Author: தமிழ் மதுரம்
•10:31 AM
தொடர்பாடல் என்பது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் கருத்துக்களை மேம்படுத்தவும் பயன்படுகின்ற ஒரு வழியாகும். இன்றய நவீன் விஞ்ஞான திழில் நுட்ப உலகின் வளர்ச்சியினால் தொடர்பாடல் சாதனங்கள் பல்கிப் பெருகியுள்ளதோடு நவீன முறைகளிலும் இப்போது உலகெங்கும் கிடைக்கின்றது எனலாம்.
இலங்கைத் திரு நாட்டின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணம் எனும் பகுதி இப்பொழுது வசந்தம் வீசிக் கொண்டிருப்பதாக எல்லோராலும் சொல்லப்படுகிறது. இந்த யாழ்ப்பாணம் இருண்டு போயிருந்த காலப் பகுதியில் மின்சார வசதிகளை அனுபவியாமலும் ரெலிபோன் என்றால் என்னவென்று தொட்டுப் பார்த்தறியாமலும் நாங்கள் வாழ்ந்திருந்தோம் என்றால் யாரும் மறுத்துரைக்க மாட்டீர்கள் தானே? இதற்கு எடுத்துக் காட்டாக 1990 களின் பிற் பகுதியினைக் குறிப்பிடலாம். நானும் என் சக வயதையொத்த நண்பர்களும், ஏன் 1987களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் பிற்ந்த அனைவரும் புகையிரதத்தைப் புத்தகத்தில் மட்டுமே பார்த்து வாழ்ந்து கொண்டிருந்த காலப்பகுதியது.

