Author: மாயா
•7:45 AM
இன்று காலமான ஈழத்தின் நாடக, திரைப்படக்கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களின் தனிநபர் நகைச்சுவை நிகழ்சிகளின் சிறு தொகுப்பு...


Author: கானா பிரபா
•3:06 AM

"தம்பி! உமக்கு இதில் அவ்வளவு விளப்பம் இல்லை, பெரியாக்கள் கதைக்கேக்க இடையில வராதையும்"

ஊர்ப்பெரியவர்கள் யாராவது பேசிக்கொண்டிருக்கும் போது நடுவில் பாய்ந்து முந்திரிக்கொட்டையாய் நாமும் ஏதாவது கருத்துச் சொல்ல விழைந்தால் அந்தப் பெரியவர்களிடம் இருந்து கிட்டும் விமர்சனம் இப்படியாக இருக்கும்.

விளப்பம் என்பதற்கு குறித்த விடயம் குறித்த ஆழமான அறிவு, அல்லது அந்த விஷயம் பற்றிய பின்புலம் தெரிதல் போன்றதான ஒத்த கருத்துக்களைச் சொல்லலாம்.

"இதில எனக்கு அவ்வளவு விளப்பம் இல்லை, என்னை விட்டுடுங்கோ"
இப்படியான மறுமொழியை சாதாரணமாக நம்மூர் ஆட்களிடம் கேட்கக்கூடியதாக இருக்கும். அதாவது
ஏதாவது சிக்கல் தரக்கூடிய சமாச்சாரம் என்றால் அதில் ஏதாவது அரைகுறையாகக் கருத்துக் கூறப்போய் ஏன் சிக்கலில் மாட்டவேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வின் வெளிப்பாடாக அது அமையும்.

அதே சமயம் "இந்த விஷயத்தில் எனக்கு நல்ல விளப்பம் " இப்படியான எதிர்க்கருத்தாக அமையும் சொல்லாடல்களைப் பேச்சுவழக்கில் காண்பது அரிது. அதற்குப் பதிலாக
"எனக்கு இதைப்பற்றி நல்லாத் தெரியும்" என்பதான சொல்லாடலே பதிலீடாகப் பாவனையில் இருக்கின்றது.

ஈழத்தில் பரவலாகப் புழங்கும் விளப்பம் என்ற சொற்பதத்தை மலையாளிகள் அதிகமாகப் பயன்படுத்துவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் தமிழகத்தவர் இந்தச் சொல்லைத் தம் பேச்சுவழக்கில் உபயோகப்படுத்துகின்றார்களா என்பதை தமிழகத்து நண்பர்கள் தான் உறுதிப்படுத்த வேண்டும்.
Author: Subankan
•7:04 AM

“என்ன அன்டி, கையில பாக்கையும் காவிக்கொண்டு வந்திருக்கிறியள்? என்ன விசயம்?”
“ஒண்டுமில்லை, சண்முகமண்ணேன்ட கடையில நல்ல வெள்ளைச் சீனி வந்திருக்கு. கொழும்பு விலையைவிட கிலோ இருவது ரூவாதான் கூடவாம். அதுதான் வேணுமெண்டா வாங்கிவையுங்கோவெண்டு சொல்லிட்டுப் போக வந்தனான்”

எந்த ஒரு பொருளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைதான் இந்தக் கொழும்புவிலை. என்னதான் அதிகபட்ச விலை என்றாலும், தரைவழிப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பல கட்டுப்பாடுகளுக்கும் தடைகளுக்கும் இடையில் நடந்துகொண்டிருந்த கடல்வழிப் போக்குவரத்தாலும் இந்த விலை எங்களுக்கு எப்படியும் குறைந்தபட்ச விலையிலும் குறைவாகத்தான் இருக்கும்.



ஊர்க்கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலை சமயங்களில் கொழும்பு விலையின் இரண்டு, மூன்று மடங்கைவிட அதிகமாக இருக்கும் சந்தர்ப்பங்களும் இங்கே சகஜம். இந்த விலை அதிகரிப்பை பொருளின் தேவை, கடல்மார்க்கத்தில் எடுத்துவர ஆகும் செலவு, யுத்த சூழ்நிலை முதற்கொண்டு கடையில் இருக்கும் பதுக்கல் வரை தீர்மானிக்கும்.

இந்தக் கொழும்புவிலை என்பது பல ஆண்டுகாலப் பாவனையால் நம்மவர்கள் இரத்தத்தில் ஊறிவிட்டது. எந்தப் பொருளையும் அதன் கொழும்புவிலையுடன் ஒப்பிடுவதும், அதுகுறித்து அடுத்தவருடன் பேசிக்கொள்வதும், அதேபோல கொழும்புக்கு வருபவர்கள் குறைந்தவிலையால் தேவைக்கு அதிகமாக வாங்க விரும்புவதும் எம்மவரிடையே இயல்பான ஒன்று.

இந்த விலைவித்தியாசத்தால், கொழும்பிலிருந்து ஊருக்குப் பயணப்படும் ஒவ்வொருவரும் தமது சக்திக்கும் அப்பாற்பட்ட பொருட்களை தம்முடன் எடுத்துச்செல்வார்கள். மாரளவு தண்ணீரில், தலையில் பொருட்களைச் சுமந்துசென்றும், படகிலும், பின் முன்னாலும் பின்னாலும் பலகை அடித்த மண்ணெய் மோட்டார்சைக்கிளிலும் கொம்படி ஊரியான் பாதையில் பயணித்து, வீடு வந்து சேர்கையில் பொருட்கள் தமது உண்மையான தன்மையையே பல நேரங்களில் இழந்துவிட்டிருந்தாலும், கொழும்பிலிருந்து வந்தால் இப்படியாக பொருட்கள் காவிவருவதும், அதை உறவினர், அயலவருடன் பகிர்வதும் ஏறத்தாள எழுதப்படாத சட்டம்போன்றது.

பல ஆண்டுகளாக நம் பாவனையில் இருந்து இந்தக் கொழும்புவிலை நம் வட்டாரச் சொற்களில் ஒன்றாகவே மாறிவிட்டது. தரைவழிப் போக்குவரத்துகள் சீர்செய்யப்பட்டு, விலை வித்தியாசங்கள் இல்லாமல் போய்விட்ட இன்றும்கூட,
“மச்சான் பைக் ஒண்டு பாத்திருக்கன், இங்கை 1.60 சொல்லுறாங்கள். அங்க எவ்வளவு போகுதெண்டு ஒருக்காப் பாத்துச் சொல்லுறியா”
 என்ற நண்பனின் அழைப்பிலும், ஆப்பிள்களை பைக்குள் அடைந்துகொண்டு யாழ் செல்லும் ஆச்சிகளிலும், “கொழும்பு விலையில்…” என்று ஆரம்பிக்கும் யாழ்ப்பாணத்துப் பத்திரிகை விளம்பரங்களிலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது இந்தக் கொழும்பு விலை.

Author: Anonymous
•12:11 PM
என்ன கனகமக்கா அரக்கபரக்க ஓடிவாறியள் என்ன நடந்தது..என்ன மார்க்கண்டண்ணண்ர பிருந்தாவை காணேல்லயாமோ...அவள் உதில வதிரி சந்திக்கு தானே ரியூசனுக்கு போறவள்..

அது வந்து கமலாக்கா விடிய 6 மணிக்கு வகுப்பு எண்டு கருக்கலுக்குள்ளயே வெளிக்கிட்டிட்டாளாம்..8 மணிக்கு முடியிற வகுப்பு 10 மணி ஆயிட்டுது..ஆளை காணேல்ல...

அங்க சந்திக்கு பக்கத்தில சென்றி பொயின்ற் ஒண்டு இருக்கெல்லோ..அதில தான் அந்த படுபாவியள் பிடிச்சு வச்சிருக்கிறாங்களோ தெரியாது..அதான் எங்கட சுந்தரமண்ணை விசாரிக்க எண்டு போட்டார் அவருக்கு சிங்களம் நல்லா கதக்கத்தெரியும்...இங்க சின்னம்மாக்கா ஒரே ஒப்பாரி பச்சை தண்ணி கூட குடிக்கேல்லயாம்...



கொஞ்சம் பொறுங்கோ சுந்தரமண்ணை வாறார் என்னண்டு கேப்பம்..என்ன யாழ்ப்பாணத்தில இருந்து வாற வாத்தி வர பிந்திபோச்சோ...அப்பிடியெண்டா முதலே அறிவிக்கவெல்லோ வேணும் அத விட்டிட்டு .என்ன கண்டறியாத ரியூசன் நடத்துறாங்களாம் ரியூசன்..இந்த பெட்டைக்கும் கொஞ்சமெண்டாலும் பொறுப்பு இருக்கே..வாத்தி வரப்பிந்தும் எண்டா வீட்ட வந்து ஒரு சொல்லு சொல்லியிட்டு போயிருக்கலாம்..அத விட்டிட்டு பக்கத்தில கூடப்படிக்கிற பொடிச்சி வீட்ட போய் நிண்டிருக்காளாம்..நாங்கள் இங்கை நெஞ்சிடிச்சு கொண்டு...பொம்பிளபிள்ளைய பெத்து படிக்க விட்டிட்டு வயித்தில நெருப்பையெல்லே கட்டிகொண்டிருக்கவேண்டிகிடக்கு...நல்ல காலம் சுந்தரமண்ணை ஆமிக்காறனட்ட கேக்க முதல் ரியூசன்ல போய் விசாரிச்சது....



சொல்விளக்கம்

அரக்கபரக்க-மிகவேகமாக அல்லது படபடப்புடன் கூடிய என்ற கருத்தை குறிக்கும் சொல் பிரயோகம்

கருக்கல்-பொழுது நன்றாக விடிய முதல் உள்ள ஒரு மெல்லிய இருட்டு பொழுதினை குறிக்கும்...
மாலை சாயும் நேரத்தையும் கருக்கல் என்று சொல்வார்கள்..

கேப்பம்-கேட்போம்
Author: கானா பிரபா
•3:22 AM


"என்ன பிள்ளை வீடெல்லாம் ஒரே மச்ச வெடுக்கா இருக்கு, நாறல் மீனைப் பார்க்காம வாங்கீட்டியோ"
வீட்டு வாசல் படியை மிதிக்கும் முன்னமே ஐயாத்துரை அண்ணை கேட்கிறார்.


