•12:03 PM
இந்தப்பதிவில ஈழத்துப்பேச்சு வழக்கில பயன்படுத்தப்படுற சொற்களுக்கு நான் விளக்கமேதும் தாறதா இல்லை. ஆனா இந்தச் சொற்களை எப்படிச் சேர்த்தன் எண்டு சொல்லிவிடுறன். அகிலன்ர மரணத்தின்வாசனை புத்தகத்தை மலையாளத்தில மொழிபெயர்க்கிற முயற்சியள் நடக்குது. மொழிபெயர்க்கறதா சொல்லியிருக்கிறவர் ஒரு தமிழகத்தைச் சேர்ந்த மொழி அறிஞர். அவர் புத்தகத்தை வாசிச்சுவிட்டு முதல்வேலையா ஒரு பெரிய லிஸ்ட் போட்டுத்தந்தார். இதெல்லாம் என்ன என்ற கேள்வியோடு. அந்த லிஸ்ட்டை கொஞ்சத்தை இங்கை போடுறன். சிலது நேரடியாகத் தெரிந்ததுதான். உதாரணத்துக்கு டைக்டர் - ரைக்ரர் வேறுபாடுகளையும் அவர் குறிச்சுத் தந்தவர். அதனால் அப்பிடியாப்பட்ட சொல்லுகளை விடுறன். பாப்பம். ஈழம் தமிழகம் எண்ட வேறுபாடு இல்லாமல் எல்லாரும் முயற்சியுங்கோ பாப்பம். ஏனென்டால் ஈழத்துக்குள்ளேயே சில சொல் வழக்குகளை இன்னொரு சக ஈழத்தவரால புரிஞ்சு கொள்ள முடியாமலும் இருக்கிறது. அவர் தந்த லிஸ்ட்
அவாப்பட்டு
எணேய்
புழுகம்
கதியால்
நூக்கோணும்
பரியாரி
பேக்காட்டுதல்
மொக்கு
அசுமாத்தம்
கெக்கட்டம்
பதகளிக்கிறது
இத்தோட எனது கன்னிப்பதிவை முடிக்கிறன் :)
அவாப்பட்டு
எணேய்
புழுகம்
கதியால்
நூக்கோணும்
பரியாரி
பேக்காட்டுதல்
மொக்கு
அசுமாத்தம்
கெக்கட்டம்
பதகளிக்கிறது
இத்தோட எனது கன்னிப்பதிவை முடிக்கிறன் :)
14 comments:
அவாப்பட்டு: பேராசையுற்று
எணேய்: அம்மாவை, வயது முதிர்ந்த பெண்களை விளிக்கும் அடைசொல்
புழுகம்: மகிழ்ச்சி
கதியால்: மரங்களின் கிளைகளில் இருந்து பெறப்படும் தடிகள், கம்புகள். அந்த மரங்களின் மறு பதியங்களாகவும் இருக்கும். குறிப்பாக வேலிகளில் நடப்படுவை
நூக்கோணும்: நூற்றல் என்பதன் வினை எதிர்காலம்
பரியாரி : நாட்டு வைத்தியர்
பேக்காட்டுதல்: ஏமாற்றுதல்
மொக்கு : புத்திசாதுரியமற்ற
அசுமாத்தம்: ஆளரவம் அற்றிருத்தல். சத்தமின்றிருத்தல்.
கெக்கட்டம்: கேலியாகச் சிரித்தல், எக்காளமிடல்
பதகளிக்கிறது: பதட்டமடைதல்
சரியாக இருக்மென நினைக்கிறன். மற்றவர்கள் தெரிவித்த பின்னும் பார்க்கலாம்.
அவாப்பட்டு அதிகமாக ஆசைப்படுதல், பேராசை. சில இடங்களில் அவா எனவும் பாவிப்பதுண்டு.
உதாரணமாக அவாவிலை நிறையச் சாப்பிட்டுவிட்டேன் இதன் அர்த்தம் அதிகமாக ஆசைப்பட்டு நிறையச் சாப்பிட்டுவிட்டேன்.
எணேய் என்பது வயதில் மூத்தவர்களை அழைக்கப் பயன்படுத்தப்படும் சொல். எணேய் ஆச்சி , எணேய் அப்பு
புழுகம் மகிழ்ச்சி மழையென்றால் பொடியளுக்கு ஒரே புழுகம்
கதியால் வேலியடைக்கப் பயன்படும் மரத்தின் கிளைகள் பெரும்பாலும் பூவரசு, கிளுவை மரத்தில் இருந்து பெறப்படும்.
