Author: மாயா
•7:45 AM
இன்று காலமான ஈழத்தின் நாடக, திரைப்படக்கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களின் தனிநபர் நகைச்சுவை நிகழ்சிகளின் சிறு தொகுப்பு...


Author: ந.குணபாலன்
•12:52 AM
                                                            மூலக்கதை : Bröderna Lejonhjärta


                                                       

                                                                         எழுத்தாளர் : அஸ்த்ரி   லிண்ட்கிறேன் , சுவீடன்  
                                                                              (ASTRID   LINDGREN ,     SWEEDEN)
                                                                  (14/11-1907 --- 22/01-2002)
                                                                    ஓவியர்:இலூன் வீக்கெலான்ட்
                                                                                             ( Ilon Wikeland)


                                                                      தமிழாக்கம் :  ந. குணபாலன்
துடிப்பு பதினாலு : துரோகத்துக்கு விலை!


அண்டிரவு முழுக்க ஒர்வார் நயினாரை தாங்கிப் பிடிச்சுக் கொண்டு நடந்தம். சொல்லப் போனால் அண்ணர் தான் பாவம் சரியாய்க் கயிட்டப் பட்டுப் போனார். அந்த நரகத்திலை இருந்து நயினாரைக் காப்பாற்றி கொண்டு போக வேணும் எண்ட மன ஓர்மம் அவருக்கு. அனக்கெண்டால் என்னை நானே இழுத்துப் பறிச்சுக் கொண்டு போறது பெரும்பாடாய் கிடந்தது. 


"தப்பீட்டான்! தப்பீட்டான் " எண்டு கத்தினவங்கள் எக்கணம் தேடி வருவாங்கள் எண்டு எங்களுக்குப் பயம். ஒருத்தனும் வரேல்லை. கத்துலாக் குகையிலை இருந்து தப்பிறதுக்கு எங்கையோ ஒரு கள்ளவழி இருக்கும் எண்டு அவங்கடை மண்டையிலை உறைக்காமல் இல்லை. அதைக் கண்டு பிடிக்கிறதும் ஒண்டும் பெரிய காரியமில்லை. ஆனால் அவங்களுக்குச் சரியான பீச்சல் பயம் போலை. கத்துலாக் குகையிலை இருக்கிற பொந்து, குடைவு, சுரங்கவழி, நிலத்தடி ஆறு .... உதெல்லாம் போய் ஆராயப் பயம். எங்கினையாவது ஒரு மூலையிலை ஒரு வேதாளம் கீதாளம் நிண்டு தங்களைப் பிடிச்சாலும் எண்ட பயம். கையிலை வைச்சிருக்கிற ஆயுதம் தான் அவங்களை வீரம் பேச வைக்குது. இல்லை எண்டால் இவங்கள் எல்லாம் ஒரு புழுபூச்சிக்குச் சமம். மனச்சாட்சி இல்லாமல் சும்மா தெங்கிலுக்குப் பின்னாலை எடுபட்ட பேயங்கள். 

கத்துலாக் குகையிலை இருக்கிற பொந்து, குடைவு, சுரங்கவழி, நிலத்தடி ஆறு .... உதெல்லாம் போய் ஆராயப் பயம். கூட்டமாய்ப் போய் ஆராவது அப்பிராணியை வதைக்கிறதிலை அவையளுக்கு வாற துணிச்சல், வீரம், உற்சாகம் எல்லாம்; தனிச்சுத் தனிச்சு அந்த சுரங்கம், பொந்துகள் வழிய ஊர்ந்து போய் பார்க்கிறது எண்டால் எங்கையோ ஓடிப் போட்டுதாக்கும்.

எங்களை இப்பிடி வலு சுகமாய்த் தப்பிப் போக ஏன் விட்டவங்கள்? முன்னைபின்னை ஒருத்தரும் இங்கை இருந்து தப்பினது இல்லையாமோ? எப்பிடி இந்தச் சங்கதியை தெங்கிலிட்டை போய்ச் சொல்லுவினம்? அனக்கு அதை அறிய வேணும் எண்டு ஆவலாய் இருந்தது. அது அவங்களே அவிழ்க்க வேண்டிய சிக்கல், எங்களுக்கு இன்னும் எவ்வளவோ காரியம் பண்ணக் கிடக்கு எண்டு அண்ணர் சொன்னவர். 

ஊர்ந்து போகவேண்டி இருந்த சுரங்கப் பொந்துக்கு உள்ளை இருந்து கொஞ்சம் விட்டாத்தியான இடம் வந்தவுடனை அண்ணர் மடியிலை கட்டி வைச்சிருந்த ஒரு சின்னத் துணிக்கட்டை அவிழ்த்தார். அதிலை கொஞ்சம் தின்பண்டம் இருந்தது. காய்ஞ்சு போன பாண் துண்டும், புளிச்சுப்போன ஆட்டுப்பாலுந்தான். எண்டாலும் அது ஒர்வார் நயினாருக்கு திவ்வியமாய் இருந்தது. 
"என்ரை சீவியத்திலை இப்பிடி ஒரு திவ்வியமான தீன் திண்டதில்லை" எண்டவர். அண்ணர் நயினாரின்ரை கால் ரெண்டையும் தேய்ச்சு உருவினவர், அரத்த ஓட்டம் காலிலை சீராய் பாயட்டும் எண்டு.
நயினாரிலை கொஞ்சம் தெளிவு தெரிஞ்சது. ஆனாலும் நடக்க ஏலேல்லை, தவண்டவர். 

அண்ணர் எந்த மாதிரியான வழியாலை வெளியாலை போக வேணும் எண்டு விளப்பமாய்  சொல்லீட்டு , அப்பவே இருட்டோடை இருட்டாய் வெளியேற நயினாருக்கு சம்மதமோ எண்டும் கேட்டவர்.
"ஓமோமோம்! உறுண்டு, தவண்டு போகிறதாலை என்னுடைய முழங்கால் சிறட்டை தேய்ஞ்சாலும் காரியமில்லை, என்ன பாடுபட்டும் ஊருக்கு காட்டுறோசப் பள்ளத்துக்குப் போய், சொந்த வீட்டிலை ஒரு முடறு பச்சைத்தண்ணி குடிக்க வேணும். அதை விட்டிட்டு தெங்கிலின்ரை அரத்தம் குடிக்கிற வேட்டை நாயள் உந்தப் பொந்து சுரங்க வழியாலை நம்மைத் தேடிவரு மட்டுக்கும் காத்திருக்கிறதே?"

ஒர்வார் நயினார் இப்ப முந்தின நயினார் ஆகிவிட்ட திடம் அவரின்ரை குரலிலை தெரிஞ்சது. மறியலிலை கிடந்தது சதிரம் வதை பட்டு , நொந்து போனாலும், மனசு நொருங்கிப் போகாத ஒரு  விடுதலைப் போராளி! காட்டுறோசாப் பள்ளம் செய்த தவம்! ஒர்வார் நயினார்! விளக்கு வெளிச்சத்திலை அவரின்ரை கண் ரெண்டும் நல்ல கூர்மையும், ஒளிப்புமாய் இருந்தது. அந்தக் கண் ரெண்டும் சொல்லாமல் சொல்லுது, உவன் தெங்கில் ஏன் நயினாருக்குப் பயப்பிடிறவன் எண்டு. இம்மளவு கேவலமாய் நயினாரின்ரை தேகம் நராங்கி வயக்கெட்டுப் போனாலும்; அவரின்ரை கண்ணிலை மட்டும் ஒரு நெருப்பு! ஒரு சொலிப்பு! அவரின்ரை மனசின்ரை ஓர்மம் கண்ணிலை தெரிஞ்சது. அந்த ஓர்மந்தான் அந்த நரகத்து இரவுப்  பொழுதை தாண்டித் தப்பிப் பிழைக்க  நயினாருக்குக் கை குடுத்தது. எந்த ஒரு காலத்திலையும், எந்த ஒரு உலகத்திலையும், எவர் ஒருத்தரும் இந்த மாதிரி ஒரு நரகத்து இராப் பொழுதை எங்களை மாதிரிக் கண்டிருக்க முடியாது. 

பயங்கரமும், நெஞ்சிடியும், பதகளிப்பும் நிறம்பின கெதியிலை ஒரு முடிவுக்கு வராத இரவாய் அமைஞ்சு போச்சு. ஆனால் ஒருத்தருக்கு நல்லாய்க் களைப்புத் தொட்டிட்டிது எண்டால் எதைப் பற்றியும் கவலைப் பட அக்கறை இராது. அரத்தம்  குடிக்கிற வேட்டை நாயள் கிட்ட வந்தால் கூடி அயண்டகேடாய் இருப்பினம். இப்பிடி இருக்க நாயள் குலைக்கிற, ஊளை வைக்கிற சத்தம் கேட்டது. ஆனாலும் அனக்கு பயம் வரேல்லை. கொஞ்சத்திலை எல்லாம் அடங்கிப்போச்சு. அந்த நாயள் கூடி தன்தன் இயமானனைப் போலை பயந்த எளிய நாயள் ஆக்கும். 

நாங்கள் ஊர்ந்து, தவண்டு, உறுண்டு, பிரண்டு, இழுபட்டு, நடந்து விடிஞ்சு ஊருப்பட்ட நேரம் செண்ட பிறகு ஒருமாதிரி வியாழரும், வெள்ளியாரும் நிண்ட குடைவுக்கு வந்து சேர்ந்தம். நாங்கள் இருந்த கோலம் எண்டால்......, உடுத்திருந்த உடுப்பு எல்லாம் கந்தலாய்க் கிழிஞ்சு....., அரத்தம் பிரண்டு....., ஒரே ஈரம்....., ஊத்தையாய்....., நித்திரை விசரிலை.....,செத்துவிழப்போற களைப்பிலை இருந்தம். நிலத்தையும், வானத்தையும் கண்ணிலை கண்ட எல்லா இயற்கையையும் ஒருமிக்கக் கட்டிப் பிடிக்க ஆசைப்படுமாப் போலை ஒர்வார் நயினார் கைரெண்டையும் அகட்டி விரிச்சார். விரிச்சகை விரிச்சபடி அப்பிடியே நிலத்திலை பணிய விழுந்து நித்திரையாய்ப் போட்டார். பின்னேரப்பாடு  வரை மூண்டு பேருமே நல்ல நித்திரை அடிச்சம். நித்திரை கொண்ட பொழுது கூடிப் போச்சுது எண்டு நினைச்ச மாதிரி வெள்ளியார் தன்ரை மூக்காலை என்னை தட்டி ஒழுப்பி விட்டது.

அண்ணரும் ஒழும்பி இருந்தார். 
"பொழுதற முன்னம் காட்டுறோசாப் பள்ளத்துக்கு போய்ச் சேர்ந்திட வேணும். இல்லையெண்டால் இருட்டுக்கை பாதை பிடிச்சுப் போறது கயிட்டமாய்ப் போயிடும்." எண்டவர். பேந்து ஒர்வார் நயினாரையும் ஒழுப்பினவர். 

கண்ணைக் கயக்கிக் கொண்டு முழிச்ச நயினார், இப்ப தான் கத்துலாக் குகைக்குள்ளை இல்லை எண்டதை நினைச்சுப் பார்த்தார். ஆளின்ரை கண் ரெண்டிலையும் கண்ணீர் துளும்பினது.
"விடுதலை!" எண்டு முணுமுணுத்தார் 
"விடுதலை!" அண்ணரின்ரை கை ரெண்டையும் கன நேரம் ஒண்டும் பறையாமல் பிடிச்சிருந்தார்.
"என்ரை வாழ்க்கையை மீட்டு, விடுதலையையும் தந்திட்டாய்." நயினார் உணர்ச்சி வசப்பட்டு, கதைக்கச் சிரமப் பட்டார். அனக்கும் நன்றி சொன்னவர். நான் என்னத்தைப் பெரிசாய்ச் செய்து கிழிச்சன்? சன்னாசியாருக்குச் சடம்பகம் பெருத்த மாதிரி அண்ணர் பாவம் என்னையும் கொண்டு இழுபட்டார் எண்டுதான் சொல்ல வேணும். 

பூமி நச்சத்திரத்திலை அண்ணரை விட்டுப் பிறிஞ்சு நான் தவிச்ச தவிப்புக்களுக்குப் பிறகு ஒருமாதிரி நஞ்சியாலாவுக்கு வந்த நேரம் அண்ணரைக் கண்ட அதே மனநிலையிலை இப்ப இந்த ஒர்வார் நயினார் இருந்தார். அவரும் தன்ரை ஊருக்கு, வீடு வளவுக்கு, தன்ரை மனிசி மக்கள், இனசனத்தோடை போய்ச்சேர்ந்து பழைய படி நல்லாய் இருக்க வேணும் எண்டு மனசார விரும்பினநான். ஆனால் நாங்கள் இந்த இடிவிழுவாரின்ரை கறுமண்யாக்காவிலை அப்பவும் நிண்டம். ஒர்வார் நயினாரைத் தேடி தெங்கிலின்ரை விசர்நாய்ப் படை எல்லாம் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கும். எங்கடை நல்லகாலத்துக்கு இதுவரை நாங்கள் பிடிபடேல்லை.

எங்களட்டை மிச்சமாய் இருந்த பாண்துண்டுகளை சாப்பிட்டு முடிச்சம். சாப்பிடச் சாப்பிட ஒர்வார் நயினார் ஒரு நூறு தரம் எண்டாலும்,
"நம்பேலாமல் கிடக்கு. நான் உசிரோடை இருக்கிறன்! விடுதலையாகிட்டன்! உசிரோடை இருக்கிறன்! " எண்டு சொன்னவர். ஏனெண்டால் நயினாரை தவிர மறியலிலை இருந்த மற்றப் பாவப்பட்ட சென்மம் எல்லாம் ஒண்டுக்குப் பின்னாலை ஒண்டாய் கத்துலாவுக்குப் பெலியாய்ப் போச்சுதுகளாம். 
" ஆனால் ஒண்டு மட்டும் தெங்கிலைப் பொறுத்த மட்டிலை நம்பலாம்; கத்துலாக் குகை கனநாளுக்கு வெறுமையாய் இராது. வலு கெதியிலை ஆரோ ஒரு கறுமப்பட்ட சீவனை அதிலை அடைச்சுப் போடுவான்." எண்டு நயினார் சொன்னவர். அவரின்ரை கண்ணாலை கண்ணீர் வழிஞ்சது. 
" ஓ! என்ரை காட்டுறோசாப் பள்ளமே! இன்னும் எத்தினை நாளைக்கு இப்பிடி தெங்கிலின்ரை காலிலை கிடந்தது மிதிபடப் போறாயோ?"

தான் மறியல் இருந்த காலத்திலை நஞ்சியாலாவிலையும், சுற்று வட்டாரத்திலையும் நடந்த நடப்புக்களைப் பற்றியும் அறிய விரும்பினவர். சோபியா அக்கை, பெத்தையா மத்தியாசு அவையளைப் பற்றியும், அண்ணர் என்னென்னெல்லாம் செய்தவர் எண்டெல்லாம் கேட்டவர். அண்ணரும் சொன்னவர் தான், ஆனால் ஆள் கொஞ்சக் கதை மறைச்சுப் போட்டார். தான் செய்த காரியங்களைக் குறைச்சுத் தான் சொன்னவர். யூச்சி செய்த துரோக வேலையைப் பற்றியும் சொன்னவர். அதைக் கேட்டு அந்தாள் திடுக்கிட்டு போச்சுது. முகம் வெளிற நெஞ்சைப் பிடிச்சுக் கொண்டு கண்ணை இறுக்க மூடினார். எட நாசமறுக்க! உதைக் கேட்டு உந்தாளுக்கு ஏதும் நெஞ்சடைப்புக் கிஞ்சடைப்பு வந்திட்டுதோ எண்டு ஒரு சொட்டு நேரம் பயந்து போனன். நல்லகாலம் அப்பிடி ஒண்டும் இல்லை.

யூச்சி காட்டிக் குடுத்துத் தான் இம்மளவு காலமும் பிடிபட்டு, மறியலிலை கிடந்தது சீரழிஞ்சது எண்டதை முண்டிவிழுங்க அவருக்குக் கொஞ்சநேரம் செண்டது. 
" நான் பட்ட கயிட்டம் என்னோடை போகட்டும். ஆனால் காட்டுறோசாப் பள்ளத்துச் சனம் படிற சித்திரவதையளுக்கு ஒருநாள் இல்லாட்டாலும் ஒருநாள் உரிய வதில் உவன் யூச்சி இறுக்கத்தான் வேணும். உவன் செய்த காரியம் ஏழேழு சென்மத்துக்கும் மறக்கேலாத வடுவாய்ப் போச்சுது" எண்டு கொதிச்சார்.
" மறக்கப் பார்க்கிறதோ?, இல்லைப் பொறுத்துப் போறதோ ஆனால் ஒண்டு மட்டும் நிச்சயம். யூச்சி இனி உங்கடை கண்ணிலை விழ மாட்டான்" எண்டார் அண்ணர். 

ஒர்வார் நயினாருக்கு நினைக்க நினைக்க கொதி கூடினது. நிண்ட இடம் விட்டு உடனை வெளிக்கிட வேணும் எண்டு அந்தரப் பட்டார். அண்டு இரவே விடுதலைப் போரைத் துவங்கத் துடிச்சார். தன்ரை ஏலாத காலைப் பார்த்துத் திட்டிக் கொட்டினார். தானே ஒழும்ப கனதரம் தெண்டிச்சார். அம்மளவு தூரம் மன ஓர்மமாக்கும். ஒரு மாதிரி ரெண்டு காலிலையும் ஒழும்பி நிண்டார். நிலத்திலை தான் கால்பாவி நிற்கிறதை கையாலை காட்டிக்காட்டி பெரிய புளுகத்தோடை எங்களைப் பார்த்தார். அவர் தள்ளாடி தடுமாறி உலாஞ்சி விழப் பார்த்தார். பார்த்தால் குடிகாறன் வெறிகாறனின்ரை தள்ளாட்டமாய் இருந்தது. அதைப் பார்க்க ஒரு பக்கம் பகிடியும் சிரிப்பும், இன்னொரு பக்கம் அக்களிப்பாயும் எங்களுக்கு இருந்துது. நாங்கள் ரெண்டு பேருமே சிரிச்சம்.

" நயினார்! கத்துலாக்குகை மறியலிலை இருந்து தான் நீங்கள்  வாறீங்கள் எண்டு அஞ்சு கட்டைக்கு அங்காலை நிற்கிறவனும் வலு சுகமாய் கண்டுபிடிச்சிடுவான்." எண்டு அண்ணர் சொன்னார். மெய்தான். எங்கள் மூண்டு பேரின்ரை கோலமுமே அரத்தம் தோய்ஞ்சு ஊத்தை பிரண்டு வலு கேவலமாய் இருந்தது. அதிலையும் நயினாரைப் பற்றி ஏன் பறைவான்? கந்தலாகி, நார்நாராய் கிழிஞ்ச உடுப்பு,முள்ளுப் பற்றை மண்டின மாதிரி தலைமயிர், தாடி, மீசை மறைக்கிற முகம். அந்த கண் ரெண்டும் மட்டுந்தான் ஒரு விதமான, விநோதமான, வெளிச்சமும், சொலிப்புமாய் வெளியாலை தெரிஞ்சது.

