Author: வர்மா
•6:18 AM
வரலாற்றுச்சிறப்புமிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய‌த்தில் அமைக்கப்பட்ட‌ 33அடி உயரபிரமாண்டமானசிவன் சிலை

படஉதவி சேனையூர் அச்சுதன்


படஉதவி :சேனையூர் அச்சுதன்
Author: கரவைக்குரல்
•10:54 AM
கலை என்பது ஒரு ஊடகம் என்று கூட சொல்லலாம்,அவரவரின் ரசனைகளுக்கு தீனி போடும்படியாக கலைகள் அமைந்துவிடுவதும் அவையே மக்கள் மத்தியில் இடம்பிடித்துவிடுவது தான் வழமை,அப்படியான கலைகளும் மக்களுக்கு செய்திகளை கொண்டு செல்லும் ஒரு ஊடகமாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
அவை அதாவது மக்களுக்கு எடுத்துச்செல்லவேண்டிய கருத்துக்களை சாதாரணமாக பேச்சுக்களால் சொல்வதைவிடுத்து அவற்றை ஏதாவது இசைவடிவிலோ அல்லது ஏதாவது ஒரு கலை ஊடகத்தின் வாயிலாகவோ சொல்லுவதன் மூலம் அந்தந்த விடயங்கள் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைவதோடு ஆணித்தரமாக மனதில் இடம்பிடித்துவிடும் என்பதையும் மறுக்க முடியாது,
ஓவியங்கள்,நாடகங்கள்,வில்லிசைகள்,பல்வேறு கருத்துக்களை சுவாரஷ்யமாக அலசும்.பட்டிமன்றங்கள் போன்ற கலைகள் இவற்றில் முக்கியமாக நினைவில்வருகின்றன.

அந்த வகையில் தாயகத்தில் சிறந்த ஒரு கலை தான் வீதிநாடகம், நாடகங்களின் வகைகளுக்குள் இவற்றையும் அடக்கலாம் எனினும் இந்த வகையான நாடகங்களுக்கு ஒரு தனிப்பட்ட சிறப்பான இடம் உண்டு,சில வேளைகளில் எந்த வித அலங்காரங்களுமின்றியே நடிகர்கள் மேடையேறிவிடுவதுண்டு.உண்மையில் நாடக நடிகர்களுக்கு தங்கள் நடிப்புத்திறனை வெளிக்காட்டுவதில் வீதி நாடகத்தில் கொஞ்சம் சிரமம் என்று தான் நான் சொல்வேன்,ஏனென்றால் அதில் எந்த வித உடையலங்காரங்கள் மற்றும் மேடை அமைப்புக்களின்றி நடத்தும் நாடகமாதலால் கொஞ்சம் கடினம் தான்.தங்களை நடிகர்கள் என்று அடையாளப்படுத்துவதற்காக தங்கள் தலைகளிலோ அல்லது இடுப்பிலோ ஏதாவது நிறத்துடன் கூடிய துணியைக்கட்டிக்கொள்வர், கூடுதலாக மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறமுடைய துணிகளை கட்டியிருக்கவே கண்டிருக்கிறேன்.அதனோடே முடியும் வரை நடித்துவிட்டு வெளியேறுவர்,அதேபோலத்தான் அந்த அந்த பாத்திரங்களுக்கு ஏற்றபடியே சாதரண உடைகள் அணிந்து சிலர் வருவர் மேடைகளில்,
இதிலென்ன சிறப்பம்சமென்னவெனில் சிறிதளவும் ரசிகர்களை முகம் திரும்பாதபடி அவர்களின் நடிப்புத்திறன் இருக்கும்,அத்துடன் பார்வையாளர்கள் வட்டவடிவமாக சூழ்ந்து இருப்பதால் நடிக்கும் வேளைகளில் விடப்படும் எந்தவொரு சின்னத்தவறும் கூட பார்வையாளர்களால் உணரப்படுமென்பதால் மிகக்கவனமாக நடிகர்கள் இருக்க வேண்டும்,இதனாலேயே கொஞ்சம் சிரமம் என்றேன்,இவை எல்லாவற்றையும் விஞ்சி மக்களின் ரசனைக்கு ஏற்றபடியே நடித்து வெளியேறுவர் நடிகர்கள்.

பொதுவாக வீதி நாடகத்தின் கருவாக அந்த அந்த காலத்திற்கு ஒப்பான கருவையே தெரிந்தெடுப்பர்.சாதரணமாக நாடகங்களாக இருந்தால் இலக்கியக்கதைகளோ அல்லது புராணக்கதைகளோ அல்லது வாழ்வியல் கதைகளோ அவற்றை அலங்கரிக்கும்,ஆனால் வீதி நாடகங்களில் ஏதாவது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஊட்ட வேண்டும் என்றோ அல்லது அரசியல் நிலைகளை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்றோ சிந்திப்பதால்தான் வீதிநாடகத்தை தெரிவுசெய்வர் இயக்குனர்கள்.அது மட்டுமல்ல இலகுவாக விரைவாக கருத்துக்கள் மக்களை அடைய வேண்டும் என்று சிந்திப்பவர்கள் தெரிவுசெய்யும் கலைதான் இந்த வீதிநாடகம்.
உதாரணத்திற்கு சுற்றுச்சூழல் பாதிப்பு [பற்றி மக்கள் மத்தியில் அவசரமாக உணர்த்த வேண்டிய கட்டாயம் உணரப்படுமிடத்து இந்த வீதி நாடகம் தெரிவுசெய்யபடும் எனபதில் மறுப்பிற்கு இடமில்லை.

அது மட்டுமல்லாமல் இவை மக்களை நோக்கி இது கொண்டு செல்லபடும்.பெரிய பெரிய நாடகங்கள் என்றாலோ அல்லது பெரிய பெரிய மேடைகளில் இடம்பெறும் நாடகங்கள் என்றாலோ அவற்றை சகல பாமர மக்களுக்கும் பார்ப்பதற்கோ அல்லது ரசிப்பதற்கோ கிடைக்கும் என்று சொல்ல முடியாது,அதனால் அப்படியான மக்களை நோக்கி இந்த வீதிநாடகம் வீதி வீதியாக சென்றுகொண்டிருக்கும்,இதன் மூலம் மக்களின் ரசனைக்கும் தீனி என்பதோடு அவர்களுக்கு செல்ல வேண்டிய கருத்தும் சென்றுவிடும் எனபது தயாரிப்பாளர்களின் யுக்தி,
அது மட்டுமல்லாமல் இந்த நாடகங்களில் இடம்பெறும் வசன நடைகள் ஒருபோதும் மக்களில் பேச்சுமொழியைவிட்டு விலகமாட்டாது.சாதரண வாழ்க்கையில் புழக்கத்தில் உள்ளவற்றை மட்டுமே நாடக உரையாடல்களில் அவதானிக்கமுடியும்,இவயெல்லாம் இந்நாடகத்தின் சிறப்புக்கள்

