Author: geevanathy
•12:03 PM
கந்தளாய், திருகோணமலையில் இருந்து கண்டி செல்லும் பாதையில் நாற்பது கிலோமீற்றரில் அமைந்திருக்கும் ஊர். இலங்கையின் மிகப்பெரிய விவசாய நிலங்களைக் கொண்ட பிரதேசங்களில் ஒன்றாகக் கந்தளாயும் கருதப்படுகிறது. பண்டைய நாட்களில் கந்தளாயில் 'சதுர்வேதி மங்கலம்' என்றழைக்கப்பட்ட பிரதேசம் இருந்தது. இங்கு நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு இப்பிரதேசம் வரியில்லாமல் வழங்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்த குடியேற்றம் அளவில் பெரிதானதாகவும், அதிகாரம் கொண்டதாகவும் அமைந்திருந்தது என அறியமுடிகிறது.




கி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழரது நேரடி ஆட்சி இலங்கையில் ஏற்பட்டபோது நாகநாட்டில் இருந்த( தற்போதைய வடகிழக்கு மாகாணம்) தமிழ் அரசும் அவர்களது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என வரலாற்றாதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. சோழப்பேரரசின் படையெடுப்பின் மூலம் இப்பிரதேசம் இராஜராஜனின்(கி.பி 985 - கி.பி 1014) ஆதிக்கத்தின்கீழ் வந்தபின் 'இராஜராஜ சதுர்வேதி மங்கலம்' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. (சோழர் ஆட்சியின் கீழ் தமிழ்ப் பௌத்தர்களால் நிர்வகிக்கப்பட்ட விகாரை இராசராசப் பெரும் பள்ளியெனப் பெயர்மாற்றம் செய்யப்படதுபோல்) அதன் பின்னர் அவரது மகன் இராஜேந்திரன் (கி.பி 1012 - கி.பி 1044) காலப்பகுதியில் திருகோணமலை நகரம், இராஜ ராஜ சதுர்வேதி மங்கலம்(கந்தளாய்) என்பவற்றை உள்ளடக்கிய பிரதேசம் 'இராஜேந்திர சோழவழநாடு' என அழைக்கப்பட்டிருக்கிறது.



கி.பி 1010 ஆம் ஆண்டி ல் இங்கு இராசேந்திர சோழனால் சிவன் கோவில் கட்டப்பட்டது. அப்புராதானக் கோயிலின் சிதைந்த பாகங்களைக்கொண்ட சிவன் பார்வதி சிலை, தூண் சிதைவுகள் , ஆவுடையார் போன்றவை இன்றும் அக்கோயிலின் வரலாற்றுத் தொன்மைதனை பறைசாற்றி நிற்கிறது.




வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் இங்கிருந்த ஆலயம் பிரசித்தமானதாகவும், பலர் ஒன்றுகூடி அமர்ந்து கலந்துரையாடக்கூடிய மண்டபங்களைக்கொண்ட பிரமாண்டமானதாகவும் இருந்திருக்கவேண்டுமென அறியமுடிகிறது. கந்தளாயிலுள்ள பேராறு எனுமிடத்தில் அமைந்திருக்கும் இவ்வாலச் சிதைவுகள் 1950ம் ஆண்டு காலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட சிவனாலயத்தையே மேலுள்ள படத்தில் காண்கிறீர்கள்.


இவ்வாலச் சூழலில் கண்டெடுக்கப்பட்ட பல சாசனங்களில் இருந்து இவ்வாலயத்தின் சிறப்பையும் இங்குவாழ்ந்த மக்களது சமய, பண்பாட்டு நடமுறைகளையும், இப்பிரதேசத்தில் நிலவிய அரசாட்சி பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது.

அங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் சொல்லும் செய்திகளின் சுருக்கம்.

01. இராஜராஜ சதுர்வேதி மங்கலத்தின் ஊராட்சி அமைப்பான பெருங்குறி(மகாசபை) பெருமக்கள் ஒரு இரவு ஒன்றுகூடி விக்கிரம சோழ வாய்க்கால் தொடர்பாக எடுத்த தீர்மானத்தின் பதிவுகளையே ஒரு கல்வெட்டு சொல்கிறது.இதனை ஆராய்ந்த கலாநிதி.கா.இந்திரபாலாவின் கருத்துப்படி கி.பி 1033 மாசி 13ம் திகதி/ கி.பி 1047 மாசி 10 ம் திகதி இம் மகாசபைக்கூட்டம் நிகழ்ந்திருக்கவேண்டுமெனக் கருதுகிறார்.

02. இங்குள்ள இன்னுமொரு சாசனம் முதலாம் விஜயபாகு தேவரின் 42 ம் ஆட்சியாண்டிலே எழுதப்பட்டது.(கி.பி 1097) நங்கைசானி என்னும் பிராமணப்பெண் தனது கணவனின் நினைவாக சதுர்வேத மங்கலத்து விஜயராஜ ஈஸ்வரம் என்னும் ஆலயத்தில் ஏற்படுத்திய அறக்கட்டளை பற்றிய விவரங்களை அது வர்ணிக்கிறது.

03.கி.பி 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது கி.பி 1103 ஆண்டுக்குரியதான கல்வெட்டில் கந்தளாய் என்றே அக்காலத்தில் இப்பிரதேசம் அழைக்கப்படதாக அறிய முடிகிறது. அத்துடன் பொலநறுவையை ஆட்சி புரிந்த விஜயபாகு தனது 37ம் ஆட்சியாண்டில் தானமளித்தான் என்பதையும் அறியமுடிகிறது. இதுவரை இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இதில்தான் முதன் முறையாக திருப்பள்ளியெழுச்சி, திருப்போனகம் என்னும் சொற்பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் குறிப்பிடுகிறார்.


இவை தவிர சோழ இலங்கேஸ்வரன், சோழர்களின் ஆட்சிமுறை, என்பனவற்றோடு தமிழர்களின் தொன்மையையும் ஆதாரப்படுத்தி நிற்கும் இச்சாசனங்கள் அரிய பொக்கிசங்களாகும்.