நாங்கள் நிண்ட குடைவிலை ஒரு சின்ன வாய்க்கால் வழிஞ்சு ஓடிக் கொண்டிருந்தது. அதிலை நல்லாய் அரத்தக்கறை, ஊத்தை எல்லாம் போக உரஞ்சித்  தேய்ச்சுக் குளிச்சம். நயினார் என்ரை கத்தியை வாங்கி கறகறெண்டு தலைமயிரை, தாடியை அரிஞ்சு எறிஞ்சார். இப்ப பார்க்க அப்பிடி ஒண்டும் பெரிசாய் மறியலிலை இருந்து தப்பி ஓடிற ஆள் கணக்கிலை இல்லை. அசம்பியிலை இருந்து அரணக்காறர் பாவிக்கிற ஒரு தலைக்கவசமும், சீருடையும், மேலங்கியும் அண்ணர் எடுத்தவர். என்ன ஞாவகம் வருதோ? அதுதான் அண்ணர் காட்டுறோசாப்  பள்ளத்திலை அந்தத் தொடிக்கி எண்ட அரணக் காவல்காறனும் கூட்டாளி மாரும் குடிவெறியிலை கிடந்த நேரம் அடிச்சுக் கொண்டு வந்தவரெல்லோ? காட்டுறோசாப் பள்ளம் விட்டுப் பாயிறதுக்கு அண்ணருக்கு அந்த அரணக்காறன் உடுப்பு உதவி செய்ததெல்லோ?

" இந்தாங்கோ நயினார்!" எண்டு அண்ணர் நீட்டினார்.
" உதைப் போட்டீங்கள் எண்டால் ஒற்றர் ரெண்டு பேரை பிடிச்சுக் கொண்டு போற தெங்கிலின்ரை அரணக்காறன் கணக்கிலை இருப்பீங்கள். ஆருக்கும் ஒரு கரவும் தெரிய வராது."
ஒர்வார் நயினார் அந்த அடுக்கு சீருடையைப் போட்டார். ஆனால் அவரின்ரை முகத்திலை அது ஒண்டும் பெரிய புறியமான காரியமாய் இல்லை எண்டு தெரிஞ்சது.
" முதலும், கடைசியுமாய் என்னை இந்தக் கோலத்திலை பார்க்கிறீங்கள் தெரிஞ்சுதோ" எண்டு புறுபுறுத்தார்.
"இந்த எளிய கோலத்து உடுப்பிலை கொடுவினையும், அவல ஓலமும் தான் இன்னும் மணக்குப்போலை இருக்கு"
" அது என்ன மணத்தாலும் காரியமில்லை. காட்டுறோசாப் பள்ளம் வரை நாங்கள் போய்ச் சேரு மட்டுக்கும் உந்தக் கோலம் மாட்டத்தான் வேணும்." அண்ணர் சொன்னார். 

நேரம் கடகடெண்டு  என்ன மாதிரி ஓடிப் பறிஞ்சது எண்டு தெரியேல்லை. இன்னும் மூண்டு, நாலு மணி நேரத்திலை பொழுது சாய்ஞ்சிடும். மலையிலை இருட்டு  விழுந்திட்டால் போற பாதை எங்கினை எங்கினை தெந்தட்டுப் பொறி மாதிரிப் போகுது, வளையுது எண்டு தெரியாது.

அண்ணர் கடுவலாய் யோசிக்கிறது அவரின்ரை முகத்திலை தெரிஞ்சது. என்னென்ன ஆபத்து, பயங்கரம் எல்லாம் நாங்கள் சந்திக்க வேண்டி வரும் எண்டு ஓரளவுக்கு கணக்குப் போட்டு வைச்சிருந்தவர். அது பற்றிக் எங்களோடை கதைச்சார். 
"இனி வரப்போற ரெண்டு மணி நேரமும் ஓடப்போற  குதிரையோட்டம் தான் காட்டுறோசாப் பள்ளத்தின்ரை தலையெழுத்தை மாற்றி எழுதிறதாய் அமையும். அம்மளவு நேரமும் உங்களாலை குதிரையோடிக் கொண்டு சமாளிக்க முடியுமே நயினார்?"
"ஓமோம்!" அவசரமாய் நயினார் சொன்னார்,
"பத்து மணி நேரம் பிடிக்கும் எண்டாலும் காரியமில்லை நான் சமாளிப்பன்".

அண்ணர் நயினாரை வெள்ளியாரிலை ஏற்றி விட்டவர். நயினாரிலை உடனடியாய் ஒரு பெரிய மாற்றம் தெரிஞ்சது. குதிரையின்ரை முதுகிலை, சேணத்திலை ஏறிக் குந்தினவர் முகத்திலை ஒரு ஒளி, ஒரு கெம்பீரம் தெரிஞ்சது. முந்தின மாதிரி முதுகு கூனிப் போன கோலமில்லை; நெஞ்சு நிமிர்த்தி, துணிச்சலாய் இருந்தார். ஒர்வார் நயினாரும் அண்ணரைப் போலப் பிறவியிலையே எதுக்கும் துணிஞ்ச ஒரு கட்டை தான். இஞ்சை நான் ஒருத்தன் மட்டுந்தான் ஒரு பயந்தான் பீச்சி. அண்ணரோடை வியாழரிலை தொற்றி ஏறினன். அவரின்ரை முதுகிலை முகத்தைத் தாட்ட படி, நாரியைக் கட்டிப் பிடிச்சன். அண்ணரின்ரை  பெலமும், துணிவும் வழிஞ்சு அனக்கும் தொற்றின மாதிரிக் கிடந்தது. அனக்கு இருக்கிற அந்தப் பயம் எண்ட கோதாரி கூட என்னை விட்டுக் கழண்டு போன மாதிரி ஒரு உணர்வு. 

எப்ப என்ன நடக்குமோ? அதை சமாளிச்சுத் தாண்டி எப்பிடி வாறது?, எண்டெல்லாம் கலம்பகப் பட்டு, மனத் திடத்தையும், உடம்புப் பெலத்தையும் சீரழிக்காமல் நிம்மதியாய் ஒரு மனிசர் சீவிக்க முடிஞ்சிது எண்டு கண்டால்; எம்மளவு அற்புதமாய் சீவியம் இருக்கும்? 
செர்ரிப்பள்ளத்தை நினைச்சால் ஏதோ ஆயிரம் வரியகாலம் ஓடிப் போன மாதிரிக் கிடக்கு. 

தெங்கிலின்ரை எளிய படையிட்டை ஆப்பிடாமல்  தப்பியோடிற எங்கடை பயணத்தை இப்ப துவங்கினம். படுவான் பக்கம் பார்த்துப் போனம்.  ஏனெண்டால் அந்தப் பக்கம் தான் நாங்கள் போகவேண்டிய பாதை இருந்தது. ஆனால் கண்ட பாட்டுக்கு சிக்கடிச்ச நூல் கணக்கிலை கனக்கப் பாதையள் கண்ணிலை பட்டது. சரியான தடம் பிடிபடேல்லை எண்டு கண்டால் உந்தப் பாதையள் எக்கணம் எக்குத்தப்பாய் கறுமண்யாக்காவுக்கே திரும்பவும் கொண்டு போய் விட்டிடும். எங்கள் மூண்டு பேரிலையும் அண்ணருக்கு மட்டுந்தான் சரியான பாதை பிடிச்சுப் போகத் தெரியும்.

குதிரையள் ரெண்டும் நடக்கிற இடத்திலை, நடந்து, குதிக்கிற இடத்திலை குதிச்சு, பாயிற இடத்திலை பாய்ஞ்சு, பறக்க வேண்டிய இடத்திலை பறந்தது. நானெண்டு கண்டால் அடிக்கடி  பின்னாலை ஆரும் அரணக்காரன் வாறானோ எண்டு திரும்பித் திரும்பி நோட்டம் விட்ட சீர். அனக்குக் கண் ரெண்டும் உளைஞ்சு எரிய வெளிக்கிட்டது.
பின்னாலை வாற ஒர்வார் நயினாரைப் பார்க்கப் பார்க்க பத்திக் கொண்டு வாற மாதிரி அந்த அரணக்காறன் கோலம். அவர் தான் எண்டு தெரிஞ்சாலும் பார்க்கிற நேரமெல்லாம் திடுக்காட்டமாய் இருக்கு. 

நாங்களும் கன நேரமாய்ப் போறம், போறம்  ஒரு இடைஞ்சலும் இல்லை. நல்லதொரு அமைதி. "மலைப்பாதையில் மனசில் ஒரு  மயக்கம்" எண்டு என்ரை மனசிலை ஒரு பாட்டு வரி கிளம்பினது. ஆனால் அது வசனம் அந்த நேரத்துக்குச் சரிவரப் பொருந்தி வரேல்லை. எங்கடை மனங்களிலை எந்தநேரமும் எது எப்ப நடக்கும் எண்டு ஒரு பதகளிப்பு. எதுக்கும் துணிஞ்ச அண்ணர் கூட அடிக்கடி பின்னாலை முன்னாலை பார்த்தபடி.

"பாலத்தை மட்டும் தாண்டிட்டம் எண்டால்...." எண்டு இழுத்தார் அண்ணர்.
"ஆபத்தான கட்டத்தைக் கடந்து விடுவம்."
" பாலத்தடிக்கு வர இன்னும் கனக்க நேரம் பிடிக்குமே?" எண்டு கேட்டன்.
" ஒரு இடைஞ்சலும் இலை எண்டால் இன்னும் ஒரு அரை மணிநேரம் பிடிக்கும்." அண்ணர் வாய் மூடேல்லை கந்தறுவார் சடுதிமுட்டாய்  வந்தாங்கள். நீள நீள ஈட்டி, கறுப்பு குதிரையளோடை ஆறு பேர் மட்டிலை அரணக்காறங்கள் எங்கடை பக்கம் பார்த்து வந்தாங்கள். ஒரு பெரிய பாருக்குப் பின்னாலை வளைவிலை இருந்தாப்போலை திடீரெண்டு முளைச்சாங்கள்.

"நயினார் நாங்கள் உசிரோடை இருக்கிறதோ, சாகிறதோ எண்ட  கட்டம் வந்திட்டுது. எங்களுக்கு முன்னாலை நீங்கள் போங்கோ."
இப்ப நயினார் எங்களைத் தாண்டி முன்னுக்கு வந்தார். அண்ணர் தன்ரை கையிலை கிடந்த கடிவாளத்தை  நயினாரின்ரை கைக்கு எறிஞ்சார். எங்களை சிறை பிடிச்சுக் கொண்டு போற அரணக்காறன் கணக்கிலை வியாழரின்ரை கடிவாளத்தையும் கையிலை பிடிச்ச படி நயினார் போனார். 

இன்னும் அவங்கள் எங்களைக் கவனிக்கேல்லை தான். ஆனாலும் தப்பியோட நேரமுமில்லை, வழியுமில்லை. செய்ய வேண்டிய காரியம் ஒண்டு மட்டுந்தான். பேசாமல் பறையாமல் நெற்றிமுட்டுக்கு அவங்களைக் கடந்து போக வேண்டியது தான். ஒர்வார் நயினார் போட்டிருக்கிற தலைக்கவசமும், மேலங்கியும் பெரும்பாலும் காப்பாற்றும் எண்டு நம்பினன். 
 "இனிமேல்பட்டு உசிரோடை பிடிபட மாட்டன் கண்டியோ!" இறுகின குரலிலை திடமாய்ச் சொன்னார் நயினார். 
" அது மட்டும் நீ அறிய வேணும் சிங்கநெஞ்சன்!"

அமைதியாய் பகையாளியள் பக்கம் போனம். கிட்டிக் கிட்டிப் போனம். அனக்கு முள்ளந்தண்டிலை கூதல் ஏறினது. <இம்மளவுக்கு வருந்தி நொந்து பட்ட பாடெல்லாம் ஒரு பலனும் இல்லாமல் வீணாய் போகுதே! கறுமவினை! உப்பிடி ஆப்பிட்டு  கத்துலாக் குகைக்குத்தான் பயளை ஆக்கும்> இப்பிடி என்ரை மண்டை குழம்பினது.  நேருக்கு நேராய் அவங்கடை மூஞ்சையளிலை முழிச்சம். அந்த ஒடுக்கமான ஒற்றையடிப் பாதையிலை எங்களைத் தாண்டிப் போகட்டும் எண்டு ஒதுங்கி நிண்டம். அதிலை முன்னுக்கு வந்தது ஒரு தெரிஞ்ச மூஞ்சையாய் இருந்தது. அது அவன் அந்தப் பெர்க்கு! ஆற்றுத் தண்ணியிலை இருந்து தான் மட்டும் தப்பினால் காணும், குதிரை அள்ளுப்பட்டுப் போனால் போகட்டும் எண்ட அந்த விழுபேயன் எல்லே?

பெர்க்கு அண்ணரின்ரையும் என்ரையும் பக்கம் ஏறெடுத்துப் பார்க்கவே இல்லை. ஒர்வார் நயினாரை மட்டும் தங்கடை ஆள் எண்ட நினைப்பிலை,
"தப்பினவங்கள் பிடிபட்ட கதை ஏதும் கேள்விப்பட்ட நீரே?" எண்டு கேட்டான். ஒர்வார் நயினாரும், 
"சாய்! அப்பிடி எந்த சங்கதியும் என்ரை காதிலை விழேல்லை" எண்டவர். 
"துலைக்கே போறீர்?"
"உங்கை பக்கத்திலை தான். மறியலிலை போட ரெண்டு பேரை இழுத்துக் கொண்டு போறன்." உதுக்கு மிஞ்சி ஒண்டும் நயினார் சொல்லேல்லை. அவங்கள் கடந்து போனவுடனை மனம் துணிஞ்ச மட்டிலை கெதியாய் குதிரையளை ஓட்டினம்."சீனியப்பு! அரணக்காறங்கள் என்ன செய்யிறாங்கள் எண்டு மெள்ளத் திரும்பிப் பின்னாலை ஒருக்கால் பார்" எண்டார் அண்ணர். நானும் மெள்ளமாய் திரும்பிப் பார்த்தன்.
"அவங்கள் போறாங்கள் அண்ணர்!"
"அப்பாடி ஒரு கண்டத்தைக் கடந்தாச்சு" எண்டு அண்ணருக்குப்  புளுகம். கொஞ்சம் அவசரப் பட்டுப் புளுகப் பட்டிட்டார்.  அரணக்காறங்களுக்கு சாதுவாய் ஐமிச்சம் தொட்டிட்டுது. நிண்டு நிதானிச்சு எங்களையே திரும்பிப் பார்த்தவங்கள்.
"அவங்களுக்கு ஐமிச்சம் தொட்டிட்டுது" எண்டு அண்ணர் அந்தரப் பட்டார்.
"ஓய்! கொஞ்சம் நில்லும்!" எண்டு பெர்க்கு கத்தினான். 
"சொல்லிறதைக் கவனமாய்க் கேளும்! நான் உம்மையும், நீர் பிடிச்சுக் கொண்டு போற ஆக்களையும் நான் ஒருக்கால் கிட்ட வந்து பார்க்க வேணும்."

ஒர்வார் நயினார் பல்லை நறுமினார்.
"குதிரையைக் கொண்டு பற யோனத்தான்! ஆப்பிட்டம் எண்டால் செத்தம் !" நாங்கள் குதிரையளிலை பறந்தம். இப்ப எண்டால், பெர்க்கு தன்ரை கூட்டத்தோடை எங்களைத் துரத்தின படி.
" வியாழர்! உன்ரை வீரத்தைப், பெலத்தை எல்லாம் காட்டுற நேரம் வந்திட்டுது." எண்டு வியாழரை ஏவினார் அண்ணர். ஒர்வார் நயினாரை வைச்சிருந்த என்ரை வெள்ளியாரும் என்ன வீரத்திலை, பெலத்திலை குறைஞ்ச சீவனே? காற்றோடை காற்றாய்ப் பறக்கிறதுக்கு வியாழரையும், வெள்ளியாரையும் மிஞ்சி ஒரு குதிரை கிடையாது எல்லே? அதுகளுக்கும் இது வாழ்வோ சாவோ எண்ட போராட்டம் எண்டது விளங்கி இருக்க வேணும். மின்னல் வெட்டின கணக்கிலை ஒரே ஓட்டந்தான். 

ஆனால் பின்னாலை துரத்திக் கொண்டு வாறவங்கடை குதிரையளும் சக்கட்டையள் இல்லை.  அதுகளின்ரை குளம்படிச்சத்தம் இடைசுகம் நல்லாய்க் கிட்டவாயும் இடைசுகம் எட்டவாயும் கேட்டது. ஆனால் துரத்திக் கொண்டு வாறதை மட்டும் நிற்பாட்டின பாடில்லை. ஆரைத் தாங்கள் கலைச்சுக் கொண்டு போறது எண்டு பெர்க்குக்கு விளங்கிட்டுது. தெங்கிலின்ரை எளியபடையிலை எவன் ஒருத்தன் இப்பிடி ஒரு சந்தர்ப்பத்தைத் தவற விடப் போறானாம்? தங்கடை தெங்கில் நயினாருக்கு காணிக்கையாக எங்களைப் பிடிச்சுக் குடுக்கிறதுக்கு நானோ நீயோ எண்டு போட்டி போட்டாங்கள்.


கறுமண்யாக்காவையும், நஞ்சியாலாவையும் புறிக்கிற கறுமா அருவிக்கு மேலை இருக்கிற பாலத்திலை இறங்கி விட்டம். ஒண்டிரண்டு ஈட்டி சீறிக் கொண்டு வந்தது. நல்லகாலம் கிட்ட வரேல்லை. நஞ்சியாலாவின்ரை பக்கம் வந்திட்டம். இஞ்சால்ப் பக்கம் வந்திட்டால் மோசமான கட்டத்தைத் தாண்டின மாதிரி எண்டு அண்ணர் சொன்னவர்தான். ஆனால் அவர் எதிர்பார்த்தது இந்தமுறை
பிழைச்சுப் போயிட்டுது. கறுமா ஆற்றின்ரை கரையோடை ஓடின பாதையிலை கலம்பகப் பட்டபடி வேட்டைக்காறரின்ரை கண்ணுக்குத் தப்பி ஓடிற முறுகங்கள் கணக்கிலை சும்மா மின்னல் மாதிரிப் பறந்தம். 

ஆற்றங்கரைக்கு மேல்பக்கமாய் பிட்டியிலை ஓடின பாதை இப்ப வளைஞ்சு காட்டுறோசாப் பள்ளத்தின்ரை திக்கிலை திரும்பி இறங்கினது. அந்த வழியிலை அண்ணரும் நானும் முந்தி ஒருநேரம் ஒரு கோடைகால செக்கல் நேரம்  போயிருக்கிறம். உது நடந்து ஒரு ஆயிர வரிய காலம் ஓடிப் பறந்த மாதிரிக் கிடக்கு. இறக்கத்திலை வலு கவனமாய் குதிரையோடி இறங்க வேணும். ஆனால் நாங்கள் குதிச்ச மாதிரிக் குதிரையளோடை பாய்ஞ்சம்.

ஒர்வார் நயினார் பயங்கர வேகத்திலை குதிரை ஓட்டினார். அவருக்கு எண்டால் காட்டுறோசாப் பள்ளத்துக்கு, சொந்த வீட்டுக்குப் போற அவசரம். அவரின்ரை வேகத்துக்கு அண்ணராலை ஈடு குடுக்க முடியாமல் போச்சு. பெர்க்கு எண்டவன் எங்களை நெருங்கி, நெருங்கி வந்தான். கடைசியிலை அனக்கு ஒரு சங்கதி ஓடி வெளிச்சது. அண்ணரின்ரை குதிரையோட்டத்தின்ரை வேகம் குறையிறதுக்கு நான்தான் கால். தான் மட்டும் தனிச்சுக் குதிரை ஓடுவர் எண்டால், உவர் ஒர்வார் நயினாராலையும் அண்ணரை மிஞ்சேலாது. ஆனால் அவர் என்னை எந்த நேரமும் கவனிக்கிற தியானத்தாலை எல்லாம் சுணக்கம் ஆகுது. 