இவற்றிற்கெல்லாம் எப்பொழுது எங்கு இடம்பெறும் என்றெல்லாம் முதலே அழைப்புவிடுவதுமில்லை,பிரச்சாரம் செய்வதுமில்லை,சுவரொட்டி ஒட்டுவதுமில்லை,திடீரென ஒலிபெருக்கியில் ஒலிக்கும் ”அன்பார்ந்த ....... மக்களே இன்று மாலை மூத்தவிநாயகர் ஆலய முன்றலில் ”புதுயுகம் காண்போம்” வீதி நாடகம் இடம்பெறவிருப்பதால் அனைத்து மக்களையும் மிக வேகமாவே வந்து கூடுமாறு பணிவாக வேண்டுகிறோம்,அந்த அறிவித்தலை மீண்டும் ஒருமுறை அறியத்தருகிறோம்” என்றவாறாக உடனடி அழைப்பாக மீண்டும் மீண்டும் அழைக்கும் ஒலிபெருக்கி அழைப்பில் ஊர் மக்களெல்லோரும் ஒன்றாகிவிடுவர். வீதி நாடகங்களின் சுவாரஷ்யமும் அதனூடாக தரப்படும் சிறப்பான விடயங்களும் மக்களின் வேகமான வருகைக்கான முக்கிய காரணங்கள்.(இங்கு குறிப்பிட்ட விடயம் மற்றும் நாடகத்தின் பெயர் எல்லாம் அறிவித்தலின் நடையை குறிப்பிடும்போது அதன் படியே கூறப்பட்டதே ஒழிய இது உண்மையாக இடம்பெறும் என்று எல்லோரும் அங்கங்கு இருக்கும் மூத்தவிநாயகருக்கு சென்று விடாதீர்கள்,ஹிஹிஹி)

இந்த வீதிநாடகம் ஐரொப்பிய மண்ணிலும் எம்மவர்களால் அரங்கேற்றப்பட்டது 
பற்றி அறியக்கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது
உணர்வுகளையும் எம்மவர்களின் கருத்துக்களும் அதில் பிரதிபலித்ததாக அறிய முடிந்தது,வீதி நாடகம் அங்கும் வீதிகளில் இடம்பெற்றமை அதன் சிறப்புக்களையும் அதன்மூலம் மக்களுக்கு கருத்துக்களை 
இலகுவில் அடையச்செய்யலாம் என்பதையும் உறுதிபடுத்தியிருக்கிறது.

இவ்வாறாக ஈழத்தில் இடம்பிடித்த கலைகளில் வீதி நாடகத்துக்கும் ஒரு சிறப்பான இடம் இருக்கிறது என்பதை உணரமுடியும்.இப்படியான கலைகள் என்றும் அழியவிடாது பேணிக்காக்க வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம். என்னதான் நாகரிகமான கலைகள் மற்றும் வீட்டிலுருந்தவாறே எல்லாம் பார்த்துவிடலாம் என்றவாறாக அமைந்த சில சீரழிக்கும் கலைகள் வந்தாலும் இப்படியான கலைகள் என்றென்றும் வாழ எல்லோரும் தயாராக வேண்டும.தயாரிப்பாளர்கள் தயாராகும் அதேவேளை ரசிகர்களின் ரசனையும் இப்படியான கலைகளின் சிறப்பை உணர வேண்டும்.

படம் ஆழியூரானின் நடைபயணத்திலிருந்து வீதி நாடகத்தின் அமைப்பை உணர்த்த வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டது
இது ஈழத்துமுற்றத்துக்கான எனது மீள் பதிவு.உங்கள் கருத்துக்களையும் பதிவுசெய்யுங்கள்

Author: மாயா
•3:33 AM

ஒலிப்பேழை : விக்டர் அன் சன்ஸ் மியூசிக் சென்ரர்யாழ் நகர்
Dingiri and Sivaguru 02 by mayunathan
Author: சஞ்சயன்
•1:28 PM
1984 -85 ம் ஆண்டின் இறுதிக் காலங்கள், இழக்கப்போகும் பெறுமதிமிக்க  காலங்களைப் பற்றிய எதுவித அறிகுறிகளுமில்லாமல்  ஓடிக்கொண்டிருந்தது. ஊருக்குள் பிரச்சனைகள் மெதுவாய் தொடங்கியிருந்த காலம்.  19 - 20 வயதுக்கான எவ்வித முதிர்ச்சியும் இன்றி, எவ்வித கனவுகளும் இன்றி, பல்கலைக்கழக  அனுமதிக்கான பரீட்சை எழுதிவிட்டு, பெறுபேறுகளுக்காகக் காத்திருந்தேன்.


சிங்கள நண்பர்கள் பலர் ஊரைவிட்டு மெது மெதுவாய் இடம் பெயர, இஸ்லாமிய நட்புகளும் பிரச்சனைகளின்  காரணமாக தொலைந்து கொண்டிருந்தன. இருப்பினும் துணிந்தவர்கள் சிலரின் நட்புகள் மங்கலான மாலைப் பொழுதுகளில் தொடரத்தான் செய்தன.
ஒன்றாய் பழகிய மூவின நட்புகளும் தனித்தனியே தொடர்பில்லாது தம்வழியே சென்றுவிட்டாலும், நட்பு என்னும் சொல் மட்டும் தனது தன்மையை இழக்காதிருந்தது என்பது பல ஆண்டுகளின் பின் தான் எனக்குப் புரியும் என்பது எனக்கு அன்று தெரியாதிருந்தது.
ஒரு புறம் தமிழ் முஸ்லீம் கலவரங்கள், இராணுவத்தினரின் கெடுபிடிகள், இயக்கங்ளின் வீரப்பிரதாபங்கள் என எமது ஊரின் காற்றில் கூட விறுவிறுப்பு கலந்திருந்த காலமது. கைதுகளும், மரணங்களும் பழகிப்போயின. நண்பர்கள் தீடீர் என காணாமல் போய் முறுகிய உடம்புடன் இறுகிய பார்வையுடன் 4 -5 மாதங்களின் பின் பின்மாலைப் பொழுதுகளில் வந்து சந்தித்தனர். ஒரு சிலர் இடுப்பில் இருந்த சில ஆயுதங்களையும் காட்டினர். சிலர் கொள்கைப்பரப்புரைகளும் செய்தனர். 

சகோதர முறுகுநிலை தொடங்கியிருந்தது. நண்பர்களாய் இருந்தவர்களும் முறாய்த்துக்கொண்டனர். அல்லது முறாய்க்க கட்டளையிடப்பட்டனர்.

ஒரு நாள் மட்டக்களப்பு ரஷீடியாஸ் குளிர்பானக்கடையினுள் எமக்கும் ஒரு ”அண்ணர்” வகுப்பு எடுத்தார். தமிழீழ விடுதலை ராணுவம் என்றார். அரசியற்பிரிவு, ராணுவப்பிரிவு, முழுநேரப் போராளி, பகுதிநேரப் போராளி என்றார். நான் பகுதிநேரம் என்றேன். எனது பெயர் விபரம் எழுதிப் போனார். பின்பொருநாள் ஏறாவூர் ரயில்நிலையத்தருகில் ஒரு கைத்துப்பாக்கியையும் காட்டினார். அதன் பின்பு அவர் வரவும் இல்லை. அவர் வரவில்லை என்று நான் கவலைப்படவும் இல்லை.

ஒரு முறை ”ஹர்த்தால்” என்று சுவரொட்டி எழுதவேண்டியேற்பட்டது. அழகான கையெழுத்தை கொண்டிருந்த ஒரு நண்பனை காட்டுக்குள் அழைத்துப்போய் சுவரொட்டியை எழுதவைத்தோம். அதுவே அவன் தொழிலாகியது பின்னாலில். எல்லா இயக்கங்களுக்கும் அவனே சுவரொட்டி எழுதினான். அந்த சுவரொட்டியை ஒட்டுவதற்கிடையில் நான்கு தடவைகள் மூத்திரம் போயிருப்பேன்.

