Author: Subankan
•7:04 AM

“என்ன அன்டி, கையில பாக்கையும் காவிக்கொண்டு வந்திருக்கிறியள்? என்ன விசயம்?”
“ஒண்டுமில்லை, சண்முகமண்ணேன்ட கடையில நல்ல வெள்ளைச் சீனி வந்திருக்கு. கொழும்பு விலையைவிட கிலோ இருவது ரூவாதான் கூடவாம். அதுதான் வேணுமெண்டா வாங்கிவையுங்கோவெண்டு சொல்லிட்டுப் போக வந்தனான்”

எந்த ஒரு பொருளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைதான் இந்தக் கொழும்புவிலை. என்னதான் அதிகபட்ச விலை என்றாலும், தரைவழிப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பல கட்டுப்பாடுகளுக்கும் தடைகளுக்கும் இடையில் நடந்துகொண்டிருந்த கடல்வழிப் போக்குவரத்தாலும் இந்த விலை எங்களுக்கு எப்படியும் குறைந்தபட்ச விலையிலும் குறைவாகத்தான் இருக்கும்.ஊர்க்கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலை சமயங்களில் கொழும்பு விலையின் இரண்டு, மூன்று மடங்கைவிட அதிகமாக இருக்கும் சந்தர்ப்பங்களும் இங்கே சகஜம். இந்த விலை அதிகரிப்பை பொருளின் தேவை, கடல்மார்க்கத்தில் எடுத்துவர ஆகும் செலவு, யுத்த சூழ்நிலை முதற்கொண்டு கடையில் இருக்கும் பதுக்கல் வரை தீர்மானிக்கும்.

இந்தக் கொழும்புவிலை என்பது பல ஆண்டுகாலப் பாவனையால் நம்மவர்கள் இரத்தத்தில் ஊறிவிட்டது. எந்தப் பொருளையும் அதன் கொழும்புவிலையுடன் ஒப்பிடுவதும், அதுகுறித்து அடுத்தவருடன் பேசிக்கொள்வதும், அதேபோல கொழும்புக்கு வருபவர்கள் குறைந்தவிலையால் தேவைக்கு அதிகமாக வாங்க விரும்புவதும் எம்மவரிடையே இயல்பான ஒன்று.

இந்த விலைவித்தியாசத்தால், கொழும்பிலிருந்து ஊருக்குப் பயணப்படும் ஒவ்வொருவரும் தமது சக்திக்கும் அப்பாற்பட்ட பொருட்களை தம்முடன் எடுத்துச்செல்வார்கள். மாரளவு தண்ணீரில், தலையில் பொருட்களைச் சுமந்துசென்றும், படகிலும், பின் முன்னாலும் பின்னாலும் பலகை அடித்த மண்ணெய் மோட்டார்சைக்கிளிலும் கொம்படி ஊரியான் பாதையில் பயணித்து, வீடு வந்து சேர்கையில் பொருட்கள் தமது உண்மையான தன்மையையே பல நேரங்களில் இழந்துவிட்டிருந்தாலும், கொழும்பிலிருந்து வந்தால் இப்படியாக பொருட்கள் காவிவருவதும், அதை உறவினர், அயலவருடன் பகிர்வதும் ஏறத்தாள எழுதப்படாத சட்டம்போன்றது.

பல ஆண்டுகளாக நம் பாவனையில் இருந்து இந்தக் கொழும்புவிலை நம் வட்டாரச் சொற்களில் ஒன்றாகவே மாறிவிட்டது. தரைவழிப் போக்குவரத்துகள் சீர்செய்யப்பட்டு, விலை வித்தியாசங்கள் இல்லாமல் போய்விட்ட இன்றும்கூட,
“மச்சான் பைக் ஒண்டு பாத்திருக்கன், இங்கை 1.60 சொல்லுறாங்கள். அங்க எவ்வளவு போகுதெண்டு ஒருக்காப் பாத்துச் சொல்லுறியா”
 என்ற நண்பனின் அழைப்பிலும், ஆப்பிள்களை பைக்குள் அடைந்துகொண்டு யாழ் செல்லும் ஆச்சிகளிலும், “கொழும்பு விலையில்…” என்று ஆரம்பிக்கும் யாழ்ப்பாணத்துப் பத்திரிகை விளம்பரங்களிலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது இந்தக் கொழும்பு விலை.

Author: Pragash
•9:31 AM
இடுப்பில் இருந்து நழுவிக்கொண்டு இருக்கும், பொத்தான் அறுந்த அரைக்கால் சட்டையை இறுக இழுத்து பிடித்துக்கொண்டு, அரிவி வெட்டுக்கு ஆயத்தமாய், மஞ்சள் நிற நெல்மணிகளின் பாரம் தாங்காமல் கதிர் தலைசாய்த்து படுத்திருந்த வயல் வரப்புகளின் வேகமாய் ஓடிக் கொண்டிருக்க, சுருக் .காலில் ஏதோ குத்த வேகம் தடைப்பட்டது. ஆ வென லேசாக முனகிக் கொண்டு ஒற்றை காலில் கெந்தியபடி, பாதத்தை தூக்கி பார்த்தால். அதில் எதுவும் இல்லை. அப்படி எண்டால் குத்தினது நெருஞ்சி தான். வரப்பில் இருந்த நெருஞ்சி செடியை பார்த்ததும் முள்ளு குத்தின வலி மறந்து போக, மெல்ல குனிந்து அதன் சின்னஞ்சிறு இலைகளை மெதுவாக விரல்களால் வருட, இலைகள் மெதுவாக ஒடுங்கி சுருங்கும் வடிவை பார்த்தபடி மனம் அதில் லயித்தது.
என்ன ராசா தொட்டா சிணுங்கி காலில குத்திப்போட்டுதோ? தொட்டாசிணுங்கி மேலிருந்த கவனம் கலைய நிமிர்ந்து பார்த்தேன்.கசங்கிய நைந்த நூல்புடவையும் தலையில் இறுக கட்டிய முண்டாசுத்துணி, கையில் அரிவிச்சத்தகத்துடன் ஒரு மூதாட்டி புன்முறுவலுடன் கேட்டபடி வரப்புகளில் போய்க்கொண்டிருந்தார். பின்னால் ஆண்களும் பெண்களுமாக நாலைந்து பேர் கையில் சத்தகங்களுடன் வரிசையாக போய்க்கொண்டிருந்தனர். எங்கேயோ அரிவி வெட்டுக்கு போய்க்கொண்டிருக்கினம் போல. ஏற்கெனவே ஆங்காங்கு வெட்டு நடந்துகொண்டு இருந்ததை பார்க்க முடிந்தது. சிலவயல்களில் வெட்டு முடிந்து நெல் போர் (சில இடங்களில் சூட்டுப்போர் என சொல்கிறார்கள்) குவித்து வைத்திருந்தார்கள். மாரிமழையில் வெள்ளம ததும்பி, தளம்பி நின்ற பச்சைப்பசேல் என கண்ணுக்கு குளிர்ச்சியான வயல்வெளிகள் மாறி, வெள்ளம் வற்றி மஞ்சள் கதிர் காற்றிலாடிய காட்சிகளை காண இனி அடுத்த வருடம் வரைக்கும் காத்திருக்க வேணும்.பெரும்பாலும் யாழ்ப்பாணத்துக்காணிகளில் மாசி நடுப்பகுதியில் அரிவி வெட்டு துவங்கி விடும். 

