Author: சினேகிதி
•1:45 PM


தோலங்கெட்டது, வெக்கங்கெட்டது, மானம் கெட்டது,ரோசம் இல்லாதது, சூடு சுரணையில்லாதது இதெல்லாம் ஒரே அர்தத்திலதான் வருமென்டு நினைக்கிறன்.

இந்தச்சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறீங்கிளோ? இதுக்கு நேரடி அர்த்தம் என்னென்டு எனக்குத் தெரியாது ...தோலம் என்டால் என்ன? ஆனால் எங்கட ஊரில பரவலாப் பாவிக்கிற ஒரு சொல்லிது. இப்ப சகோதரங்கள் 2 பேர் சண்டை கட்டிப்புரண்டு சண்டை பிடிக்க அம்மாவோ அப்பாவோ 2பேருக்கும் நல்லா விளாசிப்போட்டு ஒராளோடை ஒராள் கதைக்கப்படாதெண்டு சொல்லி விட அடுத்த நிமிசமே சண்டை பிடிச்சதை மறந்திட்டுசேர்ந்து விளையாடினால்அங்கால அம்மாவோ அம்மம்மாவோ புறுபுறுப்பினம் தோலம் கெட்டதுகள் இப்பத்தான் 2ம் மல்லுக்கு நிண்டுதுகள் இப்ப பாருங்கோ ஒன்டும் நடக்காதது போல விளையாடுறதை.

இல்லாட்டப் பக்கத்து வீட்டுப்பிள்ளைட்ட நுள்ளு வேண்டிப்போட்டு வீட்ட வந்து அழுற பிள்ளைக்கு அறிவுரை சொல்லிப்போட்டு அம்மா நீ இனி அங்க விளையாடப்போவேண்டாம் என்டு சொல்லுவா. பிள்ளை அடுத்தநாளே போய் திரும்ப நுள்ளு வேண்டிக்கொண்டு வரும் அப்ப சொல்லுவா அம்மா தோலங்கெட்டது நேற்றெல்லே சொன்னான் போகதயெண்டு.

இல்லாட்டி வளர்ந்தாக்கள் ஒரு காலத்தில ஊருக்கே தெரியுற மாதிரிச் சண்டை பிடிச்சுப் போட்டுக் கொஞ்சகாலத்தில திரும்பக் கதைக்கத் தொடங்கினாலும் தோலங்கெட்டதுகள் உதுகளின்ர சண்டைக்க நாங்கள் விலக்குப்பிடிக்கப் போய் காயப்பட்டதுதான் மிச்சம்...இப்ப பாருங்கோ அவை இரண்டுபேற்ற குடும்பத்தையும்...ஒரே வாரப்பாடு இப்ப.

இல்லாட்டி இரண்டு பேர் சண்டைபிடிச்சு என்ர வீட்டு முத்தம் நீ மிரிக்கக்கூடாதெண்டு சவால் விட்டுப்போட்டு பிறகு எதுக்காகவோ வீட்டுப்படியேறி வந்தால் தோலங்கெட்ட ஜென்மம் எந்த முகத்தை வைச்சுக்கொண்டு எங்கட வீட்ட வருது என்று சொல்லுவினம்.

இல்லாட்டி வேலை செய்து முடிக்கும் வரைக்கும் ப்ளாக்ல எழுதிறேல்ல என்டுபோட்டு திரும்பவும் வந்து குதியன் குத்துறாக்களையும் சொல்லலாம்....
Author: சினேகிதி
•5:07 PM
குல்லம் கொண்டுவா என்டுதான் சொல்லுவினம் சுளகு கொண்டுவா என்டு சொல்றேல்ல...

ஓமோம் வயலுக்க நிண்டால் அப்பிடிச் சொல்லமாட்டினம். எங்கட ஐயாவும் அப்பிடித்தான். அதமாதிரி நெல்லு அளக்கேக்கயும் முதலாவது கொத்தை ஒன்டு என்டு சொல்றேல்ல..லாபம் என்டுதான் சொல்லுவினம்.



நான் இன்டைக்கு வேலையால வாறன் அப்பம்மா சிரிச்சு சிரிச்சு கதைச்சுக்கேக்குது...ஆரெண்டு பார்த்தால் என்ர ரீச்சர். அவா என்னட்ட வந்திருக்கிறா அவவை இருத்திவைச்சு நடக்குது அப்பம்மான்ர கச்சேரி.

ரீச்சர் உள்ளுக்க வந்து இருந்த உடனே முதல் கேள்வி கேட்டாவாம் "அப்ப பிள்ளை நீங்கள் எந்த ஊர்?"

ரீச்சர் குமிழமுனை என்டு சொல்லி வாய்மூடேல்ல கேட்டாவாம் நீங்கள் தங்கண்ணைன்ர மகளே என்டு...ரீச்சர் நல்லாப் பயந்திருப்பா இதென்னடா வந்த இடத்தில வம்பாப்போட்டென்டு.

அப்பம்மாக்கு 80 வயசாகப்போகுது ரீச்சருக்கு 50 வயசாகப்போகுது. நான் வீட்டுக்குள்ள வாறன் ஏதோ ஏதோ கதையெல்லாம் நடக்குது. ஏதோ குல்லம் புசல் கொம்பறை கொத்து மரக்கால் பச்சைக்குிறியன் அணில்குிறியன் என்றெல்லாம் புரியாத பாசைல நடக்குது கதை. சத்தியமா அவை கதைச்சதொண்டும் எனக்கு விளங்கேல்ல.

இடையில புகுந்து விளக்கம் கேக்கலாமெண்டால் இரண்டுபேரும் நிப்பாட்டுற மாதிரித் தெரியேல்ல. அப்பம்மா கேக்கிறா உங்கட வீட்டுக்கு நிலையம் பாத்து தந்தது எங்கட அவர்தானே.

சரி இதுக்குமேல பொறுக்கேலாது...நான் கேட்டிட்டன்.

நான்: நிலையம் பார்க்கிறதோ?? அப்பிடியென்டால் என்ன?

அப்பம்மா : தாத்தாதான் இவேன்ர வீட்டுக்கு கிணத்துக்கு எல்லாம் நிலையம் பார்த்துக்குடுத்தது. எந்த இடத்தில கிணறு தோண்டலாம்...வீட்டுக்கு வாசல் எங்க வைக்கலாம் இதுகள் எல்லாம் பார்த்துச் சொல்றது.

நான்: என்னத்த பார்த்துச் சொன்னவர்?

அப்பம்மா: இதுக்கு என்னத்த சொல்றது நான்? அவர் அதுகள் எல்லாம் படிச்சுத் தேர்ந்தவர்.
வைத்தியம் பார்க்கிறது...தொய்வு பார்க்கிறது என்டு அவர் எல்லாம்
தெரிஞ்சவர். குமிழம்முனையில தாத்தான்ர படம் இல்லாத வீடில்லை.

நான்: கொஞ்ச நேரத்துக்கு முதல் ஏதோ கொம்பறை கொறியன் என்டெல்லாம் சொன்னீங்கள்..அதெல்லாம் என்ன?

ரீச்சர் : வெப்பில் கொடி வெட்டிக்கொண்டு வந்து குடில் மாதிரிச் சுத்திக்கட்டிப்போட்டு மேல பச்சைமண் பூசி மெழுகுறது. அந்து பிடிக்காமல் இருக்க வேப்பக்கொட்டை கொண்டு வந்து போடுறது சுத்தவர. கொம்பறைக்குள்ள மூட்டைக்கணக்கில நெல்லைக்கொண்டுவந்து கொட்டி வைச்சால் அடுத்த வருசம் வரைக்கும் இருக்கும். சோத்துக்கும் எடுக்கிறது விதைக்கவும் எடுக்கிறது.