உசாத்தணை

வரலாற்றுத் திருகோணமலை - கனகசபாபதி சரவணபவன்

திருக்கோணமலை மாவட்ட திருத்தலங்கள் - பண்டிதர் இ.வடிவேல்

கட்டுரை- 'இலங்கையில் கிடைத்த தமிழ் சாசனத்தில் முதன்முதலாக திருப்பள்ளியெழுச்சியென்ற சொல்' - பேராசிரியர் சி. பத்மநாதன்

கட்டுரை - 'கிழக்கிலங்கையில் சீரழிந்துகொண்டிருக்கும் தமிழரின் தொன்மைச் சான்றுகள்' - கலாநிதி.ப.புஷ்பரெட்ணம்

தகவல் திரட்டுவதில் உதவியவர்கள் - கந்தளாய் சிவன்ஆலயக்குருக்கள், திரு.க.ரவிராஜன் (திருப்பணிச்சபை சிவன் ஆலயம்)
Share/Save/Bookmark
Author: geevanathy
•9:33 AM
(இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை)


(கல்வெட்டுக்கள்)

(விலையுயர்ந்த ஆபரணங்கள், முக்கியமான பொருட்கள் என்பனவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க பயன்படுத்தியதாகக் கருதப்படும் பொருட்கள்)

(நீர்த் தொட்டி)

(மருத்துவத் தொட்டி)
'வெல்கம் விகாரை ' திருகோணமலையில் உள்ள பலரும் அறிந்த இடம். எனினும் அதற்கு 'இராசராசப் பெரும் பள்ளி ' எனும் இன்னுமொரு பெயர் இருக்கும் விடையத்தைச் சில வருடங்களுக்கு முன்னமே வரலாற்று நூல்கள் மூலம் அறிந்துகொண்டேன். 'இராசராசப் பெரும் பள்ளி ' எனும் பெயர் இங்குள்ள மக்களின் பேச்சுவழக்கில் இல்லையாயினும் இதனுடைய வரலாற்றுப் பின்னணி அறியப்படவேண்டியதாகும்.


திருகோணமலை நகரத்தில் இருந்து வவுனியா செல்லும் பாதையில் கன்னியா வென்னீரூற்றைத் தாண்டி வரும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பிரதேசம் இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை.


திருகோணமலையில் இந்து - பௌத்த மத முரண்பாடு கி.பி 3ம் நூற்றாண்டில் மகாசேனன் திருக்கோணேச்சரத்தை அழித்து கோகர்ண விகாரையை நிறுவ முற்பட்டதுடன் தீவிரம் பெறுகிறது.


'மகாசேனனின் துன்புறுத்தல் காரணமாக தற்காலிகமாகவே இந்து ஆலயங்கள் அழிக்கப்ட்டது. பௌத்த மதம் இந்து மத்ததுடன் போட்டி போட்ட போதும் பௌத்த மதம் துறைமுக நகரான திருகோணமலையில் இருந்து பின்வாங்க வேண்டி இருந்தது.' என்ற பேராசிரியர் சேனக பரணவிதானவின் கூற்றும், 'சோழர்கள் இலங்கையில் பல பௌத்த பள்ளிகளை அழித்ததார்கள்' என்ற சூளவம்சத்தின் கூற்றும் அக்காலத்தில் இருந்த மதமுரண்பாட்டை விளக்குவதாக இருக்கிறது.



வெல்கம் விகாரை என்னும் இந்தப் பௌத்தப் பள்ளியின் தோற்றம் பற்றிய தெளிவான வரலாற்றுத் தகவல்கள் இல்லையாயினும் , இது சோழருடைய படையெடுப்புக்கு( 10 ம் நூற்றாண்டு) முன்னமே இருந்திருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது.


சோழருடய ஆட்சியின் கீழ் திருகோணமலை வந்தபின் இதன் பெயர் இராசராசப் பெரும் பள்ளி என சோழ ஆட்டசியாளர்களால் மாற்றப்பட்டிருக்கிறது. இங்கு கிடைக்கப் பட்ட அதிகளவான அறக்கொடைச் சாசனங்கள் தமிழ் மொழியில் இருப்பதும் , சோழ ஆட்சியாளர்களால் இவ்விகாரை பாதுகாக்கப்பட்டு, ஆதரவளிக்கபட்டமையையும் ( இராசராச சோழன் 84 பசுக்களைத் தானம் செய்தார் - வரலாற்றுச் சாசனம்) வைத்துப் பார்க்கும் போது வெல்கம் விகாரை தமிழ் பௌத்த துறவிகளால் நிர்மானிக்கப்பட்டு , நிர்வக்ககப்பட்டு வந்திருக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது.



Share/Save/Bookmark


Author: geevanathy
•9:54 PM
(கும்பம்)

விஜயதசமியன்று திருகோணமலையில் நடைபெறும் கும்பவிழா சிறப்பானதாகும்.அன்று இங்குள்ள ஆலயங்களில் கும்பங்கள் , கரகங்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டு அன்றிரவு முழுவதும் வீதிவலம் வருவது வழமையாகும்.


'கும்பம்' பெரிய செப்புக்குடத்தில் வேப்பம் பத்திரத்தினால் அகலமான அடித்தளம் அமைக்கப்பட்டு ,தேவையான உயரத்திற்குத் தேர்போல பூக்களாலும், வர்ணக்காகிதத்தாலும் அலங்கரித்துக் கட்டப்படுகிறது. கும்பத்தின் அடிப்பாகம் அகன்றும் மேலேசெல்லச்செல்ல ஒடுங்கியும் செல்லும்.


கும்பம், கரகம் என்பவற்றைத் தாங்கி வருபவர்களுடன் ராஜமேளம் அடிப்பவர்களும்,உடுக்கடித்து காவியங்கள் ,காவடிச் சிந்துகள் பாடுபவர்களும், பக்தர்களும் வருவார்கள்.


ஒவ்வொரு ஆலயங்களிலும் இருந்தும் புறப்படும் கும்பங்கள் மற்ற ஆலயங்களுக்குச் சென்று தரிசித்துவிட்டு புறப்பட்ட இடத்தைச் சென்றடைவதுடன் இவ்விழா நிறைவுபெறும். இதன்போது பக்கதர்கள் தம் வீட்டுவாசலில் நிறைகுடம் வைத்து கும்பத்தினை வரவேற்பர்.

படங்கள் - (NOKIA N70)
28.09.2009

Share/Save/Bookmark



Author: Unknown
•6:08 PM
குப்பை பரவுதல் எண்டால் என்னவோ ஒரு கெட்ட விசயம் எண்டமாதிரி நினைக்காதீங்கோ. இப்ப கிட்டடியில வீட்டாரோட கதைக்கேக்கை இந்தச் சொல் திரும்ப ஞாபகம் வந்தது பாருங்கோ. மற்றப் பாகங்களில என்ன மாதிரி எண்டு தெரியேல்லை, ஆனால் எங்கட ஊரில வயல் விதைப்புக் காலங்களில இந்தக் குப்பை பரவுதல் எண்ட சொல் அடிக்கடி அடிபடும். குப்பை தானாப் பரவாது பாருங்கோ. நாங்களாத்தான் பரவோணும்.

அனேகமா ஆவணிப் நடுப்பகுதி-புரட்டாசி காலகட்டத்தில நாங்கள் எங்கட பெரும்போக நெல் விதைப்புக்கு வயல்களை உழத் தொடங்கீடுவம். ஓம்...ஓம்... நீங்கள் விதைக்கிறதே ஒரு போகம்தான் அதுக்குள்ள என்ன பெரும்போகம் சிறுபோகம் எண்டு புழுகிறாய் எண்டு நீங்கள் சொல்லிறது கேக்குது பாருங்கோ. அப்பிடி உழ முன்னம் வயலுக்கு பசளை போடுற வேலைதான் இந்தக் குப்பை பரவுறது. குப்பை எண்டால், வெறும் குப்பைதான் பாருங்கோ. ஆனால் இந்தக் குப்பை சேக்கிறது பெரிய கதை.

