Author: கானா பிரபா
•1:24 AM

இன்று ஈழத்து முற்றம் குழும வலைப்பதிவின் முக்கியமானதொரு நாள். ஆம், தமிழ்மண நட்சத்திர வாரம் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றோம்.

ஈழத்து முற்றம் என்ற இந்தக் குழும வலைப்பதிவு , ஈழத்தின் பல்வேறு பிரதேசங்களில் வாழும் 52 தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பதிவர்களைத் திரட்டி ஜூன் 5, 2009 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதாகும். இதுவரை 238 பகிர்வுகளாக ஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள், ஆளுமைகள் என்று பல்வேறுவிதமான தலைப்புக்களில் இடுகைகளைப் பகிர்ந்திருக்கின்றோம். இந்தத் தளம் என்பது தமிழால் ஒன்றுபட்ட ஈழத்துப் பதிவர்கள் தத்தமது பிரதேசத்தின் அடையாளங்களைப் பகிர்வதன் மூலம் தமிழ் உலகின் மற்றய பாகங்களில் வாழும் தமிழ் உறவுகளின் மொழி, பழக்க வழக்கக் கூறுகளோடு ஒப்பு நோக்கவும் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. அத்தோடு ஜோசபின் என்ற தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரி ஜோசபின் தனது ஆய்வுப்பணிக்காக ஈழத்து முற்றம் குழுமப்பதிவைத் தேர்ந்தெடுத்து ஆய்வைச் சிறப்புற முடித்ததையும் இவ்வேளை மகிழ்வோடு பகிர்கின்றோம்.

இந்தக் குழுமம் மூலம் இன்னும் செழுமையான ஈழத்துப் பதிவர்கள் இணைந்து தம் பகிர்வுகளை அளிக்கவேண்டும் என்பதும் எமது அவாவில் ஒன்றாக இருக்கின்றது.

இங்ஙனம்
கானா பிரபா
ஈழத்து முற்றம் குழுமப் பதிவர்கள் சார்பில்

ஈழத்து முற்றம் ஆய்வுப்பணியில் பங்கேற்ற ஜோசபின் பபாவின் கருத்துப் பகிர்வு

‘ஈழத்து முற்றம்’ என்ற குழுப்பதிவு; திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தொடர்பியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் பே.கோவிந்த ராஜு அவர்கள் வழி காட்டுதலில் இளம் ஆராய்ச்சியாளர் பட்டத்திற்க்கென ஆய்வு மேற்கொண்ட போது அறிமுகம் ஆகியது. தமிழ் வலைப்பூக்களில் ஈழம் சார்ந்த வலைப்பூக்கள் அதன் உள்ளடக்கம் பண்முகதன்மை சார்ந்து முக்கிய பங்கு பெறுகின்றது. இவையில் ஈழத்து முற்றம் என்ற குழு- வலைப்பதிவு ஈழ மக்களின் ஆதரவை பெற்ற ஒரு வலைப்பதிவாகும்.
இன பிரச்சனையால் 16 உலகுநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் தங்கள் ஒன்றிணைப்புக்கும், ஒரே இனம் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்க்கும் தங்களுக்குள் கலந்துரையாடுவதற்க்கும், தங்கள் அனுபவங்கள், கனவுகள் மற்றும் கருத்துக்களை பரிமாறி கொள்ளுவதற்க்கும், தகுந்த தளமாக ‘ஈழத்து முற்றம்’ என்ற வலைப்பதிவை பயன்படுத்துகின்றனர். ஆய்வின் முக்கியமான ஆதாரமாக மொழி சார்ந்த ஒரு குழு அதாவது ஈழ தமிழர்கள், அவர்களின் தாய் மொழி – ‘தமிழ்’ வழியுள்ள கருத்துரையாடலை முன்வைத்து ஆய்வு முன் சென்றுள்ளது.

