வைரவர் கோயிலுக்குப் படையல் செய்யும் மும்முரத்தில் அம்மா அடுக்களையில் இருக்கிறார். மெல்லப் போய்ப் பார்த்தால் ஒரு பெரிய அலுமினியப்பாத்திரத்துக்குள் ஏதோ கிண்டிக் கொண்டிருந்தார். அந்தப் பாத்திரத்துக்குள் சர்க்கரை, தேங்காய்ப்பூ, பயறு எல்லாம் சேர்ந்த கலவையாக கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தல் பிரச்சாரம் பார்க்க வந்த சனம் மாதிரி நெருக்கமாக இருக்கினம். மெல்ல மெல்லக் கிளறி சர்க்கரை நொந்து நூலாகும் வரையும் ஆக்கி விட்டு விட்டுத்தான் பேசாமல் விட்டார் அம்மா.
அடுத்தது என்ன? இன்னொரு பெரும் பாத்திரத்துக்குள் அரிசிமாவையும், கொஞ்சம் உப்பையும் போட்டுக் கொதிநீரை வாரி இறைத்து விட்டு அந்தப் பாத்திரத்தில் இருக்கும் மாவையும் கிளறோ கிளறென்று கிளறிப் பதமாக்கி விட்டுப் பின்னர் ஒவ்வொரு உருண்டையாக உருட்டிப் பின் வட்டமாக்கிவிட்டு, மற்றப் பாத்திரத்தில் இருந்த பயறு, தேங்காய்ப்பூ, சக்கரைப்பூக் கூட்டணியினரைத் திரட்டிய மாவுக்குள் மெதுவாகத் தள்ளி விட்டு மூடிக்கட்டி உருண்டையாக்கித் தலையில் ஒரு குடும்பி மாதிரி வைத்து விட்டார். ஆகா மோதகம் தயார். அதையே இன்னும் நீட்டான இலைவடிவமான தினுசாக மாற்றி விட்டு உள்ளுக்குள் அந்தக் கூட்டணியை வைத்துப் பூட்டி கொஞ்சம் பற்களைக் காட்டினால் கொழுக்கட்டை தயார்.
இப்போது விஷயத்துக்கு வருகிறேன். முன்னர் எட்டிப்பார்க்கும் போது கலவையாக இருந்த அந்தப் பயறு, சர்க்கரை, தேங்காப்பூ சேர்ந்த கூட்டணியைத் தான் "உள்ளுடன்" என்று அழைப்பார்கள். பெரும் எடுப்பிலான திருவிழாக்கள் என்றால் அயலவர்கள் ஒன்று சேர்ந்து, பதமாகச் செய்த உள்ளுடனை திரட்டி வைத்த மாவில் மோதகம், கொழுக்கட்டை பிடித்துக் கொண்டே உள்ளூர் , உலக அரசியல் பேசிக் கொண்டே காரியத்தை முடிப்பார்கள்.
கொஞ்சம் பணக்கார விட்டு மோதகம், கொழுக்கட்டை என்றால் முந்திரிகை வத்தல், கற்கண்டும் கடிபடும்.
மோதகம், கொழுக்கட்டை போன்றவற்றின் உள்ளே அமைந்திருப்பதால் "உள்ளுடன்" என்று வந்திருக்குமோ அல்லது "உள்ளுடல்" தான் "உள்ளுடன்" ஆகியதோ தெரியாது. தமிழகத்திலும் இந்தச் சொல் உபயோகத்தில் இருக்கிறதா என்ன? இல்லாவிட்டால் எப்படிச் சொல்வார்கள்?
என்னதான் சொல்லுங்கோ, எனக்கு மோதகம் சாப்பிடுறதிலும் பார்க்க அந்த மாவுக்குள் இருக்கும் "உள்ளுடன்" சமாச்சாரம் என்றால் கொள்ளைப் பிரியம். என் சின்ன வயசில் எனக்குக் கிடைக்கும் மோதகத்தின் தோலை (மா பகுதி) உரித்து அம்மாவின் கையில் கொடுத்து விட்டு சாவகாசமாக இந்த உள்ளுடனைச் சாப்பிட ஆரம்பிப்பேன். இதுக்காகவே எனக்காக மோதகம் உருட்டாத உள்ளுடன் பாகத்தை கொஞ்சமாக முற்கூட்டியே எடுத்து வைத்து விட்டு அம்மா மோதகம் செய்வது வழக்கம். இப்ப மட்டும் என்னவாம். உணவகத்தில் விற்கும் கொழுக்கட்டையை வாங்கி ஒரு கப்பில் போட்டு விட்டு கரண்டியால் "உள்ளுடன்" சாப்பிடும் வழக்கம் இன்னும் இருக்குப் பாருங்கோ. தொட்டில் பழக்கம் சிட்னி வரைக்குமாமே ;)
"உவனுக்கு சோறு கறியை விடக் கள்ளத்தீனி தான் விருப்பம்" இது என் அம்மா அடிக்கடி என்னைப் பற்றி மற்றவர்களுக்குப் போட்டுக் கொடுக்கும் ஒரு கருத்து ;).
நாவுக்கு ருசியான தின்பண்டங்கள், குறிப்பாக அவற்றின் மூலம் எந்த விதமான ஊட்டச்சத்துக்களை அதிகம் கொண்டிராத ஆனால் இனிப்பு அல்லது காரமான வகையறாக்களைத் தான் இப்படி "கள்ளத்தீனி" அல்லது "கள்ளத்தீன்" என்று அடையாளப் பெயர் கொண்டு எங்களூரில் அழைப்பார்கள். இதற்கு முன்னர் எழுதிய சொக்கிளேற்றும் விசுக்கோத்தும் பதிவில் இருக்கும் பெரும்பாலான பண்டங்கள் இந்தக் கள்ளத்தீனி வகையறாவுக்குள் அடங்கி நிற்கின்றன.
தமிழகத்தில் கள்ளத்தீனி என்ற சொலவாடை பாவிக்கப்படுகின்றதா என்பது குறித்துத் தெரியவில்லை. ஆனால் நண்பர் திரு அவர்கள் சொல்லியிருந்தார் குமரி பகுதியில் கள்ளப் பண்டம் என்று அழைப்பார்களாம்.
இதுவும் இலங்கை உணவுப்பழக்கங்களைக் குறித்தான ஒரு ஒலியுரையாடல். பிட்டு சொதி என்று நீள்கிறது. சோமிதரன் மற்றும் என்னோடு இடையில் சிநேகிதியும் வந்திட்டு போயிருக்கிறா.. கேட்டுப்பாருங்கள். ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஆண்டு 2007 யூன்
அண்ணையவை, அக்காவை, அப்புமார், ஆச்சிமார் எல்லாருக்கும் ஒண்டு சொல்லிறன். என்னடா இந்தப் பெடியன் எப்ப பாத்தாலும் சாப்பாட்டப் பற்றித்தான் எழுதிறான் எண்டு சொல்லக்கூடாது. சாப்பாட்டுக்காகத் தானே பாருங்கோ எல்லா வேலையும் வெட்டியும். அதால சாப்பாட்டப் பற்றி எழுதிற என்னை நீங்கள் திட்டக்கூடாது... சரியோ!! இப்ப நாங்கள் மிதிவெடி பற்றிக் கதைக்கப் போறம். கொஞ்சப் பேர் என்னடா இந்தப் பொடி சாப்பாட்டப் பற்றிக் கதைக்கிறன் எண்டுட்டு வெடியப் பற்றிக் கதைக்குது எண்டு நினைக்கிறவை கொஞ்சம் பொறுங்கோ.
