Author: Pragash
•11:48 AM
தம்பி பொழுது இருளுது. மண்ணெண்ணெய் விளக்கை எடுத்து எண்ணையை விட்டு ஆயத்தப்படுத்தியாச்சோ? படிக்கவேணுமெல்லோ? அம்மாவின் குரல் குசினிக்குள் இருந்து கேட்டது. வீட்டில் இருந்த அரிக்கன் லாம்பு, ஜாம் போத்தல் விளக்கு மண்ணெண்ணெய், ஒரு சிறிய துணி இவற்றுடன் முற்றத்து வாசல் படியில் வந்து அமர்ந்து கொண்டு, முதல் நாள் இரவின் கரிபுகை மண்டிப்போய் இருந்த அரிக்கன் லாம்பின் சிமினியை மெதுவாக கழற்றி அதில் படிந்திருந்த புகையை துடைக்க துவங்கினேன். எனது பள்ளிக்கால பதின்ம வயதுகளில், இருள் சூழும் மம்மல் பொழுதுகளில் சிமினி துடைக்கிறதும், மண்ணெண்ணெய் விட்டு விளக்கு திரியை சரிபார்ப்பதும், திரி கட்டையாகிப்போனால் துணியை கிழித்து புது திரி சுற்றி போடுவதும் எனது அன்றாட கடமைகளில் ஒன்றாகி போனது. 

பொருளாதார தடையின் இன்னொரு பகுதியான மின்சார வெளிச்சம் இல்லாத அன்றைய நாட்களில் வீடுகளிற்கு வெளிச்சம் தந்து கொண்டிருந்தவை அரிக்கன் லாம்புகளும், சிமினி விளக்குகளும், ஜாம் போத்தல் விளக்குகளும், மெழுகுதிரிகளும் சில குப்பி விளக்குகளும் தான் ஒவ்வொரு வீடுகளிலும் சிமிட்டி சிமிட்டி இருளை விரட்டிக்கொண்டிருந்தன. இந்த விளக்குகளிற்கு எல்லாம் ஆதார சுருதி இந்த மண்ணெண்ணெய். அன்று இருந்த பொருளாதார நிலைமையில் நிவாரணத்திற்கு சங்கங்களில் வழங்கப்படும் பொருட்களில் ஒன்றாக இந்த மண்ணெண்ணையும் இருந்தபடியாலோ என்னவோ கடைகளில் கூட தட்டுப்பாடில்லாமல் கிடைத்துக்கொண்டிருந்தது. 

எங்கள் வீட்டில் இருந்த அரிக்கன் லாம்பு ஒன்றும், பித்தளையில் செய்த திரி விளக்கு ஒன்றும், ஜாம் போத்தல் விளக்கொன்றுடனும் தான் பொழுது இருட்டியதில் இருந்து படுக்கைக்கு போகும் வரையான சகல கடமைகளும் இந்த மூன்று விளக்குகளுடனுமே நடந்தேறும். இதில் ஜாம் போத்தல் விளக்கு மட்டும் எங்களுடன் விடியும் வரைக்கும் துணையிருக்கும். அது தான் எங்களுக்கு விடிவிளக்கு. மறுநாள் பள்ளிக்கூடத்தில் கூட எமது பாடப்புத்தகங்களை புரட்டும் போது அதில் கூட மண்ணெண்ணெய் மணம் வீசும் அளவிற்கு மண்ணெண்ணெய் எமது வாழ்வுடன் ஒன்றிப்போனது. 


பின்னூட்டங்களை பார்த்த பின்பு ஒரு பின்குறிப்பு: ஜாம் போத்தல் விளக்கு என்றால் என்ன என்பது பற்றி கேட்கப்போகும் தலைமுறைக்காக கீழே உள்ள படம். ஜாம் போத்தல் விளக்கு என பெயர் வந்த காரணம், முன்னர் தக்காளி ஜாம், விளாம்பழ ஜாம் அடைத்து வரும் போத்தல்களிலேயே இது தயாரிக்கப்பட்டது. மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவும் நேரங்களில் கை கொடுக்கும் சிக்கன விளக்காக பயன்பட்டது. கீழே அனா பின்னூட்டத்திலேயே ஜாம் போத்தல் விளக்கை கண் முன்னே கொண்டுவந்துள்ளார். இந்த பதிவிலும்  இதை பற்றி தரப்பட்டுள்ளது.
This entry was posted on 11:48 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

14 comments:

On July 7, 2010 at 12:09 PM , ILA (a) இளா said...

//ஜாம் போத்தல் விளக்குகளும்//
அப்படின்னா? ஏதாச்சும் படம் கிடைக்குமா?

 
On July 7, 2010 at 12:35 PM , நிலாமதி said...

என் தாயக மண் மனம் வீசுகிறது கூடவே சிறுபிராய நினைவுகளும் நிழலாடுகிறது. பகிர்வுக்கு நன்றி .

 
On July 7, 2010 at 1:11 PM , Anonymous said...

