Author: கானா பிரபா
•3:59 PM

பரராஜசேகர மன்னனின் அவைக்கு வந்த சுபதிருஷ்டிமுனிவர் சொன்ன ஆரூடத்தினை மெய்ப்பிக்கும் வண்ணம் தொடர்ந்து வரலாற்றில் மிக மோசமான பக்கங்கள் எழுதப்படலாயின.

சிங்கைப் பரராஜசேகரனுக்கு சிங்கவாகு, பண்டாரம், பரநிருபசிங்கம், சங்கிலி என நாங்கு ஆண்மக்களும், ஒரு பெண்ணுமாக ஐந்துகுழந்தைகள் இருந்தனர். சங்கிலி தன் துஷ்டதுணைவரோடு சேர்ந்து சூழ்ச்சி செய்து பரராஜசேகரனின் மூத்த மகனாகிய சிங்கவாகுவை நஞ்சூட்டிக் கொன்றார். சங்கிலியின் செய்கை இதுவென யாருக்கும் சந்தேகம் வரவில்லை. பரராஜசேகரன் தன் இளையகுமாரனாகிய பண்டாரத்தை இளவரசனாக்கி அவனிடத்தில் அரசை ஒப்புவித்துவிட்டுத் தன் புத்திரத் துயர் ஆற்ற கும்பகோணத்திற்குத் தீர்த்த யாத்திரை செல்கின்றான். தந்தையோடு கூடவே சென்ற சங்கிலி, "அங்கு எதிர்ப்பட்ட சோழமன்னனுக்கு உரிய மரியாதை கொடுக்காது அவமதிக்கின்றார். இதனால் சினங்கொண்ட சோழமன்னன், பரராஜசேகரனையும் சங்கிலியையும் சிறைப்பிடிக்கின்றார்.

அது கேட்டு, பரராஜசேகரனின் அடுத்த மகன் பரநிருபசிங்கன் தான் கொண்டு சென்ற படையைத் திரட்டிச் சோழமன்னனை வென்று தன் தந்தையையும், சகோதரனையும் சிறைமீட்கின்றான்.

பரராஜசேகரன் நல்லூருக்கு மீண்டவுடன் தன் மகன் பரநிருபசிங்கனின் வீரபராக்கிரமத்தை மெச்சி, அவனுக்குக் கள்ளியங்காடு, சண்டிருப்பாய், அராலி, அச்சுவேலி, உடுப்பிட்டி, கச்சாய், மல்லாகம், என்னும் ஏழு கிராமங்களையும், தாமிர சாசனமுங் கொடுத்து அக்கிராமங்களுக்கு அதிபதியாக்கினான். அது சங்கிலியின் மனதில் ஆறாத் தீயை உண்டு பண்ணியது.

ஒருமுறை தன் சகோதரன் பண்டாரம் பூந்தோட்டத்தில் உலா வரும்போது நிராயுதபாணியாக அவன் நிற்பதைக் கண்டு ஓடி அவனை வெட்டிகொன்றான் சங்கிலி. முதுமை காரணமாகத் தளர்ந்திருந்த பரராஜசேகரனும் பேசாதிருந்தான். பரநிருபசிங்கன் கண்டி சென்றிருந்த சமயம் தனது தந்தையின் எதிர்ப்பையும் புறக்கணித்து விட்டு கி.பி 1517 ல் யாழ்ப்பாண இராச்சியத்தின் அரியணை ஏறினான் சங்கிலி. மன்னன் பரராஜசேகரனையும் ச்ங்கிலியே கொன்று, செகராசசேகரன் என்ற சிம்மாசனப் பெயரோடு மன்னனானான் எனப் போர்த்துக்கேய ஆதாரங்கள் கூறும். பரநிருபசிங்கன், சங்கிலியின் வலிமைக்கு அஞ்சிப் பேசாதிருந்தான்.

சங்கிலியன் தோப்பு இன்று

கி.பி 1519 ஆம் ஆண்டளவிலே சங்கிலி யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னனாகினான். தமிழ் மக்களிடையே மிக நினைவு கொள்ளப்படும் மன்னனாக சங்கிலி விளங்கி வருகின்றான். பரராஜ சேகரரின் பட்டத்து இராணியல்லாத ஒருத்திக்கு மகனாகப் பிறந்து, பட்டத்துக்கு உரித்தான மூத்த சகோதரர்களை அழித்து யாழ்ப்பாண இராச்சியத்தின் சிம்மாசனம் ஏறினான் இவன். 1505 ஆம் ஆண்டே கோட்டே இராசதானிக்குப் போர்த்துக்கேயர் வந்தபோதும் அவர்கள் யாழ்ப்பாணத்துடனான தொடர்பை 1543 ஆம் ஆண்டிலேயே கொள்ளமுடிந்தமைக்குக் சங்கிலி மன்னனின் எதிர்ப்பே காரணமாகக் கொள்ளப்படுகின்றது. போர்த்துக்கேய நூல்கள் சங்கிலி மன்னனைக் கொடுங்கோலனாகச் சித்தரிக்கப்படுவதற்குக் காரணம் இல்லாமலில்லை.