தினமும் ஒருவர் வீதிக் கம்பத்தில் தலை சரிந்து கிடந்தார். ஊராரும் சிவப்பு நிறத்தில் இருந்த நோட்டீஸ்களை நம்பத் தொடங்கயிருந்த காலம். வீதிக்கம்பத்தில் சரிந்திருந்தவர்கள் எல்லோரும் குற்றவாளியாக்கப்பட்டார்கள். அவர்களை சரித்தவர்களின் குற்றங்கள் பற்றி யாரும் பேசமுன்வரவில்லை. எவரும் கொல்லப்பட்டவர்களின் வலியை கண்டுகொள்ளவும் இல்லை.  கொலைசெய்யப்படுவதற்கு முன்னான வினாடியில் கூட தான் மன்னிக்கப்படலாம் என்று அவர்கள் எண்ணியிருக்கக்கூடும். துப்பாக்கியின் விசை அழுத்தப்படுதை காணும் போது அவர்கள் தமது குடும்பத்தை, குழந்தையை, காதலியை நினைத்திருக்கக்கூடும். சில வேளைகளில் ”நாசமாய்போவீர்கள்” என்றும் சபித்திருக்கவும் கூடும்.
ஒரு ‌முறை பெருங்கலவரம் மூண்டது தமிழர்களுக்கும், இஸ்லாமியர்க்கும் இடையில். எனது ஊர் எல்லையில் இருந்ததால், ஊரே இடம் பெயர்ந்தது. வந்தாறுமூலையில் உள்ள கிழக்குமாகாண பல்கலைக்கழகம் அகதிமுகாமனது. வீடு வீடாய் சென்று உணவு சேகரித்துவரக் கட்டளையிட்டார்கள் ”அண்ணா”க்கள். மாலையில் கத்தி, கோடாலி, அலவாங்கு, திருக்கைவால் போன்ற ஆயுதங்களுடன் செங்கலடிச்சந்ந்தியில் காவல் வேறு போட்டார்கள். நாங்கள் அருகே இருந்த ஒரு பேக்கரிக்குள் 304 விளையாடிக்கொண்டிருந்தோம்.
நண்பர்கள் சிலர் வெளிநாடு போயினர். சிலர் ”கப்பலுக்கு” போயினர். நாங்கள் சிலர் மட்டும் எங்கும் போகவில்லை. எங்கு போவது என்றும் எமக்குத் தெரிந்திருக்கவில்லை. நாம் குந்தியிருக்கும் சந்திக்கு ஆமி வரும்போது ஓடுவதும், அவர்கள் அங்கிருந்து அகன்றதும் நாம் திரும்பி வருவதும் வழமையாகியது.
இப்படியான நாட்களில் தான் ஊரில் இருந்தால் பிரச்சனை என்பதால் அம்மா என்னை இந்தியா அனுப்ப  யோசித்தார். இதை அறிந்த இரு நண்பர்களும் என்னுடன் இணைந்துகொள்ள இந்தியாப் பயணம் தொடங்கிற்று.
தெரிந்த பெரியவர் ஒருவருடன் நாம் கொழும்பு போய்,  அங்கிருந்து வீசா எடுத்து இந்தியா போவது போல் ஒப்பந்தமாகி நண்பர்களின் பெரும் பிரியாவிடையுடன் 1985ம் ஆண்டு கார்த்திகை  மாதத்தின் இறுதி நாட்களில் ஒரு நாள், காலைப் புகையிரதத்தில் கொழும்பு நோக்கிப் புறப்பட்டடோம். புகையிரதம் எமது Eravur United விளையாட்டுத்திடலைக் கடந்த போது, தரிசாய் கிடந்த நிலத்தை மூவின நண்பர்களும் சேர்ந்து செப்பனிட்டு விளையாடிக்களித்த நாட்கள் நினைவிலாடியது.

அன்றைய  அந்தப் பயணம் , ஒரு பெரும் பிரிவின் தொடக்கம் என்பதும், அதுவே என் வாழ்வினை நிர்னயிக்கப்போகிறது என்பதும் எனக்கு புரிந்திருக்கவில்லை அன்று. ஒரு சாதாரணப்பயணம் போலிருந்தது அது. பெரும் பயணங்கள் அனைத்தும் சாதாரணமாகவே தொடங்குகின்றனவோ என்னவோ?
வெய்யில் காய்ந்து, காற்றும் காய்திருந்திருந்த தென்னைமர தோட்டங்களினூடாகவும், வெட்ட வெளிகளினூடாகவும் புகையிரதத்தின் வேகத்தில் தலைமுடி காற்றிலாட, காலம் செய்யப் போகும் கோலத்தினை உணராமல் பயணித்துக்கொண்டிருந்தேன். புகையிரதம் எதையும் கவனிக்காமல் கட கட கடவென ஓடிக்கொண்டிருந்தது, வாழ்வைப்போல்.
இருபத்திஏழு ஆண்டுகளின் பின்பான இன்று இதை எழுதிக்கொண்டிருக்கும் போது ஊரின் வாசனையையும் காட்சிகளையும், நட்பின் ஈரத்தையும், காற்றின் வெம்மையையும் மனம் நுகர்ந்ததை உணர்கிறேன். ஏகாந்தமான அனுபவம், அது. என் குழந்தைகளின் வாசனையை நான், குழந்தைகளின் அருகாமையின்றியே அறிவது போன்றது அது.
காலமும், வாழ்வும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. நினைவுகளைச் சுமந்தபடி அவற்றுடன் பயணித்துக்கொண்டிருக்கிறேன் நான். நீங்களும்தான்.
இன்றைய நாளும் நல்லதே!.

visaran.blogspot.com


Author: கானா பிரபா
•12:54 AM

ஈழத்து முற்றம் குழும வலைப்பதிவு : இரண்டு ஆண்டுகள், 41 பதிவர்கள், 301 பதிவுகளோடு

ஈழத்து முற்றம் என்ற இந்தக் குழும வலைப்பதிவு , ஈழத்தின் பல்வேறு பிரதேசங்களில் வாழும் தமிழ்பேசும் பதிவர்களைத் திரட்டி ஜூன் 5, 2009 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதாகும். இன்றுடன் 301 பதிவுகளைத் தொடும் ஈழத்து முற்றம் ஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள், ஆளுமைகள் என்று பல்வேறுவிதமான தலைப்புக்களில் இடுகைகளைப் பகிர்ந்திருக்கின்றோம். இன்னும் பல பதிவுகளோடு இந்தத் தளம் தொடர்ந்தும் இயங்கும் என்று உறுதிபடக்கூறுகின்றோம்.

இன்று 41 பதிவர்களின் பங்களிப்போடு கூட்டுவலைப்பதிவாக இயங்குகின்றது ஈழத்து முற்றம்.

இந்தத் தளம் என்பது தமிழால் ஒன்றுபட்ட ஈழத்துப் பதிவர்கள் தத்தமது பிரதேசத்தின் அடையாளங்களைப் பகிர்வதன் மூலம் தமிழ் உலகின் மற்றய பாகங்களில் வாழும் தமிழ் உறவுகளின் மொழி, பழக்க வழக்கக் கூறுகளோடு ஒப்பு நோக்கவும் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. அத்தோடு ஜோசபின் என்ற தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரி ஜோசபின் தனது ஆய்வுப்பணிக்காக ஈழத்து முற்றம் குழுமப்பதிவைத் தேர்ந்தெடுத்து ஆய்வைச் சிறப்புற முடித்ததையும் இவ்வேளை மகிழ்வோடு பகிர்கின்றோம்.

இந்தக் குழுமம் மூலம் இன்னும் செழுமையான ஈழத்துப் பதிவர்கள் இணைந்து தம் பகிர்வுகளை அளிக்கவேண்டும் என்பதும் எமது அவாவில் ஒன்றாக இருக்கின்றது. இந்தக் குழுமத்தில் இணைந்து பங்கேற்க விரும்பும் உறவுகள் பின்னூட்டம் வாயிலாக அறியத் தரலாம், ஈழத்து முற்றம் குழுவின் மட்டுறுத்துனர்கள் மூலம் பரிசீலிக்கப்ட்டு, ஆக்கபூர்வமான பதிவர்கள் உள்வாங்கப்படுவர். இதுவரை பங்களித்தவர்களுக்கும் தொடர்ந்து பங்களிப்போருக்கும் எமது நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக.

