Author: சினேகிதி
•10:05 AM
பிரபாண்ணா ஒரே திருவிழா, சாமி, பக்தி , வரலாறு , என்டு எண்டு எழுதித்தள்ளுறார் :) என்னென்டுதான் இப்பிடி பக்கம் பக்கமா எழுத முடியுதோ :) சோடா குடிச்சு குடிச்சு எழுதுவாரோ?? இதெல்லாம் மனசில இருந்து எழுதிறீங்கிளோ இல்லாட்டா நீங்கள் அவுஸிக்கு கொண்டு வந்தது புத்தகங்கள் மட்டுமோ.

எனக்கு திருவிழா எண்டால் ஞாபகம் வாறது ஐஸ்கிறீம், கச்சான் ,மஞ்சள் கடலை , அப்பளம், தெருக்கூத்து ,சிறீதேவின்ர வில்லுப்பாட்டு சின்னமணின்ர வில்லுப்பாட்டு மற்றும் சத்தியவான் சாவித்திரி ஆ மற்றது முக்கியமா அன்னதானம் இன்னும் சிலது எழுதிக் கொண்டுபோகேக்க ஞாபகம் வரும்.

அதென்னவோ தெரியேல்ல நாங்கள் எங்க போனாலும் எங்கட வீட்டுக்குக்கிட்ட ஒரு கோயிலிருக்கும். எங்கட வீட்டுக்கு முன்னாலயே குமிழடிப்பிள்ளையார் என்டொரு குட்டிக்கோயிலிருக்கு ஆனால் அங்க திருவிழா என்டு பெரிசா ஏதும் நடக்கிறேல்ல ஆனால் அலங்காரத்திருவிழா என்டு ஒன்டு நடக்கும் வருசா வருசம்.பருத்தித்துறைல நேவி அடிக்கிறான் என்டு சொல்லி கொஞ்சக்காலம் அய்யா ஆக்கள் எங்கட வீட்டில இருந்தவை அதால நாங்கள் கோயில்ல குழப்படி செய்தாலும் பெரிசா யாரும் திட்டமாட்டினம் ஆனால் நாங்கள் உபத்திரவம் மட்டுமில்ல உதவியும் செய்யிறநாங்கள். ஆக்கள் ஏறத்தயங்கிற மரங்களிலல கூட நாங்கள் ஏறிப் பூ ஆய்ஞ்சு குடுப்பம். பொன்னொச்சி மரம் சின்ன மரம் அது எல்லாரையும் தாங்காது :) நாங்கள் பூ ஆயிற தடியில (b)பாக் கொழுவி மரத்தில சாய்ச்சுவிட்டிட்டு பூ ஆய்வம். ஆனால் உண்மை சொல்றன் 2-3 தரம் கொப்பு முறிஞ்சிருக்கு :) மற்றது தேமா மரம்...அதைப்போல ஏறுறதுக்கு சுகமான மரம் வேற ஒன்டுமில்ல. நாங்கள் ஏறிப் படுத்திருந்துகொண்டு கூடப் பூ ஆயலாம் அவ்வளவு நல்ல மரமது.எவ்வளவு பேர் ஏறினாலும் அடிச்சாலும் துள்ளினாலும் தாங்கும். இவை தவிர கோயிலெல்லாம் கூட்டித் துப்பரவு செய்வம். கோயில்ல திருவிழா என்டால் அந்தச்சாக்கிலதான் ஊரே துப்பரவாகும். ஊரில இருக்கிற எல்லாப் பெடி பெட்டையளும் தெருவில தான். கோயில் மதில்ல இருந்து எல்லாம் சுத்தமாகும். எல்லாத்தெருவிலயும் புல்லுப்பிடுங்கி மண்போட்டு கல்லுப்போட்டு திருவிழாக்கு முதல் ஒரு வழி பண்ணிப்போடுவம்.இப்பிடியான வேலை நடக்கிற நேரத்தில கோயிலுக்கு முன்னால இருக்கிற கடையில இருந்து பணிஸ் சோடா எல்லாம் சும்மா கிடைக்கும் :)

அதுக்கப்புறம் திருவிழா தொடங்கினாப்பிறகு நடக்கிற " அகிலாண்ட கோடி பிரம்ம்மாண்ட நாயகி.....லோபாநாயத நம்பேத " (பிழை பிழையா சொல்றன்) இதெல்லாம் boring. இதெல்லாம் முடிய அன்னதானம் நடக்கும். பூசணிக்காய் தோலோடயே இருக்கும். தக்காளிப்பழம் கத்தரிக்காய் முழை வெட்டாமல் எல்லாம் வரும் ஆனால் அந்தச்சாம்பாரைப்போல ஒரு சாம்பார் நான் வேற எங்கயும் சாப்பிட்டதில்ல. அதை மாதிரி உப்பில ஊறவைக்காமல் செத்தல்மிளகாய் பொரிப்பினம் ஐயோ ஆவ். அதே மாதிரி தீபாவளி நேரத்தில தோசை தருவினம் அதும் நல்லாயிருக்கும். என்னவோ ஒரு நாளில புட்டுத்தாறவை.