வலைப்பதிவுகள்(Weblogs)
இணையதளத்தின் ஒரு பகுதியான நவீன ஊடகமான வலைப்பதிவுகள், தனி நபர்களின் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை எழுத்து, படம், படக்காட்சிகள் மூலம் பகிர்ந்து கொள்ள மட்டுமல்லாது தனி மனிதனின் ஆழ்ந்த மற்றும் தீவிரமான கருத்துக்களை இணையதளம் வழியே பல நபர்களிடம் குறுகிய நேரத்துக்குள் சென்று சேர்க்க வழிவகுக்கின்றது என்பதும் இதன் சிறப்பு எனலாம்.
1991 ல் அமெரிக்கர்களால் அறிமுகப்படுத்த பட்ட வலைப்பதிவுகள் தமிழ் மக்கள் மத்தியில் 2000த்தில் அறிமுகமான ஓர் மாற்று ஊடகம் ஆகும். 1999 ல் வெறும் 23 வலைப்பதிவுகள் ஆக துவங்கிய வலைப்பதிவுகள் தற்போது 133 மிலியன் வலைப்பதிவுகள் கொண்டதாக மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. 66 உலகநாடுகளை சேர்ந்தவர்கள் வலைப்பதிவர்களாக உள்ளனர். வலைப்பதிவராக கணிணியும் இணைய வசதியும் போதுமானதால் எளிதாக வலைப்பதிவராக இயல்கின்றது என்பதே இதன் சிறப்பு. 80 க்கு மேற்பட்ட ஈழவலைப்பதிவர்கள் தங்கள் கருத்துக்களைஅனுபவங்களை கருத்துரையாடலை மிக ஆக்க பூர்வமாக வலைப்பதிவு வழியாக பதிவு செய்து வருகின்றனர் .

அரசியல், முதலீடு, விளம்பரம், ஊடக நெறி என அச்சுறுத்தல் இல்லாது எழுத்தார்வவும் சமூக பார்வையும் கொண்ட, ஊடகம், எழுத்து பின் புலன் அல்லாத சாதாரண மக்களால் தனி மனிதர்களாக தங்களை அடையாளப்படுத்தி கொள்வதற்க்கும் தகவல்களை பரிமாறி கொள்வதுடன் பின்னூட்டம்(comment) வழி பொது விவாதம், கலந்துரையாடலுக்கும் ஈழத்து முற்றம் உருதுணையாக இருந்தது. 1977 கலவரம், 1983 ல் கருப்பு ஜூலை எனும் இனகலவரம் போன்றவற்றால் தங்கள் உடமைகளை இழந்து உலக நாடுகளில் தஞ்சம் அடைந்த 10 லட்சத்திற்க்கும் மேற் பட்ட ஈழ சகோதரர்களுக்கு ஒவ்வொருவருக்கொருவர் உறவாடி கொள்ளவும் தங்கள் சொந்த மண்ணை நினைவு கூறவும் ஈழத்து முற்றம் பெரிதும் துணைபுரிகின்றது என்றால் மிகையாகாது. நோர்வேயில் குடிபுகுந்துள்ள விசரன் என்ற ஈழ சகோதரர் கூறுகையில் தங்கள் பிறந்த மண்ணை பிரிந்த துயரை மறக்கவும் தங்கள் மனபாரத்தை இறக்கிவைக்கும் தளமாகவும் வலைப்பதிவை காண்பதாக கூறினார்.


பொதுவாக ஊடகம் என்பது மக்களின் எண்ணம், கலாச்சாரம், வாழ்க்கை , அரசியல் போன்றவயை பிரதிபலிப்பவையாக இருப்பினும் போர் மற்றும் இக்கட்டான சூழலில் அதிகார வர்கத்தின் ஊது குழலாகவே ஊடகம் நிலை கொள்ள படுகின்றது. ஊடகத்தின் தரம் ஒருதலையான விறுப்பு வெறுப்பு போன்றவையால் மூழ்கடிக்கபடுகின்ற போது தனிநபர்களால் தனியாகவும் குழுவாகவும் இயங்கும் ஈழவலைப்பதிவுகள் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவும் தங்களுக்குள் சிறந்த கருத்துரையாடல் பேணுவதர்க்கு பெரிதும் உதவுகின்றது என்பதே உண்மை.

2005 ஆண்டு துவங்கியே; 2006 ஆண்டு நடத்தப்பட இருக்கும் 4 வது ஈழப்போரை மனதில் கொண்டு ஆளும் வர்கத்தால் பத்திரிக்கை சுதந்திரத்திற்க்கு தடை விதிக்க பட்டபோதும் களப்பணியில் உள்ளூர் மற்றும் உலக பத்திரிக்கையாளர்களையோ மனித நேய பணியாளர்களை அனுமதிக்காது இருந்த போதும் 23 உலகநாடுகளுடைய சிறப்பாக இந்தியா, சீன போன்ற நாடுகளின் துணையுடன் போர் புரிந்து ஈழ நாட்டை வென்றதாக இலங்கை அரசு எக்காளம் இட்டபோதும் ஈழ மண்ணின் மக்களின் கருத்து அவர்களின் ஆசை கனவுகள் எவ்வாறு மறைக்க பட்டது என ஈழத்து முற்றம் போன்ற ஈழ வலைப்பதிவுகள் வழியே நாம் அறியஇயலும்.

