Author: சின்னக்குட்டி
•12:23 PM
இந்த பதிவும் இந்த முற்றத்துக்கு பொருத்தமாக இருக்கிறது என கருதுவதால் இங்கு பிரசுரிக்கிறேன் . இதுவும் ஒரு மீள் பதிவுதான்


சேறும் சகதியாய் இருந்த பகுதி எல்லாம் எண்ணண்டு உருமாற்றம் அடைந்தது தெரியாத மாதிரி வரண்ட மணலாக பரவி கிடக்கு. அந்த அமைதியான காலை பொழுதில் விளக்குமாற்றால் பின் வளவை அப்பம்மா கூட்டும் பொழுது ஆவரோணம் அவகரோணம் ஏற்ற இறக்கம் போல ஒலிக்க வைப்பதற்க்கு உந்த சோழக்காற்று எங்கே இருந்து கொண்டு வந்த மணல் தான் காரணம்.

இந்த வெயில் கொழுத்தக்கை இந்த காலத்தை வசந்த காலம் என்று சொல்லாமாவோ இல்லையோ தெரியாது. ஆனால் இந்த கால மாற்றத்தை வரவேற்கிற மாதிரி குயில்களும் பறவையினங்களும் வீட்டு மூலையிலுள்ள மாமரங்களிலிருந்து கொண்டு தாள கச்சேரி செய்யும் ஓசையினால் இந்த விடிந்து விடியாமல் இருக்கும் பொழுதை இனிமையாக்கிறதை பார்க்கும் பொழுது வசந்த காலம் என்று தான் சொல்ல தோன்றும்.

அப்படி சொல்ல இயலாத மாதிரி சூரியனும் 30 பாகைக்கு மேல ஏற ஏற வெயில் அந்த மாதிரி கொழுத்த வெப்பம் அந்த மாதிரி கக்கும். இந்த ஓட்டு வீடு ஓடும் தானும் கொதிச்சு வெப்பமாகிறது காணாமால் அதை இரட்டிபாக்கி வீட்டுக்குளை செலுத்த புழுங்கிற புழுக்கமிருக்கே உயிரை கொல்லும்.

இந்த பொழுதின் இனிமை இப்படியே இருக்காதே இன்னும் கொஞ்ச நேரத்தில் மாறிடுமே வேதனை படுவதால் இந்த இனிமையை அநுபவிக்காத முட்டாளாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த நினைவுகளை பக்கத்து வீட்டு சுப்பர் கிணத்தடியில் குளிக்கும் குளியல் சத்தம் குழப்பியது.சுப்பர் குளிச்சால் சும்மா குளிக்க மாட்டார் இந்த அமைதியான காலைப்பொழுதை கெடுத்து ஊரை கூட்டி தான் குளிப்பார்.தொங்கி தொங்கி அவர் குளிககிறதிலை துலாக்கயிறிலை கட்டின வாளி கிணத்திலை நாலாம் பக்கதிலை அடிபட்டு படார் கிடார் என்று சத்த போடும். எழும்பாதவயளை கூட எழும்பி விடுவார்.

வேலை வெட்டி ஒன்றுமில்லை என்றாலும் நேரத்துக்கு எழும்பி உந்த அட்டகாசம் எல்லாம் செய்து விட்டு வெய்யில் ஏற ஊருக்கு ஒதுக்கு புறத்தில் இருக்கிற வயல் வெளியில் இந்த வெயிலுக்காக நிழலுக்கு ஒதுங்கிறவையோடையும் படிச்சு போட்டு வேலை இல்லாத பொடியோளையும் ஆடு புலி ஆட்டமோ தாயகட்டை உருட்டி மதியம் திரும்பும் வரை பொழுது போக்குவார்.


பின்னேரத்திலையும் பொழுதை போக்கிறதுக்கு இந்த காலத்திலை அன்ன ஊஞ்சல் கட்டுறவர். இந்த சீசனுக்கு இன்றைக்கு கட்ட தொடங்க போறன் என்று ஆருக்கோ சொல்லி கொண்டிருந்தவர் என்று அப்பம்மா சொல்லிச்சுது. அது தான் இன்றைக்கு இன்னும் உற்சாகம் கூடி அந்த மாதிரி குளிக்கிறார் போலை. அவர் சவர்க்காரம் போடுற சத்தம் ஊத்தை உருட்டுற சத்தம் எல்லாம் எங்களுக்கு கேட்க வேண்டிய தலைவிதி இவருடைய பக்கத்து வீட்டிலிருப்பதால்

உந்த சத்த மட்டுமல்ல அன்ன ஊஞ்சல் மேலை எழும்பும் போது இதில் ஆடுபவர்கள் எழுப்பும ஒலிப்பு இருக்கே சில பேருக்கு சில வேளை மரண ஓலம் போல தோன்றும் இந்த அன்ன ஊஞ்சல் வந்து தனி ஆள் ஆட பின்னுக்கு ஒரு ஆள் தள்ள வழமையான ஊஞ்சல் போன்றில்லை பெரிய பலகையில் நாலுபக்கமும் கயிற்றை இணைத்து உயரமான மரக்கிளையில் கட்டுவார்கள் பலகையின் நடுவில் இருக்ககூடிய ஆட்கள் இருக்க பலகையின் இருபக்கம் இருவர் உச்ச உந்த ஊஞ்சல் மேலும் கீழும் ஆடும்.