ஒவ்வொரு நாளும் விடிய எழும்பி வீடு கூட்டிறது ஒராள் முத்தம் கூட்டிறது ஒராள் எண்டு மாறிமாறிச் செய்யிறனியள்தானே நீங்கள் எல்லாரும். (எங்கட வீட்டிலை அம்மாவும் அப்பாவும் எங்களை இது செய்ய விடேல்லை எண்டிறது வேற விசயம்). ஊரில முத்தம் கூட்டிறம் எண்ட பேரில வளவு முழுக்க கூட்டுவினம், சரிதானே. எங்கள் எல்லாருக்கும் தெரியும் எங்கட வளவுகளில ஒவ்வொரு நாளும் என்ன குப்பை சேர்றது எண்டு. என்ன சேர்றது?? சொல்லுங்கோ பாப்பம்?...கஞ்சல் அல்லது குப்பை எண்டு நாங்கள் சொல்லுற இலை குழையள் தானே. அதைத்தான் பாருங்கோ சேத்துவச்சு வயல் உழ முன்னம் வயலுக்குள்ள பரவிறது. இதுதான் நான் சொல்ல வந்த ‘குப்பை பரவுதல்'

மற்ற வீடுகளில எப்பிடியோ தெரியேல்லை, நாங்கள் குப்பை சேர்க்கிறது இப்பிடித்தான் பாருங்கோ. கீழ உள்ள படத்தை ஒருக்கா வடிவாப் பாருங்கோ.
இந்த அமைப்புத்தான் எங்கட வீட்டில குப்பை சேர்க்கிறதுக்குப் பயன் படுகிறது. வீட்டின்ர பின்பக்கம் இருக்கிற மதில் ஒரு பக்கமா இருக்க மிச்ச மூண்டு பக்கமும் நல்ல காய்ஞ்ச வடலி ஓலை அல்லது மூரி மட்டை வச்சு அடைப்பினம். ஒரு மூலையில மட்டும் ஒரு சின்ன வாசல் விடுவினம். மதிலும் வேலியும் சந்திக்கிற வாசலுக்கு எதிர்ப் பக்கமாய் இருக்கிற இடத்தில இருந்து, வளைவைக் கூட்டி அள்ளிற குப்பையை எல்லாம் கொண்டேக் கொட்டுவினம். மதில் முண்டு குடுக்கிற பக்கத்தில தொடங்கினால் கனக்கக் கொட்டலாம்தானே... அதுக்குத்தான் அந்த மூலையில் இருந்து தொடங்கிறது. சில பேர் ‘ட' பட மதில் சந்திக்கிற இடத்தில ரண்டு பக்கம் சின்ன வேலி போட்டுக் குப்பை கொட்டுவினம். அது சின்ன இடத்தில நிறையக் குப்பை கொட்டுறதுக்கு இன்னும் திறம் பாருங்கோ.

அங்கை என்ன பிளாஸ்ரிக்கும் பொலித்தீனுமா வளவுகளில கிடக்கிறது. எங்கையாவது அங்கை ஒண்டும் இங்கை ஒண்டும் இருக்கும். அதுகளை ஒரு பக்கமாய் இன்னொரு இடத்திலை எறிஞ்சிட்டு, வடிவா மக்கி எருவாகக் கூடிய இலை தழை போன்ற குப்பையளை மட்டும் நான் மேல கீறிக்காட்டின வடிவில இருக்கிற குப்பை கொட்டிற இடத்தில கொட்டுவம். இருந்திட்டு பஞ்சீல பொலித்தீன், கண்ணாடி, பிளாஸ்ரிக் எண்டு என்னத்தையாவது ஒண்டாய்க் கொண்டே கொட்டிறதை அப்பா கண்டா பேசுவார். அந்தப் பயத்திலையே சரியாக் கொட்டுறது. சில பேர் குப்பையோடு சேத்து மாட்டுச் சாணம், ஆட்டுப் புழுக்கை எல்லாம் கொட்டுவினம். நாங்களும் அப்பிடித்தான். சிலபேர் ரண்டையும் தனித்தனியாக் கொட்டிறவை.

வயல் உழுகிற காலத்துக்குக் கொஞ்ச நாளைக்கு முன்னால இந்தக் குப்பையளை ற்க்ரர் லையோ, லாண்ட் மாஸ்ரரிலையோ, மாட்டு வண்டிலிலையோ ஏத்தி வயலுக்குக் கொண்டுபோறது. நான் அறிஞ்ச காலத்தில நாங்கள் றக்ரர் இல்லையெண்டால் லாண்ட்மாஸ்ரர் மட்டும்தான் பாவிச்சனாங்கள். மாட்டு வண்டியிலை ஏத்திறது சரியான வேலை மினைக்கேடு பாருங்கோ. இதைக் ‘குப்பை ஏத்திறது' எண்டுதான் சொல்லிறனாங்கள். குப்பை ஏத்திறது எண்டால் சும்மா விசயமில்லைப் பாருங்கோ. ஒரு நாளும் ஒரு வீட்டுக் குப்பை வயலுகளுக்குக் காணாது. எவ்வளவு தட்டு வயல் கூட இருக்கோ, அவ்வளவுக்கு அவ்வளவு குப்பை கூட வேணும். இதனால எங்கட வீட்டுக் குப்பை மட்டுமில்லாமல், வயல் செய்யிறது கௌரவக் குறைவு எண்டு நினைக்கிற பலபேர் வீட்டுக் குப்பையையும் போய்க் கேட்டு வாங்கி வயலுக்குக் கொண்டுவந்து போடுவம். போட்டு கொஞ்சக்காலம் வயலுக்கை மக்கவிட்டு அதுக்குப் பிறகு உழுது பயிரிட, அனேகமா மழையும் கை கொடுத்தால் அமோகமா விளையும் நெல்.

இது தனிய நெல் வயலுக்கு மட்டும் செய்யிறேல்லை. கனபேர் தோட்டக் காணியளுக்கும் இதே முறையிலை குப்பை பரவிப் பண்படுத்திறவை. நாங்கள் வயல்க் காணியள் மட்டும்தான் செய்தனாங்கள். அதுவும் வெளிநாட்டுக்கும், கொழும்புக்கும் மாறிப் போனாக்கள் பராமரிக்கச் சொன்ன வயல்களை எல்லாம் பண்படுத்தி நெல் விதைச்சனாங்கள். சில காலங்களில சில வயல்களை (குளங்கரை, காவில், கிராய், வல்லை ஆகிய நாலு இடங்களில வயல் செய்தனாங்கள்) ஆருக்காவது குத்தகைக்குக் கொடுக்கச் சொல்லி உரிமையாளர்கள் சொன்னால், அந்தக் குத்தகைக் காசைப் பொறுப்பாக வாங்கிக் கொடுப்பதும் எங்கட வேலை. ஆனா அனேகமா நாங்கள்தான் அந்த வயல்களை விதைக்கிறது. ஆகக் குறைந்தது எங்கட உறவுகளின் 7 வீடுகளில் குப்பை ஏற்றுவதுண்டு.

