Author: மணிமேகலா
•4:59 AM

சுமார் 35 -45 வருடங்களின் முன் தமிழ் பாடசாலைப் பிள்ளைகளுக்கு குறிப்பாகச் சிறுவர்களுக்கு நல்லதொரு பொழுது போக்காவும் விருப்பத் தெரிவாகவும் இருந்தது அம்புலிமாமா என்ற தனித்துவமான படங்களும் சித்திரக் கதைகளும் கூடிய பள்ளிப் பிள்ளைகளுக்கு மிகப் பிடித்தமான கதைப் புத்தகமாகும்.

அதில் ஜாதகக் கதைகள், சிறுகதைகள், வேதாளமும் விக்கிரமாதித்தனும் போன்ற தொடர் கதைகள், அறிவுரைகளைச் சொல்லும் நீதிக் கதைகள், போன்றன அழகான படங்களோடும் அளவான பக்கங்களோடும் தெளிவான எழுத்துக்களோடும் கவர்ச்சியான வண்ணங்களோடும் சிறுவர்களைக் கவரும் வண்ணமாக வெளிவந்தன.

இந்தியாவில் இருந்து வெளிவந்த இப்புத்தகம் நம் மறக்க முடியாத சிறு வயது ஞாபகங்களைக் கிளறிவிட வல்லன.

இன்றும் அது வெளிவந்து கொண்டிருக்கின்றது என்பது ஆறுதலைத் தரும் ஒரு விடயம்.

நம் சிறு பிராய காலத்தில் கொஞ்சம் இளைப்பாறுவோம் வாருங்கள்!

வேதாளம் சொன்ன கதை: 

தன்மானமா? பொது நலமா?

ஆசிரியர்: அம்புலிமாமா: 19.01.2011

 
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழே இறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள் இருந்த வேதாளம் பலமாக சிரித்து விட்டு, ‘மன்னா, இந்த பயங்கர நடுநிசியில் எந்த லட்சியத்தை அடைவதற்காக நீ இவ்வாறு பாடுபடுகிறாய் என்று எனக்குப் புரியவில்லை.
இப்படிப்பட்ட லட்சியவாதி இளைஞர்கள் உலகில் பலர் உள்ளனர். தனது லட்சியத்திற்காக உயிரைக் கூட விடத் தயாராயிருப்பதாக அறை கூவுகின்றனர். ஆனால் இப்படிப்பட்ட வீரர்கள் சோதனையான சூழ்நிலை வரும்போது கோழைகளாக மாறி விடுகின்றனர். அப்படிப்பட்ட வாய்ச் சொல் வீரனான கிரிதரனின் கதையைக் கூறுகிறேன் கேள்" என்றது.