இஞ்ச பாருங்கோ, நான் ஏ. லெவல் படிக்கேக்க, அப்பரிண்ட காசிலை நல்லா சாப்பிட்டுக் குடிச்சுத் திரிஞ்சனான் பாருங்கோ. அடிக்கடி நாங்கள் போற இடம் 'லவ்லி கூல்பார்' எண்டு நெல்லியடீக்க ஒரு இடம். போனா அண்டைக்கு ஒரே வேட்டைதான். ரோல்ஸ் என்ன, வடை என்ன, சொக்கலேற் கேக் என்ன, ஸ்பெசல் ஐஸ்கிரீம் என்ன, கோக் என்ன, பெப்சி என்ன.... ஒரே வெட்டுத் தான் பாருங்கோ. கடை முதலாளி தொடக்கம், வேலை செய்யிற அண்ணையவை வரை எல்லாருக்கும் எங்களை நல்ல வடிவாத் தெரியும். முதலாளியின்ர மனிசி எங்களுக்கு ‘சாப்பாட்டு ராமன்கள்' எண்டு பேர் வச்சு வேலை செய்யிற பொடியளோட நக்கல் அடிக்கிறவவாம். அவ்வளவுக்கு நாங்கள் பேமஸ் பாருங்கோ. (இதையெல்லாம் பெருமையா சொல்லுது பார் சனி எண்டு நீங்கள் முணுமுணுக்கிறது கேட்குது. கதை சொல்லேக்க உப்பிடி இடஞ்சல் பண்ணக்கூடாது பாருங்கோ)
ஒரு நாள் லவ்லீக்க சாப்பிட்டுக் கொண்டிருக்கேக்க, புதுசா ஒரு சாப்பாட்டுச் சாமான் கொண்டந்து வச்சினம். அது ரோல் மாதிரி இருந்தது பாருங்கோ. ஆனா கொஞ்சம் செவ்வக சேப்பில, ரோலை விட நல்ல பெரிசாக இருந்துது. நாங்கள் அட லவ்லியில பெரிசா ரோல் சுடத் தொடங்கீட்டாங்கள் போல எண்டு ஒரே வெட்டு. அதுக்குள்ள ஆட்டிறைச்சியோட, நல்ல உருளைக்கிழங்கு, ஒரு அரைவாசி அவிச்ச முட்டை எண்டு, சும்மா சொல்லக்கூடாது, ரண்டு திண்டால் வயிறு நிறையும் எண்ட அளவுக்கு இருந்தது. அதுவும் சுடச்சுட நல்ல மொறு மொறுவெண்டு அவையள் கொண்டந்து வைக்க நாங்களும் வெட்டு வெட்டெண்டு வெட்டினம். பில் வரேக்கதான் ஐயோ எண்டு இருந்தது பாருங்கோ. லவ்லியில அப்ப மட்டன் ரோல் 12 ரூவா, இந்தப் புதுச் சாப்பாட்டுச் சாமான் 20 ரூவா. அந்தச் சாப்பாட்டுச் சாமானின்ர பேர் வேற விளங்கேல்ல. பில்லப் பாத்திட்டுத்தான் கேட்டன் 'அண்ணை என்னத்துக்கு 20 ரூவாப் படி கணக்குப் போட்டிருக்கிறியள்?' எண்டு.
அப்பதான் கவுண்டரில நிண்ட அந்த அண்ணை சொன்னார், ‘தம்பி, இதுக்குப் பேர்தான் மிதிவெடி. இண்டைக்குதான் முதன் முதலா எங்கட கடையில போட்டிருக்கிறம்' எண்டு. அண்டைக்குத்தான் பாருங்கோ நான் முதன் முதலாக அந்தப் பேரைக் கேட்டன். அதுக்குப் பிறகு கன இடத்தில கன விதமான ரேஸ்ரில இந்த மிதிவெடிய சாப்பிட்டிருக்கிறன். இஞ்ச கனடாவில உள்ளுக்க றால் எல்லாம் போட்டு நல்லாச் செய்யினம். இந்த மிதிவெடி பற்றிக் கொஞ்சக் கேள்வியள் கேட்கோணும் உங்களிட்ட;
இந்த உணவுப் பண்டத்தை முதன் முதலில் யார், எப்போது, எங்கே அறிமுகம் செய்தார்கள்?
2000ம் ஆண்டுக்கு முன்னர் இந்தப் பதார்த்தம் எங்கள் கடைகளில் விற்கப்பட்டதா?
எந்தெந்தப் புலம் பெயர்ந்த நாடுகளில் இந்தப் பதார்த்தம் கிடைக்கிறது? ஏனென்றால் கனடாவில் இந்தப் பதார்த்தம் பற்றித் தெரியாத பலர் இருக்கிறார்கள். முதன் முதலில் இது பற்றிக் கேள்விப்படுவோர் தேடிப்போய் வாங்குகிறார்கள்.
இப்போது ஆரம்ப, மத்திம, கடைநிலை இருபதுகளிலும், முப்பதுகளின் ஆரம்பத்திலும் இருக்கும் நண்பர்கள் தவிர மற்றவர்கள் உங்களின் இளவயதில் இந்தப் பதார்த்தம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
நான் 2005ன் பிற்பகுதியில் கொழும்பில் வாழ்ந்த போது இது பெரியளவில் அங்கே கிடைக்கவில்லை. கொழும்பிலும் இது கிடைக்கிறதா?
ஆர் என்ன வேணுமெண்டாலும் சொல்லுங்கோ... எங்கட ஈழத் தமிழ் ஆக்களோட ஒருதரும் பகிடி விடேலாது. நாங்கள் ஆர்... சிம்பிளா சாப்பாட்டுக் கடையில போய் மிதிவெடி கேட்டு வாங்கிவாற ஆக்களெல்லே.....
எனக்குத் தெரிஞ்ச மட்டில ஒரு காலத்தில, அதாவது 1996க்கு முன் பருத்தித்துறை கூட எங்களுக்கு ஒரு வெளியூர் மாதிரி இருந்தது. அப்பா சைக்கிளில அல்லது ஏதேனும் அவசரம் எண்டால் மோட்டார் சைக்கிளில் பருத்தித்துறைக்குப் போவார். யாழ்ப்பாணம் போறது வெளிநாடு போறமாதிரி (எல்லாம் வெடிவால் முளைக்கும் வரைதான்). நான் அப்போ ஒருமுறைக்குமேல் போன அதிகதூரம், மந்திகை ஆஸ்பத்திரி. தம்பி பிறந்த போது ஒருக்கால், அக்காவுக்கு மகன் பிறந்த போது ஒருக்கால், மச்சளுக்கு மகள்கள் பிறந்தபோது இரண்டுதரம் என்று பத்து வயதுக்குள்ளாகவே நான்கு தரம் போய்வந்த இடம் மந்திகை ஆஸ்பத்திரிதான். அப்பா பருத்தித்துறையில இருக்கிற காணிக்கந்தோருக்குப் போய் வரும் நாட்களிலெல்லாம் அப்பாவின் வரவை மனம் எதிர்பார்த்துக் காத்திருக்கும். ஏனெண்டால், அவர் வாங்கிவரும் கள்ளத்தீனுக்காக.
கள்ளத்தீன் எண்டால், கடையில வாங்கிச் சாப்பிடுற வடை, போண்டா, வாய்ப்பன் முதலான வீட்டில் செய்யப்படாத பொருட்கள். எங்கள் ஊரில் கடையில் வாங்கிச் சாப்பிடுகிற இடியப்பம், பிட்டு எல்லாமே கள்ளத்தீன் தான். இதனால அப்பா பருத்தித்துறையிலிருந்து என்ன வாங்கிவந்தாலும் அது கள்ளத்தீன் என்றே அழைக்கப்பட்டது. அப்பா பருத்தித்துறையிலிருந்து வாங்கிவரக்கூடிய கள்ளத்தீன்களில் சிறப்பானவை தோசை, வெள்ளையப்பம், தட்டவடை ஆகிய மூன்றும். உழுந்துவடை, பருப்புவடை, போளி போன்றன யாழ்ப்பாணம் போய்வரும்போது வாங்கிவருவார். வல்வெட்டித்துறைப் பக்கம் போனால் எள்ளுப்பா. இந்த உணவுகளைப் பற்றி கொஞ்சம் கதைப்போமே.
பருத்தித்துறை தோசையின் புகழுக்குக் காரணம், அதன் அளவு. சின்னவயதில் எனக்கெல்லாம் ஒரு தோசை சாப்பிட்ட இரண்டு நாளைக்கு நிற்கும். அநேகமாக இரண்டு வகை சம்பல் தருவார்கள். பச்சை மிளகாயில் அரைத்த பச்சைச் சம்பல் அல்லது வெள்ளைச் சம்பல் என்று அழைக்கப்படும் சம்பல் ஒன்று, மற்றது செத்தல் மிளகாயில் அரைக்கப்பட்ட உருது சம்பல் அல்லது சிவத்த சம்பல். இதோ, எழுதும் போதே எச்சில் ஊறுகிறது. அதே போல் பருத்தித்துறை வெள்ளையப்பமும் ஒரு சிறப்பான விஷயம். எங்கள் அம்மா எத்தனை முறை முயன்றும் அந்த மென்மையும், சுவையும் வரவில்லை. வெள்ளையப்பத்துக்கான ஸ்பெஷலான சம்பலோடு ஒரு பதினைந்து வெள்ளையப்பம் உள்ளே இறங்கினாலும் வயிறு நிரம்பாது. அப்படி பூ போல இருக்கும் வெள்ளையப்பம்.