மேற்குறித்த வாக்கியத்தில் வரும் "மச்சம்" , "வெடுக்கு" ஆகியவை புதுமையான சொற்களாகக் குறிப்பாகத் தமிழகத்தவருக்குத் தென்படும்.

மச்சம் என்பது மீன் என்பதன் ஒத்த சொல் என்பது எல்லோரும் அறிந்ததே. அதற்கு நெருக்கமான உதாரணமாக கிருஷ்ண பரமாத்மாவின் "மச்ச அவதாரம்" என்பது மீன் வடிவம் எடுத்ததாக இதிகாசம் சான்று பகரும்.

ஈழத்துப் பேச்சு வழக்கில் மச்சம் என்பதைப் பொதுவாக மாமிசம் என்ற வகையறாவுக்கு ஒத்த கருத்தாகப் பாவித்து வருவது வழமை. எனவே வீட்டில் மீன் கறி என்றால் மட்டுமல்ல, கோழி, ஆடு, மாடு எதைக் கறியாக்கினாலும் "மச்சம்" என்ற பொது வழக்கில் அழைப்பதுண்டு. அதற்கு நேர்மாறாக தாவர உணவுகளை "சைவம்" சமைத்தேன் என்று அடையாளப்படுத்துவார்கள்.
தமிழக நண்பர் ஒருவர் கருத்துப்படி அசைவ உணவை "மச்சம்" என்று தமிழக வழக்கில் பாவிப்பதில்லை என்று சொன்னார். ஆனால் ஈழ வழக்கோடு பெரிதும் பொருந்திப் போகும் குமரி மாவட்டத்திலாவது இப்படியான சொற் பிரயோகம் இருக்கா என்ன?

அடுத்ததாக வரும் சொல் "வெடுக்கு"
மாமிசம் சமைத்தால் இயல்பாகவே கிளம்பும் வாசனையைத் தான் "வெடுக்கு" என்ற அடைமொழியிட்டுக் குறிப்பிடுப்பிடுவார்கள். "வெடுக்கென ஓடினான்" என்பதில் வரும் வேகம், விரைவு என்ற தொனியில் மாமிசம் காய்ச்சும் போது திடீரென நாசியைத் துளைக்கும் வாசனை மேலெழுந்து வருவதால் தானோ என்னவோ "வெடுக்கு" என்று அழைக்கிறார்கள்.
"வெடுக்கு" என்ற பதம் தவிர "வெடில்" என்றும் சம அர்த்தத்தோடு பேசுவார்கள். அதாவது "மீன் நாற்றம்" என்பதை "மீன் வெடுக்கு" "மீன் வெடில்" என்றும் சொல்லுவார்கள்.

புகைப்படம் நன்றி: இணுவில் கெளரி லோகேஸ்வரன் இணுவிலுக்குப் போன போது எடுத்தது facebook இல் போட்டவ
Author: கானா பிரபா
•4:58 AM

"உன்னாணை சொல்லுறன் கேளடி, உவன் பேசாமப் பறையாமைத் தான் போயிட்டான்"

"என்னானை நீ அந்த வீட்டுப் படி மிதிக்கக் கூடாது சொல்லிப் போட்டன்"

"அம்மாவாணை நான் அங்கை இனிப் போக மாட்டன்"

மேற்கண்ட வாக்கியங்களில் தொக்கி நிற்பது "ஆணை" என்ற பதமாகும். ஒருவர் தன்னை முழுதும் நம்பும் படியாகச் சத்தியம் செய்வதையே "ஆணை" என்ற பதத்தினை இணைத்து முன் சொன்னவாறு ஈழப் பேச்சு வழக்கில் புழக்கத்த்இல் இருக்கும்.

"நிசமாத்தான் சொல்றேன்" என்ற தமிழக வழக்கினையே ஈழமொழிவழக்கில் "உன்னாணைச் சொல்லுறன்"போன்ற சொற்களை இணைத்துப் பாவிப்பது வழக்கம்.

பொதுவாக ஒருவர் சத்தியம் செய்தால் அதை மீறக்கூடாது, மீறினால் ஆண்டவன் தண்டனை கொடுப்பான் என்பது ஒரு விதமான நம்பிக்கை. அதையே தாய், தந்தை விசேஷமான ஆயுதமாகப் பாவித்து "என்னாணை", "அம்மாவாணை" என்று இணைத்துச் சொன்னால் அதற்கு மீறி ஒன்றும் செய்ய முடியாத நிலை தான் ;). அந்தச் சத்தியத்தை முறிக்க வேண்டும் என்றால் குறித்த அந்தப் பெரியவர் "ஆணை விட்டுட்டன்" என்று சொல்ல வேண்டும். இப்படியான வேடிக்கையான வழமையை ஈழத்தில் இன்றும் காணலாம். தமிழகத்தில் இப்படியான நிலை இருக்கிறதா என்ன?

"அம்மாவாணை நீ படம் பார்க்கப் போகக்கூடாது"
"என்ரை அம்மாவெல்லே, ஆணை விடணை ஆணை விடு"
Author: கானா பிரபா
•3:18 AM
"ஊரில் ஒரு குமர் தனியனாப் போக வழியில்லை, சந்தியிலை நிண்டு இளந்தாரிப் பெடியள் அவளவையை சைற் அடிக்கிறாங்கள்"

ஈழத்து ஊர்களில் மேற்கண்ட சம்பாஷணையை ஊர்ப் பெரியவர்கள் வாயிலிருந்து விழக் கேட்கலாம். அந்த வாக்கியத்தில் வந்த இளந்தாரி என்பது கட்டிளம் காளை என்ற சொற்பதத்திற்கு நிகரானது. காதல் வயப்படுகின்ற பருவம் என்பது இன்னும் நெருக்கமான அர்த்தம் கொள்ளத்தக்கதாக அமையும். பெடியள் என்பது தமிழகத்தில் பொடியன் என்று புழங்கும் சொல்லுக்கு நிகரான அர்த்தம் கொண்டு அமையும்.

இளவட்டப் பொண்ணு, குமரிப் பெண் என்று அர்த்தம் கொள்ளும் சொற்பதமே ஈழத்துப் பேச்சு வழக்கில் அர்த்தப்படும் "குமர்ப்பெட்டை". பருவமடைந்த பெண்களை இங்கே அர்த்தப்படுத்தி அழைப்பதுண்டு. முன் சொன்ன இளந்தாரிக்கு பெண் பால் அர்த்தமாகவும் இது அமையும்.
Author: கானா பிரபா
•11:45 PM
"அக்கா! உங்கட வீட்டிலை பெரிய "ஏதனம்" ஏதாவது இருக்குதா பொங்கல் பொங்க?

மேற்குறித்த ஈழத்துப் பேச்சாடல் அமைப்பில் வரும் "ஏதனம்" என்பதன் பொருளாக அமைவது பாத்திரம் என்பதாக அமைந்திருக்கும். அதாவது பாத்திரம் ஏதாவது இருக்கிறதா என்பதை ஏதனம் என்ற மாற்றுச் சொல்லாகப் பயன்படுத்துவார்கள். பாத்திரம் என்பதைத் தவிர வேறு பொருட்களுக்கு ஏதனம் என்ற சொல் அமைவதாக எனக்குத் தெரியவில்லை (தெரிந்தால் சொல்லலாம்)

"ஏதேனும்" என்ற சொற்பதம் "ஏதனம்" என்று மருவியிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அகராதியிலும் இந்தச் சொல் காணக்கிடைக்கவில்லை.

தமிழக வழக்கில் அண்டா என்று சொல்லும் பாத்திரத்தை ஈழத்து மொழி வழக்கில் சருவச் சட்டி என்று பயன்பாட்டு மொழியாகப் பயன்படுத்துவதையும் காணலாம்.

அலைகள் இணையத்தில் வெளிவந்த
"காய்ச்ச நேரமில்லா கனகமக்கா" என்ற கவிதையை சன்னதமாடி என்பவர் இப்படி எழுதியிருந்தார். அதை ரசித்துப் பகிர்கின்றேன்.

சோத்துச் சட்டி சருவச்சட்டி
மச்சக்கறிக்கு தனிச்சட்டி
இது பொரியல் சட்டி
அது சொதிச்சட்டி
பெரிசா இருக்கிறது குழம்புச்சட்டி
கைபிடி இல்லாதது பால்கறிச் சட்டி
மூடியுள்ள சட்டி புட்டவிக்க
பானை சட்டி பொங்கலுக்கு
மரக்கறிச்சட்டி எப்பன் பெரிசு
புளியாணச் சட்டி இஞ்சாலை
திவசச்சட்டி செற் தனி
மச்சம் மாமிசம் படையல் சட்டி
கஞ்சி வடிக்க பழைய சட்டி
சாதி கூடியவைக்கு தனிச்சட்டி
கொஞ்சம் குறைஞ்சவைக்கு இன்னொன்று
நல்லாக் குறைஞ்சவைக்கு பழைய சட்டி
வேறை சிலருக்கு எவர்சில்வர் சட்டி
கோயிலுக்கு நாலு சட்டி
விரதத்துக்கு விசேடமான சட்டி
காஸ் அடுப்புச் சட்டி புதிசு
சபை சந்திக்கு பதினாறு சட்டியள்
தோட்டத்துக்கு தண்ணி ஊத்த தனிச்சட்டி
குருவிக்கு தண்ணி வைக்க இன்னொண்டு
குடிகாரருக்கு தனிச்சட்டி
கொலக்சனுக்கு வாறவைக்கு ஒரு சட்டி
அங்கை கிடக்குது பாயாசச்சட்டி
மேசைக்குக் கீழை முற்றிலும் புதுச்சட்டி
பறணிலை பலகாரச்சட்டியள்
மேசைக்கு மேலை மூடிச் சட்டியள்
கட்டிலுக்குக் கீழை சருவச்சட்டியள்
சாமி அறையிலை புதுச்சட்டியள்
படுக்கையறை முழுதும் பத்து பதினைஞ்சு
பறணிலை கிடக்கு அண்டா சட்டி
இடியப்பச் சட்டி தோசைச்சட்டி
றவ்வைச்சட்டி
பொரியல் சட்டி புண்ணாக்கு சட்டி
அவியல்சட்டி துவையல் சட்டி
அடுத்தவீட்டுக்கு அனுப்பும் சட்டி
பரிசோடை வாற குடும்பத்துக்கு டிசைன்சட்டி
பரிசில்லாமல் வாறவைக்கு புறம்பான சட்டி
ஒழுங்கா வட்டி தாறவைக்கு ஒருவகைச் சட்டி
ஒழுங்கில்லா மனிசருக்கு ஓட்டைச் சட்டி
முட்டைச் சட்டி முருங்கைக்காய் சட்டி
பெட்டைக்கு சீதனம் குடுக்கும் சட்டி
அப்பச் சட்டி உறொட்டிச் சட்டி
காலைச்சட்டி மாலைச்சட்டி
இரவு நேரம் இன்னொரு சட்டி
வெளி நாட்டு காசையெல்லாம் சட்டிகளாக்கி
காய்ச்ச நேரமில்லா கனகமக்கா
இருக்க இடமில்லாமல்
வீட்டுக்கு வெளியே
விழுந்து படுத்தாள்.

