•8:03 AM
சொல்லில் அருஞ்சுவை அள்ளித்தரும் சுரங்கம் தமிழ் மொழியாகும். அதனால் தான் தமிழுக்கும் அமுதென்று பெயர் எனப் பாவேந்தர் பாரதிதாசன் பாடினார். தமிழ் பல கிளை மொழிகளை உடையது. அதில் யாழ்ப்பாணத் தமிழ் சிறப்பானதாகும். அதற்குப் பல தனிச்சிறப்புக்கள் உள்ளன.
படைப்பிலக்கியங்கள் மொழி வளர்ச்சிக்கு ஆதாரமாகவுள்ளன. சிறுகதைகள், நாவல்கள் என்பன பிரதேச பேச்சு வழக்கை பிரதிபலிப்பனவாக உள்ளன. யாழ்ப்பாண மக்களின் பேச்சுத் தமிழ் அந்தப் பிரதேசப் படைப்பாளர்களால் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.
ஆரம்பகால ஈழத்து சிறுகதைகள் எழுத்து தமிழிலும், இந்தியப் பேச்சு வழக்கிலும் எழுதப்பட்டன. இதற்கு காரணம் அக்காலத்து எழுத்தாளர்கள் தமது ஆக்கங்களை கூடுதலாக தமிழக சஞ்சிகைகளுக்கு எழுதினர். பின்னர் இந்தப் போக்கில் மாற்றம்ஏற்பட்டது. சிறுகதையோ, நாவலோ உயிர்த்துடிப்புடன் அமைய வேண்டுமானால் பேச்சு மொழியில் எழுதப்பட வேண்டும். அதில் வரும் உரையாடல்கள் கதை இடம்பெறும் களத்தின் பேச்சு மொழியில் இருப்பது அந்தப் படைப்புக்கு சிறப்புச் சேர்ப்பதாக அமையும்.
ஈழத்தில் மறுமலர்ச்சிக்கால எழுத்தாளர்களின் படைப்புக்களில் பிரதேச பேச்சு மொழி கையாளப்பட்டிருப்பதை காண முடியும். இவர்களே முதலில் பிரதேச பேச்சு மொழியை தமது சிறுகதைகளில் சிறப்பாகப் பயன்படுத்தினார்கள் எனச் சொல்லப்படுகிறது. ஈழத்து சிறுகதைகள் பலவற்றில் யாழ்ப்பாணத் தமிழ் கையாளப்பட்டிருக்கிறது.
எஸ். பொன்னுத்துரை எழுதிய ‘தேர்’ சிறுகதையில் வரும் உரையாடல் இவ்வாறு அமைகிறது.
“என்ன அப்பு இண்டைக்கு காலமைக் கோச்சியிலை மூத்தண்ணர் வருவாரெல்லே?”
“எப்படியும் அவன் வருவான். காதுப்பிடியிலை கமலா கூட்டியந்திடுவாள். கோச்சி இன்னும் நாவற்குழியைத் தாண்டியிருக்காது. இப்ப நடக்கத் துவங்கினாலும், நேரத்தோடை ஸ்ரேசனுக்குப் போயிடலாம். ஆனா அவனுக்கு உதொண்டும் புடிக்கிறேல்லை. நான் எங்கடை வீட்டுக்கு வாறதுக்கு ஆரும் வந்து வழிகாட்டத் தேவையில்லை எண்டு, எத்தினை கோசு கோவிச்சது எனக்கெல்லோ தெரியும்”
தமிழகத்திலே புகை வண்டி எனச் சொல்லப்படுவது, எமது நாட்டில் புகையிரத வண்டி என அழைக்கப்பட்டாலும், பேசும் போது அவ்வாறு சொல்வதில்லை. யாழப்பாண மாவட்டத்திலுள்ள கிராமப் புறங்களில் கோச்சி என சொல்லப்படுகிறது. இரயில் கடவைகளிலும் மக்களுக்கு விளங்கும் வகையில் கோச்சி வரும் கவனம் என்றே முன்பு எழுதப்பட்டிருந்தது. இதனை கண்ணுற்ற வர கவியான கல்லடிவேலன் கொப்பர் எப்போ வருவார் என அருகில் எழுதி வைத்தார், எனச் சொல்வார்கள்.
கோச்சி என்ற சொல் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் அம்மாவைக் குறிக்கப் பயன்பட்டது. அவ்வாறே கொப்பர் என்ற சொல் அப்பாவைக் குறித்தது. ஆச்சி, அப்பு என்ற சொற்களும் அங்கு அம்மா, அப்பாவை அழைக்கப் பயன்பட்டன.
