Author: Unknown
•8:45 AM
அண்ணையவை, அக்காவை, அப்புமார், ஆச்சிமார் எல்லாருக்கும் ஒண்டு சொல்லிறன். என்னடா இந்தப் பெடியன் எப்ப பாத்தாலும் சாப்பாட்டப் பற்றித்தான் எழுதிறான் எண்டு சொல்லக்கூடாது. சாப்பாட்டுக்காகத் தானே பாருங்கோ எல்லா வேலையும் வெட்டியும். அதால சாப்பாட்டப் பற்றி எழுதிற என்னை நீங்கள் திட்டக்கூடாது... சரியோ!! இப்ப நாங்கள் மிதிவெடி பற்றிக் கதைக்கப் போறம். கொஞ்சப் பேர் என்னடா இந்தப் பொடி சாப்பாட்டப் பற்றிக் கதைக்கிறன் எண்டுட்டு வெடியப் பற்றிக் கதைக்குது எண்டு நினைக்கிறவை கொஞ்சம் பொறுங்கோ.

இஞ்ச பாருங்கோ, நான் ஏ. லெவல் படிக்கேக்க, அப்பரிண்ட காசிலை நல்லா சாப்பிட்டுக் குடிச்சுத் திரிஞ்சனான் பாருங்கோ. அடிக்கடி நாங்கள் போற இடம் 'லவ்லி கூல்பார்' எண்டு நெல்லியடீக்க ஒரு இடம். போனா அண்டைக்கு ஒரே வேட்டைதான். ரோல்ஸ் என்ன, வடை என்ன, சொக்கலேற் கேக் என்ன, ஸ்பெசல் ஐஸ்கிரீம் என்ன, கோக் என்ன, பெப்சி என்ன.... ஒரே வெட்டுத் தான் பாருங்கோ. கடை முதலாளி தொடக்கம், வேலை செய்யிற அண்ணையவை வரை எல்லாருக்கும் எங்களை நல்ல வடிவாத் தெரியும். முதலாளியின்ர மனிசி எங்களுக்கு ‘சாப்பாட்டு ராமன்கள்' எண்டு பேர் வச்சு வேலை செய்யிற பொடியளோட நக்கல் அடிக்கிறவவாம். அவ்வளவுக்கு நாங்கள் பேமஸ் பாருங்கோ. (இதையெல்லாம் பெருமையா சொல்லுது பார் சனி எண்டு நீங்கள் முணுமுணுக்கிறது கேட்குது. கதை சொல்லேக்க உப்பிடி இடஞ்சல் பண்ணக்கூடாது பாருங்கோ)

ஒரு நாள் லவ்லீக்க சாப்பிட்டுக் கொண்டிருக்கேக்க, புதுசா ஒரு சாப்பாட்டுச் சாமான் கொண்டந்து வச்சினம். அது ரோல் மாதிரி இருந்தது பாருங்கோ. ஆனா கொஞ்சம் செவ்வக சேப்பில, ரோலை விட நல்ல பெரிசாக இருந்துது. நாங்கள் அட லவ்லியில பெரிசா ரோல் சுடத் தொடங்கீட்டாங்கள் போல எண்டு ஒரே வெட்டு. அதுக்குள்ள ஆட்டிறைச்சியோட, நல்ல உருளைக்கிழங்கு, ஒரு அரைவாசி அவிச்ச முட்டை எண்டு, சும்மா சொல்லக்கூடாது, ரண்டு திண்டால் வயிறு நிறையும் எண்ட அளவுக்கு இருந்தது. அதுவும் சுடச்சுட நல்ல மொறு மொறுவெண்டு அவையள் கொண்டந்து வைக்க நாங்களும் வெட்டு வெட்டெண்டு வெட்டினம். பில் வரேக்கதான் ஐயோ எண்டு இருந்தது பாருங்கோ. லவ்லியில அப்ப மட்டன் ரோல் 12 ரூவா, இந்தப் புதுச் சாப்பாட்டுச் சாமான் 20 ரூவா. அந்தச் சாப்பாட்டுச் சாமானின்ர பேர் வேற விளங்கேல்ல. பில்லப் பாத்திட்டுத்தான் கேட்டன் 'அண்ணை என்னத்துக்கு 20 ரூவாப் படி கணக்குப் போட்டிருக்கிறியள்?' எண்டு.

