Author: Unknown
•11:32 AM
கடலும் கடல் சார்ந்த வாழ்வும், மலையும் மலை சார்ந்த வாழ்வும் மாதிரி எங்கட வாழ்வு பனையும் பனைசார்ந்த வாழ்வு எண்டு சொன்னால் மிகையில்லை பாருங்கோ. எங்கட வீட்டுக்கு தெற்கால சொன்னா நம்பமாட்டியள் ஒரு பன்ரண்டு பரப்பு வடலிக்காணிதான். அம்மாவின்ர சீதனவீட்டுக்கு வடக்கால கூட ஒரு ஆறேழு பரப்பில பனைதான் நிண்டது. இந்தப் பனை எந்தளவுக்கு எங்கடை வாழ்வில் முக்கியமான ஒரு விசயமா இருந்தது எண்டது பற்றின ஒரு நினைவு மீட்டல்தான் இது.

இந்தப் பனைமரத்தின்ர தண்டுப் பகுதி இருக்கெல்லோ, அது எத்தினை எத்தினை விசயத்தில பயன்படும் தெரியுமே. இதிலையிருந்துதான் பாருங்கோ பனம் சிலாகை இணக்குவினம். இந்தச் சிலாகையள் வீட்டுக் கூரை மேயிறது தொடக்கம், மாட்டுக் கொட்டிலுக்கு கூரை போடுறது, சும்மா கொட்டிலுகளுக்கு தூண் மாதிரி நிக்கிறது எண்டெல்லாம் எத்தினையோ விசயத்துக்கு பயன்படும். சிலாகை எண்டுறது கொஞ்சம் மெல்லீசா இணக்கிற பனைமரத் தண்டுப் பகுதி. சில இடங்களில பனங்குத்தியும் கொட்டில் போடப் பயன்படும். அது இணக்கபாடாத பாகம். இரண்டுக்கும் இடைப்பட்ட சைசில இருக்கிறத சாதாரணமா மரம் எண்டுதான் சொல்லுவினம். இந்தப் பெரிய பெரிய பனங்குத்தியள் எங்களுக்கு இன்னொரு உதவியும் செய்தது தெரியுமோ? இந்தப் பனங்குத்தியளை அடுக்கி, அதுக்கு மேல மண்மூட்டை அடுக்கித்தான் வீடு வாசலில நாங்கள் பங்கர் எல்லாம் வெட்டினனாங்கள் எண்டதையும் மறக்கக் கூடாது பாருங்கோ. சிலாகை இணகினாப்பிறகு மிஞ்சிற சிராம்பு வீட்டில அடுப்பெரிக்க எத்தனையோ தரம் பயன்பட்டிருக்கு. இனி கொஞ்சம் மேலை போவம்.

பனைமர உச்சியிலை முதல்ல நாங்கள் பாக்கப் போறது கருக்குமட்டையோட சேர்ந்த ஓலை. ஓலை எத்தனை விதத்தில பயன்படும் தெரியுமே. பட்டை ஓலை மாடு வளக்கிறாக்களுக்கு நல்ல லாபம் தரும். ஏனெண்டால் அதை சத்தகம் வச்சு நார் நாராக் கிளிச்சு மாட்டுக்குப் போட்டா மாடு நல்லா சாப்பிட்டு நல்லா சாணி போடும். அந்த சாணி என்னென்னத்துக்கெல்லாம் பயன்படும் எண்டு பெரிய பதிவே போடலாம். ஓலை கிழிச்ச பிறகு மிஞ்சிற கருக்கு மட்டேலை வேலி அடைக்கலாம், பட்டத்துக்கு சிலாகை இணக்கலாம், அந்த நாரை உரிச்சு ஏதாவது கட்டுறதுக்கோ, பொடியளுக்கு அடிக்கிறதுக்கோ பாவிக்கலாம். இல்லையெண்டால் விறகாக் கூடப் பாவிக்கலாம். அப்பருக்கு வேலை கொஞ்சம் மட்டாய் இருந்த காலத்தில இப்பிடி மிஞ்சின கருக்கை வித்துக்கூட காசு சேத்திருக்கிறம் நாங்கள் ஒரு காலத்தில.