ஈழத்து விவசாயப்பிரதேசங்களில் நெற்செய்கை இரண்டு போகங்களில் செய்யப்படுவதுண்டு. ஒன்று பெரும்போகம், பருவமழையை அண்டியகாலங்களில் செய்யப்படுகிறது. யாழ்ப்பாணத்துகாணிகளில் பெரும்பாலானவை பெரும்போக காணிகள். மற்றது சிறு போகம், ஆறு குளங்களை அண்டிய பிரதேசங்களில் செய்யப்படுவது. வன்னி பிரதேசங்களில் இரண்டு போகமும் செய்யப்படுகிறது. யாழ்ப்பாணத்தில ஆறு குளம் ஏதும் இருக்கோ? நான் அறிஞ்ச வரைக்கும் வழுக்கையாறு ஒன்று தான் யாழ்ப்பாணத்தில இருக்குது என நினைக்கிறேன். ( வீட்டுக்கிணத்தில வளர்க்கிறதுக்கு, வழுக்கையாத்தில போய் கெளுத்தி மீன் பிடிச்சுக்கொண்டு வந்து வீட்டு கிணத்தில விட்ட அனுபவம் ஒன்றிருக்கு.). இப்ப பெரும்போக அறுவடை தான் நடந்து கொண்டிருந்தது. பக்கத்தில அரிவி வெட்டிக்கொண்டிருந்த ஒரு வயல் பக்கமாய் போய் வரப்பில் அமர்ந்து கொண்டேன். வெட்டுபவர்கள் குனிந்த நிலையிலேயே வெட்டும் லாவகமும், ஒரு கை கதிர்களை அடியோடு சேர்த்து கொத்தாக பிடிக்க மறுகையில் இருந்த அரிவி சத்தகம் சரக் சரக் எனும் சத்தத்தோடு கதிர்களை அறுக்கும் வேகமும் பார்க்கும் போது வியப்பாக இருக்கும். 

என்னடா தம்பி பார்க்கிறாய்? நீயும் வெட்டிப்பாக்கிறியா? வயலில் வெட்டிக்கொண்டிருந்த பெரியவர் அழைக்கவும், நானும் வலு சந்தோசமா ஓடிப்போய் அவரின் கையில் இருந்த சத்தகத்தை வாங்கிக்கொண்டேன். பார்த்து வெட்டு கையை கிய்யை அறுத்துப்போடாதை சொல்லிக்கொண்டே சத்தகத்தை தந்தார். பார்க்கும்போது இலகுவாய் ப்பூ இவ்வளவுதானா என தெரியும் அவ்வேலை எவ்வளவு கடினமானது என சத்தகத்தை கையில் வாங்கிய சிலநிமிடங்களில் விளங்கியது. ஓரடி வெட்டுவதற்குள் முதுகு விண் விண்ணென்று வலித்தது. இவர்கள் வயல் வேலையிலேயே தொடர்ந்து ஈடுபடுவதால் இவர்களுக்கு இது பழக்கமாகி விட்டிருக்கும். நானும் மெல்ல முதுகை நிமிர்த்தவும் பெரியவர் சிரித்தார். சத்தகத்தை அவர் கையில் கொடுத்து விட்டு மெல்ல நழுவினேன். உச்சிவேளை நெருங்கும் சமயத்தில் கிட்டத்தட்ட அரைவாசி வயலுக்கு மேல் வெட்டி முடித்திருந்தார்கள். வெட்டிய நெல்கதிர் கற்றைகள் அழகாக அடுக்கி வைத்திருந்தனர். இனி மத்தியான சாப்பாட்டிற்கு பிறகு போரடிப்பு நடக்கும் இதுமுதல்அடிப்பு.ஆண்கள் அதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். 

வயலின் ஒரு மூலையில் பெரிய சாக்குப்படங்கு ஒன்று விரிக்கப்பட்டிருக்க, அதன் மேல் ஒருவர் கயிற்று துண்டொன்றுடன் ஆயத்தமாக நின்றிருந்தார். பெண்கள் ஆங்காங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்த கதிர்களை (நெற்போர்) பெரிய கத்தையாக ஒன்று சேர்த்து தலையில் சுமந்து கொண்டு வந்து படங்கின் மேல் நின்று கொண்டிருந்தவரிடம் கொடுக்க, அவர் அதை கையில் வைத்திருந்த கயிற்றால் ஒரு சுற்று பிடித்து வாங்கி படங்கின் மீது ஓங்கி நாலைந்து தரம் அடித்தபின் அந்த கத்தையை படங்கிற்கு வெளியில் ஆயத்தமாக நிற்கும் இருவரிடமும் எறிய, அவர்கள் லாவகமாக பிடித்து வைக்கோல் போர் அடுக்குவது போல் வட்டமாக கூம்பு வடிவில் அடுக்கி (சூடுவைப்பு) கொண்டிருந்தனர். அதில் இன்னும் கதிர்கள் உதிராமல் இருந்தன. படங்கில் நிற்பவர் கதிர்கத்தையை அடித்த இடத்தில் நெல்மணிகள் குவிந்து கொண்டிருந்தன. 

வேலை சுறுசுறுப்பாகவும் கலகலப்பாகவும் நடந்து கொண்டிருந்தது. ஒரு வழியாக மாலை நான்கு மணியளவில் கதிரடிப்பு நிறைவு பெற்றதும், இன்னொருவர் கொண்டுவந்திருந்த சுளகில் நெல்லை அள்ளி தலைக்கு மேல் தூக்கி பிடித்து காற்று வீசும் திசையில் சிறிது சிறிதாக கொட்டிக்கொண்டிருந்தார். அதற்கு பெயர் நெல் தூற்றுதல். "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" எண்டொரு பழமொழி கேள்விப்பட்டிருப்பியள். சந்தர்ப்பம் கிடைக்கும் போதே காரியத்தை முடித்துக்கொள் என பொருள் வரும்படியான பழமொழி அது. அந்த பழமொழிக்கு அடிப்படையாக இருக்கும் ஒரு செயல் இது தான். கொட்டும்போது நெல்மணிகள் நேராக கீழே விழ அதில் இருந்த வைக்கோல் தூசிகள் அகன்று வீசும் காற்றின் திசையில் பறந்து போய்க்கொண்டிருந்தன. 


