Author: ந.குணபாலன்
•12:25 PM

கொண்டல்மரமே! 

கொண்டல்மரமே! கொண்டல்மரமே! சுகந்தானே? 
நாங்கள் கும்பிட்டுக் கொண்டாடுந் தெய்வமே!
கொண்டல்மரத்தாச்சீ !  நீயும் சுகந்தானே?
மீண்டும் வந்துன்னை நேரில்
கண் நிறையக் கண்டு , மனம் ;
வேண்டிக் கும்பிட எனக்கும் வேளை 
எண்டைக்கு வருமோ?
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி !

உடைஞ்ச ஊரும் ,
இடிஞ்ச வீடுகளும், 
புறிஞ்ச உறவுகளுமாக 
குடியழிஞ்ச நாடுமாச்சே!  
தேடித் திரிஞ்சு அலைஞ்சாலும்,
கூடிச்சீவிச்ச சாதிசனத்திலை பாதிசனம்;  
ஓடிப்போன இடம்   ஆர் கண்டது?
கூடி வாழ எங்களை எல்லாம் ஊருக்குக்   
கூட்டி வருவியே?
கொண்டல்மரத்தாச்சி!
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி !



ஆரார் எங்கினை இருக்கினம்?
பூவும், பிஞ்சும், காயும் கனியும்;
கொப்பும், கிளையுமாய் ;
வேரோடும்,வேரடி மண்ணோடும்;
பாறிப் பிரண்டு போன 
பூமரம் எது?, மாமரம் எது?
ஆரார் மோசம் போவிட்டினம்?
அள்ளி எடுக்கவும்,
கொள்ளி வைக்கவும்,
ஆளில்லாமல் அனாதையாய்
ஆரார் போக்கறப் போச்சினமோ?
அறுந்துபோன காலம் போட்டு உலைக்க,
ஆரார் ஆய்க்கினை படுகினமோ ?
ஏதிலியாய் எல்லாமே கைபறிஞ்சு
ஆரார் ஏமாந்து சாகினமோ?
அதிட்டம் எண்டு நினைச்சு
அடுத்தவன் நாடு போய்
அல்லல் படுகினமோ? இல்லை
நல்லாயிருக்கினமோ? 
பழைய நடப்பெல்லாமே
மறந்து நடப்படிக்கினமோ?
மறக்கேலாமல் மறுகிச்சாகினமோ?
இல்லை போறபோற வழிவழிய
கடலுக்கும், கண்டந்தாண்டி ,
பனி மலைக்கும்
பனி மழைக்கும்
பசளையாய்ப் போச்சினமோ?
பரமேசுவரி உனக்கென்ன?
பாத்துக்கொண்டு ஒண்டுமே
பறையாமல் இருக்கிறாய்!
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி!


இம்மளவு ஆய்க்கினை, அவத்தைக்கையும்
அம்மாளாச்சி வாசலுக்கு ஒரு
எட்டு எட்டி வந்து கற்பூரக்
கட்டி ஒண்டு கொளுத்தி மனசாறிக்
கும்பிடேலாமல் கிடக்கே எண்டு 
நாங்கள் தான் ஏங்கி நிண்டம்.
கோயில் மணி உடைஞ்சு போச்சே!
தேரும்,  சூரனும் நொருங்கிப் போச்சே! எண்டு
பிசத்தினதும், பினாத்தினதும் நாங்கள்தான்.
கிட்டக் கிழலைக்கும்,
அண்டாமல், அடுக்காமல்,
எட்ட எங்களை நிக்க வைச்சாய். உனக்கும்
வீட்டுக்காவல் வைச்சாய்!


செய்வினை வைச்சது ஆரெண்டு 
சாமியாடுகிற கோயிலுக்குச்
சாத்திரம் கேட்டுப் போனால்;
சாமி வந்து சன்னதமாடி,
“எல்லாமே என்ரை குஞ்சுதான்!”
எண்டு கூத்தாடும்.
அப்பிடித்தான் ஆச்சி நீயும் 
"கோழியும் எங்கடை, 
புழுங்கலும் எங்கடை"
எண்டு இருக்கிறியே?
அழுந்தி எங்கடை சனம் வதைபட
ஆய்க்கினை வைச்சதெல்லாம், 
உன்ரை சதியோ? தலைவிதியோ?
முன்னை நாங்கள் செய்த கறும வினையோ?
எங்கடை சனம் முண்டி விழுங்கின 
சங்கையீனமும், வேதினையும், வருத்தமும்,
கொஞ்சமோ? நஞ்சமோ?
கொண்டல்மரத்தாச்சீ!


