Author: சின்னக்குட்டி
•12:23 PM
இந்த பதிவும் இந்த முற்றத்துக்கு பொருத்தமாக இருக்கிறது என கருதுவதால் இங்கு பிரசுரிக்கிறேன் . இதுவும் ஒரு மீள் பதிவுதான்


சேறும் சகதியாய் இருந்த பகுதி எல்லாம் எண்ணண்டு உருமாற்றம் அடைந்தது தெரியாத மாதிரி வரண்ட மணலாக பரவி கிடக்கு. அந்த அமைதியான காலை பொழுதில் விளக்குமாற்றால் பின் வளவை அப்பம்மா கூட்டும் பொழுது ஆவரோணம் அவகரோணம் ஏற்ற இறக்கம் போல ஒலிக்க வைப்பதற்க்கு உந்த சோழக்காற்று எங்கே இருந்து கொண்டு வந்த மணல் தான் காரணம்.

இந்த வெயில் கொழுத்தக்கை இந்த காலத்தை வசந்த காலம் என்று சொல்லாமாவோ இல்லையோ தெரியாது. ஆனால் இந்த கால மாற்றத்தை வரவேற்கிற மாதிரி குயில்களும் பறவையினங்களும் வீட்டு மூலையிலுள்ள மாமரங்களிலிருந்து கொண்டு தாள கச்சேரி செய்யும் ஓசையினால் இந்த விடிந்து விடியாமல் இருக்கும் பொழுதை இனிமையாக்கிறதை பார்க்கும் பொழுது வசந்த காலம் என்று தான் சொல்ல தோன்றும்.

அப்படி சொல்ல இயலாத மாதிரி சூரியனும் 30 பாகைக்கு மேல ஏற ஏற வெயில் அந்த மாதிரி கொழுத்த வெப்பம் அந்த மாதிரி கக்கும். இந்த ஓட்டு வீடு ஓடும் தானும் கொதிச்சு வெப்பமாகிறது காணாமால் அதை இரட்டிபாக்கி வீட்டுக்குளை செலுத்த புழுங்கிற புழுக்கமிருக்கே உயிரை கொல்லும்.

இந்த பொழுதின் இனிமை இப்படியே இருக்காதே இன்னும் கொஞ்ச நேரத்தில் மாறிடுமே வேதனை படுவதால் இந்த இனிமையை அநுபவிக்காத முட்டாளாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த நினைவுகளை பக்கத்து வீட்டு சுப்பர் கிணத்தடியில் குளிக்கும் குளியல் சத்தம் குழப்பியது.சுப்பர் குளிச்சால் சும்மா குளிக்க மாட்டார் இந்த அமைதியான காலைப்பொழுதை கெடுத்து ஊரை கூட்டி தான் குளிப்பார்.தொங்கி தொங்கி அவர் குளிககிறதிலை துலாக்கயிறிலை கட்டின வாளி கிணத்திலை நாலாம் பக்கதிலை அடிபட்டு படார் கிடார் என்று சத்த போடும். எழும்பாதவயளை கூட எழும்பி விடுவார்.

வேலை வெட்டி ஒன்றுமில்லை என்றாலும் நேரத்துக்கு எழும்பி உந்த அட்டகாசம் எல்லாம் செய்து விட்டு வெய்யில் ஏற ஊருக்கு ஒதுக்கு புறத்தில் இருக்கிற வயல் வெளியில் இந்த வெயிலுக்காக நிழலுக்கு ஒதுங்கிறவையோடையும் படிச்சு போட்டு வேலை இல்லாத பொடியோளையும் ஆடு புலி ஆட்டமோ தாயகட்டை உருட்டி மதியம் திரும்பும் வரை பொழுது போக்குவார்.