எல்லாம் முடிந்தாயிற்று. வயல் சொந்தக்காரர் தயாராக கொண்டு வந்திருந்த சாக்குப்பைகளில் குவிந்திருந்த நெல்லை போட்டு கட்டி, மாட்டுவண்டியில் ஏற்றிவிட மாடுகள் மெல்ல வீடு நோக்கி நகரவாரம்பித்தன. காலையில் கதிர்கள் தலைசாய்த்து படுத்திருந்த வயலில் இப்போது பத்து பன்னிரண்டு அடி உயரத்தில் பிளாஸ்டிக் படங்கால் மூடிக்கட்டப்பட்ட சூட்டுப்போர் ஒன்று தலை நிமிர்ந்து நின்றிருந்தது. அறுவடையான வயலில் இப்போது வெண்கொக்குகளும், புறாக்களும் காகங்களும் மேய்ந்து கொண்டிருந்தன. யாழ்ப்பாணத்து காணிகள் எல்லாம் பரப்புக்கணக்கில் தான் அளவிடப்படுகின்றன. வேறு அளவீடுகள் ஏதும் இருந்தால் சொல்லுங்கோ. ஏக்கர் கணக்கு காணிகளை பாக்கிறதென்டால் வன்னிக்கு தான் போகவேணும். 


அரிவி வெட்டு = அறுவடை, அரிவிச்சத்தகம்= அறுவடைக்கு பாவிக்கிற அரிவாள் இது இடத்துக்கிடம் பெயர் மாறுபடலாம். வேறு பெயர்கள் தெரிந்தால் சொல்லுங்கோ. படங்கு= இது சாக்குகளை இணைத்து செய்வது. சிலபேர் போரடிப்புக்கு என பிரத்தியேகமாய் செய்த பாய் பாவிப்பினம். அதை கதிர்ப்பாய் என்று சொல்லுவினம். போரடிப்பு= வெட்டினவுடன் வயலிலேயே கதிர்களை அடித்து நெல்லை சேகரிப்பது. ஆனாலும் எல்லா நெல்லும் இதில் உதிர்ந்து விழாது. அடுக்கி சூடு வச்சு நன்றாக காய்ந்த பின்னர் ஓரிரு மாதத்திற்கு பிறகு மாடுகளை வைத்து மிதித்து நெல்மணிகளை உதிரவைப்பது சூடடிப்பு. இதை பற்றி பிறகு நான் எழுதுகிறேன். ஈழத்தில் பெரும்பாலும் ஆங்கில நாள்காட்டி முறை பயன்படுத்தினாலும் விவசாய செய்கைகளுக்கு தமிழ் நாள்காட்டி முறையே பயன்படுத்தபடுவது வழக்கம்.          

Author: தமிழ் மதுரம்
•7:53 AM
அனைவருக்கும் வணக்கம்! உங்கள் அனைவரையும் மிக நீண்ட நாட்களின் பின்னர் ஈழத்து முற்றத்தின் வாயிலாக ஒரு பதிவோடு சந்திப்பதில் மிக மகிழ்ச்சியடைகின்றேன்! இனிப் பதிவுக்கு வருவோம்.‘டேய் உனக்குச் ’’சொன்னானெல்லே. இது பிழை எண்டு?
என்ன மச்சான் கதைக்கிறாய்? நான் சொல்லுறன், இந்தத் தேற்றத்திற்கு இது தாண்டா விடை.
உனக்கென்ன லூசே. முதல்லை தேற்றத்தின்ரை சமன்பாடை இன்னும் நிறுவவே இல்லை. அதுக்குள்ளை வந்து ’’கதை விடுறியே?
நல்லாத் தான் ’’புலுடா விடுறாய்’’ மச்சான். நான் சொல்லுறன் A+B=C இது தானே மச்சான் விடை. என்ன டா?
உதோ விடை. உன்னைக் ’’கொம்மா கொப்பா அடிச்சு வளக்கேல்லையோ? ’’அறளை பேந்த மாதிரி வந்து அலட்டுறாய்? ’’நீயும் உன்ரை மோட்டுப் புத்தியும். வாயை மூடிக் கொண்டு வந்த வழியைப் பாரு மச்சான்.


மேற் குறித்த ஒரு உரையாடல் எங்கடை மக்கோணாப் பள்ளிக்கூடத்திலை கணித பாட வகுப்பிலை நடந்ததாக நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஆனாலும் மேலே உள்ள உரையாடலில் இருந்து எமது ஈழத்தில் அன்றாடம் இடம் பெறும் சம்பாஷணைகளின் போது பயன்படுத்தப்படும் ஒரு சில சொற்களினை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளலாம். இனி அச் சொற்களிற்குரிய பொருள் விளக்கத்தினைப் பார்ப்போம்:சொன்னானெல்லே:
இது ஏற்கனவே நான் உங்களுக்கு ஒரு விடயத்தினைச் சொல்லியிருக்கிறேன் என்ற பொருள் பட வரும் ஒரு வசனம்.


’’கதை விடுறியே: கதை விடுதல்/ கதையளத்தல் எனும் பொருளிலும் இது வரும். இதனைத் திரைப்படங்களில் ‘’ஓவராப் பீலா விடுறியே என்ற பொருளிலும் பயன்படுத்துவார்கள். இச் சொல்லின் பொருளானது தனக்குத் தான் எல்லாம் தெரியும் எனப் பொய் சொல்லுபவர்களைக் குறிக்கப் பயன்படும். அதிகம் படித்தவர்கள் போல தாங்களே முந்திக் கொண்டு பதிலளிப்பார்கள். ஆனால் ஒரு சில இடங்களில் சறுக்கி விழுபவர்களைக் குறிக்கவும் இச் சொல்லினை ஈழத்தில் பயன்படுத்துவார்கள்.


’’கொம்மா கொப்பா அடிச்சு வளக்கேல்லையோ: இது அம்மா, அப்பா அடி போட்டு வளர்க்கவில்லையே எனும் பொருளில் வரும். அநேகமாக அனைவருக்கும் தெரிந்த வார்த்தை இது.’’அறளை பேந்த மாதிரி வந்து அலட்டுறாய்?: இந்தச் சொல்லுக்குரிய சரியான அர்த்தம் எனக்குத் தெரியாது. ஒரு விடயத்திற்குச் சம்பந்தமில்லாமல் கதைப்பவர்களைக் குறிக்க இச்சொல்லினைப் பயன்படுத்துவார்கள் என நினைக்கிறேன்.