நேரடியாக வயலில் இறங்கி நான் வேலை செய்யவில்லை. எல்லாம் அப்பாதான். ஆனால் இந்தக் குப்பை பரவுதல் எனக்கு ஏனோ பிடிச்சிருக்கு. உரம் போட்டுப் பண்படுத்திறம் எண்ட பேரில நிலத்தைப் புண்படுத்தாமல் இயற்கைப் பசளைகளை வீசி எறிந்து தன்னிச்சையாகவே நாங்கள் இயற்கை விவசாயம் செய்து வந்திருக்கிறோம். என்னதான் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாய் உரம் அது இது எண்டு எல்லாம் வந்தாலும், பயிரிடுவதுக்கு முன் நிலத்தைப் பண்படுத்த எங்கட ‘குப்பை பரவுதலுக்கு' நிகராக ஒண்டுமே கண்டுபிடிபடேல்லை எண்டதில பெருமையா இருக்குப் பாருங்கோ.

பி.கு-1: கனடாவிலையும் முத்தம் கூட்டுறனாங்கள், வின்ரரிலை. எல்ல குப்பை எல்லாம் வெள்ளையா, படு குளிரா இருக்கும் (ஸ்னோவைச் சொல்லுறன்). அடுத்தது வீட்டுக் குப்பைகளை அகற்ற எண்டு சொல்லி பச்சை, நீலம், சாம்பல் எண்டு மூண்டு கலரில மூண்டு கலன்கள் தந்திருக்கிறாங்கள் பாருங்கோ, வெள்ளிக்கு வெள்ளி தலையிடிதான். மற்றபடி கோடை காலத்தில Backyard இல சில பயிர்கள் போடுவினம். அதுவும் இல்லையெண்டால் அங்க வெயிலுக்க தோட்டம் செய்திட்டு இஞ்ச வந்த எங்கட சனம் முக்கால்வாசிக்கு விசர் பிடிச்சிடும்.

பி.கு-2: யாழ்ப்பாண மக்களை எங்களை விடுங்கோ. உந்த வன்னிச் சனம் மும்முரமாய் வயல் செய்யிறதுகள். இப்ப அதுகளுக்கு வாழ்க்கையே உடைஞ்ச மாதிரி. என்ர மச்சாளின்ர புருசன் சொன்னார், ‘எங்களை எங்கட சொந்த இடங்களுக்கு விட்டா வயல் செய்து இழந்த சொத்தெல்லாம் 5 வருசத்தில மீட்டிடுவன்' எண்டு. உண்மைதான் பாருங்கோ. வெளிநாடுகளுக்கு வந்து உழைக்கிறதை விட வயலை நம்பி உழைக்கலாம்தான். ஆனா எல்லாத்துக்கும் சில சில விசயங்கள் கூடி வரோணும்தானே. பாப்பம்..

விரைவில திரும்பவும் சந்திப்பம்....
Author: M.Rishan Shareef
•11:25 PM
        கோடை காலங்களில் எப்பொழுதாவது மின்சாரம் தடைப்படும் நாட்களில்தான் இரவுகளில் மொட்டைமாடியில் உறங்கும் எண்ணம் உதிக்கிறது. அதன் தரையும் வெப்பம் உமிழும்தான் எனினும் இரவில் நேரம் கடக்கும்போது தென்றல் சற்றுச் சினேகமாகி குளிராக வீசும். பகல் முழுதும் அனல் சுமந்தலைந்த காற்று, இரவாகுகையில் நிலவிடம் போய்க் குளிர்ச்சியை வாங்கிவருகிறது. இதமான ஒரு தாலாட்டினைப் போல உடல் தடவித் தடவி வீசிப் போகிறது.

        அப்படியான ஒரு நிலையில்தான் மொட்டைமாடி உறக்கம் வாய்த்தது. மொட்டைமாடிகள் அகலமான தொட்டில்கள். ஆட மாட்டாது. அசைய மாட்டாது. எனினும் மனதில் நிம்மதி நிறைந்திருப்பவர்களுக்கு அதன் பரப்பெங்கும் ஆழமான உறக்கத்தை ஏந்திவருகிறது. அறைக்குள் விடிகாலைவரை சிறு வெளிச்சமும் தன்னை அண்டாமல் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குபவர்களுக்கு மொட்டை மாடி உறக்கம் சரிப்பட்டுவராது என நினைக்கிறேன்.

        இங்கெல்லாம் விடிகாலை நான்கு மணிக்கே உலகின் முதல் கீற்று கண்தடவிப் பார்க்கிறது. பிறகு மரண வீட்டுக்குத் தொலைவிலிருந்து வரும் உறவுகள் போல, சிறிது சிறிதாகக் கீற்றுக்கள் சேர்ந்துவருகின்றன. அத்தோடு காற்றை விழுங்கிய வெயிலைப் பின்னாலேயே கூட்டிவருகின்றன.

        கோடை காலக் காலை வெயில் சுளீரென அடிக்கும். அதன் மறைமுகக் கரங்களால் 'உறங்கியது போதும்.விழித்துக்கொள்' என உடல் தட்டித் தட்டி எழுப்பும். புருவங்கள் சுருக்கி, சிறிதாய் விழி திறந்துபார்க்க வானம் மிக அழகான நீல நிறத்தைத் தன் மேல் பூசிக் குளித்து, வெயிலில் காய்ந்துகொண்டிருக்கும். மொட்டை மாடிக்கருகில் மரங்களிருப்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள். இளங்காலையில் சிறு குருவிகள், பட்சிகள் அவற்றில் வந்தமர்ந்து ஏதேதோ பேசிக் கொண்டிருக்கும். கிளியின் ஓசையை 'கீ கீ' என்பது போல, பூனையின் ஓசையை 'மியாவ்' என்பது போல சில பட்சிகளின் ஓசையை என்னால் மொழிபெயர்க்க இயலவில்லை. அதன் ஒலியை உள்வாங்கும்போது இரசிக்கத் தெரிகிறது. ஆனால் தமிழின் எந்த எழுத்துக்களால் அதனைச் சுட்டி விளிப்பது எனத் தெரியவில்லை.

