Author: வந்தியத்தேவன்
•10:25 PM
பாடசாலை லீவு விட்ட ஒரு சித்திரை வெயில் நாள்.
"டேய் வந்தி வந்தி" யாரோ ஒரு கூட்டாளி எங்கடை வீட்டு படலைக்கு வெளியே நின்று கூப்பிட்டான்.

"லீவு விட்டால் போது உடனே வந்திடுவாங்கள்" எனப் புறுபுறுத்தபடி அம்மா
"தம்பி உவன் பிரபாபோல கிடக்கு, கிரிக்கெட் அது இது எனக் கேட்பான் போய்விடாதை" என்றார் அம்மா.

"சும்மா இரணை லீவுக்கை விளையாடாட்டில் பிறகு ஏனனை லீவு" என்றபடி பேட்டை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தால் பிரபா, வர்மா, வடலி, கிருத்தி என ஒரு குறூப்பே விக்கெட்டுகள் டெனிஸ் போலுகள் என மேட்சுக்கு ரெடியாக இருந்தார்கள்.

"யாரோடை மச்சான் இண்டைக்கு மட்ச்? " வந்தி

"வேறை யாரோடை வழக்கம்போல பக்கத்து ஊர்க்காரன்களுடன் தான் நேற்று எங்கடை கிரவுண்டிலை தோற்றபடியால் இண்டைக்கு அவங்கடை கிரவுண்டுக்கு வரட்டாம் " வடலி

"உவங்களுக்கு வேறை வேலை இல்லை எப்படியும் வெல்லும் வரை மேட்ச்சுக்கு கேட்பான்கள்" கிருத்தி

"பொறடா இந்த முறை உவங்களுக்கு நல்ல அடி கொடுத்தால் அடங்கிவிடுவான்கள் பிறகு கொஞ்ச நாளைக்கு வரமாட்டார்கள்" வர்மா

இப்படித்தான் எங்கடை கிரிக்கெட் பொழுது விடியும். எங்கடை ஊர்களிலை எந்த விளையாட்டுக்கும் பருவகாலம் என்பதே கிடைக்காது. கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் கிரிக்கெட், கால்பந்து எல்லாம் விளையாடியிருக்கின்றோம்.

பள்ளிக்கூடம் லீவு விட்டால் போதும் கிரிக்கெட் மட்டையுடன் கிரவுண்டில் நிற்பதுதான் எங்கள் தலையாய வேலையே. கொஞ்சம் வயசு போனதுகள் எம்மைப் பார்த்தால் உந்தகிளைமாரிகளுக்கு விடிஞ்சால் பொழுதுபட்டால் உதுதான் வேலை வெயில் குடிக்கிறதுக்கென்றே வந்து நிற்கின்றார்கள் என்பார்கள். குறிப்பாக கிரவுண்டைச் சுத்தி இருக்கின்ற வீட்டுக்காரர்களுக்கு நாங்கள் கொடுக்கின்ற கரைச்சல் பல, தண்ணி குடிக்க போறது, பந்து அவர்கள் முற்றத்தில் போனால் எடுக்கபோறது. சிலர் பேசாமல் இருப்பார்கள் சிலர் கொஞ்சம் புறுபுறுப்பார்கள்.

இலங்கையைப் பொறுத்தவரை ஊருக்கு ஊர் விளையாடும் விளையாட்டுகள் வேறுபடும். சில ஊர்கள் கால்பந்துக்கு பெயர் போனவை சில ஊர்கள் கிரிக்கெட்டுக்கு பெயர் போனவை. உலகக்கோப்பைப் போட்டிகள் நடப்பதால் எங்கடை ஊரிலை நாங்கள் ஆடிய கிரிக்கெட் பற்றிச் சில சுவாரசியங்கள்.

எங்கடை ஊரிலை பக்கத்து ஊர்க்காரர்களுடன் விளையாடுவது எமக்குள் நாமே கன்னை புறிச்சு விளையாடுவது என பலவகையாக கிரிக்கெட் விளையாடுவோம். பக்கத்து ஊர் கழகங்களுடன் விளையாடும் போது போட்டியில் சூடு பறக்கும் சிலவேளைகளில் விக்கட், துடுப்பால் அடிபாடு கூட நடக்கும். ஆஷாஸ் தொடர், காவஸ்கர் போர்டர் தொடர் எல்லாம் எங்களுக்குத் தெரியமுன்னரே (அதாவது உலக அறிவை வளர்க்கமுன்னரே)பக்கத்து ஊர்க்காரர்களுடன் நாங்கள் தொடர்போட்டிகள் விளையாடி இருக்கின்றோம்.

முதலில் எத்தனை போட்டிகள் எங்கே விளையாடுவது என்பது தீர்மானிக்கப்படும். அவர்களின் கிரவுண்டில் 3 போட்டி என்றால் எங்கடை கிரவுண்டிலை 3 போட்டி என எமக்குள் எழுதப்படாத ஒப்பந்தம் போடப்படும். ஏற்கனவே இரண்டு கிரவுண்டிலையும் விளையாடி ஏதும் பிரச்சனைகள் நடந்தால் இரண்டு டீமுக்கும் பொதுவான கிரவுண்டில் போட்டி நடத்துவது என தீர்மானம் போடப்படும்.

அடுத்த பிரச்சனை அம்பயர் அடிக்கடி எல்பி கொடுக்காத வெறுமனே போலர் வீசுகின்ற போலை எண்ணவும் அவுட் என்றால் கையைத்தூக்கவும் பவுண்டரிக்கு கையை விசுக்கவும் தெரிந்தவராக இரண்டு தலையாட்டிப் பொம்மைகள் அம்பயராக இருந்தால் போதும் ஆனால் சிலவேளை எங்கடை ஆட்களே நாங்கள் பேட் பண்ணும் போது அம்பயராகவும் அவங்கடை ஆட்கள் அவங்கள் பேட் செய்யும் போது அம்பயராகவும் தலையாட்டுவார்கள் ச்சீ கடமையாற்றுவார்கள். எப்பவாவது ஒரு நாளைக்கு இரண்டு டீமுக்கும் பொதுவான அம்பயர் கடமை ஆற்றுவார். பெரும்பாலும் வன் டவுனாக வருபவன் அம்பயராக கடமையாற்றுவான் தான் அடிக்கவேண்டும் என்ற ஆர்வக்கோளாற்றில் இரண்டு மூன்று முறை எல்பி கொடுக்காமல் நான்காவது முறை கொடுத்துவிட்டு அவுட்டானவனிடம் உனக்கு 3 தரம் நான் கொடுக்கவில்லை திரும்ப திரும்ப கொடுக்காமல் விட்டால் அது பிழை என அரிச்சந்திரனின் பக்கத்துவீட்டுக்காரன் போல லெக்சரடிப்பான். அவுட்டானவன் அம்பயராகி அவனைப் பழிக்கு பழிவாங்கிய கதையும் நடக்கும்.

இதெல்லாம் பேசி முடிச்ச பின்னர் எத்தனை ஓவர், யார் பந்து கொண்டுவருவது, யார் பட் கொண்டுவருவது எல்லாம் நிர்ணயித்து போட்டி நடக்கும் நாள், நேரம் எல்லாம் முடிவு செய்யப்படும்.