அப்பதான் கவுண்டரில நிண்ட அந்த அண்ணை சொன்னார், ‘தம்பி, இதுக்குப் பேர்தான் மிதிவெடி. இண்டைக்குதான் முதன் முதலா எங்கட கடையில போட்டிருக்கிறம்' எண்டு. அண்டைக்குத்தான் பாருங்கோ நான் முதன் முதலாக அந்தப் பேரைக் கேட்டன். அதுக்குப் பிறகு கன இடத்தில கன விதமான ரேஸ்ரில இந்த மிதிவெடிய சாப்பிட்டிருக்கிறன். இஞ்ச கனடாவில உள்ளுக்க றால் எல்லாம் போட்டு நல்லாச் செய்யினம். இந்த மிதிவெடி பற்றிக் கொஞ்சக் கேள்வியள் கேட்கோணும் உங்களிட்ட;
  • இந்த உணவுப் பண்டத்தை முதன் முதலில் யார், எப்போது, எங்கே அறிமுகம் செய்தார்கள்?
  • 2000ம் ஆண்டுக்கு முன்னர் இந்தப் பதார்த்தம் எங்கள் கடைகளில் விற்கப்பட்டதா?
  • எந்தெந்தப் புலம் பெயர்ந்த நாடுகளில் இந்தப் பதார்த்தம் கிடைக்கிறது? ஏனென்றால் கனடாவில் இந்தப் பதார்த்தம் பற்றித் தெரியாத பலர் இருக்கிறார்கள். முதன் முதலில் இது பற்றிக் கேள்விப்படுவோர் தேடிப்போய் வாங்குகிறார்கள்.
  • இப்போது ஆரம்ப, மத்திம, கடைநிலை இருபதுகளிலும், முப்பதுகளின் ஆரம்பத்திலும் இருக்கும் நண்பர்கள் தவிர மற்றவர்கள் உங்களின் இளவயதில் இந்தப் பதார்த்தம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
  • நான் 2005ன் பிற்பகுதியில் கொழும்பில் வாழ்ந்த போது இது பெரியளவில் அங்கே கிடைக்கவில்லை. கொழும்பிலும் இது கிடைக்கிறதா?
ஆர் என்ன வேணுமெண்டாலும் சொல்லுங்கோ... எங்கட ஈழத் தமிழ் ஆக்களோட ஒருதரும் பகிடி விடேலாது. நாங்கள் ஆர்... சிம்பிளா சாப்பாட்டுக் கடையில போய் மிதிவெடி கேட்டு வாங்கிவாற ஆக்களெல்லே.....
This entry was posted on 8:45 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

13 comments:

On August 22, 2009 at 8:58 PM , Jerry Eshananda said...

படிக்கவும், கேட்கவும் இனிக்குதடா, ஈழ தமிழ்.

 
On August 22, 2009 at 9:30 PM , ஈழநாதன்(Eelanathan) said...

கிருத்திகன்.இம்மாதிரியான பதிவுகள் தாம் வலைப்பதிவுலகில் உங்களை அடையாளப்படுத்தும்.பெயரிலி சொல்லும் சுயம் இதுதான் என்று விளங்கிக் கொண்டிருப்பீர்கள்.தொடர்ந்து பதிவெழுதவும்

 
On August 22, 2009 at 9:41 PM , வர்மா said...

மிதிவெடி எண்டால் சனம் எல்லாம் பயப்படுகுது. நீங்கள் அதை சாப்பாட்டுசாமானாக்கிப்போட்டியள்.
அன்புடன்
வர்மா

 
On August 22, 2009 at 10:35 PM , கானா பிரபா said...

வணக்கம் ஈழநாதன்

கிருத்திகன் போன்ற இளையவர்கள் வலைப்பதிவில் தங்கள் சிறப்பான பங்களிப்பை வழங்க முடியும் என்பதில் ஐயமில்லை, அதற்கு செய்ய வேண்டியது முறையாக அவர்களை நெறிப்படுத்துவது தான். சிலர் செய்வது கேவலமான வார்த்தைப் பிரயோகமும் உன் தலையில் குண்டு போட்டால் என்ன என்ற ரீதியில் தமது மன வக்கிரத்தைக் காட்டி கிருத்திகன் போன்றவர்களை வலையுலகில் இருந்து விரட்டி அடிப்பது தான். மீட்டர் முருகேசன் காலத்தில் இருந்து இது தொடர்கின்றது.

கிருத்திகனின் பனை குறித்த பதிவையும் பாருங்கள் அவரின் எழுத்தாற்றலைப் புரிந்து கொள்வீர்கள்.

 
On August 22, 2009 at 11:01 PM , Unknown said...

நன்றி ஜெரி ஈசானந்தா...

ஈழநாதன் அண்ணா மற்றும் கானா பிரபா அண்ணா... அக்கறைக்கும் நெறிப்படுத்தலுக்கும் நன்றி.... ஆனால் ஈழத்து முற்றத்தில் இது வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து..என்னுடைய தனிப்பட்ட பக்கத்தில் இதுபற்றிக் கதைப்போமா?

வர்மா... அதுதான் சொன்னனான் பாத்தியளோ... எங்கட ஆக்களை அசைக்க முடியாது

 
On August 23, 2009 at 1:01 AM , சயந்தன் said...

ஆனைக்கோட்டை சும்மா ரீ றூமில இரு 95 களில இருந்திருக்கவேணும்.. வன்னியில தாராளமாக இருந்தது. சமாதான காலத்திலும் வன்னியில இருந்தது..

இப்பவும் வன்னியில மிதிவெடிகள் இருக்கின்றன.