’’நீயும் உன்ரை மோட்டுப் புத்தியும்: இது அதிகமாகக் கோபப்படுவர்கள், கொஞ்சம் உணர்ச்சிவசப்படுகிறவர்கள் பாவிக்கிற வசனம். மோட்டுப் புத்தி என்பது- அறிவில்லாதவர்களினைக் குறிக்கப் பயன்படும். அறிவில்லாதவர்கள் ஆலோசனை நடத்தினால் எப்படி இருக்குமோ அது போலத் தான் உன்னுடைய அறிவும் எனும் பொருளில் இச் சொல்லினை எமது ஈழத்தில் உபயோகிப்பார்கள்.‘’ஆரடா உங்கை... ஈழத்து முற்றத்திலை வந்து மோட்டுப் புத்தி பற்றி கதைக்கிறது?? எடடா அந்தப் பொல்லாங் கொட்டண்ணை’ என ‘உம்மாண்டித் தாத்தா வெருட்டுவது கேட்கிறது. அவர் வர முதல் நான் வெளிக்கிடட்டே:)))
Author: மணிமேகலா
•3:35 PM

கொட்டைப் பெட்டி;-

யாழ்ப்பாணத்து வாழ்க்கை முறையில் பனையும் பனை சார்ந்த பொருட்களும் பெறும் முக்கியத்துவம் பற்றி பல பதிவுகள் சிறப்பான முறையில் வெளி வந்திருக்கின்றன.அதிலொன்று இந்தக் கொட்டைப் பெட்டி.

பனையோலையில் செய்யப் படும் மிகச் சிறிய, கலைத்துவம் வாய்ந்த, அழகழகான வண்ணங்களில் கிடைக்கும் கொட்டைப் பெட்டிகளின் பயன்பாடு இக்காலங்களில் மிகக் குறைந்து விட்டது அல்லது இல்லை என்றே சொல்லலாம்.

முன்னைய காலங்களில் காசுகள் வைக்கும் ஒன்றாக; வெத்திலை பாக்கு வைக்கும் பெட்டியாகப் பொதுவாகப் பெண்களால் பாவிக்கப் பட்டது. அவை உட்புறமாக 2, 3, அடுக்குகளாகவும் காணப்படும்.அவற்றை ஒன்றின் மீது ஒன்றாக உட்புறமாகச் சொருகி வைத்திருப்பார்கள்.அதனை விடச் சற்றே பெரிதான மூடியினால் மூடி பின் புறம் கொய்யகம் வைத்து உடுத்திய சேலையின் இடுப்புப் பக்க சேலை மடிப்பொன்றில் பத்திரமாக வைத்துக் கொள்வார்கள்.

அந்தக் காலத்து யாழ்ப்பாணப் பெண்களின் wallet இது தான்.

ஆணகள் வேட்டி மடிப்புகளுக்குள்ளும் சேட் பொக்கட்டுக்களுக்குள்ளும் தம் பொருட்களைப் பத்திரப் படுத்தி இருப்பார்கள் என்று தோன்றுகிறது.
Author: கானா பிரபா
•10:16 PMஈழத்தின் யாழ்மண்ணில் உறையும் பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின் கொடியேற்ற நிகழ்வுகள் கடந்த ஜூன் 1 ஆம் திகதி செவ்வாய்கிழமை ஆரம்பமாகி, நேற்று ஜீன் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விசேட திருப்பலியோடு திருச்சொருப பவனியும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பெருநாள் இந்த ஆண்டோடு 160 ஆவது ஆண்டாகச் சிறப்புற நடந்தது குறிப்பிடத்தக்கது. நேற்றைய நிகழ்வில் காலை 5.15 இற்கு முதலாவது திருப்பலியைத் தொடர்ந்து காலை 6.30 மணிக்கு திருவிழாத் திருப்பலியினை யாழ் ஆண்டகை திரு தோமஸ் செளந்தரநாயகம் அவர்கள் தலைமை தாங்கி ஒப்புக் கொடுத்திருந்தார். மாலை 4.30 மணிக்கு திருச்சொரூப பவனி இடம்பெற்றிருந்தது.


காலை 6.30 மணிக்கு இடம்பெற்ற திருவிழாத் திருப்பலியின் சிறப்பு அஞ்சலை எமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் திருமதி சோனா பிறின்ஸ், திரு பிறின்ஸ் இம்மானுவேல் இணைந்து தயாரித்து வழங்கிய இந்த நிகழ்வில் யாழில் இருந்து யாழ் திருமறைக்கலாமன்றத்தின் அண்ணாவியார் திரு.ஜெசிமன் சிங்கராயர் அவர்கள் நேரடி வர்ணனையை திரு தாசீரியர் அவர்களின் தொழில்நுட்ப உதவியோடு வழங்கியிருந்தார். இரண்டரை மணி நேரமாக நடைபெற்றிருந்த இந்தச் சிறப்பு ஒலிப்பகிர்வை உலகெங்கும் வாழும் புனித அந்தோனியார் பக்தர்கள் கேட்டுப் பயன்பெறும் வகையில் அதனை இங்கே தருகின்றேன். பதிவில் இடம்பெறும் ஒளிப்படங்கள் இந்த ஆண்டு இடம்பெற்ற பெருவிழாப் படங்களாக பாஷையூர் இணையத்தில் இருந்து நன்றியோடு பகிரப்படுகின்றது.Author: சஞ்சயன்
•9:26 AMதம்பி கானா பிரபாவின் ஊரைத் கடந்த போது அவரின் ஞாபகம் வந்ததால் நண்பரின் உதவியுடன் இந்தப் படங்களை எடுத்துக்கொண்டேன்.

இது மடத்துவாசல் பிள்ளையார் கோயில்

இது மடத்துவாசல் பிள்ளையார் இன் தம்பீன்ட கோயில்
இது கானா பிரபா வீட்டுக்குத் தெரியாமல் படம் பார்த்த காலிங்கன் தியட்டர்.
(தற்போது இது தியேட்டராக இயங்கவில்லையாம்)பிரபா தம்பீ.. நீர் கேட்ட மாதிரி பிரதர் எண்டத  மாத்தினன்.. ஆனா புதிதாய் மீண்டும் பிரசுரம் ஆகியிருக்கே.. காப்பாத்து ராசா...
Author: Pragash
•8:42 AM
இந்த வசனத்தொடர் ஈழத்து பேச்சு வழக்கில் மாசி மாதங்களில் இடம்பெறும் ஒரு வசனம். வருடத்தின் புரட்டாசி மாசத்தில் ஆரம்பிக்கும் மழை, புதிய வருடம் தை மாசத்தில் ஓரளவிற்கு முடிவிற்கு வந்திடும். அதுக்கு பிறகு பங்குனி வெய்யில துவங்க முன்னம் மாசி மாதத்தின் இரவுகளில் பனி கொட்ட துவங்கி விடும். இரவில் படுக்கைக்கு போகேக்குள்ள தலையணையும், போர்வையும் தலைமாட்டில தான் இருக்கும். பிறகு நேரம் போக போக தலையணை ஒரு பக்கம், போர்வை ஒரு பக்கம், பாய் ஒரு பக்கம், நான் ஒரு பக்கம் கிடப்பன். பின்னிரவு தாண்டி நிலம் குளிரும்போது தான் தெரியும், நான் அறை முழுக்க பிரதட்டை அடிச்சுக்கொண்டு இருக்கிறன் எண்டது.

