Author: வந்தியத்தேவன்
•1:44 AM
இண்டைக்கு காலமை ஒரு பள்ளிக்கூடப் பொடியன் நேரத்திற்க்கு பள்ளிக்கூடத்தால் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். ஏன் நேரத்திற்க்கு வீட்டுக்குபோகிறீர்கள் எனக்கேட்டால், சோதனை முடிச்சுபோச்சு அதுதான் வீட்டைபோறம் என்றார். எனக்கு உடனே என்னுடைய பாடசாலை சோதனைக்காலம் நினைவுக்கு வந்தது. நுளம்புத் திரியை ஒரு 13 ஆண்டுகளுக்கு முன்னர் சுத்துங்கள்.

உலகத்திலை உள்ள அனைவருக்கும் பிடித்த பருவம் மாணவப் பருவம் தான். எங்கட மாணவப் பருவத்திலை எத்தனையோ கஸ்டங்களுக்கு மத்தியில் படித்தவர்கள் தான் நாங்கள். மண்ணெண்னெய் விளக்கு, தேங்காய் எண்ணெயில் சிக்கன விளக்கு, மெழுகுதிரி, பள்ளிக்கு போகும் போது பொம்மர் அடிப்பான், நேவி சுடும், ஷெல் விழும் இத்தனைக்கும் மத்தியில் படித்து சாதனை செய்தவர்கள் நாங்கள்.

இந்தக் கஸ்டத்திலும் படிப்புடன் ஏனைய உப தொழில்கள் ஆன கிரிக்கெட் விளையாடுதல், கள்ள மாங்காய், விளங்காய் அடித்தல் போன்றவற்றுடன் எங்கள் பாடசாலை கடலுக்குப் பக்கத்திலை இருந்தபடியால் குளிக்கவும் பழகிக்கொண்டோம்.



பெரும்பாலும் முதல் தவணை விளையாட்டுப் போட்டியுடன் போவிடும் என்பதால் பெரிதாக குழப்படி செய்ய அப்ப வாய்ப்பில்லை. இரண்டும் மூன்றும் தான் எங்கள் ஆதர்ச காலம். இரண்டாம் தவணை விடுமுறை ஆகஸ்டில் வரும். அதனால் சோதனையை ஜூலையில் வைப்பார்கள். சோதனை முடிந்தவுடனை பள்ளிக்கூடம் விட்டுவிடும் வழமைபோல் இரண்டு மணிக்கெல்லாம் விடமாட்டார்கள். எப்படியும் 12 மணிக்கு முன்னம் பள்ளிக்கூடம் விட்டுவிடும். 2 மணிக்கு முன்னம் வீட்டைபோய் என்ன செய்வது, உடனடியாக பக்கத்திலை இருக்கின்ற கடலிலை கும்மாளம் இடுவதுதான் எங்கள் தலையாய கடமை.



நாங்கள் குளிக்கிற கடல் பருத்திதுறை துறைமுகக் கடல் ஜெட்டியடி என்பார்கள். எங்கடை பள்ளிக்கு பக்கத்திலை கடல். எங்கடை வகுப்பிலிருந்து பார்த்தால் கடல் தெரியும். சோதனை முடிஞ்ச உடனே ஜெட்டிக்கு படை எடுப்போம். அடுத்த நாள் சோதனைக்கு படிக்கிற நல்ல பொடியள் மட்டும் வரமாட்டார்கள். மற்றவர்கள் எல்லாம் போய்விடுவோம். சிலர் மாற்று காற்சட்டை கொண்டுவருவார்கள், ஏனையவர்கள் போட்டிருந்த காற்சட்டையுடன் தான் குளிப்பது. (காற்சட்டைக் காலம் ஆண்டு 9) ஏஎல்லுக்கு வந்தப்பின்னர் நாங்களும் மாற்று உடுப்புடன் வரப்பழகிக்கொண்டோம்.

நன்றாக நீந்தக்கூடிய பொடியள் கரையிலிருந்து கொஞ்சம் தூரம் செல்வார்கள். அந்தப் பகுதியில் கடல் மண் கடலாக இருப்பதாலும் கரையிலிருந்து ஒரு 15 மீற்றர் தூரத்தில் அவ்வளவு தாழம்(ஆழம்) குறைவாக இருப்பதாலும் (இடுப்பளவுக்கு தண்ணீர்) அப்படியும் கஸ்டப்பட்டு நீந்தி அந்த மணல் திட்டிக்குச் சென்றுவிடுவோம். பிறெகென்ன 2 மணி வரையும் கும்மாளம் தான். சிலவேளை கொஞ்சம் பிந்தினாலும் வீட்டிலை ஸ்பெசல் கிளாஸ் என்று கதைவிடுகிறது.

மணல் திட்டியில் நீந்துவதில் ஒரு நன்மை பக்கத்துப் பள்ளிக்கூட பெண்பிள்ளைகள் கடற்கரையால் செல்லும் போது யார் யார் குளிக்கின்றார்கள் எனப் பார்த்துவிட்டு வீட்டிலை போய் கோள்மூட்டிப்போடுவார்கள். அதனால் அவர்களுக்குப் பயந்து கொஞ்சம் தள்ளிப்போய் இல்லையென்டால் அவர்கள் அந்தப்பக்கதால் போகும்போது முகத்தை மூடி தப்பிப்பது வழக்கம்.

ஜெட்டியில் சாமான் இறக்க போட்டிருக்கும் மேடையிலிருந்து கடலுக்குள் குதிப்பது ஒரு திகில் அனுபவம். சிலவேளை யாராவது ஒருவர் குளிக்காமல் அதில் இருந்து வேடிக்கை பார்த்தால் அவனை அப்படியே கடலுக்குள் தள்ளிவிட்டுவிடுவார்கள். பாடசாலைச் சீருடையுடன் அவன் தத்தளிக்கவேண்டியதுதான். நீச்சல் தெரியாதவர்கள் கரையிலிருந்து தெப்பலடிப்பார்கள். கடலில் குளித்தால் கறுத்துப்போவோம் என்ற வதந்தி அந்த நாளில் அடிபட்டது. அதனால் சிவலைப்பொடியள் குளிக்கப் பஞ்சிப்படுவார்கள்.

டிசம்பர் விடுமுறை மழைக்காலம் என்பதால் கடல் கொந்தளிப்பான நிலையில் இருக்கும். ஆகவே அந்த நாட்களில் கடலில் குளிப்பது இல்லை. அப்போ எங்களுக்கு குளிக்கும் இடங்கள் கோயில் கேணிகளும் குளங்களும் தான்.

வியாபாரிமூலை வீரபத்திரர் கோயில் கேணி, மெதடிஸ் பெண்கள் பாடசாலைக்குப் பக்கதிலிருக்கின்ற அம்மன் கோயில் கேணி, வல்லிபுரக் கோயில் கேணி என சில கேணிகளும், வல்லிபுரக்கோவில் பக்கத்தில் இருக்கும் துன்னாலை குருக்கட்டு பிள்ளையார் கோயில் குளம், அத்துளுவில் உள்ள ஒரு குளம் போன்றவை நாம் குளிக்கும் குளம். துன்னாலையிலுள்ள தாமரைக்குளத்தடிக் குளத்தில் முதலை இருக்கிறது எனப் அந்த நாளில் பயப்படுத்தியபடியால் அங்கே போவதில்லை. ஆனால் தாமரைக்கொடி ஆளைச் சுற்றினால் எடுப்பது கஸ்டம் என்பார்கள்.



கேணியிலை குளிக்கிறதென்றால் குதித்து(டைவ்) எல்லாம் விளையாடலாம். மழை நாளில் நிறையத் தண்ணி நிற்கும். சிலவேளை குதிக்கும் போது படி இடிக்கும்.

எங்கடை பக்கம் ஆறில்லை இருப்பதோ இரண்டே இரண்டு ஆறு ஒன்று தொண்டைமானாறு, இன்னொன்று வழுக்கியாறு. தொண்டைமானாற்றில் கோடைகாலத்திலும் ஓரளவு தண்ணிர் இருக்கும். ஆனால் வழுக்கியாற்றில் மழை பெய்தால் தான் தண்ணீர்.

செல்வச் சந்நிதி திருவிழாக்காலங்களில் தொண்டைமானாற்றில் குளித்திருக்கின்றோம். மற்றும் படி ஆற்றில் குளிக்கப் பயம் ஆறு அடிச்சுக்கொண்டு போய்விடும் என்பார்கள்.

பின்னர் வாழ்க்கை தென்னிலங்கைக்கு மாறியபின்னர் மகாவலியிலும் மாணிக்க கங்கையிலும் குளித்திருக்கின்றோம். தண்ணி சும்மா ஜில்லென்று குளிராக இருக்கும். அதிலும் கதிர்காமம் போனால் விடியப்புறம் மாணிக்ககங்கையில் குளிப்பது என்பது சொர்க்கம் தான்.



இலங்கை ஒரு தீவாக இருப்பதால், கடற்கரைக் குளியல்கள் இங்கே பிரசித்தம். கிழக்கே திருகோணமலையில் புறாத்தீவுக் கடற்கரையும் மட்டக்களப்பில் அறுகம்குடாவும், வடக்கே காரைநகர் கசூரினா பீச், தெற்கே காலி உனவட்டுன கடற்கரை, மேற்கே காலிமுகத் திடலும் நீர்கொழும்புக் கடற்கரைகளும் உலகப் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள்.

காலமை ‍- காலை

கதைவிடுகிறது -புளுகுதல்(பொய்யாக புனை கதை சொல்லல்)

கோள் மூட்டுதல் - போட்டுக்கொடுத்தல் இல்லாத பொல்லாத கதைகளைச் சொல்லி ஒருவர் மீது வத்தி வைத்தல்

தெப்பலடிப்பது - கைகால்களை தண்ணியின் மேல் அடித்து நீந்துவது போல் பாவ்லா காட்டுவது.

பஞ்சி - சோம்பல் இண்டைக்கு புளொக் எழுத எனக்கு சரியான பஞ்சியாக் கிடக்கு

கேணி - தெப்பக்குளம் பெரும்பாலும் கோயில்களில் இறைவனை தீர்த்தமாட அழைத்துச் செல்லும் இடம்.
Author: கானா பிரபா
•1:19 AM

நல்லை நகர் கந்தனுக்கு முதலில் கோயில் கட்டப்பட்டது கி.பி.948 ஆம் ஆண்டிலா அல்லது கி.பி 1248 ஆம் ஆண்டிலா என்பது முடிவு செய்யப்படவேண்டியதொன்றாகும். முதலாவது ஆலயம் கி.பி 948 ஆம் ஆண்டிலே கட்டப்பட்டதெனக் கொண்டால் அது இராசப் பிரதிநிதியாக விளங்கிய புவனேகபாகுவினால் பூநகரி நல்லூரிலே கட்டப்பட்டதாகும். அவ்வாறன்றி முதலாவது ஆலயம் கி.பி.1248 ஆம் ஆண்டு காலிங்க ஆரியச் சக்கரவர்த்தியின் மந்திரியாகவிருந்த புவனேகபாகுவினால் கட்டப்பட்டதாயின் யாழ்ப்பாண நல்லூரிலே அமைக்கப்பட்டிருக்கவேண்டும். இவ்விரு கருத்துக்களிலே பின்னதே சாத்தியமானதும் ஏற்றதுமாகவுள்ளது. இந்த ஆலயம் இருந்த இடத்திலேயே தற்போதுள்ள நல்லைக்கந்தன் ஆலயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகின்றனர்.

நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை முதன்முதலாகக் கட்டிய புவனேகபாகு என்ற பெயர் கொண்டவர் யார்?
கல்வெட்டாதாரங்களும், செப்பேட்டாதாரங்களும் இவர் குறித்துக் கிடையாவிடினும், நூலாதாரங்களும் பதிவேட்டுக் குறிப்பாதாரங்களும் உள்ளன. அவை:

"சிங்கையாரியன் சந்தோஷத்திடனிசைந்து கலைவல்ல சிகாமணியாகிய புவனேகவாகு வென்னும் மந்திரியையும் காசி நகர்க் குலோத்துங்கனாகிய கெங்காதர ஐயரெனுங் குருவையும் அழைத்துக் கொண்டு, தனது பரிவாரங்களுடன் யாழ்ப்பாணம் வந்திறங்கினான்" என்று யாழ்ப்பாணச் சரித்திரம் என்ற நூலில் ஜோன் கூறுகிறார். (ஜோன் எஸ் 1882)
சிங்கையாரிய மகாராசன் இப்படியே அரசாட்சியைக் கைப்பற்றி நடாத்தி வருகையில் புறமதில் வேலையுங் கந்தசுவாமி கோயிலையும் சாலிவாகன சகாப்தம் 870 ஆம் வருஷத்தில் புவனேகவாகு என்னும் மந்திரி நிறைவேற்றினான்" என யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூல் கூறுகின்றது. (வைபவ மாலை 1949)

"சிறீமான் மஹாராஜாதிராஜ
அகண்ட பூமண்டலப்ர
தியதிகந்தர விச்றாந்த கீர்த்தி
சிறீ கஜவல்லி மகாவல்லி
சமேத சுப்பிரமண்ய
பாதார விந்த ஜநாதிருட சோடக
மகாதான சூர்யகுல
வம்சோத்பவ சிறீசங்க
போதி புவனேகவாகு"

நல்லூர்க் கோயிலைக் கட்டிய புவனேக பாகு கோயிற் கட்டியத்தில் இன்றும் இவ்வாறு போற்றப்படுகின்றார். இக்கட்டியத்தின் அர்த்தம் வருமாறு:
திருவருட் சக்திகளான வள்ளியம்மனும், தெய்வயானையம்மனும் ஒருங்கே பொருந்த வீற்றிருக்கும் சுப்பிரமணியப் பெருமானின் திருவடித் தாமரைகளை வணங்குபவனும், மன்னர்களுள் மன்னனும், செல்வங்களை உடையவனும், மிகப் பரந்த பூமியடங்கலுமுள்ள
திசைகள் எல்லாவற்றிலும் பரவிய புகழுடையவனும், மக்களுடைய தலைவனும், முதலாம் பெரிய தானங்களைச் செய்பவனும், சூரிய குலத்திலே தோன்றியவனும், சிறீ சங்கபோதி என்னும் விருதுப் பெயர் தரித்தவனுமாகிய புவனேகவாகு.

யாழ்ப்பாணக் கச்சேரியில் 1882 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சைவசமயக் கோயில்கள் பதிவேட்டில் பின்வருமாறு காணப்படுகின்றது.