இதே ஓலைய நல்லா மிதிச்சு பாடம் போட்டு காயவிட்டு, வேலி அடைக்கலாம். மேலே சொன்னமாதிரி கருக்கால அடைக்க நிறையக் கருக்கு தேவை. ஆனால் ஓலையோடு சேர்ந்த கருக்கால அடைக்க நிறைய ஓலை தேவைப்படாது. ஆகக் குறைஞ்சது ஒரு ரண்டு வரிசமாவது தாங்கும் பாருங்கோ இந்த வேலி. எங்கட பெரியம்மா வீடு எங்கட பொறுப்பில இருந்ததால அடிக்கடி இந்த வேலியடைப்பு நடக்கும். அதேபோல இந்த கருக்கோடு சேர்ந்த ஓலையாலதான் வீட்டில மாட்டுக் கொட்டில், ஆட்டுக் கொட்டில் எல்லாம் மேய்வம். சிலபேரிண்ட வீட்டுக் கூரைகூட கருக்கோட சேர்ந்த ஓலையாலதான் மேயிறது. அந்த வீட்டுக்க இருந்த குழுமை இருக்கே, அப்பப்பா... அது ஒரு அனுபவம் பாருங்கோ. அதே காய்ஞ்ச ஓலையில கடகம், சுளகு, நீத்துப்பெட்டி, குட்டான், பெட்டி, பாய் எண்டு எத்தினையோ செய்யலாம். ஏன் தலைக்குப் போடுற தொப்பி, கைவினைப் பொருட்கள் எண்டு கனக்க செய்யிறவை தெரியுமே.

அடுத்தது நொங்கு. நொங்கு சீவி நாங்கள் மாட்டுக்குப் போடுறனாங்கள். ஆசை மாமிதான் நொங்கு வெட்டிறவ. புழு இல்லாத நொங்காப் பாத்து அவ வெட்டித்தர அதை நாங்கள் நோண்டிக் குடிக்க, அது ஒரு காலம். நொங்கிண்ட வெளிப்பக்கத்தை அரிமனையிலை வச்சு வெட்டி மாட்டுக்குப் போடுவினம். இதே நொங்கு பழுத்து பனம்பழமாய் வந்தாப்பிறகும் மாடுகள் பனம்பழம் சூப்பும். தலைய ஆரும் ஒழுங்கா எண்ணை வச்சு இழுக்காம பள்ளிக்குடம் போனால் ‘மாடு சூப்பின பனங்காய்' மாதிரி இருக்கெண்டு வாத்தியவை சொல்லுறவை. அதே பனம்பழத்தை நல்லா பிழிஞ்சு, பனங்களி எடுத்து பனங்காய்க்காய் எண்டு ஒரு பலகாரம் செய்வினம். சுடச்சுட அதைச் சாப்பிட்டாப் போதும், வயிறு காலாகாலத்துக்கும் சுத்தமா இருக்கும். அதே பனங்களியில இருந்து செய்யிற பினாட்டும் ஒரு அருமையான சாமான். பினாட்டுக்குப் பாணிகாய்ச்சி போத்தலில் அடைத்து விற்ற காலத்திலும் பனைதான் எங்கட சோத்துக்கு ஆதாரமாய் இருந்தது. அதைவிட யாழ்ப்பாணத்தில ஒரு கொஞ்சக்காலம் உடுப்புக்குப் போடுற சோப்பு கிடைக்கேல்லை. அப்ப நல்லா பங்ம்பழத்தை உடுப்பில போட்டுத் தேய் தேய் எண்டு தேய்ச்சு, நல்லா தண்ணீக்க அலம்பி காயப்போட்டா, நல்ல வடிவா தோய்பட்டிருக்கும். (கொஞ்சம் மஞ்சளடிக்கும், ஆனால் ஒரு காலத்தில் பனை எங்களுக்கு சோப்பும் தந்தது).