நன்றி: கவிதை பகிர்ந்த அலைகள் இணையம், படம் பகிர்ந்த கூடல் இணையம்

Author: கானா பிரபா
•1:05 AM

இஞ்சை தங்கமக்கா ! எல்லுப் போல சீனி நல்லெண்ணை இருந்தாத் தாங்கோ, ஆனைக்கோட்டைக்கு இவர் வாங்கப் போயிட்டார், வந்தவுடனை தாறன்"

மேற் சொன்ன உதாரணத்தில் வரும் எல்லுப் போல என்ற சொற் பிரயோகம் கொஞ்சம் சிறிய அளவில், அல்லது தமிழக வழக்கில் பயன்படுத்துமாற் போல "கம்மியா" என்ற பொருட் பதத்திற்கு ஒப்பானது.

தாயகத்தில் இருக்கும் காலத்தில் பக்கத்து வேலியால் எட்டி நின்று சீனி, உப்பு, எண்ணெய் போன்ற சாமன்களைப் பக்கத்து வீட்டுக்காரரிடம் அவசரம், ஆபத்துக்கு என்று வாங்கும் போது இப்படியான "எல்லுப் போல" என்ற சொல் பயன்பாட்டில் இருக்கும். கொஞ்சம் அதிகப் படியாகக் கேட்கும் தொனியில் கேட்டால் பக்கத்து வீட்டுக்காரர் பயந்து விடுவார்களோ என்ற காரணமாக இருக்குமோ என்னமோ.

"எல்லு" என்பதற்கு அகராதியில் என்ன விளக்கம் கொடுத்திருக்கின்றார்கள் என்று பார்த்தால் "நாள்", "சூரியன்" என்று மட்டுமே விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே அகராதியின் விளக்கத்தை இங்கே பொருத்திப் பார்க்க முடியாது. "எள்ளுப் போல" என்பது மருவி "எல்லுப் போல" ஆகியிருக்கலாமோ என்னவோ.

ஜாஸ்தி என்று தமிழகத்தில் வழங்கும் சொற்பதத்துக்குச் சம அர்த்தமாக ஈழத்து மொழி வழக்கில் "கனக்க" என்பது அமையும்.

"கனக்கப் போசாதையும், கண்டீரோ"

"திருவிழாவுக்கு கன சனம் வந்தது"

"கன சாமான்கள் கடையில் வந்திருக்காம்"

போன்ற உதாரணங்கள் "கனக்க" என்பதற்குப் பொருத்திப் பார்க்கப்படும் வார்த்தைப் பிரயோகங்களாகும்.





Author: கானா பிரபா
•2:33 AM
"எடியே! ஏனடி இடி விழுந்த மாதிரி கன்னத்திலை கை வச்சுக்கொண்டு யோசினை, கையை உப்பிடி கன்னத்திலை வச்சுக் கொண்டிருக்காதை, தரித்திரம் பிடிச்சுடும்".

மேற்கண்ட ஏச்சு வழக்கமாக ஈழத்துக் கிராமத்தின் பெரியவர்களால் சம்பாஷிக்கப்படும் ஏச்சுக்களில் ஒன்றாக இருக்கும்.

அடியே என்று தமிழக வழக்கில் இருப்பது தான் ஈழத்தில் எடியே என்று அமைந்து காணப்படும்.
எடியே என்பதற்கு ஒத்திசைவாக கேரளத்தின் மலையாளப் பேச்சு வழக்கிலும் "எடி" என்று வழங்கப்படுவதை மலையாளப் படங்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். அதே போன்று மலையாளத்தில் "எடா" என்று புழங்கப்படும் வார்த்தைப் பிரயோகம், தமிழகத்தில் "அடே" என்று வழங்கப்படும் அதே சமயம் ஈழத்தில் "எடேய்" என்று பயன்படுத்தப்படும்.

தமிழகத்தின் ஊர்களில் எடியே, எடி, எடே, எடேய் என்று ஈழத்தில் பயன்படுத்துவது மாதிரி வழக்கம் உண்டா தெரியவில்லை.

"எடேய் தம்பி" என்று அன்பாக வழங்கப்படும் சொல் அடிகளை கொஞ்சம் அழுத்திக் கடுமையாகப் பேசினால் அதுவே வன் சொல்லாக அமைகின்றது.

என்னடா இது ஈழத்து முற்றத்தில் எடியூரப்பா என்று நினைத்து வந்தவர்களுக்கு இப்போது விடை கிடைத்திருக்குமே ;)

படம் உதவி: விடை நோக்கி இணையத்தளம்
Author: கலை
•6:41 AM
புழுகமும், புழுகுதலும்!

இந்தச் சொற்கள் எங்கெல்லாம் பாவிக்கிறவை எண்டு எனக்குத் தெரியாது. ஆனால் நான் கேள்விப்பட்டது தென்மராட்சியில.

1. புழுகம்/புழுகு = மகிழ்ச்சி

- இண்டைக்கு கானாப் பிரபாட இடுகைக்கு நிறைய பாராட்டு கிடைச்சதுல, ஆளுக்கு நல்ல புழுகம்.

- ஷ்ரேயாட வீட்டை அவடை பெரியண்ணா ஆக்கள் போயிருக்கிறதினால, அவ பெரிய புழுகில நிக்கிறாவாம்.

2. புழுகுதல் = மற்றவரைப் பாதிக்காத பொய்களைச் சொல்லுதல் அல்லது உண்மைகளையே மிகைபடச் சொல்லுதல் / பெரிதுபடுத்திச் சொல்லுதல்

- அவன், நல்லா புழுகுவான். அவன் சொல்லுறதில பாதியைத்தான் உண்மையெண்டு எடுக்கலாம்.

- அவள் புழுகுறதை கேட்டுக் கொண்டு நிண்டா, எனக்கு விசர்தான் (விசரெண்டா இந்த இடத்தில பையித்தியமில்லை, ஒரு எரிச்சல்) வரும். ஏதோ எங்களுக்கு ஒண்டும் தெரியாதெண்ட நினைப்பில புழுகிக் கொண்டே போறது.

சரி, இனி எப்பவாவது, இப்பிடி ஏதாவது ஒரு சொல்லு, அல்லது எங்கட ஊர்ப் பழக்கம் நினைவுக்கு வரும்வரை நான் போட்டு வாறன்.
Author: கானா பிரபா
•1:37 AM

"ஏன் தம்பி! கோயில் பக்கம் காணேல்லை"
"என்ரை ஆச்சி செத்து ஒரு மாசம் ஆகேல்லை எல்லோ, எனக்கு துடக்கு அதுதான் வாறேல்ல"

"என்ன விமலா! வீட்டுக்கு வெளியாலை காணக்கிடைக்கிறேல்லை"
"ஓம் அன்ரி, மூன்று நாள் என்ர துடக்கு முடியேல்லை, அதுக்குப் பிறகு தான் வருவன்"

"தம்பிராசா! நாளைக்கு திருவெம்பாவை, கோயிலுக்கு வருவீர் தானே"
"இல்லையடா சிவம் இன்னும் குழந்தை பிறந்த துடக்குத் தீரேல்லை"

மேலே பார்த்த மூன்று வேறுபட்ட சம்பாஷணைகளிலும் வருகிறது பொதுவான ஈழ மொழி வழக்கான "துடக்கு" என்ற சொற்பதம்".

தமிழக மொழிவழக்கில் பெரிதும் பாவிக்கப்படும் "தீட்டு" என்ற சொல்லே ஈழ மொழி வழக்கில் "துடக்கு" என்று பரவலாகப் பயன்பட்டு வருகின்றது.

"துடக்கு" என்பது தமிழக மொழிவழக்கில் பயன்பாட்டில் உள்ளதா என்று அறியேன், இந்தச் சொல்லுக்கு ஆசூசம், கட்டு, சிக்கு, துடக்கென்னேவல், மகளிர் சூதகம் போன்ற சொற்களை ஒத்த சொற்களாகக் காட்டுகின்றது ஈழத்து அகராதி நூல்.

யாராவது ஒருவர் இறந்தால் குடும்ப உறவுகள் மட்டுமன்றி, அவரின் நேரடி
இரத்த சம்பந்தமுள்ளவர்களுக்கும் இந்த தீட்டு/துடக்கு என்பது ஏற்படும் என்பது முன்னோர் நம்பிக்கை. பொதுவாக இறப்பு வீட்டில் சாப்பிட்ட, நீர் அருந்திய இரத்த சம்பந்தமில்லாதோருக்கும் இந்தத் துடக்கு இப்படியானவகையில் தொடர்பு பட்டு வந்து விடுவதாகவும் கொள்ளப்படுகின்றது. எனவே குறித்த இறப்பு வீட்டில் "துடக்குக் கழித்தல்", அல்லது "தீட்டுக் கழித்தல்" முடியும் வரை சுபகாரியங்கள், கோயிலுக்குச் செல்வதைத் தவிர்த்து விடுவார்கள். கோயிலுக்கு நிதமும் செல்லும் வழக்கம் கொண்டோர் வெளி வீதியில் மட்டும் நின்று சுவாமி தரிசனம் செய்வார்கள். துடக்குக் கழித்தல் என்பது அந்தந்தப் பிரிவு மக்களைப் பொறுத்து வேறுபடுகின்றது. சிலர் 30 நாள் முடிவிலும், இன்னும் சிலர் அதுவும் அந்தணர்கள் 21 நாள் முடிவிலும் இப்படியான தீட்டுக் கழித்தலைச் செய்து முடிக்கின்றார்கள். குறித்த தீட்டுக் கழித்தல் நாளில் வீட்டுக்கு அந்தணர் வந்து சடங்கு செய்து இதை நிறைவேற்றுவார்.