ஆய்வு முடிவு
ஈழத்து முற்றம் வலைப்பதிவுகளின் உள்ளடக்கம் என்பது ஈழத்து மக்களின் கலாசாரம், அவர்கள் வாழ்க்கையை பிரதிபலிப்பக்கும் மொழி, உடை, உணவு, கலாச்சாரம், கொண்டாடும் விழாக்கள் ஆராதனை வைபங்கள், சமூக அமைப்புகள் இவையை பற்றி கதைக்கும் வலைப்பதிவாகவே இருந்து வருகின்றது. காரசாரமான அரசியல் அல்லது இன பிரச்சனைகள் என்பதை தவிர்த்து ஈழம் என்ற மண் சார்ந்த தங்கள் அடையாளத்தை நிலைநாட்டவும் இழந்த மண்ணின் நினைவை பதிவு செய்யவும் விரும்புகின்றனர். ஒருவேளை ஆயுதத்தால் ஒரு இனமக்கள் அழித்தாலும் அவர்கள் கலாசாரம், ஆற்றல் வரும் தலைமுறை அறியும் வண்ணம் ஈழமுற்றத்தில் பதியபட்டு வருகின்றது
ஈழத்து முற்றம் வலைப்பதிவு 4 வது ஈழப்போர் முடிந்தது என்று அரசால் எடுத்துரைக்கப்பட்ட காலயளவில் ஆகஸ்த்து 2009ல் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்துள்ள கானா பிரபா அவர்களின் தலைமையில் தங்களுக்குள் சிறந்த தொடர்பாடல் பேணவேண்டும், கருத்துரையாடல் நிகழவேண்டும் என்ற நோக்குடனே துவங்கபட்டுள்ளது என கூறியுள்ளார். அந்நிய நாட்டிலுள்ள கடுத்த வேலைப்பழு மற்றும் நேரம் போதாமையால் முழுவீச்சில் கருத்துரையாடல் பேண தடங்கல்கள் இருப்பினும் தங்களுக்குள் தொடர்பாடலை பேண பெரிதும் உதவுதாக கூறினார். பல பதிவுகள் நாட்குறிப்பேடு போன்று தங்கள் இனம் சார்ந்த சிறு சிறு சந்தோஷங்கள் தங்கள் மன்னின் மைந்தர்கள், தங்கள் ஆசிரியர்கள், களத்தில் வீழ்ந்த போர் வீரர்கள், காலத்தால் பிரிந்து சென்ற நண்பர்கள், உற்றவர்களின் நினைவுகள், தங்கள் குடும்பம், படித்த பாடசாலை, தமிழ் இனம் என்ற சூழலில் எதிர் கொண்ட சவால்கள் ஏன், அவர்களின் விடலைப்பருவ பொலிந்த காதல் கதைகள், மறுபடியும் அவர்கள் ஊரில் கால் பதித்த போது தங்கள் கண்ட காட்சிகள், சுவாரசியமாக வாழ்க்கை அனுபவங்கள் உள்ளடங்கியதாக இருந்தது மேலும் பல பதிவுகள்.

ஈழத்து முற்றம் வலைப்பதிவின் உள்ளடக்கம்
தினசரி நாட்குறிப்பு - 4
நினைவுகளின் தொகுப்பு -63
தனி மனித இயல்புகள் பொழுது போக்கு - 21
குடும்பம் –நண்பர்கள் - 7
வலைப்பதிவரின் வாழ்க்கை சம்பவம் - 6
சமகால நிகழ்வுகள் - 7
சமூகம் சார்ந்த செய்திகள்-கதைகள் - 8
ஈழ கலாச்சாரம் - 73

ஈழ வலைப்பதிவுகளின் கட்டமைப்பு
ஈழ வலைப்பதிவுகள் சிறப்பாக ‘ஈழத்து முற்றம்’ வெறும் எழுத்து மட்டுமல்லாது புகைப்படங்கள், காணொளிகள், ஒலி நாடாக்கள், ஓவியங்கள், இணைப்புக்கள்(links) என முழுவீச்சில் தொடர்பாடலை பேணுகின்றது. தற்போது 59 நபர்கள் குழுவில் இணைந்திருந்தாலும் என் ஆய்வு காலகட்டம் அதாவது ஏப்ரில் 2008 துவங்கி ஏப்ரில் 2010 முடிய 32 நபர்களால் 189 வலைப்பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஈழப்போர் முடிந்த மாதம் அல்லது வலைப்பதிவு துவங்கிய காலயளவில் பதிவுகள் மிக பெரிய அளவில் எழுதப்படிருப்பதும் பின்பு அதன் அளவு குறைந்து வருவதாகவும் காணப்படுகின்றது. இதை போரின் தாக்கம் உளைவியலாக எழுத தூண்டபட்டுள்ளதாக எடுத்து கொள்ளபட்டது. ஆனால் 189 பதிவுகளில் 58 ஆயிரத்து 706 வார்த்தைகள் பயன்பபடுத்தியிருப்பதும், 1855 பின்னூட்டம் (மறு இடுகை) கிடைத்திருப்பதும் மிகவும் ஆக்கபூர்வமான கருத்துரையாடல் நடைபெற்றதை கோடிட்டு காட்டுகின்றது. மேலும் தமிழ் மக்கள் சிறப்பாக ஈழமக்கள் மத்தியில் ‘ஈழத்து முற்றம்’ மிகவும் வரவேற்ப்பு பெற்ற வலைப்பதிவு என்பதையும் நினைவுபடுத்துகின்றது.

