Author: வந்தியத்தேவன்
•10:59 AM
கொழும்புத் தமிழர்கள் என் ஆரம்பகாலத்தில் கொழும்பில் வசித்துவந்த செட்டிமார்களையே குறிக்கும். பெரும்பாலானவர்கள் கத்தோலிக்கர்களாக இருக்கிறார்கள். கொழும்பு என்பது ஸ்ரீலங்காவின் தலைநகரமாகும். அதனால் அங்கே பல்லின மக்கள் வசிக்கின்றார்கள். சிங்கள மக்களைப் பொறுத்தவரை கொழும்பு சிங்களவர்கள் என்ற பதம் மிகக் குறைவாகவே பாவிக்கப்படுகின்றது. கொழும்பு செவன்(7) சிங்களவர்கள் என்ற பதம் பரவலாக பாவிக்கப்படுகின்றது.

இந்த கொழும்பு 7 மக்கள் பெரும்பாலும் உயர்தட்டுமக்களாகவே காணப்படுகின்றார்கள். ஜேஆர் ஜெயவர்த்தனா, ரணில் விக்கிரமசிங்க போன்றவர்கள் சிறந்த உதாரணங்களாகும்.

கொழும்பில் வசிக்கும் பெரும்பாலான சிங்கள மக்கள் வேறு இடங்களில் இருந்து தங்கள் வேலை வியாபாரம் காரணமாக கொழும்பில் வசிப்பவர்களாகும். தமிழ் சிங்களப் புதுவருட காலத்தில் பெரும்பாலான சிங்கள மக்களின் வீடுகளில் யாரும் இருக்கவே மாட்டார்கள் அவர்கள் தங்கள் சொந்த ஊரில் புதுவருடத்தைக் கொண்டாடச் செல்வார்கள்.

கொழும்புத் தமிழர்களாக காலங்காலமாக அங்கேயே வசிக்கும் தமிழர்களுடன் வடகிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையகத்தில் இருந்து கொழும்பில் வேலை வியாபார நிமித்தம் சென்று நிரந்தரமாக குடியேறியவர்களைக் குறிப்பிடலாம். இதனைவிட யுத்த சூழல் காரணமாக அங்கே சென்று குடியேறியவர்களையும் குறிப்பிடலாம். இவர்களின் அடையாள அட்டைகளில் வசிக்கும் முகவரி கொழும்பாக இருந்தாலும் பிறந்தது யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கண்டி, நுவரஎலியா என இருக்கும். இதனால் சில பாதிப்புகளும் ஏற்படுவதுண்டு.

இவர்களின் தமிழ் பல பிரதேசத் தமிழ்களை கொண்டு ஒரு கதம்பமாகவே இருக்கும். அத்துடன் பல சிங்களச் சொற்களையும் சரளமாகப் பாவிப்பார்கள். இவர்களின் உச்சரிப்புகூட கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கும். பிரதேசங்களின் உச்சரிப்புகள் பற்றி தமிழறிவு அதிகம் கொண்ட ஒருவர் எழுதினால் பலருக்கும் உதவும்.

எனது வாழ்க்கையின் முதல் பகுதி காலம் யாழ்ப்பாணத்தில் கழிந்தது. அடுத்த பகுதி கொழும்பில் கழிந்துகொண்டிருக்கின்றது. ஆனாலும் யாழ்ப்பாண நினைவுகளும் சொற்களும் பெரும்பாலும் நினைவில் நிற்கின்றன. கொழும்புத் தமிழ் ஓரளவு விளங்கும். ஏதோ எனக்குத் தெரிந்தவை. ஏனைய நண்பர்கள் தமக்கு தெரிந்தவற்றை தெரியப்படுத்தவும்.

அந்தி ‍- பின்னேரம் அந்திக்கு வீட்டுக்கு வாறேன்

மறுவ ‍- பிறகு

கதேய் ‍- விடயம் என்ன கதேய்

கேந்தி - கோபம் (சிங்களச் சொல்)

படு (சிங்களச் சொல்) - பெண்களையே குறிக்கப் பயன்படுத்துகிறார்கள். இதன் தமிழ் அர்த்தம் பொருட்கள். இதனைப் பாவிப்பது நாகரீகம் இல்லையென்பார்கள்.

ஐஸ்சுட்டி -அதனாலே பஸ் லேட் ஐஸ்சுட்டி நான் ஸ்கூலுக்கு லேட்டாப் போயிட்டேன்

வேல‌ - நேரத்திற்க்கு. வேல‌க்கு வாங்க எந்த லையா லாவா என்பது எனக்கு சந்தேகம்

அய்த்தானே - அதுதானே

மாற - நல்ல அழகான என்ற அர்த்தங்கள் வரும். நாடோடிகள் மாற படம். (சிங்களச் சொல் என நினைக்கிறேன்)

நோண்டி - ‍ அவமானப்படுதல். மச்சான் நேற்று கீழே விழுந்து மாற நோண்டி. எந்த மொழிச் சொல் என்பது தெரியாது.

பெரும்பாலும் இவர்களின் உச்சரிப்பு வித்தியாசமாகவே இருக்கும். பெரும்பாலான தமிழ்ச் சொற்கள் உச்சரிப்பு வித்தியாசத்தால் மருவி வழக்கில் இருக்கின்றன. ஓரளவு முயற்சி செய்திருக்கிறேன். பிழை இருந்தால் திருத்தவும்.

முக்கிய குறிப்பு : தமிழ்மொழி பேசும் இஸ்லாமியச் சகோதரர்களை நான் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளவில்லை. கொழும்பு இஸ்லாமியர்களின் தமிழ் பெரும்பாலும் கொழும்புத் தமிழர்களின் தமிழ்போலவே இருக்கும்.
This entry was posted on 10:59 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

58 comments:

On July 3, 2009 at 11:54 AM , சோமி said...

படு /// படு என்றால் பெண்களைக் கூரிப்பது என்று பொது அர்த்தத்தில் வராது....பெரும்பாலும் விபச்சாரிக்களைக் குறிப்பதற்க்கு பயன்படுத்துவர். படு எனபதற்கான தமிழ் மொழிபெயர்ப்பு சரக்கு என்ற அர்த்தம்...மச்சாங் கொந்த படு.......

 
On July 3, 2009 at 11:57 AM , வந்தியத்தேவன் said...

இல்லை சோமி நீங்கள் சொல்வது சரி ஆனால் பொதுவாக கொச்சையாக பெண்களையே குறிப்பிடுவார்கள். இந்தச் சொல் பிரச்சனை என்றால் நீங்கிவிடலாம்.

 
On July 3, 2009 at 12:26 PM , சினேகிதி said...

கசால் = சண்டை

 
On July 3, 2009 at 4:02 PM , `மழை` ஷ்ரேயா(Shreya) said...

ஐஸ்சுட்டி - அது சுட்டி.
அதுதானே - அய்த்தானே ஆகின மாதிரித்தான் ஐஸ்சுட்டியும் மருவியிருக்க வேணும் என நினைக்கிறன்.

வேல - நேரம் என்டால் வெலா, அல்லது தமிழில வேளைக்கு என்பது ள-ல உச்சரிப்பு விதத்தில மாறியிருக்கலாம்.

 
On July 3, 2009 at 6:42 PM , யசோதா.பத்மநாதன் said...

சிங்களத்தமிழ் மொழிக்கலப்பினால் பிறந்த குழந்தையும் அழகு தான்.

நீர் கொழும்புத் தமிழும் அவர்களது பண்பாட்டு வழக்குகளும் கூட நாம் கவனிக்கத் தவறிய ஒன்று தான்.

அங்கும் பல சுவாரிசங்கள் உள்ளன.

ராசா, அதப் பற்றி ஏதாவது உனக்குத் தெரியுமே மோன?

 
On July 3, 2009 at 7:35 PM , வாசுகி said...

