திருகோணமலையில் உள்ள தம்பலகாமப் பகுதி தமிழ் முன்னோர்கள், உயிர்காக்கும் நெல்லைச் சேமிக்கும் களத்து மேட்டிலும், பூலோக அமிர்தம் என்று போற்றப்படும் தேன் எடுக்கும் பொதுக்காட்டிலும் பேசுவதற்கெனத் தங்கள் தாய் மொழியான தமிழில் இருந்து பாஷைகளைத் தோற்று வித்துப் பேசிவந்துள்ளனர். இந்த விசித்திர மொழிகள் இன்று பேச்சு வழக்கற்று மறைந்து கொண்டிருக்கின்றன. கால மாற்றத்தின் காரணமாக களத்து மேட்டில் விவசாயிகள் பேசிவந்த பாஷை தேவையற்றதாகவும் ஆகியுள்ளது.
தமிழ் மொழியில் இருந்து தோற்றிவிக்கப்பட்டவைகளாயினும் இம் மொழிகளின் வார்த்தைகள் தமிழ் மொழியின் நின்று வேறு வேறு அர்த்தமுடையவையாகவும் காணப்படுகின்றன.நெல் வயல் அறுவடை ஆனதும் வயல்களின் மத்தியிலுள்ள களத்து மேட்டில் வட்ட அணியாக சூடு வைக்கப்பட்டிருக்கும். பொங்கி விட்டு இறைவழிபாடாற்றி சூடுமிதிப்பு தொடங்கியதும் சூடுமிதிப்பாளர்களிடையே ஒரு விநோதமான மொழி பேசப்படும். களத்து மேட்டில் பேசப்படும் இப்புதிய மொழியின் வார்த்தைகள் அதிக நெல்லைப் பெறும் ஆவல் உடையதாகவே அமைந்துள்ளன.
உதாரணமாக களத்தில் பேசப்படும் வார்த்தைகளில் சில பின்வருமாறு: நெற்கதிர்கள் சூடு என்று குறிப்பிடுவது வழமை. ஆனால் களப்பாஷையில் சூட்டை - போலன் என்று சொல்வார்கள். சூடுமிதிப்புக்கு ஈடுபடுத்தும் எருமைக் கடாக்களை வாரிக்காலன் என்று அழைப்பார்கள். வாரிக்காலன் என்றால் அதிகமாக நெல்லைத்தரும் கால்களை உடையவை என்பது பொருள். வைக்கோலை விட்டு உதிர்த்த நெல்குவியலை பொலி என்று குறிப்பிடுவார்கள். பொலிஎன்றால் பொலிந்து அதிகப்படுவது என்பது பொருள். களத்தில் சூடு மிதிப்பில் ஈடுபடுவோரின் வாய்களில் பொலி,பொலி என்ற சொல் தாராளமாகவே புழங்கும். இதே போல் நெற்கதிருக்கு வயலில் வளைந்து வளைந்து மிதித்து நெல் மணிகளை உதிர்க்கும் எருமைக்கடாக்கள் போடும் சாணியைப் போல் என்றும் வைக்கோலை மிதிஞ்சான் என்றும், நெல்லில் உள்ள பதரைக் கள்ளன் என்றும், சாப்பிடுவதை அல்லது குடிப்பதைப் பெருகுவதென்றும், தண்ணீரைக் கலங்கள் என்றும், தண்ணீர் குடிப்பதைக் கலங்கள் பெருகுவதென்றும், இப்படி களத்திலுள்ள தேவைகளுக்காகப் பேசப்படும் வார்த்தைகள் எல்லாம் தமிழுக்கு வேறான ஒரு புதிய மொழியாகவே தோன்றும்.
தேன் காட்டுக் காரர்கள் பேசும் மொழி
தேன் காட்டுக்காரர்களின் முழுக்கவனமும் மரங்களில் தேனீக்கள் மேல் நோக்கிப் பார்ப்பதிலே நிலைத்திருப்பதால் கீழே காடுகளில் பதுங்கி இருக்கும் மிருகங்களைக் கவனிக்கத்தவறி விடுவார்கள். ஆகவே புதர்களில் மறைந்திருக்கும் புலிகளினாலோ, கரடிகளினாலோ தேன் காட்டுக் காரர்கள் தாக்கப்படுவது மிகச் சர்வசாதாரண விஷயம். இந்த அபாயகரமான தொழிலைச் செய்பவர்கள் தேன் காட்டில் பேசிக் கொள்ளும் மொழியும் தமிழ் அல்லாத ஒரு புதிய மொழியாகவே தோன்றுகின்றுது.
