Author: geevanathy
•5:59 AM

ஆலயம்


13ஆம் நூற்றாண்டுக்குரியது என அறிஞர்களால் கருதப்படுகின்ற தமிழ்க்கல்வெட்டொன்று தம்கலகாமத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதன் ‘மைப்படியை’ 1930 ஆம் ஆண்டு எடுத்த தொல்பொருள் திணைக்களத்தினர் இச்சாசனம் திருகோணமலையிலுள்ள ‘தம்பலகாமம்’ என்னும் ஊரில் எடுக்கப்பட்டதாக தமது குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.



இச்சாசனம் குறித்து பேராசிரியர் திரு.சி.பத்மநாதன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.’இச்சாசனம் கற்பலகை ஒன்றில் எழுதப்பட்டுள்ளது. எழுத்துக்கள் அமைந்துள்ள பகுதி 1அடி 7அங்குல நீளமானது.எழுத்துக்கள் ஓரளவு பெரியவை. இவை சராசரியாக 15 அங்குல உயரமும் அகலமும் கொண்டவை. இச்சாசனத்தை 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்குரிய ஆவணமாகக் கொள்ளலாம்.



துண்டமாகிவிட்ட இச்சாசனத்தில் எல்லாமாகப் பதினொரு வரிகள் காணப்படுகின்றனவாம். முதல் நான்கு வரிகளும் சொற்கள் அடையாளம் காண்பதற்கு ஏற்றவாறு அமையவில்லையாம். 5ஆவது வரி முதலான சாசனப்பகுதி கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளதாகப் பேராசிரியர் திரு.சி.பத்மநாதன் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

5. உடையார் நிச்ச
6. யித்த ஜகதப்ப
7. கண்டன் தாநத்(து)
8. க்கு நிலையாக்(கித்)
9. தம்பலகாம ஊ
10. ரை நான் கெல்
11.லைக்கு தள எல்லை.


இந்தச் சாசனத்தில் முக்கியமான மூன்று விபரங்கள் காணப்படுகின்றன. முதலாவது ‘உடையார்’ என்ற சொல் எழுதப்பட்டுள்ளது. உடையார் என்ற சொல் சாசனவழக்கில் அரசர்களை அல்லது அரச பிரதானிகளைக் குறிக்கும் என்பது ஆய்வாளர்கள் கருத்தாகும்.



இன்னொரு அதிமுக்கியமான விடயம் ‘தம்பலகாமம்’ என்ற பெயர் குறிக்கப்பட்டுள்ளமையாகும். தம்பலகாமம் என்னும் பெயர் புராதனமானது. அது ஏறக்குறைய எண்ணூறு வருடங்களுக்கு முற்பட்ட காலங்களிலிருந்து வழங்கி வருகிறது என்பது இச்சாசனித்தினூடாக உறுதியாகின்றது.சாசனத்தின் மூன்றாவது முக்கியமான அம்சம் ‘ஜகதப்ப கண்டன் தானம்’ என்பது பற்றிய குறிப்பாகும். ‘கண்டன்’ என்பது போர் வீரனைக் குறிக்கும் சொல்லாகும்.



வரலாற்றுத்துறை பேராசிரியராகிய திரு.சி.பத்மநாதன் அவர்கள் இச்சாசனம் குறித்து ஆய்வுகள் செய்து இத்தகைய கருத்துகளை வெளியிட்டுள்ளார்கள்.பதினோராம் பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் திருகோணமலைப் பிரதேசத்தில் கந்தளாய் மயிலங்குளம் போன்ற இடங்களில் இத்தகைய படைகள் இருந்தன என்பது வரலாறாகும். இதே போன்று தம்பலகாமத்திலும் ‘ஜகதப்ப கண்டன்’ என்ற பெயரால் வழங்கிய படையொன்று இருந்துள்ளது என்பது இந்தச் சாசனத்தின் மூலம் அறியப்படுகிறது.



கந்தளாய் கட்டக்குளப்பற்று, பதவியா, மன்னார் மாதோட்டம் ,புலச்சேரி, தேவபட்டினம் முதலிய இடங்களில் கலிங்கத்து மாகோன் தனது படை நிலைகளை அமைத்திருந்தான் எனப் பாளி சிங்கள வரலாற்று நூல்களில் சில குறிப்புகள் காணப்படுகின்றன.



பழமையில் திருகோணமலைப் பிரதேசத்தில் தம்பலகாமப்பற்று ஒரு தனி வன்னிமையின் ஆட்சியின் கீழ் அமைந்திருந்தது. இது வன்னியர்கள் பற்றிய தமிழ் நூல்களிலும் ஒல்லாந்த பிரித்தானிய நிர்வாக அதிகாரிகளின் அறிக்கைகளிலும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



தம்பலகாமம் சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் அங்குள்ள ஆட்சியாளரின் ஏற்பாட்டின் பிரகாரம் ஒரு வீர பட்டினமாக வீரகணமொன்றின் காவலிலுள்ள வணிக நகராக இருந்ததா? என்ற சந்தேகங்களை வரலாற்றுப் பேராசிரியராகிய திரு.சி.பத்மநாதன் அவர்கள் தனது’தம்பலகாமத்துக் கல்வெட்டு’ ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.



இவை குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும்போது இது தொடர்பான சில விபரங்களை தடையங்களை அல்லது செவிவழிமூலமான செய்திகளையும் ஆய்வுக்குத் துணையாக எடுத்துக்கொள்வது பயனள்ள ஒரு விடயமாக அமையும் என நாம் நம்புகிறோம்.



போர்த்துக்கீசர் கோணேசர்கோயிலை இடித்து அழித்த பின்னர் 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் தோற்றம் பெற்றதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலுக்குப் பின்புறமாக உள்ள தம்பலகாமம் புதிய குடியேற்றக் காணிகளுக்குச் செல்லும் பாதையில் சுமார் 250 மீற்றர் தூரத்தில் சுமார் பத்து அல்லது15 ஏக்கர் விஸ்தீரணமுள்ள காட்டுப்பகுதி இன்றும் ‘கோட்டை’ என அழைக்கப்பட்டு வருகிறது. பழமையில் இது சிறிய கோட்டையாக இருந்ததாகவும் இக் கோட்டையைச் சுற்றி அகழிகள் இருந்ததாகவும் காலப்போக்கில் இவையெல்லாம் சிதைந்து அழிவுற்றுவிட்டன என்றும் வயதில் முதிந்தோர்கூறுகின்றனர்.



கலிங்க மாகனின் படையணியொன்று இக்கோட்டையில் இருந்ததாகவும் ‘தம்பன்’ என்ற கலிங்கப்படைத் தளபதி இக்கோட்டையின் தளபதியாக இருந்ததாகவும் வீரஞ்செறிந்த அத்தளபதி கிழக்கிலங்கையில் மாகனுக்கெதிராகச் செயல்பட்டோரை புறங்கண்டு ‘தம்பன் கடவை’ வரையில் கலைத்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.



‘தம்பன் கடவை’ என்பது பொலனறுவை ஊடாக மட்டக்களப்புக்குச் செல்லும் பாதையில் ‘மன்னம்பிட்டிக்கு’ அருகாண்மையில் அமைந்துள்ளது.இதேபோல தம்பலகாமத்திலிருந்து 6 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ‘கப்பல்துறையில்’தம்பலகாமத்து இளைஞர்கள் ‘திரைகடலோடியும் திரவியம் தேடினர்’என வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இந்தக்கடல் வாணிபத்தினூடாகவும் கப்பல்துறைக்கடலில் முத்துக்குளித்து பொருளீட்டிய காரணத்தினாலும் தம்பலகாமம் ஒரு பட்டினமாகக் காணப்பட்டது எனக்கருதுவதில் எவ்வித தவறுமில்லை.



குளக்கோட்டன் காலத்தில் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் பாவநாசத் தீர்த்தம் கப்பல்துறை கடலோரமாக அமைந்திருந்தது.தற்பொழுது ஆலங்கேணிக் கிராமத்திற்கருகில் உள்ள கங்கையாற்றில் ஆதிகோணநாயகரின் தீர்த்தோட்சபம் நடைபெற்று வருகிறது எனினும் ஆதிகோணநாயகர் கோயிலில் வைராவியார் குடும்பத்தினர் பழமையில் நடைபெற்ற கிரிகைகளை ஞாபகத்தில் கொண்டு கப்பல்துறைக்குச் சென்று கடலோரத்தில் அமைந்துள்ள ஓர் இடத்தில் இச்சடங்குகளை வருடாவருடம்நிறைவேற்றி வருவது இன்றும் நடைமுறையிலுள்ளது.



‘தம்பைநகர்’ எனப்புராணங்களிலும் கோணேசர் கல்வெட்டிலும் விளிக்கப்படும் தம்பலகாமம் கப்பல் துறையையும் தன்னகத்தே கொண்டது என்பது இவ்விடத்தில் சுட்டிக்காட்டுதல் மிகப் பொருத்தமானதாகும்.இவ்விடயங்களை எல்லாம் ஒருங்கிணைத்துப் பார்க்கும் பொழுது எண்ணூறு வருடங்களுக்கு முன்பு தம்பலகாமம் ஒரு வீர பட்டினமாக வீரகணமொன்றின் காவலிலுள்ள வணிகப் பெருநகராக விளங்கியிருக்க வேண்டும் என்பது வெள்ளிடைமலையாகும்.



வே. தங்கராசா
தம்பலகாமம்








Author: geevanathy
•5:46 AM
நா.தம்பிராசா


திருகோணமலையின் வரலாறு அடங்கிய கல்வெட்டுக்களைத் தேடியலைந்து அவற்றைப்பற்றிய தகவல்களை உரியவர்களிடம் ஒப்படைத்து அக்கல்வெட்டுக்களிலுள்ள விபரங்களை மற்றவர்களும் அறியும் வண்ணம் பிரபலப்படுத்த பேருதவியாக இருந்தவர் திருகோணமலையின் வரலாற்று நாயகனாகிய எமது பெருமதிப்பிற்குரிய திரு.நா.தம்பிராசா அவர்களேயாகும்.



வரலாற்றை ஆராய்ந்த பல பேராசிரியர்களுக்கு இவர் பெரும் உதவியாக இருந்தார். 1970 ஆம் ஆண்டு தொடக்கம் தனது தாயாருடன் இணைந்து தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை ஆவணப்படுத்தும் பெருங்கைங்கரியத்தில் ஈடுபட்டார். வரலாற்று ஆய்வை தனது மூச்சாகக் கருதியவர் திரு.நா.தம்பிராசா அவர்கள்.



கந்தளாய்க்கல்வெட்டு, பெரியகுளம் கல்வெட்டு, மாங்கனாய்க்கல்வெட்டு ,புல்மோட்டைக்கல்வெட்டு, பத்திரகாளியம்மன் கல்வெட்டு ,நிலாவெளிப்பிள்ளையார் கோயில் கல்வெட்டு, கங்குவேலிக்கல்வெட்டு ,தம்பலகாமம் ஐயனார்திடல் கல்வெட்டு, வில்லூண்டிக்கந்தசாமி கோயில் கல்வெட்டு ஆகியவை இவரது பெருமுயற்சி காரணமாக வரலாற்றுத்துறை நிபுணர்களான கலாநிதி.செ.குணசிங்கம் ,பேராசிரியர்.சி.பத்மநாதன் ,பேராசிரியர்.கா.இந்திரபாலா ஆகியோர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அரிய பல வரலாற்றுத் தடயங்களை உலகுக்கு அறிமுகம் செய்தன.



பத்தாம் நூற்றாண்டுக்குரியதாகக் கருதப்படும் நிலாவெளிக்கல்வெட்டிலேயே ‘திருகோணமலை’ என்ற சொல் முதன் முதலாக அறியப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கலாநிதி திரு.கா.சரவணபவன் அவர்கள் ‘வரலாற்றுத் திருகோணமலை’ தொடர்பான ஆய்வுகளைச் செய்தபோது திரு.நா.தம்பிராசா அவர்களின் உதவி பெரிதும் பயன்பட்டதாகக் கூறப்படுகிறது.



வரலாற்றுத்துறை மட்டுமில்லாது தனது மனைவி மகேஸ்வரியுடன் இணைந்து திருகோணமலை ஆத்திமோட்டைத் தமிழ் வித்தியாலயத்தை ஆரம்பித்து வைத்த பெருமையும் இவரைச் சார்ந்தது. திருகோணமலையின் வரலாறு பற்றிய அவரது தேடல் இலங்கையில் மட்டுமல்ல வெளிநாட்டவர்களாலும் போற்றிப் பேசப்பட்ட ஒரு விடயமாகும்.



தான் பிறந்த மண்ணை தன் உயிரிலும் மேலாக நேசித்த அந்தப் பெருமகன் கடந்த 17.01.2013 இல் இயற்கை எய்தினார். அவரது மறைவு தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு மாபெரும் இழப்பாகும்.


வே.தங்கராசா.






Author: geevanathy
•7:10 PM
திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூன்று பற்றுக்களில் மத்திய பற்றான தம்பலகாமத்திலிருந்து கிழக்கே எட்டு மைல் தூரத்திலுள்ளது ஆலங்கேணி என்னும் அருமையான கிராமம். ஒரு மணல் பிரதேசமாக இந்த ஊர் காணப்படுகிறது.  “ஆலங்கேணி மணல்” என்பது இப்பிரதேசத்தில் மிகவும் பிரசித்தமான ஒரு விடயமாகும்.


தொழில் செய்ய முடியாத நிலப்பகுதி என்று கூடக் கூறலாம். ஆனால் பாட்டாளிகளான இவ்வூர் மக்கள் தங்களுக்கென ஒரு தொழிலை சிருஸ்டித்து ஓயாமல் உழைத்துத் தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொண்டது குறிப்பிடத் தக்கதாகும். இந்தக் கிராமத்தில் ஒரு பெரிய ஆலமரமும் அதனருகே தாமரைக்கேணியும் இருப்பதால் காரணப் பெயராக “ஆலங்கேணி” என்று பெயர் அமைந்ததாகக் கருதப்படுகிறது.

Alenkerny


இங்கு ஏறக்குறைய எண்ணூறு குடும்பங்கள் வரை வாழ்கின்றனர்.  இவர்கள் அனைவரும் தமிழர்கள். வடக்கே உள்ள கிண்ணியாவிலிருந்து வீதிகளில் கல்பரப்பி ஆலங்கேணி மணலை அடக்கி வடக்குத் தெற்காக வீதிகள் செப்பனிடப்பட்டுள்ளன. ஆலங்கேணியின் முகப்பில் ஒரு விநாயகர் ஆலயம் வழிபாட்டுத் தலமாக உள்ளது.


ஆலங்கேணி , தாமரைக்கேணி, ஈச்சந்தீவு என மூன்று பிரிவாக இந்தக் கிராமம் அமைந்துள்ளது. ஆலங்கேணியின் பிரதான வீதியில்  விநாயகர் அரசினர் தமிழ் மகா வித்தியாலயமும்  ஈச்சந்தீவில்  விபுலானந்தர் வித்தியாலயமும் அமைந்துள்ளன.மற்றும் உப அஞ்சல் நிலையம், கூட்டுறவுச் சங்கம், சனசமூகநிலையம் போன்ற பல அமைப்புகள் இருக்கின்றன.


ஆலங்கேணியைச் சுற்றிச் சூழ முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்களே காணப்படுகின்றன. ஆலங்கேணிக்கு வடக்கே பெருந்தொகையாக முஸ்லிம் மக்கள் வாழும் கிண்ணியாப் பட்டினமும் கிழக்கே உப்பாறு தென்மேற்குத்திசையில் பூவரசந்தீவு, நெடுந்தீவு ,சமாவைத்த தீவு மேற்கே முனையிற்சேனை ,கச்சைகொடித்தீவு ,காக்காமுனை ,சூரங்கல் போன்ற இடங்கள் காணப்படுகின்றன.


ஆலங்கேணிக்கு தென்மேற்கே ஏழு மைல் தூரத்தில் தமிழ்ச் சைவர்கள் அடர்த்தியாக வாழ்ந்த திருநகரில் ''பாண்டியனூற்றுச் சிவாலயம்'' அதற்கண்மையில் “பாவநாசத் தீர்த்தம்” போன்றவைகள் இன்று அழிந்த நிலையில் காணப்படுகின்றன. பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புடைய மாரி வயல்களை தன்னகத்தே கொண்ட இந்தத் திருநகர் இன்று திரிபடைந்து “தீனேரி” என அழைக்கப்படுகிறது அந்த திருநகர் அழிந்தபோது அங்கு வாழ்ந்தவர்களில் ஒரு சிறு தொகையினரே ஆலங்கேணியில் குடியேறி வாழ்ந்து வருவதாக ஐதிகம்.



ஆலங்கேணியில் வாழும் ஆண்கள் ஆஜானுபாகுவாக நல்ல திடகாத்திரமான தேக அமைப்பு உடையவர்களாகவும் காணப்படகின்றனர். பெண்கள் மெல்லியராயினும் சுறு சுறுப்புடையவர்கள்.தங்கள் வாழ்விடம் கடல் நீரால் சூழப்பட்டு பயிரிட்டுத் தொழில் செய்ய வாய்ப்பற்றதாக இருக்கிறதே என்று இம்மக்கள் சோம்பியிராமல் “முயற்சி திருவினையாக்கும்”என்ற வள்ளுவப் பெருந்தகையின் பொய்யாமொழியைக் கருத்தில் கொண்டு ஆலங்கேணி மக்கள் தமக்கென ஒரு தொழிலை சிருஷ்டித்துக் கொண்டனர். அந்தத் தொழில் அபாயம் நிறைந்த கஷ்டமான தொழிலாயினும் அவர்கள் தயங்கவில்லை. தொடர்ந்து செய்து தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டனர்.



தெற்கே ‘கொய்யாம்புளி’ என்ற கடலாற்றைத் தோணியில் கடந்து ‘கண்டக்காடு’என்ற மாரி வயல் வெளிகளையும் கடந்து ‘சாந்தப்பணிக்கன்’ என்னும் கானக நுழை வாயிலூடாக வானைத்தொட்டு நிற்கும் மராமரங்கள் அடர்ந்த காட்டில் எட்டுமைல் தூரம் நடந்து மகாவலிகங்கைக் கருகில் ‘வாளைமடு’’வண்ணாத்திபாலம்” போன்ற காட்டுப்பிரதேசங்களைக் கடந்து கங்கையோரம் உள்ள ‘பொன்னாங்கேணி’ப் பிரதேசத்தில் எருமை பசு மந்தைகளை வைத்துப் பாதுகாக்கும் வருவாய் மிக்க தொழிலை உருவாக்கிக் கொண்டனர்.


புத்திசாலிகளான இவர்கள் திருகோணமலைக்கு கொண்டுபோய் பால் விநியோகம் செய்யும் வியாபாரத்தை தொடங்கியதும் இத்தொழில் பெரும் இலாபகரமாக மாறியது.‘காவு’தடிகளில் பாற்குடங்களை வைத்துச் சுமந்து நடந்து கிண்ணியாவுக்கூடாக ‘நீரோட்டுமுனை’ என்னும் கடலாற்றைக் கடந்து ‘வெள்ளைமணல்’சீனன்வாடிக்கூடாக திருகோணமலை நகருக்குச் சென்று அங்குள்ள கடைகளுக்கு பால் தயிர் நெய் போன்ற பொருட்களை விற்றுவந்தனர்.