எனக்கும் உவையளோட சேர்ந்து அன்ன ஊஞ்சல் ஆட விருப்பம் தான் . எங்கட வீட்டு சனம் விடாது. சனத்தோட சனம் சந்தோசமாக இருக்க தெரியாத இந்த பழமைவாதத்தை பேணும் எங்கட குடும்பத்தை திட்ட தான் தோன்றுது. சொல்லினம் வேணும் என்றால் நீயும் தம்பியும் வீட்டுக்குளை ஆடாம். அன்ன ஊஞ்சலுக்கு இரண்டு பேர் காணாது கன பேர் வேணுமெல்லே...

அப்பம்மா இவ்வளவு நேரம் கூட்டிய குப்பையை தீடிரென வந்த காற்று தூக்கி கொண்டு போய் எங்கையோ குவித்து கொண்டிருந்தது
Author: வந்தியத்தேவன்
•1:52 AM
கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடைபெற்ற பதிவர் சந்திப்பில் எம்மவர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஈழத்துமுற்றம் இயங்குவதுபோல் எமக்கான ஒரு கூகுள் குழுமத்தை அமைத்திருக்கின்றோம்.

இதில் இலங்கையில் இருக்கும் பதிவர்கள் மட்டுமன்றி ஏனைய நாடுகளில் இருக்கும் சொந்தங்களும் இணைந்து உங்கள் கருத்துகளைப் பரிமாறலாம். இதன் மூலம் எங்கள் உறவுகள் வலுவடைவதுடன் நிறையப் பிரச்சனைகளைப் பேசித்தீர்க்கலாம்.

ஆகவே இந்தக்குழுமத்தில் இணைந்து எம்முடன் கைகோருங்கள். அத்துடன் உங்கள் ஆக்கங்களின் தொடுப்புகளை இங்கே பதிவதன் மூலம் மேலும் பலரிடம் உங்கள் படைப்புகள் எடுத்துச் செல்லப்படும்.

நன்றி,

Group Address : http://groups.google.com/group/srilankantamilbloggers
Author: M.Thevesh
•2:24 PM
நண்பர் அருள்மொழிவர்மனின் வடலிவெளியீடுகள்
மற்றும் எழுத்தாளனும் பதிப்பகங்களும் எனற
ஆக்கத்தைப்படித்ததும் (http://solvathellamunmai.
blogspot.com/2009/08/blog-post_24.html)அதற்குப்
பின்னூட்டம் இடவேண்டும் எனவிரும்பினேன்.
விரிவாகஎழுதவேண்டும் என்பதால் என் முயற்
சியைத்தனிப்பதிவாகப்போடுகிறேன்.

ஈழத்தில் பிறந்ததால் மட்டும் ஒருவர் ஈழத்தவ
ராகிவிடமுடியாது. ஈழத்தை தாய் நாடாக
ஏற்றுக்கொண்டு ஈழத்துப் பராம்பரியங்களுடன்
வாழ்ந்தால் தான் அவரை ஈழத்தவர் என
அடையாளப்படுத்தமுடியும்.

முன்னூறு வருடங்களுக்கு மேல் பல தலைமுறை
களாக் வாழ்ந்துவந்தும் இன்றும் 95 வீத மான மலை
நாட்டுத்தமிழர் தங்களை இந்திய வம்சாவழியினர்
என்று அடையாளப்படுத்துவதில் தான் பெருமை
கொள்கிறார்கள்

தமிழகத்திலுள்ள தமிழக எழுத்தளர்களும் ஈழத்
து எழுத்தாளர்கள் என்று வரும்போது மலை
நாட்டுத்தமிழ் எழுத்தாளர்கட்க்குதான் முதன்மை
இடங்கொடுக்கிறார்கள். ஈழத்து மொழிநடையில்
எழுதும் மண்ணின் மைந்தர்களான உண்மையான
ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு மதிப்பு
கொடுப்பதில்லை. ஈழத்து மொழிநடையில்
எழுதினால் இந்தியவாசகர்கள் புரிந்து கொள்வதில்
சிரமப்படுவார்கள் என்று கூறிய பத்திரிகை
நிறுவனங்கள் சென்னையில் பல இருக்கின்றன
இது என்து அனுபவம்.

இந்தியாவின் பல பகுதி களில் தமிழை விதம்
விதமாகப்பேசுகிறார்கள். பாலக்காட்டுத்தமிழ்
ஒரு மதிரி இருக்கும்,திருநெல்வேலித்தமிழ்
வேரொருமாதிரி இருக்கும்மதுரைத்தமிழ்
இன்னொருமாதிரி இருக்கிறது.
சென்னையில் ரிக் ஷா ஓட்டுபவர்கள் பேசும்
தமிழ், தமிழா என்பதே புரியவில்லை. அப்படி
இருந்தும் அவர்கள் பேசுவதைப்புரிந்து கொள்ளும்
இந்தியத்தமிழர் ஈழத்தமிழர் எழுதும் தூய தமிழ்
மொழிநடை புரியவில்லை என்பது விந்தையிலும்
விந்தைதான்.

திரு ஆறுமுகநாவலர் வாழ்ந்த காலத்தில் அவரின்
ஆக்கங்களுக்கு பெரும் வரவேற்பு அன்று சென்னையில்
இருந்திருக்கிறது. அதுபோல் வேறு ஈழத்தவர்களின்
படைப்புகளுக்கும் பெரும் வரவேற்பு இருந்திருக்கிறது.
அந்நாட்களில் சென்னையிலிருந்து வெளிவந்த
பத்திரிகைகளில் ஈழஎழுத்தாளர்களின் ஆக்கங்கள்
இடம் பெற்ற பொற்காலம்.

