Author: மலைநாடான்
•10:19 AM
" மீன்பாடும் தேன் நாட்டின் மட்டு வாவி கரையினிலே ஆடவர் தோளிலும் கா.. அரிவையர் நாவிலும் கா.." ஈழத்துக் கலைஞர் யாழ்ப்பாணம் விரமணிஐயருடன் உரையாடும் சந்தர்ப்பங்களில், ஈழத்தின் கிழக்குக்கரைபற்றிய பேச்சு வரும்போதேல்லாம் அவர் சொல்லி இரசிக்கும் வரிகளவை. அந்த வரிகளின் சொந்தக்காறரும் அநேகமாக அவராகவே இருக்க வேண்டுமென நினைக்கின்றேன்.

ஈழத்து முற்றத்தில் உரையாட அழைத்தபோதே, வடக்கின் பேச்சுக்களைப் பதிவு செய்ய பலர் இருக்கின்றார்கள். ஆகவே கிழக்கின் மொழியைப் பதிவு செய்ய எண்ணியிருந்தேன். முன்னைய பதிவொன்றில் மணிமேகலை என்ற சகோதரியும் இதே கருத்தைப் பின்னூட்டத்தில்
காலாகாலமாக ஈழத்து வரலாற்றில் ஈழத் தமிழர் என்றால் யாழ்ப்பாணத்தவர் என்றும் ஈழத் தமிழ் யாழ்ப்பாணத் தமிழ் என்றும் ஒரு பரவலான எண்ணப் பாங்கு வளர்ந்திருக்கிறது.
அதன் தவறு யாராலும் சுட்டிக் காட்டப் படவில்லை.
இனியேனும் நாம் அந்தத் தவறுகளை விடாமல் மற்றவர்களையும் (மட்டக் களப்பு,திருகோணமலை,மலையகம்)சேர்த்து கொண்டு போக வேண்டிய கடமை நம்மெல்லோருக்கும் உண்டு.
நம் கடந்த கால வரலாற்றுத் தவறுகளில் இருந்து பாடங்களைப் படிக்க வேண்டியதும் நமது கடமையாகும்.
அப்போது தான் நாம் வளர்ந்திருக்கிறோம் என்று அர்த்தம்.
இது என் அறிவுரையல்ல; ஒரு ஆதங்கம் அவ்வளவு தான்.
எனத் தெரிவித்திருந்தார். சகோதரி உங்கள் விருப்பமும் இணைந்ததே இவ்விடுகை.
என் வளர்விலும் வாழ்விலும் நிறைந்த அந்த மக்களின் மொழியில் அவர்களின் மனந்தெரியும்.

கிழக்கு மக்களின் பேச்சு மொழியில் அதிலும், குறிப்பாக மட்டக்களப்புப் பிரதேச மக்களின் பேச்சில் 'கா' எனும் ஒலி நயம் கலந்திருக்கும். அதிலம் அங்குள்ள பெண்கள் அதை மிக லாவகமாக பேச்சு மொழியில் சேர்ப்பார்கள்.
" ஏங்கா மறுகா போவிகளா..?" ( ஏனக்கா மறுபடியும் போவீர்களா )
"இல்லை மக்கா..இன்னிக்கு போறதிக்கு இல்லக்கா.." (இல்லை மக்களே இன்று போவதிற்கில்லை)
" சொன்னாக்கா கேக்கனும் மக்கா.." (சொன்னால் கேட்கணும் மக்களே)
இப்படி பேச்சு வழக்கில் சரளமாக கா வந்து சேரும்.
இந்தப் பெண்களின் பேச்சில் கலந்திருக்கும் மற்றுமொரு சொல்
"கிளி". இது அவர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு மொழியடையாளம்.
"ஏன்ங்கிளி..?" " இல்ல கிளி" இது ஆண், பெண் வித்தியாசமில்லாது, இளையவர்களை அழைக்கும் போது சேர்த்துக் கொள்வார்கள். இந்த வகையில் " ஏன் மக.."" என்ன மகா" என்பதையும் சேர்க்கலாம்.
பெண்கள் இதனை சரளமாகப் பேசுவார்கள் எனினும், ஆண்களின் உரையாடலிலும் அப்படியே கலந்திருக்கும். மிகச்சிறந்த ஊடகவியலாளனாக அறியப்பட்ட தராக்கி சிவராம் அப்படிப் பேசுபவர்களில் ஒருவர். மிக அழகாகவும், இயல்பாகவும், இந்த மொழிநடையில் அவர் பேசுவார்.
"ஆளே!.. என்னாளே..?" (என்னடாப்பா என்பது போல்)
"ஓண்டாப்பா" ( ஓமடாப்பா என்பது போல)