தட்டவடையும் அப்படியே. அந்த ருசியை எங்கள் வீட்டுப் பெண்களால் ஏனோ கொண்டுவர முடிவதில்லை. 2002க்குப் பின்னான சமாதான காலத்தில் ஊருக்குவந்த பெரிசுகள் எல்லாரும் கேட்டு வாங்கி வெளிநாட்டுக்குக் கொண்டு போனது பருத்தித்துறைத் தட்டவடையை தான். இதுவும் கணக்கில்லாமல் சாப்பிடத் தூண்டும் ஒரு போதை வஸ்து என்றே சொல்லலாம். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது, எனக்கு இரவில் சாப்பாட்டுக்குப் பின் இரண்டு பருத்தித்துறைத் தட்டவடையைக் கொறித்துவிட்டுப் படுத்தால் காலையில் வயிறு அற்புதமாகச் சுத்தமாகும். நம்வீட்டுப் பெண்கள் சுடும் தட்டவடையைச் சாப்பிட்டால்...ம்ஹூம் அதை எல்லாம் இங்க சொல்லமுடியாது.
இந்த உணவு வகைகள் பருத்தித்துறையில் பரவியிருந்த பல உணவகங்களில் கிடைத்தன. ஆனால் வெள்ளையப்பமும், தோசையும் உணவகங்களில் வாங்கிச் சுவைப்பதை விட, பருத்தித்துறையின் குறுக்குத் தெருக்களிலுள்ள வீடுகளின் மதில்களில் சின்னதாக ஓட்டை போட்டு, சின்னச் சின்ன கதவுகள் போட்டு பெரும்பாலும் காலை அல்லது மாலையில் கடைவிரிக்கும் அந்த ஊர்ப் பெண்களின் கையால் கிடைக்கும் தோசை அல்லது அப்பம்தான் சிறப்பானது. என்ன இவர்களின் சில கடைகளின் முன்னால் சாக்கடை ஓடும். அப்படியான கடைகளைத் தவிர்க்க வேண்டும். என்னுடைய ஊர் வாழ்க்கையின் கடைசிக் காலங்களில் அங்கே ‘ராஜா' உணவகம் என்று ஒருவரின் கடையில் இவையெல்லாம் சுத்தமாகக் கிடைத்தன.
ராஜாவும் இன்னும் சில உணவகத்தாரும் காலையிலேயே தோசை, வெள்ளையப்பம் விற்க ஆரம்பித்தார்கள். அப்போ அதிகாலையில் ரியூசனுக்குப் போகிறபடியால் வீட்டில் தரும் காசில் பருத்தித்துறையில் வாங்கி உண்ண ஆரம்பித்தோம் (பள்ளியும், ரியூசனும் பருத்தித்துறையில்தான் அமைந்திருந்தன). நாங்கள் காலையிலேயே வெள்ளையப்பம். தோசை எல்லாம் இறுக்கிவிட்டுப் போவது வழக்கம். அப்படியான நாட்களில் வகுப்பில் தூங்காமல் இருப்பதற்குப் படும் பாடுதான் அதிகம். ஒருமுறை நூலகத்தில் தூங்கி ரகுவரன் ஆசிரியரிடம் திட்டு வாங்கியதும் அதிகம். கொஞ்சக் காலம் போனதும் புரிந்தது, அந்தத் தூக்கம் பருத்தித்துறை தோசை அல்லது வெள்ளையப்ப மகிமை என்று. என்னதான் வாத்திமாரிடம் அடிவாங்கும் அபாயம் இருந்தாலும், தோசை, வெள்ளையப்பம் சாப்பிடும் அந்த அபாரமான அனுவத்தை விட்டுக்கொடுக்க முடியவில்லை. நான் இன்னொருமுறை ஊர் மீளும்போது அந்த அபார அனுபவம் கிடைக்குமா என்பது சந்தேகம். யாராவது சமீபத்தில் பருத்தித்துறைப் பக்கம் போயிருந்தால் சொல்லுங்களேன்... தோசையும், வெள்ளையப்பமும், தட்டவடையும் இன்றைக்கும் விற்கிறார்களா??
பாண் இலங்கையில் மட்டுமே பாவிக்கப்படும் ஒரு சொல். பாண் என்பது இலத்தீன் மொழி என்கிறார்கள் அறிஞர்கள். ஆங்கிலத்தில் ப்ரெட் எனப்படும் பாண் இலங்கை மக்களின் தேசிய உணவு என்றால் மிகையில்லை.
பெரும்பாலான இலங்கையர்கள் காலை உணவாக உண்பதே பாணாகும். இதற்கான முக்கிய காரணம் இலகுவில் கிடைக்கும் விலை குறைவு(இப்போ பாணின் விலை அதிகம்).
பாணின் சகோதரர்கள் பணிஸ், புழுப்பாண் அல்லது புழுபணிஸ்(சிங்களத்தில் ஹிம்புலா பன்), சங்கிலிப்பாண்,ஜாம் பணிஸ், கறிபணிஸ்(உருளைக்கிழங்கு அல்லது மீன் இறைச்சிக் கறிகள்)ரோஸ்ட் பாண்(இதனை உண்ண ஸ்பெசல் பற்கள் வேண்டும்),கிறீம் பணிஸ் ஆகியோராகும்.
கூடுதலாக பாண் சம்பலுடனுன் உண்பார்கள். இடிச்ச சம்பல் என்றால் அதன் ருசியே தனியாகும். பழங்கறியும் பாணும் இன்னொரு நல்ல கூட்டணி என்பார்கள். இதனைவிட ஜாம், பட்டர் போன்றவற்றுடனும் உண்ணமுடியும்.
காலையில் பலர் கையில் பாண் வாங்கும் பையுடனும் பேக்கரிகளிலும் இல்லை அருகில் இருக்கும் கடைகளிலும் காணப்படுவார்கள். காலையில் அலுவலகம் பாடசாலை செல்வர்களின் வசதி கருதியே பலர் பாணை நாடுகின்றார்கள். ஏனெனில் ஏனைய உணவுகள் தயாரிக்க நேரமெடுக்கும். காலை 6 மணிக்கே எழும்பி அம்மா பசிக்குது என கூவி அழும் சிறுவர்களுக்கு பாணோ பணிசோ சிறந்த உணவு.
ஒரு சிலர் பக்கத்துக் கடைகளில் வாங்காமல் பேக்கரிகளுக்குச் சென்று வாங்குவார்கள். காரணம் சில பேக்கரிகள் பாணிற்க்கு பேமஸ் கொழும்பில் ரோயல் பேக்கரியில் பாண் வாங்க ஒரு பெரிய க்யூவே நிற்கும்.
நாங்கள் பிக் மேட்ச் எனப்படும் கிரிக்கெட் மேட்ச் நாட்களில் மதிய உணவாக பாணும் இறைச்சியும் தான்.சைவம் சாப்பிடுபவர்களுக்கு பருப்புக் கறி. சர்வதேச கிரிக்கெட்டுகளில் மதிய உணவு இடைவேளை 40 நிமிடம்தான் ஆனால் எமக்கோ சாப்பிட்டு முடிஞ்சால் தான் அடுத்த இனிங்ஸ்.
ஒருகாலத்தில் ஊரிலை கோஷ்டி, கூத்து, திருவிழா பார்க்க இரவில் சென்றால் விடியப்புறத்திலை பக்கத்து பேக்கரிகளில் சுடச்சுட பாண் வாங்கி அப்படியே ஒரு கறியும் இல்லாமல் சாப்பிடுவது பழக்கம். சிலவேளை சுடச் சுட பாண் வாங்கிவரும்போது எப்படியும் அரை இறாத்தல் பாண் பிச்சுப் பிச்சு தின்பட்டிருக்கும்.