இந்தக் கடினதொழில் தினமும் தவறாமல் நடந்தது. இன்று வாகனங்கள் மூலமாக இலாபகரமாக நடக்கும் பால் வியாபாரத்தை திருகோணமலை மாவட்டத்திற்கு அறிமுகப்படுத்தியவர்கள் ஆலங்கேணி மக்களேயாவர். இந்தக் கடினதொழில் மூலம் ஆலங்கேணியில் வாழும் சிலர் மாட்டு மந்தைகளின் சொந்தக்காரம்களாகவும் செல்வந்தர்களாகவும் விளங்கி வந்தனர். காலப் பொக்கில் கங்கையோரக் காடுகளை அழித்து நெல் வயல்களாகவும் கத்தரி ,மிளகாய் பயிரிடும் காணிகளாகவும் பயன்படத்தினர். இயந்திரங்களால் நீர் இறைத்து தோட்டப்பயிர்களும் நெல்லும் அமோகமாக விளையச் செய்தனர்.


ஆலங்கேணியில் பாடசாலைகள் குறைவாக இருந்த போதிலும் இம்மக்கள் கற்றலிலும் அரிய சாதனைகளைப் புரிந்துள்ளனர். அரச திணைக்களங்களில் இம்மக்களில் கணிசமான தொகையினர் பொறுப்பான பதவிகளை வகித்து வருகின்றனர். கலை கலாச்சார நிகழ்ச்சிகளிலும் ஈடுபாடு உடையவர்களாகவும் காணப்படுகின்றனர். புகழ் பெற்ற காவியமாகிய இராமாயணத்தை ‘இராமநாடகம்’ என்ற பெயரில் பழக்கி நாட்டுக் கூத்தாக மேடையேற்றியுள்ளனர். ‘அல்லி அர்ச்சுனா' போன்ற நாடகங்களும் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளன,


குமாரவேல் போன்ற பிரசித்த ஆயுள்வேத வைத்தியர்களும் சோதிட சாஸ்திர வல்லுனர்களும் தேர்ந்த அண்ணாவிமார்களும் ,கவிஞர்களும் ஆலங்கேணியில் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தாமரைத்தீவான், கேணிப்பித்தன் ,கௌரிதாசன் ,தங்கராசா ,தவராசா, யோகேஸ்வரன், சுந்தரம் போன்றோர் இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.


‘ஆலையூரான்’என்ற புனைப்பெயரில் எழுதிய அமரர் திரு.க.தங்கராசா அவர்கள் திருகோணமலை வலயக் கல்விப்பணிப்பாளராக் கடமையாற்றியவர். நாடறிந்த நல்ல எழுத்தாளர்.இதே போல ‘கேணிப்பித்தன்’ என்ற புனைப்பெயரில் எழுதும் திரு.எஸ்.அருளானந்தம் அவர்கள் வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் உதவிக்கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றியவர். சிறுவர் இலக்கிய முன்னோடியாகத் திகழ்பவர். இதுவரை எழுபது நூல்களுக்கு மேல் வெளியீடு செய்துள்ளார்.



திருபத்தினியர், திரு.தாமோதரம்பிள்ளை போன்ற அண்ணாவிமார்கள் இங்கே நாடகங்களைப் பழக்கி மேடையேற்றி மக்களின் அமோக ஆதரவைப் பெற்றனர். தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மாபெருங் கலைஞரான திரு.க.கணபதிப்பிள்ளை அண்ணாவியார் இங்கு வந்து நாடகங்களை நெறிப்படுத்தி மேடையேற்றி பெரும் புகழ் பெற்றதை இங்குள்ள பெரியார்கள் நினைவுபடுத்திக் கூறுகின்றனர்.


சீனடி விளையாட்டு என்னும் தற்காப்புக் கலையை பயின்றவர்களும் இங்கு அதிகமாக உள்ளனர். தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரப் பெருமானிடம் நீங்காத பத்திகொண்ட ஆலங்கேணிமக்கள் ஆலயத்தில் கொடியேற்றவிழா தொடங்கிய நாளிலிருந்து பெரும்பாலோர் புலால் உணவை நீக்கி விரதம் இருந்து ஒவ்வொரு விழாவுக்கும் வண்டிச் சவாரியாக மனைவி மக்களுடன் சென்று திரும்புவார்கள். பதினாலாம் நாள் கதிர்காம ஸ்வாமி எழுந்தருளும் விழாவன்று மேள தாளசீர்களுடன் எட்டு மைல்களையும் கால் நடையாக நடந்து நேர்கடன் செலுத்துவது ஆலங்கேணி மக்களின் பக்திச் சிறப்புக்குச் சான்றாகவுள்ளது.



இப்படி ஆலங்கேணி மக்கள் எல்லாத்துறைகளிலும் முன்னெறிக் கொண்டிருந்த வேளையில் ‘வெண்ணை திரளும்போது தாழி உடைந்தது போல’ 1990 ஆம் ஆண்டுகாலப் பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட கலகங்களின் உச்சநிலையால் உயிரிழப்பு பொருள் இழப்பு என்று எல்லா நலன்களும் அழிந்து இழந்து அகதிகளாகி ஐந்தாண்டுகாலம் வரை ‘கிளப்பன் வேக்’என்ற அகதிமுகாமில் தங்கியிருந்து, உடைந்து தகர்ந்து கிடந்த தங்கள் ஊரான ஆலங்கேணியில் மீளக்குடியேறினர்.



தம்பலகாமம் க.வேலாயுதம்.
(1997)




தொடர்புடைய பதிவுகள் 


1. ச.அருளானந்தம் / கேணிப்பித்தன்
2. தாமரைத்தீவான்



Author: ஜேகே
•7:44 PM


“சும்மா போ அன …இனி வெறுங்கல்லு .. என்னால தோண்ட ஏலாது”
“என்ற அச்சா குஞ்சல்லோ, இன்னும் ரெண்டு அடி தான் .. தோண்டினா .. குத்தி போட்டு மண்மூடை அடுக்கலாம்”
“அப்ப பின்னேரம் லலித்தொட கிரிக்கட் விளையாட விடுவியா?”
“சரி என்னத்தையும் போய் விளையாடு .. இப்ப இத கிண்டு”

அம்மா கிரிக்கட் விளையாட பெர்மிஷன் தந்த சந்தோசத்தில் போட்ட பிக்கான் கொஞ்சம் ஆழமாகவே விழ, யாழ்ப்பாணத்து கல்லு “நங்” என்று சத்தம் போட்டது. கொஞ்சம் கையால் மண்ணை கிளறி, கல்லை க்ளீன் பண்ணிவிட்டு, மீண்டும் சரியான கொட்டு பார்த்து பிக்கான் போட்டேன். சர்க்கென்று பிக்கான் இறங்க, நான் பிடியை ஒரு எம்பு எம்ப சர்ர்க்க்க்க் என்று இன்னொரு சத்தம்.

பிக்கான் மரப்பிடி முறிந்துவிட்டது!


என்னடா இது சிறுகதை போலே ஆரம்பிக்கிறேன் என்று நினைக்கவேண்டாம். ஈழத்தில் பிக்கான் போட்டு கைப்பிடி முறிச்ச அனுபவம் உங்களுக்கு இருக்கலாம். வாழை அடிக்கிழங்கு எல்லாம் கிளறி கிளீன் பண்ணும்போது, முறிஞ்சு போன அனுபவம் இருக்கா? பிடி என்னதான் ஸ்ட்ராங்கா இருந்தாலும், விஷயம் தெரியாமல் தெண்டிவிட்டீர்கள் என்றால் கதை சரி. .. ஆ அப்பு.. இந்த மரப்பிடி எப்பிடி செய்யிறது என்றதும் சொல்லவேண்டும். கொடாரிப்பிடியை எல்லாம் கொல்லைப்புறத்து காதலியா தனியா எழுத முடியாது. பிறகு என்னையும் கொடாறிக்காம்பு என்று சொன்னாலும் சொல்லிடுவாங்கள் இல்லையா!

கோடாலி, பிக்கான், மண்வெட்டி போன்றவற்றுக்கு மரப்பிடி செய்வது பூவரசு மரத்தில் இருந்து தான். இடியப்ப உரல், நல்ல மாட்டுவண்டில் அச்சு எல்லாம் பூவரசு மரத்தில் இருந்து செய்யப்படுவதே. மரம் பார்த்தால் நோஞ்சான் மாதிரி இருக்கும். ஆனால் ஊரில கதியால்(வேலி) அடைக்கும்போது முக்கிய பாயிண்டுகளில் எல்லாம் பூவரசு தடி தான் நடுவார்கள். அதுவும் அடைக்க தெரியாமல் அடைத்தால், மரம் சரிஞ்சு வளர்ந்து மற்றவன் காணிக்குள் தலை எட்டிப்பார்த்து, யாழ்ப்பாணத்தில் பல வேலிச்சண்டைகளை ஊதிபெருப்பித்த பெருமை இந்த பூவரசுக்கு உண்டு. காய வச்சு அடுப்பெரிச்சா கொஞ்சம் புகைச்சலாக எரியும்! இலையை சுருட்டி பீப்பீ ஊதலாம். கொஞ்சம் பெரிய இலை புடுங்கினால், வைரவர் கோவிலில் பிரசாதம் கொடுக்கலாம். ஊர்க்கோவில்களில் வெற்றிலை கட்டுப்படியாகாத காலத்தில் வீபூதி சந்தனம் சுருட்டிக்கொடுப்பதும் இதில் தான். பூவரசுக்கு அப்படி ஒரு ஹிஸ்டரி இருக்கு! அந்த மரத்தில் இருந்து தான் நல்ல பழுத்த கொப்பாக பார்த்து வெட்டி, நெருப்பு தணலில் முதல்ல போட்டு சுடுவார்கள். ஒரு பொன் நிறத்தில் எரிந்து வரும்போது, தோலை கீறி, மரவேலை செய்யும் தொழிலாளர்களிடம் கொடுத்து சீவி எடுத்து, மண்வெட்டி, பிக்கான் கோடாலிக்கு பிடி போட்டால், சிங்கன் அசையாமல் இருப்பார்!

இப்பிடி கனகசபை தாத்தா ஊரில் இருந்து செய்துகொண்டு வந்த பிடி தான் அன்றைக்கு முறிஞ்சு போய்விட்டது. அம்மாவை பாவமாய் பார்த்தேன். அம்மா நெருப்பு எடுக்க போகிறார் என்று பயம். ஆனால், அவ சோட்டியை கொஞ்சம் உயர்த்தி செருகிக்கொண்டே, “சும்மா படிச்சு படிச்சு உடம்பு பூளை பத்திப்போய் கிடக்கு, ஒழுங்கா குனிஞ்சு நிமிர்ந்து ஒரு வேலை செய்ய தெரியாது” என்று திட்டியவாறே, அங்கே இங்கே கிடந்த சின்ன சின்ன விறகு காம்புகளை எடுத்து பிக்கான் ஓட்டையில் சக்கை வைத்து, மீண்டும் பிடியை, பிடரிப்பக்கமாக சுவரில் நாளு அடி நன்றாக அடித்து இறுக்கி தந்தார். இப்போது கூட நான் இதை எழுதிக்கொண்டு இருக்கும்போது ஒரு ப்ளேன்டீ போட்டுக்கொண்டு வந்து தந்துவிட்டு, நேற்றைக்கு “Yarl IT Hub”, இன்றைக்கு “கொல்லைப்புறத்து காதலியா” என்று சொல்லிக்கொண்டே அதே மாதிரி மனசுக்குள் திட்டியிருக்கவேண்டும். கேட்கவில்லை அம்மா!

எங்கள் வீட்டு சாமியறை. பிள்ளையார், முருகன், லட்சுமி, சரஸ்வதி, நயினை நாகபூஷணி அம்மன், குட்டி சிவலிங்கம், மன்னார் அன்ரி தந்த மடு மாதா சிலை, வீட்டு குடிபூரலுக்கு யாரோ உபயம் செய்த ஓம் சரவணபவ எழுத்து போட்ட மிகப்பெரிய முருகன் படம், பிருந்தாவனத்து கிருஷ்ணன், சின்ன இயேசு படம், சிவனே என்று உட்கார்ந்து இருக்கும் புத்தர் சிலை என்று ஒரு தட்டு பூரா கடவுள்கள். ஸ்பெஷலாக லட்சுமி, முருகன், பிள்ளையார் படங்களுக்கு மட்டும் வண்ண வண்ண பல்புகள் மேலே எரியும். எங்கள் வீடு என்று இல்லை, யாழ்ப்பாணத்தில் எந்த வீட்டிலும் இப்படி தான் கடவுள்கள். பல்ப் வாங்கிக்கொண்டு இருந்தார்கள்! மேல் தட்டில் சாமிகள் இருக்க, கீழே மிக நீளமான ஒரு நிலக்கீழ் சீமந்து கிடங்கு அந்த அறையில் இருந்தது. சாமான்கள் வைப்பதற்காக அது அமைக்கப்பட்டிருக்கவேண்டும். 85, 86 களில் எல்லாம் சண்டைகள் நடக்கும் நேரம் நாங்கள் எல்லாம் அந்த கிடங்குக்குள் போய் பதுங்கிக்கொள்ளுவோம். முதல் காதலி போல் முதல் பங்கர் அது. பயந்து பதுங்கிய காலம் இன்னமும் ஞாபகம் இருக்கிறது! மேலே கடவுள்களை தாண்டி குண்டு விழாது என்று கொழும்பர் மாமிக்கும் பெரும் நம்பிக்கை. வீட்டுக்கு பங்கர் தேவையில்லை. அது போதும் எண்டு சொல்லிவிட்டார்.

இந்தியன் ஆர்மி டவுன் பக்கம் மூவ் பண்ணிக்கொண்டு இருக்கு. எங்கள் சாமியறை கிடங்கு இந்தியாவின் அடிக்கு தாக்குப்பிடிக்காது என்று இயக்கத்தில இருந்த சொந்தக்கார அண்ணா ஒருவர் சொல்லிவிட, இப்போதெல்லாம் குண்டடிக்க நாங்கள் ஓடுவது பாத்ரூமுக்கு தான். எங்கள் வீட்டு பாத்ரூமுக்கு மேலே பெரிய தண்ணீர் தாங்கி இருக்கிறது. கொங்கிரீட். ஷெல் விழுந்தாலும் துளைத்துக்கொண்டு வராது. பாதுகாப்பு. தூக்கம் வந்தால் கொஞ்சம் சாய்ந்தும் தூங்கலாம். சாமியறை கிடங்கு போதாது. பாத்ரூம் .. பயத்தில மணம் எல்லாம் பெரிசா இருக்காது.

அப்பாவின் நண்பர் ஒருவர். அவர் டீச்சர். சுதுமலையில் வசித்தவர். ஒருநாள் குண்டு அடித்துக்கொண்டு இருக்கும் போது அவர் வீட்டு பாத்ரூமில் பதுங்கியிருக்க, குண்டு வீட்டின் மேல விழுந்துவிட்டது. ஸ்பாட்டில் ஆள் க்ளோஸ். நிலநடுக்கம் வந்தால் வீட்டை விட்டு வெளியே ஓட வேண்டுமாம். இல்லாவிடில் நேரிசல்களுக்குள் சிக்கி செத்துவிடுவோமாம். அந்த அங்கிளும் அப்பிடி தான் நெரிசலில் இறக்க, அடுத்தவாரமே எங்கள் வீட்டு முன் வளவில் பங்கர் வெட்ட முடிவானது!


எங்கள் வீட்டுக்கு வந்து இருக்கிறீங்களா? வீட்டுக்கு முன்னாலே ஒரு பரப்பு காணி. பூங்கன்று தான் முழுக்க இருக்கும். நந்தியாவட்டை, நாகமணி, செவ்வரத்தை, ரோசா, தியத்தலாவ என்ற மலைக்கிராமத்தில் இருந்து அம்மா கொண்டு வந்து வைத்த பார்பட்டன்ஸ் என்று விதம் விதமாக பூத்து தொங்கும். கிணற்றடியில் ஒரு செவ்வரத்தை, மொத்தமா எட்டு ஒட்டு அம்மா ஒட்டியிருப்பார். எட்டு கலர்ல பூ பூத்திருக்க சுற்று வட்டாரத்தில இருந்தவங்க எல்லாம் வந்து பார்த்துவிட்டு போவார்கள். கம்பஸ் பக்கத்தில பூக்கன்று வீடு என்று சந்திக்கடையில கேட்டால் சேவயர்(surveyor) வீட்டை உடனே காட்டுவார்கள். பேபி ஸ்டூடியோ அங்கிள் கொடாக் பிலிம்ல போட்டோ எல்லாம் எடுத்து தன் கடையில் மாட்டி வைத்தார். சுரேஷ் அண்ணா உதயனுக்கும் அறிவிப்போம், வந்து படம் பிடிப்பார்கள் என்றார். ஆனா அடுத்த மாசம் தானே இந்தியன் ஆர்மி இறங்கீட்டுது அங்க!

பங்கர் வெட்டுவதற்கு தோதான இடம் பார்க்கவேண்டும். தொலைவிலையும் இருக்க கூடாது. கக்கூசுக்கு கிட்டவும் இருக்கக்கூடாது. கீழால பைப் லைன் இருந்தாலும் கவனிக்கோணும். கிணத்தடி கடைசியா தெரிந்தெடுக்கப்பட்டது. செவ்வரத்தைக்கு பக்கத்தால பங்கர். அது பெரிய மரம், பக்கத்தில ஒரு எலுமிச்சையும் நின்றது. மேலால பொம்மரில இருந்து பார்த்தா கண்டு பிடிக்கேலாது. முதல் பங்கர் வெட்டியாச்சு. வெட்டினது ஞாபகம் இல்லை. ஆனா ஒருக்கா ரெண்டு தரம் பங்கருக்க இருந்தது ஞாபகம் இருக்கு. கொஞ்ச நாள் தான். இந்தியன் ஆர்மி யாழ்ப்பாணத்தை பிடிச்சிட்டான். எங்கட முன் வீட்டில இந்தியன் ஆர்மி காம்ப் வந்தது. பங்கர் இருக்கிறது தெரிஞ்சா சிக்கல் எண்டு அப்பா குப்பையை போட்டு மூடிப்போட்டார்.

மூண்டு வருஷங்கள் பங்கர் இல்லாத வீடு. இந்தியன் ஆர்மியை இப்போது ஒரு வழியா கப்பலில் அனுப்பியாயிற்று. கொஞ்ச நாள் யாழ்தேவி ட்ரெயின் எல்லாம் இலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கும் ஓட ஆரம்பித்துவிட்டிருந்தது! கரண்ட் கூட அவ்வப்போது லக்ஸபானாவில் இருந்து விசிட் பண்ணும். திடீரென்று ஒரு நாள் அறுவாங்கள் சண்டையை தொடங்கிவிட, இப்போதெல்லாம் அடிக்கடி பொம்பர் விசிட் பண்ண ஆரம்பித்தது. கையோடு கோட்டை பிரச்சனை ஆரம்பிக்க, இளம் ஆட்கள் எல்லொரும் இயக்கப்பாட்டு பாடிக்கொண்டே முற்றவெளி ஏரியாவில் பங்கர் வெட்ட போயிட்டு வருவார்கள். சிலநேரங்களில் திரும்பி வராமலேயே இருந்துவிடுவார்கள். சில நேரம் பிரேதம் மட்டும் வரும்.