நான் : என்ன ரீச்சர் நீங்களும் அப்பம்மா மாதிரிக் கதைக்கிறீங்கள்...அந்து என்டால் என்ன.

ரீச்சர் : அப்பம்மாவைக் கண்டது ஊருக்குப்போனது போல இருக்கு. ஊர்ப்பக்கம் போய் 20 வருசமாகப்போது. மறந்துபோன சொல்லெல்லாத்தையும் ஞாபகப்படுத்திட்டா. பச்சைக்குறியன் எல்லாம் சுத்தமா மறந்திட்டம். இந்தச்சொல்லெல்லாம் நடுகிலும் பாவிச்சனாங்கள்.

நான் : ஹி ஹி...அந்து..

ரீச்சர் : அந்து பிடிக்காமல் என்டால் பூச்சி பிடிக்காமல்

நான் : அப்ப பச்சைக்குறியன் எண்டால்...



அப்பம்மா : நாலு சுண்டு நெல்லு = ஒரு கொத்து.
பத்து கொத்து = ஒரு மரக்கால்
28 கொத்து = ஒரு புசல்
பச்சைக்குறியான் என்றது பச்சைக்குறி போட்ட சாக்கு ; அதுக்குள்ள 3 புசல் போடலாம். போட்டு சணல் போட்டுத் தைக்கிறது.
அணில்குறியன் சாக்கில 78 கொத்துப் போடலாம்.

நான் : ஓ அப்ப உங்கட வயல்ல எத்தின கொத்து நெல்லு வரும்?

அப்பம்மா : என்ன எங்கட 2 வயல்லயும் சேர்த்தா 200-250 மூடைக்கு வரும்.

நான் : ஆஆஆஆஆ..அவ்வளவு நெல்லா? அப்ப நீங்கள் உங்களுக்கு கஸ்டம் அப்பா எல்லாம் சந்தைக்கு கச்சான் கொண்டுபோய் விக்கிறவர் என்றெல்லாம் சொன்னீங்கள்.

அப்பம்மா: பின்ன குடிமக்களுக்கு குடுக்க சாமான்கள் வேண்ட எண்டு குடுக்கிறது போக ...

ரீச்சர் : குடிமக்கள் என்றால் விளங்காது.

அப்பம்மா : அதான் மோனை தலைமயிர் வெட்ட வந்தால் எங்கட வீட்டில மட்டும் 10 பேர் அப்ப 2 மூடை நெல்லு குடுப்பம்.

நான் : 2 மூடை??? ஏன் அவ்வளவு.

அப்பம்மா : ஒரு வரியத்துக்கு 2 மூடை குடுக்கத்தானே வேணும்.

நான் : ஏதோ குல்லம் கொண்டுவாறதெண்டு சொன்னீங்கள்?? ஏன் வயலுக்க நிண்டு சுளகு என்டு சொல்லக்கூடாது? சொன்னால் என்ன நடக்கும்?

அப்பம்மா: அப்பிடிச் சொல்றேல்ல. சொன்னால் கூடாதாம். குல்லம் என்டுதான் சொல்றது.

நான்: அதான் ஏனென்டு கேக்கிறன்..சொன்னால் என்ன நடக்கும்.

அப்பம்மா: சொன்னால் விளைச்சலுக்குக் கூடாதாம்.

நான்: குல்லம் என்று சொல்றதுக்கும் சுளகு என்றதுக்கும் என்ன வித்தியாம்...2ம் சொல்லுத்தானே.

(பதில் வரேல்ல).

நான்: ம் அப்ப இப்ப எவ்வளவு காணியிருக்கு உங்களுக்கு??? இப்ப எங்க இருக்கு....

அப்பம்மா: ஒன்டுமில்லாமல் போச்சு.

மிச்ச கதை கேக்க ஆறுதலா வாறன் என்டிட்டு போட்டா ரீச்சர்.

வேலைகாரன் கம்பின்ர தலை கொக்கின்ர தலை போல இருக்குமாம். அதால வைக்கோலை தட்டிக்கொண்டு போறதாம். மிச்சமொன்டும் ஞாபகம் வரேல்ல...அடுத்த முறை அப்பம்மா கதைக்கேக்க றக்கோர்ட் பண்ணி வைக்கிறன்.

{ஈழமுற்றத்தில இது சினேகிதின்ர குதியம் குத்தல் வாரம் :) கவலைப்படாதயுங்கோ கொஞ்ச நாளைக்கு நான் எழுத மாட்டன்.}
Author: geevanathy
•7:48 AM

களத்து மேட்டிலும் தேன் காட்டிலும் பொலிவை நாடும் புதுவார்த்தைகள்


திருகோணமலையில் உள்ள தம்பலகாமப் பகுதி தமிழ் முன்னோர்கள், உயிர்காக்கும் நெல்லைச் சேமிக்கும் களத்து மேட்டிலும், பூலோக அமிர்தம் என்று போற்றப்படும் தேன் எடுக்கும் பொதுக்காட்டிலும் பேசுவதற்கெனத் தங்கள் தாய் மொழியான தமிழில் இருந்து பாஷைகளைத் தோற்று வித்துப் பேசிவந்துள்ளனர். இந்த விசித்திர மொழிகள் இன்று பேச்சு வழக்கற்று மறைந்து கொண்டிருக்கின்றன. கால மாற்றத்தின் காரணமாக களத்து மேட்டில் விவசாயிகள் பேசிவந்த பாஷை தேவையற்றதாகவும் ஆகியுள்ளது.


தமிழ் மொழியில் இருந்து தோற்றிவிக்கப்பட்டவைகளாயினும் இம் மொழிகளின் வார்த்தைகள் தமிழ் மொழியின் நின்று வேறு வேறு அர்த்தமுடையவையாகவும் காணப்படுகின்றன.நெல் வயல் அறுவடை ஆனதும் வயல்களின் மத்தியிலுள்ள களத்து மேட்டில் வட்ட அணியாக சூடு வைக்கப்பட்டிருக்கும். பொங்கி விட்டு இறைவழிபாடாற்றி சூடுமிதிப்பு தொடங்கியதும் சூடுமிதிப்பாளர்களிடையே ஒரு விநோதமான மொழி பேசப்படும். களத்து மேட்டில் பேசப்படும் இப்புதிய மொழியின் வார்த்தைகள் அதிக நெல்லைப் பெறும் ஆவல் உடையதாகவே அமைந்துள்ளன.



உதாரணமாக களத்தில் பேசப்படும் வார்த்தைகளில் சில பின்வருமாறு: நெற்கதிர்கள் சூடு என்று குறிப்பிடுவது வழமை. ஆனால் களப்பாஷையில் சூட்டை - போலன் என்று சொல்வார்கள். சூடுமிதிப்புக்கு ஈடுபடுத்தும் எருமைக் கடாக்களை வாரிக்காலன் என்று அழைப்பார்கள். வாரிக்காலன் என்றால் அதிகமாக நெல்லைத்தரும் கால்களை உடையவை என்பது பொருள். வைக்கோலை விட்டு உதிர்த்த நெல்குவியலை பொலி என்று குறிப்பிடுவார்கள். பொலிஎன்றால் பொலிந்து அதிகப்படுவது என்பது பொருள். களத்தில் சூடு மிதிப்பில் ஈடுபடுவோரின் வாய்களில் பொலி,பொலி என்ற சொல் தாராளமாகவே புழங்கும். இதே போல் நெற்கதிருக்கு வயலில் வளைந்து வளைந்து மிதித்து நெல் மணிகளை உதிர்க்கும் எருமைக்கடாக்கள் போடும் சாணியைப் போல் என்றும் வைக்கோலை மிதிஞ்சான் என்றும், நெல்லில் உள்ள பதரைக் கள்ளன் என்றும், சாப்பிடுவதை அல்லது குடிப்பதைப் பெருகுவதென்றும், தண்ணீரைக் கலங்கள் என்றும், தண்ணீர் குடிப்பதைக் கலங்கள் பெருகுவதென்றும், இப்படி களத்திலுள்ள தேவைகளுக்காகப் பேசப்படும் வார்த்தைகள் எல்லாம் தமிழுக்கு வேறான ஒரு புதிய மொழியாகவே தோன்றும்.