        பறவைகள் மனிதரை விடவும் அறிவார்ந்தவை என எண்ணுகிறேன். சில மனிதனின் மொழியை அப்படியே உள்வாங்கி மீளப் பேசுகின்றன. அதற்காக அவை எழுதி வைத்துக் கொள்வதில்லை. ஆய்வுகள் செய்வதில்லை. ஆனாலும் பேசுகின்றன. மனிதனால் இவ்வளவு வளர்ந்தும், இவ்வளவு கற்றும் பறவைகள் தங்களுக்குள் என்ன பேசிக் கொள்கின்றன என அதன் மொழியைக் கிரகிக்க முடியவில்லை. கற்றுக் கொள்ள முடியவில்லை.

        பறவைகளுக்கும் எனக்குமான உறவுகள் சிறுவயதிலிருந்தே வாய்த்தது. எனது சிறுவயதில் எங்கள் வீட்டுக்கு முன்பிருந்த வயலில் கோவணம் கட்டி வயலுழும் விவசாயியுடனும், ஏர் சுமக்கும் எருமை மாடுகளுடனும் சேர்ந்து சேற்றில் கால்கள் முழங்கால்வரை புதையப் புதைய அலைந்திருக்கிறேன். நாற்று முளைத்து பிடுங்கி நடும் காலங்களில் நானும் என் சிறுவிரல்களால் நாற்று, நாற்றாய்ப் பிரித்து சேற்றில் ஊன்றியிருக்கிறேன். அவ்வேளை காலுக்குக் கீழால் நண்டுகள் குறுகுறுக்கும். எனினும் கடித்து வைத்ததில்லை. வயல் அறுவடைக் காலங்களில் கூலிப் பெண்கள் வெட்டித் தரும் கதிர்களைக் கட்டுக் கட்டாகக் கொண்டு சேர்த்து அடுக்கியிருக்கிறேன். உடலெல்லாம் அரிக்கும். எனினும் அதிலோர் ஆனந்தம் இருக்கிறது. பின்னர் அக் கட்டுக்களையெல்லாம் ஒன்றாக அடுக்கி, மாடுகளைக் கொண்டு கதிர்களை மிதிக்கச் செய்வார்கள். எல்லாம் முடிந்த பின் நிலத்தில் கிடக்கும் நெல்லை மட்டும் கூட்டியெடுப்பார்கள். வைக்கோல் தனியாகக் குவியும்.

        அறுவடைக் காலங்களில் சில சமயம் வெட்டப்பட்ட கதிர் நாற்றுக்களுக்குள் சின்னஞ்சிறு குருவிக் கூடுகளிருப்பதைக் கண்டிருக்கிறேன். வயற்குருவி, நெல்லுக்குருவி அல்லது மழைக்குருவியின் கூடாக இருக்கலாம். அதற்குள் சில சமயம் முட்டைகளும், குஞ்சுகளும் கூட இருந்திருக்கின்றன. வண்ண வண்ண முட்டைகளை மூலையொன்றில் ஒன்றாகச் சேர்த்துவைத்திருக்கிறேன். குஞ்சுகளை தாய்ப்பறவை வந்து எடுத்துப் போகட்டுமென அப்படியே கூட்டுக்குள் விட்டு வைத்திருக்கிறேன். மொட்டையாகிப் போன வயலில் தாய்க் குருவிகள் வந்து இரைந்து இரைந்து தன் கூட்டினைத் தேடும். தாய்க் குருவிகளைக் கண்டதும் எனது கைக்குள் கூட்டினை வைத்து வான் நோக்கி ஏந்தி நிற்பேன். அவை ஒரு போதும் அருகினில் வந்து குஞ்சுகளை எடுத்துப் போனதில்லை.

        எங்கள் வீட்டுவேலியில் அடர்ந்து போய்க் குட்டையாகி பூக்காத, காய்க்காத எலுமிச்சை மரமொன்று இருந்தது. அதன் உட்புறத்தில் ஒரு முறை கொண்டைக் குருவிகள் கூடுகட்டி விட்டன. குருவிகள் அருகிலாச் சமயம் ரகசியமாக எட்டிப் பார்ப்பேன். நான் பார்த்திருக்க முட்டையிட்டு, குஞ்சு பொறித்து, அவையெல்லாம் பறக்கப் பழகியபின்பு கூடு வெறுமையாகிப் போகும். கூடும் இற்றுப் போய்விடும். பிறகோர் நாள் சோடிக் குருவிகள் மீண்டும் பறந்துவரும். புதிதாய்க் கூடு கட்டும். முட்டையிடும். குஞ்சு பொறிக்கும். எல்லாம் பறக்கப் பழகிய பின்பு கூடு இற்றுப் போகும். இப்படியாக ஒரு சுழற்சி முறையில் நடைபெற்று வருகையில் காய்க்காத குட்டை எலுமிச்சை மரம் முட்டைகளைப் பூவாகப் பூப்பது போலவும், குஞ்சுகளைக் காயாக்கிப் பார்ப்பது போலவும் தன்னை மலடென்று காட்டிக் கொள்ளாமல் மகிழ்வோடு காற்றில் அசைந்தாடும்.

        எல்லாம் நல்லபடியாகத்தான் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஓர் நாள் ஒரு திருட்டுப் பூனை அம் மரத்தின் கிளைகளுக்கிடையில் ஒளிந்திருந்த சிறு கூட்டைத் தன் பேய்நகங்களால் பிய்த்தெறிந்து குஞ்சுகளை ருசி பார்த்து விட்டது. சோடிப் பறவை வந்து குஞ்சுகளைத் தேடிக் கீச்சிட்டு மரத்தைச் சுற்றிச் சுற்றிப் பறந்தது. அவை மரத்திடம் இது குறித்து நியாயம் கேட்பது போலத் தோன்றியது. 'நல்லபடியாகப் பார்த்துக் கொள்வாயென்றுதானே உன்னிடம் விட்டுப் போனோம்' எனச் சண்டை பிடிப்பது போலிருந்தது. அதன் பிறகு எக்காலத்திலும் அக்குருவிகள் அம்மரத்தில் கூடு கட்டவென வரவில்லை. பின்னர் எந்தக் குருவிகளும் வரவில்லை. பின்னர் மரம் குற்றவுணர்வால் இற்றுப் போகத் தொடங்கியது.