 அடர்ந்த மலைகள் சூழ்ந்த பகுதியில் மலை அடிவாரத்தில் பார்கவபுரி என்ற கிராமம் இருந்தது.  அந்த பார்கவபுரிக்கு கொண்டதேவன் என்ற காட்டு சாதியைச் சேர்ந்தவன் தலைவனாக இருந்தான். அவனுக்கு கிரிதரன் என்ற ஒரே மகன் இருந்தான். கிரிதரன் சிறு வயதிலிருந்தே தன்மானம் மிக்கவனாக இருந்தான். தலைவனின் மகனாயிருந்தும், எல்லா வாலிபர்களுடனும் சகஜமாகப் பழகுவான். தனது இனத்து வாலிபர்களிடம் எப்போதும் தன்மானத்தைப் பற்றியும் சுதந்திரமாக இருப்பதின் அவசியத்தைப் பற்றியும் ஓயாமல் அறிவுரை தந்து கொண்டே இருப்பான்.
அங்குள்ள பார்கவி அம்மன் கோவில் திருவிழாக் காலங்களில் இளைஞர்களிடையே மல்யுத்தம், வில் அம்பு போட்டி  ஆகிய போட்டிகள் நடைபெறுவதுண்டு. அப்போது கிரிதரன் தனது இனத்து இளைஞர்களை போட்டிகளில் பங்கேற்க பெரிதும் ஊக்குவிப்பான். தனது குலத்தின் மேன்மைக்காகவும்,  சுதந்திரத்திற்காகவும் உயிர்த் தியாகம் செய்யவும் தயாராயிருக்க வேண்டும் என்று மனதில் உத்வேகம் எழும்படி அனைவருக்கும் கூறுவான்.
பார்கவபுரியின் காட்டு சாதியினர் காஞ்சனபுரி அருகில் உள்ள மன்னனுக்கு அடிபணிந்து நடந்து வந்தனர். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் பார்கவபுரி சுதந்திரமாக இருந்தது. திடீரென நாம் ஏன் காஞ்சனபுரிக்கு அடிமைகள் போல் நடக்க வேண்டும் என்ற தன் சந்தேகத்தை தன் தந்தையிடமும் மற்ற பெரியவர்களிடமும் கிரிதரன் அடிக்கடி கேட்பதுண்டு. ஆனால் அவர்கள் உண்மையைச் சொல்ல மறுத்து விட்டனர்.
ஒருநாள் கிரிதரன் பார்கவி அம்மன் கோயிலின் கிழட்டுப் பூசாரியை சந்தித்து உண்மையை அவனிடம் இருந்து அறிய முயன்றான். பூசாரியும் கிரிதரனுக்கு அந்த உண்மையை சொல்லிவிட்டான். பார்கவபுரியில் உள்ள வளம் மிக்க காடுகளில் கலைமான்களும், பல மூலிகைச் செடிகளும் நிரம்பி இருந்தன. இந்த வளங்களால்  கவரப்பட்ட காஞ்சனபுரி மன்னன் யாவற்றையும் அபகரிக்கத் தொடங்கினான்.
 ஒரு சமயம் பார்கவி அம்மன் கோயில் திருவிழா நடந்து கொண்டு இருந்தது. அந்த விழாவில் காஞ்சனபுரி சேனாதிபதியும் தன் வீரர்களுடன் கலந்து கொண்டான். அம்மன் வழிபாட்டில் பூசாரிக்கு திடீரென ஆவேசம் வந்து கூக்குரலிட்டான். பூசாரிமேல் அம்மன் வந்திருக்கிறாள் என நம்பிய அனைவரும் பயபக்தியுடன் பூசாரி சொல்வதைக் கேட்டனர். "பார்கவபுரி மக்கள் நலமாக இருக்க வேண்டுமானால் அம்மன் நான் சொல்வதைக் கேளுங்கள். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் மூன்று பானை நிறைய தேன், முப்பத்தியொன்று கலைமான் கொம்புகள் மூன்று கூடை மூலிகைகள் யாவற்றையும் எனக்கு படைக்க வேண்டும். பிறகு அவற்றை காஞ்சனபுரி படை வீரர்களுக்கு கொடுத்திட வேண்டும்" என்று பூசாரி கூற, அதை அப்படியே காட்டு சாதியினர் கடைப் பிடிக்கத் தொடங்கினர். அன்றிலிருந்து பார்கவபுரி காஞ்சனபுரிக்கு அடிபணிந்து நின்றது.