தேன் காட்டுக் காரர்கள் பேசும் மொழி


பூலோக அமிர்தம் எனப்போற்றப்படுகின்ற தேன் பெறுவதற்காகக் காட்டுக்குச் செல்லும் தேன்காட்டுக்காரர்கள் தேனை ஒரு தெய்வீகப் பொருளாக மதிப்பதால் அவர்கள் காட்டில் பேசுவதற்கென ஒரு புதிய மொழியை உருவாக்கிப் பேசிவந்துள்ளனர். வனவேட்டையில் தேன் காடு போவது தான் மிகவும் அபாயகரமானது என்பது வேட்டைக்காரர்களின் கருத்தாகும். பத்து அல்லது பதினைந்து பேர்கள் ஒருங்கு சேர்ந்து தேன் காட்டுக்குச் சென்றாலும் காட்டில் முப்பது யார், நாற்பது யார் தூரத்துக்கு ஒருவராக காடெல்லாம் பரந்து தனித்தனியாகவே தேன் தேடிச்செல்வார்கள்.



தேன் காட்டுக்காரர்களின் முழுக்கவனமும் மரங்களில் தேனீக்கள் மேல் நோக்கிப் பார்ப்பதிலே நிலைத்திருப்பதால் கீழே காடுகளில் பதுங்கி இருக்கும் மிருகங்களைக் கவனிக்கத்தவறி விடுவார்கள். ஆகவே புதர்களில் மறைந்திருக்கும் புலிகளினாலோ, கரடிகளினாலோ தேன் காட்டுக் காரர்கள் தாக்கப்படுவது மிகச் சர்வசாதாரண விஷயம். இந்த அபாயகரமான தொழிலைச் செய்பவர்கள் தேன் காட்டில் பேசிக் கொள்ளும் மொழியும் தமிழ் அல்லாத ஒரு புதிய மொழியாகவே தோன்றுகின்றுது.


முப்பது நாற்பது யார்களுக்கு ஒருவராக காட்டில் வரிசையாகத் தேன் பார்த்து வருபவர்களில் ஒருவர் ஒரு மரக்கொம்பில் தேனைக் கண்டு விட்டாரானால் தன் சகாக்களுக்கு அதை தெரியப்படுத்த கோ என்று குரல் கொடுப்பார். அவர் குரலைக் கேட்ட சகா ஒருவர் அவர் என்ன சொல்கிறார் என்பதை அறிந்து கொள்வதற்காக கோ என்று ஒற்றைக் குரல் கொடுப்பார். அப்பதில் குரல் கேட்டதும் தேன் கண்டவர் கோ, கோ என்று இரட்டையாகச் சமிக்ஞையைவெளிப்படுத்துவார். இதை இரட்டிப்பதென்று தேன் வேட்டைக்காரர் குறிப்பிடுவார். தேன் கண்டவர் முதல் கோ என்றது நண்பர்களே! என்று காட்டில் தேன் பார்த்து வரும் தன் சகாக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல முயல்வதாகும். அதற்கு அடுத்து வந்தவர் கோ என்றது என்ன என்று கேட்பதைப் போன்று அர்த்தமுடையதாகும். அதற்கு தேன் கண்டவர் கோ கோ என்று இரட்டித்தது தேன் இங்கே இருக்கிறது எல்லோரும் இங்கே வாருங்கள் என்று கொடுக்கும் காட்டுச் சமிக்ஞை ஆகும். இந்த சமிக்ஞையைக் கேட்டதும் காடெல்லாம் வலையிட்டதைப் போல் பரவி வந்த தேன் காட்டுக்காரர்கள் தேன் இருக்கும் மரத்துக்கு வந்து கூடித் தேன் கூடுகளை வெட்டி வதைகளை எடுத்து பரப்பப்பட்ட இலைகளில் குவிப்பார்கள். எல்லோரும் அமர்ந்திருந்து தேன் வதைகளை உண்பார்கள்.



தேன் வதைகளை எடுத்துப் புசிக்குமாறு ஒருவருக்கொருவர் சொல்ல விரும்பினால் இன்றுள்ளவர்கள் ஆங்கிலத்தையும் தமிழையும் இடைக்கிடை கலந்து பேசுவதைப் போல் எடுத்துக் கொட்டாப்பி என்று சொல்லுவர். எடுத்து என்பதை தமிழ்ச் சொல்லாகவும் கொட்டாப்பி என்பது புரியாத காட்டுப் பாஷையாகவும் தோன்றும். கொட்டாப்பி என்பதற்குச் சாப்பிடு என்பது பொருள். கொட்டாப்பி, கொட்டாப்பி என்று ஒருவர் இன்னொருவரை கட்டாயப்படுத்தினால் எனக்கு வேண்டாம் அல்லது என்னால் முடியாது என்று கூறுவது தேன் காட்டுமரபாகாது. ஆகவே முன்னதான் என்று கூற வேண்டும். முன்னதான் என்றால் எனக்கு வேண்டாம் அல்லது என்னால் முடியாது என்பது பொருள். தேன் காட்டிலும் தண்ணீருக்குக் கலங்கள் என்றும் பருகுவதற்கு பெருகுவதென்றும் குறிப்பிடுவார்கள்.



தம்பலகாமம்.க.வேலாயுதம்

Author: வி. ஜெ. சந்திரன்
•7:04 AM
ஈழத்து முத்ததிலை கன பேர் சேந்திருக்கிறியள், ஆனா ஒரு சிலர் தானே எழுதியிருக்கினம், மிச்ச ஆக்கள் என்ன செய்யினம்? என்ன நான் எங்கையிருந்தனானோ ? சரி சரி எனக்கு அடிக்கவரதையுங்கோ? சும்மா பகிடிக்கு கேட்டனான்.

இண்டைக்கு ஏதவது எழுதுவம் எண்டு வெளிக்கிட்டா என்ன எழுதுற எண்டு தெரியேல்லை. மணிமேகலை ஆச்சியிடை (ஆப்பு மார் எல்லாரும் அவவை ஆச்சி எண்டு சொன்னா, நான் ஆச்சி எண்டு சொல்லலாம் தானே) எழுதினதை வாசிச்சன் நல்ல வடிவா எழுதியிருக்கிறா. அவவின்ரை பதிவை வாசிச்சு கனபேர் தங்கடை அம்மம்மா மார் கதைக்கிற மாரி கிடக்காம் எண்டு சொல்லினம். எனக்கு அப்பா வழி ஆச்சி (அப்பம்மா), அப்பு (அப்பப்பா) வோடை கதைக்கிற சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை. அம்மா வழி அப்புவும் அம்மா சின்னனா இருக்கேக்கையே செத்துபோனார். அம்மா வழி ஆச்சியும் எனக்கு ஒரு எழெட்டு வயது இருக்கேக்கை போய் சேந்திட்ட. அதாலை அவவோடை கதைச்சதுகள் கூட எனக்கு பெரிசா நினைவில்லை. ஒரு சில சொல்லுகளை தவிர மிச்சமேல்லாம் மறந்துபோச்சு. ஆனா அவவிடை சுருங்கின தோலிலை அடிக்கடி நுள்ளியும், இழுத்தும் அவாவுக்கு ஆக்கினை குடுத்தது ஞாபகம் இருக்கு.