        என் வீட்டில் சிறு குழந்தைகள் நடமாடத் தொடங்கிய நேரம், வீட்டுத் திண்ணையில் எப்பொழுதும் முறுக்குத் துண்டுகள், பிஸ்கட் துகள்கள் சிதறிக் கிடக்கும். இளங்காலையிலேயே சாம்பல் குருவிகளும், மைனாக்களும் வந்து அவற்றை இரையெனக் கொத்திக் கொண்டிருக்கும். இம் மைனாக்கள் வருவதை வீட்டுச் சிறுவர்கள் மிக நன்றாக அவதானித்திருக்கிறார்கள். சிறுவர்களின் அவதானம் நம்மை விடவும் கூர்மை வாய்ந்தது. மைனாக்களுக்கு முதலில் திண்ணையில் உணவிட்டு, பிறகு தலைவாசலில் உணவிட்டு, பிறகு சிறிது சிறிதாக வீட்டுக்குள்ளேயே வந்துபோகப் பழக்கியிருந்தார்கள். அவை வெகு இயல்பாக உள்ளே வந்து உணவுண்டு சென்றன. அவை வந்து அச்சமேதுமின்றி திருப்தியோடு உண்டு செல்வது வீட்டிலிருந்த எல்லோருக்குமே மிக ஆனந்தமாக இருந்தது. பிறகு வந்த அடைமழை நாட்களில் மைனாக்கள் வரவில்லை. பெய்த மழையில் அவை தங்கள் பழகிய தடங்களை மறந்து போயிற்று. மழை அழித்துப் போயிற்று.



        அதன் பிறகு ஒரு சேவலும் கோழிகளும் வளர்த்தோம். அது அதிகாரம் அதிகமிக்க சிவப்பும் மஞ்சள் நிறமும் கலந்த அழகுச் சேவல். பெரிய சேவல். வீட்டார் தவிர்ந்த வேறு யாராவது நமது வீட்டு எல்லைக்குள் நுழைந்தால் பழக்கப்படுத்திய காவல் நாயைப் போல விரட்டி விரட்டிக் கொத்தக் கூடியது. மேலே பாய்ந்து பாய்ந்து விரட்டக் கூடியது. அது போல இல்லை அதன் பெட்டைக் கோழி. மிகச் சாதுவானது. காலையில் கூட்டினைத் திறந்துவிட்டதும் எங்கோவெல்லாம் போய் மேயும். சரியாகப் பத்து மணிக்கும் பதினொரு மணிக்குமிடையில் வீட்டுக்கு வந்து முற்றத்தில் கிடந்த அதன் கூட்டுக்குள் ஏறி முட்டையிட்டுச் செல்லும். அதன் முட்டைகளைச் சேர்த்து வைத்து நாங்கள் ஒரு முறை அதனை அடைகாக்க வைத்து பன்னிரெண்டு குஞ்சுகளைப் பெற்றோம். கைக்கடக்கமான கோழிக் குஞ்சுகள் மிக அழகானவை. அவையும் பார்த்திருக்க வளர்ந்தன.

        எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருக்கின்றன என எண்ணி மகிழ்ந்த நாட்களில்தான் கூட்டுக்குள் அடைக்கப்பட்ட கோழிக் குஞ்சுகள் ஒவ்வொன்றாகக் குறையத் தொடங்கின. சில காலையில் எழுந்து பார்க்கும் பொழுது அனாதைப் பிணங்கள் போல உடலில் காயங்களோடு முற்றத்தில் இரத்தம் வடியச் செத்துக் கிடந்தன. பிறகுதான் இரவுகளில் திருடனைப் போல வரும் கீரிப் பிள்ளைகள் வேட்டையைக் காட்டுவது புரிந்தது. நாம் ஆசையாகப் பார்த்து இரசித்து வளரும் உயிர் கண்ணெதிரே செத்துக் கிடப்பதை காணச் சகிக்கமுடிவதில்லை ஒரு போதும். மிகுந்த கவலையடையச் செய்யும் கணம் அது. பிறகு எஞ்சியிருந்த எல்லாக் கோழிகளையும் அதன் குடும்பத்தோடு விற்றுவிட்டோம்.

        அதன் பிறகு நடந்ததுதான் சுவாரஸ்யமானது. முற்றத்தில் கோழிக்கூடு பாழடைந்து போய் வெறுமையாகச் சில மாதங்கள் அப்படியே கிடந்தன. நான் அதைப் புதுப்பித்தேன். கீரிப்பிள்ளைகள் வந்துபோன ஓட்டைகளை அடைத்தேன். நெளிந்திருந்த வலைக்கம்பிகளைச் சீரமைத்தேன். உயிர்கள் வாழ்ந்துபோன பரப்பு வெறுமையாகக் கிடக்கக் கூடாதென நான் வீட்டில் சொல்லி, கழுத்தில் சிவப்பு மாலையிட்ட பச்சைக் கிளியொன்றை கடையில் வாங்கிவந்து வளர்க்கத் தொடங்கினேன். அது பேசப் பழக்கும் பருவம் தாண்டிய கிளி. கூட்டுக்குள் தவறியேனும் விரலொன்றை இட்டால் கொத்திவிடும் முரட்டுக்கிளி. கொய்யாவும், பச்சை மிளகாயும், பழங்களும், பிசைந்த சோறும், பிஸ்கட்டும் இட்டுவளர்த்து வந்தோம். அதன் கூட்டுக்குள் எப்பொழுதும் பழங்களும் உணவுப் பொருட்களும் இறைந்து கிடக்கும்.

        இதுபோல கோடை நாளொன்றின் மாலைவேளையொன்றில் அந்தக் கிளிக் கூட்டிற்கு வெளியே அடைக்கப்பட்ட வலைக்கம்பிகளில் தொங்கியபடி இன்னுமொரு கிளியைக் கண்டோம். கூட்டுக்குள்ளிருந்த கிளி தன் உணவைக் கொத்தியெடுத்து, வெளியிலிருந்த கிளிக்குத் தன் சொண்டுகளால் ஊட்டிக் கொண்டிருந்தது. இது சில நாட்கள் தொடர்ந்தது. ஒரு நாள் கூட்டின் கதவை இலேசாகத் திறந்துவைத்து தூரத்திலிருந்து பார்த்திருந்தேன். பல நிமிடங்கள் கழிந்தபின்னர் வெளியிலிருந்த கிளி தானறியாமலே உணவின் மேல் ஈர்க்கப்பட்டு, அல்லது மற்றக் கிளியின் மேல் ஈர்க்கப்பட்டு கதவு வழியாகக் கூட்டுக்குள் வந்துவிட்டது. கதவை அடைத்து விட்டேன்.

        அவை இரண்டும் கூட்டுக்குள் இடைவிடாது காதல் செய்தன. இரண்டுமாகச் சேர்ந்து உணவிடும்போது,  தண்ணீர் வைக்கும் போது என் கைகளைக் கொத்திக் காயப்படுத்தின. இனி வளர்க்கச் சரிப்பட்டு வராது என உணர்ந்த நாளில் கூட்டினைத் திறந்து கிளிகளைப் பறக்கவிட்டேன். சடசடத்துப் பறந்த கிளிகள் அருகிலிருந்த மாமரத்தில் போய் நின்றன. பிறகு எங்கோ தொலைவு நோக்கிப் பறந்தன. எப்பொழுதாவது சில கிளிகள் மாம்பழம் கொத்த வருகையில் அவற்றுக்குள் அவையிரண்டையும் கண்களால் தேடுவேன்.

