Author: கானா பிரபா
•3:00 AM
கந்தசாமி முத்துராஜா என்னும் கனடா வாழ் ஈழத்தவர் "ஆழியவளை" என்னும் யாழ்ப்பாணத்துக் கடலோரக் கிராமத்தின் பண்பாட்டு அம்சங்களைச் சுவைபட எழுதியுள்ளார். அந்த நூலின் பின்னிணைப்பில் இருந்த அருஞ்சொல் அகராதியில் இருந்து சிலவற்றை இங்கே பகிர்கின்றேன்.

அடை - கரைவலை வள்ளம் மண் புட்டிக்கு இழுக்கப்படும் பொழுது வள்ளத்தின் அடியில் உள்ள எரா இலகுவாகச் சறுக்கி வழுக்கிக் கொண்டு வருவதற்காக வைக்கப்படும். ஓர் ஒழுங்கு முறையில் அடுக்கப்பட்ட மரக்குற்றிகள் அடை எனப்படும்.

அறும்புக்காலம் - கடலில் மீன் பிடிபடுதல் மிக மிகக் குறைவாக உள்ள காலம்

அம்பறக்கூடு - பனம் மட்டையை வளைத்து, குறுக்காகக் கம்புகள் கட்டி, கிடுகினால் வேயப்பட்ட சிறுதுண்டுக் கூரை

அத்தாங்கு - "பை" போன்ற அமைப்புள்ள நூல் வலையின் வாய்ப்பகுதியில், காட்டுத்தடியை வட்டமாக வளைத்துக் கட்டுவர். இதனால் ஆழங்குறைந்த நீர் நிலைகளில், நிலத்தில் வாரி இறால் பிடிப்பர். சில இடங்களில் அவ்வளையம் இரும்பினாலும் செய்யப்படும்

ஆனைச்சொறி - நீரில் மிதந்து செல்லும் வழுவழுப்பான பெரிய அளவிலான ஒருவகைக் கடல் தாவரம்

ஆசறுதியாக - பலமாகவும், செளக்கியமாகவும் இருக்கும் நிலை

ஊடுகாடு - காட்டை ஊடறுத்துச் செல்லும் ஒற்றையடிப்பாதை

எரா - கரைவலை வள்ளத்தின் அடிப்பாகத்தில் அணியத்திலிருந்து
கடையார்வரை நீளமாகப் பொருத்தப்பட்டிருக்கும் மரத்துண்டு

ஒசுத்தேங்காய் - கடலில் விழுந்து உப்பு நீரில் கரை ஒதுங்கும் தேங்காய்,இத்தேங்காயை புழுக்கொடியலுடன் சப்பித் தின்ன மிக ருசியாக இருக்கும்

கடற்படுக்கை - கடலின் அடிநிலம்

கடியன் கடித்தல் - மீன் இனங்கள் வலைகளைக் கடித்துத் துண்டாடுதல்

கருவாட்டுச் சிப்பம் - தென்னோலைக் கிடுகில் ஏறத்தாள 4X2 அடி அளவில் பெட்டி செய்து, அதற்குள் கருவாட்டை வைத்து மூடிக்கட்டி லொறிகளில் தூர இடங்களுக்கு அனுப்புவர்

குறுகுதல் - கரைவலையை மெல்ல மெல்ல இழுத்து இறுதியாகத் தூர்மடியையும் கடற்கரைக்கு மீனுடன் இழுத்து எடுத்தல்

குட்டான் - பனை ஓலையினால் இழைப்பது, மீன் போடுவது

கூடு கட்டுதல் - மாரிகாலம் ஆரம்பிக்கிற ஐப்பசி மாதத்தில் கரைவலைத் தொழிலை நிறுத்துவர். வள்ளம், வலை சாமான்களை மழை படாமல் மூடிக்கட்டி வைப்பர்

சவள் - கரைவலை வள்ளத்தைச் செலுத்தும் சுக்கான் போன்ற நீண்ட பலகை

சிறாம்பி - பரப்புக்கடலுக்குள் கட்டப்படும் பரண், மீன் பிடிப்போர் இளைப்பாறும் இடம்

சொக்கரை - மீன் கூட்டின் பொறிவாசல் (வாய்ப்பக்கம்)

