிலத்தையும் தமிழையும் இடைக்கிடை கலந்து பேசுவதைப் போல் எடுத்துக் கொட்டாப்பி என்று சொல்லுவர். எடுத்து என்பதை தமிழ்ச் சொல்லாகவும் கொட்டாப்பி என்பது புரியாத காட்டுப் பாஷையாகவும் தோன்றும். கொட்டாப்பி என்பதற்குச் சாப்பிடு என்பது பொருள். கொட்டாப்பி, கொட்டாப்பி என்று ஒருவர் இன்னொருவரை கட்டாயப்படுத்தினால் எனக்கு வேண்டாம் அல்லது என்னால் முடியாது என்று கூறுவது தேன் காட்டுமரபாகாது. ஆகவே முன்னதான் என்று கூற வேண்டும். முன்னதான் என்றால் எனக்கு வேண்டாம் அல்லது என்னால் முடியாது என்பது பொருள். தேன் காட்டிலும் தண்ணீருக்குக் கலங்கள் என்றும் பருகுவதற்கு பெருகுவதென்றும் குறிப்பிடுவார்கள்.தம்பலகாமம்.க.வேலாயுதம்

Author: வி. ஜெ. சந்திரன்
•7:04 AM
ஈழத்து முத்ததிலை கன பேர் சேந்திருக்கிறியள், ஆனா ஒரு சிலர் தானே எழுதியிருக்கினம், மிச்ச ஆக்கள் என்ன செய்யினம்? என்ன நான் எங்கையிருந்தனானோ ? சரி சரி எனக்கு அடிக்கவரதையுங்கோ? சும்மா பகிடிக்கு கேட்டனான்.

இண்டைக்கு ஏதவது எழுதுவம் எண்டு வெளிக்கிட்டா என்ன எழுதுற எண்டு தெரியேல்லை. மணிமேகலை ஆச்சியிடை (ஆப்பு மார் எல்லாரும் அவவை ஆச்சி எண்டு சொன்னா, நான் ஆச்சி எண்டு சொல்லலாம் தானே) எழுதினதை வாசிச்சன் நல்ல வடிவா எழுதியிருக்கிறா. அவவின்ரை பதிவை வாசிச்சு கனபேர் தங்கடை அம்மம்மா மார் கதைக்கிற மாரி கிடக்காம் எண்டு சொல்லினம். எனக்கு அப்பா வழி ஆச்சி (அப்பம்மா), அப்பு (அப்பப்பா) வோடை கதைக்கிற சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை. அம்மா வழி அப்புவும் அம்மா சின்னனா இருக்கேக்கையே செத்துபோனார். அம்மா வழி ஆச்சியும் எனக்கு ஒரு எழெட்டு வயது இருக்கேக்கை போய் சேந்திட்ட. அதாலை அவவோடை கதைச்சதுகள் கூட எனக்கு பெரிசா நினைவில்லை. ஒரு சில சொல்லுகளை தவிர மிச்சமேல்லாம் மறந்துபோச்சு. ஆனா அவவிடை சுருங்கின தோலிலை அடிக்கடி நுள்ளியும், இழுத்தும் அவாவுக்கு ஆக்கினை குடுத்தது ஞாபகம் இருக்கு.

ஆச்சி அந்த மாரி அப்பஞ்சுடுவாவாம், அதுவும் தணல் சட்டியெல்லாம் மேல வச்சு. உங்களுக்கு அந்த கதையள் தெரியுமோ தணல் சட்டி வச்சு அப்பஞ்சுடுறது? நான் ஒரு நாளும் பாக்கேல்லை. நாட்டைவிட்டு வெளிக்கிட்டாப்பிறகு அண்ணைவீட்ட போகேக்கை அண்ணா தான் சொன்னார் ஆச்சி அவைக்கு தணல் சட்டிவச்சு அப்பஞ்சுட்டு குடுத்தவவாம். எனக்கு குடுப்பினைஇல்லை அதை பக்கவும், சாப்பிடவும். அதவிட கத்தரிக்கை பழப்புளி கறி, பாவக்காய் கறியெல்லாம் திறமாய் சமைப்ப எண்டும் அண்ணை சொல்லுவார்.

உந்த பழங்கதையளை விடுவம். பேச்சு வழக்கு பற்றி சொல்லுறதெண்டா கொஞ்சம் கரைச்சல் தான்.

உதாரணமா

இரண்டு நண்பர்கள் கதைக்கேக்க, கன நாள் காணாத நண்பனை கண்டால்

டேய், எங்கையடா இவவளவு நாளும் ஆளை காணகிடைக்கேல்லை எனும் போது வரும் டேய், அடா போன்றவை நட்பின் நெருக்கதை குறித்தாலும்,
ஒருவரை மரியதை குறைவாக விழிக்கவும் இதே போல பயன்படுத்தாலாம். சரி இதிலை என்ன புதினம் கிடக்கு எண்டு கேக்கிறியளோ. இஞ்சை என்ரை ஆங்கிலத்தை தாய் மொழியா கொண்ட நண்பனுக்கு ஒரு நாள் கதைகேக்க, டேய், அடா போட்டு ஆரும் சொன்னா அது மரியாதையில்லாத முறை எண்டு சொல்லிபோட்டன். பிறகொரு நாள் செல்பேசிலை எனரை இன்னொரு நண்பனோட கதைகேக்க டேய், டா க்களை கண்ட படி பாவிச்சு கதைச்சா, பக்கத்திலையிருந்து கேட்டு கொண்டிருந்திட்டு கேட்டான் ஆரோடை சண்டை பிடிச்சனி எண்டு.

உங்கள் எல்லாருக்கும் தெரியும் தானே நாங்கள் வயது கூடின ஆக்களை பெயரெல்லாம் சொல்லி கூப்பிடுறேல்லை, அதப்போலை அவன், போனான், வந்தான் எண்டு கதைக்க மாட்டம். அது 4 - 5 வயது கூடின அண்ணையாக கூட இருக்கலாம்.

அண்ணை எங்க போன்னீங்கள் எண்டு தான் கேக்கிறது வழக்கம். எங்க போன்னீர் எண்டோ இல்லாட்டி எங்க போன்னீ எண்டோ கேக்க மாட்டம். அப்பிடி கதைச்ச கூட இருக்கிற ஆக்காளே சில நேரம் பகிடி பண்ணுவினம். என்ன உப்பிடி கதைக்கிறாய் எண்டு. நான் என்ரை அண்ணையோட போன்னீர், வந்தனீர், செய்தனீர் எண்டு தான் கதைக்கிறனான். அதை பாத்திட்டு என்ரை கூட்டாளிமார் நக்கலடிப்பாங்கள் உன்ரை அண்ணேன்ரை வயதென்ன, உன்ரை வயதென்ன (அண்ணைக்கும் எனக்கும் 16 வயது வித்தியாசம்), அண்ணையை மரியாதையில்லாம கூப்பிடிறாய் எண்டு.

ஒவ்வோரு ஊர்ப் பேச்சு வழக்கிலை ஒரு பொது வடிவம் இருந்தாலும், ஒரு கோடு கீறி இது இப்பிடிதான் எண்டு சொல்லுறது சரியான கசிட்டம் பாருங்கோ. பேச்சு வழக்கு எண்டிறது சந்தர்ப்ப சூழ்நிலைக்கேத்தப் போலை மாறும்.

சரி சரி கனக்க எழுதி பதிவை இழுத்துகொண்டு போகாம எனக்கு இப்ப ஞாபகம் வந்த சில வித்தியசமான சொல்லுகளை கீழ சொல்லுறன்.

1. இல்லுபோலை/ எல்லுபோலை: இதிலை எது சரியான உச்சரிப்பெண்டு எனக்குதெரியா

இந்த சொல்லு கொஞ்சம், சிறிதளவு எனும் சொற்களுக்கு சமனா ஆச்சி பாவிப்பா. ஒரு எல்லுபோலை குழம்பு விட்ட காணும்.

2. எப்பன், ஒரெப்பன் : சிறிதளவு - இந்தசொல்லு இப்பவும் சிலவேளை பாவிக்கிறனாங்கள் எண்டு நினைக்கிறன். உ+ம், எப்பன் இடம் குடுத்தா காணும் தலையிலை ஏறியிருந்திடுவாங்கள்.

3. பறையிற: கதைக்கிற, பெசுகிற ( பேசுதல் எனும் சொல் ஈழத்தை பொறுத்தவரை வைதல் எனும் கருத்தில் தான் அதிகம் பாவிக்கபடுகிரது என நினைக்கிறேன்)

4. தீய சட்டி: பொதுவா இது மச்சம் சாப்பிடுற ஆக்கள் வீடுகளிலை புழக்கத்தில் இருக்கிற சொல். பொதுவா மச்சம் சாப்பிடுற ஆக்கள் வீட்டிலை இரண்டு தொகுதி சமையல் பாத்திரங்கள் இருக்கும் ஒண்டு நாளாந்தம் சமைக்க, அதிலை அசைவ உணவுகள் எல்லாம் சமைப்பினம். இன்னும் ஒரு தொகுதி சமையல் பாத்திரங்கள் இருக்கும் அதில் மரக்கறி மட்டும் சமைப்பினம். குறிப்பா விரத காலங்களிலை, திவச நாட்களிலை சமைக்க பாவிப்பினம்.

5. மச்சம்: மச்சம் எண்டிற சொல்லு மீனை குறிச்சாலும், பேச்சு வழக்கில் அசைவ உணவுகள் அனைத்தையும் குறிக்கும். உ + ம்: இண்டைக்கு வெள்ளி கிழமை நான் மச்சம் சாப்பிடுறேல்லை.

6. அரக்கி (வினை சொல்லாய்??): ஒரு பொருளை சிறிது இடம்மாற்றி வைக்க/ ஒருவர் இருக்கும் போது புதிதாக வந்தவர் இருக்க (உட்கார) சிறிது இடம் தேவைப்படும் போது,

அந்த மேசையை கொஞ்சம் அரக்கி வைக்க வேணும். டேய் கொஞ்சம் அரக்கி இரு.

7. இயத்து: சமையல் பாத்திரங்கள்
8. ஏதனம்: சமையல் பாத்திரங்கள்


சரி மிச்சம் பிறகு சொல்லுறன்.

அப்ப வரட்டே....
Author: கானா பிரபா
•4:18 AM
வல்வெட்டித்துறையிலுள்ள துறைமுகத்தில் ஒரு காலத்தில் "சலங்கு" எனப்படும் பாய்மரக்கப்பல்கள் பல காணப்படும். இக்கப்பல்களில் மூன்று நான்கு பாய்மரங்களும் பல பாய்களும் உண்டு. மிகவும் பெரிய இக்கப்பல்கள் இந்தியாவுடனும் தூரகிழக்கு நாடுகளுடனும் வணிகத்தில் ஈடுபட உதவி வந்தன. வல்வெட்டித்துறையில் காற்றடிக்கின்ற காலத்தில் இவற்றைக் காரை நகருடன் அண்டிய ஊர்காவற்றுறைத் துறைமுகத்தில் பாதுகாப்பாகக் கட்டிவிடும் வழக்கம் இருந்தது. அதுமட்டுமன்றி உணவுப்பொருட்களையும் இவை காரைநகருக்குக் கொண்டு செல்வதுண்டு. இதனை மையமாக வைத்து ஒரு நாட்டார் பாடல் தீவுப்பக்கங்களில் வழக்கிலுள்ளது.

வல்வெட்டித்துறைப் பாய்மரக்கப்பலில்
வந்து குவியுது பண்டமடி
வாய் நிறையத் திண்டு வெத்திலை போடலாம்
வாருங்கோ கும்மி அடியுங்கடி
வத்தை சலங்கு கட்டுமரம் தோணி
வள்ளங்கள் வந்து குவியுதடி
எத்தனை பண்டங்கள் ஏந்தி வருகுது
எல்லாமே கொள்ளை லாபமடி

தகவல் நன்றி: கலாநிதி காரை.செ.சுந்தரம்பிள்ளை
(சிதம்பரக் கல்லூரி நூற்றாண்டு மலர்)
Author: மணிமேகலா
•3:50 AM
(1976ம் ஆண்டு நான் படித்த 6ம் வகுப்பு(?) தமிழ் புத்தகத்தில் இருந்து...
வன்னி மாணவன் ஒருவனின் பார்வையினூடாக...
வன்னி மண்ணின் வாழ்வும் மன வளமும்...
பதிவுக்கு சற்று நீளமாக இருக்கலாம், எனினும்,..

இருநூறு மீற்றர் - சிறு கதை -


"நாளைக்குப் பின்னேரம் வரதனுக்கு ஏதேனும் வேலை இருக்கிறதா?"

"இல்லை ஐயா"

"நாளைக்குப் பின்னேரம் என்னோடு வவுனியாவுக்கு வர வேண்டும், வசதியோ?"