ஈழத்து முற்றம் குழுமப் பதிவர்கள் சார்பில்
Author: HK Arun
•10:27 AM
பறை எனும் சொல் ஒரு தூய தமிழ் சொல்லாகும். இச்சொல் "பறை" எனும் பெயரில் ஒரு இசைக் கருவிக்கான பெயர்ச்சொல்லாக பயன்பட்டாலும், வினைச்சொல்லின் பயன்பாடுகளும் உள்ளன. குறிப்பாக இச்சொல்லினதும், இச்சொல் தொடர்பான சொற்பிரயோகங்களும் யாழ்ப்பாணத் தமிழர் பேச்சு வழக்கில் இன்றும் உள்ளனவைகளாகும்.

பழங்காலத் தமிழர் வாழ்வியலில் செய்தியூடகம் என்று ஒன்று இல்லாதக் காலக்கட்டத்தில், ஒரு நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை, அறிவித்தல்களை, அரசக் கட்டளைகளை ஊர் ஊராகச் சென்று சொல்லுதல் "பறைதல்" என்றும், அவ்வாறு ஊர் ஊராகச் சென்று சொல்பவர் "பறையர்" என்பதும் காரணப்பெயர்களாகும். காலப்போக்கில் தமிழர் வாழ்வியலின் சாதிய வேறுப்பாடுகளின் அடிப்படையில் பறை, பறையர் எனும் சொற்கள் தொழில் நிலைப் பெயராக நிலைத்துவிட்டன அல்லது மாற்றம் பெற்றுவிட்டன.

அதேவேளை ஊரூராகச் சென்று செய்திகள், அறிவித்தல்கள், அரச மற்றும் நிர்வாகக் கட்டளைகள் போன்றவற்றை பறைபவர் (சொல்பவர்), தற்போதைய தற்கால ஒலிப்பெருக்கி போன்ற சாதனங்கள் இல்லாத நிலையில் பலத்தக் குரலில் சத்தமிட்டே பறைய வேண்டியக் கட்டாயச் சூழல் இருந்திருக்கும் என்பதை இன்றையச் சூழ்நிலையில் எளிதாகப் புரிந்துக்கொள்ளலாம். அத்துடன் பலத்தக் குரலில் சத்தமாகப் பறைபவர் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு கருவியின் துணைக்கொண்டு, அதனை ஓங்கி அடித்து ஒலியெழுப்பி, தான் கொண்டு வந்த செய்தியை, அல்லது அறிவித்தலை மக்களுக்குப் பறைவார்.

இதனால் காலப்போக்கில் "பறை" எனும் வினைச்சொல், பறையும் பொழுதும் மக்களை ஈர்ப்பதற்கு பயன்படுத்திய ஒலியெழுப்பிய கருவிக்கான பெயர் சொல்லாக நிலைத்துவிட்டது.

அத்துடன் தற்போதைய தற்கால ஒலிப்பெருக்கி போன்ற சாதனங்கள் இல்லாத நிலையில், பலத்தக் குரலில் சத்தமிடுவதால் அல்லது சத்தமிட்டு பறையும் தொழிலை கொண்டிருப்பவர் என்பதால், பறைபவர் ஏனைய தமிழ் சமுதாயக் கட்டமைப்பின் படி ஒரு தரக்குறைவான தொழில் நிலையாகத் தோற்றம் பெற்றது எனலாம். ஆகையால் இந்த பறை எனும் சொல் ஒரு இசைக்கருவிக்கான பெயராகவும், ஒரு சாதிய பெயராகவும் மட்டுமே பெரும்பாலும் நிலைத்துவிட்டன; குறிப்பாக தென்னிந்தியாவில். அதேவேளை பழந்தமிழ் தொட்டு இன்றுவரை பறை எனும் வேர்ச்சொல்லுடன் தொடர்புடைய பலசொற்கள் அல்லது பலச்சொல்லாடகள் இன்றும் யாழப்பாணத்தவர் பேச்சு வழக்கில் அழியாமல் இருப்பது யாழ்ப்பாணப் பேச்சு தமிழின் தனிச் சிறப்பாகும்.

அவற்றில் சில...

"பறை" எனும் சொல்லின் வினைப் பயன்பாடுகள்


பறை = சொல்
பறைதல் = சொல்லுதல்
பறைஞ்சன் = சொன்னேன்
பறைஞ்சவன் = சொன்னவன் (சொன்னான்)
பறையாதே = சொல்லாதே , பேசாதே
பறையிறான் = சொல்கிறான்
பொய் பறையாதே = பொய் சொல்லாதே
அவன் என்ன பறஞ்சவன்? = அவன் என்ன சொன்னான்?
அவனிட்ட பறையாதே = அவனிடம் சொல்லாதே

"பறைசாற்றுதல்" எனும் சொல்லும் "பறை" எனும் வினையை ஒட்டியெழுந்தப் பயன்பாடே ஆகும்.

இவ்வாறு பறை எனும் வேர்ச்சொல்லுடன் தொடர்புடைய பலசொற்கள் அல்லது பலச்சொல்லாடகள் உள்ளன. இவை இன்றும் யாழப்பாணத்தவர் பேச்சு வழக்கில் அழியாமல் இருப்பது யாழ்ப்பாணப் பேச்சு தமிழின் தனிச் சிறப்பாகும். அதேபோன்று கிட்டத்தட்ட சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழில் இருந்து கிளைத்த மொழியான மலையாளத்திலும் இந்த "பறை" எனும் சொல்லின் வினைப் பயன்பாடுகள் இன்றும் புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு செய்தியை அல்லது ஒரு தகவலை ஒருவரிடம் கூறினால், அவர் அதனை இரகசியமாகப் பேணாமல் எல்லா இடங்களிலும் சொல்லித் திரிபவராகக் கருதப்பட்டால், அவரை "பறையன்", "பறையன் போன்று" எனும் அடைமொழிகளுடன் பேசுவதும் மேற்குறித்த பறை எனும் வினைச்சொல்லின் பயன்பாட்டின் பின்னனியே அடிப்படைக் காரணங்கள் எனலாம்.

இலங்கை சிங்களவர் மத்தியில்


தமிழர் பேச்சு வழக்கில் புழக்கத்தில் உள்ள இந்த "பறை" எனும் சொல்லின் பயன்பாடு இலங்கை சிங்களவர் மத்தியிலும் சாதியப் பெயராகவும், இரகசியம் பேணாதவரை இடித்துரைக்கும் சொல்லாகவும் பயன்படுகிறது.

எடுத்துக்காட்டாக:

தமிழ் > சிங்களம்
பறையன் > பறையா
பறையர் > பறையோ
பறையன் போன்று > பறையா வகே
பறை > பறை > பெற (Bera)

இவ்வாறு இன்றைய தமிழர் மத்தியில் தற்போது பயன்படும் இச்சொல்லின் பெயர்ச்சொல் பயன்பாடுகள் அனைத்தும், இலங்கை, சிங்களவர் மத்தியில் பயன்பாட்டில் இருப்பது கவனிக்கத் தக்கது. குறிப்பாக தமிழர் பயன்பாட்டில் காணப்படும் பறை + தொடர்பான அத்தனை இழிச்சொல் பயன்பாடுகளும் அதே பொருளில் சிங்களவர் பயன்பாட்டிலும் உள்ளன.

இங்கே "வகே" எனும் சொல்லும், தமிழரின் பேச்சு வழக்கில் புழங்கும் "வகை" எனும் சொல்லுடன் தொடர்புடையது. இவை மருவல் என்பதனை உணர்த்துகின்றன.

