Author: ந.குணபாலன்
•5:37 PM

                                                                             மூலக்கதை : Bröderna Lejonhjärta


                                                       

                                                                         எழுத்தாளர் : அஸ்த்ரி   லிண்ட்கிறேன் , சுவீடன்  
                                                                              (ASTRID   LINDGREN ,     SWEEDEN)
                                                                  (14/11-1907 --- 22/01-2002)
                                                                    ஓவியர்:இலூன் வீக்கெலான்ட்
                                                                                             ( Ilon Wikeland)
                                                                      தமிழாக்கம் :  ந. குணபாலன்


துடிப்பு பன்னிரண்டு : கத்துலா!


ஒரு தேவதாரு மரத்துக்குக் கீழை அண்டிரவு நித்திரை கொண்டம். வெள்ளாப்போடை முழிப்பு வந்திட்டிது. முதல் கண் முழிச்சது நான்தான். சுற்றவர எல்லாம் சாம்பல் பூத்த மாதிரி ஒரே பனிப்புகார் மூட்டமாய் கிடந்தது. வியாழரும், வெள்ளியாரும் ஏதோ ஆவி, பேய், பூதம் உலாவினது மாதிரி புகாருக்குள்ளை நிண்டது தெரிஞ்சது. எல்லாமே அமைதியாய் இருந்துது. என்னவோ விளங்கப் படுத்த முடியாத ஒரு ஏக்கமாய்க் கிடந்துது. மனசு ஒண்டுக்கும் ஏவாமல் சோர்வாய்   இருந்துது. பெத்தய்யா வீட்டுக் கணகணப்பான அடுப்படிச் சூட்டை நினைச்சு என்ரை தேகமும், மனசும் தவிச்சது. இனி என்னென்ன கயிட்ட துன்பங்கள் வரக் காத்திருக்கோ எண்டு நினைக்க நினைக்கக் கலக்கமாய் இருந்துது. 

என்ரை மனக் கலக்கம், குழப்பம் எல்லாம் ஒண்டும் அண்ணருக்குக் காட்டக் கூடாது எண்டு தான் நினைச்சன். ஆர் கண்டது, எக்கணம் என்ரை மனநிலையைக் கண்டுபிடிச்சார் எண்டால் திருப்பி அனுப்ப மாட்டார் எண்டது என்ன நிச்சயம்? என்னதான் தலை போகிற ஆபத்து வந்தாலும் இனிமேலும் அண்ணரை விட்டுப் பிறிஞ்சிடக் கூடாது எண்டது என்ரை நினைப்பு. 


என்னை வைச்ச கண் வாங்காமல் கொஞ்ச நேரம் பார்த்திட்டுச் சாதுவாய் ஒரு சிரிப்புச் சிரிச்சார்.

"இப்பவே யோசிச்சுக் கவலைப் படாதை சீனியப்பு! இனி நாங்கள் சந்திக்கப் போற சோதினை, சவாலுகளோடை ஒப்பிடேக்குள்ளை இதெல்லாம் ஒரு தூசு."
ப் ச்!  நல்ல ஆறுதல் தான் சொல்லிறார் இவர் அண்ணர். 

வெய்யில் வெளிச்சம் மரங்களுக்குள்ளாலை ஊடுருவப் பனிப்புகாரும் மெள்ளக் கரையத் தொடங்கிச்சுது. காட்டு மரங்களிலை இருந்த பறவை எல்லாம் பாட வெளிக்கிட்டுது. வெய்யில் வெளிச்சமும், பறவையளின்ரை பாட்டும் சேர்ந்து; மனசிலை இருந்த கவலை, கலக்கம்,குழப்பம், ஏக்கம், சோர்வு எல்லாத்தையும் பனிப்புகாரோடை சேர்த்துக் கரைச்சு போட்டுது. இப்ப பார்த்தால் பெரிய ஆபத்தான காரியம் ஒண்டும் இல்லை எண்ட மாதிரி மனசிலை ஒரு துணிச்சல் வந்துது. 