"ஓம்"

" பாடசாலை விட்டதும் நாங்கள் வவுனியாவுக்குப் போவோம்.வீட்டில் அவ்வாறு சொல்லி வரவும்"

"ஓம் ஐயா"

"இப்பொழுது வீட்டுக்குப் போகலாம்"

எனக்கெண்டாக் காத்திக பறக்கிறது போல.புது வாத்தியார் வந்தபிறகு பள்ளியும் நல்ல திருத்தம்.பிள்ளையள் விருப்பமாய் பள்ளிக்கு வருகினம்.போன தவணை பள்ளியில விளையாட்டுப் போட்டியும் நடந்தது.அந்த ஓட்டப் போட்டியில நான் தான் முதலில வந்தனான்.பிறகு வவுனியாவில வட்டார விளையாட்டுப் போட்டியும் நடந்தது.புது வாத்தியார் என்னை அதுக்குக் கொண்டுபோனவர்.அண்டைக்குத் தான் நான் வவுனியாவைக் கண்டனான்.வவுனியாக் கடையள் பெரிசு.சாமான்களும் அம்பாரம்.இஞ்சை இருக்கிறபழைய விதானையார் கடையும் ஒரு கடையே? கொழும்பில உள்ள கடையள் ஆகப் பெரிசாம்.கடையள் மட்டுமே? கொழும்பில கடல் ஒண்டும் இருக்காம்.கடல் எண்டாக் கடல் தான்.எல்லாத்திலும் பெரிசு தான் கடல்.அதில கப்பல்கள் போகுமாம்.துறைமுகமோ - ஓம், துறைமுகம் எண்டு தான் நினைப்பு - அதுவும் கொழும்பில இருக்காம்.எல்லாத்தையும் பாக்க ஏலும்.

வீட்ட எப்பிடி வந்தன் எண்டும் தெரியாது.வழியில வாய்க்கால்,பாலம்,வேலி,சேனை எல்லாம் இருக்கும்.இண்டைக்கு அவை அந்தந்த இடத்தில இருந்ததா? எனக்கு நினைப்பில்லை.

"அம்மா,ஒரு புதினம். புது வாத்தியாரோட நான் நாளைக்கு வவுனியா போறன்.கொழும்பில ஓடேக்க கால் சட்டை போட வேணுமாம்.அவர் தைப்பிச்சுத் தாறாராம்."

"அங்கையும் வெல்லுவியோ? கொழும்புப் புள்ளையள் வலு கெட்டிக் காரராம்"

"வெல்லுறதுக்கில்லையணை போட்டிக்குப் போறது.புது வாத்தியார் சொன்னவர்,போட்டியில எங்கள் பள்ளி பங்குபற்றுவதே பெரிய வெற்றி"

"அப்பிடியே? நீ உந்தச் சாரத்தையும் வெனியனையும் கழத்தித் தா தோய்ச்சுப் போடுவம்.வவுனியாவுக்கு ஊத்தை உடுப்போடையே போறது? அடுப்படியில அவிச்ச மரவள்ளிக் கிழங்கு வைச்சனான்.உந்தச் சட்டியில உப்பும் பச்சை மிளகாயும் இருக்கும். கொப்பருக்கும் வைச்சு நீயும் தின்."

நான் சாரத்தையும் வெனியனையும் கழத்திக் குடுத்தன்.

புது வாத்தியார் எனக்கு கால்சட்டை மட்டும் தரவில்லை.'சேட்' ஒண்டும் வாங்கித் தந்தவர்.மூண்டு நாலு முறை நான் அதுகளை வீட்டில போட்டுப் பாத்தனான்.

"உந்த உடுப்பில வரதன் வடிவா இருக்கிறான் அப்பா.சப்பாத்தும் போட்டால்? ஆர் சொல்லப் போகினம் உவனை வன்னிப் பொடியன் எண்டு?"

அப்பா இரகசியமாய் அம்மாவுக்குச் சொன்னது எனக்குக் கேட்டுது.

"கொழும்புக்குப் போயிட்டு வருவாய் தானே அண்ணா? அப்ப இத போட்டுப் பாக்கத் தருவியே?"புதுச் சட்டைகளைத் தடவித் தடவிப் பார்த்தபடி தம்பி சிணுங்கினான்.

"உந்தச் சின்னவன் என்ன செய்யிறான்? கையில இருக்கிற ஊத்தையக் கொண்ணையின்ர உடுப்பில பிரட்டாமல், இஞ்ச வா!" தம்பியை அம்மா கூப்பிட்டா.

"கொழும்புக்குப் போகேக்கை உடுப்புகளை இஞ்சயிருந்து உடுத்துக் கொண்டு போகாதை.கடதாசிப் பையில சுத்திக் கொண்டு போய், கோச்சியில வச்சுப் போடு.இஞ்சை போட்டால், இஞ்சை உள்ளவை விடுப்புப் பாப்பினம்.கண்ணூறு ஆக்களைப் பொசுக்கிப் போடும்."

ஊர்ச் சனங்களின்ர கண்ணூறுக்கு அப்பா பயம்.கண்ணூறு பட்டால் வெற்றி கிடைக்காமல் போனாலும் போகுமாம்.இஞ்சையிருந்து போட்டுக் கொண்டு போனாலல்லவா கண்ணூறு படும்?

"சட்டைகளை ஏன் வரதன் அணிந்து வரவில்லை?" புது வாத்தியார் அப்பாவைக் கேட்டார்.வெள்ளணத் தீப்பந்தம் ஒண்டைக் கட்டிக் கொண்டு அப்பா தான் என்னை பள்ளிக்குக் கூட்டி வந்தார்.

"ஊத்தை பிரளும், கொழும்புக்குக் கிட்டப் போனதும் போடலாம் எண்டு நான் தான் சொன்னனான்." அப்பா என்ர முகத்தை பாத்துக் கொண்டு சொன்னார்.

வவுனியா ஸ்டேசனுக்குக் கொண்டுவந்து விட அப்பாவுக்கு விருப்பம்.ஆனால், காலையில அப்பா பால் கறக்க வேணும்.அம்மா கறந்தால் மாடு கள்ளப்படும்.

"மோனே, முருகன் அருளால போயிட்டு வா!"எண்டு சொல்லி அப்பா என்ர தலையைத் தடவினார்.

இன்னும் கோச்சியக் காணம்.இண்டைக்கு ஏன் இவ்வளவு சுணக்கம்?கை காட்டி விழும் வரை கோச்சி வராதாம்.கைகாட்டியை விழுத்திறவன் நித்திரையோ? புது வாத்தியார் ஸ்ரேசன் மாஸ்டரோட பேசுறார்.கோச்சி வாற நேரத்த கேக்கிறார் ஆக்கும்.கோச்சி வராமல் இருந்திடுமோ? போன கிழமை மாங்குளத்துக்குப் பக்கத்தில கோச்சி தடம் புரண்டதாம்.இண்டைக்கும் அப்பிடி ஏதும் நடந்திட்டுதோ? அப்பிடி நடந்தால் கொழும்புக்குப் போக ஏலாது. போட்டியிலும் ஓட ஏலாது.கொழும்பைப் பாக்கவும் ஏலாது.அது சரியான அநியாயம்.இல்லை; இல்லை.கோச்சி வராட்டாலும் புது வாத்தியார் என்னைக் கொழும்புக்குக் கொண்டு போவார்.அவரால் ஏலாததும் இருக்கோ? அவர் நல்லாய்ப் படிச்சவர். காசும் இருக்கு. நல்லவர். அருமையான வாத்தியார்.எங்கட பள்ளியில மட்டுமல்ல, இந்த லோகத்திலேயே அவரைப் போல தங்கமான வாத்தியார் இருக்க மாட்டார்.

"வரதன் தூங்கி விட்டாயா? புகை வண்டி வருகிறது.அந்தப் 'பார்சல்' எங்கே? அதை மறந்து விட வேண்டாம்."

என்ரை சட்டைகள் சடதாசிப் பையில சிடக்கு. அதை நெஞ்சோட அனைச்சபடி யோசிச்சுக் கொண்டிருந்தன். அது தான் அவர் அதைப் பாக்கேல்லைப் போல. நான் நித்திரை கொண்டனெண்டு அவர் நினைக்கிறார்.நேத்திரவு நல்லாய் நித்திரை கொள்ளேல்லை.நித்திரையிலை கொழும்புக் கோச்சி வாறது கேக்கும்.நான் திடுக்கிட்டு முழிப்பன்.

கோச்சி வந்து கொண்டிருக்கு.அதன் விளக்கில சூரிய வெளிச்சம் பட்டுப் பளிச்சிடுறது மரங்களுக்கிடையில தெரியுது.இப்ப வேல்முருகு மாமாவின்ர நினைப்பு வருகுது.சரியாய் இப்பிடித்தான் அவரும் இரவில தென்னைமரங்களில குரும்பட்டி தின்னக் குரங்குகள் வந்ததா எண்டு டோச் அடிச்சுப் பாப்பார்.கோச்சியில சனங்கள் நிறைய இருக்குமோ? அப்பிடி எண்டால் ஏறேலாது போகுமோ? எப்பிடியாவது ஏறிக்கொண்டால் போதும்.இருக்க இடம் இல்லாட்டிலும் பரவாயில்லை.அதுவும் நல்லது தான்.யன்னலுக்குக் கிட்ட நிண்டு புதினம் பாத்துக் கொண்டு போகலாம்.கோச்சி விசையா வருகுது.நிக்காதோ? இல்லை; இல்ல. கொஞ்சம் கொஞ்சமா விசை குறையுது.

"வரதன்...உம்"

புது வாத்தியார் என்ர கையைப் பிடிச்சுக் கொண்டு, ஒவ்வொரு பெட்டியாய் எட்டிப் பாக்கிறார். ஒண்டிலையும் இடமில்லையாக்கும். எல்லாப் பெட்டியிலயும் இடமில்லாட்டில்?

"வரதன் ஏறிக் கொள்; கெதியாய் ஏறு!"

இந்தப் பெட்டியில அவ்வளவு சனம் இல்லை.இரண்டொருத்தர் படுத்துக் கிடக்கினம்.எண்டாலும் நாங்கள் இருக்க இடம் இருக்கு.

கொழும்பில இருந்து வந்ததும் புது வாத்தியாருக்குப் பால்சட்டி ஒண்டு உறைய வைச்சுக் குடுக்க வேணும்.வாத்தியாருக்கு மர வத்தலெண்டா நல்ல விருப்பமாம்.அது கிடைச்சால் அவருக்குக் கட்டாயம் குடுப்பன்.சே, நான் நினைக்கிறத எல்லாம் சொல்ல அம்மாவோ தம்பியோ இல்லயே.போய் வந்தாப் பிறகுதான் சொல்ல வேணும்.

[ஆரும் வாசிச்சுக் களைச்சுப் போனியளோ?]

புது வாத்தியார் புதுச் சட்டைகளைப் போடச் சொன்னார்.அப்பிடியே செய்தன். மத்தியானம் போல கொழும்ப அடைஞ்சோம்.

கொழும்பு ஸ்டேசனில சரியான சனக் கூட்டம்.நல்லூர் கந்தசாமிக் கோயில் திருவிழாவுக்குத்தான் சரியான சனக் கூட்டமாம். அப்பா அடிக்கடி சொல்லுவார்.இந்தக் கூட்டம் அதிலும் பெரிசு எண்டுதான் நான் நினைக்கிறன்.அம்மோய்!எத்தினை ரயில் பாதைகள்! எல்லா ரயில் பாதைகளிலும் கோச்சியள்.பாதைகளுக்கு மேலால் பாலம். படிகளில ஏறினோம். பாலத்தில நீட்டுக்கு நடந்தோம். பிறகும் படிகளில இறங்கி வெளியே வஎதோம்.

எவ்வளவு சனங்கள்? சனங்கள் மட்டுமோ? கார்களும், வசுக்களும், லொறிகளும் றேஸ் ஓடுறது போல! இவை எங்கையிருந்து வந்தவையோ? எங்கை தான் போகுதுகளோ? பென்னாம் பெரிய மெத்தை வீடுகள்.பென்னாம் பெரிய கடைகள். பெரிய றோட்டுகள்.சோக்கா இருக்கு. எங்கட ஊரில ஒருத்தருமே இதுகளை எல்லாம் பாத்திருக்க மாட்டினம்.அவையள் கொழும்புப் புதினம் கேக்க என்னட்டத் தான் வருவினம்.நான் எல்லாத்தையும் சொல்லுவன்.

சாப்பாட்டுக் கடைக்குப் போனோம்.கூரையில வெள்ளைப் பொல்லுப் போல விளக்குகள்.ஒரு ஆள் சுவரில ஒண்டை முறுக்கினான்.தலைக்கு மேல தொங்கிக் கொண்டிருந்த விசிறி மட்டைகள் அஞ்சாறு சுத்தத் துவங்கிச்சுது. அந்த விசையில காத்து விசுக்கெண்டு அடிச்சுது.

சாப்பிட்டு முடிஞ்சதும் போட்டி நடக்கிற இடத்துக்கு வசு வண்டியில வந்தோம்.இது எவ்வளவு பெரிய விளையாட்டு மைதானம்!புது வாத்தியார் காட்டிய இடத்தில இருந்தன்.அவர் எங்கேயோ போயிட்டார்.அந்த இடத்தில நான் ஆடாமல் அசையாமல் இருந்தன்.இஞ்சை நிறையப் பிள்ளையள் வந்திருக்கினம்.வெள்ளை நிறத்தில உடுப்புகள். சப்பாத்துகளும் வெள்ளை நிறத்தில தான்.கொழும்புப் பிள்ளயள் வலு கெட்டிக் காரராம்.அந்தப் பிள்ளையளுக்குக் கிட்ட இருக்கிறவை யார்? அவையள் படிக்கிற பள்ளியளின் - இல்லை,இல்லை, கொழும்பில இருக்கிறது கல்லூரிகளாம்- வாத்திமாராக இருக்க வேணும்.அந்தப் பிள்ளையள் நல்லாச் சிரிச்சுச் சத்தம் போடுகினம்.எங்கட பள்ளிப் பிள்ளையள் வாத்தியார் கிட்ட இருந்தால் மூச்சுக் காட்ட மாட்டினம்.