இப்ப இயக்கம் யாழ்ப்பாணத்தை வைத்திருக்கிறது. அப்போது நிதர்சனம் என்று இயக்கத்தின் தொலைகாட்சி இருந்தது. அதன் அலுவலகம் எங்கள் வீட்டுக்கு முன்னால். முன் வீடு ஒரு புரோக்டர் வீடு. அவர் குடும்பம் எப்பவோ ஆஸ்திரேலியாவுக்கு எஸ்கேப். அதனால் தான் முதலில் இந்தியன் ஆர்மி அந்த வீட்டில் காம்ப் போட்டது. அவர்கள் போக நிதர்சனம் காம்ப் வந்துவிட்டது. முன்னுக்கு நிதர்சனம் காம்ப் என்பதால் பொம்மர் குண்டு போடும்போது காம்பில் விழாமல் சுற்றுவட்டாரத்தில் தானே விழும்! அத்தனை வீடுகளும் பங்கர் வெட்ட ஆரம்பிக்க, அது ஒரு முஸ்பாத்தி என்றால் முஸ்பாத்தி தான் போங்கள்.

பங்கர் வெட்டுவது என்பது கிட்டத்தட்ட நவராத்திரிக்கு கொலு வைப்பது போல. வீட்டுக்கு வீடு அப்போது பங்கர் வெட்டுவார்கள். ஒரு “ட” எழுத்து வடிவில் அநேகமான பங்கர்கள் இருக்கும். சில பெரிய பங்கர்கள் “ப” வடிவில் இருக்கும். சும்மா ஒன்றுமே இல்லாமல் டப்பா “I” வடிவ பங்கர்களும் சிலர் வெட்டுவதுண்டு. யார் வீட்டில் ஆழமான பங்கர் என்பதில் தான் போட்டியே. எங்கள் ஊர் திருநெல்வேலி, கொஞ்சம் தோண்டினா கல்லு வர தொடங்கிவிடும். இரண்டு அடிக்கு பிறகு பிக்கான் போட வேண்டும். நான்கடியில் ஆப்பு வைத்து வெட்டவேண்டும். அதனால் போட்டியில் எங்கள் வீடு எப்போதுமே பின் தங்கி விடும். அன்ரி ஒருவரின் வீட்டு பங்கரில் ஆள் ஒருவர் குனியாமல் நிற்கலாம்.

நிதர்சனம் காம்ப் முன்னுக்கு வந்தது என்று சொன்னேன் இல்லையா. இப்போது கிணற்றடியில் பங்கர் வெட்டுவது பொம்மர் காரனுக்கு அல்வா எடுத்து வாயில் வைப்பது போல. போட்டான் என்றால் அடுத்த நிமிஷம் அடுத்த பிறவியில், யாரேனக்கு அப்பனோ, அவன் குழைந்தையை எடுத்து கொஞ்சிக்கொண்டு “ஜேக் சுள்ளி” என்று பெயர் வைத்திருப்பான். நல்ல காலம் நாங்கள் வீட்டுக்கு பின்னால் பங்கர் வெட்ட முடிவு செய்ததால் இன்னமும் ஜேக் ஜெகேயாகவே இருக்கிறான்!


எங்கள் வீட்டுக்கு பின்னால் ஒரு விலாட்டு மாமரம். அதற்கு அடியில் தான் பங்கர் வெட்ட ஆரம்பித்தோம். பங்கர் வெட்ட ஆட்கள் பிடிப்பது கஷ்டம். கூலியும் ப்ளேன் டீயும் குடுத்து மாளாது. நாங்களே வெட்டினோம். பக்கத்துவீட்டுக்காரரும் உதவி செய்தார்கள். எங்கள் சுற்று வட்டாரத்தில் உள்ள நான்கைந்து குடும்பங்களுக்கு ஒரு பங்குக்காணியும் கிணறும் இருந்தது. அந்தக்காணியில் மூன்று உயர்ந்த தென்னை மரங்கள். மரங்களில் காய்க்கும் தேங்காய் கூட எல்லோருக்கும் பங்கு தான். ஆனால் இரவிலே எத்தனையாவது சாமத்தில் இருந்தாலும், அந்த மரங்களில் இருந்து தேங்காய் விழுந்தால், தொப் என்று சத்தம் கேட்கும். எல்லா வீட்டுக்காராரும் அலறிப்பதைத்துக்கொண்டு இரவோடி இரவாக ஓடுவார்கள், தேங்காய் பொறுக்க. தேங்காய்க்கு பங்கில்லாதவன் முதல் ஓடுவான்! அப்படி ஒரு ஒற்றுமையான பங்கு காணி அது. இப்போது பங்கருக்கு மேலே போட்டு மூட தென்னங்குற்றி வேண்டும் என்பதால் எல்லா குடும்பங்களும் ஒத்துக்கொண்டு அந்த தென்னைகளை வெட்ட முடிவு செய்தோம். குற்றிகளை பங்கு பிரிப்பதில் கூட போட்டி தான். அடிக்குற்றி கொஞ்சம் ஸ்ட்ராங் இல்லையா. அதுக்காக சண்டை பிடிப்பார்கள். இதெல்லாம் என்னுடைய அடுத்த கதையில் சொல்கிறேன். இப்போது மாட்டருக்கு வருவோம்.

பங்கர் வெட்டி, குற்றி அடுக்கி, அதற்கு மேல் உரப்பை (போரை பாக்) யில் குரு மணல் நிரப்பியாச்சு. குருமணல் என்று சொல்வது கடற்கரை மணல். ஷெல் விழுந்தால் சரக்கென்று இறங்கி சிக்கிப்போய் நிற்கும். வெடிக்காது. சும்மா களிமண் போட்டு நிரப்பினா, கட்டி பட்டுப்போய், ஷெல் மூடையில் விழுந்த உடனேயே வெடித்துவிடும். இதெல்லாம் யாழ்ப்பாணத்து விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள். விஞ்ஞானி என்றால் அப்துல்கலாம் மாதிரி அணுகுண்டு எப்படி செய்யவேண்டும் என்று கண்டுபிடிக்க தேவையில்லை. அணுகுண்டு போட்டால் எப்படி தப்புவது என்று கண்டுபிடிப்பவனும் விஞ்ஞானி தான். ஏனோ தெரியாது அவர்களை உலகம் கொண்டாடுவதில்லை!

பங்கர் ரெடி. இப்போது இண்டீரியர் டிசைன் செய்யவேண்டும். சும்மா போய் பதுங்கி இருக்கும் பங்கர் தான்.ஆனால் அதற்குள் நிறைய விஷயம் இருக்கு. பங்கர் சுவரில் கிழக்கே பார்க்கும் வண்ணம் சதுரவடிவ அரை அடிக்கு அரை அடி, குட்டி பொந்து ஒன்று போட வேண்டும். அங்கே ஓரு பிள்ளையார் சிலை, உங்கள் ஊர் கோயில் கடவுள் படம். மடு மாதா, நல்லூர் கந்தன் படம் என் ஒரு மினி சுவாமி வைப்போம். அம்மா காலையில் சாமிக்கு பூ ஆய்ந்து வைக்கும்போது, பாவம் பங்கருக்குள்ளும் இறங்கி இரண்டு பூக்கள் வைத்து கும்பிடுவார். கோயிலில் இருக்கும் கடவுள்களை விட பங்கருக்குள் இருக்கும் கடவுள்களை தனியாக கவனிக்கவேண்டும். இல்லாவிடில் பாவம் நாங்கள், கடவுள்கள் கைவிட்டு விடுவார்கள்.

பங்கரில் அதேபோல இன்னொரு பொந்து வைத்து, அங்கே மெழுகுதிரி, நெருப்புப்பெட்டி(தீப்பெட்டி) வைக்கவேண்டும். ஹெலிகாப்டர் மேலே சுற்றினால், பங்கரின் வாசலை ஓலையால், அல்லது ஒரு தகரத்தால் உள்ளே இருந்து மூடவேண்டும். இல்லாவிட்டால் கண்டுபிடித்து சுட தொடங்கிவிடுவான். மூடிவிட்டால் உள்ளே கும்மிருட்டு, வெளிச்சம் வேண்டும். அதுக்கு தான் இந்த மெழுகுதிரி. ஆத்திர அவசரத்துக்கு பங்கருக்கு ஓடும்போது எவனாவது தீப்பெட்டி எடுத்துக்கொண்டு ஒடுவானா? அதுக்கு தான் இந்த முன் ஜாக்கிரதை. காமடி என்னவென்றால் எங்கள் முன்வீட்டுக்காரர்கள் தங்கள் பங்கருக்குள் கரண்ட் கனெக்ஷன் குடுத்து மின்விசிறி, லைட் எல்லாம் பொருத்தி இருந்தார்கள். உள்ளே இருந்த சாமிப்படத்துக்கு LED ஒளிவட்டம் வேறு. நாங்கள் எல்லாம் கண்காட்சி பார்க்க போவது போல அவர்கள் பங்கரை பார்க்க போவோம். சூப்பராக இருக்கும். ஆனால் குண்டு போடும்போது அனேகமாக கரண்ட் இருக்காது. அப்படியே இருந்தாலும் பக்கத்தில் விழுந்தால், அதிர்ச்சியில் பல்ப் வெடிச்சு கரண்ட் லீக்காகி சாகவேண்டியது தான். ஷோ காட்டுறதுல எங்கட யாழ்ப்பாணத்து ஆட்கள் போல உலகத்தில வேற எங்கேயும் ஆட்கள் பார்க்கமாட்டீர்கள். கனடாவில் அகதி அந்தஸ்து கிடைத்ததுக்கே மண்டபம் எடுத்து பார்ட்டி வைத்த ஒருத்தரை கூட எனக்கு தெரியும்! அம்மா இப்படியா கூத்துக்களை “புறக்கோலம்” காட்டுறாங்கள் என்று சொல்லுவா. யாழ்ப்பாண தமிழ் என்று நினைக்கிறேன்.

அந்த நாட்களில் சண்டை தொடங்கிவிட்டால் பள்ளிக்கூடம் இருக்காது. ஜாலி தான். என்ன ஒன்று, குண்டு அடிக்கடி பக்கத்தில விழும். அம்மா எங்களை எல்லாம் பங்கருக்குள்ளே போயிருந்து விளையாடுங்க என்று சொல்லுவா! உள்ளே ஒரு பாயை விரித்து அனேகமாக விளையாடும் விளையாட்டு தாயம் தான். யாருக்காவது தாயம் ஞாபகம் இருக்கிறதா? 32 பேட்டி, நான்கு சிப்பி சோகி, சதுரங்க ஆட்டம். யாராவது ஒருத்தன் அலாப்பிகொண்டு சண்டை பிடிக்கும் மட்டும் போட்டி தொடரும். சில நேரங்களில் மாபிள் போளை கூட விளையாடி இருக்கிறோம். பரீட்சை நேரம், படிக்கும் போது அடிக்கடி பங்கருக்குள் போனால் படிப்பு குழம்பும் என்பதால் பங்கருக்குள்ளேயே டேரா போட்டு படிப்பதுண்டு. அது ஒரு அழகிய கனாக்காலம் தான்!


குண்டு போடும்போது யாரு முதலில் பங்கருக்குள் போவது என்பதில் கொஞ்சம் பயம். பாம்பு பூரான், புலிநக சிலந்தி எல்லாம் உள்ளே இருக்கலாம். போனவருக்கு கடி நிச்சயம். அந்த சண்டையில், பத்து போடவோ, புக்கை கட்டவோ குருநகருக்கு உங்களை தூக்கிக்கொண்டு ஓட முடியாது பாருங்கள். இதிலும் அம்மா தான் சண்டிக்கட்டு கட்டிக்கொண்டு உள்ளே நுழைந்து கிளியர் பண்ணுவா! அதுக்கப்புறம் அடிச்சு பிடிச்சுக்கொண்டு உள்ளே ஓடுவோம். ஆனால் இந்த இளந்தாரி ஆண்கள் உள்ளே வர பிகு பண்ணுவார்கள். அதென்ன பொம்பிள பிள்ளை மாதிரி ஓடி பதுங்கிறது என்று சொல்லிக்கொண்டே வெளிய வாசலில் நின்று பொம்மர் பார்த்து, அது எங்கட ஏரியாவுக்கு குண்டு போடபோகுதென்றால் மாத்திரமே உள்ளே வருவார்கள். ஆனா பின்னாடிக்கு சுப்பர் சொனிக், கபீர் விமானங்கள் போன்ற ஒலியை விட வேகமாக பறக்கும் விமானங்கள் வந்த பிறகு, இவர்கள் வீரத்தை கொஞ்சம் குறைத்து, பங்கர் படிக்கட்டில் நின்று செடில் காட்டுவார்கள்!

93, 94ம் ஆண்டு காலப்பகுதியில் பொம்மர் விமானிகள் FM ட்ரான்ஸ்மிஷன் மூலம் தான் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். அப்பா அவர்களின் frequency ஐ tap பண்ணி, குறுக்கே கேட்பார். சிங்களத்தில் பேசினாலும் இவருக்கு கொஞ்சம் புரியும்.
“மே நண்டா காம்பேக்க டான்டோன்ன”
“தவ ரவுண்டேன் கீல, பள்ளேன்ன யன்ன .. மங் கவர் ….”
“என்னப்பா சொல்லுறாங்கள்”
“நண்டா காம்ப் அடிக்க போறாங்கடா”
“எதெப்பா நண்டா காம்ப்?”
“நந்தா என்றால் மாமி என்று அர்த்தம்.. மாமின்ட காம்ப்”
“மாமிக்கு எங்கயப்பா காம்ப் இருக்கு?”
அப்பாவும் இப்போது நாசியை தடவி யோசித்தார்.
டேய் மாமி எண்டுறது கிட்டிண்ட மாமிடா, பக்கத்து ரோட்ல தானே கிட்டு மாமி வீடு இருக்கு. ஓடுடா ஓடு பங்கருக்க..
கிட்டு அண்ணா போலவே கிட்டு அண்ணாவின் மாமி எங்கள் ஊரில் மிகப்பிரபலம். அதனால் அவர் வீட்டில் தான் குண்டு போடா போகிறார்கள் என்று பயந்து, நாங்கள் எல்லாம் ஓடி உள்ளே ஒளிந்திருக்க, குண்டுகளை எங்கேயோ தூரத்தில் போட்டுவிட்டு விமானங்கள் ஓடிவிட்டன. கொஞ்ச நேரம் கழிந்து தான் தெரிந்தது, குண்டு போட்டது கொக்குவிலில் இருந்த “நந்தாவில் அம்மன் கோவிலடி” காம்படியில் என்று. வழமை போலவே குண்டு காம்பில் விழாமல் பக்கத்துவீட்டில் விழ ஆறேழு பேர் செத்துப்போனார்கள். எண்ணிக்கை மறந்துவிட்டது. செத்தவர்களும் தான்.

என்னடா இது பங்கர் வெட்டி கனகாலம் ஆயிட்டுதே? எப்ப தான் எங்கள் முன் காம்புக்கு குண்டு போடுவாங்கள்? நாங்களும் கஷ்டப்பட்டு பங்கர் வெட்டினதுக்கு பலனை அனுபவிக்கலாம் என்று கவலைப்பட்டுக்கொண்டு இருந்தபோது தான் அந்த நாளும் வந்தது. அது ஒரு மாசி மாசத்து காலை. 1991 என்று நினைகிறேன்.

அன்றைக்கு காலையே ஏழு மணிபோல இரண்டு பொம்மர்கள் வந்து ஐந்தாறு தடவை ரவுண்ட் அடித்துவிட்டு போனது. பொம்மர் சுற்றும் போக்கை பார்த்தே அம்மா சொல்லிவிட்டார் இது நோட்டம் பார்க்க வந்திருக்கு. குண்டு போடாது என்று. நாங்களும் எங்கள் வேலைகளை பார்த்துகொண்டிருக்க தான், நாச்சிமார் கோயிலடியில் வசிக்கும் அப்பாவின் நண்பர் செல்வராஜா, அந்தக்காலத்தில் சிலோன் ஏர்போர்சில் வேலை செய்தவர் ஓடிவந்தார். அவர் வரும்போதே ஒரு அவசரம்.
“என்ன அவசரமாய் விடிய வெள்ளன இங்கால பக்கம்”
“சந்திரா, இப்ப FM கேட்டனான், பொம்மர் காரங்கள் இங்கால தான் குண்டு போட போறாங்கள்”
ஏன் அப்படி சொல்ற?
“கம்பசுக்க போட்டிடாத, அந்த காம்ப் பக்கத்து வீட்டில தாமரைக்குளம் இருக்கும், பார்த்து வை” எண்டு கதைச்சவங்கள்
தாமரைக்குளமா அது எங்க இருக்கு?
எங்கட பாங்கர் நடராசா, வீட்டு முற்றத்தில கண்டறியாத தாமரை குளம் வச்சிருக்கிறான் இல்ல? குண்டு போட்டா அங்கேயும் விழாது, காம்பிலேயும் விழாது, பின் வீடு, உன்ர வீட்ட தான் விழும்
சும்மா விசர்க்கதை கதைக்காத, அந்த சின்ன குளம் மேல இருந்து தெரியுமே, நீ சும்மா எதையோ கேட்டிட்டு.
சொல்றத சொல்லிப்போட்டன், சும்மா நடப்பு காட்டாம, இண்டைக்கு மட்டும் கொக்குவில் பக்கம் போய் இருங்க
எங்களிட்ட நல்ல பங்கர் இருக்கு, பார்ப்பம்
செல்வராஜா அங்கிள் போய்விட்டார். அப்பா டென்சன் ஆகவில்லை. ரேடியோவை எடுத்து பக்கத்தில் வைத்துக்கொண்டார். அம்மா உடனேயே அக்கம் பக்கம் விஷயத்தை சொல்லிவிட்டார். நியூஸ் தீயாய் பரவியது. அம்மா அவசர அவசரமாக சமைக்க தொடங்கினார். வீட்டுக்கதவுகளை இப்பவே பூட்டு போட்டு மூடுவிட்டு முன் வாசல் மட்டும் திறந்து வைத்திருந்தார். தாலிக்கொடி, நகை பாக் ரெடி. அவசரத்துக்கு ஓட எல்லாமே ஆயத்தம். தூரத்தே பொம்மர் சத்தம் கேட்டது!


பொம்மர் வருது என்றவுடனேயே, எங்கள் பக்கத்துவீட்டு அன்னலட்சுமி கிழவி ஓடிவந்துவிட்டது. நாங்கள் போக முன்னமேயே அது பங்கருக்குள் போய் விட, நாங்கள் எல்லாம் உள்ளே போக தயங்கினோம். அந்த கிழவி சரியாக குளிக்காது. பக்கத்தில் போனாலே “தாழம்பூவே வாசம் வீசு” தான். ஆனா “அம்மா விறகு கட்டை எடுக்கட்டா?” என்று மிரட்ட, மூக்கை பொத்திக்கொண்டு ஒவ்வொருவராய் உள்ளே போனோம். பொம்மர் இப்போது ஒரு ரவுண்ட் வந்துவிட, அம்மா கேட்டை பூட்டிக்கொண்டு(பங்கருக்குள் இருக்கும்போது தான் கள்ளர் வருவாங்கள்), பங்கருக்குள் வந்தார். அப்பா இன்னமும் வெளியே தான்! கையில் FM ரேடியோவில் பொம்மர் காரனின் லைவ் கமெண்ட்ரி கேட்டுக்கொண்டு!