அதுக்கு பிறகுதான் தலையணை, போர்வை, பாய் எங்கெங்க கிடக்குதெண்டு இருட்டுக்குள்ள கையை காலை போட்டு துழாவி கண்டு பிடிச்சிடுவன். அதுக்குள்ளை அம்மாவிட்டை ஒரு குட்டும், தம்பியிட்டை ஒரு எத்தும் வாங்கியிருப்பன். மெல்ல மெல்ல விடியத்துவங்கும். விடியக்காலம்பிறை நாலரை அஞ்சு மணிக்கெல்லாம் எழும்பி படிக்கவேணுமெண்டு அம்மாவின்ரை ஓடர். மீற முடியாது. அந்த பனிக்குளிருக்குள்ளை எழும்ப மனம் வருமே?. அந்த குளிருக்குள்ளை போர்வையின்ரை ஒரு பக்கத்தை நல்ல இறுக்கமா இழுத்து காலுக்குள்ளை வைச்சுக்கொண்டு, இன்னொரு பக்கத்தை இழுத்து தலைமாட்டுக்குள்ளை செருகி, ஒரு கூடாரம் மாதிரி ஆக்கி, குறண்டிக்கொண்டு குறட்டை விடுகிறது ஒரு தனி சுகம் தான். ஆனாலும் அம்மா விடமாட்டா. டேய் எழும்படா எழும்பி படி எண்டு அதட்டிக்கொண்டே இருப்பா. எழும்பாட்டி சிலவேளை நாயே பேயே எண்டு திட்டெல்லாம் கூட விழும்.   

திட்டு விழ விழ தான் அந்த பனிக்குளிர் படுக்கை இன்னும் சுகமாய், இன்னும் கொஞ்சநேரம் படுத்திருக்க சொல்லும். அம்மாவின்ரை ஒவ்வொரு அர்ச்சனைக்கும் அங்கை புரண்டு இங்கை புரண்டு சோம்பல் முறிக்கையுக்குள்ளை, சரியா அஞ்சுமணிக்கு வயல்வெளி நடுவுல இருக்கிற ஐயனார் கோவில் மணி அடிக்கவும், வீட்டுச்சாவல் இன்னொருக்கா கூவவும் சரியாயிருக்கும். இனி இதுக்கு மேல படுக்க முடியாது, எழும்பித்தான் ஆகோணும். இல்லையெண்டால் வீட்டில குடிக்க வச்சிருக்கிற ஒரு குடம் தண்ணியால படுக்கையில வச்சே அம்மா குளிப்பாட்டி போடுவா. இருக்கிற குளிருக்கை இந்த வம்பு வேண்டாமே.  விடியக்காலமை இருட்டுக்குள்ளை கிணத்தடிக்கு போக முடியாததால, முதல் நாளிரவே ஒரு பெரிய வாளியில தண்ணி எடுத்து கொண்டு வந்து முன்வாசல் படிக்கு பக்கத்தில வச்சிடுவா. பனியோடை பனியாய் அதுவும் சில்லிட்டு போய் இருக்கும்.   

வெட வெடக்கிற குளிருக்குள்ளேயே எழும்பி, போட்டிருந்த முழுக்கைச்சுவெட்டரை, கைகள் இரண்டையும் முழங்கை வரைக்கும் இழுத்துப்போட்டு, வாசல் படியில இருந்த தண்ணியில வேகமா வாயை கொப்புளிச்சுக்கொண்டு, இரண்டு மூண்டு தரம் சளார், சளாரெண்டு முகத்தில தண்ணி அடிச்சு கழுவிப்போட்டு, துண்டால துடைச்சுக்கொண்டு உள்ளை போக அம்மா சுடச்சுட ஆட்டுப்பால் தேத்தண்ணி போட்டுத்தர, பனிக்குளிருக்கு சூடான தேத்தண்ணி இதமாய் தானிருக்கும். பிறகென்ன மண்ணெண்ணெய் விளக்கை கொளுத்தி வச்சிட்டு, படிக்க துவங்குவன். என்னதான் அந்த பணிக்குளிருக்குள்ளை எழும்ப பஞ்சிப்பட்டாலும், எழும்பினதுக்கு பிறகு கோயில் மணிச்சத்தத்தையும், விடியக்காலை குருவிகள், பறவைகளின்ரை கீச்சுக்குரல் சத்தங்கள், வீட்டுக்கூரையில இருந்து சேவல் செட்டையை பட படவெண்டு அடிச்சு கூவும் ஒலிகள, எங்கேயோ தூரத்து கோவிலில் கேக்கும் சுப்ரபாதத்தையும் கேட்டுக்கொண்டு அந்த விடிகாலை நேரத்தை அனுபவிக்கிறதில எனக்கு ஒருக்காலும் அலுக்காது.

ம்ம் இனி விடிஞ்சுட்டுது, ஆறரை ஆச்சுது போல. இனி குளிக்கவேணும். எட்டுமணிக்கு பள்ளிக்கூடத்துக்கு வெளிக்கிடவேணும்.   கையில அண்ணா பல்பொடியையும், துவாய், கைவாளியையும் எடுத்துக்கொண்டு மூலை வளவு கிணத்தடிக்கு போக ஆயத்தமாக, பின்னால அப்பாச்சி " டேய் தம்பி தலையில ஏதாவது துண்டை கட்டிக்கொண்டு போ அப்பு, வெளியில ஒரே பனிப்புகார் மூட்டமாய் இருக்கு. மாசிப்பனி மூசிப்பெய்யுது. குளிர் காதுக்குள்ளை போனால் தடிமன் பிடிச்சிடும்."  அப்பாச்சி சொன்ன படி துண்டை கட்டிக்கொண்டு கிணத்தடிக்கு போறன். சுருட்டு குடிக்கிறவையால மட்டும் தான் ஸ்ரைலா சுருள் விட முடியுமே?. எங்களாலயும் முடியும். எப்பிடி எண்டு கேக்கிறீங்களோ? மாசிப்பனியில நல்லா மூச்சை இழுத்து வாயால விட்டுப்பாருங்கோ. உங்கடை வாயில இருந்தும் புகை சுருள் சுருளாய் வெளிக்கிடும். பனிக்காலத்தில எனக்கு பிடிச்ச விளையாட்டுக்களில இதுவும் ஒண்டு. கிணத்தடியில நிண்டு பார்த்தால் முன்னாலை புகார் மூட்டத்தோடை அரிவிவெட்டுக்கு ஆயத்தமாய் மஞ்சள் நிற நெல்கதிர்மணி பாரம் தாங்காமல் தலைசாய்த்து வயல்வெளி பரந்து விரிகிறது. கிழக்கு திக்கில் அடிவானத்தில் சூரியன் சிவப்புக்கோளமாய், பெரிசாய் மெல்ல மெல்ல பனி புகாருக்குள்ளாலை எட்டிப்பார்க்கிறான். அண்ணா பல்பொடியை வச்சு பல் தேச்சுக்கொண்டே சூரிய உதயத்தையும் வடிவாய் பார்த்துக்கொண்டு எவ்வளவு நேரம் தான் நிற்கிறது. 

