Author: மணிமேகலா
•4:18 AM


என்ன எல்லாரும் களைச்சுப் போனீங்களோ? ஒருதற்ற சிலமனையும் காணேயில்ல.நான் தான் ஏலாதனான். நாரீக்க பிடிச்சுக் கொண்டுது எண்டா உங்களெல்லாருக்கும் என்ன நடந்தது? கலியாண வீடு நடத்தின களையாக்கும்.சரி சரி வாருங்கோ.கலியாணவீட்டுச் சாப்பாடும் கறியளும் அப்பிடியே கிடக்கு.வாற எண்டு சொன்ன கன பேர் வராமல் போட்டினம்.எதிர் பாராமல் கொஞ்சப் பேர் வந்து கலக்கிச்சினம்.

சரி,எல்லாரும் ஆளுக்கொரு பூவரசு இலையள அல்லாட்டில் கட்டி வச்ச அந்த வாழை இலயள் அங்கனேக்க இருக்கும் அதில கொஞ்ச இலத் துண்டுளக் கிழிச்சுக் கொண்டு வாருங்கோ.குழையல் ஒண்டு போட்டா சாப்பிட்டதுமாகுது;இயத்துகளையும் மினுக்கப் போட்டிடலாம்.இல்லாட்டில் உந்தக் கிடாரங்கள் பெரிய இடத்தையும் பிடிச்சுக் கொண்டு அது ஒரு பெரிய ஆக்கினை.

வந்தி, கிட்ட வந்து இதப் பிடியடா மோன. எங்க மசிஞ்சு கொண்டு நிக்கிறாய்? இந்தா ரண்டு மிளகாய் பொரியலையும் எடு. எல்லாரும் இப்பிடி கூடி இருந்து சாப்பிடுற நாள் இனி எப்ப வருமோ? வரேக்க நான் இருப்பனோ என்னவோ!ஹேமா எங்க போட்டாள்? சினேகிதிய இனிக் கண்ணாலயும் காணக் கிடைக்காது.உந்தப் புதுசா வந்த பிள்ளயளயும் ஒருக்கா பிடிச்சுக் கொண்டு வாருங்கோ.பிரவா,பலகையப் போட்டிட்டு இரு மோன.இந்தா இன்னும் எப்பன் பிடி.வெளிநாடெண்டு போனது தான் மிச்சம்.பலகையில இருக்கிறதே பெரும் பாடாப் போச்சுது.பூச்சுக் கொட்டுண்ட இந்த நாற்சார வீடு மாதிரி எங்கட வாழ்க்கையும் போய் முடிஞ்சா இனி ஆர் வரப்போயினம்.குழையல் சோறெண்டாலே என்னெண்டு தெரியாமல் வளருதுகள் இப்பத்தய பிள்ளயள்.ஏதோ இருக்கிற காலம் கொஞ்சம், இருக்கேக்க சந்தோசமா இருக்க வேணும் அவ்வளவுதான்.

மெய்யே மோன!கலியாண விட்ட திறமா நடத்தி முடிச்சிட்டாய்.சந்தோசம்.இனி நீங்கள் எல்லாரும் நாளைக்கோ நாளையண்டைக்கோ பயணப் பட்டிடுவியள்.வீடும் வெறிச்சோடிப் போகப் போகுது. அடிக்கடி இந்த முற்றத்துக்கு வந்து ஒண்டிரண்டு பதிவையாவது போட்டிட்டு போங்கோ என்ன? ராசா, இன்னும் கொஞ்சம் பிடியன்.நன்னிக் கொண்டிருக்காமல் வடிவாச் சாப்பிடுங்கோ.ஹேமா, இந்தா இன்னுமொரு கவளம் பிடி.

சரி வரத்தான் முடியாட்டிலும் ஒரு பின்னூட்டமாவது போடக் கூடாதே? உதென்ன கண்டறியாத பழக்கம் பழகி வச்சிருக்கிறியள்? உது எங்கத்தய பழக்கம்? உது தானோ வெளி நாடு உங்களுக்குச் சொல்லித் தந்தது? அட, இந்த நாட்டுப் பிள்ளயளுமெல்லே இப்ப அதப் பழகி வச்சிருக்குதுகள்.இந்த வடலிப் பிள்ள இங்கனேக்க ஓடித் திரிஞ்சு கொண்டிருந்தான். இப்ப அவனையும் காணக் கிடைக்குதில்ல.எங்கட ஊர் பிள்ளயள் எல்லே நீங்கள்! நாங்கள் ஒரு குடும்பம்.அத மறந்து போகப் படாது.இப்ப புதுச் சொந்தம் சேந்திருக்கு அவையையும் உங்களோட சேத்துக் கொள்ளுங்கோ.சரி, முடிஞ்சுது. இது தான் கடசி உருண்டை. ஆருக்கு வேணும்?

சரி,கையளயும் வாயையும் கழுவிக் கொண்டு வாருங்கோ உதில இருப்பம்.பாயளயும் தலகாணியளயும் உந்தக் கரையில விரிச்சு விட்டா சின்னனுகள் படுத்திடுங்கள்.பிள்ள அதுகள ஒருக்கா பார் மோன.உந்த குஞ்சன் குருமனுகள் எல்லாம் உது வழிய ஓடித் திரிஞ்சதுகள் வடிவாச் சாப்பிட்டவையோ தெரியாது. பாத்து சாப்பிடாத ஆக்களுக்கு அங்க குசினிக்க காச்சின பால் இருக்குது அதில கொஞ்சம் ஆத்திக் குடுத்து விட்டா நல்லது.பிள்ள, கையோட அதயும் ஒருக்கா பாத்திட்டு வந்திட்டியெண்டா நல்லது.

உந்தக் கோடிக்க எரியிற லைட்டுகளயும் ஒருக்கா கையோட நூத்துப் போட்டு வா பிள்ள. சும்மா வீணா எரிஞ்சு கொண்டு கிடக்குது.கதவுகளையும் பூட்டி விடு.இருட்டுப் பட்ட நேரம்.

சரி வா,வா. இதில வந்து இரு மோன.எல்லாரும் கலியாண விட்டோட நல்லா களைச்சுப் போனியள்.எண்டாலும் சும்மா சொல்லப் படாது.எல்லாத்தையும் வலு கலாதியா நடத்தி முடிச்சுப் போட்டியள். அதில எனக்கு வலு சந்தோசம். வராத ஆக்களுமெல்லே வந்து கலியாணத்தச் சிறப்பிச்சுப் போட்டினம்.

எனக்கு மோன ஒரு கவல.அதச் சொல்லாட்டில் எனக்கு மனம் பறியாது.முந்தின காலத்தில கலியாண வீடு முடிஞ்சா முடிஞ்சு போற கையோட வந்தாக்களுக்கு ஒரு வெத்திலப் பை குடுத்து விடுறவை. அந்த வெத்திலப் பை எப்பிடி இருக்கும் சொல்லுங்கோ பாப்பம்? சும்மா பேப்பர் பைதான். ஆனா அதில நிறைகுடம் குத்துவிளக்குப் படம், கலியாணத் தம்பதியளின்ர பேர், கலியாணம் நடந்த திகதி எல்லாம் போட்டிருக்கும்.அதுக்க வெத்தில,பாக்குச் சீவல் எல்லாம் போட்டிருக்கும்.பலகாரப் பை அது பிறிம்பு.அப்பிடியும் ஒரு காலம் இருந்துது.சரி அதவிடு, நான் என்ர கவலையச் சொல்ல வந்திட்டு என்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறன்.

எனக்கு என்ன கவலை எண்டா, வீடியோ படம் ஒருத்தரும் காட்டயில்ல.இந்தப் புதுப் பிள்ளயள் எல்லாம் வந்து கலாதியா நகைச்சுவை, கவிதை, கதை, அனுபவம்,ஆக்கள், பூக்கள்,அது இது எண்டு எல்லாம் நல்லாத் தான் இருந்தது.ஆனா,கலியாண வீட்டில ஒரு படம் கிடம் ஒண்டும் வரக் காணேயில்ல.பாத்தியே அத நாங்கள் துப்பரவா மறந்தெல்லே போயிட்டம்.உந்த வெளிநாடெண்டு போன பிள்ளயள் என்ன திறமா அதுகளப் படம் எடுத்திருக்குதுகள்.இஞ்ச பாரன்.

எப்பிடி எல்லாம் வாழ்ந்திருக்க வேண்டிய பிள்ளயள்!ஏதோ ஒரு கண் காணாத தேசத்தில போயிருந்து கொண்டு ஊர மறக்காமல் எப்பிடி இதை எல்லாம் செய்திருக்குதுகள் எண்டு கேட்டுப் பாருங்கோ.அதில வாற படங்கள் ஊர அப்பிடியே கொண்டு வந்து முன்னால நிப்பாட்டுது பாருங்கோ.

வெளிநாட்டுக்குப் போன எங்கன்ர பிள்ளையளின்ர மன ஏக்கம் இது. இதுகள நாங்கள் குறைவா மதிப்பிட்டிடக் கூடாது.

இத ஒருக்கா கேட்டுப் பாத்திட்டு உங்கட குற நிறையளயும் அபிப்பிராயத்தையும் சொல்லுங்கோ.

பாட்டப் பற்றி மட்டும் சொல்லிப் போட்டுப் போகப் படாது. உரிமையோட அடிக்கடி வந்து பதிவுகளும் போட்டு அசத்த வேணும்.

Author: கானா பிரபா
•4:15 AM

பதிவர் சகோதரி மணிமேகலா சொன்னது போல ஒரு பெரிய கலியாண வீட்டைச் செய்த திருப்தியோடு தமிழ்மண நட்சத்திர வாரத்தை நிறைவு செய்கிறது எமது ஈழத்து முற்றம். கடந்த வாரம் முழுவதுமே எமது குழும அங்கத்தவர்களது பதிவுகளாக மொத்தம் 18 பதிவுகளை நட்சத்திர வாரப்பதிவுகளாகக் கொடுத்திருந்தோம். தனிப் பதிவராக நான் உட்பட இந்த நட்சத்திர வாரத்தில் பங்கேற்ற சக பதிவர்கள் ஒருசிலரும் நட்சத்திர வார அனுபவங்களைப் பெற்றிருந்தாலும், முழுமையான ஒரு குழுமப்பதிவில் ஒவ்வொருவருடைய சிந்தனைகளும் பரந்து பட்ட அனுபவங்களுமாகத் திரட்டிய இந்த அனுபவம் எங்கள் எல்லோருக்குமே புதியது. அதற்காக எம்மை நட்சத்திர வாரத்தில் பங்கேற்கச் செய்த தமிழ்மணம் குழுவுக்கும், இந்த நட்சத்திர வாரத்தில் பங்களித்த சக உறவுகளுக்க்கும், பின்னூட்ட மட்டுறத்தலோடு அவ்வப்போது ஆலோசனைகளைத் தந்துதவிய சக மட்டறுத்துனர் வந்தியத்தேவன் மற்றும் சினேகிதி, ஈழத்து முற்றத்துக்கான இலச்சினை வடிவமைப்புக்கு உதவிய மயூநாதன், எம்மை ஊக்கப்படுத்திப் பதிவுகளை வாசித்தோர், பின்னூட்டியோர் எல்லோருக்கும் இனிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்புடன்
கானா பிரபா
(ஈழத்து முற்றம் குழும வலைப்பதிவர்கள் சார்பில்)

ஈழத்து முற்றம் தமிழ்மண நட்சத்திர வாரப்பதிவுகள்


நட்சத்திர வாரத்தில் ஈழத்து முற்றம்

அல்வாயில் ஒரு மழைக்காலம் - சினேகிதி

என் ஜன்னலின் சினேகிதி - ரிஷான் ஷெரீப்

மட்டக்களப்புச் சொற்கள் - விசரன்

கணவன்/கணணி/வீடு. - ஹேமா

பொங்கல்/ வளந்து வைத்தல், உரு ஆட்டம் - வி.ஜெ.சந்திரன்

கொழும்பிலிருந்து வன்னியூடாக யாழ்ப்பாணம் - மணிமேகலா

கப்பலேறிப்போனோம் கசங்கிப்போய் வந்தோம் - வடலியூரான்

கொண்டல்மரமே! - ந.குணபாலன்

எங்கடை ஊர் உலகக்கோப்பை - வந்தியதேவன்

ஊரும் பெயரும் - வர்மா

ஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு - மாயா

எக்சியூஸ் மீ உதவ முடியுமா? - சின்னக்குட்டி

ஈழத்துச் சதன் - சுபாங்கன்

பண்டிதர் க.சச்சிதானந்தன். - தமிழன் - கறுப்பி


நிர்ப்பந்திக்கப்பட்டவைகள்.
- ஹேமா

புனிதப் பூமி ரட்சிக்கப்பட்ட பாவி - விசரன்

சைக்கிள் ஓடப் பழகின கதை - வடலியூரான்

படலைகள்: - சங்கடப் படலை - மணிமேகலா
Author: மணிமேகலா
•4:48 PM
படலை திறந்து தான் இருக்கிறது; உள்ளே வாருங்கள்.:)


வீட்டின் முகம் இது. வீட்டில் வசிக்கும் மனிதர்களின் மன,குண இயல்பை மூன்றாம் நபருக்குக் காட்டும் முதல் இடம் இது தான்.

முதன் முதலாக தெரியாத ஒரு வீட்டுக்கு வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.முதலில் நீங்கள் எங்கெல்லாமோ தேடி இடத்தைக் கண்டுபிடித்து முதலில் வந்து நிற்கும் இடம் இது. அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றி உங்கள் மனம் முதலில் ஒரு அபிப்பிராயத்தை இதை வைத்துத் தான் எடுத்துக் கொள்ளும்.

அது தான் படலை.

படலைகள் பலவகை.வீதியில் இருந்து வீட்டு வளவுக்கு வரும் வாசலை கட்டுப் பாட்டில் வைத்திருப்பது இதன் தொழில்.படலை கர்ம வீரனைப் போல வீட்டை; வீட்டில் உள்ளவர்களைக் காக்கிறது.

படலை என்பது யாழ்ப்பாணத்துச் சொல் வழக்கு. கேற் என்பதும் இது தான்.இவற்றில் பலவிதங்கள் உண்டு. மரப்படலை,இரும்புப் படலை,ஒற்றைப்படலை, இரட்டைப் படலை,தகரப் படலை,கடவுப் படலை,செத்தைப் படலை,மூங்கில் கழிகளால் கொழுவி அமைக்கப் படும் படலைகளும் உண்டு.படலைகளே அற்ற ஏழைகளின் வீடுகளும் இருக்கின்றன. இப்படிப் பலவகைப்படும் அவை.

சமயங்களுக்கும் இந்தப் படலைகளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று கேட்டால் அப்படி ஒரு சம்பந்தமும் இல்லை. இருந்த போதும் இஸ்லாமிய சகோதரர்களின் வீடுகளின் படலைகள் இன்னொரு விதமாக தனித்துவம் கொண்டதாக இருக்கும் என்பதையும் சொல்ல வேண்டும். அது ஒரு விதமான மூடிய தோற்றத்தைக் கொண்டிருக்கும்.உயரத்தில் ஒரு சிறு ஜன்னல் அதில் காணப்படும். வெளிப்புற சுவர் ஓரம் அழைப்பழுத்தி ஒன்றிருக்கும். (இதனை நான் கொழும்பில் தான் பார்த்தேன்.ஏனையவர்களின் வீட்டுப் படலைகளும் அப்படி இருக்கிறதா என்று தெரியவில்லை.)அதனை அழுத்தினால் ஒரு முகம் மட்டும் அந்த ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கும். விடயத்தைச் சொன்ன பின் அனுமதி கிட்டும்.

சிங்கள மக்களது படலைகள் நல்ல கலை வேலைப்பாடுகள் கொண்டதாக இருக்கும். மரமோ, இரும்போ எதுவாக இருந்தாலும் கடைச்சல் வேலைகளுக்கு அவர்கள் மிகப் பிரசித்தம் ஆனவர்கள்.வேல் போன்ற முனைகள் ஒரு வித சீரோடு அதில் அமைந்திருக்கும்.பதிவாக ஆரம்பித்து உட்புறம் வர வர உயர்ந்து காணப்படும் சில. வேறு சில அதற்கு எதிர்புறமாக உயர்ந்தவாறு செல்லும்.கறுப்பும் மண்ணிறமும் கலந்த வர்ண வேலைப்பாடுகள் அதில் அமைந்திருக்கும்.இந்தப் படலையில் அவர்கள் ஏனோ தனிக்கவனம் செலுத்துவதுண்டு.

பொதுவாகச் சில படலைகள் அதன் கம்பி வேலைப் பாட்டிலேயே இரு அன்னங்கள் நீந்துவது போல ;உதயசூரியன் உதிப்பதைப் போல; மலர்ந்த தாமரையைப் போல என்றெல்லாம் கலை பேசும். வேறு சில வீட்டுத் தலைவரின் பெயரைத் தாங்கி நிற்கும். மேலும் சில வீட்டின் பெயரைக் கொண்டிருக்கும்.வர்ணப் பூச்சுக்களால் அதனை வேறுபடுத்தியும் காட்டி இருப்பார்கள் சிலதை.மேலும் சில வீட்டு ஜன்னலின் கம்பி வேலைப் பாட்டை போன்ற வேலைப் பாட்டையும் கொண்டிருக்கும்.பெரும்பாலானவை நல்ல காத்திரமான படலைகளாகவும் இருக்கும். வீட்டினுடய வர்ணத்தை ஒத்த நிறத்தைப் பெரும்பாலும் அவை கொண்டிருக்கும்.

இவை எல்லாம் எத்தகைய கலை வேலைப்பாடு வண்ணங்களைக் கொண்டிருந்தாலும் இவை அமைந்திருப்பதற்கான நோக்கம் பாதுகாப்பு என்ற ஒன்றே!

அதன் சூட்சுமம் படலைகளின் ஓரத்திலோ நடுப்பகுதியிலோ தான் காணப் படும். அவை தான் கொழுவிகள். கூக்குகள்,திறாங்குகள் போன்ற பூட்டும் சாதனங்கள்.சில உட்புறமாக மட்டும் திறக்கக் கூடிய தன்மையை கொண்டனவாகவும் விளங்கும். சில சங்கிலி கொண்ட பூட்டுக்களால் எப்போதும் பூட்டப் பட்டிருக்கும். இரவு வேளைகளில் படலைகளைப் பூட்டி வைப்பாரும் உளர். அது கள்வர் பயத்துக்காக.தோற்றம் எவ்வாறு இருந்தாலும் பூட்டுகள் சரியாக இல்லாவிட்டால் படலைகள் இருந்தும் அவற்றினால் ஒரு பயனும் இல்லாது போய் விடும்.சில வீடுகளில் ’நாய் கடிக்கும் கவனம்’ என்ற எச்சரிக்கைப் பலகையும் வைக்கப் பட்டிருக்கும்.சில படலைகள் ‘கண்ணைப் பார்;சிரி’ என்றும் சொல்லும்.


சில படலைகளை 45 கலன் கொள்கலனை வெட்டி அழுத்தி நீளமாக்கி அதைக் கொண்டும் படலைகளைச் செய்திருப்பார்கள்.அதன் ஓரத்தைப் பிடித்து தூக்கி கரைக்கு இழுத்துவரவேண்டும்.அது ஏழைகளின் படலை.சிக்கனமான படலை.சிறு காய்கறித் தோட்டங்களுக்கும் அப்படியான படலைகள் இருப்பதுண்டு.

பணக்கார வீட்டுப் படலைகள் கார் போக வசதியாக இரண்டு கதவுகளைக் கொண்டதாக ஒன்றும் அருகாக ஒற்றையாய் ஒரு படலை நடந்து வருபவர்களுக்காகவும் இருக்கும். (படலைகளும் வர்க்க வித்தியாசம் பார்க்கும் போலும்.)