பின்னேரத்திலையும் பொழுதை போக்கிறதுக்கு இந்த காலத்திலை அன்ன ஊஞ்சல் கட்டுறவர். இந்த சீசனுக்கு இன்றைக்கு கட்ட தொடங்க போறன் என்று ஆருக்கோ சொல்லி கொண்டிருந்தவர் என்று அப்பம்மா சொல்லிச்சுது. அது தான் இன்றைக்கு இன்னும் உற்சாகம் கூடி அந்த மாதிரி குளிக்கிறார் போலை. அவர் சவர்க்காரம் போடுற சத்தம் ஊத்தை உருட்டுற சத்தம் எல்லாம் எங்களுக்கு கேட்க வேண்டிய தலைவிதி இவருடைய பக்கத்து வீட்டிலிருப்பதால்

உந்த சத்த மட்டுமல்ல அன்ன ஊஞ்சல் மேலை எழும்பும் போது இதில் ஆடுபவர்கள் எழுப்பும ஒலிப்பு இருக்கே சில பேருக்கு சில வேளை மரண ஓலம் போல தோன்றும் இந்த அன்ன ஊஞ்சல் வந்து தனி ஆள் ஆட பின்னுக்கு ஒரு ஆள் தள்ள வழமையான ஊஞ்சல் போன்றில்லை பெரிய பலகையில் நாலுபக்கமும் கயிற்றை இணைத்து உயரமான மரக்கிளையில் கட்டுவார்கள் பலகையின் நடுவில் இருக்ககூடிய ஆட்கள் இருக்க பலகையின் இருபக்கம் இருவர் உச்ச உந்த ஊஞ்சல் மேலும் கீழும் ஆடும்.

எனக்கும் உவையளோட சேர்ந்து அன்ன ஊஞ்சல் ஆட விருப்பம் தான் . எங்கட வீட்டு சனம் விடாது. சனத்தோட சனம் சந்தோசமாக இருக்க தெரியாத இந்த பழமைவாதத்தை பேணும் எங்கட குடும்பத்தை திட்ட தான் தோன்றுது. சொல்லினம் வேணும் என்றால் நீயும் தம்பியும் வீட்டுக்குளை ஆடாம். அன்ன ஊஞ்சலுக்கு இரண்டு பேர் காணாது கன பேர் வேணுமெல்லே...

அப்பம்மா இவ்வளவு நேரம் கூட்டிய குப்பையை தீடிரென வந்த காற்று தூக்கி கொண்டு போய் எங்கையோ குவித்து கொண்டிருந்தது
|
This entry was posted on 12:23 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On August 28, 2009 at 2:12 PM , துபாய் ராஜா said...

நல்லதொரு மீள்பதிவு.

உள்ளத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஊஞ்சல் நினைவுகளை உசுப்பி விட்டீர்கள்.

 
On August 28, 2009 at 4:07 PM , கானா பிரபா said...

பழைய நினைவுக்குள் தள்ளி விட்டீர்கல் சின்னக்குட்டியர். இரண்டு கமுகு மரங்களுக்கு இடையில் தென்னம் மட்டையை கயிற்றால் பிணைத்துக் கட்டும் ஊஞ்சலில் ஆடித் தீர்த்தகாலம் நினைவுக்கு வருகுது.

 
On August 31, 2009 at 10:00 AM , கரவைக்குரல் said...

அன்ன ஊஞ்சல் இது சிவராத்திரி காலங்களில் இரவிரவாக ஆடி அவ்வப்போது பக்திப்பாடல்கள்,மற்றும் பிடித்த பாடல்கள் பாடியபடி கழிந்த் காலங்களை மீண்டும் நினைவுபடுத்திவிடீர்கள் சின்னக்குடியர்

உங்களுக்கு இது மீள்பதிவாக இருந்தாலும் நான் இதை இப்போது தான் வாசித்தேன்,
நன்று
உங்கள் மொழி நடையில் இன்னும் தாருங்கள்

 
On September 4, 2009 at 2:47 AM , வலசு - வேலணை said...

அது ஒரு அழகிய நிலாக்காலம்