ஆதரிச்சுக் கும்பிட்ட தெய்வம் எண்டு
ஆய்க்கினைப்பட்டு அந்தரிச்ச நேரத்திலைகூட
ஆருமே ஆச்சி உன்னைக் கூப்பிடேல்லையே?
செருக்குப் பிடிச்ச கூட்டமெண்டு எங்களை
சீர் குலைச்சுப் பாக்கிறியே?போன பிறவியிலை 
கறுமவினை செய்த கூட்டமெண்டு எங்களை
கந்தறுந்து போகக் கைவிட்டிட்டியே?
குட்டைபிடிச்சு கறுமப்படும் தெரு
நாய் படாப் பாடுபட
நமக்கு விதிச்சு வைச்சாய்!
நரகத்துமுள்ளு விதைச்சு வைச்சாய்! 


ஆரின்ரை கண்பட்டுது?
ஆர் வைச்ச வினையிது? மனம்
பரிதவிக்க, சதிரம் பதைபதைக்க 
உறவையும், உறுப்பையும், உடமையையும்;
பறி குடுத்த நேரத்திலை,
பலி குடுத்த நேரத்திலை;
ஆர் வந்தவை ஆதரிக்க?
சொந்தமெண்டு நினைச்ச தெய்வமெல்லாம்
சோதினைகள் செய்ததெல்லே?
கையெடுத்த சாமியெல்லாம்,
கல்லாகி நிண்டதெல்லே?
கண்டியே! நமக்கெண்டு வந்த
வெள்ளிடியை? வாழ்மானத்தை?
கண்மூடி நிண்டியே நீயுந்தான்!
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி!


ஒண்டு மட்டும் பறைவம் கேள்!
"மலையான மலை போச்சாம்
மண்ணாங்கட்டி போனாலென்ன?" 
எண்டு மட்டும் கிடப்பமே?
ஏலாத காரியம் அதெல்லே? எங்களுக்காய்
மாண்டு போன மாணிக்கங்கள் போக;
மசானவெளி தாண்டித் தப்பி 
மீண்டு மிதந்து வந்த எங்கடை
சனமும், இளஞ் சந்ததியும்;
வேண்டி விரும்பி உன்வாசல் வந்து ,
கொண்டாடும் காலம் 
ஒண்டு வரும்! ஏழு கடலும் 
தாண்டி இருக்கிற எங்கடை சனம் 
எல்லாம் வரும்! எதிர்காலமும்
நல்லாய் வரும்!
கொண்டல்மரமே! கொண்டல்மரமே!
நிண்டு நிலைச்சு நீயும் வாழி!
கொண்டல்மரத்திலை குடிகொண்டவளே!
என்னதான் உன்னை நாங்கள்
ஏலாத் தன்மையாலை ஒருநேரம் 
இல்லை நீ சாமி எண்டு ஏசிப் பேசினாலும் 
எண்டைக்கும் எங்கடை மனங்களிலை,
கொண்டகோலம் குலையாமல்
குடிகொண்டவளே! கொண்டல்மரத்தாச்சீ!
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி!
நிண்டு நிலைச்சு நீடூழி நீயும் வாழி! 

    



சொல்விளக்கம்


எங்கினை-எங்கே
எண்டைக்கு -என்றைக்கு

புறிஞ்ச-பிரிந்த
வருவியே?-வருவாயோ?
பாறி- விழுந்து
பிரண்டு-புரண்டுமோசம் போவிட்டினம்?-மோட்சம் போய் விட்டனர்?(மரியாதைச்சொல்) -இறந்து விட்டனர்?
போக்கறப் போச்சினம்?-போக்கு அறப் போனார்கள்?(ஆற்றாமையுடன் சொல்லுதல்)  -திரும்பி வராமலே போனார்கள்?
படுகினமோ?-படுகிறார்களோ?
கை பறிஞ்சு-கை பறிந்து, இழந்து
சாகினம்?- சாகின்றார்கள்?
அறுந்து போன காலம்-கேடுகாலம்,கெட்டகாலம்
போட்டு உலைக்க-பிடித்து ஆட்ட
பழைய நடப்பு -பழைய நினைவு
நடப்படிக்கினமோ? - மற்றவர்களை விட தான் உயர்ந்தவர் என்று நினைக்கிறார்களோ? 
மறுகிச் சாகினமோ?-மனம் குழம்பிச் சாகின்றார்களோ?
போறபோற வழிவழிய-போகின்ற வழிகளிலே
பசளையாய்-பசளையாகி,
மண்ணுக்கு உரமாகி
ஒண்டுமே பறையாமல்-ஒன்றுமே சொல்லாமல்
இம்மளவு-இந்தளவு
ஆய்க்கினை,அவத்தை-துன்ப துயரம்
அம்மாளாச்சி-அம்மாள்+ஆச்சி
ஒரு எட்டு எட்டி வந்து-ஒரு தரம்  நடந்து வந்து
பிசத்தினதும்-பிதற்றியதும்பினாத்தினதும்-அலட்டினதும்
கிட்டக் கிழலைககும்- அருகிலே
அண்டாமல்,அடுக்காமல்-சேர்க்காமல்