இரண்டாவது ரவுண்ட். எங்கள் ஏரியாவை அடிக்க போறான் என்பது தெரிந்துவிட்டது. நாங்கள் எல்லோரும், அப்பாவை வா வா என்று கத்த, அவர் இன்னமும் நடப்புக் காட்டிக்கொண்டு நின்றார்! சரியான frequency ஐ இன்னமும் ரேடியோவில் பிடிக்க முடியவில்லை. பங்கருக்குள்ளே இன்னொரு காட்சி ஓடிக்கொண்டு இருந்தது! எட்டடி நீள பங்கரில் ஆறுபேர் இருக்கிறோம். கிழவிக்கு பக்கத்தில் யாரும் போகவில்லை. கிழவி ஒரு உருத்திராட்ச மாலையை கையில் வைத்துக்கொண்டு “அப்பனே, முருகா, பிள்ளையாரப்பா” என்று எல்லா கடவுளுக்கும் பங்கருக்குள் வரும்படி இன்விடேஷன் கொடுத்துக்கொண்டு இருக்க, எமக்கோ நாற்றம் தாங்க முடியவில்லை. மேலே வேறு அவன் குண்டு போட்ட பாடில்லை. பாவிகளா ஏண்டா இந்த சுத்து சுத்திறீங்க? வந்தமா போட்டமா என்று போகவேண்டாம்?

மூன்றாவது ரவுண்ட், பதிகிறான். மாமரத்துக்கு மேலால் கிரீச்சிக்கொண்டு சத்தம், அரை வினாடி தான், “டம்டமாங்” என்ற பெருத்த சத்தத்துடன் குண்டு விழுந்து வெடிக்கிறது. பங்கர் வாசல் அப்பாவுக்காக திறந்து இருந்ததால் படீர் என்று காற்றும் புழுதியும் உள்ளே அடிக்க, எல்லோரும் ஏக நேரத்தில் அப்பாஆஆஆஆஆஆ என்று கத்தினோம். அண்ணா உடனேயே வெளியே போய் அப்பாவை பார்க்க எத்தனிக்க அம்மா அவனை உள்ளே இழுத்தார். குண்டு இன்னமுமே சிதறிகொண்டு இருந்தது. ஒரு சில சன்னங்கள் பங்கர் வாசல் மட்டும் வந்து விழுந்தன. தென்னங்குற்றிகளுக்கிடையே இருந்து மணல் அதிர்ச்சியில் சிந்திக்கொண்டு இருந்தது. தலை எல்லாம் மண். அப்பா என்ன ஆனார்?அம்மாவும் நாங்களும் கதறுகிறோம். இரண்டு செக்கன் இருக்கும், அண்ணன் சொல்வழி கேட்காமல் எழுந்து ஓடுகிறான். எங்களுக்கு டிக் டிக் என்று இருக்கிறது. கடவாய் எல்லாம் தன்னாலே அடித்துக்கொள்கிறது. நடுக்கம். விமானம் அடுத்த ரவுண்ட் வருகிறது. கொஞ்ச நேரத்தில் அண்ணா திரும்பி ஓடி பங்கருக்குள் நுழைகிறான். அவனுக்கு பின்னால் அப்பா பட படவென உள்ளே நுழைந்ததை பார்த்த பிறகு தான், எங்களுக்கெல்லாம் நெஞ்சுக்குள் தண்ணி வந்தது, அம்மாவை திரும்பி பார்த்தேன்.

அம்மா இன்னமுமே வீறிட்டு அழுதுகொண்டு இருந்தார். அப்போது பிறந்த குழந்தை போல!
The secret of the greatest fruitfulness and the greatest enjoyment of existence is: to live dangerously!
--Friedrich Nietzsche, The Joyful Wisdom

பின் குறிப்பு:
அது தான் இந்த பதிவின் கிளைமாக்ஸ். நாங்கள் பங்கருக்குள் இருக்கும் போது மேலும் மூன்று குண்டுகள் எங்கள் வீட்டில் விழுந்ததும், நல்ல காலம் அப்பா அந்த இடத்திலேயே விழுந்து படுத்ததால் உயிர் தப்பியதும், பின்னாலே நடந்த பல நூற்றுக்கணக்கான குண்டுவெடிப்புகளும், நான் பதுங்கிய பங்கர்களும், பல சுவாரசிய விஷயங்கள் என்று இந்த பதிவு தொடரலாம் தான். ஆனால் நீண்டுவிட்டது.
சென்ற வருடம், நான் யாழ்ப்பாணம் போயிருந்த போது, அந்த மாமரத்தடிக்கு போயிருந்தேன். பங்கர் இருந்த இடம் குப்பை போட்டு மூடியிருந்தது. அதற்குள் இருந்த கடவுள்களும், விளையாட்டுகளும், பயங்களும் … எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம்.

Author: கரவைக்குரல்
•10:54 AM
கலை என்பது ஒரு ஊடகம் என்று கூட சொல்லலாம்,அவரவரின் ரசனைகளுக்கு தீனி போடும்படியாக கலைகள் அமைந்துவிடுவதும் அவையே மக்கள் மத்தியில் இடம்பிடித்துவிடுவது தான் வழமை,அப்படியான கலைகளும் மக்களுக்கு செய்திகளை கொண்டு செல்லும் ஒரு ஊடகமாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
அவை அதாவது மக்களுக்கு எடுத்துச்செல்லவேண்டிய கருத்துக்களை சாதாரணமாக பேச்சுக்களால் சொல்வதைவிடுத்து அவற்றை ஏதாவது இசைவடிவிலோ அல்லது ஏதாவது ஒரு கலை ஊடகத்தின் வாயிலாகவோ சொல்லுவதன் மூலம் அந்தந்த விடயங்கள் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைவதோடு ஆணித்தரமாக மனதில் இடம்பிடித்துவிடும் என்பதையும் மறுக்க முடியாது,
ஓவியங்கள்,நாடகங்கள்,வில்லிசைகள்,பல்வேறு கருத்துக்களை சுவாரஷ்யமாக அலசும்.பட்டிமன்றங்கள் போன்ற கலைகள் இவற்றில் முக்கியமாக நினைவில்வருகின்றன.

அந்த வகையில் தாயகத்தில் சிறந்த ஒரு கலை தான் வீதிநாடகம், நாடகங்களின் வகைகளுக்குள் இவற்றையும் அடக்கலாம் எனினும் இந்த வகையான நாடகங்களுக்கு ஒரு தனிப்பட்ட சிறப்பான இடம் உண்டு,சில வேளைகளில் எந்த வித அலங்காரங்களுமின்றியே நடிகர்கள் மேடையேறிவிடுவதுண்டு.உண்மையில் நாடக நடிகர்களுக்கு தங்கள் நடிப்புத்திறனை வெளிக்காட்டுவதில் வீதி நாடகத்தில் கொஞ்சம் சிரமம் என்று தான் நான் சொல்வேன்,ஏனென்றால் அதில் எந்த வித உடையலங்காரங்கள் மற்றும் மேடை அமைப்புக்களின்றி நடத்தும் நாடகமாதலால் கொஞ்சம் கடினம் தான்.தங்களை நடிகர்கள் என்று அடையாளப்படுத்துவதற்காக தங்கள் தலைகளிலோ அல்லது இடுப்பிலோ ஏதாவது நிறத்துடன் கூடிய துணியைக்கட்டிக்கொள்வர், கூடுதலாக மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறமுடைய துணிகளை கட்டியிருக்கவே கண்டிருக்கிறேன்.அதனோடே முடியும் வரை நடித்துவிட்டு வெளியேறுவர்,அதேபோலத்தான் அந்த அந்த பாத்திரங்களுக்கு ஏற்றபடியே சாதரண உடைகள் அணிந்து சிலர் வருவர் மேடைகளில்,
இதிலென்ன சிறப்பம்சமென்னவெனில் சிறிதளவும் ரசிகர்களை முகம் திரும்பாதபடி அவர்களின் நடிப்புத்திறன் இருக்கும்,அத்துடன் பார்வையாளர்கள் வட்டவடிவமாக சூழ்ந்து இருப்பதால் நடிக்கும் வேளைகளில் விடப்படும் எந்தவொரு சின்னத்தவறும் கூட பார்வையாளர்களால் உணரப்படுமென்பதால் மிகக்கவனமாக நடிகர்கள் இருக்க வேண்டும்,இதனாலேயே கொஞ்சம் சிரமம் என்றேன்,இவை எல்லாவற்றையும் விஞ்சி மக்களின் ரசனைக்கு ஏற்றபடியே நடித்து வெளியேறுவர் நடிகர்கள்.

பொதுவாக வீதி நாடகத்தின் கருவாக அந்த அந்த காலத்திற்கு ஒப்பான கருவையே தெரிந்தெடுப்பர்.சாதரணமாக நாடகங்களாக இருந்தால் இலக்கியக்கதைகளோ அல்லது புராணக்கதைகளோ அல்லது வாழ்வியல் கதைகளோ அவற்றை அலங்கரிக்கும்,ஆனால் வீதி நாடகங்களில் ஏதாவது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஊட்ட வேண்டும் என்றோ அல்லது அரசியல் நிலைகளை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்றோ சிந்திப்பதால்தான் வீதிநாடகத்தை தெரிவுசெய்வர் இயக்குனர்கள்.அது மட்டுமல்ல இலகுவாக விரைவாக கருத்துக்கள் மக்களை அடைய வேண்டும் என்று சிந்திப்பவர்கள் தெரிவுசெய்யும் கலைதான் இந்த வீதிநாடகம்.
உதாரணத்திற்கு சுற்றுச்சூழல் பாதிப்பு [பற்றி மக்கள் மத்தியில் அவசரமாக உணர்த்த வேண்டிய கட்டாயம் உணரப்படுமிடத்து இந்த வீதி நாடகம் தெரிவுசெய்யபடும் எனபதில் மறுப்பிற்கு இடமில்லை.

அது மட்டுமல்லாமல் இவை மக்களை நோக்கி இது கொண்டு செல்லபடும்.பெரிய பெரிய நாடகங்கள் என்றாலோ அல்லது பெரிய பெரிய மேடைகளில் இடம்பெறும் நாடகங்கள் என்றாலோ அவற்றை சகல பாமர மக்களுக்கும் பார்ப்பதற்கோ அல்லது ரசிப்பதற்கோ கிடைக்கும் என்று சொல்ல முடியாது,அதனால் அப்படியான மக்களை நோக்கி இந்த வீதிநாடகம் வீதி வீதியாக சென்றுகொண்டிருக்கும்,இதன் மூலம் மக்களின் ரசனைக்கும் தீனி என்பதோடு அவர்களுக்கு செல்ல வேண்டிய கருத்தும் சென்றுவிடும் எனபது தயாரிப்பாளர்களின் யுக்தி,
அது மட்டுமல்லாமல் இந்த நாடகங்களில் இடம்பெறும் வசன நடைகள் ஒருபோதும் மக்களில் பேச்சுமொழியைவிட்டு விலகமாட்டாது.சாதரண வாழ்க்கையில் புழக்கத்தில் உள்ளவற்றை மட்டுமே நாடக உரையாடல்களில் அவதானிக்கமுடியும்,இவயெல்லாம் இந்நாடகத்தின் சிறப்புக்கள்

இவற்றிற்கெல்லாம் எப்பொழுது எங்கு இடம்பெறும் என்றெல்லாம் முதலே அழைப்புவிடுவதுமில்லை,பிரச்சாரம் செய்வதுமில்லை,சுவரொட்டி ஒட்டுவதுமில்லை,திடீரென ஒலிபெருக்கியில் ஒலிக்கும் ”அன்பார்ந்த ....... மக்களே இன்று மாலை மூத்தவிநாயகர் ஆலய முன்றலில் ”புதுயுகம் காண்போம்” வீதி நாடகம் இடம்பெறவிருப்பதால் அனைத்து மக்களையும் மிக வேகமாவே வந்து கூடுமாறு பணிவாக வேண்டுகிறோம்,அந்த அறிவித்தலை மீண்டும் ஒருமுறை அறியத்தருகிறோம்” என்றவாறாக உடனடி அழைப்பாக மீண்டும் மீண்டும் அழைக்கும் ஒலிபெருக்கி அழைப்பில் ஊர் மக்களெல்லோரும் ஒன்றாகிவிடுவர். வீதி நாடகங்களின் சுவாரஷ்யமும் அதனூடாக தரப்படும் சிறப்பான விடயங்களும் மக்களின் வேகமான வருகைக்கான முக்கிய காரணங்கள்.(இங்கு குறிப்பிட்ட விடயம் மற்றும் நாடகத்தின் பெயர் எல்லாம் அறிவித்தலின் நடையை குறிப்பிடும்போது அதன் படியே கூறப்பட்டதே ஒழிய இது உண்மையாக இடம்பெறும் என்று எல்லோரும் அங்கங்கு இருக்கும் மூத்தவிநாயகருக்கு சென்று விடாதீர்கள்,ஹிஹிஹி)

இந்த வீதிநாடகம் ஐரொப்பிய மண்ணிலும் எம்மவர்களால் அரங்கேற்றப்பட்டது 
பற்றி அறியக்கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது
உணர்வுகளையும் எம்மவர்களின் கருத்துக்களும் அதில் பிரதிபலித்ததாக அறிய முடிந்தது,வீதி நாடகம் அங்கும் வீதிகளில் இடம்பெற்றமை அதன் சிறப்புக்களையும் அதன்மூலம் மக்களுக்கு கருத்துக்களை 
இலகுவில் அடையச்செய்யலாம் என்பதையும் உறுதிபடுத்தியிருக்கிறது.

இவ்வாறாக ஈழத்தில் இடம்பிடித்த கலைகளில் வீதி நாடகத்துக்கும் ஒரு சிறப்பான இடம் இருக்கிறது என்பதை உணரமுடியும்.இப்படியான கலைகள் என்றும் அழியவிடாது பேணிக்காக்க வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம். என்னதான் நாகரிகமான கலைகள் மற்றும் வீட்டிலுருந்தவாறே எல்லாம் பார்த்துவிடலாம் என்றவாறாக அமைந்த சில சீரழிக்கும் கலைகள் வந்தாலும் இப்படியான கலைகள் என்றென்றும் வாழ எல்லோரும் தயாராக வேண்டும.தயாரிப்பாளர்கள் தயாராகும் அதேவேளை ரசிகர்களின் ரசனையும் இப்படியான கலைகளின் சிறப்பை உணர வேண்டும்.

படம் ஆழியூரானின் நடைபயணத்திலிருந்து வீதி நாடகத்தின் அமைப்பை உணர்த்த வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டது
இது ஈழத்துமுற்றத்துக்கான எனது மீள் பதிவு.உங்கள் கருத்துக்களையும் பதிவுசெய்யுங்கள்

Author: M.Rishan Shareef
•6:18 PM
காலச்சுவடு பதிப்பகம் மற்றும் தமிழியல் இணைந்து நடத்தும் எட்டு ஈழத்து நூல்களின் வெளியீட்டுவிழா எதிர்வரும் சனிக்கிழமை (ஜூலை 03, 2010) மாலை ஆறு மணிக்கு, இந்தியா, சென்னை, எழும்பூர், இக்சா மையத்தில் நிகழவிருக்கிறது.


இது சம்பந்தமாக காலச்சுவடு பதிப்பக உரிமையாளர் திரு.கண்ணன் சுந்தரம், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர் திரு.கானா பிரபாவுக்கு வழங்கிய அறிமுகம் கீழே...






Author: தமிழ் மதுரம்
•8:01 PM
மிக மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் மெல்பேண் அப்புக்குட்டி என்னுடன் ஒரு ஒலிப்பதிவில் இணைந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். மிக மிக பிசியா, வேலைப் பளுவின் மத்தியில் ஓடியாடித் திரிந்த எங்கடை அப்புக்குட்டியைத் தேடிப் பிடித்து வந்து ஒரு குரல் பதிவினைச் செய்திருக்கிறேன்.




இது ஈழத்து முற்றம் வலைப் பதிவிற்காகச் செய்யப்பட்ட ஒரு சிறப்பு ஒலிப்பதிவு என்று கூறலாம். இந்தக் குரல் பதிவில் ஈழம் சம்பந்தமான நிறைய விடயங்களை அலசாது விட்டாலும் ஒரு சில விடயங்களை அலசியிருக்கிறோம் என்றே கூறலாம். எந்தவித ஆயத்தமும் இல்லாது திடீரென அப்புக் குட்டியைக் கண்டவுடன் செய்யப்பட்ட ஒலிப்பதிவு என்பதால் ஏற்கனவே ஈழத்து முற்றத்தில் வந்திருந்த தகவல்களும், பதிவுகளும் மீண்டும் வருகிறது என நினைக்கிறேன். அதற்காக அனைத்து வாசகர்களும் பொறுத்தருள்வீர்கள் என்று கருதுகிறேன்.




இந்தக் குரல் பதிவு பற்றிய உங்களது ஆக்க பூர்வமான விமர்சனங்களையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம். ஒரு சில இடங்களில் ஒலித் தெளிவின்மையும் காணப்படுகின்றது. யாவரும் பொறுத்தருள்வீர்கள் என்று நம்புகிறோம்.


குரல் பதிவினைக் கேட்க..

Get this widget | Track details | eSnips Social DNA




உங்கள் ஆதரவிற்கு நன்றிகளோடு, கமல் & அப்புக் குட்டி அன்கோ.



ஈழத்து முற்றம் இன்று இருநூறு பதிவுகள் என்கின்ற இலக்கினை எட்டியிருக்கின்றதென்றால் அதற்கான பிரதான காரணகர்த்தாக்காளாக விளங்குபவர்கள் எங்களது வாசகர்கள் ஆவார்கள். வாசகர்களின் ஊக்கத்திற்கும், சளைக்காது ஈழம் சம்பந்தமான பலதரப்பட்ட பதிவுகளையும், தகவல்களையும் தேடி எடுத்துப் பதிவேற்றும் எங்கள் சக வலைப்பதிவர்களுக்கும், மற்றும் அனைவருக்கும், எங்களோடு கைகோர்த்துப் பயணிக்கும் ஈழத்து முற்றப் பதிவர்களுக்கும் ஈழத்து முற்றத்தின் கடைக் குட்டி எனும் வகையில் என்சார்பாகவும், ஏனைய எங்களின் அன்பு உள்ளங்கள் சார்ப்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



தொடர்ந்தும் வாங்கோ...! உங்கள் பேராதரவைத் தாங்கோ!
Author: Admin
•8:08 AM
தமிழர் எமது கலை, கலாச்சாரங்கள் மறைந்துவரும் நிலையில். நான் நீண்ட நாட்களாக அறிய ஆவலாக இருந்த விடயம் ஒன்றுக்கு முற்று முழுதான விளக்கம் கிடைத்திருக்கின்றது. அது வேறு ஒன்றுமல்ல. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கொம்புமுறி விளையாட்டு பற்றிய பல்வேறு விடயங்களை  அறிந்து கொள்ள முடிந்தது.

எனது கிராமம்கூட கொம்புமுறி விளையாட்டுக்கு பிரசித்தி பெற்ற ஒரு கிராமமாகும். இக் கிராமத்திலே கொம்புமுறி விளையாட்டு இடம் பெற்ற இடம் கொம்புச் சந்தி என்று இப்பொழுதும் அழைக்கப்படுகிறது ஆனால் இங்கு இருக்கும் அநேகமானவர்களுக்கு கொம்புமுறி விளையாட்டு என்றாலே என்ன என்று தெரியாது.