ரூ.... ரூ...நகுலன்.... ஓவர்.... ஓவர்...
ஓமோம்.. ரூ.. ரூ.... செல்வன் ஓவர் ஓவர்... என்று எங்கட அண்ணயாக்கள் வோக்கி ரோக்கி மூலம் கதைத்ததைப் பார்த்ததாக ஞாபகம். இதனை அடிப்படையாகக் கொண்டு எங்களூரில் கிடத்தற்கரிய பொருளாக இருந்த தீப் பெட்டியை வைத்து ரெலிபோன் உருவாக்கிப் பேசியவர்கள் நாங்கள். இரண்டு தீப் பெட்டிகளை எடுத்து அதன் உள்ளுடனாக இருக்கும் வெள்ளைப்பெட்டியினுள் செப்புக் கம்பி அல்லது வயரினுள் வருகின்ற மெல்லிய (தண்ணிக்) கம்பியினை எடுத்து அதனைத் தீப் பெட்டிக்குள் செருகி விட்டு ந்ண்பர்கள் இருவர் சேர்ந்து ஒருவர் ஒரு பக்கத்திலும் மற்றயவர் இன்னொரு பக்கத்திலுமாக நின்று கதைத்து எமது சிறு பராயத்தைக் கழித்த காலமதுவென்று கூறலாம்.எங்களூரின் வசந்தமும் எங்களின் வசந்தகாலமும் இப்படித்தான் ஆரம்பமாகியது.பின்னர் அண்ணயாக்கள் அனைத்துலக தொலைத்தொடர்பு சேவையினை ஆரம்பித்தார்கள். அச் சேவையானது அன்றைய காலப் பகுதியில் எங்கள் மக்களின் பொருளாதார சூழ்நிலைக்கேற்ப எட்டாக் கனியாகவே இருந்தது. ஒரு நிமிடத்திற்கு 300 ரூபாக்கள் முதல் 600 ரூபாக்கள் வரை அண்ணையாக்கள் பணம் அறவிட்டதாக கூறுவார்கள். இதனைவிட அப்போதைய கருத்துச் சுதந்திரமாக என்ன பேசினாலும் திறந்த வெளியில் அனைவர் முன்னிலையிலேயே பேச வேண்டுமென்பது அண்ணயாக்களின் விதி முறையாக இருந்தது. இதற்கு அவர்கள் கூறும் சாட்டு பூட்டிய கூண்டிற்குள் நின்று தொலைபேசியில் பேசினால் இராணுவ ரகசியங்கள் புலனாய்வுத்தகவல்கள் இலகுவாக எதிரணிப் படைகளுடன் பரிமாறப்பட்டுவிடும் என்பதாகும்.
யாழ்ப்பாணக் குடாநாடு இராணுவத்தின் வசமான பின்னர் மெது மெதுவாக செம்மணிப் புதைகுழிகளை மூடி மறைக்கும் நோக்கிலும் வசதி வாய்ப்புகளை மக்களுக்கு அறிமுகப்படுத்திப் போராட்ட ஆதரவினையும் பற்றுதியையும் திசை திருப்பும் நோக்கிலும் தொலைபேசி மின்சாரம் என்பன 1996ம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் ஒரு சில பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணக் குடா நாட்டில் srilanka telecom நிறுவனத்தினர் முதன் முதலாக தொலைத் தொடர்புப் பரிவர்த்தனைக் கோபுரம் அமைத்து தமது சேவையினை ஆரம்பித்தார்கள். அப்போதைய சூழலுக்கமைவாக அச் சேவைகள் பெரும்பாலும் நகர்ப்புறத்தை அண்டி வாழ்பவர்களுக்கே கிடைக்கக் கூடியதாகவிருந்தன.எங்கள் ஊரிலிருந்தும் சரி யாழ்ப்பாணத்தின் பிற கிராமப்பகுதிகளிலிருந்தும் சரி வெளிநாட்டில் உள்ள தமது உறவுகளுடன் கதைக்க வேண்டுமாக இருந்தால் 1996ம் ஆண்டில் யாழ் நகரிற்குத் தான் செல்ல வேண்டும். இரவில் யாழ் நகரப் பகுதியிலுள்ள தொலைத் தொடர்பகத்திற்குச் சென்று தங்கியிருந்து மேலைத்தேய நாடுகளிலுள்ள தமது உறவுகளுடன் உரையாடிவிட்டுப் பின்னர் மறுநாள் வீடு வரும் உறவுகளையும் நான் கண்டிருக்கின்றேன். இரவில் ஊரடங்குச் சட்டம் என்பதால் வீடு திரும்ப முடியாத நிலமைகூடத் தொடர்பாடலுக்குச் சிக்கல் ஏற்படுத்தியது என்றால் பாருங்களேன்.
1997களின் பிற் பகுதிகளில் யாழ்ப்பாணப் பண்ணைப் பாலத்திற்கு அண்மையாக அமைக்கப்பட்ட தொலைத்தொடர்புக் கோபுரம் மீளத் திருத்தியமைக்கப்பட்டு தொலைபேசிச் சேவைகள் விஸ்தரிக்கப்படுகின்றன. இதன் மூலம் ஊருக்கொரு ரெலிபோன்கடை(கொமினிகேசன்)முளைக்கத் தொடங்குகின்றது. இக் காலப் பகுதியில் இருபத்தி நான்கு மணி நேர மின்சாரம் யாழ் குடா நாட்டிலுள்ள மக்களுக்கு வழங்கப்படவில்லை என்பதால், இந்தத் தொலைபேசிகள் யாவும் சூரிய ஒளியில் செயற்படும் மின்கலத்தை (solar System) அடிப்படையாக வைத்தே இயங்கத் தொடங்கின்றன. வெளிநாட்டிற்கு ஒரு அழைப்பினை மேற்கொள்வதென்றால் ஐரோப்பிய நாட்டிற்கு ஒரு கட்டணமும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பிறிதொரு கட்டணமும் கையடக்கத் தொலைபேசிகளுக்கு வேறொரு கட்டணமுமாக தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தினர் அறவிட்டார்கள். இதனை விட உள் வரும் அழைப்புக்களுக்கு நிமிடத்திற்கு 8ரூபாவினை அறவிட்ட தொலைத் தொடர்பகங்கள் பின்னர் நிமிடத்திற்கு 5 ரூபாவினை அறவிட்டுத் தற்போது நான்கு ரூபாவினை நிமிடத்திற்கு அறவிடுகின்றன.