இந்தச் செய்தியை பூசாரி மூலமாக அறிந்ததும் கிரிதரனுக்கு அவமானமும் கோபமும் ஏற்பட்டன. சாமிஆடிய பூசாரி அன்று கூறியவற்றில் மற்றொரு விஷயம் என்னவெனில் காஞ்சனபுரி மன்னனே மனமுவந்து வேண்டாம் என்று கூறும் வரை இந்த வழக்கம் நீடிக்கும் என்பதே. அன்று முதல் கிரிதரன் காட்டு சாதி இளைஞர்களிடம், நாம் கஷ்டப்பட்டு உழைத்து தயாரிக்கும் தேன் மற்றும் பல காட்டுப் பொருள்களை நாம் ஏன் அன்னியருக்குக் கொடுக்க வேண்டும்? இது நாம் வசிக்கும் இடம். இங்கு உற்பத்தியாகும் பொருட்கள் நமக்கு சொந்தம். காஞ்சனபுரிக்கு அடிமையாக நாம் ஏன் வாழ வேண்டும்?" என்று ஒவ்வொருவர் மனதிலும் புயலைக் கிளப்பினான். தன் மகனின் செயல்களைக் கண்டு அஞ்சிய கொண்டதேவன், "பலம் மிக்க காஞ்சனபுரியை நம்மால் எதிர்த்துப் போரிட முடியாது.
 ஆகவே நீ இவ்வாறு மற்றவர்களை தூண்டி விடுவதை நிறுத்து" என்றான். கிரிதரனும், "அப்பா, அரசனே மனமுவந்து வேண்டாம் என்றால் நாம் இவ்வாறு கப்பம் செலுத்தத் தேவையிருக்காது இல்லையா? நான் அரசனைப் பார்த்துக் கேட்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு காஞ்சனபுரிக்குச் சென்றான்.
மறுநாளே தனது இரு நண்பர்களுடன் காஞ்சனபுரி மன்னனை சந்தித்த கிரிதரன் தங்கள் இன மக்கள் மிகவும் சிரமப்பட்டு அடையும் காட்டுப் பொருட்களை கப்பமாக செலுத்தி விடுவதால் தங்களுக்கு ஒன்றும் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்று விளக்கினான். ஆனால் மன்னன் அலட்சியமாக, "நீங்கள் எங்களுக்கு அடிமை. உங்களால் கப்பம் செலுத்த முடியாவிட்டால், நீங்கள் உங்கள் ஊரை விட்டு வெளியேறுங்கள்" என்றான்.
"அரசே, நாங்கள் பிறந்த ஊரைவிட்டு வெளியேறுவது என்பது எங்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத விஷயம். மன்னிக்கவும்" என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.
ஒரு வாரம் கழிந்தது. ஒருநாள் மன்னனது சபையில் பார்கவபுரி இளைஞன் ஒரு கடிதம் கொண்டு வந்தான். அதில் எழுதப்பட்டிருந்த விஷயம் இதுதான்: "அரசே, ஒரு பூசாரியின் பயமுறுத்தலுக்கிணங்கி எங்கள் முன்னோர்கள் உங்களுக்குக் கப்பம் செலுத்த இணங்கினார்கள். மூன்று தலைமுறையாக அதைத் தொடர்ந்து செய்கிறோம்.
ஆனால் காட்டில் விளைவதை எல்லாம் உங்களுக்குக் கொடுத்துவிட்டு நாங்கள் ஒன்றுமில்லாமல் கஷ்டப்படுகிறோம். உழைப்பது நாங்கள்,  ஆனால் அதன் பயனைப் பெறுவது நீங்கள். நான் நேரடியாக உங்களைக் கண்டு இதுப் பற்றி பேசியும் நீங்கள் இணங்கவில்லை. ஆகவே பார்கவபுரி உங்களுக்கு இனி பணியப் போவதில்லை. நாங்கள் சுதந்திரத்தை விரும்புகிறோம். நீங்கள் இன்னும் இணங்காவிடில் உங்களுடன் போர் செய்யவும் தயாராக இருக்கிறோம். ஆனால் வீணாகப் போர் புரிவதால் ஏற்படும் உயிர் இழப்பைத் தடுக்க ஒரு திட்டம் வைத்துள்ளேன்.

