Author: ந.குணபாலன்
•11:27 AM


இது ஒரு சுவையான கவிதை. இதை எழுதியவர் நவாலியூர்ச் சோமசுந்தரப் புலவர் அவர்களின் மகனார் இளமுருகனார் ஆவார்.

செல்வஞ் செல்வாக்காய் வாழ்ந்த ஒரு சீமான். அவரைச் சார்ந்து வாழ வேண்டிய குமுகக் கட்டுப் பாட்டில் இருந்த பறை முழக்கம் செய்யும் ஒரு கலைஞர் .
பணத்தால் பெரியவர் மற்றவரை எதற்கோ கை நீட்டி அடித்து விட்டார். மற்றவரின் ஏலாத்தன்மை இங்கே கவிதையாகி வழிகிறது.

காரிரங்கும் கொடைமுதலி நீயொறு த்தால்
நானழுவேன், கலகமில்லை.
வாரிரங்கும் பறைமுகத்தில் வளைகோலால்
நின்மனையில் மெல்லத்தட்டில்....  
ஊரிரங்கும், உறவிரங்கும், மனையிரங்கும்,
பனையிரங்கும் உண்மை ஐயா!
ஓரிரங்கலன்றி மதி, திதி தோறும் 
இரங்கலெனில் யார் சமர்த்தன்?

விளக்கம்:
கொடையில் சிறந்த உம்மைக் கண்டு பொறாமை கொண்ட கருமுகில் அழும்.
அப்படிக்கொத்த இரக்க குணமுடைய குமுகத்தில் முதன்மையானவரே நீர் (ஒறுத்தால்)கோபித்தால் நான் அழுவேன், அதனால் ஒரு கலகமும் உருவாகாது.

எனது பறையை இழுத்துக் கட்டியிருக்கும் வார், நோக்காடு தாங்கேலாமல் அழுகின்றது. அப்படியான பறையின் முகத்திலே வளைந்த கோலால் நான் வந்து உமது  வீட்டிலே மெல்லத்தட்டினால் ( நீர் மண்டையைப் போடும் நேரம்)............

இந்த ஊரே அழும்,
உமது உறவுகள் அழும்,
உம்முடைய வீட்டார் அழுவர்,......


ஊரழும்..சரி...
உறவு அழும்..சரி...
வீட்டார் அழுவர்..சரி..

அதென்ன பனையிரங்கும்?
பனை அழுமாமோ ?
என்ன குறளிக் கதையிது?
கேளுங்கள் புலவரின் பகடியை....
பனை கள்+நீர்=கண்ணீர் சொரியுமாம். இவர் குடிக்க வேண்டிய கள்ளுத்தண்ணி  குடிப்பவர் இவர் இல்லாமல் வீணாகிச் சொரியுமாம்.

 
இது உண்மை ஐயா!
நீர் என்னை அடிக்க  நான் அழுவது ஒருமுறை மட்டுமே.
நான் பறையை அடித்தால் உம் வீட்டில் ஒருமுறை மட்டுமே ஒப்பாரிக்
குரல் கிளம்பும்? மாசாமாசம் வருகின்ற உமது செத்த திதிகளில் எல்லாம் ஒப்பாரிக் குரல் கிளம்புமே? அப்படிஎன்றால் யார் கெட்டிக்காரன்?

Author: மணிமேகலா
•2:43 AMகடிதம் எழுதி, உறையிலிட்டு, முத்திரை ஒட்டி, முகவரி எழுதி, ஒரு செய்தி அனுப்பிய காலம் ஒன்று இருந்தது.

பதிலுக்காகக் காக்கி உடையோடு சைக்கிளில் வரும் தபாற்காரருக்காகக் காத்திருந்த காலங்களும் போயின.

தந்தி, தபாலட்டை, ஏரோகிறாம் முதலியன தொடர்பு ஊடகத்தின் ஆரம்ப கால செயல் பாட்டில் முக்கிய பங்கு வகித்தவை.  வீட்டுக்கு வீடு தொலைபேசி இல்லாதிருந்த காலத்தில் தபாலகம் ஒன்றே ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள இருந்த ஒரே வழி.

