Author: வந்தியத்தேவன்
•10:53 PM
பொடியன், பொடிச்சி, பெட்டை, பொடியள் போன்ற சொற்கள் ஈழத்து வட்டார வழக்கில் பரவலாகப் பயன்படுத்தப்படுபவை. இந்தச் சொற்களின் மூலத்தை இணையத்தில் தேடு தேடென்று தேடினேன் கிடைக்கவில்லை. தமிழகத்தில் இந்த வார்த்தைகள் அவ்வளவாக பயன்படுத்தப்படுவதில்லை என நினைக்கின்றேன்.

இனி சொற்களுக்கான விளக்கம்

பொடியன் : பெரும்பாலும் சிறுவர்களைக் குறிப்பிடப்பயன்படுத்துவது. சிலவேளைகளில் இளைஞர்களையும் இந்தச் சொல்கொண்டு அழைப்பார்கள்.
உதாரணம் :
1. என்ரை மூத்த பொடியன் டொக்டருக்கு படிக்கிறான்

இங்கே பொடியன் குறிப்பிட்ட நபரது மூத்தமகனைச் சுட்டிக்காட்டுகின்றது.

2. சிவத்திற்க்கு பொடியன் பிறந்திருக்கு.

இந்த வாக்கியத்தில் பொடியன் ஆண் குழந்தையைக் குறிக்கிறது.

சிலவேளைகளில் பொடியனைச் சுருக்கி பொடி எனவும் அழைப்பார்கள்.

பொடிச்சி : பொடியனின் பெண்பால். பொம்பிளைப் பிள்ளைகளைக் குறிக்கும்.

உதாரணம் :
1. கோயிலுக்கு சிவசம்பு வாத்தியார்ட்டை சிவலைப் பொடிச்சி வந்திருந்தாள்,
இங்கே சிவலைப் பொடிச்சி சிவந்த அல்லது மாநிறமான பெண்ணைக் குறிக்கும்.

பெட்டை : பெண்களைக் குறிக்கும் இன்னொரு சொல். பெரும்பாலான கிராமங்களில் வழங்கும் சொல். கொஞ்சம் நாகரீகமாக பேசுகின்றவர்கள் இதனைத் தவிர்ப்பார்கள். குறிப்பாக கொழும்புத் டமில்ஸ். பெரும்பாலும் இளைஞர்கள் இந்தச் சொல் பாவிப்பார்கள்.

உதாரணம் :
1. வடிவான பெட்டை, சோக்கான பெட்டை. இரண்டுக்கும் அர்த்தம் அழகான பெண்.

பொடியள் : இளைஞர்கள் அல்லது சிறுவர்கள் கூட்டத்தைக் குறிக்கும் சொல். பொதுப்பாலாகும்.

உதாரணம் :
1. வைரவ கோயிலடியில் பொடியள் விளையாடுகிறாங்கள்.
2. உந்தப்பொடியள் செய்யும் சேட்டைகள் சரியில்லை.

இதனை விட விடுதலை இயக்கங்களில் இருப்பவர்களயும் பொடியள் என அழைப்பார்கள்.

3. வாசிகசாலையில் பொடியள் இண்டைக்கு கூட்டமாம்.
நூலகத்தில் ஏதோ ஒரு இயக்கத்தினர் கூட்டம் போடுகின்றார்கள் என்பது இதன் அர்த்தமாகும்.

பிற்குறிப்பு : நான் தமிழ் அறிஞன் அல்ல. அத்துடன் சாதாரண தரம் வரை மட்டுமே தமிழ் படித்தவன். மற்றும்படி நிறைய ஈழத்து நூல்கள் வாசித்த அனுபவம் மட்டுமே. ஆகையால் ஏதும் பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும். அத்துடன் உங்களுக்குத் தெரிந்த ஏனைய உதாரணங்களையும் இந்தச் சொற்களின் மூலங்களையும் அறியத்தரவும்.
This entry was posted on 10:53 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

20 comments:

On June 7, 2009 at 11:25 PM , ராஜ நடராஜன் said...

சொல் பொருள் விளக்கத்திற்கு நன்றி.

 
On June 8, 2009 at 1:02 AM , தமிழன்-கறுப்பி... said...

இந்தப 'பெட்டையள்' என்கிற சொல்லை உச்சரித்து எவ்வளவு நாட்களாகிற்று நடக்கட்டும்.. நடக்கட்டும்..

என்ன இருந்தாலும் எங்கடை ஊர் பெட்டையள் போல வருமோ? ;))

 
On June 8, 2009 at 2:13 AM , கானா பிரபா said...

பெட்டை என்ற சொல்லையும் காட்டினீர்கள் வந்தி, அதே போல பெடி என்ற சொல்லும் பயன்பாட்டில் இருக்கிறது, உதாரணமாக "குமாரசாமியின்ர பெடி"

நீங்களும் நல்ல ஒரு ஆரம்பப்பதிவோடு வந்திருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.