"கந்தசுவாமி கோயில், குருக்கள் வளவு என்ற காணியிற் கட்டப்பெற்றுள்ளது. இது தமிழ் அரசன் ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம மந்திரி புவனேகவாகரால் 884 ஆம் ஆண்டளவிற் கட்டப்பெற்றது. (குலசபாநாதன் 1971) நல்லூர்க் கந்தசுவாமி கோயில் பிரதம குருக்களாகவிருந்த சுப்பையா என்பார் 1811 இல் ஆள்வோருக்கு அழுதிய முறைப்பாடு ஒன்றில், கோயிலைக் கட்டியவர் பெயர் புவனேகன்கோ (Pooveneageangoo) எனக் குறிப்பிட்டுள்ளார். (Jhonson Alexander - 1916/17)

தகவற் குறிப்புக்கள் ஆதாரம்:
"ஈழத்தவர் வரலாறு"
இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000
ஆக்கியோன்- கலாநிதி க.குணராசா
புகைப்பட உதவி:
Virutal tourist சுற்றுலாத் தளம்
Author: வர்மா
•7:29 AM
நல்லூர் கோயில் மூன்றாம் நாள் திருவிழா படங்களை ஈழத்து முற்றத்தில் பதிகிறேன்.





Author: Unknown
•4:31 AM
எனக்குத் தெரிஞ்ச மட்டில ஒரு காலத்தில, அதாவது 1996க்கு முன் பருத்தித்துறை கூட எங்களுக்கு ஒரு வெளியூர் மாதிரி இருந்தது. அப்பா சைக்கிளில அல்லது ஏதேனும் அவசரம் எண்டால் மோட்டார் சைக்கிளில் பருத்தித்துறைக்குப் போவார். யாழ்ப்பாணம் போறது வெளிநாடு போறமாதிரி (எல்லாம் வெடிவால் முளைக்கும் வரைதான்). நான் அப்போ ஒருமுறைக்குமேல் போன அதிகதூரம், மந்திகை ஆஸ்பத்திரி. தம்பி பிறந்த போது ஒருக்கால், அக்காவுக்கு மகன் பிறந்த போது ஒருக்கால், மச்சளுக்கு மகள்கள் பிறந்தபோது இரண்டுதரம் என்று பத்து வயதுக்குள்ளாகவே நான்கு தரம் போய்வந்த இடம் மந்திகை ஆஸ்பத்திரிதான். அப்பா பருத்தித்துறையில இருக்கிற காணிக்கந்தோருக்குப் போய் வரும் நாட்களிலெல்லாம் அப்பாவின் வரவை மனம் எதிர்பார்த்துக் காத்திருக்கும். ஏனெண்டால், அவர் வாங்கிவரும் கள்ளத்தீனுக்காக.

கள்ளத்தீன் எண்டால், கடையில வாங்கிச் சாப்பிடுற வடை, போண்டா, வாய்ப்பன் முதலான வீட்டில் செய்யப்படாத பொருட்கள். எங்கள் ஊரில் கடையில் வாங்கிச் சாப்பிடுகிற இடியப்பம், பிட்டு எல்லாமே கள்ளத்தீன் தான். இதனால அப்பா பருத்தித்துறையிலிருந்து என்ன வாங்கிவந்தாலும் அது கள்ளத்தீன் என்றே அழைக்கப்பட்டது. அப்பா பருத்தித்துறையிலிருந்து வாங்கிவரக்கூடிய கள்ளத்தீன்களில் சிறப்பானவை தோசை, வெள்ளையப்பம், தட்டவடை ஆகிய மூன்றும். உழுந்துவடை, பருப்புவடை, போளி போன்றன யாழ்ப்பாணம் போய்வரும்போது வாங்கிவருவார். வல்வெட்டித்துறைப் பக்கம் போனால் எள்ளுப்பா. இந்த உணவுகளைப் பற்றி கொஞ்சம் கதைப்போமே.

பருத்தித்துறை தோசையின் புகழுக்குக் காரணம், அதன் அளவு. சின்னவயதில் எனக்கெல்லாம் ஒரு தோசை சாப்பிட்ட இரண்டு நாளைக்கு நிற்கும். அநேகமாக இரண்டு வகை சம்பல் தருவார்கள். பச்சை மிளகாயில் அரைத்த பச்சைச் சம்பல் அல்லது வெள்ளைச் சம்பல் என்று அழைக்கப்படும் சம்பல் ஒன்று, மற்றது செத்தல் மிளகாயில் அரைக்கப்பட்ட உருது சம்பல் அல்லது சிவத்த சம்பல். இதோ, எழுதும் போதே எச்சில் ஊறுகிறது. அதே போல் பருத்தித்துறை வெள்ளையப்பமும் ஒரு சிறப்பான விஷயம். எங்கள் அம்மா எத்தனை முறை முயன்றும் அந்த மென்மையும், சுவையும் வரவில்லை. வெள்ளையப்பத்துக்கான ஸ்பெஷலான சம்பலோடு ஒரு பதினைந்து வெள்ளையப்பம் உள்ளே இறங்கினாலும் வயிறு நிரம்பாது. அப்படி பூ போல இருக்கும் வெள்ளையப்பம்.

தட்டவடையும் அப்படியே. அந்த ருசியை எங்கள் வீட்டுப் பெண்களால் ஏனோ கொண்டுவர முடிவதில்லை. 2002க்குப் பின்னான சமாதான காலத்தில் ஊருக்குவந்த பெரிசுகள் எல்லாரும் கேட்டு வாங்கி வெளிநாட்டுக்குக் கொண்டு போனது பருத்தித்துறைத் தட்டவடையை தான். இதுவும் கணக்கில்லாமல் சாப்பிடத் தூண்டும் ஒரு போதை வஸ்து என்றே சொல்லலாம். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது, எனக்கு இரவில் சாப்பாட்டுக்குப் பின் இரண்டு பருத்தித்துறைத் தட்டவடையைக் கொறித்துவிட்டுப் படுத்தால் காலையில் வயிறு அற்புதமாகச் சுத்தமாகும். நம்வீட்டுப் பெண்கள் சுடும் தட்டவடையைச் சாப்பிட்டால்...ம்ஹூம் அதை எல்லாம் இங்க சொல்லமுடியாது.

இந்த உணவு வகைகள் பருத்தித்துறையில் பரவியிருந்த பல உணவகங்களில் கிடைத்தன. ஆனால் வெள்ளையப்பமும், தோசையும் உணவகங்களில் வாங்கிச் சுவைப்பதை விட, பருத்தித்துறையின் குறுக்குத் தெருக்களிலுள்ள வீடுகளின் மதில்களில் சின்னதாக ஓட்டை போட்டு, சின்னச் சின்ன கதவுகள் போட்டு பெரும்பாலும் காலை அல்லது மாலையில் கடைவிரிக்கும் அந்த ஊர்ப் பெண்களின் கையால் கிடைக்கும் தோசை அல்லது அப்பம்தான் சிறப்பானது. என்ன இவர்களின் சில கடைகளின் முன்னால் சாக்கடை ஓடும். அப்படியான கடைகளைத் தவிர்க்க வேண்டும். என்னுடைய ஊர் வாழ்க்கையின் கடைசிக் காலங்களில் அங்கே ‘ராஜா' உணவகம் என்று ஒருவரின் கடையில் இவையெல்லாம் சுத்தமாகக் கிடைத்தன.

ராஜாவும் இன்னும் சில உணவகத்தாரும் காலையிலேயே தோசை, வெள்ளையப்பம் விற்க ஆரம்பித்தார்கள். அப்போ அதிகாலையில் ரியூசனுக்குப் போகிறபடியால் வீட்டில் தரும் காசில் பருத்தித்துறையில் வாங்கி உண்ண ஆரம்பித்தோம் (பள்ளியும், ரியூசனும் பருத்தித்துறையில்தான் அமைந்திருந்தன). நாங்கள் காலையிலேயே வெள்ளையப்பம். தோசை எல்லாம் இறுக்கிவிட்டுப் போவது வழக்கம். அப்படியான நாட்களில் வகுப்பில் தூங்காமல் இருப்பதற்குப் படும் பாடுதான் அதிகம். ஒருமுறை நூலகத்தில் தூங்கி ரகுவரன் ஆசிரியரிடம் திட்டு வாங்கியதும் அதிகம். கொஞ்சக் காலம் போனதும் புரிந்தது, அந்தத் தூக்கம் பருத்தித்துறை தோசை அல்லது வெள்ளையப்ப மகிமை என்று. என்னதான் வாத்திமாரிடம் அடிவாங்கும் அபாயம் இருந்தாலும், தோசை, வெள்ளையப்பம் சாப்பிடும் அந்த அபாரமான அனுவத்தை விட்டுக்கொடுக்க முடியவில்லை. நான் இன்னொருமுறை ஊர் மீளும்போது அந்த அபார அனுபவம் கிடைக்குமா என்பது சந்தேகம். யாராவது சமீபத்தில் பருத்தித்துறைப் பக்கம் போயிருந்தால் சொல்லுங்களேன்... தோசையும், வெள்ளையப்பமும், தட்டவடையும் இன்றைக்கும் விற்கிறார்களா??

Author: கானா பிரபா
•8:17 PM
யாழ்ப்பாண இராசதானியின் தலைநகராக விளங்கிய நல்லூரைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர் இங்கிருந்த கோட்டையையும், ஆலயங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கியிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. ஆ.முத்துத் தம்பிப் பிள்ளை தமது யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலில் நல்லூர் இராசதானிக்குரிய கற்சாசனங்களும், கற்றூண்களும் யாழ்ப்பாணக் கோட்டையில் வைத்துக் கட்டியிருப்பதாகச் சொல்கின்றார். கோட்டையின் மேற்குப் பாகத்தில் வெளிப்புறங்களில் வைத்துக் கட்டப்பட்டுள்ள கற்றூண்கள் பல நல்லூர் இராசதானிக்குரியவை என்பதை அடையாளம் காட்டுக்கின்றன. இவற்றில் ஒரு தூணில் உள்ள நேர்த்தியான தாமரைச் சிற்பம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

இதற்கு ஆதாரமாக வரும் யாழ்ப்பாண வைபவ மாலையில் வரும் கூற்று மேலும் ஆதாரமாக அமைகின்றது.

"பறங்கிகள் ஆட்சியினை ஒப்புக்கொண்டு
நல்லூரிற்குள்ளே குடியிருந்து கொண்டு
தங்கள் கருமங்களை நடத்திப் புறக்
கோட்டை மதில்களை இடிப்பித்து அக்
கற்களைக் கொண்டு போய்க் கடல்
ஓரத்திலே சங்கிலியரசன் இடிப்பித்துப்
பரவிவிட்ட தங்கள் கோட்டையை மறுபடி
கோட்டையாகக் கட்டி அதன் கீழ்ப்
புறத்திலே வீடுகளையும் அரசாட்சி
மண்டபங்களையும் கட்டுவித்துக் குடிக:
சமீபத்தில் வீடுகட்டி வந்திருக்கும் படி
வசதி பண்ணினார்கள்".

தற்போதய நல்லூர்ப் பிராந்தியத்தில் யாழ்ப்பாண மன்னர் காலக் கட்டடங்கள் எவையும் முழுமையாக இல்லாவிட்டாலும், அங்குள்ள மந்திரி மனை, சங்கிலியன் தோப்பு, இராசாவின் தோட்டம், பண்டார மாளிகை, பண்டாரக் குளம் போன்ற பெயர்களும், இவ்விடங்களில் அழிந்த நிலையில் உள்ள கட்டிடச் சிதைவுகளும் அக்கால நல்லூர் இராசதானியை நினைவுபடுத்துவனவாக உள்ளன.

விரிவான வரலாறு அம்சங்களைத் தொடந்து வரும் பதிவுகளில் நோக்குவோம்

மூலக்குறிப்புக்கள் உதவி: "யாழ்ப்பாண இராச்சியம்", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம் புகைப்படம்: 2005 ஆம் ஆண்டு யாழ் சென்றிருந்த போது என்னால் எடுக்கப்பட்டது.
Author: கானா பிரபா
•5:28 PM

யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகர் நல்லூர் (நல்ல ஊர்) என்று அழைக்கப்பட்டமை குறிப்பிடற்பாலது. இது தமிழகத்திலுள்ள இடமொன்றின் பெயராகும். தமிழகத்திலே ஆதிச்ச நல்லூர், சக்கரவர்த்தி நல்லூர், வெண்ணை நல்லூர், சேய் நல்லூர், வீரா நல்லூர், சிறுத்தொண்டர் நல்லூர், கடைய நல்லூர், சிங்க நல்லூர் முதலிய பல இடங்களுண்டு. இத்தகைய இடமொன்றிலிருந்து இங்கு வந்தோர் தமது தாயகப் பெயரை இப்புதிய இடத்திற்குச் சூடியிருப்பர். யாழ்ப்பாணத்திற்கு தெற்கே பூநகிரி, திருகோணமலை முதலிய இடங்களிலும் நல்லூர் என்ற பெயர் தாங்கிய ஊர் உண்டு.நல்லூரிலே உள்ள பழைய பிரதான சிவாலயங்களிலொன்று சட்டநாதர் ஆலயமாகும். தமிழகத்திலே திருஞான சம்பந்தர், முத்துத் தாண்டவர் முதலியோர் பிறந்த சீர்காழியிலும் சட்டநாதர் ஆலயமுண்டு என்பதும் இங்கு ஒப்பிட்டு நோக்கற்பாலது.

இவ்வாறு பலதிறப்பட்ட மூலாதாரங்களைப் பயன்படுத்தியே யாழ்ப்பாண அரசு குறிப்பாக அதன் தலைநகர் நல்லூர் பற்றி ஓரளவாவது அறியக்கூடியதாகவுள்ளது. ஏற்கனவே முக்கியத்துவம் வாய்ந்த ஒருபகுதியாயிருந்து சோழப் பேரரசு தொடர்ந்து ஏற்பட்ட பாண்டியப் பேரரசு ஆட்சிக் காலங்களிலே முக்கியத்துவம் பெற்ற நல்லூர், கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் உதயம் பெற்ற தமிழரசின் தலைநகராகச் சுமார் நான்கு
நூற்றாண்டுகளாக விளங்கியுள்ளது. இவ்வரசு இலங்கையிலுள்ள வட பிராந்தியத்திலுள்ள அரசு போலக் காணப்படினும், இதிலிருந்து ஆட்சி புரிந்த அரசர்கள் முழு இலங்கையிலும் தமது ஆதிக்கத்தை ஏற்படுத்த முயன்று வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்விராசதானி அமைந்திருந்த உண்மையான இடத்தையோ அல்லது அதன் விஸ்தீரணத்தையோ பூரணமாக அறியக் கூடிய அளவிற்குத் தொல்லியற் சான்றுகள் கிடைக்கவில்லை. கிடைத்த சான்றுகளை வைத்துக் கொண்டு நோக்கும் போது இவ்விராசதானி தற்போதய நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்கு முன்னால் உள்ள மூன்று மைல் சுற்றுவட்டத்தினுள் இருந்திருக்கலாம் என்று ஊகிக்க முடிகின்றது. இதன் எல்லைக்குள் வரலாற்றுப் பழமை வாய்ந்த கொழும்புத் துறையும், பண்ணைத் துறையும் அடங்குகின்றன.
இதை யாழ்ப்பாண வைபவமாலையில் வரும் ஆதாரங்களும் போர்த்துக்கீச ஆசிரியர்களின் குறிப்புக்களும் உறுதிப்படுத்துகின்றன.