 கலாபூசனம் ஆறுமுகம் அரசரெத்தினம் அவர்களை சந்திக்கக் கிடைத்தது. அவர் கொம்புமுறி விளையாட்டு தொடர்பாக பூரணமான விளக்கத்தினைத் தந்ததோடு. அவரால் கொம்புமுறி விளையாட்டு தொடர்பாக வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தினையும் தந்தார். அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

கண்ணகை அம்மனுடன் தொடர்பு பட்டதே கொம்புமுறி விளையாட்டு. மாநாய்கரின் வளர்ப்பு மகள். மாசாத்துவரின் மருமகள். கோவலனுடைய மனைவி. இவர்கள் மூவரும் செட்டிகள். இதனால்தான் கண்ணகியும் செட்டிச்சி அம்மை. மாதவிக்குப் பொன்தோற்றகோவலருடன் மதுரைக்குச் சென்ற கண்ணகை ஆயர் இடைச் சேரியில் தங்கியிருக்க. கோவலன் கண்ணகியின் இடது காற்சிலம்பை விற்க மதுரை நகர் வீதியிலே விலை கூறினான்.

பாண்டிமாதேவியின் சிலம்பை பறி கொடுத்த தட்டான். சிலம்புத் திருடன் கோவலன் என்று பாண்டி மன்னனிடம் குற்றம் சாட்ட விதி வலியால் தீர விசாரித்தறியாத மன்னன் கோவலனை மழுவால் வெட்டுவிக்கும்படி கட்டளை இட்டான்
கோவலன் கொலையுண்டான். இதை கண்ணகை அறிந்தாள். கடும் சினம் கொண்டாள். "காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என் கணவன்? என்று செங்கதிர்ச் செல்வனிடம் கேட்டாள் . உன் கணவனை கள்வன் என்ற இவ்வூரை தீ உண்ணும் என்றான் செங்கதிர்ச் செல்வன். தலைவிரி கோலம். ஒரு கையில் சிலம்பும் மறு கையில் வேப்பம் குழையோடும். மன்னனிடம் சென்று வாதாடி வழக்குரைத்து.சிலம்புடைத்துவழக்கு வென்றாள்.

மன்னனும் மனைவியும் உயிர் நீத்தனர். இடது முலை திருகி நகர் எரித்தால். ஆயர் இடைச் சேரிக்கு வந்தாள். ஆய்ச்சியர் வெண்ணை தயிர் என்பவற்றை அவள் மார்பிலே அப்பினர். சீற்றத்துடன் வந்து கொண்டிருந்த கண்ணகியின் முன்னால் கோவலன் கட்சி, கண்ணகை கட்சி எனப் பிரிந்து கொம்புமுறித்து விளையாடி கண்ணகை கட்சிக்கு வெற்றி கொடுத்து இளைஞர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். சினம் தணிந்த கண்ணகை சிரித்து மகிழ்ந்தாள். தாயே குளிந்தளிர்வாய் என்று அவர்கள் வேண்ட அம்மனும் குளிர்ந்தாள். இதுதான் கொம்புமுறி விளையாட்டு வந்த வரலாறு.

"கொம்பு எனப்படுவது வளைந்த மரத்தடியாகும். வெட்சி, கருவீரம், கரயாக்கு என்ற மரக்கிளைகளே பயன் பட்டன. வட சேரிக்கொம்பு 90 பாகை வளைவிலும் தென்சேரிககொம்பு அதை விடக்கூடிய வளைவிலும் இருக்கவேண்டும் என்பது விதி. இரண்டே முக்கால் விரல்க்கடையில் சரிகொம்பு இருக்க வேண்டும். இரண்டு விரக்கடை குச்சித்தோடு இருக்கவேண்டும். கொம்புகளின் அளவுப் பிரமாணம். ஏனைய கட்சியினால் பரிசீலிக்கப்படும். கொம்புகளுக்கு மூன்றரை முழம் (ஐந்தரை அடி) நீழமான பில்லிக்கம்புகள் வைத்து வெளுக்கயிற்றினால் வரிந்து பனிச்சை மரத்தின் கைகளின் பசை பூசி காய வைத்து எடுப்பர். கொம்புக்கு "அரிப்பு" எனப்படும் கயிறு கட்டப்படும்.

தூண்டில் போடுவோருக்கு தூண்டில் அரிப்புப் பற்றியும் நன்கு தெரியும். அரிப்பு என்பது ஒரு ஆள் நீளமான சுமார் ஆறடி நீளக் கயிறாகும். இது வெள்ளை ஆத்தி நாரினால் திரிக்கப்பட்ட வெளுக் கயிறாகவோ, மான் தோலினால் திரிக்கப்பட்ட கயிறாகவோ இருக்கும். இந்தக் கயிற்றுக்கு ஆமணக்கு என்னை பூசுவது வழக்கம். தென்சேரி வாரக் கொம்பு அரிப்பிலே உள்ள கொழு தவனையுடாக பெரிய வடத்தினைப்பூகுத்தி பெரு  மரமொன்றின் அடியில் பிணைத்து விடுவர். வட சேரிக் கொம்பின் கொளுத் தவணையுடன் ஒரு உலக்கை போடப்படும். வட சேரிக்கொம்பின் கொழு தவணையில் நீழமான வடமும் பூட்டப்படும்.

தென்சேரி வாரத்தினர் தமது கொம்பினை தயாராகப் பிடித்துக்கொள்ள வடசேரி வாரத்தினர் தமது கொம்பினைப் பூட்டுவதத்கு தயாராக நிற்பர். நீழமான வடத்திலே வடைசேரித் தென்சேரிப் பொது மக்கள் இழுப்பதட்குத் தயாராக நிற்பர். கொம்பு பூட்டும் போது தத்தமது கொம்புகளை பாது காக்கும் வகையில் பில்லி மிரட்டும் இழுபறி இடம் பெரும். சரியாகப் பூட்டப்பட்டதும்.பொது மக்களின் இழுவையினால் கொம்பு ஒன்று முறிந்து விடும். முறியாத கொம்புக்குரியவர்கள் வெற்றி ஆரவாரம் செய்வர்.இரு சேரிக்கும் பொதுவாக உள்ள ஈடகத்தை அலங்கரித்து அதில் தமது கொம்பினை வைத்து கொம்புமுறிப்பாடல்களை பாடுவார்.

வசந்தன் கூத்துக்கள், பொய்க்கால் குதிரை ஆட்டம், வினோத உடை அலங்காரம் என்பன இரவு முழுவதும் இடம் பெறும். கொம்பு முறிப்பில் கொம்பின் வலிமையோடு பல மந்திர, தந்திர வித்தாண்மைகளும் பயன்படுத்தப்பட்டன.

தோற்ற கட்சியினர் மறுநாள் போட்டிக்கு கொம்பு ஆயத்தம் செய்வர். போட்டி பலநாள் தொடரும். சுள்ளிக்கொம்பு 01, கொம்புத்தட்டுக் கொம்பு 03, கூடாரக் கொம்பு 05, ஏடகக் கொம்பு 07, தண்ணீர்க் கொம்பு 01 முறித்து விளையாடுவதற்கு இரண்டு பிரிவுகள் தேவை. கோவலன் கட்சியை வடசேரி என்றனர். கண்ணகை கட்சியை தென்சேரி என்றனர்.

கொம்புமுறி விளையாட்டின்போது பல சுவாரசியமான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் இன்னும் பல தகவல்களையும் கலாபூசனம் ஆறுமுகம் அரசரெத்தினம் அவர்களிடம் இருந்து அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.
Author: Admin
•10:49 AM
தமிழர்களுக்கென்று சில கலை, கலாச்சார பாரம்பரியங்கள் இருக்கின்றன. அவை இன்று மறைந்து வருவதைக் காண முடிகின்றது. ஆனாலும் இவற்றைப் பற்றி எல்லாம் அறிவதிலே எனக்கு ஆர்வம் அதிகமே.

அன்று தமிழர்களிடையே பல சமயம் சார்ந்த சம்பிரதாய நிகழ்வுகள் இடம் பெற்று இருக்கின்றன. மந்திர, தந்திர, மாய வித்தைகள் ஒரு புறமிருக்க சமயம் சார்ந்த பல நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் அதன் எச்சங்களைகூட இன்று காண முடியவில்லை.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை சமய சம்பிரதாயங்கலிலே அதிக நம்பிக்கை கொண்டவர்களே. நான் நான் பலரிடம் கேட்டு அறிந்து கொண்டவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

நான் பிறந்து வளர்ந்தது ஒரு விவசாயக் கிராமம் எனது கிராமத்திலே அன்று நடை பெற்ற ஆனால் இன்று அதன் எச்சங்களே இல்லாத சில நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

எனது ஊரிலே பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்று இருக்கிறது. (மட்டக்களப்பு, களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம்) கிராம மக்களின் வயற்காணிகள் நிறைந்திருக்கும் பகுதியிலே ஆலயம் அமைந்திருக்கின்றது. ஆலயத்துக்கும் வயற்காணிகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

வேளாண்மைக்கு பூச்சி புழுக்களின் தாக்கம் ஏற்படும்போது கோவில் மடைப்பள்ளி சாம்பலை எடுத்துவயலுக்கு தூவினர். அதற்குக் கட்டுப்படாதவிடத்து பிள்ளையாரை அபிசேகம் பண்ணிய நீரை எடுத்து தெளித்தனர்

சமய ஆசாரத்துடன் பட்டினியாக இருந்த போடியார் ஒருவர் ஒரு பிடி மிளகை வாயினுள் அடக்கி தீர்த்தக் குடத்தை தொழிலோ, தலையிலோ சுமக்க ஏனைய போடிமார் அவருக்கு வெள்ளை மேற்கட்டி பிடிக்க, மணி ஓசையுடன் ஐயர் சங்கு ஊத, பறைமேளம் ஒலிக்க, வடக்கிலிருந்து தெக்கு நோக்கி நீர் பாச்சும் ஒவ்வொரு வாய்க்காலிலும் மிளகு கொஞ்சத்தை சப்பித் துப்பி தீர்த்த நிறையும் கொஞ்சம் ஊற்றுவர். இதுவே தீர்த்தமெடுத்தல் என்பதாகும்.

வயல் அறுவடைக்குத் தயாரானபோது குருக்கள், ஐயர், காவலாளிகள் சகிதம் சென்று வயத் போடிமாருக்கு பொங்கத் பிரசாதம் வழங்குவதுசம்பிரதாயமாகும். சிறுபோக நெல் விளைவுற்ற பருவத்தில் பன்றிக் காவலுக்கு இரவில் தகரம் கொண்டு செல்வதும் கடமையில் தவறியோருக்கு தண்டனை வழங்குவதும் இறுக்கமான கட்டுப்பாடாக இருந்திருக்கின்றது.

அறுவடையின் பின் ஆண்டுதோறும் பிள்ளையார் கோவிலடியில் வட்டை அமுது என்ற மாபெரும் அன்னதானம் நடைபெறும். போடிமார் தமது வயல் பரப்புக்கேற்ற அரிசி, தேங்காய், தயிர், மரக்கறி வகைகள், காசு என்பவற்றை எல்லாம் சேர்ப்பர்.

கோவில் குருக்கள் குளக்கட்டில் உள்ள ஒரு இடத்தில் அமர்ந்திருப்பார். போடிமார் குடை, மேளதாளம், மணியோசை, சங்கொலி என்பவற்றுடன் சென்று கோவித்த பாவனையில் இருக்கும் குருக்களை சமாதானப் படுத்தி திருவமுதுக்கு எழுந்தருளப் பண்ணுவார். திருவிழா ஊர்வலம் போல் நடைபெறும் இவ விழாவில் பொதுமக்களும் பங்குபற்றி மகிழ்வர்.
மறைந்து வரும் தமிழர் நம் சம்பிரதாயங்கள் இன்னும் பல அவ்வப்போது உங்களை வந்து சேரும்.
Author: Admin
•4:28 AM
ஒவ்வொரு பிரதேசத்துக்கும் சில தனித்துவமான. பேச்சுத் தமிழ் இருக்கின்றது. ஒருவர் பேசுகின்ற தமிழை வைத்தே அவர் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று கண்டு பிடித்து விடலாம். அதிலும் கிராமப் புறங்கள் என்றால் சொல்லவேண்டியதே இல்லை. சில பேச்சுத் தமிழ் சொற்கள் இன்று மறைந்து கொண்டு வந்தாலும் இன்றும் பல சொற்கள் பயன்பாட்டிலே இருப்பதோடு அச் சொற்கள் பேச்சுக்கு இனிமை சேர்ப்பதாக இருக்கின்றன.

மட்டக்களப்பைப் பொறுத்தவரை சில சொற்களோடு "கா" சேர்த்து பயன் படுத்தும் வழக்கம் இருக்கின்றது. உதாரணமாக நாம் என்ன நடக்கிறது என்று கேட்பதனை என்னாகா நடக்கிறது என்று பேசுவார்கள். யார் - யாருகா, எப்போ - எப்போகா, வா - வாகா, தெரியுமா - தெரியுமாகா, சாப்பிட்டாச்சா - சாப்பிட்டாச்சாகா போன்று "கா" சேர்த்து பயன் படுத்தப்படுகிறது.

இங்கே பேசுகின்ற போது ஆணுடனோ, பெண்ணுடனோ பேசுவதாக இருந்தாலும் கா போட்டே பேசுகின்றனர். இப்போது இவ்வாறு கா போட்டுப் பேசுவது இளைய சமுதாயத்திடம் குறைவான பயன்பாட்டில் இருந்தாலும். வயது வந்தவர்களாலும், கிராமப்புறங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

என்ன என்பதற்கும் என்னகா என்பதற்கும் இடையிலே ஒரு அன்பு அல்லது பாசப்பிணைப்பு வித்தியாசங்கள் இருப்பதாக உணரப்படுகின்றது. என்ன என்பதனைவிட என்னகா என்பது பேசுபவர்களுக்கிடையே ஒரு நெருக்கத்தினை ஏற்படுத்துகின்றது. என்ன என்பது நாம் பேசும் தொனியிலே வித்தியாசப் படுகிறது. என்ன என்று கோபமாகவும் கேட்கலாம் சந்தோசமாகவும் கேட்கலாம். என்னகா எனும்போது பெசுபவர்களுக்குள்ளேயான உறவு அல்லது அன்பு நெருக்கமடைவதாக உணர்கின்றனர்.

இன்றும் கிராமப் புறங்களிலும், முதியவர்களாலும் கா சேர்த்து சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் பல பிரதேச பேச்சு வழக்குச் சொற்கள் இருக்கின்றன அவற்றையும் அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

சந்ரு
Author: வந்தியத்தேவன்
•1:59 AM
வடமராட்சியில் துன்னாலை என்னும் இடத்தில் இருக்கும் வல்லிபுர ஆழ்வார் என்ற விஷ்ணுகோவில் இலங்கை மக்கள் அனைவரிடமும் மிகவும் பிரபலம். சிவபூமியான இலங்கையில் மிகவும் குறைந்தளவான விஷ்ணு ஆலயங்களே இருக்கின்றன. வடபகுதியில் வல்லிபுர ஆழ்வாரும், பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலும் மட்டும் விஷ்ணு ஆலயங்களாக விளங்குகின்றன. வல்லிபுர ஆழ்வார்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என பிரசித்தமானது. அதிலும் கடல்தீர்த்தம் யாழ்ப்பாணத்தின் கலாச்சாரங்களில் ஒன்றாகவே விளங்குகின்றது. புரட்டாதி பூரணைதினத்தில் வங்காளவிரிகுடாவில் சக்கரத்தாழ்வார், ஆஞ்சனேயர் சகிதம் தீர்த்தமாட மாலையில் பக்தர்கள் புடைசூழ‌ செல்வார். காலையிலிருந்தே வடமராட்சியின் பல பாகத்திலிருந்தும்,தென்மராட்சி, வலிகாமம் போன்ற எனைய யாழ்குடாநாட்டின் பகுதிகளிலிருந்தும் மக்கள் வெள்ளம் துன்னாலையை நோக்கி வந்துகொண்டே இருப்பார்கள். பல வீதிகளில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்திருப்பார்கள். எண்பதுகளில் மாட்டுவண்டில்களில் பலர் வருகைதருவார்கள். பின்னர் காலமாற்றத்தில் ஏனைய வாகனங்களிலும் சிலர் கால்நடையாகவும் வருவார்கள்.



வல்லிபுர ஆழ்வார் கோவில் இராஜகோபுரம் 2002ல் எனது புகைப்படக் கருவியில் சுட்டது. இராஜ கோபுரத்தில் மஹாத்மா காந்தியின் சிலை கூட‌ இருக்கின்றது.



கோவிலிருந்து ஏறக்குறைய 3 கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலுக்கு தீர்த்தமாடச்செல்லவேண்டும். முன்னர் மூன்று மணற்குன்றுகளை கடந்து செல்லவேண்டும், தற்போது மணல் அகழ்வினால் ஒரே ஒரு குன்றுமாத்திரம் இருக்கின்றது. பருத்திதுறை துறைமுகம் வரை முருகைக்கல் பாறையினால் அமைந்த கடற்கரைப்பகுதி(ஆண்கடல் என்பார்கள்). பருத்தித்துறை முனைப்பகுதியில் இருந்து மணல்சார்ந்த நெய்தல் கடலாக அழகாகவும் மிகவும் ஆபத்தாகவும் காட்சிதருகின்றது.காங்கேசந்துறையிலிருந்து பருத்தித்துறை துறைமுகம் வரையான கடல் பாக்குநீரிணை ஆழம் குறைந்தகடல். அதன்பின்னர் ஆழம் கூடிய வங்காள விரிகுடா ஆரம்பமாகின்றது. இதனாலோ என்னவோ இலங்கையின் கிழக்குப்பகுதி கடற்கரை பெரும்பாலும் மணல் சார்ந்த கடலாகவே இருக்கின்றது. வருடத்திற்க்கு ஒருதடவைதான் கடலுக்கு தீர்த்தமாடச் செல்லும் பாதை பாவிக்கபடும். போகும் வழியில் கடற்தாவரங்களான இராவணன் மீசை போன்றவை கிடைக்கும். சிறியவயதில் சிப்பி, சோகியுடன் இராவணன் மீசையையும் பொறுக்கியது ஞாபகம் வருகின்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் சாரணர்கள், முதலுதவி அணியினர் எனப் பலரின் உதவிகளை ஆலய நிர்வாகம் ஏற்படுத்துகின்றது. பாடசாலை சாரணர் அணியில் இருந்தபடியால் சில தடவைகள் கடமையில் ஈடுபடும் சந்தர்ப்பம் கிடைத்தது. மாலைவேளையிலும் பூரணை நாளிலும் தீர்த்தம் என்பதால் அந்த நேரத்தில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவே இருக்கும் பெரிய அலைகள் உருவாகும். ஆனால் இதுவரை யாரும் அலையில் அடித்துச் சென்றதாக தெரியவரவில்லை. சிறுவர்கள் முதியவர்கள் எனப் பலரும் கடலில் குளிப்பார்கள். தீர்த்தம் ஆடமுன்னர் அந்தப் பகுதியில் குளிப்பது தடை செய்யப்பட்டிருக்கும். ஆஞ்சனேயரை கடலில் ஒரு தடவை போட்டு எடுத்ததன் பின்னர் குளிக்க அனுமதி அளிக்கப்படும். பின்னர் சந்திரன் உதயமாகும் போது மக்கள் கோவிலடிக்கு திரும்புவார்கள். தொண்ணூறுகளுக்கு முன்னர் கிழக்கிழங்கை, தென்னிலங்கை என இலங்கையின் பல பகுதியிலிருந்தும் மக்கள் வருவார்கள். தற்போது மிகவும் குறைந்துவிட்டதாக தகவல்.