முக்கியமான ஒரு யாழ்ப்பாணப் படலையைப் பற்றிச் சொல்லத் தான் இத்தனை ஆலாபனையும். அப்படலைக்குப் பெயர் ‘சங்கடப் படலை”.சங்கடத்தை (அசெளகரிகத்தை) தீர்க்கும் படலை என்று அதற்குப் பொருள் கொள்ளலாம்.இரண்டு நாளாக இந்தப் படலையின் படத்தைத் தேடியும் அது கிட்டவில்லை.அதனால் இப்படலையை நிச்சயமாக எங்கள் தேட்டங்களில் ஒன்றாக - பண்பாட்டுச் சின்னத்தில் ஒன்றாக கொள்ளலாம்.

அது எப்படி இருக்கும் என்றால் படலைக்கும் ஒரு வீடு இருக்கும். அதாவது இரட்டைப் படலை என்றால் அந்தப் படலைக்கு மேலே சிறு கூரையோடு கூடிய கிடுகினாலோ பனக்கார வீடென்றால் ஓட்டினாலோ வேய்ந்த கூரைப் பகுதி இடுக்கும்.அவை மழையில் இருந்தும் வெய்யிலில் இருந்தும் படலையை மட்டுமல்ல வழிப்போக்கரையும் காப்பாற்றும்.

முற்காலங்களில் அதன் அருகே குடி தண்ணீர் பானையில் வைக்கப் பட்டிருக்கும். மேலும் சில சுமை தாங்கிகளைக் கொண்டிருக்கும். அவை நடந்து போகும் வழிப் போக்கருக்கு நிழலையும் இளைப்பாறலையும் அளிக்கும்.

கூடவே தமிழரின் பண்பாட்டினையும் அது சொல்லி நிற்கும்.

அவை எல்லாம் இன்று அழிந்து வரலாற்று ஆவணங்களாகத் தன்னும் பார்க்க முடியாத நிலையில் போயிற்று.யாழ்ப்பாணத்து படலைகளின் அழகை தன்மையைக் கூறும் படங்கள் எதனையும் வலையிலும் காண முடியவில்லை.(சங்கடப் படலை என்பது கிட்டத் தட்ட இது போல இருக்கும்.)இனி எவரேனும் தமிழ் பகுதிகளுக்குப் போனால் படலைகளையும் படம் எடுத்து வாருங்கள்.

அது பல கதைகள் பேசும் வரலாற்றுச் சின்னம்.
Author: வடலியூரான்
•1:07 PM
கொழும்பு மாதிரி பெரிய நகரங்களிலெல்லாம் ஓரளவு வசதியான குடும்பமெண்டால் தேப்பனுக்கொரு கார்,தாய்க்கொண்டு, பெடியனுக்குமொண்டு, பெட்டைக்குமின்னுமொண்டெண்டு ஆளாளுக்கொரு காரை அல்லது சில வேளைகளில் ஒண்டுக்கு மேற்பட்ட கார்களையும் வைச்சிருப்பினம்.அதை மாதிரித்தான் எங்கன்ரை வீடுகளிலும் ஆளாலுக்கொரு வாகனம் வைச்சிருப்பம்.(நாங்களும் வசதியான ஆக்கள் தானே?)


எங்கன்ரை வாகனத்துக்கும் பென்ஸ் கார் மாதிரியெண்டிற அளவிலையில்லாட்டிலும் ஏதோ றோட்டாலை போறவாறாக்களுக்குக் கேக்கிற மாதிரியெண்டாலும் சத்தம் போடிற நல்ல ஹோர்ண்(Horn) இருக்குது, சிக்னல் இருக்குது, கூலிங் சிஸ்ரம் இருக்குது, அக்சிலேற்றர்(Accelator) இருக்குது.என்ன எங்கன்ரை வாகனம் ரீற்ரீற் எண்டதுக்குப் பதிலாக "ட்றீங் ட்றீங்" எண்டு ஹோர்ண் அடிக்கும்.எங்கன்றை வாகனங்களுக்கு ட்றைவர் கையாலேயே சிம்பிளாக சிக்னல் காட்டலாம்.
வருடிச் செல்லும் வசந்தக் காற்று கறண்ட் இல்லாமலே தலையைத் துவட்டிச் செல்லும்.அக்சிலறேசன்(Accelaration) பண்ணிறதெலாம் ட்றைவரின்ரை தனித் திறமையிலை தான் இருக்குது.என்ன நான் சொன்ன, சொல்ல வந்த வாகனமென்னெண்டு விளங்கியிருக்கும்.வேறையென்ன ஈழத்து சராசரி மக்களின் வாழ்வைத் தன் தோளில்(சீற்றில்) சுமந்து,குளிரிலும் பனியிலும் கிடந்து,கல்லுகள்,முள்ளுகளிடம் குத்து வாங்கி, குண்டடிப் பட்டு,ஓடாய்த் தேய்ந்து, உப்புக் கடலுக்குள்ளாலும், உழுத நிலத்துக்குள்ளாலும் மக்களோடு மக்களாக இடம் பெயார்ந்து, மக்களின் அத்தியாவசியப் பொருட்களடங்கிய ட்றங்குப் பெட்டிகளையும் உர பாக்குகளையும் சுமந்து மக்களின் இன்ப துன்பங்களிலெல்லாம் பங்குபற்றிய துவிச்சக்கரவண்டி/சைக்கிள் தான் அந்த வாகனம்.


இறக்கை கட்டிப் பறக்குதடி அண்ணாமலை சைக்கிள் ஆசைப்பட்டு ஏறிப் புட்டேன் ஐயோவோடை பைக்கில் என்று எங்கடை பைக்கில் ஏற அந்தக் காலத்திலை(மிகச் சின்ன வயசிலை) யாரும் தயாராக இல்லையென்றாலும் எங்களுக்கு 3ம், 4ம் ஆண்டு பள்ளிக்கூட காலங்களிலெல்லாம் சைக்கிளொண்டு வாங்கி,இறக்கை கட்டிப் பறக்கும் ஆசை மட்டும் மனசுக்குள்ளே பறந்து கொண்டேயிருக்கும்.


ஐந்தாம் ஆண்டிலை நடக்கிற ஸ்கொலசிப்(Scholarship) பாஸ் பண்ணினா ஒரு அரைச் சைக்கிளோ, முழுச் சைக்கிளோ வாங்கித் தரவேண்டுமென்பதே பெரும்பாலான பெடியள்,பெட்டையளினால் பெற்றாரிடம் முன்வைக்கப் படும் விண்ணப்பமாகவிருக்கும்.ஸ்கொலஸிப் பாஸ் பண்ணிறமோ இல்லையோ சைக்கிள் மட்டும் எப்பிடியாவது வாங்கித் தருவினம் அல்லது வாங்கித் தரத்தான் வேணும் எண்டது அங்கை எழுதப் படாத விதி.எண்டாலும் சைக்கிள் வாங்கித் தாறம் எண்டு சொன்னால் பெடியன் கொஞ்சம் ஊண்டிப் படிப்பானெண்டது அவையின்றை அங்கலாய்ப்புத் தான்.

ஸ்கொலஸிப்புக்கு படிக்கிறமோ இல்லையோ எப்பாடா ஸ்கொலஸிப் முடியும் எப்பாடா சைக்கிள்ளை இரண்டு கையையும் விட்டிட்டு மைனர் குஞ்சு மாதிரிப் பறக்கலாம் எண்டு கனவுகளுக்கும் நினைப்புகளுக்கும் குறைவில்லாமல் இருக்கும்.ஹெட் லைற்றை(Head Light) எந்த மாதிரியான் ஒரு ஒறேஞ் துணியாலை கட்ட வேணும், Bar க்கு எந்த மாதிரி குஞ்சங்கள் வைத்த சொவெர் போட வேணூம், பின்னுக்கு டைனமோவுக்கு கீழை எப்பிடி இரண்டு சிவத்த சிக்னல் லைற் போட வேணுமெந்த மாதிரியான லுமால கரியல் போட வேணும், எந்த மாதிரியான "ப" ஸ்டண்ட் போட வேணும்,மட்காட் கம்பியிலை எந்த மாதிரியான பந்துக் குஞ்சம் வைக்க வேணும், முன்னுக்கு சொக்கஞ்சோர் (Shock Absorber) எப்பிடி இருக்கோணும், ஹாண்டில் கவர்(Handle Cover) எப்பிடி இருக்கோணும் எண்டு ஒவ்வொரு பர்ட்ச் உம் எப்பிடி இருக்கவேணுமெண்டெல்லாம் றோட்டாலை போய் வாற ஓரளவு பெற்றர்(Better - பரவாயில்லாத) ஆன சைக்கிளையெல்லாம் பார்த்து,அதெல்லாத்தையும் சேர்த்து ஐந்தாம் ஆண்டிலேயே நான் கண்ட ஒரு பெஸ்ற்(Best) ஆன கற்பனைச் சைக்கிள் எனக்கு இன்றும் கண் முன்னே நிற்கின்றது.எனக்கு மட்டுமல்ல பெரும்பாலானோர் கண்ட,காண்கின்ற கனவு இது.

ஸ்கொலஸிப்பும் பெரிசா இல்லாட்டிலும் ரியூசனுக்குப் போகாமலே ஏதோ மட்டு மட்டாக பாஸ் பண்ணிப் போட்டன்.என் கனவுச் சைக்கிளை வாங்குவதற்குப் பொருளாதார நிலை அந்த நேரம் வீட்டில் இல்லையென்பதே காரணமாகவிருந்தாலும்,"இப்ப நீ சின்னப் பொடியன் தானே ஏன் இப்ப அரைச் சைக்கிள் எடுத்துப் பிறகு முழுச் சைக்கிள் எடுப்பான்.ஒரேயடியாக நீ வளர்ந்தாப் போலை பெரிய சைக்கிளா எடுப்பம்,அதோடை நீ இன்னும் சைக்கிள் ஓடப் பழகயில்லை,பேந்து புதுச் சைக்கிள்ளை பழக வெளிக்கிட்டு போட்டுடைச்சுப் பழுதாக்கிப் போடுவாய்" எண்டும் காரணம் சொன்னாலும் எனக்கு அதில் பூரண உடன் பாடில்லாமல் இருந்தது.

ஒரு பொருளை தாறன் எண்டு சொல்லிப் போட்டு அதை தராமல் விடுகின்ற போது அல்லது அது கிடைக்காமல் விடுகின்ற போது ஏற்படுகின்ற ஏமாற்றம்,இயலாமை, உள்ளக் குமுறல் கொடுமையானது.எல்லாரும் ஏதேதோ விதங்களில் பல்வேறு ஏமாற்றங்களைக்கடந்து வந்திருப்போமாகையால் எனக்கு அந்த வயதில் ஏற்பட்டிருக்கக்கூடிய ஏமாற்றத்தினை உணர்ந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.எனக்கும் அதுவும் அந்தச் சிறிய வயதில் ஏமாற்றப் பட்டு விட்டோம் என்றதொரு உணர்வு இருந்தாலும் கூட வீடே சொன்ன "வேறை ஒரு சைக்கிள்ளை ஓடப் பழகீற்றுப் புதுச் சைக்கிள் எடுப்பம் என்ற காரணம் சரியாகப் பட்டதால்" அவர்களுக்குக் கட்டுப் பட்டேன்.

எனது அப்பா வழியால் வந்த மச்சாளின் மச்சான் ஓடிய சைக்கிளொன்றே எனக்கு ஓடிப் பழகக் கிடைத்தது.அதிலை கிடந்த ஒரிஜினல் பெயின்ற்(Paint) எல்லாம் உரிந்து ஏதோ ஒரு சொல்ல முடியாத நிறத்தில் சைக்கிள் இருந்தது.நான் கற்பனை செய்த சைக்கிளுக்கு சரி தலைக்குத்தனமா நான் நினைத்திருந்த பாட்ஸ்(Parts) எல்லாத்தையும் நினைத்தாலும் பூட்டேலாதமாதிரி தலைகுத்துக் கரணமாக இருந்தது அந்த கால்ச் சைக்கிள்.என்ன இது பழகத்தானே ,பழகினாப் போலை கொஞ்ச நாள் செல்ல என்ரை கனவுச் சைக்கிளில் கலக்கலாம் தானேயென்றிட்டு பழகத் தொடங்கினேன்.

எங்கன்டை வீட்டு வளவுக்கை தென்னை,வாழைகளுக்குத் தண்ணீ மாறுறதுக்கெண்டு பெரிய உயரமான வாய்க்காலொண்டு போகுது.அதன் வரம்பு உச்சியிலே சைக்கிளை ஏத்திப் போட்டு,அப்பா இடப்பக்க ஹாண்டிலையும்(Handle) பின் கரியரையும் பிடிச்சுக் கொண்டு என்னை சீற்றீலை இருத்திப் போட்டு,என்னை உழக்கச் சொல்ல, மெல்ல மெல்ல ஆனால் முழு ரவுண்டும்(Round) செயினைச்(Chain) சுத்தாமல் டக்கு டக்கு எண்டு பெடலைத் தட்டிக் கொண்டே மெது மெதுவாக ஓடினேன்.
முதல் மூன்று தரமும் அப்பா கூடப் பிடித்துக் கொண்டு வந்த படியால் ஏதோ ஓடுவன் மாதிரித் தான் கிடந்துது.நாலாம் முறை ஓடத் தொடங்கி கொஞ்சத்தாலை அப்பா முன் ஹாண்டிலில் வைத்திருந்த கையை எடுத்துப் போட்டு கரியரை மட்டும் பிடித்துக் கொண்டு வந்தார்.கை நடுங்கி நடுங்கி ஹான்டில் அங்கேயும் இங்கேயும் ஆடினாலும் ஏதோ ஓடிக் கொண்டிருந்தன் நான்.அவர் பின் கையையும் எடுத்த கையோடை பதறியடித்துக் கொண்டு போய் அங்காலை நிண்ட வாழைக்குள்ளை சைக்கிளை விட்டன்.
இரண்டு வாழைகளுக்கிடையிலை முன் சில்லுப் போய்ச் செருகுப் பட்டதாலை சைக்கிள் அப்பிடியே நிண்டிட்டுது. நான் விழயில்லை.எண்டாலும் அப்பாட்டைச் சொன்னன் இனிக் கையை விடாதையுங்கோ எண்டு.அவரும் "இப்ப சும்மா விட்டுப் பாத்தன் இனி விடேல்லை " எண்டார்.அடுத்த முறையும் வரம்பில ஏறி அப்பா கரியரைப் பிடிக்க மெல்ல மெல்ல ஓடி,இந்த முறையும் சொல்லாமல் கொள்ளாமல் கையை எடுத்துப் போட்டார்.
நானும் வடிவாத் தான் ஓடிக் கொண்டிருந்தனான் போலை, எண்டாலும் பின்னுக்குத் திரும்பி இவர் பிடிக்கிறாரோ இல்லையோ எண்டு பாக்க வெளிக்கிட்டுப் பராதிப் பட்டுக் கொண்டு போய் முதல் முறை விழுந்தாச்சுது.நிலத்திலை கிடந்த சல்லிகள் உரஞ்சி முழங்காலால் இரத்தம் கசிந்தது.தண்ணியாலை கழுவிப் போட்டு அண்டையான் சைக்கிள் ஓட்டம் அதோடை விட்டாச்சுது.பிறகும் ஒவ்வொரு நாளும் அந்த வரம்பின் உச்சியில் ஏறி சறுக்கீஸ் மாதிரி அதாலை சறுக்கிக் கொண்டே விழுந்து எழும்பி அந்தக் கால்ச் சைக்கிளை ஓடப் பழகியாச்சுது.
பிறகேன் பேசுவான் கடைக்குப் போறதெண்டால்,பால் குடுக்க்ப போறதெண்டால்(மாட்டுப் பால்), வாசிக சாலைக்குப் போறதெண்டால் என்ரை குட்டிச் சைக்கிளை எடுத்துக் கொண்டு உழக்கித் தள்ளவேண்டியது தான்.
பிறகு அப்பாவின்ரை முழுச் சைக்கிளை எடுத்து அதைக் கெந்திக் கெந்தி, இடைக்குள்ளாலை காலை விடிட்டு, பிறகு பாருக்கு(Bar) மேலாலை காலைப் போட்டு, அதுக்குப் பிறகு சீற்றிலையிருந்து ஓடியெண்டு அதையும் ஓடப் பழகியாச்சுது.அதொண்டும் ஒருநாள் இரண்டு நாளிலை பழகினதில்லை.நாள்க் கணக்கில், மாசக் கணக்கில், எத்தனை விழுந்தெழும்பல்கள்,உரஞ்சல்களுக்குப் பிறகு நடந்தது.
பிறகு ஒரு கை விட்டிட்டு ஓடப் பழகி, இரண்டி கைவிட்டிட்டு, டபிள்,ட்றிபிள்ஸ்(Double,Triple) ஒரு சைக்கிளை ஓடிக்கொண்டு மற்றச் சைக்கிளை பரலலாக இழுத்துக் கொண்ட்டொறதெண்டு கன டெக்னிக்(Technique) எல்லாம் சைக்கிள் ஒடுறதில எக்ஸ்பேட்(Expert) ஆனாப் போல தானா வந்திடும்.பிறகு ஒரு மாதிரி 8ம் ஆண்டு படிக்கேக்கை எனக்கு முழுச் சைக்கிளொண்டு புதுசா எடுத்துத் தந்திச்சினம்.என்ரை கனவுச் சைக்கிள் மாதிரியே இருக்காட்டிலும் பெரும்பாலானவை இருந்தது,மீதியை நான் பொருத்திக் கொண்ட்டு என்கனவுச் சைக்கிளை மிதித்து ஊருக்குள்ளே கலர் காட்ட வெளிக்கிட்டேன்.
செருப்பெண்டால் Bata,Toothpaste என்றால் சிக்னல்,குளிசை என்றால் பனடோல் என்டு ஒவ்வொன்றுக்கும் Trade Mark உள்ளதைப் போல சைக்கிள் என்றால் லுமாலா என்பதும் ஈழவர் வாழ்வில் பிரிக்க முடியாதது.சும்மா சொல்லக் கூடாது வீட்டை இப்பவும் அம்மப்பாவின்ரை சைக்கிள்(பாவனைக் காலம் சரியாகத் தெரியாது 30 க்கு மேலை) அப்பாவின் சைக்கிள்(26 வருசம்) என்ரை சைக்கிள் 12 வருசம் எண்டு, இப்பவும் அந்தச் சைக்கிளெல்லாம் கிண்ணெண்டு கொண்டு தான் நிக்குது.
சைக்கிள் ஓடப் பழகிறதெண்டிறது சும்மா லேசுப் பட்ட காரியமில்லைப் பாருங்கோ.எல்லாராலேயும் பலன்ஸ்(Balance) பண்ணி ஓடேலும் எண்டில்லை.ஆனால் ஓடப் பழகினால் அது நல்லதொரு எக்சர்சைஸ்(Excercise).கீழ்க் கால்,தொடைகள் எல்லாம் இறுகி பார்க்க உடம்பு சும்மா முறிகித் தான் இருக்கும் கண்டியளோ.அது மட்டுமில்லை சைக்கிளிலை நண்பர்கள் 3,4 பேராய் பரலேலாக ஒராளின்டை ஹான்டிலை மற்றாள் பிடித்துக் கொண்டு ரோட்டு முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு பின்னுக்கு வாற வாகனக் காரன் என்னதான் ஊண்டி ஹோர்ண் அடித்தாலும் கேட்காத மாதிரி(உண்மையிலேயே கேட்கிறதில்லை தான்) போறதுவும்,ஊர்க்கதை உலகக்கதையெல்லாம் ரோட்டுகளிலேயே அளந்து கொண்டு போறதுவும்,பெட்டையளின்டை சைக்கிள் செற்றை முன்னுக்கு விட்டிட்டு அவகளுக்கு ஏதாவது சொட்டைக் கதை,சொறிக்கதை சொல்லிக்கொண்டோறதும் அல்லது பெட்டையள் செற் பின்னுக்கு வந்தால் சைற் குடுக்கிறமாதிரிக் குடுத்திட்டு அவகள் முந்த வெளிக்கிடேக்கை முந்தவிடாமல் இழுத்திழுத்து,வீடு மட்டும் கூட்டிக் கொண்டு போய் விடிறதும் ஒரு தனி சுகம் தான்.
இப்படிச் சென்ற என் நண்பர்கள் சிலர் பின்னால் ஹோர்ண் அடித்தது மாவட்ட நீதி பதி தான் என்பது கூடத் தெரியாமல் சென்றதால் ஒரு நாள் சிறை வாசமும் ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்திய சோகமும் உண்டு. அது மட்டுமல்லாது நானும், எனது தனியார் கல்வி நிறுவன நண்பர்களும் இவ்வாறு பரலல்(Parallel) ஆக சென்று கொண்டிருந்த போதுபின்னால் வந்த நீதி மன்றப் பதிவாளர் ஒருவர் எங்களைத் தனித்தனியே போக அறிவுறுத்திச் சென்றது கண்டு பொங்கியெழுந்த நாங்கள் அவரைத் துரத்திச் சென்று,மறித்து "டேய் மாக்கண்டு நீ யாற்றா எங்களை விலத்திப் போ " எண்டு சொல்லுறதுக்கு எண்டு வீறாப்பாகக் கேட்ட அடுத்த நாள் அந்தாள் ரியூசன் நிர்வாக்கியிடம் எல்லாரையும் காட்டிக் கொடுக்க அனைவரும் பெற்றோருடன் சென்று அவரிடம் மன்னிப்புக் கோரியதுடன் வகுப்பில் அனுமதிக்கப் பட்டமை இன்னுமொரு வரலாறு.உப்புடி கன கதைகள் இருக்குது.என்ன உங்களுக்கும் உப்புடிக் கனவுகள், கற்பனைகள், காயங்கள்,கதைகள் எல்லாம் நடந்திருக்குமெண்டு நினைக்கிறன்.அதுகளையும் கொஞ்சம் சொல்லுங்கோவன்.கேப்பம்.
Author: சஞ்சயன்
•3:12 AM
அந்தக்காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை எனது பெற்றோர்களின் தாய் மண்ணாகிய யாழ்ப்பாணத்திற்கும் எனக்கும் பெரியதொரு தொடர்புமில்லை, பந்தமுமில்லை, விடுமுறைக்கு போய் வரும் இடம் என்பதைத் தவிர.