 
On June 8, 2009 at 3:46 AM , சந்தனமுல்லை said...

நல்லதொரு அறிமுகம்! பொடியள் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்! இந்தவார்த்தைகள் ஈழத்து வலைப்பதிவர்களின் இடுகையில் பார்த்திருக்கிறேன்! நன்றி!

 
On June 8, 2009 at 4:15 AM , மாயா said...

தொடருங்கள் ...

 
On June 8, 2009 at 10:45 AM , vanathy said...

பொடி என்றால் சிறிய என்று அர்த்தம் .
பொடிபொடியாக --மிகவும் சிறிதாக .
மூக்குபொடி- சிறிய துகள்கள் கொண்ட பவுடர்
காய்கறிகளை பொடி பொடியாக நறுக்கவும் --சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
இந்த பொடி என்ற சொல்லில் இருந்துதான் சிறியவர்கள் என்ற கருத்தில் பொடியன் என்ற வார்த்தை வந்தது.
சிறுவயதினர் என்பது சிறுவர்கள் மட்டுமலாது இளைஞர்களையும் குறிக்கும்.
--வானதி

 
On June 8, 2009 at 7:37 PM , கொண்டோடி said...

இடுகையிலுள்ள ஆண்பாற் சொற்கள் பெருமளவு பயன்பாட்டிலுள்ளன. அவற்றைக் கேட்டு யாரும் மூஞ்சையை நீட்டுவதில்லை.

ஆனால் அவற்றுக்குரிய பெண்பாற் சொற்களைச் சொன்னால் சிலருக்குக் கோபம் வரும்.
---------------------
ஈழத்தில் பெடியள் என்பது போராட்டத்தில் குதித்த இயக்கங்களைக் குறிக்கும் முக்கிய சொல்லாகவே ஆகிவிட்டது. எண்பதுகளின்பின்னர் அது புலிகளைக் குறிக்கும் சொல்லாக மாறியது. பெண்புலிகள் பெரும் படையணிகளாகத் தாக்குதல் நடத்தும் நிலை உருவான பின்பும்கூட 'பெடியள்' என்ற சொல்லாலேயே புலிகள் அழைக்கப்பட்டார்கள்.
'பெடியள் பூநகரியை அடிச்சிட்டாங்கள்'...

இப்படி இயக்கத்தைக் குறிக்கும் முக்கியமான சொல்லாகிப் போன பெடியளின்ர எதிர்ப்பாற் சொல்லுக்கு இயக்கத்துக்குள்ள என்ன நடந்தது?

'பெட்டை' என்ற சொல் இயக்கத்தில் முற்றாகத் தடைசெய்யப்பட்ட சொல்லாக மாறியது. பெண் போராளிகளை யாரும் பெட்டைகள் என்று சொன்னால் அது தண்டனைக்குரிய குற்றமாக இயக்கத்தில் கருதப்பட்டது. பெண்போராளிகளைக் குறிக்க 'பிள்ளைகள்' என்ற சொல்லாடலே பொதுவாகப் பயன்பாட்டிலிருந்தது.

இருந்தாலும் அவ்வப்போது இச்சொல் தவறிப்போய் உச்சரிக்கப்படும். பெரும்பாலான நேரங்களில் தமக்குள்ளான புரிந்துணர்வால் பிரச்சினைகள் இன்றி கையாளப்பட்டுவிடும்.

இது பொதுமக்களிடத்திலும்கூட பரவலானது. யாராவது அவர்களைச் செல்லமாக அழைப்பதை விட்டுப் பார்த்தால் பொதுமக்கள்கூட 'பெட்டையள்' என்று பெண்போராளிகளைக் குறிப்பதைத் தவிர்த்தே வந்தார்கள். குறைந்தபட்சம் அவர்களின் முன்னாலோ தமக்குத் தெரியாதவர்கள் முன்னாலோ...
----------------
சரி,

நானும் உந்த புளொக்கில அலட்டலாமோ?

அழைப்பிருக்கோ?

 
On June 8, 2009 at 7:40 PM , கொண்டோடி said...

'ஒரு பொடிச்சி' எண்டு ஒருத்தி 'பெட்டைக்குப் பட்டவை' எண்ட பேரில வலைப்பதிவு வச்சிருந்தா. அவவையும் சேருங்கோ...'பத்தி எழுத்தாளினி வாறா, பராக்' பராக் எண்டு சொன்னாத்தான் வருவன் எண்டு அடம்பிடிச்சாவெண்டா விட்டுவிடுங்கோ.

எனக்கு அழைப்பு வந்தால் என்ர பேரை வைச்சே ஓரிடுகை எழுதலாமெண்டு இருக்கிறன்.

 
On June 8, 2009 at 9:19 PM , வந்தியத்தேவன் said...

நனறிகள் ராஜ நடராஜன்

//தமிழன்-கறுப்பி... said...