ஆச்சி அந்த மாரி அப்பஞ்சுடுவாவாம், அதுவும் தணல் சட்டியெல்லாம் மேல வச்சு. உங்களுக்கு அந்த கதையள் தெரியுமோ தணல் சட்டி வச்சு அப்பஞ்சுடுறது? நான் ஒரு நாளும் பாக்கேல்லை. நாட்டைவிட்டு வெளிக்கிட்டாப்பிறகு அண்ணைவீட்ட போகேக்கை அண்ணா தான் சொன்னார் ஆச்சி அவைக்கு தணல் சட்டிவச்சு அப்பஞ்சுட்டு குடுத்தவவாம். எனக்கு குடுப்பினைஇல்லை அதை பக்கவும், சாப்பிடவும். அதவிட கத்தரிக்கை பழப்புளி கறி, பாவக்காய் கறியெல்லாம் திறமாய் சமைப்ப எண்டும் அண்ணை சொல்லுவார்.

உந்த பழங்கதையளை விடுவம். பேச்சு வழக்கு பற்றி சொல்லுறதெண்டா கொஞ்சம் கரைச்சல் தான்.

உதாரணமா

இரண்டு நண்பர்கள் கதைக்கேக்க, கன நாள் காணாத நண்பனை கண்டால்

டேய், எங்கையடா இவவளவு நாளும் ஆளை காணகிடைக்கேல்லை எனும் போது வரும் டேய், அடா போன்றவை நட்பின் நெருக்கதை குறித்தாலும்,
ஒருவரை மரியதை குறைவாக விழிக்கவும் இதே போல பயன்படுத்தாலாம். சரி இதிலை என்ன புதினம் கிடக்கு எண்டு கேக்கிறியளோ. இஞ்சை என்ரை ஆங்கிலத்தை தாய் மொழியா கொண்ட நண்பனுக்கு ஒரு நாள் கதைகேக்க, டேய், அடா போட்டு ஆரும் சொன்னா அது மரியாதையில்லாத முறை எண்டு சொல்லிபோட்டன். பிறகொரு நாள் செல்பேசிலை எனரை இன்னொரு நண்பனோட கதைகேக்க டேய், டா க்களை கண்ட படி பாவிச்சு கதைச்சா, பக்கத்திலையிருந்து கேட்டு கொண்டிருந்திட்டு கேட்டான் ஆரோடை சண்டை பிடிச்சனி எண்டு.

உங்கள் எல்லாருக்கும் தெரியும் தானே நாங்கள் வயது கூடின ஆக்களை பெயரெல்லாம் சொல்லி கூப்பிடுறேல்லை, அதப்போலை அவன், போனான், வந்தான் எண்டு கதைக்க மாட்டம். அது 4 - 5 வயது கூடின அண்ணையாக கூட இருக்கலாம்.

அண்ணை எங்க போன்னீங்கள் எண்டு தான் கேக்கிறது வழக்கம். எங்க போன்னீர் எண்டோ இல்லாட்டி எங்க போன்னீ எண்டோ கேக்க மாட்டம். அப்பிடி கதைச்ச கூட இருக்கிற ஆக்காளே சில நேரம் பகிடி பண்ணுவினம். என்ன உப்பிடி கதைக்கிறாய் எண்டு. நான் என்ரை அண்ணையோட போன்னீர், வந்தனீர், செய்தனீர் எண்டு தான் கதைக்கிறனான். அதை பாத்திட்டு என்ரை கூட்டாளிமார் நக்கலடிப்பாங்கள் உன்ரை அண்ணேன்ரை வயதென்ன, உன்ரை வயதென்ன (அண்ணைக்கும் எனக்கும் 16 வயது வித்தியாசம்), அண்ணையை மரியாதையில்லாம கூப்பிடிறாய் எண்டு.

ஒவ்வோரு ஊர்ப் பேச்சு வழக்கிலை ஒரு பொது வடிவம் இருந்தாலும், ஒரு கோடு கீறி இது இப்பிடிதான் எண்டு சொல்லுறது சரியான கசிட்டம் பாருங்கோ. பேச்சு வழக்கு எண்டிறது சந்தர்ப்ப சூழ்நிலைக்கேத்தப் போலை மாறும்.

சரி சரி கனக்க எழுதி பதிவை இழுத்துகொண்டு போகாம எனக்கு இப்ப ஞாபகம் வந்த சில வித்தியசமான சொல்லுகளை கீழ சொல்லுறன்.





1. இல்லுபோலை/ எல்லுபோலை: இதிலை எது சரியான உச்சரிப்பெண்டு எனக்குதெரியா

இந்த சொல்லு கொஞ்சம், சிறிதளவு எனும் சொற்களுக்கு சமனா ஆச்சி பாவிப்பா. ஒரு எல்லுபோலை குழம்பு விட்ட காணும்.

2. எப்பன், ஒரெப்பன் : சிறிதளவு - இந்தசொல்லு இப்பவும் சிலவேளை பாவிக்கிறனாங்கள் எண்டு நினைக்கிறன். உ+ம், எப்பன் இடம் குடுத்தா காணும் தலையிலை ஏறியிருந்திடுவாங்கள்.

3. பறையிற: கதைக்கிற, பெசுகிற ( பேசுதல் எனும் சொல் ஈழத்தை பொறுத்தவரை வைதல் எனும் கருத்தில் தான் அதிகம் பாவிக்கபடுகிரது என நினைக்கிறேன்)

4. தீய சட்டி: பொதுவா இது மச்சம் சாப்பிடுற ஆக்கள் வீடுகளிலை புழக்கத்தில் இருக்கிற சொல். பொதுவா மச்சம் சாப்பிடுற ஆக்கள் வீட்டிலை இரண்டு தொகுதி சமையல் பாத்திரங்கள் இருக்கும் ஒண்டு நாளாந்தம் சமைக்க, அதிலை அசைவ உணவுகள் எல்லாம் சமைப்பினம். இன்னும் ஒரு தொகுதி சமையல் பாத்திரங்கள் இருக்கும் அதில் மரக்கறி மட்டும் சமைப்பினம். குறிப்பா விரத காலங்களிலை, திவச நாட்களிலை சமைக்க பாவிப்பினம்.

5. மச்சம்: மச்சம் எண்டிற சொல்லு மீனை குறிச்சாலும், பேச்சு வழக்கில் அசைவ உணவுகள் அனைத்தையும் குறிக்கும். உ + ம்: இண்டைக்கு வெள்ளி கிழமை நான் மச்சம் சாப்பிடுறேல்லை.

6. அரக்கி (வினை சொல்லாய்??): ஒரு பொருளை சிறிது இடம்மாற்றி வைக்க/ ஒருவர் இருக்கும் போது புதிதாக வந்தவர் இருக்க (உட்கார) சிறிது இடம் தேவைப்படும் போது,

அந்த மேசையை கொஞ்சம் அரக்கி வைக்க வேணும். டேய் கொஞ்சம் அரக்கி இரு.

7. இயத்து: சமையல் பாத்திரங்கள்
8. ஏதனம்: சமையல் பாத்திரங்கள்


சரி மிச்சம் பிறகு சொல்லுறன்.

அப்ப வரட்டே....
Author: யசோதா.பத்மநாதன்
•1:42 AM
19.06.09 வெள்ளிக் கிழமை இண்டைக்கு. ஈழத்து முற்றக்காரர் எல்லாரும் இண்டைக்கு எனக்குச் சொந்தமாப் போச்சினம்.சொந்த பந்தம் எண்டு இருக்கிறது எவ்வளவு சந்தோஷம்!இண்டைக்கு அவை எல்லாரும் என்னட்ட வந்தாலும் வருவினம்.நான் அவைய வரவேற்கத்தானே வேணும்.