காலை என்பது யாழ்ப்பாணத் தமிழில் காலமை எனப்படுகிறது. எத்தனை முறை என்பதற்கு பபதிலாக எத்தினை கோசு எனச் சொல்லப்படுகிறது. அக்காவை அக்கை என்றும் கொக்கா எனவும் அழைப்பதுண்டு. அத்தான் அத்தார் எனச் சொல்லப்படுகின்றார்.
க. சட்டநாதன் எழுதிய ‘உலா’ சிறு கதையில் வரும் உரையாடலில் இடைப்பட்ட சொற்கள் கையாளப்பட்டுள்ளன. “உதென்ன விடுப்பு? தேரிலை சாமி கூட வரேல்லை”. உவர் பெரிய மீசை முளைச்ச கொம்பர். சனத்துக்கை போய் நெரியப் போறாராம்”. இப்படி ‘உலா’ சிறுகதையில் இடைப்பட்ட சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தகப்பன் என்ற சொல் தேப்பன் என யாழ்ப்பாணத் தமிழில் வழங்கப்படுகிறது. வருடம், ஜீவிதம் ஆகிய சொற்கள் முறையே வரியம், சீவியம் என வழங்கப்படுகின்றன. போய்விட்டு வருகிறேன் என்பது போட்டு வாறன் எனச் சொல்லப்படுகிறது.
பேராசிரியர் ஆ. கார்த்திகேயன் யாழ்ப்பாணத் தமிழ் எவ்வாறு தமிழக பேச்சு மொழியில் இருந்து வேறுபட்டுள்ளது என்பது பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார். இங்க என்பது இஞ்ச என்றும் இங்காலை என்பதை இஞ்சாலை என்றும் யாழப்பாண பேச்சுத் தமிழில் காணமுடியும்.
ஈழத்து சிறுகதை மூலவர் என இலங்கையர் கோன், சி. வைத்திலிங்கம், சம்பந்தன் ஆகியோர் போற்றப்படுகின்றனர். இவர்களது சிறுகதைகளில் பேச்சுத் தமிழ் சிறப்பாக மையாளப்படவில்லை என விமர்சகர்கள் குறிப்பிடுவதுண்டு. ஆனால் இலங்கையர் கோனின் சிறுகதைகளில் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் அமைந்த உரையாடல்களை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
அவரது ‘மச்சாள்’ என்ற சிறகதையில் வரும் உரையாடல்கள் இவ்வாறு அமைந்துள்ளன.
“அதெல்லாம் என்னை ஏன் கேட்கிaர்? மக்சாள், என்ரை பெரியண்ணன் இண்டைக்குப் பின்னேரம் வந்திடுவார் அவரைக் கேளும், நீர் வடிவோ வடிவில்லையோ எண்டு. அவர் நல்லாய்ச் சொல்லுவார்” என்றும் அதே சிறுகதையில் இன்றுமொரு இடத்தில் வரும் உரையாடலில்,
“சும்மா கணக்கு விடாதையும் மச்சாள்! அண்ணன் இஞ்சை வந்தால் அறைக்கை போய் ஒளிச்சுக் கொண்டு யன்னற் சீலையை நீக்கி நீக்கிப் பார்க்கிறது எனக்குத் தெரியாதோ” என்பதாக இலங்கையர் கோனின் ‘மச்சாள்’ சிறுகதையில் உரையாடல்கள் யாழ்ப்பாணத் தமிழில் உள்ளன. இன்றைக்கு என்பது இண்டைக்கு என இந்த உரையாடலில் சுட்டப்பட்டுள்ளது.
அழகு என்ற சொல்லுக்கு பதிலாக வடிவு என்ற சொல் அதிகமாக யாழ்ப்பாண பேச்சுத்தமிழில் பயன்படுத்தப்படுகிறது. வடிவு என்பது அழகுக்கு மாத்திரம் பயன்படவில்லை. ஒரு செயலை சிறப்பாகச் செய்து முடித்தலையும் குறித்தது.
யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் வினைச்சொல் அமைப்பும் ஏனைய பேச்சுத் தமிழில் இருந்து வேறுபட்டு காணப்படுகிறது. சில வினைச் சொல் விகுதிகள் பழந்தமிழோடு ஒத்துள்ளது. எடுத்துக் காட்டாக நன்மை ஒருமை சுட்டும் விகுதியைக் குறிப்பிடலாம். ஏனைய பிரதேச பேச்சுத் தமிழில் பங்கெடுப்பேன், சுடுவேன், தருவேன் என வழங்கப்படும் சொற்கள் யாழ்ப்பாண பேச்சுத் தமிழில் பங்கெடுப்பன், சுடுவன், தருவன் எனச் சொல்லப்படுகின்றது.