வலைப்பதிவு எழுத தூண்டும் காரணிகள் எடுத்து கொண்டோமானால் தங்கள் வட்டார கலாச்சாரம், மொழி வெளிப்படுத்தல், உணர்வு பூர்வமாக தங்கள் தேசத்தின் நினைவுகளை பேணுதல், தங்கள் ஒருவருக்கொருவர் சிறந்த கலந்துரையாடல், மற்றும் ஈழம் என்ற அடையாளத்தை பேணுதல் என்று மிகவும் விரும்பி கருதலுடன் ஈடுபடுகின்றனர் வலைப்பதிவர்களாக!

வலைப்பதிவர்களின் சரித்திரம்(profile) பரிசோதித்தால் 78 சதவீதம் பேர் வயது வெளியிட விரும்பவில்லை, தொழில் போன்றவற்றையும் 55 சதவீதம் பேர் வெளியிடவில்லை. இருப்பினும் பெரும் வாரியான வலைப்பதிவர்கள் இளைஞர்களாகவும் கல்வி அறிவு பெற்றவர்கள் ஆகவும் உள்ளனர். 72% பேர் ஆண் வலைப்பதிவர்களே, வலைபதிவர்களில் 28% பேர் ஸ்ரீ லங்காவிலும் 15% பேர் கானடா, 5% பேர் ஆஸ்திரேலியாவிலும் குடியிருக்கின்றனர். தங்களது புகைப்படங்களை 17% பேர் மட்டுமே பயண்படுத்துகின்றனர், மற்றுள்ளோர் சுவரோவியத்தையும் பயன்படுத்துகின்றனர்.

மென்பொருள் துணையோடுள்ள வலைப்பதிவின் அமைப்பு சிறப்பான கருத்துரையாடலுக்கு பெரிதும் உதவுகின்றது. ஈழத்து முற்றத்தில் ‘முக பக்கத்தில்’ பதிவர்களின் பெயர்களை இணைப்புக்கள் துணைகொண்டு இணைப்பதன் வழி அதன் 52 வலைப்பதிவர்களும் ஒரே தளத்தில் இணைவதற்க்கும் சிறப்பான கருத்துரையாடல் பேணவும் வழிவகுக்கின்றது. ஒரு வலைப்பதிவில் இருந்த மற்றொரு வலைப்பதிவுக்கு எளிதாக தாவி செல்லவும் மேலும் முகப்புத்தகம் போன்ற சமூகதளத்தில் இணையும் வசதியை பயன்படுத்துவது வழியாக வாசிப்பாளர்கள் தளத்துக்கு எளிதாக வந்து செல்லவும் துணைபுரிகின்றது. மேலும் அதன் மற்றொரு மென் பொருள் வழியாக தலைப்புக்களை இணைப்பதன் வழி வலைப்பதிவின் தன்மையான ‘தேர்ந்தெடுக்கல்’ என்ற செயலை எளிதாக பயனுள்ளதாக பயண்படுத்த இயல்கின்றது.

பின்னூட்டம் கருத்துடையாடலுக்கு பெரிதும் பயன்பெறுவதுடன் வலைப்பதிவுகளின் சிறப்பும் இதை சார்ந்தை அமைகின்றது. ஈழத்து முற்றம் 189 பதிவு ஊடாக 1855 பின்னூட்டம் பெற்றது வழியாக சிறந்த கருத்துரையாடலில் பங்கு பெற்றது என தீருமானிக்க இயலும். பின்னூட்டம் வாசிப்பவரின் கருத்து மற்றும் மாற்று கருத்தை பதியும் வாய்ப்பு கொடுப்பதுடன் வலைப்பதிவுகள் வழியே காத்திரமான கருத்து பரிமாற்றத்திற்க்கும், ஊடகத்தின் உரிமையாகயிருந்த கருத்து சுதந்திரம் சமூகத்தின் அடிதட்டிலும் எல்லா நிலைகளில் உள்ள மக்களில் வந்து சேருவதுடன், ஊடக பணியில் பங்கு பெறும் வாய்ப்பையும் நல்குகின்றது. ‘ஈழத்து முற்றம்’ மக்களை சிந்தனை வளமுள்ளவர்களாகவும் ஆக்கபூர்வமான கருத்தாக்கதிற்க்கும் இட்டு செல்கின்றது என்றால் மிகையாகாது.