சிங்கள மருவல் பயன்பாடுகள்


அதேவேளை "பறை" எனும் இசைக்கருவியின் பெயர் பறை >பெறை >பெற" என்று மருவியுள்ளது. அதேபோன்றே சாதியப் பெயரான "பறையர்" எனும் தமிழ் சொல், சிங்களத்தில் "பெறவா" என்று அழைக்கப்படுகின்றது. அத்துடன் இந்த "பெறை" இசைக்கருவியை அடிப்பவர்களை "பெறக்காரயா" என்று அழைக்கின்றனர்.

தமிழ் > சிங்களம்
பறை > பறை > பெறை > பெற
பறையர் > பறையோ > பெறவா
பறை அடிப்பவர் > பெறக்காரயா

தமிழ் பேச்சு வழக்கில் உள்ள சொற்கள் சிங்களப் பேச்சு வழக்கில் மருவி பயன்படுபவைகளில் இந்த "பறை" எனும் வேர்ச்சொல்லும் அதனுடன் தொடர்புடையச் சொற்களும் அடங்கும்.

அத்துடன் சிங்களப் பேச்சு வழக்கில் "பெறக்காரயா" என்பதில் உள்ள "காரயா" எனும் பின்னொட்டும் தமிழர் வழக்கில் உள்ள "காரன்" எனும் பின்னொட்டின் மருவலே ஆகும்.

குறிப்பு: பழந்தமிழில் வினையாகப் பயன்பட்ட "பறை" எனும் சொல் இன்று ஒரு பெயர்ச்சொல்லாக உலகெங்கும் பல மொழிகளில் பயன்படுகிறது. ஆங்கிலம் தமிழில் இருந்து உள்வாங்கிக்கொண்ட (கடனாகப் பெற்ற) சொற்களில் இந்த "Pariah" வும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாக்கம் நான் விக்கிப்பீடியாவில் எழுதியதன் மீள்பதிவாகும்.

நன்றி!
Author: மணிமேகலா
•12:04 AM
இலங்கை வானொலிக்கு அதிலும் குறிப்பாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் தமிழ்சேவை 2, மற்றும் வர்த்தக சேவைகளின் ஒலிபரப்புக்கு ஒரு சுவை மிகுந்த வரலாறு இருக்கிறது.தமிழின் உச்சரிப்புச் சுத்தமும் ஒலித் துல்லியமும் அனேகத் தமிழரை அதனோடு கட்டிப் போட்டிருந்தது.

அப்போது தொலைக்காட்சியோ வேறு வகையான பொழுது போக்குச் சாதனங்களோ இல்லாதிருந்ததும் அதற்கொரு காரணமாய் இருக்கலாம். ஆனாலும் அதனைக் காரணம் காட்டி இந்த ஒலிபரப்புச் சேவையை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.அது தன் தரத்தில் முன்னின்றது.

அது மாத்திரமன்றி அதில் இடம் பெற்ற நிகழ்ச்சிகள் பலரின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.ஒவ்வொரு நாள் காலையிலும் இடம் பெறும் பொங்கும் பூம்புனலும் அதற்கான முகப்பு இசையும்  மறக்கக் கூடிய ஒன்று தானா? அது போல பிறந்த நாள் இன்று பிறந்த நாள் நான் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள் என்ற முகப்பு பாடலோடு அறிமுகமாகும் பிறந்த நாள் வாழ்த்து,பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரிக்கு வரும் மங்கல கரமான முகப்பு இசையோடு வரும் ராஜேஷ்வரி சண்முகத்தின் இனிய குரல்,சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களின் ஆட்சிக் காலத்தில் செய்திக்கு முன்னால் இடம்பெற்ற மேள ஓசை அதனைத் தொடர்ந்து வரும் சற் சொரூபவதி நாதன் அவர்களின் உச்சரிப்புச் சுத்தமும் தேனில் குழைத்த கம்பீரமும் கலந்த செய்தி அறிக்கை,....

அது போல திரைவிருந்து அதனோடு வரும் கே.எஸ். ராஜாவின் கொஞ்சும் குரல், நல்லதமிழ் கேட்போம் என்ற படி வரும் ஒலிச்சித்திரமும் ராஜகுரு.சேனாதிபதி.கனகரட்னம் என்னும் பெயரும்,... அப்படியே நீட்டிக் கொண்டு போனால் சிறுவர் மலர், அதனை நடத்திக் கொண்டிருந்த வானொலி மாமா, (அவர் இப்போது இங்கு சிட்னியில் தான் இருக்கிறார்),ஸ்டார் ரொபியின் மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சி,அப்துல் ஹமீத்,லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு, மற்றும் நீங்கள் கேட்டவை, விடுமுறை விருப்பம்,

’முற்றத்து மல்லிகையில்’ வரும் ஈழத்துப் பாடல்கள்,மற்றும் அறிவிப்பாளர் ஜோசெப் ராஜேந்திரனின் நான் உங்கள் தோழன் எந்த நாளுமே நல்ல நண்பன்...பாடல்,அறிவிப்பாளர் நடேச சர்மா, அந்தக் குரலுக்கென்றிருந்த ஒரு மென்மை கலந்த வசீகரம்,இரவு 9 மணிச் செய்திக்கு முன்பாக ஒரு மணி நேரத்துக்கு ஒலிபரப்பாகும் முஸ்லீம் நிகழ்ச்சி, செய்திக்கு ஒரு நிமிடம் முன்பாக அவர்கள் சொல்லும் வரலாற்றில் ஓரேடும் குறிப்பும் சலவாத்தும், அப்படியே அவர்கள் சொல்லும் ’அஸலாமு அலைக்கும் ப்ஃரகத்துல்லாஹூ பரஹாத்துஹூ’..... எல்லாமும் இன்றும் அப்படியே மனதில் பதிந்து போயிருப்பதற்கு அந்த ஒலிபரப்புக்கு என்றிருந்த தரம், செல்வாக்கு நிச்சயமாக ஒரு காரணம் தான்.

அக்காலங்களில் ஒலிபரப்பான நாடகங்களைத் தான் மறக்க முடியுமா? இசையும் கதையும்,சனி காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை ஒலிபரப்பான கதம்பம்,தணியாத தாகம், இரைதேடும் பறவைகள், சந்தியாகாலத்துப் புஷ்பங்கள்,கோமாளிகள் என்றொரு தமிழ்,முஸ்லீம்,சிங்கள இனத்தவரை அவர் தம் இயல்புகளை வாழ்க்கைக் கோலங்களை மையமாக வைத்து இடம்பெற்ற நகைச்சுவைநாடகம்(மரிக்கார்.ராமதாஸ்,அப்புக்குட்டி.ராஜகோபால்,....செல்வசேகரன்) போன்றவை நாம் தவறாமல் கேட்ட நாடகங்கள் அல்லவா? அதிலும் குறிப்பாக மக்கள் வங்கியால் வருடக்கணக்காக ஒலிபரப்பாக்கப் பட்டு வந்த தணியாத தாகம் ஞாயிற்றுக் கிழமை 4.30. மணிக்கு குடும்பத்தையே வானொலிக்கு முன்னால் உட்காரவைத்த சாதனையைப் படைத்திருந்ததல்லவா? அதில் சில்லையூர் செல்வராஜனும் கமலினி செல்வராஜனும் இணைந்து பாடும்,
..............
..............
மனையிலே மக்கள் குறைவிலாக் கல்வி
மான்களாய் வளர வழியெதென்கிறாய்

கேள்வி அது தானே?

ஆமாம் அத்தானே!

மக்கள் வங்கியே நம் தோழன்
வழி புரிவான் கண்ணே!

.........................
.......................

சிறு தொகை தானே சேமிக்கின்றோம்
செலவுக்கெது வழி ஆகும் என்கிறாய்

கேள்வி அது தானே?

ஆமாம் அத்தானே!

மக்கள் வங்கியே நம் தோழன்
வழிபுரிவான் கண்ணே!

பாடல் நினைவிருக்கிறதா?