“இன்பம் தருவன் குயிலே, உன்னை உகப்பன் குயிலே” எனத் திருவாசகத்தில் குயில் பத்தில் பாடப்பட்டுள்ளது. இங்கே வருகின்ற தருவன், உகப்பன் போன்ற வினைச் சொற்கள் யாழ்ப்பாண பேச்சு மொழியில் வழங்கப்படுகிறது. இது
ஜி>ஓம் என்பது பிரணவ வடிவமாக கருதப்படுகிறது. விநாயகப் பெருமானின் வடிவம் ஓம் என்ற பிரணவப் பொருளை உணர்த்துகிறது. பிரணவ மந்திரத்தை சிவபிரானுக்கு முருகன் போதித்தார். இதனால் ஓங்கார மூர்த்தியாக முருகன் போற்றப்படுகிறார். ஓம் என்ற சொல் யாழ்ப்பாண பேச்சுத் தமிழில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
சம்மதம் தெரிவிக்க ஓம் எனச் சொல்லப்படுகிறது. ஓம் என்ற சொல் விகுதியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
பழந்தமிழில் எண்ணுவம், அறிகுவம், வேண்டுவம், வருவம் போன்ற வடிவங்களில் அம்விகுதி வருவதைக் காண முடியும். நீ. பி. அருளானந்தம் எழுதியுள்ள ‘பெட்டைக்குட்டி’ என்ற சிறுகதையில் வரும் உரையாடலில் ஓம் என்ற சொல் விகுதியாக கையாளப்பட்டுள்ளது.
“அந்தப் பூனைக்குட்டிகள் முழுக்கலும் பெட்டைக் குட்டிகளாய் இருந்தாலும் பரவாயில்லை. அவையளை வீட்டிலை வைச்சு வளர்ப்பம். ஆராவது பிறகு வந்து எங்களுக்கு வளர்க்கத் தாருங்கோ வெண்டு கேட்டால் கொடுப்பம்”
இங்கே வளர்ப்பம், கொடுப்பம் என்ற சொற்கள் யாழ்ப்பாண பேச்சு மொழியினை நினைவுபடுத்துவதாய் உள்ளன.
வரும் போது, போகும்போது, சாப்பிடும் போது, குடிக்கும் போது என்ற சொற்கள் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் வரேக்கை போகேக்கை, சாப்பிடேக்கை, குடிக்கேகை என்பதாக உரையாடப்படுகிறது.
ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் வழங்கப்படுவதுமுண்டு. உழைத்தல் என்ற சொல் உடல் உழைப்பை மட்டும் குறிக்கப் பயன்படுத்தப்படவில்லை. யாழ்ப்பாண பேச்சு மொழியில் பணம் ஈட்டுதலையும் குறிக்கும். எடுத்தல் என்பது பொருட்களை எடுப்பதற்கு மாத்திரம் பயன்படுத்தப்பட வில்லை கைநிறையச் சம்பளம் எடுப்பதையும் சுட்டுகிறது.
நிற்கிறான் என்பது யாழ்ப்பாணத் தமிழில் நிற்பதை மாத்திரம் குறிக்கவில்லை. “தான் காதலிச்ச நிர்மலாவைக் கட்ட வேணும் எண்டு நிக்கிறான்” என்பதாக உரையாடலில் வழங்கப்படுகிறது. “மாமி வீட்டுச் சாப்பாடு நல்லாய் இருக்கு தாக்கும் அதுதான் அங்கேயே நிண்டுட்டான். என நிற்றல் என்பது பல்வேறு பொருள்களில் வழங்கப்படுகிறது.
குஞ்சு என்பது கோழிக் குஞ்சு, குருவிக் குஞ்சு என்பவற்றை மாத்திரம் குறிக்கவில்லை. “என்ரை குஞ்செல்லே குளப்படி செய்யாதேங்கோ” எனத் தாய் தனது மகனையோ மகளையோ பார்த்துச் சொல்வதுண்டு. காதலன் காதலி, கணவன் மனைவி ஆகியோரும் அன்புப் பெருக்கினால் குஞ்சு என ஒருவரை ஒருவர் அழைப்பதை யாழ்ப்பாண பேச்சுத் தமிழில் காண முடியும். இலங்கையில் ஒவ்வொரு பிரதேசத்திலும் தமிழ் மொழி அந்தப் பிரதேசத்துக்குரிய சிறப்புடன் பேசப்படுகிறது. யாழ்ப்பாணத் தமிழ், மட்டக்களப்பு தமிழ், மலையக தமிழ் என்பவை தனித்துவமானவை.