        பிறகு அதே கூட்டுக்குள் லவ்பேர்ட்ஸ் வளர்த்தேன். கிளிவகைதான் எனினும் சிறியவை. பல வர்ணங்களைக் கொண்டவை. விடிகாலையில் எழுந்ததுமே வாய் ஓயாத மனிதர்களைப் போலச் சத்தமாகக் கதைத்துக் கொண்டிருப்பவை. மிக அழகானவை. இரு சோடிகள் வாங்கிவந்து கூட்டினுள் இட்டேன். ஆணும் பெண்ணுமாகத் தனித்தனியே பிரிந்து அவை காதல் செய்தன. கொஞ்சிக் கொண்டன. பருகவென வைக்கும் நீரில் குளித்துக் கொண்டன. பட்சிகளை விற்றவரின் ஆலோசனைப் படி கூட்டுக்குள் செதுக்கித் துளையிட்டு மூடிய தேங்காய் மட்டைகள் இரண்டைத் தொங்கவிட்டேன். அவை முட்டைகளிட்டன. அடை காத்தன. குஞ்சுகள் பொறித்து அவையும் வளர்ந்து பெரிதாகின. இதில் ஒரு பிரச்சினை இருந்தது. ஆண் பட்சிக்கோ, பெண் பட்சிக்கோ சோடி இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. சோடியில்லையென்றால் அத் தனிப் பட்சி மற்ற எல்லாப் பட்சிகளோடும் மிக மூர்க்கமாக, இரத்தம் கசியச் சண்டையிடும். கொத்திக் கொள்ளும்.

        அதனால் கூட்டுக்குள் தனிப்பட்சி உருவாகினால் உடனே அதனை வேறு தனிக்கூட்டுக்கு மாற்றி அதை மட்டும் விற்றுவிடுவேன்.  இப்படியாகக் குருவிகள் பார்த்திருக்கப் பெருகிற்று. உணவிட்டுச் சமாளிக்க முடியவில்லை. அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஜோடிக்கும் தனித்தனியாக தேங்காய் மட்டைகளைத் தொங்கவிடக் கூட்டுக்குள் இடமற்றுப் போயிற்று. அதைவிடவும் முக்கியமாக, விடிகாலையில் எல்லாமாக எழுப்பும் சத்தத்தில் வீட்டில் எல்லோரினதும் உறக்கம் போயிற்று. பிறகு அவற்றை அக் கூட்டோடே விற்றுவிட்டோம். இப்பொழுது முற்றத்தில் எந்தக் கூடுகளும் இல்லை. வளர்ப்புப் பட்சிகளும் இல்லை.

        இவையெல்லாம் பல வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவங்கள். நாம் நேசித்துப் பாதுகாக்கும் எதுவும் நம்மை விட்டுப் பிரிந்துபோனால் எளிதில் மறந்துவிடுவதற்கில்லை. பறவைகள் வானில் பறக்கையில் தங்கள் தடங்களை விட்டுப் போவதில்லை. மனிதக் கண்ணுக்குப் புலப்படா வான்வெளிப் பாதைகளை அவை தம் விழிகளில், பறக்கப் பயன்படும் சிறகுகளில் ஒளித்துவைத்துக் கொண்டிருக்கின்றன.  சரியான திசையில், சரியான இலக்குகளுக்குப் போய்ச் சேர அப் பாதைகள் வழிகாட்டுகின்றன. பாதைகள் மட்டுமிருப்பினும் போதாது. பறக்கும் சுதந்திரம் வேண்டும். வாழும் சுதந்திரம் வேண்டும். தனது இருப்பைத் தான் தீர்மானிக்கும் உரிமை வேண்டும்.

        பட்சிகளுக்கே இப்படியென்றால் ஆதி முதல் ஒன்றாக வாழ்ந்து வரும் ஒவ்வொரு மனிதனிடமும் வாழ்வு குறித்தான எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும்? எவ்வளவு ஆசைகள் அவனை வழிநடத்தியிருக்கும்? சுதந்திரமாக, தனது இருப்பை, தனது பாதையைத் தேர்ந்தெடுத்த மனிதன் எவ்வளவு நிம்மதியாக இருந்திருப்பான்? அவனது வசிப்பிடங்களில் பிற ஏதேனுமொரு காரணியால் அவனது அமைதிக்குப் பங்கம் வரும்வரையில் நான் மேற்சொன்ன லவ்பேர்ட்ஸ் பறவைகள் போல ஒன்றாகச் சோடியாகக் கலந்து மகிழ்வாகப் பேசி மகிழ்ந்து, சிரித்து... ஒவ்வொரு மனிதனும் தன் கணங்களை மகிழ்வோடு நகர்த்தியிருப்பான்.

        அது போன்ற மனிதர்கள்தான் இன்று முள்வேலி திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு  நகர்த்தப்பட்டிருக்கிறார்கள். எனக்கே நான் நேசித்த பட்சிகள் குறித்தான நாட்கள் இன்னும் மறக்கவில்லை. நினைக்கும் கணந்தோறும் அவை வண்ணச் சிறகுகளை அசைத்தபடியும் அதன் மொழிகளை உதிர்த்தபடியும் மனம் முழுதும் பறந்துகொண்டே இருக்கின்றன. தனக்கான மண்ணில் அழகாகக் கூடுகட்டி வாழ்ந்து, ஆயுதங்களின் அறுவடை நாளில் தம் கூட்டினைக் குடும்பத்தைத் தொலைத்துத் தனித்துப் போன அப்பாவி வயற்குருவிகளாய் இன்று அடுத்தவேளை உணவை, நீரை அந்நியரிடம் எதிர்பார்த்தபடி பசியோடும், உடல் வருத்தங்களோடும் காத்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களின் மனங்களுக்குள் எத்தனை பட்சிகள் இருக்கும்? பட்சிகளை விடுவோம். அவர்களது பால்யங்களுக்குள், பழைய நாட்களுக்குள் வந்துபோனவர்கள் சுகமாயும், வலியாயும் எத்தனை தடங்களை விட்டுப் போயிருப்பார்கள் ? அந்த மனங்களுக்குள் தாம் நேசித்த எத்தனை எத்தனை மனிதர்கள் இருப்பார்கள்? தம் வாழ்வு குறித்தான எத்தனை எத்தனை கனவுகள், ஆசைகள் இருந்திருக்கும்? எல்லாம் பொசுங்கிப் போயிற்றா ?