இப்போது பல தனியார் வானொலிகள், போட்டிகள், ஒலிபரப்பு முறைகளில் கூட அநேக வேறுபாடுகள்,நிதானமற்ற ஒரு ஓட்டம்,அவசரம், உச்சரிப்புத் துல்லியம் இன்மை, அறுத்து உறுத்து முழுமையாகப் பேசாமல் நுனி நாக்கில் இருந்து புறப்படும் தமிழ், ர,ற,ல,ள,ழ வேறுபாடு தெரியாத ஒலிபரப்பாளர்கள்,நுனிப்புல் மேய்ந்த படியே ஓடிக்கொண்டிருக்கும் ஒலிபரப்புகள்,மற்றும் விளம்பரங்கள்........

இனியும் என்னென்ன மாற்றங்கள் நிகழுமோ!

அதனால் தெரிந்ததையும் அறிந்ததையும் பதிந்தும் பகிர்ந்தும் கொள்வது ஆரோக்கியமானது தானே? உங்கள் நினைவுகளில் இருந்து ஏதேனும் இதில் கூறப்படாதிருந்தால் அதனை அறியத்தாருங்கள்.

இனி வானொலியின் வரலாறுக்கு வருவோம்.வானொலி பற்றிய என் முதல் ஞாபகம் இது. நான் மிகச் சிறு பிள்ளையாக இருந்த போது பார்த்ததும் கேட்டதும் இதிலிருந்து தான்.பாடல் சம்பந்தமாக சப்பாணி வெட்டி அமர்ந்திருந்து எப்போதாவது அபூர்வமாய் ஒரு பொழுதில் குஞ்சம்மா வீட்டில் ‘கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப் படும் தேடுங்கள் கிடைக்கும் என்றார்...”,” பாடலும் ஈச்சைமரத்து இன்பச் சோலையில்....” பாடலும் இதில் கேட்ட ஞாபகம்.

அதன் பின் இன்னும் சற்றே வளர்ந்த பின் கொழும்பில் இருக்கும் என் பெரிய மாமனார் வீட்டுக்குப் போகும் போது அங்கு இதனைப் பார்த்த ஞாபகம்.கொழும்பும் மாமாவும் ஒரு பெரிய பிம்பமாய் மனதில் விழுந்திருந்த காலம் அது. இரவு படுக்கைக்குப் போவதற்கு முன்னால் இதில் “குங்குமப் பொட்டின் மங்கலம் நெஞ்சம் இரண்டின் சங்கமம்...” பாடலும் கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மைதடவி....” பாடலும் மெல்லியதாக அவர்களின் அறையில் இருந்து வரக் கேட்ட ஞாபகம்.இப்போது எனக்கு சற்றே 9,10 வயதாகி விட்டது என வைத்துக் கொள்ளுங்களேன். இது யாழ்ப்பாணத்தில் என் அம்மம்மா வீட்டில் இருந்த றேடியோ.பெரும்பாலும் அந்தக் காலம் அனேகமானவரின் வீட்டில் இது தான் இருந்திருக்கும் என நம்புகிறேன்.சிப்பிகளால் செய்த உருவங்கள் கொண்ட show case இற்கு மேல் கையால் சிவப்பும் பச்சையுமாய் பூவேலைப்பாடுகள் செய்த தாமரைப்பூ வர்ண விரிப்பின் மேல் கம்பீரமாய் அது அமர்ந்திருந்தது.


இப்போது நான் எங்கள் வீட்டில் இருந்த றேடியோவை அறிமுகப் படுத்தி ஆக வேண்டும். அதற்கு ஒரு சிறு அறிமுகமும் தேவை. என் பெற்றோரின் திருமணத்தின் போது நான் முன்னர் சொன்ன பெரியமாமாவால் திருமணப்பரிசாக அப்பா அம்மாவுக்குப் பரிசளிக்கப் பட்டது அந்த வானொலி. அது இதே தான்.எங்களை விடக் கூடுதலான வயசான அது நெடுங்காலம் சிறப்பாக உழைத்தது.வெள்ளை நிறத்தில் சிவப்பு எழுத்துக்கள் கொண்ட பிளாஸ்டிக் குடுவையில் நீண்ட சிவப்பு மூக்கோடு இருந்த singer oil அதனை மினுமினுப்பாக வைத்திருப்பதில் பெரும் பங்காற்றியது.

இதன் பின்னால் வந்து சேர்ந்தது ரேப் றக்கோடர்.
என் தந்தையாரின் நண்பர் லண்டனில் இருந்து வந்த போது தந்தையாருக்கு மேலே இருக்கிற இதே மாதிரியான ரேப் றக்கோடரைப் பரிசளித்திருந்தார்.அது பிறகு பல ரகங்களிலும் பல திணிசுகளிலும் பல வடிவங்கள் மற்றும் நிறங்களிலும் வந்தன.

இவற்றில் ஏதேனும் ஒன்று உங்கள் வீடுகளையும் அலங்கரித்திருக்கலாம்.

அது பிறகு இளைஞர் யுவதிகளின் மத்தியில் Walkman ஆகப் பரினமித்து மிகப் பிரபலமானது.
கீழே இருக்கும் இவை இக் காலங்களில் பிரபலம் பெற்றிருந்த றேடியோ வகையறாக்கள்.


வானொலிகளின் வரலாறு போராட்ட காலங்களில் டைனமோ சுற்றிக் கேட்கும் வகையில் புதிய வடிவத்தையும் பெற்றுக் கொண்டது.

அதன் பின் CD PLAYER கள் பிரபலம் பெற்றன. அவை தனியாகவும் எல்லாம் சேர்ந்த ஒன்றாகவும் விற்பனைக்கு வந்தன. சீ.டீக்களை இறுவட்டு என்பதா குறுந்தட்டு என்பதா என்றெல்லாம் வாதப் பிரதிவாதங்கள் நடந்தேறின.போர் இடம் பெற்ற பிரதேசங்களிலும் இத்தன்மை இருந்ததா என்று தெரியவில்லை.


பின்னர் அவை முத்திரையின் அளவுகளிலும் MP3,பிறகு கைத்தொலைபேசி கணணி வழியாக எல்லாம் இப்போது கேட்கக் கிட்டுகிறது.
இனி வரும் காலங்களில் அவை எப்படியான வடிவங்களை எடுக்கும் என்று சொல்லத் தெரியவில்லை.

இவை எல்லா நாட்டுக்கும் பொதுவானவையாகவும் இருக்கலாம்.எனினும் வழக்கொழிந்து போய் விட்டதால் நம் நாட்டின் ஒரு காலத்து வாழ்க்கை முறையை சேகரித்து வைக்கும் ஒரு சிறு முயற்சியே இதுவாகும்.

மேலும் இதிலிருக்கிற ஒரு சிறு படம் அல்லது ஒரு சிறு நினைவு நம் இளமைக் கால நினைவுகளை மீட்டுத் தரப் போதுமானவையாகவும் இருக்கலாம்.

உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்!


படங்கள்; நன்றி; கூகுள்
Author: கலை
•7:14 AM

தமிழ் விக்கிப்பீடியா தமிழுக்கான ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம். இதற்கு ஒவ்வொருவரும் பங்களிக்க முடியும். எழுதுவதற்கு நேரமில்லாதவர்கள், தமக்குச் சொந்தமான, தம்மிடமிருக்கும் படங்கள், ஒலிக்கோப்புக்கள், ஒளிக்கோப்புக்களை மட்டுமாவது பதிவேற்றம் செய்து வைக்க முடியும். பதிவேற்றம் செய்வது மிகவும் இலகு. இப்படியான பங்களிப்பை அதிகரிப்பதற்கான ஒரு போட்டிதான் இந்த விக்கி ஊடகப்போட்டி. அனைவரையும் பங்குபற்ற அழைக்கிறேன். இது தொடர்பாக எழுதப்படாத அறிவு என்ற தலைப்பில் நக்கீரன் தமிழ்விக்கிப்பீடியா வலைப்பதிவில் எழுதியிருக்கின்றார். அதனையும் பாருங்கள்.
Author: மணிமேகலா
•4:04 AM


என்ன எல்லாரும் சுகமா இருக்கிறியளோ?