இன்றய சந்ததிக்கு தந்தி என்றால் என்னவென்றே தெரியாது என்னும் அளவுக்கு அது காலாவதி ஆகி ஆயிற்று பல வருடங்கள்.தொடர்பு சாதன வளர்ச்சி இல்லாதிருந்த காலத்தில் உடனடியாக ஒரு செய்தியை தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு அறிவிக்க இந்தத் தந்தி சேவை பயன் பட்டது. உதாரணமாக ஒரு அவசர செய்தியை தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு அனுப்ப வேண்டி இருந்தால் அனுப்புனர் தனக்கருகில் இருக்கும் தபாலகம் சென்று மிகச் சுருக்கமாக அனுப்ப இருக்கும் செய்தியையும் பெறுனரின் முகவரியையும் தபால் அலுவலருக்குத் தெரிவிப்பார்.தபால் அலுவலர் செய்தியைப் பெற்று சொற்களுக்கும் அனுப்பப் பட இருக்கும் இடத்துக்கும் (மைல் அளவு) ஏற்ற மாதிரியான கட்டணத்தினை அனுப்புனரிடம் இருந்து பெற்று பற்றுச் சீட்டை வழங்குவார்.பின்னர் தபால் அலுவலர் அங்கிருந்து பெறுனரின் முகவரிக்கு அருகில் இருக்கும் தபாலகத்துக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு செய்தியையும் முகவரியையும் தெரிவிப்பார்.அங்கிருக்கும் அலுவலர் அதனைப் பெற்று உடனடியாக அந்தப் பெறுனரின் முகவரிக்குச் உரியவரை அனுப்பி செய்தியைக் கிடைக்கச் செய்வார். இதற்குச் சாதாரண தபால் கட்டணத்தை விட சற்று மேலதிகப் பணம் அறவிடப் படும். பொதுவாக திருமணவாழ்த்துச் செய்திகள்,பாராட்டுச் செய்திகள், ஏதேனும் ஒன்றின் முடிவுகள், குறிப்பாக மரண செய்திகள் இவ்வகையில் முக்கிய இடம் வகித்தன.

ஆனால் இன்று நான் குறிப்பாகச் சொல்ல வந்த விடயம் தபாலட்டை பற்றியது. தந்தி இப்போது வழக்கொழிந்து போய் விட்டதென்றால் தபாலட்டை வழக்கொழியும் தறுவாயில் இருக்கிறது என்றே தோன்றுகிறது.( இப்போதும் தபாலட்டை இருக்கிறதா?)

ஒரு நாட்டுக்குரிய வரலாறை, அழகை, தனித்துவத்தை,இயல்பை,கலைத்துவத்தை ஒரு புறத்தே படங்களாகக் கொண்டிருக்கிற தபாலட்டைகள் ஒரு விதம். அவை இன்றும் இருக்கின்றன.இனியும் இருக்கும் என்றே தோன்றுகிறது.
நான் சொல்ல வருவது அதுவுமல்ல.

இந்தத் தபாலட்டைகள் பகீரங்கமாகச் செய்தியைக் காவிச் செல்லும். உள்ளூருக்குள் உலா வருபவை.குறிப்பிட்ட விலைக்கு அவற்றைத் தபாலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.வெள்ளை நிற மட்டை. - அதன் மறு புறம் முகவரி எழுதுவதற்கான இடம் ஒரு புறமும் மேலும் செய்தி எழுதுவதற்கான இடம் மறு பாதியுமாக இருக்கும். அவற்றுக்கு முத்திரை ஒட்ட வேண்டியதில்லை. அதனை கொள்வனவு செய்யும் போதே முத்திரைக்கான பணமும் செலுத்தப் பட்டு விடும். ஆனால் காலப் போக்கில் அச்சடிக்கப் பட்ட தபாலட்டைகள் விற்பனை செய்து முடிவதற்கிடையில் அதன் பெறுமதி அதிகரித்து விடுவதால் மேலதிக முத்திரை ஒட்டி அனுப்பும் நிலைமையும் பின்னர் இருந்தது.

குறிப்பாக வானொலியில் பாடல்களை விரும்பிக் கேட்பதற்கு,போட்டி நிகழ்ச்சிகளுக்கான வினாக்களுக்கு விடை அளிப்பதற்கு,(குறிப்பாகப் போட்டி வைப்போர் இலகுவாகக் கணக்கிடவும் ,கண்டு கொள்ளவும், சேகரித்து வைக்கவும், நேர மிச்சத்துக்காகவும் சகாய விலை காரணமாகவும் இவை பெரிதும் வரவேற்கப் பட்டன; பயன்பட்டன.) அந்தரங்கமற்ற விடயங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு, மேலும் எல்லோரும் பார்க்கலாம் என்று எண்ணுகின்ற விடயங்களை குறைந்த செலவில் பரிமாறிக்கொள்வதற்கும் இவை நன்கு பயன் பட்டன.அவை ஈழத்துக் கவிஞர்களுக்கும் நன்கு பயன் பட்டிருக்கின்றது என்பது தான் புதுச் செய்தி. அவை நம்மவரின் வாழ்வியலைப், பண்பாட்டை, ஒரு கால கட்டது மன இயலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருப்பதும்; அதற்குத் தபாலட்டை சிறந்த ஒரு ஊடகமாக இருந்திருக்கிறது என்பதும் தான் இன்றய ஈழமுற்றத்துச் செய்தி.