எட்ட நிக்க-தூர நிற்க
"கோழியும் எங்கடை புழுங்கலும் எங்கடை"  - கோழியும் எங்களுடையது (காயப் போட்டிருக்கிற) புழுங்கல் அரிசியும்
    எங்களுடையது" (தின்றால் தின்று விட்டுப் போகட்டும்)

கறுமவினை- கொடிய துன்ப வினை
சங்கையீனம்-அவமானம்
வருத்தம்- நோய்
ஆதரிச்சு கும்பிட்ட-விரும்பி வணங்கிய
கந்தறுந்து-கந்து(பற்றுக்கோடு-வாழ்வாதாரம்)+அறுந்து
கறுமப்படும்- துன்பப்படும்
சதிரம்-சரீரம்,உடல்
கையெடுத்த சாமி- கும்பிட்ட சாமி
கண்டியே?-கண்டாயோ?

வெள்ளிடி- இடி போலுந்துன்பம் 
வாழ்மானம்- மானம் கெட்ட வாழ்வு
மசானவெளி- மயானவெளி 



 
 
Author: கரவைக்குரல்
•10:55 AM
ஈழத்து முற்றத்திலிருந்து மகிழ்ச்சியுடன் உல்லாசமாயிருக்கும் அனைத்துப்பதிவர்களுக்கும் வணக்கம்.
நானும் உங்களுடன் இணைந்துகொள்வதில் ரொம்ப மகிழ்ச்சி.
ஆரம்பத்தில் என்ன பதிவிடுவது என்ற சின்ன எண்ணச்சிக்கலில் இருந்த எனக்கு இதன் ஆரம்பகர்த்தாவாகிய கானாவின் ஆமோதித்தலுடன் என் கரவைக்குரல் பதிவில் இட்ட பதிவை மீள்பதிவிடுகிறேன்,ஏனென்றால் இது எம் ஈழத்துடன் கொஞ்சம் தொடர்புபட்ட பதிவாகையாலும் ஈழத்துமுற்றத்தில் இருக்கும் எல்லா பதிவர்களும் பார்த்திருப்பார்களோ என்ற எண்ணத்தினாலும் இதை மீள்பதிவிடுகிறேன்,



"சீனப்பா சீனப்பா" என்று ஒருவர் இருந்தார் கரவெட்டி கோவிற்சந்தைக்கு கிட்டடியில்.இது ஏதோ அரசகதை சொல்ல தொடங்குவது போலல்லவா இருக்கிறது. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.யாழ்ப்பாணம் வடமராட்சியில் பாடசாலை சேவை வாகனசேவை ஓடி பிரசித்தமான ஒருவர்.அவரைத்தொடர்ந்து அவருடைய பிள்ளைகள் தொடர்ந்து சேவை செய்தவர்கள்
இதை ஏன் சொல்கிறேனென்றால் இவர்கள் கையில்தான் தட்டி வான் என்று சொல்லப்படும் ஒருவாகனத்தை நான் சிறுபராயம் முதலே கண்டவன். இப்போது ஒரு சில வாகனங்கள் கொடிகாமத்துக்க்கு ஓடிக்கொண்டிருப்பதாக அறிய முடிகிறது ஈழத்திலிருந்து.