அது சரி தொடக்கத்தில் சொன்னபடி அரிவையர் நாவில் கா வருவது புரிகிறது, அதென்ன ஆடவர் தோளில் கா என்கிறீர்கள் அப்படித்தானே..?
முன்னைய நாட்களில் மட்டக்களப்புப் பகுதியில் சில்லறை வியாபரிகள், மீனவர்கள், தங்களுடை பொருட்களை, நீளமான கயிறுகளில் இணைக்கப்பட்ட கூடைகளில் வைத்து , கயிற்றின் நுணியை நீளமான தடிக்கம்புகளில் கோர்த்த பின் தடிகளைத் தோளில் சுமந்து செல்வார்கள். தூக்குபவரின் முன்னும் பின்னும் பொருட்கள் கூடைகளில் தூக்கிச் சொல்லப்படும். அந்தத் தூக்குத்தடியை ' கா ' என்று அழைப்பார்கள்.

அதுவே ஆடவர் தோளில் கா, அரிவையர் நாவில் கா

மக்கா மறுவாட்டி பாப்பம்...
This entry was posted on 10:19 AM and is filed under , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

14 comments:

On June 11, 2009 at 2:08 PM , சயந்தன் said...

ஓண்டாப்பா என்பதைப்போலவே இயல்பாக இன்னொரு வார்த்தையைப்பேசுவார்கள். அது நமக்கு கெட்டவார்த்தையாக அறிமுகமாகிய ஒருசொல்.

ஒருதடவை மட்டுபோராளிகள் தமக்குள் அவ்வாறு பேசிக்கொண்டிருந்ததை கேட்டுவிட்டு இவங்களென்ன..? இப்பிடி பப்ளிக்கா தூசணம் கதைக்கிறாங்கள் என நினைத்துக்கொண்டேன்.

ஆனால் அது அவர்களின் இயல்பான வார்த்தை. ஓண்டாப்பா என்பதைபோலவே..

 
On June 11, 2009 at 3:07 PM , கலை said...

மட்டக்களப்பினர் ‘மகன்', 'மகள்' என்று நிறைந்த அன்போடு அழைப்பது அழகாகவும், நிறைவாகவும் இருக்கும்.

 
On June 11, 2009 at 4:47 PM , நா. கணேசன் said...

மறுகால் - மறுகா
ஒருகால் - ஒருக்கா
சொன்னக்கால் - சொன்னாக்கா

இவ்வழக்கம் கொங்குநாட்டிலும்
சில சொற்களில் உண்டு
----

”தூக்குத்தடியை ' கா ' என்று அழைப்பார்கள்.”

காவுதடி.

காவடி என்பதன் வினைச்சொல்லும்
காவுதல் = தூக்குதல்.

நா. கணேசன்

 
On June 11, 2009 at 5:02 PM , யசோதா.பத்மநாதன் said...

நன்றி சகோதரரே! 'போடியார்' என்றெல்லாம் அவர்களிடம் ஒரு பேச்சு மொழி இருக்கிறதல்லவா?