இந்த சொற்களில் எனக்கு நோண்டி மட்டும் தான் தெரியும்.நானும் பாவிக்கிறனான்.மாற என்பது அழகானது என்றா அர்த்தம்.மாற நோண்டி என்று கதைப்பதை கேட்ட மாதிரி இருக்கு.
நன்றி

 
On July 3, 2009 at 7:44 PM , வந்தியத்தேவன் said...

// சினேகிதி said...
கசால் = சண்டை //
நன்றிகள் சினேகிதி உங்கள் சண்டைக்கு

//`மழை` ஷ்ரேயா(Shreya) said...
ஐஸ்சுட்டி - அது சுட்டி.
அதுதானே - அய்த்தானே ஆகின மாதிரித்தான் ஐஸ்சுட்டியும் மருவியிருக்க வேணும் என நினைக்கிறன்.

வேல - நேரம் என்டால் வெலா, அல்லது தமிழில வேளைக்கு என்பது ள-ல உச்சரிப்பு விதத்தில மாறியிருக்கலா//

அதேதான் பல சொற்கள் மருவியுள்ளன சில சொற்களின் உச்சரிப்பினால் சொற்கள் மருவியுள்ளதுபோல் தெரிகின்றது.

 
On July 3, 2009 at 7:47 PM , வந்தியத்தேவன் said...

//மணிமேகலா said...
சிங்களத்தமிழ் மொழிக்கலப்பினால் பிறந்த குழந்தையும் அழகு தான்.

நீர் கொழும்புத் தமிழும் அவர்களது பண்பாட்டு வழக்குகளும் கூட நாம் கவனிக்கத் தவறிய ஒன்று தான்.

அங்கும் பல சுவாரிசங்கள் உள்ளன.

ராசா, அதப் பற்றி ஏதாவது உனக்குத் தெரியுமே மோன //

சிங்களத் தமிழ்மொழிக்கலப்பினால் மட்டுமல்ல எந்தவொரு இரண்டு இனத்தின் கலப்பினாலும் பிறந்த குழந்தைகள் அழகுதான். குறிப்பாக ஆங்கிலோஇந்தியப்பெண்கள் மிகவும் அழகானவர்கள் என என் சென்னை நண்பன் அடிக்கடி சொல்பவன்.

நீர்கொழும்புத் தமிழும் வித்தியாசம் தான். பிரபல எழுத்தாளர் முருகபூபதியின் கதைகளில் நன்கு பாவித்திருப்பார். எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லை மணியாச்சி.

 
On July 3, 2009 at 7:49 PM , வந்தியத்தேவன் said...

//வாசுகி said...
இந்த சொற்களில் எனக்கு நோண்டி மட்டும் தான் தெரியும்.நானும் பாவிக்கிறனான்.மாற என்பது அழகானது என்றா அர்த்தம்.மாற நோண்டி என்று கதைப்பதை கேட்ட மாதிரி இருக்கு.
நன்றி//


வாசுகி மாற என்பதற்க்கு சரியான அல்லது நல்ல‌ என்ற அர்த்தமும் உண்டு மாற நோண்டி என்றால் சரியான அவமானம்.

 
On July 3, 2009 at 7:54 PM , சினேகிதி said...

கசால் என்டால் சண்டைதானே?? என்ன மச்சான் இன்டைக்கு தியேட்டர்ல கசாலேமே என்று கதைக்கிறதெல்லா??

மாற லஸ்ஸனாய் என்றும் சொல்றதா?

பணிய என்டால் கீழ அல்லது தாழ்வான இடம். பணிய வீடு என்று சொல்றது.

 
On July 3, 2009 at 10:06 PM , வந்தியத்தேவன் said...

//சினேகிதி said...
கசால் என்டால் சண்டைதானே?? என்ன மச்சான் இன்டைக்கு தியேட்டர்ல கசாலேமே என்று கதைக்கிறதெல்லா??

மாற லஸ்ஸனாய் என்றும் சொல்றதா?

பணிய என்டால் கீழ அல்லது தாழ்வான இடம். பணிய வீடு என்று சொல்றது.//

ஆஹா சினேகிதி நீங்க எங்கேயோ போயிட்டியள் லஸ்சன(ய்)என்றால் அழகு மாற லஸ்ஸனாய் என்றால் ரொம்ப அழகு. பணிய, பள்ளம் எனச் சொல்வது எல்லாம் கீழே என்ற அர்த்தம் தான் உங்க வீடு ரோட்டிலை பள்ளத்திலா? என்றால் உங்கள் வீடு ரோட்டில் கீழே இருக்கிறதா? என்ற அர்த்தம். மேடு என்றால் உயரம் என்ற அர்த்தம்.

 
On July 4, 2009 at 2:44 AM , Nimal said...

சுஸ்தி, மால் - கஞ்சாவை குறிக்க பயன்படும்.

சீன் 'அவுலாவீட்டு' / 'ச்சாட்டராவீட்டு' - பிரச்சினை சிக்கலாகிவிட்டது

இது அவன்ட 'துண்டு' - இது அவனின் பெண் நண்பி / காதலி / etc

மேலுக்கு பெய்த்து வாறன் - தெரு முனை வரை போய் வருதல்

பஜவ் ஓண்ணுக்கு செட்டாதல் - (குடித்து) பாட்டு பாடி கும்மாளமிடுதல்

இன்னும் நிறைய இருக்கு பிறகு நேரமிருந்தா போடுறன்...

 
On July 4, 2009 at 5:08 AM , வந்தியத்தேவன் said...

நிமல் நீங்கள் கலக்கிட்டீங்க. நிறையவிடயம் மறந்துபோனேன் அவற்றை நினைவுபடுத்திவிட்டியள்.

 
On July 4, 2009 at 5:42 AM , சி தயாளன் said...

கொழும்பு இந்துவிலும், ரியூசன்களிலும் இந்த மாதிரி கன சொற்களை படிக்கலாம்...

 
On July 4, 2009 at 7:06 AM , மு. மயூரன் said...

நிமல் சொன்னதில் சில வெள்ளவத்தையை அண்டி யாழ்ப்பாணத்தமிழர்கள் உருவாக்கிய சொற்களாக இருக்க வேண்டும்.

வந்தியத்தேவன் குறிப்பிட்டவற்றிலும் சில முஸ்லிம்களுக்கு தனித்துவமானவை.

சிங்கள இலக்கணத்தினதும் accent (இதற்குத் தமிழ் என்ன?) இனதும் பாதிப்பு பற்றி நான் பிறகொருபோது விரிவாக எழுதுகிறேன்.

ஒவ்வொரு பிரதேசத்திலும் ஏதாவதொரு வகையில் அதிகாரத்தில் உள்ளவர்களது மொழி அங்குள்ள ஏனைய மொழிகளின் அமைப்பில் செல்வாக்குச்செலுத்தும்.

எடுத்துக்காட்டாக திருகோணமலை நகரத்திலுள்ள முஸ்லிம்களின் மொழி அங்குள்ள தமிழர்களதைப்போன்று இருக்கும். ஆனால் ஆமர்வீதியில் உள்ள தமிழர்களின் மொழி முஸ்லிம்களதைப்போன்றிருக்கும். முஸ்லிம்களின் மொழி சிங்களத்தைச் சார்ந்திருக்கும்.

வடக்குக் கிழக்கிலிருந்து வருபவகள் இங்குள்ள அதிகார accent க்கு முன்னால் தமது accent குறித்த தாழ்வுச்சிக்கல்களோடு "கொழும்புத்" தமிழ் பேசப் படும்பாடு பரிதாபத்துக்குரியது. அவலமானது.

 
On July 4, 2009 at 7:12 AM , கண்டும் காணான் said...

