Author: யசோதா.பத்மநாதன்
•5:57 PM
கோவியாதைங்கோ பிள்ளையள்!எல்லாரும் உதில ஒருக்கா இருங்கோ சொல்லுறன்.

உங்களுக்கு நான் இண்டைக்கு ஒரு கதை சொல்லப் போறன். ஓலப் பெட்டி பின்னிற மாதிரி நாங்கள் முந்திப் புழங்கின கொஞ்சச் சொல்லுகள வச்சு ஒரு சம்பவம் பின்னியிருக்கிறன்.அந்தக் காலத்தில இப்பிடித் தான் நாங்கள் தமிழ் கதைச்சனாங்கள்.எங்க நீங்கள் அதின்ர கருத்தச் சொல்லுங்கோ பாப்பம்!


********************************* ******************************


ஞாட்புக்கு முற்பட்ட காலம் அது!

18ம் நூற்றாண்டு!!

சாளரத்தைத் திறந்து வெளியே பார்த்தாள் சந்தனா.அது ஓர் அதிகாலைப் பொழுது! மழை பெய்து ஈரலிப்பாக இருந்தது நிலம்.சில் என்ற குளிர்காற்று முகத்தில் வீசியது.தோட்டப் புறம் நிலவொளியில் மங்கலாய்த் தெரிந்தது.கிணற்றங்கரையை அண்டிய வெளியில் செம்மண் பூமியில் செழிப்பாய் வளர்ந்திருந்த துவர்க்காய் மரங்களும் கிஞ்சுகத்தில் படர்ந்திருந்த தாம்பூலவல்லிக் கொடிகளும் அதற்கருகாக அமைந்திருந்த காரவல்லிப் பந்தலும் கண்களுக்கு மங்கலாய்த் தெரிந்தன.தூரத்தே கொஞ்சம் புற்பதிகள் அசைவதையும் கண்கள் கண்டு கொண்டன.நேரம் அண்னளவாக 4.45 மணி இருக்கும் போலத் தோன்றியது.கீழ் திசையில் ஒரு பிரகாச நட்சத்திரம்.

புழைக்கடைக் கதவைத் திறந்து வெளியே வந்தாள் சந்தனா.வாய்க்காலும் வரம்புகளும் மரங்களுமான பெரிய வளவு அது.அங்கே வத்சலையும் வந்சமும் நின்றிருப்பது தெரிந்தது.முன்னொரு காலத்தில் பகடுகளும்,மேதிகளும், குரச்சைகளின் ஒலியுமாக இந்த இடம் களை கட்டி இருக்கும் என அறிந்திருந்தாள் அவள்.அவை எல்லாம் அழிந்து போய் இன்று அந்த இடத்தை வத்சலை நிரப்பி இருக்கிறது.

கிணற்றங்கரை நோக்கி விரைந்தாள் அவள்.அது சற்றே தொலைவு.கபோதம் ஒன்று விழித்துக் கொண்டு சிறகடித்தது.மண்டூகம் ஒன்று தூரமாய்க் கத்துவது காதில் வந்து விழுகிறது.அதற்கு,நேற்றய மழை தந்த குதூகலம் போலும்! மண்நிலம் மழையினால் கழுவுண்டு ஓலைகளையும் குப்பைகளையும் ஒரு புறமாய் ஒதுக்கி அவள் நடந்து போக வழி சமைத்திருந்தது. செம்பட்டுக் கம்பளம் போல நடைபாதை.தூரத்தே கச்சோதம் வெளிச்சத்தைச் சிந்தி சிந்தி மறைவதும் கண்ணுக்குத் தெரிகிறது.கடவுள் வழிகாட்டுகிறாரோ? அதிகாலைப் பொழுதுகள் அழகானவை; அலங்காரமானவை.மழையினால் கழுவுண்டு விடிகின்ற பொழுதுகள் இன்னும் அம்சமானவை.