இந்தப் பையன்கள் ஏன் என்னைப் பாத்துச் சிரிக்கினம்? நான் வன்னிப் பையன் எண்டு தெரிஞ்சு போச்சோ? நான் சப்பாத்துப் போடேல்லை.அது தானாக்கும் சிரிக்கினம்.என்னைப் பட்டிக் காட்டான் எண்டு பகிடி பண்ணுகினமோ? நான் அந்தப் பக்கம் பாக்காமல் இருக்கிறது தான் புத்தி.எனக்கு நல்லாய் வேர்க்குது.புது வாத்தியார் கிட்ட இருந்தால் நல்லது.

அங்கை பார்! போட்டி துவங்கியாச்சுது.எல்லாரும் சப்பாத்துப் போட்டுக் கொண்டு தான் ஓடுகினம்.சப்பாத்து போடாத படியால் என்னை ஓட விடமாட்டினமோ?அதோ,எங்கட வாத்தியாரும் வாறார்.

வரதன்,இப்பொழுது 11ன் கீழ்100 மீற்றர் போட்டி நடக்கிறது.இதைத் தொடர்ந்து 13ன் கீழ் 200 மீற்றர் ஓட்டப் போட்டி நடக்கும்.அதில தான் எங்கள் வரதன் ஓடப் போகிறான்.இலக்கத்தைக் கூப்பிடும் போது, போட்டி நடக்கும் இடத்திற்குப் போக வேண்டும்.வரதன், பயப்பிட வேண்டாம்.கட்டாயம் வெற்றி கிடைக்கும்.

மேற்சட்டையைக் களத்தினன்.வெனியனின் இரண்டு பக்கமும் 27ம் இலக்கம் அச்சடிச்ச துண்டுகளைக் குத்தினார்.இலக்கத் துண்டு இன்னும் கொஞ்சம் பெரிசாய் இருந்தால் என்ரை வெனியனின் முன் பக்கமுள்ள பாலைப் பழக் கயர் மறைஞ்சிருக்கும்.இப்ப இதில ஒரு பகுதி தெரியுது.இதைப் பாத்துக் கொழும்புப் பிள்ளையள் இன்னுஞ் சிரிப்பினமோ?

என்ரை இலக்கம் கூப்பிடப் படுகுது.பந்தயம் நடக்கிற இடத்துக்கு இனிப் போவம்.எப்பிடிப் போறது? ஓடிப் போறதா? நடந்து போறதா? அந்தப் பையன் ஓடி வாறான்.இல்லை,இந்தப் பையன் நடந்து வாறான்.நானும் நடந்து போவம். என்ர நடையைப் பாத்து என்னை பட்டிக் காட்டான் எண்டு நினைப்பினமோ?அங்க கொஞ்சப் பேர் துள்ளித் துள்ளிஓடுகினம்.உப்பிடித்தான் ஓடிப் பழக வேணுமாம்.எல்லாப் பையன்களும் சப்பாத்துகள் போட்டிருக்கினம்.அட, இப்ப தானே பாத்தன். எல்லாம் முள்ளுச் சப்பாத்துகள்! நான் ஓடேக்கை முள்ளுச் சப்பாத்து மிதிச்சால்? ஓட ஏலாது போயிடுமே! இவையள் கொழும்புக் கல்லூரிகளில படிக்கினம்.என்னைப் பாக்க இவையள் பெரிய ஆக்கள்.இஞ்ச எல்லாம் ஓடவும் படிப்பிக்கினமாம்.அண்டைக்கு முருகேசர் அண்ணரின்ர நாம்பன் அறுத்துக் கொண்டோட, நான் தானே துரத்திப் பிடிச்சனான்.இது பசுந்தான மைதானம்.நாங்கள் மாடுகளைத் துரத்திப் பிடிக்கிற இடம்? தொட்டாச்சுருங்கிப் பத்தை, நெரிஞ்சி முள்ளு,கப்பித் தறை - இதுகளுக்கு மேலாலும் ஓட வேணும்.போட்டியில நான் வெல்லுவன்.புது வாத்தியாரும் அப்பிடித் தான் சொன்னவர்.நான் வெண்டால் அப்பா, அம்மா,தம்பி எல்லாரும் சந்தோசப்படுவினம்.முள்ளுச் சப்பாத்து கால மிதிச்சுப் போடுமோ?

"கமோன் றோயல்"

"கமோன் ஆனந்தா"

"கமோன் நிமால்"

என்னோட ஓடப் போற பிள்ளையள உசார் படுத்தத்தான் இப்பிடிச் சத்தம் போடுகினம்."கமோன் வரதன்" எண்டு சத்தம் போடுறதுக்கு ஆர் இருக்கினம்? அண்டைக்குப் பள்ளியில என்ர இல்லப் பிள்ளையள் சத்தம் போட்டவை.அப்ப எனக்கு நல்லா உசார் வந்தது.

"கவனியுங்கள்!13ன் கீழ் 200 மீற்றர் ஓட்டம்.இலக்கங்கள் 8 முதலாம் லேன்;126 2ம் லேன்27 3ம் லேன்....."

"இஞ்சை, என்ர இலக்கம் கூப்பிட்டாச்சு.நான் 3ம் லேனில நிக்க வேணும்."

"....உங்களுக்குக் காட்டப் பட்ட இடங்களில் ஒழுங்காக ஓட வேண்டும்.எனது கட்டளை இப்பிடித் தான் இருக்கும்.' ஆரம்பம்....ஆயத்தம்...போ!' போ என்று சொல்ல வேண்டிய வேளையில் இந்தத் துவக்கைச் சுடுவேன்.சுடுவதற்கு முன் யாரும் ஓடக் கூடாது.அப்படி முனைந்தால், இரண்டாம் தடவையுடன் நீங்கள் மைதானத்தை விட்டு வெளியேற நேரும்.கவனம்.உங்களுக்கு ஒதுகப்பட்ட லேனில் பிசகாது ஓட வேண்டும்.சரி. தயாராகுங்கள்."

"ஆரம்பம்...ஆயத்தம்..."

"டுமீல்!"

ஐயோ,அந்தச் சப்பாத்துக் காரன் முந்தியிட்டான்.இருந்தாலும் முருகேசு அண்ணரின்ர நாம்பன் போல இவனால ஓட முடியுமே? இதில ஓடுறது பெரிய வேலையே? அவனுக்குக் கிட்ட வந்திட்டன்.என்னால வெல்ல ஏலும்.இப்ப சரி.இனி இவன் என்ர வாலை பிடிக்கட்டும்.என்ர காலில சீவன் இல்லையோ? செத்தாலும் பறவாயில்லை. சப்பாத்துச் சத்தம் பின்னால கேக்குது.திரும்பிப் பாக்கக் கூடாது.இஞ்சை தெரியுது முடிவுக் கம்பம்.குறுக்கால நூல்.நான் கிட்ட வந்திட்டன்.நூலை அறுத்துக் கொண்டு ஓடினாப் பிறகு நான் செத்தாலும் பறவாயில்லை. ஆம்; எனக்கே வெற்றி.

ஏன் இவர் என்ர கையைப் பிடிக்கிறார்? எங்கே கூட்டிக் கொண்டு போறார்? வேறை இரண்டு பேர் முள்ளுச் சப்பாத்தோட ஓடின இரண்டு பேரக் கூட்டி வருகினம்.

"ஆக மேலே உள்ள தட்டில் ஏறவும்!" என்ர கையைப் பிடிச்சுக் கொண்டு போனவர் சொன்னார்.படிக்கட்டுப் போன்ற தட்டில் ஆக மேலே நான் ஏறினேன்.கீழே உள்ள தட்டில் என்ர வலப் பக்கமும் இடப் பக்கமுமாக மற்ற இரண்டு பையன்களும்."

" இதோ இன்னொரு போட்டி முடிவு.13ன் கீழ் 200 மீற்றர் ஓட்டப் போட்டி.முதலாவது இடம்:இலக்கம் 27, வவுனியா வட்டாரம், முல்லை வனம் தமிழ் கலவன் பாடசாலை, வெற்றி பெற்றவர் பெயர் த. வரதன்!"

இரும்புக் குளாய்க்குள்ளால கேக்குது. கனவில கேக்கிறது போல.சனங்கள் கை தட்டுகினம்.உலுப்பேக்கை புளியம்பழங்கள் கொட்டுண்ணும், சரியாய் அதைப் போலத் தான்.இரும்புக் குளாய்க்குள்ளால இன்னும் ஏதேதோ சொல்லுகினம். சனங்கள் கை தட்ட எனக்கு ஒண்டும் கேக்கையில்லை.

மூண்டு பேரும் தட்டில் இருந்து இறங்கினம்.

வலக்கைப் பக்கம் நிண்ட பையன் கிட்ட வந்தான்."நீர் சரியான கெட்டிக்காரன். என் வாழ்த்துக்கள்" எண்டு சொன்னான். என்ர கையைப் பிடிச்சுக் குலுக்கிக் கொண்டு சிரிச்சான். மற்றவனும் அப்பிடித் தான் செய்தான். இவையள் கொழும்புப் பிள்ளையள்.நல்ல பிள்ளையள்.

"வரதன் வெல்லுவான் எண்டு எனக்குத் தெரியும். நீ நல்ல கெட்டிக் காரன்."

புது வாத்தியார் என்னைப் பிடிச்சுத் தூக்கினார்.என்னை இறக்கி விட்டு என்ரை தலையைத் தடவினார்.அப்போது அவருடய கண்ணில நீர் துளும்பித் தெரிஞ்சுது. எனக்குச் செரியான சந்தோசம்.என்ர கண்ணிலும் கண்ணீர்.
Author: வந்தியத்தேவன்
•11:02 AM
யாழ் தமிழரின் உயிர்-மெய் ஒலிப்பு வழக்கு என்ற பதிவில் மொழிவளனின் சில கருத்துக்கள் ஒரு சிறிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக நண்பர்களான மு.மயூரனினதும் கண்டும் காணானினதும் கருத்துக்கள் விவாதத்துக்குரிய பொருளாகியிருக்கின்றது.

இந்த குழுமத்தில் நாங்கள் இலங்கைத் தமிழராக பொதுவாக இலங்கைத் தமிழரை ஈழத்தமிழர் என்ற சொற்பதம் கொண்டு அழைப்பதில் தப்பில்லை. போராட்ட காலத்தில் பயன்படுத்திய ஈழம் என்ற வார்த்தையை இன்றைக்கும் பல அரசியல் கட்சிகள் தங்கள் பெயரில் வைத்திருப்பதாலும் அத்துடன் இலங்கைக்கு ஈழம் என்ற இன்னொரு பெயர் இருப்பதாலும் ஈழத்தமிழர் என்ற சொன்றபதம் பிழையில்லை என்பது என்கருத்து.

அத்துடன் பிரதேச வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் ஒரே குடையில் கீழ் ஒன்றாகவேண்டும் என்பதுதான் எனது ஆசையும் இக்களத்தின் இருக்கும் அனைவரினது ஆசையும்கூட.

இங்கே நாம் எங்கள் ஊர்களில் எங்கள் பிரதேசங்களில் பாவனையில் உள்ள அல்லது பாவித்த(காரணம் சில இடங்களில் இப்போது தமிழக ஊடகங்களின் தாக்கம் பல சொற்களை மறக்கச் செய்துள்ளன, தமிழக ஊடகங்களின் தாக்கம் பற்றி இன்னொரு பதிவில் விவாதிக்கலாம்)சொற்களைத் திரட்டுவதும் எம் ஊர் பிரதேச கலை கலாச்சார நிகழ்வுகளைப் பற்றிய ஞாபகப்படுத்தலாகவும் பதிவு செய்வதே இக்குழுமத்தின் தலையாய கடமை.

உங்கட ஊர் பாசை நல்லது நம்மட ஊர் பாசை நல்லது என்பது அல்ல. நான் இங்கே ஊர் என்ற வார்த்தையைப் பாவிக்க காரணம் அடிப்படையில் நான் யாழ்ப்பாணம் என்ற மாவட்டத்தில் , வடமராட்சி என்ற பிரதேசத்தில் கரவெட்டி என்ற ஊரைச் சேர்ந்தவன். என்னுடைய ஊரில் பாவிக்கும் சில சொற்கள் பக்கத்து ஊரில் பாவிப்பதில்லை. உதாரணமாக பருத்தித்துறையில் பாவிக்கும் சில சொற்கள் கரவெட்டியில் பாவிப்பதில்லை, வல்வெட்டித்துறையில் பாவனையுள்ளது பருத்தித்துறையில் இருக்காது. இப்படி ஊர் ஊருக்கு பல சொற்கள் வேறுபடும்.

வடமராட்சியை எடுத்தால் வடமராட்சி கிழக்கில் ஒரு வகையான சொற்கள் கலைகள் கலாச்சாரங்கள் வடமராட்சி மேற்கில் இன்னொரு வகை. இப்படி எமது பிரதேசத்தில் கூட நாம் வேறுபாடாகவே இருக்கின்றோம். இதில் பிழையில்லை என்றே நினைக்கின்றேன்.

ஒரு சில மொழியில் அதிலும் வட்டார மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர்கள் நான் பேசும் மொழியைவைத்தே என்னை எந்த ஊர் எனக் கண்டுபிடிப்பார்கள்.