அதால இருக்க, நிக்க இப்ப எனக்கு நேரமில்லை.நாற்சார வீடெண்டா சும்மாவே! முதுகொடிஞ்ச வேலை.வீடு தூசு தட்டி,கூட்டி, சீமேந்துத் தரை கழுவி,சாம்பிராணிப் புகை போட்டு,சாமிக்கும் பூவும் விளக்கும் வைச்சு,வெளி முற்றமும் கூட்டிப் பெருக்கி, புழுதி கிளம்பாமல் தண்ணி தெளித்து,தலை வாசலில் மாவிலைத் தோறணமும் கட்டியாச்சு.முற்றத்தில மல்லிகைப் பூக்கள் பந்தலுக்குக் கீழ கொட்டுண்டு கிடக்குது தான். பொறுக்கி எடுக்க இப்ப நேரமில்லை.அதப் பிறகு பாப்பம்.

பால் வாங்க வாற அம்மானின்ர சின்னப் பொடியன் இன்னும் வரக் காணன். வந்தால் மதிலில ஏத்தி உயரத்தில இருக்கிற செவ்வரத்தம் பூக்களை ஆய்ஞ்சு தரச் சொல்லலாம். அவன் அந்தக் காலமையிலையும் பூவரசமிலையில பீப்பீ ஊதிக் கொண்டுதான் வருவான்.சொல்வழி கேளான்.

தூரத்தில கோயில் மணி கேக்குது.யாரோ ஒரு கறுப்புத் தாத்தா வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு நெத்தீல கையில மார்பில எல்லாம் வீபூதி பூசிக் கொண்டு உரத்த குரலில தேவாரம் பாடிக் கொண்டு றோட்டால போகிறார்.மதிலைத் தாண்டி றோட்டில எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிற நித்திய கல்யாணிச் செடியள் பூத்திருக்கிறதெல்லாம் இந்தத் தாத்தாவுக்காகத் தான்.தன்ரை பைக்குள் அதுகளப்போட்டுக் கொண்டு அவர் நடந்து போறார்.

பள்ளிப் பிள்ளைகளும் இப்ப பள்ளிக் கூடம் போகத் தொடங்கி விட்டுதுகள்.நேரம் இப்ப 8 மணி சொச்சமாக இருக்க வேணும்.சைக்கிள்களில வெள்ளைச் சீருடையில நல்லெண்ணை வெச்சு படிய வாரிப் பின்னி திருநீறும் கறுப்புப் பொட்டும் போட்டுப் பிள்ளைகள் போறது ஒரு கண்கொளாக் காட்சி தான்.புறாக்கள் கூட்டமாப் போறது போல இருக்கும்.சர்வகலாசாலைக்குப் போய் பிரகாசிக்க வேண்டிய குருத்துகள்.

எங்கட ஐயாவும் விடிய வெள்ளன புலவுக்குப் போட்டார்.அது அவற்ற முதுசக் காணி.சங்கதி என்னண்டா அவர் காம்புக் சத்தகத்தையும், உழவாரத்தையும்,அலுவாங்கையும் கொண்டு போனாரோ தெரியேல்லை.அசண்டையீனமா விட்டிட்டுப் போட்டார் போல கிடக்கு. கதியால் போட என்ன செய்யப் போறாரோ தெரியாது.அவருக்கும் இப்ப மறதி கூடிப் போச்சு.இப்ப காதும் சரியாக் கேக்கிறயில்ல.ஆனா பாவம், செரியான பிரயாசை.

வெய்யில் ஏறிவிட்டுது இன்னும் பினைஞ்ச பினாட்டையும் புளியையும் நடு முத்தத்தில வைக்கேல்லை எண்டு அம்மா வேற அங்க பிலாக்கணம் பாடத் தொடங்கீயிட்டா.அவவின்ர பூராடம் கேக்கிறதெண்டா அவவின்ர சிநேகிதி பொன்னம்மாக்கா,பொட்டுக்கால வந்து தலைவாசல்ல நிண்டு ஒரு குரல் குடுக்க வேணும்.அப்ப பாக்க வேணும் நீங்கள் அவவ.

இண்டைக்கு நல்லா வெய்யில் எறிக்கும் போல தான் கிடக்கு.புளுக்கொடியலையும் காய விட்டா நல்லது தான்.அதுக்கு முதல் வெத்திலத்
தட்டத்தையும்,பாக்குவெட்டியையும்,பாக்குரலையும் சாவியையும் கொண்டு போய் அவவின்ர கையில் குடுத்துப் போட வேணும்.இல்லாட்டிக்கு அவவிட்ட வாய் குடுத்துத் தப்பேலாது.

ஐயாவுக்கு அடுப்பில குரக்கன் புட்டு அவியுது.அவருக்குச் சலரோகம் கன காலமா இருக்குது.இவ்வளவு காலமும் சாப்பாட்டால தானே கட்டுப் படுத்திக் கொண்டு வாறார்.குரக்கன் புட்டும் எப்பன் பழஞ் சோறும் பழங்கறியளும் கொஞ்சம் சம்பலும் சட்டிக்கை போட்டுக் குழைச்சுப்போட்டு 2 மிளகாய்ப்பொரியலையும் தட்டில வச்சு மூடிவிட்டா மனுசன் வந்து சாப்பிடும்.பாவம் களைச்சுப் போய் வாற மனுசன்.

இனி நானும் நிண்டு மினைக்கிட ஏலாது. மூண்டாவது வளவுக்கை போய் நல்ல தண்ணி அள்ளிக் கொண்டு வந்து வச்சுப் போட்டு,மத்தியானப் பாட்டத் தொடங்க வேணும்.வறண்ட பூமி தானே!நிலம் எல்லாம் சுண்ணாம்புக் கல்லு.அதால சவர் தண்ணி.எண்டாலும் சனம் நல்லாப் பாடுபடுங்கள்.

அடுத்த வீட்டு பொன்னம்மாக்கன்ர மே(மோ)ள் பாவாடை ஒண்டு தச்சுத் தாங்கோ எண்டு முந்த நாள் துணியை தந்திட்டுப் போனவள்.குடைவெட்டுப் பாவாடையோ சுருக்குப் பாவாடையோ எண்டு கேக்க மறந்து போனன்.இனி,எக்கணம் வந்து துள்ளப் போறாள்(குதிக்கப் போறாள்)இன்னும் தைக்கேல்லை எண்டு.தண்ணி அள்ளப் போகேக்கை ஒருக்கா கண்டு கேக்க வேணும்.

அது சரி,நீங்கள் எல்லாம் வருவீங்கள் எல்லே? அதால முதலே வேல எல்லாத்தையும் முடிச்சுப் போட்டன் எண்டா நல்லது.பிறகு இடயில ஒருக்கா போய் செல்வி மாட்டுக்கு கழுநீர் தண்ணி வைக்கிறது மட்டும் தான்.மாத்தியானம் ஒருக்கா மாத்தியும் கட்ட வேணும்.சில வேளை நீங்கள் இருக்கிறீங்கள் எண்டுட்டு அம்மா அதச் செய்தாலும் செய்வா.

இஞ்ச பாருங்கோவன்,கோடியில செல்வி குரல் குடுக்குது.இண்டைக்குக் கொஞ்சம் பிந்திப் போட்டுது.பாவம் அவளும் இளங் கண்டுக்காறி.உண்ணாணை அது ஒரு லட்சுமி தான்.சொம்பு நிறைய அது தாற பாலக் கறந்து,மண்சட்டியில, சாணத்தால மெழுகின விறகடுப்பில வச்சுக் காச்சினா வாற வாசம் இருக்கே அதுக்கு ஈடு இணை இல்லை.

நீங்கள் எல்லாரும் வாருங்கோ! உங்களுக்கு கொஞ்சம் கற்கண்டு போட்டுக் காச்சி, ஆத்தி அளவான சூட்டோட மூக்குப் பேணியில பக்குவமா ஊத்தித் தாறன்.அதை ஒருக்கா அன்னாந்து குடிச்சுப் பாருங்கோ. பிறகு நீங்களே சொல்லுவியள் நல்லா இருக்கெண்டு.