தட்டிவானில் நானும் பயணித்தவன் ஒரு சிலகாலங்கள் பாடசாலைக்கு.அதில் பின்னுக்கு உள்ள தட்டியில் நின்று செல்வதில் ஒரு அளவுகடந்த சந்தோசம். அதுவும் இன்னும் ஒருவிடயம் ஊர்களுக்கு இடையிடையே இந்த தட்டிவான் பயணிக்கும்போது சிறுபராயம் ஆகையால் சத்தம்போட்டு,கும்மாளம் அடித்து செல்வது வழமை.
வாகனத்துக்கு முன்னே ஆசிரியர் ஈஸ்வரநாதன் இருப்பார். அவர் கொஞ்சம் " என்ன..... சத்தம் ......." என்று கேட்க கொஞ்சம் குறையும். பின்னர் அதுவும் கொஞ்சம் மறந்து போக அது கூடும்.



ஒரு நாள் வழமை போலவே சத்தங்கள்போட்டவாறே ஊர்களுக்கு இடையிலே வாகனம் நகர்ந்து செல்கிறது. அணிஞ்சிலடி என்று சொல்லப்படும் ஒரு இடம், அங்கு கொஞ்சம் உள்ளுக்குள் தென்னைகள் அதிகம். அது அங்கிருந்தவகளுக்கு நன்றாகத்தெரியும். அதில் உள்ள தென்னைகளில் உள்ள தென்னோலைகளை ஒவ்வொன்றாக இழுத்து அதை முறிதெடுத்து கொடிகாமம் வீதிவழியே இழுத்துக்கொண்டவாறே ;சென்று அதை சாமியன் அரசடியில் விடுவதில் மிகப்பெரிய சந்தோசம் சிறுவர்களுக்கு. இதை முன்னால் இருந்த ஆசிரியர் அவதானித்தாலும் யார் இதை செய்கின்ற மகான் என்று அவருக்கு தெரியாது.கடைசியில் ஒரு நாள் முடிவெடுத்து எல்லொருக்கும் கொஞ்சம் பதம் பார்த்தார் ஆசிரியர் பக்கத்திலிருந்த பூவரசு மரத்தடியினால்.இதில் கோசலன் மற்றும் நான் எல்லோரும் அடிவாங்கியதாக நினைவு
இப்படி ஒருவித்தியாசமான சுகங்கள் இந்த வாகனத்தில்.
இப்படியான தட்டிவான்கள் இப்போதும் கொடிகாமத்துக்கு ஓடிக்கொண்டே இருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் எரிபொருளுக்கு தட்டுப்பாடான காலத்தில் இந்த வாகனம் மிகப்பெரும் உதவியாக இருந்தது என்பது உண்மைதான்.இப்போது அந்த வாகனம் "அவ்வளவு சரியில்லை" என்றும் "நாகரிகம் இல்லை" என்றும் ஒதுக்கிவருவதும் சுட்டிக்காட்டபட வேண்டிய விடயம். அதை விட்டுவிட்டு இப்போது நாகரிகமான வாகனங்கள் தேடிவருவதும் அறிய முடிகிறது.இந்த வாகனத்தை வைத்திருப்பவர்களும் அதேபோல வடமராட்சி பிரதேசத்தில் இந்த வாகனம் ஓடுவது பற்றி சிலர் நையாண்டி பண்ணுவதும் காணமுடிந்தது.
இது நம்பாதைகள் பற்றி சிந்திக்காத,அறியாத நம்மவர்கள் உள்ளத்திலுருந்து வந்து அவர்கள் வாயினூடாக மட்டும் தான். ஆனால் கொடிகாமசந்தைக்கு இது தான் இருக்கின்ற வாகனங்களில் சிறப்பு.
இப்படியான வாகனம் போலவே ஐக்கிய அரபு இராச்சியம் டுபாயிலும் காணமுடிந்தது.
அதுவும் பாடசாலை சேவைக்கே முற்றுமுழுதாக பயன்படுத்திவரப்படிகிறது.முற்றிலும் சிறிய அளவிலான யன்னல்கள் சூழ்ந்திருக்க ஒருவழிப்படுத்தபட்ட பாதுகாப்பான கதவு,ஆனால் இங்கு தட்டி என்று சொல்லப்படும் பின்னுக்கு அமையும் பகுதி இல்லை.சிலவேளைகளில் தென்னோலை விளையாட்டைப்பற்றி கேள்விப்பட்டாங்களோ தெரியாது.இங்கும் பிள்ளைகள் சந்தோசமாக செல்லும்போது இந்த பதிவு என்னை இடச்செய்திருக்கிறது.அதுமட்டுமல்ல மத்திய கிழக்கு நாடுகளிலும் அதேபோல அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இது சேவையில் இருக்கிறது என்று அறிய முடிகிறது.
மொத்தத்தில் தட்டி வான் என்பது யாழ்ப்பாணத்தில் அருகிவருகிறதோ என்று சிந்தித்த போது அது டுபாய் மற்றும் மற்றைய நாடுகளில் ஓடுவது அதன் இருப்பை தெளிவுபடுத்தியிருக்கிறது.,
Author: Unknown
•12:20 PM
யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்றாகவே மாறிப்போய் விட்டிருப்பது இந்த மினி வான். அதுவும் நெல்லியடி-யாழ்ப்பாணம் பயணங்கள் ஒவ்வொன்றும் ஒரு அனுபவம். அதுவும் இந்த ஏ/எல் படிக்கிற காலத்தில ரியூசன் எண்டு சொல்லிப்போட்டு கொப்பிய மடிச்சு ஜீன்ஸ்சுக்குள்ள சொருகிக்கொண்டு ராஜா டாக்கீஸ்சிலயும் மனோகராவிலயும் புதுப்படம் பாக்க நாங்கள் கூட்டமாக் கிளம்பிப் போறது இருக்கே, அது ஒரு சுகம் பாருங்கோ.