பின்னாளில் ஈழத்தமிழர்கள் கல்கி, ஆனந்தவிகடன்,
கலைமகள் முதலான இந்திய சஞ்சீகைகளின்
வாசகர்களாக மாறிய பின்பு ஈழத்து எழுத்தாளர்களின்
ஆக்கங்கள் இந்திய சஞ்சீகைகளில் வெளிவருவது
அபூர்வமாகிவிட்டது. ஈழமண்ணில் திறமை
நிறைந்த எழுத்தாளர்கள் பலர் இருந்தும் அவர்களின்
ஆக்கங்கள் வரவேற்பைப்பெறவில்லை. இந்தவகை
யில் என் நினைவுக்கு வருபவர்கள் செங்கை ஆளியன்,
எஸ்.பொ, தேவகாந்தன், ஈழத்துச்சோமு, குறமகள்
இன்னுன் பலர் இருக்கிறார்கள். ஈழத்து எழுத்தாளர்
கட்கு உரிய இடங்கொடுக்கிறோம் என்று கூறுபவர்
கூட மலைநாட்டு எழுத்தாளர்களைதான் பெரிதும்
ஊக்கப்படுத்தினார்கள் என்பது மறுக்கமுடியாத
உண்மை. காரணம் மலைநாட்டு எழுத்தாளர்கள்
99 சத வீதம் இந்திய மொழிநடையிலேயே தங்கள்
ஆக்கங்களை வெளிக்கொண்டுவந்தார்கள்.
அத்துடன் அவர்களை இந்தியத்தமிழரின் வழித்
தோன்றல்கள் என ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

எது எப்படி இருந்தபோதும் ஈழத்து எழுத்தாளர்கள்
எது வித சமரசமும் இன்றி தொடர்ந்து எங்கள்
உயர்ந்த ஈழத்தமிழ் மொழிநடையிலேயே
எம் படைபுகளை வெளிக்கொண்டுவரவேண்டும்
இதுவே எனது வேண்டுகோளாகும்.
Author: கரவைக்குரல்
•10:55 AM
ஈழத்து முற்றத்திலிருந்து மகிழ்ச்சியுடன் உல்லாசமாயிருக்கும் அனைத்துப்பதிவர்களுக்கும் வணக்கம்.
நானும் உங்களுடன் இணைந்துகொள்வதில் ரொம்ப மகிழ்ச்சி.
ஆரம்பத்தில் என்ன பதிவிடுவது என்ற சின்ன எண்ணச்சிக்கலில் இருந்த எனக்கு இதன் ஆரம்பகர்த்தாவாகிய கானாவின் ஆமோதித்தலுடன் என் கரவைக்குரல் பதிவில் இட்ட பதிவை மீள்பதிவிடுகிறேன்,ஏனென்றால் இது எம் ஈழத்துடன் கொஞ்சம் தொடர்புபட்ட பதிவாகையாலும் ஈழத்துமுற்றத்தில் இருக்கும் எல்லா பதிவர்களும் பார்த்திருப்பார்களோ என்ற எண்ணத்தினாலும் இதை மீள்பதிவிடுகிறேன்,"சீனப்பா சீனப்பா" என்று ஒருவர் இருந்தார் கரவெட்டி கோவிற்சந்தைக்கு கிட்டடியில்.இது ஏதோ அரசகதை சொல்ல தொடங்குவது போலல்லவா இருக்கிறது. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.யாழ்ப்பாணம் வடமராட்சியில் பாடசாலை சேவை வாகனசேவை ஓடி பிரசித்தமான ஒருவர்.அவரைத்தொடர்ந்து அவருடைய பிள்ளைகள் தொடர்ந்து சேவை செய்தவர்கள்
இதை ஏன் சொல்கிறேனென்றால் இவர்கள் கையில்தான் தட்டி வான் என்று சொல்லப்படும் ஒருவாகனத்தை நான் சிறுபராயம் முதலே கண்டவன். இப்போது ஒரு சில வாகனங்கள் கொடிகாமத்துக்க்கு ஓடிக்கொண்டிருப்பதாக அறிய முடிகிறது ஈழத்திலிருந்து.