 அதன்படி உங்களுடைய வீரர்களில் ஒருவனை என்னுடன் மல்யுத்தம் புரியச் சொல்லுங்கள். நான் வெற்றி பெற்றால், எங்களுக்கு சுதந்திரம் தாருங்கள். நான் தோல்வி அடைந்தால், நாங்கள் அனைவரும் ஊரை விட்டு வெளியேறி விடுகிறோம். இப்படிக்கு கிரிதரன்."
இந்தக் கடிதத்தைப் படித்த அரசன் கோபமுற்றாலும், அதை அடக்கிக் கொண்டு கடிதம் கொண்டு வந்தவனிடம் "உங்கள் கிரிதரனுடைய வேண்டுகோள்படி அடுத்த பௌர்ணமி அன்று மல்யுத்த போட்டி காஞ்சனபுரியில் நடைபெறும்" என்று அறிவித்தான்.
 அடுத்த பௌர்ணமியன்று மல்யுத்த போட்டியை எதிர்பார்த்து கிரிதரன் தனது இரண்டு நண்பர்களுடன் காஞ்சனபுரியை அடைந்தான். ஆனால் கிரிதரன் காஞ்சனபுரியை அடைந்ததுமே அரசனது காவல் வீரர்களால் கைது செய்யப்பட்டான். கிரிதரனை அரச சபைக்குக் கட்டியிழுத்துச் சென்றனர்.
கிரிதரனைப் பார்த்து அரசன் "உன்னுடைய வீரத்தை மெச்சுகிறேன். ஆனால் நீ என்னையே எதிர்க்கத் துணிந்து, என்னிடம் இப்போது சிக்கிக் கொண்டாய். களங்கமற்ற காட்டு சாதி மக்களின் மனதை நீ கெடுத்து விட்டாய். முறையாக கப்பம் செலுத்தி வந்தவர்களின் மனதில் தன்மானம், கௌரவம், சுதந்திர உணர்ச்சி ஆகியவற்றை விதைத்து அவர்களை அரசுக்கு எதிராக திருப்பி விட்டாய். நீ செய்தது சாதாரணக் குற்றம் அல்ல, ராஜ
துரோகம்.
இதற்காக உனக்கு மரண தண்டனை விதிக்க என்னால் முடியும். ஆனால் வீணாக இரத்தம் சிந்த எனக்கும் விருப்பமில்லை.  பார்கவபுரிக்கு சுதந்திரம் கொடுக்க நான் தயார். ஆனால் அதற்கு பதிலாக நீ எங்கள் அரண்மனையில் உன் சுதந்திரத்தை இழந்து ஒரு பணியாளனாக இருக்க வேண்டும்  சம்மதமா?" என்று கேட்டான். இதைக் கேட்ட கிரிதரனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. சற்று நேரம் மௌனமாக இருந்த கிரிதரன் பிறகு, "உங்களுடைய முடிவை நான் ஒப்புக் கொள்கிறேன். உங்களுக்கு அடிமையாக இருக்கிறேன்" என்றான்.
கதையை கூறி முடித்ததும் வேதாளம் விக்கிரமனை நோக்கி "மன்னா, சிறு வயதிலிருந்தே தன்மானம் என் உயிர் மூச்சு என்று முழங்கிக் கொண்டிருந்த கிரிதரன் ஆபத்தில் சிக்கியதும் தன் கொள்கையை விட்டு ஒரு கோழையாகி விட்டான். அவனுடைய செய்கை ஆச்சரியமாக இல்லை? அவனிடம் இந்த மாறுதல் ஏன் ஏற்பட்டது? சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் வளைந்து கொடுப்பது என்று தீர்மானித்து விட்டானா? என்னுடைய கேள்விகளுக்குப் பதில் தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்" என்றது.
உடனே விக்கிரமன் "கிரிதரன் கோழையாகவில்லை. ஆபத்தில் சிக்கியதால் மனம் மாறி தன்மானத்தை விடவுமில்லை. தன்னுடைய இனமக்களின் சுதந்திரத்தை அவன் பெரிதும் விரும்பினான். அதற்காக தான் அடிமையாக மாறத் தயாராகிவிட்டான். தனது ஊருக்காக தனது சுதந்திரத்தை தியாகம் செய்தான். பொது நலத்துக்காக தன்னுடைய சுதந்திரத்தைத் தியாகம் செய்த தியாகி என்றே கிரிதரனைக் கருதலாம்" என்றான்.
விக்கிரமனது இந்த சரியான பதிலால் அவனது மௌனம் கலையவே வேதாளம் தான் சுமந்து வந்த உடலோடு மீண்டும் முருங்க மரத்தில் ஏறிக் கொண்டது.

  


சில சித்திரப் படங்கள்:
நன்றி :http://www.chandamama.com/lang/story/12/44/140/1499/TAM/6/stories.htm