பால்யத்தின் நேசத்தினாலாலும், மண்ணின் வாசத்தினாலும் என்னை வளர்த்து ஆளாக்கிய பூமியே புனிதப் பூமியாகியிருக்கிறது எனக்கு.  ஆம், மட்டக்களப்பு மண் எனக்கு புனிதப் பூமி
.
ஏறத்தாள 25 ஆண்டுகளின் பின் மீண்டிருக்கிறேன் எனது புனிதப் புமிக்கு, இம்முறை 5 நாட்கள் தங்கியிருந்து சுவைத்துப் போக நினைத்திருக்கிறேன். தோழமைகளின் சந்திப்புக்கள் நிறையவே நடக்கலாம்.

நான் இன்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு மாலை மட்டக்களப்பை வந்தடையும் வரை கண்டதையும், இரசித்ததையும், அனுபவித்ததையும் எழுதுவதாகவே யோசித்திருக்கிறேன்.

தந்தையாரின் மூத்த சகோதரியாரை யாழ்ப்பாணம் சென்று பார்த்து விட்டு இன்று காலை மட்டக்களப்பிற்கு புறப்பட்ட போது ஆரம்பிக்கிறது 100:100 வீதமான உண்மையான இந்தக் கதை.

...............

நேரம் 5.30 காலை.. ”டேய் மருமமோனே எழும்புடா நேரமாகுது” என்ற 88 வயது மாமியின் குரலில் விடிந்தது நாள். எழும்பி எல்லாம் முடித்து நேரம் 6.30 ஆன போது போது வந்து சேர்ந்தான் பால்ய சினேகம் (இவனும் மட்டக்களப்பில் தான் படித்தவன்).

"இனி எப்ப பார்ப்பனோ" என்னும் வார்த்தைகளுடன் முத்தமிட்டு அனுப்பினார் மாமி. வரும் வழியில் மச்சாள் வீட்டில் குழல் புட்டும், முட்டைப் பொரியலும் உட்தள்ளி, மோட்டார் சைக்கிலில் உட்கார்ந்த போது நேரம் ஏழு.

நட்பு யாழ்ப்பாணத்தை ஒரு சுற்றுலாபயணிக்கு காட்டுவது போல் காட்டிக் கொண்டு வந்தான். காலையின் சுறுசுறுப்பு தெரிந்தது கடந்து போன மனிதர்களிலும் அவர் மனங்களிலும். மனோகரா தியட்டர் கடந்த போது பழைய ஞாபகங்கள் வந்து போயின.

இராணுவத்தினர் எங்கும் புற்றீசல் மாதிரி நின்றிருந்தாலும் எவருக்கும் எதுவும் செய்யவில்லை. அவர்கள் முகங்களிலும் ஒரு ஆறுதல் தெரிவதாகவே பட்டது எனக்கு. புன்னகைத்தபடி கடந்து போனார்கள் சிலர்.

பஸ்ஸ்டான்ட்க்கு வந்து சேர்ந்தோம்.வவுனியா - மட்டப்பளப்பு ஊடாக காத்தான்குடி, என்று போட்டிருந்த பஸ்இல் ட்ரைவருக்கு பின்னால் ஒரு சீட் தள்ளி யன்னலோம் பிடித்து உட்கார்ந்தேன். நட்பு விடைபெற மனமோ சுற்றாடலை கவனிக்கத் தொடங்கியது.

முன் கண்ணாடியில் "ஓம்" என்பதை புதிய விதத்தில் எழுதுவதாக நினைத்து "ம்"மன்னாவின் வளைவு முடியும் இடத்தை தேவைக்கு அதிகமாகவே நீட்டி கடைசியில் அதை வளைத்தும் விட்டிருந்ததால் அந்த "ம்" பார்வைக்கு "ழ்" போல தெரிந்து "ஓம்" என்பதின் அர்த்தத்தை தூசணம் போல் காட்டிக் கொண்டிருந்தது. சில வேளை ஓம் என்றதுக்குள் எல்லாமே அடக்கம் என்பதை குறிப்பிடத்தான் அப்படி எழுதியிருந்தார்களோ? இந்தளவுக்காவது தமிழைக் கற்றிருக்கிறார்களே என்று சற்று பெருமையாய்த் தான் இருந்தது. அது சிங்களவருக்கு சொந்தமான பஸ்.

பஸ்ஸ்டான்டில் சொகுசு பஸ் கொழும்பில் இருந்து வந்து நின்றது. ஒரு நடுவயதான பெண் அழகாய் பல நகை உடுத்தி, நாகரீகம் தெரிந்தவர் போல (சர்வ நிட்டசயமாய் வெளிநாடு தான்) இறங்கிமுடிய முதல் பலர் அவரை நெருங்கி அக்கா ஓட்டோ வேணுமா என்றனர்.. அவர் அதைக்கவனிக்காமல் தொலைபேசியை காதில் வைத்த 10 நிமிடத்தி;ல் ஒரு ஓட்டோ முன்பக்கத்தில் வேப்பமிலை கட்டியபடி வந்து நின்றது.. என்ன பிள்ளை மெலிஞ்சிட்டாய் என்றவாறு வந்தார் ஒரு தாய் (எனக்கு அந்தத்தாயிடம் உது மெலிவோ ஆ? என்று கேட்க வேணும் போலிருந்தது) ஏன் நம்மவர்கள் சும்மாவெல்லாம் பொய் சொல்கிறார்கள்?
பஸ்ஸில் வந்த சாமான்களில் முக்கால்வாசி அவருடையதாயிருந்தது. ஒட்டோ நிரம்ப அடுத்த ஓட்டோ பிடித்து நிரப்பினாகள் மிச்சத்தை. நானோ, இவ்வளவு பாரத்தையும் எப்படி விமானத்தில் அதுவும் ஒரு டிக்கட்இல் விட்டார்கள் என்று மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் போது அந்த அக்காவும், அம்மாவும் 2 ஓட்டோக்களும் மறைந்து போயின.

நேரம் 7.30 ஒரு தம்பி வந்து அய்யா எங்க போறீங்க என்றார்.. மட்டக்களப்பு என்றதும் மறுபேச்சின்றி 550 ரூபாக்கு டிக்கட் தந்து, தனது பிட்டத்தை அடுத்த சீட் ஹான்டிலில் முண்டு கொடுத்து அடுத்தவருக்கு டிக்கட் எழுதத் தொடங்கினார்.

ட்ரைவர் வந்தார். ஸ்ட்டாட் பண்ணி 4 தரம் தேவையில்லாமல் அக்சிலேட்டரின் அடி மட்டும் அமத்திப் பார்த்தார். பஸ் அசையவில்லை, ஆனால் உயிர் போற மாதிரி கதறியது. பின்னால் வாழைக்குலை இருந்தால் பழுத்திருக்கும்.. அப்படிப் புகைத்தது.

வைரவர் கோயில் தாண்டும் போது வைரவர் கோயில் மணியடித்தது. அதனர்த்தம் "பாவியே  போய் வா" என்பதாயிருக்குமோ?

அப்போது ட்ரைவர்தம்பி பஸ்ஐ மடக்கித் திருப்பி, வீதியில் ஏற்றி ஈவு இரக்கமில்லாத வெகத்தில் ஓடினார். எனக்கு பயமாயிருந்தது. ஆனால் அதை அவர் கவனிப்பதாயில்லை.

எனது மனம் மனோவேகத்தில் மட்டக்களப்பை நோக்கி நகர ஆரம்பிக்க ட்ரைவர் தம்பியோ.. அண்ணண் உங்கட மனதை விட நம்ப பஸ் வேகமாய் போகும் என்று காட்ட முயற்சிப்பது போலிருந்தது அவர் காட்டிய வேகம்.

சூரியன் எப் எம் ரேடியோ போட்டனர். அதில் வந்த ஒரு விளம்பரம் எனது கவனத்தை ஈர்த்தது.. அது இப்படி இருந்தது. "அவுஸ்திரேலிய அரசு இலங்கையருக்கு புகலிட அனுமதி வழங்குவதை நிறுத்தியுள்ளதாகவும், கப்பலில் அவுஸ்திரேலியா போய் பணத்தை விரயமாக்காதீர்கள் என்றும், அப் பயணம் ஆபத்துக்கள் பல கொண்டது என்றும்"
இந்த விளம்பரத்தை யார் ஸ்பொன்சர் பண்ணியிருப்பார்கள்?

திடீர் என ஒரு பஸ் எம்மை முந்திப் போகிறது.. ட்ரைவர் தனது பரம்பரைமானம் போய்விட்டது போல நினைத்தாரோ என்னவோ கலைக்கிறார், கலைக்கிறார்.. பயங்கரமாய் கலைத்து அதை எட்டிப்பிடித்து முந்திய போது ஒரு விதமாய் ஹோன் அடித்தார். (நக்கலாயிருக்குமோ?). தம்பிமார் இருவரும் ட்ரைவர் அண்ணனை பாராட்டிக்கொண்டிருந்தனர். எனது உயிர் திரும்பக் கிடைத்த சந்தோசத்தில் இருந்தேன், நான்.

வழி எங்கும் இராணுவ முகாம்கள் தங்கள் இருப்பை உணர்த்திக் கொண்டிருந்தன. மட்டக்களப்புக்கு போய்ச் சேரும் வரை கிட்டத்தட்ட 100க்கும் அதிகமான ராணுவ முகாம்களைக் கண்டிருப்பேன். ஆனால் கெடுபிடிகள் இருக்கவில்லை, இருப்பினும் மனதை நெருடியது ரானுவத்தினரின் எண்ணிக்கை. ஆனால் அவர்களின் முகத்திலும் ஒரு வித ஆறுதல் இருந்தது.

பச்சையில் வெள்ளையாய் எழுதப்பட்டிருந்த பெயர்ப்பரகையில் முகமாலை என்றிருந்தது. மனதில் "முகமாலை முன்னரங்கு" என்றும் சொற்பதம் ஞாபகத்தில் வந்து போனது.
நான் போரின் அகோரம் உணர்ந்தது இங்கு தான். ஒரு குறிப்பிட்ட பகுதியில் "நின்ற பனையை" விட "முறிந்த பனைகள்" அதிகமாயிருந்தன. எறிகணைகளின் அகோரப்பரிமாற்றத்தின் விளைவு அது என்று புரிய அதிக நேரமெடுக்கவில்லை.

முகமாலையில் ஒரு இடத்தில், வீதியோரமாக ராணுவத்தினர் எறிகளை கோதுகளை அடுக்கிக் கொண்டிருந்தனர். மலைபோலிருந்தன கந்தகத்தை கக்கி ஓய்ந்த அந்த செப்புக் குடுக்கைகள். (செப்பின்விலை அதிகம் என்பதை அறிவீரா?... அட அட போரினால் கனிவழங்கள் எமது பூமியில்..) போரினால் நாம் பெற்ற நன்மை இது தானோ?

”தம்பீ முறிகண்டியில நிப்பாட்டுவாங்களோ” என்றார், அருகில் இருந்த பெரியவர். அருகிலிருந்தவர் ஒருவர் ”சிலவேளை” என்றார்.
பெரிசு கடுப்பாகிவிட்டார்.
”என்ன சில வேளையோ?” என்றார் குரலை உயர்த்தி.
அவர் அர்ச்சனை போட வேண்டுமாம் முறிகண்டிப் பிள்ளையாருக்கு.. கண் ஒப்பரேசணுக்கு போறாராம் என்றார்.  

முறிகண்டியில் நிப்பாட்டியவுடன் ஓடிப்போய் அர்ச்சனைத் தட்டு வாங்கி, தேங்காய் உடைத்து, பெரிதாய் திருநீறு பூசி வந்தமர்ந்தார் பெரியவர்.

வெளியில் சிவப்பு டீசேட் போட்ட இளைஞர் குழு ஒன்று என் கவனத்தை ஈர்ந்தது. இறங்கிப் போய் பார்த்தேன் அவர்கள் மேலங்கியில் டீ. டீ. ஜி என்றும் டனிஸ் டீமைனிங் (நிலக்கண்ணிவெடிகளை அகற்றுபவர்கள்) குரூப் என்றும் எழுதியிருந்தது.

முறிகண்டி கச்சானில் மெய் மறந்திருந்த ஒரு  தம்பிடம் மெதுவாய் கதைகுடுத்தேன்.முழங்காவிலில் வேலை செய்கிறார்களாம்.. அள்ள அள்ள குறையாமல் வருகிறதாம் நிலக்கண்ணி வெடிகள்.

வெடி விளைந்த புமியல்லவா? அது தான் விளைச்சல் பலமாயிருக்கிறது போல என்று நினைத்துக் கொண்டேன். தன்னுயிரை எந்தேரமும் இழக்கக்கூடய தொழிலைச் செய்யும் இவர்களும் புனிதர்கள் தான்.

வழியோரத்தில் பல இடங்களில் மிதி வெடிக்கான எச்சரிக்கை போடப்பட்டிருந்தது. அதனருகிலும் ராணுவ காவலரண்கள் இருந்தன. பல கிலோமீற்றர் நீளத்துக்கு இந்த மிதிவெடி வயல்கள் நீண்டிருந்தன. விதைப்பு மிகச் சிறப்பாக நடைபெற்றிருக்கிறது என்பது மட்டும் தெளிவாய் புரிந்தது. அறுவடையை நினைத்தால் பயமாயிருந்தது.

தவிர்க்கமுடியாத காரணத்தால் பஸ் ஒரு  உள்ளூர்ப் பாதையால் சென்றுகொண்டிருந்தது

சிங்களவர்களின் பரதேசத்தில் உள்ள "மகா கண்தரவ" என்னும் குளத்தினருகால் போய்க் கொண்டிருந்தோம். வாய்க்கால்களில் நீர் ஓடிக்கொண்டிருக்க சிறுசுகள் நீந்திக் களித்தன.
திடீர் என ஒரு ஆல மரத்தின் கீழ் முருகனின் பிரதர், பிள்ளையார் தனிமையில் உட்கார்ந்திருந்தார். அவரைச் சுற்றியிருந்த இடம் மிக மிக சுத்தமாயிருந்தது. நம்ம பிள்ளையார் இங்கு என்ன செய்கிறார் என்று போசித்தேன். ஓரு வேளை வெளிநாட்டுக் கோயில்களில் இருந்து அகதியாய் வந்து சேர்ந்திருப்பாரோ? இருக்கலாம்.

கண்டி வீதியில் ஓடிக் கொண்டிருந்தது பஸ்

வீதியோர குளத்தில் குளிக்கும் பெண்
மாட்டை இழுத்துப் போகும் கிழவன்
வீதியோரத்தில் மூத்திரம் பெய்யும் சிறுவன்
கடந்து போகும் பாடசாலைச் சிறுமியர்
குந்திருந்து அலட்டும் இளசுகளும் பழசுகளும்
மரக்கறிகள் விற்கும் பெண்கள்
இப்படியாய் கடந்து போய்க் கொண்டிருந்தது பொழுதும் பாதையும்.
பாதையின் நடுவில் ஒரு கோடு போட்டு இரண்டாய் பிரித்திருந்தனர். டரைவர் தம்பீ அந்தக் கோடுகளின் இடது பக்கத்தில் பஸ்ஐ ஓட்டிக் கொண்டிருந்தார்.

ஹபரனை வந்தது. கண்மட்டும் தெரியும் உடையணிந்த இரு பெண்கள் கடந்து போயினர்.
சூரியன் எப். எம் " விடிய விடிய இரவு சூரியன்" என்று ஏதோ விளம்பரம் பண்ணிணார்கள். இவர்களால் ஏனோ மெதுவாய் பேசமுடியாமல் இருக்கிறது. அவசர அவசரமாய் பேசி ஓடுகிறார்கள்.

பஸ் ஒரு மயானத்தை மெதுவாய் தாண்டிக் கொண்டிருக்கும் போது அந்தச் மயானத்தில் இருந்த ஒரு சமாதி என் கவனத்தை ஈர்த்தது. இலங்கையின் வரைபட வடிவில் அமைந்திருந்தது அது. அதன் நடுவில் துப்பாக்கியுடன், ராணுவச்சீருடையில் ஒருவர் சிரித்துக் கொண்டிருக்கும் படம் இருந்தது. இதுவும் பாழாய்ப் போன யுத்தத்தின் எச்சம். ஒரு மகன், சகோதரன், காதலன், தந்தை காற்றில் கரைந்திருக்கிறார் இங்கும்... இது மாதிரி எங்கள் பகுதியிலும் பலர் இருக்கிறார்கள், சமாதியே இல்லாமல்.

"விலங்குகள் கவனம்" என்று ஒரு இடத்தில் எழுதியிருந்தார்கள்.படம் ஏதும் போடப்பட்டிருக்கவில்லை. இதை எழுதியவர் ஒரு குசும்புக்காரராகத் தான் இருக்க வேண்டும்... இது எந்த விலங்குகளைக் குறிக்கிறது?

பஸ் பொலனநறுவை, மன்னம்பிட்டி தாண்டி வெலிக்கந்தையை அண்மித்து புகையிரதப் பாதைக்கு சமாந்தரமாக போய்க்கொண்டிருந்த போது "ஊத்துச்சேனை முத்து மாரியம்மன்" திருவிழா நடந்து கொண்டிருப்பதாக விளம்பரம் அறிவித்துக் கொண்டிருந்தது. மனதில் வந்து போனது பால்யத்தில் திருவிழாக் காலங்களில் காட்டிய கூத்தும், சேட்டைகளும். அப்பப்பா.. ஈரலிப்பான பருவம் அது. அடித்த லூட்டி கொஞ்சமா  நஞ்சமா?

புனானை புகையிரத நிலையத்தை கடந்து கொண்டிருந்தோம். கைகாட்டி தனது கையை மேலே தூக்கி வைத்திருந்தது. கைகாட்டிகளின் மிடுக்கு அலாதியானது.. கவனித்தப்பாருங்கள் அடுத்த முறை.

கண்முன்னே கடந்து போன இராணுவ முகாமின் வாசலில் "சவால்களின் மீதான வெற்றி" என்று ஆங்கிலத்தில் பெரிதாய் எழுதிப் போட்டிருந்தார்கள்.