அண்ணா பல்பொடி, பல்லு தீட்டிநானோ இல்லையோ அரைவாசி வயித்துக்குள்ளை போயிட்டுது. அவ்வளவு இனிப்பு.  இனியும் லேட் பண்ண ஏலாது. அம்மா பூவரசங்கம்போடை வந்தாலும் வந்திடுவா. தண்ணியை அள்ளி தலையில ஊத்தவா, விடவா?. உடம்பெல்லாம் வெடவெடக்குது. டக்கெண்டு ஒரு வாளி தண்ணியை உடம்பிலை ஊத்தினால் எல்லாம் சரியாய் போய் விடும். பனிக்குளிரில கிணத்து தண்ணி சூடும். எப்பிடியோ குளிச்சு முடிச்சு வீட்டுக்கு வந்து, ஆறிப்போன தேத்தண்ணியை மடக்குமடக்கெண்டு குடிச்சிட்டு, பாணும் சம்பலும் சாப்பிட்டது போக மிச்சத்தை கட்டிக்கொண்டு, புத்தக பையையும் தூக்கி சைக்கிள் கரியரில வச்சு கொண்டு, இரண்டு பக்கமும் வயல் நடுவால போற ரோட்டில பள்ளிக்கூடத்துக்கு வேகமாக சைக்கிளை மிதிக்கிறன்.  காலமை நேர பனிக்காத்து இரண்டு காதுகளிலும் மெல்ல இரைகிறது. பனிப்புகார் இன்னும் கலையவில்லை. இண்டைக்கு பனி கடுமையாய் இருக்கு. வெய்யிலும் நல்ல காட்டு காட்டுமோ?. இண்டைக்கு நாடு விட்டு நாடு வந்தாலும், பனி விழுகின்ற நாடுகளில வாழ்ந்தாலும், சொந்த ஊரில வெடவெடக்கிற பனிக்குளிரில, வயல் வரம்புகளில் நடக்கையுக்குள்ள, புல்லில இருந்து சொட்டிக்கொண்டிருக்கிற பனித்தண்ணியில கால் படேக்கை கிடைக்குமே ஒரு சில்லிட்ட உணர்வு. அது சொந்த நாட்டை தவிர வேறெந்த நாட்டிலையும் கிடைக்காத சொர்க்கம்.
Author: Pragash
•5:54 AM
என்ன மூர்த்தியர் இண்டைக்கு வேலியடைப்போ? ஒழுங்கையால போன சுந்தரம் மாமா கேட்டுக் கொண்டே சைக்கிளை விட்டிறங்கி அருகில் வந்தார். ஒமண்ணை நல்ல நேரத்தில தான் நீங்களும் வந்திருக்கிறியள். வந்து ஒருகை குடுங்கோவன், அதுக்கென்னப்பா நானும் வாறன். இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே நானும் வீட்டில சும்மா தான் இருந்தனான். சொல்லிக் கொண்டே சுந்தரம் மாமாவும் அப்பாவும் நானும் கதியால் வேலியில கிடந்த பழைய உக்கிப் போன கிடுகுகளை அறுத்து கொட்டி சுத்தப்படுத்திய பின்னர் வீட்டுக்கு பின்பக்க தாழ்வாரத்தில் அடுக்கி இருந்த கிடுகுகளை எடுத்து கொண்டு வந்து வேலி நீளத்துக்கும் அடுக்கி கொண்டிருக்கிறம்.

யாழ்ப்பாணத்தில் வசதியான ஆக்கள் எண்டால் வீட்டை சுத்தி மதில் எழுப்பியிருப்பினம். சில பேர் எண்ணை பீப்பாய் தகரத்தில வேலி அடைச்சிருப்பினம். நடுத்தர வர்க்க சாதாரண குடும்ப வீடுகளில் சுத்தி கிடுகுவேலியோ பனை ஓலை வேலியோ தான் இருக்கும். என்னதான் வீட்டை சுத்தி மதில் எழுப்பினாலும் அது இயற்கைக்கு மாறான சூழல் தான். கிடுகு,பனை ஓலை வேலி எண்டால் அந்த வீட்டுக்கும் வளவுக்கும் ஒரு தனி களையே வந்த மாதிரி இருக்கும். பனை ஓலையும் தென்னோலையும் யாழ்ப்பாணத்தில இலகுவாய் கிடைக்க கூடிய பொருட்கள் தான். பெரும்பாலும் கிராமப்புறங்களில் ஒவ்வொருத்தர் வீட்டு வளவிலும் ஒரு அஞ்சு பத்து தென்னை மரமோ, பனை மரமோ கட்டாயம் இருக்கும். எங்கடை வீட்டிலையும் ஒரு ஏழு தென்னை மரம் இருந்ததாய் நினைப்பு. ஒவ்வொரு நாளும் மரத்தில இருந்து விழும் காய்ஞ்ச தென்னோலையை அம்மா இழுத்து கொண்டு போய் கிணத்தடியில போட்டு விடுவா. 