யாழ்ப்பாணத்தவர் எல்லே என்று முடிப்பது போல் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் எல்லா என்று வசனத்தை முடிப்பது வழக்கம்.

மட்டக்களப்பு மண் வாசனையோடு சேர்ந்த ஒரு அழகான இயக்கப் பாட்டு ஒன்று இருக்கிறது.சந்தியில...என்றேதோ தொடங்கும் பாடல் அது.சட்டென்று உடனடியாக ஞாபகத்திற்கு வரவில்லை.

லயமும் இனிமையும் சுவையும் கலந்ததொரு பாடல் அது.

நீங்கள் குறிப்பிட்டிருந்தது போல் அவர்களின் பேச்சு வழக்கு அன்பினை மிகுந்த லாவகத்தோடும் இரசிகத் தன்மையோடும் வெளிப்படுத்தும்.

 
On June 11, 2009 at 5:53 PM , கொண்டோடி said...

ஓப்பாய், முதற்பின்னூட்டம் போடேலாமப் போச்சு.

மணிமேகலை,
அது 'என்னடா தம்பி கதைக்கிறானுகள் சந்திவெளியில' எண்ட பாட்டெண்டு நினைக்கிறன்.

 
On June 11, 2009 at 6:35 PM , யசோதா.பத்மநாதன் said...

மிகவும் நன்றி கொண்டோடி. அதே பாடல் தான்.மிக அழகான பாடல் இல்லையா?

தலையைக் கன நேரமாய் குடைந்து கொண்டிருந்தேன்.ஒருவாறு அதனை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டீர்கள்.:)

 
On June 11, 2009 at 11:14 PM , மலைநாடான் said...

"ஓண்டா", "ஓப்பா", இந்த இரண்டு சொற்பதங்களும் ஒரு காலத்தில் என்னுடைய பேச்சிலும் வரும். யாழ்ப்பாணம் திரும்பிய புதிதில் இதனால் நானும் மற்றவர்களால் வித்தியாசமாகப் பார்க்கப்பட்டேன் :)

நா.கணேசன்!
உங்கள் தரவுகள் சரியானதே. மேலும்
கொங்கு தமிழ பேச்சு நடைக்கும், மட்டகளப்பு பேச்ச நடைக்கும் கூட ஒரு ஒற்றுமை இருப்பதாகவே உணர்கிறேன்.

 
On June 11, 2009 at 11:20 PM , மலைநாடான் said...

//போடியார்' என்றெல்லாம் அவர்களிடம் ஒரு பேச்சு மொழி இருக்கிறதல்லவா?//

நிறையவே உண்டு. தொடர்ந்த பேசுவோம். இந்த வட்டார மொழி தெரிந்த வேறு நண்பர்களும் இருக்கிறார்கள். அவர்களும் வருவார்கள், தருவார்கள். :)

 
On June 12, 2009 at 4:23 AM , `மழை` ஷ்ரேயா(Shreya) said...

விவசாய நிலம் சொந்தமாக உடையவரே போடியார் எனப்படுபவர் என்று நினைக்கிறேன்.. பிழையானால் நண்பர்கள் திருத்தவும்.

 
On June 12, 2009 at 4:42 AM , ரவி said...

எனக்கு இவை புதிய செய்திகள்...தொடருங்கள்...

 
On June 12, 2009 at 4:53 AM , கானா பிரபா said...

மலைநாடான்

சிறப்பானதொரு இடுகை, நிரம்ப ரசித்தேன், மிக்க நன்றி

 
On June 13, 2009 at 5:01 AM , மொழிவளன் said...

மலைநாடானின்

மட்டக்களப்பு பேச்சு வழக்குச் சொற்கள் அருமை.

நன்றி

 
On June 13, 2009 at 6:40 PM , தமிழ் said...

வாழ்த்துகள்

கேட்க கேட்க இனிக்கிறது

 
On June 13, 2009 at 6:46 PM , தமிழ் said...

நன்றிங்க