வந்தியத்தேவன் , நீங்க மாறக் கதை தானே கதைக்கிறது? எங்க வத்தையில வந்து பாருங்கவா , பள்ளத்தில நின்னுகிட்டு , குடு அடிக்கிற யறாவ செட் காரன் எப்டி எல்லாம் பேசுராண்டு. எங்க பெடிமார்தான் , யோஷிக்கவேண்டாம்

வத்தை - நேரடி சிங்கள அர்த்தம் தோட்டம் ஆனால் சேரிகளை குறிபிட்ட பயன்படும்

யறாவ - சிங்கள சொல்ல - கெட்ட என அர்த்தம்

செட் - நண்பர் குழு

குடு - நேரடி சிங்கள அர்த்தம் தூள் , ஆனால் கஞ்சா அடிப்பதை குறிக்கும்.

பெடிமார் - பையன்கள் அல்லது பெடியங்கள்

பள்ளம் - தெருவின் அடிப் பகுதி

யோஷிக்க - கொழும்பு தமிழர் பொதுவாக ஷ் சேர்த்தே பேசுவர் அதாவது அவஷ்யம் , விஷ்யம்

 
On July 4, 2009 at 9:19 AM , vanathy said...

கொழும்பு 7- கறுவாக்காடு எனப்படும் அங்கு சிங்கள மேல்தட்டு வர்க்கம் மட்டுமில்லை ,தமிழர் மேல்தட்டு வர்க்கமும் வசிக்கிறார்கள் ,இந்த கறுவாக்காடு தமிழரின் பூர்வீகம் பெரும்பாலும் யாழ்ப்பாணம் ,இவர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு குடியேறி மூன்று நான்கு தலைமுறைகளாக அங்கு வசிக்கிறார்கள் .பல காலமாக கொழும்பில் வாழும் தமிழர்களில் இவர்களும் கொழும்புச் செட்டிகளும் அடங்குவர்.
மேல்தட்டு கறுவாக்காட்டு கொழும்புத்தமிழர் முக்கால்வாசி ஆங்கிலத்திலும் கால்வாசி தமிழிலும் பேசுவார்கள் ,பல சமயம் ஆங்கிலம் மட்டுமே பேசுவார்கள் ,
கொழும்பில் எமது பல்கலைக்கழக வளாகத்துக்கு மிகவும் அருகில் இருந்த கொழும்பு 7 வீடுகளின் அழகை ரசிப்பதற்காக நானும் எனது சிநேகிதிகளும் ஓய்வு நேரத்தில் அந்தப் பாதையில் சுற்றுவோம் .
கொழும்பில் தமிழ் பேசுவோர் மூன்று சமூகங்களில் இருந்தும் வந்துள்ளார்கள் .
வடகிழக்கு தமிழர்கள் ,மலையகத்தமிழர்கள் ,தமிழ் பேசும் முஸ்லிம்கள் இந்த மூன்று சமூகம்களும் சிங்களவர் மத்தியில் வாழும்போது எல்லாருடைய வட்டார கலாசார தாக்கங்களும் அவர்கள் பேசும் மொழியில் இருப்பது தவிர்க்கமுடியாதது
அத்துடன் சமூக பொருளாதார ரீதியிலும் வேறுபாடு உண்டு.
முன்பு கூறியமாதிரி மேல்தட்டுத் தமிழர்கள் கொழும்பு ஏழிலும் ,நடுத்தர உயர் நடுத்தர தமிழர்கள் வெள்ளவத்தை பம்பலபிட்டியிலும் ,குறைந்த வருமானமுள்ள அடிமட்டத் தமிழர்கள் வத்தளை கிரிலப்பனை போன்ற புறநகர்ப் பகுதிகளும் வசிக்கிறார்கள் அவர்கள் வசிக்கும் பகுதி ,சூழ்நிலையும் அவர்களின் பேச்சிலும் வார்த்தைப் பிரயோகங்களிலும் தாக்கம் உண்டாக்கும் .
யாழ்ப்பாணத் தமிழ் என்றாலும் கொழும்புத்தமிழ் என்றாலும் மட்டகளப்பு தமிழ் என்றாலும் மதராஸ் தமிழ் என்றாலும் மதுரைத்தமிழ் என்றாலும் அக்கிரகாரத்தமிழ் என்றாலும் எல்லாமே பேச்சுத்தமிழின் அழகை மெருகூட்டுகின்றன என்பதுதான் எனது கருத்து.

--வானதி

 
On July 4, 2009 at 9:30 AM , வலசு - வேலணை said...

ஏனோ தெரியவில்லை, “அழகி ஒருத்தி இளநி விக்கிற கொழும்பு வீதியிலே...”
என்கின்ற பழைய திரையிசைப்பாடல் நினைவிற்கு வருகிறது.
யாருக்காவது, “சுறாங்கனி சுறாங்கனி சுறாங்கனிட்ட மாலு கெனாவா” என்கின்ற பாடல் நினைவிற்கு வருகிறதா? பின்னர் இதே பாடலை தமிழில் “சுறாங்கனி சுறாங்கனி சுறாங்கனிக்கு மீனு கொண்டு வந்தேன்” என்றும் வந்திருந்தது.

 
On July 4, 2009 at 12:06 PM , வந்தியத்தேவன் said...

//மு.மயூரன் said...
நிமல் சொன்னதில் சில வெள்ளவத்தையை அண்டி யாழ்ப்பாணத்தமிழர்கள் உருவாக்கிய சொற்களாக இருக்க வேண்டு//
தவறான விளக்கம். இவை பெரும்பாலான சிங்கள இளைஞர்களால் பேசப்படும் சொற்களாகும்.

//எடுத்துக்காட்டாக திருகோணமலை நகரத்திலுள்ள முஸ்லிம்களின் மொழி அங்குள்ள தமிழர்களதைப்போன்று இருக்கும். ஆனால் ஆமர்வீதியில் உள்ள தமிழர்களின் மொழி முஸ்லிம்களதைப்போன்றிருக்கும். முஸ்லிம்களின் மொழி சிங்களத்தைச் சார்ந்திருக்கும்.//

சிறந்த உதாரணம். வடக்கு கிழக்குப் பகுதி முஸ்லீம்களின் மொழி பெரும்பாலும் வடக்கு கிழக்கு தமிழர்களின் மொழிபோலவே இருக்கும். ஒரு சில முஸ்லீம் அரசியல்வாதிகளின் பேச்சுகளில் இந்த வித்தியாசத்தை மிகவும் உணரலாம்.

 
On July 4, 2009 at 12:11 PM , மு. மயூரன் said...

//தவறான விளக்கம். இவை பெரும்பாலான சிங்கள இளைஞர்களால் பேசப்படும் சொற்களாகும். //

நான் "துண்டு" என்பதைக் குறித்தே சொன்னேன்.

சிலவேளை சிங்களத்தில் Kaelly என்ற சொல் துண்டு ஆகியிருக்குமோ என்று இப்போது தோன்றுகிறது

 
On July 4, 2009 at 12:12 PM , மு. மயூரன் said...

//வடக்கு கிழக்குப் பகுதி முஸ்லீம்களின் மொழி பெரும்பாலும் வடக்கு கிழக்கு தமிழர்களின் மொழிபோலவே இருக்கும்.//

அப்படியும் சொல்லமுடியாது. காத்தான்குடி, சம்மாந்துறை பகுதிகளில் தெளிவான தனித்துவம் முஸ்லிம்களின் மொழிக்கு உண்டு.

இது யார் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதைப்பொறுத்ததே.

 
On July 4, 2009 at 12:16 PM , வந்தியத்தேவன் said...

கண்டும்காணான் உங்கட வத்தையைச் சொல்லுங்க மறுவ வந்துபார்க்கிறன். நான் மறந்துபோன சில சொற்களை தந்துள்ளீர்கள் நன்றிகள்.

 
On July 4, 2009 at 12:16 PM , வந்தியத்தேவன் said...

வானதி உங்கள் நீண்ட விளக்கத்துக்க் நன்றிகள்.