போட்டி தொடங்கும் போது ஸ்கோர் போடும் அணியினருக்கு பக்கத்தில் மற்ற அணியின் பீல்டிங் செய்யாத ஒருவர் அல்லது ஒரு தவ்வலை பக்க‌த்தில் இருத்திவிடவேண்டியதுதான், அவனின் கடமை கள்ளரன்ஸ் போடாமல் கவனமாக ஸ்கோர் பதிவாகின்றதா என்பதை அவதானிப்பது. இதிலை சிக்கல் என்னவென்றால் பெரும்பாலும் சின்னப்பொடியளை இதற்கு நியமிப்பதால் அவனுக்கு மாங்காயோ நெல்லிக்காயோ லஞ்சமாக கொடுத்து எப்படியும் ஒரு இருபது இருபத்தைஞ்சு ரன்ஸ் கள்ள ரன்ஸாக இருக்கும். ஒரு சில ஸ்கோர்போடுபவர் மட்டும் நேர்மை நீதி நியாயமாக இருப்பார்கள். தோற்கின்ற நிலை வந்தால் கள்ள ரன்ஸ் உறுதியாக போடப்படும்.


ட்வெண்டி ட்வெண்டி வரமுன்னரே அதனை விளையாடிய பெருமை எமக்கு உண்டு, பெரும்பாலும் அணிக்கு 20 ஓவர்கள் கொண்ட போட்டியே நாங்கள் விளையாடுவது. நல்லா விசுக்க கூடியவர்கள் ஓப்பனராக இறங்குவார்கள். இதிலை ஒரு சிக்கல் ஓப்பனராக இறங்குகின்றவன் தனக்காக பீல்டிங் நேரத்தில் தனக்காக இன்னொருவனை அலையவிட்டுவிட்டுப் போய்விடுவான். நானும் கிரிக்கெட் விளையாடினான் எனச் சொல்லும் சின்னப்பொடியள் அந்தக் கடமையை சிவனே என செய்வார்கள்.

மற்றும்படி ரூல்ஸ் எல்லாம் வழக்கமான கிரிக்கெட் தான். என்ன ஒரு பக்கம் விக்கெட் இருக்கும் பெயில்ஸ் இருக்காது மற்றப் பக்கம் ஓரு கல்லு. ரன் அவுட்டாக்குவதற்க்கு அந்தக் கல்லில் பந்தைக் குத்தினால் சரி, சிலவேளை போலர் காலை கல்லில் ஊண்டிக்கொண்டு பந்தைப் பிடித்தால் அவுட் தான்.

இன்னொரு முக்கியமான பிரச்சனை இருக்கு போட்டி முடிஞ்ச பின்னர் தோத்த அணியினரின் கையெழுத்தை வென்ற அணி தங்கடை ஸ்கோர் போட்ட கொப்பியில் வாங்கவேண்டும், பெரும்பாலும் தலைவர் என எவரும் இல்லாதபடியால் யாருமொரு அப்பாவியின் கையெழுத்தை வாங்கிவிடுவார்கள், உப்பிடித்தான் ஒருக்கால் என்னெட்டை கையெழுத்தை வாங்க எங்கடை டீமில் இருக்கும் ஒரு அண்ணை "டேய் உவங்கள் அலாப்பி வென்றுவிட்டார்கள் சைன் வைக்காதை" என்றான் ஆனாலும் அவங்கள் என்னை வளைஞ்சுப் பிடித்துவிட்டார்கள் நானும் என்ன செய்வது என விளங்காமல் கையெழுத்தை வைத்துவிட்டு வந்துவிட்டேன் எங்கடை குறுப்போ எனக்கு ஒரே ஏச்சுத்தான், நான் சிரித்துக்கொண்டு "நான் என்ன பேயனா என்டை சைனை வைக்க நான் சும்மா ஒரு பெயரைக் கிறிக்கிவிட்டு வந்திடேன்" என்றேன், இப்படியான மோசடிகளில் இருந்து தப்ப சைனுடன் கீழே பெயரை எழுதவேண்டும் என்ற கட்டாயம் சில இடங்களில் இருந்தது.

எதிரணியினர் தொடரில் தோற்றால் அடுத்த தொடருக்கு பரப்பளவு குறைந்த வெட்டைகளை தேர்ந்தெடுப்பார்கள். அடுத்த மேட்சைப் பற்றிப் பேசும் போது இந்த முறை தங்கத்தான் வெட்டையில் தான் விளையாடவேண்டும் என்பார்கள். தங்கத்தான் வெட்டை என்பது ஒரு சின்ன வெளியான காணி சுத்தவர பனை மரம் எல்லாம் வளர்ந்து நிக்கும். பந்து பனையில் பட்டு பிடிச்சால் அவுட் போன்ற ஐசிசிக்கு தெரியாத புது ரூல்ஸ் எல்லாம் அங்கே உருவாகும். சின்ன இடம் என்பதால் சிக்சர் சிக்சராக அடிக்கலாம். இதேபோல் சிலவேளைகளில் தோட்டத் தறைகளில் எல்லாம் அங்கே எந்தப் பயிரும் இல்லையென்றால் போட்டி நடக்கும். செம்மண் தோட்டத்தில் விளையாடினால் உடுப்பெல்லாம் ஊத்தையாகிவிடும். வீட்டிலை அம்மாட்டை ஏச்சு தான் வாங்கவேண்டும் என சிலர் தோட்டத்தில் விளையாட வர மறுத்துவிடுவார்கள்.

இதை விட எங்கடை ஊருக்குள்ளையே இரண்டாக அணி பிரிச்சு விக் மேட்ச் நடத்துவது வழக்கம். இது ஒரு சனிக்கிழமையில் தான் பெரும்பாலும் நடைபெறும், காரணம் ஞாயிற்றுக்கிழமையில் பலர் சைவ உணவு என்பதால் சனிக்கிழமை வைத்தால் தான் இறைச்சி வாங்கிக் காச்சி பாணுடன் சாப்பிடலாம்.

போட்டிக்குச் சில நாட்களுக்கு முன்னரே விளையாடுகின்ற பொடியளிடம் காசு வாங்கி ஆயத்தம் எல்லாம் நடக்கும். வாங்குகின்ற காசில் தான் இறைச்சி, பாண் எல்லாம் வாங்கவேண்டும். கிரிக்கெட் விளையாடுவதை விட இறைச்சியும் பாணும் சாப்பிடுவதுதான் முக்கியம். வீரர்கள் வெள்ளை ஜீன்ஸ் வெள்ளை ரீசேர்ட் எல்லாம் போட்டு ரியலான டெஸ்ட் மேட்ச் போலவே வெளிக்கிட்டு வருவார்கள். ஸ்பீக்கர் எல்லாம் கட்டி நேர்முக வர்ணனைகூட நடக்கும்.

"முழுவேகத்துடன் வீசப்பட்ட அந்தப் பந்தை சுபாங்கன் பைன் லெக்கில் அடித்து நான்கு ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். "

"மாயாவின் துடுப்பில் பட்ட பந்து நேராக விக்கட் காப்பாளரிடம் செல்கின்றது, மாயா ஆட்டம் இழக்கின்றார்"

இப்படி அழகுதமிழில் வியூகம் அமைத்த இடங்கள் மாத்திரம் ஆங்கிலத்துடன் வர்ணணை நடக்கும்.

இந்த போட்டியைப் பார்க்க எப்படியும் பார்வையாளர்கள் வருவார்கள். குறிப்பாக பெண்கள் வந்தால் சிலருக்கு கொண்டாட்டம் அடி அடி என அடிப்பார்கள். அதிலும் அவரின் மனதுக்குப் பிடித்தவர் அந்த கூட்டத்தில் இருந்தால் சிக்சர் எல்லாம் பறக்கும் சிலவேளை சிக்சரடிக்கப் போய் அவுட்டான சோகமும் நடந்திருக்கின்றது.