//நிவாரணத்திற்கு சங்கங்களில் வழங்கப்படும் பொருட்களில் ஒன்றாக இந்த மண்ணெண்ணையும் இருந்தபடியாலோ என்னவோ கடைகளில் கூட தட்டுப்பாடில்லாமல் கிடைத்துக்கொண்டிருந்தது. //
ஒருக்கா வன்னியில நாங்கள் இருந்த காலத்தில் லீற்றர் முன்னூறு ரூபாய் வரைக்கும் போக, நடேசர் தலை இட்டுத்தான் குறைக்க வைச்சவர்.

ஜாம் போத்தலிக் கொஞ்சம் பஞ்சு போட்டு வைப்பார்கள். கம்பியில் பொருத்தப்பட்ட சைக்கிள் காத்து அடிக்கிற வால்விலும் பஞ்சுத் திரி போட்டு கம்பியில் கட்டித்தூக்கி விடுவோம். அதில் கொஞ்சம் மண்ணெண்ணெயை ஊற்றி திரியை கொழுத்தி விட்டால் நின்று எரியும். பஞ்சு என்றால் நிறையப் போட்டு அடைப்பதில்லை. கொஞ்சம் தான் போடுவோம். இது தான் எங்கள் வீட்டில் இருந்த ஜாம் விளக்கு. போத்தல் விளக்கென்றால், திருப்ப அந்த வால்வை சின்ன கண்ணாடிப்போத்தலின் தகர மூடியில் பொருத்தி திரியை நுழைத்து கொழுத்துவோம். இதற்கு மண்ணெய் ஊற்ற வேண்டும்.

பொருங்கோ படம் கிடைக்குதோ என்டு பாக்கிறன். இல்லாட்டி ஒன்டு செய்து ஒரு கிழமையில் போடுறன். அதற்கு முன் யாரிட்டையும் இருந்தால் போடுங்கோ. ஆயிரம் வார்த்தைகளில் சொல்வதை ஒரு படம் விளக்கிவிடும்.

 
On July 7, 2010 at 1:11 PM , Anonymous said...

http://www.yarl.com/forum/lofiversion/index.php/t6092.html

 
On July 7, 2010 at 3:05 PM , Pragash said...

இளா, தங்களிற்கு தேவையான விளக்கங்கள் இப்போது கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.
நிலாமதி, தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
அனாமிகா, தங்களின் பின்னூட்டத்தை பார்த்த பின்பு பின்குறிப்பு போட்டதற்கு மன்னிக்கவும். தங்களின் அருமையான விளக்கத்திற்கு நன்றி.

 
On July 8, 2010 at 5:59 AM , தமிழ் மதுரம் said...

எனது பள்ளிக்கால பதின்ம வயதுகளில், இருள் சூழும் மம்மல் பொழுதுகளில் சிமினி துடைக்கிறதும், மண்ணெண்ணெய் விட்டு விளக்கு திரியை சரிபார்ப்பதும், திரி கட்டையாகிப்போனால் துணியை கிழித்து புது திரி சுற்றி போடுவதும் எனது அன்றாட கடமைகளில் ஒன்றாகி போனது//


இதே மாதிரியான அனுபவம் எனக்கும் இருக்கிறது தோழா.

 
On July 8, 2010 at 6:03 AM , தமிழ் மதுரம் said...

’எனக்கொரு விசயம் ஞாபகத்திற்கு வருகிறது.
நான் பத்திரிகையில் படித்தது.
இந்த போத்தில் விளக்கில் படித்து விட்டு ‘விளக்கினை நூர்க்காமல்/ அணைக்கமால் தூங்கியதால் தலை முடி பற்றி எரிந்தவர்கள் நிறையப் பேர் என அறிந்திருந்தேன்..

 
On July 8, 2010 at 6:07 AM , தமிழ் மதுரம் said...

இன்னொரு விசயம்- இந்த ஜாம் போத்தல் விளக்கை குப்பி விளக்கு என்றும் சொல்லுவார்கள்.


‘மருந்து/டொனிக் வாற போத்திலின்ரை மூடிப் பக்கத்திலை ‘சைக்கிள் வால்கட்டையின்ரை இரும்புப் பகுதியை எடுத்து அது போகுமளவிற்கு அந்தப் போத்தில் மூடியில் ‘ஓட்டையைப் போட்டு அதற்கு ஊடாகத் திரியைப் போட்டு இந்தக் குப்பி விளக்கினை உருவாக்கிப் பாவித்தனாங்கள்.

இந்தக் குப்பிவிளக்கை கன நேரம் எரிய விடுறேல்லை. காரணம் போத்தில் கீற் ஆகி வெடிச்சுப் போடும் என்பதாலை.

ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் நூர்த்து, நூர்த்துத் தான் கொழுத்துவார்கள்.

 
On July 8, 2010 at 6:15 AM , தமிழ் மதுரம் said...