இவ்விராசதானியின் அமைப்புப் பற்றி யாழ்ப்பாண வைபவ மாலையில் வரும் வர்ணனை இப்படிச் சொல்கின்றது.

"நாலு மதிலும் எழுப்பி வாசலும் ஒழுங்கா விடு
வித்து மாடமாளிகையும் , கூட கோபுரங்களையும்,
பூங்காவையும் பூங்காவன நடுவிலே
ஸ்நான மண்டபமும், முப்படைக் கூபமும் உண்
டாக்கி அக்கூபத்தில் ஜமுனா நதித் தீர்த்தமும்
அழைப்பித்துக் கலந்து விட்டு நீதி மண்டபம்
யானைப் பந்தி , குதிரை லயம், சேனா வீரரிருப்பிடம்
முதலியன கட்டுவித்து - கீழ் திசை வெயிலுகந்த
பிள்ளையார் கோயிலையும் தென் திசைக்குக்
கயிலாய பிள்ளையார் கோயிலையும், வட திசைக்குச்
சட்ட நாதர் கோயில் தையல் நாயகி
அம்மன் கோயில் சாலை விநாயகர் கோயிலையும்
அமைப்பித்தனர்"

நல்லூர் இராசதானி குறித்த சுருக்கமான அறிமுகமாக இப்பதிவு விளங்குகின்றது. தொடர்ந்து வரும் பிந்திய பகுதிகள் ஆழ அகலமாக இது பற்றி நோக்கவிருக்கின்றன.

மூலக்குறிப்புக்கள் உதவி: "யாழ்ப்பாண இராச்சியம்", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்
புகைப்படம்: 2005 ஆம் ஆண்டு யாழ் சென்றிருந்த போது என்னால் எடுக்கப்பட்டது.
Author: கானா பிரபா
•12:54 PM
"செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் - தமிழ்
தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்
சிந்திடும் உன் புன்னகையைக் கண்டு ரசித்தேன்
நல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன்

பாசமுடன் நான் அழைக்க நல்ல வழி காட்டு - உந்தன்
பத்தினிகளோடெனக்கு வந்து முகம் காட்டு
வாசலெங்கும் எரியுதையா உந்தன் விழி காட்டு
இப்போ வள்ளி தெய்வயானையுடன் என்ன விளையாட்டு

நீயிருக்கும் வீதியிலே பேய்கள் இருக்காது
நல்லூர் வீடு தொழுவோர்களுக்கு துன்பம் இருக்காது
வாயிருக்கும் வரையுனையே பாடி ஆடுவேன் -தினம்
வாசலிலே வந்திருந்து உன்னை தேடுவேன்

சந்நிதியில் உந்தனது தேரை எரித்தார்கள் -தமிழ்
தந்தவனே எங்களுக்கு சாவை விதைத்தார்கள்
விண்ணதிரக் குண்டு மழை இன்று பொழிவார்கள் -எங்கள்
வேலவனே அன்னவர்கள் என்று விழுவார்கள்?

செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் - தமிழ்
தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்
சிந்தி வரும் புன்னகையைக் கண்டு ரசித்தேன்
நல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன்"

பாடலை இயற்றியவர்: புதுவை இரத்தினதுரை
பாடியவர்: வர்ணராமேஸ்வரன்
இசை: இசைவாணர் கண்ணன்

Get this widget | Share | Track details


யாழ்ப்பாணத்துக் கலாச்சாரத்தைக் கந்தபுராணக் கலாச்சாரம் என்பார் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை.அவரின் கூற்றுக்கமைய, யாழ்ப்பாணத்தின் எல்லாத் திசைகளிலும் முருகன் ஆலயங்கள் பல பழமைச் சிறப்பும்,பக்திச் சிறப்பும் ஒருங்கே கொண்டவை. கந்த சஷ்டி என்னும் முருக விரதத்தை மிகவும் அனுட்டானத்துடன் நம் ஈழத்தவர்
வெகு சிரத்தையோடு ஓவ்வோர் ஆண்டும் கைக்கொள்வதும் குறிப்பிடத்தக்கது. செல்வச்சந்நிதி முருகனை "அன்னதானக் கந்தன்",என்றும் நல்லூர் முருகனை " அலங்காரக் கந்தன்" என்றும் சிறப்பித்துப் போற்றி நாம் வணங்கி வருகின்றோம்.

தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இருந்து புலம் பெயர் வாழ்வில் இருந்து வரும் எனக்கு அதற்கு முற்பட்ட காலத்தில் கலந்து கொண்ட நல்லூர்த் திருவிழாக் காலங்கள் இன்னும் பசுமரத்தாணி போல் இருக்கின்றன. காரணம் இந்த ஆலய மகோற்சவம் என்பது
எமது பிரதேசத்தைப் பொறுத்தவரையில் வெறும் ஆன்மீகத் தேடலுக்கான நிலைக்களனாக மட்டுமன்றி வருஷா வருஷம் நிகழும் பெரும் எடுப்பிலான சமூக ஒன்றுகூடலாகவே அமைகின்றது.

என் சின்னஞ்சிறு வயதில் அயலட்டை உறவினர் சகிதம் அம்மாவின் கைப்பிடித்துக் கோண்டாவில் பஸ் பிடித்துத் தட்டாதெருச் சந்தி இறங்கித் தொடர்ந்து நடை ராஜாவில் நல்லூர்க் கந்தனைக் கண்டது ஒரு காலம்.

அப்பாவின் சைக்கிளின் முன் பாரில் ஏறி, பெடலை வலித்துக் கொண்டே அவர் சொல்லும் கதைகளைக் கேட்டுக்கொண்டே பரமேஸ்வராச் சந்தி வழியாகப் போய் எம் பெருமானை வழிபட்டது ஒரு காலம்.

பதின்ம வயதுகளில் கூட்டாளிமாருடன் காதல் கதைகள் பேசி நல்லூரைக் கடந்து யாழ்ப்பாண நகர் வரை சென்று பின் திரும்ப நல்லூருக்கு வந்து கோயிலுக்குப் போன நீண்ட சுற்றுப் பயணத்துக்கும் காரணம் இருக்கின்றது.

இவையில்லாம் தொலைத்து இப்போது கணினித் திரைக்கு முன் என் மனத்திரையில் நிழலாக ஓடும் காட்சிகளைப் பதிவாக்க முனைகின்றேன். என் நினைவுச் சுழல் எண்பதுகளின் நடுப்பகுதிக்குப் போகின்றது.


1986 ஆவணி மாதம் ஒரு நல்லூர்த் திருவிழாக் காலம் அது

முதல் கிழமையே என் அம்மா குசினிப் (அடுக்களை) பக்கம் பெரும் எடுப்பிலான இராணுவ நடவடிக்கை எடுத்து சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாகக் குதித்து விட்டார். காஸ் அடுப்புக்களோ, மின்சார அடுப்புக்களோ எங்கள் வீட்டில் இல்லை. சூட்டடுப்புக்களை இணைத்துச் செம்மண்ணால் ஒன்றிணைத்த அடுப்படி அது. அந்தச் செம்மண் அடுப்புப் பகுதிக்கு மாட்டுச் சாணத்தைக் கரைத்து அப்பி நன்றாக வருடி விட்டுப் புது மெருகைக் கொடுக்கின்றார். வீட்டுக்குள் இருந்த அசைவப் பாத்திரங்கள், அவை மச்சப் பார்த்திரங்கள் சாம்பல் கொண்டு கழுவிச் சுத்தம் செய்யப்பட்டு கொல்லையில் இருக்கும் காம்பரா என்று சொல்லப்படும் அறைக்குள் நகர்கின்றன. (என் பெற்றோர் மலையகப் பகுதியில் ஆசிரியர்களாக இருந்த காலத்தில் அந்த மலையகப் பகுதிக்குத் தனித்துவமாக சொல்லான "காம்பரா" வையும் யாழ்ப்பாணத்துக்குக் கடத்திக் கொண்டு வந்துவிட்டார்கள். காம்பரா என்றால் தேயிலைத் தேட்டத்தில் வாழும் மலையகத் தமிழர்கள் குடியிருக்கும் தொடர் குடியிருப்புக்கள். அவை ஒன்றாக இணைந்திருந்தாலும் தனித்தனிக் குடும்பங்களுக்கான குடியிருப்பாக இருக்கும்.)

வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்து கிணற்றடியில் பெரிய வாளி கட்டி முக்குளித்து அள்ளிய தண்ணீரை அப்பா கொண்டு வரவும், ஓவ்வொரு அறையாகக் குளிப்பாட்டிப் பெருக்கி நீரை வளித்துத் துடைப்பதும் அண்ணனின் வேலை.கூடவே அணில் போல் என் பங்கும்
இருக்கும். வீடே சுத்தமான சைவப்பழமாக மாறிவிட்டது. இனி ஒரு மாதத்திற்கு அசைவச் சாப்பாட்டுக்கும் தடா அல்லது பொடா. மீன் விற்கும் மணி அண்ணனுக்கு ஒரு மாத உழைப்புப் படுத்து விடும்.

எல்லோரும் எதிர்பார்த்த அந்த நல்லூர்த் திருவிழா வந்துவிட்டது.
அதிகாலையில் வழக்கம் போல் துயில் எழுந்து தலை முழுகிச் சுவாமி அறையில் தேவாரம் பாடி முடித்து, யோகர் சுவாமிகளின் நற்சிந்தனைகளை அப்பா பாடவும், நானும் எழுந்து கோயிலுக்கு அப்பாவுடன் போக ஆயத்தமாகவும் சரியாக இருக்கின்றது.

அம்மா, பக்கத்து வீட்டு மாமி மாருடன் மினி பஸ் மூலம் வரப் போகிறார். அண்ணன் தன் கூட்டாளிமாருடன் கோயிலுக்குப் போய்விடுவார். வெறும் மேலும் வெள்ளைச் வேட்டியும், கழுத்தைச் சுற்றிய சால்வையுமாக வெளியே வந்த அப்பா ஓரமாக நிறுத்தியிருந்த பி.எஸ்.ஏ (BSA) சைக்கிளை நகர்த்தி, நடுமுற்றத்துக் கொண்டு வருகின்றார். இணுவில் கந்தசுவாமி கோயில் கடாய் வாகனம் போல பெரிய சைக்கிள் அது. "ஐம்பதுகளில் நாற்பது ரூபாய்க்கு வாங்கினது, பார் இன்னும் உழைக்குது" என்று பெருமை பட அப்பா தன் தேரைப் பற்றி அடிக்கடி தானே புகழ்ந்து கொள்வார். அரைக்காற்சட்டைப் பையனான நான் அப்பாவின் சைக்கிள் ஏறி முன் பாரில் அமர்ந்து கொள்கின்றேன். ஒடுக்கமான ஒழுங்கைக்குள்ளால் சைக்கிள் ஊர்கின்றது.

கொஞ்ச தூரம் சென்றதும் பயணக் களைப்புத் தெரியாமல் இருக்க எனக்குக் கதை சொல்ல ஆரம்பிப்பார் அப்பா என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் நானே முந்திக் கொண்டு,
"அப்பா! இண்டைக்கு எனக்கு நல்லூர்க் கோயில் வரலாற்றைச் சொல்லுங்கோவன்"
என்று ஆவலோடு நான் அடியெடுத்துக் கொடுக்கிறேன்.

தன் சைக்கிளோட்டத்தை நிதானப்படுத்தியவாறே, ஒரு செருமலை உதிர்த்துவிட்டு நல்லூர்க் கோயில் வரலாற்றைச் சொல்ல ஆரம்பிக்கின்றார் அப்பா.
Author: வர்மா
•8:32 AM
எனக்குக்கிடத்த நல்லூர் படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.





Author: வந்தியத்தேவன்
•9:33 PM
திருமந்திரம் தந்த திருமூலரால் சிவபூமி என அழைக்கப்பட்ட நாடு இலங்கையாகும். வடக்கே மன்னாரில் திருக்கேதீச்ச‌ரம் தொடங்கி தெற்கே தேவந்திரமுனையில் அமைந்திருக்கும் சிவன் கோயில் வரை சிவாலயங்களே இலங்கையில் அதிகமாக அந்தக்காலத்தில் இருந்தது. கிழக்கில் திருகோணமலை கோணேஸ்வரரும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரரும், ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வர‌ரும் ஆதிக்கம் செலுத்த மேற்கே சிலாபத்தில் முன்னேஸ்வரர் அருள் பாலிக்கின்றார்.


பஞ்ச ஈச்சரங்கள் என அழைக்கப்படுகின்ற திருக்கேதீச்சரம், திருக்கோணேச்ச‌ரம், முன்னேச்ச‌ரம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்ச‌ரம் மற்றும் ஒட்டுசுட்டான் தான்தோன்றீச்ச‌ரம் போன்றவை பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை. இவற்றில் கேதீச்சரமும் கோணேச்சரமும் திருஞான சம்பந்தராலும் சுந்தரராலும் பாடல் பாடப்பெற்றவை.



இவற்றைத் தவிர சோழப்பேரரசர்களால் பொலன்நறுவையில் அமைக்கப்பட்ட சிவன் ஆலயம் இன்று இடிந்து சிதிலமடைந்து காணப்படுகிறது.