அடுத்ததாக மகளிரின் மாதவிடாய் நாட்களிலும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு இப்படியான "துடக்கு" ஏற்படுவதாகவும் கொள்ளப்படுகின்றது.

மூன்றாவதாக ஒரு வீட்டில் பிள்ளை பிறந்தால் அந்தப் பிள்ளை பிறந்து முப்பது நாள் முடிவில் துடக்கு கழிக்கும் வரை "துடக்கு" இருப்பதாகக் கொள்ளப்படுகின்றது.

துடக்கு பற்றி இப்படி ஒரு விளக்கம் இருந்தாலும் இன்னொரு துடக்கும் இருக்கிறது . அது என்ன தெரியுமா?
ஒரு காரியத்தைத் "தொடக்குதல்" (ஆரம்பித்தல்) என்பதை துடக்குதல் என்றே ஈழ மொழி வழக்கில் பேச்சு வழக்காகப் பாவிப்பார்கள்.
"தொடங்கீட்டீங்களா" என்று ஒரு தமிழக நண்பர் சொன்னால் அதையே
"துடங்கீட்டீங்களோ" என்று ஈழ நண்பர் பேசுவார்.

படம் நன்றி: http://www.sulekha.com/





Author: கானா பிரபா
•2:01 AM
"கண்ணுபடப்போகுதய்யா சின்னக்கவுண்டரே! சுத்தி போட வேணுமய்யா சின்னக்கவுண்டரே" இது ஒரு பிரபலமான தென்னிந்திய திரையிசைப்பாடல். இந்தப் பாடலை ஈழத்துப் பாடலாக்கும் வாய்ப்பு வந்தால் "கண்ணூறு படப்போகுதய்யா சின்னக்கவுண்டரே! நாவூறு கழிக்க வேணுமய்யா சின்னக்கவுண்டரே" இப்படித்தான் பாடவேணும் போல.


"கண்ணு படப்போகுது" என்று என்று தமிழக மொழிவழக்கில் பரவலாகப் பேசும் வார்த்தைப் பிரயோகம் ஈழத்து மொழி வழக்கில் "கண்ணூறு பட்டுடும்" என்றே புழக்கத்தில் பயன்படும். கண்ணூறு என்பதைப் பிரித்துப் பார்த்தாலே புரிந்து விடும் இந்த சொல் கொண்டு வரும் விளக்கம். கண்+ஊறு என்று பிரித்துப் பொருள் உணர்ந்தால் பிறரது கண்பார்வை பட்டால் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும் என்ற மூதாதய நம்பிக்கையே இது கொண்டு வரும் விளக்கம். பெரும்பாலும் குழந்தைகளைப் பாதுகாக்கவே இப்படியான சொற்பிரயோகமும் பயன்படுத்தப்படுகின்றது.

திருஷ்டி சுத்தி போட வேணும் என்று தமிழக வழக்கில் இருக்கும் சொற்பயன்பாட்டையே "நாவூறு கழிக்க வேணும்" என்று ஈழமொழி வழக்கில் பயன்படுத்துவார்கள். நாவூறு என்பதற்கு ஈழத்து மொழி அகராதியில் "நாத்தோஷம்" என்றே விளக்கப்படுகின்றது. அதாவது ஒரு அழகான குழந்தையைப் பார்த்து "ஆகா இந்தப் பிள்ளை கொழு கொழுவென்று எவ்வளவு அழகான, துறுதுறுப்பான பிள்ளையாக இருக்கிறதே" என்று ஒருவர் நாவூறு பட்டால் அந்தப் பிள்ளைக்கு தோஷம் வந்து விடும் என்ற மூதாதய நம்பிக்கையே இங்கே சுட்டப்படுகின்றது. பொதுவாக ஈழத்தின் வாழ்வியலில் ஒரு குழந்தை பிறந்து விட்டால், தேங்காச்சிரட்டையில் (கொட்டாங்குச்சி என்று தமிழக வழக்கில் சொல்லப்படுவது)கருநிறப் பொட்டைத் தயாரித்து குழந்தையின் நெற்றியில் ஒரு பெரும் பொட்டை இடுவதோடு கன்னத்தில் சின்னஞ்சிறு குட்டிப் பொட்டு எதுக்குப் போடுவார்கள் வேறு எதெற்கு நாவுறு படாமல் தான்....
Author: கரவைக்குரல்
•10:10 AM
ஈழத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள பல்வகையான சொற்களை ஈழத்தின் முற்றம் வாயிலாக கொண்டுவரும் பதிவர்களோடு நானும் கைகொடுக்கலாம் என்னுடைய எண்ணம்,அப்படியான சில சொற்கள் காலப்போக்கில் இல்லாது போய்விடுமோ என்ற அச்சம் ஒருபுறமிருக்க அதை என்றும் நிலைத்துவிட வேண்டும் என்ற பெருமுயற்சியில் ஈழத்துமுற்றம் பங்களித்துக்கொண்டு இருக்கிறது.சில சொற்கள் சொல்லும்போது அவை ஈழத்து மொழி நடையில் ஒரு அழகைத்தரும் சொற்களாகக்கூட இருக்கின்றன,

ஆனால் ஈழத்து வழக்கில் எத்தனையோ பல சொற்கள் கொஞ்சம் வழக்கில் குறைந்துகொண்டு போவதை அவதானிக்க முடிகிறது,கவலைக்குரிய விடயமும் கூட
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.............

இவையெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால் சொல்ல வந்த விடயத்தை நான் அயத்துப்போடுவன் போல கிடக்கு.

பொதுவாக அயத்துப்போனன் எண்டு இப்போதும் சில வயது வந்தவர்களால் தான் சொல்லப்படுவதை இன்றைய காலங்களில் அவதானிக்கமுடியும்,

“என்னணை அம்மா நேற்று உங்களை ரெலிபோன் (தொலைபேசி) கதைக்க வரச்சொன்னனான் எல்லோ ஏனெணை வர இல்லை?" எண்டு அடிக்கடி தன் தாயின் மீது அக்கறையாக வெளி நாட்டிலை இருந்து கதைக்கும் மகன் கேட்க

”அட ஒம் தம்பி் நான் உன்ணாணை தீர அயத்துப்போனனெடா,என்னடா இங்கை வீட்டுவேலையும் முத்தம் வாசல் கூட்டி ஆட்டுக்கு குழையும் வெட்டிபோட்டு அந்த இந்த வேலையெல்லாம் பாத்துக்கொண்டிருந்ததாலை தீர அயத்துப்போனனெடா தம்பி” எண்டு அந்த வயது வந்த அம்மா சொல்கிறார்,

இந்த உரையாடல் மூலம் இப்போது அந்த “தீர அயத்துப்போதல்” என்பதன் அர்த்தம்
புரியாதவர்களுக்கு புரிந்திருக்கும்.”தீர” எனபது ”முழுவதும்” என்பதாகவும் ”அயத்துப்போதல்” என்பது ”மறந்துவிடுதல்” என்று பொருள் கொடுக்க முடியும்,இதை பொதுவாக இந்தக்காலங்களில் பேச்சுவழக்கில் ”முழுக்க மறந்துபோச்சு” என்று சொல்லுவினம்.

பொதுவாக இந்த காலத்து இளம்பாரயம் மட்டுமல்ல அதைவிட கொஞ்சம் வயது கூடிய மட்டங்கள் கூட ”அயத்துப்போனன்” என்ற சொல்லை பாவிப்பதே இல்லை என்றுதான் சொல்லலாம்.அப்படியிருக்கும்போது அது எப்படி அடுத்த பராயத்துக்கு எடுத்துச்செல்லப்படும் என்பது கேள்விதான்,காலப்போக்கில் இந்த சொல்லை அயத்துப்போவார்களோ என்ற ஏக்கமும் இருக்கு,


இங்கு முத்தம்- முற்றம், உன்ணாணை-பொதுவாக சத்தியம் செய்யும் முறைகளில் இதுவும் ஒன்று,
Author: கானா பிரபா
•3:33 AM
நந்தனாவின் குடும்பம் மிகவும் கட்டுப்பாடானது. அவளின் தகப்பனார் பண்டிதர் பரமசிவம் வெள்ளை வேட்டி, அதற்குத் தோதாற்போல முழுக்கைச் சட்டை அதுவும் நாஷனல் என்று அழைக்கப்படும் வெண் நிறத்தது. கூடவே சால்வை என்று கோலம் கொண்டிருப்பார். பரமசிவத்தாரின் மனைவி காமாட்சியும் கணவனுக்குத் தோதான துணைவியாக இருப்பவர்.

திடீரென்று ஒரு நாள் நந்தனா வழக்கத்துக்கு மாறாக அதீத நவநாகரீகம் கொண்ட உடுப்பை அணிந்து தன் தாய் காமாட்சிக்கு முன் வந்து நின்றாள்.
"ஐயோ பண்டிதர் பரமசிவத்தாற்றை மேள் இப்படி அரைகுறையா வருகுதே எண்டு சனம் நாக்கு வழைக்கப் போகுது " என்று காமாட்சி பதறினார்.

மேலே சொன்ன கற்பனைச் சம்பவத்தில் மேற்கோள் இடப்பட்ட "நாக்கு வழைத்தல்" என்பது ஈழத்துப் பேச்சு வழக்கில் இன்னொரு சொல்லாகப் புழங்குகின்றது.

ஒருவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக இன்னொருவர் பேசுவதைப் புறணி பேசுதல் என்போம். ஆனால் இங்கே நாக்கு வழைத்தல் என்பது புறணி பேசுவது என்பதற்கு சற்று வேறுபாடாக நக்கல் பண்ணுவார்கள் என்பதற்கு மிக நெருங்கிய அர்த்தத்தில் பயன்படுத்தப்படுவது.

எனவே நாக்கு வழைத்தல் என்பது ஒருவரது குணாம்சம், நடை உடை பாவனையில் ஏதேனும் குறையைக் கண்டு பிடித்து இன்னொருவர் அல்லது ஊரார் எள்ளி நகையாடுவது என அமைந்திருக்கும்.

"நாக்கு வழைத்தல்" என்பதை உங்கள் ஊரில் எப்படியெல்லாம் பயன்படுத்துவார்கள் என அறிய ஆவல்.
Author: கானா பிரபா
•4:33 AM

வயசானவர் ஒருவர் ஏதாவது விடயம் பற்றிப் பேசும் போது இடையில் இளையவர் ஒருவர் மாற்றாக ஏதாவது சொன்னால் போதும் "என்ன விண்ணாணம் பேசுறாய்" என்று கேட்பார் அந்த வயசானவர்.

குறித்த விடயம் பற்றி ஒரு கருத்து சொல்லப்படும் போது அது அந்த விடயத்திற்கு முரணாக இருந்தால் அல்லது குறித்த அந்த விடயத்தை முன்வைத்தவர் ஏற்காது போனால் தான் இந்த விண்ணாணம் என்ற வார்த்தை பிரயோகம் வந்து விழும்.

விண்ணாணம் என்றால் என்ன என்று அகராதியைப் புரட்டிப் பார்த்தேன். அதில் நாகரீகம், மாசாலம், வெட்கம் என்று சம அர்த்தங்கள் போடப்பட்டிருந்தன. இங்கே வெட்கம் என்ற அர்த்தத்தில் நம்மூரில் இந்த இந்த விண்ணாணம் பயன்படுவதில்லை. எனவே மற்றைய இரண்டு அர்த்தங்களையும் கொண்டு பார்த்தால், நாகரீகம் என்பது ஏற்கப்படும் சொல்லாகப் படுகின்றது. மாசாலம் என்று போட்டிருக்கே அது என்ன என்று பார்த்தால் ஓர் மாய வித்தை என்று விளக்கப்பட்டிருக்கிறது அகராதியில்.

ஆக, விண்ணாணம் என்ற சொல்லை மாயவித்தை, அல்லது நாகரீகம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கலாம். விண்ணாணம் என்பது விஞ்ஞானத்தின் மருவிய பேச்சு வழக்கின் கிண்டல் தொனியாகவும் மாறியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

புகைப்படம் நன்றி: Boston.com
Author: Unknown
•1:24 PM
என்ர மூண்டு வில்லன்மாரைப் பற்றி இந்தப் பதிவில எழுதப்போறன். எனக்கு இண்டைக்கும் இவை மூண்டு பேரையும் நினைச்சா தூக்கிப் போடும் பாருங்கோ. ஏனோ தெரியேல்லை இவயளைக் கண்டா எனக்கு வெறுப்பும் பயமும் கலந்து ஒரு புதுவிதமான உணர்வு வரும்பாருங்கோ. இனி இவையளைப் பற்றிப் பாப்பம்.

மசுக்குட்டி
இவையள்ள எனக்குத் தெரிஞ்சு இரண்டு வகை. ஒருத்தர் இந்த முருங்கை, வாழை இதுகள்ள இருக்கிற வெள்ளை மசுக்குட்டி. மற்றவர் முள்முருங்கையை வதிவிடமா வச்சிருக்கிற கறுத்த மசுக்குட்டி. இவையள் பூவரசு மா போன்ற மற்ற மரங்களிலையும் இருப்பினம். வெள்ளை மசுக்குட்டி பற்றின ஞாபகம் 1991க்குப் போகும். நாங்கள் இந்தியாவுக்குப் போட்டு வீட்ட திரும்பின நேரம். அப்பர் கொழும்பிலை நிண்டவர். ஒரு நாள் படுத்திட்டு காலமை எழும்பிறன் உடம்பெல்லாம் தடிப்பு. நல்ல வெக்கை எண்டுட்டு கதவைத் திறந்து விட்டிட்டுப் படுத்தனாங்கள். ஞாயிற்றுக்கிழமை எண்டபடியால் அம்மா என்னைப் பிந்தி எழும்ப விட்டவ. கருமம் பிடிச்ச வெள்ளை மசுக்குட்டி பக்கத்திலை இருந்த முருங்கை மரத்திலை இருந்து, காலமை வெயிலுக்கு கூட்டமா இறங்கி, படுக்கை வரை வந்திட்டுது. தடிக்கவும் கடிக்கவும் தொடங்க ஐயோ ஆத்தேரோ எண்டு குழறினனான். அக்கா வெங்காயம் எல்லாம் பூசி என்னவோ எல்லாம் செய்துதான் ஒருமாதிரி கடியும், தடிப்பும் குறைஞ்சது. அண்டேல இருந்து மசுக்குட்டிக்கும் எனக்கும் உறவு தொடங்கீச்சுது.

1996ல கொஞ்சக் காலம் கரணவாயில எங்கட மாமி வீட்ட இருந்தனாங்கள். அங்க இரு கறுத்த மசுக்குட்டிப் பண்ணையே இருந்தது. எனக்கு வெள்ளை மசுக்குட்டியக் கண்டா அருவருப்பா இருக்கும். கறுத்த மசுக்குட்டியக் கண்டா கடிக்கவே தொடங்கீடும். இதுக்காகவே 11 வயதிலையும் என்னை மடியிலை வச்சிருப்பார் அப்பா. அந்தளவு பயம். அதுவும் இந்தக் கறுப்பு மசுக்குட்டி சரியான மொத்தம் வேறை. இதுக்காகவே நான் கரணவாய்ப் பக்கம் போறது குறைவு. கொஞ்ச நாள் பொறுத்து மாமி வீட்டச் சுத்தி இருந்த எல்லா முள்முருக்கு மரங்களையும் வெட்டி, முட் கிளுவை போட்டு அடைச்சவ. பேந்து தகரம் போட்டு அடைச்சவ.

மசுக்குட்டியள் என்னை வீட்டில மட்டும் பயப்படுத்தேல்லை. எங்கட பாலர் பள்ளிக்கூடத்திலை குப்பை பொறுக்கச் சொல்லி விடுறவை முந்தி. அதிலை ஒரு மாமரத்திலை மசுக்குட்டி இருந்து படுத்தின பாட்டை மறக்கேலாது. அதே போல குழவியடி அம்மனிலை ஒருமுறை காலமை வெய்யிலுக்கு முருங்கையில இருந்து இறங்கின மசுக்குட்டிப் படையையும் மறக்கேலாது. அதே போல் ஹாட்லீல படிக்கேக்க ஈசப்பாவின்ர விஞ்ஞானக் கொப்பியிலை மேலை இருந்து வந்து விழுந்த கறுத்த மசுக்குட்டியையும் மறக்கேலாது. இவேன்ர தொல்லை தாங்காமல் நான் வாழைப்பழம், முருங்கக்காய் கறி, முருங்கை இலை வறை இதெல்லாம் சாப்பிடிறதே இல்லை எண்டால் பாருங்கோவன்.

எரி புழு
இவருக்கு ஏன் இந்தப் பேர் வந்தது எண்டு தெரியேல்லை. ஆள் கறுப்பும் பச்சையும் கலந்த ஒரு கலரில பாக்க மயிர்க்கூச்செறியிற மாதிரி இருப்பர். புல்லுகளிலைதான் இவர் வாசம் செய்வார். ஆள் கடிப்பாரோ, அரிப்பாரோ ஒண்டும் தெரியாது. ஆனாப் பாத்தா நடுங்கும். ஏனெண்டு தெரியாது. இவர் முதல் நாலு மாசங்களுக்க, அதுவும் இந்த நெல்லு முத்திற காலத்துக்குக் கிட்ட வந்திடுவார். மூஞ்சைக்குக் கிட்ட சிவப்பா என்னவோ இருந்து இன்னும் பயப்பிடுத்தும். ஆளாலை இன்னொரு பெரிய தொல்லை இருக்கு. இவர்வந்து நெல்லை நாசம் பண்ணீடுவார் எண்டு சொல்லி அடிக்கடி இவற்றை காலத்திலை மருந்தடிக்க வேண்டி வாறது. மசுக்குட்டி அளவுக்கு இல்லை எண்டாலும், இவரும் எனக்கு ஒரு வில்லன்தான்.

அட்டை
மழைகாலம் எண்டால் தொடங்கீடும் இவேன்ர பிரச்சினை. இவையள்ள நான் பாத்தது மூண்டு வகை. சிவத்த அட்டை, சரக்கட்டை, பாக்கர் அட்டை. மழை காலம் எண்ட உடன அவ்வளவு காலம் எங்கை இருந்தினம் எண்டு தெரியாது, ஆனா வந்திடுவினம். சிவப்பு அட்டை எண்டுறவர் சிவப்பும் கறுப்பும் கலந்த உடம்பும் சிவப்புக் கால்களும் உள்ளவர். வீட்டுக்குள்ள வந்த இவரை ஈர்க்கால தட்ட வெளிக்கிட்டா, உடனை இந்தச் சக்கர வாணம் மாதிரி சுருண்டிடுவார். இவரில என்ன அருவருப்பு எண்டால் என்ர சித்தீன்ர பொடியன் ஒருத்தன் கொஞ்சக் காலம் எங்கட வீட்டில இருந்தவன். தாயும் தேப்பனும் கொழும்பில. ஒரு நாள் இந்த அட்டையைப் பிடிச்சு, இரண்டா பிரிச்சு ஆள் சாப்பிட ரெடி. நல்ல காலம் அக்கா கண்டு பறிச்சு எறிஞ்சது. அந்தப் பிஞ்ச அட்டையப் பாத்த நாள் தொடக்கம் எனக்கு அட்டை எண்டாலே அருவருப்பு.