யாழ்ப்பாண தமிழ் அந்த உச்சரிப்பின் அடிப்படையிலேயே பிற மொழிச் சொற்களையும் உள்வாங்கியுள்ளது. முன்பெல்லாம இலக்கியக் கல்வி கற்றோர் மட்டுமே எழுத முடியும் என்ற நிலைப்பாடு இருந்தது. உரை நடை இலக்கியங்களும் அதிகம் எழுதப்படவில்லை. செய்யுள்களாகவே படைப்புகள் காணப்பட்டன.
யாழ்ப்பாண பேச்சுத் தமிழில் சிறுகதைகள், நாவல்கள் வெளியானபோது சில தமிழக எழுத்தாளர்கள் அதனை கேலி செய்தனர். இந்தப் படைப்புகளுக்கு அடிக் குறிப்புத் தேவை என்றனர். நம் நாட்டு பண்டிதர்கள் பலரும் சிறுகதைகள், நாவல்கள் என்பவற்றை ஆரம்பத்தில் ஏற்கவில்லை. ஆனால் இன்று நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தலித் இலக்கியம் கரிசல் இலக்கியம் என மண் வாசனையோடு எழுதப்படும் படைப்புக்கள் வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
சிறுகதைகள், நாவல்களில் யாழ்ப்பாண பேச்சுத் தமிழில் உரையாடல்கள் அமைந்தால் அவற்றுக்கு அடிக்குறிப்பு எழுதப்பட வேண்டும். இவ்வாறான கருத்து கி. வா. ஜகநாதன், பகீரதன் போன்ற தமிழக எழுத்தாளர்களால் முன்பு சொல்லப்பட்டது. ஆனால் இன்று தமிழகச் சஞ்சிகைகள் பலவற்றில் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் அமைந்த ஆக்கங்கள் பல வெளிவருகின்றன. இதனை யாழ்ப்பாண பேச்சுத் தமிழுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதலாம்.
தினகரனில் வந்தது
10 comments:
வணக்கம் மொழிவளன்
சிறுகதைப் படைப்புக்களோடு எடுத்தாளப்பட்டிருக்கும் இந்தக் கட்டுரை மிக நேர்த்தியாக இருக்கின்றது. பகிர்வுக்கு நன்றி.
வணக்கம் கானா பிரபா!
வட்டார வழக்குகள் குறித்தப் படைப்பு என்பதாலேயே மீள்பதிவிட்டேன்.
மேலும் ஈழத்தின் மறுமலர்ச்சிக் கால எழுத்தாளர்களின் படைப்புகளைப் பார்க்க வேண்டும் போல் உள்ளது.
நன்றி
உதாரணத்துடனான விளக்கம் அருமையாக இருக்கிறது.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
கோச்சி எனக்கு நினைவில்லாத சொல்
நல்ல பகிர்வுக்கு நன்றி...
நன்றி வாசுகி
நன்றி தமிழன் -கறுப்பி
உறவுமுறையில் 'அ'கரத்தில் தொடங்கும் சொற்கள் மட்டும் 'கொ'கரம் ஏற்றும் திரியும்(நெடிலையும் சேர்த்து வாசிக்கவும்).
முன்பு நானெழுதிய இடுகையொன்று.
வசந்தன் பக்கம்: உறவு முறைகள் -1
அவ்வகையில் 'கோச்சி' என்பது அம்மாவை நேரடியாகக் குறிப்பதன்று. அது ஆச்சியைத்தான் குறிக்கும். சிலர் அம்மாவை ஆச்சி என அழைப்பதால் அவர்களுக்கு மட்டும் 'கோச்சி' அவர்களது அம்மாவைக் குறிக்கும்.
the same question i asked u about tamil fighter mathanki arul parakasam daughter? is a bold multi talented tamil women who uses her body and mind for expressing her talen which case is a rare case in tamil society. she too speak aganinst singlavan domination.
கோச்சி என்டது யாழ்ப்பாணத்திட முதலுக்குமுந்திய தலைமுறையில பரவலான பயன்பாட்டில இருந்திருக்க வேண்டும்.
அதேநேரம் ட்ரெயினையும் கோச்சி எண்டு சொல்லுறது. கோச்சி வரும் கவனம் எண்டு கடவையில் எழுதியிருந்ததாம். கல்லடிவேலுப்பிள்ளை பக்கத்தில கொப்பரும் வருவார் கவனம் எண்டு எழுதிட்டு வந்தாராம் :)
>கொப்பர் என்ற சொல் அப்பாவைக் குறித்தது
ஒரு சின்னத் திருத்தம். கொப்பர் என்பது "உனது அப்பர்" அன்பதாகும். அதேமாதிரி, கொப்பா என்பது "உனது அப்பா" எனப் பொருள்படும். உதாரணமாக, நான் எனது அப்பாவை "கொப்பா எனக்கு ஒரு புத்தகம் வாங்கித் தாருங்கள்" என்று கேட்க முடியாது.