வியாழரும், வெள்ளியாரும் கூட நல்ல சுவாத்தியமாய் தன்னிட்டவாரம் புல்லு மேய்ஞ்சபடி இருந்திச்சுதுகள். வெளிச்சம் குறைவான குதிரைமாலை விட்டு வெளி வெட்டையிலை விட்டாத்தியாய் நல்ல சாறுள்ள புல்லை மேயிறது அதுகளுக்கு புளுகம் தானே? பார்க்கவே தெரிஞ்சது. 


அண்ணர் மெல்லிசாய் ஒரு சீக்கை அடிச்சவர். அந்தச் சத்தத்துக்கு கட்டுப்பட்டு ரெண்டும் எங்களுக்குக் கிட்ட வந்தது. அண்ணர்  வெளிக்கிட்டுட்டார். இன்னும் கனதூரம் போகக் கிடக்கு  எண்டு நினைக்கிறன். மினைக்கெட நேரமில்லை. 

" கோட்டை மதில் கனதூரத்திலை  இல்லை. பங்கார் அந்த கசல் மரப்பத்தை மதிலை மறைக்குது. தடியன் தொடிக்கியைச் சந்திக்கத்தான் வேணும் எண்டால் நிண்டு மினைக்கெடலாம் தான். ஆனால் எனக்கு அது இட்டமாய் இல்லை. " எண்டு பகிடியும் வெற்றியுமாய் சொன்னார். 

எங்கடை பாதாளச் சுரங்கம் கொஞ்ச கசல் மரங்களுக்கு இடையிலை தான் வந்து வாய் திறக்குது. ஆனால் இப்ப அந்த வாய் தெரியாமல் அண்ணர் செடிகொடியளாலை மறைச்சுப் போட்டார். பேந்து ஒருக்கால் திரும்பி வாற நேரத்திலை அடையாளம் தெரிய வேணும் எண்டு சொல்லி ஒருசில தடிதண்டுகளை வைச்சு மூடி  அடையாளமும் வைச்சிருந்தவர்.


" இந்த இடம் எப்பிடி இருக்கு எண்டதை மறக்கப் படாது. ஞாவகம் வைச்சிரு. அங்கை பார் அந்த பெரிய பாறையும், நாங்கள் படுத்திருந்த தேவதாரு மரத்தடியும். சிலநேரத்திலை நாங்கள் இங்கினை திரும்பி வரக்க கூடும். இல்லாட்டிப் போனால்......" அண்ணர் என்னவோ சொல்ல வெளிக்கிட்டவர் ஆனால் சொல்லி முடிக்காமல் அமைதியாய் விட்டார். நாங்கள் ரெண்டு பெரும் அவரவர் குதிரையிலை ஏறிப் பயணப் பட்டம்.  


அப்ப மரங்களின்ரை தலைப்புக்கு மேலாலை ஒரு வெண்புறா காட்டுறோசாப் பள்ளத்தின்ரை திக்காலை பறந்து போகக் கண்டம். சோபியா அக்கையின்ரை வெண்புறாவிலை ஒண்டாய்த் தான் அது இருக்க வேணும். 

"அது சோபியா அக்கையின்ரை பலோமா தான்." எண்டார் அண்ணர். என்னெண்டுதான் அடையாளம் பிடிச்சவரோ அனக்குத்  தெரியேல்லை.  

சோபியா அக்கையிட்டை இருந்து வியளம் வரும், வியளம் வரும் எண்டு நாங்கள் வெளிக்கிடுகிற வரையும் காத்திருந்தநாங்கள். அதெண்டால் நாங்கள் வெளிக்கிட்ட பின்னாலை எல்லோ வருகுது? அது நிச்சயம் பெத்தய்யாவின்ரை மத்தியாசு வளவுக்குத் தான் போகும். அங்கை குதிரை மாலுக்கு வெளியாலை இருக்கிற புறாக்கூட்டிலை போயிறங்கும். பெத்தய்யா அது கொண்டு வந்த வியளத்தை வாசிச்சு அறிவார். 