சரக்கட்டை எண்டுறவர் கறுப்பும் மஞ்சளுக் கலந்த கலரில இருப்பார். ஆள் சிவப்பு அட்டையை விடச் சின்னவர். சிவப்பு அட்டை அளவுக்கு இவர் அருவருப்புத் தரமாட்டார். அருவருப்பின்ர உச்சம் எண்டால் பாக்கர் அட்டைதான். ஆண்டவா, என்ன பெரிய அட்டை அது. அந்த அட்டையப் பாத்த பிறகு பாக்கர் பேனையே எனக்குப் பிடிக்கிறேல்லை. பாக்கர் பேனை மாதிரி இருக்கிறபடியால்தான் இவரைப் பாக்கர் அட்டை எண்டு சொல்லிறவை எண்டு நினைக்கிறன். நான் பாக்கோணும் எண்டு நினைச்சுப் பாக்காம விட்டது இந்த மலைநாட்டு அட்டையளைத்தான். நுவரெலியா போனபோது ஒரு தேயிலைத் தோட்டத்துக்கும் போகேல்லை எண்ட குறை இருக்கு. போனா அட்டையையும் பாத்திருக்கலாமோ என்னவோ.

ஆனாப் பாருங்கோ, நான் உந்த மட்டத்தேள், பூரான் ஏன் புலிமிலச்சிலந்தியைக் கூட அடிச்சிருக்கிறன். கிழிஞ்ச கொப்பி மட்டைய மேல போட்டு புலிமிலச் சிலந்தியை நசுக்கி இருக்கிறன். ஆனா மசுக்குட்டி, எரி புழு, அட்டையை பெரிய தடியால தள்ளிவிடவே பயம் பாருங்கோ..... உங்களுக்கும் பயம்தானே??? சும்மா புழுகாதையுங்கோ.... இந்த மூண்டு பேரும் எல்லாருக்கும் வில்லன்மார்தான்... எனக்கு வடிவாத் தெரியும்......ஊரிலை வயல் விதைக்கினமாம், அதில எனக்கிருக்கிற அனுபவம் பற்றிப் பிறகு எழுதிறன்.

மசுக்குட்டி: மயிர்கொட்டி. வண்ணத்துப்பூச்சியின் பரிணாம வளர்ச்சியின் முதலாவதோ, இரண்டாவது வடிவம்.
எரி புழு: ஒரு புழு, பெயர்க் காரணம் தெரியாது
சரக்கு அட்டை: ஒரு வகை அட்டை
பாக்கர் அட்டை: ஒரு வகை அட்டை. பாக்கர் பேனா மாதிரி இருப்பதால் இந்தப் பெயர் என்று கேள்விப்பட்டேன். உண்மையா?
முள்முருக்கு, முட் கிளுவை, கிளுவை: வேலி அடைக்க கதியால்களாகப் பயன்படும் மரங்கள். சில இடங்களில் பூவரசங் கதியாலும் பயன்படும்
பேந்து: பிறகு
அண்டேல இருந்து: அன்றில் இருந்து
மட்டத்தேள்: ஒரு பூரான் வகை. (நாங்கள் பூரான் என்று சொல்வது ‘தேள்' என்று நினைக்கிறேன்)
புலிமிலச்சிலந்தி: புலி முகச் சிலந்தி என்ற சிலந்தி வகை.
Author: Unknown
•7:12 AM
வல்லிறக் கோயில் திருவிழா காலங்கள் பெரும்பாலும் சுத்து வட்டாரப் பொடியளுக்கு ஒரு சந்தோசமான காலம்தான். எனக்கு மட்டும் ஒரு சின்னப்பிரச்சினை. என்னெண்டு சொல்லிச் சொன்னால் என்ர ஊர் வந்து வல்லிறக் கோயிலுக்கும் தூரம், சந்நிதியானுக்கும் தூரம் எண்டு ஒரு நடுச்சென்ரர் ஊர். வீட்டுக்காரச் சனம் வல்லிறக்கோயிலுக்கோ சந்நிதியானுக்கோ திருவிழாக் காலத்தில விடாதுகள். திருவிழாக் காலத்தில நீங்கள் சாமி கும்பிட மாட்டியள் சாமினியத்தான் கும்பிடுவியள் எண்டு அடிக்கடி அப்பா சொல்லுவார். அதனால இந்த வெடிவால் முளைச்ச காலத்தில ஒரே ஒருக்கா சந்நிதிக்கும், வல்லிறக் கோயிலுக்கும் போன ஞாபகம் இருக்கு. அது பதினோராம் வகுப்பில. சின்னனில கனதரம் போயிருக்கிறன் எண்டுறது வேற விசயம். இப்ப அந்த வெடிவால் வயசில வல்லிறக் கோயிலுக்குப் போய்வந்த அனுபவம் பற்றிச் சொல்லுறன்.

அந்தமுறை வல்லிறக் கோயிலுக்குக் கட்டாயம் போறதுதான், தேர், தீர்த்தம் ரண்டு நாளும் போறது போறது தான், வேற கதைக்கே இடமில்லை எண்டு வீட்டில சொல்லியாச்சு. பதினாறு வயசாச்சு நான் ஒரு நாளும் சந்தோசமா இருக்கேல்ல எண்டு அம்மாட்ட சொல்லிக்கில்லி ஒப்புக்கொள்ள வச்சாச்சு. அம்மாவை ஓமெண்ட வைக்கிறதுதான் பெரும்பாடு. அம்மா ஓமெண்டால் அப்பரும் ஓம்தான். இப்பதான் அடுத்த சிக்கல். நான் கூடப் போக இருந்த பொடியள் சொல்லிப்போட்டாங்கள் வேட்டியோடதான் வரவேணும் எண்டு. எனக்கு சாறமே கட்டத்தெரியாது, இதுக்குள்ள வேட்டிய எங்க காட்டுறது? உள்ளானுக்கு மேல ஒரு காச்சட்டை போட்டு அப்பர் வேட்டி கட்டிவிட்டார். பெலிட் எல்லாம் போட்டு இறுக்கிக் கட்டி ஒரு தூணில கையப் பிடிச்சு சைக்கிள்ள ஏறி கேற்றடியில போய் நிக்க பொடியள் வந்து சேர்ந்தாங்கள்.

எங்கட ஊரில இருந்து வல்லிறக் கோயிலுக்குப் போகேக்க வழமையா மாலுசந்திக்குப் பிறகுதான் பயணம் களைகட்டும். மாலுசந்தியில தான் முதல் தண்ணீர் பந்தல் இருக்கும் நாங்கள் போற ரூட்டில. சக்கரத்தண்ணி, மோர் எண்டு சும்மா கலக்குவினம். மாலுசந்திக்குப் பிறகு வல்லுறக் கோயில் போய்ச் சேரும் வரையில இன்னும் கனக்க தண்ணீர்ப்பந்தல் இருக்கும். முக்கியமா உபயகதிர்காமம் தண்ணீர்ப் பந்தலில புட்டளை அண்ணைமாரும், நண்பர்களும் (ஹாட்லியில படிச்சவடியா) கொஞ்சம் நல்லா கவனிப்பினம், ஆரும் பெம்பிளைப் பிள்ளையள் தண்ணீர்ப்பந்தல் பக்கம் வராத வரைக்கும். தண்ணீர்ப்பந்தலில அடுத்த ஸ்பெசல் என்னெண்டா ஸ்பீக்கர் கட்டி, பொக்ஸ் பூட்டிப் பாட்டுப் போடுவினம். 96க்கு முன்னால மாலுசந்தி தண்ணீர்ப் பந்தலில் புரட்சிப் பாடல்களும், 96க்குப் பின்னால பக்திப்பாடல்களும் ஒலிக்கும். நானறிய அவையள் ஒருகாலமும் சினிமாப் பாட்டே போடேல்ல.

இப்பிடி இதெல்லாத்தையும் பாத்துக்கொண்டு, கோயிலுக்கு வாற பெம்பிளைப் பிள்ளையளுக்குக் கதை சொல்லிக்கொண்டு அந்த வருஷமும் தேர்த்திருவிழாவுக்குப் போனம். வடம் பிடிக்கிறது எண்டுதான் முடிவு. எனக்கு ஒரே நடுக்கம். 4ம் வகுப்பில வேட்டியோட குலனைப் பிள்ளையாரில வடம் பிடிக்கப் போய் நான் துகிலிழந்தது ஞாபகம் வந்தது. ஆனால் வல்லிபுரத்தான் என்னைக் கைவிடேல்ல..எங்களால வடத்துக்குக் கிட்டவே போக முடியேல்ல. ஆக தேருக்குப் பின்னால நடந்து நடந்து கொஞ்ச நேரத்தால தேர்களுக்குப் பின்னால நடக்கத் தொடங்கினம். அப்பத்தான் அந்த மனிசனைப் பார்த்தம். ஆள் ஒரு ஒல்லிப்பைத்தங்காய். காவி வேட்டி காடியிருந்தார். உடம்பெல்லாம் சந்தனமும் திருநீறும். மொட்டந்தலை. மனிசனை இதுக்கு முதல் ஒருக்கா சன்னதியில கண்ட ஞாபகம். ஆள் தேர் வாற வீதீலை இருந்த எல்லா கரண்ட் போஸ்ட்டிலயும் தலைய மோதுது. போஸ்ட் ஆடுற அளவுக்கு வேகமா பின்னுக்குப் போய் வலு வீச்சா வந்து மோதுது. கல் இருக்கிற இடமா பாத்து குட்டிக்கரணம் அடிக்குது. ஆனா சொன்னா நம்பமாட்டியள் பாருங்கோ, ஒரு சின்னக் கீறல் கூட அந்த மொட்டை மண்டேல வரேல்ல. அதுக்குப் பிறகு ஒரு நாள் அதே வேலைய இந்த மனிசன் சந்நிதியிலயும் செய்தது. எனக்கெண்டால் அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போச்சு.