//முன்பு கூறியமாதிரி மேல்தட்டுத் தமிழர்கள் கொழும்பு ஏழிலும் ,நடுத்தர உயர் நடுத்தர தமிழர்கள் வெள்ளவத்தை பம்பலபிட்டியிலும் ,குறைந்த வருமானமுள்ள அடிமட்டத் தமிழர்கள் வத்தளை கிரிலப்பனை போன்ற புறநகர்ப் பகுதிகளும் வசிக்கிறார்கள். //

இதில் கொஞ்சம் தவறுகள் இருக்கின்றது. நான் சொல்லப்போகும் விடயத்தை கோவிக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். வெள்ளவத்தையில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பாலானோர் ஏதோ ஒருவகையில் வெளிநாட்டைச் சார்ந்திருக்கிறார்கள். ஆகவே அவர்கள் தங்களை சொகுசாக வைத்துக்கொள்ளவிரும்புகிறார்கள். வெள்ளவத்தை சந்தையில் மரக்கறி. மீன் இறைச்சி போன்றவற்றின் விலை ஒரு இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள கிருலப்பனைச் சந்தையையும் தெகிவளைச் சந்தையையும் விட அதிகம். வெள்ளவத்தையில் வெளிநாட்டு நெட்போன் தொலைபேசி அழைப்புகள் மிகவும் மலிவு. சில இடங்களில் ஒரு நிமிடத்திற்க்கு 1 ரூபா கூட அறவிடுகிறார்கள்.

ஒருவரிடம் வாகன வசதி இருந்தால் கொழும்புக்கு வெளியேயான புறநகர்ப் பகுதிகளான இரத்மலானை, மொரட்டுவ, பத்திரமுல்ல(மிகவும் அழகான பெரிய பெரிய வீடுகள் நிறைய இருக்கின்றது), வத்தளைப் பகுதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இங்கே வீடுகளின் வாடகை குறைவு. சொந்தமாக வாங்க வேண்டும் என்றால் முற்றத்துடன் குறைந்தவிலைக்கு வாங்கலாம். ஆகவே வாகன வசதி படைத்தவர்கள் அங்கே சென்று குடியேறியிருக்கிறார்கள்.

இது ஒரு சிக்கலான விடயம் இதனைப் பற்றி இங்கு பேசுவதோ விவாதிப்பதோ பொருத்தமோ என்பது தெரியவில்லை.

 
On July 4, 2009 at 12:20 PM , வந்தியத்தேவன் said...

மு.மயூரன் said...
//நான் "துண்டு" என்பதைக் குறித்தே சொன்னேன்.

சிலவேளை சிங்களத்தில் Kaelly என்ற சொல் துண்டு ஆகியிருக்குமோ என்று இப்போது தோன்றுகிறது //

இருக்கலாம் ஒருமுறை ஒரு பிரபல தமிழ்த் தொலைக்காட்சியில்(நம் நாடு) செய்திகளில் சிங்களத்தில் இருந்ததை அபப்டியே சில சிங்களவார்த்தைகளுடன் மொழிபெயர்த்து வாசித்தார்.

 
On July 4, 2009 at 12:23 PM , வந்தியத்தேவன் said...

மு.மயூரன் said...
//அப்படியும் சொல்லமுடியாது. காத்தான்குடி, சம்மாந்துறை பகுதிகளில் தெளிவான தனித்துவம் முஸ்லிம்களின் மொழிக்கு உண்டு.

இது யார் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதைப்பொறுத்ததே.//

ஏற்றுக்கொள்கிறேன் அத்துடன் அவர்களின் சில நடை உடை பாவனைகளும் ஏனையப் பிரதேச முஸ்லீம்களுடன் வேறுபடுகின்றதையும் அவதானித்துள்ளேன்.

அனுராதபுரம், குருநாகலை போன்ற இடங்களில் வசிக்கும் முஸ்லீம்களின் எழுத்து நடை வித்தியாசமாக இருப்பதை சில கதைகள் வாசித்ததன் மூலம் உணர்ந்திருக்கின்றேன்.

 
On July 4, 2009 at 7:39 PM , நிவேதா/Yalini said...

கொழும்புத் தமிழிலும் நிறைய 'பிராந்திய' வேறுபாடுகள் இருக்கின்றன. கொச்சிக்கடைத் தமிழ் இங்கு விடுபட்டிருக்கிறதென்று நினைக்கிறேன். 'என்ன புள்ளங்களா' என்று அவர்கள் கதைக்கும் பாணி தனித்துவமானது. வானதி 'வர்க்கம்' என்று பிரிக்கும்போது யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்களை மட்டும்தான் கணக்கிலெடுத்திருப்பதாகத் தோன்றுகிறது. கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை பகுதிகளில் இருப்பவர்களைக் காணோம்.. பஞ்சிகாவத்தை, மாளிகாவத்தை, ஆமர்வீதி பகுதிகளிலும் தமிழர்கள் இருக்கிறார்கள் (பெரும்பாலும் இந்தியத் தமிழர்கள், முஸ்லிம்களென்று நினைக்கிறேன்).. மற்றது, மோதர, மட்டக்குளி - எல்லா இடங்களிலும் ஏதோவொரு தனித்துவம் இருக்கத்தான் செய்கிறது. இந்தக் கொச்சிக்கடைப் பிராந்தியம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததென சிவத்தம்பி சேர் ஆக்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.. அவர்கள் மலையகத் தமிழர்களல்ல.. (மலையகத்திலிருந்து பின்னர் கொழும்புக்கு வந்தவர்களல்ல) ஆனால், பிரிட்டிஷ் காலத்தில் ஏதோவொரு சிறப்பு நோக்கத்துக்காக நேரடியாக அவ்விடத்தில் குடியமர்த்தப்பட்டவர்கள்.. நினைவில்லை.. யாராவது அறியத்தர முடியுமா?

முந்தைய பதிவொன்றுக்கு பின்னூட்டமாகப் போட்டிருக்க வேண்டியது, இப்போது நினைவுக்கு வருகிறது: 'குலைகுலையா முந்திரிக்கா'வை நாங்கள் 'கொப்பர கொப்பர பிபிஞ்ஞா .......... கோ நானே பனாவ.. பட லீயே பனாவ.. கோப்ப கோப்ப.. பீரிசி, பீரிசி..' என்று விளையாடிய ஞாபகம்.. முழுப்பாட்டும் நினைவுக்கு வருதில்லை..

 
On July 4, 2009 at 7:39 PM , நிவேதா/Yalini said...

மாற விதி - சும்மா அந்தமாதிரி இருக்கு என்பதாய் பயன்படுத்தப்படுவதுண்டு. எல கிரி யும் கிட்டத்தட்ட அதே அர்த்தத்தில் தான்.. 'பொற கதா' - அதிமேதாவி மாதிரி கதைச்சுக்கொண்டு திரியுறதுக்கு சொல்லுறது..

படு என்று பொம்பிளைகளை சொல்லுற மாதிரி, நாங்கள் பொடியங்களை 'பொற', 'பொறயா' என்று சொல்றதுண்டு.. 'சைஸ்' என்றால் girl friend/ boy friend..

 
On July 4, 2009 at 7:46 PM , நிவேதா/Yalini said...

சிங்களத்தில் பயன்படுத்துற துண்டு க்கும் (kaelly), பொம்பிளைகளை துண்டு என்று சொல்வதற்கும் சம்பந்தமில்லையென்று நினைக்கிறேன். சிங்களத்தில் அது பொம்பிளைகளுக்காக பயன்படுத்திக் கேட்டு நினைவில்லை..

 
On July 4, 2009 at 7:58 PM , நிவேதா/Yalini said...