நாங்கள் பதின்மவயதில்(டீன் ஏஜ்) இருந்த காலத்தில் தீர்த்தத்திற்க்கு போவதென்பது ஒரு சுற்றுலாபோல‌. வழியில் யூகேயில்(உபயகதிர்காமம்)சில நண்பர்களைச் சந்திப்போம் அங்கேயுள்ள தண்ணீர்ப் பந்தலில் மோர், சர்க்கரைத் தண்ணீர், பின்னாளில் ஜூஸ் என குடிப்பது வழக்கம். பின்னர் ஆனைவிழுந்தான் சந்தியிலும் தண்ணீர்ப் பந்தலில் பொழுதுபோக்கிவிட்டுத்தான் கோவிலுக்குச் செல்வது. ஆனைவிழுந்தானில் பேய் இருக்கின்றது என பரவலாக ஒரு கதை அடிபட்டதால் இரவு வேளைகளில் அந்தப் பாதையை பாவிப்பதில்லை. இந்த அனுபவம் பெரும்பாலான வடபகுதி மக்களுக்கு கிடைத்திருக்கும். வலையுலகிலும் சிலருக்கு கிடைத்திருக்கும் என நம்புகின்றேன்.

ஏற்கனவே ஈழத்துமுற்றத்தில் கிருத்திகன் வல்லிபுர ஆழ்வார் பற்றி எழுதியிருந்தாலும் என் உளறல்களில் இருந்து இன்றைக்கு வல்லிபுர ஆழ்வார் தேர் திருவிழாவை ஒட்டி இந்த பதிவு மீள் பிரசுரமாகின்றது.
Author: Unknown
•1:57 PM
எனக்குத் தெரியும். நான் ஏதோ பெம்பிளைப் பிள்ளையளுக்கு கண்ணாடி வளையல் வாங்கிக் குடுத்த கதை எழுதப் போறன் எண்டுதான் முக்கால்வாசிப் பேர் ஓடி வந்திருப்பியள் எண்டு. இது அதைப் பற்றின கதை இல்லைப் பாருங்கோ. அய்.. பாக்க வச்சேன் பழுக்க வச்சேன் பண்டிச் சோறு தின்னவச்சேன்.. வளீக்ஸ் வளீக்ஸ். இது வேற கதை.

உங்கள் எல்லாருக்கும் 'அங்கிறி' எண்டால் என்னெண்டு தெரியும்தானே. தெரியாட்டி உங்கட மரமண்டையளில எல்லாரும் ஒவ்வொரு குட்டு வச்சுக் கொள்ளுங்கோ. சின்ன வயசில நீங்கள் 'கோவம்' போட்டிருப்பியள் இல்லாட்டா ‘டூ' விட்டிருப்பியள், இல்லாட்டா ‘காய்' விட்டிருப்பியள். சரிதானே. இத வடிவா விளங்கப் படுத்த ஒராளைத் துணைக்குக் கூப்பிடுவமன். அந்தாள் எங்கடை வந்தியண்ணா. இப்ப நான் வந்தியரோட கோவம் போட்டால், வந்தியர்தான் என்ர அங்கிறி தெரிஞ்சுதோ.

பத்துப் பதினோராம் வகுப்பு வருகிற வரைக்கும் இந்த அங்கிறிப் பிரச்சினை இருக்கும். அங்கிறியின்ர சைக்கிள் என்ர சைக்கிளில முட்டினால், கன நாளா துடைபடாமல் தூசி படிஞ்சு கிடந்த சைக்கிள் அண்டைக்கு எண்ணை தண்ணி எல்லாம் போட்டுத் துடைபடும். அங்கிறியின்ர கொப்பியும் என்ர கொப்பியும் முட்டுப்பட்டால், என்ர கொப்பி உறை கிழியும். அங்கிறி என்ர உடுப்பில முட்டுப்பட்டால், உடுப்புக் கிழியும் எண்டு சொல்லுவன் எண்டு நினைச்சியளே, ‘உஃபு, உஃபு' எண்டு ஊதி விட்டுக்கொள்ளுவம். அதே போலத்தான் அங்கிறியின்ர உடம்பும், எங்கட உடம்பும் முட்டினாலோ, ஏன் அங்கிரி எங்களைக் கடந்து போகேக்க வாற காத்துப் பட்டாலோ ஒரே ‘உஃபு உஃபு' தான்.

இதில பெரிய பகிடி, அஞ்சாம் வகுப்புக்கு முன்னம் பெட்டையள், பொடியங்கள் (பெண்கள், ஆண்கள் எண்டு சொல்லோணும். சொல்லாட்டா ராசசுலோசனா ரீச்சரும், மாலியக்காவும் தோலுரிச்சுப் போடுவினம்) முட்டுப் பட்டாலும் இதே 'உஃபு உஃபு' கட்டாயம் இருக்கும். சில வேளை பொடியளின்ர கொப்பியளை பெட்டையளும், பெட்டையளின்ர கொப்பியளை பொடியளும் திருத்த வேண்டி வரும். அப்பிடித் திருத்தி திருப்பிக் குடுக்கிற கொப்பியளையும் ஊதித்தான் தீட்டுக் கழிப்பம். அதெல்லாம் ஒரு காலம்.

அது சரி, இந்த அங்கிறி, ‘உஃபு உஃபு' இதுக்கிள்ள வளையல் எங்க வந்தது எண்டு கேக்கிறியள் அப்பிடித்தானே. கதை சொல்லேக்கை நான் ஊரெல்லாம் சுத்தித்தான் வருவன். எங்க சுத்தினாலும் சுப்பற்றை கொல்லைக்கு வருவன். அதுவும் நாங்கள் ஆர் தெரியுமே? நேர நெத்தியில வைக்கிற பொட்டை தலையச் சுத்தி வந்து மூக்கில வைக்கிற ஆக்களெல்லே. அப்பிடிப்பட்ட ஒரு பாரம்பரியத்தில பிறந்த நான் சுத்தாமல் என்னெண்டு விஷயத்துக்கு வாறது பாருங்கோ. உப்பிடித்தான் 750 ரோட்டில போனால் 9 மைல் தூரத்தில இருக்கிற பள்ளிக்கூடத்துக்கு............ சரி சரி..நீட்டி முழக்காம விஷயத்துக்கு வா எண்டுறியளா? இப்பிடி நீட்டாட்டா கதை சின்னனாப் போடுமெல்லே. விஷயத்துக்கு வாறன்.

வளையல் எண்டத விளக்க திரும்பவும் வந்தியரைக் கூப்பிடுவம். வந்தியரும் நானும் இப்ப அங்கிறியள் சரியோ. ஆனா, அந்தாள் நல்ல மனிசன் தானே. அதனால அந்தாள் என்னோட ‘பழம்' விட்டுக் கதைக்க ஆசைப்படுகுது எண்டு வச்சுக் கொண்டால், இப்ப வந்தியர்தான் நான் சொல்ல வந்த ‘வளையல்'. அதாவது, இரண்டு அங்கிறியளுக்கை வளைந்து கொடுத்து சமாதானம் செய்ய வாற ஆள்தான் நான் சொல்ல வந்த வளையல். இந்த வளையலின்ர அங்கிறி வளைஞ்சு வரேல்லையோ, இவரின்ர மானம் கப்பலேறீடும். சில வேளை சில வளையல்கள் மற்ற அங்கிறியால் ‘கொம்மாண கொப்புவாண கதையாத' எண்டு அவமானப் படுத்தப்படுவதும் உண்டு. இந்தக் 'கொம்மாவாணக் கொப்புவாண கதையாத' எண்ட வார்த்தைதான் ஒரு வளையலுக்குக் கிடைக்கிற மெத்தப் பெரிய அவமானம்.

நீ ஏதோ பெரிய ஆள் மாதிரி கனக்க எல்லாம் எழுதிறாய், இந்த அங்கிறி வளையல் பற்றி உனக்கென்ன அனுபவம் இருக்கிறது எண்டு கேக்கிறியளே. இதில கலாநிதிப் பட்டம் பெறுமளவுக்க பல அனுபவம் இருக்கிறது, ஒவ்வொரு வகுப்பிலையும். தங்கவேலரின்ர கேம்பிறிட்ஜ் கொட்டிலில படிக்கேக்க, 7ம் வகுப்பில நான் மொனிற்றராய் இருந்தபோது, எங்கட வகுப்பில என்னைத் தவிர 42 பொடியள். அதில 39 பேர் எனக்கு அங்கிறியள், அவையளுக்கு நான் அங்கிறி. அவையள்ள சில பேருக்கு நான் வளையல், சில பேர் எனக்கு வளையல்கள். இப்ப சொல்லுங்கோ, எனக்கில்லாத தகுதியா.

பி.கு: எங்கட ஊர்ப் பொரி விளாங்காய் சாப்பிட்டிருக்கிறியளா? ஒரு சுப்பர் சாப்பாட்டுச் சாமான் அது. அது ஒரு காலத்தில் குழுமங்களுக்கிடையே வேறு அர்த்தத்தில் பயன்பட்டது. அது பற்றி ஈழத்து முற்றத்தில அடுத்ததாய் எழுதிறன்.
Author: சினேகிதி
•7:41 PM
ஊரில பள்ளிக்கூடங்கள்ல என்னதான் ஒழுங்காப் படிப்பிச்சாலும் ரியூசன் போகாட்டால் நமக்கெல்லாம் விடிவில்லை.விடிய 5 மணிக்கெல்லாம் பனி கொட்ட கொட்ட நித்திரை தூங்க தூங்க போனது இங்கிலிஷ் ரியூசனுக்கு. 5 மணிக்கு தொடங்கிறது இரவு 7-8 மணி வரைக்கும் படிப்பு படிப்புத்தான். நாங்கள் கொஞ்சப்பேர் சேரந்து நாவலடியில இருக்கிற ஒரு மாஸ்டர் வீட்ட
இங்கிலிஷ் ரியூசனுக்குப் போவம். 4 பெட்டையளோட ஒரு பெடியன் வெளவால். அவன்ர அம்மா விடிய அரை இருட்டில அவனுக்கு பவுடர் எல்லாம் பூசி அனுப்பி விடுவா. பாவம் அவன் விதியே என்டு வருவான் எங்களோட.தனிய வரேக்க கதைக்க மாட்டான். நசுக்கிடாமல் இருப்பான். பிறகு பின்னேரம் மற்றப் பாடங்களுக்கு ரியூசனுக்கு வரேக்க மற்றப் பெடியங்களோட சேர்ந்த உடனதான் அவனுக்கு வாய் திறவடும். விடிய ரியூசனுக்குப் போட்டு வரேக்க அங்க பக்கத்தில இருக்கிற கொஞ்சம் பெரியண்ணாமார் எங்களோட வாயடிக்கிறதுக்காக பள்ளிக்கூடப் பட்டப் பெயர்களைச் சொல்லி இல்லாட்டி 'எடியே கறுப்பி கொக்காவையும் கூட்டிக்கொண்டு வாறது ரியூசனுக்கு' என்டுவினம். வெளவால் கொஞ்சம் தூரத்திலதான் வருவான். தனக்கு எதும் கேக்காதமாதிரி அப்பாவி மாதிரி மூஞ்சையை வைச்சுக்கொண்டு போவான். நாங்களும் நல்ல திறம்தானே. கறுவா கட்டக்கரி அம்மம்மாட்ட சொல்லி விடுறன் (அப்ப அம்மம்மாமார் பெடியங்களுக்கு காது முறுக்கிறது)இப்பிடி ஏதாவது சொல்லுவம். என்ன பிரச்சனையெண்டால் இந்த அண்ணைமார் ஏதொ ஒருவிதத்தில சொந்தக்காரர இருப்பினம். பெருசா வாய் விடேல்லாது. அளவுக்கு மீறினால் வீட்ட சொன்னால் அவை சொல்லுவினம் அங்கள் சும்மா ஆசைக்குச் சொல்றாங்கள். உங்களை ஆர் வாய்காட்டச் சொன்னதெண்டு.

பிறகு பின்னேரம் ரியூசனுக்குப் போனால் அங்க ஒரே சண்டைதான். ஒவ்வொருநாளும் புதுப்புது விதமான சண்டை வரும்.5ம் ஆண்டு ஸ்கொலர்சிப் வகுப்பெடுத்தது ஈசாக்கா.அநேகமா எல்லாருக்கும் விருப்பமான ரீச்சர். அவாக்கு எங்கட சண்டை தீர்த்து வைக்கிறதே பெரிய பாடு. அநேகமாச் சண்டையைத் தொடக்கிறது பெடியங்களாத்தானிருக்கும். சண்டை முற்றினால் சண்டை பிடிக்கிற பெடியனைப் பிடிச்சு பெட்டையளுக்கு நடுவில இருக்க விட்டிடுவா. பெட்டையளில முட்டக்கூடாதெண்டு வாங்கில்ல 2 பக்கமும் bag புத்தகங்கள் எல்லாம் எடுத்து வைச்சிட்டு மூஞ்சையைத் தூக்கி வைச்சுக்கொண்டு அடிக்கடி முறைச்சுக்கொண்டு இருக்குங்கள் மூஞ்சூறுகள். ஈசாக்கா வீட்ட ஸ்பெசல் கிளாஸ் அல்லது நாடகம் பழக எண்டு போய் அங்கயும் சண்டையெண்டால் பாவம் ஈசாக்கான்ர அம்மா கூட வந்து விலக்குப்பிடிப்பா சில நேரம்.

அதெல்லாம் முடிஞ்சு அடுத்தடுத்த வகுப்புகளுக் வந்தால் படிப்பில போட்டி கூடிடும். பத்தாதக்கு வாத்திமார் வேற எரியுற நெருப்பில எண்ணையை விடுற மாதிரி அடிக்கடி போட்டி வைப்பினம். பெட்டையள் ஒரு ரீம். பெடியங்கள் ஒரு ரீம். எங்கட ரீமுக்கு கேட்ட கேள்விக்கு நாங்கள் பதில் சொல்லாட்டால் அவங்களுக்குப் போயிடும் கேள்வி. 1-2 மார்க்ஸ் இடைவெளியில வெற்றி வந்தால் நாங்கள் அவங்களை அலாப்பியெண்டுறது அவங்கள் எங்களை அலாப்பியெணடுவாங்கள். வெல்லுற ரீம் தோக்கிற ரீமை முறைச்சுக்கொண்டேயிருக்கும். அதுவும் பெட்டையள் கனக்க வாயடிச்சால் ஒரு சிரிப்புச் சிரிச்சுக்கொண்டே அப்பண்ணா சொல்லுவார் 'வாறவன் பாடு கஸ்டந்தான்' (அப்பண்ணா கணிதம் விஞ்சாம் சமூகக்கல்வி இப்பிடி எல்லாம் படிப்பிச்சவர் சதாபொன்ஸ்ல் - இப்ப உயிரோட இல்லை.அவரைப்பற்றித் தனிப்பதிவு போடணும்).

ஏதும் கணக்குத் தந்து போட்டு பெட்டையளின்ர மெதட்ல வேணுமென்டு பிழைகண்டுபிடிப்பார். பெடியங்களுக்குச் சப்போட் பண்றார் என்டு நாங்கள் கத்துவம். அவங்கள் அப்பண்ணா எங்களுக்குச் சப்போட் பண்றார் என்டு வாங்கிலுக்கு மேல ஏறி நிண்டுகொண்டு கத்துவாங்கள். இங்கயும் இந்தச் சொந்தக்காரப் பெடியங்கள் இருந்து துலைப்பாங்கள் அதால நாம என்ன செய்தாலும் சொன்னாலும் வீடுவரைக்கும் போயிடும்.

கொஞ்சக்காலம் தூரத்துச்சொந்தக்காரர் ஒராள் ரியூசனுக்கு director ஆ வந்திட்டார். அவற்ற மகன் வேற என்ர வகுப்பு.மனுசன் வகுப்புக்கு மேற்பார்வை செய்ய வரேக்க வாத்திமாரிட்ட வேற சொல்லிடும் இவள் எனக்கு மருமகள் என்டு. கறுமம் இதை இப்ப இங்க வந்துச் சொல்ல சொல்லி யாரு கேட்டது. பெடியங்கள் ஒருபக்கம் கத்துவாங்கள். எனக்குப் பயமா வேற இருக்கும். யாரும் குழப்படி செய்தாலும் சொந்தக்காரப்பிள்ளையளுக்குத்தானே அடி விழுறது. சொந்தமெண்டால் யாரும் கேக்கமாட்டினம்தானே. அதும் அவர் தன்ர மகன்களுக்கே ரத்தம் வாறளவுக்கு அடிக்கிற ஆள். இப்பிடி நான் ரியூசனில சுதந்திரமா இருக்கப் பல தடைகள் ஆனால் தடைகளைக் கண்டு துவளும் இனமா நாங்கள் :) எதையும் தாங்கும் இதயம் :)

நான் கனக்க அடிவேண்டினது தமிழ் படிப்பிச்ச மாஸ்டரிட்டதான்.அவருக்குப் பெட்டையள்ல ஏதோ கோவம். எங்கடா அடிக்கலாம் என்டு திரிவார். எங்களுக்கு மட்டுமில்ல பெரியக்காவைக்கும் அடிச்சிருக்கிறார். காதல் தோல்வியோ என்னவோ. யார் செய்ற பாவம் எப்பிடியெல்லாம் விளையாடுது. வகுப்புக்கு முன்னால தோட்டம். தோட்டத்தில வேலை செய்றாக்களை வாய் பார்த்துக்கொண்டிருந்ததுக்காக அவரிட்ட நான் அடி வாங்கியிருக்கிறன். பிறகு அந்த மாஸ்டர் நிர்வாகத்துடன் பிரச்சனைபட்டு அவரை வரவேண்டாம் என்டு சொல்லிட்டினமாம்.