உள்ளங்கால் ஈரம் உணர சில்லென வீசிய குளிர்காற்று முகத்தை வருடிச் சென்றது.சிமிக்கிகளைப் போல மந்தாரப் பூக்கள் பாதையின் இரு மருங்கும் தொங்கியிருக்க அவைகளுக்குள் சிற்சில சுரும்பும் கேசவமும் சிறகடிக்கும் ரீங்காரமும் காதில் விழுகிறது.கோகிலத்தின் குரலும் தூரமாய் கேட்கிறது.உடனே சந்தனாவுக்கு அவந்திகையின் நினைவு எழுந்தது.அண்மைக்கால சினேகிதமாய் அவளோடு ஒட்டி உறவாடும் உறவது.கசனத்தைக் கண்டு நேற்று அவள் தந்தை தன் பயணத்தை நிறுத்திச் சற்றே தாமதமாய் புறப்பட்டது அவளுக்கு ஏனோ சட்டென்று நினைவு வந்தது.ஏன் தந்தை இன்னும் சகுனங்களில் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது தான் இன்னும் அவளுக்குப் புரியாத புதிர்.

ஓர் இளவரசியைப் போல இவற்றை எல்லாம் கண்டும் கேட்டும் உணர்ந்தவாறும் நடந்து சென்று கிணற்றில் தண்ணீரை முகர்ந்து தன் மீது விரைவாக ஊற்றித் தன்னை உவளித்து உலர்த்திக் கொண்டு வீட்டுக்குள் வந்து சேர்ந்தாள் சந்தனா.இனி அவள் தாமதிக்கக் கூடாது.அவள் நவநீத நிறம்.வலப்புற சூழி கொண்ட குந்தளம்.கங்கதம் கொண்டு அதனைச் சீர் செய்து கொண்டாள்.அருகிலே இருந்த படிமக்கலத்தின் உதவியோடு அங்கராகம் இட்டுக் கொண்டாள்.மாலதியும் மெளவலும் நினைவுக்கு வர அவையும் அங்கு அரங்கேறின.



படிமக்கலத்தின் முன்னால் உள்ள முக்காலியில் உட்கார்ந்து கொண்டாள்.அந்த யெளவன மங்கைக்கு செவிப்பூ வெகு வசீகரம்.அங்குலியில் உகிர் அழகாகச் சீர் செய்யப் பட்டிருந்தது.அவை மொட்டுக்களை ஒத்திருந்தன.அவள் ஒட்டமும் அதரமும் மாதுளம் பூ.உள்ளே இருப்பனவோ மாதுளை முத்துக்கள்.அருகே அழகைக் கூட்டிய படி அங்கிதம் ஒன்று.அது சிறுவயது விளையாட்டால் கிடைத்த பரிசு.கிலுத்தைத்தில் இருந்து கூர்ப்பரம் வரை அணிகள் அழகு செய்தன.அந்தச் சியாமளவல்லி தவள வண்ண சேலையில் சோபிதமாய் நின்ற நிலை ஒரு கவிதை.முகமோ மஞ்சரி.அவள் கோகில வாணி,ஞமிலினதும் வெருகலினதும் தோழி.அவள் எகினத்தின் சாயல்.

ஆனால் அவளுக்கு வைரிகளும் இருந்தார்கள்.துந்துளம் அவள் பரம வைரி.பிபீலிகையும் நளிவிடமும் அவள் வீட்டின் விருந்தாளிகள் என்பதில் அவளுக்கு பலத்த ஆட்சேபம் இன்றுவரை இருக்கிறது.கூடவே இப்போது நிலந்தியும் சேர்ந்து விட்டிருக்கிறது.இது பற்றி எத்தனையோ தரம் அவள் தந்தையிடம் முறைப்பாடு செய்தாயிற்று. எனினும் எந்த விடயமும் இன்று வரை நடந்த பாடாயில்லை.

அதே போல அவளுக்குச் சில ஆசைகளும் இருந்தன.அரச கதைகளைக் கருத்தூன்றிப் படிப்பதால் விளைகின்ற ஆசைகள் அவை.சாரங்கத்தையும் நேமியையும் சிதகத்தின் கூட்டையும் காணவேண்டும் என்பது அவள் நெடு நாளைய கனவு.தோழி ஒருத்தி கொண்டு வந்து கொடுத்திருந்த சசலத்தைப் பார்த்து அவளுக்கு வியப்போ வியப்பு!சசலம் கொண்டு அவள் செய்யும் நுட்பமான தையல் வேலைக்கு அவள் தோழியர் கூட்டம் அடிமைப்பட்டுக் கிடக்கும்.கோமளவல்லியான அவள் ஞெள்ளல் பொருந்தியவள்.பொற்பும் போதமும் நிறைந்தவள்.பிங்கல அனிகலன்களை அவள் அணிந்து கன்னல் மொழி பேசி வந்தால் காண்போர் மனம் கொள்ளை கொண்டு போகும்.