தட்டிவானில் நானும் பயணித்தவன் ஒரு சிலகாலங்கள் பாடசாலைக்கு.அதில் பின்னுக்கு உள்ள தட்டியில் நின்று செல்வதில் ஒரு அளவுகடந்த சந்தோசம். அதுவும் இன்னும் ஒருவிடயம் ஊர்களுக்கு இடையிடையே இந்த தட்டிவான் பயணிக்கும்போது சிறுபராயம் ஆகையால் சத்தம்போட்டு,கும்மாளம் அடித்து செல்வது வழமை.
வாகனத்துக்கு முன்னே ஆசிரியர் ஈஸ்வரநாதன் இருப்பார். அவர் கொஞ்சம் " என்ன..... சத்தம் ......." என்று கேட்க கொஞ்சம் குறையும். பின்னர் அதுவும் கொஞ்சம் மறந்து போக அது கூடும்.ஒரு நாள் வழமை போலவே சத்தங்கள்போட்டவாறே ஊர்களுக்கு இடையிலே வாகனம் நகர்ந்து செல்கிறது. அணிஞ்சிலடி என்று சொல்லப்படும் ஒரு இடம், அங்கு கொஞ்சம் உள்ளுக்குள் தென்னைகள் அதிகம். அது அங்கிருந்தவகளுக்கு நன்றாகத்தெரியும். அதில் உள்ள தென்னைகளில் உள்ள தென்னோலைகளை ஒவ்வொன்றாக இழுத்து அதை முறிதெடுத்து கொடிகாமம் வீதிவழியே இழுத்துக்கொண்டவாறே ;சென்று அதை சாமியன் அரசடியில் விடுவதில் மிகப்பெரிய சந்தோசம் சிறுவர்களுக்கு. இதை முன்னால் இருந்த ஆசிரியர் அவதானித்தாலும் யார் இதை செய்கின்ற மகான் என்று அவருக்கு தெரியாது.கடைசியில் ஒரு நாள் முடிவெடுத்து எல்லொருக்கும் கொஞ்சம் பதம் பார்த்தார் ஆசிரியர் பக்கத்திலிருந்த பூவரசு மரத்தடியினால்.இதில் கோசலன் மற்றும் நான் எல்லோரும் அடிவாங்கியதாக நினைவு
இப்படி ஒருவித்தியாசமான சுகங்கள் இந்த வாகனத்தில்.
இப்படியான தட்டிவான்கள் இப்போதும் கொடிகாமத்துக்கு ஓடிக்கொண்டே இருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் எரிபொருளுக்கு தட்டுப்பாடான காலத்தில் இந்த வாகனம் மிகப்பெரும் உதவியாக இருந்தது என்பது உண்மைதான்.இப்போது அந்த வாகனம் "அவ்வளவு சரியில்லை" என்றும் "நாகரிகம் இல்லை" என்றும் ஒதுக்கிவருவதும் சுட்டிக்காட்டபட வேண்டிய விடயம். அதை விட்டுவிட்டு இப்போது நாகரிகமான வாகனங்கள் தேடிவருவதும் அறிய முடிகிறது.இந்த வாகனத்தை வைத்திருப்பவர்களும் அதேபோல வடமராட்சி பிரதேசத்தில் இந்த வாகனம் ஓடுவது பற்றி சிலர் நையாண்டி பண்ணுவதும் காணமுடிந்தது.
இது நம்பாதைகள் பற்றி சிந்திக்காத,அறியாத நம்மவர்கள் உள்ளத்திலுருந்து வந்து அவர்கள் வாயினூடாக மட்டும் தான். ஆனால் கொடிகாமசந்தைக்கு இது தான் இருக்கின்ற வாகனங்களில் சிறப்பு.
இப்படியான வாகனம் போலவே ஐக்கிய அரபு இராச்சியம் டுபாயிலும் காணமுடிந்தது.
அதுவும் பாடசாலை சேவைக்கே முற்றுமுழுதாக பயன்படுத்திவரப்படிகிறது.முற்றிலும் சிறிய அளவிலான யன்னல்கள் சூழ்ந்திருக்க ஒருவழிப்படுத்தபட்ட பாதுகாப்பான கதவு,ஆனால் இங்கு தட்டி என்று சொல்லப்படும் பின்னுக்கு அமையும் பகுதி இல்லை.சிலவேளைகளில் தென்னோலை விளையாட்டைப்பற்றி கேள்விப்பட்டாங்களோ தெரியாது.இங்கும் பிள்ளைகள் சந்தோசமாக செல்லும்போது இந்த பதிவு என்னை இடச்செய்திருக்கிறது.அதுமட்டுமல்ல மத்திய கிழக்கு நாடுகளிலும் அதேபோல அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இது சேவையில் இருக்கிறது என்று அறிய முடிகிறது.
மொத்தத்தில் தட்டி வான் என்பது யாழ்ப்பாணத்தில் அருகிவருகிறதோ என்று சிந்தித்த போது அது டுபாய் மற்றும் மற்றைய நாடுகளில் ஓடுவது அதன் இருப்பை தெளிவுபடுத்தியிருக்கிறது.,
Author: சின்னக்குட்டி
•3:58 PM
இந்த பதிவு ஒரு மீள் பதிவு ...இந்த முற்றத்துக்கு பொருத்தமாக இருப்பதால் இங்கு பிரசுரிக்கிறேன்


அந்த மனிசன் நெடுகவும் அரியண்டம் கொடுத்தபடி...அந்த சைக்கிளை எப்பன் நிழலாய் கொண்டு போய் விடு மோனை என்ற படி. எந்த நேரமும் கரிச்சு கொட்டும். உந்த அப்பு.உதை. பெரிய பொக்கிசம் மாதிரி.


உதை பெரிய பென்ஸ் கார் என்ற நினைப்பு அவருக்கு. தன்ரை கடைசி நேரம் என்னை பெத்து போட்டு உந்த ஓட்டை கறள் பிடிச்ச சைக்கிளையும் தந்து போய் வா என்று விடுது.உதை. அப்பா என்று சொல்லவும் வெட்கமாக கிடக்கு.உந்த சைக்கிளிலையும் போகவும் வெட்கமாக இருக்கு.

என்னோட்டை பொடியள் றோட் மாஸ்ரர் ,ஏசியா பைக்,ஆர்எம்.வி, என்று புது புது பிரான்டில் வைச்சிருக்கிறாங்கள். றலிக் சைக்கிளை எவ்வளவு காலத்துககும் பாவிக்குமாம். அப்பு உந்த றலிக் சைக்கிளை தங்கடை தேகத்தோடை எல்லோ ஒப்பிட்டு சொல்றார்.

சாமி,தினை குரக்கன் நார்சத்துகள் சாப்பிட்டு வளர்ந்த தங்கடை தேகம் போல உரமாம். கூப்பன் அரிசி கோதுமை மா, தின்கிற இந்த காலத்து ஆக்காளின்ரை உடம்பு மாதிரி தானாம் இப்ப வாற புது வகையான சைக்கிள்....கெதியிலை வேலை விட்டு போயிடுமாம் என்று கொக்கரிச்சு சிரிக்குதல்லோ.