 
On August 23, 2009 at 5:10 AM , Unknown said...

ஆனா சயந்தன்... 90களிலும் அதற்கு முன்னரும் யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் வாழ்ந்த பலருக்கு மிதிவெடி பற்றித் தெரியாமல் இருந்தது ஏனெண்டு விளங்கேல்ல (சாப்பிடிற மிதிவெடி அண்ணோய்)

 
On August 24, 2009 at 1:07 PM , வி. ஜெ. சந்திரன் said...

மிதிவெடி பெயர் கேள்விப்பட்டுள்ளேன், பார்த்துள்ளேன், ஆனால் சாப்பிட்டதில்லை. அதன் விசேசமே அவித்த பாதி முட்டை உள் இருக்கும் என்பது தான்.

 
On August 24, 2009 at 1:45 PM , Unknown said...

சந்திரன் அண்ணை... சில கடையள்ள முழு முட்டையே வைக்கிறவை

 
On August 24, 2009 at 2:18 PM , அருண்மொழிவர்மன் said...

கிருத்திகன் சயந்தன் சொன்னதுமாதிரி, ஆனைக்கோட்டை சும்மா ரீ ரூமில் நான் 92ன் இறுதி அல்லது 93ன் ஆரம்பத்திலேயே மிதிவெடியை சாப்பிட்டிருக்கின்றேன்.

அது மிகவும் ருசியாக, கணவாய் போன்ற கடலுணவுகளும் நிரம்பியதாக இருக்கும்.

கனடாவிலேயே 200ல் கிடைக்கத் தொடங்கிவிட்டது.

அது போல, சும்மா ரீ ரூமில் மித்வெடி கிடைத்த தே காலத்திலேயே மானிப்பய் குலம் க்றீம் ஹவுஸ் (முன்னர் மல்லிகா க்றீம் ஹவுஸ்) ல் ஸ்பெஷல் கட்லட் என்ற பெயரில் அவித்த அரை முட்டை, நிறாஇய மீன், மற்றும் இறைச்சி சேர்த்து செய்திருப்பார்கள். இது 92ன் தொடக்கத்திலேயே தொடங்கிவிட்டார்கள்.

சிலவேளை இது கூட மிதிவெடியின் முன்னோடியாக இருக்கலாம்

 
On August 25, 2009 at 8:06 PM , Unknown said...

அருண்மொழிவர்மன்... கனடாவில எனக்குத் தெரிஞ்சு ஒரு பதினஞ்சு குடும்பத்துக்கு மிதிவெடிய நான் தான் அறிமுகப்படுத்தின்னான்... அதுதான் பெரிசா ஆக்களுக்குத் தெரியாதோ என்று நினைத்தேன்

 
On November 10, 2009 at 10:51 AM , Anonymous said...

மிதிவெடி இயக்க கடைகளில் தான் முதலில் விற்கத் தொடங்கினார்கள். அதுவும் யாழ் இடப் பெயர்வுக்குப் பிறகு.. 97ல் தான் அறிமுகமானது வன்னியில். நீங்கள் சொல்லுற குண்டு கட்லட் யாழ்ப்பாணத்திலேயே விற்கத்தொடங்கினார்கள். நீள்சதுர வடிவ ரோல்ஸ் தான் மிதிவெடி.. ஓம் ஓம். சிலர் முழு முட்டையையே வைப்பார்கள். புதுக்குடியிருப்பு சேரனில் நல்ல மிதிவெடி கிடைத்தது. அது ஒரு காலம்... ஹீம்..

 
On December 26, 2011 at 1:24 AM , Jude S Mahendren said...

உணவுப்பண்டமும், தயாரிப்புமுறையும் முன்னரே இருந்திருக்கலாம். ஆனால் இப்பெயர் பெற்ற வரலாறு தான் ஆராயப்படவேண்டியது.

ஈழப்போர் வரலாற்றில் பல பொதுப்பெயர்கள் இராணுவ உபகரணங்களுக்கும், இராணும் சார்ந்த பெயர்கள் சாதாரண பொருட்களுக்கும் பயன்படுத்தப்பட்டது. மேலும் தமிழர் தம் வாயால் உச்சரிக்கமுடியாமை காரணமாகவும், தன்னாட்டுமயப்படுத்தும் நோக்கிலும் (கடைசி பெயரில் மட்டுமாவது!) தமது பெயர்களை சூட்டுவது உண்டு. அவ்ரோ குண்டுவீச்சு விமானத்திற்கு சகடை எனவும், உலங்கு வானூர்திக்கு தும்பி எனவும் பல பெயரிடப்பட்டு பொதுபயன்பாட்டிலும் இருந்தது.

இவ்வகை அரு மரபில் தான் மிதிவெடி உணவும் வந்திருக்கலாம் என கருதுகின்றேன். மிதிவெடி அபாயத்தை உணர்த்துவிக்க எவரேனும் இதனை தொடங்கியிருக்கலாம். அல்லது வியாபார உத்தியாகவும் இது ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம்....