இப்ப நாங்கள் பறக்கிற இந்தக் குதிரையோட்டம் தான் காட்டுறோசாப் பள்ளத்தின்ரை தலையெழுத்தை மாற்றி எழுதும் எண்டு அண்ணர் சொன்னவரெல்லே? நான் எடுக்கிற முடிவிலை தான் எல்லாம் இருக்கு எண்டு நினைக்க பெருத்த அந்தரமாய் போச்சுது. வரவர நான் வலு சுறுக்கிலை முடிவெடுக்க வேணும் எண்டு தெரிஞ்சது. நான் திரும்பிப் பார்க்கிற ஒவ்வரு தரமும் பெர்க்கும் அவன்ரை கூட்டமும் எங்களை நெருங்கி,நெருங்கி வாறதைக் கண்டன். இடைசுகம் பற்றை பறுகு மறைவிலை காணாமல் போவாங்கள். இருந்தாப்போலை நல்ல கிட்டவாய் வருவாங்கள். 
அண்ணர் கட்டாயம் தப்பியோட வேணும். என்னாலை அவர் பிடிபடக் கூடாது. 

"அண்ணேர்! நல்லபிள்ளை எல்லே! நான் சொல்லிற படி தயவு செய்து செய்யும். அவங்கள் காணாமல் ஒரு முடக்கிலை என்னைக் கீழை தள்ளி விடும். தள்ளி விட்டிட்டு ஒர்வார் நயினாரோடை தப்பி ஓடும்." அண்ணர் திகைச்சுப் போனார், ஆனால் நான் சொன்னதைக் கேட்டு நானே இன்னும் கூடுதலாய் திகைச்சுப் போனன். அண்ணருக்கும் இப்பிடி ரெண்டு பேரும் ஒண்டாய் ஒரே குதிரையிலை ஓடிறது சரிவராது எண்ட உண்மை ஓடி வெளிச்சிருக்க கூடும். 
"மெய்யாய்ச் சொல்லுறியே சீனியப்பு? துணிஞ்சு இறங்குவியே?" 
"இல்லை எண்டாலும் அதைத்தான் நான் செய்ய நினைக்கிறன்."
"என்ரை குஞ்சன்! என்ரை வீரன்! என்ரை சீனியப்பு!" அவரின்ரை குரல் தழுதழுத்தது. 

"நான் பேந்து வந்து உன்னைக் கூட்ட வருவன். முதலிலை ஒர்வார் நயினாரைக் கூட்டிக்கொண்டு எங்கடை சுரங்கக் கள்ளப் பாதையிலை  இறங்க வேணும். அவரைப் பத்திரமாய் மத்தியாசுப் பெத்தையா வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க வேணும். பேந்து ஒரே ஓட்டத்திலை உன்னைத் தேடி வருவன்" அண்ணர் தன்ரை திட்டத்தைச் சொன்னார்.
"உண்ணாணை வருவீரே?"
"என்னாணை வருவன் குஞ்சன்! பின்னை என்னைப் பற்றி என்ன நினைச்சநீ?"

நாங்கள் குளிச்ச அந்த வில்லோ மரத்தடி கிட்ட வந்தது.
"நான் எங்கடை வில்லோ மரத்திலை ஒளிச்சு இருப்பன். அங்கை என்னைத் தேடி வாரும்." சொல்லி வாய் மூட முன்னம் ஒரு பெரிய பற்றை வந்தது. அண்ணர் வியாழரின்ரை வேகத்தைக் குறைச்சார். நானும் மெள்ள குதிச்சன். அண்ணர் வியாழரோடை பறந்திட்டார். நான் உறுண்டு பற்றைக்குள்ளை மறைஞ்சன். தடதடெண்டு குதிரைக் குளம்படிச் சத்தம் தலைக்கு மேலாலை கேட்டது. சாதுவாக தலையைத் தூக்கிப் பார்த்தன். அந்தப் பேயன் பெர்க்கின்ரை மூஞ்சை ஒரு நொடி  தெரிஞ்சு மறைஞ்சது. என்னத்தையோ பாய்ஞ்சு கடிக்கப் போற மாதிரி அவன்ரை நாடி மேல்கீழாய் ஆட வாயும் திறந்து மூடினது. உவனைப் போய்த் தான் அண்ணரும் ஆற்றோடை போகாமல் காப்பாற்றினவர்.

அண்ணர் ஒர்வார் நயினாரைக் கிட்டிப் போயிட்டார். ரெண்டு பெரும் ஒண்டாய் ஓடி மறைஞ்சதை இட்டு அனக்குப் பெரிய நிம்மதி. 
<போ! போ! பெர்க்குப் பேயா! அவையளை உன்னாலை பிடிக்கேலும் எண்டால் பிடிச்சுப் பாரன் > மனசுக்குள்ளை நினைச்சன். பெர்க்கும் அவன்ரை கூட்டமும் என்ரை கண்ணை விட்டு மறையும் மட்டுக்கும் பற்றையுக்குள்ளை ஒளிச்சு இருந்தன். பேந்து ஒழும்பிப் போய் அந்த எங்கடை வில்லோ மரத்திலை ஏறினன். இலை மறைவிலை நல்லதொரு கொப்பிலை இருந்தன். அனக்குச் சரியான களைப்பாய் இருந்தது. 

மரத்துக்குப் பக்கத்திலை ஆற்றங்கரையிலை ஒதுக்குப் பட்டு ஒரு சின்னப் படகு கிடந்தது. நான் நினைக்கிறன், அது மேலை உசக்க இருந்து வெள்ளம் அறுத்து வந்து இங்கை ஒதுக்கி இருக்க வேணும் எண்டு. ஏனெண்டால் அது கட்டிப் போட்டு கிடைக்கேல்லை. ஆர்தான் தவற விட்டதோ தெரியேல்லை, நிச்சயம் இதைக் காணேல்லையே எண்டு கவலைப் படுவினம். நானும் கொப்பிலை இருந்தபடி சுற்றவர நோட்டம் விட்டுக் கொண்டிருந்தன். பெர்க்குப் பேயன் தன்ரை குதிரையை ஆய்க்கினைப் படுத்தி ஏறப் போன பிட்டி ஆற்றுக்கு நடுவிலை அந்தா தெரியுது. அப்பிடியே அவன் அந்தப் பிட்டியிலை தம்பிட்டுப் போய் இருந்திருக்கலாம். அப்பிடி இருந்திருப்பான் எண்டால் எங்களை இப்பிடிக் கலைவு காட்டி உபத்திரவப் படுத்தி இருக்க மாட்டான். 

ஆற்றைத் தாண்டி அங்காலை கத்துலாப்பாறையைக் கண்டன். அப்ப நான் நினைச்சுப் பார்த்தன், எந்த ஒரு விஷம் போலை ஒரு எண்ணம்  இப்பிடி சிலரை தீண்டி மற்ற ஆக்களை ஒரு ஞாயம் இல்லாத முறையிலை உந்தப் பயங்கரக் குகை வழிய அடைச்சு வைச்சு ஆய்க்கினை பண்ண வைக்குதோ? அண்ணரையும், ஒர்வார் நயினாரையும் நினைச்சன். பெர்க்கின்ரை கண்ணிலை பட்டிடாமல் அண்ணர் களவாய்த் தோண்டின சுரங்கத்துக்குள்ளை ரெண்டு ஓடி ஒளிச்சிட வேணுமே எண்டு நினைக்க, நினைக்க அனக்கு நெஞ்சை அடைச்சது. பெத்தையாவை நினைச்சன். அண்ணரையும், ஒர்வார் நயினாரையும் கண்டு பெத்தையா மத்தியாசு எம்மளவு புளுகப் படுவர் எண்டு நினைச்சன். அதுகும் ஒர்வார் நயினாரைக் கண்டவுடனை இனி இல்லை எண்ட புளுகம் வந்திருக்கும். எல்லாத்தையும் தான் நினைச்சுப் பார்த்தன்.

நல்லாய் இருட்டத் துடங்கி விட்டுது. இரா முழுக்க தனிச்சு இருக்க வேணும் எண்டது அப்பத்தான் அனக்கு உறைச்சது. நல்லாய் இருட்ட முன்னம் அண்ணராலை என்னை தேடி வரேலாது எண்டு நினைக்க வயிற்றைக் கலக்கினது. இருட்டைப் போலை பயமும் அனக்குள்ளை பரவ வெளிக்கிட்டது. 

அந்த மைம்மல் பொழுதிலை ஒரு பொம்பிளை ஒரு குதிரையிலை வந்து கொண்டிருந்தா. ஆரது இப்பிடி இந்த சன நடமாட்டம் குறைஞ்ச பாதையிலை ஒரு பொம்பிளை இந்த மைம்மல் இருட்டிலை  உலாத்திறது? எட! எங்கடை சோபியா அக்கையின்ரை சாங்கமாய் கிடக்குது. மெய்தான் அது சோபியா அக்கையே தான்! தான் ஒரு நாச்சியாராய் தெரிவு செய்யப் பட்டாலும், தன்னை நாச்சியார் எண்டு கூப்பிடாமல் சோபியா, சோபியா அக்கை எண்டு மட்டும் கூப்பிட வேணும் எண்டு சொன்னவ எல்லே? நான் கொண்ட புளுகத்துக்கு ஒரு அளவில்லை.
"சோபியா அக்கை!" நான் கத்திக் கூப்பிட்டன்.
"இஞ்சை பாருங்கோ! நான் இஞ்சை இருக்கிறன்!" நான் மரத்தை விட்டுக் கடகடெண்டு இறங்கினன். கையைக் கையை  விசுக்கிக் காட்டினன். சோபியா அக்கைக்கு என்னை மட்டுக்கட்ட  ஒருசில நொடி நேரம் எடுத்தது.
"எட! எங்கடை கார்ல்!" எண்டு ஆச்சரியப் பட்டா. 
"எப்பிடி இங்கினை வந்தநீர்? அது கிடக்கக் கொண்ணர் எங்கை? கொஞ்சம் பொறும், நாங்கள் உம்மட்டை கீழை வாறம். குதிரையளுக்கும் தண்ணி காட்ட வேணும். "

அப்பத்தான் கவனிச்சன், அவ தனிச்சு வரேல்லை, பின்னாலை ரெண்டு ஆம்பிளையள் கூட வந்தவங்கள்.  அவங்களும் குதிரையளோடை வந்தவங்கள். அதிலை ஒருத்தரைச் சட்டெண்டு அடையாளம் தெரிஞ்சது. அவர் முதலிலை நான் துரோகி எண்டு நினைச்ச கூபர் ஐயா! மற்ற ஆளை முதலிலை ஆரெண்டு தெரியேல்லை. கூபர் ஐயாவின்ரை முதுகு மறைவிலை இருந்து வெளிப்பட்டவனைப் பார்த்து நெஞ்சு திடுக்கிட்டது. எட கறுமம் பிடிச்சவனே! யூச்சி!

<உது மெய்மெய்யாய் உவன் தங்கச்சாவல் யூச்சி தானோ? இல்லை அனக்குப் பார்வைக் கோளாறு ஏதேனும் தொட்டிட்டுதோ?>, எண்டு கொஞ்சம் யோசிச்சன். <சோபியா அக்கை, உவன் உந்த யூச்சியைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கக் கூடாதே!என்ன பிழை எங்கினை நடந்து போட்டுது? சோபியா அக்கைக்கு மூளை கீளை குழம்பிப் போச்சோ? இல்லை நான்தான் யூச்சியை ஒரு துரோகி எண்டு கனாக் கண்டனானோ? சாய்ச்சாய்! நான் அப்பிடி ஒண்டும் கனாக் கண்டதில்லை. அவன் ஒரு துரோகியே தான்! அனக்குக் கண்ணிலை எந்தக் கோளாறும் இல்லை. உந்தா உவன் வாறான். இனி என்ன நடக்கப் போகுதோ?> நான் பட்ட மனக் கலக்கத்துக்கு ஒரு அளவு கணக்கில்லை.

அந்த மைம்மல் பொழுதிலை, ஆற்றங்கரையைப் பார்த்தபடி, குதிரையிலை சவாரி விட்ட படி, கெக்கட்டம் விட்டுச் சிரிச்ச படி வந்தவன். 
"எட! அதாரது? எங்கடை குதிரைக்காறன் வளவு சின்னப்பெடியோ? கார்ல் சிங்கநெஞ்சனோ? நாங்கள் திரும்பவும் சந்திப்பம் எண்டு நினைச்சிருக்கவே இல்லை. "
மற்றவையள் ரெண்டு பேரும் கூடச் சேர்ந்து சிரிச்சினம். நான் ஆற்றங்கரையிலை நிண்டபடி அவையள் கீழை வரட்டும் எண்டு நிண்டன். அந்தநேரம் என்ரை மனசிலை ஒரு கேள்வி,< எக்கணம் இனி என்னென்ன கலம்பகம் எல்லாம் படப் போறமோ?>
மூண்டு பேரும் குதிரையளாலை குதிச்சினம். சோபியா அக்கை ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடிச்சா. அவ பட்ட அக்களிப்பாலை அவவின்ரை கண் ரெண்டும் மின்னினது.
"ஓநாய் வேட்டைக்குத் திரும்பவும் வெளிக்கிட்டநீராக்கும்" கூபர் ஐயா பகிடி விட்டார். நான் ஒரு வதிலும் பறையாமல் விறைச்சுப் போய் நிண்டன்.
"எங்கினை? துலைக்கே வெளிக்கிட்டநீங்கள்?"எண்டு ஒருமாதிரிக் கேட்டுப் போட்டன்.
"கோட்டைச் சுவரைத் தாண்டி காட்டுறோசாப் பள்ளத்துக்கு கள்ளப்பாதை ஒண்டு இருக்கு எண்டு யூச்சி எங்களைக் கூட்டிக் கொண்டு வாறார் " எண்டா சோபியா அக்கை.
"கடைசிப் போர் வெடிக்கிற நேரத்திலை நாங்கள் உள்ள கள்ளப்பாதை எல்லாம் அறிஞ்சு வைச்சிருக்க வேணும்"
"ஓமோம்! எல்லா வழியளும் தெரிஞ்சு தானே இருக்க வேணும்?" எண்டு தாளம் போட்டான் யூச்சி.
"தாக்குதலை நாங்கள் துவங்க முன்னம் ஒரு திட்டம் கட்டாயம் ஆயித்தமாய் கைவசம் வைச்சிருக்க வேணும்"

அனக்குள்ளை சும்மா கொதிச்சுக் குமுறிக் கொண்டிருந்தது. <ஓ! உன்ரை கள்ளத் திட்டம் ஆயித்தமோ?> அனக்கு உவன் ஒரு கள்ளடி யோசினை வைச்சிருக்கிறான் எண்டு விளங்கினது. உவன் சோபியா அக்கையையும், கூபர் ஐயாவையும் அணாப்பிறான். எக்கணம் அவையளை பிடிச்சுக் குடுக்க எல்லோ போறான்? ஆரும் தடை போட முன்னம் அவையளைப் பொறிக்கிடங்கிலை விழுத்தப் போறான். இவன்ரை குள்ளநரித்தனம் வெல்லப் படாது. அதுக்கு ஒரு தடை போட வேணும். அனக்கு விளங்கினது, நான்தான் அதுக்கு ஏதும் செய்ய வேணும். இப்ப உடனடியாய் இறங்க வேணும். எப்பிடி, என்னத்தை, என்ன மாதிரித் துவங்க?

"சோபியா அக்கை! பியாங்காப் புறாவின்ரை பாடு எப்பிடி?" எண்டு கதையைத் துவங்கினன். சோபியா அக்கையின்ரை முகம் வாடிப் போச்சுது. 
"காட்டுறோசாப் பள்ளம் போன பியாங்கா திரும்பி வரவேயில்லை" எண்ட சோபியா அக்கை, 
"அது கிடக்க யோனத்தானைப் பற்றி ஏதும் தெரியுமே?" பியாங்காவைப் பற்றிக் கதைக்கப் புறியம் இல்லாமல் கதையை  மாற்றினா. ஆனால் நான் அறிய நினச்ச புதினம் வெளிப்பட்டிட்டுது. பியாங்கா செத்துப் போட்டுது. ஆனபடியால் தான் நாங்கள் யூச்சியைப் பற்றி எழுதி அனுப்பின சங்கதி எதுகும் தெரியாமல்  அவனோடை கூடிக் கொண்டு வருகினம்.

யூச்சிக்கும் அண்ணரைப் பற்றி அறியிற ஆவல்.
"அவன் ஒருக்காலும் ஆப்பிட மாட்டான் கண்டியளோ!" எண்டான்.
" மெய்தான். அண்ணர் ஒருத்தரின்ரை கையிலயும் ஆப்பிட மாட்டார்."  எண்டு அவன்ரை கண்ணை நேருக்குநேர் பார்த்துச் சொன்னன்.
"இப்ப ஒரு எப்பன் நேரத்துக்கு முன்னாலைதான் கத்துலாக் குகையிலை இருந்த ஒர்வார் நயினாரை மீட்டுக் கொண்டு போறார்" எண்டன். யூச்சியின்ரை செந்தாடி, மீசை,செம்பட்டை தலைமயிர் மண்டின மூஞ்சையைப் பார்க்க வேணும். மூஞ்சை வெளிற, மூச்சுக் காட்டாமல் நிண்டான்.

சோபியா அக்கையும், கூபர் ஐயாவும் கூத்தாடாத குறைதான். சரியான புளுகம் அவையளுக்கு. சோபியா அக்கை என்னை இன்னொருக்கால் கட்டிப் பிடிச்சா. கூபர் ஐயா,
"இனி இல்லையெண்ட ஒரு நல்ல புதினம் சொன்னாய் அப்பன்" எண்டவர். அவையள் ரெண்டு பேருக்கும் மேற்கொண்டு புதினங்கள் அறிய விருப்பம். ஆனால் யூச்சி அவசரப் பட்டவன்.
"அது பற்றி ஆறுதலாய் கேட்டறிவம். இப்ப இருட்ட முன்னம் நாங்கள் சுறுக்குப் பண்ணி உள்ளை பூர வேணும்."
<ஓகோகோ! உம்மடை தெங்கில் நயினாரின்ரை எளிய படை இவையளைப் பிடிக்க ஒளிச்சுக் காத்திருக்காமோ?> எண்டு மனசுக்குள்ளை நினைச்சன்.

"வாரும் கார்ல்!" எண்டு என்னைக் கூப்பிட்டா சோபியா அக்கை. 
"என்ரை குதிரையிலை சேர்ந்து போகலாம்."
"இல்லை" எண்டு கொதிச்சுக் கொட்டினன். 
"இப்பிடி ஒரு துரோகியோடை நீங்கள் எந்த ஒரு இடத்துக்கும் போகக் கூடாது!" நான் யூச்சியைக் கை நீட்டிக் காட்டினன். எக்கணம் அவன் என்னைக் கொலை செய்யப் போறான் எண்டு தான் நம்பினன். ஏனெண்டால் தன்ரை தடிச்ச கையாலை என்ரை கழுத்தை நெரிச்சுப் பிடிச்சான்.
"என்னடா சொன்னநீ? இன்னொரு சொல்லுச் சொல்லுவாய் எண்டால் கழுத்தை முறிச்சுப் போடுவன்" எண்டு சீறினான்.

சோபியா அக்கை வந்து விலக்குப் பிடிச்சவ. அவவுக்கு மூஞ்சை விடியேல்லை. 
"உந்தப் புழுக்கையர் என்னைத் துரோகியாம். தான் சொன்னது என்னெண்டு விளங்கித் தான் சொன்னவராமோ?" எண்டு யூச்சி கத்தினான். கூபர் ஐயா எண்டால் பக்குப்பக்கெண்டு சிரிச்சவர்.
"இதுநாள் வரை நான்தான் ஆக்கும் அந்தத் துரோகி எண்டு நான் நம்பிக் கொண்டிருக்கிறன். எப்பிடி? எப்பிடி? என்ன அந்த விடுகதை?
குதிரைக்காறன் வளவிலை அடுப்படிச் சிவரிலை எழுதி வைச்ச விடுகதை?
பரி வெண்மை நாடும் 
நாடி செம்மை ஆகும் 
பல உண்மை ஆயும் 
பத்திரம் வாயும் நீயும் !