நீங்கள் கட்டாயம் எல்லாரும் வருவீங்கள் தானே? நீங்கள் வருவீங்கள் எண்டுதான் இவ்வளவு ஆரவாரம்.மறக்கக் கூடாது.வந்திட வேணும்.


குறிப்புகள்:


செட்டாக - நேர்த்தியாக,சச்சிதமாக,அழகு இறுக்கம் செறிவு கொண்ட

சாம்பிராணி - அகில்

பொறுக்கி - கைகளால் ஒன்றொன்றாக எடுத்தல்

அம்மான் - மாமா

பொடியன் - பையன், அதன் பெண்பால் பொடிச்சி/பெட்டை

சொல் வழி - புத்திமதி

கேளான் - கேட்க மாட்டான்

சொச்சமாக - கிட்டத்தட்ட

கொட்டுண்டு - சிந்துப் பட்டு

ஆய்ந்து - பிடுங்கி

காணன் - காணவில்லை

வீபூதி - திருநீறு

பள்ளி - பாட சாலை

சர்வகலாசாலை - பல்கலைக் கழகம்

குருத்துகள் - இளம் பிள்ளைகள்

புலவு - தோட்டம்

முதுசம் - பாரம்பரியமாக கை மாறப் பட்டு வரும் சொத்து

சங்கதி - புதினம், செய்தி,விடயம்

அசண்டையீனம் - கவலையீனம்

கதியால் - வேலி

காம்புக் சத்தகம் - ஓலை வார, வார்ந்த ஓலையை பெட்டி இழைக்கும் போது பின்னலுக்குள் சொருக உதவும் கூர்மையான நீண்ட பின்புறத்தைக் கொண்ட மிகச் சிறிய வளைந்த கத்தி.

உழவாரம் - குந்தியிருந்து கைகளால் புற்களைச் செருக்க உதவும் மண்வெட்டியைப் போன்றதான ஒரு சிறு கருவி

அலுவாங்கு - ஈட்டி போல நீளமாகவும் நுனிப் பக்கம் தட்டையாகவும் கூர்மையாகவும் இருக்கும்

பிரயாசை - முயற்சி

புளுக்கொடியல் - பனங் கிழங்கைக் அவித்துக் காய வைத்து சேகரித்து வைத்துக் கொள்வார்கள்.தேங்காய்ச் சொட்டோடு சாப்பிடச் சுவையாக இருக்கும்

பாக்கு வெட்டி - பாக்கு வெட்ட உதவும் சிறு உபகரணம்.கலைத்துவமான வடிவங்களில் கிடைக்கும்

வெத்திலைத் தட்டம் - வெத்திலைகள் வைப்பதற்கென்று இருக்கின்ற தட்டம்.பீடத்தோடு கூடியது.

பாக்குரல், சாவி - பல் இல்லாதவர்கள் பாக்கு இடித்து உண்ண உதவும் சிறு உரலும் உலக்கையும்

பிலாக்கணம் - புறுபுறுத்தல்

பூராடம் - விடுப்பு,விண்ணாணம்

கோடி - கொல்லைப் புறம்

பொட்டு - வேலிக்கிடையிலான சிறு சந்து

உண்ணாணை - உன் மீது ஆணையாக

எப்பன் - கொஞ்சம்

வளவு - காணி

சவர் - உப்பு

எல்லே - அல்லவா

ஏலாது - முடியாது

மே(மோ)ள் - மகள்

பாவாடை - முழங்கால் அளவுக்குத் தைக்கப் படும் பெண்களுக்கான கீழ் பாதி ஆடை

எக்கணம் - இக்கணம், இப்ப

துள்ளப் போறாள்/குதிக்கப் போறாள் - கோவிக்கப் போகிறாள்

போகேக்க - போகும் போது

களு நீர் - சோறு வடித்த கஞ்சி,மரக்கறித் தண்டுகள்,மாட்டுணவு, தண்ணீர் எல்லாம் போட்டுக் கக்கிய கலவை(கால் நடைகளுக்குரியவை)

மாத்திக் கட்டுதல் - வேறொரு மேச்சல் நிலத்திற்கு மாற்றுதல்

சருவம் -அகன்ற பாத்திரம்

மூக்குப் பேணி - பித்தளையில் செய்யப் பட்ட ஒரு முனை வெளிப் புறம் கூராக நீண்டிருக்கும் தேநீர் குடிக்கும் பாத்திரம் (குவளை)

அன்னாந்து - மேலே பார்த்தவாறு வாயில் படாமல் வாய்க்குள் ஊற்றுவது.

ஆரவாரம் - ஆர்ப்பரிப்பு

( இவை யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கும், பழக்க வழக்கங்களும்,வாழ்க்கை முறையும், நாம் நாளாந்தம் பாவிக்கும் சொற்களும் ஆகும்.)

ஏனைய பிரதேசங்களின் காலை, மாலை நேரங்களையும் ஆண்களின், பெண்களின் சிறுவர்களின் வாழ்க்கை முறைகள், எண்ணப் பாங்குகள் பற்றியும் அறிய ஆவல். இது முன்பொரு முறை என் பதிவொன்றில் எழுதப் பட்டது தான். சிறு மாற்றங்களோடு அறிமுகப் பதிவாக இங்கு இடப் படுகிறது.
Author: கலை
•2:10 PM
ஒருநாள்..................

நான்: அம்மாட்ட எனக்கு நாளைக்கு phone பண்ணச் சொல்லி சொன்னன். அவ சொன்னா, அவவுக்கு நேரமில்லையாம்.

அடுத்தவர்: என்ன அவவா??????

...................................................................................

இன்னொருநாள்

நான்: மாமி விட்டுக்கு போகவேணும். அவ நெடுக என்னை வரச் சொல்லி கேட்டுக் கொண்டே இருக்கிறா.

அடுத்தவர்: என்ன அவவா?

........................................................

என்ன, ஏதாவது புரியுதா? யாழில் (அல்லது ஈழம் முழுமையிலுமா என்று சரியாகத் தெரியவில்லை) அவ, இவ என்பது மரியாதையாகவே சொல்லப்படும் சொற்கள்தான். ஆனால் வேற்றிடத்தினருக்கு, இதைக் கேட்கும்போது, என்ன இவர்கள் பெரியவர்களை மரியாதை இல்லாமல் ‘அவ (அவள்)', ‘இவ (இவள்) என்றெல்லாம் சொல்கிறார்கள் என்று தொன்றுகிறது. இந்தியாவில் ‘அவங்க', ‘இவங்க' என்னும் சொற்களுக்கு சமமான சொற்கள்தான் இவை என்பதை விளக்க வேண்டி வருகிறது. எங்களுக்கு அவ என்று சொல்வதற்கும், அவள் என்று சொல்வதற்கும் வேறுபாடு இருப்பதை புரிய வைப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது. காதலன் படத்தில் வடிவேல் ‘எவ அவ' என்று கேட்டது வேறு நினைவுக்கு வருகிறது.

சிலர் இந்த அவ என்னும் சொல்லை அவா என்றும் உச்சரிப்பதுண்டு.