"சாய்!  ஒருநாள் முந்தி உந்தப் புறா வந்திருக்கப் படாதே? என்ன வியளம் எண்டதை அறிஞ்சு கொண்டு பயணம் கிளம்பி இருக்கலாம்." அண்ணர் கவலைப் பட்டார். ஆனால் இப்ப தெங்கிலின்ரை அரணக்காறங்கள் எல்லோ அண்ணரைத் தேடுறாங்கள். அதினாலை நாங்கள் இப்பிடித் தப்பியோட வேண்டிக் கிடக்கு. 


அரணக்காறங்கடை கண்ணிலை படாமல் ஆத்தங்கரைக்குப் போறதுக்குக் காட்டுக்குள்ளாலை ஒரு சுத்துப்பாதையிலை போனம்.  அப்ப அண்ணர்,

" கார்ல் குட்டி எக்கணம் நீ அந்தக் கறுமா அருவியைப் பார்க்க வேணும். கனாவிலை கூட அப்பிடி ஒரு அருவியைப் பார்த்திருக்க மாட்டாய்." எண்டவர்.
"  எப்பிடிப் பார்த்திருக்க முடியும்? நான்தான் கண்கொண்டு ஒரு அருவி எப்பிடி இருக்கும் எண்டு இதுநாள் வரை கண்டதில்லையே? அப்பிடி இருக்க என்னாலை எப்பிடி அது பற்றிக் கனாக் கண்டிருக்க  முடியும்?"எண்டு கேட்டன். 

சொல்லப்போனால் நஞ்சியாலா வருமட்டுக்கும் நான் ஒண்டும் பெரிசாய் ஒரிடமும் போய்வந்து, ஒண்டும் கண்டு அனுபவிச்சதில்லை தானே? இப்ப நாங்கள் குதிரைச் சவாரியிலை போற மாதிரி இப்பிடி ஒரு காடு?  ம் கும்!  கிடையாது. இது மாயாசாலக் கதையிலை வாறமாதிரி அடர்த்தியான இருட்டான ஒரு காடு. ஒரு ஒழுங்கான ஒற்றையடிப் பாதை கூட இல்லை. மரங்களின்ரை கிளை,கொப்பு,  கவர் எல்லாம் மேலிலை, முகத்திலை குத்துமாய்ப் போலை கண்டபடி நீட்டிக் கொண்டு இருந்துது. எண்டாலும் உதுக்குள்ளை வளைஞ்சு, நெளிஞ்சு, குனிஞ்சு, நிமிர்ந்து போறது ஒரு பைம்பலான விளையாட்டுப் போலை கிடந்துது. 


வெயில் வெளிச்சம் நேர்கோடாய் , கீறு, கீறாய் மரங்களை ஊடுருவி வந்துது. பறவையளின்ரை கலகலப்பு கேட்டுது. ஈரமான மரத்தின்ரை மணம், குதிரையின்ரை மணம் எல்லாம்  அந்தத் தருணத்திலை மனசுக்கு விருப்பமாய் இருந்துது. எல்லாத்தையும் விட அனக்குப் பிடிச்ச காரியம் அண்ணரோடை  இப்பிடிக் குதிரைச் சவாரி போறதுதான். புதுக் காத்து, மேலுக்கு இதமான குளிர்ச்சி இப்பிடிக் காடு இருந்துது. நேரஞ்செல்ல செல்ல சூடான காத்துக் கிளம்பினது. இண்டைக்கு எக்கணம் நல்ல வெக்கையாய்த் தான் இருக்கப் போகுது எண்டு நினைச்சன். 


இப்ப நாங்கள் காட்டுறோசாப் பள்ளத்தை விட்டுக் கனதூரம் வந்திட்டம். உசந்த மரக்காட்டுக்கு நடுவிலை ஒரு சின்ன வெளி. அதிலை ஒரு சின்ன சாம்பல் நிற வீடு. அதை வீடு எண்டு சொல்லிறதை விட ஒரு சின்னக் கொட்டில் எண்டு சொல்லலாம். நாலு சிவர் இருக்க ஒரேயொரு அறையாய் அமைஞ்ச ஒரு கொட்டில். அடுப்படி, கூடம், படுக்கைஅறை எல்லாமே ஒண்டுதான்.  ஆர்தான் இப்பிடி நட்டநடுக் காட்டிலை இருக்கிறது? புகைபோக்கியாலை புகை போச்சுது. வெளியாலை ஒரு சோடி வெள்ளாடு மேய்ஞ்சு கொண்டிருந்தது. 