சிங்களம் - அதிகார மொழியின் தாக்கம், என்பதுடன் எனக்கு முரண்பாடுகளிருக்கின்றன. ஏதோவொரு கட்டத்தில் இரு மொழிகளுக்குமிடையே பரஸ்பரப் பகிர்வு இடம்பெற்றிருக்கிறது.. இப்போது சரியாக நினைவுக்கு வராவிட்டாலும், சில தமிழ்ச்சொற்கள் அப்படியே சிங்களத்திலும் இருக்கின்றன.. உ+ம்: மொட்டு, பொட்டு.. அதே சொற்கள், ஆனால் அர்த்தம் வேறு, நாங்கள் மொட்டு என்பதை அவர்கள் பொட்டு என்பார்கள், நாங்கள் பொட்டு என்பதை அவர்கள் மொட்டு என்பார்கள்.. இது சிறு வயதில் நண்பர்களுடன் அளவளாவும்போது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.. இன்னுமொரு உதாரணம்: கல் (stone). சிங்கள உச்சரிப்பில் 'க' ga என்று உச்சரிக்கப்படுவது மட்டும்தான் வித்தியாசம். இரண்டும் ஒரே அர்த்தம். இப்படி ஒன்றிரண்டல்ல, நிறைய.. நினைவுக்கு வந்தால் எழுதுகிறேன்..

(விட்டுவிட்டு பின்னூட்டமிடுவதற்கு மன்னிக்கவும்.. அப்பப்ப நினைவுக்கு வருது..)

 
On July 4, 2009 at 9:48 PM , கண்டும் காணான் said...

கல்(Gal) என்பது சிங்களத்தில் தொடை என்பதை நேரிடையாக குறிக்கும். ஆனால் மறைமுகமாக ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களை குறிக்கும்.

 
On July 4, 2009 at 10:07 PM , மு. மயூரன் said...

//பிரிட்டிஷ் காலத்தில் ஏதோவொரு சிறப்பு நோக்கத்துக்காக நேரடியாக அவ்விடத்தில் குடியமர்த்தப்பட்டவர்கள்.. //

நீர்கொழும்பின் கொச்சிக்கடை மற்றது கொழும்பு வடக்கு (இங்கேயும் ஒரு கொச்சிக்கடை) இந்த இடங்களில் உள்ளவர்களின் (எல்லோரதும் அல்ல) மூதாதையர் கேரளர். மலையாளிகள். துறைமுகங்களை அண்டி மலையாளிகள் குடியமர்த்தப்பட்டமையை நாம் காணலாம். கொத்துரொட்டி எனும் உணவு இந்தக்க் கேரளர்களாலேயே இலங்கையில் முக்கியமாக கொழும்பு, திருகோணமலைப்பகுதிகளில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மலையாளிகள் கப்பல், துறைமுகப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம்.

மலையாளிகள் தோட்டத்தொழிலுக்கெனவும் மலையகத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு குடியமர்த்தப்பட்ட மலையாளிகளே எனது தந்தைவழி மூதாதையர். தாய்வழியிலும் எனக்கு நிறைய மலையாளிகள் தொடர்புண்டு. முக்கியமாக கொழும்பு வடக்கில். "அங்ஙன" "இங்ஙன" போன்ற பிரயோகங்கள் கொட்டாஞ்சேனைப்பகுதியில் இருப்பதை நிவேதா அறிந்திருக்கலாம். இது மலையாளத்தாக்கம். இது பிரிட்டிஷ் காலம்.

ஆனால் இதற்குமுன்னமே இலங்கையின் சிங்களவர்களுக்கும் யாழ்ப்பாணத்தமிழருக்கும் மலையாளிகளுடனான பண்பாட்டுத்தொடர்பு இருந்துவந்துள்ளது. கடைசிக் கண்டிராசன் ஒரு மலையாளி. (தமிழன் என்று தமிழ்த் தேசியவாதிகளால் சொல்லப்படும் மன்னன்) அதற்கு முன்பே பாண்டிநாட்டுத்தொடர்பு சிங்களத்துக்கு எக்கச்சக்கம்.

கண்டிராசன் கையெழுத்திட்டன் ஆவணத்தின் மூலத்தை பார்த்திருக்கிறேன். சிங்கள தமிழ் எழுத்துக்களைக் கலந்து கையொப்பமிட்டுள்ளான். மற்ற பிரதானிகளின் கையெழுத்துக்களும் சிங்கள தமிழ் எழுத்துக்கள் கலந்தே உருவாக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தின் உணவுமுறை, மற்றவர்களிடமிருந்து பெரிதும் வேறுபட்ட மொழி உச்சரிப்பு முறை மலையளத்தொடர்பால் வந்ததெனப் படித்திருக்கிறேன்.

 
On July 4, 2009 at 10:12 PM , மு. மயூரன் said...

//சிங்களத்தில் அது பொம்பிளைகளுக்காக பயன்படுத்திக் கேட்டு நினைவில்லை..//

இம்முறை கண்டி போயிருந்தபோது அங்கே எம்மோடிருந்த சிங்களப் பொடியன்கள் Kaella (Kaelly அல்ல Kaella என்று நண்பி திருத்தினார்) என்ற வார்த்தை பயன்படுத்தி கிண்டலடித்தார்கள். ஏறத்தாழ துண்டு என்று தமிழ்ப்பொடியன்கள் பயன்படுதும் அர்த்தத்தில் தான்.

 
On July 4, 2009 at 10:22 PM , மு. மயூரன் said...

//ஏதோவொரு கட்டத்தில் இரு மொழிகளுக்குமிடையே பரஸ்பரப் பகிர்வு இடம்பெற்றிருக்கிறது..//

சுருக்கமாக நான் இந்தக்கருத்தைச்சொல்ல அது மொழிகளிடையேயான கொள்வினை கொடுப்பினை அதிகார உறவின்படி ஒருவழிப்பாதையானது என்ற அர்த்தத்தைக்கொடுத்திருந்தால் மன்னிக்க.

தமிழ் - சிங்களத்தை எடுத்துக்கொண்டால் இரு மக்கள் கூட்டமும் ஒன்றோடொன்று பழகும்போது சொற்கள் பரிமாறப்படுவது இயல்பானதே. மற்றது ஒருவர் தம்மிடம் உள்ளசொலை விட இன்னொருவரது சொல் பொருளை இன்னும் துல்லியமாகக் குறித்தால் அல்லது வேறு காரணங்களால் அதைப் பயன்படுத்தத்தொடங்குவர்.

ஆனால் இங்கே அதிகார உறவென்பது கணிசமானளவு கொள்வினை கொடுப்பினையை தீர்மானிக்கிறது.

இந்த அதிகாரம் பெரும்பான்மை சார்ந்தது கூட இல்லை.

முக்கியமாக accent அதிகார மொழியுடைய accent இனை ஏனையவர்கள் பயன்படுத்த எத்தனிப்பர். இதை கொழும்பில் அழகாகக் காணலாம்.

தமிழுக்குள்ளேயே, பிரிட்டிஷ் கொன்வென்ட் கலாசாரத்திற்கென ஒரு accent உண்டு. அது சிறுபான்மை என்றாலும் அதிகாரத்தில் இருக்கும். அதை அபிநயிக்க மற்றவர்கள் முயல்வது (அந்தச்சூழலில்) இயல்பானது.

 
On July 4, 2009 at 10:26 PM , மு. மயூரன் said...

நிவேதா நீங்கள் சிவத்தம்பி சேர் பற்றி இங்கே சொல்லும்போது 155 பஸ்ஸை அவர் பல்கலாசார பஸ்வண்டி என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அருமையான அவதானம் அது. :)

 
On July 5, 2009 at 12:00 AM , vanathy said...

vanthiyadevan,
sorry
I am having some sort of problem typing in Tamil.hence the comments in English.

Thank you for your response.
I was talking about the situation in colombo morethan a decade ago ,things might have changed over the years.

I was mentioning the fact that people from working class socioeconomic group tend to live in certain parts of colombo , I wasn't saying all the colombo suburbs are less wealthy.
Ofcourse, as in many cities ,colombo also has pockets of affluent and less afflent areas in the main city centre as well as in the suburbs.

when I talk about socio economic groups I wasn't only talking about money.this also includes educational and social background,cultural activities ,social values and life style and what they do for earning their living .

usually doctors ,lawyers , college lecturers, engineers accuntants ,IT professionals,architects,bank managers and senior civil servants etc considered upper middle classes.
other white collar workers like clerical workers ,admin workers ,junior managers and small business owners etc considered middle classes.

upper classes are people who have inherited wealth for many generations or owning big businesses or coming from ruling families or earning millions .