மு.மயூரன் கூறியதுபோல் "எந்த வட்டார வழக்கும் துல்லியமானது கிடையாது. மொழியில் துல்லியம் என்றொன்றில்லை". எனக்கு இன்னொரு வட்டாரத்தில் இருக்கிறவன் பேசுகின்ற என் மொழியே சிலவேளைகளில் நகைப்புக்குரியதாக இருந்தது.

இது தமிழர்களுக்கு மட்டுமல்ல ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்டவனுக்கும் பொருந்தும். அமெரிக்காகாரன் ஒரு ஸ்டைலில் பேசுவான் இங்கிலாந்துக்காரன் ஒரு ஸ்டைல் அவங்களைப் பார்த்து நாம ஒரு ஸ்டைல் என ஆங்கிலம் வேறுபடுபதுபோல் தமிழும் இடத்திற்க்கு இடம் மாறுகின்றது. மொழி என்பது ஒருவருடன் ஒருவர் உரையாடவும் புரிந்துகொள்ளவும் உதவும் சாதனமே ஒழிய மதம் போல் நீ இப்படித்தான் மொழியைப் பாவிக்கவேண்டும்(உரையாடலில்) என்ற கட்டுப்பாடுகள் இல்லை.

ஆகவே இக்குழுமத்தில் நான் பெரிது என் வட்டாரச் சொல்தான் சிறந்தது என்ற விவாதங்களை விட்டுவிட்டு உங்கள் வட்டார பிரதேச மொழிகளையும் ஏனைய கலை கலாச்சாரச் சிறப்புகளையும் மற்றவர்களுடன் பகிருங்கள். இந்தப் பதிவு யாரையும் புண்படுத்தவல்ல.
Author: மணிமேகலா
•1:42 AM
19.06.09 வெள்ளிக் கிழமை இண்டைக்கு. ஈழத்து முற்றக்காரர் எல்லாரும் இண்டைக்கு எனக்குச் சொந்தமாப் போச்சினம்.சொந்த பந்தம் எண்டு இருக்கிறது எவ்வளவு சந்தோஷம்!இண்டைக்கு அவை எல்லாரும் என்னட்ட வந்தாலும் வருவினம்.நான் அவைய வரவேற்கத்தானே வேணும்.

அதால இருக்க, நிக்க இப்ப எனக்கு நேரமில்லை.நாற்சார வீடெண்டா சும்மாவே! முதுகொடிஞ்ச வேலை.வீடு தூசு தட்டி,கூட்டி, சீமேந்துத் தரை கழுவி,சாம்பிராணிப் புகை போட்டு,சாமிக்கும் பூவும் விளக்கும் வைச்சு,வெளி முற்றமும் கூட்டிப் பெருக்கி, புழுதி கிளம்பாமல் தண்ணி தெளித்து,தலை வாசலில் மாவிலைத் தோறணமும் கட்டியாச்சு.முற்றத்தில மல்லிகைப் பூக்கள் பந்தலுக்குக் கீழ கொட்டுண்டு கிடக்குது தான். பொறுக்கி எடுக்க இப்ப நேரமில்லை.அதப் பிறகு பாப்பம்.

பால் வாங்க வாற அம்மானின்ர சின்னப் பொடியன் இன்னும் வரக் காணன். வந்தால் மதிலில ஏத்தி உயரத்தில இருக்கிற செவ்வரத்தம் பூக்களை ஆய்ஞ்சு தரச் சொல்லலாம். அவன் அந்தக் காலமையிலையும் பூவரசமிலையில பீப்பீ ஊதிக் கொண்டுதான் வருவான்.சொல்வழி கேளான்.

தூரத்தில கோயில் மணி கேக்குது.யாரோ ஒரு கறுப்புத் தாத்தா வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு நெத்தீல கையில மார்பில எல்லாம் வீபூதி பூசிக் கொண்டு உரத்த குரலில தேவாரம் பாடிக் கொண்டு றோட்டால போகிறார்.மதிலைத் தாண்டி றோட்டில எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிற நித்திய கல்யாணிச் செடியள் பூத்திருக்கிறதெல்லாம் இந்தத் தாத்தாவுக்காகத் தான்.தன்ரை பைக்குள் அதுகளப்போட்டுக் கொண்டு அவர் நடந்து போறார்.

பள்ளிப் பிள்ளைகளும் இப்ப பள்ளிக் கூடம் போகத் தொடங்கி விட்டுதுகள்.நேரம் இப்ப 8 மணி சொச்சமாக இருக்க வேணும்.சைக்கிள்களில வெள்ளைச் சீருடையில நல்லெண்ணை வெச்சு படிய வாரிப் பின்னி திருநீறும் கறுப்புப் பொட்டும் போட்டுப் பிள்ளைகள் போறது ஒரு கண்கொளாக் காட்சி தான்.புறாக்கள் கூட்டமாப் போறது போல இருக்கும்.சர்வகலாசாலைக்குப் போய் பிரகாசிக்க வேண்டிய குருத்துகள்.

எங்கட ஐயாவும் விடிய வெள்ளன புலவுக்குப் போட்டார்.அது அவற்ற முதுசக் காணி.சங்கதி என்னண்டா அவர் காம்புக் சத்தகத்தையும், உழவாரத்தையும்,அலுவாங்கையும் கொண்டு போனாரோ தெரியேல்லை.அசண்டையீனமா விட்டிட்டுப் போட்டார் போல கிடக்கு. கதியால் போட என்ன செய்யப் போறாரோ தெரியாது.அவருக்கும் இப்ப மறதி கூடிப் போச்சு.இப்ப காதும் சரியாக் கேக்கிறயில்ல.ஆனா பாவம், செரியான பிரயாசை.

வெய்யில் ஏறிவிட்டுது இன்னும் பினைஞ்ச பினாட்டையும் புளியையும் நடு முத்தத்தில வைக்கேல்லை எண்டு அம்மா வேற அங்க பிலாக்கணம் பாடத் தொடங்கீயிட்டா.அவவின்ர பூராடம் கேக்கிறதெண்டா அவவின்ர சிநேகிதி பொன்னம்மாக்கா,பொட்டுக்கால வந்து தலைவாசல்ல நிண்டு ஒரு குரல் குடுக்க வேணும்.அப்ப பாக்க வேணும் நீங்கள் அவவ.

இண்டைக்கு நல்லா வெய்யில் எறிக்கும் போல தான் கிடக்கு.புளுக்கொடியலையும் காய விட்டா நல்லது தான்.அதுக்கு முதல் வெத்திலத்
தட்டத்தையும்,பாக்குவெட்டியையும்,பாக்குரலையும் சாவியையும் கொண்டு போய் அவவின்ர கையில் குடுத்துப் போட வேணும்.இல்லாட்டிக்கு அவவிட்ட வாய் குடுத்துத் தப்பேலாது.

ஐயாவுக்கு அடுப்பில குரக்கன் புட்டு அவியுது.அவருக்குச் சலரோகம் கன காலமா இருக்குது.இவ்வளவு காலமும் சாப்பாட்டால தானே கட்டுப் படுத்திக் கொண்டு வாறார்.குரக்கன் புட்டும் எப்பன் பழஞ் சோறும் பழங்கறியளும் கொஞ்சம் சம்பலும் சட்டிக்கை போட்டுக் குழைச்சுப்போட்டு 2 மிளகாய்ப்பொரியலையும் தட்டில வச்சு மூடிவிட்டா மனுசன் வந்து சாப்பிடும்.பாவம் களைச்சுப் போய் வாற மனுசன்.

இனி நானும் நிண்டு மினைக்கிட ஏலாது. மூண்டாவது வளவுக்கை போய் நல்ல தண்ணி அள்ளிக் கொண்டு வந்து வச்சுப் போட்டு,மத்தியானப் பாட்டத் தொடங்க வேணும்.வறண்ட பூமி தானே!நிலம் எல்லாம் சுண்ணாம்புக் கல்லு.அதால சவர் தண்ணி.எண்டாலும் சனம் நல்லாப் பாடுபடுங்கள்.

அடுத்த வீட்டு பொன்னம்மாக்கன்ர மே(மோ)ள் பாவாடை ஒண்டு தச்சுத் தாங்கோ எண்டு முந்த நாள் துணியை தந்திட்டுப் போனவள்.குடைவெட்டுப் பாவாடையோ சுருக்குப் பாவாடையோ எண்டு கேக்க மறந்து போனன்.இனி,எக்கணம் வந்து துள்ளப் போறாள்(குதிக்கப் போறாள்)இன்னும் தைக்கேல்லை எண்டு.தண்ணி அள்ளப் போகேக்கை ஒருக்கா கண்டு கேக்க வேணும்.

அது சரி,நீங்கள் எல்லாம் வருவீங்கள் எல்லே? அதால முதலே வேல எல்லாத்தையும் முடிச்சுப் போட்டன் எண்டா நல்லது.பிறகு இடயில ஒருக்கா போய் செல்வி மாட்டுக்கு கழுநீர் தண்ணி வைக்கிறது மட்டும் தான்.மாத்தியானம் ஒருக்கா மாத்தியும் கட்ட வேணும்.சில வேளை நீங்கள் இருக்கிறீங்கள் எண்டுட்டு அம்மா அதச் செய்தாலும் செய்வா.

இஞ்ச பாருங்கோவன்,கோடியில செல்வி குரல் குடுக்குது.இண்டைக்குக் கொஞ்சம் பிந்திப் போட்டுது.பாவம் அவளும் இளங் கண்டுக்காறி.உண்ணாணை அது ஒரு லட்சுமி தான்.சொம்பு நிறைய அது தாற பாலக் கறந்து,மண்சட்டியில, சாணத்தால மெழுகின விறகடுப்பில வச்சுக் காச்சினா வாற வாசம் இருக்கே அதுக்கு ஈடு இணை இல்லை.

நீங்கள் எல்லாரும் வாருங்கோ! உங்களுக்கு கொஞ்சம் கற்கண்டு போட்டுக் காச்சி, ஆத்தி அளவான சூட்டோட மூக்குப் பேணியில பக்குவமா ஊத்தித் தாறன்.அதை ஒருக்கா அன்னாந்து குடிச்சுப் பாருங்கோ. பிறகு நீங்களே சொல்லுவியள் நல்லா இருக்கெண்டு.

நீங்கள் கட்டாயம் எல்லாரும் வருவீங்கள் தானே? நீங்கள் வருவீங்கள் எண்டுதான் இவ்வளவு ஆரவாரம்.மறக்கக் கூடாது.வந்திட வேணும்.


குறிப்புகள்:


செட்டாக - நேர்த்தியாக,சச்சிதமாக,அழகு இறுக்கம் செறிவு கொண்ட

சாம்பிராணி - அகில்

பொறுக்கி - கைகளால் ஒன்றொன்றாக எடுத்தல்

அம்மான் - மாமா

பொடியன் - பையன், அதன் பெண்பால் பொடிச்சி/பெட்டை

சொல் வழி - புத்திமதி

கேளான் - கேட்க மாட்டான்

சொச்சமாக - கிட்டத்தட்ட

கொட்டுண்டு - சிந்துப் பட்டு

ஆய்ந்து - பிடுங்கி

காணன் - காணவில்லை

வீபூதி - திருநீறு

பள்ளி - பாட சாலை

சர்வகலாசாலை - பல்கலைக் கழகம்

குருத்துகள் - இளம் பிள்ளைகள்

புலவு - தோட்டம்

முதுசம் - பாரம்பரியமாக கை மாறப் பட்டு வரும் சொத்து

சங்கதி - புதினம், செய்தி,விடயம்

அசண்டையீனம் - கவலையீனம்

கதியால் - வேலி

காம்புக் சத்தகம் - ஓலை வார, வார்ந்த ஓலையை பெட்டி இழைக்கும் போது பின்னலுக்குள் சொருக உதவும் கூர்மையான நீண்ட பின்புறத்தைக் கொண்ட மிகச் சிறிய வளைந்த கத்தி.

உழவாரம் - குந்தியிருந்து கைகளால் புற்களைச் செருக்க உதவும் மண்வெட்டியைப் போன்றதான ஒரு சிறு கருவி

அலுவாங்கு - ஈட்டி போல நீளமாகவும் நுனிப் பக்கம் தட்டையாகவும் கூர்மையாகவும் இருக்கும்

பிரயாசை - முயற்சி

புளுக்கொடியல் - பனங் கிழங்கைக் அவித்துக் காய வைத்து சேகரித்து வைத்துக் கொள்வார்கள்.தேங்காய்ச் சொட்டோடு சாப்பிடச் சுவையாக இருக்கும்

பாக்கு வெட்டி - பாக்கு வெட்ட உதவும் சிறு உபகரணம்.கலைத்துவமான வடிவங்களில் கிடைக்கும்

வெத்திலைத் தட்டம் - வெத்திலைகள் வைப்பதற்கென்று இருக்கின்ற தட்டம்.பீடத்தோடு கூடியது.