எங்களோட படிச்ச பெடியங்கள் சில பேர் facebook இருக்கிறாங்கள். கிட்டடில ஒருத்தர் message பண்ணியிருந்தார். அதுவும் தன்ர பட்டப்பெயரைப் போட்டு ஞாபகம் இருக்கோ என்டு கேட்டு. ஓமோம் நீர் வைச்சிருந்த அந்த bag கூட ஞாபகம் இருக்கெண்டு பதில் போட்டன்.நிறையப்பேர் கொழும்பிலும் வெளிநாட்டிலும்தான் இருக்கிறாங்கள். என்னோட நடுக அராத்துப்படுற ஒரு பெயடின் இப்ப என்ன செய்றான் என்டு விசாரிச்சன் ..அவன் சிலோன் பாங்ல வேலை செய்றானாம்.அவன் சரியான கட்டைப்புட்டு ஆனால் சத்தமெண்டா தொண்டைகிழியக் கத்துவான் :)கையை வேற ஆட்டி ஆட்டிக் கதைப்பான். இப்பிடி 12 வருடங்களுக்குப்பிறகு பழைய வால்கூட்டங்களுடன் கதைத்தது சந்தோசமாத்தான் இருந்தது. ஆனால் அவங்கள் செஞ்ச அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமே. கிணத்தில தண்ணி குடிக்கப்போனால் பெட்டையள் வந்தால் தண்ணி ஊத்த மாட்டாங்கள். வாளியைப் பொத்தெண்டு வைச்சிட்டுப் போடுவாங்கள். இதை ஒருநாள் யாரோ ஒரு வாத்தியார் பார்த்திட்டு முறைப்பாடு செய்ததால பெட்டையள் என்டாலென்ன பெடியங்கள் என்டாலென்ன கிணத்தில இருந்து தண்ணியள்ளினா வாளில தண்ணிமுடியும் வரைக்கும் தண்ணிகுடிக்க வாறாக்களுக்கு ஊத்தோணும். இவங்கள் ஒருநாள் வாளிக்க குட்டிப்பாம்பு ஒண்டு நிண்டது கண்டிட்டும் காணாத மாதிரி ஒரு பிள்ளை தண்ணிகுடிக்க குனிஞ்சாப்பிறகு ஊத்திறமாதிரி ஊத்திட்டு பாம்பு என்டிட்டு ஓடிட்டாங்கள். அது பாவம் ஒரே அழுகை. சைக்கிள் சீட்ல வெடிகொளுத்திப்போட்டிருக்கிறாங்கள். தாங்கள் செய்ததெல்லாத்தையும் நாங்கள் செய்தது என்டு பொய் சொல்லி மாட்டி விடுவாங்கள். இதால எத்தின தரம் மொத்த வகுப்புக்கும் சேர்ந்து punishment கிடைச்சிருக்கு. அதும் அப்பண்ணா சரியான பிடிவாதக்காரன். தான் நினைச்ச பதில் வரும் வரைக்கும் விடவே மாட்டார். கோவத்தில வகுப்பெல்லாம் கூட கான்சல் பண்ணியிருக்கிறார். இப்ப அப்பண்ணாவும் இறந்த பிறகு ரியூசன் எப்படி நடக்குதோ தெரியா. என்ர அம்மா சித்தி மாமாக்கள் என எல்லாரும் படித்த ரியூசன் அது.

என்னடா ரியூசன் என்டாலே பெடியங்களைப் பற்றி மட்டும் எழுதியிருக்கிறன் என்டு நினைக்காதயுங்கோ. ரியூசனை நினைச்சால் வாற சந்தோசமான விசயங்கள் மட்டும் எழுதியிருக்கிறன். சோகங்களை உள்மனது ஞாபகம் வைத்துக்கொள்வதில்லையாம். நவசியண்ணா (இன்னுமொரு கணித ஆசிரியர் - அப்பண்ணாவின் அண்ணா) அவர் மந்திகை வைத்தியசாலையில் உடல் நலமற்று இருந்தது நாங்கள் பார்க்கப் போனது பிறகு அவர் ஒருநாள் இறந்துபோனது நாங்கள் எல்லாம் அந்த மாமரத்தின்கீழ் நின்று கதறிக் கதறி அழுதது இப்படி எல்லாமே ஞாபகம் வருது. அங்கு படித்த யாரும் இங்கு இருப்பின் தொடர்ந்து எழுதுங்கள்.
Author: கரவைக்குரல்
•9:42 AM


ஆவணி மாதம் பிறந்துவிட்டால் தொண்டைமானாறு செல்வச்சந்நிதியானுக்கு திருவிழா என்று பொதுவாக வடமராட்சி எங்கும் எல்லோரும் கொண்டாட தயாராகிவிடுவார்கள்,நல்லூரானைத் தொடர்ந்து சந்நிதியானுக்குத்தான் திருவிழா பதினைந்து நாள்கள்,அன்னதானக்கந்தன் என்று உலகம் புகழ்பாடும் சந்நிதி முருகனை நோக்கி எல்லோரும் படையெடுப்பர்,சில அடியார்கள் பொதுவாக அங்கேயே இருந்துவிடுவதுண்டு,அங்கேயே இருந்து முருகன் புகழைப்பாடியபடியும் வேண்டிய வரங்களை பிரார்த்தித்தபடியும் கூடியிருப்பர் சந்நிதியின் சந்நிதானத்தில்,
தூக்குக்கவடிகள் பறவைக்காவடிகள் கரகங்கள் இழுவைக்காவடிகள் என்று காவடிகளுக்கும் குறைவில்லை.

குறைவில்லை என்று சொன்னால் அங்கு சென்றவர்களுக்கு தெரியும் ஒன்றுக்கு பின் ஒன்றாக தூக்கு காவடிகள் மற்றும் பறவைக்காவடிகள் வரிசைவரிசையாக வரும்,அவற்றைப்பார்க்கும்போது மயிர்கூர்ச்செறியும்,பக்திரசம் மேலிடும்,



கதிர்காமக்கந்தனுக்கும் செல்வச்சந்நிதிக்கும் நிறையவே தொடர்புகள் இருப்பதால் இதை சின்னக்கதிர்காமம் அல்லது பால கதிர்காமம் என்று கூட இதை அழைப்பார்கள்,இதை விட அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட கதிர்காமம் போன்ற தோற்றப்பாடுடன் கூடிய முகப்புத்தோற்றம் அழகுடன் அமைந்திருக்க முருகப்பெருமானுக்கு இந்தமுறைதிருவிழா சிறப்புடனே நடந்தேறியிருக்கிறது.





இந்த ஆலயத்தில் காணப்படும் விருட்சம் பூவரசு,

மிகவும் பழமை வாய்ந்ததாக காணப்படும் இந்த விருட்சமும் வணக்கத்துக்குரியதாகும்,எப்போதும் அடியவர்கள் அதனடியில் இருந்தவாறே முருகன் புகழைப்பாடியபடியே பிரார்த்திப்பர்.

அதைவிட பக்திரசச்சொற்பொழிவுகள்,மற்றும் முருகன் புகழ் பாடும் கீர்த்தனங்களின் இசை நிகழ்வுகள், என்று இன்னோரன்ன நிகழ்வுகள் முருகன் வீதிகளை அலங்கரித்துக்கொண்டிருக்கும்.குறிப்பாக தொண்டைமானாறு ச ந் நிதியான் ஆச்சிரமப்பேரவை இதில் முக்கிய பங்கை வகிப்பதுண்டு.ஆச்சிரமத்தில் ஒவ்வொரு நாளும் முருகப்பெருமானின் வீதிவலத்திற்குப்பின் ஏதாவது ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்திருக்கும்,அதில் முருகன் புகழ் பாடி அதனைத்தொடர்ந்து அன்னதானம் கொடுப்பர்,அவர்கள் பரம்பரை பரம்பரையாக தந்தை வழியில் இப்போது முருக பக்தன் மோகன் அவர்களால் இது பரிபாலிக்கப்பட்டு வருகிறது.இதை விட முருகன் சந்நிதானத்திலும் அடியார்களின் முருகன் இசைப்படலம் இசைக்கபட்டுக்கொண்டேயிருக்கும்.
இப்படியாக முழுவதும் பக்திமயமாக தொண்டைமானாறு முருகன் வீதியெங்கும் விளங்கும்,

இதைவிட இந்த ஆலயத்தின் பின் புறமாக உள்ள தொண்டைமானாறில் எல்லோரும் நீராடுவதுமுண்டு,
சிறுவர்களும் பெரியவர்களும் நீராடி முருகனின் இறையருளை பெற்றிட வேண்டுவர்.சற்று ஆற்றில் கும்மாளங்க்களுக்கும் குதூகலங்களுக்கும் குறைவில்லை.
அதைவிடசில பாடசாலைகள் சந்நிதியானின் தேர் மற்றும் தீர்த்ததிருவிழாக்கு விடுமுறை கூட அளித்துவிடும்,சிறியவர்கள் இதில் பெரிய மகிழ்ச்சி,
இப்படியாக சந்நிதியானுக்கு திருவிழா என்றால் பெரியவர்கள் சிறியவர்கள் என்று எல்லோருக்கு ஒரே மகிழ்ச்சியும் கொண்டாட்டமும்தான்,பக்தி பரவசங்களுடன் மகிழ்ச்சிகொண்டாட்டங்களுக்கும் குறைவேயில்லாமல் நிகழும் சந்நிதியான் தீர்த்தமாடி உலகெங்கும் வாழும் எம் தமிழ் மக்களுக்கு அருள்பாலிப்பாராக


பிற்குறிப்பு: இந்த சந்நிதியானின் புகைப்படங்களை எனக்கு அளித்த நண்பர் உமாசங்கார் அவர்களுக்கு நன்றி
Author: M.Rishan Shareef
•11:25 PM
        கோடை காலங்களில் எப்பொழுதாவது மின்சாரம் தடைப்படும் நாட்களில்தான் இரவுகளில் மொட்டைமாடியில் உறங்கும் எண்ணம் உதிக்கிறது. அதன் தரையும் வெப்பம் உமிழும்தான் எனினும் இரவில் நேரம் கடக்கும்போது தென்றல் சற்றுச் சினேகமாகி குளிராக வீசும். பகல் முழுதும் அனல் சுமந்தலைந்த காற்று, இரவாகுகையில் நிலவிடம் போய்க் குளிர்ச்சியை வாங்கிவருகிறது. இதமான ஒரு தாலாட்டினைப் போல உடல் தடவித் தடவி வீசிப் போகிறது.

        அப்படியான ஒரு நிலையில்தான் மொட்டைமாடி உறக்கம் வாய்த்தது. மொட்டைமாடிகள் அகலமான தொட்டில்கள். ஆட மாட்டாது. அசைய மாட்டாது. எனினும் மனதில் நிம்மதி நிறைந்திருப்பவர்களுக்கு அதன் பரப்பெங்கும் ஆழமான உறக்கத்தை ஏந்திவருகிறது. அறைக்குள் விடிகாலைவரை சிறு வெளிச்சமும் தன்னை அண்டாமல் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குபவர்களுக்கு மொட்டை மாடி உறக்கம் சரிப்பட்டுவராது என நினைக்கிறேன்.

        இங்கெல்லாம் விடிகாலை நான்கு மணிக்கே உலகின் முதல் கீற்று கண்தடவிப் பார்க்கிறது. பிறகு மரண வீட்டுக்குத் தொலைவிலிருந்து வரும் உறவுகள் போல, சிறிது சிறிதாகக் கீற்றுக்கள் சேர்ந்துவருகின்றன. அத்தோடு காற்றை விழுங்கிய வெயிலைப் பின்னாலேயே கூட்டிவருகின்றன.

        கோடை காலக் காலை வெயில் சுளீரென அடிக்கும். அதன் மறைமுகக் கரங்களால் 'உறங்கியது போதும்.விழித்துக்கொள்' என உடல் தட்டித் தட்டி எழுப்பும். புருவங்கள் சுருக்கி, சிறிதாய் விழி திறந்துபார்க்க வானம் மிக அழகான நீல நிறத்தைத் தன் மேல் பூசிக் குளித்து, வெயிலில் காய்ந்துகொண்டிருக்கும். மொட்டை மாடிக்கருகில் மரங்களிருப்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள். இளங்காலையில் சிறு குருவிகள், பட்சிகள் அவற்றில் வந்தமர்ந்து ஏதேதோ பேசிக் கொண்டிருக்கும். கிளியின் ஓசையை 'கீ கீ' என்பது போல, பூனையின் ஓசையை 'மியாவ்' என்பது போல சில பட்சிகளின் ஓசையை என்னால் மொழிபெயர்க்க இயலவில்லை. அதன் ஒலியை உள்வாங்கும்போது இரசிக்கத் தெரிகிறது. ஆனால் தமிழின் எந்த எழுத்துக்களால் அதனைச் சுட்டி விளிப்பது எனத் தெரியவில்லை.

        பறவைகள் மனிதரை விடவும் அறிவார்ந்தவை என எண்ணுகிறேன். சில மனிதனின் மொழியை அப்படியே உள்வாங்கி மீளப் பேசுகின்றன. அதற்காக அவை எழுதி வைத்துக் கொள்வதில்லை. ஆய்வுகள் செய்வதில்லை. ஆனாலும் பேசுகின்றன. மனிதனால் இவ்வளவு வளர்ந்தும், இவ்வளவு கற்றும் பறவைகள் தங்களுக்குள் என்ன பேசிக் கொள்கின்றன என அதன் மொழியைக் கிரகிக்க முடியவில்லை. கற்றுக் கொள்ள முடியவில்லை.

        பறவைகளுக்கும் எனக்குமான உறவுகள் சிறுவயதிலிருந்தே வாய்த்தது. எனது சிறுவயதில் எங்கள் வீட்டுக்கு முன்பிருந்த வயலில் கோவணம் கட்டி வயலுழும் விவசாயியுடனும், ஏர் சுமக்கும் எருமை மாடுகளுடனும் சேர்ந்து சேற்றில் கால்கள் முழங்கால்வரை புதையப் புதைய அலைந்திருக்கிறேன். நாற்று முளைத்து பிடுங்கி நடும் காலங்களில் நானும் என் சிறுவிரல்களால் நாற்று, நாற்றாய்ப் பிரித்து சேற்றில் ஊன்றியிருக்கிறேன். அவ்வேளை காலுக்குக் கீழால் நண்டுகள் குறுகுறுக்கும். எனினும் கடித்து வைத்ததில்லை. வயல் அறுவடைக் காலங்களில் கூலிப் பெண்கள் வெட்டித் தரும் கதிர்களைக் கட்டுக் கட்டாகக் கொண்டு சேர்த்து அடுக்கியிருக்கிறேன். உடலெல்லாம் அரிக்கும். எனினும் அதிலோர் ஆனந்தம் இருக்கிறது. பின்னர் அக் கட்டுக்களையெல்லாம் ஒன்றாக அடுக்கி, மாடுகளைக் கொண்டு கதிர்களை மிதிக்கச் செய்வார்கள். எல்லாம் முடிந்த பின் நிலத்தில் கிடக்கும் நெல்லை மட்டும் கூட்டியெடுப்பார்கள். வைக்கோல் தனியாகக் குவியும்.

        அறுவடைக் காலங்களில் சில சமயம் வெட்டப்பட்ட கதிர் நாற்றுக்களுக்குள் சின்னஞ்சிறு குருவிக் கூடுகளிருப்பதைக் கண்டிருக்கிறேன். வயற்குருவி, நெல்லுக்குருவி அல்லது மழைக்குருவியின் கூடாக இருக்கலாம். அதற்குள் சில சமயம் முட்டைகளும், குஞ்சுகளும் கூட இருந்திருக்கின்றன. வண்ண வண்ண முட்டைகளை மூலையொன்றில் ஒன்றாகச் சேர்த்துவைத்திருக்கிறேன். குஞ்சுகளை தாய்ப்பறவை வந்து எடுத்துப் போகட்டுமென அப்படியே கூட்டுக்குள் விட்டு வைத்திருக்கிறேன். மொட்டையாகிப் போன வயலில் தாய்க் குருவிகள் வந்து இரைந்து இரைந்து தன் கூட்டினைத் தேடும். தாய்க் குருவிகளைக் கண்டதும் எனது கைக்குள் கூட்டினை வைத்து வான் நோக்கி ஏந்தி நிற்பேன். அவை ஒரு போதும் அருகினில் வந்து குஞ்சுகளை எடுத்துப் போனதில்லை.

        எங்கள் வீட்டுவேலியில் அடர்ந்து போய்க் குட்டையாகி பூக்காத, காய்க்காத எலுமிச்சை மரமொன்று இருந்தது. அதன் உட்புறத்தில் ஒரு முறை கொண்டைக் குருவிகள் கூடுகட்டி விட்டன. குருவிகள் அருகிலாச் சமயம் ரகசியமாக எட்டிப் பார்ப்பேன். நான் பார்த்திருக்க முட்டையிட்டு, குஞ்சு பொறித்து, அவையெல்லாம் பறக்கப் பழகியபின்பு கூடு வெறுமையாகிப் போகும். கூடும் இற்றுப் போய்விடும். பிறகோர் நாள் சோடிக் குருவிகள் மீண்டும் பறந்துவரும். புதிதாய்க் கூடு கட்டும். முட்டையிடும். குஞ்சு பொறிக்கும். எல்லாம் பறக்கப் பழகிய பின்பு கூடு இற்றுப் போகும். இப்படியாக ஒரு சுழற்சி முறையில் நடைபெற்று வருகையில் காய்க்காத குட்டை எலுமிச்சை மரம் முட்டைகளைப் பூவாகப் பூப்பது போலவும், குஞ்சுகளைக் காயாக்கிப் பார்ப்பது போலவும் தன்னை மலடென்று காட்டிக் கொள்ளாமல் மகிழ்வோடு காற்றில் அசைந்தாடும்.

        எல்லாம் நல்லபடியாகத்தான் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஓர் நாள் ஒரு திருட்டுப் பூனை அம் மரத்தின் கிளைகளுக்கிடையில் ஒளிந்திருந்த சிறு கூட்டைத் தன் பேய்நகங்களால் பிய்த்தெறிந்து குஞ்சுகளை ருசி பார்த்து விட்டது. சோடிப் பறவை வந்து குஞ்சுகளைத் தேடிக் கீச்சிட்டு மரத்தைச் சுற்றிச் சுற்றிப் பறந்தது. அவை மரத்திடம் இது குறித்து நியாயம் கேட்பது போலத் தோன்றியது. 'நல்லபடியாகப் பார்த்துக் கொள்வாயென்றுதானே உன்னிடம் விட்டுப் போனோம்' எனச் சண்டை பிடிப்பது போலிருந்தது. அதன் பிறகு எக்காலத்திலும் அக்குருவிகள் அம்மரத்தில் கூடு கட்டவென வரவில்லை. பின்னர் எந்தக் குருவிகளும் வரவில்லை. பின்னர் மரம் குற்றவுணர்வால் இற்றுப் போகத் தொடங்கியது.

        என் வீட்டில் சிறு குழந்தைகள் நடமாடத் தொடங்கிய நேரம், வீட்டுத் திண்ணையில் எப்பொழுதும் முறுக்குத் துண்டுகள், பிஸ்கட் துகள்கள் சிதறிக் கிடக்கும். இளங்காலையிலேயே சாம்பல் குருவிகளும், மைனாக்களும் வந்து அவற்றை இரையெனக் கொத்திக் கொண்டிருக்கும். இம் மைனாக்கள் வருவதை வீட்டுச் சிறுவர்கள் மிக நன்றாக அவதானித்திருக்கிறார்கள். சிறுவர்களின் அவதானம் நம்மை விடவும் கூர்மை வாய்ந்தது. மைனாக்களுக்கு முதலில் திண்ணையில் உணவிட்டு, பிறகு தலைவாசலில் உணவிட்டு, பிறகு சிறிது சிறிதாக வீட்டுக்குள்ளேயே வந்துபோகப் பழக்கியிருந்தார்கள். அவை வெகு இயல்பாக உள்ளே வந்து உணவுண்டு சென்றன. அவை வந்து அச்சமேதுமின்றி திருப்தியோடு உண்டு செல்வது வீட்டிலிருந்த எல்லோருக்குமே மிக ஆனந்தமாக இருந்தது. பிறகு வந்த அடைமழை நாட்களில் மைனாக்கள் வரவில்லை. பெய்த மழையில் அவை தங்கள் பழகிய தடங்களை மறந்து போயிற்று. மழை அழித்துப் போயிற்று.