வெள்ளைக்குதிரை, செம்பட்டைக் குறுந்தாடி இருக்கிற நாடி எண்ட விவரணம் எல்லாம் என்னைப் பற்றி எண்டெல்லோ நான் நம்பிக் கொண்டிருக்கிறன்?" எண்டு நொட்டை அடிச்சார்.

"கார்ல்! நீர் இப்பிடிக் கண்டவை நிண்டவையளிலை எல்லாம் சும்மா பழி போடுறது நல்லாயில்லை காணும்!" சோபியா அக்கை என்னிலை எரிச்சல் பட்டா. 
"உந்த வீண் பழி போடுற பழக்கத்தை உடனடியாய் நிற்பாட்டும்"
"என்ரை அவசரப் புத்தியை பொறுத்துக் கொள்ளுங்கோ கூபர் ஐயா!"
எண்டு கெஞ்சுமாப்போலை கேட்டன்.
"அப்ப யூச்சிக்கு ஒரு சொல்லு?, ஒரு வசனம்?" சோபியா அக்கை அதட்டினவ. 
"உண்மையான சதிகாறனிட்டை போய் நான் சொன்னதைப் பொறுத்துப் போகச் சொல்லிக் கேட்க மாட்டன். ஏனெண்டால் துரோகி எண்டவன் துரோகி தான் சதிகாறன் எண்டவன் சதிகாறன் தான்" நான் படபடவெண்டு சொன்னன். நான் சொன்னதை சோபியா அக்கையோ, இல்லைக் கூபர் ஐயாவோ நம்பவேயில்லை. யூச்சியை தாடாத்தி என்னை விட்டு புறிச்சுக் கூட்டிப் போச்சினம். யூச்சி விரிச்ச வலையிலை தானாய்ப் போய் விழப் போனவையள். அவையளைத் திசை திருப்பிறது கயிட்டமான காரியமாய்க் கிடந்தது. 

"எக்கணம் தன்ரை சதிவலையிலை உங்களை விழுத்தப் போறான்" நான் கத்தினன். 
"அனக்குத் தெரியும்! அனக்குத் தெரியும்! ஆரும் காணாமல் மலைக்கு களவாய் வந்து கட்டார், வெட்டார் எண்டு ரெண்டு பேரைச் சந்திக்கிறவனோ இல்லையோ எண்டு ஒருக்கால் கேளுங்கோ! ஒர்வார் நயினாரை காட்டிக் குடுக்கிறதுக்கு என்னென்ன காரியம் எல்லாம் செய்தவன் எண்டு கேளுங்கோ!"  என்னைப் பாய்ஞ்சு கடிச்சுக் குதறத்தான் யூச்சிக்கு  விருப்பம். எண்டாலும் தன்னை ஒரு மாதிரிக் கட்டுப் படுத்தினான்.
"நாங்கள் என்ன வெளிக்கிடுவமோ? இல்லை நிண்டு இவன் பொடியனின்ரை பொய், பிரட்டுக் கதையைக் கேட்பமோ?" என்னை நஞ்சும், பகையும் வழியிற கண்ணாலை பார்த்தான்.
"உன்னை ஒரு நல்லபிள்ளை எண்டு ஒரு நேரம் விரும்பினநான்" எண்டவன். நானும் விடேல்லை.
"நானுந்தான் உன்னை ஒரு நல்ல மனிசன் எண்டு ஒரு நேரம் நம்பினநான்"

அவன்ரை கொதி கோவத்துக்குப் பின்னாலை இருந்த பயம் அனக்குப் பிடிபட்டது. இப்ப அவன் கடும் அவசரத்திலை நிண்டான். உள்ளது எல்லாம் வெளிப்பட்டுத் தன்ரை குள்ளநரித்தனம் தெரிய முன்னம், சோபியா அக்கையையும்,கூபர் ஐயாவையும் தெங்கிலின்ரை எளிய படையிட்டை பிடிச்சுக் குடுக்க வேணுமெல்லோ? இல்லை எண்டு கண்டால் அவன்ரை உசிருக்கு ஆபத்து எல்லோ? 

சோபியா அக்கை உண்மையைக் கேட்க விரும்பாதது யூச்சிக்கு எம்மளவு  ஆறுதலான காரியம். அவ முற்றுமுழுதாய் அவனை நம்பினா. எப்பவுமே அவனிலை அவவுக்கு நல்ல நம்பிக்கை. இப்பிடி நிலைமை இருக்க நானொருத்தன் வந்து எழுவான் பக்கத்தைப், படுவான் பக்கம் எண்டும், படுவான் பக்கத்தை எழுவான் பக்கம் எண்டும் வளம் மாற்றிச் சொன்ன கணக்கிலை சொல்லிக் கொண்டு நிற்கிறன். என்னை என்னெண்டு சோபியா அக்கை நம்பிறது?
" கார்ல்! இப்ப ஒண்டுமே பறையாமல் வாரும். பேந்து ஆறுதலாய் கதைப்பம்" எண்டு திரும்ப சோபியா அக்கை கூப்பிட்டா. 
"உவனோடை போனால் உப்பிடியே போக வேண்டியதுதான். இனிமேல் ஒரு பேந்தும் பிறகும், ஆறுதலாய்க் கதைக்கிறதும் வராது" அனக்கு அப்ப அழுகைதான் வந்தது. சோபியா அக்கையைப் பறி குடுத்திட்டு என்னெண்டு நஞ்சியாலா இருக்கப் போகுது? எல்லாக் களவும்,சதியும் தெரிஞ்ச என்னாலை அவவைக் காப்பாற்ற ஏலாமல் கிடக்கே! அவ தன்னைக் காப்பாற்ற விடுகிறா இல்லையே!

"கார்ல்! இப்ப நீர் எங்களோடை வாறீர்!" திரும்பவும் ஆனால் ஒரு கட்டளை போலச் சொன்னவ. அப்ப அனக்கு ஒண்டு ஞாவகத்துக்கு வந்தது.
"யூச்சி! உன்ரை சட்டையைக் கழட்டு! நெஞ்சைக் காட்டு!" எண்டு அதிகாரமாய்ச் சொன்னன். அவனுக்கு மூஞ்சை முகமெல்லாம் செத்த சவம் போலை வெளிறிப் போச்சுது. அவன்ரை முகத்திலை வந்த மாற்றத்தை மற்றவையள் ரெண்டு பேரும் கவனிச்சினம். தன்பாட்டிலை அவன்ரை ஒருகை நெஞ்சைப் பொத்தினது, என்னத்தையோ பாதுகாக்கிற மாதிரி. 

சடாரெண்டு ஒரு அமைதி! கூபர் ஐயா அதட்டின குரலிலை 
"யூச்சி! பெடி சொன்னதைச் செய்!" எண்டார். சோபியா அக்கை ஒண்டும் பறையாமல் யூச்சியையே பார்த்துக் கொண்டு கொஞ்ச நேரம் நிண்டவ. யூச்சி எண்டால் குதிரையைத் திருப்பினான்.
"நிண்டு மினைக்கெட நேரமில்லை" எண்டான். சோபியா அக்கையின்ரை கண்ணிலை சினம் தெரிஞ்சது.
"அப்பிடி ஒண்டும் பெரிய அவசரமில்லை யூச்சி! இண்டைக்கு இல்லை எண்டால் நாளைக்குப் போகலாம்" எண்டு கடுமையாய் சொன்னா.
"நாச்சியார்  நான் சொல்லிறன், உன்ரை நெஞ்சைக் காட்டு!"

யூச்சியின்ரை மூஞ்சையை பார்க்கேலாமல் இருந்தது. முகம் செர்ரிப் பழம் போலை இருண்ட சிவப்பானது. மூசி மூசி  மூச்சுப் பறிஞ்சது. பயத்திலை விறைச்சுப் போய்  நிண்டான். அவனுக்கு நிற்கிறதோ இல்லை தப்பி ஓடிறதோ எண்டு தெரியேல்லை. சோபியா அக்கை அவனுக்குக் கிட்டை போனா. அவன் தன்ரை முழங்கையாலை அவவைத் தள்ளி விட்டான். சோபியா அக்கையும் விடேல்லை. அவன்ரை சட்டையை எட்டிப் பிடிச்சுக் கிழிச்சா. அந்தா! அந்தக் கத்துலாக் குறி! ஒரு பறவை வேதாளத்தின்ரை தலை! அரத்தம் போலை சிவந்து இருந்தது, சூட்டுக் காயம் சரிவர ஆறாமல். இப்ப சோபியா அக்கையின்ரை முகத்தை எல்லோ பார்க்க வேணும்! யூச்சியின்ரை முகத்தை விட மோசமாய் வெளிறிப் போனது.
"துரோகி! சதிகாறா!" சோபியா அக்கை திட்டினா.
"உனக்கு வெள்ளிடி விழ! நீ நஞ்சியாலாவுக்குச் செய்த பாவத்தை என்னத்தைக் கொண்டு கழுவிறது?" 

இப்பத்தான் யூச்சிக்கும் மூச்சுப் பேச்சு வந்தது. அவனும் வசை பாடின படி தன்ரை குதிரையிலை திரும்ப ஏறப் போனான். கூபர் ஐயா குறுக்கை நிண்டார். தப்பியோட ஒரு வழி தேடினான். கீழை ஆற்றோரம் ஒதுங்கி இருந்த படகு அவன்ரை கண்ணிலை பட்டது. மற்றவை ரெண்டு பேரும் எட்டிப்பிடிக்க முன்னம் பாய்ஞ்சு, குதிச்சுப் படகிலை ஏறினான். படகை ஆற்று வெள்ளத்திலை தள்ளி விட்டான். பயங்கரமாய் ஒரு சிரிப்புச் சிரிச்சான்.

"உனக்கு உரிய தண்டனை இருக்கு சோபியா!" ஆற்றின்ரை இரைச்சலை மீறிக் கத்தினான். 
" நான் திரும்ப வருவன்! செர்ரிப்பள்ளத்தின்ரை நயினாராய் நான் வலு கெதியிலை வருவன். அண்டைக்கு இருக்கு உனக்குச் சாப்பாடு!" <உந்த படு மொக்கன்! நினைக்கப் பாவமாயும் கிடக்கு. உவனாவது இனிமேல் செர்ரிப்பள்ளம் வாறதாவது!  பாவி! பாவி! கறுமா அருவிக்கெல்லோ நீ இப்ப பெலி! > எண்டு நினைச்சன்.
யூச்சி துடுப்பாலை படகை தன்ரை கட்டுப்பாட்டுக்குள்ளை கொண்டுவர பெரிய பாடு பட்டான். ஆனால் ஆற்றுத்தண்ணி பேயோட்டம் ஓடினது. நீரோட்டம் துடுப்பு ரெண்டையும் கையிலை இருந்து பிடுங்கினது. படகைச் சும்மா ஒரு பந்து போலை தூக்கி எறிஞ்சது. ஒரு பெரிய அலை வந்து படகை கவிழ்த்துப் போட்டது. யூச்சியைத் தூக்கி எறிஞ்சது. 

என்னதான் துரோகி, சதிகாறன் எண்டாலும், பதைபதைச்சு அவன் தண்ணியிலை தாழுறதைப் பார்க்க கொடுவினையாய் இருந்தது. நான் குரையைவைச்சு  அழுதன். அவனைக் காப்பாற்றத் துடிச்சன். ஆனால் அது மனிசரை மிஞ்சின ஒரு காரியம் எண்டது அனக்கு விளங்கினது. அந்த மைம்மல் பொழுதிலை,  யூச்சிக்கு நேர்ந்த கதி கண்டும் ஒரு உதவியும் செய்ய ஏலாமல் கையொடிஞ்ச மாதிரி நிண்டது, ஒரு பெரிய கொடுவினை! வெள்ளத்திலை ஒரு உதவியும் இல்லாமல் அள்ளுப்பட்டுப் போறானே எண்ட நினைப்பும் ஒரு பெரிய கொடுவினை!  ஒருதரம் தெரிஞ்ச யூச்சியின்ரை தலையை அலை ஒண்டு வந்து மூடினது. மேற்கொண்டு அவன் என்ரை கண்ணிலை படவேயில்லை.

இப்ப நல்ல கும்மிருட்டாய்ப் போச்சுது. பறணைப் பழங்காலத்து ஆதி நதி யூச்சியை பிடுங்கி கறுமா அருவிக்குக் கொண்டு போனது.
                                  
                                            (மனசு கனமாய்க் கிடக்குது)


சொல்விளக்கம்:
கயிட்டம் - கஷ்டம்,சிரமம்,சரவல் 
ஓர்மம் - மனவுறுதி 
எக்கணம் - எக்கணமும் 
எடுபட்ட பேயன் - இன்னொருவன் கருத்தை ஆராயாமல் பின்பற்றுபவன் ; மொக்கன் - மூடன்
அப்பிராணி - அப்பாவி 
திவ்வியம் - சிறந்தது 
அரத்தம் - குருதி
விட்டாத்தி <விட்டாற்றி - இளைப்பாறுகின்ற, விரிந்த 
ஏலேல்லை= ஏல+ இல்லை < இயலவில்லை 
தவண்டவர் < தவழ்ந்தவர்= தவழ்ந்த + அவர் - தவழ்ந்தார் 
விளப்பம் - விளக்கம் 
சதிரம் - சரீரம், உடல் 
நராங்கி< நரங்கி - மெலிந்து        வயக்கெட்டு = வயம்+கெட்டு - வலிமை கெட்டு 
பதகளிப்பு - பதற்றம் 
அக்களிப்பு - மனமகிழ்ச்சி , புளுகம்< புளகம் - மகிழ்ச்சி 
அயண்டகேடு <அயர்ந்தகேடு , அசந்தகேடு - அசட்டை
இயமானன் - எசமான் (வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா!- சிவபுராணம்)
எளிய < இழிய- கேடுகெட்ட
பின்னேரப்பாடு - மாலைநேரம் ; மைம்மல்< மம்மல் - ஒளி மங்கும் நேரம் ; செக்கல்- அந்திப்பொழுது
பொழுதற= பொழுது+அற - பொழுதுபட- பகல் முடிந்து இரவாக
சன்னாசியாருக்கு சடம்பகம் பெருத்த மாதிரி - துறவிக்குப் பயண மூட்டை பெரிதானது மாதிரி
( இறைவனின் நினைப்பை விட, பெருத்துப் போன சடம்பகத்தைப் பற்றியே அதிக நேரம் நினைப்பு)
பெலி < பலி
கரவு - களவு, ஐமிச்சம்
அவையள் < அவர்கள்    மற்றவையள்<மற்றவர்கள்
நாசமறுக்க = நாசம்+ அறுக்க - கெடுதல் அகல
முண்டிவிழுங்க - பல்லால் அரைக்காமல் உணவை விழுங்க
   < வேறு வழியின்றி ஏற்றுக் கொள்ளுதல் என்ற பொருளில் அமைகிறது.
வதில் இறுக்குதல் - பதில் கூறுதல்
தெண்டிச்சார்< தெண்டித்தார் -முயற்சித்தார்
தெண்டுதல் - கிளப்புதல், மிண்டுதல் - நெம்புதல் - மேல் எழுப்புதல்
கால்பாவி நிற்றல் - காலூன்றி நிற்றல்
பற்றை - புதர்,  பறுகு - சிறுபுதர்
கணக்கிலை <கணக்கிலே - கணக்காக, மாதிரியாக
புறியம்< பிரியம், விருப்பம்
புறித்தல்< பிரித்தல்
கொடுவினை - கொடியவினை, கொடும்பாவம்
தெந்தட்டுப் பொறி - தொட்டால் சமநிலை தடுமாறி விழுத்தும் பொறி
தாட்டபடி < தாழ்த்தினபடி - அமிழ்த்தினபடி
நாரி - இடுப்பு , நாடி - கீழ்த்தாடை
கோதாரி- epidemic
கலம்பகம் -கலவரம்
எழுவான் பக்கம் - கிழக்கு, படுவான் பக்கம்- மேற்கு ; வளம் - பக்கம்
அனக்கு< எனக்கு
கந்தறுவார்= கந்து+ அறுவார் - வாழ்வின் பற்றுக்கோடு அற்றுப்போவார்.
சடுதிமுட்டு - திடீர்
பார் - பாறை ;  பிட்டி - மேடு
நெற்றிமுட்டு - நெற்றிக்குநேர்
கூதல் - குளிர்
ஆப்பிட்டு<அகப்பட்டு
பயளை, பசளை - உரம்
சாதுவாய், சாதுவாக, மெள்ள  - மெல்ல
ஐமிச்சம் . சந்தேகம்
சக்கட்டை - திறமை அற்றது
இடைசுகம் - இடைக்கிடை
இஞ்சை <இங்கே,  இஞ்சாலை <இங்காலே , இஞ்சாலுப் பக்கம் - இந்தப் பக்கம்
முறுகம் < மிருகம்
ஓடி வெளிச்சது< ஓடி வெளித்தது - விளங்கியது, புரிந்தது
பிடி பட்டது - விளங்கியது, புரிந்தது
பிடிபாடு - அடிபிடி
கால்(கோள் ) - அடிப்படை, காரணம்.  நான்தான் கால் - நான்தான் அடிப்படை, நான்தான் காரணம்
பேந்து < பெயர்ந்து , பின்பு
உண்ணாணை < உன்னாணை= உன்+ ஆணை- உன் மீது சத்தியமாக
நினைச்சநீ < நினைத்தாய் நீ ; வந்தநான் < வந்தேன் நான்;
     சொன்னவ/ சொன்னார் < சொன்னா அவ/ சொன்னார் அவர்;  ஓடினவன்<ஓடினான் அவன்;
     வந்திச்சினம் - வந்தார்கள்; சிரிச்சவையள் < சிரித்தார்கள் அவர்கள்;
     கத்தினவங்கள்< கத்தின அவன்கள் < கத்தினார்கள் அவர்கள்
உசக்க - உயரத்திலே
தம்பிட்டு - அசைய முடியாமல்
கலைவு காட்டுதல் - கலைத்தல், துரத்துதல்
தீண்டி < தூண்டி
சாங்கம் - சாடை
மட்டுக்கட்டுதல் - அடையாளம் கண்டு கொள்ளல்
கொண்ணர் < உங்கண்ணர் < உங்கள் அண்ணர்
வெளிக்கிடுதல் - புறப்படுதல்
துலைக்கே? < தொலை தூரத்துக்கே?
(எங்கே போகின்றாய் என்று நேரடியாகக் கேட்டால் போகின்ற காரியம் நிறைவேறாது என்று ஒரு நம்பிக்கை. அதனால் துலைக்கே என்று கேட்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட வழக்கம்)
கள்ளடி யோசினை < கள்ள அடி யோசனை, ஏமாற்றுத்திட்டம்  ; அணாப்புதல் - ஏமாற்றுதல்
கண்டியளோ? < கண்டீர்களோ? , அறிவீர்களோ?
விலக்குப்பிடித்தல் - விலக்கி வைத்தல்
தாடாத்தி< தாடாற்றி- தாடு ஆற்றி - தாடையைத் தடவி - ஆறுதற்படுத்தி
பெடி - பையன், பிள்ளை
வெள்ளிடி - இடி போலும் துன்பம்
இருக்கு உனக்குச் சாப்பாடு - இருக்கிறது உனக்குத் தண்டனை
கொடுவினை - கொடுமை
குரையை வைச்சன் < குரையை வைத்தேன்- குழறி அழுதேன்

Author: ந.குணபாலன்
•2:43 AM

"நாளை ஒரு பொழுது புது விடியலை நாடும்"


மூலம் : நொர்ஷ்க்(Du ska få en dag i mårå)
இயற்றியவர் : அல்வ் புறொய்சன் ( Alf Prøysen, 1914 - 1970)
மொழிமாற்றம் : ந. குணபாலன்


மாணவப் பருவமதில் ஒரு பொழுது!
மனங் கசந்தான் இவன் அழுது.
மனம் வைத்து வரைந்த பாபிலோன் சித்திரம்!
ஆணவமிகு ஆசானும் ஏதோ அவசர ஆத்திரம்,
வனப்பில்லை, வண்ணமில்லை என்ற மாத்திரம் .
மனக்குறை மிகைப்பட கெட்டது பத்திரம்!
வரைபடம் சிதைபடும் அந்நேரம்,
கானகத்து மரங்களின் தலைதடவித் தந்து
காதில் பட்டது காற்றின் வழி ஒரு  சிந்து!