யுத்தக்காலத்திலை பாணிற்க்கு இருந்த கிராக்கி அதிகம். சிலவேளைகளில் ஒரு குடும்பத்திற்க்கு ஒரு இறாத்தல் என்ற கஸ்டத்தைக்கூட எம்மக்கள் அனுபவித்தார்கள். பாணிற்கு மா இராது பேக்கரிகாரர் இருக்கிற கொஞ்ச மாவில் ஓரளவு பாண் சுட்டு தருவார்கள். க்யூவில் நிண்டுதான் வாங்கவேண்டும். பல தடவை க்யூவில் சண்டைகள் கூட ஏற்படும். எத்தனையோ நாள் மூன்று நேரமும் பாணையே உண்ட மக்களும் இருக்கிறார்கள். அரிசிக்குத் தட்டுப்பாடு அரிசி விலையோ யானை விலை ஆகையால் மூன்று நேரமும் பாணும் ஏதாவது மரக்கறி கறியும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்த பெருமை(?) எமக்கே சேரும். இவை எல்லாம் பழகிய வலிகள் எழுதும்போது கூட கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் சைக்கிள் உழக்கி பருத்தித்துறையில் ஒரு இறாத்தல் பாண் வாங்கிய நினைவுகள் மனதை நெருடுகின்றது.
சில இடங்களில் காலை உணவாகவும் பாண் இரவு உணவாகவும் பாணே உண்கிறார்கள். காரணம் வேலையால் வந்த களைப்பின் காரணமாக இரவுச் சாப்பாட்டையும் பாணாகவே மாற்றிவிட்டார்கள்.
ஒரு மூன்று நாட்கள் தொடர்ந்து பாண் சாப்பிடாமல் விட்டுவிட்டு நாலாம் சாப்பிடும்போது அதன் ருசி தனி.
இலங்கையில் சிலகாலத்திற்க்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணி ஏதாவது ஆட்டங்களில் வெற்றியீட்டினால் அடுத்த நாள் பாண் விலை கூடும். 1996ஆம் ஆண்டில் 4.50 சதத்திற்க்கு வாங்கிய பாணின் இன்றைய விலை 40 ரூபாவாகும்.
குதியம் குத்துதல் பற்றி யோசிச்சனா நான் முந்தி எழுதின ஒரு பதிவு ஞாபகம் வந்திச்சு *** எச்சரிக்கை*** மீள்பதிவு :)
மலைநாடான் பாலைப்பழத்தைப் பற்றி எழுதினாரா நான் அதைப்போய் வாசிச்சனா இப்ப எனக்கும் நான் ரசிச்சு ருசிச்சு சண்டைபிடிச்சு பிச்சுப் பிடுங்கி சாப்பிட்ட பழம் காய் பற்றியெல்லாம் எழுதவேணும் போல இருந்திச்சா அதான் எழுதினா என்ன குறைஞ்சிடுவன் என்று எழுத வெளிக்கிட்டிட்டன்.
பாலர் வகுப்புப் படிச்ச காலத்தில இருந்தே பள்ளிக்கூடம் போற வழியில ரியூசன் போற வழியில இப்பிடி எப்பெல்லாம் நண்பர்களோட சேர்ந்து வீட்டை விட்டுப் போறனோ அப்பெல்லாம் ஆற்றயும் வீட்டுக்காணியிலோ அல்லது தோட்டத்துக்காணியிலோ கைவைக்காமல் வீடு திரும்பினதா ஞாபகம் இல்லை.
என்ன சத்தம் நறநற என்று? இதைப்படிக்கிற யாரோ ஒரு ஆணுடைய பல்லுத்தான் நறநறக்குது.இதுகள் பண்ணின வால்தனத்துக்கெல்லாம் ஊர்க்காரர் எங்களைத்தானே அடிச்சிருக்குதுகள் என்றுதானே மனசுக்குள்ள திட்டுறீங்கள்.சரி சரி மறந்துபோங்கோ மன்னிச்சுடுங்கோ பால்ய சினேகிதிகளை.
இலந்தப்பழம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பாலர் வகுப்புப் படிக்கும்போது ரியூசனுக்குப் போனது தேவா ரீச்சரிட்ட பிறகு அவான்ர தங்கை சாந்தாக்காட்ட.அவேன்ர வீட்டுக்குப் போற வழியில ஒரு இலந்தப்பழ மரம் நிக்குது.மரமோ சரியான உயரம்.நான் என்ர நண்பர்கள் சுஜித்தா சுபாசினி டொம்மா இன்னும் கொஞ்சப்பேர் பாலர் வகுப்பில எவ்வளவு உயரம் இருந்திருப்பம் என்று சொல்லவும் வேணுமா? இலந்தப்பழ மரத்துக்குப் பக்கத்தில கிழங்குக்கு தாக்குறதுக்கா ஊமல்கொட்டை பறிச்சு விட்டிருப்பினம் காணிச்சொந்தக்காரர்.எங்களுக்கு கல்லில கொஞ்சம் பாசம் பாருங்கோ அதால கல்லை விட்டிட்டு ஊமல்கொட்டையை எடுத்து போட்டிக்கு மரத்துக்கு எறிவம்.மரத்தில இருக்கிற கொஞ்ச நஞ்ச பழம் அப்பத்தான் பழுக்கத்தொடங்கியிருக்கிற செம்பழம் எல்லாம் விழும் பாய்ஞ்சு பாய்ஞ்சு பொறுக்கிறது.கொஞ்ச நேரம் மரத்துக்குக் கீழ நிண்டா காணிக்காரர் வந்து “யாரடா அது இலந்தைக்குக் கீழ” என்று சத்தம்போடுவாரெல்லோ.ஒரு விசயம் பாருங்கோ ஒரு நாள் கூட “யாரடி அது மரத்துக்குக் கீழ” அவர் கேட்டதே இல்லை :-) எங்கட குட்டிச்சைக்கிளை மெல்லமா உருட்டிக்கொண்டு ரியூசனுக்குப்போவம்.ம் ம் அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பர்களே...
பிறகு கொஞ்சம் வளர்ந்தாப்போல ஸ்கொலர்சிப் ஸ்பெஸல் கிளாஸ் போற வழியிலதான் அணிஞ்சில்பழ மரம் இருக்கு.என்னத்துக்கு அணிஞ்சில் என்று பெயர் வந்திருக்கும் என்று தெரியேல்ல..அணில் சாப்பிடுற பழமாயிருக்குமோ?? எனக்கென்றா அந்த மரத்தில அணிலைப்பார்த்ததா ஞாபகம் இல்லை.அணிஞ்சில் பழமும் ஒரு வித்தியாசமான ரேஸ்ற்தான்.கிட்டத்த றம்புட்டான் பழத்தின்ர உள்ளான் மாதிரி சின்னனா இருக்கும் என்று நினைக்கிறன்.பழத்தை சாப்பிட்ட அணிஞ்சில்பழக் கொட்டையை நிலத்தில தேய்ச்சு ஒரு சிறிய துவாரத்தை உண்டாக்கினா அதில ஒரு விதமான ஓசை வரும் அதை வைச்சு விசிலடிக்கலாம் :-)
(படம் உபயம் : வசந்தனண்ணா:) )
இன்னொரு வீட்டில ஜம்புக்காய் இருக்கு.றோஸ் நிற ஜம்புக்காயை விட பச்சை நிற ஜம்புக்காயைத்தான் எனக்குப் பிடிக்கும்.நாங்கள் களவெடுக்காம சாப்பிட்டதெண்டா ஜம்புக்காய்தான்.அந்த வீட்டுக்கார அம்மம்மான்ர பிள்ளைகள் எல்லாரும் கொழும்பில அதால அவாக்கு நாங்கள்தான் பேரப்பிள்ளைகள் மாதிரி ஜம்புக்காய் சீசனில மறக்காம ஒரு பெரிய பாக்ல கொண்டுவந்து தருவா வீட்ட.அத விட நாங்களும் விருப்பமான நேரத்தில போய்ச் சொல்லிட்டு ஆய்ஞ்சு சாப்பிடலாம். எங்கட காணிக்குள்ள காரைக்காயும் சூரைக்காயும் இருக்கு.எங்களுக்குத் தனியா அங்க போறதுக்கு அனுமதியில்லை இருந்தாலும் நிறைய நாள் அப்பப்பாவுக்குத் தெரியாம காணிக்குள்ள நுழைஞ்சிருக்கிறம் சூரைக்காய் பிடுங்க.ஒரு நாள் நாங்கள் காணிக்குள்ள நிக்கிறநேரம் பார்த்து யாரோ வாற சத்தம் கேட்டு பதட்டத்தோட ஓடுபட்டு விழுந்தெழும்பி கைகாலெல்லாம் சிராய்ப்புகளோட ஓடித்தப்பியிருக்கிறம்.