ஈழத்தில் சிவ வழிபாடு முக்கியம் பெற முதன்மைக்காரணம் பெரும்பாலான ஈழத்தவர்கள் சைவர்களாக இருப்பதே ஆகும். இன்று கூட நாம் எம்மை இந்துக்கள் என்று அழைப்பதைவிட சைவர்கள் என்றழைப்பதையே விரும்புகின்றோம். சைவ சமயத்தின் முதன் முதல்க் கடவுளாக சிவன் இருக்கிறார். சிந்து வெளி நாகரீக காலத்தில் சிவவழிபாடே முக்கியம் வாய்ந்ததாக இருந்தது. பின்னாளில் ஆதிக்கம் செலுத்திய ஆரியர்களினால் சிவனுக்கு எதிராக விஷ்ணுவை கொண்டுவந்தார்கள். விஷ்ணுவின் ஆதிக்கம் ஈழத்தில் மிகவும் குறைவாகவே அல்லது இல்லையென்றே கூறவேண்டும். அத்துடன் நம் நாட்டில் வைஷ்ணவர்கள் என்ற சமூகம் இல்லை.

பொன்னாலையில் வரதராஜப் பெருமாளும் வடமராட்சி பருத்தித்துறையில் வல்லிபுர ஆழ்வாரும் ஆட்சி செலுத்தினாலும் அங்கே கோயில் நைமித்திய கடமைகளைச் செய்பவர்கள் சைவர் பரம்பரையில் வந்த பிராமணர்கலே ஒழிய வைதீகப் பிராமணர்கள் அல்ல. சில காலங்களுக்கு முன்னர் தென்னிலங்கையில் தெகிவளையிலும் மோதரையிலும் விஷ்ணுவுக்கு ஆலயங்கள் அமைத்தார்கள்.

மிகவும் சமீபத்தில் அஞ்சனேயர் வழிபாடு ஈழத்தில் பரவியது. சுன்னாகத்தில் ஒரு அஞ்சனேயரும் ,தெகிவளை களுபோவிலையில் இன்னொரு அஞ்சனேயரும் இருக்கிறார்கள். சின்மயா மிசனின் மேற்பார்வையில் நுவரெலியாவுக்கு போகும் வழியில் ரம்பொடையில் இன்னொரு உயரமான ஆஞ்சனேயர் இருக்கின்றார்.

சிவனுக்கு அடுத்தபடி ஈழத்தில் புகழ்பெற்றத்து தமிழ்க் கடவுளான முருகன் வழிபாடு. நல்லூர் கந்தசாமி முதல்க் கொண்டு இன்று சிங்கள இனமாக மாற்றப்பட்ட கதிர்காமம் கதிரகம தெய்யோ வரை பல முருகன் ஆலயங்கள் ஈழத்தில் சகல பாகங்களிலும் இருக்கின்றன.

மிகவும் சுருக்கமாக எழுதியிருக்கிறேன் பின்ணூட்டங்கள் மூலம் மேலதிக விபரங்களைத் தாருங்கள் பின்னாளில் உதவியாக இருக்கும்.

பட உதவி இணையம்.
Author: கானா பிரபா
•2:32 AM
ஈழ நல்லூர் கந்தசுவாமி கோயில் மகோறசவ நிகழ்வுகள் இன்றிலிருந்து அடுத்த 25 நாட்கள் இடம்பெற இருக்கின்றன. கடந்த 2007 ஆம் ஆண்டில் என் சொந்த வலைப்பதிவான "மடத்துவாசல் பிள்ளையாரடி" மூலம் நல்லூர்க் கந்தன் ஆலய மகோற்சவ காலத்தில் தொடராக 25 நாட்களும் பதிவுகள் மூலம் நம் ஆன்மீக நிலைக்களனைக் குறித்த விபரங்களை நம் தமிழகச் சகோதரர்களுக்கும், தெரியாத தகவல்களை அறியாத ஈழத்து உறவுகளுக்குமாக, நல்லை நகர் மற்றும் நல்லூர்க் கந்தன் ஆலய வரலாறு, பாடல்கள், புகைப்படங்கள், கழிந்த நம் திருவிழாக் கால நினைவுகளாகக் கொடுத்திருந்தேன். அவற்றை மீள் இடுகையாகத் தருவதோடு இந்த ஆண்டில் நடைபெறும் ஆலய நிகழ்வுகளையும் அவ்வப்போது தர எண்ணியுள்ளேன்.

என்னுடைய இப்பதிவுகளுக்கு உசத்துணை உதவியாக இருந்து உதவும் நூல்கள்
1. "யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு", ஐப்பசி 1993 - கலாநிதி சி.க.சிற்றம்பலம்

2. "யாழ்ப்பாணம் - சமூகம், பண்பாடு, கருத்து நிலை" ஆவணி 2000 - கார்த்திகேசு சிவத்தம்பி

3. "யாழ்ப்பாணச் சரித்திரம்", நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை

4. "ஈழத்தவர் வரலாறு" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா

5. "நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் (வரலாறு)", ஆடி 2005 - கலாநிதி க.குணராசா

6. "யாழ்ப்பாண இராச்சியம்", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்

இப்பதிவுகளை எழுதும் போது மேலும் சில உசாத்துணை உதவிகள் பெறப்படும் போது அவை இங்கே பதியப்படும்.

"பஞ்சம்படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவமோ நாங்களெடி - கிளியே!
ஆறுமுகன் தஞ்சமெடி" - யோகர் சுவாமிகள்


பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர் யாத்த "நல்லை முருகன்" பாடலை, மோகன்ராஜ் இசையமைப்பில் ரகுநாதன் பாடுகின்றார்.





நாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....
நாதம் கேட்குதடி நல்லூர் நாதம் கேட்குதடி
நல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி
நல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி
கீதம் ஒலிக்குதடி.....கீதம் ஒலிக்குதடி.....
அன்பர் பாடி பரவி உவகை குதித்திடும்
கீதம் ஒலிக்குதடி..........
அன்பர் பாடி பரவி உவகை குதித்திடும்
கீதம் ஒலிக்குதடி..........
நாதம் கேட்குதடி ..........
நல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி

ஒலியின் அலைகள் விரவிச் செவியில்.......
ஒலியின் அலைகள் விரவிச் செவியில்
ஓம் முருகா.........ஓம் முருகா.......ஓம் முருகா
ஒலியின் அலைகள் விரவிச் செவியில்
ஓம் முருகா என ஒலிக்குதடி

கலியுகத் தெய்வம் கந்தனென்றே மனம் கனிந்து
மெத்தாய் உருகுதடி
கலியுகத் தெய்வம் கந்தனென்றே மனம் கனிந்து
மெத்தாய் உருகுதடி

மலியும் கனிகள் குலுங்கும் நல்லையில்
மலியும் கனிகள் குலுங்கும் நல்லையில்
மால் மருகன் அருள் இருக்குதடி
மால் மருகன் அருள் இருக்குதடி

வலிவும் வனப்பும் வளமும் அருளும்
வடிவேலவன் புகழ் பாடியே
அடியார் தொழக் கவிபாடிடும்
வலிவும் வனப்பும் வளமும் அருளும்
வடிவேலவன் புகழ் பாடியே
அடியார் தொழக் கவிபாடிடும்

நாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....
நாதம் கேட்குதடி...... நல்லூர் நாதம் கேட்குதடி....
நாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....
நாதம் கேட்குதடி...... நல்லூர் நாதம் கேட்குதடி....



இந்த ஆண்டு நடைபெற்ற கொடியேற்றத் திருவிழாப் படங்களை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்த நண்பர் செந்தூரனுக்கு நன்றிகள்.








Author: வர்மா
•8:08 AM
நம் உறவு முறைமிகவும் அலாதியானது வயதுக்கு மூத்தவர்களை பேர் சொல்லி அழைப்பதில்லை. அண்ணா அண்ணண்ணா,சின்னண்ணா,பெரியண்ணா,மூத்தண்ணா,ஆசைஅண்ணா,குட்டிஅண்ணா.

இதேபோன்றுதான் அக்கா,அக்கக்கா,சின்னக்கா,ஆசைஅக்கா,பெரியக்கா,குட்டிஅக்கா. பெரியப்பா இன்னருவர் இருந்தால் ஆசை அப்பா ,ஆசை அய்யா,சித்தப்பா, இவருக்கு போட்டியாக வேறுபெயர் இருப்பதாகத்தெரியவில்லை.

அண்ணனின் ம்கன் என்னை சித்தப்பா என்று கூப்பிடத்தெரியாது சித்தா என்றான்.அது ஏதோ புதுமுறை என்று நினைத்த அயலட்டையில் உள்ளவர்கள்தங்கடை சித்தப்பாவையும் சித்தா என்றுசுருக்கிவிட்டார்கள்.

அம்மாவை தங்கச்சி என்று சொல்லத்தெரியாத அம்மாவின் அண்ணன் முறையான ஒருவர் அன்னைச்சி என்றார்.அதுவும் ஒருபுதுமுறை எனநினைத்தசிலர் தங்கடை சொந்தக்காரரில் ஒருவரை அன்னைச்சி என்றார்கள்.

அம்மா தனது சகோதரனை அண்ணா என்று கூப்பிடுவதைப்பார்த்து நாங்களும் அவரை அண்ணா என்றுகூப்பிடுவோம்.

கொப்பரை கோயிலிலை கண்டனான்,
கொம்மா சந்தைக்குபோட்டா.
கொப்பர் பெரியாளே
கொம்மாவை வரச்சொல்லு
கொக்கா எங்கபோட்டா
அப்பா அம்மாவை ஓய் என்றுதான் கூப்பிடுவார்.
அம்மா, வாருங்கோ என்பா
மாமா, அப்பாவை ஓய் மச்சான் என்பார்

இப்ப எல்லாம் தலை கீழாப்போச்சு.புருசனை பேர்சொல்லித்தான் கூப்பிடுவார்கள்.அவரும் பெண்டிலை பேர் சொல்லி மரியாதையாக வாருங்கோ போங்கோ என்பார்.அந்தக்காலத்திலை ஒரு பெண்ணிடம் வீட்டுக்காரரின் பெயரைக்கேட்டபோது , வீட்டுக்காரரின் பெயரை சொன்னால் பாவம் என்று மறுத்து விட்டார். எந்த ஊர் என்று கேட்டபோது அதுதானே அவற்றை பேர் என்றார். ஊர் பெயர் சிதம்பரம்.

அம்மாவை பெரியவர்கள் சின்னவர்கள் எல்லோரும் அன்னச்சி என்பதுபோல்சில உறவுகள் பொதுச்சொல்லாக மாறிவிடும்.எனது தம்பி ஒருவன் என் மகளை எங்கு கண்டாலும் ஹலோ என்பான். அவனை என்மகள் ஹலோ சித்தப்பா என்பார். அவனை நாம் எல்லோரும் ஹலோ சித்தப்பா என்போம்.

கொழும்பிலை ஆம்பிளயள் அங்கிள்,பொம்பிளையள் அன்ரி வேறுமுறை தெரியாது. எனது அலுவலகத்தில் ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. நான் எடுத்தேன். ஒரு பெண்குரல்
என்னுடன் வேலை செய்யும் ஒருவரக்கேட்டது. அவர் வெளியே போய்விட்டார் என்றேன்.
அங்கிள் அவருக்கு ஒரு மசேச் சொல்லுவியளா என்று கேட்டது பெண்குரல்
எல்லாவற்றயும் கவனமாகக்கேட்டுவிட்டு கடைசியில் , தங்கச்சி எனக்கு 22 வயது. நான் வேலைக்குச்சேர்ந்து மூன்றுமாதம் தான் என்றேன். குழைஞ்சி குழைஞ்சு மன்னிப்புக்கேட்டார். எனக்குவயசு 40 என்றும் நான் 10 வருடமாக அங்கு வேலை செய்வதும் அவவுக்குத்தெரியாது.

ஜேர்மனியில் உள்ள தனது மகளீடம் போவதற்காக எனது உறவினர் ஒருவர் கொழும்புக்கு வந்தார். அவரை எல்லோரும் அக்காசி என்றுதான் அழைப்போம். சிறுவயதிலிருந்தே கொழும்பில் வளர்ந்த என்மகளூக்கு அக்காசி என்ற சொல் புதிதாக இருந்தது. ஒருநாள் வாய்தடுமாறி அக்காசியை யசூசிஅக்காசி என்றார். இப்போ அக்காசி மறைந்து யசூசிஅக்காசி நிரந்தரமாகிவிட்டது.

அயலட்டை////////////////////////////////பக்கத்துவீடுகள்
கொப்பர்///////////////////////////////////அப்பா
கொம்மா//////////////////////////////////அம்மா
கொப்பு////////////////////////////////////அப்பா
கோத்தை//////////////////////////////////அம்மா
கொக்கா///////////////////////////////////அக்கா
பெண்டில்//////////////////////////////////மனைவி
வீட்டுக்காரர்////////////////////////////////கணவன்
குழைஞ்சு குழைஞ்சு/////////////////////////அசடுவ‌ழிதல்
Author: யசோதா.பத்மநாதன்
•10:06 PM


ஒரு நாள் குருவானவரிடம் ஒருவர் வந்தார்.சுவாமி! இன்று நீங்கள் என்ன செய்தீர்கள் என்று வினவினார்.அதற்குக் குரு உணவுண்டேன்; பின்பு நன்றாகத் தூங்கினேன் என்றார்.இதில் என்ன பெரிய விடயம் இருக்கிறது என்று வந்தவர் நினைத்தார்.அதனக் கேட்டும் விட்டார். அதற்கு சுவாமி சொன்னார்; நான் உணவுண்ணும் போது உணவுண்ணும் தொழிலை மட்டுமே செய்தேன்.வேறெதனையும் எண்ணவில்லை. உறங்கும் போது உறங்குதலாகிய செயலில் மட்டுமே கவனம் செலுத்தினேன் என்றார்.

இதனை வாசித்தபோது ஒரு நேரத்தில் நாம் எத்தனை விடயங்களில் கவனம் செலுத்துகிறோம் என்றும்;அதனால் ஒன்றையும் முழுமையாக உள்வாங்கவோ அனுபவிக்கவோ முடியாது போய்விடுகிறது என்றும் தோன்றியது.அது போலவே சொற்களை நாம் பாவிக்கின்ற போதும் அதன் அர்த்தங்களையும் முழுமையாக உணர்ந்து வெளிப்படுத்துகிறோமா என்பது பற்றிச் சற்றுச் சிந்திக்க வேண்டியதாயிருந்தது.அதனால் எப்போதோ அறிந்து வைத்திருந்த இரண்டு சொற்களுக்கான விளக்கப் பதிவாக இப்பதிவு அமைந்திருக்கிறது.


வாஞ்சை:-

பாசத்தில் தோய்ந்த சொல் இது.