        நான் ஒற்றைக்கிளிக்கு உணவிட்டுக் காட்டி, தந்திரமாக மற்றக் கிளியையும் பிடித்ததைப் போல, பத்து ஏக்கர் நிலத்துக்குள், பல இலட்சம் மக்கள் சேர்க்கப்பட்டு, இன்று அடைக்கப்பட்டிருக்கிறார்கள். முள்வேலி எல்லைக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். கோழியின் குஞ்சுகளைக் கீரிப் பிள்ளைகள் இழுத்துச் சென்று, இரத்தம் வடிய வடியக் கொன்று தின்றதைப் போல இளைஞர்கள், யுவதிகள் ஏதும் செய்யவியலாக் கதறல்களுக்கு மத்தியில் எந்தத் திசைக்கென்றறியாது, என்ன நோக்கங்களுக்கென்றறியாது இழுத்துச் செல்லப்படுகிறார்கள். வாழ்வு குறித்தான உரிமைகளும், ஆசைகளும், கனவுகளும் அப்படியே அழிந்து போக சடலங்களாகிப் போகிறார்கள். முள்வேலிக்குள் அகப்பட்டுக்கொண்டிருக்கும் எல்லா உயிர்களின் வாழும் உரிமையை, இருப்பின் அசைவுகளை அதைத் தாண்டிய ஆயுதக் கரங்கள் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன.

        நம் உடலில் சாதாரண ஒரு சிறு கீறலுக்கே எவ்வளவு துடித்துப் போகிறோம்? சிறு உராய்வு, குருதிக் கசிவுக்கே எத்தனை மருந்திடுகிறோம்? அங்கெல்லாம் அழிவாயுதங்கள் தம் பசி போகச் சப்பித் துப்பியவையாய் அங்கவீனர்களாக கை இழந்து, கால் இழந்து எஞ்சிய உயிரோடும், எஞ்சிய உடலுறுப்புக்களோடும் ஒழுங்கான மருத்துவ வசதிகளின்றி, வலிகளில் துடித்தபடி பல்லாயிரக் கணக்கானோர், ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகப் பரிதவித்துக் கிடக்கிறார்கள். உறவுகள் அழுதழுது ஓய்ந்து பார்த்திருக்கப் பலர் செத்துப் போகிறார்கள். இன்னும் ஒரு வேளை உணவின்றி, நீரின்றி பட்டினியால் பலர் செத்துப் போகத் தொடங்கியிருக்கிறார்கள். நாம் நேசிக்கும் உயிர்கள் நாம் பார்த்திருக்க உயிரற்றுப் போவதென்பது, அசைவற்றுப் போவதென்பது எவ்வளவு வேதனைக்குரிய விடயம்? எவ்வளவு துயரத்தை அது எடுத்துவரும்?

        அந்தத் துயரங்களையெல்லாம் மனதிலும் உடலிலும் சுமந்தவாறு அங்கு உங்கள் தாய், தந்தையரைப் போன்றே பெற்றவர்கள் இருக்கிறார்கள். உங்கள் நண்பர்களைப் போன்றே நண்பர்கள் இருக்கிறார்கள். உங்கள் பெண்களைப் போன்றே பெண்கள் இருக்கிறார்கள். உங்கள் குழந்தைகளைப் போன்றே குழந்தைகள் இருக்கிறார்கள். எல்லோருமாக மொத்தத்தில் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் இருக்கிறார்கள். எல்லோருக்குமாக வதைப்படவும் ஆயுதங்களாலும், பட்டினியாலும், நோயாலும் செத்துப் போகவும் இப்பொழுது இருப்பவர்கள் மட்டும் போதும்.

        இன்னும் முந்தைய வலிகளின்போது வடுக்கள் சுமந்து, உயிர் வாழவென அகன்றுபோய் வேற்று தேசங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களையெல்லாம் மீளவும் தம் தேசத்துக்கு அழைத்துக் கொள்ளப்போவதாகக் காற்றோடு வரும் செய்திகள் சொல்கின்றன. இருப்பவர்களுக்கே இடமற்று, உணவற்று, நீரற்றுப் போனநிலையில், இருப்பவர்களுக்கே வாழும் உரிமைகளற்ற நிலையில், எம் அகதிகளை ஏந்தியிருக்கும் நாடுகளே... அது மட்டும் உண்மையானால்,  உங்களையே நம்பிவந்த எம் மக்களை, உங்கள் சக மனிதர்களை இம் முட்சிறைகளுக்குத் திருப்பியனுப்பிவிடாதீர்கள்.  உங்கள் தேசத்தின் ஒரு மூலையில் அவர்கள் உயிருடனாவது வாழ்ந்துவிட்டுப் போகட்டும்.

        கொல்லும்போது வெறுமனே பார்த்திருந்தது போல, கொல்லப்படவும் மனிதர்களை அனுப்பி அவர்களது கண்ணீரால், இரத்தத்தால், உயிர்களால் உங்களுக்கான சாபங்களை நிரப்பிக்கொள்ளவேண்டாம்.
இறுதியாக எனது பழைய கவிதையொன்று !




எலும்புக்கூட்டு ராஜ்ஜியங்கள்


காற்றினைப் போல்
எங்கள் வாழ்க்கை
ஓரிலக்கில்லாமலும்...
அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டும்...

ஓடும் நதியினைப் போல்
எங்கள் பயணம்
ஓரிடத்தில் தரித்திருக்க முடியாமலும்...
திக்குதிசையின்றி பாய்ந்தோடிக்கொண்டும்...

வானவில்லினைப் போல்
எங்கள் சந்தோஷம்
நிலைத்து நிற்காமலும்...
உடனே கலைந்து போவதாயும்...

மயானபூமியைப் போல்
எங்கள் கனவுகள்
பயமுறுத்தும் அமைதியோடும்...
எலும்புக்கூடுகளின் ராஜ்ஜியங்களோடும்...

பாழடைந்த வீட்டினைப் போல்
எங்கள் எதிர்காலம்
எப்பொழுதும் பயமுறுத்திக்கொண்டும்...
எவராலும் கவனிக்கப்படாமலும்...

மீஸான்கட்டைகளைப் போல்
எங்கள் சமூகம்
அழிந்துகொண்டே இருப்பதாயும்...
அடையாளத்துக்காக வேண்டி மட்டுமாயும்...

மணல்மேட்டினைப் போல்
எங்கள் தேசம்
சரிந்துகொண்டே இருப்பதாயும்...
விலங்குகளின் எச்சங்களைச் சுமந்துகொண்டும்...

ஊசலாடும் ஒட்டடைகளைப்போல்
எங்கள் உயிர்கள்
எவராலும் வேண்டப்படாத குப்பையாயும்...
எப்பொழுதிலும் அறுந்துவிழக்கூடியதாயும்...

எங்களது உயிர்கள்
எடுக்கப்படும் கணப்பொழுதுகளில்
என்ன செய்துகொண்டிருப்பீர் தோழரே..
ஓர் அழகிய பாடலின்
ஆரம்ப வரிகளை
முணுமுணுத்துக் கொண்டிருப்பீரோ...?

* மீஸான் கட்டை - கல்லறை அடையாளம் / நடுகல்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


# நன்றி - யுகமாயினி இதழ் - ஜூலை, 2009

# நன்றி - புகலி இணைய இதழ்
# நன்றி - திண்ணை இணைய இதழ்