அவள் புறப்பட்டு விட்டாள்.இனித் துச்சில் புறமாக ஓதம் வந்ததால் பங்கமுற்றிருந்த பகுதியைத் தாண்டி நடந்தால் சற்றே வெளிச்சம் தென்படும்.தால வரிசை செறிந்த மார்க்கம் புலப்படும்.அதனைக் கடந்தால் விடங்கம் அலங்கரித்த மறுகு வரும்.அதனூடு போனால் பாகசாலை தெரியும்.அவள் விரைந்து நடந்தாள். கபித்தமும் சிந்தகமும் அவ்விடத்தைச் சுற்றி வளர்ந்து இருந்தன.அவற்றினிடையே ஒன்றிரண்டு ஆசினியும் அலங்கரித்தன.அவை செழுமையைப் பறைசாற்றிய வண்னம் அந்த இடத்துக்கு ஒரு வித சோபிதத்தை அளித்துக் கொண்டிருந்தன.

பாகசாலையை நெருங்கியதும் உள்ளே சில ஆட்களும் குமுதமும் தெரிந்தன.ஏனென்றால் அது பாதிக் குந்தும் கூரையும் மட்டும் கொண்டமைந்தது.அதனால் உலூகலம்,முசலம்,வட்டிகை,நவியம்,சூர்ப்பம்,தாம்பு,குழிசி,என்பன கிடப்பதும் தெரிந்தன.ஞிகிழியில் இருந்து வந்த வெளிச்சத்தில் மும்மரமாய் வேலை செய்து கொண்டிருந்த தொண்டர்கள் தென்பட்டனர்.அவர்கள் மீது தென்பட்ட சுவேதம் தவள நிற பெளவம் போல மிளிர்ந்து தனிச் சோபையை அவர்களுக்கு அளித்துக் கொண்டிருந்தது.அது தொண்டுமை தந்த பரிசு அவர்களுக்கு.அது பக்தித் தொண்டுமை!


அதனருகே பதிவான சிறு குடில் பகுதி கீசகம் கொண்டு முழுமை பெற்றிருந்தது.அதற்கருகே நறுமருப்பும் உருளரிசிச் செடிகளும் இறும்பு போல அடர்ந்திருந்தன.அதற்குள் சசம் பதுங்கி இருப்பது வழக்கம் என்பது ஒரு சிலருக்கே தெரியும். சந்தனாவுக்கு அது தெரிந்திருக்க நியாயமில்லை.தெரிந்திருந்தால் அதுவும் வேண்டும் என்று கேட்டிருப்பாள்.

இவற்றை எல்லாம் பார்த்த படி ஞெள்ளல் பொருந்திய பாவனபக்தியோடு மதுரமான சந்தனா சசியோடு விரைந்து நடந்தாள்.அவள் கம்பீர மகிஷி.சுதந்திர ராணி.இயற்கையோடு உறவாடும் உள்ளத்தினள்.பக்தி கொண்ட பாவை.அவள் மனமெல்லாம் நேமி நாதம் கேட்கும் ஆசை.

சயந்தன தரிசனத்துக்காகத் தான் இந்த அவசரமெல்லாம்.”

********************** *********************** *************

எங்கே, சொற்களுக்குப் பொருளைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

ஞாட்பு -
சுரும்பு -
கேசவம் -
கோகிலம் -
அவந்திகை -
கசனம் -

உவளித்து -
படிமக்கலம் -
நவநீதம் -
சூழி -
குந்தளம் -
கங்கதம் -
அங்கராகம் -
மாலதி -
மெளவல் -