மற்றக் கோயில் வேவிலந்தை முத்துமாரி அம்மன் கோயில்.அங்க 15 நாள் திருவிழா என்டு நினைக்கிறன் (இல்லாட்டா 25 ஓ தெரியா). அந்தப் 15 நாளும் நல்ல கொண்டாட்டம்தான். திருவிழாக்கெண்டு வீட்ட வந்து நிக்கிறாக்கள் முதற்கொண்டு தாத்தா, சித்தப்பா ,பெரியப்பாமார், மாமாமார் என்டு எல்லாரும் காசு தருவினம். ஒரு நாள் நான் அவாப்பட்டு ஒரே நாளில 9 ஐஸ்கிறீம் குடிச்சிருக்கிறன் அதுக்கப்புறம் உடனடியா என்ன நடந்து என்டு நான் சொல்லத்தேவையில்ல அதனால என்னட்ட இருந்த காசுக்குக் கணக்கு காட்டி வேண்டிய நிலை வந்திட்டு. ஐஸ்கிறீம் வானெல்லாம் கோயிலுக்குக் கொஞ்சம் தள்ளி வாசகசாலைக்கு முன்னாலதான் நிக்கும் அங்க ஒளிச்சு நின்டு குடிக்கலாம் ஆனால் போட்டுக்குடுக்க என்டு கூடப்பிறந்ததில இருந்து எவ்வளவு பேர் இருக்குதுகள் :(. பெரிசுகள் கூட இந்த வேலை செய்யுங்கள். அடி பிள்ளை உன்ர 2வது எப்ப பார்த்தாலும் ஐஸ்கிறீமோட திரியுது:(.

எனக்குப்பிடிச்ச திருவிழா பூங்காவனம். கோயிலுக்கு வெளில கொட்டில் போட்டு முழுக்க முழுக்க பச்சை இலைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஊஞ்சல் பாட்டெல்லாம் எல்லாம் பாடி அம்மனை ஊஞ்சல்ல வச்சு ஆட்டுறது. சாமரம் வீசச்சொல்லி விடுவினம். நான் நினைக்கிறன் இதான் அம்மன்ர சாமத்தியவீடென்டு (?). எல்லாத்தையும் விட முக்கியமான விசயம் கோயிலுக்குள்ள சனம் நிரம்பி எப்பவும் கச கச என்டிருக்கும் ஆனால் இந்தக் கொட்டில அப்பிடியொரு குளிர்ச்சியிருக்கும்.அதுக்கயே இருகக்கோணும் போல ஆசையா இருக்கும். பிறகு இரவு வில்லுப்பாட்டு இல்லாட்ட ஒரு கோஸ்டி வந்துப் பாட்டு பாடுவினம்.

சிறீதேவின்ர வில்லுப்பாட்டு கேக்க எனக்கு சரியான விருப்பம். அவர் இப்ப இங்கதான் இருக்கிறார் கனடாவில ஆனால் வடிவில்லாமல் போட்டார் :( (மின்சாரக்கண்ணா உன் ஸ்ரைலும் அழகும் குறைஞ்சிட்டு.). சின்னப்பிள்ளையள் முதல் வரிசையில இருக்கிறது. அவர் கண்ணால எல்லாம் கதை சொல்லுவார். முன்னால இருக்கிற ஆச்சியைப்பார்த்து நக்கலடிப்பார். பாட்டுப் பாடுற ஆக்கள்...நல்ல பாட்டெல்லாம் பாடுவினம். எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிற பாட்டுகள் கிங்ஸ்லி என்டொரு அண்ணா பச்சைமலைப்பூவு நீ உச்சிமலைத்தேனு அந்தப்பாட்டு நல்லாப்படிப்பார். அதே மாதிரி ஜானகி புனிதகுமாரி என்டு 2 அக்காமார் அவையும் நல்ல பாட்டுக்காரர். நான் ரசிச்சு கேட்டதென்டா " எப்பா ஞானம் சீதாவாக் காணம் பொழுது விடியப்போகப்போது மானம்" அந்த வயசில அர்தமும் விளங்காது ஒரு மண்ணும் தெரியாது இசையும் அவர்கள் இலகுவாகப் பாடும் அலாதியும் ரொம்பப் பிடிக்கும். அதே போல சொந்தக்காரர் ஒராள் பாடுவார் " பாவாடை தாவணியில் பார்த்த உருவமோ" அவற்ற மனிசி பக்கத்தில இருந்தா சிரிப்பா நாங்கள் அவாவைப்பார்த்து சிரிப்பம்.