சமாதான காலப்பகுதி என்பது யுத்தமற்ற ஒரு பெருவாழ்வினையும் தமிழ் மக்களுக்கென்று தனியானதொரு தீர்வினையும் தருவதற்காகப் பிறந்த காலப் பகுதி என்று நாம் எல்லோரும் நம்பிய காலப்பகுதியாகும். 2002ம் ஆண்டில் A9 நெடுஞ்சாலை திறக்கப்பட்டபின்னர் கையடக்கத் தொலைபேசி நிறுவனங்கள் யாழ்ப்பாணத்திலும் நிறுவப்பட்டன. யாழ் குடாநாட்டில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்த கையடக்கத் தொலைபேசி நிறுவனமாக Dialog Gsm நிறுவனத்தினைக் குறிப்பிடலாம். அதன் பின்னர் Mobitel எனும் நிறுவனமும் தனது கிளையினைப் பரப்பத் தொடங்குகிறது. இன்று சி.டீ.எம்.ஏ (CDMA) போன்ற தொழில் நுட்பம் வாய்ந்த தொலைபேசிகளும் எமது யாழ் குடா நாட்டில் அறிமுகமாகிவிட்டன.

எம்மவர்களின் தொலைபேசித் தொடர்பாடல் முறைசற்று வித்தியாசமானது என்றே கூறலாம். ஆரம்பகாலத்தில் எமது யாழ்ப்பாணத் தொலைத்தொடர்பு நிலையங்களில் கதைக்கும் எம்மவர்கள் கண்ணாடிக் கூண்டிற்குள் நின்றபடி கைகளையெல்லாம் அசைத்துக் கதைப்பதனைக் கண்டிருக்கின்றேன். ஒருவர்
’’ஓம் தம்பி சொல்லடா. நான் ஏதோ இருக்கிறேன். பொயிலைக்கண்டு ராசா இப்ப இந்தளவுக்கு வளந்திட்டுது (இப்படித் தனது கைகளைக் காட்டி அவர் சொல்வது அவர் மகனுக்குத் தெரியுமோ தெரியாது) வாற மாசம் வெட்டப் போறன். உனக்கொரு பொம்பிளை பார்த்திருக்கிறன் ராசா வடிவெண்டா நல்ல வடிவுதான். இஞ்ச பாரன். எனக்கு முன்னால நிக்கிற பொட்டமாதிரி இருக்கும்’’ என்று கூறினார்.
மகனுக்கு இதைக் கேட்டதும் புரையேறியிருக்கும்.மகன் பதிலுக்கு என்ன கேட்டிருப்பார் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.
இனி எங்கள் இளசுகளின் தொலைபேசி உரையாடலினைப் பார்ப்போம். இளசுகளின் கைகளில் கையடக்கத் தொலைபேசிகள் புழங்கத்தொடங்கியபோது பெரும்பாலும் வசதியுள்ள இளசுகளே கையடக்கத் தொலைபேசிகளை அதிகளவில் பாவிக்கத் தொடங்கியிருந்தார்கள்.ஒரு சிலர் தங்களுடைய தொலைபேசிக்குத் தாங்களே ஒலியினை (Alaram Set பண்ணி ஒலியெழுப்புதல்) வைத்துப் பொது இடங்களில் தங்களுக்கு தொலைபேசியழைப்பு வந்தது போன்று பேசிக் கலர் காட்டு வதனையும் நாம் கண்டிருக்கிறோம். ஒருவர் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நிற்பார். திடீரென அவரது தொலைபேசி மணி அடிக்கத் தொடங்கும். மன்னிக்கவும் அவரது தொலைபேசியின் Alaram அடிக்கத்தொடங்கும். அவர் தனக்குத் தொலைபேசிவந்ததுபோல் பேசத்தொடங்குவார். அவரது றீலினைக் கண்டுபிடித்ததும் அவரது நண்பர்களெல்லாம் கலர் காட்டுறான் ஆள் என்று ந்க்கலடிப்பார்கள். சிலரிடம் தொலைபேசியிருக்கும் ஆனால் சிம் காட்டோ இல்லையென்றால் தொலைபேசியில் பேசுவதற்குரிய காசோ இருக்காது.ஆனால் எம்மவர்கள் சளைக்காது பேசுவார்கள் என்றால் பாருங்களேன்.