வலைப்பதிவுகளின் உருமாற்றத்தை பற்றி எண்ணும் போது குழு வலைப்பதிவு 'ஈழத்து முற்றம்' போரின் கடைசி நாட்களில் உருவாக்க பட்டதே. ஈழம் என்ற தேசத்தை அழித்தாலும் அவர்களுடைய கலாச்சாரம், வாழ்வை அழியா வண்ணம் இணையத்தில் பதிய வேண்டும் என்ற நோக்குடனும் ஈழ மக்கள் ஒருவருக்கொருவர் உரைவாடி கொள்ள வேண்டும் நோக்கில் குழுவாக சிறப்பாக செயல் ஆற்றி வருகின்றது!!!!.

http://josephinetalks.blogspot.com/2010/09/blog-post_26.html
http://josephinetalks.blogspot.com/2010/11/blog-post_13.html


ஈழத்து முற்றம் குழும வலைப்பதிவின் பங்கேற்பாளர்கள் சிலரது கருத்துக்கள்

வந்தியத்தேவன் பேசுகிறேன்

எங்கடை பாசையிலை எங்கடை கலை கலாச்சாரங்களை மற்றவைக்குச் சொல்ல கிடைத்த ஒரு இடம். எங்கடை ஊரிலை பெரும்பாலும் இரவுகளில் வீட்டு முத்தத்தில் இருந்து கதைப்பதுபோல இங்கே உள்ள உறவுகள் கூடிக் கதைக்கும் இடம் என்பதாலோ என்னவோ ஈழத்துமுற்றம் என்ற இந்தப் பெயர் வடிவாக பொருந்தி இருக்கின்றது. புதுப்புது சொற்களையும் விடயங்களையும் அறியப் பலருக்கு ஈழத்துமுற்றம் மிகவும் உதவி இருக்கின்றது. ஈழத்துமுற்றத்தில் இருக்கும் சில பதிவுகள் மிகவும் சாதாரணமாக விடயமாக இருந்தாலும் புலம் பெயர் தேசத்தில் இருப்பவர்களுக்கும் சொந்த மண்ணில் இருந்ததுபோலவும் அனுபவித்த பழைய நினைவுகளையும் மீட்டித் தந்தது என்பது மிகையில்லை.

எதிர்காலத்தில் ஈழத்துமுற்றப் பதிவுகள் ஆவணப்படுத்தப்படவேண்டியது அவசியமானதாகும். எம்மால் மறக்கப்பட்ட சில சொற்கள், சில விடயங்களை இங்கே மீண்டும் வாசிக்கும் போது எங்கள் ஊருக்கே போன ஒரு உணர்வு வருகின்றமையும் மீண்டும் அந்த காலம் வருமா என்ற ஏக்கமும் எழுகின்றமை தவிர்க்கமுடியாததாகும்.

வெறுமனே எங்கள் கலை கலாச்சார விழுமியங்களைப் பற்றிப் பகிருவதுடன் மட்டுமல்லாது ஈழத்துமுற்ற உறவுகளுடனான நட்பும் எம்மிடையே இன்னமும் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்புடன்
வந்தியத்தேவன்


வர்மா பேசுகிறேன்

புதிய இணையத்தளங்களையும் வலைப்பூக்களையும் தினமும் தேடித்திரிவேன். நல்ல இணையத்தளம் வலைப்பூக்கள் பற்றி அதில் ஆர்வம் உள்ளவர்களுடன் உரையாடுவேன். ஒரு நாள் ஈழத்து முற்றத்தை வந்தியத்தேவன் எனக்கு அறிமுகப்படுத்தினார். புதியதொரு கொள்கையுடன்,களமிறங்கிய பலரை அங்கே கண்டேன் வந்தியத்தேவனின் உதவியுடன் ஈழத்துமுற்றத்தில் அங்கத்தவனானேன்.

இலங்கையின் பல ஊர்களில் உள்ள பேச்சு வழக்கு , கலாசாரம் , நடைமுறை ,
மொழிப்பிரயோகம் என்பனவற்றைப்பற்றி மேலும் விரிவாக அறியும் சந்தர்ப்பம் கிடைத்தது.