(கொய்யாக்காய்)
(நெல்லிக்காய்)
வீட்டில நிக்கிற கொய்யாக்காய் மாதுழம்பழம் நெல்லிக்காய்களையும் விட்டு வைக்கிறதில்லை. நெல்லிக்காயைத் தாத்தா ஏதோ மருந்துக்குப் பாவிக்கிறவர் என்று அம்மாக்கு நாங்கள் சும்மா புடுங்கி எறிஞ்சு விளையாடுறது விருப்பமில்லை அதால அம்மா வீட்டில இல்லாத நேரமாப் பார்த்து நாங்கள் நெல்லிமரத்தில ஏறிடுவம்.அப்பிடித்தான் ஒருநாள் நான் நெல்லிமரத்தில கீழ என்ர நண்பிகள் கொஞ்சப் பேர் ஏந்துறதுக்கு ரெடியா சட்டையைப் பிடிச்சுக்கொண்டு நிக்கினம் நான் ஆய்ஞ்சு போடுற காய்களைப் பிடிப்பதற்கு.நெல்லிமரம் நிற்பது மதில் கரையோட.எங்கட வீடு தெருவோரத்தில கடைசி வீடு.அங்கால எல்லாம் தோட்டங்கள்.தோட்ட வேலை முடிஞ்சு தியாகண்ணை வந்துகொண்டிருந்தவர் டக்கெண்டு கேற்றைத்திறந்துகொண்டு வீட்டுக்குள்ள வந்ததும் மட்டுமில்லை கேற்றில ஏறி என்னை வலுக்கட்டாயமாத் தூக்கிக்கொண்டு இறங்கிட்டார்.நான் பிலத்த சத்தமா அவரோட வாய்காட்டுறன் “இப்ப என்னத்துக்கு என்னைத்தூக்கினீங்கள் நான் என்ன உங்கட வீட்டு மரத்திலயோ ஏறி நின்டனான்” அது இது என்று ஒரே சத்தம். அவர் ஒன்றும் சொல்லாம நான் நின்ற கொப்பைக் காட்டினார்.நான் நின்ற இடத்துக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு கோடாலிப்பாம்பு நிக்குது.ஐயோ என்று கத்திக்கொண்டு ஒரே ஓட்டம்.அதுக்குப்பிறகு தியாகண்ணையை எங்க கண்டாலும் அவர் நான் கத்தின மாதிரிக் கதைச்சுக் காட்டுவார் எனக்கு ஐயொ மானம்போகுதே என்று கத்தோணும் போல இருக்கும்.
யாராவாது எக்ஸோறாப்பழம் சாப்பிட்டு இருக்கிறீங்கிளா? ஓருதரும் சிரிக்க வேண்டாம் ஓகே.நான் மட்டுமில்லை என்ர பிரண்ட்ஸ்ம் சாப்பிட்டு இருக்கினம்.அந்தப்பழம் சிவப்பாகிக் கறுப்பாகும் ஆனால் அது கறுப்பாக முதலே நாங்கள் சாப்பிட்டுடுவமே :-)
(நாவல்பழம்)
கனடாவில் ஒரு பாகிஸ்தான் கடையில் இலந்தப்பழம் நாவல் பழம் எல்லாம் வாங்கிச் சாப்பிட்டு இருக்கிறன் இப்ப அந்தக் கடையைத்தான் போய்த் தேடவேணும்.
பிறகு எனக்குப் பதின்மூன்று வயதிருக்கும்போது மாத்தளைக்கு போயிட்டம்.அங்க இந்த இலந்தப்பழம் எல்லாம் இல்லை.அங்க ரியூசனுக்குப் போன ரீச்சர் வீட்ட வெரலிக்காய் மரம் இருக்கு. வெரலிக்காய் ஒரு கசப்பு உவர்ப்பு எல்லாம் மிக்ஸ் பண்ணின மாதிரி ஒரு ரேஸ்ற் பச்சை நிறத்தில இருக்கும். உப்புத்தண்ணில ஊறப்போட்டு தூள் தடவி விற்பார்கள் கடைகளில் பேருந்துகளில்.நினைக்கவே வாயூறுது.பழமும் சாப்பிடலாம் எனக்குக் காய்தான் விருப்பம்.
(ஆம்பரலங்காய்)
மற்றது ஆம்பரலங்காய்.ரீச்சற்ற மாமிக்கு எங்களைக் கண்டாலே பிடிக்காது ஏனென்றால் ரீச்சர் எங்களை ஆய்ஞ்சு சாப்பிடுங்கோ என்று விட்டிடுவா நாங்களும் உப்பு தூளெல்லாம் கொண்டுபோய் ரீச்சற்ற மாமிக்கு காட்டிக் காட்டி சாப்பிடுவம்.பிறகு கேள்விப்பட்டம் ரீச்சற்ற மாமி சுங்கான் குடிக்கிறதுக்காக ஆம்பரலங்காய் பக்கத்து வீட்டு ஆக்களுக்கு விக்கிறவாவாம் அதில நாங்கள் ஆப்பு வைச்சதாலதான் எங்களை அவாக்குப் பிடிக்காதென்று.
இன்னும் பழங்கள் காய்களைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கு.நீங்களும் உங்களுக்குப் பிடித்த பழம் காய்களைப் பற்றிச் சொல்லுங்கோ.
இந்த பாண் சாப்பிடுறவை, புட்டுச் சாப்பிடுறவை, தோசை சாப்பிடுறவை, இட்லி சாப்பிடுறவை மரவெள்ளிக்கிழங்கும் சம்பலும் வேணுமெண்ணுறவை இல்ல ரொட்டி தான் எனக்கு வேணும் எண்ணுறவை எல்லாரும் இப்ப என்னோட சண்டைக்கு வரக் கூடாது.ஏனெண்டா நீங்கள் தான் இண்டைக்குச் சம்பல் செய்யப் போறீங்கள்.அதோட இதுக்குத் தேவையான பொருளுக்குள்ள முக்கியம் அம்மி குழ(ள?)வி, உரல் உலக்கை.அதோட குனிஞ்சு வளைஞ்சு வேலை செய்யிறவையும் வேணும்.எல்லாரும் ஓமோ?
இப்ப குல குலயா முந்திரிக்கா விளையாடிக் களைச்சுப் போனன் எண்டு ஒருத்தரும் சாட்டுச் சொல்லிப் போட்டு ஓடக்கூடாது.எல்லாரும் கால் முகம் கழுவி சாமியக் கும்பிட்டுட்டு ஓடி வாங்கோ. இப்ப பள்ளிக் கூட லீவு தானே? ஆன படியா இனி வீட்டு வேலையும் கொஞ்சம் பழகுங்கோ! ஆம்மிளைப்பிள்ளயள், பொம்பிளப்பிள்ளயள் எல்லாரும் தெரிஞ்சிருக்க வேண்டிய விசயம் இது.
25 வருசத்துக்கு முன்னம் ஈழத் தமிழரின்ர சாப்பாட்டில இந்தச் சம்பலும் அம்மிகுழவி, உரல்உலக்கையும் முக்கிய சாமான்கள்.