குடும்பத்தில எல்லாரினதும் குளிப்பு முழுக்கெல்லாம் அதுக்கு மேல நிண்டுதான் நடக்கும் . அப்பத்தான் ஓலை நல்லா நனையும். காஞ்ச ஓலையில கிடுகு பின்ன முடியாது, நல்லா ஊறவேணும். ஒரு அறுபது எழுபது மட்டை சேர்ந்தாப்போல ஏதாவது ஒரு ஞாயிற்று கிழமை கிடுகு பின்ன முற்றத்தில இறங்கிடுவம். கிடுகு பின்னிறதே ஒரு தனிக்கலை தான். அம்மா பின்னும் போது நானும் முதுகுக்கு பின்னால நிண்டு கொண்டு எனக்கும் கிடுகு பின்ன பழக்கி விடும்படி நச்சரிப்பதுண்டு. நச்சரிப்பு தாளாமல் அவவும் சொல்லி குடுக்க ஏழு வயசிலேயே நானும் நல்லா கிடுகு பின்ன பழகீட்டன். கிணத்தடியில இருந்து நனைஞ்ச தென்னோலையை முற்றத்து மண்ணில இழுத்து கொண்டு வந்து பலகை கட்டையை போட்டு குந்தி இருந்து பின்னும் போது, முற்றத்து புழுதி மண்ணும் நனைஞ்ச ஓலை மணமும் சேர்ந்து கலவையாய் ஒரு அலாதியான வாசம் வரும் பாருங்கோ, அதெல்லாம் அனுபவிக்க குடுத்து வச்சிருக்கோணும்.   

பின்னி முடிச்ச கிடுகுகளை பத்திரமா ஓரிடத்தில் பாதுகாப்பா அடுக்கி வச்சு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் கிடுகுகள் சேர்ந்தவுடன் வசந்த கால ஆரம்ப நாளொன்றில் வேலியடைப்பு துவங்கும். வேலியடைப்பு எண்டு சாதாரணமா சொன்னாலும் அதுவும் ஒரு குடும்ப நிகழ்வு மாதிரித்தான். காலைமை இரண்டு பேர் மூன்று பேராக துவங்கும் வேலியடைப்பு நேரம் போக போக, தெரிந்த அயலட்டை சனங்களும், நண்பர்களும் கேட்காமலே உதவிக்கு வந்து சேர, ஒரு கலகலப்பான குட்டி கொண்டாட்டமாகவே மாறி விடும். இரண்டு பேர், வேலிக்கு உள்பக்கம் ஒராள், வெளிப்பக்கம் ஒராள், முதல் வரிசை கிடுகை வைத்து கட்டி கொண்டு போக, அடுத்த இரண்டு பேர் இரண்டாவது வரிசை கிடுகை வைத்து கட்டி கொண்டு பின்னால் வருவர். இதுக்குள் என் வயதொத்த சிறுசுகளின் வேலை கிடுகு எடுத்து குடுக்கிறதும், கிடுகை கதியாலுடன் சேர்த்து கட்டும் வரைக்கும் கதியாலோடை சேர்த்து பிடிக்கிறதும், குத்தூசியில கயிறு மாட்டி விடுறதும் எங்கடை வேலை.

வேலியடைப்புக்கு பாவிக்கிற குத்தூசி இரண்டு விதம் இருக்கும். சில பேர் மரத்தில செய்து வச்சிருப்பினம். சில பேர் அரை இஞ்சி கம்பியில செய்து வச்சிருப்பினம். கூர்மையாக இருக்கும் பக்கத்தில கட்டுக்கயிறு கோத்து விடக்கூடிய அளவில் சின்னதா ஒரு துவாரம் இருக்கும். வேலிக்கு வெளிப்பக்கம் இருந்து ஒருத்தர் குத்தூசியில கயிற்றை கோத்து வேலிக்கு உள்பக்கம் நிற்கும் எங்களிடம் "ஆ இந்தா" என குரல் கொடுத்தபடி அனுப்ப நாங்கள் கயிற்றை எடுத்து வைத்து கொண்டு குரல் கொடுக்க, அவர் குத்தூசியை எடுத்து கதியாலின் மறுபுறம் குத்த நாமும் கயிற்றை இழுத்து கோத்து விட்ட பிறகு "ஆ சரி" என குரல் குடுக்க மளமளவெண்டு வேலையும் நடந்து கொண்டிருக்கும். ஒரு புறம வேலியடைப்பு நடந்து கொண்டிருக்க, மறு புறம அயலில் யார் வீட்டில் மாடு கன்று போட்டது, ஆடு குட்டி போட்டதிலிருந்து அன்றைய அரசியல் வரைக்கும் அலசல் நடந்து கொண்டேயிருக்கும். 

இடையில் பதினோரு மணியளவில் அம்மா பெரிய பாத்திரத்தில் எலுமிச்சம்பழ தண்ணீருடன் வந்து பரிமாறவும் நேரம் சரியாயிருக்கும். அன்றைக்கு வேலியடைப்புக்கு உதவிக்கு வந்த எல்லோருக்கும் மதிய சாப்பாடும் எங்கள் வீட்டில் தான்.     இனிமையான பொழுதுகள் மீண்டும் வரப்போவதில்லையே.
Author: கானா பிரபா
•4:09 AM

"கோழி மேய்ச்சாலும் கோறணமெந்தில மேய்க்கோணும்"இது ஈழத்துப் பேச்சு வழக்கில் அதுவும் பழைய காலத்தவரிடையே அதிகம் புழக்கத்தில் இருந்த ஒரு முதுமொழி. கோறணமெந்து என்றால் என்ன என்று பலர் திக்கித் திணறக் கூடும். அதன் அர்த்தம் என்னவென்றால் கவர்ன்மெண்ட் என்ற ஆங்கிலப் பதத்தின் திரிந்த பேச்சு வழக்குச் சொல்லே "கோறணமெந்து" ஆயிற்று. இந்த முதுமொழியின் அர்த்தம் இனி உங்களுக்கு இலகுவாகவே புரியக் கூடும். அதாவது அரசாங்க உத்தியோகம் கிட்டுவதென்றால் அது பெரும் வாய்ப்பாகக் கருதப்பட்ட காலமது. எவ்வளவு சம்பளம், அல்லது அரசாங்க அலுவலகத்தில் என்ன உத்தியோகம் எல்லாம் பொருட்டாகக் கணிக்க மாட்டார்கள், அரசாங்க உத்தியோகம் என்றாலே போதும். அதற்குக் காரணம் நிம்மதியான, நிரந்தரப் பொருளாதார வாய்ப்பை அரசாங்க உத்தியோகம் ஒப்பீட்டளவில் மற்ற வேலைகளை விடக் கொடுக்கும் என்பதே ஆகும். முன்பெல்லாம் அரசாங்கப் பள்ளி ஆசிரியர்கள் என்றால் கேட்கவே வேண்டாம் வரிசை கட்டி திருமண வாய்ப்புக்கள் அவர்கள் கதவைத் தட்டுமாம்.