அண்மையில் சிட்னியில் இருக்கும் பிரபலமான கடை ஒன்றுக்குப் போனேன்.

அங்கு,மூங்கிலினால் மிக நேர்த்தியாக வளைத்துச் செய்யப் பட்ட பல வடிவங்களைக் கொண்ட பாத்திரங்கள் வியற்நாம் நாட்டவர்களால் வீட்டுக் கைவினையாகச் செய்து சந்தையிடப் படுகின்றன. மிக இலேசாகவும் வசீகரமாகவும் வடிவமைக்கப் பட்டிருக்கும் அப்பாத்திரங்கள் புழக்கத்துக்கும் சுகமானவை.இலேசானவை.கூடவே மரத்தினால் வடிவமைக்கப் பட்ட கரண்டிகளும் குடுவைகளும் உள்ளன.அது மாத்திரமன்றி ஓலைகளால் இழைக்கப் பட்ட பெட்டிகள்,பல ரகங்களிலும் பல அளவுகளிலும் மூடிகளோடும் வருகின்றன.

இவற்றைப் பார்த்ததும் பழைய நினைவுகள் வந்து விட்டன.இப்போது வாயு,மின்சார அடுப்புகளும் உலோகத்தாலான ஸ்ரிமரும் பாவனைக்கு வந்து விட்டன.பிட்டு அவிப்பது வேலை மினைக்கேடு ஆகி ரெடிமேட் சாப்பாடுகள் வீட்டு மேசைக்கு வர ஆரம்பித்து விட்டன.

இனி ஈழத்து முற்றத்துக்கு யாரும் வந்து முந்தி எப்பிடி நாங்கள் பு(பி)ட்டு அவித்தோம் என்று பார்க்கிற காலம் வரும்.

அதற்காகத் தான் இந்தப் பதிவு.ஏதோ என்னால் முடிந்தது!:)

முன்னர் ஒரு காலம்! இற்றைக்கு 35,40 வருடங்களாவது இருக்கும்!!

அது ஒரு கொண்டாட்ட காலம்! தாயக மண்.போர் மூளாக் காலம்!!

யாழ்ப்பாணத்தில் ஊர் கோயில் திருவிழாக் கொண்டாட்டங்களின் போது என் தாயாரின் தாய் தந்தையரின் வீட்டுக்கு மற்றும் தந்தையாரின் தாய் தந்தையர் வீட்டுக்கு போவது வழமை.திருமணமாகி வெளியூர்களில் வாழ்ந்து கொண்டிருந்த அவர்களின் சகோதர சகோதரிகளின் குடும்பம் ஒன்று கூடும் காலமும் அது தான்.

பலாப்பழம்,வெத்திலைத் தட்டம்,பாக்குரல்,மூக்குப் பேணி,சிவப்பு சீமேந்துத் தரை,பனையோலை,முள்முருக்கு, கட்டித் தொங்க விடப் பட்டிருக்கும் வாழைக்குலை, மற்றும் வெங்காயம்,மாட்டுக் கொட்டில்,மாதுளங்கன்று,கிளி கோதிய மாம்பழம்,விழுந்து கிடக்கும் விளாம்பழம்,புலவு என்று அழைக்கப் படும் தோட்டம்,கற்தறை,அதற்குள்ளும் செழித்து வளர்ந்திருக்கும் புகையிலைத் தோட்டங்கள்,செம்மண்,கிணறு,துலா,நெசவுசாலை,காங்கேசன் துறை சீமேந்துக் கூட்டுத் தாபனத்து விசில் ஓசை,எண்ணை வைத்து வாரி இரட்டை பின்னலோடு திருநீறும் கறுப்புப் பொட்டும் போட்டு வெள்ளைச் சீருடையில் சைக்கிள் ஓடும் மாணவிகள் மற்றும் மாணவர்கள்,இரவு 8.30க்கு காங்கேசன் துறையில் வந்து நிற்கும் யாழ்தேவி ,திருவிழாக்காலங்கள்,வாழையிலைச் சாப்பாடு,தண்னீர் பந்தல்,காப்புகள்,அம்மம்மா குழல்....என்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில நினைவுகள்!

இவற்றில் ஏதேனும் ஒன்று உங்கள் நினைவுகளிலும் நிழலாடக் கூடும்!

அத் திருவிழாக் காலங்களில் வீட்டிலும் திருவிழாத் தான்.மாலை ஆறுமணி அளவில் சமையலறை பக்கமாய் மிக அமளியாய் இருக்கும்.தென்னந்தும்பும் சாம்பலும் கொண்டு விளக்கப் பட்ட வெங்கலப் பானையில் காய்ந்த தென்னம் மட்டைகளாலும் பன்னாடை மற்றும் பனை மட்டைகளாலும் எரிக்கப் படும் அடுப்பில் மருமக்களும் மச்சாள் மார்களுமாகக் குழல் புட்டு/ நீத்துப் பெட்டியில் பிட்டு அவிக்கும் வாசம் தூள் கிழப்பும்.

பிட்டும் தேங்காய் பூவும் தரும் வாசம் என்பதையும் தாண்டி பனை ஓலையால் கூம்பு வடிவில் தயாரிக்கப் படும் நீத்துப் பெட்டிக்கும் மூங்கில் குளாயினால் செய்து பருத்தித் துணி கொண்டு சுற்றப் பட்ட பிட்டுக் குழலினால் அவிக்கப் படும் பிட்டு மீண்டும் பனை ஓலைப் பெட்டிக்குள் கொட்டப் படும்.பிட்டின் வாசமும் தேங்காய்ப்பூ வாசமும்,பனை ஓலையின் வாசமும் சேர்ந்து ஒரு வித வாசம் அந்த வீடு பூரா பரவும்.

அதன் வாசமும் சுவையும் தனி.அதற்கு நல்லெண்னையில் பொரித்த கத்தரிக்காய் பொரியல் மத்தியானத்துக் குழம்பு அல்லது முட்டைப் பொரியல் என்று இப்படி ஏதேனும் இதுந்தால் அது இன்னும் விஷேசம்.

சரி இதற்குப் பொருத்தமா ஏதாவது கூகுளில் படம் ஏதாவது இருக்கிறதா பார்ப்போம் என்று பார்த்தால் மாதேவி என்றொரு சகோதரி பல அரிய - இப்போது பெரும்பாலும் கானக் கிடைக்காத படங்களைப் பதிவேற்றி இருக்கிறார்.(http://maathevi.wordpress.com/)
ஈழத்து முற்றத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதால் நன்றியோடு அவரிடம் இருந்து சில படங்களை இங்கும் காட்சிக்கு வைக்கிறேன்.

படங்களுக்கு மிக்க நன்றி மாதேவி.