ரியூசனுக்கு ரியூசன் கூட விளையாடி இருக்கின்றோம். எங்கடை ரியூசன் வென்றால் அண்டைக்கு ஒரே ஆர்ப்பாட்டம் தான் எல்லாம் கூடப் படிக்கின்ற பெட்டையளுக்கு கலர்ஸ் காட்டத்தான். தோத்துப்போய் வந்தால் அவை எங்களை நக்கலடிப்பார்கள். யாரோ ஒரு உளவாளி என்ன ஸ்கோர் யார் டக்கவுட்டானான் யார் கேட்ச் விட்டான் என சகலதையும் சொல்லிவிடுவான். எல்லாத்தையும் சொல்லி சொல்லியே நக்கலடிப்பார்கள், ஆனாலும் எமக்கு வெட்கம், மானம் ரோஷம் எதுவும் இல்லாதபடியால் நாமும் பெரிதாக கண்டுகொள்வதில்லை.

இப்படித்தான் எங்கடை கிரிக்கெட் வாழ்க்கை ஒரு காலத்தில் இருந்தது.மீண்டும் ஊருக்குப் போய் கிரிக்கெட் விளையாட ஆசை நடக்குமா? ம்ம்ம் அது ஒரு கனாக் காலம்.



சொல் விளக்கம்
பெரும்பாலன சொற்கள் ஏற்கனவே ஈழத்துமுற்றப் பதிவுகளில் இருந்தாலும் புதிய வாசகர்களுக்காக இந்த விளக்கம்.

கூட்டாளி - நண்பன்
படலை - Gate பெரும்பாலும் வேலி உள்ள வீடுகளுக்கு படலை தான் இருக்கும் இதுவும் பனை ஓலை அல்லது கிடுகால் அமைந்திருக்கும், சில இடங்களில் தகரத்திலும் இருக்கும்.
புறுபுறுத்தல் சத்தம் வெளியே வராமல் வாய்க்குள்ளேயே முணுமுணுத்தல்
கிளைமாரி வேலைவெட்டி இல்லாமல் ஊர் சுத்தும் இளைஞர்கள்
கன்னை - குழு
புறி - பிரிப்பது
எல்பி - LBW எல்பிடவுள்யூவைத்தான் சுருக்கமாக எல்பி
தவ்வல் - சின்னப் பையன்
கள்ள ரன்ஸ் - களவாக போடப்படும் ஓட்டம்
விசுக்குதல் - அதிரடியாக ஆடுதல்
அலையவிடுதல், அலைதல் - பீல்டிங் செய்தல்
அலாப்பி - ஏமாத்தி விளையாடுதல்
ஏச்சு - திட்டுதல்
வெட்டை - சிறிய மைதானம்
தோட்டத் தறை - தோட்டம் செய்யும் நிலம்
ஊத்தை - அழுக்கு
விக் மேட்ச் - பெரிய அளவில் ஆடும் கிரிக்கெட்
பாண் - Bread இதைப் பற்றிய பதிவே ஈழத்துமுற்றத்தில் இருக்கின்றது
கலர்ஸ் காட்டுதல் - பந்தா பண்ணுதல்

படங்கள் இலங்கை வலைப் பதிவர்கள் கிரிக்கெட் போட்டியில் இருந்து எடுக்கப்பட்டவை
Author: வந்தியத்தேவன்
•4:38 PM
வழக்கம் போல பிள்ளையார் கோயில் ஆலமரத்தடி இளந்தாரிப் பொடியளினால் களைகட்டியது. ஒரு பக்கம் ஆடு புலி ஆட்டம் விளையாடும் பொடியள் இன்னொரு பக்கம் தாயம் எறியும் கூட்டம், இன்னொரு பக்கம் 304 கடதாசிக் கூட்டம் விளையாடும் கோஷ்டி என அமளிதுமளிப்பட்டது.



வழக்கமாக 12 பேர் விளையாடுகின்ற 304 இண்டைக்கு சில வழமையான கையள் வராதபடியால் 8 பேருடன் தொடங்கியது.

"கேள்வி" என அழகன் தொடங்க பிரபா "உதவி" என்றான் அழகனும் உதவிக்கு மேலே என தன்ரை பக்க மாறனை கேட்கச் சொன்னான். மாறன் ஒரு தொன்னூறு என இழுக்க எதிர்க்கோஷ்டியினர் அனைவரும் மேலே என மாறனுக்கே விட்டுவிட்டார்கள்.

"உவன் உப்பிடித்தான் தாள் இல்லாமல் சும்மா கேட்பான் " என அழகன் மாறனைப் பேசியபடியே "சரி சரி துரும்பைக் கவிழ்" என்றான்.

"டேய் அழகா நீதானே இறக்கம் நல்ல தாளாப் பார்த்து இறக்கு" மாறன்.

"நல்ல தாளோ, சரி இந்தா டயமண்ட் வீறு" என அழகன் டயமண்ட் ஜக்கை இறக்கினான்,

"நல்ல காலம் நானும் உந்த கோதாரி டயமண்ட்டில் தான் கேட்டனான் தப்பிட்டேன்" என்ற படி பிரபா டயமண்ட் மணலை இறக்கினான்.

"அடப்பாவி மணலை மட்டும் வைத்துக்கொண்டே கேட்டிருக்கின்றாய் தப்பிவிட்டாய்"

"உவன் ரவி நல்லா அடுக்குவான் ஆனால் ஒருநாளும் வெல்ல அடுக்குவதில்லை எதாவது ஒரு தாளை மாத்தி அடிக்கி குழப்பிபோடுவான்" என ரவியின் அடுக்கை குறை சொன்னான் சீலன்.

முதல் ஆட்டம் முடிந்தது, அழகன் கார்ட்சை புறிக்கத் தொடக்கினான். கடைசிக் கை போட்டதுதான் "மடக்கு" என்றான் பிரபா.

"ஆடத்தன் அவங்களைக்கு அணைஞ்சுபோச்சு, எங்கடை பக்கம் கலாவரை ஆனாலும் ஒருதனும் கேட்கவில்லை" சலிப்புடன் அடுக்கல் மன்னன் ரவி.

ரவி சொன்னது போல பிரபாவும் ஆடத்தன் வீறை மேசையில் ஓங்கி அடித்தான். அவனுக்கு பக்கத்தில் இருந்த மாறன் ஆடத்தன் ஆசை இறக்கவும் பிரபா "கோட்"
என ஏனைய தாள்களை கோட்டடித்தான்.

இந்த முறை நீங்கள் மடக்கினாலும் அடுத்த முறை நான் கம்மாறீஸ் அடிக்கின்றேன் இது சீலன்.

டேய் நீ இனத்துக்கு இனம் போடுகின்ற சின்னபெடியன் கம்மாறிஸ் அடிக்கபோறீயோ என அவனை மாறன் நக்கலடித்தான்.

இப்படியே ஒருத்தரை ஒருதர் நக்கலடித்தபடி பெரிதாக அலாப்பல்கள் இல்லாமல் நிறைவடைந்தது.

சொல் விளக்கம் :

கடதாசிக் கூட்டம் :

கார்ட்ஸ் விளையாடுபவர்களை எங்கடை ஊரில் கடதாசிக் கூட்டம் என்பார்கள்.