        அதன் பிறகு ஒரு சேவலும் கோழிகளும் வளர்த்தோம். அது அதிகாரம் அதிகமிக்க சிவப்பும் மஞ்சள் நிறமும் கலந்த அழகுச் சேவல். பெரிய சேவல். வீட்டார் தவிர்ந்த வேறு யாராவது நமது வீட்டு எல்லைக்குள் நுழைந்தால் பழக்கப்படுத்திய காவல் நாயைப் போல விரட்டி விரட்டிக் கொத்தக் கூடியது. மேலே பாய்ந்து பாய்ந்து விரட்டக் கூடியது. அது போல இல்லை அதன் பெட்டைக் கோழி. மிகச் சாதுவானது. காலையில் கூட்டினைத் திறந்துவிட்டதும் எங்கோவெல்லாம் போய் மேயும். சரியாகப் பத்து மணிக்கும் பதினொரு மணிக்குமிடையில் வீட்டுக்கு வந்து முற்றத்தில் கிடந்த அதன் கூட்டுக்குள் ஏறி முட்டையிட்டுச் செல்லும். அதன் முட்டைகளைச் சேர்த்து வைத்து நாங்கள் ஒரு முறை அதனை அடைகாக்க வைத்து பன்னிரெண்டு குஞ்சுகளைப் பெற்றோம். கைக்கடக்கமான கோழிக் குஞ்சுகள் மிக அழகானவை. அவையும் பார்த்திருக்க வளர்ந்தன.

        எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருக்கின்றன என எண்ணி மகிழ்ந்த நாட்களில்தான் கூட்டுக்குள் அடைக்கப்பட்ட கோழிக் குஞ்சுகள் ஒவ்வொன்றாகக் குறையத் தொடங்கின. சில காலையில் எழுந்து பார்க்கும் பொழுது அனாதைப் பிணங்கள் போல உடலில் காயங்களோடு முற்றத்தில் இரத்தம் வடியச் செத்துக் கிடந்தன. பிறகுதான் இரவுகளில் திருடனைப் போல வரும் கீரிப் பிள்ளைகள் வேட்டையைக் காட்டுவது புரிந்தது. நாம் ஆசையாகப் பார்த்து இரசித்து வளரும் உயிர் கண்ணெதிரே செத்துக் கிடப்பதை காணச் சகிக்கமுடிவதில்லை ஒரு போதும். மிகுந்த கவலையடையச் செய்யும் கணம் அது. பிறகு எஞ்சியிருந்த எல்லாக் கோழிகளையும் அதன் குடும்பத்தோடு விற்றுவிட்டோம்.

        அதன் பிறகு நடந்ததுதான் சுவாரஸ்யமானது. முற்றத்தில் கோழிக்கூடு பாழடைந்து போய் வெறுமையாகச் சில மாதங்கள் அப்படியே கிடந்தன. நான் அதைப் புதுப்பித்தேன். கீரிப்பிள்ளைகள் வந்துபோன ஓட்டைகளை அடைத்தேன். நெளிந்திருந்த வலைக்கம்பிகளைச் சீரமைத்தேன். உயிர்கள் வாழ்ந்துபோன பரப்பு வெறுமையாகக் கிடக்கக் கூடாதென நான் வீட்டில் சொல்லி, கழுத்தில் சிவப்பு மாலையிட்ட பச்சைக் கிளியொன்றை கடையில் வாங்கிவந்து வளர்க்கத் தொடங்கினேன். அது பேசப் பழக்கும் பருவம் தாண்டிய கிளி. கூட்டுக்குள் தவறியேனும் விரலொன்றை இட்டால் கொத்திவிடும் முரட்டுக்கிளி. கொய்யாவும், பச்சை மிளகாயும், பழங்களும், பிசைந்த சோறும், பிஸ்கட்டும் இட்டுவளர்த்து வந்தோம். அதன் கூட்டுக்குள் எப்பொழுதும் பழங்களும் உணவுப் பொருட்களும் இறைந்து கிடக்கும்.

        இதுபோல கோடை நாளொன்றின் மாலைவேளையொன்றில் அந்தக் கிளிக் கூட்டிற்கு வெளியே அடைக்கப்பட்ட வலைக்கம்பிகளில் தொங்கியபடி இன்னுமொரு கிளியைக் கண்டோம். கூட்டுக்குள்ளிருந்த கிளி தன் உணவைக் கொத்தியெடுத்து, வெளியிலிருந்த கிளிக்குத் தன் சொண்டுகளால் ஊட்டிக் கொண்டிருந்தது. இது சில நாட்கள் தொடர்ந்தது. ஒரு நாள் கூட்டின் கதவை இலேசாகத் திறந்துவைத்து தூரத்திலிருந்து பார்த்திருந்தேன். பல நிமிடங்கள் கழிந்தபின்னர் வெளியிலிருந்த கிளி தானறியாமலே உணவின் மேல் ஈர்க்கப்பட்டு, அல்லது மற்றக் கிளியின் மேல் ஈர்க்கப்பட்டு கதவு வழியாகக் கூட்டுக்குள் வந்துவிட்டது. கதவை அடைத்து விட்டேன்.

        அவை இரண்டும் கூட்டுக்குள் இடைவிடாது காதல் செய்தன. இரண்டுமாகச் சேர்ந்து உணவிடும்போது,  தண்ணீர் வைக்கும் போது என் கைகளைக் கொத்திக் காயப்படுத்தின. இனி வளர்க்கச் சரிப்பட்டு வராது என உணர்ந்த நாளில் கூட்டினைத் திறந்து கிளிகளைப் பறக்கவிட்டேன். சடசடத்துப் பறந்த கிளிகள் அருகிலிருந்த மாமரத்தில் போய் நின்றன. பிறகு எங்கோ தொலைவு நோக்கிப் பறந்தன. எப்பொழுதாவது சில கிளிகள் மாம்பழம் கொத்த வருகையில் அவற்றுக்குள் அவையிரண்டையும் கண்களால் தேடுவேன்.

        பிறகு அதே கூட்டுக்குள் லவ்பேர்ட்ஸ் வளர்த்தேன். கிளிவகைதான் எனினும் சிறியவை. பல வர்ணங்களைக் கொண்டவை. விடிகாலையில் எழுந்ததுமே வாய் ஓயாத மனிதர்களைப் போலச் சத்தமாகக் கதைத்துக் கொண்டிருப்பவை. மிக அழகானவை. இரு சோடிகள் வாங்கிவந்து கூட்டினுள் இட்டேன். ஆணும் பெண்ணுமாகத் தனித்தனியே பிரிந்து அவை காதல் செய்தன. கொஞ்சிக் கொண்டன. பருகவென வைக்கும் நீரில் குளித்துக் கொண்டன. பட்சிகளை விற்றவரின் ஆலோசனைப் படி கூட்டுக்குள் செதுக்கித் துளையிட்டு மூடிய தேங்காய் மட்டைகள் இரண்டைத் தொங்கவிட்டேன். அவை முட்டைகளிட்டன. அடை காத்தன. குஞ்சுகள் பொறித்து அவையும் வளர்ந்து பெரிதாகின. இதில் ஒரு பிரச்சினை இருந்தது. ஆண் பட்சிக்கோ, பெண் பட்சிக்கோ சோடி இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. சோடியில்லையென்றால் அத் தனிப் பட்சி மற்ற எல்லாப் பட்சிகளோடும் மிக மூர்க்கமாக, இரத்தம் கசியச் சண்டையிடும். கொத்திக் கொள்ளும்.

        அதனால் கூட்டுக்குள் தனிப்பட்சி உருவாகினால் உடனே அதனை வேறு தனிக்கூட்டுக்கு மாற்றி அதை மட்டும் விற்றுவிடுவேன்.  இப்படியாகக் குருவிகள் பார்த்திருக்கப் பெருகிற்று. உணவிட்டுச் சமாளிக்க முடியவில்லை. அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஜோடிக்கும் தனித்தனியாக தேங்காய் மட்டைகளைத் தொங்கவிடக் கூட்டுக்குள் இடமற்றுப் போயிற்று. அதைவிடவும் முக்கியமாக, விடிகாலையில் எல்லாமாக எழுப்பும் சத்தத்தில் வீட்டில் எல்லோரினதும் உறக்கம் போயிற்று. பிறகு அவற்றை அக் கூட்டோடே விற்றுவிட்டோம். இப்பொழுது முற்றத்தில் எந்தக் கூடுகளும் இல்லை. வளர்ப்புப் பட்சிகளும் இல்லை.

        இவையெல்லாம் பல வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவங்கள். நாம் நேசித்துப் பாதுகாக்கும் எதுவும் நம்மை விட்டுப் பிரிந்துபோனால் எளிதில் மறந்துவிடுவதற்கில்லை. பறவைகள் வானில் பறக்கையில் தங்கள் தடங்களை விட்டுப் போவதில்லை. மனிதக் கண்ணுக்குப் புலப்படா வான்வெளிப் பாதைகளை அவை தம் விழிகளில், பறக்கப் பயன்படும் சிறகுகளில் ஒளித்துவைத்துக் கொண்டிருக்கின்றன.  சரியான திசையில், சரியான இலக்குகளுக்குப் போய்ச் சேர அப் பாதைகள் வழிகாட்டுகின்றன. பாதைகள் மட்டுமிருப்பினும் போதாது. பறக்கும் சுதந்திரம் வேண்டும். வாழும் சுதந்திரம் வேண்டும். தனது இருப்பைத் தான் தீர்மானிக்கும் உரிமை வேண்டும்.

        பட்சிகளுக்கே இப்படியென்றால் ஆதி முதல் ஒன்றாக வாழ்ந்து வரும் ஒவ்வொரு மனிதனிடமும் வாழ்வு குறித்தான எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும்? எவ்வளவு ஆசைகள் அவனை வழிநடத்தியிருக்கும்? சுதந்திரமாக, தனது இருப்பை, தனது பாதையைத் தேர்ந்தெடுத்த மனிதன் எவ்வளவு நிம்மதியாக இருந்திருப்பான்? அவனது வசிப்பிடங்களில் பிற ஏதேனுமொரு காரணியால் அவனது அமைதிக்குப் பங்கம் வரும்வரையில் நான் மேற்சொன்ன லவ்பேர்ட்ஸ் பறவைகள் போல ஒன்றாகச் சோடியாகக் கலந்து மகிழ்வாகப் பேசி மகிழ்ந்து, சிரித்து... ஒவ்வொரு மனிதனும் தன் கணங்களை மகிழ்வோடு நகர்த்தியிருப்பான்.

        அது போன்ற மனிதர்கள்தான் இன்று முள்வேலி திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு  நகர்த்தப்பட்டிருக்கிறார்கள். எனக்கே நான் நேசித்த பட்சிகள் குறித்தான நாட்கள் இன்னும் மறக்கவில்லை. நினைக்கும் கணந்தோறும் அவை வண்ணச் சிறகுகளை அசைத்தபடியும் அதன் மொழிகளை உதிர்த்தபடியும் மனம் முழுதும் பறந்துகொண்டே இருக்கின்றன. தனக்கான மண்ணில் அழகாகக் கூடுகட்டி வாழ்ந்து, ஆயுதங்களின் அறுவடை நாளில் தம் கூட்டினைக் குடும்பத்தைத் தொலைத்துத் தனித்துப் போன அப்பாவி வயற்குருவிகளாய் இன்று அடுத்தவேளை உணவை, நீரை அந்நியரிடம் எதிர்பார்த்தபடி பசியோடும், உடல் வருத்தங்களோடும் காத்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களின் மனங்களுக்குள் எத்தனை பட்சிகள் இருக்கும்? பட்சிகளை விடுவோம். அவர்களது பால்யங்களுக்குள், பழைய நாட்களுக்குள் வந்துபோனவர்கள் சுகமாயும், வலியாயும் எத்தனை தடங்களை விட்டுப் போயிருப்பார்கள் ? அந்த மனங்களுக்குள் தாம் நேசித்த எத்தனை எத்தனை மனிதர்கள் இருப்பார்கள்? தம் வாழ்வு குறித்தான எத்தனை எத்தனை கனவுகள், ஆசைகள் இருந்திருக்கும்? எல்லாம் பொசுங்கிப் போயிற்றா ?

        நான் ஒற்றைக்கிளிக்கு உணவிட்டுக் காட்டி, தந்திரமாக மற்றக் கிளியையும் பிடித்ததைப் போல, பத்து ஏக்கர் நிலத்துக்குள், பல இலட்சம் மக்கள் சேர்க்கப்பட்டு, இன்று அடைக்கப்பட்டிருக்கிறார்கள். முள்வேலி எல்லைக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். கோழியின் குஞ்சுகளைக் கீரிப் பிள்ளைகள் இழுத்துச் சென்று, இரத்தம் வடிய வடியக் கொன்று தின்றதைப் போல இளைஞர்கள், யுவதிகள் ஏதும் செய்யவியலாக் கதறல்களுக்கு மத்தியில் எந்தத் திசைக்கென்றறியாது, என்ன நோக்கங்களுக்கென்றறியாது இழுத்துச் செல்லப்படுகிறார்கள். வாழ்வு குறித்தான உரிமைகளும், ஆசைகளும், கனவுகளும் அப்படியே அழிந்து போக சடலங்களாகிப் போகிறார்கள். முள்வேலிக்குள் அகப்பட்டுக்கொண்டிருக்கும் எல்லா உயிர்களின் வாழும் உரிமையை, இருப்பின் அசைவுகளை அதைத் தாண்டிய ஆயுதக் கரங்கள் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன.

        நம் உடலில் சாதாரண ஒரு சிறு கீறலுக்கே எவ்வளவு துடித்துப் போகிறோம்? சிறு உராய்வு, குருதிக் கசிவுக்கே எத்தனை மருந்திடுகிறோம்? அங்கெல்லாம் அழிவாயுதங்கள் தம் பசி போகச் சப்பித் துப்பியவையாய் அங்கவீனர்களாக கை இழந்து, கால் இழந்து எஞ்சிய உயிரோடும், எஞ்சிய உடலுறுப்புக்களோடும் ஒழுங்கான மருத்துவ வசதிகளின்றி, வலிகளில் துடித்தபடி பல்லாயிரக் கணக்கானோர், ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகப் பரிதவித்துக் கிடக்கிறார்கள். உறவுகள் அழுதழுது ஓய்ந்து பார்த்திருக்கப் பலர் செத்துப் போகிறார்கள். இன்னும் ஒரு வேளை உணவின்றி, நீரின்றி பட்டினியால் பலர் செத்துப் போகத் தொடங்கியிருக்கிறார்கள். நாம் நேசிக்கும் உயிர்கள் நாம் பார்த்திருக்க உயிரற்றுப் போவதென்பது, அசைவற்றுப் போவதென்பது எவ்வளவு வேதனைக்குரிய விடயம்? எவ்வளவு துயரத்தை அது எடுத்துவரும்?

        அந்தத் துயரங்களையெல்லாம் மனதிலும் உடலிலும் சுமந்தவாறு அங்கு உங்கள் தாய், தந்தையரைப் போன்றே பெற்றவர்கள் இருக்கிறார்கள். உங்கள் நண்பர்களைப் போன்றே நண்பர்கள் இருக்கிறார்கள். உங்கள் பெண்களைப் போன்றே பெண்கள் இருக்கிறார்கள். உங்கள் குழந்தைகளைப் போன்றே குழந்தைகள் இருக்கிறார்கள். எல்லோருமாக மொத்தத்தில் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் இருக்கிறார்கள். எல்லோருக்குமாக வதைப்படவும் ஆயுதங்களாலும், பட்டினியாலும், நோயாலும் செத்துப் போகவும் இப்பொழுது இருப்பவர்கள் மட்டும் போதும்.

        இன்னும் முந்தைய வலிகளின்போது வடுக்கள் சுமந்து, உயிர் வாழவென அகன்றுபோய் வேற்று தேசங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களையெல்லாம் மீளவும் தம் தேசத்துக்கு அழைத்துக் கொள்ளப்போவதாகக் காற்றோடு வரும் செய்திகள் சொல்கின்றன. இருப்பவர்களுக்கே இடமற்று, உணவற்று, நீரற்றுப் போனநிலையில், இருப்பவர்களுக்கே வாழும் உரிமைகளற்ற நிலையில், எம் அகதிகளை ஏந்தியிருக்கும் நாடுகளே... அது மட்டும் உண்மையானால்,  உங்களையே நம்பிவந்த எம் மக்களை, உங்கள் சக மனிதர்களை இம் முட்சிறைகளுக்குத் திருப்பியனுப்பிவிடாதீர்கள்.  உங்கள் தேசத்தின் ஒரு மூலையில் அவர்கள் உயிருடனாவது வாழ்ந்துவிட்டுப் போகட்டும்.

        கொல்லும்போது வெறுமனே பார்த்திருந்தது போல, கொல்லப்படவும் மனிதர்களை அனுப்பி அவர்களது கண்ணீரால், இரத்தத்தால், உயிர்களால் உங்களுக்கான சாபங்களை நிரப்பிக்கொள்ளவேண்டாம்.
இறுதியாக எனது பழைய கவிதையொன்று !




எலும்புக்கூட்டு ராஜ்ஜியங்கள்


காற்றினைப் போல்
எங்கள் வாழ்க்கை
ஓரிலக்கில்லாமலும்...
அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டும்...

ஓடும் நதியினைப் போல்
எங்கள் பயணம்
ஓரிடத்தில் தரித்திருக்க முடியாமலும்...
திக்குதிசையின்றி பாய்ந்தோடிக்கொண்டும்...

வானவில்லினைப் போல்
எங்கள் சந்தோஷம்
நிலைத்து நிற்காமலும்...
உடனே கலைந்து போவதாயும்...

மயானபூமியைப் போல்
எங்கள் கனவுகள்
பயமுறுத்தும் அமைதியோடும்...
எலும்புக்கூடுகளின் ராஜ்ஜியங்களோடும்...

பாழடைந்த வீட்டினைப் போல்
எங்கள் எதிர்காலம்
எப்பொழுதும் பயமுறுத்திக்கொண்டும்...
எவராலும் கவனிக்கப்படாமலும்...

மீஸான்கட்டைகளைப் போல்
எங்கள் சமூகம்
அழிந்துகொண்டே இருப்பதாயும்...
அடையாளத்துக்காக வேண்டி மட்டுமாயும்...

மணல்மேட்டினைப் போல்
எங்கள் தேசம்
சரிந்துகொண்டே இருப்பதாயும்...
விலங்குகளின் எச்சங்களைச் சுமந்துகொண்டும்...

ஊசலாடும் ஒட்டடைகளைப்போல்
எங்கள் உயிர்கள்
எவராலும் வேண்டப்படாத குப்பையாயும்...
எப்பொழுதிலும் அறுந்துவிழக்கூடியதாயும்...

எங்களது உயிர்கள்
எடுக்கப்படும் கணப்பொழுதுகளில்
என்ன செய்துகொண்டிருப்பீர் தோழரே..
ஓர் அழகிய பாடலின்
ஆரம்ப வரிகளை
முணுமுணுத்துக் கொண்டிருப்பீரோ...?

* மீஸான் கட்டை - கல்லறை அடையாளம் / நடுகல்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


# நன்றி - யுகமாயினி இதழ் - ஜூலை, 2009

# நன்றி - புகலி இணைய இதழ்
# நன்றி - திண்ணை இணைய இதழ்