"நாளை ஒரு பொழுது புது விடியலை நாடும்!
வேளை வாராத, வேறாரும் தொடாத ஏடும், 
வண்ணக் கலவைகளும் உனைத் தேடும்!
நேற்றைய பொழுதின் பிழைகளை திருத்து!
நேர்வரும் மாலைப்பொழுதினை நிறைவாய் இருத்து!
நற்பலன் இன்றி நாளையப் பொழுதே,
நடந்து முடிந்தால், நொடியாதே அழுதே!
காற்று நான் காவிவரும் கீதமது உனைத் தேடி வரும்!
கானகத்து மரங்களின் தலைதடவித் தரும்!
ஊற்றென வரும் கீதமதை செவி மடுப்பாய்!
நாளை ஒரு பொழுது புது விடியலை நாடும்.
வேளை வாராத, வேறாரும் தொடாத ஏடும்,  
வண்ணக் கலவைகளும் உனைத் தேடும்!"


பதின்மப் பருவமதில் ஒரு பொழுது!
மனம் நொந்தான் இவன் அழுது.
மதி மயக்கிய காதல் மடந்தை,
மறுதலித்த மறுமொழியோ வதைக்கும் வடந்தை!
விதி நொந்தான், "வானகமே இனி என் உடந்தை"!.
விரைந்தே காடான காட்டு வழியேகும் அவ்வேளை,
கானகத்து மரங்களின் தலைதடவித் தந்து
காதில் பட்டது காற்றின் வழி திரும்பவும் அதே சிந்து!

"நாளை ஒரு பொழுது புது விடியலை நாடும்!
வேளை வாராத, வேறாரும் தொடாத ஏடும், 
வண்ணக் கலவைகளும் உனைத் தேடும்!
நேற்றைய பொழுதின் பிழைகளை திருத்து!
நேர்வரும் மாலைப்பொழுதினை நிறைவாய் இருத்து!
நற்பலன் இன்றி நாளையப் பொழுதே,
நடந்து முடிந்தால், நொடியாதே அழுதே!
காற்று நான் காவிவரும் கீதமது உனைத் தேடி வரும்!
கானகத்து மரங்களின் தலைதடவித் தரும்!
ஊற்றென வரும் கீதமதை செவி மடுப்பாய்!
நாளை ஒரு பொழுது புது விடியலை நாடும்.
வேளை வாராத, வேறாரும் தொடாத ஏடும்,  
வண்ணக் கலவைகளும் உனைத் தேடும்!"

கணவனாய்த், தந்தையாய் ஆன பருவமதில் ஒரு பொழுது!
மனம் முடங்கினன்,  இவன் மறை இறை தொழுது.
சுணங்காத சந்ததிப் பேர் சுமக்கும் கமம் புலம்,
சரவல் கடுவலாய் ஆண்டு சில தந்ததோ இலம் உலம்.
குணவதியாளும் கொழுமுனை, பாரம்  இழுக்கும்
குதிரையென, கொழுநனுடன் நேரம் முழுக்கும்.
"பணம் இல்லை, என் பக்கம் இல்லை.என்னதான்
பாடுபட்டும் ஆனவாகில் பலன் இல்லை" என்றுதான்,
சாணகம் சறுக்கிட சள்ளையில் அடிபட  கண் பொன்றித்தான்,
சலித்தே மனம் உழன்ற அக்கணம்
கானகத்து மரங்களின் தலைதடவித் தந்து
காதில் பட்டது காற்றின் வழி இப்போதும் அதே சிந்து!

"நாளை ஒரு பொழுது புது விடியலை நாடும்!
வேளை வாராத, வேறாரும் தொடாத ஏடும், 
வண்ணக் கலவைகளும் உனைத் தேடும்!
நேற்றைய பொழுதின் பிழைகளை திருத்து!
நேர்வரும் மாலைப்பொழுதினை நிறைவாய் இருத்து!
நற்பலன் இன்றி நாளையப் பொழுதே,
நடந்து முடிந்தால், நொடியாதே அழுதே!
காற்று நான் காவிவரும் கீதமது உனைத் தேடி வரும்!
கானகத்து மரங்களின் தலைதடவித் தரும்!
ஊற்றென வரும் கீதமதை செவி மடுப்பாய்!
நாளை ஒரு பொழுது புது விடியலை நாடும்.
வேளை வாராத, வேறாரும் தொடாத ஏடும்,  
வண்ணக் கலவைகளும் உனைத் தேடும்!"


விளப்பம்:
பத்திரம் - பாதுகாப்பு 
வடந்தை - winter
மனம் நொடியாதே - மனம் ஒடியாதே
முடங்கினன் - சுருங்கினன்
மறை இறை - நூல் போற்றும் இறைவன், மறைந்திருக்கும் இறைவன்
கமம் புலம் - வயல் தோட்டம்
இலம் உலம் -  வறுமை துன்பம்
சரவல் - சிரமம்
அகரமுதலியில் : கடுவல் - வன்னிலம்(கல்லுத்தறை), கடுங்காற்று
பேச்சுவழக்கில்: கடுவல் - கடுமை
கொழுமுனை - ஏர்முனை
கொழுநன் - கணவன்
முழுக்கும் - முழுவதும்
சாணகம் - சாணி
சள்ளை - இடுப்பு
கண் பொன்றுதல் - கண் மங்குதல் 
Author: ந.குணபாலன்
•7:43 AM

                                                                             மூலக்கதை
 : Bröderna Lejonhjärta


                                                       

                                                                         எழுத்தாளர் : அஸ்த்ரி   லிண்ட்கிறேன் , சுவீடன்  
                                                                              (ASTRID   LINDGREN ,     SWEEDEN)
                                                                  (14/11-1907 --- 22/01-2002)
                                                                    ஓவியர்:இலூன் வீக்கெலான்ட்
                                                                                             ( Ilon Wikeland)


                                                                      தமிழாக்கம் :  ந. குணபாலன்
துடிப்பு பதின்மூன்று : ஒர்வார் நயினார்!


கத்துலா எண்ட பயங்கரத்தை என்ரை ரெண்டு கண் கொண்டும் கண்டிட்டன். அனக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போச்சு. நிலத்திலை  காலிரெண்டும் பாவிநிற்க மாட்டன் எண்டிட்டுது. "பொதுக்" கெண்டு நிண்ட இடத்திலையே பழந்துணி கணக்கிலை சரிஞ்சு விழுந்து அறிவுகெட்டுப் போனன். அது தருணம் மேற்கொண்டு என்னைச் சுற்றி என்ன நடந்தது எண்டு ஒண்டுமே அனக்குத் தெரியாது. உந்த மின்னல், முழக்கம் எல்லாம் முடியும் மட்டுக்கும் அனக்கு அறிவு தெளியேல்லை. விடிய வெள்ளாப்போடை முகட்டு   மலையளிலை சூரிய வெளிச்சம் மினுங்கத் தான் அனக்கு அறிவு வந்தது. செட்டையுக்குள்ளை பாதுகாப்பாய் தன்ரை குஞ்சை வைச்சிருந்த தாய்க்கோழி கணக்கிலை தன்ரை மடியிலை அண்ணர் என்னைப் பக்குவமாய் அணைச்சபடி வைச்சிருந்தவர்.

கண்முழிச்ச கையோடை கண்ட பயங்கரந்தான் முதலிலை ஞாவகம் வந்தது. இராத்திரி கண்டதும் கேட்டதும் எல்லாம் ஒண்டும் மின்னலும் இல்லை, இடிமுழக்கமும் இல்லை. அதெல்லாம் கத்துலாவின்ரை அனல் பறக்கிற மூச்சும், அலறலும் தான். ஆத்தின்ரை மறு பக்கம் நல்ல உசரத்திலை, கறுமா அருவிக்கு நேரை மேலை ஒரு மலைப்பாறை  விளிம்பிலை தான் கத்துலா நிண்டது. அந்த நினைப்பிலை நான் பயந்து அனுங்கினன். அண்ணர் என்னை கன்னத்தைத் தடவி தாடாத்தினவர்.
" அது இப்ப அங்கை இல்லை அப்பன்! இப்ப போட்டுது" எண்டார். நான் அழுதபடி கேட்டன்,
"இப்பிடியும் ஒண்டு இந்தக் கத்துலாவைப் போலை மெய் மெய்யாய் இருக்கோ? அது என்ன வகையான முறுகம்? கட்டுக்கதையளிலை வாற மாதிரியான முறுகமோ?"
" ம்...ம்.. அதொரு ஆதிப் பறணைப் பழங்காலத்திலை உருவான பறவைவேதாளம் ஒண்டு! தெங்கில் மாதிரி கொடுவினை செய்யவெண்டு பிறந்த சென்மம். "

"எங்கினை போய் தெங்கில் உதைப் பிடிச்சவனாம்?"
"அது ஆதி நெடுங்காலமாய்த் தான் சீவிச்ச கத்துலாக் குகைக்குள்ளாலை இருந்து தான் வந்ததாம் எண்டு சனம் கதைக்குது. அதுக்குள்ளை ஆதிப் பறணைப் பழங்காலத்து  இராப் பொழுது தொட்டு  நித்திரையாய் இருந்திச்சாம். அப்பிடி ஒண்டு இருக்கெண்டு சனத்துக்குத் தெரியாத அளவுக்கு அது, ஆயிரமாயிரம் வரிய காலமாய் ஒரே நித்திரையாம். ஆனால்  ஏதோ கெட்ட காலத்துக்கு ஒருநாள் காலைமை  நேரம் கண் முழிச்சதாம். அப்பிடியே ஊர்ந்து கொண்டு வெளியாலை வந்திச்சாம். தெங்கிலின்ரை அரமனைக்கு உள்ளை பூந்து கண்ட நிண்ட ஆக்களை எல்லாம் தன்ரை அனல் மூச்சைச் சீறிச்சீறி  எரிச்சுக் பொசுக்கிப் போட்டுதாம். "

"ஏன் அது தெங்கிலை மட்டும் விட்டு வைச்சதாம்?"
" இல்லை. தெங்கிலும் உசிருக்குப் பயந்து அரமனைக்குள்ளை உள்ள மண்டபம் எல்லாம் மாறிமாறி ஓடி ஒளிச்சவனாம். கடைசியிலை ஒண்டுக்கும் ஏலாமல் உதவிக்கு அரணக்காறங்களை கூப்பிடிறதுக்கு போர்க்கொம்பை ஊத எடுத்தவனாம். அவன் போர்க்கொம்பை ஊத.."
"ஆ... ஊத? என்ன நடந்திச்சாம்?"
" வளர்த்த நாய் வாலாட்டி வந்த மாதிரி, கத்துலா தெங்கிலுக்கு மட்டும் அடங்கிப் பணிஞ்சு போச்சாம். போர்க்கொம்பு சத்தம் எண்டால்  அதுக்குப் பயமாம். போர்க்கொம்பை எடுத்து ஊதினபடி   தெங்கில் கைகாட்டினால் காணுமாம்,  நில் எண்ட இடத்திலை நிற்குமாம்."

பொழுது ஏற ஏற வெளிச்சம் கூடிக் கொண்டு வந்தது. கறுமண்யாக்கா மலை முகடெல்லாம் கத்துலாவின்ரை மூக்காலை கிளம்பின அனலைப் போலை சொலிச்சது. கறுமண்யாக்காவுக்கு நாங்கள் போகத்தான் வேணும் எண்டதை நினைக்கவே வயித்தைக் கலக்கிச்சுது. அனக்கு ஒரே பயமாய் இருந்திச்சுது. ஆர் கண்டது?, கத்துலா எங்கினை பதுங்கி இருக்கெண்டு. எங்கினை எங்கினை எல்லாம் அது வழக்கத்திலை இருக்கிறது? எங்கினை எல்லாம் நடமாடிறது? கத்துலாக்குகையிலை தான் அது இப்பவும் இருக்கிறதாமே? அங்கை தான் ஒர்வாரையும் மறியல் வைச்சிருக்கோ? கறுமப் பட்ட மனிசன் பாவம் என்ன கோலத்திலை இருக்கோ? உதைப் பற்றி எல்லாம் அண்ணரைப் பிடிச்சுக் கேட்டன். என்ன மாதிரி எல்லாம் இருக்கக் கூடுமெண்டு எண்டு தான் அறிஞ்சதை சொன்னவர். 

கத்துலாக்குகையிலை கத்துலா இப்ப இருக்கிறதில்லையாமாம். அந்த ஆதிப் பறணைப் பழங்காலத்திலை தொட்ட நித்திரை கெட்டு அது கண்முழிச்ச பின்னாலை அந்தப் பக்கம் திரும்பி ஒருக்காலும் பார்க்கேல்லையாமாம். கறுமா அருவிக்கு கிட்டடியாய் இருக்கிற ஒரு குகையிலை துலங்கிலை போட்டு கட்டி வைச்சு இருக்கிறானாமாம், தெங்கில்.  கட்டிப்போட்டு இருக்கிறதெண்டால் பொன்னாலை செய்த சங்கிலியாமாம். ஆரையும் வதைக்கிறதுக்கு எண்டு தெங்கில் நினைக்கிற நேரம் மட்டும் அதை தெங்கில் வெளியாலை கூட்டி வருவானாமாம்.

"காட்டுறோசாப் பள்ளத்திலை ஒருக்கால் நான் அதைக் கண்டநான் எல்லோ!" எண்டார் அண்ணர்.
"ஓ ஒ! அப்ப நீர் பயந்து கத்தினநீர். அனக்கு அது கனாவிலை  தெரிஞ்சது." எண்டன் நான்.
"ஓ கத்தினநான் தான்." எண்டு அண்ணர் தலையாட்டினவர். அனக்குள்ளை பயம் பாம்பு போலை ஊர வெளிக்கிட்டுது.
"அனக்கு பயமாய்க் கிடக்கு அண்ணர்! எக்கணம் கத்துலா எங்களைக் கொல்லத்தான் போகுது." அண்ணர் திரும்ப என்னை தாடாத்தி செய்ய வேண்டியதாய்ப் போச்சுது.

" அதெண்டால் துலங்கிலை போட்டுக்கட்டி எல்லோ நிற்குது? சங்கிலி விட்டுக் குடுக்கிற தூரம் மட்டும் தான் அதின்ரை நடமாட்டம். நீ கண்டநீ தானே? அதொரு பாறை விளிம்பிலை நிண்டதெல்லோ? அதிலை நிண்டபடி கீழை பணிய இருண்ட பாதாளத்திலை பாயிற கறுமா அருவியைக் கண்ணொட்டாமல் பார்க்கிற ஒரு பழக்கம் அதுக்கு." 
"ஏன் அப்பிடிச் செய்யிறதாம்?"
"எனக்குத் தெரியாது. சிலநேரம் கறுமாவைத் தேடி பார்க்குதாக்கும்."
"அதென்ன கறுமா?"
" அது சும்மா எல்பிரீடா ஆச்சி அவிழ்த்து விடிற மாய்மாலக்  கதையொண்டு. ஒரு மனிசர் இதுநாள் வரை கறுமாவைக் கண்கொண்டு கண்டதாய் தெரியேல்லை. அப்பிடி ஒண்டு இருக்கு எண்டு நான் நம்பவும் இல்லை. ஆனால் எல்பிரீடா ஆச்சி சொல்லிறவ, கறுமா அருவியிலை ஒருநேரம் ஆதிப் பறணைப் பழங்காலத்திலை கறுமா சீவிச்சதாமாம். கத்துலாவுக்கும்  அதுக்கும்  ஏழேழு சென்மத்துக்கும்  பகையாம். அதை மறக்கேலாமல் தானாம் கத்துலா இப்பிடி இருண்ட பாதாளத்தை முழிசி முழிசிப் பார்க்கிறதாமாம்." 

"அதென்ன மாதிரியான பிறப்பு? உப்பிடி ஒரு நரகத்து பாதாளத்திலை தாழ்ப்பத்திலை தண்ணிக்குள்ளை தாண்டு போய்ச் சீவிக்குது?"
"ஆ  உதெல்லாம் சும்மா ஒரு மாய்மாலக் கதை. கறுமா எண்டதொரு பெரீய ஆனைகொண்டான் மலைப்பாம்பாம். இந்த ஆத்தின்ரை அகலம் அளவுக்கு ஒரு நுப்பது, நுப்பத்தைஞ்சு முழம் நீளமாம், ஒரு அஞ்சாறு முழத்துக்கு அகலமிருக்குமாம். உதெல்லாம் எல்பிரீடா ஆச்சி சொன்னவ. ஆனால் உதெல்லாம் பழங்காலத்துப் புழுகுக்கதை கண்டியோ? சும்மா பயப்பிடாதை!"

" கத்துலாவை மாதிரி அதுகும் சிலநேரம் மெய்மெய்யாய் இருக்கலாந்தானே?" எண்டு நான் சொன்னநான். அதுக்கு அண்ணர் என்னைச் சமாதானப் படுத்திறதுக்காண்டி,
"நீ யூர்குப்பார் பழம் ஆய்ஞ்சு வரவெண்டு போன நேரத்திலை எல்பிரீடா ஆச்சி இன்னும் என்ன சொன்னவ எண்டு கேளன்!, 
தான் சின்னப்பிள்ளையாய் இருந்த காலத்திலை பிள்ளையளைப் பயப்பிடுத்திறதுக்கு பெரியாக்கள் கறுமாவையும், கத்துலாவையும் பற்றிக் கதை கதையாய்ச் சொல்லுவினமாம். கத்துலாக் குகையிலை இருந்த அனல்கக்கிற பறவைவேதாளத்தையும், பாதாளத்திலை பாயிற கறுமாஅருவியிலை தாழ்ப்பத்திலை இருக்கிற ஆனைகொண்டான் மலைப்பாம்பையும் பற்றின அந்தக் கதையைக் கேட்கக் கேட்கப் பயமாய் இருக்கும் தானாம். எண்டாலும் கேட்க விருப்பமாயும் கிடக்குமாம். உப்பிடி ஒரு பழங்கதையை சனங்கள் காலங்காலமாய்ப் பிள்ளையளுக்குச் சொல்லிச்சொல்லி பயமுறுத்தி வந்திருக்குதுகள்." 

"உந்த சனியன் பிடிச்ச கத்துலாவும் நித்திரை குழம்பாமல் தன்ரை பாட்டிலை குகைக்குள்ளையே கிடந்திருக்கலாமே! அப்பிடி இருந்திருந்தால்  கத்துலாவும் ஒரு மாய்மாலக் கதையாயே இப்பவும் இருந்திருக்குமே!" நான் பெருமூச்சு விட்டன். பயங்கரக் கதையள் எல்லாம் நடக்கிற கறுமண்யாக்கா தேசத்தைப் பற்றி நினைச்சன். அனக்கு பயத்திலை கால் மேல் கை தலையெல்லாம் விறைக்குமாய்ப் போலை வந்திச்சுது. அனக்கு அங்கினை போக எள்ளளவு   புறியமுமில்லை. என்ன செய்யிறது?ஆய்க்கினை விழ! போகத்தான் வேண்டிக் கிடக்கே! 