அங்குலி -
உகிர் -
ஒட்டம் -
அதரம் -
அங்கிதம் -
கிலுத்தம் -
கூர்ப்பரம் -

சியாமளம் -
மஞ்சரி -
கோகிலம் -
ஞிமிலி -
வெருகல் -
எகினம் -

துந்துளம் -
பிபீலிகை -
நளிவிடம் -
நிலந்தி -

சாரங்கம் -
நேமி -
சிதகம் -
சசலம் -
கோமளம் -
ஞெள்ளல் -
பொற்பு -
போதம் -
பாவனம் -
பிங்கலம் -
கன்னல் -

துச்சில் -
ஓதம் -
பங்கம் -
தால வரிசை -
மார்க்கம் -
விடங்கம் -
மறுகு -
பாக சாலை -
கபித்தம் -
சிந்தகம் -
ஆசினி -

குமுதம் -
உலூகலம் -
வட்டிகை -
நவியம் -
முசலம் -
சூர்ப்பம் -
தாம்பு -
குழிசி -


சுவேதம் -
தவளம் -
பெளவம் -

சீசகம் -
நறுமருப்பு -
உருளரிசி -
சசம் -

மதுரம் -
சசி -
நேமிநாதம் -
சயந்தனம் -
Author: வர்மா
•6:46 AM
தமிழ் எனநினைத்துதினமும் தமிழ் அல்லாதசொற்களை பேசுகிறோம் எழுதுகிறோம். கட்டில்,கதிரை,மேசை,யன்னல் இவைதமிழல்ல, ரெலிபோன்,றேடியோ,ரயில்,போன் இவை ஆங்கிலம் எனத்தெரிந்தும் தமிழ் போல்பாவிக்கிறோம் நான் படித்த சிலநல்லதமிழை ஈழத்துமுற்றத்தில் பதிகிறேன்,

கிழமை

ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
அறி
வியாழன்
வெள்ளி
காரி

மாதம்

தை - சுறவம்
மாசி - கும்பம்
பங்குனி - மீனம்
சித்திரை - மேஷம்
வைகாசி - விடை
ஆனி - ஆடவை
ஆடி - கடகம்
ஆவணி - மடங்கல்
புரட்டாதி - கன்னி
ஐப்பசி - துலை
கார்த்திகை - நளி
மார்கழி - சிலை

முத்துக்குறைவி//////////////// இளம் வயதில் நிறைந்த அறிவுடையவள்
பெரணிநார் /////////////////பனைமட்டையில் உரித்தநார்.
ஈரக்களி -//////////// பிரம்பு
நஞ்சோடை ////////////உப்பை வாரியபின் எஞ்சிய நீர்
வெளிச்செல்லும் ஓடை
மொழி மாறா ஓலை/////// - நம்பிக்கை இல்லாத் தீர்மானம்
ஆகூழ்///// வளர்ச்சி
போகூழ் //////அழிவு
அங்க பாடல்////// பொருள் ஒழித்து பாடுதல்
Author: ARV Loshan
•10:37 PM
நினைக்கவே வெட்கமாக இருக்கிறது. ஈழத்து முற்றத்தில் இதுவரை 137 பதிவுகள் இடப்பட்டும் என்னால் ஒன்றைக் கூட வழங்கமுடியவில்லை.

இதுகூட ஏற்கெனவே என் தளத்தில் முன்பு பிரசுரிக்கப்பட்ட ஒரு பதிவே..
நண்பர் வந்தியத்தேவனின் அன்பான வற்புறுத்தல்,மிரட்டலான வேண்டுகோளின் காரணமாக ஈழத்து முற்றத்தில் மீள் பதிக்கிறேன்.

(எனது பதிவுத்தளத்தை விடவும் தொடர் மின்னஞ்சல்களாகவும் யாரோ எழுதியது என்றும் உங்களில் பலபேரை இது வந்து சேர்ந்திருக்கும் என்றும் நினைக்கிறேன்.. பல தடவை "வாசித்துப் பாருங்கள்.. நல்லா இருக்கு" என்றெல்லாம் எனக்கே வருவது வேடிக்கை..)

இதோ நான் வசிக்கும் கொழும்பில் தமிழர் தலைநகரான வெள்ளவத்தையின் தல புராணம்..