பொதுவாக வாஞ்சை என்ற சொல் அன்பினைக் குறிக்கும்.இச் சொல் குறிக்கும் அன்பு என்பது அன்பின் வகைகளில் சற்று விசேடமானது.பிள்ளை தந்தை/தாய் மீது கொள்ளும் அன்பினை வாத்சல்யம் என்று சொல்வதைப் போல; காதலர் தமக்கிடையே பரிமாறிக் கொள்ளும் அன்பைக் காதல் என்று சொல்வதைப் போல; நண்பர்கள் தமக்கிடையே உள்ள அன்பை நட்பு என்று சொல்லிக் கொள்வதைப் போல; வாஞ்சை என்ற சொல்லும் ஒரு விசேட அன்பைக் குறித்து நிற்கிறது.

ஒரு தாய்ப்பசு கன்று ஈனும்போதும்; பின்னர் தன் பிள்ளைக்குப் பாலூட்டும் போதும்; அதன் அழுக்குகளையும் சிறுநீரையும் நாவினால் நக்கிச் சுத்தப் படுத்தும்.அதனையிட்டு அது ஒரு போதும் அசூசை கொள்வதில்லை.மேலும் அது பாலூட்டும் போது கன்றின் உடல் பாகங்களையும் நாவினால் சீர்படுத்தும்.அன்பின் நிமித்தம் பால் பெருக்கெடுத்து ஓடும்.அதனுடய அன்பின் முன்னால் கன்றினுடய குறைகளோ அழுக்குகளோ அதன் கண்களுக்குத் தெரிவதில்லை.மேலும் அதனுடய செயற்பாட்டின் மூலம் கன்றின் மீதான அதன் அன்பு பெருக்கெடுத்து ஓடுவதையே நாம் காண்கிறோம்.அத்தகைய அன்பினையே வாஞ்சை என்ற சொல் குறிக்கிறது.

அதாவது,எந்த ஒரு அன்பு குறைகளையும் நிறைகளாகக் காண்கிறதோ அல்லது எங்கு குறைகள் எதுவும் குறைகளாகக் கண்ணுக்குத் தெரியாமல் அன்பு ஒன்றே விகாசித்து பொலிந்திருக்கிறதோ அங்கு வாஞ்சை நிறைந்த அன்பு நிலவுகிறது என்று அர்த்தமாகும்.(எப்போதோ யுகமாயினியில்(?) வாசித்தது)



ஊழியம்:-

வலி சுமந்த சொல் இது.

2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மெல்பேர்னில் நடந்த எழுத்தாளர் விழாவுக்கு இலங்கையில் இருந்து மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசெப் அவர்கள் வந்திருந்தார்கள். அவர் இந்தச் சொல்லுக்குச் சிறப்பான விளக்கம் ஒன்றினை அளித்திருந்தார்கள். அதனை இங்கு தருகிறேன்.

ஊழியம் என்பதற்கான ஆங்கில மொழியாக்கம் labour என்பதாகும்.தாய்மைப் பேறடைந்த பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்காகச் செல்லும் அறையை labour room என்கிறோம்.ஏனெனில் வலியோடு கூடிய குழந்தை பெறுதலாகிய வேலையை அவள் அங்கு செய்கிறாள்.அதனால் ஊழியம் என்பது உடலை வருத்தி வலியினை உணர்ந்து பெறப்படும் பயன்பாடு ஆகும்.அதனால் labourer என்பது ஊழியர் அதாவது உடலினை வருத்தி வேலை செய்து பயனைப் பெறுபவர்களைக் குறிக்கிறது.

அதாவது உடல் உழைப்பினால் வருந்தி (கஸ்ரப்பட்டு)செய்யப் படுவது ஊழியம். அதனால்,உடலினை வருத்தி வேலைசெய்து வருமானம் பெறுபவர்கள் ஊழியர் என்ற சொல்லால் அழைக்கப் படுகிறார்கள்.

அதனால் இலிகிதர் போன்ற தொழிலில் உள்ளவர்களை அரச ஊழியர் என்று சொல்வது சரியா தவறா என்று தெரியவில்லை.

மொழி விற்பன்னர்கள் விளக்கமளித்தால் நன்றாக இருக்கும்.



பட உதவி; நன்றி ,இணையம்.
Author: கானா பிரபா
•3:00 AM
கந்தசாமி முத்துராஜா என்னும் கனடா வாழ் ஈழத்தவர் "ஆழியவளை" என்னும் யாழ்ப்பாணத்துக் கடலோரக் கிராமத்தின் பண்பாட்டு அம்சங்களைச் சுவைபட எழுதியுள்ளார். அந்த நூலின் பின்னிணைப்பில் இருந்த அருஞ்சொல் அகராதியில் இருந்து சிலவற்றை இங்கே பகிர்கின்றேன்.

அடை - கரைவலை வள்ளம் மண் புட்டிக்கு இழுக்கப்படும் பொழுது வள்ளத்தின் அடியில் உள்ள எரா இலகுவாகச் சறுக்கி வழுக்கிக் கொண்டு வருவதற்காக வைக்கப்படும். ஓர் ஒழுங்கு முறையில் அடுக்கப்பட்ட மரக்குற்றிகள் அடை எனப்படும்.

அறும்புக்காலம் - கடலில் மீன் பிடிபடுதல் மிக மிகக் குறைவாக உள்ள காலம்

அம்பறக்கூடு - பனம் மட்டையை வளைத்து, குறுக்காகக் கம்புகள் கட்டி, கிடுகினால் வேயப்பட்ட சிறுதுண்டுக் கூரை

அத்தாங்கு - "பை" போன்ற அமைப்புள்ள நூல் வலையின் வாய்ப்பகுதியில், காட்டுத்தடியை வட்டமாக வளைத்துக் கட்டுவர். இதனால் ஆழங்குறைந்த நீர் நிலைகளில், நிலத்தில் வாரி இறால் பிடிப்பர். சில இடங்களில் அவ்வளையம் இரும்பினாலும் செய்யப்படும்

ஆனைச்சொறி - நீரில் மிதந்து செல்லும் வழுவழுப்பான பெரிய அளவிலான ஒருவகைக் கடல் தாவரம்

ஆசறுதியாக - பலமாகவும், செளக்கியமாகவும் இருக்கும் நிலை

ஊடுகாடு - காட்டை ஊடறுத்துச் செல்லும் ஒற்றையடிப்பாதை

எரா - கரைவலை வள்ளத்தின் அடிப்பாகத்தில் அணியத்திலிருந்து
கடையார்வரை நீளமாகப் பொருத்தப்பட்டிருக்கும் மரத்துண்டு

ஒசுத்தேங்காய் - கடலில் விழுந்து உப்பு நீரில் கரை ஒதுங்கும் தேங்காய்,இத்தேங்காயை புழுக்கொடியலுடன் சப்பித் தின்ன மிக ருசியாக இருக்கும்

கடற்படுக்கை - கடலின் அடிநிலம்

கடியன் கடித்தல் - மீன் இனங்கள் வலைகளைக் கடித்துத் துண்டாடுதல்

கருவாட்டுச் சிப்பம் - தென்னோலைக் கிடுகில் ஏறத்தாள 4X2 அடி அளவில் பெட்டி செய்து, அதற்குள் கருவாட்டை வைத்து மூடிக்கட்டி லொறிகளில் தூர இடங்களுக்கு அனுப்புவர்

குறுகுதல் - கரைவலையை மெல்ல மெல்ல இழுத்து இறுதியாகத் தூர்மடியையும் கடற்கரைக்கு மீனுடன் இழுத்து எடுத்தல்

குட்டான் - பனை ஓலையினால் இழைப்பது, மீன் போடுவது

கூடு கட்டுதல் - மாரிகாலம் ஆரம்பிக்கிற ஐப்பசி மாதத்தில் கரைவலைத் தொழிலை நிறுத்துவர். வள்ளம், வலை சாமான்களை மழை படாமல் மூடிக்கட்டி வைப்பர்

சவள் - கரைவலை வள்ளத்தைச் செலுத்தும் சுக்கான் போன்ற நீண்ட பலகை

சிறாம்பி - பரப்புக்கடலுக்குள் கட்டப்படும் பரண், மீன் பிடிப்போர் இளைப்பாறும் இடம்

சொக்கரை - மீன் கூட்டின் பொறிவாசல் (வாய்ப்பக்கம்)

தண்டையல் - பாய்க்கப்பலைச் செலுத்தும் மாலுமி Tindall என்பதன் தமிழ் வடிவம்

திடற்கடல்
- கடலில் மண் திடல் உள்ள இடம்

தூர்மடி
- கரைவலையில் மீனைத் தாங்கி வருவது

நெருக்காறு
- கடல் அருவி சிறுகடலுடன் கலக்குமிடம்

பறி
- பனை ஓலையினால் பின்னப்படுவது, மீன், கருவாடு போடப்பயன்படுவது

மண்டாடி
- கரைவலைத் தொழிலை முன்னின்று நடத்துபவர், சம்மாட்டிக்கு அடுத்த நிலையில் உள்ளவர்

மாறுதண்டு
- கரைவலை வள்ளம் வலிக்கும் துடுப்பு, அணியத்தில் இருந்து மூன்றாவது இடத்தில் அமைந்திருக்கும்

மிதப்பு
- நீருக்கு மேல் மிதந்து நின்று வலை, கூடு, என்பனவற்றை அடையாளம் காட்டும் ஒல்லி அல்லது மரக்கட்டை
வலை பொத்துதல் - மீங்கள் சேதப்படுத்திய அல்லது கிழிந்த வலைகளைப் பின்னுதல்

வாடி
- கரைவலைத்தொழிலாளர் கடற்கரையில் தங்கும் வீடு (கொட்டில்)

வாரம்
- கரைவலையின் பங்குத் தொழிலில் சம்மாட்டிக்குக் கொடுக்கும் பங்கு.

நன்றி: கந்தசாமி முத்துராஜா எழுதிய "ஆழியவளை"
Author: வந்தியத்தேவன்
•4:54 AM
இலங்கையிலிருந்து வெளிவரும் வீரகேசரி குடும்பத்தின் இன்னொரு வெளியீடான இளைஞர்களினால் அதிகம் படிக்கப்படும் மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் எங்கட ஈழத்துமுற்றம் பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 21.07.2009 செவ்வாய்க்கிழமை மெட்ரோ நியூசில் இந்ததகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் தங்கள் தினசரியில் தினமும் ஒரு இணையம் பற்றிய தகவல்களைச் சுருங்கத் தருகிறார்கள். அந்த வகையில் ஈழத்துமுற்றம் பற்றிய சிறிய தகவல் வெளியாகியுள்ளது.



கடந்தமாதம் உருவாகி தவழ்ந்து இன்றைய சினேகிதியின் வண்டவாளங்கள் மூலம் 50 பதிவுகளைத் தொட்ட எங்கட முற்றம் இந்த தகவலின் மூலம் இன்னும் சிலரைச் சென்றடையக்கூடும்.

ஈழத்துமுற்றம் சொந்தக்காரர்கள் சார்பாக மெட்ரோ நியூசுக்கு எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சொந்தக்காரர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்:
கிட்டத்தட்ட 50 சொந்தக்காரர்கள் இருந்தும் இதுவரை ஒரு சிலரே முற்றத்தில் பதிவு செய்துள்ளார்கள். பலர் பின்னூட்டங்கள் இட்டாலும் அவர்களிடமிருந்து காத்திரமான பதிவுகளை எதிர்பார்க்கின்றேன்.
Author: சினேகிதி
•8:06 PM
சின்ன வயசில கட்டாயம் எல்லாரும் குழப்படி செய்திருப்பம்.செய்த ஒவ்வொரு குழப்படிக்கும் முறையா வாங்கிக் கட்டியிருப்பம்.அடி வாங்கி அழுதழுது கண்ணு மூக்கெல்லாம் சிவந்து சாப்பிடாமலெல்லாம் நித்திரையாயிருப்பம் பிறகு அன்றைக்கு இரவு அடி விழுற மாதிரி கனவு கண்டு திரும்ப விக்கி விக்கி அழுது போட்டு படுத்திருப்பம்.அடுத்தடுத்த நாள் நடந்த மண்டகப்படியெல்லாம் மறந்து அம்மாவாவோடய அப்பாவோடய செல்லம் கொஞ்சியிருப்பம்.இதெல்லாம் ஒரு பத்து பதினொரு வயசு வரைக்கும் தான் பிறகு அடியெல்லாம் விழாது. நான் என்னென்ன குழப்படி செய்து எப்பிடியெல்லாம் அடி வாங்கினான் என்று சொல்றன் நீங்களும் சொல்லோணும் என்ன.

அப்ப எனக்கொரு மூன்று வயசிருக்கும்.அம்மாவும் அப்பாவும் வீட்ட இல்லை நானும் அக்காவும் அம்ம்மா வீட்டதான் நின்டனாங்கள்.அம்மாவும் அப்பாவும் வீட்ட வந்திட்டினம் அம்மம்மா சாய்மனைக் கட்டில்ல தடியோட இருக்க நானும் அக்காவும் ஹ_ட்வாசல்ல முழுசிக் கொண்டிருக்கிறம்.அம்மா வந்ததுதான் தாமதம் அம்மம்மா போட்டுக்குடுக்கத் தொடங்கிட்டா.

அம்மம்மா: பிள்ளை இஞ்ச வந்து பார் உன்ர பெட்டையள் இரண்டும் என்ன செய்திருக்குதுகள் என்று.

அம்மா: என்ன இண்டைக்கு ஆற்ற ஆட்டுக்குட்டிக்கு பல்லு மினுக்கினதுகள்?

அம்மம்மா: அதில்லை இன்டைக்கு இரண்டும் சம்பல் இடிச்சு வைச்சிருக்குதுகள்.என்ன சம்பல் தெரியுமே? புவுண் சம்பல்.

அம்மா:என்னம்மா? புவுண் சம்பலோ?

அம்மம்மா:அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து காப்பு சிமிக்கி எல்லாத்தையும் கழட்டி உரலுக்கை போட்டு இடிச்சு வைச்சிருக்குதுகள்.

உரலுக்கு நசிஞ்சு போய்க் கிடந்த எல்லாத்தையும் அம்மம்மா எடுத்துக் கொண்டு வந்து காட்டினா அவ்வளவும் தான் தெரியும் அடுத்த நிமிசம் புக்கத்தில நின்ற செவ்வரத்தையை முறிச்சு இரண்டு பேருக்கும் நல்ல வெளுவை.