சைக்கிள் பராமரிக்கிறதிலை சிலருக்கு கை வந்த கலை. தங்களை சோடிக்கினமோ இல்லையோ..சைக்கிளை விதம் விதமாக சோடிப்பினம். வயர்களை சுத்துவினம். புதுவிதமான முன் லைட் பின்லைட் சைட்லைட் என்று எல்லாம் போடுவினம்.முன் சில்லு பின் சில்லு களிலை பூ போல வளையமொன்றை போட்டு வைப்பினம். ஓடக்கை அது சேர்ந்து சுத்தக்கை நல்ல வடிவாக இருக்கும்.சில பேர் அதிலையும் சின்ன லைட் பூட்டியும் விடுவினம்.

எல்லா வீட்டிலும் புதுசோ பழசோ சைக்கிள் இருக்கும். உது தான் எல்லாருக்கும் அந்தரத்துக்கு உதவிகின்ற ஆபாத்துவான்.முன்வீட்டு சுப்பரும் தன்ரை சைக்கிளை வளர்ப்பு பிராணி மாதிரி சரியான கவனம்.சும்மாயிருக்கிற சைக்கிளை சும்மாக இருக்க விடாமால் துரைத்துக்கொண்டோ ஏதோ செய்து கொண்டு தான் இருப்பார் .

பாவி அந்தரத்துக்கு கேட்டாலும் இரவல் கொடுக்கமாட்டார். ஒரு கை பாவிப்பு பாவிக்கிற படியால் பிரச்சனை ஒன்று வாறதில்லையாம். உண்மையாய் ஒரு கை பாவிக்க வேண்டிய விசயத்தை பல கை பாவிக்க விட்டுட்டு இருக்கார் என்று ஊரிலை கதைக்கினம்..சைக்கிளிலை மட்டும் பெரும் எடுப்பு எடுத்தெண்டு இருக்கார்

நான் சைக்கிள் பழகினது என்ரை வயதுக்கு கொஞ்சம் லேட் தான். என்னோட்டை பொடியள் வேளைக்கு பழகியிட்டாங்கள்.. நான் உயரம் கொஞ்சம் குறைவு.அதாலை சீட்டுக்கு மோலாலையும் ஓடினாலும் முட்டுதில்லை பாருக்கு மேலாலை ஓடினாலும் முட்டுதில்லை.அரை சைக்கிள் வாடகைக்கு கொடுக்கிறவன்களாம். அழுது குளறி மண்டாடி வாடகை எடுப்பமெண்டாலும் உந்த அப்பு மாட்டென் என்று இட்டுது.

அப்பு காசு விசயத்திலை சரியான எருப்பன் பார்க்கும். பின்னை கவுட்டுக்கு கீழாலை விட்டு ஓடிப்பழகினது தான்.அது என்னமாதிரியென்றால் சைக்கிள் பாருக்கு கீழாலை ஓடுறது.. அப்படி ஓடி பிறகு சரியாய் ஓடி பழகிட்டன்

சும்மா சொல்லகூடாது. உந்த றலிக் சைக்கிள் டபிள் என்ன டிறிபிள் என்ன வைச்சோடினாலும் அந்தமாதிரி ஓடலாம் . டபிளென்றால் முன் பார்லை மட்டும் வைத்து ஓடுறது.டிறிபிளன்றால் முன் பாரிலையும் கரியரிலையும் வைச்சு ஓடுறது.. சுப்பர் கோயிலுக்கு போகக்கை டிறிபிள் இல்லை அதற்க்கு மேலை சைக்கிள் கான்டிலையும் கடைசி பொடியை வைச்சுக்கொண்டு ஓடுவார்.நேர்கோட்டிலை போனது மாதிரி போகும்.

இந்த சோழக்காற்று நேரம் எதிர்காற்றிலை டபிளிலை போகக்கை முன்னுக்கு இருக்கிறவர் டபிள் பெடல் போட்டு தந்தார் என்றால் ஓடுறதுக்கு கஸ்டம் இல்லாமலிருக்கும். அதுவும் எங்கட பக்கத்துக்கு காத்து அடிக்கோணும் உருவிக்கொண்டு ஓடலாம். அதுவும் பள்ளைக்கை றோட்டாய் இருக்கோணும் அந்தமாதிரி இருக்கும்..உந்தமாதிரி வெளியை கண்டால் இரண்டு கையை எல்லாம் விட்டு ஓடி பார்க்கிறனான். அப்பு கண்டால் திட்டும்..சுப்பர் அண்டைக்கு கண்டுட்டு அள்ளி வைச்சுட்டுட்டார்.

இப்ப பொடியள் சைக்கிள் இலை வந்து செய்து போட்டு காத்தாய் பறந்திடுறாங்களாம்...அண்டைக்கும் ஏதோ நடந்துட்டுது போலை. போற வாற சைக்கிளை மறிச்சு தங்களின்ரை இயலாமையை சனத்திட்டை காட்டியண்டு இருக்கிறான்கள் போலை. லைட்டிருக்கா டைனமோ இருக்கோ நம்பர் பிளேட்டிருக்காண்டு...அந்த பொலிசுக்காரன் ஏதோ கேட்க அப்பு ஏதோ வாய் காட்டிட்டுது போல.... அவன் சைக்கிளை ஒரு தொப்புன்று தூக்கி போட்டு ஒரு காத தூரத்துக்கு எறிந்தான்.


அப்படி பலருடைய சைக்கிள்கள் எறிந்து கிடந்தது.

பொலிஸ்காரர் இப்ப போய் விட்டனர்.

ஆக்கள் விழுந்த நெளிந்த சைக்கிளை தூக்கி செல்லுகின்றனர். அப்பு தன்ரை சைக்கிளின்ரை பக்கிளை மட்டும் எடுத்துட்டு அவர் மட்டும் ஓடி செல்கிறார்.