கையள் :

கார்ட்ஸ் விளையாட்டில் பங்குகொள்ளும் நபரை கை என அழைப்பார்கள். உதாரணமாக "மச்சான் ஒரு கை குறையுது நீயும் வா" என்றால் ஒராள் குறைவாக உள்ளது என்பதாகும்.

கேள்வி :

விளையாட்டுத் தொடங்கும்போது கார்ட்சினை பங்கிட்டவருக்கு பக்கத்தில் இருப்பவர் பெரும்பாலும் இந்தக் கேள்வியுடன் தான் ஆரம்பிப்ப்பார். புள்ளிகள் அடிப்படையில் இது 50 (சாதாரண 50) ஆகும். இதன் ஆங்கிலப் பிரயோகம் தெரியவில்லை.

உதவி ;

கேள்வி கேட்டவரின் எதிரணி உறுப்பினர் (பெரும்பாலும் கேள்வி கேட்டவருக்கு அருகில் இருப்பவர்) கேட்பது இதன் பெறுமதி சாதாரண 60 புள்ளிகள் ஆகும்,

மேலே :
ஒருவர் தன்னால் எந்தக் கேள்வியும் கேட்கமுடியாமல் தன் அணியைச் சேர்ந்த ஏனையவர்களிடம் விட்டுவிடுவது,

தாள் :

சீட்டு ஒன்றை தாள் என்பார்கள். உதாரணமாக நல்ல தாள் வாய்க்கவில்லை.

துரும்பு :

Trump பே துரும்பு எனப்படுகின்றது. துருப்புச் சீட்டின் மருவிய வடிவம் இந்த துரும்பாகும்.

வீறு : ஜாக்(Jacks).

மணல் : ஒன்பது (Nine)

ஆசு : Ace

ஆஸ் (Ace) என்பதன் மருவிய பதம்

அடுக்குதல் :

அடுக்குதல் என்பது சீட்டினை ஒருவிதமான வரிசைப்படுத்தலில் அடுக்குதல். ஏதாவது ஒரு அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தாள்கள் செல்லும், சிலவேளைகளில் அடுக்கு பிழைத்தால் தோல்வி தான்.

புறித்தல் :
சீட்டினை அனைத்து விளையாடும் உறுப்பினர்களிற்க்கும் பங்கிடுதல்.

மடக்கு :

ஒருவர் தன்னுடைய கையில் இருக்கும் தாள்கள் அனைத்தும் எதிரணி உறுப்பினர்களால் வெட்டமுடியாமல் விளையாடுவது.

கோட்(Coat) :

மடக்கியவர் கடைசியாக கோட் எனச் சொல்லி தன்னுடைய தாளை அல்லது தாள்களை இறக்கவேண்டும்.

ஆடத்தன் : Hearts

உவீத்தன் : Diamonds

கலாவரை : Clubs

ஸ்பேட் (Spades) அதே பெயரில் தான் அழைக்கப்படுகின்றது.

கம்மாறிஸ் : Caps

ஒரு அணியினருக்கு சகல தாள்களும் கிடைத்தால் கடைசியாக அடிப்பது கம்மாறீஸாகும்.

சில சொற்களின் ஆங்கிலச் சொற்கள் தெரியவில்லை. மேலதிக தகவல்களை கார்ட்ஸில் வித்துவம் கூடிய நண்பர்கள் சொல்லவும். இந்த 304 விட ரம்மி, 31 (முப்பத்தியொன்று), கழுதை, பிரிஜ்(Bridge) போன்ற ஏனைய கார்ஸ்ட் விளையாட்டுகளும் பிரபலம் வாய்ந்தவை.
Author: Admin
•8:08 AM
தமிழர் எமது கலை, கலாச்சாரங்கள் மறைந்துவரும் நிலையில். நான் நீண்ட நாட்களாக அறிய ஆவலாக இருந்த விடயம் ஒன்றுக்கு முற்று முழுதான விளக்கம் கிடைத்திருக்கின்றது. அது வேறு ஒன்றுமல்ல. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கொம்புமுறி விளையாட்டு பற்றிய பல்வேறு விடயங்களை  அறிந்து கொள்ள முடிந்தது.

எனது கிராமம்கூட கொம்புமுறி விளையாட்டுக்கு பிரசித்தி பெற்ற ஒரு கிராமமாகும். இக் கிராமத்திலே கொம்புமுறி விளையாட்டு இடம் பெற்ற இடம் கொம்புச் சந்தி என்று இப்பொழுதும் அழைக்கப்படுகிறது ஆனால் இங்கு இருக்கும் அநேகமானவர்களுக்கு கொம்புமுறி விளையாட்டு என்றாலே என்ன என்று தெரியாது.

 கலாபூசனம் ஆறுமுகம் அரசரெத்தினம் அவர்களை சந்திக்கக் கிடைத்தது. அவர் கொம்புமுறி விளையாட்டு தொடர்பாக பூரணமான விளக்கத்தினைத் தந்ததோடு. அவரால் கொம்புமுறி விளையாட்டு தொடர்பாக வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தினையும் தந்தார். அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

கண்ணகை அம்மனுடன் தொடர்பு பட்டதே கொம்புமுறி விளையாட்டு. மாநாய்கரின் வளர்ப்பு மகள். மாசாத்துவரின் மருமகள். கோவலனுடைய மனைவி. இவர்கள் மூவரும் செட்டிகள். இதனால்தான் கண்ணகியும் செட்டிச்சி அம்மை. மாதவிக்குப் பொன்தோற்றகோவலருடன் மதுரைக்குச் சென்ற கண்ணகை ஆயர் இடைச் சேரியில் தங்கியிருக்க. கோவலன் கண்ணகியின் இடது காற்சிலம்பை விற்க மதுரை நகர் வீதியிலே விலை கூறினான்.

பாண்டிமாதேவியின் சிலம்பை பறி கொடுத்த தட்டான். சிலம்புத் திருடன் கோவலன் என்று பாண்டி மன்னனிடம் குற்றம் சாட்ட விதி வலியால் தீர விசாரித்தறியாத மன்னன் கோவலனை மழுவால் வெட்டுவிக்கும்படி கட்டளை இட்டான்
கோவலன் கொலையுண்டான். இதை கண்ணகை அறிந்தாள். கடும் சினம் கொண்டாள். "காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என் கணவன்? என்று செங்கதிர்ச் செல்வனிடம் கேட்டாள் . உன் கணவனை கள்வன் என்ற இவ்வூரை தீ உண்ணும் என்றான் செங்கதிர்ச் செல்வன். தலைவிரி கோலம். ஒரு கையில் சிலம்பும் மறு கையில் வேப்பம் குழையோடும். மன்னனிடம் சென்று வாதாடி வழக்குரைத்து.சிலம்புடைத்துவழக்கு வென்றாள்.

மன்னனும் மனைவியும் உயிர் நீத்தனர். இடது முலை திருகி நகர் எரித்தால். ஆயர் இடைச் சேரிக்கு வந்தாள். ஆய்ச்சியர் வெண்ணை தயிர் என்பவற்றை அவள் மார்பிலே அப்பினர். சீற்றத்துடன் வந்து கொண்டிருந்த கண்ணகியின் முன்னால் கோவலன் கட்சி, கண்ணகை கட்சி எனப் பிரிந்து கொம்புமுறித்து விளையாடி கண்ணகை கட்சிக்கு வெற்றி கொடுத்து இளைஞர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். சினம் தணிந்த கண்ணகை சிரித்து மகிழ்ந்தாள். தாயே குளிந்தளிர்வாய் என்று அவர்கள் வேண்ட அம்மனும் குளிர்ந்தாள். இதுதான் கொம்புமுறி விளையாட்டு வந்த வரலாறு.