மற்றது தேர்த்திருவிழா. தேர் சுத்தி வந்து பச்சை சாத்திறதெண்டு சொல்லுவினம். பச்சை சாறி கட்டி பச்சைக்குங்குமம் வச்சு அம்மாளாச்சி வடிவாத்தானிருப்பா ஆனால் சரியான சனம் பார்க்கவே கிடைக்காது சில நேரம். வேட்டைத்திருவிழா பிறகு தீர்த்தத் திருவிழா எல்லாம் நல்லா இருக்கும். வேட்டைத்திருவிழாவுக்கு இன்னொரு கோயில்ல போய் அம்மன் சண்டைபிடிச்சிட்டு திரும்பி வருவா. தீர்த்தமாட பருத்துறைக்கடலுக்குப் போறது. ரக்டர் சிலநேரம் சித்தப்பா ஓடுவார் அப்ப நடந்து போக கால் நோகுதெண்டுபோட்டு ஏறிப்போகலாம் சிலநேரம். பிறகு தீர்த்தமாடி முடிய திரும்ப வரேக்க வழியில இருக்கிற எல்லாக்கோயில்ல இருந்தும் காவடிகள் வந்து சேருவினம். அப்பா ஒருமுறை காவடியெடுத்தவர். குத்தவேண்டாம் குத்தவேண்டாம் என்டு அழுதுபோட்டுப் பிறகு குன்றத்தில குமரனுக்குக் கொண்டாட்டம் என்டு பாட்டுப்போட மற்றாக்கள் எல்லாம் நல்லா ஆட அப்பாவப்போட்டு நீங்களும் அப்பிடி ஆடுங்கோ என்டு ஆக்கினைப்படுத்தி பக்கத்தில நிண்ட சித்தப்பாட்டட நுள்ளு வேண்டி ம் ம்.

மற்றது அம்மம்மா வீட்டுக்கிட்ட இருக்கிறது மாலுசந்திப்பிள்ளையார் கோவில். அங்கயும் திருவிழாக்குப் போவம். அங்கதான் சின்னமணின்ர வில்லுப்பாட்டு பார்த்திருக்கிறன். சத்தியவான் சாவித்திரி நாடகமும்.பிறகு அதே கோயில் முற்றத்தில ஆமிக்காரன்ர கடையில ஏதோ வேண்டப்போய் லைன்ல நிக்கேக்க கண்ணெல்லாம் கரிக்கும். எப்பிடியிருந்தம் இப்பிடி ஆகிட்டமே எண்டு.

அதே போல மாத்தளை முத்துமாரி அம்மன் கோவில் திருவிழாக்காலங்கள் மறக்க முடியாதவை. எங்கட கடை கோயில் வாசல்ல. கடைக்கு மேல பல்கனில நிண்டு பார்த்தால் கோயில் வசந்தமண்டபமே தெரியும் ஆனால் ஒரு பிரச்சனை எங்கட பல்கனியை சிரச ரீவி சக்தி ரீவியெல்லாம் குத்தகைக்கெடுத்திருப்பினம் அவையில்லாத நேரம்தான் நாங்கள் புதினம் பார்க்கிறது. அதை விட அங்கயிருக்கிற பிள்ளைத்தாச்சியள் வேற அங்க வந்து உக்காந்திருப்பினம் அவைக்குத்தான் முதலிடம்.