சாப்பாட்டு மூட்டையை அவிட்டம்.  கொஞ்சம் ஒர்வாருக்கும் வேணும் எண்டு எடுத்து வைச்சிட்டு, கொஞ்சமாய் நாங்களும் திண்டம். 
"பாவம் அந்த மனிசன் ஒர்வார். எத்தினை நாளைக்கு முன்னாலை ஆனவாகிலை ஒருவாய் தீன் திண்டிச்சுதோ?" எண்டு அண்ணர் இரக்கப் பட்டவர். வியாழரும்,வெள்ளியாரும் பாறைக் குண்டு ஒண்டிலை நிறம்பி நிண்ட மழைத் தண்ணியைக் குடிச்சதுகள். இங்கினை மலைப் பக்கமாய் மேய்ச்சலுக்கு ஏத்த மாதிரி புல்பூண்டு அருந்தலாய்க் கிடந்திச்சுது. பாலம் துடங்கிற இடத்திலை நல்ல புல்லு முளைச்சிருந்தது. நாங்கள் பாலத்திலை ஏற முன்னம், அந்தப் புல்லை ரெண்டும் ஒரு பிடி பிச்சதுகள். பாவங்கள், எங்களோடை இழுபடுதுகள்! 

பாலத்தாலை ஏறிப் போனம், கறுமண்யாக்காப் பக்கம். தெங்கில் எண்ட விழுவானின்ரை தேசம். கொடுமையும், பயங்கரப் பாதகமும்  பிறத்திச் சனத்துக்கு செய்யிற கூட்டம் இருக்கிற தேசம்! பயத்திலை அனக்கு குலைப்பன் காய்ச்சல் வந்தது போலை நடுங்கினது. பாலத்தாலை நாங்கள் போய்க் கொண்டிருக்கிறம் இப்ப..... எக்கணம் பாதாளத்திலை தாழ்ப்பத்திலை இருக்கிற அந்த கறுமா எண்ட ஆனைகொண்டான் பாம்பு ஒழும்பி எங்களை விழுங்க வந்திச்சுது எண்டால்....? ஐயோ! கீழை எண்டால் கறுமா!....., அங்காலை போனால் அந்தப் பறவைவேதாளம் கத்துலா!...... நாங்கள் வந்தவுடனை தன்ரை வேட்டைப் பல்லாலை கொத்திறதுக்கும், அனல் மூச்சாலை பொசுக்கிறதுக்கும்  எண்டு எக்கணம் கணக்காய் காத்திருக்குமோ?...... 

நாங்கள் பாலத்தைக் கடந்து வந்திட்டம். பாதாள விளிம்புப் பக்கம் கத்துலாவின்ரை  சிலமனைக் காணேல்லை. 
" கத்துலாவைக் கிட்டக்கிழலைக்கும்  காணேல்லை, அண்ணர். "
சொல்லி நான் முடிக்கேல்லை. ஐயோ கறுமகாண்டம்! அந்தா பங்கை பாரன்! தெங்கிலின்ரை அரமனைப் பக்கம்....ஒரு பாறைக்குப் பின்னாலை அதின்ரை தலை தெரியுது. நாங்கள் அதைப் பார்த்ததை அதுகும் கண்டிட்டுது. உடனை மலைப் பாறை எல்லாம் கிழியுமாப் போலை ஒரு உறுமல் உறுமினது. ஒரு அருவி போலை புகையும் அனலும் அதின்ரை மூக்கிலை இருந்து சீறியடிச்சுக் கொண்டு வெளிப்பட்டது. கோவத்திலை சீறிச்சினந்து துலங்கை அறுக்கத் தெண்டிச்சுது.

வியாழரும், வெள்ளியாரும் பயக்கெடுதியிலை நிலைகுலைஞ்சு போச்சுதுகள். அதுகளை ஒரு நிலைக்குக் கொண்டு வாறது பெரும் பாடாய்ப் போச்சுது. நான் பட்ட பயமும் பயங்கரமும் அதுகள் பட்டதை விட ஒரு சொட்டுக்கும் குறைஞ்சதில்லை. நஞ்சியாலாக்குத் திரும்பிப் போவம் எண்டு அண்ணரைக் கெஞ்சி இரங்கி கேட்டுப் பார்த்தன். ஆனால் அண்ணர் ஒர்வாரைக் கைவிட்டிட்டு இடையிலை போகேலாது எண்டு ஒரேயடியாய்ச் சொல்லிப் போட்டார்.
"பயப்பிடாதை! கட்டை அறுக்கிற மட்டுக்கும் கத்துலாவாலை எங்களை நெருங்கேலாது."

எக்கணம் கத்துலாவின்ரை அலறலைக் கேட்டு தெங்கில் என்னெண்டு யோசிப்பான். ஆராயிறதுக்கு அரணக்காறங்களை ஏவுவான். அதுக்கு  முன்னம் நாங்கள் கெதிப்பண்ணி காரியத்திலை இறங்க வேணும். அவங்களின்ரை கண்ணிலை படமுன்னம் மலையிலை ஏறி ஒளிக்க வேணும். நாங்கள் குதிரையளிலை பறந்தம். அரணக்காறங்களுக்கு  எங்கடை தடங்கள் பிடிபடாமல் இருக்க வேணும். அவங்களை பேய்க் காட்டிறதுக்காண்டி ஒரு ஒடுக்கமான தொத்துப்பொறியான  பாதையாலை போனம். பாறை விட்டுப் பாறை தாவி மலையிலை ஏறினம். குதிரைக் குளம்படி பட்டு பாறையளிலை நெருப்புப்பொறி கிளம்பி நூர்ந்தது. 

பின்னாலை அரணம் குதிரையேறி நாலுகால் பாய்ச்சலிலை தங்கடை வாளுகள் வேலுகளோடை வருதோ எண்டு ஒரு நுணுத்தம் நிண்டு நிதானிச்சு பார்த்தன். ஒரு அசுகையையும் காணேல்லை. உந்தப் பாதையிலை தப்பியோடிற ஆரையும் தேடிக்கண்டு பிடிக்கிறதெண்டால் வலு கயிட்டம் தான். அப்பிடி கண்ணிலை பட்டாலும் உச்சிக்கொண்டு ஓடி ஒளிச்சிடலாம். ஒரு அவசர அந்தரதுக்கு வாய்ச்ச மாதிரி இங்கினை கறுமண்யாக்காவிலை 
இடக்கு முடக்கும்,  பாறையும் பள்ளமுமாய்  இருக்கு. 

கொஞ்சம் தூரத்துக்கு குதிரையோடிப் போன பின்னாலை அண்ணரைப் பிடிச்சுக் கேட்டன்,
"இப்ப எங்கை போய்க் கொண்டிருக்கிறம்?".
"வேறை எங்கினையாக்கும்? உனக்குத் தெரியுந்தானே? கத்துலாக் குகைக்குத் தான்!" எண்டு சொன்னவர்,
" உந்தா! கத்துலாமலையை அண்டி வந்திட்டம் பார். நெத்திக்கு நேரை கிடக்கு" எண்டு கத்துலாமலையைக் காட்டினவர். மெய்தான். எங்களுக்கு முன்னாலை கனக்க உசரம் இல்லாத உச்சி தட்டையான மலை ஒண்டு; ஒரே பொறிவு சரிவும், செங்குத்துச் சிவருமாய்க் கிடந்திது. சரி கணக்காய் நாங்கள் நிண்ட இடத்துக்கும் அந்த மலைக்கும் இடையிலை மட்டும் பெரிசாய் பொறிவு சரிவு   இருக்கேல்லை. பெரிய பாடு ஒண்டும் இல்லாமல் அந்த மலையிலை ஏறக் கூடியதாய் இருந்திச்சுது. அதை ஏறித் தாண்டிப் போக வேணுமாம். 

"அடுத்த பக்கத்திலை தான் கத்துலாக் குகையின்ரை வாசல் ஆத்தைப் பாத்தபடி இருக்கு. ஒருத்தரின்ரையும்   கண்ணிலையும் படாமல் எப்பிடி உள்ளை பூருறது எண்டதுதான் இப்ப கேள்வி" எண்டு அண்ணர் சொல்லிக் கொண்டு வந்தார்.
"அண்ணர்! என்னெண்டு எங்களாலை கத்துலாக் குகைக்குள்ளை பூரேலும்?" எண்டு நான் கேட்டன். ஏனெண்டால் அண்ணர் முந்தி சொன்னவர், குகைவாசல் நல்ல மொத்தமான செப்புக் கம்பியாலை செய்த படலை போட்டுப் பூட்டியிருக்குதாம் எண்டு. அம்மட்டே?தெங்கிலின்ரை எடுபிடியள் இராப்போலாய் எந்தநேரமும் காவலுக்கு நிற்பாங்களாம் எல்லே? இப்பிடியான நிலைவரத்திலை எப்பிடியாம் உள்ளை பூருறது? 

அண்ணர் அதுக்கு ஒரு மறுமொழியும் பறையேல்லை. குதிரை ரெண்டையும் மறைவிலை கட்டி வைக்கவேணும் எண்டார். இனிமேல் தொத்தித் தடவி மலையேற வேணுமாம். அதுக்குக் குதிரை சரிப்பட்டு வராது. ரெண்டு குதிரையையும் ஒரு குடைவுக்குள்ளை கொண்டு போய்  மறைவிலை விட்டம் கொண்டுபோன அசம்பியையும் வைச்சம். அண்ணர் வியாழரைத் தடவி விட்டுச் சொன்னார், 
" நாங்கள் போய் ஒரு நோட்டம் விட்டிட்டு வாறம். அது மட்டுக்கும் ஒரு சத்தஞ்சலார் காட்டாமல் நிக்க வேணும் என்ன?"
அனக்கு வெள்ளியாரை விட்டிட்டுப் போகப் புறியமாயில்லை. என்ன செய்யிறது? போகத்தான் வேணும். 

மலைச்சிவரைத் தொட்டுத் தடவித் தொத்தியேறினம். மேலை அந்தத் தட்டையான மலையுச்சிக்கு வர நான் நல்லாய்க் களைச்சுப் போனன். கொஞ்சம் களைப்பாறிப் போகலாம் எண்டு அண்ணர் சொன்னார். நான் நீட்டி நிமிர்ந்து நிலத்திலை படுத்திட்டன், அண்ணருந்தான். வானத்தைப் பார்த்தபடி கிடந்தம். கொஞ்சம் தள்ளி மற்றப் பக்கமாய் எங்களுக்குக் கீழாலை கத்துலாக் குகை கிடக்கு. நினைக்க நினைக்க ஒருவித அந்தரமாய்க் கிடந்தது. எங்களுக்குக் கீழாலை எண்டால்...., பயங்கரங்களும், கொடுவினையளும் நடக்கிற கத்துலாக்குகை!  சுற்றிச் சுழண்டு போற சுரங்கப் பாதையள், கறுமப்பட்ட சீவனுகளை பிடிச்சு வருத்தி மறியல் வைச்சு சாக்காட்டிற இருட்டான குடைவுகள்....    மேலாலை எண்டால்..... வெய்யில் வெளிச்சம், நீலவானம், வெள்ளை முகில், வண்ணத்துப்பூச்சி, வண்ண வண்ணப் பூக்கள், பச்சைப்புல்லு.......

கனசனம் உந்தக் கத்துலாக் குகைக்குள்ளை அந்தரப்பட்டு ஆவெண்டு அலறிச் செத்துப்போயிருக்குங்கள்! ஆர் கண்டது?, ஒர்வாரும் இருக்கிறாரோ?, இல்லை, எக்கணம் போய்ச் சேர்ந்திட்டாரோ? நான் என்ரை ஐமிச்சத்தை அண்ணருக்குச் சொன்னன். அண்ணர் உடனை ஒரு மூச்சும் காட்டேல்லை. வானத்தையே கண் ஒட்டாமல்   பார்த்தார். அனக்கு வந்த ஐமிச்சம் அவருக்கும் வந்திருக்கும் போலை!  கடைசியிலை சொன்னார்,
" கத்துலா நித்திரையாய் இருந்த காலத்திலையே தெங்கில்  உந்தக் குகைக்கு செப்புக்கம்பிப் படலை கட்டிப் பூட்டி வைச்சவன். சனங்களை அதுக்குள்ளை போட்டு அடைச்சு வைக்கிற மறியலாய் உந்தக் குகையைப் புழங்கினவன். ஆதிப் பறணைப் பழங்காலத்திலை தொட்ட நித்திரை குழம்பி கத்துலா என்னெண்டு வெளியாலை வந்ததாமாம்?"

"என்னது? கத்துலா நித்திரையாய் இருக்கேக்குள்ளை மறியலாய்ப் பாவிச்சவனாமோ?"
"ம்..ம் ஆனால் கத்துலா எண்ட ஒண்டைப் பற்றி ஆருக்குமே அந்த நேரம் ஒண்டும் தெரியாது." 
அனக்கு சதிரம் நினைச்சுப் பார்க்கவே நடுங்கினது. ஊருலகத்திலை படாத ஆய்க்கினை எல்லாம் பட்டபடி மறியலிலை இருக்க,.... பத்தும் பத்தாததுக்கு எண்டு உள்ளுக்கை ஒரு மூலைக்குள்ளை இருந்து ஒரு பறவைவேதாளம் ஊர்ந்தபடி வாறதைக் கண்டு என்ன பதைப்புப் பதைச்சிருப்பினம்? ஆனால் அண்ணர் எண்டால் வேறை மாதிரி நினைச்சவர். 
"கத்துலா வந்து, அந்த செப்புக்கம்பிப் படலை வழியாலை வர முடியாமல்; காவலில்லாத ஒரு பாதையாலைதான்  வெளியிலை வந்திருக்க வேணும். அந்தப் பாதையைத் தான் என்ன பாடுபட்டும் தேடிப் பிடிக்க வேணும்" எண்டார்.

கனக்க நேரம் எங்களாலை ஓய்வொழிஞ்சு இருக்கமுடியாது தானே? அண்ணர் அந்தரப்பட்டுக் கொண்டு நிண்டவர். நாங்கள் கத்துலாக் குகைக்குக் கிட்டவாய் வந்திட்டம். இன்னும் ஒரு சொட்டுத் தூரந்தான். கீழை கிடுகிடு பள்ளத்திலை ஆறு பாயுது. அங்காலை தாண்டினால் நஞ்சியாலா கண்ணிலை தட்டுப்பட்டுது. நஞ்சியாலாவைப் பார்க்கப் பார்க்க ஒரே ஏக்கமாய்க் கிடந்திது. 

"அண்ணேர்! பங்கை பாரும்! நாங்கள் பிடிச்சுக் கொண்டு குளிச்ச வில்லோ மரம்,... ஆத்தின்ரை அக்கரையிலை.... "
அந்த இடத்தைப் பார்க்கப் பார்க்க; அந்த வெளிச்சமான கரையின்ரை உசிர் மூச்சு ஆத்துத் தண்ணியையும் தாண்டி மலையேறி வந்து "சுகமாய் இருக்கிறியளோ மக்காள்?" எண்டு எங்களை சுகம்பலம் கேட்ட மாதிரி இருந்திச்சுது.

அண்ணர் மூச்சுக் காட்டாமல் இருக்க கைகாட்டினார். ஆருக்கும் எங்கடை குரல் கேட்டாலும் எண்டு அவருக்குப் பயம். நாங்கள் நல்லா  மலை விளிம்பை நெருங்கி வந்திட்டம். இந்தா இஞ்சாலுப் பக்கம் குத்தெண்ட மலைச்சிவர் கிடுகிடு எண்டு தாழ்ப்பம்  தெரியாத பாதாளத்துக்குச் சரியுது. உந்தச் சிவரிலை தானாம் அந்தச் செப்புக்கம்பிப் படலை போட்ட கத்துலாக் குகைவாசல் இருக்காமாம். எங்களாலை அதை பார்க்கேலாமல் இருந்திச்சுது. 

நிலத்திலை படுத்து, வயித்தாலை ஊர்ந்து ஊர்ந்து போய் விளிம்பிலை கீழை எட்டிப் பார்த்தம். ஒரு நாலு அஞ்சு அடி அகலப் பாதையும், அதிலை  காவலுக்கு நிக்கிற அரணக்காறங்களையும் காணக் கூடியதாய் இருந்திச்சுது. மூண்டு பேரைக் கண்டன். அந்தக் கறுப்புத் தலைக்கவசத்தைக் கண்டவுடனை என்ரை நெஞ்சு தடதடெண்டு அடிக்க வெளிக்கிட்டிச்சுது. நல்லகாலம் அவங்கள் நிமிர்ந்து பார்க்கேல்லை. 

உப்பிடி ஒரு வேலைவெட்டியும் அத்த  அரணக்காறங்களை வேறை எங்கையும் பார்க்கேலாது. அவங்கள் என்னடா எண்டால் வேறை எந்த அக்கறையும் இல்லாமல் தங்கடை பாட்டிலை தாயம் விளையாடினவங்கள். 
<அந்த செப்புக்கம்பிப் படலை பூட்டியிருக்க, எந்தப் பகையாளி அதுக்குள்ளாலை வந்து குதிக்கப் போறான்? ஏன் அதிலை காவலுக்கு ஆள் வைக்க வேணும்?> எண்டு நான் நினைக்க, அந்தப் படலை திறந்திச்சுது. உள்ளை இருந்து இன்னுமொரு அரணக்காறன் வெளியாலை வந்தான். கையிலை ஒரு வெறும் இயத்து இருந்துது. அதை நிலத்திலை விட்டெறிஞ்சான். படலையைப் படாரெண்டு சாத்திப் பூட்டினான். அவன் திறப்பைத் திருகிப் பூட்டின சத்தம் எங்களுக்குக் கேட்டது. 

"அந்தப் பண்டிக்குக் கடைசித் தீன் வைச்சாச்சு." எண்டான் மற்றவங்கள் சிரிச்சாங்கள். அதிலை ஒருத்தன் கேட்கிறான்,

"இண்டைக்கு ஒரு மிக முக்கியமான நாள். தன்ரை கடைசித்தீன் தின்னிற நாள் எண்டது அவனுக்குத் தெரியுமாமோ? இண்டு பொழுதுபட கத்துலா அவனைத் தேடிக் காத்திருக்கும் எண்டும் சொன்னநீயோ " எண்டு.

"ஓ ! நல்லாத் தெரியும்! அவன் என்ன சொன்னவன் எண்டு சொல்லட்டே? 

<அப்பாடா! இப்ப எண்டாலும் இந்த நாள் ஒருமாதிரி வந்திட்டுது.>  எண்டு . இன்னும் ஒண்டு சொன்னவன். காட்டுறோசாப் பள்ளத்துக்கு வியளம் சொல்லி அனுப்பட்டாமாம்,
< ஒர்வாரின்ரை தேகம் அடங்கலாம், ஆனால் விடுதலைத் தாகம்  ஒருக்காலும் அடங்காது.> எண்டு வீரவசனம் பேசிறான்.

"கத்துலாவை இண்டைக்கு செக்கல் பட சந்திக்கிற நேரம் அதிட்டை போய் நயினார் சொல்லட்டன். அதுக்குக் கத்துலா என்ன மறுமொழி சொல்லும் எண்டு நேரிலை தானே கேட்டுப் பார்க்கட்டன்" எண்டு மற்றவன் ஒருத்தன் நக்கல் அடிக்கிறான்.


நான் அண்ணரைப் பார்த்தன். மூஞ்சை எல்லாம் வெளிறிப் போய் இருந்தார்.

"வா" என்னை மெதுவாய்க் கூப்பிட்டார். 
"நாங்கள் இங்கயிருந்து கெதியாய் நடையைக் கட்ட வேணும்" எண்டு கிசுகிசுத்தார். முதலிலை பின்வளமாய் ஊர்ந்தபடி போய் பேந்து எழும்பிக் குதிரையளடிக்கு ஒரே ஓட்டத்திலை நில்லாமல் நிறுத்தாமல் ஓடிப் போனம். 

தாடாத்தி பண்ணேலாத நிலைமையிலை அண்ணர். பரிதவிச்சபடி தேகம் ஒரு நிலைக்கு நில்லாமல் அல்லாடினர். இதுவரை ஒர்வாரைக் காப்பாற்ற முடியும் எண்டிருந்த நம்பிக்கை எல்லாம் நொருங்கிப் போக தவிச்சுப் போனார். நானே அனக்கு ஆராவது வந்து ஆறுதல் சொல்லுவினமோ? மனசிலை திடம் வர செய்வினமோ எண்டு ஏங்கினபடி இருக்க, நான் என்னெண்டு  என்ன வகையிலை ஆறுதலை  அண்ணருக்குச் சொல்லிறது?