"கொம்பு எனப்படுவது வளைந்த மரத்தடியாகும். வெட்சி, கருவீரம், கரயாக்கு என்ற மரக்கிளைகளே பயன் பட்டன. வட சேரிக்கொம்பு 90 பாகை வளைவிலும் தென்சேரிககொம்பு அதை விடக்கூடிய வளைவிலும் இருக்கவேண்டும் என்பது விதி. இரண்டே முக்கால் விரல்க்கடையில் சரிகொம்பு இருக்க வேண்டும். இரண்டு விரக்கடை குச்சித்தோடு இருக்கவேண்டும். கொம்புகளின் அளவுப் பிரமாணம். ஏனைய கட்சியினால் பரிசீலிக்கப்படும். கொம்புகளுக்கு மூன்றரை முழம் (ஐந்தரை அடி) நீழமான பில்லிக்கம்புகள் வைத்து வெளுக்கயிற்றினால் வரிந்து பனிச்சை மரத்தின் கைகளின் பசை பூசி காய வைத்து எடுப்பர். கொம்புக்கு "அரிப்பு" எனப்படும் கயிறு கட்டப்படும்.

தூண்டில் போடுவோருக்கு தூண்டில் அரிப்புப் பற்றியும் நன்கு தெரியும். அரிப்பு என்பது ஒரு ஆள் நீளமான சுமார் ஆறடி நீளக் கயிறாகும். இது வெள்ளை ஆத்தி நாரினால் திரிக்கப்பட்ட வெளுக் கயிறாகவோ, மான் தோலினால் திரிக்கப்பட்ட கயிறாகவோ இருக்கும். இந்தக் கயிற்றுக்கு ஆமணக்கு என்னை பூசுவது வழக்கம். தென்சேரி வாரக் கொம்பு அரிப்பிலே உள்ள கொழு தவனையுடாக பெரிய வடத்தினைப்பூகுத்தி பெரு  மரமொன்றின் அடியில் பிணைத்து விடுவர். வட சேரிக் கொம்பின் கொளுத் தவணையுடன் ஒரு உலக்கை போடப்படும். வட சேரிக்கொம்பின் கொழு தவணையில் நீழமான வடமும் பூட்டப்படும்.

தென்சேரி வாரத்தினர் தமது கொம்பினை தயாராகப் பிடித்துக்கொள்ள வடசேரி வாரத்தினர் தமது கொம்பினைப் பூட்டுவதத்கு தயாராக நிற்பர். நீழமான வடத்திலே வடைசேரித் தென்சேரிப் பொது மக்கள் இழுப்பதட்குத் தயாராக நிற்பர். கொம்பு பூட்டும் போது தத்தமது கொம்புகளை பாது காக்கும் வகையில் பில்லி மிரட்டும் இழுபறி இடம் பெரும். சரியாகப் பூட்டப்பட்டதும்.பொது மக்களின் இழுவையினால் கொம்பு ஒன்று முறிந்து விடும். முறியாத கொம்புக்குரியவர்கள் வெற்றி ஆரவாரம் செய்வர்.இரு சேரிக்கும் பொதுவாக உள்ள ஈடகத்தை அலங்கரித்து அதில் தமது கொம்பினை வைத்து கொம்புமுறிப்பாடல்களை பாடுவார்.

வசந்தன் கூத்துக்கள், பொய்க்கால் குதிரை ஆட்டம், வினோத உடை அலங்காரம் என்பன இரவு முழுவதும் இடம் பெறும். கொம்பு முறிப்பில் கொம்பின் வலிமையோடு பல மந்திர, தந்திர வித்தாண்மைகளும் பயன்படுத்தப்பட்டன.

தோற்ற கட்சியினர் மறுநாள் போட்டிக்கு கொம்பு ஆயத்தம் செய்வர். போட்டி பலநாள் தொடரும். சுள்ளிக்கொம்பு 01, கொம்புத்தட்டுக் கொம்பு 03, கூடாரக் கொம்பு 05, ஏடகக் கொம்பு 07, தண்ணீர்க் கொம்பு 01 முறித்து விளையாடுவதற்கு இரண்டு பிரிவுகள் தேவை. கோவலன் கட்சியை வடசேரி என்றனர். கண்ணகை கட்சியை தென்சேரி என்றனர்.

கொம்புமுறி விளையாட்டின்போது பல சுவாரசியமான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் இன்னும் பல தகவல்களையும் கலாபூசனம் ஆறுமுகம் அரசரெத்தினம் அவர்களிடம் இருந்து அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.
Author: யசோதா.பத்மநாதன்
•4:12 AM
பிள்ள சினேகிதி சொன்ன குலகுலயா முந்திரிக்கா பாட்டு ஞாபகம் இருக்கே? இதுகளும் அதுகளப் போல தான்.ஆனா என்ன கொஞ்சம் பொம்பிளப் பிள்ளயள் விளையாடுற விளையாட்டு.அவ்வளவு தான்.

கிள்ளுப் பிறாண்டி நுள்ளுப் பிறாண்டி:-

நாலஞ்சு பேர் வட்டமா இருப்பினம்.இரண்டு கையையும் முன்னால் பரப்பி வத்திருப்பார்கள்.ஒருவர் இந்தப் பாடலை இப்படிப் பாடுவார்.
கிள்ளுப் பிறாண்டி நுள்ளுப் பிராண்டி
கொப்பன் தலையில் என்ன பூ?

கிள்ளிப் பிராண்டி என்னும் போது அவர் ஒருவரது கையை நுள்ளுவார். பின்னர் நுள்ளுப் பிராண்டி என்னும் போது வரிசைக் கிரமமாக வரும் அடுத்தவரின் கையை நுள்ளுவார்.கொப்பன் தலையில் என்னும் போது அது அடுத்தவரது கையிற்கான நுள்ளாக இருக்கும்.என்னபூ என்பது 4வது கையிற்கான நுள்ளாக இருக்கும்.அவர் ஒரு பூவின் பெயரைச் சொல்ல வேண்டும்.பொதுவாக முருக்கம் பூ என்று சொல்வார்கள்.

பாடல் பிறகு இப்படித் தொடரும்.

முருக்கம் பூவத், தின்றவளே,
பாதி விளாங்காய், கடித்தவளே,
பாட்டன், கையை, மு, ட, க், கு,

ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு கையிற்கான நுள்ளாக வந்து கடைசியாக முடக்கு என்ற சொல் தனித்தனி எழுத்துக்கான நுள்ளாக இருக்கும். கு என்ற சொல் முடிகின்றவர் தன் கையை மறு புறமாகத் திருப்பி வைக்க வேண்டும்.பூவின் பெயரை வேறொன்றாகக் கூறும் போது வேறொருவரது கை திரும்புகின்ற வாய்ப்புக் கிட்டும்.அந்தக் கு என்ற சொல் மீண்டும் திருப்பிய கையில் வந்து முடிந்தால் அவர் தன் கையை எடுத்துக் கொள்ளலாம்.

பாடல் மீண்டும் அவ்வாறே தொடரும்.அப்படி முதலில் யாருடய கை முழுவதுமாக விடுபடுகிறதோ அவர் வெற்றி பெற்றவர்.
இப்போது நினைத்தால் இதிலெல்லாம் என்ன சுவாரிஸம் இருக்கிறது என்று தோன்றுகிறது. ஆனால் அப்போதெல்லாம் இது தான் திறம்.