என்ன பிரச்சினை எண்டால் நெல்லியடியிலையும் சரி, பருத்தித் துறையிலையும் சரி ரீல்ஸ் தியேட்டர் இல்லை. நாங்கள் படம் பாக்கிறது ப்ரொஜெக்டர் வச்சு வி. எச். எஸ். டெக்கில போடுற படங்களைத் தான். அதால நல்ல படம் ஏதாவது வந்தா கள்ளமா யாழ்ப்பாணம் போய்த்தான் படம் பார்ப்பம். இதில நெல்லியடியில ராஜலக்‌ஷ்மி என்றொரு தியேட்டரைப் பற்றிச் சொல்லோணும். அங்க பல்கணில ஒரு நாள் நாங்கள் ஏழு பேர் மட்டும் இருந்து படம் பாக்கேக்க கீழ இருந்த ஆக்களோட ஒரு கொழுவல். மேலையிருந்து பச்சைத் தூசணமா எல்லாம் பேச அவங்கள் எங்கட தூசணத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பேசாம இருந்துட்டாங்கள். படம் முடிஞ்சு கீழ வர, கீழ இருந்த ஆக்களில ஒராள் எங்களுக்குப் படிப்பிக்கிற வாத்தியார். ‘ஆ, நடக்கட்டும் நடக்கட்டும்' எண்டுட்டு மனுசன் போக எங்களுக்கு ஒரே மானக்கேடாப் போச்சு.

அதேமாதிரி அதே பல்கணியில ஒரு நாள் வேற படம் பாக்கேக்க என்ர ஜீன்ஸ் பொக்கட்டில இருந்த சைக்கிள் திறப்பு கீழ விழுந்து போட்டுது. இருட்டுக்குள்ள கீழ கைய விட்டுத் தடவினா ஏதோ தொள தொள தண்ணிமாதிரி இருக்க பயந்து போனன். உடன தியேட்டரில வேலை செய்யிற ஒரு பொடியனக் கூட்டிவந்து லைட் பிடிச்சுப் பாத்தா ஆரோ ஒரு புண்ணியவான் வெத்திலையச் சப்பி இருக்கிற சீட்டுக்குப் பக்கத்திலயே துப்பி வச்சுட்டுப் போயிருந்தார். அண்டையோட ராஜலக்‌ஷ்மித் தியேட்டரை விட்டாச்சு. அதே நெல்லியடியில இருந்த பழம் பெரும் மகாத்மா தியேட்டரில் பல்கணி இல்லாதபடியால் பெரிசாப் போறது இல்லை. ஏனெண்டால் பல்கணியில இருக்கிறபோது வர்ற ஒரு மிதப்பு கீழ இருந்து பார்க்கிறபோது வர்றதில்லை.