வெள்ளவத்தை
கொழும்பிலே தமிழர் மிகச் செறிவாக வாழும் -
அதிகமாகத் தமிழ் பேசுவோரே
வாழும் ஒரு செழிப்பான பகுதி! (கொழும்பு 06)
பல பிரபல ஆலயங்கள்,கடைகள்,சந்தை என தமிழரின் முக்கியமான இடங்கள் நிறைந்த இடம்.
வெள்ளவத்தை பற்றிய ஒரு குறிப்பு இது!
கவிதை மாதிரியான ஆனால் கவிதையாக அல்லாத ஒரு பதிவு!

நானும் ஒரு வெள்ளவத்தை வாசி என்ற காரணத்தால்
ஏனைய வெள்ளவத்தைவாசிகளும்
கோபப்படாமல் சிரித்துவிடுங்கள் என்னோடு சேர்ந்து!


எங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்

பெயரளவில் இது குட்டி யாழ்ப்பாணம்
எனினும்
பெருமளவு வெளிநாட்டுப் பணமும்
உள்நாட்டில் வாழும் தமிழரில் அதிகம்
பணம் உழைப்போரின செல்வாக்கையும் பார்த்தால்
இது ஒரு குட்டி லண்டன் அல்லது
டொரன்டோ(வேறேதாவது வெளிநாட்டு நகரங்களாயிருந்தாலும் போட்டுக்கலாம்)

அடுக்குமாடிகளின் (அபார்ட்மென்ட்) அணிவகுப்புகள்
ஒவ்வொரு வீதியிலும் இரண்டு மூன்று அடுக்குமாடிகள்
கிடைக்கும் சிறுதுண்டு நிலத்திலும்
ஒடுக்கி முடுக்கி ஒரு அபார்ட்மெண்ட் முளைவிடவைக்கும்
மூளை படைத்தோர் எங்கள் பொறியிலாளர்!

வீட்டிற்குள்ளே பைப்பில் நீர் வரத்து குறைவெனிலும்
மழை பெய்யும் காலத்தில் வீதியில் குளமே
கட்டிப் பாசனம் செய்யலாம்!

எங்கள் வெள்ளவத்தை வீதிகளில்
விலையுயர்ந்த வெளிநாட்டுக் கார்கள் ஒடும்!
பென்ஸ்,பீ எம் டபிள்யூ,பஜிரோ,லாண்ட்ரோவர்,பெராரி
இன்னும் ரோல்ஸ் ரோய்ஸ் கூடக் காணலாம்.
குண்டு குழி வீதிகளில் குலுங்காமல் இவை
பயணிக்க புதியதாய்
நுட்பங்கள் யாராவது உருவாக்க வேண்டும் இனி!

பேரம் பேசாமல் கேட்பதை சந்தையில்
அள்ளிக் கொடுத்து
சாதாரண மரக்கறி விலைகளையும்
சர்வதேச சந்தை விலையாக உயர்த்தியவர்களும்
எங்கள் வெள்ளவத்தைத் தமிழரே!

எனினும்
தமிழ் மொழியாக்கத்தில் தீவிரமானவர்கள் நாம்!
காய்கறிக் கடைக்காரர் முதல்
காக்கிச் சட்டைக்காரர் வரை அனைவருமே
தமிழறிவர் வெள்ளவத்தையில்!

பஸ் கண்டக்டர் கூட
வெள்ளவத்தை வந்தால்
தமிழிலே பேசித்தான்
டிக்கெட் கொடுப்பார்!

பேச்சு வெற்றியளிக்கும் என்பது இங்கே மட்டும்
பெருமளவில் உண்மை!
பேசிப் பேசியே (தமிழன்) தமிழ் தெரியாதவரும்
தமிழிலேயே பேசுவர்!

எட்டுத்திசையும் அச்சமின்றித் தமிழ் முழங்கும்
தலைநகரின் தமிழ்த் தலைநகரம்
தடுக்கி விழுந்தால் ஆலயம்
தடுமாறி விழுந்தால் சைவக்கடை
ஊர் முழுவதும் நகைக்கடையும் புடவைக்கடையும்
நிரம்பி வழியும் எம்மவரின
வெளிநாட்டுப் பணத்தினால்!