இன்றைய தலைமுறை ஈழத்தவரிடையே கோறணமெந்து என்பது எவ்வளவு தூரம் தெரிந்து வைத்திருக்கும் பேச்சு வழக்கு என்பது கேள்விக் குறி ஆயினும். இந்தக் கோறணமெந்து என்பதும் "கோழி மேய்ச்சாலும் கோறணமெந்தில மேய்க்கோணும்" என்ற முதுமொழியும் ஈழத்து மக்களின் முந்திய காலகட்டத்து பண்பாட்டுக் குறியாக இருந்த காரணத்தால் அதைப் பதிவு செய்கின்றேன். இந்த அரசாங்க உத்தியோகம் குறித்து தினகரன் (இலங்கை) நாளிதழில் ஜீவிதன் என்பவர் எழுதிய சுவையான பகிர்வை இங்கே தருகின்றேன்.


கண்ணை மூடு மட்டும் காசு!


‘கோழி மேய்ச்சாலும் கவர்மண்டில் மேய்க்க வேணும்!’ யாழ்ப்பாண மக்கள் மத்தியில் இப்படி ஒரு பேச்சு வழக்கு இருக்கிறது. ‘பிள்ளைக்குக் கல்யாணம் பண்றதெண்டாலும், கவர்மண்ட் மாப்பிள்ளையாகப் பார்க்க வேணும்’ என்பர். ஓர் அரசாங்க உத்தியோகத்தனுக்கு எந்தளவு ‘மவுசு’ இருக்கிறது என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

அரசாங்க உத்தியோகத்துக்கு ஏன் இந்தளவு மதிப்பும் மரியாதையும் கொடுக்கிறார்கள்? எல்லாம் ஓய்வு காலத்தில் கிடைக்கும் ‘பென்ஷன்’ பணம்தான் காரணம் என்று இலகுவில் கூறிவிடுவீர்கள். ‘கண்ணை மூடு மட்டும் கவர்மண்ட் காசு வரும்தானே!’ என்று ஒவ்வொரு அரச உத்தியோகத்தரும் தைரியமாக வாழ முடியும் என்று நம்பிக்கை கொள்ளலாம்.

இதனால், அரச உத்தியோகத்தரை மணந்த மனைவிமாருக்குச் சற்று ‘ராங்கி’ அதிகம் என்கிறார்கள் ‘பென்ஷன் மாப்பிள்ளைகள்’. கணவன் இறந்தாலும் பரவாயில்லை! பாதுகாப்புக்குத்தான் அவரது ‘பென்ஷன்’ இருக்கிறதுதானே! என்று எண்ணும் பெண்கள் கணவனை உதாசீனப்படுத்தாமல் இருந்தாலும் அதிர்ஷ்டம் என்கிறார்கள் சிலர்.

மனைவிதான் அவ்வாறென்றால், இந்தப் பென்ஷனியர்மார் இருக்கிறார்களே, அவர்களுக்குப் பெரும் ‘கர்வம்’ என்று சலித்துக்கொள்ளும் மனைவிமார், பிள்ளைகளும் உள்ளார்களே! ‘நாங்கள் எதிலும் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறது.

கண்ணை மூடுமட்டும் கவலை இல்லை’ என்று சொல்வதால், பிள்ளைகள் போட்டி போட்டிக்கொண்டு பராமரிக்க வந்தாலும், ‘நீ உன்ர வேலையைப் பார், நான் என்ர வேலையைப் பார்க்கிறன்’ என்பார்கள் அரச உத்தியோகத்தர்கள். இதில் விதிவிலக்கானவர்கள் இல்லாமல் இல்லை.

இலங்கையில் 1956 ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் ஊழியர் சேமலாப நிதியம் அறிமுகமாகியது. அதற்கு முன்பு அரசாங்க உத்தியோகமும், பென்ஷனும்தான். தனியார் துறை நிர்வாக முகாமைத்துவம் வளர்ச்சியடைந்ததன் பின்னர், அரசாங்க உத்தியோகத்தர் மத்தியில் ஒருவித மந்தநிலை ஏற்பட்டதாக உணரப்படுகிறது என்பதை மறக்க முடியாது.

தனியார் துறையில் அதிகம் உழைத்து வருமானம் ஈட்டலாம் என்றாலும், அதில் ஓய்வு கால அனுகூலமாய் கிடைக்கும் ஊழியர் சேமலாப நிதியம் துரிதகதியில் கரைந்துவிடும்!

சிலர் அந்தப் பணத்தைத் துரிதமாகப் பெற்றுத் தம் பிள்ளைகளுக்குப் பகிர்ந்தளித்து விடுகிறார்கள். அதனால் ரொக்கமாய்க் கிடைக்கும் பெருந்தொகைப் பணம் விரைவில் இருந்த இடம் தெரியாமல் குறைந்து; மறைந்துபோகிறது. ஆகவே, ஓய்வூதியம் (பென்ஷன்) தான் மாதா மாதம் வாழ்க்கையை நடத்த பாதுகாப்பு அளிக்கிறது. அதனால்தான், அரசாங்கத் துறை உத்தியோகம் உயர்ந்தது என்ற எண்ணம் வேரூன்றிப் போயிருக்கிறது.

ஓய்வூதியத்தில் சிவில் பென்ஷன், மைனர் பென்ஷன், ரீச்சர்ஸ் பென்ஷன், பெண்கள், அநாதைகள் பென்ஷன், மலாயன் பென்ஷன் என வகைப்படுத்தலாம்.

வெளிநாடுகளில், குறிப்பாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மலாயா, போனியோ போன்ற நாடுகளில் பணியாற்றியவர்களுக்கும் பென்ஷன் கிடைக்கிறது. இதனைப் பெறுவதில் மோசடிகள் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்களும் உள்ளன.

சரி, மாதாந்தம் இந்தப் பென்ஷனைப் பெறுவதற்கு அலுவலகம் செல்வோர் என்ன மனநிலையில் இருப்பார்கள் என்பதைப் பற்றி நமக்கு ஊகிக்க முடியுமா? முடியும்! அன்றுதான் மிகக் கலகலப்பாக அவர்கள் காணப்படுவார்கள் என்று பொதுவாக சொல்ல முடியாத நிலை சற்று வேதனையானதுதான்!

வயது முதிர்ந்தவர்களுக்கு நன்றாக உடையணிவித்து; அலங்கரித்துக் கூட்டிச் செல்லும் பிள்ளைகள், பென்ஷனைக் கையில் வாங்கியதும், அவர்களை வங்கியிலேயே இருக்கவிட்டுவிட்டு ‘ஷொப்பிங்’ போகிறார்கள். பின்னர் அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொள்வனவு செய்து முடித்ததும் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

இப்படி அபூர்வமாய் நடக்கிறது என்றாலும், பென்ஷனின் தாற்பரியம் சிதைக்கப்படுவதாக, மனதைச் சற்று நெருடவே செய்யும்! கண்ணை மூடு மட்டும் ‘கவர்மண்ட்’ காசு யாருக்கு? உழைத்தவருக்கா, உதவா பிள்ளைகளுக்கா?!