ரீல்ஸ் படம் பார்க்க யாழ்ப்பாணம் போறது ஒரு நல்ல அனுபவம். எப்ப போறது எண்டு முதலே பிளான் போட்டு அந்த நேரத்துக்கு ரியூசன் இருக்கிறதா ஒரு கிழமைக்கு முன்னமே வீட்டில பில்ட்-அப் குடுத்து, ரியூசன் போறமாதிரி கொப்பி புத்தகம் எல்லாம் கொண்டுதான் வெளிக்கிடுவம். (என்ர அப்பர் அந்த நாளில் யாழ்ப்பாணம் போகக்கூடாது என்பது எனக்கான கூடுதலான பிரார்த்தனை). ஒரு வழியாக மூத்தவிநாயகர் கோவில் அல்லது கண்ணன் வீடு எண்டு இரண்டில் ஒரு இடத்தில சைக்கிளை விட்டுட்டு மினிபஸ் ஏறுவம். ஏற்கனவே மினிபஸ் ஃபுட் போட்டில ஆக்கள் நிறம்பி வழிய வந்தாலும் அதில போகாட்டா எங்கட சுதா யாழ்ப்பாணம் வரமாட்டான். எண்டபடியால் அதில ஏறி யாழ்ப்பாணத்தில போய் இறங்கும் வரை கபி குஷி கபி கம் தான். (பெண்கள் மன்னிப்பார்களாக)

யாழ்ப்பாணம் பஸ் ஸ்டாண்டில இறங்கி தியேட்டருக்கு விறுவிறுவெண்டு நடந்து போவம். அனேகமா எங்கட நித்து அட்வான்ஸ் புக்கிங் செய்திருப்பதால டிக்கட்டுக்கு அடிபடுறதில்லை. அப்பிடி அடிபட வேண்டி வந்தாலும் போற அத்தினை பேரும் ஒருத்தர் கையை ஒருத்தர் இறுக்கமாப் பிடிச்சபடி ஒற்றுமையா முன்னுக்குப் போயிடுவம். மனோகாரா தியேட்டரில மட்டும் ஜெயன் ஒராளைச் சினேகம் பிடிச்சு இருந்ததால எங்களுக்கு ராஜ மரியாதை இருக்கும். இதில பெரிய பகிடி என்னெண்டால் அங்க ஒரு காலத்தில விஜய்க்கு அபிசேகம் எல்லாம் செய்தவங்கள். அதில கடுப்பாகிப்போய் விஜயிண்ட செண்டிமெண்ட் சீனுக்கு நாங்கள் ‘ஹஹ்ஹஹ்ஹா' எண்டு ராஜலக்‌ஷ்மி தியேட்டர் ஞாபகத்தில சிரிக்க 'எவண்டா அவன் (கீறிட்ட இடம்)' எண்டு கீழையிருந்து வந்த குரலில் அடங்கிப் போவம்.

பிறகு படம் பாத்த களைப்பில அங்க இருக்கிற பல ஐஸ்கிரீம் கடைகளில ஏதாவது ஒண்டிலையோ, ரொலெக்ஸ் சாப்பாட்டுக் கடையிலையோ சாப்பிட்டுட்டுத் தான் வருவம். (தியேட்டரில் குடிக்கிற சோடா வேற கணக்கு). ஒரு முறை உப்பிடித்தான் தியேட்டரில வாங்கின சோடா மிஞ்சிப்போக அதை நானும் நிதியும் குடிச்சுத் தள்ளினம். தியேட்டரில இருந்து பஸ் ஸ்டாண்ட் வரக்கு முன்னம் முட்டீட்டுது. பிறகு ஒரு பாருக்குள்ள போய் அன்-லோட் பண்ண வேண்டி வந்தது. நல்லகாலம், ஆராவது கண்டிருந்தால் எங்கட நல்ல பேர் கெட்டுப்போயிருக்குமல்லோ. வீட்ட திரும்பிவரக்கு முன்னம் எனக்கு திரும்ப முட்டி, வீட்ட வந்தவுடன 10 நிமிஷமா அன்-லோட் பண்ணினது வேற கதை.

என்ன தியேட்டர் போகேக்கையும் சரி, வரேக்கையும் சரி ஒரே கூத்தும் கும்மாளமுமா இருப்பம். அனேகமா ஏதாவது நல்ல நாள் பெருநாளிலையும் இப்பிடி படம் பாக்கப் போறதால எங்கள மாதிரி ஆகக் குறஞ்சது அஞ்சு செட்டாவது ஒரு மினி வானில வரும். அண்டைக்கு பஸ்சில வாற பெரிசுகள் எல்லாத்துக்கும் திண்டாட்டம்தான். ட்ரைவர் கொஞ்சம் வயது போனவர் எண்டால் அவருக்கும் திண்டாட்டம்தான். 'அண்ண, உந்தப் பாட்டுப் பெட்டியப் போடு' எண்டு தொடங்கி ஒரே தொல்லை பண்ணுவாங்கள். இதெல்லாத்தையும் சமாளிச்சு பஸ் ஓடுறதுதான் அவர்களின் கெட்டித்தனம்.