சரி, வந்திட்டியளோ?சம்பலில கன வகை இருக்கு பிள்ளயள்.தேங்காய் சம்பல், அதிலையும் உவன் பிள்ள சொன்ன மாதிரி சிவப்புச் சம்பல், பச்சை சம்பல்(வெள்ளச் சம்பல்?),சட்னி - இதுகள விட இஞ்சிச் சம்பல், மாங்காய் சம்பல் எண்டும் சிலது இருக்கு.இப்ப சட்னியப் பற்றி எழுதினா பிறகு இட்லி எப்பிடிச் செய்யிறதெண்டு கேப்பீங்கள்.இடிச்ச சம்பல் எண்டு சொன்னா ஆச்சியாச்சி தோசை சுடணை எண்ணுவியள்.அதில பிறகு எண்ணை தோசை, வெங்காயத் தோசை ஆளாளுக்குச் சுடச் சுடத் தாணை எண்ணுவியள்.பிறகு இது சமையலறையாப் போடுமோ எண்டு தான் எனக்குப் பயம்.கூழ் காரரும் காவல் நிக்கினம்.அதால இஞ்சிச் சம்பல் மாங்காய் சம்பல் இதுகளப் பற்றி மட்டும் சொல்லுறன்.எல்லாத்திலயும் சின்னச் சின்ன மாற்றங்கள் தான்.பிறகு உங்கட ரசனை, விருப்பம், ருசிக்கேற்ற படி நீங்கள் மாத்திறது தானே!
அதோட இன்னொரு விசயம் பிள்ளயள். கவனமாக் கேக்கிறியளே? சமையல் ஒரு கலை. இதுக்கு ஆர்வம் இருக்க வேணும்.கைப் பதம் எண்டு ஒண்டு இருக்குது.ஏனோதானோ எண்டு செய்யக் கூடாது.முழு மன ஈடுபாட்டோட செய்யவேணும். அதுக்கொரு மனம், ரசனை, விருப்பம் எல்லாம் வேணும்.கலை உணர்வோட, மன விருப்பத்தோட, அளவான சூட்டோட,அன்போட,பரிமாறுறதில எல்லாம் ஒரு ருசி இருக்குது.நான் சொன்னா நம்ப மாட்டியள். இதெல்லாம் அனுபவத்தோட தான் வரும்.அதோட சாப்பிடுறவையும் ரசனையோட சாப்பிடுறவையா இருந்தா இன்னும் விசேசம்.
என்ன அங்க நெளியிறியள்! நான் கனக்க கதைக்கிறனே? கோவிக்காதைங்கோ பிள்ளயள். முதல் தொடக்கத்திலேயே இந்த அடிப்படையளச் சொல்லிப் போட்டால் நீங்கள் மறக்க மாட்டீங்கள் தானே! அதுக்காகத் தான் சொன்னனான். கோவிக்காதைங்கோ. எனக்குத் தெரியும் நீங்கள் நல்ல ரசனையான பிள்ளையள்:-)
சரி மாங்காய்சம்பல் அரைப்பமே?
தேவையான பொருட்கள்;
காம்பு நீக்கிக் கழுவிய செத்தல் மிளகாய் 8-10 ( உங்கள் உறைப்பின் தேவைக் கேற்ப) கறள் இல்லாமல் துருவிய தேங்காய் பூ - பாதி மூடி. நாரில்லாத தோல் சீவிய மாங்காய் -பாதி உடைத்துக் கழுவிய சின்ன வெண்காயம் - 3-4 உப்பு - தேவையான அளவு கழுவிய கருவேப்பிலை - ஒரு நெட்டு
செய்முறை;-
இவை எல்லாவற்றையும் ஒரு தட்டில் தனித்தனியாக வைத்துக் கொண்டு ஒரு கிண்ணத்தில தண்ணியும் கொண்டு அம்மியடிக்குப் போகவும்.
அம்மியையும் குளவியையும் நன்றாகக் கழுவவும். பின் செத்தல் மிளகாயையும் உப்பையும் வைத்து சற்று நீர் தெளித்து விழுதாக (நன்றாக) அரைக்கவும்.பின் மாங்காயை வைத்து அரைக்கவும். (இது வழுகி விழப் பார்க்கும், கவனமாக அரைக்க வேண்டும்.) நன்றாக அரைபட்டதும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிப் போடாமல் தேங்காய்ப் பூவை வைத்து அரைக்க வேண்டும். கரைப் பக்கம் போயிருக்கும் தேங்காய்ப்பூ கலவையை வழித்து நடுவில் வைத்து எல்லாப் பூவும் நன்றாகக் அரைபடும் படி உங்கள் கைகள் லாவகமாக இயங்க வேண்டும். (கையைச் சம்பலுக்குள் வைத்தால் அருகில் வைத்திருக்கும் தண்ணீரில் கையைக் கழுவி விட்டு குளவியைப் பிடிக்கவும்).இறுதியாக இறக்குவதற்கு முன் வெங்காயத்தையும் கருவேப்பிலையையும் வைத்து சற்று நசித்து(அரைவாசி அரைத்து) அவை எல்லாவற்றோடும் சேருமாறு செய்யவும்.(வாசமும் சாரமும் அப்போது தான் தூக்கலாக இருக்கும்.) மீண்டும் ஒரு முறை எல்லாவற்றையும் ஒன்றாக வழித்து நடுவில் ஒன்றாகச் சேர்த்து குளவியை உயர்த்தி , குளவியிலிருக்கும் சம்பலையும் அம்மியிலிடுக்கும் சம்பலையும் ஒன்றாக்கி வட்டமாக உருட்டி கழுவிய கிண்ணமொன்றில் வைக்கவும்.(அம்மி குளவியை கழுவி விட மறக்க வேண்டாம்)
மாங்காய் சம்பல் ரெடி. இது புளிப்பும் உறைப்புமாக நல்லொரு சுவை பேசும்.
பிற்குறிப்பு;
* இதற்கு தேசிப் புளி விடத்தேவை இல்லை. * இது இட்லி தோசையைத் தவிர மற்றய பாகங்களுக்கு உகந்தது.
*கீழ் வரும் சம்பல் வகைகளுக்கு தேசிப்புளி பாதி மூடி வேண்டும். *இதில் மாங்காய்க்குப் பதிலாக ஒரு கை விரலளவு இஞ்சி வைத்தரைத்தால் இஞ்சிச் சம்பல் ரெடி. *இவை இரண்டும் வைக்காமல் அரைத்தால் சிவப்புச் சம்பல் ரெடி. *செத்தல் மிளகாய்க்குப் பதிலாக பச்சைமிளகாய் வைத்தரைத்தால் பச்சைச் சம்பல் ரெடி. *செத்தல் மிளகாயை பொரித்து உரலில் இடித்தால் இடிச்ச சம்பல் ரெடி.இதற்கு பழப்புளி விட வேண்டும்.தாளித்தும் போடலாம்.தோசைக்கு உகந்தது. *அடுப்பில் வெங்காயம்,,செத்தல் மிளகாய்,கடுகு, சீரகம்,கருவேப்பிலை போட்டு தாளித்து, அளவான தண்ணீரில் பழப்புளி கரைத்து விட்டு, ஒரு கொதி வந்ததும் அதற்குள் அரைத்து வைத்த சம்பலைக் கலந்து ஒரு சூடு வந்ததும் இறக்கினால் சட்னி ரெடி.இது இட்லிக்கு.
இப்பத்தான் எங்கட வேலணை வலசுண்ட கூழ் குடித்துவிட்டு உங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அப்படியே போற வழியில் இடியப்பமும் சொதியும் சாப்பிட்டுக்கொண்டுபோங்கோ.
பொதுவாக இடியப்பத்தை காய்ச்சல்காரர்டை சாப்பாடு என்பார்கள். ஏனென்றால் பெரும்பாலும் காய்ச்சல் நேரம் இடியப்பம்தான் சாப்பிடுவது. இதற்க்கு இன்னொரு காரணமும் உண்டு தோசை இட்டலிபோல இடியப்பம் அவ்வளவு கடினமான (ஹார்ட்) சாப்பாடல்ல. கொஞ்சம் லைட்டான சாப்பாடு. இடியப்பம் உடனடியாக சமிச்சும்போம் இதனாலும் பெரும்பாலானவர்கள் வெளியிடத்திற்க்குச் சென்றால் இடியப்பம் சாப்பிடுவார்கள்.
எங்கட நாட்டிலையே இடியப்பம் சொதி தேங்காய்ப்பூச் சம்பல் உழுந்துவடை கூட்டணி சரியான பேமஸ். இலங்கையின் சகலபகுதியிலும் கிடைக்கும் சாப்பாடுகளில் இதுவும் ஒன்று. சிங்களப்பகுதியில் கூட இடியாப்பையும் கிரி ஒதியும் என அழைப்பார்கள்.