தண்டையல் - பாய்க்கப்பலைச் செலுத்தும் மாலுமி Tindall என்பதன் தமிழ் வடிவம்

திடற்கடல்
- கடலில் மண் திடல் உள்ள இடம்

தூர்மடி
- கரைவலையில் மீனைத் தாங்கி வருவது

நெருக்காறு
- கடல் அருவி சிறுகடலுடன் கலக்குமிடம்

பறி
- பனை ஓலையினால் பின்னப்படுவது, மீன், கருவாடு போடப்பயன்படுவது

மண்டாடி
- கரைவலைத் தொழிலை முன்னின்று நடத்துபவர், சம்மாட்டிக்கு அடுத்த நிலையில் உள்ளவர்

மாறுதண்டு
- கரைவலை வள்ளம் வலிக்கும் துடுப்பு, அணியத்தில் இருந்து மூன்றாவது இடத்தில் அமைந்திருக்கும்

மிதப்பு
- நீருக்கு மேல் மிதந்து நின்று வலை, கூடு, என்பனவற்றை அடையாளம் காட்டும் ஒல்லி அல்லது மரக்கட்டை
வலை பொத்துதல் - மீங்கள் சேதப்படுத்திய அல்லது கிழிந்த வலைகளைப் பின்னுதல்

வாடி
- கரைவலைத்தொழிலாளர் கடற்கரையில் தங்கும் வீடு (கொட்டில்)

வாரம்
- கரைவலையின் பங்குத் தொழிலில் சம்மாட்டிக்குக் கொடுக்கும் பங்கு.

நன்றி: கந்தசாமி முத்துராஜா எழுதிய "ஆழியவளை"
This entry was posted on 3:00 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

22 comments:

On July 23, 2009 at 3:38 AM , வந்தியத்தேவன் said...

ஆஹா பிரபா முந்துவிட்டீர்கள். இந்தப் புத்தகத்தை சில நாட்கள் முன்னர் வாசித்தேன் அப்போது ஈழத்துமுற்றத்தில் எழுதவேண்டும் என நினைத்தேன். ஆழியவளை நூலில் நிறைய பேச்சுவழக்குகளும் ஈழத்தமிழர்களின் குறிப்பாக ஆழியவளை மக்களின் பண்பாடுகளும் அழகாக திரு.கந்தசாமி முத்துராஜா அவர்கள் எழுதியுள்ளார். இதேபோல் காரைநகர் பற்றிய புத்தகம் ஒன்றும் இருக்கிறது தேடிப்பார்க்கவேண்டும்.

 
On July 23, 2009 at 4:05 AM , ஹேமா said...

பிரபா,உண்மையா பறி மட்டும்தான் கொஞ்சம் தெரிஞ்சமாதிரி இருக்கு.
மற்றதெல்லாம் புதுசு.நன்றி பிரபா.

 
On July 23, 2009 at 4:45 AM , வசந்தன் said...

சம்மட்டி என்றா புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது?

சம்மாட்டி என்றுதானே சொல்வோம்?

 
On July 23, 2009 at 4:58 AM , கானா பிரபா said...

வந்தியத்தேவன்

ஈழத்தின் ஊர்கள் குறித்த நூல்களை தேடிப்பிடித்து வாங்கும் எனக்கு இந்த நூல் அருமையானதொரு படைப்பாக இருந்தது

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஹேமா

 
On July 23, 2009 at 4:58 AM , கானா பிரபா said...

வணக்கம் வசந்தன்

சம்மாட்டி தான் சரி, இது என் தட்டச்சு கோளாறு திருத்தி விட்டேன், மிக்க நன்றி :)

 
On July 23, 2009 at 5:30 AM , ’டொன்’ லீ said...

வீரகேசரி பத்திரிகையில் வந்த தொடர்கதை ஒன்றில் சில சொற்களை கண்ட ஞாபகம்.

 
On July 23, 2009 at 5:41 AM , மணிமேகலா said...