I don't want to say too much or give you boring statistics.
just mentioning about the classification by the economists .

It looks like it is a sensitive issue there.

--vanathy.

I think last Kandy king was a descendent of Nayakas from Tamil nadu ,not a Malayali

yes there are lot similarities between Jaffna tamil and malayalam.

This is due to the fact that Malayalam derived from old Tamil and Jaffna Tamil retained lot of characteristics of old tamil .

 
On July 5, 2009 at 12:31 AM , மு. மயூரன் said...

நன்றி வானதி.

கண்டிராசன் பற்றிய என்னுடைய தகவல் பிழையானது. அவர் நாயக்கர் வம்சத்தைச்சேர்ந்தவர்.

http://en.wikipedia.org/wiki/Nayaks_of_Kandy

http://en.wikipedia.org/wiki/Nayaks

 
On July 5, 2009 at 6:07 AM , கண்டும் காணான் said...

கண்டி தமிழ் மன்னர்கள் , மதுரை நாயக்கர் வம்சத்தை சேர்ந்தவர்கள். இவர்கள ஆந்திராவிலிருந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே , மதுரை மற்றும் தென் தமிழ் நாட்டில் குடியேறியவர்கள். தமிழ் நாட்டில் , பெரியார் , வைகோ மற்றும் விஜயகாந்த் ஆகியோர் இந்த தமிழ் நாயுடு ( நாயக்கர் ) குலத்தினை சேர்ந்தவர்கள். இவர்கள் ஆந்திராவிலிருந்து வந்தாலும் பெரும்பாலோனோர் தமிழையே வீட்டு மொழியாக இன்று பேசி வருகின்றனர்.

 
On July 5, 2009 at 6:25 AM , கண்டும் காணான் said...

யாழ்ப்பாணத் தமிழர் பேச்சில் மலையாள வாடை லேசாக இருப்பதை வைத்துக் கொண்டு சிலர் அவர்கள் மலையாள வழியை சேந்தவர்கள் என்று முடிவுக்கு வந்து விடுகின்றனர். இது தவறாகும். வானதி சொன்னது போல , மலையாளம், பழைய தமிழிருந்து உருவானது மற்றும் மலையாளிகள் சேர மன்னர்களாக முப்பெரும் தமிழ் மன்னர்களில் ஒருவராகவே பண்டைய இலக்கியங்களில் குறிபிடபட்டுளனர்.
பின்னர் அது ஒரு தனி மொழியானது. இதற்கு அம்மக்கள் தமிழ் நாட்டிலிருந்து மேற்கு மலைத் தொடர்களினால் பிரிக்கப் பட்டு , தகவல் தொடர்புகள் பெருமளவு துண்டிக்கப்பட்டு இருந்ததும் முக்கிய காரணம். ஆனால் யாழ்ப்பாண மக்கள் தமிழ் நாட்டுடன் தமது தொடர்பைப் பேணி தமிழர்களாகவே தம்மை நிலை நிறுத்திக் கொண்டனர். ஏனெனில் முப்பது மைல் நீளக் கடல் மட்டுமே தமிழ் நாடிடமிருந்து பிரித்தாலும், கடல் வழிப் போக்குவரத்து மிக இயல்பாக இரு புறமும் இருந்தது.

 
On July 5, 2009 at 6:30 AM , மொழிவளன் said...
This comment has been removed by the author.
 
On July 5, 2009 at 6:35 AM , மொழிவளன் said...

//படு (சிங்களச் சொல்) - பெண்களையே குறிக்கப் பயன்படுத்துகிறார்கள். இதன் தமிழ் அர்த்தம் பொருட்கள். இதனைப் பாவிப்பது நாகரீகம் இல்லையென்பார்கள்//

"படு" எனும் சிங்களச் சொல்லுக்கான தமிழ் பொருள் "சாமான்" என்பதாகும்.

ஆனால் இந்தச் சொல்லை சிங்கள பேச்சு வழக்கில் (செலாங் போன்று) பெண்களை குறிக்கவும் பயன்படுகின்றது.

கோ உம்Bபே படு கேல்ல
"எங்கே உனது சாமான் துண்டு"

ஏக்க ஹொந்தா படு கேல்லக்
"அது நல்ல சாமான் துண்டு" இதன் உற்பொருள் "அவள் வடிவான பெண் (துண்டு)"

யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் "துண்டு" எனும் சொல் பேச்சுவழக்கில் பெண்களைக் குறிப்பது போன்றே, சிங்களவர்களது பேச்சு வழக்கிலும் அதே பொருள் தரும் "கேல்ல" பயன்படுகின்றது.

இருப்பினும் "Bபடு" எனும் சொல் நடத்தைக்கெட்ட பெண்களையும், விபச்சாரிகளையும் குறிக்க பயன்படுத்துவதும் உண்டு.

அதேவேளை "எண்ட ஹொந்தா Bபடுவக் கியன்னம்"

"வாங்கோ ஒரு விசயம் சொல்லுறன்" என்றும் பயன்படுத்துவர். இங்கே "Bபடு" விசயம் எனும் பொருளில் பயன்படுத்தப்படுகின்றது.

 
On July 5, 2009 at 6:43 AM , மொழிவளன் said...

"எண்டா ஹொந்தா படுவக் பெண்ணன்னம்"

"வாங்கோ ஒரு நல்ல சாமான் காட்டுறன்"

இங்கே "Bபடு" ஒரு பொருளை அல்லது ஒரு சாமானை குறிக்கிறது.

//சிலவேளை சிங்களத்தில் Kaelly என்ற சொல் துண்டு ஆகியிருக்குமோ என்று இப்போது தோன்றுகிறது//

இல்லை.

கெல்லே - என்பது (Girl) பெண்ணைக் குறிக்கும்.

"மGகே கெல்லே" என்று தகப்பன் தன் மகளை (பெண் பிள்ளையை) அழைப்பதுண்டு.

அதேவேளை "மGகே கெல்லே" என்று காதலன் காதலியை அழைப்பதும் உண்டு.

 
On July 5, 2009 at 7:22 AM , மு. மயூரன் said...

////சிலவேளை சிங்களத்தில் Kaelly என்ற சொல் துண்டு ஆகியிருக்குமோ என்று இப்போது தோன்றுகிறது//

இல்லை.

கெல்லே - என்பது (Girl) பெண்ணைக் குறிக்கும்.//

இந்த விடயத்தை என் சிங்கள நண்பரொருவரிடம் கேட்டுப்பார்த்தேன்.

Kelle என்ற அடியிலிருந்தல்லாமல் "துண்டு" எனப்பொருள்படும் Kaella என்றே பயன்படுத்துவதாகச் சொன்னார்.

 
On July 5, 2009 at 8:00 AM , மொழிவளன் said...

- மயூரன்

//Kelle என்ற அடியிலிருந்தல்லாமல் "துண்டு" எனப்பொருள்படும் Kaella என்றே பயன்படுத்துவதாகச் சொன்னார்.//

இரண்டுக்கும் வேறுப்பாடு உள்ளது.

01. "கேல்ல" என்பது Piece துண்டு. (கே - நெடில்)
"கேல்லக்" என்பது "ஒரு துண்டு"

பார்க்க http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp?query=piece

02. "கெல்ல" - කෙල්ල (கெ- குறில்) girl பெண்பிள்ளை. (குமரி)

"கெல்லெக்" a girl. ஒரு பெண்.

வெட்டி ஒட்டியுள்ளேன். பார்க்க

බොන්ඩ් කෙල්ලකවීමට මේ අයගෙන් වඩාත් ම සුදුස්සිය කවුද? (which of these girls could be a Bond girl) http://www.silumina.lk/2008/10/26/_art.asp?fn=av08102610

 
On July 5, 2009 at 10:49 AM , வந்தியத்தேவன் said...