இந்தப் பனம்பழத்திண்ட கடைசி பரிணாம வடிவம்தான் ஊமல். ஊமலும் அடுப்பெரிக்கப் பயன்படும். நல்ல ஊமல் அல்லது ஏறத்தாள ஊமலான பனம்பழம் எடுத்து பெரிசாப் பாத்திவெட்டி தண்ணி கொஞ்சம் ஊத்தி கொஞ்சக் காலம் சரியா பராமரிச்சா வாறது பனம் கிழங்கு. நாங்கள் ஆகக் குறைந்தது ரண்டு பனம்பாத்தியாவது போடுவம். ஏராளமா பனங்கிழங்கு வெட்டி எடுப்பம். பனங்கிழங்கை அவிச்சு உப்புத் தூள் கலவையோட சாப்பிடலாம். அவிக்காமக் காயவிட்டால் ஒடியல். ஒடியல் மாவில ஒடியல் புட்டு, ஒடியல் கூழ் செய்யலாம். அவிச்ச பனங்கிழங்கை காயவிட்டால் புழுக்கொடியல். புழுக்கொடியலை வெங்காயம், தேங்காய்ச்சொட்டு போன்றவற்றோட சாப்பிடலாம். புழுக்கொடியல் மாவில சீனி போட்டு, தண்ணிவிட்டு குழைச்சு உருண்டையாக்கி சாப்பிடலாம். அவிச்ச பனங்கிழங்கை வட்டமா வெட்டி, காய வச்சு சீவு புழுக்கொடியல் செய்யலாம். சீவு புழுக்கொடியலுக்க கொஞ்சக் கச்சான் சேத்து சீனிப்பாணி காச்சி ஊத்திப் பிரட்டி ஒரு இனிப்பே தயாரிக்கலாம் தெரியுமோ. ஊமலை இந்தப் பள்ளிக்கூடம் வழிய பட்டத்தாள் சுத்தி பழம்பொறுக்கல் நிகழ்ச்சிக்கு பயன்படுத்தின ஆக்களும் உண்டு.

அடுத்தது அந்தப் பனம்பாளயள் எங்களுக்குத் தாற கருப்பணியும் கள்ளும். கருப்பணி இனிக்கும். அந்த இனிப்பு இருக்கிறதுக்காக முட்டியள்ள சுண்ணாம்பு பூசி பாளையள்ள கட்டுவினம். கருப்பணியை காசு குடுத்து வாங்கி என்னவோ எல்லாம் செய்து ஒரு பென்னாம்பெரிய இரும்புச் சட்டியில காச்சி பனங்கட்டி செய்யிறனாங்கள். அதுவும் அதுக்கெண்டு ஒவ்வொரு சைசில குட்டான் வாங்கி அதுக்க கொதிக்கிற அந்தப் பாணிய ஊத்தி இறுகவிட்டு அதையும் வித்திருக்கிறம். அதே போல எங்கட ஊரில இந்தக் கள்ளுக்கு அலையிற சனம் எத்தினை இருக்கு தெரியுமே. அது உடம்புக்கு நல்லது எண்டு சொல்லி வாங்கி வாங்கிக் குடிப்பினம். இதே பனையில இருக்கிற பன்னாடைய வச்சுத்தான் கள்ளை வடிகட்டுவினம். ஒரு முறை சுவிஸில இருந்து வந்த ஒரு தண்ணிச்சாமி என்னட்ட ரகசியமா காசு தந்து குடிக்க வாங்கிவா எண்டுது. நான் என்ன பிராண்ட் அண்ணை எண்ட அந்தாள் என்னை ஒரு மாதிரியாப் பாத்துட்டுச் சொல்லீச்சுது, கள்ளில என்னடா பிராண்டும் மண்ணாங்கட்டியும் எண்டு. நான் இந்தாள் வெளிநாட்டில இருந்து வந்தது தானே ஆகக் குறஞ்சது பியராவது கேட்கும் எண்டு நினைக்க அந்தாள் கேட்டது இத. அந்தளவுக்கு புகழ் கள்ளுக்கு.

இதே போல பனையில இருக்கிற பன்னாடை, கொக்காரை, பாளை எல்லாம் கூட எங்கட வாழ்வோட ஒன்றிப் போனவைதான். 87 பிற்பகுதி தொடக்கம், 93 இடைப்பகுதி வரை நிரந்தர வருமானம் இல்லாமல் தடுமாறின காலத்தில எங்கட குடும்பத்துக்கு ஒருவகையில இன்னொரு குடும்பத் தலைவனா பனைதான் இருந்தது. இரவில நிலா வெளிச்சத்தில பேசிச் சிரிச்சபடி குடும்பமாய் இருந்து ஓலை கிழிப்பம். நான் பெரியாக்களுக்கு சின்னச் சின்ன உதவி செய்வன். அதுதான் எங்கட நிலாக்காலம். அதே போல் கருக்கு மட்டைகளைப் பேரம் பேசி விக்கிற போதோ, பனங்குற்றி விற்கிற போதோ ஏதோ பெரிய மனிசன் மாதிரி வாங்கிற ஆக்களையும் விக்கிற ஆக்களையும் மேற்பார்வை செய்தது ஞாபகம் இருக்கிறது. வேலையில்லாமலா பனைக்கு கற்பகத்தரு எண்டு பேர் வைத்தார்கள்? கற்பக மரம் இருக்கிற இடம் தேவலோகம் எண்டால், எங்கட ஊர்களும் தேவலோகம்தானே!