அடுத்த திருவிழா ஒரு புpறந்த நாள் விழாக்குப் போட்டு வந்த இரவு நடந்தது.வீட்டுக்குள்ள வரும்வரைக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை.அப்பா நல்லாத்தான் கதைச்சுக் கொண்டு வந்தவர்.வீட்டுக்குள்ள வந்த உடன கதிரைல தூக்கி இருத்தினார்.இருத்திப்போட்டு பிரம்பு எடுத்துக்கொண்டு வந்தார்.

அப்பா:இரண்டு பேரும் கையை நீட்டுங்கோ.

நானும் அக்காவும் : ஏனப்பா நாங்கள் ஒரு குழப்படியும் செய்யேல்லயே.

அப்பா: கைய நீட்டைச் சொன்னான்.

இரண்டு பேருக்கும் மூன்று மூன்றடி.

அப்பா: எத்தினாள் சொன்னான் உடைஞ்ச பலூனை வைச்சு விளையாட வேண்டாம்.முட்டை விட வேண்டாம் என்று.பிரவீனாக்கு பலூன் துண்டு தொண்டைல ஒட்டி என்ன நடந்தது என்று தெரியும் தானே.இனிம பலுனைக் கண்டாலே இந்த அடிதான் ஞாபகம் வரோணும்.

ஒரு நாள் நாங்கள் பக்கத்து வீட்டு பிள்ளையள் எல்லாரும் சேர்ந்து உக்கிப் போன மண்ணெண்ணை பரலுக்கு மேல உருண்டு விளையாடினாங்கள்.பரலில படுத்துக்கொண்டு காலால உருட்டினா இது உருளும்.எத்தின பேர் இந்த விளையாட்டு விட்டிருப்பியள்.அதில கிடந்த ஒரு உக்கின இரும்புத் துண்டு அக்காக்கு குத்தி இரத்தம் வந்திட்டுது.டாக்குத்தர் மாமாட்ட போய் மருந்தெல்லாம் போட்டிட்டு வந்திட்டு இரண்டு பேருக்கும் விளாசல் தான்.

பிறகொருநாள் அக்கா நெல்லி மரத்தில ஏறி நின்டுகொண்டு நெல்லிக்காய் ஆய்ஞ்சு போட போட நான் கீழ நின்று பொறுக்கிக் கொண்டு நிண்டனான்.அக்கா ஒருநாள் நான் அங்கர் மா களவெடுத்து சாப்பிட்டத அம்மாட்ட கோள்மூட்டிட்டா அந்தக் கோவத்தில சும்மா அவாவை வெருட்டுறதுக்காக அக்கா நீ நிக்கிற கொப்புக்குப் பின்னால கோடாலிப் பாம்பு நிக்குது என்று ஒரு பொய்யைச் சொன்னன்.அவா பயத்தில பலன்ஸ் இல்லாம தொபுக்கடீர் என்று விழுந்திட்டா.பெரிய உயரம் இல்லை நெல்லி மரம் ஆனால் விழுந்த இடத்தில இருந்த கல்லு உள்ளங்கையில குத்திட்டுது அவாக்கு.அன்டைக்கும் எனக்கு பூசைதான்.

இன்னொருநாள் உப்பிடித்தான் கோயில் திருவிழா நெரிசல்ல "அம்மா அப்பான்ர சைக்கிள் டைனமோவைக் களவெடுத்தது இந்த மாமா தான " என்று நான் கத்திட்டன்.அவருக்கு ஒரு மாதிரிப் போட்டுது.அம்மாக்கு ஏன்தான் என்னை கோயிலுக்குக் கூட்டிக் கொண்டுவந்தம் என்று ஆயிடுச்சு. என்னைக்.கோயிலுக்குள்ள கூட்டிக்கொண்டே போய் இறுக்கி நுள்ளி விட்டா.

இன்னும் நிறைய சளார் பளார் சடீர் எல்லாம் இருக்கு.ஆனால் இனிம நீங்கள் சொல்றதைக் கேப்பம்..நான் நிப்பாட்டுறன் நீங்கள் உங்கட வண்டவாளங்களை தண்டவாளம் ஏத்துங்கோ.

------------------------------------------------------------------------------

வண்டவாளம் - குறும்புத்தனங்கள்
வாங்கிக் கட்டுதல் - தண்டனை பெறுதல்
மண்டகப் படி - தண்டனைகள்
சாய்மனைக் கட்டில்- படுக்கத் தக்க கதிரை
தலைவாசல் - பிரதான வாசல்
முழுசிக் கொண்டிருத்தல் - என்ன செய்வது என்று தெரியாதிருத்தல்
பெட்டையள் - பெண்கள்
பவுண் - பொன்
உக்கிப் போன - இற்றுப் போன
டாக்குத்தர் - வைத்தியர்
விளாசல் - அடித்தல்
கோள் மூட்டுதல் - (சம்பந்தப் பட்டவருக்குத் தெரியாமல்)முறையிடுதல்/ குற்றம் சாட்டுதல்
நுள்ளுதல் - கிள்ளுதல்
நிப்பாட்டுதல் - நிறுத்துதல்


* நன்றி மணியாச்சி*
Author: யசோதா.பத்மநாதன்
•4:33 PM
எக்கச்சக்கமான(பெருமளவு)மரபுத் தொடர்களும் பழமொழிகளும் ஈழத் தமிழர் வாழ்வில் வழங்கி வருகின்றன.சில காலப் போக்கில் வழக்கொழிந்து போயின.பல இன்றும் இனியும் வழங்கி வருதல் கூடும்.அன்றாட வாழ்வில் சாதாரணமாகப் பேசப் படும் இப்பழமொழிகள் மூலமாக உலகத்தை உள்ளங்கையில் பரிசளித்து விட்டுப் போனார்கள் நம் முன்னோர்.பாரம்பரியங்களும் வாழ்க்கை முறைகளும் வாழ்வியல் சித்தாந்தங்களும் இவற்றினூடாகவும் அடுத்த பரம்பரைக்குக் கைமாறின.





எனக்குத் தெரிந்தவையும் அறிந்தவையும் இதில் இடம் பெறுகின்றன. எனக்குத் தெரியாத நானறியாத எத்தனையோ பழமொழிகள், மரபுத் தொடர்கள் இன்னும் உள்ளன.'ஊர்கூடித் தேர் இழுப்போம்' வாருங்கள்.உங்களுக்குத் தெரிந்தவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.



விளையும் பயிரை முளையிலே தெரியும்

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

போதுமென்ற வாழ்வே பொன்செய்யும் மருந்து

ஒரு மரம் தோப்பாகாது

பேராசை பெரு நட்டம்

பாவிகள் போகுமிடம் பள்ளமும் திட்டியும்

காதலுக்குக் கண்ணில்லை

புத்திமான் பலவான்

தாயின் வளர்ப்பு பிள்ளையில் தெரியும்

கைக்கு வருமுன்னே நெய்க்கு விலை பேசேல்

யார் இடித்தால் என்ன?அரிசியானால் சரி

வெச்சாக் குடுமி; அடிச்சா மொட்டை

நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்

காவோலை விழ குருத்தோலை சிரிக்கும்

காசைக் கொடுத்து ஆளை அறி

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நெருப்புக்குள் விழும் விட்டில்கள் போல

முயற்சி திருவினையாக்கும்

காலம் கடந்த ஞானம்

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது

தன் முதுகு தனக்குத் தெரியாது

கற்றோரை கற்றோரே காமுறுவர்

எண்சாணுடம்புக்கும் சிரசே பிரதானம்

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்

பெற்றமனம் பித்து; பிள்ளைமனம் கல்லு

தலையிடியும் காச்சலும் தனக்குத் தனக்கு
வந்தால் தான் தெரியும்

குழந்தைக்கும் குட்டி நாய்க்கும்
இடம் கொடுக்கக் கூடாது

நேற்றுப் பெய்த மழைக்கு
இன்று முளைத்த காளான்

எறும்பும் தன் கையால் எண்சாண்

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்

ஆப்பிழுத்த குரங்கு போல

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்
தன் பிள்ளை தானே வளரும்

ஆழம் அறியாமல் காலை விடாதே

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

பாம்பின் கால் பாம்பறியும்

தன் கையே தனக்குதவி

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தாற் போல

காகம் இருக்கப் பனம் பழம் விழுந்தாற் போல

காகம் திட்டி மாடு சாகாது

காட்டில் எறித்த நிலா போல

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை

குரைக்கிற நாய் கடிக்காது

கரும்பு தின்னக் கூலியா

ஆசை வெட்கம் அறியாது

இனம் இனத்தைச் சேரும்

ஆனைக்கும் அடிசறுக்கும்

ஆனை செத்தாலும் ஆயிரம் பொன்

அடியாத மாடு படியாது

பதறிய காரியம் சிதறும்

ஆடுற மாட்டை ஆடிக் கற
பாடிற மாட்டைப் பாடிக் கற

தன் வினை தன்னைச் சுடும்

அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்

தாமரை இலைத் தண்ணீர் போல

வினை விதைத்தவன் வினையறுப்பான்
திணை விதைத்தவன் திணையறுப்பான்

நன்றும் தீதும் பிறர் தர வரா

இறைக்கும் கிணறு ஊறும்
இறையாக் கிணறு நாறும்

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

காலமறிந்து பயிர் செய்
வேளையறிந்து வினை செய்

இளமையில் கல்வி சிலையில் எழுத்து

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்டாற்போல

மின்னுவதெல்லாம் பொன்னல்ல
மின்மினிப் பூச்சிகள் விளக்கல்ல

பட்ட காலே படும் கெட்ட குடியே கெடும்

எட்டாப் பழம் புளிக்கும்

கற்றது கைமண்ணளவு
கல்லாதது உலகளவு

கண்டதும் காதல்;கொண்டதே கோலம்

கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்

களவும் கற்று மற

தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளுமாப்போல

ஒரு சாண் ஏறி ஒரு முழம் சறுக்குமாப்போல

கல்லில நார் உரித்தாற்போல

கல்லுக்குள்ளும் ஈரமுண்டு

மழை,கார் இருட்டானாலும்
மந்தி கொப்பிழக்கப் பாயாது

சுட்டாலும் தங்கம் கறுக்காது
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு

கிட்டாதாயின் வெட்டென மற

ஊரோடு ஒத்தோடு

புது விளக்குமாறு நன்றாகக் கூட்டும்

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

சாடிக் கேற்ற மூடி

தாயைப் போல பிள்ளை;நூலப் போல சேலை

தனக்குத் தனக்கென்றால்
சுளகு படக்கு படக்கு எண்ணுமாம்

ஆனை வரும் முன்னே
மணியோசை வரும் பின்னே

பூனைக்கு மணி கட்டுவது யார்?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

அழுதாலும் பிள்ளை அவள் தானே பெற வேண்டும்

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு

ஆபத்துக்குப் பாவம் இல்லை

கெடுகுடி சொற் கேளாது

இக்கரைக்கு அக்கரை பச்சை

எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றினாற் போல

எலி வளையானாலும் தனி வளை வேண்டும்

வழித் தேங்காயை எடுத்துத்
தெருப்பிள்ளையாருக்கு உடைத்தாற் போல

ஊராவீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே

கழுதை அறியுமா கற்பூர வாசனை?

பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்

நெருப்பென்றால் நாக்கு வெந்து போகாது

பழகப் பழகப் பாலும் புளிக்கும்

தானம் கொடுத்த மாட்டில் பல்பிடித்துப் பார்க்காதே

தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும்

புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்

பொறுத்தார் பூமியாள்வார்

வெளுத்ததெல்லாம் பாலா?

வெள்ளம் வருமுன் அணை கட்டு

வேலியே பயிரை மேய்ந்தாற் போல

வேண்டாப் பெண்டாட்டி
கை பட்டாக் குற்றம் கால் பட்டாக் குற்றம்

நல்ல குருநாதர் நம்மைக் வருத்துவது
கொல்லவல்ல;கொல்லவல்ல
பொல்லா வினையறுக்க.

பட உதவி; நன்றி; இணையம்
Author: வந்தியத்தேவன்
•8:32 PM
நாளை ஆடிமாதம் பிறக்கின்றது. ஆடிப்பிறப்பு என்பது தமிழ் இந்துக்கள் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு தினமாகும். ஆடிப்பிறப்பு என்றவுடன் ஞாபகத்திற்க்கு வருவது ஆடிக்கூழும், நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் "ஆடிப்பிறப்பிற்க்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே" என்ற பாடலும் தான்.



ஆடிப்பிறப்பிற்க்கு வீடுகளில் இனிப்புக்கூழ் காய்ச்சுவார்கள். தூயாவின்ட குசினிக்கை இதன் செய்முறை இருக்கு. கொழுக்கட்டை அவிப்பார்கள். ஆடிகூழும் ஆடிக்கொழுக்கட்டையும் அவ்வளவு பேமஸ். தை மாதம் பிறப்பை தைப்பொங்கலாக கொண்டாடுகின்றோம், சித்திரை மாதப் பிறப்பை சித்திரைப் புத்தாண்டாக கொண்டாடுகின்றோம். ஆனால் ஆடிப்பிறப்பை ஏன் கொண்டாடுகின்றோம் என்ற கதை எனக்கு இன்னமும் தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லவும். ஏனெனில் இந்துக்களைப் பொறுத்தவரை ஆடிமாதத்தில் எந்த நல்லகாரியத்தையும் தொடங்கமாட்டார்கள். இந்தியாவில் இளம்ஜோடிகளை பிரித்துவைத்துவிடுவார்கள். எங்கட நாட்டிலை அந்தக் கொடுமையெல்லாம் இல்லை. ஆனால் திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்யமாட்டார்கள்.



ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் புழக்கத்தில் இருக்கு. இதன் அர்த்தம் ஆடியிலை விதை விதைத்தால் விளைச்சல் அதிகம் என்பதாகும். இப்படி ஆடி என்ற சொல் எம்மக்கள் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்திருந்தாலும் பின்னாளில் ஆடி என்றால் ஆடிக்கலவரமே முதலில் ஞாபகத்திற்க்கு வரும். ஆகவே தற்கால ஈழத்தமிழர்களின் வரலாற்று ரீதியாகவும் ஆடி முக்கியம் பெறுகின்றது.

இவற்றைவிட ஆடியில் நல்லூர், கதிர்காமம் உட்பட பல கோயில்களில் திருவிழா தொடங்கும்.

ஆடி அமாவாசை

ஒவ்வொருமாதமும் அமாவாசை வந்தாலும் ஆடிமாதத்தில் வருகின்ற அமாவாசைக்கு தனிச் சிறப்பு. பெரும்பாலான இந்துக்கள் தங்கள் முன்னோருக்கு பிதிர்க்கடன் செய்யும் நாள் ஆடி அமாவாசையாகும்.