ஊர்க்கோயில் திருவிழாக்களில இருந்து மாறுபட்டதெண்டால் கோயிலுக்குப் போகும்போது வைக்கிற மல்லிகைச்சரம். திருவிழா தொடங்கமுதல் கேக்காமலே பெரியம்மா வடிவான முழுப்பாவாடை சட்டையெல்லாம் தச்சுத்தருவா. அது சரசரக்க மல்லிகைப் பூவாஞ்சு தலைநிறைய சரம் வைச்சுக்கொண்டு கோயிலுக்குப்போறது ஒரு வரம்தான். கனடால வருசத்துக்கொருமுறை கோயிலுக்குப்போனாக்கூட அந்த உற்சாகம் வாறதில்ல. அதும் மாத்தளையில எங்கட அறநெறிப்பாடசாலையால ஒரு இசைக்கச்சேரி வைப்பம் அதெல்லாம் ஒரு காலம். இன்னொரு விசேசம் கோயிலைச்சுத்தி முஸ்லிம்கள் சிங்களவர் என்று எல்லா இன மக்களும் இருப்பார்கள். திருவிழாக்காலத்தில் கண்ணுக்கெட்டாத தூரம் வரைக்கும் ஊருப்பட்ட கடைகள் முளைக்கும். இன மத பேதமின்றி எல்லா இன மக்களும் கடைவிரிப்பார்கள். தீவிர மதவாதிகள் அல்லாதவர்கள் வேறு விதங்களிலும் திருவிழாவில் பங்கேற்பார்கள். வீட்டுக்குத்தெரியாமல் கோயிலுக்கு வாற முஸ்லிம் நண்பர்களும் இருக்கிறார்கள். தேர்த்திருவிழாவில் 5 தேரிழுப்பார்கள். விடிய வெளிக்கிட்டால் எங்கங்கயோ எல்லாம் போய் பின்னேரம்தான் தேரடிக்கு வரும். தேரில சிலநேரம் சிங்கள இளைஞர்கள் கூட தமிழ்க்கதைச்சுக்கொண்டிருப்பார்கள். திருவிழா நேரம் மச்சான் மச்சான் என்டுபோட்டு பிறகு தியேட்டர்ல சண்டை வந்த உடன எங்கிருந்தோ இந்து, முஸ்லிம், சிங்களம் என்று பிரிந்துபோய் நிக்கிறதுமுண்டு.

மற்றதொரு முக்கியமான விசயம் இந்தத்திருவிழா நேரத்தில சில திருகுதாளங்களும் நடக்கிறதுண்டு. திருவிழா நேரம் சாமம் சாமமாக் கூட பூசை நடக்கும் நிகழ்ச்சிகள் நடக்கும் பிள்ளை எங்க எண்டு தெரியாது பெற்றோருக்கு. முதலாவது திருவிழால காதல் தொடங்கி 25வது திருவிழாவில கல்யாணமே நடந்திருக்கும். அதுக்குப்பிறகுதான் கதை வரும் ஆர் ஆரோட ஓடிட்டினம் என்டு:).

நான் என்ன கதையே சொல்றன் ஆவெண்டுகொண்டு நிக்கிறீங்கள்? இனி நீங்கள்தான் சொல்லோணும்.
This entry was posted on 10:05 AM and is filed under , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

14 comments:

On August 1, 2009 at 10:10 AM , வி. ஜெ. சந்திரன் said...

//என்னவோ ஒரு நாளில புட்டுத்தாறவை.//

திருவெம்பாவை புட்டுக்கு மண்சுமந்த கதை நாளிலை

 
On August 1, 2009 at 11:28 AM , soorya said...

வாயைப்பிளந்து ஆ வெண்டு ரசிச்ச பதிவிலை இதுவுமொண்டு.
..
ஈற்றில் பெருமூச்சொன்று என்னையுமறியாமல் வந்து போனது சிநேகிதி.......!
எவ்வளவற்றை இழந்து விட்டோம்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....
நன்றி.

 
On August 1, 2009 at 12:07 PM , வந்தியத்தேவன் said...

அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன் 15 நாள் தான். இப்போ திருவிழா நடந்துகொண்டிருக்கிறது. செய்வாக்கிழமை தேர். புதன்கிழமை தீர்த்தம்.

 
On August 1, 2009 at 12:12 PM , வந்தியத்தேவன் said...

// நான் நினைக்கிறன் இதான் அம்மன்ர சாமத்தியவீடென்டு (?).//

அது ஆடிப்பூரம். முத்துமாரியில் மிக அழகாகச் செய்வார்கள்.

//மற்றதொரு முக்கியமான விசயம் இந்தத்திருவிழா நேரத்தில சில திருகுதாளங்களும் நடக்கிறதுண்டு. திருவிழா நேரம் சாமம் சாமமாக் கூட பூசை நடக்கும் நிகழ்ச்சிகள் நடக்கும் பிள்ளை எங்க எண்டு தெரியாது பெற்றோருக்கு. முதலாவது திருவிழால காதல் தொடங்கி 25வது திருவிழாவில கல்யாணமே நடந்திருக்கும். அதுக்குப்பிறகுதான் கதை வரும் ஆர் ஆரோட ஓடிட்டினம் என்டு:). //

இது உண்மை. நித்திரை வருது அதனாலை நாளைக்கு வாறன், திருவிழா கோஷ்டி வில்லுப்பாட்டு கதைகளோடு.

 
On August 1, 2009 at 12:30 PM , சினேகிதி said...