புது விடயங்கள் பிரபா. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

'அந்தக் காலத்து யாழ்ப்பாணம்'என்றொரு புத்தகம் 2004 ஆம் ஆண்டு சிட்னியில் கலப்பை வெளியீடாக வந்தது. சிசு.நாகேந்திரன் எழுதியது.

என்னிடம் இருக்கிறது.யாழ்ப்பாணத்து வாழ்வியலைச் சுவைபடக் கூறுகிறது.பின்னர் ஒரு போதில் அது நிச்சயம் பயன்படும்.

 
On July 23, 2009 at 7:19 AM , வசந்தன்(Vasanthan) said...

சம்மட்டியை விடுற பிளான் இல்லைப் போல.

வாரம் எண்டதுக்கான விளக்கத்திலயும் அப்பிடித்தான் எழுதியிருக்கு.

 
On July 23, 2009 at 7:39 AM , துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்வு பிரபா.

பகிர்வுகள் தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

 
On July 23, 2009 at 7:39 AM , வர்மா said...

பறுவத்திலண்டு இரவு நிலவு வெளீச்சத்திலை கதை அளந்தது ஞாபகம் வருகுது.கப்பலை மாலுமியை ஓட்டி எண்டும் சொல்லுவினம். பறியை கண்டிப்பை எண்டும் சொல்லுவினம். ரண்டு போத்தல் பால் வாங்குவதற்கு அளவான ஒலைப்பை ஒண்டு வீட்டிலை கிடந்தது. அந்தப்பையைக்கொண்டு பால் வாங்கப்போனன். பால்தாற ஆச்சி நல்ல சோக்கான கண்டிப்பை எண்டா .அப்பா கண்டியிலை படிப்பிச்சதாலை கண்டியிலிருந்து வந்தபை எண்டு அவ நினைச்சிட்டா எண்டு நான் நினைச்சன். வீட்டை வந்து பால்காற ஆச்சி ஏமாந்த கதையைச் சொன்னன். அம்மா சிரிச்சுப்போட்டு. கண்டிப்பை எண்டா மீன் வாங்குற பைஎண்டா.ஈழத்துமுற்றம் ஏறீப்போகுது.
அன்புடன்
வர்மா

 
On July 23, 2009 at 10:11 AM , வந்தியத்தேவன் said...

அணியம் - வள்ளம் அல்லது போட்டின் முன்பகுதி.

பட்டிருக்கு - நிறைய மீன் பிடிபட்டிருத்தல். இண்டைக்கு குமார்ரை வலையிலை பட்டிருக்கு.

ஆசறுதி வேறு சில இடங்களிலும் பயன்படுத்துவார்கள்.

 
On July 23, 2009 at 10:58 AM , சயந்தன் said...

என்ரை கடைசிப்பதிவில இதில சொல்லுகள் வந்திருக்கு.. :)

 
On July 23, 2009 at 9:07 PM , HK Arun said...

அறிந்திராதச் சொற்கள் பல இப்பதிவில் இடம்பெற்றுள்ளன.

அறியத்தந்தமைக்கு நன்றி

 
On July 24, 2009 at 8:39 AM , வலசு - வேலணை said...

பகிர்வுக்கு நன்றி

 
On July 24, 2009 at 9:17 AM , கானா பிரபா said...

வருகைக்கு நன்றி டொன் லீ

// மணிமேகலா said...

'அந்தக் காலத்து யாழ்ப்பாணம்'என்றொரு புத்தகம் 2004 ஆம் ஆண்டு சிட்னியில் கலப்பை வெளியீடாக வந்தது. சிசு.நாகேந்திரன் எழுதியது.//

ஓம், அந்தப் புத்தகம் என்னிடமும் உள்ளது. மல்லிகை வெளியீடக வந்த அந்தக் காலக்கதைகள் நூலும் இதே போன்ற மருவிய சொற்களை கொண்டிருக்கின்றது.

வசந்தன்(Vasanthan) said...