அடுத்து வந்த இராணுவ முகாமின் முன்பக்கத்தில் ஒரு அழகிய மரக்குற்றி ஒன்றை வைத்து மிகவும் அழகாக அலங்கரித்திருந்தார்கள். இன்று கடந்து வந்த முகாம்களில் இது வித்தியாசமாய் இருந்தது.

ஓட்டமாவடிப் பாலம்...... எனது புனிதப்பூமியின் ஆரம்ப எல்லை... மனம் பஸ்ஸை விட வேகமமாய பாலத்தைக் கடக்கிறது. அட.... இது புதுப்பாலம்.

எனது புனிதப் புமியில் நான்..  எங்கும் கிடைக்காத ஒரு ஆறுதல் குடிவருகிறது மனதுக்குள். இதையா கேடிக்கொண்டிருந்தேன் 25 வருடங்களாக?
அல் இக்பால் வித்தியாலயம் கடந்து போகிறது எனது மத்திய கல்லூரி மனதில் வந்தாடுகிறது.

சிங்கம், ராவணண் படங்களுக்கான போஸ்டர்கள் அழியாத கோலங்கள், நினைத்தாலே இனிக்கும் படப் போஸ்டர்களை ஞாபகப்படுத்துகிறது.

மட்டக்களப்பு நெடுஞ்சாலை புனரமைக்கப்படுகிறது, கல்லுக்குமியல்களும், கிறவலும், மணலும், தென்னையும், பனையும் கடந்து போகின்றன.
காற்றில் உணர்ச்சிகளின் கலவையாய் நான். நெஞ்சு விம்முகிறது, வயிற்றுக்கள் ஏதெதோ செய்தது, அடிக்கடி கண்கள் குளமாகிக் கொண்டிருந்தன.

கிரான் என்ற பெயர்ப்பலகை கண்ணில் பட்டதும் ஒரு செங்கலடித் தேவதையிடம் பெருங்காதல் கொண்ட இந்த ஊர் நண்பன் மனதில் வந்து போனான். (செங்கலடி என்பது ஒரு ஊர்)

சித்தாண்டியும் கடந்து போயிற்று சித்தாண்டி முருகனும், அப்பாவின் நண்பர் ”கந்தப்போடியாரும்” ஞாபகத்தில் வந்தார்கள்.  முன்பொருமுறை இதேயிடத்தை நான் கடந்த போது  கொன்று வீசப்பட்டிருந்த 12 உடலங்களும், பயம் கலந்த அந்த நாட்களை நான் இன்னும் மறக்கப்படவில்லை என்பதை ஞாபகமூட்டின.

வந்தாறுமூலையும் கடக்கிறது..எங்களின் ஆஸ்தான வாசிகசாலை இங்க தான் இருந்தது. முன்னைநாள் வந்தாறுமூலை மகாவித்தியாலயமும் இன்றைய கிழக்குப்பல்கலைக்கழகமும் கடந்து போக 1980 களின் இறுதியில் இந்த இடத்தில் கைது செய்யப்பட்டு காணாமல் போன பால்ய சினேகம் ”பேக்கரி பாஸ்கரன்” ஞாபகத்தில் வந்து போனான். எத்தனையை இழந்திருக்கிறோம் கொதாரிவிழுந்த போரினால்?

அடுத்தது செங்கலடி.. நமது சிற்றரசின் எல்லை ஆரம்பிக்கும் இடம். பஸ்க்கு முன்னே போகிறது எனது கண்களும் மனமும். செங்கலடிச்சந்தி கடக்கிறது. இந்த இடத்தில் இராணுவத்தால் கொலைசெய்யப்பட்ட  மிகவும் நெருங்கிய சிறுவனெருவனின் ஞாபகங்களும், பால்யத்து ஞாபகங்களும்,, ”துரோகி” என்று வீதியோரக் கம்பங்களில் தொங்கியவர்களின் நினைவும் மனம் முழுவதையும் ஒரு வித மகிழ்ச்சி, துக்கம், ஏக்கம் போன்ற உணர்ச்சிகளால் ஆட்கொண்டிருந்தது. பெருக்கெடுத்த கண்கள் கலங்கி பார்வையை மறைக்க, அதை துடைத்து நிமிரும் போது பஸ் ஏறாவூரை நெருங்கியிருந்தது.

ஏறாவூர் எங்கள் ராஜ்யத்தின் தலைநகர். பிள்ளையார் கோயில் புதுப்பொலிவுடன் தெரிய, அதனருகில் தெரிந்தது ஏறாவூர் காளிகோயில் திருவிழா என்னும் விளம்பரம். உடம்பு தான் பஸ்ஸில் இருந்ததே தவிர மனம் எப்போதோ இறங்கி ஓடிவிட்டிருந்தது ஏறாவூரின் புழுதி  படிந்த வீதிகளில்.
‌புன்னைக்குடா சந்தியை கடந்து இஸ்லாமிய சகோதரர்களின் எல்லைக்குள் போனதும் ஒலிபரப்பாளனாய் வர விரும்பி, திறமையிருந்தும் அரசியல் பலமில்லாததால் தோல்வியுற்ற அப்துல் ஹை ஞாபகத்தில் வந்தார். ஒன்றாய் வாழ்திருந்த சமுதாயங்கள் ஏற்படுத்தப்பட்ட ரணங்களை மறந்து வாழத் தொடங்கியிருப்பது போலிருந்தது. எனது பேராசையும் அது தான்

பழைய ஐஸ்கிறீம் கொம்பனி கடந்து போகிறது. சத்துருக்கொண்டான் வருகிறது. பெயரைக் கவனித்தீர்களா? சத்துருக்கொண்டான். இந்த மண்ணில் எங்கோ ஓரு இடத்தில் பெரும் எண்ணிக்கையில் புதைந்து போன என்னுறவுகள் இருக்கிறார்கள், மெளனமாய்.

நெருங்கிய பால்ய நண்பனொருவனும் இருக்கிறான் அவர்களுடன். 
சபிக்கப்பட்ட பூமியிது.

மனது பழைய ஞாபங்களுக்குள் மூழ்கியிருக்க, தன்னாமுனை தேவாலயம், அதைத் தொடந்து வாவியோரமாய் வரும் நீண்ட பாதை, பின்பு பிள்ளையாரடிக் கோயில் என பஸ் கடந்து கொண்டிருக்கிறது. (பிள்ளையாரடியிலும் ஒரு அழகிய வெள்ளைச்சட்டைத் தேவதை இருந்தாள் 1980 களில்)
வலையிறவு சந்தி சந்தி கடந்து உறணிக்கு முன் ”மட்டக்களப்பு மாநகரம் உங்களை வரவேற்கிறது” என்றிந்தது. தலைவணங்கி மரியாதையை ஏற்றுக்கொண்டேன்.

பஸ்டிப்போ, வயோதிபர்மடம், தோவாலயம் கடந்து கோட்டமுனை சந்தியில் நிற்கிறது பஸ்.

பஸ் டவுன் போவாது.. டவுன் போறவங்க இங்க இறங்கணும் என்ற குரல் கேட்டு இறங்கிக்கொண்டேன். புனிதப்பூமியில் பாவியின் கால்கள்.

நட்பூ வந்து மோட்டார்சைக்கிலில் ஏற்றிக் கொண்டான்....கோட்டைமுனைப்பாலத்தைக் கடந்த போது உப்புக்காற்றும் முகம் தேடிவந்து ஆசீர்வதித்துப் போனது. எங்கள் பாடசாலையும் கடந்து போகிறது. நெஞ்சு முழுவதும் பெருமிதம். கண்களில் கண்ணீர்.பேரானந்தத்தில் நான்.

பாவி ரட்சிக்கப்பட்டுக் கொண்டிருந்தான், புனிதப்பூமியில்.
Author: ஹேமா
•6:20 PM
நிர்மலா விரைவாகத் தேங்காயைத் துருவியெடுக்க நினைக்கிறாள்.துருவலை அவளுக்கு ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது.கழன்று கழன்று விழுந்தபடி....!

"இது ஒரு சனியன் திருவலை.எவ்வளவு நாளா நானும் கேக்கிறன் புதுசொண்டு வாங்கித் தாங்கோவெண்டு.கெதியாச் சமைச்சு முடிக்கவேணும்.சுதா வந்திட்டாளெண்டா தெய்ய தெய்ய எண்டு குதிப்பாள்.எப்பத்தான் இந்தத் திருவலைக்கு விடிவுகாலமோ”என்று மனதிற்குள் முணுமுணுத்தபடி “அப்பா இந்தாங்கோ தேத்தண்ணி....கேட்டனீங்களெல்லே"என்று கூப்பிட்டபடி வேலை செய்துகொண்டிருந்தவள் பதில் குரல் வராதபடியால் அடுப்படி கருக்குமட்டை இடுக்கு ஓட்டைக்குள்ளால் கூர்ந்து பார்க்கிறாள்.

மணியத்தார் கிணத்துக் கட்டிலிருந்தபடியே யோசித்துக்கொண்டிருந்தார்
"அப்பா தேத்தண்ணி கேட்டுப்போட்டு என்ன இஞ்ச வந்து யோசிச்சுக்கொண்டிருக்கிறியள்" என்றாள்.ஒண்டுமில்லப் பிள்ளை.அம்மா வந்திட்டாவோ.கொக்காளும் (அக்கா) இண்டைக்குத்தானே வாறன் எண்டவள்.அவள் பின்னேரமாத்தான் வருவாள் (மாலை நேரம்).அவன் ஆனந்த்க்கும் ஏதோ உடம்பு சரில்ல வருத்தமாக்கிடக்கு எண்டவள்.டொக்டரிட்டயும் போய்ட்டு அங்கயிருந்து பஸ் பிடிச்சு வர எப்பிடியும் மாலை சரிஞ்சிடும்.அதுதான் இவன் கண்ணனின்ர ஞாபகமும் வந்திட்டுது.எனக்கென்ன பிள்ளை உங்கட நாலு பேரின்ரயும் யோசனைதானே”என்றார் பெருமூச்சோடு மணியத்தார்.

"சரி இந்தாங்கோ குடியுங்கோ முதல்ல.அம்மா அநேகமா இப்ப வந்திடுவா.
சீட்டுக்காசு குடுத்திட்டு,நாளையான் சமையலுக்கு மிளகாய்த்தூள் இல்ல.இடிக்கவேணும்.அதுக்கும் சரக்குச் சாமான்கள் வாங்கத்தானே போனவ.வெயிலுக்க இராம நிழலாய்ப் பாத்து இருங்கோ.தலைச் சுத்து வந்திடும்.சுதா நெசவால வந்திடுவாள்.நான் கெதியாச் சமைச்சு முடிக்கவேணும்.பசியோட வந்து என்னைத் திண்டு கை கழுவுவாள்."என்று சொல்லிக்கொண்டே அடுப்படி நோக்கி நடந்தாள் நிர்மலா.

அம்மா கமலமும் தட்டிப் படலையைத் தூக்கித்திறந்து திரும்பவும் சாத்துவது தெரிகிறது.அம்மா வந்திட்டா.அண்ணா சுவிஸ்ல இருந்து உண்டியலில காசு அனுப்பியிருக்கிறார்.முதல் வேலையா சுத்தவர வேலியை இறுக்கமா அடைப்பிக்க வேணும்.துருவலையின் ஞாபகமும் வந்துபோகிறது நிர்மலாவுக்கு.

கமலம் நேராக மணியத்தாரைக் கிணற்றுக்கட்டில் கண்டுவிட்டுக் கிணற்றடிகே வர "என்னப்பா காசு தந்தவங்களே கடையில."என்றாள்.

மணியத்தாரும் "ஓமப்பா ரெண்டரைதான் (2 1/2 இலடசம்) தந்தவங்கள்.மிச்சம் நாளைக்கு வரட்டாம்.எனக்கும் முழுக்காசும் கொண்டுவரப் பயமாக்கிடந்துது.அதுதான் நானும் சரியெண்டு விட்டுப்போட்டு வந்திட்டன்."
என்றார் மணியத்தார்.

நிர்மலாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க இருக்கிறது.அதன் ஏற்பாடுகளுக்குத்தான் மகன் கண்ணன் சுவிஸ்ல இருந்து பணம் அனுப்பியிருந்தான்.மணியத்தாரும் கமலமும் ஐயர், மேளம் ,பந்தல் ,சமையல் என்று திருமணத்திற்கான ஏற்பாடுகளைப் பற்றிக் கதைத்துத் திட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

மணியத்தார் பெரிதாகப் பெருமூச்சொன்றை இழுத்து விட்டபடி "பாவம் கண்ணனும் ஒருத்தனாய்ப் பிறந்து எங்களுக்காக எவ்வளவு கஸ்டப்படுறான்.படு சுட்டித்தனமா படிச்சுக்கொண்டிருந்த என்ர பிள்ளையை எங்கட நாட்டு நிலைமையாலயும் வீட்டு நிலையாலயும் எங்களோட சேத்து வச்சிருக்க முடியாமப் போச்சு.என்னையும் ஆண்டவன் வேளைக்கு (நேரவேளைக்கு) நோயாளியா ஆக்கிப்போட்டான்.மூண்டு பெட்டைக் குஞ்சுகளையும் பெத்தும் போட்டன்.பாவம் அவன்தான்".என்று வானத்தைப் பார்த்தபடி மனம் நொந்து சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தார்.

”சரியப்பா கனக்க யோசிக்காதேங்கோ.என்ன செய்யிறது எங்கட தலை விதியோ அதுகளின்ர தலைவிதியோ மூண்டு பெட்டையளுக்க தனியனாப் பிறந்திட்டான்.அவனை இஞ்சயும் வச்சிருக்க பயந்துதானே கடனை உடனப்பட்டு காணியையும் ஈடு வச்சு அனுப்பினனாங்கள். அந்தக் கையோட நீங்களும் ஏனோதானோவெண்டு செய்துகொண்டிருந்த வேலையையும் செய்யேலாம படுக்கையில விழுந்த்திட்டியள்.அவன்ர கை அசையிறபடியால்தான் மூத்தவளையும் ஏதோ எங்களால் முடிஞ்சளவுக்குக் கரை சேர்க்கக்கூடியதா இருந்தது.உங்கட டொக்டர் செலவும் எவ்வளவு போயிருக்கும் பாருங்கோ.அவன் போய் 10-15வருஷமாகுது.
கடன் அடைச்சு காணி மீண்டு அக்காளுக்கும் சீதனமா வீட்டோட காணி,நகை,காசு எண்டு குடுத்துக் கல்யாணம் செய்து குடுத்து இப்ப நிர்மலாவுக்கும் அவன்தானே எல்லாம் செய்யிறான். பாவம்தான் என்ர பிள்ளை.எங்களால ஓடாய்ப்போகுது.

இதிலயும் ஒண்டு விளங்குதே.நாங்கள் குடுத்து வச்சனாங்கள் எண்டு நன்றியோட அந்த மருதடியானை கையெடுத்துக் கும்பிட்டுக் கொள்ளுங்கோ.மற்ற வீட்டுப் பிள்ளைகள்போல வெளிநாடு எண்டு போனவுடன தறுதலையாய்த் திரியாம எங்களை மறந்து போகாம ஒரு வெள்ளைக்காரியைக் கல்யாணம் செய்திட்டன் எண்டு சொல்லாம பிள்ளை எங்கட நிலவரம்தெரிஞ்சு எங்களோட ஒத்துழைச்சு எங்களிலயும் எவ்வளவு பாசம் வச்சிருக்கிறான்.

அவனுக்கும் 38 வயசாகுது.நிர்மலான்ர கல்யாணம் முடிய அடுத்த வருஷத்தில சுதாவுக்கும் இவனுக்குமாச் சேத்து எங்கையெண்டாலும் மாத்துச் சம்பந்தம் அமைஞ்சாக்கூடப் பரவாயில்ல.இன்னும் வயசு போகவிடாமலுக்கு கட்டாயமாச் செய்திடவேணும்”.என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தபடியே இருவரும் அந்த இடத்தால் எழும்பி வர சுதாவும் நெசவால் வர மத்தியானச் சாப்பாட்டுக்கு ஆயத்தமானார்கள்.

நிர்மலாவுக்கும் திருமணம் பக்கத்துக் காளிகோவிலில் சந்தோஷமாக சுற்றம் சூழலோடு நிறைவேறியது.அவளின் கணவர் ஒரு தபால்நிலையத்து அதிகாரியாக இருந்தார்.அவளும் புகுந்த வீட்டோடு ஒன்றிவிட்டாள்.

வருடங்கள் இரண்டு ஆகிவிட்டிருந்தது.சுதாவுக்கு வரன்கள் பார்த்தபடி இருந்தார்கள்.சரியாக இன்னும் அமையவில்லை.இப்படியிருக்க மணியத்தாருக்கும் கமலத்திற்க்கும் மேலதிகமாய் ஒரு ஆசை குடியேறிக்கொண்டிருந்தது.

இரண்டு பெட்டச்சியையும் ஊரோட கட்டிக் கொடுத்தாச்சு.சின்னவளுக்குக் கொஞ்சம் கூடுதலாகச் சீதனம் கொடுத்தாலும் பரவாயில்லை.வெளிநாட்டில மாப்பிள்ளை பார்க்கலாம் என்று.இதைப் பற்றிக் கண்ணனிடமும் கலந்து கதைத்தும்விட்டார்கள்.கண்ணனும் தன்னைமீறிய செயலாக இருந்தாலும் பெற்றவர்களின் ஆசையும் தன் கடமையும் என்று சம்மதித்தபடி சரி பார்ப்போம் என்றுவிட்டான்.கண்ணனுக்குள்ளும் ஆயிரம் கனவுகள்.ஆனால் யாரிடம் மனம்விட்டுத் தன் ஆசைகளை எண்ணங்களைச் சொல்லமுடியும்.தன்னைக் கண்ணாடியில் பார்க்கும்போது மட்டுமே ஒருகணம் யோசித்துச் சிரித்துக்கொள்வான்.பிறகும் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு தன் வேலைகளோடு தன்னைக் கரைத்துக்கொள்வான்.

"இரண்டு பெரிய பாரத்தை இறக்கி வச்சு என் கடமையைச் சரிவரச் செய்திட்டன்.இனி என்ன தங்கச்சி சுதா மட்டும்தானே.பிறகு எனக்கு என்ன.சுதந்திரமாயிடுவன்.அப்பா அம்மாவையும் கடைசி வரைக்கும் பாத்துக்கொள்ளவேணும்.ம்ம்ம்...எல்லாம் நல்லதாவே நடக்கும்.அநேகமா லண்டனில பாத்திருக்கிற மாப்பிள்ளை சரிவரும் எண்டுதான் நினைக்கிறன்.லல்லி அக்காவுக்கு ஒருக்கா போன் பண்ணவேணும்.

ஞாபகமா கலண்டர்ல எழுதிவிடவேணும்.நாளண்டைக்கு டொக்டர்.அடிக்கடி முள்ளந்தண்டு குடைஞ்சு நோகுது.இந்தக் குளிர் நாட்டில ஐஸ்பெட்டிக்குள்ள இருக்கிற செத்த கோழிபோலத்தானே இங்க எங்கட வாழ்க்கை.எங்கட ஊர் வாழ்க்கை சுவாத்தியம் எல்லாம் எங்களுக்கு எவ்வளவு நல்லாயிருக்கும்.நாரி,மூட்டு,முது,கை,கால் எண்டு எல்லாமே வலிக்குது."

என்று தனக்குத் தானே மனதிற்குள் பேசியபடியே 3 1/2 க்கு வேலை முடித்து வீட்டுக்கு வந்தவன் பாபுவும் இண்டைக்கு வரப் பிந்தும்.அடுத்த வேலைக்கு 6 மணிக்குப் போகவேணும் என்றபடி ரேடியோவைப் போட்டுவிட்டு சமைக்க ஆயத்தப்படுத்தினான்.

பாபுவும் கண்ணனுமாக ஒரு அறையில் வசிக்கிறார்கள்.ஒத்துப்போகும் புரிந்துகொண்ட ஒரு நல்ல நண்பன்.என்ன....தண்ணியடிச்சுப்போட்டு கொஞ்சம் அரசியல் சினிமா எண்டு உளறுவான்.கண்ணன் தன் களைப்போடு அந்த அறுவையெல்லாம் ம் கொட்டிக் கேக்கவேணும்.இதொண்டுதான் எரிச்சல் வரும் அவனில.