ஆச்சுப் பிச்சிலி ஆச்சுப் பிச்சிலி

இது ஒரு சின்ன முசுப்பாத்தி விளையாட்டு.கைகளை அகல விரித்துக் கொண்டு ஆச்சுப் பிச்சிலி ஆச்சுப் பிச்சிலி என்று சொல்லிக் கொண்டு சும்மா சுத்துவது தான். இறுதியில் தலை சுற்றி ஒவ்வொருவராக தொப்புத் தொப்பென்று விழுவோம். அதெற்கெல்லாம் பெரிய வெற்றி பெற்றது போல் பெரிய சிரிப்பெல்லாம் சிரித்துக் கொள்வோம்.பாசாங்காக ஒருவர் மேல் ஒருவர் விழுந்து கொளவதற்கும் ஒரு சிரிப்பு. இதில் திறிலான சம்பவம் தலை சுற்றுவதை அநுபவிப்பதாகத் தான் இருந்தது என்று இப்போது தோன்றுகிறது.

இன்னொரு பாட்டிருக்கிறது. அதனை ஏன் பாடினோம் என்று இப்போது ஞாபகம் இல்லை. ஆனால் பாடல் ஞாபகமாக இருக்கிறது. பாடல் இது தான்.

அக்கா வீட்ட போனேன்
பழம் அரிசி தந்தாள்
வேண்டாம் என்று வந்தேன்
வந்த வழியில் பாம்பு
பாம்படிக்கத் தடிக்குப் போனேன்
தடியெல்லாம் ஊத்தை.
ஊத்தை கழுவ தண்ணிக்குப் போனேன்
தண்ணி எல்லாம் மீன்
மீன் பிடிக்க வலைக்குப் போனேன்
வலையெல்லாம் ஓட்டை
ஓட்டை தைக்க ஊசிக்குப் போனேன்
ஊசி எல்லாம் வெள்ளி
வெள்ளி எல்லாம்(அம்மா?) வெள்ளி
பொயிலைக் காம்பை நுள்ளி
வாய்க்கை போடடி கள்ளி.

இப்பாட்டு ஒரு லயத்தோடு பாடப் படும்.

இப்போது இன்னொரு பாட்டும் ஞாபகம் வருகிறது.
இது பலராக பெண்கள் விளையாட்டில் தம்மை இரண்டு பிரிவாகப் பிரிப்பதற்காக இப்பாடலைப் பாடிப் பிரித்துக் கொள்வார்கள். பாடல் இது தான்.எல்லோரும் வட்டமாக நிற்க ஒருவர் தன்னில் இருந்து இப்பாடலை இப்படி ஆரம்பிப்பார்.ஓர் என்று தன் உச்சம் தலையில் கை வைப்பார். அம்மா என்று தன் நெஞ்சில் கை வைப்பார். பிறகு ஒவ்வொரு சொல்லாக ஒவ்வொருவரைச் சுட்டியபடி வருவார்.

ஓர் அம்மா கடைக்குப் போனா
ஒரு டசின் பென்சில் வாங்கி வந்தா
அதன் நிறம் என்ன?( என்ன என்பதில் முடிபவர் ஒரு நிறத்தைச் சொல்ல வேண்டும்)

அவர் சிவப்பு என்று சொன்னால் சி, வ,ப்,பூ என்று ஒவ்வொருவராகச் சுட்டிக் கொண்டு வர வேண்டும்.கடைசி எழுத்தில் முடிபவர் ஒரு புறமாக நின்று கொள்ள வேண்டும். பின்னர் இப்பாடல் மீண்டும் தொடரும். அடுத்த முறை முடிபவர் மறு புறமாக நின்று கொள்ள வேண்டும். இப்படியாகக் கட்சி பிடித்துக் கொள்வார்கள்.

இன்னொரு பாட்டும் இருக்கிறது.' என்னகுத்து? இந்தக் குத்து' என்று முன்னால் நிற்பவரைக் குத்துவது.அதன் தொடக்கம் தெரியவில்லை.

இப்போதெல்லாம் இப்படிப் பாடிக் கொள்கிறார்களா என்றும் தெரிய வில்லை.
Author: சுபானு
•5:02 AM



முற்றம் என்றவுடன் என் ஞாபகத்திற்கு வருகின்ற ஒரு விடயம் நாங்கள் எங்கள் வீட்டு முற்றத்தில் சிறுபிள்ளைகளாக இருந்த போது விளையாடிய விளையாட்டுக்கள்தான். பின்னேரமாகி விட்டாலே சிறுவர்களுக்குச் சந்தோசம் தான். என் வயதையொத்த சிறுவர் சிறுமியர், என் கூடப்பிறந்தவர்கள் என எல்லாம் ஒன்றாகக் கூடிவிடுவோம். பொதுவான நாங்கள் கூடுவத எங்கள் வீட்டு முற்றமாகத்தான் இருக்கும். பின்னர் என்ன விளையாடுவது எனத்தீர்மானிப்போம். அப்போதெல்லமாம் எங்களுக்குக் கிரிக்கட் என்றால் என்னவென்றே தெரியாது. அந்தச் சின்ன வயதில் நாங்கள் எல்லோரும் கீறோ கீறோயின்கள் தான். பொதுவாக எல்லோரும் பங்கேற்கக் கூடிய விளையாட்டைத்தான் தேர்ந்தெடுப்போம்.


நேற்றைக்கு கெந்திப் பிடிச்சு விளையாடினாங்க, அதுக்கு முத நாள் ஒளிச்சுப் பிடிச்சு விளையாடினாங்க, அப்ப இன்னைக்கு என்னத்த விளையாடுவம்.. கிளித்தட்டு, இல்லாட்டிக்கு இன்னைக்கும் ஒளிச்சுப் பிடிச்சு விளையாடுவோமா..? வேண்டாம் இனைக்கு ஓடிப்பிடிச்சு பிளையாடுவம்.. குல குலயா முந்திரிக்கா.... கன..காலம் விளையாடி...


விளையாட்டு என்னமோ ஓடிப்பிடிச்சு பாணிதான். ஆனாலும் ஓடுகின்ற இடத்தையும் அளவையும் துரத்துகின்ற ஆளையும் தெரிவுசெய்து விளையாடும் பாணிதான் இந்த குல குலயா முந்திரிக்கா, என்ற பாடலுன் விளையாடும் விளையாட்டில் உள்ள வித்தியாசம். எனக்குத் தெரிந்து ஈழத்து முற்றங்களை மாலை நேரப்பொழுதுகளில் அலங்கரிக்கும் விளையாட்டுக்களில் இந்த விளையாட்டும் ஒன்று. அதுவும் சிறுபிள்ளைகளிடையே பாடலிசைடன் ஆண் பெண் பால் வேறுபாடுகளின் வித்தியாசம் தெரியதா, புரியாத காலகட்டங்களில் மகிழ்ச்சியாக விளையாடும் விளையாட்டுத்தான் இந்த குல குலயா முந்திரிக்கா ஓடிப்பிடிச்சு விளையாட்டு.


எல்லோரும் ஒரு வட்ட வடிவில் நிலத்தில் வெறும் தரையில் உட்காந்து கொள்வோம். ஒருவர் மட்டும் நின்றுகொண்டிருப்பார். அவரின் கையில் சிறு மரக் குளையைக் கொடுத்து
விடுவோம். பின்னர் அந்த நபர் அந்த வட்டவடிவத்தை வெளிப்புறமாக அதாவது அனைவருக்கும் பின்னால் சுற்றிவருவார். அப்படி வரும்போது அந்த நபர் ..