வேறும் யாருக்காவது இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். சொல்லுங்கோ.
Author: சினேகிதி
•6:40 AM



லான்ட்மாஸ்ரர் என்றால் என்னென்டு தெரியாதோ???லான்ட்ஐ மாஸ்ரர் பண்றதுதான் லான்ட்மாஸ்ரர் :-))

விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலமாக நிலத்தைத் தயார்படுத்துறதுக்குப் உபயோகிக்கிற ஒரு இயந்திரம் லான்மாஸ்ரர் (நான் சொல்றது சரிதானே). ரக்ரரால உழுறது போல இதாலயும் உழுறவை. அந்த உழுவை இயந்திரத்துக்குப் பின்னால ஒரு பெரிய பெட்டியிருக்கு அதில ஒரு 10-15 ஆக்கள் பயணம் செய்யலாம். அநேகமாக கோயில் போன்ற கொஞ்சம் தூரப் பயணங்களுக்குப் போறாக்கள் லான்மாஸ்ரரில் போறவை.

நான் வல்லிபுரக்கோயிலுக்கும் செல்வச்சந்நிதி கோயிலுக்கும் லான்மாஸ்ரரில் போயிருக்கிறன். அம்மம்மான்ர வீடு றோட்டுக்கரைல இருக்கு அங்கால முழுவதும் எங்கட தோட்டம்....வல்லிபுரத் திருவிழா நேரம் அந்த றோட்டுக்கரைல நிண்டால் யார் யார் கோயிலுக்குப் பொங்க போயினம் என்டு தெரியும். பெரிய அண்டா, குண்டா, அகப்பை, பாய் மிச்ச தட்டு முட்டுச் சாமான் எல்லாத்தையும் நடுவில வைச்சிட்டு கரைத்தட்டில நிறையப்பேரிருந்து போவினம் கோயிலுக்கு.

லான்மாஸ்ரரில் கனதூரம் போகேலாது பேய் நோ நோகும். ஆனால் குடும்பமாப் பொங்கப் போறவை அப்பிடித்தான் போறவை. காத்துக்கு விழுந்திடுவம் என்று அநேகமா சின்னப்பிள்ளையளை தட்டில இருக்க விட மாட்டினம். நடுவில வயசுபோனாக்கள் காலை நீட்டி கஞ்சி வடிச்சுக்கொண்டிருப்பினம் அவையளோட இருக்கேலாது தட்டிலயும் இருக்கேலாது சில சின்னப்பிள்ளையள் அழுது அடம்பிடிச்சு டிரைவர் பக்கமா இருக்கிற கரைத்தட்டில இடம்பிடிச்சிடுவினம்...அதில பிடிமாதிரி ஒன்டு இருக்கு அதைப்பிடிச்சுக் கொண்டு இருந்தால் விழமாட்டம் என்டு பெருசுகளைச் சமாளிக்கலாம். கோயிலால வரேக்க பானை எல்லாம் கரி பிடிச்சு இருக்கும் அப்ப இன்னும் இடம் காணாமல் போகும் அப்பவும் பாதிக்கப்படுறது சின்னப்பிள்ளையள்தான்.கொடுமை கொடுமை.


உண்மைாய இந்த வாகனம் விவசாயம் செய்யிறாக்கள் வெங்காயம் , புகையிலை ஏற்றி இறக்கப் பயன்படுத்தும் நோக்கில வாங்குவினம் பிறகு அது கோயிலுக்கும் இடம்பெயர்ந்து போறதுக்கும் பாம்பு கடிச்சாக்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகவும் பயன்ட்டுக்கொண்டிருக்கும். வாடகை லான்மாஸ்ரர்களில் அழகான ஓவியங்கள் எல்லாம் கீறி நல்ல கலர்புல்ல வச்சிருப்பினம்.

லான்மாஸ்ரரும் மண்ணெண்ணெயிலதான் ஒடுறதென்று நினைக்கிறன்.
Author: வசந்தன்(Vasanthan)
•11:01 PM
எல்லாருக்கும் இந்தச் சொல் தெரியுமோ தெரியாது. எங்கட இடத்தில குறிப்பிட்ட இளமட்டத்தில இந்தச்சொல் பயன்பாட்டில இருந்திச்சு. இன்னொருத்தனைத் திட்டவோ மட்டந்தட்டி நக்கலடிக்கவோ இந்தச் சொல்லைப் பாவிப்பம்.

ஒருத்தன் விளங்காத்தனமாக அல்லது சிறுபிள்ளைத்தனமாக ஏதாவது செய்தால் அல்லது தொடர்ச்சியாக ஒரேதவறைச் செய்தால், எப்படி முயன்றும் ஒருத்தனைத் திருத்த முடியாதென்று எரிச்சல் தோன்றும்போது இச்சொல்லைப் பாவித்துத் திட்டுவதுண்டு.'அவனொரு அப்பக்கோப்பை. ஒரு இழவும் விளங்காது' எண்டு ஒருத்தனத் திட்டுவோம். அதேபோல் திட்டும் வாங்குவோம்.

இதன் சரியான தோற்றம், காரணகாரியங்கள் எதுவுமறியாமலேயே, ஆனால் சரியான சந்தர்ப்பங்களில் இச்சொல்லைப் பாவிப்போம். எந்த இடங்களில் இச்சொல்லைப் பாவிப்பதென எல்லாருக்கும் தெரிந்திருந்தது.

சரி இந்தச் சொல்லின் சரியான அர்த்தத்துக்கு வருவோம். அப்பக்கோப்பை என்றால் அப்பம் சுடும் தாச்சியைக் குறிக்கும். அப்பத்தாச்சி என்ன செய்யும்? எதையும் தன்னிடம் வைத்துக்கொள்ளாது. அதில் ஊற்றும் மாவை அப்படியே அப்பமாக்கி சிறுதுண்டுகூட தாச்சியில் ஒட்டாதபடிக்கு அழகாக அப்படியே திருப்பிக்கொடுத்துவிடும்.

தோசைக்கல்லிற்கூட மாவு ஒட்டும், இட்லிச்சட்டியில் மாவு ஒட்டும். ஆனால் அப்பத்தாச்சியில் எப்போதாவது மாவு ஒட்டிப்பார்த்திருக்கிறீர்களா? அதுதான் அந்தச் சட்டியின் சிறப்பு.

இங்கே இச்சொல்லை அப்பக்கோப்பை என்று மாற்றி ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு (இதுகளப் போடாட்டி பிறகு சண்டைக்கு வருவியள்) திட்டுவதற்குப் பாவிக்கிறோம். இதன் அர்த்தம் என்னவென்றால் எப்படி அப்பச்சட்டி தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாமல் தனக்குள் ஊற்றப்படும் சகலதையும் திருப்பிக்கொடுத்துவிடுகிறதோ அதேபோல் இவர்களும் எதையும் உள்வாங்கிக்கொள்வதில்லை. அனைத்தையும் திறந்துவிடுவார்கள். இவர்களுக்கு எப்படிச் சொல்லிக்கொடுத்தாலும் திருந்தப்போவதில்லை என்ற கருத்தில் இச்சொல் பாவிக்கப்படுகிறது.

இன்றும் ஏராளமானவர்கள் இச்சொல்லின் விளக்கத்தை அறியாமல் பாவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு விளக்கும் முகமாகவே இப்பதிவு போட்டேன்.

திடீரென்று ஏனிந்தச் சொல் பற்றி யோசினை வந்ததெண்டா, இப்ப தான் கொஞ்சத்துக்கு முதல் ஒருத்தரை நேர திட்டிப்போட்டன். அவருக்கு இந்தச்சொல் புதுசு. அதுக்கு அவர் விளக்கம் கேட்டார். அவருக்கு விளங்கப்டுத்தின கையோட அதையே ஒரு பதிவாப்போடுறன்.

அப்பக்கோப்பையள் ஆராவது என்ர வலைப்பதிவப் பாக்க வருவினந்தானே. அவையளுக்கு ஒரு விளக்கமா இருக்கட்டுமெண்டு போட்டு வைக்கிறன்.