" ஒர்வார் நயினார்! நான் கண்கொண்டு இன்னும் காணாத போராளீ! உங்களை காணவே முடியாமல் போடுமோ? இண்டைக்குச் செக்கலுக்குள்ளை நீங்களும் சாக வேண்டியதைப் போச்சே!? நீங்கள் செத்தாப் பிறகு, காட்டுறோசாப் பள்ளமும், நஞ்சியாலாவும் என்னென்ன பாடுகள் எல்லாம் படப் போகுதோ?" தன்ரை பாட்டிலை புலம்பினார் அண்ணர். 


நெடுநேரம் ஒரு சொல்லு, ஒரு வார்த்தை பறையாமல் ரெண்டு பெரும் இருந்தம். பேந்து அண்ணர் சாப்பாட்டு முடிச்சிலை இருந்து பாண் எடுத்து பிய்ச்சுப் பிய்ச்சு அனக்கும் தந்து குதிரையளுக்கும் தீத்தினவர்.
எல்பிரீடா ஆச்சி தந்தனுப்பின ஆட்டுப்பாலைக் கொஞ்சம் குடிக்க விருப்பமாய் இருந்திச்சுது.
"இப்ப வேண்டாம் பொறுத்திரு சீனியப்பு!" எண்டு மறிச்சார் அண்ணர்.
"நிறைய அலுவல் இருக்கு. செக்கல்பட முன்னம் நாங்கள் வெளிக்கிட வேணும். அப்ப அந்த ஆட்டுப் பாலிலை ஒவ்வரு துளியையும் நீ குடிக்கலாம்." எண்டு விளப்பம் சொன்னார்.

" எனக்குத் தெரியும். இதொண்டும் சின்னக் காரியமில்லை. வைக்கல் போரிலை ஊசி தேடின கணக்கிலை தான் இருக்கும். எண்டாலும் இம்மளவு தூரம் கயிட்டப் பட்டுப் போட்டு இப்ப கையைக் கட்டிக் கொண்டு நிற்கேலாது கண்டியோ!  தலையாலை மண் கிண்டி எண்டாலும் தெண்டிச்சுத் தேடிப் பார்க்க வேணும்."

"என்னத்தைத் தெண்டிச்சுத் தேடிப் பார்க்கிறது?" எண்டு கேட்டன்.
"கத்துலா வெளியாலை வந்த வழியைத் தான்." எண்டு ஏதோ அவர் சொல்லிறார் தான் எண்டாலும் அவரின்ரை முகத்திலை நம்பிக்கையீனம் தெரிஞ்சது.
"ம் கும்! குறைஞ்சது ஒரு வரியகாலம் இருக்கெண்டாலும் ஒருவழியாய் கண்டுபிடிக்கலாம் தான். என்ன செய்யிறது எங்களுக்கு இருக்கிறது ஒருசில மணிநேரம் மட்டுந்தான்."

இப்பிடி அவர் சொல்லிக் கொண்டிருக்க ஒரு சங்கதி நடந்துது. குதிரையளும் , நாங்களும் நிண்ட அந்த மட்டுமட்டுக் குடைவுப் பக்கம் தொட்டு அந்தப் பக்கத்து மலைச்சிவர் காண நெருக்கமாய் பத்தை இருந்தது. சடுதிமுட்டாய், பயந்து வெருண்டு ஒரு நரி பத்தைக்கு உள்ளாலை இருந்து அம்பு போலப் பாய்ஞ்சு வெளியை ஓடிச்சுது.


"எட! எங்கினை இருந்து இது வருகுது? உதை ஒருக்கால்  ஆராயத்தான் வேணும்." எண்டு சொன்னவர், மினைக்கெடாமல் பத்தைக்குள்ளை  பூர்ந்திட்டார். கனநேரம் ஆச்சு. மனசுக்கு அமைதியில்லாமல் போச்சு. நானும் ஆத்தேலாமல் பத்தைக்குள்ளை தலையை விட்டு 

"அண்ணேர்! எங்கை நிற்கிறீர்?" எண்டு கத்தினன். அனக்கு மறுமொழி வந்திச்சிது. அண்ணர் ஒருநிலையிலை இல்லை. கிட்ட வந்து என்னை கட்டிப் பிடிச்சுச் சொல்லிறார்,
"சீனியப்பு! எங்கினை இருந்து அந்த நரி வந்ததெண்டு உனக்குத் தெரியுமோ? மலைப்பாறைக்கு உள்ளை இருந்துதான். கத்துலாப் பாறை! கத்துலாக்குகை!"

சிலநேரத்திலை மாயாசாலக் கதையள் உருவான அந்த ஆதிப் பழம் பறணைக் காலத்திலை இப்பிடி எல்லாம் நடக்க வேணும் எண்டு முன்கூட்டியே தீர்மானிக்கப் பட்டிருக்குமோ? சிலநேரம் காட்டுறோசாப் பள்ளத்தின்ரை விடிவுக்கெண்டு அண்ணர் யோனத்தான் தான் வரவேணும்; வந்து ஒர்வாரைக் காப்பாற்ற வேணும் எண்டு அமைஞ்சிருக்கோ? சிலநேரம் மாயாசாலக் கதையளிலை உலாவிற கண்ணுக்குத் தெரியாத சீவனுகள்  நாங்கள் அறியாமல் எங்களை வழி நடத்திச்சிதுகளோ? இல்லை எண்டு கண்டால் எப்பிடி இந்த மட்டுமட்டு மலைக் குடைவுக்குக் குதிரையளோடை வருவம்?; எப்பிடி சரி கணக்காய் எங்கடை கண்ணுக்கு முன்னாலை நரி ஒண்டு பாய்ஞ்சு ஓடும்?; என்ன ஒரு வினோதமாய் வீடான வீடெல்லாம் காட்டுறோசாப் பள்ளத்திலை இருக்க சரி கணக்காய்  நானும் மத்தியாசு வளவுக்கு எண்டு வந்து சேருவன்? 


கத்துலாக்குகையை விட்டு கத்துலா வெளிப்பட்ட பாதை நிச்சயமாக அண்ணர் கண்டுபிடிச்ச பாதை தான். வேறை ஒண்டையும் எங்களாலை நம்ப முடியேல்லை. மலைச்சிவருக்குக் கிட்டவாய் நிலத்திலை ஒரு பாதி ஆளளவு ஒரு பொட்டு. 

" வயக்கெட்டுப் போன ஒரு பறவை வேதாளம் முண்டியடிச்சபடி வெளியாலை வாறத்துக்கு அந்தப் பொட்டுக் காணும்" எண்டு அண்ணர் சொன்னவர்.
"ஆயிரக் கணக்கான வரியமாய் நித்திரையாய், தீன் தண்ணி ஒண்டுமில்லாமல் கிடந்தது நல்லா மெலிஞ்சு வயக்கெட்டுப் போயிருக்கும்....., நித்திரை கெட்டு ஒழும்பி வந்திருக்கும்....., 
பார்த்தால் வழக்கமான வாசல் செப்புக் கம்பிப் படலை போட்டுப் பூட்டியிருக்க..., பின்னை இந்தப் பாதையாலை வெளிப்பட்டிருக்கும்."
எண்டு தான் மனசிலை நினைச்சதை சொன்னார்.

உள்ளை பூருறதுக்கு எங்களுக்கு அந்தப் பொட்டு போதும். நான் பொட்டுக்கு உள்ளாலை ஊண்டிப் பார்த்தன். இருட்டாய் இருந்தது. எக்கணம் இன்னும் எத்தினை பறவைவேதாளம் படுத்து நித்திரையாய் இருக்கோ? இருட்டுக்குள்ளை கண்கடை தெரியாமல் நாங்கள் எக்குத்தப்பாய் அதுகளைப் போய் உழக்க , அதுகள் நித்திரை கெட்டு கொதியோடை முழிக்க....வழக்கமான என்ரை கற்பனை பயங்கரமாய் என்னைப் போட்டுப் பயமுறுத்தினது.  


அப்ப அண்ணரின்ரை கை என்ரை தோளை ஆதரவாய் அணைச்சது.

"சீனியப்பு! உள்ளுக்கை என்னென்னத்தை எல்லாம் சந்திக்க வேண்டி வருமோ எனக்குத் தெரியாது. ஆனால் இப்ப நான் உள்ளை போகப் போறன்."
"நானும் வாறன்" என்ரை குரலின்ரை நடுக்கம் அனக்குத் தெரிஞ்சது.
அண்ணர் என்ரை சொக்கைத் தடவினார். இடைசுகம் இப்பிடி பட்சத்தோடை தடவிறவர். 
"மெய்யாத்தான் வரப்போறியோ? இங்கினை குதிரையளோடை காத்துக் கொண்டு நிற்கலாந்தானே?"
"அண்ணர் ! உமக்கு நான் முன்னம் சொன்னநான் எல்லோ?, நீர் போற இடமெல்லாம் நானும் வருவன் எண்டு" 
"சொன்னநீ தான்" அண்ணரின்ரை குரலிலை ஒரு மனஆறுதல் இருந்தது.
"அதுக்கு மறுகதை கிடையாது. நரகத்து முள்ளிலை நடுமுள்ளு மாதிரியான இந்த இடத்திலை உம்மைத் தனிச்சு அனுப்ப  ஏலாது." ஒரே முடிவாய் சொன்னன்.

கறுமண்யாக்காவிலை அதுகும் இந்தக் கத்துலாக்குகை நரகத்து முள்ளிலை நடுமுள்ளு மாதிரியான இடமில்லாமல் வேறென்னவாம்? ஒரு பந்தத்தைக் கொளுத்திக் கொண்டு உள்ளை நுழைஞ்சம்.உந்த இருட்டுப் பொந்துகளிலை ஊர்ந்தும், தவண்டும் போறது எண்டால்; ஏதோ துப்பரவுக்கு கண்ணை முழிக்க விடாத கும்மிருட்டும், சித்திரவதையுமான ஒரு படு பயங்கரக் கனாவிலை கிடந்து உத்தரிக்குமாப் போலை. நல்ல வெய்யில் வெளிச்சத்திலை இருந்திட்டு கறுகறெண்டு கறுத்த இரவுக்குள்ளை வந்தமாதிரிக் கிடந்தது.


கத்துலாக்குகை முழுக்க பழங் கிடையனான பறவைவேதாளப்  பொந்துகளும், ஆதிப் பழங்காலம் தொட்டு நடந்தேறின கொடுமையளின்ரை புகைச்சுண்டின கெட்ட வெடிலுமாய் இருக்கும் எண்டு நினைச்சன். உந்தப் பொந்துகள் வழிய நிச்சயம் ஆயிரமாயிரம் பறவை வேதாள முட்டைகள் பொரிச்சு குஞ்சுகள் அடுக்கு அடுக்காய் வந்திருக்கும். அதுகள் வாறபோற வழி வழிய கண்ட நிண்ட உசிரையெல்லாம் பொசுக்கிக் கருக்கித் திண்டிருக்குங்கள். 


இப்பிடியான வெறும் பொந்துகளைக் கண்டு பகையாளியளை மறியல் வைக்க சரியான இடம் எண்டு தெங்கில் தீர்மானிச்சிவன் ஆக்கும்.  அந்த கறுமப் பட்ட சென்மங்களை என்ன பாடெல்லாம் படுத்தி இருப்பானோ எண்டு நினைச்ச அளவிலை அனக்கு சதிரம் உதற வெளிக்கிட்டது. குகைக்குள்ளை இருக்கிற காற்று சக்குப் பிடிச்ச, அருக்குளிப்பான ஊத்தைக் காத்து மணத்திச்சிது. அந்தப் படுபயங்கர அமைதியிலையும் வினோதமான கிசுகிசுப்புகள் கேட்குமாப் போலை அனக்குக் கிடந்திது.


தன்தன் பாட்டிலை இறைமையாய் இருந்த ஊருகளை எல்லாம் தெங்கில் ஆள்குமிப்பு செய்து பிடிச்சவன் எல்லே? பேந்து அவன் தனக்குப் பிடிக்காத சனத்தை எல்லாம் பிடிச்சு வந்து இந்தக் கத்துலாக்குகைக்கு உள்ளை தான் மறியலிலை அடைக்கிறவன். இங்கை படாத ஆய்க்கினை எல்லாம் பட்டுச் செத்த ஆத்துமங்களின்ரை ஓலம் எல்லாம் தான் அப்பிடிக் கிசுகிசுப்பாய் கேட்குதோ? அண்ணரிட்டை ஒருக்கால் இது பற்றிக் கேட்பம் நினைச்சன். பேந்து கேட்காமல் விட்டிட்டன். எல்லாம் ஒருவேளை என்ரை மனப் பிரமையாய் இருக்குமோ?


"சீனியப்பு! எந்தச் சென்மத்திலையும் மறக்க முடியாத மாதிரி நாங்கள் இப்ப ஒரு பயணம் கிளம்பிறம்." எண்டு குகை வாசல் பொட்டுக்குள்ளை உள்ளிடேக்கையே அண்ணர் சொன்னவர். அவர் சொன்ன மாதிரித்தான் அமைஞ்சது. அந்தக் கத்துலாமலையின்ரை அடிப்பாகத்தை விட நாலஞ்சு மடங்கு தூரம் குகை வளைஞ்சு, நெளிஞ்சு போச்சுது. செப்புக்கம்பிப் படலை வாசலைக் கண்டுபிடிக்க ஒரு தொகை நேரம் போனது. ஏனெண்டால் அதுக்குக் கிட்டவாய்த் தானே ஒர்வாரை மறியல் வைச்சிருக்கு!


சனம் கத்துலாக்குகை எண்டு சொல்லிறது ஒர்வர் மறியல் இருக்கிற பகுதியைத் தானாம். ஏனெண்டால் மற்றப் பகுதியளை, பொந்துகளைப் பற்றி எல்லாம் சனங்கள் அறியமாட்டுது எண்டு அண்ணர் நினைச்சவராமாம். இம்மளவு நீளக் குகை மலையின்ரை அடியிலை  நிலத்திலை அமைஞ்சிருக்கு எண்டு நாங்களும் நினைச்சதில்லை. இதுவரை நாங்களும் குதிரையளிலை பறந்தும், நடைநடையாய் நடந்தும் எத்தினை கட்டை தூரம் இடம் பெயர்ந்திருப்பம்? ஒரு அஞ்ஞூறு  அறுநூறு கட்டை தூரம் எண்டாலும் அலைஞ்சிருப்பம். இப்ப பார்த்தால், கையிலை பந்தம் பிடிச்ச படி இந்த இருட்டான சுரங்கப் பாதையிலை நடக்கிறது இன்னும் ஏழு மடங்கு தூரம் வரும் போலை எல்லே கிடந்தது! 


எட கறுமம்! கைப் பந்தத்து வெளிச்சம் சுரங்கச் சிவரிலை பட்டு உருவாக்கிற படங்கள் உருவங்கள் எல்லாம் வயிற்றைக் கலக்க வைச்சது. அந்தக் கும்மிருட்டிலை அந்த குட்டி வெளிச்சத்தை விட சுற்றவர பூதம் போலை இருட்டு, இருட்டு ஒரே நாசமறுத்த இருட்டுத் தான். ஆர் கண்டது?, உந்தப் பேயிருட்டிலை எங்கெங்கை எத்தினை எத்தினை பறவை வேதாளம், பாம்புபல்லி, அல்லது மாயாசாலக் கதையளிலை வாற வினோதமான முறுகசாதி எல்லாம் எங்களை விழுத்தப் பொறி வைச்சுக் காத்திருக்கோ? அனக்கெண்டால் பாதை தவறி அலையப் போறமோ எண்டு பயமாய்ப் போச்சு. ஆனால் அண்ணர்  கைப்பந்தத்தாலை சுரங்கச் சிவரிலை புகைக்கரி அடையாளம் வைச்சுக் கொண்டு போனார். 

  

ஒரு பயணம் எண்டு அண்ணர் சொன்னவர் தானே? அதை ஏன் பறைவான்? அந்தக் குகைக்கு உள்ளை நாங்கள்; நடந்தம், தவண்டம், ஊர்ந்தம், கழுத்தளவு தண்ணியிலை நீந்தினம், பாறையளிலை தொற்றி ஏறினம், குதிச்சம், வழுக்கி விழுந்தம், மனசிலை அலுப்பும் களைப்பும் வந்தது, இல்லை விடாதை பிடி எண்டு ஓர்மம் கிளம்பினது. இடைசுகம் சில ஒடுக்கமான பொந்து போலை பாதை,..... இருந்தாப்போலை எல்லை தெரியாத பென்னாம் பெரிய மண்டபம்,..... எதிரொலியை வைச்சுத் தான் அதின்ரை பெருப்பத்தை ஓரளவுக்கு ஊகிக்க முடிஞ்சது. ஒரு நிலத்தடி ஆறு ஒண்டு அதை நீந்திக் கடந்தம். எல்லாத்தையும் விட குடல் தெறிக்குமாப் போலை ஆவெண்ட அதல பாதாளத்தின்ரை விளிம்பிலை சமநிலை தளம்பாமல் நடக்க வேண்டியும் வந்தது. 

அப்பிடி ஒரு பயங்கர விளிம்பிலை போகேக்கை நான் தவறி விழுந்திருப்பன். நான்தான் பந்தத்தை வைச்சிருந்தநான். அது கைதவறி கீழை விழுந்து போச்சிது. நீளமாய் நெருப்பாலை கோடிழுத்த படி கீழை போகுது போகுது போய்க் கொண்டே இருந்தது. கடைசியிலை அணைஞ்ச மாதிரித் தெரியேல்லை ஆனால் கண்ணுக்கு மறைஞ்சு போச்சுது. அம்மளவு தாழ்ப்பத்திலை என்ரை காலுக்குக் கீழை அதல பாதாளம். படுபயங்கர இருட்டிலை அனக்கு ஒரு அடி தன்னும் எந்தத் திக்கிலை எங்கை தூக்கி வைக்க எண்டு தெரியேல்லை. 

சதிரம் உதறின உதறிலை சமநிலை தளம்பிக் கீழை விழுந்திடுவனோ எண்டு பயந்தன். நான் ஒரு உசிருள்ள சீவன் எண்டதை மறக்கத் தெண்டிச்சன், அனக்குக் கார்ல் எண்டு பேர் எண்டதை மறக்கத் தெண்டிச்சன்,  இப்பிடி ஒரு கும்மிருட்டிலை பாதாள விளிம்பிலை சமநிலை தளம்பாமல் நிற்கிறன் எண்டதையும் மறக்கத் தெண்டிச்சன். ஏதோ பயங்கரமான ஒரு வெறுமை என்னை தொட்டது. ஐயோடா! எப்பிடி எண்டு சொல்ல? 

நல்லகாலம் அண்ணரின்ரை குரல் என்னை ஒரு நிதானத்துக்குக் கொண்டு வந்தது. கொண்டு வந்த மற்றப் பந்தத்தை அண்ணர் கொளுத்தினவர். அண்ணர் வாய் உளையாமல் கதை சொன்ன படி இருந்தார். அனக்குப் பயந்தொடாமல் இருக்கட்டும் எண்டாக்கும். ஒருமாதிரி அந்தத் தெந்தட்டுப் பொறிப் பாதையாலை தப்பிப் போனம்.