குல குலயா முந்திரிக்கா..
நிறைய நிறைய சுத்தி வா ..
குல குலயா முந்திரிக்கா..
நிறைய நிறைய சுத்தி வா ..
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டதில் இருக்கான் கண்டுபிடி..



என்ற பாடலைப் பாடிக்கொண்டு சுற்றிவரவேண்டும். அப்படி வரும்போது அவர் கையில் உள்ள அந்த குளையை யாரும் ஒருவர் பின்னால் போட்டு விடுவார். அதாவது கையில் உள்ள குளை முந்திரிக் குலையாகவும் அதனைக் கொள்ளையடித்தவர் அந்தக் கூட்டத்தில் உள்ள ஒருவர் அதாவது யாருக்குப் பின்னால் அந்தக் குழை கிடக்கின்றதோ அவர்தான். அந்தப் பாடல் முடிக்கும்போது குளை யாருக்குப் பின்னால் உள்ளதோ அவர் எழுந்து குளை போட்ட நபரைப் பிடிக்கவேண்டும். அதுவும் குளை போட்ட நபர் வந்து ஓடிவந்த ஒரு முழுச்சுற்று வட்டத்தைச் சுற்றி எழும்பியவரின் இடத்தில் அவர் பிடிப்ப முதல் இருந்து விட்டார் என்றால் போட்டியில் கிளை போட்ட நபர் வெற்றிபெற்றதாக அர்த்தம். மாறாக வந்து உட்கார முதல் அவர் பிடிபட்டார் என்றால் வேறு என்ன குளை போட்ட நபர் தோல்விதான். இதில் சுவார்சியம் என்னவென்றால் பின்னால் வந்து அந்தக் குளையினைப் போடுவதால் முன்னால் பார்த்துக்கொண்டு இருக்கும் அவருக்குத் தெரியாமலே போய்விடும் தனக்குத்தான் போடப்பட்டது என்று. அப்படியிருக்கும் போது போட்டவர் மீண்டும் அனைவரையும் சுற்றிவந்தால் வெற்றியவருக்கே...


பாடிப்பாடி விளையாடுவது என்பது எவ்வளவு சந்தோசம் என்பது அந்த விளையாட்டை விளையாடியவர்களுக்குத்தான் தெரியும்.

இதனை விடவும் பாடிப்பாடி விளையாடும் விளையாட்டுக்கள் பல ஈழத்தில் வழக்கத்தில் உள்ளன. எதிர்வரும் பதிவுகளில் அவற்றையும் தருகின்றேன்.





Author: வந்தியத்தேவன்
•7:43 PM
"பட்டம் விடுவோம் பட்டம் விடுவோம் பாலா ஓடிவா" சின்ன வயதில் ஆடிப்பாடிய பாடல். பட்டம் என்பது எங்கள் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த இன்னொரு விசயம். வாலாக்கொடி, கொடி என இடத்துக்கு இடம் பெயர் மாறுபட்டாலும் பொதுவாக பட்டம்(காற்றாடி) என்றே அழைப்பார்கள்.



பெரும்பாலும் நவம்பர் மாத கடைசியில் பட்டக்காலம் தொடங்கிவிடும் அதாவது சோளகக் காற்று வீசத்தொடங்க பொடிபெட்டையெல்லாம் வெட்டை வெளிகளிலும் தோட்டக்காணிகளிலும் தங்கள் பொழுதைக் கழிப்பார்கள். பெரும்பாலான பெற்றோருக்கு பட்டம் காலம் வந்தால் கரைச்சல்தான். டிசம்பரில் பாடசாலை விடுமுறை என்பதாலும் பட்டக் காலம் என்பது மாணவர்களிடையே சந்தோஷமான நாட்கள். எப்படியும் பொங்கல் வரை பட்டம் ஏற்றி பட்டதாரியாகிவிடுவார்கள்.

ஆயகலைகள் அறுபத்து நான்கில் பட்டக்கலை இருக்கோ இல்லையோ ஆனால் இதுவும் ஒரு கலைதான். செங்கை ஆழியானின் முற்றத்து ஒற்றைப் பனையில் பட்டத்தைப் பற்றி நிறையவே சொல்லியிருப்பார். கொக்கர் மாரிமுத்தர் அம்மான் தான் கதாநாயகன் ஆள் கொக்குப்பட்டம் கட்டுவதில் விண்ணன்(கெட்டிக்காரன்). இவருக்கும் பொன்னு ஆச்சிக்கும் நடக்கும் பட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அம்மானுடன் சூலாயுதம் என்ற வேலாயுதம் என்கிற பொடியன் சேர்ந்து செய்யும் ரகளைகள் அலம்பல் காசியின் வில்லத்தனம் என ஒரு மண்ணின் வாழ்க்கையை அழகாக படம் பிடித்துக்காட்டியுள்ளார். செங்கை ஆழியான்.

பட்டத்தில் பல வகைகள் உண்டு.

கடதாசிப் பட்டம் :
சாதாரண கடதாசிப் பட்டம் சில இடங்களில் இதனை வாலாக்கொடி என்பார்கள். இதனை உருவாக்க ஈர்க்கும் சாதாரண கடதாசி அல்லது ரிசூப் பேப்பர் போதும்.ஆரம்ப கால சிறுவர்கள் பெரும்பாலும் ஏற்றுவது இதுதான். சாதாரண தையல் நூல் இதற்க்குப் போதும் பட்டத்தில் வாலாக பழைய பருத்திச் சீலைகள் சறம் அல்லது சாரம்(கைலி) போன்றவற்றின் துண்டுகள் வாலாகப் பயன்படுத்தப்படும். இதற்க்கு விண் பூட்டமுடியாது.

நான்குமூலைப் பட்டம் :
சில இடங்களில் படலம் அல்லது பெட்டிப்பட்டம் என அழைப்பார்கள். ஒரு செவ்வக வடிவத்தில் அமைந்திருக்கும். இதனை பனைமட்டையை இணக்கி இல்லையென்டால் மூங்கில் தடிகளை இணக்கி செய்வார்கள். ரிசூப்பேப்பரில் விதம்விதமான டிசைன் போட்டு ஒட்டுவார்கள். இதன் மேற்பக்கத்தில் விண் பூட்டுலாம். வாலாக கயிறுபயன்படுத்தப்படும். சிறிய ஒரு அடிக்கு ஒரு அடி சைஸிலிருந்து ஆளுயர சைஸ்வரை செய்யமுடியும். சைஸைப் பொறுத்து நூலின் தடிப்பும் மாறும். கூடுதலாக நைலோன் நூலே பயன்படுத்தப்படும். பட்ட ஏற்றலில் விண்ணர்களான சில சிறுவர்களும் பல பெரிய ஆட்களும் ஏற்றுவார்கள். பட்டத்தின் சைசுக்கு ஏற்ப ஏற்றுபவர்களின் மவுசு கூடும். அதிலும் ஒருவன் நல்ல சத்தமுள்ள‌ விண் பூட்டி தன்னைவிட உயரப்பட்டம் ஏற்றினால் அவந்தான் அந்த வட்டாரத்தில் ஹீரோ.