சொதி என்பது தேங்காய்ப்பாலில் செய்யப்படும் ஒரு தண்ணி உணவு. சரியான விளக்கம் தெரியவில்லை. சைவச் சொதி என்றால் வெங்காயம், கறிவேப்பிலை, சில இடங்களில் தக்காளி எல்லாம் போடுவார்கள். மச்சச் சொதி என்றால் மீன் சொதி பிரபலம். கடைகளில் கூடுதலாக சைவச் சொதிதான் கொடுப்பார்கள்.
தமிழகத்தில் சட்னி எனப்படும் உணவுதான் நம்ம நாட்டில் சம்பல் என்ற பெயருடன் அழைக்கப்படுகின்றது. இதிலும் அரைச்ச சம்பல் இடிச்ச சம்பல் என வகைகள் உண்டு. அத்துடன் வெள்ளைச் சம்பல் சிவப்புச் சம்பல் என கலரைவைத்துக்கூட சம்பல் உண்டு. வெள்ளைச் சம்பல் தேங்காய்ப்பூவுடன் பச்சைமிளகாய் சேர்த்து அரைப்பது. சிவப்புச் சம்பல் தேங்காய்ப்பூவுடன் சிவத்த் செத்தல் மிளகாய் போட்டு அரைப்பது. சம்பல் பற்றிய மேலதிக விபரங்களை சமையல் ஆச்சிகள் தருவார்கள். எனக்கு சாப்பிட மட்டும்தான் தெரியும்.
வடை என்றால் உடனே ஞாபகத்திற்க்கு வருவது யாழ்ப்பாணம் மலாயன் கபே வடையும் கொழும்பு சரஸ்வதி லொட்ஜ் வடையும் தான். ஒருமுறை மாத்தளையில் ஒரு சைவக்கடையில் சுடச்சுட பருப்பு வடை சாப்பிட்டேன் நல்ல உருசியும் மலிவும். இப்போ ஒரு வடை 30 ரூபாவிற்க்கு விற்கிறார்கள். திருகோணமலையில் ஐயர் கடை தோசை நல்ல பேமஸ்.
நெல்லியடியிலிருந்து யாழ்ப்பாணம் சைக்கிளில் சென்ற காலத்தில் வல்லை கழிந்ததும் ஆவரங்காலிலோ கொஞ்சம் சைக்கிள் ஓடத் தெம்பிருந்தால் கோப்பாயிலோ ஒரு கடையிலை இறங்கில் காலையிலை என்றால் இடியப்பம் சொதி வடையும் பின்னேரத்தில் என்றால் வடையும் பிளேன் டீயும் குடித்துவிட்டு நல்ல உசாராக பயணம் செய்வது.
யாழ்ப்பாணம் டவுணில்(டவுணா? ரவுணா?)சைவம் என்றால் மலேயன் கபேயிலும் மச்சம் என்றால் வேறுகடையிலும் மத்தியானம் சாப்பிட்டுவிட்டு அபப்டியே லிங்கத்தில் ஒரு ஐஸ்கிறீமையும் குடித்துவிட்டு ஒரு பீடா சப்பும் இன்பம் மீண்டும் எப்போ வரும்.
19.06.09 வெள்ளிக் கிழமை இண்டைக்கு. ஈழத்து முற்றக்காரர் எல்லாரும் இண்டைக்கு எனக்குச் சொந்தமாப் போச்சினம்.சொந்த பந்தம் எண்டு இருக்கிறது எவ்வளவு சந்தோஷம்!இண்டைக்கு அவை எல்லாரும் என்னட்ட வந்தாலும் வருவினம்.நான் அவைய வரவேற்கத்தானே வேணும்.
அதால இருக்க, நிக்க இப்ப எனக்கு நேரமில்லை.நாற்சார வீடெண்டா சும்மாவே! முதுகொடிஞ்ச வேலை.வீடு தூசு தட்டி,கூட்டி, சீமேந்துத் தரை கழுவி,சாம்பிராணிப் புகை போட்டு,சாமிக்கும் பூவும் விளக்கும் வைச்சு,வெளி முற்றமும் கூட்டிப் பெருக்கி, புழுதி கிளம்பாமல் தண்ணி தெளித்து,தலை வாசலில் மாவிலைத் தோறணமும் கட்டியாச்சு.முற்றத்தில மல்லிகைப் பூக்கள் பந்தலுக்குக் கீழ கொட்டுண்டு கிடக்குது தான். பொறுக்கி எடுக்க இப்ப நேரமில்லை.அதப் பிறகு பாப்பம்.
பால் வாங்க வாற அம்மானின்ர சின்னப் பொடியன் இன்னும் வரக் காணன். வந்தால் மதிலில ஏத்தி உயரத்தில இருக்கிற செவ்வரத்தம் பூக்களை ஆய்ஞ்சு தரச் சொல்லலாம். அவன் அந்தக் காலமையிலையும் பூவரசமிலையில பீப்பீ ஊதிக் கொண்டுதான் வருவான்.சொல்வழி கேளான்.
தூரத்தில கோயில் மணி கேக்குது.யாரோ ஒரு கறுப்புத் தாத்தா வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு நெத்தீல கையில மார்பில எல்லாம் வீபூதி பூசிக் கொண்டு உரத்த குரலில தேவாரம் பாடிக் கொண்டு றோட்டால போகிறார்.மதிலைத் தாண்டி றோட்டில எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிற நித்திய கல்யாணிச் செடியள் பூத்திருக்கிறதெல்லாம் இந்தத் தாத்தாவுக்காகத் தான்.தன்ரை பைக்குள் அதுகளப்போட்டுக் கொண்டு அவர் நடந்து போறார்.
பள்ளிப் பிள்ளைகளும் இப்ப பள்ளிக் கூடம் போகத் தொடங்கி விட்டுதுகள்.நேரம் இப்ப 8 மணி சொச்சமாக இருக்க வேணும்.சைக்கிள்களில வெள்ளைச் சீருடையில நல்லெண்ணை வெச்சு படிய வாரிப் பின்னி திருநீறும் கறுப்புப் பொட்டும் போட்டுப் பிள்ளைகள் போறது ஒரு கண்கொளாக் காட்சி தான்.புறாக்கள் கூட்டமாப் போறது போல இருக்கும்.சர்வகலாசாலைக்குப் போய் பிரகாசிக்க வேண்டிய குருத்துகள்.
எங்கட ஐயாவும் விடிய வெள்ளன புலவுக்குப் போட்டார்.அது அவற்ற முதுசக் காணி.சங்கதி என்னண்டா அவர் காம்புக் சத்தகத்தையும், உழவாரத்தையும்,அலுவாங்கையும் கொண்டு போனாரோ தெரியேல்லை.அசண்டையீனமா விட்டிட்டுப் போட்டார் போல கிடக்கு. கதியால் போட என்ன செய்யப் போறாரோ தெரியாது.அவருக்கும் இப்ப மறதி கூடிப் போச்சு.இப்ப காதும் சரியாக் கேக்கிறயில்ல.ஆனா பாவம், செரியான பிரயாசை.
வெய்யில் ஏறிவிட்டுது இன்னும் பினைஞ்ச பினாட்டையும் புளியையும் நடு முத்தத்தில வைக்கேல்லை எண்டு அம்மா வேற அங்க பிலாக்கணம் பாடத் தொடங்கீயிட்டா.அவவின்ர பூராடம் கேக்கிறதெண்டா அவவின்ர சிநேகிதி பொன்னம்மாக்கா,பொட்டுக்கால வந்து தலைவாசல்ல நிண்டு ஒரு குரல் குடுக்க வேணும்.அப்ப பாக்க வேணும் நீங்கள் அவவ.
இண்டைக்கு நல்லா வெய்யில் எறிக்கும் போல தான் கிடக்கு.புளுக்கொடியலையும் காய விட்டா நல்லது தான்.அதுக்கு முதல் வெத்திலத் தட்டத்தையும்,பாக்குவெட்டியையும்,பாக்குரலையும் சாவியையும் கொண்டு போய் அவவின்ர கையில் குடுத்துப் போட வேணும்.இல்லாட்டிக்கு அவவிட்ட வாய் குடுத்துத் தப்பேலாது.