" எல்பிரீடா எண்ட ஒரு ஆச்சிதான் இஞ்சை குடியிருக்கிறவ." எண்டு அண்ணர் சொன்னார்.
" கேட்டால் குடிக்க ஆட்டுப் பால் தருவா."

எங்களுக்கு ஆட்டுப்பால் குடிக்கக் கிடைச்சது. களைச்சு விழுந்து வந்த எங்களுக்கு அது திவ்வியமாய் இருந்துது. வாசல்படிக் கல்லிலை இருந்தபடி சாப்பிட்டம். எங்கடை அசம்பியிலை பாண் இருந்தது. எல்பிரீடா ஆச்சி ஆட்டுப்பால்கட்டியும் தந்தவ. வாற வழி வழிய நிறைய காட்டு யூர்குப்பார் பழம் ஆய்ஞ்சு வந்தநாங்கள். வயிறு மெத்தச் சாப்பிட்டம். 


எல்பிரீடா ஆச்சி ஒரு வயசுபோன, நல்ல குணமுள்ள, மொத்தமான கட்டை ஆச்சி.  ஒற்றை ஆளாய் அந்தக் காட்டிலை தன்னந் தனிய சீவிக்கிறா. அவவிட்டை நாலைஞ்சு வெள்ளாடும், கதைக்கப் பேசிறதுக்கெண்டு  சாம்பல் நிறத்திலை ஒரு பூனையும் நிண்டது.

"கடவுள் காக்க. என்னைச் சுற்றி ஒரு மதிலும் இல்லை." எண்டா ஆச்சி. அவவுக்குக் காட்டுறோசாப் பள்ளத்திலை கனபேர் பழக்கமாம். சுற்று மதில் வந்த பின்னாலை அங்கத்தையாலை ஒருத்தரும் போக்குவரத்து இல்லை. அப்ப ஒரு சங்கதியும் தெரிய வராது தானே? ஆரார் உசிரோடை இருக்கினம் , ஆரார் கறுமண்யாக்காவுக்கு அடிமைச் சேவகத்துக்குப் பிடிபட்டுப் போச்சினம், ஆரார் ஒரேயடியாய்ப் போய்ச் சேர்ந்திட்டினம் எண்டு அறிய விரும்பினா. அண்ணரும் சொல்ல வேண்டியதாய்ப் போச்சு. ஆனால் அண்ணர் ஒவ்வருத்தரையும் பற்றி மனவருத்தப் பட்டுத்தான் சொன்னவர். ஆச்சியும் கேட்டு மெத்தக் கவலைப்பட்டவ. 

" இப்பிடியும் ஒரு கெதி வந்துதே காட்டுறோசாப் பள்ளத்துக்கு! உந்தத் தெங்கில் எண்டவன் எண்டைக்குத் தான் போய்த் துலைவானோ? அந்த நாசமாய்ப் போற கத்துலா மட்டுக்கும் அவன்ரை கையிலை இல்லை எண்டால் இம்மளவும் நடந்திருக்குமே?" இடைசுகம் கைத் துண்டாலை கண்ணை மூக்கைத் துடைச்சா. அவ அழுதிருக்க வேணும் எண்டு நான் நினைச்சனான். அனக்கு அதைப் பார்க்க மனசுக்குச் சங்கடமாய் இருந்துது. பின்னை நான் எழும்பிப் யூர்குப்பார் பழம் ஆய்கிற சாட்டிலை அங்காலை எழும்பிப் போட்டன். அண்ணர் கனநேரமாய் இருந்து ஆச்சியோடை கதைச்சவர். பழம் ஆய ஆய என்ரை நினைப்பிலை ஒரு கேள்வி சுழண்ட படி. கத்துலா எண்டது என்னவாய் இருக்கும்? எங்கினை இருக்கும்? 