எங்கள் முன்னோர்களான பிதிர்களை வழிபட்டால் தோசங்கள் நீங்கி நல் வாழ்வு பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. யாழ்ப்பாணத்தில் கீரிமலை நகுலேஸ்வரம், மட்டக்களப்பில் அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் கோயில், திருகோணமலையில் கோணேசர் கோயில் தீர்த்தம் என பல புண்ணிய தீர்த்தங்களில் தீர்த்தமாடி மக்கள் தங்கள் பிதிர்களுக்கு நன்றி செலுத்துவதுடன் பாவவிமோசனமும் அடைகின்றார்கள் என்பது ஐதீகம்.

நாளை(17.07.2009) ஆடிப் பிறப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(21.07.2009) ஆடி அமாவாசை.

படங்கள் உதவி இணையம்.
Author: வந்தியத்தேவன்
•12:35 AM
பாண் இலங்கையில் மட்டுமே பாவிக்கப்படும் ஒரு சொல். பாண் என்பது இலத்தீன் மொழி என்கிறார்கள் அறிஞர்கள். ஆங்கிலத்தில் ப்ரெட் எனப்படும் பாண் இலங்கை மக்களின் தேசிய உணவு என்றால் மிகையில்லை.



பெரும்பாலான இலங்கையர்கள் காலை உணவாக உண்பதே பாணாகும். இதற்கான முக்கிய காரணம் இலகுவில் கிடைக்கும் விலை குறைவு(இப்போ பாணின் விலை அதிகம்).

பாணின் சகோதரர்கள் பணிஸ், புழுப்பாண் அல்லது புழுபணிஸ்(சிங்களத்தில் ஹிம்புலா பன்), சங்கிலிப்பாண்,ஜாம் பணிஸ், கறிபணிஸ்(உருளைக்கிழங்கு அல்லது மீன் இறைச்சிக் கறிகள்)ரோஸ்ட் பாண்(இதனை உண்ண ஸ்பெசல் பற்கள் வேண்டும்),கிறீம் பணிஸ் ஆகியோராகும்.

கூடுதலாக பாண் சம்பலுடனுன் உண்பார்கள். இடிச்ச சம்பல் என்றால் அதன் ருசியே தனியாகும். பழங்கறியும் பாணும் இன்னொரு நல்ல கூட்டணி என்பார்கள். இதனைவிட ஜாம், பட்டர் போன்றவற்றுடனும் உண்ணமுடியும்.

காலையில் பலர் கையில் பாண் வாங்கும் பையுடனும் பேக்கரிகளிலும் இல்லை அருகில் இருக்கும் கடைகளிலும் காணப்படுவார்கள். காலையில் அலுவலகம் பாடசாலை செல்வர்களின் வசதி கருதியே பலர் பாணை நாடுகின்றார்கள். ஏனெனில் ஏனைய உணவுகள் தயாரிக்க நேரமெடுக்கும். காலை 6 மணிக்கே எழும்பி அம்மா பசிக்குது என கூவி அழும் சிறுவர்களுக்கு பாணோ பணிசோ சிறந்த உணவு.



ஒரு சிலர் பக்கத்துக் கடைகளில் வாங்காமல் பேக்கரிகளுக்குச் சென்று வாங்குவார்கள். காரணம் சில பேக்கரிகள் பாணிற்க்கு பேமஸ் கொழும்பில் ரோய‌ல் பேக்கரியில் பாண் வாங்க ஒரு பெரிய க்யூவே நிற்கும்.

நாங்கள் பிக் மேட்ச் எனப்படும் கிரிக்கெட் மேட்ச் நாட்களில் மதிய உணவாக பாணும் இறைச்சியும் தான்.சைவம் சாப்பிடுபவர்களுக்கு பருப்புக் கறி. சர்வதேச கிரிக்கெட்டுகளில் மதிய உணவு இடைவேளை 40 நிமிடம்தான் ஆனால் எமக்கோ சாப்பிட்டு முடிஞ்சால் தான் அடுத்த இனிங்ஸ்.

ஒருகாலத்தில் ஊரிலை கோஷ்டி, கூத்து, திருவிழா பார்க்க இரவில் சென்றால் விடியப்புறத்திலை பக்கத்து பேக்கரிகளில் சுடச்சுட பாண் வாங்கி அப்படியே ஒரு கறியும் இல்லாமல் சாப்பிடுவது பழக்கம். சிலவேளை சுடச் சுட பாண் வாங்கிவரும்போது எப்படியும் அரை இறாத்தல் பாண் பிச்சுப் பிச்சு தின்பட்டிருக்கும்.

யுத்தக்காலத்திலை பாணிற்க்கு இருந்த கிராக்கி அதிகம். சிலவேளைகளில் ஒரு குடும்பத்திற்க்கு ஒரு இறாத்தல் என்ற கஸ்டத்தைக்கூட எம்மக்கள் அனுபவித்தார்கள். பாணிற்கு மா இராது பேக்கரிகாரர் இருக்கிற கொஞ்ச மாவில் ஓரளவு பாண் சுட்டு தருவார்கள். க்யூவில் நிண்டுதான் வாங்கவேண்டும். பல தடவை க்யூவில் சண்டைகள் கூட ஏற்படும். எத்தனையோ நாள் மூன்று நேரமும் பாணையே உண்ட மக்களும் இருக்கிறார்கள். அரிசிக்குத் தட்டுப்பாடு அரிசி விலையோ யானை விலை ஆகையால் மூன்று நேரமும் பாணும் ஏதாவது மரக்கறி கறியும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்த பெருமை(?) எமக்கே சேரும். இவை எல்லாம் பழகிய வலிகள் எழுதும்போது கூட கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் சைக்கிள் உழக்கி பருத்தித்துறையில் ஒரு இறாத்தல் பாண் வாங்கிய நினைவுகள் மனதை நெருடுகின்றது.

சில இடங்களில் காலை உணவாகவும் பாண் இரவு உணவாகவும் பாணே உண்கிறார்கள். காரணம் வேலையால் வந்த களைப்பின் காரணமாக இரவுச் சாப்பாட்டையும் பாணாகவே மாற்றிவிட்டார்கள்.

ஒரு மூன்று நாட்கள் தொடர்ந்து பாண் சாப்பிடாமல் விட்டுவிட்டு நாலாம் சாப்பிடும்போது அதன் ருசி தனி.

இலங்கையில் சிலகாலத்திற்க்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணி ஏதாவது ஆட்டங்களில் வெற்றியீட்டினால் அடுத்த நாள் பாண் விலை கூடும். 1996ஆம் ஆண்டில் 4.50 சதத்திற்க்கு வாங்கிய பாணின் இன்றைய விலை 40 ரூபாவாகும்.

பாணின் ஏனைய சகோதரர்களின் படங்கள் கிடைக்கவில்லை
Author: யசோதா.பத்மநாதன்
•4:12 AM
பிள்ள சினேகிதி சொன்ன குலகுலயா முந்திரிக்கா பாட்டு ஞாபகம் இருக்கே? இதுகளும் அதுகளப் போல தான்.ஆனா என்ன கொஞ்சம் பொம்பிளப் பிள்ளயள் விளையாடுற விளையாட்டு.அவ்வளவு தான்.

கிள்ளுப் பிறாண்டி நுள்ளுப் பிறாண்டி:-

நாலஞ்சு பேர் வட்டமா இருப்பினம்.இரண்டு கையையும் முன்னால் பரப்பி வத்திருப்பார்கள்.ஒருவர் இந்தப் பாடலை இப்படிப் பாடுவார்.
கிள்ளுப் பிறாண்டி நுள்ளுப் பிராண்டி
கொப்பன் தலையில் என்ன பூ?

கிள்ளிப் பிராண்டி என்னும் போது அவர் ஒருவரது கையை நுள்ளுவார். பின்னர் நுள்ளுப் பிராண்டி என்னும் போது வரிசைக் கிரமமாக வரும் அடுத்தவரின் கையை நுள்ளுவார்.கொப்பன் தலையில் என்னும் போது அது அடுத்தவரது கையிற்கான நுள்ளாக இருக்கும்.என்னபூ என்பது 4வது கையிற்கான நுள்ளாக இருக்கும்.அவர் ஒரு பூவின் பெயரைச் சொல்ல வேண்டும்.பொதுவாக முருக்கம் பூ என்று சொல்வார்கள்.

பாடல் பிறகு இப்படித் தொடரும்.

முருக்கம் பூவத், தின்றவளே,
பாதி விளாங்காய், கடித்தவளே,
பாட்டன், கையை, மு, ட, க், கு,

ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு கையிற்கான நுள்ளாக வந்து கடைசியாக முடக்கு என்ற சொல் தனித்தனி எழுத்துக்கான நுள்ளாக இருக்கும். கு என்ற சொல் முடிகின்றவர் தன் கையை மறு புறமாகத் திருப்பி வைக்க வேண்டும்.பூவின் பெயரை வேறொன்றாகக் கூறும் போது வேறொருவரது கை திரும்புகின்ற வாய்ப்புக் கிட்டும்.அந்தக் கு என்ற சொல் மீண்டும் திருப்பிய கையில் வந்து முடிந்தால் அவர் தன் கையை எடுத்துக் கொள்ளலாம்.

பாடல் மீண்டும் அவ்வாறே தொடரும்.அப்படி முதலில் யாருடய கை முழுவதுமாக விடுபடுகிறதோ அவர் வெற்றி பெற்றவர்.
இப்போது நினைத்தால் இதிலெல்லாம் என்ன சுவாரிஸம் இருக்கிறது என்று தோன்றுகிறது. ஆனால் அப்போதெல்லாம் இது தான் திறம்.

ஆச்சுப் பிச்சிலி ஆச்சுப் பிச்சிலி

இது ஒரு சின்ன முசுப்பாத்தி விளையாட்டு.கைகளை அகல விரித்துக் கொண்டு ஆச்சுப் பிச்சிலி ஆச்சுப் பிச்சிலி என்று சொல்லிக் கொண்டு சும்மா சுத்துவது தான். இறுதியில் தலை சுற்றி ஒவ்வொருவராக தொப்புத் தொப்பென்று விழுவோம். அதெற்கெல்லாம் பெரிய வெற்றி பெற்றது போல் பெரிய சிரிப்பெல்லாம் சிரித்துக் கொள்வோம்.பாசாங்காக ஒருவர் மேல் ஒருவர் விழுந்து கொளவதற்கும் ஒரு சிரிப்பு. இதில் திறிலான சம்பவம் தலை சுற்றுவதை அநுபவிப்பதாகத் தான் இருந்தது என்று இப்போது தோன்றுகிறது.

இன்னொரு பாட்டிருக்கிறது. அதனை ஏன் பாடினோம் என்று இப்போது ஞாபகம் இல்லை. ஆனால் பாடல் ஞாபகமாக இருக்கிறது. பாடல் இது தான்.

அக்கா வீட்ட போனேன்
பழம் அரிசி தந்தாள்
வேண்டாம் என்று வந்தேன்
வந்த வழியில் பாம்பு
பாம்படிக்கத் தடிக்குப் போனேன்
தடியெல்லாம் ஊத்தை.
ஊத்தை கழுவ தண்ணிக்குப் போனேன்
தண்ணி எல்லாம் மீன்
மீன் பிடிக்க வலைக்குப் போனேன்
வலையெல்லாம் ஓட்டை
ஓட்டை தைக்க ஊசிக்குப் போனேன்
ஊசி எல்லாம் வெள்ளி
வெள்ளி எல்லாம்(அம்மா?) வெள்ளி
பொயிலைக் காம்பை நுள்ளி
வாய்க்கை போடடி கள்ளி.

இப்பாட்டு ஒரு லயத்தோடு பாடப் படும்.

இப்போது இன்னொரு பாட்டும் ஞாபகம் வருகிறது.
இது பலராக பெண்கள் விளையாட்டில் தம்மை இரண்டு பிரிவாகப் பிரிப்பதற்காக இப்பாடலைப் பாடிப் பிரித்துக் கொள்வார்கள். பாடல் இது தான்.எல்லோரும் வட்டமாக நிற்க ஒருவர் தன்னில் இருந்து இப்பாடலை இப்படி ஆரம்பிப்பார்.ஓர் என்று தன் உச்சம் தலையில் கை வைப்பார். அம்மா என்று தன் நெஞ்சில் கை வைப்பார். பிறகு ஒவ்வொரு சொல்லாக ஒவ்வொருவரைச் சுட்டியபடி வருவார்.

ஓர் அம்மா கடைக்குப் போனா
ஒரு டசின் பென்சில் வாங்கி வந்தா
அதன் நிறம் என்ன?( என்ன என்பதில் முடிபவர் ஒரு நிறத்தைச் சொல்ல வேண்டும்)

அவர் சிவப்பு என்று சொன்னால் சி, வ,ப்,பூ என்று ஒவ்வொருவராகச் சுட்டிக் கொண்டு வர வேண்டும்.கடைசி எழுத்தில் முடிபவர் ஒரு புறமாக நின்று கொள்ள வேண்டும். பின்னர் இப்பாடல் மீண்டும் தொடரும். அடுத்த முறை முடிபவர் மறு புறமாக நின்று கொள்ள வேண்டும். இப்படியாகக் கட்சி பிடித்துக் கொள்வார்கள்.

இன்னொரு பாட்டும் இருக்கிறது.' என்னகுத்து? இந்தக் குத்து' என்று முன்னால் நிற்பவரைக் குத்துவது.அதன் தொடக்கம் தெரியவில்லை.