முகம் தெரியா நண்பர்களுடன் கேலிகள் , பட்டப் பெயர்கள் என்பனவற்றுடன் நமது நட்பு இறுக்கமாக உள்ளது. தெரிந்ததைப் பகிரவும் , புதியதைஅறியவும் உதவும் வலைப்பூ

அன்புடன்
வர்மா

மணிமேகலா பேசுகிறேன்


என் பெயர் மணிமேகலா.www.akshayapaathram.blogspot.com என்ற வலைப்பூவை வைத்திருக்கிறேன்.

புலம் பெயர்ந்து வந்து விட்ட வாழ்வில் இருப்பை; நம் அடையளங்களை ஏதோ ஒரு விதத்தில் தக்க வைத்துக்கொள்ள, இழந்த ஏதோ ஒன்றை கண்டு பிடிக்கச் செய்யும் பிரயத்தனங்கள் தான் நம்மை நாம் தேடிக் கண்டு கொள்ளும் இப்படியான வலைப் பிரவேசங்கள்.

மண்ணில் இருந்து வேர்கள் பிடுங்கப் பட்ட நிலையில் மண்ணின் வாசத்தை தேடி அலைந்த ஒரு பொழுதில், பிரபாவிடம் இருந்து வந்த ஓர் அழைப்பு சொந்த மண்ணின் வாசத்தோடு என் வாழ்வின் வேரை இணைத்தது.உலகமெல்லாம் சிதறிப் போயிருந்த ஈழ மக்களிடம் இருந்த ஒரே உணர்வு எங்கள் பறிக்கப் பட்ட வசந்த வாழ்வு பற்றியதே.எல்லோருடைய ஏக்கமும் கவலையும் போராட்டமும் பிரிவும் சோகமும் அனுபவமும் ஒன்றாக இருந்த போது, அவர்களை எல்லாம் ஒன்றாய் இணைத்து,வழி நடத்தி, அனுபவங்களைப் பகிர வாய்ப்பளித்தது;அளித்து வருவது ஈழத்து முற்றம். மிகப் பெரிய பணி. இன்று ஈழத்து முற்றம் பெரியதொரு கூட்டுக் குடும்பமாக மிளிர்கிறது.

இது அக்கரைக்கும் இக்கரைக்குமான உறவுப் பாலம்.ஊரில் இருப்பது போன்ற உணர்வை இம்முற்றம் தருவது அதன் சிறப்பு. ஆண்ம நிறைவு அது. இந்த நட்சத்திர நாளில் என்னையும் கூட்டுக் குடும்பத்தில் ஒரு அங்கத்தவராக இணைத்துக் கொண்டமைக்கு நன்றியைத் தெரிவிப்பதில் பெரு நிறைவும் கூட.

ஈழத்து முற்றம் எங்கள் வீட்டு வாசல்! நட்சத்திர வாசல் வரை வந்திருக்கும் உங்கள் எல்லோருக்கும் நல்வரவு!!

அன்புடன்
மணிமேகலா

வடலியூரான் பேசுகிறேன்

உண்மையில் இந்த ஈழத்து முற்றம் வலைப் பூவானது, ஈழத்தின் பிரதேச பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், பாரம்பரியங்கள், சொல்லாடல்களை அவரவர் பாணியிலேயே எடுத்துரைக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித்தருவதோடு,ஈழத் தமிழர் வாழ்வியல் கோலங்களை,உலகத் தமிழருக்கும், ஈழத்தின் அடுத்த சந்ததிக்குக் கடத்தும் அத்தியாவசிமான/உன்னதமான பங்களிப்பையும் வழங்கிவருவது உண்மையிலேயே பாராட்டத் தக்கது.அது மட்டுமில்லாமல், ஈழத்தின் எல்லாப் பாகங்களிலுமுள்ள பதிவர்களையும்,புலம்பெயர்ந்த ஈழப் பதிவர்களையும் ஒரே குடையின் கீழ்க்கொண்டுவந்து, எல்லோரையும் ஒரு ஈழக் குடும்பமாக மாற்றியுள்ளது என்று சொன்னால் அது மிகையில்லை.அந்தவகையில் இதை முன்னின்று நடாத்தும் கானாப் பிரபா அண்ணாவிற்கும், மற்ற எம் ஈழத்துமுற்ற அங்கத்தவர்களுக்கும் தான் இந்தப் பெருமையெல்லாம் சேரும்.இந்தக் குழுமத்திற்கு/குடும்பத்திற்கு நான் தான் இளைய வாரிசு என்று நினைக்கின்றேன்.ஒரு நான்கைந்து மாதங்களிற்கு முன்னர்தான் வந்தியத்தேவன் அண்ணாவினால் அழைப்பு விடுக்கப் பட்டு ஒரு ஐந்தாறு பதிவுகளை இட்டுள்ளேன்.எமது ஈழத்துமுற்றம் வலைக்குழுமம் தமிழ்மணம் நட்சத்திரமாகத் தெரிந்தெடுக்கப்பட்டிருப்பது எம் எல்லோருக்கும் ஒரு சந்தோசத்தையும்,உற்சாகத்தையும்,உத்வேகத்தையும் தரக்கூடியதொன்றே.நன்றி.