பேந்து கொஞ்சத்தாலை நாங்கள் ஆச்சிக்குப் போட்டுவாறம் எண்டு சொல்லிப் போட்டு வெளிக்கிட்டம். சூரியன் நடுவானத்திலை நெருப்புப் பந்துபோலை நிண்டது. கடலையை வறுத்த கணக்கிலை வெய்யிலின்ரை காங்கை மனிசரைப் போட்டு வறுத்தது. ஆத்தங்கரை கண்ணிலை பட்டுது. வெய்யில் வெளிச்சத்திலை ஆயிரங்கோடி குட்டிக்குட்டிச் சூரியன்கள் மினுங்கின மாதிரி ஆத்துத் தண்ணி மினுங்கிச்சிது. நாங்கள் நிண்ட இடம் நல்ல உசரம். ஆத்தங்கரை எண்டால் நல்ல குத்தெண்ட பொறிவிலை பணிய இருந்துது. ஆ....கா... என்னதொரு காட்சி! பறணைப் பழங்காலத்து நதிகளின்ரை ஆதிநதி பெருகிப் பாய்ஞ்ச வண்ணம்! கறுமா அருவியை நோக்கி அது சுழிச்சுக் கொண்டு பெருவெள்ளமாய் அடிச்சு வாங்கிக் கொண்டு ஓடின கெதி! பெரிய இடிமுழக்கம் போலை கறுமா அருவியின்ரை இரைச்சல் தூரத்திலை கேட்டுது. 


ஆத்திலை இறங்கிச் சூடு தணிய ஒரு தோய்ச்சல் போடலாம் எண்டு நினைச்சம். குதிரை ரெண்டையும் பக்கத்திலை இருந்த சின்ன வாய்க்காலிலை தண்ணி குடிச்சிட்டு அயலட்டையிலை புல்லு மேயட்டும் எண்டு அவிழ்த்து விட்டம். விடுவிடெண்டு உடுப்புக்களை அவிழ்த்து எறிஞ்சு போட்டு, அந்தப் பொறிவு சரிவான இறக்கத்திலை ஆத்தங்கரைக்கு இறங்கினம். கரையோரத்திலை நிறைய வில்லோ மரம் வளர்ந்து இருந்திச்சுது. ஆத்துக்கு மேலாலை நல்ல பெலமான கொப்புகள் வளைஞ்சு தொங்கிச்சுது. அந்தக் கொப்புகளைப் பிடிச்சபடி தான் தண்ணியிலை தேகத்தை நனைக்க வேணும். கைப்பிடி வழுகிச்சுது எண்டால் ஆத்தோடை போக வேண்டியது தான். 


எப்பிடி மரக்கொப்பைப் பிடிச்சபடி ஆத்துத் தண்ணியிலை தாண்டு எழும்பிறது எண்டு அண்ணர் தான் முதலிலை செய்து காட்டினவர்.       

"கொப்பை இறுக்கிப் பிடிச்சுக் கொள். கைவிட்டாய் எண்டால் கறுமா அருவிக்குத் தான் நினைக்க முன்னாலை போய்ச் சேருவாய்." எண்டு கவனம் சொன்னவர். நானும் என்ரை கைவிரல் மொழி எல்லாம் வெளிறத் தக்கனவாய் மரக் கொப்பை இறுக்கிப் பிடிச்ச படி ஊஞ்சலாடி ஊஞ்சலாடித் தண்ணியிலை தாண்டு எழும்பிக் குளிச்சன். இப்பிடி ஆபத்தும், பைம்பலுமான ஒரு குளியல் நான் ஒருநாளும் குளிச்சதில்லை. கறுமா அருவியை நோக்கித் தண்ணி இழுத்த இழுப்பிலை என்ரை இடுப்பிலை கட்டியிருந்த உள்ளுடுப்பு இழுவுண்டு போயிட்டுது.