4-5 மாதங்கள் போயிருக்கும்.சுதாவின் திருமணம் சரி என்கிற பேச்சளவில் நின்றுகொண்டிருந்தது.லண்டன் மாப்பிள்ளை என்றவுடன் சீதனம்தான் கூடுதலாகக் கேட்கிறார்கள்.லல்லி அக்கா எப்பிடியும் பேசிச்சமாளிச்சுச் சரிப்பண்ணிடுவா.சுதாவுக்கும் மாப்பிள்ளையைப் பிடிச்சிட்டுது.எப்பிடியும் இதைச் சரியாக்கிடவேணும்.

பழைய லோன் இன்னும் 5 மாசம் கட்டக் கிடக்கு.புது லோன் எடுத்தா அதைக் கழிச்சுத்தான் தருவாங்கள்.பாப்பம்.......சாமாளிப்பம் என்று நினைத்துக்கொண்டவன்.

அன்று வங்கிக்குப் போய் கடன் எடுப்பது பற்றினதான பத்திரங்களை நிரப்பிக் கொடுத்துவிட்டு அப்படியே வைத்தியரிடமும் போய் வந்தான்.இண்டைக்கு லீவு.பாபுவும் நேரத்துக்கு வந்திடுவான்."சொல்ல மறந்த கதை" என்று நல்ல படம் ஒண்டு வந்திருக்கு.கடையில கொப்பி ஒண்டு எடுத்துக்கொண்டு வந்தனான்.பின்னேர வேலை மட்டும்தான்.வந்து சாப்பிட்டு முடிச்சிட்டுப் படம் பாத்திட்டுத்தான் படுக்கவேணும்.

இண்டைக்கு பாபு சமைக்கிறன் எண்டவன்.எனக்கும் முதுகு சரியா வலிக்குது.நல்லா ஐஸ் கொட்டிக்கிடக்குது.சவம் பிடிச்ச ஊர் இது.எங்கட தலைவிதி.நாசம் கட்டினவங்கள் எங்களை ஊரோட நிம்மதியா இருக்கவிடுறாங்களே என்றும் நடுவில்அலுத்துக்கொண்டவன்.....விண்டர் சூவும் (குளிர்காலச் சப்பாத்து) பழுதாப்போச்சு.இந்த வருசம் இதோடயே சமாளிக்கலாம்.அடுத்த வருஷம் வாங்கிக்கொள்ளலாம்.என்று மனதோடு பேசிக்கொண்டே சோபாவில் சாய்ந்தவன் தான் அப்படியே நித்திரையாகிவிட்டான்.

பாபு வந்து கதவைத் திறக்கவே திடுக்கிட்டு விழித்த கண்ணனிடம் பாபு " என்னடா மச்சான் பின்னேர வேலைக்கு நேரமாச்சு.இன்னும் படுத்திருக்கிற."என்றான்.

"ஓமடா மச்சான் அசந்து போனன்." என்றபடி முகத்தைக் கழுவி வெளிக்கிட்டபடியே தன் தங்கையின் திருமணம் பற்றியும்,அதற்காக வங்கியில் கடன் எடுப்பது பற்றிக் கதைத்திருப்பது பற்றியும்,வைத்தியர் முதுகுவலி பற்றியும்,சொல்லிக்கொண்டே வேலை முடித்து வந்து இருவருமாகப் படம் பார்த்துவிட்டுப் படுக்கலாம் என்றும் சொல்லிவிட்டு வேலைக்குப் போய்விட்டான்.

பாபு கோழி ஒன்றை ஐஸ்பெட்டிக்குள்ளால் எடுத்து ஊறவிட்டுவிட்டு சமையலுக்குண்டான மற்றைய ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தான்.
கதவு திறக்கும் சத்தம்கேட்டுத் திரும்பியவன் போய்க் கொஞ்ச நேரத்திலேயே கண்ணன் திரும்பி வந்ததைக் கண்டு திடுக்கிட்டான்.

"என்னடா மச்சான் என்ன நடந்தது"என்று பாபு கேட்கவும்" "இண்டைக்குச் சரியா ஏலேல்ல மச்சான்.குனிஞ்சு நிமிந்து ஒண்டும் செய்ய ஏலாம இருக்கு.முதுகு குடைஞ்சு நோகுது.நாளைக்கு கிறங் (சுகயீனம்) சொல்லிட்டு டொக்டரிட்ட போனாத்தான் நல்லது" என்றபடி படுக்கைக்குப் போய்விட்டான்.

அதே இரவு கண்ணன் வலியால் துடித்துப்போக அவசர அழைப்பு வைத்திய வாகனத்திற்கு தொலைபேசியில் அழைத்துக் கொண்டு போய்ச் சேர்த்தான் பாபு வைத்தியசாலைக்குக் கண்ணனை.

அடுத்த நாள் விடிந்தது ஆனால் கண்ணனுக்கு இருளாக.வைத்தியர் சொன்னது அதிர்ச்சியாக்கியது கண்ணனை."இனி ஒரு நாளுக்கு 4-5 மணித்தியாலங்களுக்கு மேல் வேலை செய்யமுடியாது என்றும் பாரமான பலமான வேலைகள் எதுவுமே செய்யக்கூடாதென்றும் தொடர்ந்தும் செய்தால் பக்கவாதத்திற்குண்டான அறிகுறிகள் தெரிகிறதென்றும், பிறகு எழும்பி நடமாடவே முடியாத நிலைமை வந்துவிடுமென்றும்" உறுதியாகத் தெரிவித்தார்.

கண்ணன் தன் 43 வயதின் வாழ்நாடகளில் கடந்த காலத்தில் தன் கடமைகளைச் சரிவரத் தான் செய்துவிட்ட பெருமிதத்தோடு ,அதேநேரம் தனதென்ற தன் வாழ்வு தன்னை விட்டுப்போய்விட்ட வேதனையோடு இதை அப்பா அம்மாவுக்குச் சொல்லலாமா வேண்டாமா என்கிற யோசனையோடும் முற்றிலும் பனியால் மூடப்பட்ட சுவிஸ்ன் உயர்ந்த மலைகளைப் பார்த்தபடியே தானும் மலையாய் மலைத்து நிற்கிறான்.
Author: தமிழன்-கறுப்பி...
•9:06 AM
சாவில் தமிழ் படித்து சாகவேண்டும் - என்றன்
சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்


பாரதிதாசன் முதல் பலரும் எடுத்தாண்டிருந்த இந்த அழியாத வரிகளை அறிந்த அளவுக்கு அந்த வரிகளுக்குரிய முகத்தை பலரும் அறிந்திருக்கவில்லை. புதிரும் எளிமையும் நிரம்பிய அந்த முகம் என்னுடைய தெருவில்தான் இருந்தது என்பதை நான் எவ்வளவு தாமதமாக கண்டுகொண்டேன் என்பது இன்னமும் என்னால் ஈடு செய்ய் முடியாத அறியாமைகளில் ஒன்று. நான் ஒரு பொறுப்பற்றவனாக இருந்திருக்கிறேன் என்பதுதான் உண்மை. இந்த முகத்துக்குரிய அந்த கற்றலை சுமந்தலைந்த உயிரை கண்டுகொண்டிருந்தும் அந்த அறிவை பயன்படுத்தவே இல்லை என்பது எனன்னுடைய ஈடு செய்யவொண்ணா இழப்பு.

அலட்சியமாக அணிந்திருக்கிற வேட்டியும் சட்டையும், கலைந்திருக்கிற முடியும் அந்த முகத்தாடே கூட வந்தது போன்ற கண்ணாடியும் அதனுள்ளே படித்துக்களைத்த அறிவு நிரம்பிய கண்களும் என எளிமையின் உருவமாய உலவிக்கொண்டிருந்த அந்த மனிதருக்கு பெயர் க.சச்சிதானந்தன். இவருக்கு பல பட்டங்களும் விருதுகளும் இருந்தாலும் எங்களுடைய வட்டத்தில் சச்சி என்றே பேசிக்கொள்வோம், தெரியாதவர்களிடம் சொல்கையில் பண்டிதர் சச்சி (Prof - Sachi).

எழுதியே கரைந்த எனக்குப்பிடித்த சில எழுத்தாளுமைகளைப்போல சச்சி கற்றுக்கரைந்த ஒரு ஆத்மா. படிக்கப்படிக்க வருகிற ஞானம் என்னவென்பதை சச்சியின் மிக எளிமையான வாழ்வை நேரில் கண்டவர்களுக்கு தெரிந்திருக்கலாம். சில சமயங்களில் குடையும் பல நேரங்களில் குடையில்லாமலும் தும்பளை ரோட்டில் நடந்து போகிற சச்சியை பார்த்தால் இவர்தான் கலாநிதி பட்டம் வாங்கின கற்றவர்களுக்கெல்லாம் கற்பிக்கிற பண்டிதர் க.சச்சிதானந்தன் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.அறிவு நிரம்பி வழிய நடக்கிற உருவம் அது.


சின்ன வயது தமிழ் புத்தகத்தில் பார்த்த பண்டிதர் சச்சியோடு நான் பேசவேண்டும் என நினைத்துக்கொண்டது ஆசிரியர் ரகுவரன் அவர்களின் ஊரும் வாழ்வும் புத்தகவெளியீட்டிற்கு பிறகுதான் அதுவரையும் ஒரு பெரிய பண்டிதரிடம் புதிர்மாதிரி உலவிக்கொண்டிருந்த அவரிடம் எப்படி அணுகுவதென்று தெரியாமல்தான் தடுமாறிக்கொண்டிருந்தேன். அந்த புத்தக வெளியீடு தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தில் நடந்தது. அங்கே வந்திருந்த மற்றவர்கள் எல்லாம் ஏதேதோ பேச தான் பிறந்த வளர்ந்த தும்பளை முன்னாளில் எப்படி இருந்தது என்பதை அந்த ஊரை அதன் வாழ்வை குறித்து பேசிய சச்சி; இயல்பான, அணுகக்கூடிய மனிதராக எனக்குத்தோன்றினார்.எழுத்துக்கும் வாழ்வுக்கும் நெருக்கமுள்ளவர்களாக ஒரு சிலரால் மட்டுமே முடிகிறது.அதில் சச்சியையும் சேர்த்துக் கொண்டேன்.


அதற்கு பிறகு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவரோடு சின்னச்சின்னதாய் பேசியிருக்கிறேன். கடைசி வரைக்கும் அவரோடு ஆறுதலாக இருந்து கேட்டறிவதற்கான சந்தர்ப்பத்தை அந்த நேரத்தில் என்னால் உருவாக்க முடியாதிருந்தது. அது என் வயதின் பலவீனமாய் இருக்கலாம். அவரோடு இருந்து கதைக்கவும் பழகவும் விரும்பிய நேரத்தில் அதனை செய்ய முடியாத தூரத்தில் நான் இருந்தேன். இவ்வளவு ஏன் அவர் மறைந்து போன விசயம் கூட இரண்டு மாதங்கள் தாமதமாகவே எனக்கு வந்து சேர்ந்தது.

அவர் கைப்பட எழுதிய சில பக்கங்கள் ஊரில் இருக்கிற என் புத்தக கட்டுகளுக்கிடையில் இருக்கிறதென நம்புகிறேன். ஈழத்து முற்றத்தில் அவரைக்குறித்து பகிர கிடைத்த சந்தர்பத்தை எனனால் சரியாக பயன்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை. ஏறக்குறைய ஈழத்து முற்றம் தளத்தை நான் மறந்து விட்டிருந்தேன்(குழுமம் மன்னிக்குமாக). கொஞ்சம் தாமதமாகவே குழுமத்தின் அறிவிப்பை வாசித்திருந்தேன். என் கைவசமிருந்த அவரது மறைவு குறித்த நினைவோடையாக வெளிவந்த ஆனந்தத் தேன் என்கிற குறிப்பு புத்தகத்தலிருந்து அவரது வாழ்க்கைக்குறிப்பை இந்த சந்தர்ப்பத்தில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வுறுகிறேன்.

ஈழத்தின் தமிழ் வரலாற்றுக்கு ஒரு பெரும் இழப்பாகிப்போன மனிதர்களை நேசித்த அந்த அறிவு, அதன் கடைசி காலங்களில் மிகுந்த வேதனைக்குள்ளாகியிருந்ததற்கு எமது நாடு பழிசுமந்தே ஆகவேண்டும்.


வாழ்க்கைக் குறிப்பு.

பிறப்பு : 19.10.1921

தந்தை : தும்பளை, கணபதிப்பிள்ளை.

தாய் : மாவிட்டபுரம், தெய்வானைப்பிள்ளை

ஆரம்பக்கல்வி : காங்கேசன் துறை நடேஸ்வராக்கல்லுரி.

தந்தையாரிடம் வானியலும் சொதிடமும் சிவப்பிரகாச தேசிகரிடமும் சுப்பிரமணிய சாஸ்திரிகளிடமும் பாலசுந்தரக்குரக்களிடமம் சமஸ்கிருதக்கல்வியும் பயின்றார்.

இடை நிலைக்கல்வி : பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலயம் மற்றும் ஹாட்லிக்கல்லூரி. ( 1936-37)

உயர் கல்வி : பரமேஸ்வராக் கல்லூரி (1938-1940)

மதுரைப்பண்ணடிதர் பட்டம் - இலங்கை,இந்தியா இரு நாடுகளிலும் முதன்மைச்சித்தி
(1941.09.30)

1946 - 1945: சுவாமி விபுலானந்தருக்கு ஆராய்ச்சித்துணைவர்

1946 : நீர் கொழும்பு St Mary's College இல் கணித ஆசிரியர்.

1947 – 1959: உடுவில் மகளிர் கல்லூரியில் கணித ஆசிரியர், தமிழ் சிறப்புப் பட்டம்

26.08.1949 : திருமணம்

1960 : பரமேஸ்வராக்கல்லூரியில் கணித ஆசிரியர்.

1961 : யாழ் இந்துக்கல்லுரியில் தமிழாசிரியர்

1962- 1965 : யாழ்,மத்திய கல்லூரி கணித ஆசிரியர்

1965 - 1967 அரசினர் பாடநூற்சபை எழுத்தாளர்.

1967 - 1981 : பலாலி ஆசிரியர் கலாசாலை உளவியற் பேராசிரியர்

1978 : M Phil in Psychology (London)

2001 : கலாநிதிப்பட்டம் (யாழ் பல்கலைக்கழகம்)

21.03.2008: மறைவு.

எழுதிய நூல்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகள்.

1. ஆனந்தத்தேன் (கவிதை) 1955
2. தியாக மாமலை வரலாறு (1959)
3. யாழ்ப்பாணக்காவியம் (1998)
4. தமிழர் யாழியல் - ஆராய்ச்சி (1967)
5. மஞ்சு காசினியம் : இயங்கு தமிழியல் (2001)
6. Fundamentals of Tamil Prosody (2002)
7. இலங்கைக்காவியம் : பருவப் பாலியர் படும்பாடு (2002)
8. மஞ்சு மலர்க்கொத்து (சிறுவர் பாட்டு) (2003)
9. எடுத்த மலர்களும் கொடுத்த மாலையும் - கவிதை (2004)
10. S.J.V. Chelvanayaham ( In Print)


கட்டுரைகள் கவிதைகள்
#
தமிழன் (மதுரை) சக்தி ஈழகேசரியில் இருபதுக்கு மேற்பட்ட சிறுகதைகள்இ ஈழகேசரியில் தொடராக வெளிவந்த அன்னபூரணி என்ற முழு நாவல் - (1942) Ceylon Daily News இல் உளவியற் கட்டுரை.
#யாழ் பல்கலைக்கழக வெள்ளி விழாவின்போது சமர்ப்பித்த வானியல் (ஆராய்ச்சி)
#
ஆரிய திராவிட பாஷாபிவிருத்தி சங்கத்தில் படிக்கப்பட்ட தமிழ் ஒலி மூலங்கள். (1989)
#
கலாநிதி கு.சிவப்பிரகாசம் நினைவாக வாசிக்கப்பட்ட உளவியல் அடிப்படையில் உவம இயல். (1990)
#
யாழ் பல்கலைக்கழகத்தில் வாசிக்கப்பட்ட இடைச்சொல் பற்றிய மூன்று எடுகோள்கள் (1991)
முதலிய எண்ணிறைந்தவை

பெற்ற விருதுகள்.

1. சாகித்தியரத்ன - இலங்கையில் இலக்கியத்துக்க வழங்கப்படும் அதியுயர் விருது (199)

2. சம்பந்தன் விருது (2001)

3. வட - கீழ் மாகாண ஆளுநர் விருது (2003)

4. தந்தை செல்வா நினைவு விருது (2004)

5. இலங்கை இலக்கியப்பேரவை விருது (2004)

5. கலாகீர்த்தி தேசிய விருது (2005)

6. இவைதவிர கவிதைக்காக தேசிய மட்டத்திலும் மகாண மட்டத்திலும் பலமுறை பரிசு பெற்றவர்.

_____________________________________________


பண்டிதர் க.சச்சிதானந்தன் குறித்த தகவல்கள் இணையத்தில் வெகு குறைவாகவே இருக்கிறதைப்போல உணர்கிறேன். அதற்காகவே அவருடைய பெயரையே தலைப்பாக வைத்திருக்கிறேன். ஊரில் சொல்லியிருக்கிறேன் மேலும் கிடைக்கிற தகவல்களை முடிந்தவரையில் திருத்தமாக பகிர்வேன்.


நன்றி.

ஆனந்தத்தேன்
மதுரைப்பண்டிதர் க.சச்சிதானந்தன்
B.A( Hons) Lond.M.Phil (lond) Ph.D (Jaffna)
நினைவோடை. (04.05.2008)
Author: மணிமேகலா
•6:49 PM


Mexican CreeperRangoon Creeper

ஈழத்தை விட்டு வந்து இரண்டாவது தசாப்தத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது புலம் பெயர்ந்த பெரும்பாலாருக்கான பாதை.இதற்கிடையே நிறைய மாற்றங்கள் இரண்டு புறத்திலும்.புலம் பெயர்ந்தாலும் சரி, அங்கேயே வசித்தாலும் சரி, சிறு வயது நினைவுகள் மனதில் இருந்து என்றும் அகலாதவை தானே.

என் மனதில் நினைவுகளில் பூத்திருக்கின்ற இரண்டு கொடிப்பூ வகைகள் பற்றிய பதிவு இது.
ஒரு முறை எங்கள் சக பதிவர் சினேகிதி பூக்களைப் பற்றிய பிரபல பதிவொன்றை ஈழத்து முற்றத்தில் இட்டிருந்தார். அதில் விடு பட்டதும் என் மனதில் நிலைத்து நிற்பதுமான இந்த இரண்டு கொடிப் பூக்களை இங்கு அறிமுகப் படுத்துவதில் மகிழ்வடைகிறேன்.

நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கின்ற ஈழத்து முற்றம் பூக்களாலும் நிறையட்டுமே!

முதல் பூ நாம் ’ஸ்டேசன் பத்தை’ என்று செல்லமாக அழைப்பது. அதன் உண்மையான பெயர் அண்மைக் காலம் வரைத் தெரிந்திருக்கவில்லை.முத்து முத்தாக கேட்பார் இல்லாமல் ரயில் நிலையங்களை அண்டிய வேலியோரங்களிலும் ரயில் பாதை ஓரங்களிலும் அழகான றோசா நிறத்தில் பூத்துக் கிடக்கும்.மழைத் தண்ணீரை அருந்தி பொது மண்ணில் பூத்திருக்கும் செழிச்ச கொடி.அதற்கு அப்படி ஒரு சுபாவம்!நறுமணமோ தேனோ அதிலிருந்ததாக நினைவில் இல்லை.ஏழைப்பட்ட பூப் போல! யாரும் அதைக் கிட்ட நின்று ரசித்தும் நான் கண்டதில்லை.