சும்மா சொல்லகூடாது அப்புவை போல அப்புவின்ரை சைக்கிளும் உரம் தான்
Author: சயந்தன்
•1:15 AM
இதுவும் இலங்கை உணவுப்பழக்கங்களைக் குறித்தான ஒரு ஒலியுரையாடல். பிட்டு சொதி என்று நீள்கிறது. சோமிதரன் மற்றும் என்னோடு இடையில் சிநேகிதியும் வந்திட்டு போயிருக்கிறா.. கேட்டுப்பாருங்கள். ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஆண்டு 2007 யூன்
Author: கானா பிரபா
•9:29 PM
தற்போது 60 க்கு மேற்பட்ட இலங்கை வலைப்பதிவர்கள் இணைந்து கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் வலைப்பதிவர் சந்திப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை இங்கே சென்று பார்க்கலாம்.

http://www.livestream.com/srilankatamilbloggers
Author: Unknown
•8:45 AM
அண்ணையவை, அக்காவை, அப்புமார், ஆச்சிமார் எல்லாருக்கும் ஒண்டு சொல்லிறன். என்னடா இந்தப் பெடியன் எப்ப பாத்தாலும் சாப்பாட்டப் பற்றித்தான் எழுதிறான் எண்டு சொல்லக்கூடாது. சாப்பாட்டுக்காகத் தானே பாருங்கோ எல்லா வேலையும் வெட்டியும். அதால சாப்பாட்டப் பற்றி எழுதிற என்னை நீங்கள் திட்டக்கூடாது... சரியோ!! இப்ப நாங்கள் மிதிவெடி பற்றிக் கதைக்கப் போறம். கொஞ்சப் பேர் என்னடா இந்தப் பொடி சாப்பாட்டப் பற்றிக் கதைக்கிறன் எண்டுட்டு வெடியப் பற்றிக் கதைக்குது எண்டு நினைக்கிறவை கொஞ்சம் பொறுங்கோ.

இஞ்ச பாருங்கோ, நான் ஏ. லெவல் படிக்கேக்க, அப்பரிண்ட காசிலை நல்லா சாப்பிட்டுக் குடிச்சுத் திரிஞ்சனான் பாருங்கோ. அடிக்கடி நாங்கள் போற இடம் 'லவ்லி கூல்பார்' எண்டு நெல்லியடீக்க ஒரு இடம். போனா அண்டைக்கு ஒரே வேட்டைதான். ரோல்ஸ் என்ன, வடை என்ன, சொக்கலேற் கேக் என்ன, ஸ்பெசல் ஐஸ்கிரீம் என்ன, கோக் என்ன, பெப்சி என்ன.... ஒரே வெட்டுத் தான் பாருங்கோ. கடை முதலாளி தொடக்கம், வேலை செய்யிற அண்ணையவை வரை எல்லாருக்கும் எங்களை நல்ல வடிவாத் தெரியும். முதலாளியின்ர மனிசி எங்களுக்கு ‘சாப்பாட்டு ராமன்கள்' எண்டு பேர் வச்சு வேலை செய்யிற பொடியளோட நக்கல் அடிக்கிறவவாம். அவ்வளவுக்கு நாங்கள் பேமஸ் பாருங்கோ. (இதையெல்லாம் பெருமையா சொல்லுது பார் சனி எண்டு நீங்கள் முணுமுணுக்கிறது கேட்குது. கதை சொல்லேக்க உப்பிடி இடஞ்சல் பண்ணக்கூடாது பாருங்கோ)

ஒரு நாள் லவ்லீக்க சாப்பிட்டுக் கொண்டிருக்கேக்க, புதுசா ஒரு சாப்பாட்டுச் சாமான் கொண்டந்து வச்சினம். அது ரோல் மாதிரி இருந்தது பாருங்கோ. ஆனா கொஞ்சம் செவ்வக சேப்பில, ரோலை விட நல்ல பெரிசாக இருந்துது. நாங்கள் அட லவ்லியில பெரிசா ரோல் சுடத் தொடங்கீட்டாங்கள் போல எண்டு ஒரே வெட்டு. அதுக்குள்ள ஆட்டிறைச்சியோட, நல்ல உருளைக்கிழங்கு, ஒரு அரைவாசி அவிச்ச முட்டை எண்டு, சும்மா சொல்லக்கூடாது, ரண்டு திண்டால் வயிறு நிறையும் எண்ட அளவுக்கு இருந்தது. அதுவும் சுடச்சுட நல்ல மொறு மொறுவெண்டு அவையள் கொண்டந்து வைக்க நாங்களும் வெட்டு வெட்டெண்டு வெட்டினம். பில் வரேக்கதான் ஐயோ எண்டு இருந்தது பாருங்கோ. லவ்லியில அப்ப மட்டன் ரோல் 12 ரூவா, இந்தப் புதுச் சாப்பாட்டுச் சாமான் 20 ரூவா. அந்தச் சாப்பாட்டுச் சாமானின்ர பேர் வேற விளங்கேல்ல. பில்லப் பாத்திட்டுத்தான் கேட்டன் 'அண்ணை என்னத்துக்கு 20 ரூவாப் படி கணக்குப் போட்டிருக்கிறியள்?' எண்டு.