வணக்கம் நிவேதா கொச்சிக்கடை தெமட்டகொடை மோதர என கொழும்புப் பிரதேசங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவிதமான தமிழ் கதைப்பார்கள். கொச்சிக்கடைப் பக்கம் ஒருவரை இன்னொருவர் கூப்பிடுகிறார் என்றால் வறயாம் என்பார்கள். உங்களை வறயாம் என்றால் உங்களை ஒருவர் அழைக்கின்றார். வரட்டாம் என்பதுதான் வறயாம்.

கொச்சிக்கடையின் சிறப்பை சிவத்தம்பி சேரிடம் அறிந்து எப்படியும் எழுதுங்கள்.

பொற என்பது புதுச்சொல் (சிலவேளை என்னுடைய பெண் நண்பிகள் இந்தச் சொல்லை எனக்கு மறைந்துவிட்டார்களோ தெரியாது)

 
On July 5, 2009 at 10:53 AM , மு. மயூரன் said...

வந்தியத்தேவன் உங்கள் நண்பிகளிடம் எனது "Kaella" குறித்த சந்தேகத்தை கேட்டு தெளிவாக்குங்கள்.

எனது சிங்கள நண்பர் அது 'துண்டு' என்ற அர்த்தத்தில் தான் சொல்லப்படுவதாக ஒற்றைக்காலில் நிற்கிறார். மொழிவளன் அது "கெல்ல" என்பதிலிருந்து பெண் என்ற அர்த்தத்தில் சொல்லப்படுவதாக சொல்கிறார்.

 
On July 5, 2009 at 10:53 AM , வந்தியத்தேவன் said...

மயூரன் நீங்கள் கூறியதுபோல் கொச்சிக்கடை கொட்டாஞ்சேனைப் பகுதியில் நிறைய தமிழ்மொழிபேசும் மலையாளிகள் இருக்கின்றார்கள் இலங்கைத்தமிழர்களாக. அப்சராஸ் இசைக்குழுவின் மோகன் ராஜ் அவர்கள், மறைந்த கடம் வித்துவான் குருவாரூர் அச்சுதன் அவர்கள். மிருதங்க வித்துவான் விக்ரமன் அவர்கள் இப்படி நிறையப் பிரபலங்கள் கூட இருக்கின்றார்கள்.

 
On July 5, 2009 at 10:56 AM , மு. மயூரன் said...

"வரயாம்" என்பது நான் திருகோணமலையில் படித்தபோது வகுப்பில் சில மாணவர்கள் சொல்லும் சொல்தான்.

"வரட்டுமாம்" என்று சிலர் சொல்வார்கள்.


சொற்களின் கொள்வினை கொடுப்பினைகளைவிட accent கொள்வினை கொடுப்பினைகள்தான் எனக்கு ஆர்வமூட்டும் விஷயம். அதுபற்றி பின்னர் தனியாக விரிவாக எழுதுகிறேன்.

 
On July 5, 2009 at 11:03 AM , வந்தியத்தேவன் said...

கடைசிக் கண்டியரசன் கையெழுத்து தமிழில் தான் இருக்கிறது என நினைக்கின்றேன். தற்போது அதனை திருத்திவிட்டார்கள் என்றும் கேள்வி. வரலாறுகள் பல மாற்றப்படுகின்றன. பாண்டிய நாட்டுத்தாக்கம் கண்டிச் சிங்களவர்களிடம் இருப்பதால் அவர்களின் மூதாதையர் தமிழர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் பலரிடம் இருக்கின்றது. அத்துடன் ராஜராஜசோழன் காலத்தில் சோழர்களின் வருகை இலங்கையில் பல கலப்புத் திருமணங்களை நிகழ்த்தியிருக்கின்றது. பக்கு நீரிணை பிரிக்காமல் இருந்திருந்தால் நாம் சிலவேளைகளில் இந்தியாவின் இன்னொரு மாநிலமாக இருந்திருக்கலாம்.

வடமராட்சி கடற்கரைக் கிராமங்களும் இராமேஸ்வரம் பகுதிக் கடற்கரைக் கிராமங்களும் பொதுவாக ஒரே மாதிரி இருப்பதாக அவதானிகள் சொல்கின்றார்கள். இல்லை இவை நெய்தல் நிலத்திற்குரிய பண்போ தெரியாது. ஒன்றே ஒன்று மட்டும் நிச்சயம் இன்றல்ல அந்த நாள் முதல் ஏதோ ஒருவகையில் எம்மில் இந்தியாவின் தாக்கம் கலை பண்பாட்டில் மட்டுமல்ல மொழியிலும் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது.

இலஙகைத் தமிழருக்கென்று சில விடயங்கள் தனித்துவமாக இருந்தாலும் இந்தத் திராவிட பழக்கவழக்கம் மாற்றமுடியாத ஒன்றே.

தமிழகத்தினால் அண்மைக்காலத்தில் எம்மிடையே பல புதிய சொற்கள் பழக்கத்தில் வரத்தொடங்கியுள்ளன. இவை பற்றி இன்னொரு பதிவில் பேசலாம்.

 
On July 5, 2009 at 11:11 AM , மு. மயூரன் said...

//தற்போது அதனை திருத்திவிட்டார்கள் என்றும் கேள்வி//

நான் மூலத்தை பார்த்துள்ளேன். தமிழில் தான் இருக்கிறது.

பல பிரதானிகளும் தமிழில் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால் தமிழ் எழுதுக்களோடு சிறுக சிங்கள எழுத்துக்களும் கலந்துள்ளன. அரவு எல்லாம் சிங்கள அரவு காணப்படுகிறது.


//பாண்டிய நாட்டுத்தாக்கம் கண்டிச் சிங்களவர்களிடம் இருப்பதால் அவர்களின் மூதாதையர் தமிழர்களாக இருக்கலாம்//

யாழ்ப்பாணத்தவர்களைப்போன்று கண்டிச்சிங்களவர்களிடத்தும் கேரளத்தின் தாக்கம் பண்பாட்டில் அதிகம் காணப்படுவதாக ஆய்வுகள் படித்துள்ளேன்.

சொல்லப்போனால் நீங்கள் சொன்னபடி இந்தியப்பண்பாட்டுத்தாக்கம் இலங்கையில் எல்லா இனங்களிலும் காணப்படுகின்றது.

மற்றது முக்கியமான விசயம். இன்று நாம் "தமிழர்" என்று முன்வைக்கும் இன அடையாளம் சேர சோழ பாண்டிய காலத்தில் அவ்வளவு தெளிவாக இருக்கவில்லை.

உண்மையில் தமிழ் இன அடையாளமோ தமிழ் தேசிய அடையாளமோ அப்போது உருவாகியிருக்கவில்லை.

சோழர் படையெடுப்பின்போது இங்குள்ள தமிழர்களும்தான் தாக்கி அழிக்கப்பட்டார்கள். முக்கியமாக இலங்கைத்தமிழர்களின் மதமான பவுத்தம், தமிழ் பவுத்தர்கள் தாக்கப்பட்டார்கள். சைவ ஆதிக்கம் ரத்தக்களரியினூடு நிறுவப்பட்டது.

எல்லாளன் படையில் சிங்களவர்களும் துட்டகைமுனு படையில் தமிழர்களும் இருந்ததற்கு ஆதாரமுண்டு.

நவீன தமிழ் இன, தேசிய அடையாளத்தை அக்காலங்களில் பொருத்திப்பார்ப்பது அவ்வளவு முழுமையானதாக இராது.

 
On July 5, 2009 at 9:10 PM , மொழிவளன் said...

ஆம்! மயூரன்

இலங்கையின் தமிழ்மொழி ஆய்வுப் பணியை மேற்கொண்ட ஓர் ஆசிரியரின் சில ஆய்வுகள் சில முரண்பாடுகளை தோற்றுவித்தன. அது முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ள முடியாத நிலையில் அது விடுப்பட்டது.