என் சிறு வயதில் முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படித்த பொழுதுகளில் என் பாடசாலை விட்டதும் ரயில் பாதை ஓரமாக நடந்து வரவேண்டி இருக்கும்.சிவகாமி என்றொரு இனிய தாய்மை நிறைந்த ஒரு கன்னிப் பெண் எங்களோடு அப்போது இருந்தார்.நல்ல வெண்ணை நிறம். மாசு மறு எதுவுமற்ற முகம்.அடர்த்தியான கூந்தலை எண்ணை வைத்து படியவாரி பின்னிக் கட்டி இருப்பார்.நெற்றி எப்போதும் திருநீற்றைக் கொண்டிருக்கும்.அரைப் பாவாடை சட்டை அணிந்திருப்பார்.தெய்வீகக் களை பொருந்திய கருணையான முகம் அவருக்கு.அவர் என்னை அழைத்துச் செல்ல வருவார். வரும் போது இப்பாதை வழியாக வருவோம்.வரும் போது மறக்காமல் இப்பூக்களில் சிலவற்றை அவதானமாக பறித்துத் சிற்றெறும்புகள், பிள்ளையார் எறும்புகள் ஏதேனும் இருக்கிறதா என்றெல்லாம் கவனித்து விட்டு எனக்குத் தருவார். நானும் மிக ஆர்வத்தோடு அதைக் கொண்டு வருவேன்.

2004ம் ஆண்டு அங்கு நான் போயிருந்த போது ரயில் நிலையங்களோ ரயில் பாதைகளோ அங்கிருக்கவில்லை.இப்பூக்களும் அவைகளோடு அழிந்திருக்குமோ? அண்மையில் தான் இதன் பெயர் மெக்ஸிக்கன் கொடிப் பூக்கள் (Mexican Creeper)என்ற அதன் உண்மைப் பெயரை கண்டு பிடித்தேன்.

.

மற்றய மலரை நாம் ’குடிகாரன் பூ’ என்று அழைப்போம்.கொடி மலர்.வெள்ளையில் இருந்து றோசா வர்ணம் வரை வந்து சிவப்பு நிறத்தில் அது முடிவடையும். கீழ் நோக்கிக் கொத்துக் கொத்தாகப் பூக்கும்.அதனால் அதற்குக் குடிகாரன் பூ என்று பெயர்.

எங்கள் அம்மம்மா வீட்டுப் போர்டிக்கோவில் அது செழிப்பாக வளர்ந்திருந்தது.தண்ணீர் அதற்கதிகம் தேவைப் பட்டதில்லை. அதற்குத் தண்ணீர் ஊற்றியதாகவும் ஞாபகம் இல்லை. இதற்கும் வாசம் இருந்ததில்லை.தேன் இருந்ததா தேனீக்கள் வந்ததா என்றும் நினைவில் இல்லை.

ஆனால் இவை மிக அழகான பூக்கள்.கேட்பார் இல்லாமலேயே பூத்துக் கிடப்பவை.அநேக காலம் இதன் உண்மையான பெயர் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். ஈழத்தவர்களைக் காணுகின்ற போதெல்லாம் மலர்களைப் பற்றிய பேச்சு வந்தால் இம் மலரின் பெயர் பற்றிக் கேட்க மறக்க மாட்டேன்.எல்லோருக்கும் மலர் மட்டும் ஞாபகத்தில் இருந்தது.உண்மைப் பெயர் நினைவிருக்கவில்லை. தற்சமயமாக கூகுள் இமேஜில் தேடிக் கொண்டு போன போது அதன் படங்கள் அகப்பட்டன.இவை அவற்றில் சில.இவையும் இப்போது ஈழத்தில் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை.அவை ரங்கூன் கொடிப் பூக்கள் (Rankoon creeper) என்று அழைக்கப் படுகின்றன என்பதையும் அண்மைக் காலத்தில் தான் கண்டு பிடித்தேன்.

பூக்கள் எப்போதும் அழகானவைகள் தான்.சில தேன் உள்ளவை; சில நறு மணம் கொண்டவை; சில அழகானவை;ஒற்றையாகவும் கொத்தாகவும் கொள்ளையாகவும் பூக்கும் சில.அபூர்வமாகப் பூப்பனவும் உண்டு.மேலும் சில வரண்ட பூமியிலும் பூப்பவை.தொட்டவுடன் உதிர்ந்து விடும் பவளமல்லிகையில் இருந்து மாதக்கணக்காக வாடாதிருக்கும் அந்தூரியம் வரை அவைகளில் தான் எத்தனை எத்தனை குணநலன்கள்!

எவ்வாறு இருப்பினும் அவை தத்தம் இயல்பினால் மனதுக்கு ரம்மியத்தை உண்டு பண்ணுபவை.

கேட்பாரில்லாமலேயே ஈழத்தில் பூத்துக் கிடந்து காலத்தால் அழிந்து போயிருக்கக் கூடும் இந்தக் கொடிப் பூக்கள்!.


படங்கள்; நன்றி, கூகுள் இமேஜ்)
Author: Subankan
•4:49 PM

சிறுவயதில் ஒருநாள் அம்மாவுடன் இருந்து வானொலி கேட்பதற்காய் வானொலியைத் திருகியபோதுதான் ஈழத்துச்சதன் முதன்முதலாய் எனக்கு அறிமுகமானார். விதம்விதமான குரல்கள் கேட்டுக்கொண்டிருக்க அது என்ன என்ற எனது சந்தேகத்தைத் தீர்த்துவைக்க பெரும்பாடுபட்டார் அம்மா. இந்தியத் தொலைக்காட்சிகள் எதுவுமே அறிமுகமாகியில்லாத காலத்தில் ‘மிமிக்ரி’ என்ற சொல் அவருக்குத் தெரிந்திருக்கவில்லையாயினும், மிமிக்ரி என்றால் என்ன என்பது அன்று எனக்குப் புரிந்துபோனது. அவரது விளக்கத்தில் இருந்த ஈழத்துச்சதன் என்ற பெயரும் அதன் வித்தியாசத்தன்மை காரணமாக மனதில் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டது.

அதன்பிறகு அவரது நிகழ்ச்சிகளைக் கேட்பதற்குக்கூட சந்தர்ப்பங்கள் ஏதோ அதிஷ்டத்தில்தான் அமைந்தாலும் அவரது நிகழ்ச்சியை முதன்முதலில் நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு சில ஆண்டுகள் கழித்துத்தான் கிடைத்தது. பாடசாலையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த அவரது நிகழ்ச்சிக்கு ஐந்து ரூபா டிக்கெட் எடுத்து அடித்துப்பிடித்து ஓடிப்போய் முன் வரிசைகளில் ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டு அவரது உருவம் என ஒன்றை மனதில் கற்பனை செய்துகொண்டு காத்திருந்தபோது அங்கே வந்த குள்ளமான அந்த மனிதரை “’இவர்தான் ஈழத்துச்சதன்” என்று அருகிலிருந்து ஏமாற்றமளித்தான் அவரை ஏற்கனவே அறிமுகமான நண்பன் ஒருவன்.

பறவைகள், விலங்குகள் என்று பலவற்றையும் தனது வாய்மொழியால் மட்டுமல்ல, உடல்மொழியாலும் அன்று கண்முன் கொண்டுவந்திருந்தார் ஈழத்துச்சதன். அங்குமிங்கும் தாவி குரங்குச்சேட்டைகளை நிகழ்ச்சினார். அங்கு குரங்குகள் பேன் பார்த்தன. யானைகள் பிளிறின. காட்டு விலங்குகள் கட்டிப்புரண்டு சண்டையிட்டுக்கொண்டன. எங்கள் ஆண்கள் பாடசாலையில்கூடப் பெண்கள் ஒன்றுகூடிச் சிரித்துக்கொண்டார்கள். சனிக்கிழமைகளில் எள்ளுச்சாதம் வைத்துவிட்டுக் காட்டுக்கத்தல் கத்தினாலும் எட்டிக்கூடப் பார்க்காத காகங்கள் எல்லாம் அவரது ‘கா கா’ என்ற குரலுக்கு நூற்றுக்கணக்கில் மண்டபத்தை முற்றுகையிட்டுக்கொண்டன. இத்தனைக்கும் அவர் கையில் ஒலிவாங்கி என்பதே கிடையாது. அது அவருக்குத் தேவையும் கிடையாது.

அவர் அன்று நிகழ்த்தியவைகளுள் எனக்கு இன்னும் மறக்காமல் இருப்பது மண்ணெண்ணெய் மோட்டார் சைக்கிள். ஒருவகையில் எமது அடையாளமாகவே பார்க்கப்பட்ட ஒன்று. போச்சியால் சிறிது தினரை ஊற்றி வாயால் ஊதிவிட்டு சொக்கை இழுத்து கிக்கரை சிலமுறை உதைந்துப் ‘இஞ்சின் பிடிக்காமல்’ போகவே மீண்டும் போச்சி- தினர்- கிக்கர், இம்முறை படபடவென பெரிய சத்தத்துடன் ஸ்டார்ட் ஆகி ஒருமுறை சுற்றிவர மண்டபம் முழுவதும் கரும் புகை நிரம்பி கைதட்டலில் கரைந்தது.

ஈழத்துச்சதன் எம்முடனேயே வாழ்ந்த ஒரு அற்புதமான கலைஞன். எமக்கு அன்றிருந்த மட்டுப்படுத்தப்பட்ட வளங்களாலும் வானொலி நிகழ்ச்சிகளிலும், மேடைகளிலும் தன்னை மட்டுப்படுத்திக்கொண்டு பெரிதாகக் கவனிக்கப்படாமலேயே கடந்துபோனவர். இன்று தொலைக்காட்சிகளில் அசத்திக்கொண்டும், கலக்கிக்கொண்டும், சிலவேளைகளில் கடுப்பேற்றிக்கொண்டும் இருக்கும் கலைஞர்களைப் பார்க்கும்போது ஈழத்துச்சதனின் ஞாபகமும் வந்துபோகும்.

எவ்வளவு தேடியும் ஈழத்துச்சதனின் புகைப்படம் ஒன்றுகூட இணையத்தில் தட்டுப்படவில்லை. இணையத்தில் ஏறும் எல்லாமே நிரந்தரம் என்றார் சுஜாதா. அந்த நிரந்தரத்தன்மை ஈழத்துச்சதனுக்கு எழுத்தில் மட்டும்தான் வாய்த்திருக்கிறது போலும்.

ஈழத்துச்சதன் – வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்ட (பிர)தேசத்தில் வாழ்த்து, இப்போதும் எம் நினைவுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு அற்புதமான கலைஞன்.

Author: சின்னக்குட்டி
•4:35 PM

அப்பத்தான் அவன் ஏற வேண்டிய பஸ் பஸ் நிலையத்தை விட்டு கிளம்பியது. நகர்ந்து கொண்டிருந்தாலும் பின்னால் ஓடி தொங்கி புட்போர்ட்டில் ஏற முயன்றான். முடியவில்லை இவனுக்கு பேப்பே காட்டி விட்டு தூரத்தில் போய் கொண்டிருந்தது.

அந்த டவுன் பஸ் நிலையத்தில்.. மற்ற இடங்களுக்கு போக வேண்டிய பிரிவுகளில் எல்லாம் கியூ நிரம்பி வழிந்தது. ஆக்களை இறக்கிய சுமைகளினால் ஆறுதல் எடுக்கும் பஸ்களுமாயும். சுமை தாங்க முடியாமால் நகர முடியாமால் நகரும் பஸ்களுமாயும் நிறைந்த கியு வரிசை சனங்களுமாயும் தீடிரென காணாமால் போன மாதிரியும் நிமிடத்துக்கு நிமிடம் அந்த இடம் வெவ்வேறு வடிவம் எடுத்து கொண்டிருந்தது.

கியூ வரிசையில் முதலாவதாக. இவனுக்கு பின்னால் ஓரிருவர்.. இப்பத்தான் வந்திருக்கோணும்

அடுத்த பஸ் எத்தனைக்கு வரும்

யாருக்கு தெரியும்.. பின்னால் உரையாடல் தொடங்கிறது . தொடரும் பஸ் வரும் வரையும் பொழுது போகும்

பொழுது போக மறுத்தது..இவனுக்கு.தூரத்தில் தியேட்டர் ஆள் உயர கட் அவுட்டில் எம்ஜிஆர் கை தூக்கியபடி சிரித்து கொண்டிருந்தார்.அழுது அழுது களைத்து குரல் அடைச்சது போல நிலைய விளம்பர வானொலி அணுங்கியண்டு இருந்தது. எதுவுமே ஒட்டவில்லை.

நேர் எதிரான மற்ற பகுதி கியூவரிசை பகுதியில் குழந்தையை நுள்ளி நுள்ளி அழ வைத்துக்கொண்டு இடுப்பில் வைத்து ஒரு பிச்சைக்காரி வரிசையில் நின்ற ஒவ் வொருவருடன் பிச்சை கேட்டு கொண்டிருந்தாள். அவளுடன் போட்டி போடுவது போல இருந்தது. பின்னால் ஊண்டு கோலுடன் ஒற்றை காலுடனான ஒரு பிச்சை காரனும் அனுதாபத்தை தேடி கொண்டிருந்தான் ..

அந்த பக்கமும் பார்க்க பிடிக்கவில்லை..

இப்பொழுது சிரிப்பு சத்தமும் இரைச்சலும் கூடி இருந்தது.

கடிகாரத்தை பார்த்தான் .அலுவலகம் முடிந்த நேரம் பள்ளிக்கூடம் முடிந்த நேரம். ஆண்களும் பெண்களும் பொடியளும் பெட்டையளுமாய் பஸ் நிலையத்தை நிறைத்து கொண்டிருந்தனர். இவனது கியூவிலும் நிறைய சனம் இப்ப. இவனுக்கு பின்ன நின்ற இருவரும் இப்ப நல்ல அந்நியோன்னியமாகி விட்டார்கள்

இப்ப அவனுக்கு நல்லாக பொழுது போகிறது .

சட்டை கொலரை சரி செய்து கொண்டான் தலை மயிரைகோதிகொண்டு பொக்கட்டிலிருந்து கைக்குட்டையால் முகத்தை வியர்வை இருக்கோ இல்லையோ துடைத்து கொண்டு கடை கண்ணால் தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று நோட்டம் இட்டு கொண்டிருந்தான் .

உண்மையாக கவனிக்கினமோ கவனிக்க இல்லையோ கவனிக்கினம் என்ற பிரமையுடன் முகத்தில் ஒரு புன்னகை ததும்பும் பொம்மை மாதிரி கஸ்டபட்டு உருவெடுத்து கொண்டிருந்தான்

பிச்சை எடுக்கும் பெண்ணும் முடவனும் இவனது கியூ பக்கம் வந்து விட்டார்கள். அதுகளும் ஒவ்வருதராக இரந்து கொண்டிருக்குதுகள். சிலர் கொடுத்தனர் சிலர் வேண்டா வெறுப்பாக கொடுத்தனர் சிலர் அரியண்டம் தாங்கமால் தூர போகட்டும் என்று கொடுத்தனர் ,சினந்து கொண்டனர், எந்த வித. சலனம் இன்றி முகத்தை வைத்து கொண்டிருந்தனர். முகத்தை திருப்பி எங்கையோ பார்ப்பது போல் வைத்து கொண்டிருந்தனர்

இப்படி பல விதமாக. அதுகளுக்கு இது புதுசான விடயம் இல்லை.நாளந்தம் நடக்கும் வழக்கமான விசயம் தானே. ஆனால் ஏதோ விசயத்துக்காக எப்பவாது வரும் நகரத்து நகர பஸ் ஸ்டாண்டு வருபவர்களுக்கு மட்டும் பார்ப்பதுக்கு புதிதாக இருக்கும்

இவனும் அடிக்கடி டவுனுக்கு வருபவனுமல்ல அதற்க்கான அவசியம் இருக்க இல்லை. இவனுக்கும் எல்லாம் புதிதாகத்தான் இருந்து. இந்த நவ நாகரிக மயக்கமும் மயங்குதலும் உட்பட..

பார்க்க பிடிக்காத விடயம் அருகில் வந்து விட்டது
ஜயா பிச்சை போடுங்கோ

இவனிடம் தான் இரந்தாள்

பொக்கற்றை துழாவினான் ஏதாவது சில்லறை அகப்படுதா என்று

அந்த நோட்டு தான் தட்டு பட்டது.. அதுவும் வழிக்கு வழி சொல்லி தாய் சொல்லி விட்டது எதிரொலித்தது. மாத்தமால் கொண்டா ... மாறின காசு .டவுனுக்கு போற படியால் கை காவலாய் தான் உதை தாறன் எண்டது.

மீண்டும் தேடினான் தட்டுபட்டது சில்லறை.ஆருக்கு தெரியுது தெரியுதோ இல்லையோ உதுகளுக்கு பண வீக்கத்தை பற்றி நல்லா தெரியும் திட்டு தான் வேண்டிவரும். இதை போட்டால். பிச்சைகாரர் வேண்டாத பிரயோசன படாதா சில்லறையை ஏன் அரசாங்கம் அச்சடிக்கினம் நினைத்து கொண்டான்

பிச்சை போடாமால் விட்டது இயலாமால் போனதுக்கு பல காரணங்களை தனக்கு தானே கூறி சமதானம் கூறி கொண்டான்

இவன் மனதின் சமதானம்களை அறியாதவளான பிச்சைகாரி ஒருதரை மட்டும் திட்டாதவள் திட்டி விட்டு அடுத்தவரிடம் சென்றாள்.

இவனுக்கு அவமானமாய் இருந்தது எல்லோரும் அவனை பார்ப்பது மாதிரியும். சிரிப்பது மாதிரியும் இருந்தது

இவனது பிரமை


அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சனை அவர்கள் அவர்களின் சிந்தனையில் இருந்தார்கள்

இந்த அவமான பிரமையில் இருந்து இன்னும் மீளவில்லை இவ்வளவு நேரம் பஸ் வருகையை நினைக்காதவன் .காணவில்லை என மீண்டும் கடிகாரத்தை பார்த்தான்.

வழமையான நேரத்து வர வேண்டிய இந்த பஸ் கூட இன்று லேட் என ஒலிபெருக்கியில் அலறியது ஒரு கர கரத்த குரல்

நடுத்தர வயது என்றோ ஆக வயது குறைந்த வயது என்று சொல்ல முடியாது அவளை. அழகாக உடுத்திருந்தாள் அக்கால லேட்டஸ்ட் சாறி ஹை ஹீல்ஸ் சப்பாத்து எல்லாம் போட்டிருந்தாள். அவளை பெரிய அழகியாக சொல்ல விட்டாலும் இன்னொரு முறை திரும்ப பார்க்க கூடியவள் மாதிரி என்று சொல்லலாம்.

குடும்ப பெண் போல இருந்தாள் குடும்ப பெண்ணை போல பாவனை செய்தாள் குடும்ப பெண்ணை போல பாவனை செய்யலமா. உண்மையில் குடும்ப பெண்ணை போல இருப்பது என்பதும் பாவனை தானே.

மலிவான சென்ட் வாசனை அந்த கியூ வரிசை பகுதியில் வீசியதுஅக்காத்தை இண்டைக்கு லேட்டா வாறா என்றான் கியூவில் நின்ற நெட்டையான ஒருவன் பக்கத்திலுள்ளவனிடம். அவள் கியூவிலுள்ளவர்களிடம் சிலரிடம் நாகரிகமாக பேசினாள் சிலரிடம் பேசவில்லை. சிலரை அவளை தாண்டு பொழுது அவர்கள் நமுட்டு சிரிப்பு கொண்டார்கள்.

வழமையாக ஒரே பல்லவியை தான் பாடுவாள் ஒரே பிரச்சனையை தான் சொல்லுவாள்.. சில வேளை வழமையாக வாறவர்களிடம் மறந்து போய் இதே பல்லவியை பாடும் பொழுது ஏச்சும் திட்டும் வேண்டுவாள்... அவளுக்கு உது புதிசல்ல.