பாக்குரல், சாவி - பல் இல்லாதவர்கள் பாக்கு இடித்து உண்ண உதவும் சிறு உரலும் உலக்கையும்

பிலாக்கணம் - புறுபுறுத்தல்

பூராடம் - விடுப்பு,விண்ணாணம்

கோடி - கொல்லைப் புறம்

பொட்டு - வேலிக்கிடையிலான சிறு சந்து

உண்ணாணை - உன் மீது ஆணையாக

எப்பன் - கொஞ்சம்

வளவு - காணி

சவர் - உப்பு

எல்லே - அல்லவா

ஏலாது - முடியாது

மே(மோ)ள் - மகள்

பாவாடை - முழங்கால் அளவுக்குத் தைக்கப் படும் பெண்களுக்கான கீழ் பாதி ஆடை

எக்கணம் - இக்கணம், இப்ப

துள்ளப் போறாள்/குதிக்கப் போறாள் - கோவிக்கப் போகிறாள்

போகேக்க - போகும் போது

களு நீர் - சோறு வடித்த கஞ்சி,மரக்கறித் தண்டுகள்,மாட்டுணவு, தண்ணீர் எல்லாம் போட்டுக் கக்கிய கலவை(கால் நடைகளுக்குரியவை)

மாத்திக் கட்டுதல் - வேறொரு மேச்சல் நிலத்திற்கு மாற்றுதல்

சருவம் -அகன்ற பாத்திரம்

மூக்குப் பேணி - பித்தளையில் செய்யப் பட்ட ஒரு முனை வெளிப் புறம் கூராக நீண்டிருக்கும் தேநீர் குடிக்கும் பாத்திரம் (குவளை)

அன்னாந்து - மேலே பார்த்தவாறு வாயில் படாமல் வாய்க்குள் ஊற்றுவது.

ஆரவாரம் - ஆர்ப்பரிப்பு

( இவை யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கும், பழக்க வழக்கங்களும்,வாழ்க்கை முறையும், நாம் நாளாந்தம் பாவிக்கும் சொற்களும் ஆகும்.)

ஏனைய பிரதேசங்களின் காலை, மாலை நேரங்களையும் ஆண்களின், பெண்களின் சிறுவர்களின் வாழ்க்கை முறைகள், எண்ணப் பாங்குகள் பற்றியும் அறிய ஆவல். இது முன்பொரு முறை என் பதிவொன்றில் எழுதப் பட்டது தான். சிறு மாற்றங்களோடு அறிமுகப் பதிவாக இங்கு இடப் படுகிறது.
Author: வந்தியத்தேவன்
•7:43 PM
"பட்டம் விடுவோம் பட்டம் விடுவோம் பாலா ஓடிவா" சின்ன வயதில் ஆடிப்பாடிய பாடல். பட்டம் என்பது எங்கள் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த இன்னொரு விசயம். வாலாக்கொடி, கொடி என இடத்துக்கு இடம் பெயர் மாறுபட்டாலும் பொதுவாக பட்டம்(காற்றாடி) என்றே அழைப்பார்கள்.பெரும்பாலும் நவம்பர் மாத கடைசியில் பட்டக்காலம் தொடங்கிவிடும் அதாவது சோளகக் காற்று வீசத்தொடங்க பொடிபெட்டையெல்லாம் வெட்டை வெளிகளிலும் தோட்டக்காணிகளிலும் தங்கள் பொழுதைக் கழிப்பார்கள். பெரும்பாலான பெற்றோருக்கு பட்டம் காலம் வந்தால் கரைச்சல்தான். டிசம்பரில் பாடசாலை விடுமுறை என்பதாலும் பட்டக் காலம் என்பது மாணவர்களிடையே சந்தோஷமான நாட்கள். எப்படியும் பொங்கல் வரை பட்டம் ஏற்றி பட்டதாரியாகிவிடுவார்கள்.

ஆயகலைகள் அறுபத்து நான்கில் பட்டக்கலை இருக்கோ இல்லையோ ஆனால் இதுவும் ஒரு கலைதான். செங்கை ஆழியானின் முற்றத்து ஒற்றைப் பனையில் பட்டத்தைப் பற்றி நிறையவே சொல்லியிருப்பார். கொக்கர் மாரிமுத்தர் அம்மான் தான் கதாநாயகன் ஆள் கொக்குப்பட்டம் கட்டுவதில் விண்ணன்(கெட்டிக்காரன்). இவருக்கும் பொன்னு ஆச்சிக்கும் நடக்கும் பட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அம்மானுடன் சூலாயுதம் என்ற வேலாயுதம் என்கிற பொடியன் சேர்ந்து செய்யும் ரகளைகள் அலம்பல் காசியின் வில்லத்தனம் என ஒரு மண்ணின் வாழ்க்கையை அழகாக படம் பிடித்துக்காட்டியுள்ளார். செங்கை ஆழியான்.

பட்டத்தில் பல வகைகள் உண்டு.

கடதாசிப் பட்டம் :
சாதாரண கடதாசிப் பட்டம் சில இடங்களில் இதனை வாலாக்கொடி என்பார்கள். இதனை உருவாக்க ஈர்க்கும் சாதாரண கடதாசி அல்லது ரிசூப் பேப்பர் போதும்.ஆரம்ப கால சிறுவர்கள் பெரும்பாலும் ஏற்றுவது இதுதான். சாதாரண தையல் நூல் இதற்க்குப் போதும் பட்டத்தில் வாலாக பழைய பருத்திச் சீலைகள் சறம் அல்லது சாரம்(கைலி) போன்றவற்றின் துண்டுகள் வாலாகப் பயன்படுத்தப்படும். இதற்க்கு விண் பூட்டமுடியாது.

நான்குமூலைப் பட்டம் :
சில இடங்களில் படலம் அல்லது பெட்டிப்பட்டம் என அழைப்பார்கள். ஒரு செவ்வக வடிவத்தில் அமைந்திருக்கும். இதனை பனைமட்டையை இணக்கி இல்லையென்டால் மூங்கில் தடிகளை இணக்கி செய்வார்கள். ரிசூப்பேப்பரில் விதம்விதமான டிசைன் போட்டு ஒட்டுவார்கள். இதன் மேற்பக்கத்தில் விண் பூட்டுலாம். வாலாக கயிறுபயன்படுத்தப்படும். சிறிய ஒரு அடிக்கு ஒரு அடி சைஸிலிருந்து ஆளுயர சைஸ்வரை செய்யமுடியும். சைஸைப் பொறுத்து நூலின் தடிப்பும் மாறும். கூடுதலாக நைலோன் நூலே பயன்படுத்தப்படும். பட்ட ஏற்றலில் விண்ணர்களான சில சிறுவர்களும் பல பெரிய ஆட்களும் ஏற்றுவார்கள். பட்டத்தின் சைசுக்கு ஏற்ப ஏற்றுபவர்களின் மவுசு கூடும். அதிலும் ஒருவன் நல்ல சத்தமுள்ள‌ விண் பூட்டி தன்னைவிட உயரப்பட்டம் ஏற்றினால் அவந்தான் அந்த வட்டாரத்தில் ஹீரோ.

கொக்குப் பட்டம் :
கொக்கைப்போல் வடிவம் உடையது. பெரும்பாலும் மூங்கில் கொண்டு செய்யப்படும். இதற்க்கும் விண் பூட்டமுடியும். கொக்குப்பட்டத்திற்க்கு வால் பெரும்பாலும் தேவைப்படாது. அழகான குஞ்சங்கள் எல்லாம் வைத்து செய்தால் வானில் பறக்கும் போது மிகவும் அழகாகவும் இருக்கும். எல்லாரும் இலகுவில் செய்யமுடியாது. கொக்கர் மாரிமுத்தர் போல் கொக்குப் பட்டம் கட்ட தனித் திறமை வேண்டும். சில இடங்களில் ரெடிமேட்டாக செய்து விற்பார்கள். அதனை வாங்கி ஏற்றும் சிறுவர்கள் உண்டு.

பிராந்துப் பட்டம் :
பருந்தையே நம்ம ஊரில் பிராந்து என்பார்கள். பிராந்து வடிவத்தில் செய்யப்படும் பட்டம் இதுவும் எல்லோராலும் செய்யமுடியாது. மூங்கில் கொண்டே வடிவமைக்கப்படும். விண் பூட்டலாம். கொக்குப்பட்டம் போல் அழகானது.

எட்டுமூலை :
நட்சத்திரப்பட்டம் எனவும் சொல்வார்கள். எட்டுமூலைகள் இருப்பதால் இந்தப்பெயர்.

இதனை விட வேறு வகைகள் இருந்தால் தெரிவிக்கவும். படங்கள் தேடினேன் கிடைக்கவில்லை. முற்றத்து ஒற்றைப் பனையிலிருந்து ஸ்கான் பண்ணித்தான் போடவேண்டும்.

பட்டக் கலையில் பாவிக்கப்படும் சில் அருஞ்சொற்கள்.

விண் :
விண் என்பது "கொய்ங்ங்ங்" என்ற சத்தத்தை கொடுக்கும் பனை ஓலை நாரில் செய்யப்பட்ட ஒரு ஒலிஎழுப்பி. சிலர் பார்சல்கள் கட்டிவரும் பிளாஸ்டிக் நாரிலும் செய்வார்கள். சிம்பிளான விண் என்றால் யூரியா பாக்கிலிருக்கும் (உரம் வரும் பை)அந்த மெல்லிய நைலோன் நாரையும் பாவிப்பார்கள். விண்ணை மட்டையில் கட்டி பார்ப்பதற்க்கு வில்லுப்போல இருக்கும் இரண்டு தொங்கல் பக்கத்திலும் இரண்டு கட்டைகள் போட்டு பின்னர் அதனை கொக்குப் பட்டத்துடனோ இல்லை நான்குமூலையுடனோ எட்டுமூலையுடனோ இணைத்து ஏற்றுவார்கள். சிலகாலம் விண் பூட்டி ஏத்துவது தடைசெய்யப்பட்டிருந்தது காரணம் குண்டுவீச்சு விமானத்தின் சத்தம் கேட்காது அல்லது விமானச் சத்தத்தை விண் பூட்டிய பட்டம் என சனம் சும்மா இருப்பார்கள் என்றபடியால்.

முச்சை கட்டுதல் :
பட்டத்திற்க்கு முக்கியமான ஒரு செயல்பாடு. பட்டத்தை நூலுடன் சாதாரணமாக தொடுத்துவிட முடியாது. இதற்காக ஒரு ஸ்பெசல் செயல்தான் முச்சைகட்டுதல். பட்டத்தின் ஒரு தொங்கலையும்(அந்தம்) இன்னொரு தொங்கலையும் நூலினால் இணைத்தல். கொக்குப்பட்டம் நான்குமூலை எட்டுமூலை போன்றவற்றிற்கு இன்னொருவகையான முச்சை கட்டப்படும். சாதாரண முச்சை மூன்று முச்சை நான்கு முச்சை என பல வகை உண்டு.

பட்டம் தொடுத்தல் :
ஒரு பட்டத்தின் பின்னால் இன்னொரு பட்டம் தொடுத்தல். இப்படி பல பட்டங்களை தொடுக்கமுடியும். எங்கட ஊரிலை என் நண்பன் ஒருவன் ஆகக்கூட 10 பட்டம் தொடுத்து ஒரு பொங்கலுக்கு ஏற்றினான். அந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை என நினைக்கின்றேன்.

லைட்பூட்டி ஏற்றுதல்.
இரவு வேளைகளில் பட்டத்தில் நூலில் சிலர் பட்டத்திலையே பற்றரி அல்லது மின்சாரம் துணைகொண்டு விதம்விதமான கலர் லைட்ஸ் போடுவார்கள். அழகாக இருக்கும். பற்றரி என்றால் பட்டத்துடன் இணைத்திவிடலாம். மின்சாரம் என்றால் வயரும் நூலுடன் சேர்த்துக் கட்டப்படும். மின்சாரத்தில் ஏற்றுதல் கொஞ்சம் ஆபத்தானது காரணம் தற்செயலாக பட்டம் இரவில் அறுத்துக்கொண்டு போனாலோ அல்லது படுத்துவிட்டாலோ அது விழுகின்றபகுதி மக்களுக்கு மின்சாரம் தாக்கும் ஆபத்து உண்டு.

அறுத்துக்கொண்டுபோதல் :
பட்டம் பாரம் தாங்கமுடியாமல் அல்லது காற்று அதிகமாகி சில நேரத்தில் அறுத்துக்கொண்டுபோய்விடும். சிறந்த உதாரணம் சர்வம் படத்தில் நம்ம திரிஷா இப்படி அறுத்துக்கொண்டுபோன பட்டத்தின் நூல்பட்டுத்தான் இறந்துபோவார். சிலவேளைகளில் அடுத்த ஊரில் கூட பட்டம் அறுத்துக்கொண்டுபோய் விழும். சில பனை தென்னை மரங்களில் தொங்கிப்போய்விடும். திரும்ப எடுப்பது கஸ்டம்.

பட்டம் படுத்தல் :
இரவு வேளைகளில் பட்டத்தை ஏற்றிவைத்திருக்கும்போது காற்று குறைந்துவிட்டால் பட்டம் அப்படியே தரைக்கு வந்துவிடும். இதுவே பட்டம் படுத்தல் எனப்படும்.

பருத்தித்துறையில் பொங்கல் நேரம் பட்டம் விடும் போட்டி நடத்தப்படும். முனைக் கடற்கரையில் பாக்கு நீரிணையின் அருகில் இந்தப்போட்டிகள் நடத்தப்பட்டன. பட்டகாலம் தொடங்கினால் பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீதியில் பலதரப்பட்ட பட்டங்களும் நூலும் வீதியோரக் கடைகளில் விற்கப்படும்.