ஐயாவுக்கு அடுப்பில குரக்கன் புட்டு அவியுது.அவருக்குச் சலரோகம் கன காலமா இருக்குது.இவ்வளவு காலமும் சாப்பாட்டால தானே கட்டுப் படுத்திக் கொண்டு வாறார்.குரக்கன் புட்டும் எப்பன் பழஞ் சோறும் பழங்கறியளும் கொஞ்சம் சம்பலும் சட்டிக்கை போட்டுக் குழைச்சுப்போட்டு 2 மிளகாய்ப்பொரியலையும் தட்டில வச்சு மூடிவிட்டா மனுசன் வந்து சாப்பிடும்.பாவம் களைச்சுப் போய் வாற மனுசன்.
இனி நானும் நிண்டு மினைக்கிட ஏலாது. மூண்டாவது வளவுக்கை போய் நல்ல தண்ணி அள்ளிக் கொண்டு வந்து வச்சுப் போட்டு,மத்தியானப் பாட்டத் தொடங்க வேணும்.வறண்ட பூமி தானே!நிலம் எல்லாம் சுண்ணாம்புக் கல்லு.அதால சவர் தண்ணி.எண்டாலும் சனம் நல்லாப் பாடுபடுங்கள்.
அடுத்த வீட்டு பொன்னம்மாக்கன்ர மே(மோ)ள் பாவாடை ஒண்டு தச்சுத் தாங்கோ எண்டு முந்த நாள் துணியை தந்திட்டுப் போனவள்.குடைவெட்டுப் பாவாடையோ சுருக்குப் பாவாடையோ எண்டு கேக்க மறந்து போனன்.இனி,எக்கணம் வந்து துள்ளப் போறாள்(குதிக்கப் போறாள்)இன்னும் தைக்கேல்லை எண்டு.தண்ணி அள்ளப் போகேக்கை ஒருக்கா கண்டு கேக்க வேணும்.
அது சரி,நீங்கள் எல்லாம் வருவீங்கள் எல்லே? அதால முதலே வேல எல்லாத்தையும் முடிச்சுப் போட்டன் எண்டா நல்லது.பிறகு இடயில ஒருக்கா போய் செல்வி மாட்டுக்கு கழுநீர் தண்ணி வைக்கிறது மட்டும் தான்.மாத்தியானம் ஒருக்கா மாத்தியும் கட்ட வேணும்.சில வேளை நீங்கள் இருக்கிறீங்கள் எண்டுட்டு அம்மா அதச் செய்தாலும் செய்வா.
இஞ்ச பாருங்கோவன்,கோடியில செல்வி குரல் குடுக்குது.இண்டைக்குக் கொஞ்சம் பிந்திப் போட்டுது.பாவம் அவளும் இளங் கண்டுக்காறி.உண்ணாணை அது ஒரு லட்சுமி தான்.சொம்பு நிறைய அது தாற பாலக் கறந்து,மண்சட்டியில, சாணத்தால மெழுகின விறகடுப்பில வச்சுக் காச்சினா வாற வாசம் இருக்கே அதுக்கு ஈடு இணை இல்லை.
நீங்கள் எல்லாரும் வாருங்கோ! உங்களுக்கு கொஞ்சம் கற்கண்டு போட்டுக் காச்சி, ஆத்தி அளவான சூட்டோட மூக்குப் பேணியில பக்குவமா ஊத்தித் தாறன்.அதை ஒருக்கா அன்னாந்து குடிச்சுப் பாருங்கோ. பிறகு நீங்களே சொல்லுவியள் நல்லா இருக்கெண்டு.
நீங்கள் கட்டாயம் எல்லாரும் வருவீங்கள் தானே? நீங்கள் வருவீங்கள் எண்டுதான் இவ்வளவு ஆரவாரம்.மறக்கக் கூடாது.வந்திட வேணும்.
குறிப்புகள்:
செட்டாக - நேர்த்தியாக,சச்சிதமாக,அழகு இறுக்கம் செறிவு கொண்ட
சாம்பிராணி - அகில்
பொறுக்கி - கைகளால் ஒன்றொன்றாக எடுத்தல்
அம்மான் - மாமா
பொடியன் - பையன், அதன் பெண்பால் பொடிச்சி/பெட்டை
சொல் வழி - புத்திமதி
கேளான் - கேட்க மாட்டான்
சொச்சமாக - கிட்டத்தட்ட
கொட்டுண்டு - சிந்துப் பட்டு
ஆய்ந்து - பிடுங்கி
காணன் - காணவில்லை
வீபூதி - திருநீறு
பள்ளி - பாட சாலை
சர்வகலாசாலை - பல்கலைக் கழகம்
குருத்துகள் - இளம் பிள்ளைகள்
புலவு - தோட்டம்
முதுசம் - பாரம்பரியமாக கை மாறப் பட்டு வரும் சொத்து
சங்கதி - புதினம், செய்தி,விடயம்
அசண்டையீனம் - கவலையீனம்
கதியால் - வேலி
காம்புக் சத்தகம் - ஓலை வார, வார்ந்த ஓலையை பெட்டி இழைக்கும் போது பின்னலுக்குள் சொருக உதவும் கூர்மையான நீண்ட பின்புறத்தைக் கொண்ட மிகச் சிறிய வளைந்த கத்தி.
உழவாரம் - குந்தியிருந்து கைகளால் புற்களைச் செருக்க உதவும் மண்வெட்டியைப் போன்றதான ஒரு சிறு கருவி
அலுவாங்கு - ஈட்டி போல நீளமாகவும் நுனிப் பக்கம் தட்டையாகவும் கூர்மையாகவும் இருக்கும்
பிரயாசை - முயற்சி
புளுக்கொடியல் - பனங் கிழங்கைக் அவித்துக் காய வைத்து சேகரித்து வைத்துக் கொள்வார்கள்.தேங்காய்ச் சொட்டோடு சாப்பிடச் சுவையாக இருக்கும்
பாக்கு வெட்டி - பாக்கு வெட்ட உதவும் சிறு உபகரணம்.கலைத்துவமான வடிவங்களில் கிடைக்கும்
வெத்திலைத் தட்டம் - வெத்திலைகள் வைப்பதற்கென்று இருக்கின்ற தட்டம்.பீடத்தோடு கூடியது.
பாக்குரல், சாவி - பல் இல்லாதவர்கள் பாக்கு இடித்து உண்ண உதவும் சிறு உரலும் உலக்கையும்
பிலாக்கணம் - புறுபுறுத்தல்
பூராடம் - விடுப்பு,விண்ணாணம்
கோடி - கொல்லைப் புறம்
பொட்டு - வேலிக்கிடையிலான சிறு சந்து
உண்ணாணை - உன் மீது ஆணையாக
எப்பன் - கொஞ்சம்
வளவு - காணி
சவர் - உப்பு
எல்லே - அல்லவா
ஏலாது - முடியாது
மே(மோ)ள் - மகள்
பாவாடை - முழங்கால் அளவுக்குத் தைக்கப் படும் பெண்களுக்கான கீழ் பாதி ஆடை
களு நீர் - சோறு வடித்த கஞ்சி,மரக்கறித் தண்டுகள்,மாட்டுணவு, தண்ணீர் எல்லாம் போட்டுக் கக்கிய கலவை(கால் நடைகளுக்குரியவை)
மாத்திக் கட்டுதல் - வேறொரு மேச்சல் நிலத்திற்கு மாற்றுதல்
சருவம் -அகன்ற பாத்திரம்
மூக்குப் பேணி - பித்தளையில் செய்யப் பட்ட ஒரு முனை வெளிப் புறம் கூராக நீண்டிருக்கும் தேநீர் குடிக்கும் பாத்திரம் (குவளை)
அன்னாந்து - மேலே பார்த்தவாறு வாயில் படாமல் வாய்க்குள் ஊற்றுவது.
ஆரவாரம் - ஆர்ப்பரிப்பு
( இவை யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கும், பழக்க வழக்கங்களும்,வாழ்க்கை முறையும், நாம் நாளாந்தம் பாவிக்கும் சொற்களும் ஆகும்.)
ஏனைய பிரதேசங்களின் காலை, மாலை நேரங்களையும் ஆண்களின், பெண்களின் சிறுவர்களின் வாழ்க்கை முறைகள், எண்ணப் பாங்குகள் பற்றியும் அறிய ஆவல். இது முன்பொரு முறை என் பதிவொன்றில் எழுதப் பட்டது தான். சிறு மாற்றங்களோடு அறிமுகப் பதிவாக இங்கு இடப் படுகிறது.