வடலிக்காணி: பனைகள் கூடியுள்ள காணியை வடலிக் காணி என்று சொல்வார்கள் எங்களூரில். மாட்டின் இளையது கன்று, காகத்தின் இளையது குஞ்சு என்பது போல, பனையின் இளையது வடலி.
சிலாகை: சலாகைகள். பனங்குற்றியில் இருந்து மெருகூட்டித் தயாரிக்கப்படும் நீளமான மரங்கள். இது சம்பந்தப்பட்டு கைமரம் என்ற சொல்லும் விளங்கி வருகிறது. சனிக்கிழமை அப்பாவுடன் பேசும்போது கேட்டுச் சொல்கிறேன்.
இணக்குவினம்: சீவி மெருகூட்டுவார்கள்
கொட்டிலுக்கு: கொட்டகைகள், தற்காலிக தங்குமிடங்கள், வீடுப் பிராணிகளுக்கான பாதுகாப்பான தங்குமிடங்கள்
பங்கர்: பதுங்கு குழிகள்
சிராம்பு: மெருகூட்டப் படும் பனங்குற்றிகளின் எச்சங்கள். இவை கால்களில் குற்றி ஆட்களைப் படாத பாடு படுத்துவதும் உண்டு.
கருக்குமட்டை: ஓலையைப் பனையோடு சேர்த்துத் தாங்கும், கூரான கரைகளை உடைய பகுதி. கருக்கு ஆட்களின் உடலை இலகுவில் கிழித்துவிடும்.
சத்தகம்: கேள்விக்குறி போன்ற, இரும்பாலான கத்தி. இதற்கு பெரும்பாலும் கைபிடியும் இரும்பாலேயே செய்யப்பட்டு, கைபிடியின் அடிப்பாகம் கூர்மையாக இருக்கும். ஓலை கிழிக்க அடிக்கடி பயன்படும். பூப்புனித நீராட்டு விழாக்களில் ஒரு கௌரவமான இடம் பெறுவது.
மிதிச்சு: மிதித்தல். இங்கே பனை ஓலையை அழகாக அடுக்கி படிய வைத்தல் என்ற பொருளில் பயன்படுகிறது.
பாடம்: பனையோலையை ஒழுங்காக அடுக்கி படிய வைத்தல் வரிசமாவது: வருடமாவது
பொறுப்பில: பொறுப்பில். அதாவது, வீட்டுக்காரர் வேறு இடத்தில் இருக்கும் போது, அந்த வீட்டைப் பராமரிக்கும், வாடகைக்கு விடும் கடமைகளும் உரிமைகளும்.
மேய்வம்: வேய்தல். கூரையை அடைத்தல்.
கடகம்: ஓலையால் செய்யப்பட்ட ஒரு வகை வீட்டு உபகரணம். பல அளவுகளில் பல தேவைகளுக்காக, பல்வேறுபட்ட உரத் தன்மையோடு செய்யப்படும்
சுளகு: ஓலையால் செய்யப்பட்ட ஒரு வகை வீட்டு உபகரணம். அரிசி புடைக்கவும், நெல் தூற்றவும் அடிக்கடி பயன்பட்டது எங்கள் வீட்டில்.
நீத்துப்பெட்டி: ஓலையால் செய்யப்பட்ட ஒரு வகை வீட்டு உபகரணம். அநேகமாக பிட்டு அவிக்கவும், மா, அரிசி போன்றவற்றை அளக்கவும் (ஒரு நீத்துப்பெட்டி அரிசி இண்டைக்குக் கூடச் சமையும்) பயன்பட்டது
குட்டான்: இது பெரும்பாலும் பனங்கட்டி போட்டு வைக்கப் பயன்பட்ட ஓலையாலான உபகரணம்.
நொங்கு: நுங்கு
அரிமனை: அரிவாள் மணை
பனங்காய்க்காய்: பனங்களியால் செய்யப்படும் பலகாரம். இதைப் பனங்காய்ப் பனியாரம் என்றும் அழைப்பார்கள்.
பினாட்டு: பனாட்டு. பனங்களியைப் பனை ஓலையில் பின்னப்பட்ட பாயில் தடவி வெயிலில் காயவைத்து செய்வது
ஊமல்: பனம் பழத்தின் கடைசி வடிவம்
பட்டத்தாள்: நிறம் பூசப்பட்ட கடதாசி. மென்மையானது. பட்டம் ஒட்டுவதற்கு பெரும்பாலான சிறுவயதினரால் பயன்படுத்தப் படுவதால் பட்டத்தாள் என்ற பெயரால் புகழ் பெற்றது.
பழம்பொறுக்கல்: ஆரம்பப் பாடசாலைகளில் விளையாடும் ஒரு விளையாட்டு. இல்ல மெய்வல்லுனர்ப் போட்டிகளிலும் இடம்பெறுவதுண்டு.
பனம்பாளயள்: பனம் பாளை.
முட்டி: கள்ளும், கருப்பணியும் சேகரிக்கப் பயன்படும் மண்ணாலான பாத்திரம்.
தண்ணிச்சாமி: அதிகப்படியாகக் குடிப்பவர்.
This entry was posted on 11:32 AM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