இலங்கையின் பூர்வீகக் குடிகள் யாரென்றால், தமிழர்களா? சிங்களவர்களா? என்றக் கேள்வியின் ஊடாகவே நாம் பதில் காண விளைக்கின்றோம். ஆனால் இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்று பார்த்தால் இயக்கர் நாகர் எனும் வேட்டுவ இணங்கள் என்று தான் கூறவேண்டும்.

இவர்களே பின்னாலில் தமிழரகாவும், சிங்களவராகவும் மாற்றம் பெற்றதாகக் கூறுவார்.

இதனை இவ்வாறு சுருக்கமாக கூறலாம் என்பார். அதாவது

"தென்னிந்திய ஆட்சி அதிகாரத் தாக்கத்தால் தோன்றியது தமிழ் என்றும், தென்னிந்திய தாக்கத்தை எதிர்த்து தோற்றுவிக்கப் பட்டது சிங்களம்" என்றும் கூறுவார்.

இருப்பினும் இவரது கூற்றை கூட இருந்த மொழி ஆராய்ச்சி பணியில் ஈடுப்பட்டவர்கள் மறுத்தனர்.

இருப்பினும் இவருடைய கருத்துக்கள் குறித்தப் பார்வையை நேரம் இருக்கும் போது பதிவாக இடுகின்றேன்.

 
On July 6, 2009 at 2:29 AM , PPattian said...

பதிவும்.. அதைவிட பின்னூட்டங்களும் எலக்கிரி

 
On July 6, 2009 at 5:23 PM , கானா பிரபா said...

கொழும்புத் தமிழில் நிறைய அறிந்து கொண்டேன் பின்னூட்டங்கள் உட்பட‌

 
On July 7, 2009 at 5:05 PM , யசோதா.பத்மநாதன் said...

இலங்கையின் பூர்வீகக் குடிகள் பற்றி அறிய ஆர்வமுள்ளவர்கள் இலங்கை சமூக விஞ்ஞானிகள் சங்கத்தினரால் வெளியிடப் பட்ட கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பான " இனத்துவமும் சமூக மாற்றமும்"என்ற புத்தகத்தைப் பார்க்கலாம். அவை மும் மொழிகளிலும் வெளியிடப் பட்டன.செழுமையும் ஆரோக்கியமும் விஞ்ஞானபூர்வ ஆதாரங்களும் கொண்டு நிறுவப்பட்ட முடிவுகள் அதில் உள்ளன.

சிங்கள தமிழ் புத்திஜீவிகளால் ஒற்றுமையாக முன் வைக்கப் பட்ட கருத்துக்கள் அவை.

பின்னூட்டங்கள் சிறப்பாக அமைந்திருந்தன. பல விடயங்களை அறிய முடிந்தது.

 
On July 9, 2009 at 1:29 AM , ARV Loshan said...

ஆகா . அருமை.. கொழும்புத் தமிழ் அகராதி ஒன்றே போட்டு விடலாம் போல..
நண்பர்களின் பின்னூட்டங்கள் மூலமும் பல சொற்கள் கிடைத்துள்ளன.

எலகிரி - உண்மையில் அர்த்தம் ஆட்டுப் பால்.. ஆனால் மிக சிறந்தது என்ற அர்த்தத்தில் சொல்லப் படுவது.

ஆத்தல் - அளவு கடந்த மகிழ்ச்சி..

அத்தோடு போலீஸ நிலைய சொற்களும் உள்ளன..

தட - அபராதம்
நடு - வழக்கு


இப்படிப் பல சொற்கள் நம்மிடையே கலந்து விட்டன..

இது போல இந்திய சினிமா மூலமாக நம்மிடையே கலந்த சொற்களும் உண்டு..

 
On July 9, 2009 at 1:34 AM , ARV Loshan said...

சிரா என்ற வார்த்தையும் மாற வை ஒத்ததே..

இதையெல்லாம் விட ஏற்கெனவே வந்தியும், வானதியும் தமிழரைப் பற்றி விரிவாக சொல்லி இறந்தார்கள்.. அவர்கள் பேசும் தமிழ் மொழி நடையே தனி தான்..
ஆங்கில வார்ப்புருவில் போட்ட எங்கள் தமிழ்..

 
On July 9, 2009 at 1:55 AM , வந்தியத்தேவன் said...

// LOSHAN said...
சிரா என்ற வார்த்தையும் மாற வை ஒத்ததே..

இதையெல்லாம் விட ஏற்கெனவே வந்தியும், வானதியும் தமிழரைப் பற்றி விரிவாக சொல்லி இறந்தார்கள்.. அவர்கள் பேசும் தமிழ் மொழி நடையே தனி தான்..
ஆங்கில வார்ப்புருவில் போட்ட எங்கள் தமிழ்..//

என்ன லோஷன் நித்திரைத்தூக்கமோ என்னையும் வானதியையும் சொல்லி இறந்தார்கள் எனப்போட்டிருக்கிறீர்கள். சிரா ஆத்தல் போன்ற வார்த்தைகளும் பழக்கத்தின் உண்டு, சிலர் ரயிலை கோச்சி என்பார்கள். கோச்சி சிங்கள வார்த்தை.

 
On July 9, 2009 at 2:13 AM , ARV Loshan said...

ஐயா மன்னிச்சிடுங்க.. கூகிளில் அடிக்கும் போது இருந்தார்கள் இறந்தார்கள் என்று மாறிவிட்டது..
அதுசரி, எப்போதாவது இறக்கத் தானே போகிறோம்.. ;)

 
On September 23, 2009 at 2:54 AM , Anonymous said...

மாற என்றால், Incredible . மற்றது "ரொம்ப" என்பது இந்திய தமிழ் சொல். அதை இங்கு பாவியாமல் விடுவது நல்லது. பதிலாக, மிக்க / நல்ல / நிறைய என்பதை பொருள் உணர்ந்து உபயோகிக்கலாம். ஆதி நான்கு மொழிகளில் தமிழும் ஒன்று. மற்றவை, வட மொழி (சமஸ்க்ருதம்) கிரேக்க மொழி மற்றும் லத்தீன் மொழி.

5000 ஆண்டுகளுக்கு முன் (வருடம் என்பது தமிழ் மொழி சொல்லல்ல) தொல்காப்பியர் முதலாவது தமிழ் அகராதியை எழுதினார். அது தவிர,Britannica ஐ நீங்கள் பார்த்தால், சிங்கள மொழி, பாளி, வட மொழி மற்றும் தமிழ் மொழிகளில் இருந்து உருவானது என்று குறிப்பிட்டுள்ளது.

இயக்கர் என்பது அரக்கரைக் குறிப்பது. உதாரணத்துக்கு இராவணன். நாகர் என்பவர்கள் நாகத்தை வழிபட்ட தமிழ் பேசும் மக்கள். மணற்காட்டு (ஒரு விஷ்ணு கோவிலை : பெயர் மறந்து போனேன்) நாகரின் கோவில் என்று கூறுவார்கள்.

கைலி என்பது தமிழ் நாட்டில் சாரத்தைக் குறிக்கும். அது தவிர, தமிழ் நாட்டில் உள்ள ஒரு குழுவினர், தங்கள் தாத்தாவை "சீயா" என்று அழைப்பார்கள். இப்படிப் பார்த்தால், பல சொற்கள் தமிழில் இருந்து சிங்களத்துக்கு சென்றுள்ளன.

நிற்க, செட் என்பது கூட நண்பர்கள் குழுவைக் குறிக்க தமிழ் நாட்டில் உபயோகிப்பார்கள். செட் என்பது ஆங்கில மொழியே தவிர சிங்கள மொழி அல்ல.

தவிர, நகைச்சுவைக்காக இந்தியத் தமிழை உபயோகிக்காமல், எங்கன்ட தமிழை உபயோகிக்கலாமே. அப்படியாவது, அரிய சொற்களைப் பாதுகாக்கலாம்.