இப்போதெல்லாம் இப்படிப் பாடிக் கொள்கிறார்களா என்றும் தெரிய வில்லை.
Author: soorya
•4:16 PM
கடல். அங்கம் 1. தொடர் 2
அவருக்குச் சைக்கிள் ஓடத் தெரியாது.
...................................................................................
(தொடர்கிறது)
ஆச்சி திட்டத் தொடங்கினா விடமாட்டா. ஆச்சிமார் திட்டேக்கை ஒரு விசுவல் இமேஜ் இருக்கும். அதுக்காகவே ஆச்சிமாரைச் சீண்டலாம்....கதையுக்கை கதையா..இதையும் சொல்லத்தான் வேணும். ஒருநாள் ஆச்சி பாக்கிடிச்சுக் கொண்டிருந்தா. நான் நைஸா பக்கத்தில போய் இருந்தன்.
என்ரை பேரன் எனக்குப் பக்கத்திலை இருக்குதெடி, பாரன் பாசத்தை...! எண்டு ஆச்சி வலு சந்தோசமாய் இருந்தா.
நான், கையிற் கொண்டு போன.. ,ஒரு பிடி மண்ணை, பாக்குரலுக்குள் போட்டன்.(நான் எவ்வளவு குரூரப் புத்தியுடையவனாய் இருந்திருக்கிறேன். உண்மையில் அவாவின் திட்டுக் கேட்க எனக்குப் பிடிக்கும்.)
தொடங்கிச்சிதே மனிசி......!!!
திட்டு என்றால் அதுதான் திட்டு.
தமிழ் வசைச் சொற்களை அன்றுதான் என் செவியாரக் கேட்டேன்.
சில திட்டுகளின் முடிவில் செந்தமிழும் கலந்து கொண்டது.(யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில், செந்தமிழால் திட்டுதல் என்பது தூசணத்தில் ஏசுதல் எனப் பொருள்படும். மலையகத்தில் தூசணம் என்பதற்கு, ஊத்தைப் பேச்சு என்று பொருள்)
.....
நான் உண்மையாப் பயந்து போனன்.
ஒரு ஓசை நயத்துடன்..பாடல் போல அந்தத் திட்டு அமைந்திருந்தது.
எனக்குச் சரியா நினைவில்லை.
அப்பப்ப நினைவுவரேக்கை இணைப்பதற்கு மறக்கமாட்டேன்.
.....
''என்ன ஐசே றாக்கன் வாறீரா? ஊரைச் சுத்திப் பாப்பம்?'' எண்டு கேட்டன்.
'' ம் '' என்று சொன்னார்.
எனக்குச் சிரிப்படக்க முடியேல்லை. ஏன் சொல்லுங்கோ பாப்பம்?
நான், ஒரு களிசானும் சும்மா ஒரு பெனியனும் வெறுங்காலோடையும் நிக்கிறன்.
அவரோ...,சுவற்றரும்.. பொலிஸ் பண்ணின சப்பாத்தும் நீள சொக்சுமா நிக்கிறார்.
சிரிப்பை அடக்கிக்கொண்டு றோட்டுக்கு வந்தன்.
''நீர் ஓடப் போறீரா? அல்லது நான் ஓடட்டா?'' என்று கேட்டேன்.
அவர், சைக்கிளை மேலும் கீழும் பார்த்தார்.
''ரொம்ப வேகமா ஓடுமா இது?'' என்று கேட்டார்.
(தொடரும்)
Author: வர்மா
•5:57 AM
சிவராத்திரி எண்டால் எங்களுக்கு உசார்வந்துவிடும். விடியவிடிய கன இடங்களீலை கூத்துநடக்கும்.அந்த இரவு மறக்கமுடியாத இரவாக இருக்கும்.கூத்துப்பாக்க எண்டு வீட்டிலை சொல்லிப்போட்டு வெளீக்கிட்டா கன சோலியளை செய்வம்.
அண்ணாச்சாமி வாத்தியாரின்ரை சீன் கன இடங்களூக்குப்போகும்.சீன்,லைற் எஞ்ஜின். ஸ்பீக்கர், மேக்கப் எண்டு எல்லாத்தையும் அண்ணாசாமிவாத்தியார் பொறுப்பெடுப்பார். முல்லைத்தீவு,மீசாலை,அல்வாய்,சமரபாகு,கொடிகாமம் எண்டு அஞ்சு இடத்திலை அவற்றை ஆக்கள்தான் சீன் கட்டுவினம்.
நாங்கள் கூத்துப்பாக்கஎண்டுசொல்லிப்போட்டு வேறை அலுவல்தான் பாப்பம்.இளனி களவெடுக்கிறது, மரவள்ளிக்கிழங்குபிடுகிங்கி அவிக்கிறது,படலையை களட்டி அவற்ரைகோவக்காரரின்ரை வீட்டிலை கட்டுறது,வாளைக்குலை வெட்டுறது எண்டுஎங்கடை வேலை விடியவிடியநடக்கும். சிவராத்திரிக்கு மூண்டாவது ஷோ எண்டாலும்கட்டாயம் பாப்பம்.
நடிகமணீ வி.வி. வைரமுத்துவின் மயானகாண்டம் எங்கையாவது நடக்கும் கட்டாயம் மயானகாண்டம் பாத்துப்போட்டுத்தான் படம் பாப்பம்.வைரமுத்துக்கு சோடியாக அரியாலை ரத்தினம் ஸ்திரிபாட் .சந்திரமதியாகரத்தினம் அழுதா சனமும் அழும். அச்சுவேலி மார்ககண்டுதான் யமனாக வருவார். அவருக்கு பேரேயமன் மார்க்கண்டுதான்.
மயானகாண்டம் நடக்கமுதல் பவூன் சின்னதுரையும் சீனா பானாவும் சனத்தசிரிக்கபண்ணுவினம்.ஒரு இடவெளி பாத்து பருத்துறைக்குப்போய் தோசை அப்பம் சாப்பிடுவம்.
கூத்துப்பாக்ககனசனம் வரும் கொஞ்சப்பேர்தான் விரதகாறர். மிச்சப்பேர் பம்பலுக்கு வாறவை.அது அந்தககாலம். இனிஅது போலைவராது.

கூத்து.........................நாடகம்
கும்மாளம்/குஷி......சத்தோசம்
உசார்..............உற்சாகம்
சீன்............நாடகதிரைச்சீலை
அலுவல் .......வேலை
படலை........வீட்டுக்குவெளீயே உள்ளகதவு
பம்பல்.......பொழுதுபோக்கு
ஸ்திரிபாட்......பெண் வேடமிடும் ஆண்
பவூன்..........நகைச்சுவை நடிகர்
Author: வந்தியத்தேவன்
•9:57 AM
மைம்மலுக்கை சுருட்டும் கையுமாக இருந்த சண்முகம் கிழவன் தெருவாலை போன ஒரு பெட்டையை மட்டுக்கட்டமுடியாமல் "உதார் பிள்ளை " என அவளைக்கூப்பிட்டார்.

"எணே அப்பு அது நான் மணியத்தாற்றை மூத்தது" என பதிலளித்தாள் மணியம் மாஸ்டர்ரை மூத்த பெட்டை மணிமொழி.

"எங்கே பிள்ளை கலாதியாக வெளிக்கிட்டுக்கொண்டுபோறாய்" கிழவன்

"என்ரை கூட்டாளிப் பிள்ளை ஒருத்திக்கு இண்டைக்கு பேர்த்டே அங்கேதான் போறன்" என்ற படி மணிமொழி சைக்கிளை உதைய‌த்தொடங்கினாள்.

பார்ட்டியிலை மணிமொழியின் நண்பின் தாயார் அனைவரையும் நன்றாக உபசரித்தார். எல்லோருக்கும் இன்னொரு தரம் அரியதரம் சாப்பிடக்கொடுத்தார். "பிள்ளையள் இந்த அரியதரத்தை மிச்சம் விடாமல் சாப்பிடுங்கோ, இல்லையென்றால் சக்குப் பிடிச்சுப்போம்" எனக் கூறினார்.

மணிமொழி பக்கத்திலை இருந்த தன் நண்பி தர்சியைப் பார்த்து "தர்சி அங்காலை கதவுக்குப் பக்கத்திலை நிற்கிற பொடியன் என்னைப் பார்த்து இளிக்கிறான், "உவன் என்ரை கூட்டாளி ஒருத்திக்கு டிமிக்கி கொடுத்தவன்" அவனுக்கு பெரிய கெப்பர் பொடிப்பிள்ளை ஒருநாளைக்கு தனிய அம்பிடட்டும் அண்டைக்கிருக்கு உவருக்கு" என்றாள்

"எடியே பிலத்துக் கதையாதே அவனுக்கு கேட்கப்போவுது மற்றது இண்டைக்கு எல்லோரும் உன்னைத்தான் பார்க்கினம் வீட்டைபோய் ஒருக்கா நாவூறு பார்" என்றால் தர்சி.

"சரியடி தர்சி நான் வீட்டை போறன் போற வழியிலை நடனமுருகன் மருந்துக்கடையிலை அம்மாவுக்கு குளிசையும் வாங்கவேண்டும்" என்ற மணிமொழி வீட்டைநோக்கிச் செல்லத்தொடங்கினாள்.

போற வழியிலை சனமெல்லாம் அலார்ப்பட்டார்கள். பக்கத்திலை நிண்ட ஒருத்தரை என்ன பிரச்சனை எனக்கேட்க அவர் புளியடிச் சந்தியிலை ஏதோ கலாதியாம் என்றார்.

பாதையை மாற்றிக்கொண்டு நேரகாலத்திற்க்கு மணிமொழி வீடுபோய்ச் சேர்ந்தாள்.

மைம்மல் ‍- மாலைப்பொழுது.

மட்டுக்கட்டுதல் -அடையாளம் காணுதல்

வசந்தன் அண்ணையை மட்டுக்கட்டமுடியேல்லை என்றால் வசந்தன் அண்ணையை என்னால் அடையாளம் காணமுடியாமல் போயிற்று.

கலாதி - இரண்டு அர்த்ததில் பாவிக்கப்படும் சொல். ஒன்று அழகு இன்னொன்று சண்டை சச்சரவு

உன்ரை உடுப்பு கலாதியாக இருக்கு என்றால் உடை அழகாக இருக்கு என அர்த்தம்.

வகுப்பிலை இண்டைக்கு எனக்கும் பிரபாவுக்கும் கலாதி என்றால் எம்மிருவருக்கும் சண்டை என்ற அர்த்தம் வரும்.

வெளிக்கிடுதல் - உடை அணிதல், தயார் ஆகுதல். கலியாணப்பொம்பிளை இன்னும் வெளிக்கிடவில்லை என்றால் அவர் தயாரில்லை எனப் பொருள் படும். மாப்பிள்ளை இப்போதான் வெளிக்கிடுகிறார் என்றால் அவர் உடை அணிகின்றார் என்ற பொருள்.

கூட்டாளி - நண்பன் நண்பி(பொதுப்பால்)

உதைதல் - காலால் உதைத்தல்

அரியதரம் - சீனி அரிசி மா கலந்து செய்யும் இனிப்பு பண்டம். சிலவேளைகளில் கொஞ்சம் கல்லாக இருக்கும் கடித்தால் விழுகின்ற நிலையில் இருக்கும் பல்லு நிச்சயம் விழும்.

சக்கு - பூஞ்சணம் பிடித்தல்(பூஞ்சணம் என்பது பங்கஸ்)

இளித்தல் - அசடு வழியச் சிரித்தல்

டிமிக்கி கொடுத்தல் - ஏமாற்றுதல். டிமிக்கி எந்த மொழிச் சொல் எனத் தெரியவில்லை.

கெப்பர் - தலைக்கனம்

அம்பிடல் - பிடிபடுதல்

பிலத்து - சத்தம். பிலத்து கதையாதே என்றால் சத்தமாக கதையாதே எனப் பொருள்

மற்றது - அடுத்தது

நாவூறு - கண்ணூறு. பொதுவாக ஒருவர் கண் வைத்தால் கண்ணூறு ஏற்படும் எனவும். இன்னொருவரை புகழ்ந்து பேசினால் நாவூறு( நாக்கு+ ஊறு) ஏற்படும் எனவும் சொல்வார்கள். செத்தல் மிளகாய், உப்பு, வேப்பமிலை போன்றவற்றால் நாவூறு பார்ப்பார்கள்.

குளிசை - மாத்திரை

அலார் - அல்லோலகல்லோலப்படல்

குறிப்பு : புதிய சொற்களை அகராதி வடிவில் தராமல் கதைபோல் எழுதக்காரணம் படிக்கின்றவர்களுக்கு இலகுவாக விளங்கும் என்பதற்கேயாகும்.
Author: soorya
•4:45 AM
அவருக்குச் சைக்கிள் ஓடத் தெரியாது.
...............................................................................................
கதை கேக்க எல்லாரும் வந்திட்டியள்.
வாங்கோ. இருங்கோ. கேளுங்கோ.
...
அப்பர் எனக்குச் சொல்லிப்போட்டார், ஊரைச்சுத்திக்காட்டு என்று.
என்னத்திலை போறது எண்டு அப்பரிட்டைக் கேட்டன்.
என்ரை சையிக்கிளை எடுத்துக்கொண்டு போவன். என்றார்.
அப்பாவா இப்படிச் சொல்லுறார்?
அவற்றை சையிக்கிளைத் தொடக்கூட விட மாட்டார், இப்ப இப்பிடிச் சொல்றார்.
ஓகே. எனக்கடிச்சுது யோகம்.
...
எடுத்தன் சைகிளை.
வந்திருக்கிற ஆளுக்கு ஒரு லெவல் அடிக்க வேணுமெல்லோ....!
bபார் க்குக் கீழால ஒரு றவுண்ட், பிறகு மேலால ஒரு றவுண்ட், பிறகு சீற்றிலை இருந்தன்.(அப்பர் கொஞ்சம் உயரம், சீற்றை உயர்த்தி வைச்சிருப்பார்)
இடது பக்கப் பெடல் உயர வரேக்கை...இடது காலால் ஒரு மிதி.
வலது பக்கம் உயரேக்கை அதிலை வலது காலால் ஒரு மிதி.
இடுப்பை இடமும் வலமுமாக அசைக்கவேணும், இல்லாட்டி இந்தக்கலை சாத்தியமில்லை.
இப்பிடிச் சைக்கிள் ஓடுறதை எங்கடை மதவடிப் பொடியள், உழுந்தரைக்கிறது எண்டு சொல்லுவாங்கள்.
பகிடி என்னெண்டா... என்ரை ஸ்ரயிலை ராக்கையாக் கவுண்டர் அதுதான் நம்ம றாக்கன் பாத்துக்கொண்டேயிருக்கிறார்.
அவருக்கு நான் செய்வதெல்லாம் ஒரு சர்க்கஸ் காரன் செய்வது போலை இருக்கு.
வாயை ஆ..ஆஆ எண்டு பிளந்துகொண்டு பாத்துக்கொண்டிருந்தார்.
அவருக்குத்தானே சைக்கிள் எண்டாலே என்னெண்டு தெரியாது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் இது சர்வ சாதாரணம் எண்டும் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
என்ரை ஹீரோத்தனம்.. ஆச்சியின்(அப்பம்மா) திட்டுத் தடுக்கும்வரை தொடர்ந்தது.
..........எட கோதரி விழுவானே. கொப்பன்ரை சைக்கிளை விழுத்திப்போட்டு, அவனிட்டை எக்கணம் உரியெல்லே (தோலை உரிப்பான் என்று அர்த்தம்) வாங்கப்போறாய்...........................!

தொடரும்.................................