பின்னை நான் மரக் கொப்பைப் பிடிச்சு மேலை ஏறிட்டன். அண்ணர் என்ரை கையைப் பிடிச்சு ஏற்றி விட்டார். ரெண்டு பெரும் ஆத்துக்கு மேலாலை இருந்த ஒரு கொப்பிலை இருந்த படி உன்னுயுன்னி ஊஞ்சலாடினம். பார்த்தால் நாங்கள் ஒரு பச்சை வீட்டிலை இருக்க,  தண்ணிக்கு மேலுக்கு அந்த வீடே ஊஞ்சலாடின மாதிரி இருந்திச்சுது. ஆத்து நீரோட்டம் எங்களுக்கு நேரை கீழை குதிச்சுக் கும்மாளம் போட்ட படி ஓடிச்சுது. 

"நான் ஒண்டும் ஆபத்தான ஆறு இல்லை! என்னட்டை வா! வந்து குளி!"     எண்டு எங்களை மயக்கி மருட்டிக் கூப்பிடுமாப் போலை இருந்திச்சுது. நான் கால்விரலுகளை மட்டும் நனைக்க விரும்பினன். நீரோட்டத்தின்ரை பெலம் கால் பெருவிரலிலை தெரிஞ்சது.  அப்பிடியே என்னை உருவி இழுக்குமாப் போலை! 

அப்ப தற்செயலாய் மேலை ஏற்றத்திலை பார்த்தன், பயந்து போனன். நீளம் நீளமான ஈட்டியோடை நாலு பேர் தெங்கிலின்ரை அரணக்காறங்கள் போட்டி போட்ட படி குதிரைச் சவாரியிலை வந்து கொண்டிருந்தான்கள். ஆறு போட்ட இரைச்சலிலை குதிரைக் குளம்படிச் சத்தம் எங்கடை காதிலை விழவே இல்லை. அண்ணரும் அவங்களைக் கண்டிட்டார். அவர் ஒண்டும் பயப்பிட்ட மாதிரி அனக்குப் படேல்லை. எங்களைத் தாண்டி அவங்கள் போகட்டும் எண்டு காத்திருந்தம். ஆனால் அவங்கள் ஆத்தின்ரை போக்குக்கு எதிராய்  எங்களைத் தாண்டி ஒரு கொஞ்சத் தூரம் மேலை போய்க் குதிரையளை நிற்பாட்டிக்  கீழை இறங்கினாங்கள். ஒருவேளை கொஞ்சம் ஆறிப் போகலாம் எண்டு அதிலை இறங்கினவன்களோ? இல்லை வேறை என்னத்துக்காயும் இறங்கினவன்களோ?


"அண்ணர்! என்ன நினைக்கிறீர்? எக்கணம் உம்மைத் தேடி வந்திருப்பாங்களோ?"

"சாய்ச் ...சாய்! உவங்கள் கறுமண்யாக்காவிலை இருந்து காட்டுறோசாப்பள்ளத்துக்குப் போறாங்கள். கறுமா அருவிக்குக் கிட்டவாய் ஒரு தொங்கு பாலம் இருக்கு. அதாலை தான் வாறாங்கள். தெங்கில் தன்ரை அரணக்காறன்களை அநேகமாய் அந்தப் பாலத்தாலை தான் அனுப்பி வைக்கிறவன்."
" வாறது போறது சரி. சரி கணக்காய் இந்த இடம் பார்த்து இறங்காமல் போயிருக்கலாமே?" 
அண்ணரும் நான் சொன்னதைத் தான் நினைச்சவராம். 
"எங்களைச் சந்திக்காமல் போனாங்கள் எண்டால் நல்லது." எண்டார் 

எல்லாமாய் ஆறு பேர் அரணக்காறர் எண்டு எண்ணிப் பார்க்கத் தெரிஞ்சது. ஆத்துப் பக்கம் கைகாட்டி என்னவோ பெலத்துக் கத்திக் குழறினபடி கதைச்சவங்கள். ஆத்தின்ரை இரைச்சலை மிஞ்சி அவங்கடை இரைச்சல் கேட்டது. ஆனால் என்ன சொன்னவங்கள் எண்டு ஒண்டும் முதலிலை விளங்கேல்லை. திடீரெண்டு அவங்களிலை ஒருத்தன் தன்ரை குதிரையை விட்டு இறங்காமல் அந்த எக்கச்சக்கமான பொறிவிலை ஆத்தங்கரையைப் பார்த்து வந்தான். பாவம் குதிரை அது பயந்து பயந்து பெரிய கயிட்டப்பட்டு இறங்கினது. மற்றவங்கள் கத்திக் கத்திக் கூப்பிட்டவங்கள்.