ஒரு சிலர் பேரூந்தின் பின் பகுதியில் நின்று தொலை பேசியில் பேசினார்களென்றால் பேரூந்தின் முன் பகுதியில் நிற்பவர்களுக்குக் கூட அவரது பேச்சுத் தொனி கேட்கும் என்றால் சொல்லவா வேணும்? எம்வரில் ஒருவர் தனது மாட்டினை எப்படிக் கண்டு பிடித்தார் என்று தெரியுமா?
எங்களூரில் சிவராசா என்றொரு விவசாயி தனது மாட்டினைத் தொலைத்து விட்டார். விடா முயற்சியுடன் தேடியும் மாடு சிக்கவில்லை என்பதால் சிவராசா தனது மனைவியிடம் ’’என்ரை கூட்டாளி பக்கத்து ஊரிலை இருக்கிறான். அவனிட்டை ஒருக்கால் போன் பண்ணிக் கேளன் என்று சொல்லியிருக்கிறார். அவரது மனைவியும் போனைப் போட்டிருக்கிறா. போனைப் போட்டதும் ‘’ஒப அமத்துவன்ன சந்தி கலன கட்ட. கருணாகரப் பசுவ அமத்தன்ன’’ என்று சொல்லியிருக்கிறது. உடனே தொலை பேசித் தொடர்பினைத் துண்டித்த சிவராசாவின் மனையியோ பதறியடித்தபடி
‘’ இஞ்சாருங்கோ இஞ்சாருங்கோ... சிவராசாவின்ரை மகள் கதைச்சவா. உங்கடை கூட்டாளி கருணாகரண்ணை பசுவை அமத்திப் பிடிச்சிருக்கிறாராம். வாங்கோ மாடு ஓட முதல் பிடிச்சருவம் என்று கூறியிருக்கிறா. இப்படியும் எம்மவர்கள் தொலைபேசியில் போட்டுத் தாக்கியிருக்கிறார்கள் என்றால் பாருங்களேன்.
எங்கடை ஊரிலை உள்ள வயசு போனா ஆட்களிடம் ரெலிபோன் மாட்டி விட்டால் போதும். ஹலோ உதார் கதைக்கிறது? என்று தொடங்கித் தங்கள இளமைக் கால நினைவுகள் வரைக்கும் கதைத்துத் தான் ரெலிபோனை வைப்பார்கள். எங்கோ ஒரு கதையில் வாசித்ததாக ஞாபகம். யாழ்ப்பாணத்திலுள்ள பாட்டியொருவர் ரெலிபோனைக் கூப்பிடுவான் என்று அழைத்ததாக விளிக்கப்பட்டிருந்தது. கூப்பிடுவான் கூப்பிடுறான் என்றால் அவாவின் மொழியில் ரெலிபோன் அடிக்கிறது. ஓடிப் போய் எடுங்கோ என்று அர்த்தமாம்.செய்மதி மூலம் இயங்கும் தொலைபேசிகளும் எங்களூரில் அறிமுகமாகியிருந்தன. இவற்றினைக் குறிப்பிட்ட ஒரு சாரார் மட்டுமே பயன்படுத்தினார்கள். ஒரு நாள் ஓமந்தைச் சோதனைச் சாவடியில் இராணுவ வீரர்களின் மலசல கூடத்திற்குள் இருந்து தொலை பேசி உரையாடல் கேட்டதாம். உசாரடைந்த இராணுவ வீரர்கள் கையும் களவுமாக விடுதலைப் புலிகளுக்குச் செய்மதித் தொலை பேசி மூலம் தகவல் வழங்கிய இராணுவ உளவாளியினைப் பிடித்ததா தகவல்கள் வெளியாகின. விடுதலைப் புலிகளின் இராணுவ இரகசியங்களும் இந்தச் செய்மதித் தொலை பேசி மூலம் இலங்கை இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
தொலைபேசி.. இதனை நாம் தொல்லை பேசியாக மாற்றாது விட்டால் நன்று.
Author: தாருகாசினி
•10:36 PM
Author: கானா பிரபா
•4:58 AM