பட்டம் பற்றி நம்ம கானா அண்ணை எழுதிய பதிவு ஒன்றும் இருக்கின்றது.
பட்டம் விட்ட அந்தக் காலம்

பட்டத்தைப் பற்றி இவ்வளவு விபரமாக எழுதியபடியால் என்னைப் பட்டதாரி என நினைக்கவேண்டாம். இதுவரை சாதாரண கடதாசிப் பட்டம் மட்டுமே ஏற்றியிருக்கின்றேன். என் மாமாக்களும் சித்தப்பாக்களும் இதில் விண்ணர்கள். எத்தனையோ விழுப்புண்கள் கூட பட்டத்தினால் பெற்றிருக்கின்றார்கள். அவர்களுடன் இருந்த அனுபவமே இது.
Author: கலை
•2:10 PM
ஒருநாள்..................

நான்: அம்மாட்ட எனக்கு நாளைக்கு phone பண்ணச் சொல்லி சொன்னன். அவ சொன்னா, அவவுக்கு நேரமில்லையாம்.

அடுத்தவர்: என்ன அவவா??????

...................................................................................

இன்னொருநாள்

நான்: மாமி விட்டுக்கு போகவேணும். அவ நெடுக என்னை வரச் சொல்லி கேட்டுக் கொண்டே இருக்கிறா.

அடுத்தவர்: என்ன அவவா?

........................................................

என்ன, ஏதாவது புரியுதா? யாழில் (அல்லது ஈழம் முழுமையிலுமா என்று சரியாகத் தெரியவில்லை) அவ, இவ என்பது மரியாதையாகவே சொல்லப்படும் சொற்கள்தான். ஆனால் வேற்றிடத்தினருக்கு, இதைக் கேட்கும்போது, என்ன இவர்கள் பெரியவர்களை மரியாதை இல்லாமல் ‘அவ (அவள்)', ‘இவ (இவள்) என்றெல்லாம் சொல்கிறார்கள் என்று தொன்றுகிறது. இந்தியாவில் ‘அவங்க', ‘இவங்க' என்னும் சொற்களுக்கு சமமான சொற்கள்தான் இவை என்பதை விளக்க வேண்டி வருகிறது. எங்களுக்கு அவ என்று சொல்வதற்கும், அவள் என்று சொல்வதற்கும் வேறுபாடு இருப்பதை புரிய வைப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது. காதலன் படத்தில் வடிவேல் ‘எவ அவ' என்று கேட்டது வேறு நினைவுக்கு வருகிறது.

சிலர் இந்த அவ என்னும் சொல்லை அவா என்றும் உச்சரிப்பதுண்டு.

வேறும் யாருக்காவது இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். சொல்லுங்கோ.
Author: சினேகிதி
•6:40 AMலான்ட்மாஸ்ரர் என்றால் என்னென்டு தெரியாதோ???லான்ட்ஐ மாஸ்ரர் பண்றதுதான் லான்ட்மாஸ்ரர் :-))

விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலமாக நிலத்தைத் தயார்படுத்துறதுக்குப் உபயோகிக்கிற ஒரு இயந்திரம் லான்மாஸ்ரர் (நான் சொல்றது சரிதானே). ரக்ரரால உழுறது போல இதாலயும் உழுறவை. அந்த உழுவை இயந்திரத்துக்குப் பின்னால ஒரு பெரிய பெட்டியிருக்கு அதில ஒரு 10-15 ஆக்கள் பயணம் செய்யலாம். அநேகமாக கோயில் போன்ற கொஞ்சம் தூரப் பயணங்களுக்குப் போறாக்கள் லான்மாஸ்ரரில் போறவை.

நான் வல்லிபுரக்கோயிலுக்கும் செல்வச்சந்நிதி கோயிலுக்கும் லான்மாஸ்ரரில் போயிருக்கிறன். அம்மம்மான்ர வீடு றோட்டுக்கரைல இருக்கு அங்கால முழுவதும் எங்கட தோட்டம்....வல்லிபுரத் திருவிழா நேரம் அந்த றோட்டுக்கரைல நிண்டால் யார் யார் கோயிலுக்குப் பொங்க போயினம் என்டு தெரியும். பெரிய அண்டா, குண்டா, அகப்பை, பாய் மிச்ச தட்டு முட்டுச் சாமான் எல்லாத்தையும் நடுவில வைச்சிட்டு கரைத்தட்டில நிறையப்பேரிருந்து போவினம் கோயிலுக்கு.

லான்மாஸ்ரரில் கனதூரம் போகேலாது பேய் நோ நோகும். ஆனால் குடும்பமாப் பொங்கப் போறவை அப்பிடித்தான் போறவை. காத்துக்கு விழுந்திடுவம் என்று அநேகமா சின்னப்பிள்ளையளை தட்டில இருக்க விட மாட்டினம். நடுவில வயசுபோனாக்கள் காலை நீட்டி கஞ்சி வடிச்சுக்கொண்டிருப்பினம் அவையளோட இருக்கேலாது தட்டிலயும் இருக்கேலாது சில சின்னப்பிள்ளையள் அழுது அடம்பிடிச்சு டிரைவர் பக்கமா இருக்கிற கரைத்தட்டில இடம்பிடிச்சிடுவினம்...அதில பிடிமாதிரி ஒன்டு இருக்கு அதைப்பிடிச்சுக் கொண்டு இருந்தால் விழமாட்டம் என்டு பெருசுகளைச் சமாளிக்கலாம். கோயிலால வரேக்க பானை எல்லாம் கரி பிடிச்சு இருக்கும் அப்ப இன்னும் இடம் காணாமல் போகும் அப்பவும் பாதிக்கப்படுறது சின்னப்பிள்ளையள்தான்.கொடுமை கொடுமை.


உண்மைாய இந்த வாகனம் விவசாயம் செய்யிறாக்கள் வெங்காயம் , புகையிலை ஏற்றி இறக்கப் பயன்படுத்தும் நோக்கில வாங்குவினம் பிறகு அது கோயிலுக்கும் இடம்பெயர்ந்து போறதுக்கும் பாம்பு கடிச்சாக்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகவும் பயன்ட்டுக்கொண்டிருக்கும். வாடகை லான்மாஸ்ரர்களில் அழகான ஓவியங்கள் எல்லாம் கீறி நல்ல கலர்புல்ல வச்சிருப்பினம்.

லான்மாஸ்ரரும் மண்ணெண்ணெயிலதான் ஒடுறதென்று நினைக்கிறன்.
Author: வந்தியத்தேவன்
•4:56 AM
தட்டிவான் யாழ்ப்பாணத்தில் பிரபலமான வாகனம். எனக்கு மிகவும் பழக்கப்பட்டது பருத்தித்துறையில் தொடங்கி நெல்லியடி ஊடக கொடிகாமம் போகும் தட்டிவான் தான். பிரிட்டிஷ்காரனின் தயாரிப்பு. இந்த தட்டிவானில் பயணம் செய்தால் நீங்கள் உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் வாகனங்களிலும் பயணம் செய்யலாம்.முதலில் தட்டிவானின் வடிவமைப்பை பார்ப்போம். முன்பக்கத்தில் மட்டும் கண்ணாடியுள்ள வாகனம். மக்கள் இருக்கும் இடப்பகுதி எல்லாம் திறந்தவெளி. சாவகச்சேரி சந்தைக்கு போகின்ற குஞ்சி ஆச்சி வெத்திலை சப்பித் துப்ப ஏதுவானது. பின்பக்கத்தில் இருக்கும் பலகையில் மீன் பெட்டிகள், மரக்கறி மூட்டைகள் முடிந்தால் மனிதர்களைக்கூட ஏற்றிச் செல்லும் அதிசய வாகனம்.

எப்படியும் காலை 7 மணிக்கு நெல்லியடிச் சந்திக்கு வந்துவிடும். சனமாக இருந்தாலும் கொண்டக்டர் விடமாட்டான் அண்ணே இன்னும் கொஞ்சம் பொறுங்கோ சனம் வரட்டும் என எப்படியும் அரைமணித்தியாலம் அங்கேயே வைத்திருப்பான். பக்கத்து மொடேர்ன் ஸ்டோரில் உதயனையோ, ஈழநாதத்தையோ நின்று நிதானமாக சனம் நிறைந்தபின்னர் ஏறும்பலரைக்கண்டிருக்கின்றேன். சிலவேளை ட்ரைவரே தனக்கு தெரிந்தவர்களுக்கு இப்போ எடுக்கமாட்டான் பக்கத்து சங்குண்ணி கடையில் தேத்தண்ணி குடித்துவிட்டு வாருங்கள் என்பார்.

பெரும்பாலும் ஒரே ஆட்களே தட்டிவானில் பயணிப்பார்கள். இவர்கள் சாவகச்சேரியில் வேலைபார்ப்பவர்கள், கொடிகாமம் சந்தையில் வியாபாரம் செய்பவர்கள், என ஒரே மக்கள் செல்வதால் அவர்களுக்கு பலரையும் பழக்கமாய் இருக்கும் இதனால் ஒருவர் வரப் பிந்தினால் கூட ட்ரைவருக்கு உரிமையாக தம்பி ஆச்சி வரவில்லை சின்னத்தம்பி அண்ணை வரவில்லை கொஞ்சம் பொறுங்கள் என கூறுவார்கள்.

சீட்டுகள் பெரும்பாலும் மரத்தாலே ஆனவை. பின்னுக்கு அரைமுதுகுதான் சாஞ்சு இருக்கமுடியும். இரண்டு சீட்டுக்கு இடையில் தேவைப்பட்டால் இன்னொரு பலகை போட்டு அடிசனலாக ஆட்களை இருத்தும் கலை இவர்களுக்குத் தான் தெரியும்.

நெல்லியடிச் சந்தியில் அரைமணித்தியாலமாக உறுமிக்கொண்டே இருக்கும் சிலவேளைகளில் வெளிக்கிடுவதுபோல் எடுத்து அப்படியே பஸ் ஸ்டாண்டை ஒரு சுற்றுச் சுற்றி திரும்ப அதே நிண்ட இடத்தில் கொண்டுவந்து நிப்பாட்டுவார்கள். சிலவேளை சீரிபி தூரத்தில் வ்ருகின்றது என்றால் மட்டும் உடனே எடுத்துப்போடுவார்கள். ஆனாலும் கோயில்சந்தை, அந்தணத்திடலில் சில நிமிடங்கள் எப்படியும் நிண்டுதான் எடுப்பார்கள். திரும்ப மாலையில் கொடிகாமத்தில் இருந்து தட்டிவான் தன் பயணத்தை நெல்லியடி ஊடக பருத்துறைக்கு செல்லும்.

தொண்டைமானாறு செல்வச் சன்னதித் திருவிழா நேரத்தில் நெல்லியடியிலிருந்து கோவில் வரை ஸ்பெசல் சேர்விஸ் விடுவார்கள். அந்த அனுபவமும் சுவையானது. இதனை விட அச்சுவேலியில் இருந்தும் தட்டிவான் சில இடங்களுக்குச் செல்வது ஆனாலும் பயணம் செய்துபழக்கமில்லை. ஏனைய மாவட்டங்களில் நான் தட்டிவான் கண்டதில்லை. வவுனியா, திருகோணமலை, நுவரேலியாப் பகுதியில் சிறிய வான்களில் மக்களை அடைந்து கொண்டு செல்வதைக் கண்டிருக்கின்றேன். கஸ்டமான பயணம் என்றாலும் நம் மக்கள் மகிழ்ச்சியுடன் பயணிப்பார்கள்.

வட்டாரச் சொல்லில் தட்டிவான் எப்படி வரும் என எண்ணாதீர்கள். நம்ம வட்டாரத்தில் தட்டிவான் பேமஸ்.

இதேபோல் இன்னொரு வாகனமும் பேமஸ் கண்டுபிடியுங்கள் முடிந்தால் எழுதுங்கள்.
Author: மொழிவளன்
•6:09 AM
வட்டார வழக்குகள் எனும் போது யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு, யாழ்ப்பாணம் அல்லாத தமிழர்களின் பேச்சு வழக்கில் இருந்து வேறுப்பட்டாலும், அவை “அமெரிக்கன் செலாங்”, “பிரிட்டிசு செலாங்” போன்றதான ஒரு வழக்காகவே பார்க்கலாம்.

இருப்பினும் சொற்களை உச்சரிப்பதில், யாழ்ப்பாணத் தமிழரின் ஒலிப்பு மிகவும் துல்லியமானது.

எடுத்துக்காட்டு:

“தேங்காய்” எனும் சொல்லை எடுத்துக்கொண்டோமானால், இந்த “தேங்காய்” எனும் சொல்லை நாம் உச்சரிக்கும் பொழுது, தேங்-காய் என்பதனை துல்லியமாகவே உச்சரிக்கின்றோம். இச்சொல்லின் கடைசி எழுத்தான “ய்” மௌனமாக ஒலிக்கப்பட்டாலும், இவ்வுச்சரிப்பை அவதானித்தால் “தேங்” என்பதுடன் “காய்” என்பதும் மிகத் துல்லியமாக ஒலிக்கப்படும்.

இவ்வாறு வேறு சில சொற்கள்:

புடலங்கா(ய்)
மாங்கா(ய்)
கத்தரிக்கா(ய்)
பூசணிக்கா(ய்)

அதேவேளை கொழும்பு தமிழர், தமிழகத் தமிழர் உச்சரிக்கும் பொழுது இந்த “தேங்காய்” என்பதில் “காய்” என்பது சரியாக உச்சரிக்கப்படுவதில்லை. தேங்-காயீ என்பது போன்று சிலரும், தேங்-கா என்பது போன்று "ய்" ஒலிப்பின்றிய சிலரும் உச்சரிக்கின்றனர்.