வழமையான விடயம் தானே அவளின் தொழில் தந்திரத்தில் நஸ்டபக்கம் மட்டுமே . புதிசா வருபவர்களின் அவளின் ஜம்பம் பலிக்கும் பொழுது இலாபம் என நினைத்து கொள்வாள்

இவனை பார்த்து புன்னகத்தாள்

சோர்ந்து போய் மனதில் இருந்தவனுக்கு உற்சாக பானம் போல இருந்தது

பின்னுக்கு திரும்பி பார்த்தான் தன்னை தானோ நம்பிக்கை இன்றி

இப்பொழுது வாயை திறந்து முத்து பல்லு தெரிய அழகு நகை காட்டினாள்

தன்னைத்தான் உறுதிசெய்து கொண்டு பதிலுக்கு சிரித்தான்

கேள்வி பட்டிருக்கிறான். ஆனால் நகரத்து மயக்கம் இவ்வளவு விரைவில் அனுபவமாகும் என்று நினைக்கவில்லை

அவனருகில் வந்து எக்சியூஸ்மீ என்றாள் . அந்த சொல் மட்டும் நுனி நாக்கில் விளையாடியது தமிழை துண்டாக்கி முறித்தி நெளித்து ஸ்டைலாக கதைத்தாள்

இவனும் சிரிக்க சிரிக்க பேசி கொண்டிருந்தான் இப்பொழுது பஸ் வரக்கூடாது இன்னும் லேட்டாக வேணும் என்று நினைத்து கொண்டான்

அவளும் வழமையாக எல்லாரும் சொல்ல வேண்டிய கதையை சொல்லி தன் ஹான்ட் பாக் இலிருந்து பணத்தை பிக்பொக்கட் அடித்து விட்டார்கள் திரும்பி ஊருக்கு போறதுக்கு டிக்கட்டுக்கு பணம் இல்லாமால் கஸ்ட படுவதாகவும் உதவி செய்ய முடியுமா என உடம்பை சிறிது வளைத்து நெளித்து நாகரிகமாக கேட்டாள்

பொக்கற்றை தூளாவினான் அந்த தாள் காசு தான் தட்டுபட்டது .தாய் சொன்னது ஞாபகம் வந்தாலும் எத்தகைய சமாதானம் வரமாலும் தனக்கு சொல்லாமலும் தூக்கி கொடுத்தான்

இப்பொழுது கியுவிலை நின்ற நெட்டையன் கேலி யாக பார்த்தான். விளங்கவில்லை இவனுக்கு

தூரத்தில் எக்சியூஸ்மீ என்ற குரல் கேட்டது வேறொருவனிடம் இதே கதையை சொல்லி கொண்டிருந்தாள்

தப்ப விட்ட பஸ்ஸையும் லேட்டாய் வந்து கொண்டிருக்கின்ற பஸ்ஸையும் திட்டி தீர்த்து கொண்டிருக்கிறான்
Author: மாயா
•11:41 AM
80களில் பல்வேறு கலைகளும் சிறந்து வளர்ந்திருந்த ஈழத்தமிழ் மண்ணில் பல கலைஞர்கள் எம் மண்ணை வலம் வந்தார்கள். அப்படி மிளிர்ந்த சில கலைஞர்களில் நகைச்சுவைக் கலைஞர்கள் எனும் போது என்றும் மறக்கமுடியாதவர்கள் டிங்கிரி கனகரட்னம், மற்றும் சிவகுரு சிவபாலன் ஆகியோராவார்.

 ஈழத்தின் பலபாகங்களிலும், மேடைநிகழ்ச்சிகள் மூலமும், வானொலி மூலமும், இலங்கையில் தயாரான வாடைக்காற்று திரைப்படம் , அதன்பின்  ஒலி நாடாவினாலும், மக்களைச் சென்றடைந்து சிரிக்க வைத்தார்கள்;. ஆயினும் இக்கலைஞர்களின் கலைவடிவங்கள் காலவோட்டத்தில் இல்லாது போனது. எனினும் ஆங்காங்கே கிடைத்தவற்றைக்கொண்டு ஒரு முழு ஒலித்தொகுப்பாக உங்கள் முன் பகிர்கிறேன்.

 
நன்றிகளுடன்
மாயா

உசாத்துணை
Author: வர்மா
•3:57 AM
பன்றித்தலைச்சி அம்மன், கீரிமலை, மாவிட்டபுரம் போன்ற ஊர்ப் பெயர்கள்
சரித்திரத்துடன் சம்பந்தப்பட்டன. அரசனின் மகளின் பன்றி முகம் போன்று
இருந்ததால் அவள் வழிபட்டு மனித முகமாகியதாகக் கூறப்படுகிறது. கீரிமுகம்
உடைய ருகுல முனிவர் சாபவிமோசனம் அடைந்த இடம் கீரிமலை, குதிரை முகம்
நீங்கிய இடம் மாவிட்டபுரம், பரந்தனில் விளையும் உப்பை வெளிநாட்டுக்கு
கொண்டு செல்ல மரக்கலம் சென்றுவர தொண்டமான் என்னும் மன்னன் அமைத்த
கால்வாய் தொண்டமானாறு.

சில ஊர்ப் பெயர் மரங்களை அடையாளப்படுத்தி வைக்கப்பட்டுள்ள நெல்லியடி,
அரசடி, ஆலடி, வேம்படி, இலுப்பையடி, புளியடி போன்ற ஊர்கள் மரங்களை
அடையாளப்படுத்திவைக்கப்பட்டவை. சில இடங்களில் அந்த மரங்கள் இல்லை. ஆனால்,
பெயர்கள் நிலைத்து விட்டது

வவுனியா, மன்னார், வன்னி ஆகிய மாவட்டங்களில் குளங்களின் பெயரையும்,
காடுகளின் பெயரையும் வைத்து ஊர்ப்பெயர்கள் உள்ளன. பாண்டியன் குளம்,
செட்டிகுளம், கூமாங்குளம், நெடுங்குளம், மாங்குளம், குஞ்சுக்குளம்,
குருமன்காடு போன்று பெயர்கள் உள்ளன.
இதேபோல், மலையகத்தில் பல இடங்களில் அப்பகுதி தோட்டங்களின் பெயர்களே அவ்
ஊர்களின் பெயர்களாக அலங்கரிக்கின்றன. இரட்டைப்பாதை, கல்தெக்க பத்த
(இரண்டு கல்லடிப் பாதை) போன்றனவாகும்.

சங்கிலிமன்னன் ஞாபகார்த்தமாக சங்கிலியன் தோப்பு உள்ளது. யானை கட்டப்பட்ட
இடமாகையால் ஆனைக்கோட்டை என்பார்கள். இலங்கையே ஒரு தீவு, இலங்கையைச்
சுற்றி தீவுகள் உள்ளன. நெடுந்தீவு, மண்டைதீவு, அனலைதீவு, பாலைதீவு,
காரைதீவு காரைதீவை இப்போது காரைநகர் என்கிறார்கள்.

வடமராட்சியில் திக்கம் என்ற கிராமம் உள்ளது. பனாட்டுக்குப் பெயர்பெற்ற
அந்த ஊ ரில் வெள்ளைக்காரர்கள் பனாட்டைக்கடித்த பின் "திக்கம்'
என்றார்களாம்.
மட்டக்களப்பில் ஓட்டமாவடி, தம்பிவிலுவில், துரைவந்திமேடு என்ற ஊர்கள் உள்ளன.

வெள்ளைக்காரர் காலத்தில் சில பெண்கள் தண்ணீர் அள்ளிக்கொண்டு வருகையில்
இருட்டிவிட்டதாம். அப்போது எதிரில் வெள்ளைக்காரர் வந்தபோது ஓட்டமாவாடி
என்றார்களாம். அன்றிலிருந்து அந்த இடம் ஓட்டமாவடி என்றாகியதாம்.
வெள்ளைக்காரத் துரை ஹெலியில் வந்து இறங்கிய இடம் துரைவந்து இறங்கிய மேடு.
காலப்போக்கில் மருவி துரைவந்த மேடு ஆகியதாம்.

இராமாயண காலத்திலே இலக்குவனைப் பார்த்து தம்பி இழு வில் என்று ராமன்
கூறிய இடம் தப்பிலுவில் ஆகிறதாம்.

யாழ்ப்பாணப் பஸ் நிலையத்தில் நின்ற பஸ் ஒன்றின் சில்லில் மிதித்து ஒருவர்
ஏற முற்பட்டு விழுந்தாராம். ஏன் சில்லாலை ஏறினாய் என்று நடத்துடன்
கேட்டபோது நீ தானே சங்கானை, பண்டத்தரிப்பு, சில்லாலை ஏறு என்று சொன்னாய்
என்றாராம். கே.எஸ்.பாலச்சந்திரனின் அண்னை தனி நடிப்பில் முழு இலங்கையையும் சிரித்து
மகிழ்ந்த காட்சி அது.

அதேபோல் யாழ்ப்பாணத்தில் குப்பிளான் எனும் ஊர் உள்ளது. அங்கு புகையில்
செய்கை அதிகம் இடம்பெறும். வெள்ளைக்காரர் ஆட்சிக்காலத்தில் அங்கு
புகையிலை நடுவதற்காக பாத்தியாக நிலத்தை அமைத்த போது அதை கண்ட
வெள்ளைக்காரர் விளக்கம் கேட்க அது தண்ணீர் ஓடாது நிற்கவே அவ்வாறு
செய்வதாக கூறினார். அதற்கு அவர்கள் குட் பிளான் என ஆங்கிலத்தில் கூறிய
வார்த்தை மருவி தற்போது குப்பிளான் ஆகியது.

அதேபோல், பூநாறிமடம் எனும் ஓர் இடத்திற்கு அந்த மடத்தின் அருகில் உள்ள
மரம் ஒன்றில் பூ விலிருந்து வரும் வாசனை துர்நாற்றம் வீசுவதுபோல்
இருக்கும். இதனால் அந்த இடத்திற்கு பூநாறி மடம் என்று பெயர் வந்தது.

காட்டின் பெயருடன் சில ஊர்களின் பெயர்கள் உள்ளன. வவுனியாவில்
குருமன்காடு. தென்னிந்தியாவின் கொச்சியில் இருந்து வந்தவர்கள் கொழும்பில்
கடைபரப்பிய இடம் கொச்சிக்கடை. அங்கிருந்து வந்த மிளகாயை சிங்களத்தில்
கொச்சிக்காய் என்பார்கள்.

கோழிக்கோட்டில் இருந்து வந்த வாழைப்பளத்தை சிங்கள மக்கள் கோழிக்கோடு
என்பார்கள். மைசூரில் இருந்துவந்த பருப்பைமைசூர் பருப்பு என்றார்கள்.

மடு, மோட்டை போன்றவை இருப்பதனால் சேமமடு, இரணைமடு, பாலமோட்டை,
நொச்சிமோட்டை எனவும். தந்தை செல்வாவின் ஞாபகார்த்தமாக
செல்வபுரம் உடுப்பிட்டியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
ராஜலிங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட கிராமம் ராஜகிராமம்.

ஊர்ப்பெயரைப் பிரபலப்படுத்துவதில் எழுத்தாளர்கள் பெரும்பங்கு
வகிக்கின்றனர். சில்லையூர் என்று வேறு சிலரும் பெயருடன் இணைத்து எழுதினாலும் சில்லையூர் என்றதும் செல்வரா ஜனின்
பெயரே மனதில் பதியும்.

அதேபோல் காரை. சுந்தரம்பிள்ளை, அல்வையூர் கவிஞர்.மு.செல்லையா, மாவை
வரோதயன், கல்லாறு சதீஷ், வடகோவை வரதராஜன், காவலூர் ஜெகநாதன், லுணுகலை
ஸ்ரீ, தெளிவத்தை ஜோசப், வதிரி சி.ரவீந்திரன் வாகரைவாளன் , தாளையடி
சுபாரத்தினம் செம்பியன் செல்வன் போன்றவர்கள் ஊர்ப்பெயருடன் வலம்வரும்
எழுத்தாளர்கள்.
Author: வந்தியத்தேவன்
•10:25 PM
பாடசாலை லீவு விட்ட ஒரு சித்திரை வெயில் நாள்.
"டேய் வந்தி வந்தி" யாரோ ஒரு கூட்டாளி எங்கடை வீட்டு படலைக்கு வெளியே நின்று கூப்பிட்டான்.

"லீவு விட்டால் போது உடனே வந்திடுவாங்கள்" எனப் புறுபுறுத்தபடி அம்மா
"தம்பி உவன் பிரபாபோல கிடக்கு, கிரிக்கெட் அது இது எனக் கேட்பான் போய்விடாதை" என்றார் அம்மா.

"சும்மா இரணை லீவுக்கை விளையாடாட்டில் பிறகு ஏனனை லீவு" என்றபடி பேட்டை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தால் பிரபா, வர்மா, வடலி, கிருத்தி என ஒரு குறூப்பே விக்கெட்டுகள் டெனிஸ் போலுகள் என மேட்சுக்கு ரெடியாக இருந்தார்கள்.

"யாரோடை மச்சான் இண்டைக்கு மட்ச்? " வந்தி

"வேறை யாரோடை வழக்கம்போல பக்கத்து ஊர்க்காரன்களுடன் தான் நேற்று எங்கடை கிரவுண்டிலை தோற்றபடியால் இண்டைக்கு அவங்கடை கிரவுண்டுக்கு வரட்டாம் " வடலி

"உவங்களுக்கு வேறை வேலை இல்லை எப்படியும் வெல்லும் வரை மேட்ச்சுக்கு கேட்பான்கள்" கிருத்தி

"பொறடா இந்த முறை உவங்களுக்கு நல்ல அடி கொடுத்தால் அடங்கிவிடுவான்கள் பிறகு கொஞ்ச நாளைக்கு வரமாட்டார்கள்" வர்மா

இப்படித்தான் எங்கடை கிரிக்கெட் பொழுது விடியும். எங்கடை ஊர்களிலை எந்த விளையாட்டுக்கும் பருவகாலம் என்பதே கிடைக்காது. கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் கிரிக்கெட், கால்பந்து எல்லாம் விளையாடியிருக்கின்றோம்.

பள்ளிக்கூடம் லீவு விட்டால் போதும் கிரிக்கெட் மட்டையுடன் கிரவுண்டில் நிற்பதுதான் எங்கள் தலையாய வேலையே. கொஞ்சம் வயசு போனதுகள் எம்மைப் பார்த்தால் உந்தகிளைமாரிகளுக்கு விடிஞ்சால் பொழுதுபட்டால் உதுதான் வேலை வெயில் குடிக்கிறதுக்கென்றே வந்து நிற்கின்றார்கள் என்பார்கள். குறிப்பாக கிரவுண்டைச் சுத்தி இருக்கின்ற வீட்டுக்காரர்களுக்கு நாங்கள் கொடுக்கின்ற கரைச்சல் பல, தண்ணி குடிக்க போறது, பந்து அவர்கள் முற்றத்தில் போனால் எடுக்கபோறது. சிலர் பேசாமல் இருப்பார்கள் சிலர் கொஞ்சம் புறுபுறுப்பார்கள்.

இலங்கையைப் பொறுத்தவரை ஊருக்கு ஊர் விளையாடும் விளையாட்டுகள் வேறுபடும். சில ஊர்கள் கால்பந்துக்கு பெயர் போனவை சில ஊர்கள் கிரிக்கெட்டுக்கு பெயர் போனவை. உலகக்கோப்பைப் போட்டிகள் நடப்பதால் எங்கடை ஊரிலை நாங்கள் ஆடிய கிரிக்கெட் பற்றிச் சில சுவாரசியங்கள்.

எங்கடை ஊரிலை பக்கத்து ஊர்க்காரர்களுடன் விளையாடுவது எமக்குள் நாமே கன்னை புறிச்சு விளையாடுவது என பலவகையாக கிரிக்கெட் விளையாடுவோம். பக்கத்து ஊர் கழகங்களுடன் விளையாடும் போது போட்டியில் சூடு பறக்கும் சிலவேளைகளில் விக்கட், துடுப்பால் அடிபாடு கூட நடக்கும். ஆஷாஸ் தொடர், காவஸ்கர் போர்டர் தொடர் எல்லாம் எங்களுக்குத் தெரியமுன்னரே (அதாவது உலக அறிவை வளர்க்கமுன்னரே)பக்கத்து ஊர்க்காரர்களுடன் நாங்கள் தொடர்போட்டிகள் விளையாடி இருக்கின்றோம்.

முதலில் எத்தனை போட்டிகள் எங்கே விளையாடுவது என்பது தீர்மானிக்கப்படும். அவர்களின் கிரவுண்டில் 3 போட்டி என்றால் எங்கடை கிரவுண்டிலை 3 போட்டி என எமக்குள் எழுதப்படாத ஒப்பந்தம் போடப்படும். ஏற்கனவே இரண்டு கிரவுண்டிலையும் விளையாடி ஏதும் பிரச்சனைகள் நடந்தால் இரண்டு டீமுக்கும் பொதுவான கிரவுண்டில் போட்டி நடத்துவது என தீர்மானம் போடப்படும்.

அடுத்த பிரச்சனை அம்பயர் அடிக்கடி எல்பி கொடுக்காத வெறுமனே போலர் வீசுகின்ற போலை எண்ணவும் அவுட் என்றால் கையைத்தூக்கவும் பவுண்டரிக்கு கையை விசுக்கவும் தெரிந்தவராக இரண்டு தலையாட்டிப் பொம்மைகள் அம்பயராக இருந்தால் போதும் ஆனால் சிலவேளை எங்கடை ஆட்களே நாங்கள் பேட் பண்ணும் போது அம்பயராகவும் அவங்கடை ஆட்கள் அவங்கள் பேட் செய்யும் போது அம்பயராகவும் தலையாட்டுவார்கள் ச்சீ கடமையாற்றுவார்கள். எப்பவாவது ஒரு நாளைக்கு இரண்டு டீமுக்கும் பொதுவான அம்பயர் கடமை ஆற்றுவார். பெரும்பாலும் வன் டவுனாக வருபவன் அம்பயராக கடமையாற்றுவான் தான் அடிக்கவேண்டும் என்ற ஆர்வக்கோளாற்றில் இரண்டு மூன்று முறை எல்பி கொடுக்காமல் நான்காவது முறை கொடுத்துவிட்டு அவுட்டானவனிடம் உனக்கு 3 தரம் நான் கொடுக்கவில்லை திரும்ப திரும்ப கொடுக்காமல் விட்டால் அது பிழை என அரிச்சந்திரனின் பக்கத்துவீட்டுக்காரன் போல லெக்சரடிப்பான். அவுட்டானவன் அம்பயராகி அவனைப் பழிக்கு பழிவாங்கிய கதையும் நடக்கும்.

இதெல்லாம் பேசி முடிச்ச பின்னர் எத்தனை ஓவர், யார் பந்து கொண்டுவருவது, யார் பட் கொண்டுவருவது எல்லாம் நிர்ணயித்து போட்டி நடக்கும் நாள், நேரம் எல்லாம் முடிவு செய்யப்படும்.

போட்டி தொடங்கும் போது ஸ்கோர் போடும் அணியினருக்கு பக்கத்தில் மற்ற அணியின் பீல்டிங் செய்யாத ஒருவர் அல்லது ஒரு தவ்வலை பக்க‌த்தில் இருத்திவிடவேண்டியதுதான், அவனின் கடமை கள்ளரன்ஸ் போடாமல் கவனமாக ஸ்கோர் பதிவாகின்றதா என்பதை அவதானிப்பது. இதிலை சிக்கல் என்னவென்றால் பெரும்பாலும் சின்னப்பொடியளை இதற்கு நியமிப்பதால் அவனுக்கு மாங்காயோ நெல்லிக்காயோ லஞ்சமாக கொடுத்து எப்படியும் ஒரு இருபது இருபத்தைஞ்சு ரன்ஸ் கள்ள ரன்ஸாக இருக்கும். ஒரு சில ஸ்கோர்போடுபவர் மட்டும் நேர்மை நீதி நியாயமாக இருப்பார்கள். தோற்கின்ற நிலை வந்தால் கள்ள ரன்ஸ் உறுதியாக போடப்படும்.