சில மாதங்களுக்கு முன்னர் “ ஓலை” ( ஜூன் 2003) என்ற கொழும்புத் தமிழ் சங்க இதழ் ஒன்று தபாலட்டைகளில் கவிஞர்கள் தமக்கிடையே பரிமாறிக் கொண்ட செய்திகளை வெளியிட்டிருக்கக் கண்டேன். அதிலிருந்து சில சுவையான பகுதிகள் இங்கே மறு பிரசுரமாகிறது. ( இவை மகாகவி பல்வேறு சந்தர்ப்பங்களில் தன் சக கவிஞ நண்பர்களுக்கு எழுதியவை. இவற்றை அவர் தன் டயறியில் குறித்து வைத்திருந்தார் என்ற குறிப்புக் காணப்படுகிறது)

அது ஒரு கால கட்டத்தில் ஈழத்துக் கலைஞரிடம் பூத்திருந்த அந்நியோன்னத்தையும் ஆத்மார்த்த அன்பையும் கூட அவை சித்தரிப்பனவாக இருக்கின்றன.

அவற்றில் சில கீழே.

1.சொற்கணக்குப் போட்டுச்
சுவை எடுத்துக் காட்டுகின்ற
அற்புதத்தைக் கண்டேன்
அலமந்தேன்! நிற்க
இறந்தாரையே ஏற்றுகின்ற
எங்களவர் நாட்டில்
அறந்தானோ நீ செய்த அன்பு?

(செ.கணேசலிங்கனுக்கு; 03.08.1955)

2.மெச்ச என்னாலும்
முடியாது! மெய்யாக
அச்சுக் கலைக்கோர்
அழியாத - உச்சி
அமைத்தாய்! அதன் அழகை
ஆரச் சுவைக்க
இமைக்காத கண்ணெனக்கு.

(வரதருக்கு; 19.07.1955)

பாட்டெழுதச் சொல்லிப்
படித்து விட்டுப் போற்றி அதை
ஏட்டில் அழகாய் அச்
சேற்றுவையே! - கேட்டுக் கொள்
என்னை எழுத்துத் துறையில்
இறக்கி விட்ட உன்னை
மறக்காதுலகு.

(அ.செ.முருகானந்தனுக்கு 26.07.1955)

3.ஊருறங்கும் வேளை
உறங்காமல் நாமிருந்தும்
சேருகிறாள் இல்லைச்
செருக்குடையாள்! - வரா அவ்
வெண்டாமரையாள்
விரைந்தாளோ தங்களிடம்?
கொண்டாடு நண்பா
குதித்து!

(நீலாவாணனுக்கு பெண் மகவு பிறந்தமைக்கு 15.08.1957)

(மகாகவிக்கு 3 ஆண்பிள்ளைகள் என்பதும்; சேரன்,சோழன்,பாண்டியன் என்பது அவர்களது பெயர் என்பதும்; மகளவைக்கு இனியாள், ஒளவை என்ற பெயர்கள் என்பதும் பலரும் அறிந்ததே)

4.பாட்டுப் படைக்கும்
பெரியோரை மக்களுக்குக்
காட்டி அவர் தம்
கருத்துகளை - ஊட்டும்
பணியில் மகிழ்வெய்தும்
பண்பாளர்க்கெங்கே
இணை சொல்ல ஏலும் எனக்கு!

(கனக.செந்திநாதனுக்கு 09.12.1958)

5.உள்ளதற்கும் மேலே
உயரப் புகழ்கின்ற
வள்ளல்! என் நன்றி;
வரக் கண்டேன் - பள்ளத்தில்
ஓடும் நீர் போல
ஒழுகும் அருங்கவிதை
பாடும் நீர் யாத்துள்ள பாட்டு.

(முருகையனுக்கு 06.05.1958)

6.தேன் தோண்டி உண்டு
திளைத்திடுக;பேரின்ப
வான் தேடி நும் வீட்டு
வாயிலிலே வந்தடைக;
தான் தோன்றிப் பாடும்
தமிழ் போல வாழ்க; இவை
நான் வேண்டுவன் இந் நாள்.

(சில்லையூர்.செல்வராசனின் திருமணத்திற்கு 09.01.1960)

இப்போது மின் தபால், S.M.S என்றும் தொலைபேசி என்றும் ஸ்கைப் என்றும் பல சாதனங்கள் வந்து விட்டதாலும் சமூக வலைத்தளங்கள் பெருகி விட்டதாலும் பாரம்பரியத் தபால்களின் பண்பாட்டுப் பெறுமதி கால வெள்ளத்தோடு கரைந்து போகிறது.

பழையன கழிதலும் புதியன புகுதலுமாய் வாழ்வும் நகர்கிறது............................

ஈழமுற்றத்துச் சகோதர உள்ளங்களுக்கு புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்!