அன்புடன்
வடலியூரான்

சுபாங்கன் பேசுகின்றேன்

மாற்றம் ஒன்றுதான் மாற்றமே இல்லாதது என்பதற்கேற்ப எமது ஈழத்து பழக்கவழக்கங்களும், பண்பாட்டுக்கோலங்களும் சிறிது சிறிதாக மாற்றமடைந்து வருகின்றன.எனவே எமது கடந்தகாலத் தொடர்புகளை ஏதோ ஒரு வகையில் பதிவுசெய்து வைத்திருப்பது அவசியமாகிறது. எமது ஈழத்துமுற்றம் குழுமம் அவற்றை எழுத்து வடிவில் இணையத்தில் பதிவு செய்துவருகிறது. இந்தக் குழுமத்தில் ஒரு அங்கத்துவனாக இருப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே.

அன்புடன்
சுபாங்கன்


சினேகிதி பேசுகின்றேன்

ஹலோ சினேகிதி பேசுகிறேன்: இண்டைலஇருந்து கொண்டாட்டம் ஆரம்பம் என்று நினைக்கிறன். எல்லாரும் வரிஞ்சு கட்டிக்கொண்டு வந்து வஞ்சனை இல்லாம எழுதித் தள்ளுங்கோ:) எனக்கு உண்மைாயாவே நேரம் இல்லை இப்ப இருந்தாலும் அப்பப்ப முற்றத்துக்கு வந்து விடுப்பு பார்ப்பன் யார் என்ன எழுதியிருக்கினமென்டு. என்ர ப்ளாக் பாவம் அங்க கனகாலமாப் போனதே இல்லை. தனிய இருக்க bore அடிக்க இருக்கிற நேரம் தான் மற்றாக்களைத் தேடிப் போவம் கதைப்பம் அதப்போலதான் நானே என்ர ப்ளாக்ல அலட்டி அலட்டி bore அடிச்சுப்போயிருந்த நேரம்தான் கானா பிரபாண்ணா இந்த முற்றத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்தார். அவருக்கும் மற்றும் முற்றத்தில கும்மியடிக்கும் எல்லாருக்கும் நன்றி. மணிப்பாட்டி போன்றாக்கள் மூலம் அம்மம்மா இல்லாத குறை தெரிவதில்லை. தொடர்ந்தும் எங்களுடைய விழுமியங்களை இது போன்ற எழுத்துக்கள் மூலம் தக்க வைப்போம்.

அன்புடன்
சினேகிதி.
This entry was posted on 1:24 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

18 comments:

On March 6, 2011 at 6:41 PM , கோவி.கண்ணன் said...

மீண்டும் மீண்டும் நட்சத்திரமா ?

நல்வாழ்த்துகள் கானா

:)

 
On March 6, 2011 at 9:21 PM , VELU.G said...

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்

 
On March 6, 2011 at 10:09 PM , துளசி கோபால் said...

அட! எம் மகளா இந்தவார நட்சத்திரம்!!!!

இனிய வாழ்த்து(க்)கள்.

 
On March 6, 2011 at 11:13 PM , சந்தனமுல்லை said...

நட்சத்திர வாழ்த்துகள் அனைவருக்கும்!
ஈழத்து முற்றம் எனக்கு மிகவும் பிடித்த பதிவு - குறிப்பாக இயல்பாகவும் நேராக உரையாடுவது போலவும் இடுகைகள் இருப்பது மிகவும் சிறப்பு! மீண்டும்வாழ்த்துகள் ஈழத்து முற்றம் குழுவுக்கு!

 
On March 7, 2011 at 12:19 AM , ஆயில்யன் said...

நட்சத்திர வாழ்த்துகள் !


ஈழத்து முற்றம் இன்னும் வட்டார வழக்கு சொற்கள் நிகழ்வுகள் வெளிக்கொணரவும், சக பங்கேற்பாளர்களிடமிருந்து மேலும் மேலும் நிறைய பதிவுகள் வெளிவர, ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த வாரம் அமைய வாழ்த்துகள் :)

 
On March 7, 2011 at 1:58 AM , ஃபஹீமாஜஹான் said...