பரியாரி வைத்தியர் நாட்டுவைத்தியர் பெரும்பாலும் ஆங்கில மருத்துவரைக்கூட சில வயது முதிர்ந்தோர் பரியாரி என்றே அழைப்பார்கள்.
பேக்காட்டுதல் இதன் இன்னொரு வடிவம் பேப்பட்டம் கட்டுதல். ஒருவனை ஏமாற்றுதல்.
மொக்கு அறிவு குறைந்தவன்,
கெக்கட்டம் கேலி பண்ணிச் சிரித்தல்
அசுமாத்தம் ஆளரவமற்றிருத்தல், ரோட்டிலை ஒரு அசுமாத்தத்தையும் காணோம்.
மலைநாடனின் விளக்கங்களும் மிகவும் சரியானைவை நான் சிலவற்றை உதாரணங்களுடன் விளக்கியிருக்கிறேன்.
மலைநாடான் அனைத்துக்கும் சரியாக தான் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன். சில சொற்களை வசனம் கொண்டு விளக்கம் கொடுக்கலாம் என் நினைக்கிறேன்.
2. எணேய் - பொதுவாக பெண்களுடன் கதைக்கும் போது (ஏன் + எணேய்) = ஏனெணேய் ஆச்சி/ அம்மா இன்று என்ன சமையல்
5. நூக்கோணும் - விளக்கை அணைக்க வேணும் எனும் போதும் பேச்சு வளக்கில் விளக்கை நூக்கோணூம் என்று சொல்வது வழக்கம். அகிலனின் கவிதையில் எந்த அர்த்தாம் எனக்கு தெரியாது
உங்கள் பதிவை இன்று தான் கண்ணுற்றேன்.பயனுள்ள காலத்தின் தேவை கருதிய முயற்சி. முதலில் அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
காலப் போக்கில் ஈழத்தமிழ் அகராதி ஒன்றைத் தயாரிக்கும் நிகழ்ச்சிக்கு இது நல்ல அடிப்படையாகவும் இருக்கும்.
காலாகாலமாக ஈழத்து வரலாற்றில் ஈழத் தமிழர் என்றால் யாழ்ப்பாணத்தவர் என்றும் ஈழத் தமிழ் யாழ்ப்பாணத் தமிழ் என்றும் ஒரு பரவலான எண்ணப் பாங்கு வளர்ந்திருக்கிறது.
அதன் தவறு யாராலும் சுட்டிக் காட்டப் படவில்லை.
இனியேனும் நாம் அந்தத் தவறுகளை விடாமல் மற்றவர்களையும் (மட்டக் களப்பு,திருகோணமலை,மலையகம்)சேர்த்து கொண்டு போக வேண்டிய கடமை நம்மெல்லோருக்கும் உண்டு.
நம் கடந்த கால வரலாற்றுத் தவறுகளில் இருந்து பாடங்களைப் படிக்க வேண்டியதும் நமது கடமையாகும்.
அப்போது தான் நாம் வளர்ந்திருக்கிறோம் என்று அர்த்தம்.
இது என் அறிவுரையல்ல; ஒரு ஆதங்கம் அவ்வளவு தான்.
மற்றம் படி உங்கள் போட்டிக்குச் சரியான பதில்கள் கிடத்து விட்டன என்று நம்புகிறேன்.
உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்.
சே....நான் ஓடிவாறேக்கிடேலை எல்லாரும் சரியாகப் விடை சொல்லிப்போட்டார்கள்...எனக்கு எப்பவுமே இப்படித்தான்...
பரவாயில்லை...விடை சொன்னாக்களுக்கும், போட்டி வச்ச ஆளுக்கும் வாழ்த்துகள்.
மலைநாடர் சொன்னதுகள் தான். "பதகளிக்கிறது" என்ட சொல் எனக்குப் புதிது.
எல்லாரும் இவ்வளவு கெதியா வந்து சரியான விடை சொல்லிப்போட்டினம்.
'அசுமாத்தம் ' நான் இப்ப தான் கேள்விப்படுகிறேன்.
மொக்கு என்றதும் எனக்கு இன்னொரு சொல்லும் நினைவில் வருகுது பாருங்கோ
மோட்டு
மோட்டுச்சிங்களவன் என்று சிங்களவரின்ர செயல்களை விமசிக்க அடிக்கடி பயன்படும் சொல்.
மொக்குச்சிங்களவன் என்றும் சிலர் சொல்லுவிணம்.