முப்பது நாற்பது யார்களுக்கு ஒருவராக காட்டில் வரிசையாகத் தேன் பார்த்து வருபவர்களில் ஒருவர் ஒரு மரக்கொம்பில் தேனைக் கண்டு விட்டாரானால் தன் சகாக்களுக்கு அதை தெரியப்படுத்த கோ என்று குரல் கொடுப்பார். அவர் குரலைக் கேட்ட சகா ஒருவர் அவர் என்ன சொல்கிறார் என்பதை அறிந்து கொள்வதற்காக கோ என்று ஒற்றைக் குரல் கொடுப்பார். அப்பதில் குரல் கேட்டதும் தேன் கண்டவர் கோ, கோ என்று இரட்டையாகச் சமிக்ஞையைவெளிப்படுத்துவார். இதை இரட்டிப்பதென்று தேன் வேட்டைக்காரர் குறிப்பிடுவார். தேன் கண்டவர் முதல் கோ என்றது நண்பர்களே! என்று காட்டில் தேன் பார்த்து வரும் தன் சகாக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல முயல்வதாகும். அதற்கு அடுத்து வந்தவர் கோ என்றது என்ன என்று கேட்பதைப் போன்று அர்த்தமுடையதாகும். அதற்கு தேன் கண்டவர் கோ கோ என்று இரட்டித்தது தேன் இங்கே இருக்கிறது எல்லோரும் இங்கே வாருங்கள் என்று கொடுக்கும் காட்டுச் சமிக்ஞை ஆகும். இந்த சமிக்ஞையைக் கேட்டதும் காடெல்லாம் வலையிட்டதைப் போல் பரவி வந்த தேன் காட்டுக்காரர்கள் தேன் இருக்கும் மரத்துக்கு வந்து கூடித் தேன் கூடுகளை வெட்டி வதைகளை எடுத்து பரப்பப்பட்ட இலைகளில் குவிப்பார்கள். எல்லோரும் அமர்ந்திருந்து தேன் வதைகளை உண்பார்கள்.
தேன் வதைகளை எடுத்துப் புசிக்குமாறு ஒருவருக்கொருவர் சொல்ல விரும்பினால் இன்றுள்ளவர்கள் ஆங்கிலத்தையும் தமிழையும் இடைக்கிடை கலந்து பேசுவதைப் போல் எடுத்துக் கொட்டாப்பி என்று சொல்லுவர். எடுத்து என்பதை தமிழ்ச் சொல்லாகவும் கொட்டாப்பி என்பது புரியாத காட்டுப் பாஷையாகவும் தோன்றும். கொட்டாப்பி என்பதற்குச் சாப்பிடு என்பது பொருள். கொட்டாப்பி, கொட்டாப்பி என்று ஒருவர் இன்னொருவரை கட்டாயப்படுத்தினால் எனக்கு வேண்டாம் அல்லது என்னால் முடியாது என்று கூறுவது தேன் காட்டுமரபாகாது. ஆகவே முன்னதான் என்று கூற வேண்டும். முன்னதான் என்றால் எனக்கு வேண்டாம் அல்லது என்னால் முடியாது என்பது பொருள். தேன் காட்டிலும் தண்ணீருக்குக் கலங்கள் என்றும் பருகுவதற்கு பெருகுவதென்றும் குறிப்பிடுவார்கள்.
தம்பலகாமம்.க.வேலாயுதம்
14 comments:
// வைக்கோலை விட்டு உதிர்த்த நெல்குவியலை பொலி என்று குறிப்பிடுவார்கள். //
நானும் இப்ப பதிவை எழுதி கொண்டிருக்கும் போது நெற் செய்கையில் பாவிக்கும் சில சொல் வழக்கு பற்றி அடுத்த முறை எழுத வேண்டும் என நினைத்து சில சொற்களை மனதுக்குள் அசை போட்டு கொண்டிருந்தேன். பதிவை பதிந்து விட்டு பார்த்தால் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.
நான் பொலி என்ற சொல்லு பற்றி எழுத வேண்டும் என்று இருந்தேன்.