\\திருவெம்பாவை புட்டுக்கு மண்சுமந்த கதை நாளிலை\\

ம் அதுக்கெண்டுதான் நினைக்கிறன். பயறு பருப்பெல்லாம் இருக்கும் அந்தப்புட்டில இனிப்புத்தன்மையிருக்கும்.

 
On August 1, 2009 at 12:33 PM , சினேகிதி said...

\\அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன் 15 நாள் தான். இப்போ திருவிழா நடந்துகொண்டிருக்கிறது. செய்வாக்கிழமை தேர். புதன்கிழமை தீர்த்தம்.

\\

ஓ...ம் நானும் 15 என்றுதான் நினைத்தேன் ஆனால் சரியா ஞாபகமில்லை.

 
On August 1, 2009 at 12:35 PM , சினேகிதி said...

\\வாயைப்பிளந்து ஆ வெண்டு ரசிச்ச பதிவிலை இதுவுமொண்டு.
..
ஈற்றில் பெருமூச்சொன்று என்னையுமறியாமல் வந்து போனது சிநேகிதி.......!
எவ்வளவற்றை இழந்து விட்டோம்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....
நன்றி\\

நிறையவே மிஸ் பண்றம் ஆனால் இழந்து விட்டோம் என்று சொல்ல முடியாது. ஊருக்குப்போகும்போது குழந்தைபோல சுத்தியிருக்கிற சுகத்தை அனுபவிக்கிற மனசிருந்தாக் காணும் :)

 
On August 1, 2009 at 1:12 PM , வந்தியத்தேவன் said...

சினேகிதி நீங்கள் குமுழடி என்றால் டொக்டர் வேலும்மயிலைத் தெரியுமோ? நடராசா மாஸ்டர்(தமிழ்) உங்கள் அயலவர் என நினைக்கின்றேன். அவரின் மகள் என்னுடன் படித்தவர்.

 
On August 1, 2009 at 2:15 PM , சினேகிதி said...

\\சினேகிதி நீங்கள் குமுழடி என்றால் டொக்டர் வேலும்மயிலைத் தெரியுமோ? நடராசா மாஸ்டர்(தமிழ்) உங்கள் அயலவர் என நினைக்கின்றேன். அவரின் மகள் என்னுடன் படித்தவர்.\\

ம் நீங்கள் சொன்ன எல்லாரையும் தெரியும். அவருக்கு 2 மகள்கள் 1 மகன். அவை இதை வாசிக்கக்கூடும்.

 
On August 1, 2009 at 5:21 PM , கானா பிரபா said...

என்னய வச்சு காமடி கீமடி ஒண்ணும் பண்ணலியே ;-)

அருமையான ஞாபகங்கள், இடம் வேற எண்டாலும் உங்கட இரைமீட்டலில் என் ஊர் ஞாபகமும் வந்தது.

//சிறீதேவின்ர வில்லுப்பாட்டு கேக்க எனக்கு சரியான விருப்பம்.//

ஓ அவர் இப்ப கனடாவிலா, அருமையான ஒரு கலைஞன்.

 
On August 1, 2009 at 8:33 PM , சினேகிதி said...

\\என்னய வச்சு காமடி கீமடி ஒண்ணும் பண்ணலியே ;-)\\

அருமையா எப்பிடி இப்பிடி எழுதிறீரு (சாலமன் பாப்பையா)


//சிறீதேவின்ர வில்லுப்பாட்டு கேக்க எனக்கு சரியான விருப்பம்.//

ஓ அவர் இப்ப கனடாவிலா, அருமையான ஒரு கலைஞன்.\\

ம் இங்கதான் இருக்கிறார். இங்கும் வில்லுப்பாட்டு செய்தவர் என்று கேள்விப்பட்டன்.

 
On August 2, 2009 at 4:30 AM , மணிமேகலா said...

திருவிழா களை கட்டுதடி பிள்ள.

 
On August 2, 2009 at 4:49 AM , மணிமேகலா said...

பிள்ள,

திருவிழாவுக்குக் காப்புக் கடை, மாலை கடை,பாத்திரக் கடை,பாய் கடை,குளிர் பானக் கடை,பலூன் காரர் எண்டு ஒண்டும் உங்கட ஊருக்கு வாறேல்லையோ?

 
On August 2, 2009 at 7:02 AM , சினேகிதி said...

வாண ஆச்சி எங்க போனியள் காணேல்ல கொஞ்சநாளா :)

காப்புச் சோப்பு சீப்பு இல்லாமல் திருவிழா நடக்கிறதோ:-) அதைப்பற்றி தனிய எழுதுவம் என்று நினைச்சன்.