இதில் கத்தரிக்கா(ய்), பூசணிக்கா(ய்) போன்றச் சொற்களை, கத்தரிக்கா, பூசணிக்கா என சின்னக்கா, பெரியக்கா போன்றும் உச்சரிக்கின்றனர்.

இங்கே "காய்" அக்கா ஆகிவிடுகின்றது.

உயிர் – மெய்

யாழ்ப்பாணத் தமிழர் பேசும் பொழுது சொற்களை மிகவும் கடினப்பட்டு ஒலிப்பதாக என்னுடன் சிலர் வாதிட்டனர். உண்மையில் யாழ்ப்பாணத் தமிழரின் பேச்சு வழக்கில் சொற்களை உச்சரிக்கும் போது அதில் உயிர் மெய் எழுத்துக்கள் திருத்தமாகவும் துல்லியமாகவும் உச்சரிக்கப்படுகின்றது.

எடுத்துக்காட்டு:

மலர் – இதில் “ம்” எனும் மெய் எழுத்தும் “அ” எனும் உயிர் எழுத்தும் துல்லியமாக உச்சரிக்கப்படும்.

ம்+அ+ல்+அ+ர் = மலர்

இவ்வாறான துல்லியமான ஒலிப்புக்களையே மற்றோர்கள் கடினத்துடன் உச்சரிக்கப்படுவதாகக் நினைக்கின்றனர். அதேவேளை மற்றோரின் உச்சரிப்புக்களில் உயிர்-மெய் எழுத்துக்கள் துல்லியமாக ஒலிக்கப்படாமல், மேலெழுந்த வாரியாக உச்சரிக்கப்படுகின்றது. இன்னும் சிலரோ மலரு.. என்றும் உச்சரிக்கின்றனர்.

இது குறித்த உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கோவன்.

அன்புடன்
மொழிவளன்
Author: வசந்தன்(Vasanthan)
•11:01 PM
எல்லாருக்கும் இந்தச் சொல் தெரியுமோ தெரியாது. எங்கட இடத்தில குறிப்பிட்ட இளமட்டத்தில இந்தச்சொல் பயன்பாட்டில இருந்திச்சு. இன்னொருத்தனைத் திட்டவோ மட்டந்தட்டி நக்கலடிக்கவோ இந்தச் சொல்லைப் பாவிப்பம்.

ஒருத்தன் விளங்காத்தனமாக அல்லது சிறுபிள்ளைத்தனமாக ஏதாவது செய்தால் அல்லது தொடர்ச்சியாக ஒரேதவறைச் செய்தால், எப்படி முயன்றும் ஒருத்தனைத் திருத்த முடியாதென்று எரிச்சல் தோன்றும்போது இச்சொல்லைப் பாவித்துத் திட்டுவதுண்டு.'அவனொரு அப்பக்கோப்பை. ஒரு இழவும் விளங்காது' எண்டு ஒருத்தனத் திட்டுவோம். அதேபோல் திட்டும் வாங்குவோம்.

இதன் சரியான தோற்றம், காரணகாரியங்கள் எதுவுமறியாமலேயே, ஆனால் சரியான சந்தர்ப்பங்களில் இச்சொல்லைப் பாவிப்போம். எந்த இடங்களில் இச்சொல்லைப் பாவிப்பதென எல்லாருக்கும் தெரிந்திருந்தது.

சரி இந்தச் சொல்லின் சரியான அர்த்தத்துக்கு வருவோம். அப்பக்கோப்பை என்றால் அப்பம் சுடும் தாச்சியைக் குறிக்கும். அப்பத்தாச்சி என்ன செய்யும்? எதையும் தன்னிடம் வைத்துக்கொள்ளாது. அதில் ஊற்றும் மாவை அப்படியே அப்பமாக்கி சிறுதுண்டுகூட தாச்சியில் ஒட்டாதபடிக்கு அழகாக அப்படியே திருப்பிக்கொடுத்துவிடும்.

தோசைக்கல்லிற்கூட மாவு ஒட்டும், இட்லிச்சட்டியில் மாவு ஒட்டும். ஆனால் அப்பத்தாச்சியில் எப்போதாவது மாவு ஒட்டிப்பார்த்திருக்கிறீர்களா? அதுதான் அந்தச் சட்டியின் சிறப்பு.

இங்கே இச்சொல்லை அப்பக்கோப்பை என்று மாற்றி ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு (இதுகளப் போடாட்டி பிறகு சண்டைக்கு வருவியள்) திட்டுவதற்குப் பாவிக்கிறோம். இதன் அர்த்தம் என்னவென்றால் எப்படி அப்பச்சட்டி தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாமல் தனக்குள் ஊற்றப்படும் சகலதையும் திருப்பிக்கொடுத்துவிடுகிறதோ அதேபோல் இவர்களும் எதையும் உள்வாங்கிக்கொள்வதில்லை. அனைத்தையும் திறந்துவிடுவார்கள். இவர்களுக்கு எப்படிச் சொல்லிக்கொடுத்தாலும் திருந்தப்போவதில்லை என்ற கருத்தில் இச்சொல் பாவிக்கப்படுகிறது.

இன்றும் ஏராளமானவர்கள் இச்சொல்லின் விளக்கத்தை அறியாமல் பாவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு விளக்கும் முகமாகவே இப்பதிவு போட்டேன்.

திடீரென்று ஏனிந்தச் சொல் பற்றி யோசினை வந்ததெண்டா, இப்ப தான் கொஞ்சத்துக்கு முதல் ஒருத்தரை நேர திட்டிப்போட்டன். அவருக்கு இந்தச்சொல் புதுசு. அதுக்கு அவர் விளக்கம் கேட்டார். அவருக்கு விளங்கப்டுத்தின கையோட அதையே ஒரு பதிவாப்போடுறன்.

அப்பக்கோப்பையள் ஆராவது என்ர வலைப்பதிவப் பாக்க வருவினந்தானே. அவையளுக்கு ஒரு விளக்கமா இருக்கட்டுமெண்டு போட்டு வைக்கிறன்.

'பன்னாடை' எண்டு திட்டுறதுக்கும் இதுக்கும் கிட்டத்தட்ட ஒரே பொருளாத்தான் இருக்கு. பன்னாடை தேவையற்றதை மட்டும் வைத்துக்கொண்டு மற்றதை விட்டுவிடும். அப்பக்கோப்பை எல்லாவற்றையும் விட்டுவிடும்.
ஆனா பன்னாடை எண்டு திட்டினா கடுமையாக் கோவம் வரும். மாறாக அப்பக்கோப்பையெண்டது அதே கருத்தைத்தாற ஆனா ஏச்சு வாங்கிறவன்(ள்) சிரிச்சுக்கொண்டே கேட்டுக்கொண்டு போற மாதியொரு சொல்லு.

நீங்களும் ஏன் திட்டுவதற்கோ ஏசுவதற்கோ இந்தச்சொல்லைப் பயன்படுத்தக்கூடாது?
முயன்றுபாருங்கள்.

=========================================
இதுவும் ஒரு மீள்பதிவே.
பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவுக்கான சுட்டி:
வசந்தன் பக்கம்: 'அப்பக்கோப்பை' பற்றிய ஓர் ஆராய்ச்சி.
Author: மொழிவளன்
•10:06 PM
இது ஒரு வட்டார வழக்குச் சொல் என்று கூறமுடியாது. ஆனால் கிட்டத்தட்ட வட்டார வழக்குச் சொல் போலவே பயன்பட்டது.

மண்டையில போடுதல், மண்டைக்கப் போடுவன், மண்டைக்கப் போட்டிருக்கினம் போன்ற சொற்கள்.

இச்சொற்கள் ஒருக்காலக் கட்டத்தில் சிறுக்குழந்தைகளின் விளையாட்டுச் சொல்லாகவும் அதிகம் பயன்பட்ட ஒரு சொல் என்றும் கூறலாம். சிறு சண்டைகளுக்கும் “டேய், அடி வேண்டுவாய்” எனும் சொற்களுக்கு பதில் இந்த “டேய், உண்ட மண்டைக்கப் போடுவன்” என்ற சொல் அடிக்கடி பயன்படும் சொல்லாகியிருந்தது.

இச்சொல்லில் எனக்கு ஒரு சுவையான அனுபவம் உண்டு. நாங்கள் கொழும்பு வந்து வாடகை வீட்டில் தங்கியிருந்தக் காலங்கள். 2002 ஆம் ஆண்டு என்று நினைக்கிறன். தேர்தல் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது. தொலைக்காட்சியில் தேர்தல் விளம்பரங்கள் அதிகம் இடம்பெற்றிருந்தக் காலக்கட்டம். அறிமுகமே இல்லாத சில சுயேட்சை வேட்பாளர்களும் தொலைக்காட்சியில் தமது முகத்தைக் காட்டி சென்றனர்.

அப்போது எனது சகோதரி தனது குழந்தையுடன் எங்கட வீட்ட வந்திருந்தவா. சகோதரியின் மகனுக்கு இரண்டு அல்லது அதற்கு குறைவான வயது தான் இருக்கும். சரியானக் குளப்படிக்காரன். இவன்ர குளப்படிகளைத் தடுக்கும் பொருட்டு கையில் ஏதாவது கடிக்கக் கொடுத்துவிட்டு, தொலைக்காட்சி முன் கதிரையில் இருத்திவிடுவம். இவனுக்கு இன்னமும் சரியாகப் பேசவும் வராது.

அப்பொழுது தொலைக்காட்சியில் ஒரு சுயேட்சை வேட்பாளர் முன் தோன்றி இப்படிக் கூறினார். “எனது சின்னம் மயில் சின்னம், உங்கள் ஓட்டுக்களை மயிலுக்குப் போடுங்கள்.”
இதைக் கேட்டுக்கொண்டிருந்த சகோதரியின் மகன் இவ்வாறு கூறினான். “மண்டையில் போடுங்கள்.”

அதன் பிறகு அந்த சுயேட்சை வேட்பாளர் தொலைக்காட்சியில் தோன்றும் போதெல்லாம், இவனும் “மண்டையில் போடுங்கள்” என்று சொல்லிக்கொண்டிருப்பான்.

எல்லோருக்கும் ஒரே ஆச்சரியமாக போட்டுது. இவன் எப்படி உப்புடிச்சொல்லுறான். இவனிடம் யாரும் இப்படியான சொற்களைப் பேசவும் இல்லை, கதைக்கவும் இல்லை. இன்னும் சரியாக கதைக்கவும் வராது. பிறந்து சில மாதங்களிலேயே கொழும்புக்கு கொண்டு வந்திட்டம். இப்படி ஆச்சரியங்கள் பல.

ஒரு வேலை எல்லாம் மண்வாசனையாக இருக்கும் எண்டு நினைக்கிறன்.
Author: Unknown
•4:00 PM
இலங்கையில் பொதுவாக அனைத்து மக்களிடமும் பாவனையிலிருக்குமொரு சொல் குசினி. எல்லோருடைய வீடுகளிலும் இருக்குமிது அனேகமாகப் பெண்கள் தங்கள் காலங்களை அதிகம் செலவழிக்கும் இடமாகவும் இருக்கிறது.

போர்த்துக்கேய மொழியிலிருந்து வரப்பெற்ற இச் சொல் சமையலறையைக் குறிக்கிறது. இந்தியா, தமிழ்நாட்டில் இச் சொல்லின் பரவல் அவ்வளவாக இருக்காது என நினைக்கிறேன். எனது சிறுகதையொன்றுக்கு வந்த பின்னூட்டங்களிலும், மின்னஞ்சல் கருத்துக்களிலும் 'குசினி' என்றால் என்னவென்று கேட்டுவந்தவை அனேகம்.

சமையலறை , சிங்கள மொழியில் 'குஸ்ஸிய' என அழைக்கப்படுகிறது. அச் சொல்லிலிருந்து மருவித்தான் 'குசினி' எனும் சொல் வந்தது எனச் சொல்லப்பட்டாலும் கூட, இச் சொல் போர்த்துக்கேய மொழியிலிருந்தே இலங்கைக்கு வந்திருக்கிறது.

இலங்கை முஸ்லிம்கள் வட்டாரத்தில் 'குசினி' எனும் சொல்லோடு, 'அடுப்படி' எனும் சொல்லும் பரவலாகப் பாவிக்கப்படுகிறது. பண்டைய வீடுகளிலும், இன்னும் சில கிராமத்து வீடுகளிலும் , இச் சமையலறையானது வீடுகளின் பின்புறத்தில் , வீட்டை விட்டும் தனியாகக் கட்டப்பட்டிருப்பதைக் காணலாம். அன்றைய காலத்தில் விறகுச் சமையலால் எழும் புகை வீட்டுக்குள் பரவாமல் இருப்பதற்காகவும், சமையற்காரர்கள் எளிதாக வந்துபோகும் படியாகவும் இப்படி அமைக்கப்பட்டிருந்ததென நினைக்கிறேன்.
Author: `மழை` ஷ்ரேயா(Shreya)
•3:34 AM
இந்தச் சனம் வந்து சாப்பாட்டப் பத்தி எழுத முதல் நான் வந்துத்தன் கிளியேய்.