நானும் எதையாவது சொல்லுவமெண்டு வண்டதால், ஏற்கனவே எல்லாரும் சரியாச் சொல்லிப்போட்டினம். அப்ப நான் வாறன் :)
போய் வருகிறேன் என்பதை ‘வாறன்' என்று சொல்வதை அறிந்திருக்கிறேன். ஆரம்பத்தில் ‘வாறன்' என்று சொல்லிவிட்டு என்ன் ‘போகின்றார்கள்' என்று எண்ணியதுண்டு :)
அசுமாத்தம் என்பது மலைநாடான் சொன்னதன் எதிர்க்கருத்தாக வருமென்று நினைக்கிறேன்.
அதாவது அசைவை, சலனத்தை ஏற்படுத்துதல் என்ற பொருளில்.
'ஒரு அசுமாத்தமும் இல்லை' என்றால் எந்த அசைவும் அல்லது சலனமும் இல்லை என்பது பொருள்.
'ஆளின்ர அசுமாத்தத்தைக் காணேல' என்றால் குறிப்பிட்ட நபர் இருப்பதற்கான எந்த அறிகுறியுமில்லை என்ற பொருள்.
ஆகவே அசுமாத்தம் என்ற சொல்லை மட்டும் எடுத்தால் அது நேரடியாக எதிர்க்கருத்தில் வரும்.
குறிப்பிடப்பட்ட சில சொற்கள் அது பயன்படுத்தப்பட்ட இடத்தைப்பொறுத்தே பொருள் பெறும்.
நூக்கோணும் என்பது ஒன்று.
கெக்கட்டம் என்ற சொல்லும் சிக்கலானது. நேரடியாக, எக்காளமிடல் அல்லது கேலியாகச் சிரித்தல் என்று சொல்லிவிட முடியாது.
எக்காளமிடல் என்பது ஆவணத்தில் சிரிப்பதாகக் கொள்ளலாம்.
இவையில்லாமல் சாதாரணமாகவே மகிழ்ச்சியில் சிரிப்பதையும் இச்சொல்லால் குறிப்பதுண்டு. இங்கே சத்தம்போட்டு குலுங்கிச் சிரித்தல் கெக்கட்டம் என்ற பொருளில் வெளிப்படுத்தப்படுகிறது.
'அப்பா எப்பவும் கெக்கட்டம் விட்டுத்தான் சிரிப்பார்'
என்றால் அவர் எக்காளத்தோடோ ஆணவத்தோடோ மற்றவர்களைக் கேலி செய்தோ சிரிப்பார் என்ற பொருள் வராது. மாறாக அவர் சத்தம்போட்டு குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பார் என்ற பொருளில்தான் வரும்.
ஆக இச்சொற்கள் பயன்படுத்தப்பட்ட இடங்களின்றி இவற்றுக்கான பொருளைச் சொல்வது சரியன்று.
//ஆக இச்சொற்கள் பயன்படுத்தப்பட்ட இடங்களின்றி இவற்றுக்கான பொருளைச் சொல்வது சரியன்று.//
வசந்தனின் கூற்று மிகச் சரியானதே.
நூக்கோணும் என்ற சோற்பதம் விளக்கு அணைப்பதற்கும் வரும். அகிலனின் கதையிலும் அப்படி வருவதாகத்தான் ஞாபகம்.
அதேபோல் மொக்கு என்பதற்குக் கூட பெரு மரங்களில் சில இடங்களில் காணப்படும் திரட்சிக்கும் பாவிப்பதுண்டு.
//அசுமாத்தம் என்பது மலைநாடான் சொன்னதன் எதிர்க்கருத்தாக வருமென்று நினைக்கிறேன்.
அதாவது அசைவை, சலனத்தை ஏற்படுத்துதல் என்ற பொருளில்.//
வசந்தனின் கூற்று இதிலும் சரியானதே.
இன்று தான் இந்தப் பக்கம் வருகிறேன்.
"அகிலன்ர மரணத்தின்வாசனை புத்தகத்தை மலையாளத்தில மொழிபெயர்க்கிற முயற்சியள் நடக்குது."
இதையும் இன்று தான் அறிந்தேன் (அகிலன் ..... :( )
*அசுமாத்தம்-சந்தடி
**பதகளி- பதறிப் போதல்
(க்ரியாவில் இப்படித்தான் உள்ளது)
""பதகளிக்கிறது: பதட்டமடைதல்
சரியாக இருக்மென நினைக்கிறன். மற்றவர்கள் தெரிவித்த பின்னும் பார்க்கலாம்.""