25 comments:

On August 12, 2009 at 2:37 PM , கலை said...

என்ரை அடுத்த பதிவா பனையைப் பற்றி எழுதலாமெண்டு நேற்றுத்தான் நினைச்சனான். நீங்கள் முந்தியிட்டியள் :).

நீங்கள் முந்தினதும் நல்லதுக்குத்தான். எனெண்டால் நான் எழுதியிருந்தால், இத்தனை விரிவாகவும், விளக்கமாகவும் எழுதியிருக்க மாட்டன்.

சின்ன சின்ன விடயங்களெல்லாம் சொல்லி நல்லா எழுதியிருக்கிறீங்க. நன்றி.

 
On August 12, 2009 at 4:11 PM , Unknown said...

கலை... நானே சொன்ன விஷயம் காணாதோ எண்டு நடுங்கிக் கொண்டிருக்கிறன்.. நீங்கள் கனக்கச் சொன்னதாய் சொல்லியிருக்கிறியள்.. பனை உண்மையிலேயே ஒரு கற்பகத் தருதான்.. இண்டைக்கு எனக்கு ஈழத்து முற்றத்தில போட ஒரு பதிவையும் தந்திருக்கெண்டாப் பாருங்கோவன்

 
On August 12, 2009 at 6:34 PM , வசந்தன்(Vasanthan) said...

தம்பி,
இந்த இடுகை நல்லா எழுதப்பட்டிருக்கு. மறந்து போற அளவுக்கு இருக்கிற சில சொற்களை நினைவுபடுத்தியிருக்கிறீர்.

ஊமல் வரைக்கும் கதைச்சனீர் இடையில பூரான் சாப்பிடுறதை விட்டிட்டீர்.
அப்பிடியே கங்குமட்டை, கொக்கரை எல்லாத்தையும் சொல்லியிருக்க வேணும். பனையோடு தொடர்புபட்டு 'கொட்டு' என்ற சொல்லுமுண்டு. அதன் விளக்கம் தெரியுமோ?

பனையிலிருந்து செய்யப்படும் சில பொருட்கள் தொடர்பாக நானெழுதிய இடுகை

வசந்தன் பக்கம்: கடகம் - பெட்டி - ஓலை - நார் - நான்

வி.ஜே. சந்திரன் எழுதிய ஓரிடுகை
பனை

 
On August 12, 2009 at 6:42 PM , வி. ஜெ. சந்திரன் said...

//இந்தப் பனம்பழத்திண்ட கடைசி பரிணாம வடிவம்தான் ஊமல். ஊமலும் அடுப்பெரிக்கப் பயன்படும். நல்ல ஊமல் அல்லது ஏறத்தாள ஊமலான பனம்பழம் எடுத்து பெரிசாப் பாத்திவெட்டி தண்ணி கொஞ்சம் ஊத்தி கொஞ்சக் காலம் சரியா பராமரிச்சா வாறது பனம் கிழங்கு.//

நல்ல வடிவா எழுதியிருக்கிறியள். ஊமல் பனம் பழத்திண்ட கடைசி பரிமாண வடிவம் எண்டது சரி. ஆனால் ஊமலை போட்டு பாத்தி கட்டுறேல்லை. ஊமலுக்கு முன் உள்ள நிலையை பனம்கொட்டை எண்டு மாடு சுப்பி, இல்லாடி வெயிலிலை காய்ஞ்சு போய், இல்லாட்டி பினாட்டு பினைஞ்சு வாறது. அதை போட்டு பாத்திகாட்டி பனம் கிழங்கு எடுக்கிறது. பனங்கிழங்கு பத்திலை இருந்து எடுக்கிறது தான் ஊமல், அதாவது பனம் கொட்டையில் இருந்து தும்புகள் எல்லாம் இழந்த நிலை.