என்ன இருந்தாலும் எங்கடை ஊர் பெட்டையள் போல வருமோ? ;)//

தமிழன் கறுப்பி அவர்களே நம்ம ஊர் பெட்டையள் பற்றியும் நேரம் கிடைத்தால் எழுதுவோம்

 
On June 8, 2009 at 9:20 PM , வந்தியத்தேவன் said...

சந்தணமுல்லை மாயா வருகைக்கு நன்றிகள்.

 
On June 8, 2009 at 9:20 PM , வந்தியத்தேவன் said...

//கானா பிரபா said...
பெட்டை என்ற சொல்லையும் காட்டினீர்கள் வந்தி, அதே போல பெடி என்ற சொல்லும் பயன்பாட்டில் இருக்கிறது, உதாரணமாக "குமாரசாமியின்ர பெடி"//

பிரபா குமாரசாமியின் பெடியை மறந்துபோனேன். இந்தப் பொடி பெட்டை போன்ற சொற்களை பெரும்பாலும் டானியல், செங்கை ஆழியான் கதைகளில் படித்திருக்கின்றேன்.

 
On June 8, 2009 at 9:23 PM , வந்தியத்தேவன் said...

வானதி தங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றிகள். பொடியன் என்றால் இளைஞர்களையும் குறிக்கும் என எழுதியிருக்கின்றேன் அத்துடன் குழந்தையிலிருந்து சிறுவர்கள் வரையும் அந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். என்ரை மூத்த பொடியன் என்ற உதாரணத்தில் மூத்த பொடியனின் வயது ஒன்றாகவும் இருக்கலாம் ஐம்பதாகவும் இருக்கலாம். எப்படியாகினும் ஒரு தந்தைக்கு அவர் மூத்த பொடியன் தான்.

 
On June 8, 2009 at 9:25 PM , வந்தியத்தேவன் said...

கொண்டோடி சில தவிர்க்கமுடியாத காரணங்களுக்காகத் தான் பொடியளுக்கு நான் பெரிதாக விளக்கம் கொடுக்கவில்லை. உங்கள் விரிவான விளக்கத்திற்க்கு நன்றிகள். கானா அண்ணனிடம் உங்கள் விருப்பத்தைக்கேட்கவும்

 
On June 9, 2009 at 5:27 AM , கானா பிரபா said...

கொண்டோடி அண்ணை

உங்கட மின்னஞ்சலை எனக்கு அனுப்புங்கோ அழைப்பு அனுப்புவோம் :)

 
On June 9, 2009 at 6:11 AM , கொழுவி said...

உதென்ன கோதாரி.. பெரிய சில்லெடுப்புதான். உதில உத்தினை பேர் இருக்கிறியள்..? 3 இடுகைதானோ வந்திருக்கு. அப்ப உவையெல்லாம் ஆர்.. பதிவை படிக்கிற ஆட்களோ.. :):):)

கொண்டோடிக்கு ஒரு அழைப்பாணையை விடுங்கோ. அவர் ஒரு பேக்காய்.

 
On June 9, 2009 at 6:33 AM , Anonymous said...

எங்கட ஊரில 'பொ' பாவிப்பதில்லை.பெடியன், பெட்டை, பெடியள்,பெடிச்சி என்று 'பெ' தான் பாவிப்பதாக நினைவு.
எனக்கு இது தான் சரி போலவும் இருக்கு.ஆனால் பின்னூட்டம் போட்ட எல்லோரும் 'பொ' பாவித்திருப்பதால்
சந்தேகமாக தான் இருக்கு.

இதில் பெண் பால் பெயர்கள் நாகரீகம் இல்லை என்று பாவிப்பதில்லை.
வாய் தவறி யாராவது சொன்னாலும் ஒரு மாதிரி தான் பார்ப்பம்.

 
On June 11, 2009 at 7:03 AM , கலை said...

அந்தப் பொடியன் எண்டு சொல்லுறன்தான். ஆனால், ஏனோ அந்த ‘பெட்டை' இன்னும் சொல்ல வரேல்லை.

 
On June 13, 2009 at 7:21 PM , தமிழ் said...

தமிழகத்தில் வழக்கிலுள்ள சொற் தான்
பொடியன் என்பது.

ஒருவரை ஏளனமாக சொல்லும்போது
இவன் எல்லாம் பொடியன் என்று
கூறுவதுண்டு

நன்றி

 
On June 15, 2009 at 6:16 AM , கொண்டோடி said...

என்ர மின்னஞ்சல் முகவரி:
kondodi@gmail.com

 
On June 15, 2009 at 11:23 PM , WE WILL COME BACK said...

WHEN I READ THIS,I FEEL I AM LIVING IN TAMILEELAM AND WE NEED LIKE YOUR EELAMIST.
VANAKKAM EELATHUMUTTAM
VANTHIYATHEVAN