பி.கு: அந்தப் பண்டிகைக் கால சினிமா பார்க்கும் அனுபவமும், சந்தோஷமும், மனநிறைவும் இங்கே ஏ.ஸி தியேட்டர்களில், டி.ரி.எஸ் சவுண்டில் எந்த நெருக்கடியும் இல்லாமல் பார்க்கும் படங்களில் எல்லாம் இல்லை.
Author: Unknown
•4:31 AM
எனக்குத் தெரிஞ்ச மட்டில ஒரு காலத்தில, அதாவது 1996க்கு முன் பருத்தித்துறை கூட எங்களுக்கு ஒரு வெளியூர் மாதிரி இருந்தது. அப்பா சைக்கிளில அல்லது ஏதேனும் அவசரம் எண்டால் மோட்டார் சைக்கிளில் பருத்தித்துறைக்குப் போவார். யாழ்ப்பாணம் போறது வெளிநாடு போறமாதிரி (எல்லாம் வெடிவால் முளைக்கும் வரைதான்). நான் அப்போ ஒருமுறைக்குமேல் போன அதிகதூரம், மந்திகை ஆஸ்பத்திரி. தம்பி பிறந்த போது ஒருக்கால், அக்காவுக்கு மகன் பிறந்த போது ஒருக்கால், மச்சளுக்கு மகள்கள் பிறந்தபோது இரண்டுதரம் என்று பத்து வயதுக்குள்ளாகவே நான்கு தரம் போய்வந்த இடம் மந்திகை ஆஸ்பத்திரிதான். அப்பா பருத்தித்துறையில இருக்கிற காணிக்கந்தோருக்குப் போய் வரும் நாட்களிலெல்லாம் அப்பாவின் வரவை மனம் எதிர்பார்த்துக் காத்திருக்கும். ஏனெண்டால், அவர் வாங்கிவரும் கள்ளத்தீனுக்காக.

கள்ளத்தீன் எண்டால், கடையில வாங்கிச் சாப்பிடுற வடை, போண்டா, வாய்ப்பன் முதலான வீட்டில் செய்யப்படாத பொருட்கள். எங்கள் ஊரில் கடையில் வாங்கிச் சாப்பிடுகிற இடியப்பம், பிட்டு எல்லாமே கள்ளத்தீன் தான். இதனால அப்பா பருத்தித்துறையிலிருந்து என்ன வாங்கிவந்தாலும் அது கள்ளத்தீன் என்றே அழைக்கப்பட்டது. அப்பா பருத்தித்துறையிலிருந்து வாங்கிவரக்கூடிய கள்ளத்தீன்களில் சிறப்பானவை தோசை, வெள்ளையப்பம், தட்டவடை ஆகிய மூன்றும். உழுந்துவடை, பருப்புவடை, போளி போன்றன யாழ்ப்பாணம் போய்வரும்போது வாங்கிவருவார். வல்வெட்டித்துறைப் பக்கம் போனால் எள்ளுப்பா. இந்த உணவுகளைப் பற்றி கொஞ்சம் கதைப்போமே.

பருத்தித்துறை தோசையின் புகழுக்குக் காரணம், அதன் அளவு. சின்னவயதில் எனக்கெல்லாம் ஒரு தோசை சாப்பிட்ட இரண்டு நாளைக்கு நிற்கும். அநேகமாக இரண்டு வகை சம்பல் தருவார்கள். பச்சை மிளகாயில் அரைத்த பச்சைச் சம்பல் அல்லது வெள்ளைச் சம்பல் என்று அழைக்கப்படும் சம்பல் ஒன்று, மற்றது செத்தல் மிளகாயில் அரைக்கப்பட்ட உருது சம்பல் அல்லது சிவத்த சம்பல். இதோ, எழுதும் போதே எச்சில் ஊறுகிறது. அதே போல் பருத்தித்துறை வெள்ளையப்பமும் ஒரு சிறப்பான விஷயம். எங்கள் அம்மா எத்தனை முறை முயன்றும் அந்த மென்மையும், சுவையும் வரவில்லை. வெள்ளையப்பத்துக்கான ஸ்பெஷலான சம்பலோடு ஒரு பதினைந்து வெள்ளையப்பம் உள்ளே இறங்கினாலும் வயிறு நிரம்பாது. அப்படி பூ போல இருக்கும் வெள்ளையப்பம்.