உங்களுக்குத் தெரியுமா, மட்டக்களப்பிலருந்து கொழும்புக்கும், இலங்கைர வேற பகுதிகளுக்கும் அடுக்கடுக்காத் தயிர் போற. றெயினிலயும் பஸ்சிலயும் இதுகளுக்குத் தனி இடம். பசுந்தயிரும் போகும். எருமைத்தயிரும் போகும். எருமைத்தயிர் கெட்டியா இரிக்கும். அந்தத் தயிர்ச்சட்டியள என்னத்தால கட்டி இரிக்கிற என்டு தெரியுமா? தென்னோலையால!! ஓம் மனே, வடிவா, சட்டி அசங்காமக் கொள்ளாம இரிக்கிற மாதிரி தென்னோலை உறியில போட்டுக் கட்டுவாங்க 8-10 சட்டியை ஒண்டுக்கு மேல ஒண்டு அடுக்கி. பாக்க என்ன வடிவு. காட்டுறத்துக்குப் படம் தேடினதான்.. கிடைக்கல்ல. மட்டக்களப்புக்கு வேற ஊர்க்காராக்கள் வந்தா அவங்க ஊருக்கெண்டுத்து கொண்டு போற சாமான் சக்கட்டுல தயிர்ச்சட்டி கட்டாயம் இரிக்கும்.

தயிர் சாப்பிடுறது மட்டக்களப்பில தனி விதம். மற்ற இடத்தாக்கள் நாங்க தயிர் சாப்பிடுறத்த ஆச்சரியமாப் பாக்கிற. ஏனெண்டு சொல்றன்.

மட்டக்களப்பார், தயிர் சாப்பிடுறண்டா தயிருக்குச் சீனி வேணும். வாழைப்பழமும் வேணும். சோத்தோட சாப்பிடுற எண்டா நீங்க நினைக்கப்படா சோறு கறியோட சேத்து தயிர் சீனி வாழப்பழமெல்லாம் குழைச்சித் தின்றண்டு. அப்பிடி இல்ல. சோறு கறி சாப்பிட்ட பிறகு, அந்தக் கோப்பையிலயே இன்னொருதரம் போல சோறு போட்டு தயிரும், அதுக்குச் சீனியும் வாழப்பழமும் சேத்துச் சாப்பிடுற. இஞ்ச வந்தும் நான் அதையே செய்ய, சனங்கள் ஒரு சாங்கமாப் பாக்குங்கள். நாம அதக் கண்டாலும் காணாத மாதிரி நடத்திறதான். எனக்கெலுவா தெரியும் அப்பிடிச் சாப்பிடுற ருசி எப்பிடியண்டு!! இப்ப சில நெருங்கின ஆக்களுக்குப் பழகித்து. நான் சோறு சாப்பிட்டு முடிய, தயிரெடுத்துத்து சீனிப் போத்தலத் தேடினா ஒரு குருவி ஏனெண்டு பாக்கிறல்ல.

சோறோட சேத்துச் சாப்பிட விருப்பமில்லாட்டி, சாப்பிட்டொழிஞ்ச கையோட தனிய கிண்ணத்தில தயிருஞ் சீனியும் வாழப்பழமும் போட்டுச் சாப்பிடுற. சில பேர் வடிவா இருக்குமெண்டுத்து பழத்தை அரிஞ்சும் தாற. சிலவேள வாழப்பழம் கிடைக்காமப் பொயித்தண்டா தயிரும் சீனியும். ஆனா தயிர் சாப்பிட்டமாதிரியே இரிக்கா.

சா!! என்ன திறமான சாமான் மட்டக்களப்புத் தயிர். அதப் பத்திக் கதைச்சோணயே சாப்பிடோணும் போல கிடக்கு.. மாச்சல் படாம போய் தயிரும் வாழப்பழமும் வாங்கித்து வாறயா மனே? நல்ல புள்ளெலுவா..

----------
அ.சொ.பொ விளக்கம்:
மாச்சல் (மாய்ச்சல்) - சோம்பல்
புள்ளெலுவா (புள்ள எலுவா) - பிள்ளை அல்லவா
திறமான - சிறந்த
Author: மலைநாடான்
•10:19 AM
" மீன்பாடும் தேன் நாட்டின் மட்டு வாவி கரையினிலே ஆடவர் தோளிலும் கா.. அரிவையர் நாவிலும் கா.." ஈழத்துக் கலைஞர் யாழ்ப்பாணம் விரமணிஐயருடன் உரையாடும் சந்தர்ப்பங்களில், ஈழத்தின் கிழக்குக்கரைபற்றிய பேச்சு வரும்போதேல்லாம் அவர் சொல்லி இரசிக்கும் வரிகளவை. அந்த வரிகளின் சொந்தக்காறரும் அநேகமாக அவராகவே இருக்க வேண்டுமென நினைக்கின்றேன்.

ஈழத்து முற்றத்தில் உரையாட அழைத்தபோதே, வடக்கின் பேச்சுக்களைப் பதிவு செய்ய பலர் இருக்கின்றார்கள். ஆகவே கிழக்கின் மொழியைப் பதிவு செய்ய எண்ணியிருந்தேன். முன்னைய பதிவொன்றில் மணிமேகலை என்ற சகோதரியும் இதே கருத்தைப் பின்னூட்டத்தில்
காலாகாலமாக ஈழத்து வரலாற்றில் ஈழத் தமிழர் என்றால் யாழ்ப்பாணத்தவர் என்றும் ஈழத் தமிழ் யாழ்ப்பாணத் தமிழ் என்றும் ஒரு பரவலான எண்ணப் பாங்கு வளர்ந்திருக்கிறது.
அதன் தவறு யாராலும் சுட்டிக் காட்டப் படவில்லை.
இனியேனும் நாம் அந்தத் தவறுகளை விடாமல் மற்றவர்களையும் (மட்டக் களப்பு,திருகோணமலை,மலையகம்)சேர்த்து கொண்டு போக வேண்டிய கடமை நம்மெல்லோருக்கும் உண்டு.
நம் கடந்த கால வரலாற்றுத் தவறுகளில் இருந்து பாடங்களைப் படிக்க வேண்டியதும் நமது கடமையாகும்.
அப்போது தான் நாம் வளர்ந்திருக்கிறோம் என்று அர்த்தம்.
இது என் அறிவுரையல்ல; ஒரு ஆதங்கம் அவ்வளவு தான்.
எனத் தெரிவித்திருந்தார். சகோதரி உங்கள் விருப்பமும் இணைந்ததே இவ்விடுகை.
என் வளர்விலும் வாழ்விலும் நிறைந்த அந்த மக்களின் மொழியில் அவர்களின் மனந்தெரியும்.

கிழக்கு மக்களின் பேச்சு மொழியில் அதிலும், குறிப்பாக மட்டக்களப்புப் பிரதேச மக்களின் பேச்சில் 'கா' எனும் ஒலி நயம் கலந்திருக்கும். அதிலம் அங்குள்ள பெண்கள் அதை மிக லாவகமாக பேச்சு மொழியில் சேர்ப்பார்கள்.
" ஏங்கா மறுகா போவிகளா..?" ( ஏனக்கா மறுபடியும் போவீர்களா )
"இல்லை மக்கா..இன்னிக்கு போறதிக்கு இல்லக்கா.." (இல்லை மக்களே இன்று போவதிற்கில்லை)
" சொன்னாக்கா கேக்கனும் மக்கா.." (சொன்னால் கேட்கணும் மக்களே)
இப்படி பேச்சு வழக்கில் சரளமாக கா வந்து சேரும்.
இந்தப் பெண்களின் பேச்சில் கலந்திருக்கும் மற்றுமொரு சொல்
"கிளி". இது அவர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு மொழியடையாளம்.
"ஏன்ங்கிளி..?" " இல்ல கிளி" இது ஆண், பெண் வித்தியாசமில்லாது, இளையவர்களை அழைக்கும் போது சேர்த்துக் கொள்வார்கள். இந்த வகையில் " ஏன் மக.."" என்ன மகா" என்பதையும் சேர்க்கலாம்.
பெண்கள் இதனை சரளமாகப் பேசுவார்கள் எனினும், ஆண்களின் உரையாடலிலும் அப்படியே கலந்திருக்கும். மிகச்சிறந்த ஊடகவியலாளனாக அறியப்பட்ட தராக்கி சிவராம் அப்படிப் பேசுபவர்களில் ஒருவர். மிக அழகாகவும், இயல்பாகவும், இந்த மொழிநடையில் அவர் பேசுவார்.
"ஆளே!.. என்னாளே..?" (என்னடாப்பா என்பது போல்)
"ஓண்டாப்பா" ( ஓமடாப்பா என்பது போல)

அது சரி தொடக்கத்தில் சொன்னபடி அரிவையர் நாவில் கா வருவது புரிகிறது, அதென்ன ஆடவர் தோளில் கா என்கிறீர்கள் அப்படித்தானே..?
முன்னைய நாட்களில் மட்டக்களப்புப் பகுதியில் சில்லறை வியாபரிகள், மீனவர்கள், தங்களுடை பொருட்களை, நீளமான கயிறுகளில் இணைக்கப்பட்ட கூடைகளில் வைத்து , கயிற்றின் நுணியை நீளமான தடிக்கம்புகளில் கோர்த்த பின் தடிகளைத் தோளில் சுமந்து செல்வார்கள். தூக்குபவரின் முன்னும் பின்னும் பொருட்கள் கூடைகளில் தூக்கிச் சொல்லப்படும். அந்தத் தூக்குத்தடியை ' கா ' என்று அழைப்பார்கள்.

அதுவே ஆடவர் தோளில் கா, அரிவையர் நாவில் கா

மக்கா மறுவாட்டி பாப்பம்...
Author: கலை
•6:34 AM
பஞ்சியாக்கிடக்கெண்டா, இங்க எழுதிறதுக்கில்லை அந்தப் பஞ்சி :). அந்தச் சொல்லையும் இந்த முற்றத்தில இணைத்து வைக்கலாமேயெண்டுதான். ஏனெண்டால், நான் அடிக்கடி இந்த ‘பஞ்சியாக்கிடக்கு' அல்லது ‘பஞ்சியாயிருக்கு' எண்டு சொல்லேக்கை (அதுக்காக நான் எப்பவுமே பஞ்சிப்பட்டுக் கொண்டிருக்கிறன் எண்டு நினைக்காதையுங்கோ), இந்த வார்த்தையை விளக்கவேண்டி வந்திருக்கு.

”பஞ்சியாக்கிடக்கா? அது என்னது?” எண்டு கேக்கக்கூடிய இடத்திலதான் நானும் ஆரம்பத்தில வளர்ந்தது. பிறகு அந்த சொல் பரிச்சயத்தில வந்ததும், எனக்கு பிடித்திருந்ததால, அடிக்கடி சொல்லத் தொடங்கியிட்டன். 'அலுப்பாயிருக்கு' எண்ட சொல்லும் இந்த ‘பஞ்சியாக்கிடக்கு' எண்ட சொல்லின்ரை தம்பிதான் எண்டு நினைக்கிறன்.

மொத்தத்தில, எதையும் செய்ய விருப்பமில்லாமல் சோர்ந்து போயிருக்கிறன் என்பதை இப்படிச் சொல்லலாம்.

பி.கு. : நான் மட்டும் பஞ்சிப் பட்டது காணாதெண்டு, இந்தச் சொல்லையே தெரியாமல் இருந்த சிலரையும்கூட (இந்தியத் தமிழர்கள்), 'பஞ்சியாயிருக்கு' எண்டு சொல்ல வைச்சிட்டன் எண்டால் பாருங்கோவன் :).
Author: மொழிவளன்
•5:49 AM
இது அநேகமாக பெடியலிண்ர பேச்சு வழக்கிலேயே அதிகம் என நினைக்கின்றேன்.

மணிக்காய்

குணத்தில் நல்ல பெடியனாக இருந்தால், நல்லவனாக இருந்தால் “அவன் மணிக்காய் மச்சான்” என்று கூறுவோம்.

பேய்க்காய்

கடுங்கெட்டிக்காரனாக இருந்தால் “அவன் பேய்க்காய்” என்றும் கூறுவோம். அட உந்தக் கடுங்கெட்டிக்காரன் என்பதும் எமது பேச்சுவழக்கல்லே!

கடுங்கெட்டிக்காரன்

மறந்தே போனன், திறமைசாலி என்பதற்கு வழக்கில் இருக்கும் சொல் கடுங்கெட்டிக்காரன். இச் சொல் பொதுவாக எல்லோரிடமும் பயன்படும் சொல்.

உந்த

இஞ்சப்பாரடப்பா! உந்தப் பேச்செல்லாம் என்னிட்ட வச்சுக்காதேயும். இதில் உந்த என்பது “அந்த” என்பதற்கு இணையானச் சொல்.

அப்பு

“அப்பு” எனும் சொல் குறிப்பாக வயதில் முதிர்ந்தவர்களை பேச்சு வழக்கில் அழைக்கப் பயன்படுகின்றது. இது தாத்தா என்பதற்கு இணையானச் சொல். பாட்டி என்பதற்கு இணையானச் சொல்லாக “ஆச்சி” பயன்படுகின்றது.

எண்ரையப்பு, என்ரை செல்லையப்பு என்று தமது குழந்தைகளை கொஞ்சுவதற்கான சொல்லாகவும், வயதில் குறைந்தோரை பெரியோர் அழைக்கும் சொல்லாகவும் இந்த “அப்பு” எனும் சொல் வழக்கில் உள்ளது.

அப்பு ஆச்சியர் வாழ்ந்தப் பூமி இந்தப் பூமி தானடா!

ஒரு தாயகப் பாடலின் வரிகள். (நினைக்கும் போது நெஞ்சில் வலி பிறக்கிறது.)

மீண்டும் அடுத்தப் பதிவில்

அன்புடன் மொழிவளன் ஹொங்கொங்கிலிருந்து