"உன்னாணை சொல்லுறன் கேளடி, உவன் பேசாமப் பறையாமைத் தான் போயிட்டான்"

"என்னானை நீ அந்த வீட்டுப் படி மிதிக்கக் கூடாது சொல்லிப் போட்டன்"

"அம்மாவாணை நான் அங்கை இனிப் போக மாட்டன்"

மேற்கண்ட வாக்கியங்களில் தொக்கி நிற்பது "ஆணை" என்ற பதமாகும். ஒருவர் தன்னை முழுதும் நம்பும் படியாகச் சத்தியம் செய்வதையே "ஆணை" என்ற பதத்தினை இணைத்து முன் சொன்னவாறு ஈழப் பேச்சு வழக்கில் புழக்கத்த்இல் இருக்கும்.

"நிசமாத்தான் சொல்றேன்" என்ற தமிழக வழக்கினையே ஈழமொழிவழக்கில் "உன்னாணைச் சொல்லுறன்"போன்ற சொற்களை இணைத்துப் பாவிப்பது வழக்கம்.

பொதுவாக ஒருவர் சத்தியம் செய்தால் அதை மீறக்கூடாது, மீறினால் ஆண்டவன் தண்டனை கொடுப்பான் என்பது ஒரு விதமான நம்பிக்கை. அதையே தாய், தந்தை விசேஷமான ஆயுதமாகப் பாவித்து "என்னாணை", "அம்மாவாணை" என்று இணைத்துச் சொன்னால் அதற்கு மீறி ஒன்றும் செய்ய முடியாத நிலை தான் ;). அந்தச் சத்தியத்தை முறிக்க வேண்டும் என்றால் குறித்த அந்தப் பெரியவர் "ஆணை விட்டுட்டன்" என்று சொல்ல வேண்டும். இப்படியான வேடிக்கையான வழமையை ஈழத்தில் இன்றும் காணலாம். தமிழகத்தில் இப்படியான நிலை இருக்கிறதா என்ன?

"அம்மாவாணை நீ படம் பார்க்கப் போகக்கூடாது"
"என்ரை அம்மாவெல்லே, ஆணை விடணை ஆணை விடு"
Author: மணிமேகலா
•5:40 PM

மோனை, மோனை, மோனை முருகேசு!

என்னெணை?

கோடிப்புறத்தைக் கூட்டிக் கொண்டு நின்ற முருகேசு ஓங்கிக் குரல் கொடுத்தான்.

உவள் சினேகிதி அங்கனேக்க இங்கணேக்க நிக்கிறாளே? நாற்சார வீட்டின் உட்புறத் திண்ணையில் கால் நீட்டி இருந்தபடி முன்னர் பாவித்த சிக்கன லாம்பில் சுருட்டைப் பற்ற வைத்துப் பொக் பொக்கென்று இழுத்த படி மணியாச்சி கேட்கிறாள்.

நடு முற்றத்தில் இப்போது பொழுது புலருவது நன்றாகத் தெரிகிறது.அந்தக் கருக்கல் பொழுதும் காவோலைகளின் சரசரப்புச் சத்தமும்,குயிலின் குரலும்,யாரோ முதல் நாள் கட்டிவிட்ட பட்டத்தின் விண் கூவும் ஒலியும் கலந்த ஒரு காலை அது.

அங்கால இங்கால திரும்பிப் பார்த்து விட்டு கிணற்றடியில் தண்ணி அள்ளிக் கொண்டிருந்த சினேகிதியைப் பார்த்து 'ஆச்சி தேடுறா பிள்ளை' என்று முருகேசு சொல்வது துல்லியமாகக் கேட்கிறது.