'பன்னாடை' எண்டு திட்டுறதுக்கும் இதுக்கும் கிட்டத்தட்ட ஒரே பொருளாத்தான் இருக்கு. பன்னாடை தேவையற்றதை மட்டும் வைத்துக்கொண்டு மற்றதை விட்டுவிடும். அப்பக்கோப்பை எல்லாவற்றையும் விட்டுவிடும்.
ஆனா பன்னாடை எண்டு திட்டினா கடுமையாக் கோவம் வரும். மாறாக அப்பக்கோப்பையெண்டது அதே கருத்தைத்தாற ஆனா ஏச்சு வாங்கிறவன்(ள்) சிரிச்சுக்கொண்டே கேட்டுக்கொண்டு போற மாதியொரு சொல்லு.

நீங்களும் ஏன் திட்டுவதற்கோ ஏசுவதற்கோ இந்தச்சொல்லைப் பயன்படுத்தக்கூடாது?
முயன்றுபாருங்கள்.

=========================================
இதுவும் ஒரு மீள்பதிவே.
பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவுக்கான சுட்டி:
வசந்தன் பக்கம்: 'அப்பக்கோப்பை' பற்றிய ஓர் ஆராய்ச்சி.
Author: M.Rishan Shareef
•4:00 PM
இலங்கையில் பொதுவாக அனைத்து மக்களிடமும் பாவனையிலிருக்குமொரு சொல் குசினி. எல்லோருடைய வீடுகளிலும் இருக்குமிது அனேகமாகப் பெண்கள் தங்கள் காலங்களை அதிகம் செலவழிக்கும் இடமாகவும் இருக்கிறது.

போர்த்துக்கேய மொழியிலிருந்து வரப்பெற்ற இச் சொல் சமையலறையைக் குறிக்கிறது. இந்தியா, தமிழ்நாட்டில் இச் சொல்லின் பரவல் அவ்வளவாக இருக்காது என நினைக்கிறேன். எனது சிறுகதையொன்றுக்கு வந்த பின்னூட்டங்களிலும், மின்னஞ்சல் கருத்துக்களிலும் 'குசினி' என்றால் என்னவென்று கேட்டுவந்தவை அனேகம்.

சமையலறை , சிங்கள மொழியில் 'குஸ்ஸிய' என அழைக்கப்படுகிறது. அச் சொல்லிலிருந்து மருவித்தான் 'குசினி' எனும் சொல் வந்தது எனச் சொல்லப்பட்டாலும் கூட, இச் சொல் போர்த்துக்கேய மொழியிலிருந்தே இலங்கைக்கு வந்திருக்கிறது.

இலங்கை முஸ்லிம்கள் வட்டாரத்தில் 'குசினி' எனும் சொல்லோடு, 'அடுப்படி' எனும் சொல்லும் பரவலாகப் பாவிக்கப்படுகிறது. பண்டைய வீடுகளிலும், இன்னும் சில கிராமத்து வீடுகளிலும் , இச் சமையலறையானது வீடுகளின் பின்புறத்தில் , வீட்டை விட்டும் தனியாகக் கட்டப்பட்டிருப்பதைக் காணலாம். அன்றைய காலத்தில் விறகுச் சமையலால் எழும் புகை வீட்டுக்குள் பரவாமல் இருப்பதற்காகவும், சமையற்காரர்கள் எளிதாக வந்துபோகும் படியாகவும் இப்படி அமைக்கப்பட்டிருந்ததென நினைக்கிறேன்.
Author: வசந்தன்(Vasanthan)
•10:44 PM
முசுப்பாத்தி...
இது எம்மிடையே(ஈழத்தில்) பேச்சு வழக்கில் பரவலான பயன்பாட்டிலிருக்கும் சொல். பம்பல் என்பதன் ஒத்த கருத்தாகப் பாவிக்கிறோம். பம்பல் என்பதும் புரியாதவர்களுக்கு:
நகைச்சுவையாகப் பேசுதல் அல்லது நகைச்சுவை எனும் பொருளில் பாவிக்கப்படுகிறது.
'இது நல்ல முசுப்பாத்தி' என்றால் 'நல்ல நகைச்சுவை' என்று கருத்து. 'முசுப்பாத்தியான ஆள்' என்றால் 'நகைச்சுவையான மனிதன்'.
'முசுப்பாத்தியாகப் பேசக்கூடியவர்' என்றால் 'நகைச்சுவையாகப் பேசக்கூடியவர்'.

இச்சொல்லை நானும் இன்னும் ஈழத்தைச் சேந்த சிலரும் வலைப்பதிவிற் பயன்படுத்தியுள்ளோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று சிந்தித்ததுண்டு. அனேகமாய் ஏதாவது ஐரோப்பிய மொழியிலிருந்து தான் வந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். இன்றுதான்  இச்சொல் பற்றி அறியும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

பண்டிதர் வீ. பரந்தாமன் எழுதியுள்ள ஒரு புத்தகத்தில் (வேர் - அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகர முதலி. – பெயரைப் பார்த்துப் பயப்பட வேண்டாம்) இச்சொல் பற்றி எழுதியுள்ளார். ஆச்சரியமாயிருக்கிறது, இது தமிழ்ச்சொல் என்பது. இதை முனைவர் கு. அரசேந்திரனும் வியந்துள்ளார். இனி பண்டிதர் பரந்தாமனின் எழுத்து அப்படியே.

==============================================================

முசுப்பாத்தி: முசி – (முசிப்பு + ஆற்றி) – முசிப்பாற்றி – முசிப்பாத்தி = இளைப்பாறுகை, இளைப்பாற்றுகைப் பொருட்டுப் பேசும் வேடிக்கைப் பேச்சு, நகையாட்டு.

முசிதல் = 1.அறுதல்.
2.கசங்குதல்.
3.களைத்தல்.
4.ஊக்கங் குன்றுதல்.
5.மெலிதல் “அற்பமனம் முசியாள்” (அரிச்சந்திர மயான காண்டம். 115) 6.அழிதல்.

முசித்தல் = 1.களைத்தல்.
2.வருந்துதல்.
3.மெலிதல்.
4.அழிதல்.
5.கசங்குதல்.

முசிப்பு < முசி = 1.மெலிவு. 2.களைப்பு. 3.அழிவு. முசிப்பாற்றி = இளைப்பாற்றுகை. (Winslow's Tamil English Dictionary)
முசிப்பாறுதல் = இளைப்பாறுதல். (Winslow's Tamil English Dictionary)

முசிப்பாற்றி – முசிப்பாத்தி - முசுப்பாத்தி.
சிலர் அறியாமையினால் இச்சொல்லை பிறமொழிச் சொல்லெனக் கூறுகின்றனர். அதற்கு இச்சொல் பிழையாக, ‘முஸ்பாத்தி’ என்று உச்சரிக்கப்படுவதும் ஒரு காரணமாகும். இவ்வாறே பல தமிழ்ச் சொற்களைப் பிறமொழி ஒலிகளில் உச்சரித்து வேற்று மொழிச் சொற்களாகக் காட்டுகின்றனர். பண்டிதரேயானாலும் சொல்லியல் மொழிநூற்புலமையிலாராயின் பொருடெரியிற் சொல்வதேயன்றி, அச்சொல் இன்ன மொழிச் சொல்லென்று துணிந்து கூறுதலை ஒழித்தல் வேண்டும்.


===========================================================
இது உண்மையில் இன்று எழுதப்பட்ட இடுகையன்று. நான்கு வருடங்களுக்கு முன்பு (May 16, 2005)என் வலைப்பதிவில் எழுதப்பட்டது. இவ்வலைப்பதிவின் முதலிடுகையாக இது மீள்பதிவாக்கப்படுகிறது.
பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவுக்கான சுட்டி:
வசந்தன் பக்கம்: முசுப்பாத்தி பற்றி முசுப்பாத்தியாக...

* இப்போதைக்கு என்னால் முடிந்தது மீள்பதிவு தான் ;-)