Author: கானா பிரபா
•2:13 AM
ஈழத்துச் சிதம்பரம் என்று போற்றப்படும் இலங்கையில் வடபால் அமைந்துள்ள காரைநகர்ச் சிவன் ஆலயத்தில் மார்கழித் திருவாதிரை நிகழ்வுகளில் இன்று ரதோற்சவ நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்வை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வாயிலாகச் சமகாலத்தில் நேரடி ஒலிபரப்பாக எடுத்து வந்திருந்தோம்.

இலங்கை நேரம் காலை 7.30 மணி முதல் காலை 10 மணி வரை நடைபெற்ற இந்த நேரடி நிகழ்வை ஒருங்கமைத்து உதவியவர் நம் சக வலைப்பதிவர் விசாகன் குமாரசாமி. கடந்த ஆண்டும் இந்த நிகழ்வை வானொலியில் வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஈழத்தில் இருந்து சைவமணி திரு சண்முகரத்தினம் அவர்கள் வெகு சிறப்பாக நேரடி அஞ்சல் வர்ணனையைச் செய்து வழங்கியதோடு அவருடன், புலவர் குமாராசாமி அவர்களும், தமிழருவி சிவகுமாரன் அவர்களும் இணைந்து சிறப்பித்திருந்தனர்.

இந்த இரண்டரை மணி நேர நிகழ்வின் சில பகுதிகளை இங்கே தருகின்றேன்.

KaraiSivan by kanapraba
விசாகன் குமாரசாமி இந்த நேரடி ஒலிபரப்பில் வழங்கியிருந்த ஈழத்துச் சிதம்பரம் காரைநகர்ச் சிவனின் நடராஜ மூர்த்தம் குறித்த பகிர்வின் எழுத்து வடிவம்


நேரடி அஞ்சலை தாயகத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த விழாவின் நாயகன் கனகசபையின் கண் வீற்றிருந்து நல்லாட்சி அருளுகின்ற சிவகாம சுந்தரி சமேத சிவசிதம்பர நடராசப் பெருமான். அதுவும் ஈழத்துச் சிதம்பரத்தில் அமைந்திருக்கும் நடராஜ மூர்த்தம் மிகவும் பிரசித்தமானதும் அழகியல் நுட்பங்களையும் கொண்டது.

இடது பதம் தூக்கி ஆடுகின்ற மிடுக்கான, கம்பீரமான பேரெழில் கொஞ்சும் தோற்றம். திருநாவுக்கரசரின் குனித்த புருவம், கொவ்வைச் செவ்வாய், குமிண் சிரிப்பு, பனித்த சடை, பவளம் போன்ற மேனி, எடுத்த பொற்பாதம் என்ற பாடலின் பொருள் காரைநகர் சிவன் கோவில் நடராசர் சிலை என்றால் அது மிகையல்ல.

நடராஜர் சிலையில் 51 சுடர்கள் இருக்கின்றன. இவை திருவாசகத்தின் 51 பதிகங்களை நினைவூட்டுகின்றது. அபிசேகத்தின் போது உடுக்கை ஏந்திய கையிலும் அக்கினி ஏந்திய கையிலும் இருந்து வழிகின்ற திரவியங்கள் நேரே வியாக்கிரபாதர், பதஞ்சலி முனிவர்களது தலையில் வீழும். முயலகனை அழுத்தி இருப்பது அவரது வலது கால்ப் பெருவிரல் என்பது இங்கே மிக நுணுக்கமாக படைக்கப்பட்டிருக்கிறது.

இந்த எழிலுரு தோற்றத்தை தமிழகத்தில் வருகை தந்த பல அறிஞர்கள் கூட விதந்து போற்றினார்கள். மு. பாஸ்கரத் தொண்டைமான் என்கின்ற அறிஞர் இப்படியான அழகியல் நுணுக்கம் கொண்ட நடராஜர் சிலையை தான் வேறெங்கும் பார்த்ததில்லை என தமிழகத்தின் ஒரு சஞ்சிகையில் எழுதியுள்ளார்.

இந்த நடராசருக்கு அழகிய மஞ்சள் நிறத்திலான செவ்வந்தி மலர்களாலான சாத்துப்படி சிறப்பானது. முடியிலே 5 கொண்டை மாலைகளும், கையிலே தேசிக்காயும், இடையிலே புலித்தோல் போர்த்திய மேனியும், பல அடுக்குகளைக் கொண்ட செவ்வந்தி மலர் மாலைகளால் ஆன கீழ்ச்சாத்துப்படியும் இரட்டைத்திருவாசியும் கொண்ட தோற்றத்தை வர்ணிக்க வார்த்தைகளில்லை. காணக் கண் கோடி வேண்டும் என்பது இதனைத்தான் என்பது சாலப் பொருத்தமே.புகைப்படம் நன்றி: காரை வசந்தம்