அவளுக்கும் பேச்சுக் கால் துடங்கி விட்டுது.வெளி நாட்டு மாப்பிள்ள போல கிடக்கு.பெரும்பாலும் சரி வரும் போலத் தான் கிடக்குது. லக்ஷ்மி வாசா எண்டு பேர் வச்சு இந்த வீட்டைக் கட்டினதே அவளுக்காகத் தான்.அவளும் போயிட்டா ஆச்சி பாடு தான் கஸ்டமாப் போப்போகுது.அடிக்கொருக்கா கையுக்கை நிண்ட பிள்ளை.மூத்த பேத்தி.கூப்பிட்ட உடன முகஞ்சுழிக்காமல் ஓடி வாற பிள்ளை.வலு கெட்டிக் காறி.இங்கனேக்க அவளுக்குத் தோதா ஆர் இருக்கினம்? பிரையாசையான கமக்காறப் பொடியன் ஒண்டு தேடி வந்தது. அவள் வேண்டாம் எண்டிட்டாள்.இப்ப எல்லாப் பொடியளும் வெளி நாடெண்டு ஓடி விட்டாங்கள்.அயல் அண்டைக்கே பாருங்கோவன் எண்டு மோனுட்டச் சொன்னா என்னில ஏறி விழுறான்.

'பேசாமல் கிடவணை உனக்கென்ன தெரியும்' எண்ணுறான்.

முகம் கை காலக் கழுவி விட்டு வந்த சினேகிதி 'ஆச்சி குடியணை' என்று மூக்குப் போணிக்குள் கோப்பி கொண்டு வந்து நீட்டினாள். அதற்கிடையில் அடுப்பு மூட்டி தண்ணி வச்சு மாட்டில பாலெடுத்துக் கோப்பியும் போட்டிட்டாள்.

ஆச்சிக்கு முன்னால அவள் வரேக்கை பொழுது நல்லா வெளிச்சிட்டுது. முகம் கழுவி பளீச்சென்றிருந்தாள்.நீளமான பட்டுப் போன்ற கூந்தலைச் சீவித் தளர்வாக முடிந்திருந்தாள். இயல்பான கருமையிலும் சுருள் இல்லாத தன்மையாலும் அது காதில் பாதியை இயல்பாக மறைத்த வாறிருந்தது.மாசு மறுவில்லாத சந்திரனைப் போன்ற வட்ட முகத்தில் திருநீறு துலங்கிற்று.நல்ல கடும் சாயம் கலந்த பால் தேத்தண்ணி நிறம். சோளன் பொத்திக்குள் இருக்கும் நிரை நிரையான முத்துக்களைப் போல அடுக்கி வைத்த பற்கள்.தீட்சன்யமான கண்கள்.சற்றே கட்டையான தோற்றம்.கையும் காலும் எலும்புகள் தெரியாமல் மொழு மொழுவென்று இருந்தன.சீராகவும் சுத்தமாகவும் நகம் வெட்டப் பட்டிருந்தது.அரைப் பாவாடை சட்டை போட்டிருந்தாள்.ஏ.எல் ஓட பள்ளிக் கூடத்த விட்டிட்டாள்.

ஆனா பாய் பின்னுறது, ஓலை பின்னுறது, தையல் வேலை,வீட்டுச் சோடினை,தண்ணி அள்ளுறது, வீட்டு வேலை,எண்டு ஓய்ச்சல் ஒழிச்சல் இல்லாமல் இருப்பாள்.றேடியோ அவளுக்கு 24 மணி நேரமும் பாடிக் கொண்டிருக்க வேணும்.பக்கத்து வீடுகளோடையும் வலு வாரப்பாடு.முகஞ்சுழிக்கத் தெரியாத சுறுசுறுப்பான பெண்.வலு சிக்கனக் காறி.குடும்பத்துக்கேற்ற குத்துவிளக்கு.இயல்பான யாழ்ப்பாணத்து வளர்ப்பு முறை அவளில் சிறப்பாக சுவறிப் போயிருந்தது.
.
முன் வளவு, பின் வளவு கூட்டி முடித்துக் கால் முகம் கழுவிக்கொண்டு வந்த முருகேசு மீண்டும் 'அப்பனே முருகா' என்றவாறு திருநீறு பூசுகிறான்.அதிகாலையில் எழுந்து விடும் பழக்கம் உள்ளவன் அவன்.படுக்கையை விட்டு எழும்பும் போதும் இவ்வாறு கூறிக்கொண்டு எழும்புவது தான் அவன் வழக்கம்.படுக்கப் போகும் போது மட்டும் நீட்டி முழக்கி அவன் சொல்லும் 'அப்பனே முருகா, குருநாதா, வேலவனே நீ தான் துணை' என்பது குடும்ப அங்கத்தவர் எல்லோருக்கும் தண்ணி பட்ட பாடம்.