பொலீஸ் பதிவுகளும் இங்குதான் அதிகம்
பொலீஸ் கைதுகளும் இங்கு தான் அதிகம்
வெள்ளை வான்களும் அதிகளவில் அலையும்
வீதிக்கு வீதி லொட்ஜ்களில் ரெய்டுண்டு
எனினும்
வீதிக்கு வீதி சந்திக்கு சந்தி
விடுப்புகள் பேசியும்
வீராப்பாய் விண்வீரம் பேசியும்
நிற்கும் எம் இளைஞர் கண்டால்
வாழ்வது நாம் வடக்கிலா கிழக்கிலா என்ற
எண்ணம் எட்டிப் பார்க்கும்!

அண்மைக்கால வெள்ளவத்தையில் புதியதோர் மாற்றம்
ஆன்டிமார் என்ன ஆச்சிமார் கூட
நைட்டிகளுடன் சொப்பிங் போகும் நிலை!
முழங்கால் கீழே கூட மூடியலைந்த காலம் போய்
முகம் தவிர வெறெதையும் மூடாத
புதிய மகளீர்
கண்களுக்கு விருந்தளிக்கும்
கவர்ச்சி catwalk இப்போது
எங்கள் வெள்ளவத்தையில் சாதாரணம்!

வெறெங்கு எந்த மொழியில் விளம்பரம் செய்தாலும்
வெள்ளவத்தையில் மட்டும்
தமிழ் இல்லையெனில்
வியாபாரம் படுத்துவிடும்!
வங்கி வட்டிக்கடை முதல் வாடகைக் கார் வரை!
(அதில் பாதித் தமிழ் தமிழாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை)

காலை வேளைகளில் கடற்கரையோரம் இன்னுமொரு வேடிக்கை..
நாள் முழுதும் சாப்பிட்டு சேர்த்ததெல்லாம் குறைக்க
காலில் சப்பாத்து அணிந்து அங்கிள்மாரும்,ஆன்டிமாரும்
அணிவகுத்து நடை பழகுவார்கள்..
உடல் மெலிவோ,கொழுப்போ
காலையில் பீச் வோக்கிங் போகாவிட்டால் பாஷன் இல்லைப் பாருங்கோ..

நம்ம வெள்ளவத்தைப் பெண்களின் தமிழே தனியான தமிழ் தான்..
ஆங்கிலேய அழகிகளும் தோற்றுப் போவர்
அவர்கள் ஆங்கில உச்சரிப்பில் ..
ஆனாலும் ஆங்கிலம் பாதி தமிழ் பாதி என்று மிக்ஸ் பண்ணி மிதப்புக் காட்டுவதில்
எங்கள் வெள்ளவத்தை பெண்மணிகளை யாருமே வெல்ல முடியாது
(நாங்களும் தான் அந்த ஸ்டைலில் டமில் பேசப் பார்க்கிறோம்..
ம்கூம் முடியவே இல்லை.. அது எங்கள் பெண்களுக்கு மட்டுமே முடியுது)

குண்டுகள் எங்கு வெடித்தாலும்
குண்டுகளை எங்கே போட்டாலும்
கோவில்கள் எங்கள் பெண்களால் நிறையும்
அவருடல்களில் தங்கங்கள் விளையும்
உடல் தழுவிப் பட்டாடைகள் நெளியும்!
கல்யாணங்களோ காசால் களைகட்டும்
தமிழ்நாடும் தோற்றுப் போகும் தடல்புடலில்.

கிடைக்கும் நிலமெல்லாம்
கோடி கொடுத்து வாங்கவும்
நம்மவர் தயாரென்பதால்
இலங்கையின் வேறு பல கோடிகளுக்கு
ஓடிவிட்டார்கள் சிங்களவர்
வெகுவிரைவில் வெள்ளவத்தை முழுவதும்
தமிழொலிக்கம் (தமிழ் மட்டுமே)

கரையோரக் கிராமங்களில் சிங்களக் குடியேற்றம் என்று
நாம் பொங்கியெழுந்த காலம் போய்த்
தலைநகருக்குள்ளேயே
தட்டுத் தடங்கலின்றித் தமிழரின்
தொடரான குடியேற்றம் என்று
கொதித்தெழக் கூடும்
(கொட்டாஞ்சேனை மட்டக்குளி போன்றவையும்
இதற்கு பொருத்தமே)