கொக்குப் பட்டம் :
கொக்கைப்போல் வடிவம் உடையது. பெரும்பாலும் மூங்கில் கொண்டு செய்யப்படும். இதற்க்கும் விண் பூட்டமுடியும். கொக்குப்பட்டத்திற்க்கு வால் பெரும்பாலும் தேவைப்படாது. அழகான குஞ்சங்கள் எல்லாம் வைத்து செய்தால் வானில் பறக்கும் போது மிகவும் அழகாகவும் இருக்கும். எல்லாரும் இலகுவில் செய்யமுடியாது. கொக்கர் மாரிமுத்தர் போல் கொக்குப் பட்டம் கட்ட தனித் திறமை வேண்டும். சில இடங்களில் ரெடிமேட்டாக செய்து விற்பார்கள். அதனை வாங்கி ஏற்றும் சிறுவர்கள் உண்டு.

பிராந்துப் பட்டம் :
பருந்தையே நம்ம ஊரில் பிராந்து என்பார்கள். பிராந்து வடிவத்தில் செய்யப்படும் பட்டம் இதுவும் எல்லோராலும் செய்யமுடியாது. மூங்கில் கொண்டே வடிவமைக்கப்படும். விண் பூட்டலாம். கொக்குப்பட்டம் போல் அழகானது.

எட்டுமூலை :
நட்சத்திரப்பட்டம் எனவும் சொல்வார்கள். எட்டுமூலைகள் இருப்பதால் இந்தப்பெயர்.

இதனை விட வேறு வகைகள் இருந்தால் தெரிவிக்கவும். படங்கள் தேடினேன் கிடைக்கவில்லை. முற்றத்து ஒற்றைப் பனையிலிருந்து ஸ்கான் பண்ணித்தான் போடவேண்டும்.

பட்டக் கலையில் பாவிக்கப்படும் சில் அருஞ்சொற்கள்.

விண் :
விண் என்பது "கொய்ங்ங்ங்" என்ற சத்தத்தை கொடுக்கும் பனை ஓலை நாரில் செய்யப்பட்ட ஒரு ஒலிஎழுப்பி. சிலர் பார்சல்கள் கட்டிவரும் பிளாஸ்டிக் நாரிலும் செய்வார்கள். சிம்பிளான விண் என்றால் யூரியா பாக்கிலிருக்கும் (உரம் வரும் பை)அந்த மெல்லிய நைலோன் நாரையும் பாவிப்பார்கள். விண்ணை மட்டையில் கட்டி பார்ப்பதற்க்கு வில்லுப்போல இருக்கும் இரண்டு தொங்கல் பக்கத்திலும் இரண்டு கட்டைகள் போட்டு பின்னர் அதனை கொக்குப் பட்டத்துடனோ இல்லை நான்குமூலையுடனோ எட்டுமூலையுடனோ இணைத்து ஏற்றுவார்கள். சிலகாலம் விண் பூட்டி ஏத்துவது தடைசெய்யப்பட்டிருந்தது காரணம் குண்டுவீச்சு விமானத்தின் சத்தம் கேட்காது அல்லது விமானச் சத்தத்தை விண் பூட்டிய பட்டம் என சனம் சும்மா இருப்பார்கள் என்றபடியால்.

முச்சை கட்டுதல் :
பட்டத்திற்க்கு முக்கியமான ஒரு செயல்பாடு. பட்டத்தை நூலுடன் சாதாரணமாக தொடுத்துவிட முடியாது. இதற்காக ஒரு ஸ்பெசல் செயல்தான் முச்சைகட்டுதல். பட்டத்தின் ஒரு தொங்கலையும்(அந்தம்) இன்னொரு தொங்கலையும் நூலினால் இணைத்தல். கொக்குப்பட்டம் நான்குமூலை எட்டுமூலை போன்றவற்றிற்கு இன்னொருவகையான முச்சை கட்டப்படும். சாதாரண முச்சை மூன்று முச்சை நான்கு முச்சை என பல வகை உண்டு.

பட்டம் தொடுத்தல் :
ஒரு பட்டத்தின் பின்னால் இன்னொரு பட்டம் தொடுத்தல். இப்படி பல பட்டங்களை தொடுக்கமுடியும். எங்கட ஊரிலை என் நண்பன் ஒருவன் ஆகக்கூட 10 பட்டம் தொடுத்து ஒரு பொங்கலுக்கு ஏற்றினான். அந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை என நினைக்கின்றேன்.

லைட்பூட்டி ஏற்றுதல்.
இரவு வேளைகளில் பட்டத்தில் நூலில் சிலர் பட்டத்திலையே பற்றரி அல்லது மின்சாரம் துணைகொண்டு விதம்விதமான கலர் லைட்ஸ் போடுவார்கள். அழகாக இருக்கும். பற்றரி என்றால் பட்டத்துடன் இணைத்திவிடலாம். மின்சாரம் என்றால் வயரும் நூலுடன் சேர்த்துக் கட்டப்படும். மின்சாரத்தில் ஏற்றுதல் கொஞ்சம் ஆபத்தானது காரணம் தற்செயலாக பட்டம் இரவில் அறுத்துக்கொண்டு போனாலோ அல்லது படுத்துவிட்டாலோ அது விழுகின்றபகுதி மக்களுக்கு மின்சாரம் தாக்கும் ஆபத்து உண்டு.

அறுத்துக்கொண்டுபோதல் :
பட்டம் பாரம் தாங்கமுடியாமல் அல்லது காற்று அதிகமாகி சில நேரத்தில் அறுத்துக்கொண்டுபோய்விடும். சிறந்த உதாரணம் சர்வம் படத்தில் நம்ம திரிஷா இப்படி அறுத்துக்கொண்டுபோன பட்டத்தின் நூல்பட்டுத்தான் இறந்துபோவார். சிலவேளைகளில் அடுத்த ஊரில் கூட பட்டம் அறுத்துக்கொண்டுபோய் விழும். சில பனை தென்னை மரங்களில் தொங்கிப்போய்விடும். திரும்ப எடுப்பது கஸ்டம்.

பட்டம் படுத்தல் :
இரவு வேளைகளில் பட்டத்தை ஏற்றிவைத்திருக்கும்போது காற்று குறைந்துவிட்டால் பட்டம் அப்படியே தரைக்கு வந்துவிடும். இதுவே பட்டம் படுத்தல் எனப்படும்.

பருத்தித்துறையில் பொங்கல் நேரம் பட்டம் விடும் போட்டி நடத்தப்படும். முனைக் கடற்கரையில் பாக்கு நீரிணையின் அருகில் இந்தப்போட்டிகள் நடத்தப்பட்டன. பட்டகாலம் தொடங்கினால் பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீதியில் பலதரப்பட்ட பட்டங்களும் நூலும் வீதியோரக் கடைகளில் விற்கப்படும்.

பட்டம் பற்றி நம்ம கானா அண்ணை எழுதிய பதிவு ஒன்றும் இருக்கின்றது.
பட்டம் விட்ட அந்தக் காலம்

பட்டத்தைப் பற்றி இவ்வளவு விபரமாக எழுதியபடியால் என்னைப் பட்டதாரி என நினைக்கவேண்டாம். இதுவரை சாதாரண கடதாசிப் பட்டம் மட்டுமே ஏற்றியிருக்கின்றேன். என் மாமாக்களும் சித்தப்பாக்களும் இதில் விண்ணர்கள். எத்தனையோ விழுப்புண்கள் கூட பட்டத்தினால் பெற்றிருக்கின்றார்கள். அவர்களுடன் இருந்த அனுபவமே இது.