இது அரிக்கன் சட்டி.இதனை ஒரு வித தாள லயத்தோடு லாவகமாக ஆட்டி அரிசியில் இருந்து கல்லைக் களைவார்கள்.இது திரிகை.தானியங்களை மாவாக்க தரையிலே (நிலத்திலே) துணி விரித்து நடுவில் இருக்கும் துளையினுள் தானியத்தினைப் போட்டு கரையில் இருக்கும் தடியினைப் பற்றிய படி சுற்றச் சுற்ற தானியம் மாவாகி கீழே கொட்டுண்ணும்.இது அம்மி.இதில் அரைச்சு அரைச்சு அம்மி தேய்ந்து போய் விடும்.அப்போதெல்லாம் அம்மி பொழிவதற்கென்று ஆக்கள் வருவார்கள். அம்மியில் சின்னன் சின்னனாய் நுனி கூரான ஆயுதத்தால் சிறு சிறு பள்ளங்களை உருவாக்கி விடுவார்கள். அதன் பின் இலகுவாக அரைத்து விடலாம். அரைத்துச் சாப்பிடும் சம்பலின் சுவையை மறக்குமா நாக்கு? அதுவும் கருவேப்பிலை வச்சரைச்ச சம்பலும் புட்டும்!!இது கொக்கத் தடி என அழைக்கப் படுவது.உயர இருக்கும் பழங்கள், கெட்டுகளை கைக்குக் கொண்டுவந்து தருவது இது தான்.இது தயிர் கடையிற மத்து.தயிரில் இருந்து வெண்ணையையும் மோரையும் பிரித்தெடுக்கப் பயன் படுவது.உரல்! மறக்க முடியுமா இதை? ’உரல் மாதிரி ஏன் நிக்கிறாய்’ என்று பேசுவதில் இருந்து இதன் மகிமை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.அது மாத்திரமா? அது ஒரு ஜிம் மாதிரி! இயற்கையான எக்சசைஸ்.குறிபாகப் பெண்களுக்கு.அரிசியை நனையப் போட்டு இடிப்பது, மிளகாய் வறுத்து இடிப்பது என்று அதன் பயன் பாடு பல விதத்தில்.பொக்குணி உரல் என்று இன்னொன்று இருக்கிறது.மரத்தால் செய்யப் பட்ட இது இடிச்சு இடிச்சு பள்ளம் விழுந்து போய் இருக்கும்.தோசைக்கு இடிச்ச சம்பல் இதில செய்தா வலு சோக்கா இருக்கும்!அடுப்பு! பறன் மீது அமைந்திருக்கும். பறனுக்கு கீழே விறகும் தென்னம் மட்டைகளும் இருக்கும். போர் காலங்களில் அவசர கால பங்கராகவும் அது பயன் பட்டது. கொங்கிறீற்ரால் அமைக்கப் பட்டது அதற்குக் காரணமாக இருக்கலாம்.சூட்டடுப்பு என்று ஒன்று பெரிய அடுப்புக்கு அருகாக இருக்கும். அதற்கு விறகு வைக்கத் தேவை இல்லை. பெரிய அடுப்பின் பிள்ளை அடுப்பு மாதிரி அது.பெரிய அடுப்பில் இருந்து வரும் நெருப்பும் சூடும் அதற்குப் போதும்.ஆ,..! இது தான் நீத்துப் பெட்டி, மற்றும் இடியப்ப உரல். இதைத் தேடிய போது தான் மாதேவியின் வலைப்பதிவினைக் கண்டடைந்தேன். மீண்டும் நன்றி மாதேவி!இதற்குள் அவிக்கும் புட்டுக்கு தனி வாசம். தனி மகத்துவம்!எங்கட ஊர் பாசையில சொல்லுறதெண்டா, ‘சொல்லி வேலையில்லை’பாக்கு வெட்டி! பாக்கு வெட்ட!!இப்ப காணக் கிடைக்குமோ தெரியாது!குறிப்பா வெளிநாட்டில பிறந்த தமிழ் பிள்ளையளுக்கு கட்டாயம் இது ஒரு புதினமாத்தான் இருக்கும்!சட்டியும் அகப்பையும்! களிமண்ணில் செய்து சுட்டெடுத்த சட்டி!தேங்காய் துருவிய சிரட்டையில் செதுக்கித் துளையிட்டு தடியினைச் சீவி உள் நுளைத்து செம்மையுறச் செய்யப் பட்ட அகப்பை!! நெருப்படுப்பில் சமையல்!! - அது ஒரு காலம்! இயற்கையோடு இசைவுற வாழ்ந்த கடந்த நூற்றாண்டு!
காம்புச் சத்தகம்! இது வால்புறம் கூராக இருக்கும்.பெட்டி இளைக்கப் பயன் படுவது.ஓலை வார, மற்றும் இளைக்கப் பட்ட பெட்டிக்குள் ஓலையை செலுத்த ஓலையை பக்கவாட்டுக்கு கூராக வெட்டவும் அது சமயத்துக்குப் பயன் படும்.மேலும் கூரான பகுதி துளையிட்டு ஈர்க்கில் சொருகப் பயன் படும்.ஆட்டுக் கல்! வேறையென்ன தோசைக்கு அரைக்கத் தான். தோசைக்கு இட்லிக்கு மாவாட்ட!கருங்கல்லு மேட்.இப்ப கிறைண்டர் வந்து விட்டதால் இதுவும் இனி மியூசியம் குவாலிட்டி!!சுளகும் இடியப்பத் தட்டும்! சுளகு அரிசியில் இருந்து நெல்லை வேறாக்க,தானியங்களில் இருந்து குறுணிகளை, மேலும் கஞ்சல்களை வேறாக்க என்று பலதுக்கும் பயன் படுவது.அதனை பயன் படுத்துவதிலும் ஒரு லாவகம் இருக்கும்.’தனக்குத் தனக்கெண்டா சுளகு படக்கு படக்கெண்டு அடிக்குமாம்’ என்று ஒரு பழமொழி ஈழத்தில் வழக்கில் இருந்தது. கடசி வரைக்கும் அந்த லாவகம் எனக்கு கைவரவே இல்லை என்பது ஒரு தனிப்பட்ட சோகம்.

இடியப்பத் தட்டு மூங்கில் நார்களினால் பின்னப் படுபவை. பின் நாட்களில் அவை வெள்ளை நிறப் பிளாஸ்டிக்கிலும் வந்த ஞாபகம்.இப்போது இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. அந் நாட்களில் கதிரைகளும் இந் நார்களினால் பின்னப் படுபவையே!திருவலகை! இது தான் சமையலறை நாயகன்.இல்லை, நாயகி.இதில இருந்து முழுத் தேங்காயும் துருவி எடுத்து முதல் பால், இரண்டாம் பால், கப்பிப் பால் என்று பிறிம்பாக எடுத்து வைத்து விட்டால் ஊர் சமையலில் பாதி வேலை முடிந்ததற்குச் சமன். இப்ப இங்கு தாய் லாந்தில் இருந்து ரின்னில் தேங்காய் பால் வருகிறது.குறைந்த விலையில் கிடைக்கவும் செய்கிறது.என்றாலும் யாரும் அதில் சமைப்பதில்லை!!வெத்திலத் தட்டம்!வெத்திலை வைக்கப் பயன் படுவது.யாரும் வீட்டுக்கு வந்தால் முதலில் நீட்டப் படுவது. மணியாச்சியின்ர பேவரிட்.இதுவும் மாதேவியின்ர வலைப் பக்கத்தில் தான் இருந்தது.வெத்திலைத் தட்டத்திற்கு அருகில் இருப்பதை பூட்டுச் செம்பு எண்டு எழுதி இருக்கிறா.அது வெத்திலையை ஸ்ரொக் பண்ணுற சாமானா இருக்கலாம்.ஆரும் தெரிஞ்சா சொல்லுங்கோ என்னெண்டு! மணியாச்சிக்கே தெரியேல்ல எண்டா பாருங்கோவன்! என்னென்ன சாமானெல்லாம் ஊரில புழக்கத்தில இருந்திருக்கு!!இதுக்குப் பேர் விசிறி. பனையோலையில செய்யிறது.வெய்யில் காலத்தில விசுக்கிறது.இப்ப நீங்கள் பதிவ வாசிச்சும் நல்லாக் களைச்சுப் போயிருப்பியள். அவ்வளவு நீட்டாப் போச்சுது.

விசிறி வேணுமோ?


விசேட நன்றி;மாதேவி.
(http://maathevi.wordpress.com/)