அப்பதான் கவுண்டரில நிண்ட அந்த அண்ணை சொன்னார், ‘தம்பி, இதுக்குப் பேர்தான் மிதிவெடி. இண்டைக்குதான் முதன் முதலா எங்கட கடையில போட்டிருக்கிறம்' எண்டு. அண்டைக்குத்தான் பாருங்கோ நான் முதன் முதலாக அந்தப் பேரைக் கேட்டன். அதுக்குப் பிறகு கன இடத்தில கன விதமான ரேஸ்ரில இந்த மிதிவெடிய சாப்பிட்டிருக்கிறன். இஞ்ச கனடாவில உள்ளுக்க றால் எல்லாம் போட்டு நல்லாச் செய்யினம். இந்த மிதிவெடி பற்றிக் கொஞ்சக் கேள்வியள் கேட்கோணும் உங்களிட்ட;
  • இந்த உணவுப் பண்டத்தை முதன் முதலில் யார், எப்போது, எங்கே அறிமுகம் செய்தார்கள்?
  • 2000ம் ஆண்டுக்கு முன்னர் இந்தப் பதார்த்தம் எங்கள் கடைகளில் விற்கப்பட்டதா?
  • எந்தெந்தப் புலம் பெயர்ந்த நாடுகளில் இந்தப் பதார்த்தம் கிடைக்கிறது? ஏனென்றால் கனடாவில் இந்தப் பதார்த்தம் பற்றித் தெரியாத பலர் இருக்கிறார்கள். முதன் முதலில் இது பற்றிக் கேள்விப்படுவோர் தேடிப்போய் வாங்குகிறார்கள்.
  • இப்போது ஆரம்ப, மத்திம, கடைநிலை இருபதுகளிலும், முப்பதுகளின் ஆரம்பத்திலும் இருக்கும் நண்பர்கள் தவிர மற்றவர்கள் உங்களின் இளவயதில் இந்தப் பதார்த்தம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
  • நான் 2005ன் பிற்பகுதியில் கொழும்பில் வாழ்ந்த போது இது பெரியளவில் அங்கே கிடைக்கவில்லை. கொழும்பிலும் இது கிடைக்கிறதா?
ஆர் என்ன வேணுமெண்டாலும் சொல்லுங்கோ... எங்கட ஈழத் தமிழ் ஆக்களோட ஒருதரும் பகிடி விடேலாது. நாங்கள் ஆர்... சிம்பிளா சாப்பாட்டுக் கடையில போய் மிதிவெடி கேட்டு வாங்கிவாற ஆக்களெல்லே.....
Author: கானா பிரபா
•2:22 PMபிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர் யாத்த "நல்லை முருகன்" பாடலை, மோகன்ராஜ் இசையமைப்பில் ரகுநாதன் பாடுகின்றார்.

நாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....
நாதம் கேட்குதடி நல்லூர் நாதம் கேட்குதடி
நல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி
நல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி
கீதம் ஒலிக்குதடி.....கீதம் ஒலிக்குதடி.....
அன்பர் பாடி பரவி உவகை குதித்திடும்
கீதம் ஒலிக்குதடி..........
அன்பர் பாடி பரவி உவகை குதித்திடும்
கீதம் ஒலிக்குதடி..........
நாதம் கேட்குதடி ..........
நல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி

ஒலியின் அலைகள் விரவிச் செவியில்.......
ஒலியின் அலைகள் விரவிச் செவியில்
ஓம் முருகா.........ஓம் முருகா.......ஓம் முருகா
ஒலியின் அலைகள் விரவிச் செவியில்
ஓம் முருகா என ஒலிக்குதடி

கலியுகத் தெய்வம் கந்தனென்றே மனம் கனிந்து
மெத்தாய் உருகுதடி
கலியுகத் தெய்வம் கந்தனென்றே மனம் கனிந்து
மெத்தாய் உருகுதடி

மலியும் கனிகள் குலுங்கும் நல்லையில்
மலியும் கனிகள் குலுங்கும் நல்லையில்
மால் மருகன் அருள் இருக்குதடி
மால் மருகன் அருள் இருக்குதடி

வலிவும் வனப்பும் வளமும் அருளும்
வடிவேலவன் புகழ் பாடியே
அடியார் தொழக் கவிபாடிடும்
வலிவும் வனப்பும் வளமும் அருளும்
வடிவேலவன் புகழ் பாடியே
அடியார் தொழக் கவிபாடிடும்

நாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....
நாதம் கேட்குதடி...... நல்லூர் நாதம் கேட்குதடி....
நாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....
நாதம் கேட்குதடி...... நல்லூர் நாதம் கேட்குதடி....
புகைப்படங்கள் 2005 ஆம் ஆண்டு நல்லைக் கந்தன் தீர்த்தோற்சவத்தில் எடுக்கப்பட்டவை.

படங்கள் நன்றி: ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை
(முதற்படம் நன்றி: கெளமாரம் தளம்)
Author: கானா பிரபா
•7:52 AM


Author: கானா பிரபா
•6:21 AM

இத்தனை நாளும் எதிர்ப்பார்த்த நாள் இன்று நல்லைக் கந்தன் ரதமேறி வரும் நாள். எம்பெருமானின் அருள் வேண்டிப் பக்தர்கள் தவம் கிடக்க, வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகக் கடவுள் இன்று காலை ஏழு மணியளவில் வெளிவீதி வலம் வந்து ரதமேறித் தம் பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்தார்.