இவன் ஆரம்பத்தில் இருந்தே போர்த்துக்கேயரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு அவர்களோடு தொடர்புகொண்டோரைத் தண்டிப்பதிலும் முனைப்பாக இருந்தான். உண்மையில் சங்கிலி ஓர் ஆளுமை மிக்க மன்னனாகவும், நாட்டுணர்வு மிக்க தலைவனாகவும் தீர்க்கதரிசனமும் கடும்போக்கும் கொண்ட ஓர் ஆட்சியாளனாகவும் நடந்து கொண்டான் எனத் தெரிகின்றது.

வினிய தாபிரபேனியா (Vinea Tabrobonea) என்ற சரித்திர நூலின் பிரகாரம் பறங்கிகள் 1590 இல் யாழ்ப்பாணத்திலே படையேற்றிச் சென்று சங்கிலி மன்னனோடு யுத்தம் செய்து அரசைக் கைப்பற்றினர் என்று கூறுகின்றது. பரநிருபசிங்கனும் பறங்கிகளும் செய்த ஒப்பந்தப் பிரகாரம் பரநிருபசிங்கனைத் திறையரசனாக்கி அவன் மகன் பரராசசிங்கனை அவனுக்குக் கீழ் ஏழுரதிபன் ஆக்கினார்கள்.

பரநிருபசிங்கன் ஒன்பது வருசம் அரசு செய்து இறந்தான். அவன் இருக்கும் வரையிலும் பறங்கிகள் சமய விஷயத்திலும், பொருள் விஷயத்திலும் கொடுங்கோல் செலுத்தாது ஒருவாறு அதிகாரம் செலுத்தி வந்தனர். பரநிருபசிங்கன் இறந்தபின்னர் அவன் மகன் பரராசசிங்கனைப் பறங்கிகள் முதன்மந்திரியாகினார்கள்.

பரராசன் இறக்கும் வரை அவன் பொருட்டு கீரிமலை திருத்தம்பலேஸ்வரன் கோயிலையும் நல்லூர்க் கந்தசாமி கோயிலையும் மாத்திரம் இடியாது விட்டிருந்தனர். அவன் இறந்த பின்னர் அவற்றையும் இடித்தொழித்தார்கள். அவர்கள் நல்லூர்க் கந்தசாமி இடிக்கும் முன்னே அதன் மெய்க்காப்பாளனாக இருந்த சங்கிலி என்பவன் அக்கோயில் விதானங்கள் வரையப்பெற்ற செப்பேடு, செப்பாசனங்களையும், திருவாபரணங்களையும் கொண்டு மட்டக்களப்புக்கு ஓடினான். அங்கிருந்த சில விக்கிரகங்களை அக்கோயிற் குருக்கள்மார் புதராயர் கோயிலுக்குச் சமீபத்தேயுள்ள குளத்திலே புதைத்துவிட்டு நீர்வேலிப்பகுதிக்கு ஓடினர். தொடர்ந்து நல்லைக் கந்தன் ஆலயம் தரைமட்டமாகியது.

உசாத்துணை:
1. "யாழ்ப்பாணச் சரித்திரம்", நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை
2. "ஈழத்தவர் வரலாறு" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா

புகைப்படம்:
1. சங்கிலி மன்னன் சிலை மற்றும் சங்கிலியன் தோப்பு - பத்திரிகையாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை


நல்லூர்க் கந்தன் ஆலய ஆறாம் நாள் திருவிழாப்படங்களை அனுப்பி வைத்த செந்தூரனுக்கு மிக்க நன்றிகள்








This entry was posted on 3:59 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On August 3, 2009 at 8:28 PM , சி தயாளன் said...

சங்கிலியன் வரலாறே கொஞ்சம் குழப்பகரமானது தான்...

 
On August 4, 2009 at 1:28 AM , யசோதா.பத்மநாதன் said...

//ஆரம்பத்தில் இருந்தே போர்த்துக்கேயரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு அவர்களோடு தொடர்புகொண்டோரைத் தண்டிப்பதிலும் முனைப்பாக இருந்தான். //

மன்னாரில் மதம் மாறிய பிரஜைகள் பலரை கொன்று தீர்த்ததும் இந்த அரசனே என்றும் படித்த ஞாபகம்.

 
On August 4, 2009 at 6:13 AM , சினேகிதி said...

நாங்கள் படிச்ச புத்தகங்களில் சில உண்மைகள் மறைச்சிட்டினம்.

 
On August 4, 2009 at 4:06 PM , கலை said...

நிறைய விபரங்கள் கிடைத்தது. நன்றி.

 
On August 4, 2009 at 5:58 PM , கிடுகுவேலி said...

இந்த படத்தில் உள்ள சங்கிலி மன்னன் சிலை 1995 ம் ஆண்டுக்கு பின்னர் உருவாக்கப்பட்டு அதிலே வைக்கப்பட்டது. முன்னர் இருந்த சங்கிலி மன்னன் சிலை மிகவும் தத்ரூபமாகவும் கம்பீரமாகவும் (இதைவிட) இருக்கும். அந்த பழைய சிலை பாழ்படுவார் 1995 இல் வந்து இழுத்து கீழே விழுத்தி இருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை எதுவும் தமிழனுடையது என இருந்தால் அதனை ஏற்கும் பக்குவம் இல்லை.

 
On May 22, 2019 at 11:10 PM , Unknown said...

வீர சைவ மன்னன் மாவீரன் சங்கிலி பண்டாரம்