உப்பிடித் தான் ஆச்சியின்ர கடசி மகனிண்ட பேரன் அஞ்சு வயசு வந்தி கொழும்பில இருந்து மாவிட்டபுரம் கோயில் திருவிழாவுக்கு குடும்பத்தோட வந்து நிக்கிற காலத்தில, முருகேசு படுக்க பாய் விரிச்சு சாயத் தொடங்க முதல் வந்தி முந்தி விடுவான்.அப்ப மட்டும் சிரிச்சுக் கொண்டு ஒண்டும் சொல்லாமல் முருகேசு படுத்திடும்.பாவம் நல்லதொரு மனுசன். கனக்கக் கதையாது.கள்ளுக் குடிக்க மட்டும் காசுக்கு வந்து காதைச் சொறிஞ்சு கொண்டு நிக்கும்.எங்கட வீட்டு சுக துக்கம், நன்மை தீமை,ஏற்ற இறக்கம் எல்லாம் கண்டு பழகின மனுசன்.

போக்கிடம் இல்லாமல் வந்து சேந்ததெல்லே! இப்ப கிட்டத் தட்ட 20,25 வருசமாகுது. அந்த மனுசனால எங்களுக்கு எவ்வளவு உதவி!வீட்டு வேலை,கமத்துக்குப் போறது,ஓலை வெட்டுறது, பனையோலை கிழிக்கிறது, கிடுகு பின்னுறது,மாடு அவிட்டுக் கட்டிறது,சங்கக் கடைக்குப் போறது,தொட்டாட்ட வேலையள் எண்டு சொல்லாமலே எல்லாத்தையும் செய்து போடும்.

இப்படித்தான் மிகச் சாதாரணமாகத் தொடங்கிற்று அவர்களின் காலை.இனித் தான் கொண்டாட்டம் எல்லாம்.

இன்று புது வருஷம்.இண்டைக்குத் திகதி 14.04.2010.
விகிர்த்தி ஆண்டு, சித்திரைத் திங்கள்,முதலாம் நாள்.அருஞ்சொல் விளக்கம்;

மோனை; மகனே
கோடிப் புறம்; வீட்டின் பின்புறம்
அங்கனேக்க; அந்தப் பக்கம்
இங்கனேக்க; இந்தப் பக்கம்
சிக்கன லாம்பு; போர்க்காலத்தில் மின் குமிழால் செய்யப்பட்ட லாம்பு
கருக்கல் பொழுது; இரவும் காலையும் சந்திக்கும் நேரம்
காவோலை; விழத் தயாரக இருக்கும் முதிர்ந்த பனையோலை.
அங்காலை;தனக்கு அந்தப் பக்கமாக
இங்கால; தனக்கு இந்தப் பக்கமாக
பேச்சுக் கால்; திருமணப் பேச்சுவார்த்தை
அடிக்கொருக்கா;அடிக்கடி
வலு கெட்டிக் காறி; மிகக் கெட்டிக்காறி
தோதா; சரியாக
அயல் அண்டை; அக்கம் பக்கம்
வாரப்பாடு; கொண்டாட்டம்/நட்புறவு
கமம்; விவசாயத் தோட்டம்
சுவறி; ஊறி
சோடினை; அலங்காரம்
பிரையாசை; முயற்சி.
Author: கலை
•1:41 PM
* ”அண்ணை! துலைக்கோ போறியள்?”, “துலைக்கோ போட்டு வாறியள்”, இதில 'துலை' என்பது ‘தொலை தூரம்' எண்டதில இருந்து வந்திருக்கும் என நினைக்கிறேன்.