உங்களுக்கே தெரியும்தானே. திருவிழா எண்டால் இந்தக் கச்சான் காரர், கடலை காரர், இனிப்புக் காரர், மணிக்கடைகாரர், கூல்பார்காரர் எண்டு எல்லாரும் வந்து கடை போடுவினம்தானே கோயில்ல. அப்பிடித்தான் குணம், ராஜா அது இது எண்டு எல்லாக் கூல்பார்காரரும் கடை போட்டிருந்தினம். எங்களுக்கு அப்ப விளையாட்டுச் சாமான் வாங்கிற வயசில்லை எண்டபடியால் ஆளுக்கொரு ஸ்பெசல் குடிக்கலாம் எண்டு உள்ள போனம். அப்ப உவன் ஸ்ரீகாந்தன் சொன்னான் எடே ஆறு பேர் இருக்கிறம். மேசைக்கு மூண்டு பேர் இருந்து ஸ்பெசல் குடிச்சிட்டு ரண்டு தனித்தனி பில்லையும் வாங்கீட்டு, ஒரு பில்லுக்கு மட்டும் காசு குடுத்துட்டு ஓடிப்போவம் எண்டு. சொன்னனான் தானே வெடிவால் வயசெண்டு. எல்லாரும் ஓமெண்டாச்சு. ஆறு ஸ்பெசலுக்கு 180 ரூபாய். 2 பில் போட்டதால ஒரு பில்லுக்கு 90 ரூபா கட்டவேணும். நான் பில் கட்ட அந்த பில்லைக் காட்டி வெளியேறுவது எண்டு பிளான். ஆனால் பிடிச்சுப் போட்டாங்கள். பிடிச்சது ஒரு மூண்டு பேரை. நான் அவயளைத் தெரியாத மாதிரி பில்லுக்குக் காசு குடுத்துட்டு வந்துட்டன். ‘வேட்டிய விரிச்சுக் கொண்டு குந்துங்கோடா' அப்பிடி இப்பிடி எண்டு ஒரே ஏச்சு. அவங்களும் ஒரு மாதிரி பில்லுக்கு காசு குடுத்துட்டு வந்த பிறகு வீட்டை வரும்வரை ஒரே சிரிப்புதான்.

அடுத்த நாள் தீர்த்தம் பாருங்கோ. வல்லிறக்கோயில் தீர்த்தம் எவ்வளவு அருமையான ஒரு அனுபவம். எவ்வளவு சனம் எவ்வளவு சனம். அதுவும் அந்த ‘சக்கரம் சக்கரம் சங்கு சக்கரம்' எண்டு சொல்லிக்கொண்டு சங்கு சக்கரத்தோட அந்த நாலு இளந்தாரியள் ஓடேக்க சனம் முழுக்க பக்திப்பரவசத்தில மெய் மறந்து போய்விடும். பிறகு அந்தத் தீர்த்தமாடின தண்ணி உடம்பில படோணும் எண்டு ஒரு நெரிசல் வரும்பாருங்கோ, அதைச் சொல்லவும் வேணுமே. ஒரு சோகம் என்னவெண்டால் அந்த வல்லிறக்கோயில் கடல் ஒவ்வொரு தீர்த்தத் திருவிழாவுக்கும் ஒராளை பலி எடுக்கிறதா சொல்லிறவை, உண்மை பொய்யைப் பற்றித் தெரியாது. இரண்டாம் நாளும் சந்தோசமாப் போய் கச்சான், கடலை, இனிப்பு, தொதல் எல்லாம் வாங்கிச் சாப்பிட்டம். என்ன கூல்பார் பக்கம் போகத்தான் பயமாயிருந்தது. அந்த வருஷத்தின் ரண்டு நாளிலையும் நான் செய்த சாதனை என்ன தெரியுமோ, வேட்டி அவிழாமல் கோயில் வீதிகளில நடந்தது மட்டுமில்ல, வீடையிருந்து கோயிலுக்கும், கோயிலிலையிருந்து வீட்டுக்கும் சைக்கிள் ஓடேக்கையும் வேட்டி அவிழாமல் பாதுகாத்தது தான்.

குறிப்புக்கள்
  • வல்லிறக் கோயில்: வல்லிபுர ஆழ்வார் கோவில்
  • சந்நிதியான்: தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில்
  • நடுச்சென்ரர்: மத்தியில் உள்ள ஒரு இடம் அல்லது புள்ளி. நடுமத்தி என்றும் சொல்லுவார்கள். நடு, மத்தி இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே பொருளுடையவை தானே?
  • வெடிவால் முளைச்ச: பதினம வயதில் உள்ள பிள்ளைகளை நோக்கிப் பெரியவர்கள் பாவிக்கும் ஒரு சொல். இதற்குப் பருவமாற்றத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு அர்த்தம் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன்
  • சின்னனில: சிறு வயதில்
  • கனதரம்: பல தடவைகள்
  • வடம்: தேர் இழுக்கப் பயன்படுத்தப்படும் பலமான, பாரிய, நீண்ட கயிறு
  • வடம் பிடிக்கிறது: தேர் இழுப்பது. தேர்த்திருவிழா அன்று எப்படியாவது தேர் இழுக்கப்படும் சமயத்தில் வடக்கயிறைத் தொட வேண்டும் என்று அடிக்கடி வீட்டில் சொல்வார்கள். ஏனென்று தெரியாமல் நானும் செய்து வந்திருக்கிறேன்.
  • கரண்ட் போஸ்ட்டிலயும்: மின் கம்பங்கள். மின்சார வாரியத்தின் மின் கம்பிகளைக் காவும் சீமெந்தில் செய்யப்படும் பலம் வாய்ந்த தூண்கள்
  • ஒல்லிப்பைத்தங்காய்: மிகவும் ஒல்லியான தோற்றமுடைய மனிதர்களை பயற்றங் காய்க்கு ஒப்பிடுவார்கள். சில இடங்களில் புடலங்காய் பயன்பட்டதாகவும் அறிகிறேன்.
  • மொட்டந்தலை: இதுவும் சொல்லியா தெரிய வேண்டும்? மொட்டைத் தலை.
  • வலு வீச்சா: மிகவும் வேகமாக, மிக விரைவாக
  • கச்சான்காரன்/காரி,கடலைகாரன்/காரி: திருவிழா நாட்களில் சின்னதாகக் கடை விரித்து கச்சான், மஞ்சள் கடலை போனறவற்றை விற்பவர்கள்.
  • இனிப்புக்காரர்: அநேகமாக ரோசாப்பூ நிறம் அல்லது மஞ்சள் நிறத்தில் சீனிப்பாகை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் இனிப்புகளையும், தொதல், தேன்குழல், பூந்தி போற இனிப்புகளையும், கொஞ்சம் பகோடா, உப்புக் கடலை போன்றவற்றையும் விற்பவர்கள்.
  • மணிக்கடைகாரர்: இவர்கள் அனேகமாக சிறுவர்களுக்கான விளையாட்டுச் பொருட்களை விற்பார்கள். பெரும்பாலும் இவர்களின் சந்தை சிறு பிள்ளைகளோடு வரும் பெற்றோரை நோகியதாய் இருப்பினும், இள வயது ஆண்களும் பெண்களும் கூட இவர்களை மொய்ப்பார்கள். கழுத்தில் போடும் கறுப்பு நிறக்கயிறு போன்ற இளைஞர்களுக்கான பொருட்களும், கண்ணாடிக் காப்பு போன்ற இளைஞிகளுக்கான பொருட்களும் இவர்களுக்கு நல்ல வருமானம் ஈட்டித்தருவதுண்டு.
  • கூல்பார்காரர்: ஐஸ்கிரீம் அல்லது குளிர்களி மற்றும் அது சம்பந்தமான பொருட்களை விற்போர்.
  • ஸ்பெசல்: பழங்கள், ஜெலி, பொடியாக்கப்பட்ட கச்சான் அல்லது கஜூ கொஞ்சம் கொக்கோ பவுடர் எல்லவற்றையும் கலந்து தரப்படும் ஒரு ஐஸ்கிரீம். மேற்படி கூல்பார்களில் விலை உயர்ந்த பொருள் இதுதான். அப்போது 30 ரூபாய். கிளிநொச்சி பாண்டியன் உணவகத்தில் மட்டும் ஒரு ‘மீனம்' ஸ்பெசல் 200 ரூபாய்.
  • இளந்தாரியள்: இளைஞர்கள்
  • ஓடேக்க: ஓடும் போது. இதே ‘ஓடேக்க' என்ற சொல் ஓடையினுள் என்ற அர்த்தத்திலும் பயன்படும். அதேபோல் வரேக்க- வரும்போது, போவேக்க- போகும் போது போன்ற சொற்களும் பயன்பாட்டில் உண்டு. இதே சொற்களை தும்பளைப் பகுதியைச் சேர்ந்த ஒரு சாரார் 'போவாக்க' 'வராக்க' என்று உச்சரிப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
  • படோணும்: பட வேண்டும்.
Author: யசோதா.பத்மநாதன்
•10:06 PM


ஒரு நாள் குருவானவரிடம் ஒருவர் வந்தார்.சுவாமி! இன்று நீங்கள் என்ன செய்தீர்கள் என்று வினவினார்.அதற்குக் குரு உணவுண்டேன்; பின்பு நன்றாகத் தூங்கினேன் என்றார்.இதில் என்ன பெரிய விடயம் இருக்கிறது என்று வந்தவர் நினைத்தார்.அதனக் கேட்டும் விட்டார். அதற்கு சுவாமி சொன்னார்; நான் உணவுண்ணும் போது உணவுண்ணும் தொழிலை மட்டுமே செய்தேன்.வேறெதனையும் எண்ணவில்லை. உறங்கும் போது உறங்குதலாகிய செயலில் மட்டுமே கவனம் செலுத்தினேன் என்றார்.

இதனை வாசித்தபோது ஒரு நேரத்தில் நாம் எத்தனை விடயங்களில் கவனம் செலுத்துகிறோம் என்றும்;அதனால் ஒன்றையும் முழுமையாக உள்வாங்கவோ அனுபவிக்கவோ முடியாது போய்விடுகிறது என்றும் தோன்றியது.அது போலவே சொற்களை நாம் பாவிக்கின்ற போதும் அதன் அர்த்தங்களையும் முழுமையாக உணர்ந்து வெளிப்படுத்துகிறோமா என்பது பற்றிச் சற்றுச் சிந்திக்க வேண்டியதாயிருந்தது.அதனால் எப்போதோ அறிந்து வைத்திருந்த இரண்டு சொற்களுக்கான விளக்கப் பதிவாக இப்பதிவு அமைந்திருக்கிறது.