நெல் நல்ல விளைச்சல் கொடுத்தால்
இந்த முறை நல்ல பொலி அடிச்சிருக்கு என்று சொல்லுவார்கள்.
பொலி எனும் சொல் விளைச்சலுக்கு சமனான பொருள் வருமாறு தான் கதைப்பார்கள்.
ஆச்சரியமான விடயங்கள்! இவை எனக்கு முழுக்க முழுக்கப் புதியன.
அறியத் தந்தமைக்கு நன்றி.
பல சொற்கள் தெரிந்துகொண்டேன்.
படங்களும் குளிர்மையாக உள்ளன.
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.
பொலியைத் தவிர ஏனையவை எனக்குப் புதிய வார்த்தைகள். பொலியைப் பற்றி நாட்டார் பாடல்கள் கூட உண்டு.
எங்கள் முற்றங்களையே இத்தனை நாட்களாக பாராமல் இருந்திருக்கிறோம்.
முற்றத்து மல்லிகை மணக்க ஆரம்பிக்கிறது.
//எங்கள் முற்றங்களையே இத்தனை நாட்களாக பாராமல் இருந்திருக்கிறோம்.
முற்றத்து மல்லிகை மணக்க ஆரம்பிக்கிறது.//
உண்மைதான். :)
'பொலி' எனும் சொல் ஈழத்தின் அநேக பகுதிகளில் பாவிப்பதுதான். ஆனால் பதிவில் உள்ள மற்றைய சொற்கள் தம்பலகாமத்தில், காட்டுடன் தொடர்புடையவர்களிடம் பேசப்படும் மொழி. இதில் சொல்லப்பட்டுள்ள பல சொற்களை, இந்த மனிதருடன் பழகிய காலங்களில் அறிந்திருக்கின்றேன்.
இதைவிடவும், சேனைப் பயிர்ச்செய்கைக்காறர்களிடமும் சில புதிய சொற்களைப் பேச்சுத் தமிழில் கேட்கலாம்.
சொல்லத் தவறிய மற்றுமொரு விடயம். இந்தக் கட்டுரையாசிரியர், தம்பலகாமத்தின் ஒரு நூற்றாண்டு காலச் சாட்சியம். கமக்காறனாக, கலைஞனாக, செய்தியாளனாக, எழுத்தாளனாக, பன்முகத் தகமையோடு வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்க பெருமைக்குரிய விடயம்.
எல்லாமே எனக்குப் புதிய சொற்களாக இருக்கின்றன. இப்படி ஒரு பதிவு மூலம் அறியத் தந்தமைக்கு நன்றிகள்.
கேட்டறியாதச் சொற்கள்.
பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி
நன்றி வி. ஜெ. சந்திரன் அவர்களே
//நான் பொலி என்ற சொல்லு பற்றி எழுத வேண்டும் என்று இருந்தேன்.//
இன்னும் நிறைய இருக்கிறது எம்மண்ணில்
தொடர்ந்து பகிர்வோம்...
அன்பு நண்பர்கள்
@மணிமேகலா
@வாசுகி
@வந்தியத்தேவன்
@கலை
@மொழிவளன்
அனைவருக்கும் நன்றிகள்
///தம்பலகாமத்தில், காட்டுடன் தொடர்புடையவர்களிடம் பேசப்படும் மொழி. இதில் சொல்லப்பட்டுள்ள பல சொற்களை, இந்த மனிதருடன் பழகிய காலங்களில் அறிந்திருக்கின்றேன்.//
நன்றி மலைநாடான் அவர்களே
தம்பலகாமத்தில் என்வயது சந்ததியினருக்கு இந்த அனுபவங்கள் வாய்த்திருக்கவில்லை.
எங்கள் அகராதியில் காடு என்றால் ஆமி வந்தால் ஓடிமறையுமிடம் என்றாகிப்போனது.
//எங்கள் முற்றங்களையே இத்தனை நாட்களாக பாராமல் இருந்திருக்கிறோம்.
முற்றத்து மல்லிகை மணக்க ஆரம்பிக்கிறது.//
உண்மைதான்
நன்றி வலசு - வேலணை
வணக்கம் நண்பர் ஜீவராஜுக்கு
ஆரம்பப் பதிவில் மண் மணக்க விஷயங்களை அள்ளித் தந்தமைக்கு நன்றிகள். பல சொற்களை இன்று தான் அறியக் கிடைத்தது.
நன்றி கானா பிரபா