Author: கானா பிரபா
•5:28 PM

யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகர் நல்லூர் (நல்ல ஊர்) என்று அழைக்கப்பட்டமை குறிப்பிடற்பாலது. இது தமிழகத்திலுள்ள இடமொன்றின் பெயராகும். தமிழகத்திலே ஆதிச்ச நல்லூர், சக்கரவர்த்தி நல்லூர், வெண்ணை நல்லூர், சேய் நல்லூர், வீரா நல்லூர், சிறுத்தொண்டர் நல்லூர், கடைய நல்லூர், சிங்க நல்லூர் முதலிய பல இடங்களுண்டு. இத்தகைய இடமொன்றிலிருந்து இங்கு வந்தோர் தமது தாயகப் பெயரை இப்புதிய இடத்திற்குச் சூடியிருப்பர். யாழ்ப்பாணத்திற்கு தெற்கே பூநகிரி, திருகோணமலை முதலிய இடங்களிலும் நல்லூர் என்ற பெயர் தாங்கிய ஊர் உண்டு.நல்லூரிலே உள்ள பழைய பிரதான சிவாலயங்களிலொன்று சட்டநாதர் ஆலயமாகும். தமிழகத்திலே திருஞான சம்பந்தர், முத்துத் தாண்டவர் முதலியோர் பிறந்த சீர்காழியிலும் சட்டநாதர் ஆலயமுண்டு என்பதும் இங்கு ஒப்பிட்டு நோக்கற்பாலது.

இவ்வாறு பலதிறப்பட்ட மூலாதாரங்களைப் பயன்படுத்தியே யாழ்ப்பாண அரசு குறிப்பாக அதன் தலைநகர் நல்லூர் பற்றி ஓரளவாவது அறியக்கூடியதாகவுள்ளது. ஏற்கனவே முக்கியத்துவம் வாய்ந்த ஒருபகுதியாயிருந்து சோழப் பேரரசு தொடர்ந்து ஏற்பட்ட பாண்டியப் பேரரசு ஆட்சிக் காலங்களிலே முக்கியத்துவம் பெற்ற நல்லூர், கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் உதயம் பெற்ற தமிழரசின் தலைநகராகச் சுமார் நான்கு
நூற்றாண்டுகளாக விளங்கியுள்ளது. இவ்வரசு இலங்கையிலுள்ள வட பிராந்தியத்திலுள்ள அரசு போலக் காணப்படினும், இதிலிருந்து ஆட்சி புரிந்த அரசர்கள் முழு இலங்கையிலும் தமது ஆதிக்கத்தை ஏற்படுத்த முயன்று வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்விராசதானி அமைந்திருந்த உண்மையான இடத்தையோ அல்லது அதன் விஸ்தீரணத்தையோ பூரணமாக அறியக் கூடிய அளவிற்குத் தொல்லியற் சான்றுகள் கிடைக்கவில்லை. கிடைத்த சான்றுகளை வைத்துக் கொண்டு நோக்கும் போது இவ்விராசதானி தற்போதய நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்கு முன்னால் உள்ள மூன்று மைல் சுற்றுவட்டத்தினுள் இருந்திருக்கலாம் என்று ஊகிக்க முடிகின்றது. இதன் எல்லைக்குள் வரலாற்றுப் பழமை வாய்ந்த கொழும்புத் துறையும், பண்ணைத் துறையும் அடங்குகின்றன.
இதை யாழ்ப்பாண வைபவமாலையில் வரும் ஆதாரங்களும் போர்த்துக்கீச ஆசிரியர்களின் குறிப்புக்களும் உறுதிப்படுத்துகின்றன.

இவ்விராசதானியின் அமைப்புப் பற்றி யாழ்ப்பாண வைபவ மாலையில் வரும் வர்ணனை இப்படிச் சொல்கின்றது.

"நாலு மதிலும் எழுப்பி வாசலும் ஒழுங்கா விடு
வித்து மாடமாளிகையும் , கூட கோபுரங்களையும்,
பூங்காவையும் பூங்காவன நடுவிலே
ஸ்நான மண்டபமும், முப்படைக் கூபமும் உண்
டாக்கி அக்கூபத்தில் ஜமுனா நதித் தீர்த்தமும்
அழைப்பித்துக் கலந்து விட்டு நீதி மண்டபம்
யானைப் பந்தி , குதிரை லயம், சேனா வீரரிருப்பிடம்
முதலியன கட்டுவித்து - கீழ் திசை வெயிலுகந்த
பிள்ளையார் கோயிலையும் தென் திசைக்குக்
கயிலாய பிள்ளையார் கோயிலையும், வட திசைக்குச்
சட்ட நாதர் கோயில் தையல் நாயகி
அம்மன் கோயில் சாலை விநாயகர் கோயிலையும்
அமைப்பித்தனர்"

நல்லூர் இராசதானி குறித்த சுருக்கமான அறிமுகமாக இப்பதிவு விளங்குகின்றது. தொடர்ந்து வரும் பிந்திய பகுதிகள் ஆழ அகலமாக இது பற்றி நோக்கவிருக்கின்றன.