ட்வெண்டி ட்வெண்டி வரமுன்னரே அதனை விளையாடிய பெருமை எமக்கு உண்டு, பெரும்பாலும் அணிக்கு 20 ஓவர்கள் கொண்ட போட்டியே நாங்கள் விளையாடுவது. நல்லா விசுக்க கூடியவர்கள் ஓப்பனராக இறங்குவார்கள். இதிலை ஒரு சிக்கல் ஓப்பனராக இறங்குகின்றவன் தனக்காக பீல்டிங் நேரத்தில் தனக்காக இன்னொருவனை அலையவிட்டுவிட்டுப் போய்விடுவான். நானும் கிரிக்கெட் விளையாடினான் எனச் சொல்லும் சின்னப்பொடியள் அந்தக் கடமையை சிவனே என செய்வார்கள்.

மற்றும்படி ரூல்ஸ் எல்லாம் வழக்கமான கிரிக்கெட் தான். என்ன ஒரு பக்கம் விக்கெட் இருக்கும் பெயில்ஸ் இருக்காது மற்றப் பக்கம் ஓரு கல்லு. ரன் அவுட்டாக்குவதற்க்கு அந்தக் கல்லில் பந்தைக் குத்தினால் சரி, சிலவேளை போலர் காலை கல்லில் ஊண்டிக்கொண்டு பந்தைப் பிடித்தால் அவுட் தான்.

இன்னொரு முக்கியமான பிரச்சனை இருக்கு போட்டி முடிஞ்ச பின்னர் தோத்த அணியினரின் கையெழுத்தை வென்ற அணி தங்கடை ஸ்கோர் போட்ட கொப்பியில் வாங்கவேண்டும், பெரும்பாலும் தலைவர் என எவரும் இல்லாதபடியால் யாருமொரு அப்பாவியின் கையெழுத்தை வாங்கிவிடுவார்கள், உப்பிடித்தான் ஒருக்கால் என்னெட்டை கையெழுத்தை வாங்க எங்கடை டீமில் இருக்கும் ஒரு அண்ணை "டேய் உவங்கள் அலாப்பி வென்றுவிட்டார்கள் சைன் வைக்காதை" என்றான் ஆனாலும் அவங்கள் என்னை வளைஞ்சுப் பிடித்துவிட்டார்கள் நானும் என்ன செய்வது என விளங்காமல் கையெழுத்தை வைத்துவிட்டு வந்துவிட்டேன் எங்கடை குறுப்போ எனக்கு ஒரே ஏச்சுத்தான், நான் சிரித்துக்கொண்டு "நான் என்ன பேயனா என்டை சைனை வைக்க நான் சும்மா ஒரு பெயரைக் கிறிக்கிவிட்டு வந்திடேன்" என்றேன், இப்படியான மோசடிகளில் இருந்து தப்ப சைனுடன் கீழே பெயரை எழுதவேண்டும் என்ற கட்டாயம் சில இடங்களில் இருந்தது.

எதிரணியினர் தொடரில் தோற்றால் அடுத்த தொடருக்கு பரப்பளவு குறைந்த வெட்டைகளை தேர்ந்தெடுப்பார்கள். அடுத்த மேட்சைப் பற்றிப் பேசும் போது இந்த முறை தங்கத்தான் வெட்டையில் தான் விளையாடவேண்டும் என்பார்கள். தங்கத்தான் வெட்டை என்பது ஒரு சின்ன வெளியான காணி சுத்தவர பனை மரம் எல்லாம் வளர்ந்து நிக்கும். பந்து பனையில் பட்டு பிடிச்சால் அவுட் போன்ற ஐசிசிக்கு தெரியாத புது ரூல்ஸ் எல்லாம் அங்கே உருவாகும். சின்ன இடம் என்பதால் சிக்சர் சிக்சராக அடிக்கலாம். இதேபோல் சிலவேளைகளில் தோட்டத் தறைகளில் எல்லாம் அங்கே எந்தப் பயிரும் இல்லையென்றால் போட்டி நடக்கும். செம்மண் தோட்டத்தில் விளையாடினால் உடுப்பெல்லாம் ஊத்தையாகிவிடும். வீட்டிலை அம்மாட்டை ஏச்சு தான் வாங்கவேண்டும் என சிலர் தோட்டத்தில் விளையாட வர மறுத்துவிடுவார்கள்.

இதை விட எங்கடை ஊருக்குள்ளையே இரண்டாக அணி பிரிச்சு விக் மேட்ச் நடத்துவது வழக்கம். இது ஒரு சனிக்கிழமையில் தான் பெரும்பாலும் நடைபெறும், காரணம் ஞாயிற்றுக்கிழமையில் பலர் சைவ உணவு என்பதால் சனிக்கிழமை வைத்தால் தான் இறைச்சி வாங்கிக் காச்சி பாணுடன் சாப்பிடலாம்.

போட்டிக்குச் சில நாட்களுக்கு முன்னரே விளையாடுகின்ற பொடியளிடம் காசு வாங்கி ஆயத்தம் எல்லாம் நடக்கும். வாங்குகின்ற காசில் தான் இறைச்சி, பாண் எல்லாம் வாங்கவேண்டும். கிரிக்கெட் விளையாடுவதை விட இறைச்சியும் பாணும் சாப்பிடுவதுதான் முக்கியம். வீரர்கள் வெள்ளை ஜீன்ஸ் வெள்ளை ரீசேர்ட் எல்லாம் போட்டு ரியலான டெஸ்ட் மேட்ச் போலவே வெளிக்கிட்டு வருவார்கள். ஸ்பீக்கர் எல்லாம் கட்டி நேர்முக வர்ணனைகூட நடக்கும்.

"முழுவேகத்துடன் வீசப்பட்ட அந்தப் பந்தை சுபாங்கன் பைன் லெக்கில் அடித்து நான்கு ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். "

"மாயாவின் துடுப்பில் பட்ட பந்து நேராக விக்கட் காப்பாளரிடம் செல்கின்றது, மாயா ஆட்டம் இழக்கின்றார்"

இப்படி அழகுதமிழில் வியூகம் அமைத்த இடங்கள் மாத்திரம் ஆங்கிலத்துடன் வர்ணணை நடக்கும்.

இந்த போட்டியைப் பார்க்க எப்படியும் பார்வையாளர்கள் வருவார்கள். குறிப்பாக பெண்கள் வந்தால் சிலருக்கு கொண்டாட்டம் அடி அடி என அடிப்பார்கள். அதிலும் அவரின் மனதுக்குப் பிடித்தவர் அந்த கூட்டத்தில் இருந்தால் சிக்சர் எல்லாம் பறக்கும் சிலவேளை சிக்சரடிக்கப் போய் அவுட்டான சோகமும் நடந்திருக்கின்றது.

ரியூசனுக்கு ரியூசன் கூட விளையாடி இருக்கின்றோம். எங்கடை ரியூசன் வென்றால் அண்டைக்கு ஒரே ஆர்ப்பாட்டம் தான் எல்லாம் கூடப் படிக்கின்ற பெட்டையளுக்கு கலர்ஸ் காட்டத்தான். தோத்துப்போய் வந்தால் அவை எங்களை நக்கலடிப்பார்கள். யாரோ ஒரு உளவாளி என்ன ஸ்கோர் யார் டக்கவுட்டானான் யார் கேட்ச் விட்டான் என சகலதையும் சொல்லிவிடுவான். எல்லாத்தையும் சொல்லி சொல்லியே நக்கலடிப்பார்கள், ஆனாலும் எமக்கு வெட்கம், மானம் ரோஷம் எதுவும் இல்லாதபடியால் நாமும் பெரிதாக கண்டுகொள்வதில்லை.

இப்படித்தான் எங்கடை கிரிக்கெட் வாழ்க்கை ஒரு காலத்தில் இருந்தது.மீண்டும் ஊருக்குப் போய் கிரிக்கெட் விளையாட ஆசை நடக்குமா? ம்ம்ம் அது ஒரு கனாக் காலம்.சொல் விளக்கம்
பெரும்பாலன சொற்கள் ஏற்கனவே ஈழத்துமுற்றப் பதிவுகளில் இருந்தாலும் புதிய வாசகர்களுக்காக இந்த விளக்கம்.

கூட்டாளி - நண்பன்
படலை - Gate பெரும்பாலும் வேலி உள்ள வீடுகளுக்கு படலை தான் இருக்கும் இதுவும் பனை ஓலை அல்லது கிடுகால் அமைந்திருக்கும், சில இடங்களில் தகரத்திலும் இருக்கும்.
புறுபுறுத்தல் சத்தம் வெளியே வராமல் வாய்க்குள்ளேயே முணுமுணுத்தல்
கிளைமாரி வேலைவெட்டி இல்லாமல் ஊர் சுத்தும் இளைஞர்கள்
கன்னை - குழு
புறி - பிரிப்பது
எல்பி - LBW எல்பிடவுள்யூவைத்தான் சுருக்கமாக எல்பி
தவ்வல் - சின்னப் பையன்
கள்ள ரன்ஸ் - களவாக போடப்படும் ஓட்டம்
விசுக்குதல் - அதிரடியாக ஆடுதல்
அலையவிடுதல், அலைதல் - பீல்டிங் செய்தல்
அலாப்பி - ஏமாத்தி விளையாடுதல்
ஏச்சு - திட்டுதல்
வெட்டை - சிறிய மைதானம்
தோட்டத் தறை - தோட்டம் செய்யும் நிலம்
ஊத்தை - அழுக்கு
விக் மேட்ச் - பெரிய அளவில் ஆடும் கிரிக்கெட்
பாண் - Bread இதைப் பற்றிய பதிவே ஈழத்துமுற்றத்தில் இருக்கின்றது
கலர்ஸ் காட்டுதல் - பந்தா பண்ணுதல்

படங்கள் இலங்கை வலைப் பதிவர்கள் கிரிக்கெட் போட்டியில் இருந்து எடுக்கப்பட்டவை
Author: ந.குணபாலன்
•12:25 PM

கொண்டல்மரமே! 

கொண்டல்மரமே! கொண்டல்மரமே! சுகந்தானே? 
நாங்கள் கும்பிட்டுக் 
கொண்டாடுந்   தெய்வமே!
கொண்டல்மரத்தாச்சீ !  நீயும் சுகந்தானே?
மீண்டும் வந்துன்னை நேரில்
கண் நிறையக் கண்டு , மனம் ;
வேண்டிக் கும்பிட எனக்கும் வேளை 
எண்டைக்கு வருமோ?
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி !

உடைஞ்ச ஊரும் ,
இடிஞ்ச வீடுகளும், 
புறிஞ்ச உறவுகளுமாக 
குடியழிஞ்ச நாடுமாச்சே!  
தேடித் திரிஞ்சு அலைஞ்சாலும்,
கூடிச்சீவிச்ச சாதிசனத்திலை பாதிசனம்;  
ஓடிப்போன இடம்   ஆர் கண்டது?
கூடி வாழ எங்களை எல்லாம் ஊருக்குக்   
கூட்டி வருவியே?
கொண்டல்மரத்தாச்சி!
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி !ஆரார் எங்கினை இருக்கினம்?
பூவும், பிஞ்சும், காயும் கனியும்;
கொப்பும், கிளையுமாய் ;
வேரோடும்,வேரடி மண்ணோடும்;
பாறிப் பிரண்டு போன 
பூமரம் எது?, மாமரம் எது?
ஆரார் மோசம் போவிட்டினம்?
அள்ளி எடுக்கவும்,
கொள்ளி வைக்கவும்,
ஆளில்லாமல் அனாதையாய்
ஆரார் போக்கறப் போச்சினமோ?
அறுந்துபோன காலம் போட்டு உலைக்க,
ஆரார் ஆய்க்கினை படுகினமோ ?
ஏதிலியாய் எல்லாமே கைபறிஞ்சு
ஆரார் ஏமாந்து சாகினமோ?
அதிட்டம் எண்டு நினைச்சு
அடுத்தவன் நாடு போய்
அல்லல் படுகினமோ? இல்லை
நல்லாயிருக்கினமோ? 
பழைய நடப்பெல்லாம் 
மறந்து நடப்படிக்கினமோ?
மறக்கேலாமல் மறுகிச்சாகினமோ?
இல்லை போறபோற வழிவழிய
கடலுக்கும், கண்டந்தாண்டி ,
பனி மலைக்கும்
பனி மழைக்கும்
பசளையாய்ப் போச்சினமோ?
பரமேசுவரி உனக்கென்ன?
பாத்துக்கொண்டு ஒண்டுமே
பறையாமல் இருக்கிறாய்!
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி!


இம்மளவு ஆய்க்கினை, அவத்தைக்கையும்
அம்மாளாச்சி வாசலுக்கு ஒரு
எட்டு எட்டி வந்து கற்பூரக்
கட்டி ஒண்டு கொளுத்தி மனசாறிக்
கும்பிடேலாமல் கிடக்கே எண்டு 
நாங்கள் தான் ஏங்கி நிண்டம்.
கோயில் மணி உடைஞ்சு போச்சே!
தேரும்,  சூரனும் நொருங்கிப் போச்சே! எண்டு
பிசத்தினதும், பினாத்தினதும் நாங்கள்தான்.
கிட்டக் கிழலைக்கும்,
அண்டாமல், அடுக்காமல்,
எட்ட எங்களை நிக்க வைச்சாய். உனக்கும்
வீட்டுக்காவல் வைச்சாய்!


செய்வினை வைச்சது ஆரெண்டு 
சாமியாடுகிற கோயிலுக்குச்
சாத்திரம் கேட்டுப் போனால்;
சாமி வந்து உருவாடி,
"எல்லாமே என்ரை குஞ்சுதான்"
எண்டு கூத்தாடும்.
அப்பிடித்தான் ஆச்சி நீயும் 
"கோழியும் எங்கடை, 
புழுங்கலும் எங்கடை"
எண்டு இருக்கிறியே?
அழுந்தி எங்கடை சனம் வதைபட
ஆய்க்கினை வைச்சதெல்லாம், 
உன்ரை சதியோ? விதியோ? 
முன்னை நாங்கள் செய்த கறும வினையோ?
எங்கடை சனம் முண்டி விழுங்கின 
சங்கையீனமும், வேதினையும், வருத்தமும்,
கொஞ்சமோ? நஞ்சமோ?
கொண்டல்மரத்தாச்சீ!


ஆதரிச்சுக் கும்பிட்ட தெய்வம் எண்டு
ஆயக்கினைப்பட்டு அந்தரிச்ச நேரத்திலைகூட
ஆருமே ஆச்சி உன்னைக் கூப்பிடேல்லையே?
செருக்குப் பிடிச்ச கூட்டமெண்டு எங்களை
சீர் குலைச்சுப் பாக்கிறியே?
போன பிறவியிலை 
கறுமவினை செய்த கூட்டமெண்டு எங்களை
கந்தறுந்து போக விட்டிட்டியே?
குட்டைபிடிச்சு கறுமப்படும் தெரு
நாய் படாப் பாடுபட
நமக்கு விதிச்சு வைச்சாய்!
நரகத்துமுள்ளு விதைச்சு வைச்சாய்! 


ஆரின்ரை கண்பட்டுது?
ஆர் வைச்ச வினையிது? மனம்
பரிதவிக்க, சதிரம் பதைபதைக்க 
உறவையும், உறுப்பையும், உடமையையும்;
பறி குடுத்த நேரத்திலை,
பலி குடுத்த நேரத்திலை;
ஆர் வந்தவை ஆதரிக்க?
சொந்தமெண்டு நினைச்ச தெய்வமெல்லாம்
சோதினைகள் செய்ததெல்லே?
கையெடுத்த சாமியெல்லாம்,
கல்லாகி நிண்டதெல்லே?
கண்டியே! நமக்கெண்டு வந்த
வெள்ளிடியை? வாழ்மானத்தை?
கண்மூடி நிண்டியே நீயுந்தான்!
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி!


ஒண்டு மட்டும் பறைவம் கேள்!
"மலையான மலை போச்சாம்
மண்ணாங்கட்டி போனாலென்ன?" 
எண்டு மட்டும் கிடப்பமே?
ஏலாத காரியம் அதெல்லே? எங்களுக்காய்
மாண்டு போன மாணிக்கங்கள் போக;
மசானவெளி தாண்டித் தப்பி 
மீண்டு மிதந்து வந்த எங்கடை
சனமும், இளஞ் சந்ததியும்;
வேண்டி விரும்பி உன்வாசல் வந்து ,
கொண்டாடும் காலம் 
ஒண்டு வரும்! ஏழு கடலும் 
தாண்டி இருக்கிற எங்கடை சனம் 
எல்லாம் வரும்! எதிர்காலமும்
நல்லாய் வரும்!
கொண்டல்மரமே! கொண்டல்மரமே!
நிண்டு நிலைச்சு நீயும் வாழி!
கொண்டல்மரத்திலை குடிகொண்டவளே!
என்னதான் உன்னை நாங்கள்
ஏலாத் தன்மையாலை ஒருநேரம் 
இல்லை நீ சாமி எண்டு ஏசிப் பேசினாலும் 
எண்டைக்கும் எங்கடை மனங்களிலை,
கொண்டகோலம் மாறாமல்
குடிகொண்டவளே! கொண்டல்மரத்தாச்சீ!
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி!
நிண்டு நிலைச்சு நீடூழி
நீயும் வாழி! 

    சொல்விளக்கம்


எங்கினை-எங்கே
எண்டைக்கு -என்றைக்கு

புறிஞ்ச-பிரிந்த
வருவியே?-வருவாயோ?
பாறி- விழுந்து
பிரண்டு-புரண்டுமோசம் போவிட்டினம்?-மோட்சம் போய் விட்டனர்?(மரியாதைச்சொல்) -இறந்து விட்டனர்?
போக்கறப் போச்சினம்?-போக்கு அறப் போனார்கள்?(ஆற்றாமையுடன் சொல்லுதல்)  -திரும்பி வராமலே போனார்கள்?
படுகினமோ?-படுகிறார்களோ?
கை பறிஞ்சு-கை பறிந்து, இழந்து
சாகினம்?- சாகின்றார்கள்?
அறுந்து போன காலம்-கேடுகாலம்,கெட்டகாலம்
போட்டு உலைக்க-பிடித்து ஆட்ட
பழைய நடப்பு -பழைய நினைவு
நடப்படிக்கினமோ? - மற்றவர்களை விட தான் உயர்ந்தவர் என்று நினைக்கிறார்களோ? 
மறுகிச் சாகினமோ?-மனம் குழம்பிச் சாகின்றார்களோ?
போறபோற வழிவழிய-போகின்ற வழிகளிலே
பசளையாய்-பசளையாகி,
மண்ணுக்கு உரமாகி
ஒண்டுமே பறையாமல்-ஒன்றுமே சொல்லாமல்
இம்மளவு-இந்தளவு
ஆய்க்கினை,அவத்தை-துன்ப துயரம்
அம்மாளாச்சி-அம்மாள்+ஆச்சி
ஒரு எட்டு எட்டி வந்து-ஒரு தரம்  நடந்து வந்து
பிசத்தினதும்-பிதற்றியதும்பினாத்தினதும்-அலட்டினதும்
கிட்டக் கிழலைககும்- அருகிலே
அண்டாமல்,அடுக்காமல்-சேர்க்காமல்

எட்ட நிக்க-தூர நிற்க
"கோழியும் எங்கடை புழுங்கலும் எங்கடை"  - கோழியும் எங்களுடையது (காயப் போட்டிருக்கிற) புழுங்கல் அரிசியும்
    எங்களுடையது" (தின்றால் தின்று விட்டுப் போகட்டும்)

கறுமவினை- கொடிய துன்ப வினை
சங்கையீனம்-அவமானம்
வருத்தம்- நோய்
ஆதரிச்சு கும்பிட்ட-விரும்பி வணங்கிய
கந்தறுந்து-கந்து(பற்றுக்கோடு-வாழ்வாதாரம்)+அறுந்து
கறுமப்படும்- துன்பப்படும்
சதிரம்-சரீரம்,உடல்
கையெடுத்த சாமி- கும்பிட்ட சாமி
கண்டியே?-கண்டாயோ?

வெள்ளிடி- இடி போலுந்துன்பம் 
வாழ்மானம்- மானம் கெட்ட வாழ்வு
மசானவெளி- மயானவெளி