Author: Pragash
•11:48 AM
தம்பி பொழுது இருளுது. மண்ணெண்ணெய் விளக்கை எடுத்து எண்ணையை விட்டு ஆயத்தப்படுத்தியாச்சோ? படிக்கவேணுமெல்லோ? அம்மாவின் குரல் குசினிக்குள் இருந்து கேட்டது. வீட்டில் இருந்த அரிக்கன் லாம்பு, ஜாம் போத்தல் விளக்கு மண்ணெண்ணெய், ஒரு சிறிய துணி இவற்றுடன் முற்றத்து வாசல் படியில் வந்து அமர்ந்து கொண்டு, முதல் நாள் இரவின் கரிபுகை மண்டிப்போய் இருந்த அரிக்கன் லாம்பின் சிமினியை மெதுவாக கழற்றி அதில் படிந்திருந்த புகையை துடைக்க துவங்கினேன். எனது பள்ளிக்கால பதின்ம வயதுகளில், இருள் சூழும் மம்மல் பொழுதுகளில் சிமினி துடைக்கிறதும், மண்ணெண்ணெய் விட்டு விளக்கு திரியை சரிபார்ப்பதும், திரி கட்டையாகிப்போனால் துணியை கிழித்து புது திரி சுற்றி போடுவதும் எனது அன்றாட கடமைகளில் ஒன்றாகி போனது. 

பொருளாதார தடையின் இன்னொரு பகுதியான மின்சார வெளிச்சம் இல்லாத அன்றைய நாட்களில் வீடுகளிற்கு வெளிச்சம் தந்து கொண்டிருந்தவை அரிக்கன் லாம்புகளும், சிமினி விளக்குகளும், ஜாம் போத்தல் விளக்குகளும், மெழுகுதிரிகளும் சில குப்பி விளக்குகளும் தான் ஒவ்வொரு வீடுகளிலும் சிமிட்டி சிமிட்டி இருளை விரட்டிக்கொண்டிருந்தன. இந்த விளக்குகளிற்கு எல்லாம் ஆதார சுருதி இந்த மண்ணெண்ணெய். அன்று இருந்த பொருளாதார நிலைமையில் நிவாரணத்திற்கு சங்கங்களில் வழங்கப்படும் பொருட்களில் ஒன்றாக இந்த மண்ணெண்ணையும் இருந்தபடியாலோ என்னவோ கடைகளில் கூட தட்டுப்பாடில்லாமல் கிடைத்துக்கொண்டிருந்தது. 

எங்கள் வீட்டில் இருந்த அரிக்கன் லாம்பு ஒன்றும், பித்தளையில் செய்த திரி விளக்கு ஒன்றும், ஜாம் போத்தல் விளக்கொன்றுடனும் தான் பொழுது இருட்டியதில் இருந்து படுக்கைக்கு போகும் வரையான சகல கடமைகளும் இந்த மூன்று விளக்குகளுடனுமே நடந்தேறும். இதில் ஜாம் போத்தல் விளக்கு மட்டும் எங்களுடன் விடியும் வரைக்கும் துணையிருக்கும். அது தான் எங்களுக்கு விடிவிளக்கு. மறுநாள் பள்ளிக்கூடத்தில் கூட எமது பாடப்புத்தகங்களை புரட்டும் போது அதில் கூட மண்ணெண்ணெய் மணம் வீசும் அளவிற்கு மண்ணெண்ணெய் எமது வாழ்வுடன் ஒன்றிப்போனது. 


பின்னூட்டங்களை பார்த்த பின்பு ஒரு பின்குறிப்பு: ஜாம் போத்தல் விளக்கு என்றால் என்ன என்பது பற்றி கேட்கப்போகும் தலைமுறைக்காக கீழே உள்ள படம். 



ஜாம் போத்தல் விளக்கு என பெயர் வந்த காரணம், முன்னர் தக்காளி ஜாம், விளாம்பழ ஜாம் அடைத்து வரும் போத்தல்களிலேயே இது தயாரிக்கப்பட்டது. மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவும் நேரங்களில் கை கொடுக்கும் சிக்கன விளக்காக பயன்பட்டது. கீழே அனா பின்னூட்டத்திலேயே ஜாம் போத்தல் விளக்கை கண் முன்னே கொண்டுவந்துள்ளார். இந்த பதிவிலும்  இதை பற்றி தரப்பட்டுள்ளது.