தட்டவடையும் அப்படியே. அந்த ருசியை எங்கள் வீட்டுப் பெண்களால் ஏனோ கொண்டுவர முடிவதில்லை. 2002க்குப் பின்னான சமாதான காலத்தில் ஊருக்குவந்த பெரிசுகள் எல்லாரும் கேட்டு வாங்கி வெளிநாட்டுக்குக் கொண்டு போனது பருத்தித்துறைத் தட்டவடையை தான். இதுவும் கணக்கில்லாமல் சாப்பிடத் தூண்டும் ஒரு போதை வஸ்து என்றே சொல்லலாம். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது, எனக்கு இரவில் சாப்பாட்டுக்குப் பின் இரண்டு பருத்தித்துறைத் தட்டவடையைக் கொறித்துவிட்டுப் படுத்தால் காலையில் வயிறு அற்புதமாகச் சுத்தமாகும். நம்வீட்டுப் பெண்கள் சுடும் தட்டவடையைச் சாப்பிட்டால்...ம்ஹூம் அதை எல்லாம் இங்க சொல்லமுடியாது.

இந்த உணவு வகைகள் பருத்தித்துறையில் பரவியிருந்த பல உணவகங்களில் கிடைத்தன. ஆனால் வெள்ளையப்பமும், தோசையும் உணவகங்களில் வாங்கிச் சுவைப்பதை விட, பருத்தித்துறையின் குறுக்குத் தெருக்களிலுள்ள வீடுகளின் மதில்களில் சின்னதாக ஓட்டை போட்டு, சின்னச் சின்ன கதவுகள் போட்டு பெரும்பாலும் காலை அல்லது மாலையில் கடைவிரிக்கும் அந்த ஊர்ப் பெண்களின் கையால் கிடைக்கும் தோசை அல்லது அப்பம்தான் சிறப்பானது. என்ன இவர்களின் சில கடைகளின் முன்னால் சாக்கடை ஓடும். அப்படியான கடைகளைத் தவிர்க்க வேண்டும். என்னுடைய ஊர் வாழ்க்கையின் கடைசிக் காலங்களில் அங்கே ‘ராஜா' உணவகம் என்று ஒருவரின் கடையில் இவையெல்லாம் சுத்தமாகக் கிடைத்தன.

ராஜாவும் இன்னும் சில உணவகத்தாரும் காலையிலேயே தோசை, வெள்ளையப்பம் விற்க ஆரம்பித்தார்கள். அப்போ அதிகாலையில் ரியூசனுக்குப் போகிறபடியால் வீட்டில் தரும் காசில் பருத்தித்துறையில் வாங்கி உண்ண ஆரம்பித்தோம் (பள்ளியும், ரியூசனும் பருத்தித்துறையில்தான் அமைந்திருந்தன). நாங்கள் காலையிலேயே வெள்ளையப்பம். தோசை எல்லாம் இறுக்கிவிட்டுப் போவது வழக்கம். அப்படியான நாட்களில் வகுப்பில் தூங்காமல் இருப்பதற்குப் படும் பாடுதான் அதிகம். ஒருமுறை நூலகத்தில் தூங்கி ரகுவரன் ஆசிரியரிடம் திட்டு வாங்கியதும் அதிகம். கொஞ்சக் காலம் போனதும் புரிந்தது, அந்தத் தூக்கம் பருத்தித்துறை தோசை அல்லது வெள்ளையப்ப மகிமை என்று. என்னதான் வாத்திமாரிடம் அடிவாங்கும் அபாயம் இருந்தாலும், தோசை, வெள்ளையப்பம் சாப்பிடும் அந்த அபாரமான அனுவத்தை விட்டுக்கொடுக்க முடியவில்லை. நான் இன்னொருமுறை ஊர் மீளும்போது அந்த அபார அனுபவம் கிடைக்குமா என்பது சந்தேகம். யாராவது சமீபத்தில் பருத்தித்துறைப் பக்கம் போயிருந்தால் சொல்லுங்களேன்... தோசையும், வெள்ளையப்பமும், தட்டவடையும் இன்றைக்கும் விற்கிறார்களா??