சம்மட்டியை விடுற பிளான் இல்லைப் போல.//

ஓமப்பா, நான் சம்மட்டி எண்டு சொல்லி சொல்லி எழுதேக்கையும் பிழை விடுகிறன்

துபாய் ராஜா, வர்மா, சயந்தன், அருண், வலசு

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு

 
On July 25, 2009 at 8:31 AM , சினேகிதி said...

குட்டானைத் தவிர மிச்சமெல்லாமே புதுச்சொற்கள்தான் எனக்கு.

இந்த எழுத்தாளரை எனக்கும் தெரியும் போல இருக்கு.. இவரைப்பற்றிய தகவல்கள் வேறெதும் இருக்கா? தொடர்பிலக்கம் ஏதும்??

 
On July 25, 2009 at 5:09 PM , கானா பிரபா said...

வணக்கம் சினேகிதி

இவர் ரொறொன்ரோவில் தான் இருக்கிறார் ஆனால் புத்தகத்தில் தொடர்பிலக்கம் இல்லை.

 
On July 25, 2009 at 6:04 PM , Thillakan said...

//வணக்கம் வசந்தன்

சம்மாட்டி தான் சரி, இது என் தட்டச்சு கோளாறு திருத்தி விட்டேன், மிக்க நன்றி :)//

நம்ம ஊர்ல பேச்சு வழக்கில சம்மட்டி எண்டு சொல்லுறத நினைவு அண்ணா :)

 
On July 25, 2009 at 8:39 PM , கானா பிரபா said...

வணக்கம் திலகன்

நானும் அப்படித்தான் பேசுவேன், அது எங்கட பேச்சு வழக்கால் சம்மட்டியாக மருவியிருக்கலாம்.

 
On July 28, 2009 at 6:50 PM , வசந்தன் said...

எனது கவனம், எழுத்தாளர் எப்படி எழுதியிருக்கிறார் என்பதே.

நான் சம்மட்டி என்று கேள்விப்படவில்லை. சம்மட்டி என்பது ஓர் ஆயுதம்.

மதி கந்தசாமியின் வலைப்பதிவில் சில வருடங்களின் முன்னர் கரைவலை தொடர்பாக எழுத்தாளர் ஒருவரின் கட்டுரை வெளியிடப்பட்டது. அப்போது 'செவ்வேல்' என்ற சொல் குறித்து நான் சொன்னபோது அது மற்றவர்களுக்கும் அந்த எழுத்தாளருக்கும் தெரிந்திருக்கவில்லை.

ஆனால் தாளையடி, முல்லைத்தீவின் கள்ளப்பாடு, செம்மலை, அளம்பில் பகுதிகளில் கரைவலைத் தொழிலாளர்கள் கடலிற்போய்க்கொண்டிருக்கும் மீன்கூட்டத்தைக் குறிப்பிட அச்சொல்லைப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். இடத்துக்கிடம் சொற்பயன்பாடுகள் மாறுகின்றன என்றுதான் நினைக்கிறேன்.

 
On July 28, 2009 at 7:21 PM , வசந்தன் said...

மதி கந்தசாமியின் வலைப்பதிவில் வந்த கரைவலை பற்றிய கட்டுரைத் தொகுப்பின் ஓரிடுகை
http://mathy.kandasamy.net/musings/archives/2007/04/10/669

 
On July 29, 2009 at 12:30 PM , மலைநாடான் said...

கிழக்கில் சிறு வள்ளங்களின் வடிவமும் சற்ற வித்தியாசம், அழைப்பதும் வேறவிதமாக

குல்லா - வள்ளம்

பிள்ளைக் குல்லா - வள்ளத்தின் சமநிலைக்காக, அதற்குச் சமாந்தர கட்டபட்டிருக்கும் பகுதி.

கூடு - இறால் வகையினங்களைப் பிடிப்பதற்கு சிறு தடிகளினால் கட்டப்படும் கூடு. இதன் அமைப்பே ஒரு பெரு மீனைப் போல இருக்கும்.

மட்டி - கடலினுள்ளே காணப்படும் பாறைகளில் ஒட்டி வாழும் கடலுயிரினம். அதன் வெளிப்புறம் கனதியான ஓடாக சிப்பி வடிவத்திலிருக்கும்.