நானும் முந்தி ஒருக்கா பனை பற்றி ஒரு பதிவு போட்டனான், ஆனா உங்கள மாதிரி விரிவா எழுதேல்லை.

http://viriyumsirakukal.blogspot.com/2007/05/blog-post_02.html

யாழ்பாண குடா நாட்டுகாரரை ஏனைய ஊராக்கள் பனம்கொட்டை எண்டு சொல்லியும் கேலி பண்ணுறவை.

 
On August 12, 2009 at 6:43 PM , Unknown said...

சந்திரன் அண்ணை.. அதுதான் 'ஏறத்தாள் ஊமலான' என்ற பதத்தை பயன்படுத்தியிருக்கிறன்

 
On August 12, 2009 at 6:48 PM , Unknown said...

வசந்தன் அண்ணை... அந்தப் பூரான் சாப்பிடுறதை ஏன் மறந்தன் எண்டு தெரியேல்ல.. வயித்துக்க குத்தும் எண்டு சனம் சாப்பிட விடாது. ஒளிச்சுத் தான் சாப்பிடிறது.. அதேமாதிரி பதிவிலையும் ஒளிச்சிட்டன் போல இருக்கு...

கங்குமட்டையை விட்டாலும் கொக்காரையை பதிவில குறிப்பிட்டிருக்கிறன்... கொட்டு எண்ட சொல்லு ஞாபகத்தில இருந்தது ஆனா நீங்கள் கேட்ட மாதிரி ஆரும் விளக்கம் கேட்டால் சிக்கலாகீடும் எண்டபடியால விட்டுட்டன்... உங்களுக்குத் தெரிஞ்சாச் சொல்லுங்கோண்ணை..

 
On August 12, 2009 at 6:51 PM , Unknown said...

அண்ணையவை... இந்த அம்மனுக்குக் கஞ்சி காய்ச்சிற நேரம் இந்த பனையோலையில (குருத்தோலை எண்டு நினைக்கிறன்) விட்டுத்தானே கஞ்சி தாறவை.. அதுவும் விட்டுப் போச்சு

 
On August 12, 2009 at 6:51 PM , வி. ஜெ. சந்திரன் said...

//கொட்டு' என்ற சொல்லுமுண்டு. அதன் விளக்கம் தெரியுமோ?//

வசந்தன் தெரிஞ்சு கொண்டு கிருத்திகனுக்கு அறிமுகம் இருக்கோ எண்டு பக்க கேக்கிறிரோ இல்லை உண்மையா தெரியாம கெக்கிறிரோ?

பனம் கொட்டு
பனைமரத்தின் வெளிப்புறம் வன்மையானது, அது தான் வளை, சிலாகை, தீரந்தி என பலதும் செய்ய பயன்படும். அதின் மையபகுதி மென்மையானது அதை சோத்தி எண்டு சொல்லிறது.

தறிச்ச பனைமரம், அல்லது தான விழுந்த பனைமரத்தை கொஞ்ச நாளைக்கு உக்க விட்ட அதின் சோத்தி பகுதி மரவண்டு/ கொறவணன் புழு, மற்றும் நுண்ணங்கிகளாலை இலகுவில் உக்கி, அழிஞ்சு போகும், ஆனா வெளிப்பகுதி அப்பிடியே இருக்கும். உக்கின உள் பகுதியை கோதி எடுத்து விட்டா ஒரு குழாய் மாதிரி இருக்கும். இந்த பனம் கொட்டு தான் இரண்டு வயல்களுக்கிடையே தண்ணி பாய (வயலுக்கை தண்ணி கூடி வரம்பை உடைக்காது பாதுக்காக்க) பாவிக்கிறது. அதை விட ஒட்டு மாங்கண்டுகளை பிரட்டி சந்தைக்கு கொண்டு போறதுக்கும் மாங்கண்டை பனம் கொட்டுக்கை நட்டு தான் கொண்டு போறது

 
On August 12, 2009 at 6:54 PM , வி. ஜெ. சந்திரன் said...

//அண்ணையவை... இந்த அம்மனுக்குக் கஞ்சி காய்ச்சிற நேரம் இந்த பனையோலையில (குருத்தோலை எண்டு நினைக்கிறன்) விட்டுத்தானே கஞ்சி தாறவை.. அதுவும் விட்டுப் போச்சு//

பிளா/ தொன்னை - இது சரியோ வசந்தன்? இல்லாடி தொன்னை எண்டுறது வேறை என்னதிலையும் செய்யிறதோ?