’கல்வியும் எங்கள் மூலதனம்- அதில்
கத்தி வைக்கிறது ஆளுமினம்
பள்ளிக் கூடங்கள் அகதியானது
படிக்கும் பாடங்கள் அழுகையானது
அகதி முகாமில்
அழுகின்ற விளக்கில் படிக்கிறோம்’’

இந்த ஈழப் பாடலில் விளக்கினை அழுகைக்கு ஒப்பானதாக விளக்கியிருக்கிறார் தாயகக் கவிஞர்..
காரணம் இந்த விளக்கும் அழுவது போல்த் தான் மென்மையாக ஒளிர்ந்து கொண்டிருக்கும்.

இந்தப் பாடலின் இன்னொரு வரியில்
‘குப்பி விளக்குகள் காற்றில் அணைந்தன
உப்பு நீரினால் விழிகள் நனைந்தன
வானத்து விளக்கு வருமென்று நடக்கிறோம்’

என்ற வகையில் இப்பாடலினை எழுதியிருந்தார்.


இப் பாடலினை இங்கு குறிப்பிடக் காரணம்: இந்தப் பாடலில் குப்பி விளக்கின் சிறப்பான பணிகள் பற்றிக் குறிப்பிடுகின்றார்கள்.

 
On July 8, 2010 at 1:04 PM , ஹேமா said...

எங்கட வீட்ல பழைய அரிக்கேன் லாம்பு பார்த்திருக்கிறேன்.
அதனாலேயே என் பதிவு ஒன்றில் அரிக்கேன் லாம்பு என்று சேர்த்துக்கொண்டேன்.
ஜாம் போத்தல் விளக்குத் தெரியவில்லை.அறிந்துகொள்கிறேன்.

 
On July 8, 2010 at 3:56 PM , கானா பிரபா said...

வணக்கம் பிரகாஷ்,

என்னுடைய க.பொ.த.சாதாரண வகுப்பில் இருந்து உயர்தரம் வரை இந்த குப்பி விளக்கில் தான் கழிந்தது. அந்த நாள் நினைவுகளை இப்போது நினைத்தாலும் பயமும் வெறுமையும் அப்பிக் கொள்கின்றது

 
On July 9, 2010 at 9:53 AM , Pragash said...

வாங்கோ தமிழ் மதுரம்! ஈழத்து நினைவுகள் எக்கச்சக்கமாய் உங்களிட்டை இருக்குப்போல. "கல்வியும் எங்கள் மூலதனம்" பாடல் ஒலிவடிவம் எங்கையாவது கிடைச்சால் எனக்கும் சொல்லுங்கோ. வரவிற்கும் பகிர்விற்கும் நன்றிகள்.

வாங்கோ ஹேமா! உங்களுக்கும் நன்றிகள்.

நீங்கள் சொன்னது உண்மைதான் பிரபா அண்ணை. அந்த இரவுகளை மறக்க முடியாது. இரவிலை பொம்மர் சுத்தினாலோ, ஹெலி சுத்தினாலோ உடனை விளக்கை அணைச்சுப்போடவேணும். வெளிச்சம் கண்டால் அடிப்பான். பங்கருக்கு ஓடுறதென்டாலும் இருட்டுக்குள்ளை தான் ஓடவேண்டும்.

 
On July 9, 2010 at 10:13 AM , Anonymous said...

கல்வியும் எங்கள் மூலதனம் கொலின்ஸ் சேர் பாடினவர் தானே? அவர் இப்ப எங்க இருக்கிறார் என்று தெரியுமா? யாழ்ப் பல்கலைக்கழகத்தில் இரண்டு கோல்ட் மெடல் வாங்கின ஆள். நல்லா பாட்டு எழுதுவார் / பாடுவார். ஆனால், வாய் திறந்து கதைச்சால் காத்து தான் அவரும். அவ்வளவு மென்மையானவர்.

கிடைச்சால் பாட்டை எனக்கும் அனுப்புங்கோ ப்ளீஸ். என்ட புரொபைல அட்ரஸ் இருக்கு.

உந்த விளக்கை தலைமாட்டில வைச்சு எரிஞ்ச ஆக்களும் இருக்கினம். மருந்து போத்தலை நூத்து நூத்து கொழுத்துவது இங்கே படித்த பின்னர் தான் ஞாபகம் வருது. ஓ, பொம்மர் வரேக்க நூத்துப்போட்டு ஓடுவது ஞாபகத்தில் இருக்கு. பேந்து பேந்து பொம்மரை கணக்கெடுக்குறேல்லை. பயந்த காலங்களை நினைக்க வேடிக்கையாக இருக்கிறது.

குப்பி விளக்கில படிக்கேக்க கண்ணாடி தேவைப்படேல்ல. இஞ்ச லைட்ல படிக்க கண்ணாடி தேவைப்படுது. அதிலேயும் இப்படி லைட்டை வைக்க கூடாது. அப்படி வைக்கக்கூடாது. இந்த லைட்ல படிக்கக்கூடாது. அந்த லைட்ல படிக்கக்கூடாது. எத்தனை கூடாது.

படத்தை இணைத்ததற்கு நன்றி பிரகாஷ். பலரின் சந்தேகத்தை தீர்க்கும்.

 
On July 9, 2010 at 7:18 PM , தமிழ் மதுரம் said...
This comment has been removed by the author.