நாங்கள் தொடர்ந்து இளைச்சுக் களைச்சு நடந்தம். எம்மளவு தூரம் நடந்தம், எம்மளவு நேரம் மினைக்கெட்டம் எண்டு அனக்கு ஒரு மட்டுக்கட்டி சொல்லத் தெரியேல்லை. எம்மளவு நேரம் இன்னும் இப்பிடி அலைய வேணுமோ? எட அலைஞ்சாலும் காரியமில்லை இம்மளவு பிரயாசையும் விழலுக்கிறைச்ச மாதிரிப் போயிடக் கூடாது. உரிய நேரத்திலை ஒர்வார் நயினாரைக் காப்பாற்ற வேணுமெல்லோ? இம்மட்டிலை செக்கல் பட்டிருக்குமோ? ஒர்வார் நயினாரை இத்தறைக்கு கத்துலாவிட்டை கொண்டுபோய் தள்ளினாங்களோ? அனக்கு பயமும், கவலையுமாய்ப் போச்சுது.

அண்ணரைப் பிடிச்சுக்  கேட்டன் அவர் என்ன நம்பிறார் எண்டு.
"எனக்குத் தெரியேல்லை சீனியப்பு! விசர் பிடிக்காமல் இருக்க வேணும் எண்டால் கண்டது கடியதை நினைக்காமல் இருக்கப் பார்."
போன பாதை வரவர வளைஞ்சு சிறுத்து ஒடுங்கிப் போனது. கடைசியிலை தவண்டு போற அளவு பொந்து தான். அந்தப் பொந்துச் சுரங்கம் முடிஞ்ச இடத்திலை இன்னொரு பெரீய மண்டபம் மாதிரிக் குகை. பந்த வெளிச்சத்தை வைச்சு அந்த மண்டபத்தின்ரை பெருப்பத்தைக் அளக்க முடியேல்லை. அண்ணர் எதிரொலியை வைச்சு எம்மளவு பெருப்பம் எண்டு மட்டுக் கட்ட நினைச்சவர்.

"ஓ....கோ....கோ.......ய்" எண்டு கூவினார். கனக்க எதிரொலி கன பக்கத்தாலையும் கிளம்பினது. அது அடங்க மெலிஞ்ச குரல் ஒண்டு இருட்டுக்குள்ளை தூரத்திலை கேட்டது. 
"ஓ....கோ....கோ....ய்" அண்ணர் கூவின மாதிரியே வதிலுக்கு  கூவினது. 
"ஆர் நீ? இந்தப் பயங்கரப் பாதையிலை பந்தம் பிடிச்சுக் கொண்டு வாறது?" எண்டது.
"நான் ஒர்வார் நயினாரைத் தேடி வந்தநான்"
"ஒர்வார் தான் கதைக்கிறன். நீ ஆரப்பன்?"
"நான் யோனத்தான் சிங்கநெஞ்சன். என்னோடை என்ரை தம்பி கார்ல் சிங்கனெஞ்சனும் இருக்கிறார். உங்களை விடுவிச்சுக் கூட்டிப் போக வந்தநாங்கள்."
"பிந்தி வந்திட்டீங்கள் ஐயாச்சி!" எண்டது அந்தக் குரல்.
"இனி வேலையில்லை. எண்டாலும் என்னைத் தேடி வந்ததுக்கு மெத்தப் பெரிய உபகாரம்." எண்டு ஒர்வார் சொல்லி முடிக்க  செப்புக் கம்பிப் படலை திறபட்ட சத்தம் "கிறீச்,கிறீச் "எண்டு கேட்டது. 

அண்ணர் பந்தத்தைக் கீழை போட்டு காலாலை மிதிச்சு நூர்த்தார். மரக்கட்டை போல அசையாமல் நிண்டு கவனிச்சம். கையிலை ஒரு விளக்கோடை ஒரு அரணக்காறன் வந்தான். அனக்கு இப்ப அழுகை வந்தது. சத்தம் காட்டாமல் அழுதன். பயத்திலை இல்லை, ஒர்வார் நயினாரை நினைச்சு அழுதன்.
"காட்டுறோசாப் பள்ளத்து ஒர்வார்! ஆயித்தமாய் இரு! இன்னும் கொஞ்ச நேரத்திலை கறுப்பு உடுப்பு காரியக்காறர் கத்துலாவிட்டை உன்னை கூட்டிப் போக வருவினம்." எண்டு அந்த அரணக்காறன் பறை தட்டுமாப் போலை சொன்னான்.

அப்பத்தான் அந்த விளக்கு வெளிச்சத்திலை ஒண்டைக் கவனிச்சன். ஒரு மரக்கூடு. அதுக்குள்ளை ஒர்வார் நயினார்!  ஒரு காட்டு முறுகத்தை அடைச்ச மாதிரி எல்லே அவரைக் கூட்டிலை போட்டு வைச்சுக் கிடக்கு. கூட்டுக்குப் பக்கத்திலை விளக்கை வைச்சான்.
"உன்ரை இறுதியான ஒரு மணி நேரத்திலை வெளிச்சம் உன்ரை கண்ணுக்குப் பழக்கப் படட்டும் எண்டு தெங்கில் நயினாரின்ரை கருணை உள்ளம் நினைச்சது. அப்பத்தான் கத்துலாவையும் நீ கண்கூச்சம் இல்லாமல் பார்க்கலாம்." எண்டு கெக்கட்டம் விட்டுச் சிரிச்சு சொல்லாலை சுட்டு வதைச்சான். பேந்து வெளியை போனான். அவனும் போக செப்புக் கம்பிப் படலை சடாரெண்டு சாத்துப் பட்ட சத்தம் கேட்டது.

நாங்கள் கூட்டுக்குக் கிட்ட ஓடிப் போனம். விளக்கு வெளிச்சத்திலை ஒர்வார் நயினாரைக் கண்டம். கண்கொண்டு காண முடியாத கொடுமை அது. அவராலை அசையவே ஏலாமல் இருந்தது. எண்டாலும் ஒருமாதிரித் தெண்டிச்சு கூட்டுச் சட்டங்களுக்கு நடுவாலை கையை நீட்டினார்.
"யோனத்தான் சிங்கநெஞ்சன்! உன்னைப் பற்றி ஊரிலை அந்த நேரம் கேள்விப் பட்டநான். இப்ப நீ எனக்கு முன்னாலை நிற்கிறாய்."
"ஓம். நயினார்! இப்ப உங்களுக்கு முன்னாலை நான் இப்ப நிற்கிறன்."  ஒர்வாரின்ரை நிலைமை கண்டு அண்ணர் அழுதவர் எண்டது அவரின்ரை குரலிலை தெரிஞ்சது. 

அண்ணர் மளமளவெண்டு காரியத்திலை இறங்கினார். தன்ரை இடைப் பட்டியிலை இருந்த கத்தியை உருவினார். 
"சீனியப்பு உதவி செய்! உன்ரை கத்தியையும் உருவு.கடகடெண்டு மரச்சட்டத்தை வெட்டு." எண்டார். உதை வெட்டிறதுக்கு ஒண்டில் மரமரிவாள் வேணும் இல்லாட்டி கோடாலி வேணும். உந்த ஒரு சோடி பழம் நறுக்கிற கத்தியள் சரிவருமே? நாங்கள் பெரிய கயிட்டப் பட்டம். கை எல்லாம் அரத்தம் கசியக் கசிய  சட்டங்களை சீவினம். 

கண்ணாலை ஆறொரு கண்ணீர் வடிஞ்சது. நாங்கள் நல்லாய்ப் பிந்தி வந்திட்டம் எண்டது எங்களுக்கு விளங்கினது. எங்கடை நினைப்பு ஒர்வார் நயினாருக்கும் விளங்கி இருக்கும். ஆனாலும் நன்மை நடக்கும் எண்டொரு எதிர்பார்ப்பும் அவரட்டை இருந்தது போலை. நாங்கள் மரச் சட்டங்களை சீவச் சீவ அவருக்கும் பரபரப்பிலை மூச்சு எறிஞ்சது. இடைசுகம் எதோ முணுமுணுத்த மாதிரியும் கிடந்தது.
"கெதிப் பண்ணுங்கோ! கெதிப் பண்ணுங்கோ!"

நாங்களும் அரத்தம் கசிஞ்சதைக் கவனத்திலை எடுக்காமல் அந்தச் சட்டங்களோடை மல்லாடினம். எக்கணம் செப்புக்கம்பிப் படலையை திறந்து கொண்டு கறுப்பு உடுப்புக் காரியக்காறர் வரப் போறாங்களே எண்ட பதகளிப்பு ஒரு பக்கம். அப்பிடி ஏதும் எக்குத் தப்பாய் நடக்கும் எண்டு கண்டால் ஒர்வார் நயினாரும் இல்லை, நாங்களும் இல்லை, முழுக் காட்டுறோசாப் பள்ளமும் இல்லை எண்டு ஆகிப் போடும்.

எக்கணம் பிடிபட்டால் கத்துலாவுக்கு ஒண்டில்லை, மூண்டு நரபலி இண்டைக்குக் கிடைக்கும். என்னாலை மேல்கொண்டு கத்தி பிடிச்சு வேலை செய்யேலாமல் போச்சுது. அண்ணர் கடுஞ்சினத்திலை மரச்சட்டங்களைப் பார்த்து உறுமினார். என்னதான் சீவு சீவெண்டு சீவினாலும் அசையுதில்லையே! அண்ணர் உதைஞ்சார், சீவினார், உறுமினார். இப்பிடி ஒரு அஞ்சு தரம் செய்திருப்பார். ஆறாந் தரம் உதைஞ்ச உதையிலை ரெண்டு மரச்சட்டம் ஒடிஞ்சது. இன்னும் ஒருக்கால் எட்டி உதைஞ்சார். மூண்டாம் சட்டம் விழுந்திது. இப்ப ஒர்வார் நயினார் நுழுந்தி வாறதுக்கு இடைவெளி காணும்.

"வாங்கோ நயினார்!" அண்ணர் அவசரப்பட்டுக் கூப்பிட்டவர்.  வதிலுக்கு பெலயீனமாய் அனுங்கி மூச்சு விடுற சத்தம் தான் வந்தது. அண்ணர் ஒரு எப்பன் நேரமும் யோசிக்காமல் வதவதவெண்டு கூட்டுக்கை நுழுந்தி உள்ளிட்டார். ஒர்வார் நயினாராலை ஒழும்பி நிற்க நடக்க ஏலாமல் இருந்தது. கொற இழுவையாய் அவரை வெளியை இழுத்து எடுத்தார். அனக்கும் காலெல்லாம் பலயீனப் பட்டு நடுங்கின சீர். ஒர்வார் நயினாரை மூச்சைப் பிடிச்சு, இளைச்சுக், களைச்சு, இழுத்துப் பறிச்சபடி அண்ணர் வந்தார். அப்பிடியே  நாங்கள் வந்த சுரங்கப் பாதைப் பொந்து வழிக்குள்ளை நுழைஞ்சார். மூண்டு பேரும் ஏதோ துரத்தி வேட்டையாடப் படிற முறுகங்கள் பயந்து தப்பி ஓடிற கணக்கிலை. என்னைப் பொறுத்த மட்டிலை அப்பிடித்தான் கிடந்தது. மூசி மூசி ஓடினம் எண்டு சொல்லேலாது, அரக்கி அரக்கிப் போனம். 

எப்பிடித்தான் அண்ணருக்கு மனசிலை ஒரு உறுதி, தேகத்திலை இனி இல்லையெண்ட ஒரு பெலம் வந்ததோ தெரியேல்லை. தன்னந்தனி ஆளாய் ஒர்வார் நயினாரை அந்த சுரங்கத்திலை இழுத்துக் கொண்டு போனார். எப்பிடி அந்த ஒடுக்கமான சுரங்கத்துக்குள்ளை வளைஞ்சு, நெளிஞ்சு, நயினாரையும் இழுத்த படி அரக்கி அரக்கிப் போனவர் எண்டு அனக்குப் பிடிபடேல்லை. செத்தாலும் சரி ஒர்வார் நயினாரை என்ன பாடு பட்டும் வெளியேற்ற வேணும் எண்ட திடம் அவருக்கு. இப்ப நான் சுரங்கத்துக்குள்ளை பூர வேண்டிய முறை. அந்தநேரம் பார்த்து செப்புப் படலை கிறீச்சிடிற சத்தம். என்ரை மன உறுதி எல்லாம் வடிஞ்சு போன மாதிரி ஒரு உணர்வு. என்னாலை அசைய முடியேல்லை. 

"கெதியாய், சுறுக்காய், விளக்கு விளக்கு!" எண்டு அண்ணர் மூசினவர். விளக்கை எடுத்து அவரிட்டை நீட்டினன். கையெல்லாம் நடுங்கினது. விளக்கை மறைக்க வேணும். ஒரு சின்ன அரும்பு வெளிச்சம் கூட நாங்கள் ஒளிச்ச இடத்தைக் காட்டிக் குடுத்திடும்.

இப்ப உள்ளுக்கை அந்த கறுப்புச் சட்டைக் காரியக்காறர் ஒர்வார் நயினாரைக் கத்துலாவுக்குப் பெலி குடுக்கக் கூட்டிப் போறதுக்கு வந்திருப்பாங்கள். கையிலை விளக்குகளோடை அரணக்காறங்களும் கூட வந்திருப்பாங்கள். ஆனால் எங்கடை பக்கம் மையிருட்டு. அண்ணர்  குனிஞ்சு என்ரை கையை ஒரு கொத்துக் கொத்திப் பிடிச்சு சுரங்கத்துக்குள்ளை இழுத்தவர். அந்த இருட்டுக்குள்ளை புசு புசு எண்டு மூண்டு பேரும் மூச்சுப் பறிய இருந்தம். அப்ப வந்தவங்கள் வைச்ச அலறல் சத்தம் காதை அடைச்சது.

"தப்பீட்டான்! தப்பீட்டான்!"
                               (என்ன மாதிரி இந்த நரகத்தாலை மூண்டு பேரும் தப்பலாம்?)


சொல்விளக்கம்:

அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு - ஐந்தறிவும் இழந்து 

கால் பாவி நிற்றல் - காலூன்றி நிற்றல் 
கணக்கிலை < கணக்கில் - அளவிலை , மாதிரி 
கணக்காய் - மாதிரியாய் 
வெள்ளாப்பு - அதிகாலை 
அறிவு தெளியேல்லை < அறிவு தெளியவில்லை - நினைவு திரும்பவில்லை 
அனுங்கினன் < அனுங்கினேன் - முனகினேன் 
தாடாத்தினவர் = தாடாத்தின அவர் <தாடாற்றினார் - தாடையைத்(கன்னம்) தடவுவது போலே ஆறுதல் சொல்லுவது.
முறுகம்< மிருகம் 
கறுமப்பட்ட < கருமப்பட்ட - பாவப்பட்ட 
கிட்டடி - கிட்ட , அண்மை 
துலங்கு - சுவரில் பொருத்திய சங்கிலி 
தாழ்ப்பம் - ஆழம் 
தாண்டு < தாழ்ந்து - அமிழ்ந்து 
மேல் - உடம்பு 
சதிரம் < சரீரம் 
புறியம் < பிரியம் - ஆசை 
அருந்தல் - அருமை 
கிட்டக்கிழலை = கிட்டம்+கிழலை = அண்மை + திசை - அருகில் 
சிலமன், அசுகை - சாடை, அடையாளம் 
பேச்சுவழக்கில்: கறுமகாண்டம் <கருமகாண்டம் - பெருந்துன்பம் 
அகரமுதலியில் : கருமகாண்டம் - முற்பிறவித் தீவினைகளால் ஏற்படும் நோய்களையும், தீர்வுகளையும் கூறும் நூல் 
பங்கை, பங்கார் < பார் அங்கே 
ஒரு சொட்டுக்கும் - ஒரு துளிக்கும் 
தமிழ் ஆர்வலர் , ஆய்வாளர் திரு. இராமகி அவர்களின் வளவின் பரிந்துரைப்படி (valavu. blogspot.com)
     ஆள்குமிப்பு- ஆக்கிரமிப்பு 
     அரணம் - military, படை 
     இதை மேற்கோள் கொண்டு 
     அரணக்காறன்< அரணக்காரன் - படையாள் 
பேய்க்காட்டுதல் - ஏமாற்றுதல் 
தொத்துப்பொறி < தொற்றுப்பொறி - தொட்டால் அகப்படுவதற்கு ஆயத்தமாக உள்ள பொறி 
நூர்ந்தது- அணைந்தது 
நுணுத்தம் - நிமிடம் 
கயிட்டம் - சிரமம் 
உச்சிக்கொண்டு - தாண்டிக்கொண்டு, தப்பிக்கொண்டு 
இடக்கு முடக்கு - தடையும் மூலையுமான இடம் 
அண்டி - நெருங்கி 
கனக்க - அதிகம் 
கன - பல 
பூருதல் - புகுதல் 
உள்ளிடுதல் - உள்ளே நுழைதல் 
வெளிப்படுதல் - வெளியே வருதல் 
நுழுந்துதல் - சிறிய இடைவெளியில் புகுதல், பதுங்கிப்போதல், அகப்படாமல் தப்புதல் 
அசம்பி - பயணிகள் தோட்பை 
சாக்காட்டிற < சாக்காட்டுகிற - சாகச் செய்கிற 
இஞ்சாலுப் பக்கம், இஞ்சால்ப்பக்கம் < இங்கால்ப்பக்கம் - இந்தப்பக்கம் 
பேச்சுவழக்கில்: இயத்து - பாத்திரம் 
இண்டு < இன்று 
செக்கல் - அந்திப்பொழுது 
அதிட்டை< அதனிடத்தே , அதனிடம் 
பின்வளம் - பின்பக்கம் 
சீத்துதல்< தீத்துதல் < தீற்றுதல் - ஊட்டுதல் 
தலையாலை மண் கிண்டுதல் < தலையாலே மண் கிண்டுதல் - நடக்க முடியாத காரியத்தை நடத்துதல்  
தெண்டிச்சு< தெண்டித்து - பெரிதும் முயன்று 
நம்பிக்கையீனம் - நம்பிக்கைக் குறைவு 
பெலயீனம்< பலவீனம் 
பத்தை< பற்றை - புதர் 
சடுதிமுட்டாய்< சடுதிமுட்டாக - திடீரென 
ஆத்தேலாமல்< ஆற்றேலாமல் - ஆற்ற ஏலாமல் , தாங்க இயலாமல் 
வயக்கெட்டு- மெலிந்து 
சொக்கு, சொக்கை , சொத்தை - கன்னம் 
இடைசுகம் -இடைக்கிடை 
பொட்டு - உடம்பை வளைத்துக் குனிந்து நுழைந்து போகும் வாசல் 
பட்சம் - அன்பு 
ஒழும்பி< எழும்பி 
ஊண்டி < ஊன்றி 
தவண்டு< தவழ்ந்து 
உத்தரித்தல் - துன்பப்படுதல் 
புகைச்சுண்டின = புகை+ சுண்டின - கருகின 
வெடில் - கெட்ட நாற்றம் 
பழங்கிடையன் - கைவிடப் பட்ட பழைய பொருள் 
சக்குப்பிடிச்ச - பழுதடைந்த 
அருக்குளிப்பு - அருவருப்பு 
இறைமை - சுதந்திரம் 
பேந்து< பெயர்ந்து - பின்பு 
அதை ஏன் பறைவான்? - அதைப் பற்றி ஏன் பேச வேண்டும்?
வாய் உளையாமல் - வாய் அலுக்காமல் 
தெந்தட்டுப்பொறி - தொட்டால் விழுத்தும் பொறி
விசர் - பைத்தியம் 
பெருப்பம்< பருப்பம் - அளவு 
மட்டுக்கட்டுதல் - கணக்கிடுதல் , அடையாளம் பிடித்தல்  
வதில்- விடை 
நூர்ந்தது - அணைந்தது 
ஆறொரு கண்ணீர் - ஆறுபோல் கண்ணீர் 
மல்லாடுதல் - போராடுதல் 
எக்குத்தப்பு< இலக்குத்தப்பு 
அரக்குதல்- சிரமப்பட்டு அசைதல் 
பேச்சு வழக்கில் : எப்பன்< எய்ப்பன் -எள்ளளவு 
அகரமுதலியில் : எய்ப்பு - ஒடுக்க நிலை