வாஞ்சை:-

பாசத்தில் தோய்ந்த சொல் இது.

பொதுவாக வாஞ்சை என்ற சொல் அன்பினைக் குறிக்கும்.இச் சொல் குறிக்கும் அன்பு என்பது அன்பின் வகைகளில் சற்று விசேடமானது.பிள்ளை தந்தை/தாய் மீது கொள்ளும் அன்பினை வாத்சல்யம் என்று சொல்வதைப் போல; காதலர் தமக்கிடையே பரிமாறிக் கொள்ளும் அன்பைக் காதல் என்று சொல்வதைப் போல; நண்பர்கள் தமக்கிடையே உள்ள அன்பை நட்பு என்று சொல்லிக் கொள்வதைப் போல; வாஞ்சை என்ற சொல்லும் ஒரு விசேட அன்பைக் குறித்து நிற்கிறது.

ஒரு தாய்ப்பசு கன்று ஈனும்போதும்; பின்னர் தன் பிள்ளைக்குப் பாலூட்டும் போதும்; அதன் அழுக்குகளையும் சிறுநீரையும் நாவினால் நக்கிச் சுத்தப் படுத்தும்.அதனையிட்டு அது ஒரு போதும் அசூசை கொள்வதில்லை.மேலும் அது பாலூட்டும் போது கன்றின் உடல் பாகங்களையும் நாவினால் சீர்படுத்தும்.அன்பின் நிமித்தம் பால் பெருக்கெடுத்து ஓடும்.அதனுடய அன்பின் முன்னால் கன்றினுடய குறைகளோ அழுக்குகளோ அதன் கண்களுக்குத் தெரிவதில்லை.மேலும் அதனுடய செயற்பாட்டின் மூலம் கன்றின் மீதான அதன் அன்பு பெருக்கெடுத்து ஓடுவதையே நாம் காண்கிறோம்.அத்தகைய அன்பினையே வாஞ்சை என்ற சொல் குறிக்கிறது.

அதாவது,எந்த ஒரு அன்பு குறைகளையும் நிறைகளாகக் காண்கிறதோ அல்லது எங்கு குறைகள் எதுவும் குறைகளாகக் கண்ணுக்குத் தெரியாமல் அன்பு ஒன்றே விகாசித்து பொலிந்திருக்கிறதோ அங்கு வாஞ்சை நிறைந்த அன்பு நிலவுகிறது என்று அர்த்தமாகும்.(எப்போதோ யுகமாயினியில்(?) வாசித்தது)



ஊழியம்:-

வலி சுமந்த சொல் இது.

2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மெல்பேர்னில் நடந்த எழுத்தாளர் விழாவுக்கு இலங்கையில் இருந்து மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசெப் அவர்கள் வந்திருந்தார்கள். அவர் இந்தச் சொல்லுக்குச் சிறப்பான விளக்கம் ஒன்றினை அளித்திருந்தார்கள். அதனை இங்கு தருகிறேன்.

ஊழியம் என்பதற்கான ஆங்கில மொழியாக்கம் labour என்பதாகும்.தாய்மைப் பேறடைந்த பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்காகச் செல்லும் அறையை labour room என்கிறோம்.ஏனெனில் வலியோடு கூடிய குழந்தை பெறுதலாகிய வேலையை அவள் அங்கு செய்கிறாள்.அதனால் ஊழியம் என்பது உடலை வருத்தி வலியினை உணர்ந்து பெறப்படும் பயன்பாடு ஆகும்.அதனால் labourer என்பது ஊழியர் அதாவது உடலினை வருத்தி வேலை செய்து பயனைப் பெறுபவர்களைக் குறிக்கிறது.

அதாவது உடல் உழைப்பினால் வருந்தி (கஸ்ரப்பட்டு)செய்யப் படுவது ஊழியம். அதனால்,உடலினை வருத்தி வேலைசெய்து வருமானம் பெறுபவர்கள் ஊழியர் என்ற சொல்லால் அழைக்கப் படுகிறார்கள்.

அதனால் இலிகிதர் போன்ற தொழிலில் உள்ளவர்களை அரச ஊழியர் என்று சொல்வது சரியா தவறா என்று தெரியவில்லை.

மொழி விற்பன்னர்கள் விளக்கமளித்தால் நன்றாக இருக்கும்.



பட உதவி; நன்றி ,இணையம்.
Author: கானா பிரபா
•3:00 AM
கந்தசாமி முத்துராஜா என்னும் கனடா வாழ் ஈழத்தவர் "ஆழியவளை" என்னும் யாழ்ப்பாணத்துக் கடலோரக் கிராமத்தின் பண்பாட்டு அம்சங்களைச் சுவைபட எழுதியுள்ளார். அந்த நூலின் பின்னிணைப்பில் இருந்த அருஞ்சொல் அகராதியில் இருந்து சிலவற்றை இங்கே பகிர்கின்றேன்.

அடை - கரைவலை வள்ளம் மண் புட்டிக்கு இழுக்கப்படும் பொழுது வள்ளத்தின் அடியில் உள்ள எரா இலகுவாகச் சறுக்கி வழுக்கிக் கொண்டு வருவதற்காக வைக்கப்படும். ஓர் ஒழுங்கு முறையில் அடுக்கப்பட்ட மரக்குற்றிகள் அடை எனப்படும்.

அறும்புக்காலம் - கடலில் மீன் பிடிபடுதல் மிக மிகக் குறைவாக உள்ள காலம்

அம்பறக்கூடு - பனம் மட்டையை வளைத்து, குறுக்காகக் கம்புகள் கட்டி, கிடுகினால் வேயப்பட்ட சிறுதுண்டுக் கூரை

அத்தாங்கு - "பை" போன்ற அமைப்புள்ள நூல் வலையின் வாய்ப்பகுதியில், காட்டுத்தடியை வட்டமாக வளைத்துக் கட்டுவர். இதனால் ஆழங்குறைந்த நீர் நிலைகளில், நிலத்தில் வாரி இறால் பிடிப்பர். சில இடங்களில் அவ்வளையம் இரும்பினாலும் செய்யப்படும்

ஆனைச்சொறி - நீரில் மிதந்து செல்லும் வழுவழுப்பான பெரிய அளவிலான ஒருவகைக் கடல் தாவரம்

ஆசறுதியாக - பலமாகவும், செளக்கியமாகவும் இருக்கும் நிலை

ஊடுகாடு - காட்டை ஊடறுத்துச் செல்லும் ஒற்றையடிப்பாதை

எரா - கரைவலை வள்ளத்தின் அடிப்பாகத்தில் அணியத்திலிருந்து
கடையார்வரை நீளமாகப் பொருத்தப்பட்டிருக்கும் மரத்துண்டு

ஒசுத்தேங்காய் - கடலில் விழுந்து உப்பு நீரில் கரை ஒதுங்கும் தேங்காய்,இத்தேங்காயை புழுக்கொடியலுடன் சப்பித் தின்ன மிக ருசியாக இருக்கும்

கடற்படுக்கை - கடலின் அடிநிலம்

கடியன் கடித்தல் - மீன் இனங்கள் வலைகளைக் கடித்துத் துண்டாடுதல்

கருவாட்டுச் சிப்பம் - தென்னோலைக் கிடுகில் ஏறத்தாள 4X2 அடி அளவில் பெட்டி செய்து, அதற்குள் கருவாட்டை வைத்து மூடிக்கட்டி லொறிகளில் தூர இடங்களுக்கு அனுப்புவர்

குறுகுதல் - கரைவலையை மெல்ல மெல்ல இழுத்து இறுதியாகத் தூர்மடியையும் கடற்கரைக்கு மீனுடன் இழுத்து எடுத்தல்

குட்டான் - பனை ஓலையினால் இழைப்பது, மீன் போடுவது

கூடு கட்டுதல் - மாரிகாலம் ஆரம்பிக்கிற ஐப்பசி மாதத்தில் கரைவலைத் தொழிலை நிறுத்துவர். வள்ளம், வலை சாமான்களை மழை படாமல் மூடிக்கட்டி வைப்பர்

சவள் - கரைவலை வள்ளத்தைச் செலுத்தும் சுக்கான் போன்ற நீண்ட பலகை

சிறாம்பி - பரப்புக்கடலுக்குள் கட்டப்படும் பரண், மீன் பிடிப்போர் இளைப்பாறும் இடம்

சொக்கரை - மீன் கூட்டின் பொறிவாசல் (வாய்ப்பக்கம்)

தண்டையல் - பாய்க்கப்பலைச் செலுத்தும் மாலுமி Tindall என்பதன் தமிழ் வடிவம்

திடற்கடல்
- கடலில் மண் திடல் உள்ள இடம்

தூர்மடி
- கரைவலையில் மீனைத் தாங்கி வருவது

நெருக்காறு
- கடல் அருவி சிறுகடலுடன் கலக்குமிடம்

பறி
- பனை ஓலையினால் பின்னப்படுவது, மீன், கருவாடு போடப்பயன்படுவது

மண்டாடி
- கரைவலைத் தொழிலை முன்னின்று நடத்துபவர், சம்மாட்டிக்கு அடுத்த நிலையில் உள்ளவர்

மாறுதண்டு
- கரைவலை வள்ளம் வலிக்கும் துடுப்பு, அணியத்தில் இருந்து மூன்றாவது இடத்தில் அமைந்திருக்கும்

மிதப்பு
- நீருக்கு மேல் மிதந்து நின்று வலை, கூடு, என்பனவற்றை அடையாளம் காட்டும் ஒல்லி அல்லது மரக்கட்டை
வலை பொத்துதல் - மீங்கள் சேதப்படுத்திய அல்லது கிழிந்த வலைகளைப் பின்னுதல்

வாடி
- கரைவலைத்தொழிலாளர் கடற்கரையில் தங்கும் வீடு (கொட்டில்)

வாரம்
- கரைவலையின் பங்குத் தொழிலில் சம்மாட்டிக்குக் கொடுக்கும் பங்கு.

நன்றி: கந்தசாமி முத்துராஜா எழுதிய "ஆழியவளை"