கள்ளு குடிக்கவும் பயன்படும் :)

 
On August 12, 2009 at 6:57 PM , தமிழன்-கறுப்பி... said...

இந்த பனையைப்பற்றி கதைக்காத ஆக்களே கிடையாது...

மிச்சம் சொச்சம் இருக்கிற மாதிரி தெரியல்லை பதிவும் பின்னூட்டங்களும் அலசி முடிச்ச மாதிரித்தான் இருக்கு.

நல்ல பதிவு கீத்...

 
On August 12, 2009 at 7:13 PM , வந்தியத்தேவன் said...

அருமையான பதிவு கீத்.
தறிபட்ட பனையின் அடிப்புறத்தையும் கொட்டு என்பார்கள். பிளா தான் சரியென நினைக்கின்றேன் தொன்னை வேறுஒரு இலையில் செய்வதாகும்.

 
On August 12, 2009 at 7:16 PM , வந்தியத்தேவன் said...

சிலாகை கொஞ்சம் தடிப்பு குறைஞ்ச மெல்லியது. பெரியதை வளை என்பார்கள். யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான வீடுகளின் வளைகள் பனை வளைதான்.

சரி பொடியள் ஆண் பனைக்கும் பெண் பனைக்கும் என்ன வித்தியாசம் எனச் சொல்லுங்கோ பார்ப்போம்?

 
On August 12, 2009 at 7:25 PM , வந்தியத்தேவன் said...

தம்பி கீத் நீங்கள் குருத்தோலை என்பதால் காவோலையை மறப்பதோ.
காவோலை காய்ந்த பனையோலை, பெரும்பாலும் விறகாக அடுப்பு மூட்டப் பயன்படுத்தப்படும், காவோலை விழ குருத்தோலை சிரிக்கும் என்ற பழமொழியும் இருக்கிறது.

 
On August 12, 2009 at 7:35 PM , சினேகிதி said...

மாலுசந்தியில் ஒரு கற்பகம் கடை இருந்தது. அங்கு தொப்பி கைப்பை இப்பிடி நிறையச்செய்து விற்பார்கள்.

புழுக்கொடியல் மாவும் நாங்கள் அங்கதான் வேண்டுவம்.

கருப்பட்டி/ பனங்கட்டியும் ஒன்றா??? இங்கும் அப்பம்மா பனங்கட்டி வேண்டி வைச்சிருக்கிறா தேத்தண்ணியோட கடிச்சுக் கடிச்சுக் குடிக்க.

மிகவும் செறிவான நல்ல பதிவு.

 
On August 12, 2009 at 7:52 PM , வந்தியத்தேவன் said...

//கருப்பட்டி/ பனங்கட்டியும் ஒன்றா??? //

ஆமாம் சினேகிதி இரண்டும் ஒன்றுதான். அதே நேரம் தென்னிலங்கையில் கித்துள் மரத்திலிருந்து தயாரிக்கும் பனங்கட்டியை கித்துள் பனங்கட்டி என்றே சொல்வார்கள்.

கருப்பணியில் இருந்து செய்வதால் கருப்பட்டி, பனையும் தொடர்பு படுவதால் பனங்கட்டி. இந்த பனங்கட்டியை அடைத்து வைக்கப்பயன்படும் பனையோலையால் தயாரிக்கப்பட்ட பொருளை குட்டான் என்பார்கள்.

 
On August 12, 2009 at 8:09 PM , Unknown said...

சந்திரன் அண்ணையும், வந்தி அண்ணையும் நான் சொல்ல வேண்டிய பதிலெல்லாத்தையும் சொல்லுகினம்.. நான் விட்டதையும் சொல்லுகினம்.. ரண்டு பேருக்கும் மெத்த நன்றி..

உண்மைதான் தமிழன் கறுப்பி.. ஆனா பனையப் பற்றிக் கதைக்க இன்னும் கனக்க இருக்கிற மாதிரி எனக்குத் தெரியுது..

சினேகிதி...தொப்பி, கைப்பை விற்ற அந்தக் கற்பகம் கடை ஞாபகம் இருக்கு.. ஆனா புழுக்கொடியல் மாவெல்லாம் நாங்களே வீட்டில இடிச்சிடுவம்

 
On August 13, 2009 at 12:52 AM , shangar said...

தொன்னை என்பது தென்னோலையில் செய்வது. இதில் தயிர் சட்டி வைத்து விற்பனை செய்யப்படும்.

 
On August 13, 2009 at 1:56 AM , கலை said...