இந்த நட்சத்திர வாரத்திலாவது உறவுகள் அனைவரும் ஈழத்து முற்றத்தில் வந்து சேர்வார்களாக

 
On March 7, 2011 at 2:51 AM , அன்புடன் அருணா said...

நட்சத்திர வாழ்த்துகள் பூங்கொத்தோடு!!

 
On March 7, 2011 at 3:38 AM , ஜோதிஜி said...

இனிதான வாழ்த்துகள்.

 
On March 7, 2011 at 4:04 AM , திகழ் said...

வாழ்த்துகள்

 
On March 7, 2011 at 5:40 AM , ஹேமா said...

சந்தோஷமாயிருக்கு பிரபா !

 
On March 7, 2011 at 7:09 AM , மாதேவி said...

மகிழ்ச்சி. வாழ்த்துகள் பிரபா.

 
On March 7, 2011 at 1:58 PM , மணிமேகலா said...

காத்திரமான ஒரு ஆவணப் பதிவாக ஈழத்து முற்றத்தைத் அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள் பிரபா!

பாராட்டுக்கள்!

 
On March 7, 2011 at 3:27 PM , தமிழன்-கறுப்பி... said...

என்னைப்போல பஞ்சி பிடிச்ச ஆளையும், குழுமம் இன்னமும் துரத்தாமல் வைத்திருக்கிறது என்பதில் குழுமத்துக்கு நன்றி.

கலக்குங்கோ மக்கள்..பிறகென்ன ஆரம்பமே அந்தமாரி இருக்கு.

 
On March 7, 2011 at 10:33 PM , வடலியூரான் said...

வாழ்த்துக்கள் அனைவருக்கும். //ஜோசபின் என்ற தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரி ஜோசபின் தனது ஆய்வுப்பணிக்காக ஈழத்து முற்றம் குழுமப்பதிவைத் தேர்ந்தெடுத்து ஆய்வைச் சிறப்புற முடித்ததையும் இவ்வேளை மகிழ்வோடு பகிர்கின்றோம்

இது நான் கேள்விப்பட்டிருக்காத ஒன்று.ஆனால் கேள்விப்பட்டுப் பெருமித்மடைந்ததொன்று.வாழ்த்துக்கள் மீண்டுமொருதடவை அனைவருக்கும்

 
On March 8, 2011 at 6:05 AM , வர்மா said...

எங்கள் எழுத்துக்கு பல்கலைக்கழக அங்கீகாரம் கிடைத்தது ம்கிழ்ச்சியாக உள்ளது.
அன்புடன்
வர்மா

 
On March 8, 2011 at 10:16 AM , Josephine Baba said...

என் ஆய்வுக்கு என உங்கள் வலைப்பதிவுகள் வழி உங்கள் யாவரின் அறிமுகம் கிடைத்ததும் அதன்வழி சகோதரர்களாகவும் நண்பர்களாகவும் உறவுகள் பேணப்பட்டதும் என் வாழ்வில் மறக்க இயலாத நாட்கள். சிறப்பாக சகோதரர் கானா பிரபா, சகோ. எம் ரிஷான் ஷெரிஃப், சகோதரி. தமிழ்நதி, சகோ.தீபச்செல்வன்,சகோ.சஞ்சயன் மாணிக்கம், நண்பர் தமிழ் சசி மற்றும் 52 ஈழத்து முற்றம் குழு வலைப் பதிவர்களிடமும் மிகவும் கடமைபட்டுள்ளேன் என்பதை நன்றியுடன் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

 
On March 10, 2011 at 1:03 PM , வந்தியத்தேவன் said...

வலையுலகத்தால் என்ன பிரயோசனம், உதெல்லாம் சும்மா வெட்டியா இருக்கின்றவங்கடை வேலை என ஆரம்பத்தில் என்னை(எம்மை) கேலி செய்தவர்களுக்க்கு ஜோசப்பின் பவாவின் ஆய்வைக் காட்டவேண்டும். எங்கள் எழுத்துக்களுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாகவே இதை பார்க்கவேண்டும்.

இந்தக் குழுமத்தில் நானும் ஒருவன் என்பது மிக்க மகிழ்ச்சியே.

 
On March 11, 2011 at 1:45 AM , J.P Josephine Baba said...

ஆமாம் வந்திய தேவன். ஒரு எழுத்து விடாது ஒவ்வொரு பதிவும் ரசித்து வாசித்தேன். உங்கள் எழுத்தின் தாக்கத்தால் நானும் என் கேரளா தமிழில் எழுத உந்தபட்டேன். உங்கள் யாவரின் எழுத்து நடை இதயத்தில் இருந்து வருவதாக இருந்தது அதுவே வலைப்பதிவின் பலவும் நோக்கவும்!