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் எம் உறவுகள் தம் மனக்கண்ணில் எம்பெருமானின் தேரோட்ட நிகழ்வினை வரித்துக் கொண்டு இறையருள் வேண்டி இறைஞ்சினார்கள். நேற்றும் இன்றும் யாழ்ப்பாணத்து மக்களுக்குத் தற்காலிக ஊரடங்கு நீக்கம் கிடைத்தது. எம்மவரின் ஊரடங்கு வாழ்வு நிரந்தரமாக நீக்கப்பட்டு நிரந்தர அமைதியும், அடிமைத் தளையற்ற வாழ்வுக் கிடைக்க தாயக உறவுகளும், புலம்பெயர் உயர்வுகளும் இணைந்து பிரார்த்தனையில் சங்கமித்த நாள் இது.
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனம் சார்பில் அவுஸ்திரேலிய நேரம் காலை 7.30 மணியில் இருந்து (இலங்கை நேரம் 2.00 மணி) மதியம் 1.05 மணி வரை ஐந்தரை மணி நேரம் கடந்த நிகழ்வாக நல்லைக் கந்தன் ஆலயச் சிறப்பு நிகழ்ச்சியில் சைவத்தொண்டர்களின் சிறப்புச் சொற்பொழிவுகள், நல்லைக் கந்தன் பாடல்கள், நேயர்களின் நேரடிக் கருத்துப் பரிமாறல்கள், அத்தோடு நல்லைக் கந்தன் ரதோற்சவ நிகழ்வின் நேரடி அஞ்சல் போன்ற அம்சங்கள் கலந்த படையலைச் செய்து விட்டு, இனம் புரியாதவொரு ஆத்ம திருப்தியோடு வீடு திரும்பியிருக்கின்றேன்.

இன்று நிகழ்ந்த இந்தச் சிறப்பான நாளின் நிகழ்வுகளை நீங்களும் காது குளிரக் கேட்க வேண்டும் என்ற ஆவலில், இடம்பெற்ற சில படையல்களை இங்கே ஒலிப்பகிர்வாகத் தருகின்றேன். அத்துடன் இப்பதிவில் இடம்பெறும் நிகழ்வுப் படங்கள் 2005 இல் நல்லைக் கந்தனாலயத் தேர்த் திருவிழாவில் எடுக்கப்பட்டவையாகும்.
காலை 5 மணிக்கு, முதலில் கணேசருக்கு அபிஷேகம் மற்றும் பூசை நிகழ்ந்த போது, எமது சிறப்புச் செய்தியாளர் சிவத்தொண்டர் ஆறு. திருமுருகன் அவர்கள் வழங்கிய ஒலிப்பகிர்வு
Get this widget
Share
Track detailsரதோற்சவ நிகழ்வின் நேரடி அஞ்சல், கொழும்பு ஊடகங்கள் வாயிலாகப் பெற்று வழங்கியது
Get this widget
Share
Track details


எமது வானொலியின் அறிவிப்பாளரும், கல்வியாளருமான கலாநிதி சந்திரலேகா. வாமதேவா, நேயர் அரங்கில் கலந்து கொண்டு வழங்கிய "முருக வழிபாட்டின் சிறப்பு"
க்குறித்த கருத்துப் பகிர்வு

Get this widget
Share
Track detailsமுன்னை நாள் அகில இலங்கை கம்பன் கழகத்தின் தலைவரும், சிட்னியில் நம்மிடையே வாழ்ந்து வரும் தமிழறிஞருமான, திரு.திருநந்தகுமார் அவர்கள் வழங்கிய "நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம்" குறித்த சிறப்பு ஒலிப்பகிர்வு


அல்லது இங்கே சொடுக்கவும்

தமிழறிஞர், செழுங்கலைப் புலவர் குமரன் அவர்கள் வழங்கிய "தேர்த் திருவிழாவின் சிறப்பு" என்னும் விடயம் குறித்த ஒலிப்பகிர்வு


அல்லது இங்கே சொடுக்கவும்

அகில இலங்கை கம்பன் கழக சிறப்புப் பேச்சாளர் ஸ்ரீபிரசாந்தன் "நல்லூர் முருகனின் சிறப்பியல்புகள்" என்னும் விடயத்தில் வழங்கிய சிறப்புப் பேச்சு


அல்லது இங்கே சொடுக்கவும்நன்றி: இந்தப் பெரும் பணிக்கு உதவிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும்

படங்கள் உதவி: ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப் பிள்ளை
Lanka Library, மற்றும் கெளமாரம் தளம்
Author: கானா பிரபா
•4:20 PMஇன்றைய நல்லைக் கந்தன் ஆலய சப்பரத் திருவிழா நன்னாளிலே, 2005 ஆம் ஆண்டு சப்பரத் திருவிழா நிகழ்வில் ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை எடுத்திருந்த புகைப்படங்களும், அத்துடன் சிறப்புச் சங்கீத கதாப்பிரசங்கம் ஒன்றையும் தருகின்றேன்."முருகோதயம்" என்னும் இச்சங்கீதக் கதாப் பிரசங்கத்தை ஈழத்தின் சங்கீத கதாப்பிரசங்க வித்துவான், பிரம்மஸ்ரீ சி.வை.நித்தியானந்த சர்மா அவர்கள் வழங்க, ஹார்மோனியத்தை இசைவாணர் கண்ணனும், வயலினை வித்துவான் A.ஜெயராமனும், மிருதங்கத்தை வித்துவான் T.ராஜனும் பின்னணி இசை தந்து சிறப்பிக்கின்றார்கள்.

பாகம் 1 ஒலியளவு: 19 நிமி 58 செக்


பாகம் 2 ஒலியளவு: 20 நிமி 02 செக்


பாகம் 3 ஒலியளவு: 19 நிமி 23 செக்
eSnips இல் கேட்க
பாகம் 1

Get this widget | Share | Track details


பாகம் 2
Get this widget | Share | Track details


பாகம் 3
Get this widget | Share | Track detailsநன்றி: முருகோதயம் இசைத் தட்டை வெளியிட்ட TTN Music world, 141C Palali Road, Thirunelveli, Jaffna.
புகைப்பட உதவி: ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளைஇவ்வாண்டின் நல்லைக் கந்தன் ஆலய 20 ஆம் திருவிழாப்படங்களை அனுப்பிய கிழவிதோட்டம் செந்தூரனுக்கு நன்றிகள்