மூலக்குறிப்புக்கள் உதவி: "யாழ்ப்பாண இராச்சியம்", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்
புகைப்படம்: 2005 ஆம் ஆண்டு யாழ் சென்றிருந்த போது என்னால் எடுக்கப்பட்டது.
This entry was posted on 5:28 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

9 comments:

On July 29, 2009 at 5:50 AM , வந்தியத்தேவன் said...

நல்லூரை இறுதியாக ஆண்ட மன்னர் சங்கிலியன் தானே.

 
On July 29, 2009 at 6:06 AM , வர்மா said...

வந்தியத்தேவருக்கு சந்தேகம் அதிகம்.
அன்புடன்
வர்மா

 
On July 29, 2009 at 7:32 AM , வந்தியத்தேவன் said...

//வர்மா said...
வந்தியத்தேவருக்கு சந்தேகம் அதிகம். //
வந்தியத்தேவன் படதா சந்தேகங்களா? ஆனானப்பட்ட குந்தவையே பொன்னியின் செல்வருக்கு எதிராக சதி செய்கிறாரோ எனச் சந்தேகபப்ட்டவர்,

 
On July 29, 2009 at 7:40 AM , கீத் குமாரசாமி said...

நான் எப்பிடிங்க இங்க சொந்தக்காரன் ஆகிறது????

 
On July 29, 2009 at 4:07 PM , கானா பிரபா said...

வந்தி

சங்கிலியன் தான், என்ன திடீரெண்டு சந்தேகம் ;)

கீத்

அழைப்பு அனுப்பியிருக்கிறேன்.

 
On July 29, 2009 at 7:07 PM , வந்தியத்தேவன் said...

//கானா பிரபா said...
சங்கிலியன் தான், என்ன திடீரெண்டு சந்தேகம் ;)//

அப்போ சங்கிலியனுக்கு பின்னர் ஆட்சி செய்தது யார்? போர்த்துக்கீசரா? ஒல்லாந்தரா? செங்கை ஆழியானின் நல்லூர் இராச்சியத்தில் பூதத்தம்பி பற்றிய குறிப்புகள் பார்த்தேன். அதில் சங்கிலியனுக்குப் பின்னர் மன்னராட்சியில்லாமல் முதலியார்கள் ஆட்சி செய்ததுபோல் தெரிகிறது. எதற்க்கும் சில மணி நேரத்தில் அதனை மீளபார்த்துவிட்டுச் சொல்கிறேன்.

 
On July 30, 2009 at 9:04 AM , Thevesh said...

திரு கானா பிரபா கவனத்திற்கு: ஈழவர் களை கழம் சேற்கும் தழமாக
ஈழமுற்றம் இருப்பதக வாசித்த ஞாபகம்.ஆனால் சேர்ந்து கொள்ளுவதற்குரிய வழிமுறை
எங்கும் காணப்படவில்லை.
www.nilamuttram.com இந்த
முகவரி அபாய அறிவிப்பு
தருகின்றது.என்னால்
உட்செல்லமுடியவில்லை.

 
On July 31, 2009 at 8:30 AM , கானா பிரபா said...

வணக்கம் தேவேஷ்

kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ஒரு மடல் இடுங்கள், அழைப்பு அனுப்புகின்றேன்.

 
On July 31, 2009 at 8:38 AM , கானா பிரபா said...

வந்தியத்தேவன் said...

//கானா பிரபா said...
சங்கிலியன் தான், என்ன திடீரெண்டு சந்தேகம் ;)//

அப்போ சங்கிலியனுக்கு பின்னர் ஆட்சி செய்தது யார்? போர்த்துக்கீசரா? ஒல்லாந்தரா? செங்கை ஆழியானின் நல்லூர் இராச்சியத்தில் பூதத்தம்பி பற்றிய குறிப்புகள் பார்த்தேன்.//

வந்தி

சங்கிலியனுக்கு பின்னர் முதலிமார்கள் வெள்ளையரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து நிர்வாகப்பணிகளை மேற்கொண்டிருந்தார்கள். பூதத்தம்பி குறித்து கடற்கோட்டை நாவல் சுவைபடச் சொல்கிறதே