* "கண்டு கனகாலம்”. இதுல ‘கனகாலம்' என்பது அதிக காலம் என்பதைக் கூறிக்குது. 'கனக்க' நிறைய/அதிக என்றாகிறது. “இதையும் கொண்டு போங்கோ. இங்க கனக்கக் கிடக்கு”. 'கனக்க' என்பது ‘கனதியான' எண்டதில இருந்து வந்திருக்குமோ?

* ”எப்ப கொழும்பாலை வந்தனீங்கள்? நல்லா வயக்கெட்டுப் போனியள்”. இதுல வயக்கெட்டு எண்டது, 'மெலிந்து' எண்டதைக் குறிக்குது. 'வயக்கெட்டு' எண்டது ‘வயசு கெட்டு' எண்ட அர்த்ததி்ல வருமோ? வயசு போனால் மெலிந்து சோர்வது இயல்புதானே என்பதால் இருக்கலாம்.
Author: கானா பிரபா
•1:26 AM
"வெள்ளென எழும்பி இறைப்புக்குக் போக வேணும்" இது கிராமப்புறங்களில் சரளமாகப் பாவிக்கும் ஒரு உரையாடல் வாக்கியம். இங்கே வெள்ளென என்பது சீக்கிரமாக, வேகமாக போன்ற பதங்களின் ஒத்த சொல்லாக அமைகின்றது. வெள்ளென என்பது எவ்வளவு தூரம் தமிழக மொழிவழக்கில் புழக்கத்தில் இருக்கின்றது என்று தெரியவில்லை. ஆனால் ஈழத்தில் இந்தச் சொல் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. (கிழக்கு) வெளுப்பானதும் என்பது மருவி வெள்ளென என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நினைக்கின்றேன். வெள்ளென என்பதை எழுத்து வழக்கில் பயன்படுத்துவது மிகக்குறைவு அல்லது இல்லை என்றே சொல்லலாம்.

வெள்ளென என்பதைப் பற்றிப் பேசும் போது "வெள்ளாமை" என்பதைப் பற்றியும் பேசாமல் இருக்க முடியவில்லை. வேளாண்மை என்பது விவசாயம் செய்வது என்பதன் பொருளாக அமைவது எல்லோருக்கும் தெரியும். இந்த வேளாண்மை என்பதைப் பேச்சு வழக்கில் வெள்ளாமை என்பதாகப் பாவிப்பதும் ஈழத்துப் பேச்சுவழக்கில் அவதானிக்கக் கூடியதொன்று.

காலைநேரம் என்பதை ஈழத்துப் பிரதேசத்துப் பேச்சு வழக்கில் "காலமை" என்று தான் அதிகம் பயன்படுத்துவார்கள். மூலச் சொல்லில் இருந்து விலகி "மை" என்ற எழுத்தையும் இணைத்ததான இந்த காலமை என்ற பதம் எப்படிவந்தது என்று தெரியவில்லை. "காலையில் தினமும் கண் விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா" என்பதை "காலமை தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா" என்று பாடினாலும் சந்தம் கச்சிதமாகப் பொருந்துகிறது இல்லையா?

Picture: Dushiyanthini Kanagasabapathipillai
Author: `மழை` ஷ்ரேயா(Shreya)
•11:08 AM
ஊரிலே சொல்லுவார்கள்.. "கார் மோதி ஆள் சரியாம்".

இதைக் கேள்விப்பட்டிருப்பீங்க:
ஓர் ஊரில ஒரு நரியாம்.. அதோட கதை சரியாம்.

நரி இருந்துது, அத்துடன் கதையும் முடிந்தது. இதுதான் எங்களுக்குத் தெரிந்த பொருள். இதுக்கு நீட்டி முழக்கின பொருள்:
ஓர் ஊரில நிறைய்ய்ய்ய்ய்ய நாளா ஒரு நரி இருந்திச்சாம்.. (அப்பிடி நிறைய நாளா இருந்து இருந்து வயது போனதால) நரியின் கதை சரியாம்". அதாவது நரி இறந்து விட்டதாம்.

அதேமாதிரித்தான் முதல் வசனத்துக்கும் பொருள்: "ஆள் சரியாம்" என்றால் ஆள் இறந்துவிட்டார் என்று பொருள்.