'ஊமல்' விசயம் நானும் யோசிச்சனான். எதுக்கும் சரியாத் தெரியாம எழுதக் கூடாதெண்டு விட்டிட்டன் :). பனக்கொட்டை போட்டுத்தான் பாத்தி வைக்கிறது. பனங்கிழங்கு எடுத்த பிறகு, அங்கை காஞ்சு மிஞ்சுறதுதான் ஊமல்.

அந்த பூரான்,,, எவ்வளவு சுவையா இருக்கும். நினைக்கவே ஆசையா இருக்கு. பங்கிழங்கு கிண்ட ஆரும் போனால், பின்னாலையே பூரான் வெட்ட கத்தியோட கிளம்பிறதுதான் நினைவுக்கு வருது.

எனக்கு தெரியாத சில புது சொற்களை அறியவும், மறந்திருந்த சில சொற்களை நினைவுபடுத்திக் கொள்ளவும் இந்த இடுகை உதவியிருக்கு. அதற்கு நன்றிகள்.

கீத் க்கு ஒரு வேண்டுகோள்! பதிவில நீங்க நிறையவே எழுதியிருந்தாலும், இங்க பின்னூட்டங்களில பல விசயங்கள் சேர்க்கப் பட்டிருக்கு. அவற்றையும் அந்தப் பதிவிலயே சேர்த்துவிட்டால், அந்தப் பதிவு இன்னும் மெருகேறும் எண்டு நினைக்கிறன். வேணுமெண்டால், பின்னூட்டங்கள்ல உள்ள மேலதிக தகவல்களும் இணைக்கப்பட்டிருக்கு எண்டு ஒரு குறிப்பை போட்டுட்டு, மேலதிக தகவல்களாக அங்கேயே இணைச்சால் நல்லா இருக்கும். சிலர் பின்னூட்டம் பார்ப்பதில்லைத்தானே? தனிய இடுகையை வாசிச்சுட்டு போய்டுவினம்.

 
On August 13, 2009 at 3:27 AM , Unknown said...

செய்யலாம் கலை... ஆனால் பதிவு ஏற்கனவே நீண்டு விட்டது.. அதுதான் யோசிக்கிறேன்

 
On August 13, 2009 at 3:47 AM , வர்மா said...

பனையைப்பற்றியபதிவு பிரமாதம்.பின்னூட்டங்கள்மூலம் இன்னும்பல விசயங்களை அறியக்கூடியதாக உள்ளது.நுங்கின் இளம்பருவம் குரும்பை,நோய்நிவாரணீயான பனங்கற்கண்டுபோன்றவற்றை ஞாபகப்படுத்தவிரும்புகிறேன்.பனை அபிவிருத்திச்சபையின் முன்னாள்தலைவரான மு.பாக்கியநாதன் எழுதிய 'பனையியல்' என்னும் புத்தகத்தில் பனையைப்பற்றி பலதகவல்கள் உள்ளன.
அன்புடன்
வர்மா.

 
On August 13, 2009 at 5:20 AM , கானா பிரபா said...

பனைப்பதிவும் பின்னூட்டங்களும் சோக்காய் இருக்கு

 
On August 16, 2009 at 3:56 AM , யசோதா.பத்மநாதன் said...

மிகவும் பயனுள்ள பதிவு!
எழுத்து நடையும் சுவை சேர்க்கிறது.

 
On August 16, 2009 at 4:17 AM , வலசு - வேலணை said...

ஊமல் அடுப்பெரிக்க மட்டுமல்ல. தீவகப் பகுதிகளில், புகையிலை பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. பனையின் ஊமலலும் தென்னையின் தென்னம் பொச்சும் (முழுத்தேங்காயை உரித்துப் பெறப்படுவது) புகையிலையினை, போறணை அல்லது குடில் என்று அழைக்கப்படும் சூளைக்குள் வைத்துப் புகைப்போடப் பயன்படும்.

 
On August 16, 2009 at 6:01 AM , Unknown said...

கருத்துகளுக்கு நன்றி பிரபா அண்ணா மற்றும் மணிமேகலா [அக்கா(??) ஆச்சி (??)]....

மேலதிகத் தகவல்களுக்கு நன்றி வலசு வேலணை

 
On September 27, 2009 at 2:15 AM , Anonymous said...

ENGAL OOR TAMILNADU PANAIKKULAM
INGU OOMAL ENBADAI KONDAI ENRU SOLVARGAL POORAN ENBADAI KILANGU MUTTAI ENRU SOLVARGAL