"போகாதை பெர்க்கு! மோட்டு வேலை பார்க்காதை. எக்கணம் ஆத்தோடை குதிரையும் போய்  நீயும் போகப்போறாய்!"

ஆனால் அந்த பெர்க்கு எண்ட வெருளி ஆரின்ரையும் கதையைக் கணக்கிலை எடுத்தால் தானே? அந்த மோடன் திருப்பிக் கத்தினவன்:

" அதையும் ஒருக்கால் பார்ப்பமே! எக்கணம் நான் அந்தப் பிட்டிக்குப் போய் உசிரோடை திரும்பி வரேல்லை எண்டு கண்டால் உண்ணாணை உங்கள் எல்லாருக்கும் கள்ளு வாங்கித் தாறேன்."   அப்பத் தான் ஒண்டைக் கவனிச்சன். அந்த மொக்கு என்ன செய்ய நினைச்சது எண்டதும் அனக்குப் பிடிபட்டுது. கரையிலை இருந்து ஒரு நாலு, அஞ்சு பாகம் தூரத்திலை ஒரு பிட்டி தண்ணிக்கு மேலாலை தலை  நீட்டிக் கொண்டிருந்தது. ஓ ..ஒ அந்தப் பிட்டிக்குப் போய்வரப் போகுதாமோ? மெய் மெய்யாய் இதுக்கு மண்டைக்குள்ளை ஒண்டும் இல்லை. உசிரோடை வராவிட்டாலாம் ...கள்ளு வாங்கிப் பரிமாறுவாராம்....  மற்றவைக்கு முன்னாலை தன்ரை வீரதீரக் கூத்தைக் காட்ட நினைக்குது. 

"ஐயோ உந்த மோடன் என்ன நினைச்சவன்? எதையும் பிடுங்கிப்  பறிக்கிற உந்த வெள்ளத்தைக் குதிரை பாவம் நீந்தித் தாண்டும் எண்டு நினைச்சவனே?" அண்ணர் குதிரையை நினைச்சுக் கவலைப் பட்டவர். பெர்க்கு தன்ரை தலைக் கவசம், கம்பளி மேலங்கி, பாதணி எல்லாத்தையும் உருவிப் போட்டான். ஐயோ கறுமத்தை ! நல்ல வடிவான கறுப்பு நிற இளந்தாரிக் குதிரை. குதிரை பாவம் தடுமாறித் தவிச்சது. சனியன் பிடிச்சவன், குதிரையின்ரை பிடரியிலை ஓங்கிக் குத்தினான். அதைக் கண்டவுடனை  அண்ணரிட்டை இருந்து " அக் " எண்டொரு விம்மல் சத்தம் கேட்டது. 


குதிரையை நிற்க விடாமல் கத்திக் குழறிக் கலைச்சு அடிச்சு ஏவி ஆத்திலை இறக்கிப் போட்டான். அது பாவம் கனைச்சுக் கதறிப் பயந்தபடி ஆத்து வெள்ளத்திலை இறங்கினது. பேந்து அது பாவம் கறுமம் எதிர்நீச்சல் போட தெண்டிச்சு ஏலாமல் தத்தளிச்சது. அதுகும் தன்னாலை ஏலுமான மட்டிலை தெண்டிச்சது. மரணபயம் அதின்ரை கண்ணிலை தெரிஞ்சது. பார்க்கப் பயமாய் பாவமாய் இருந்துது. பெர்க்கின்ரை மரமண்டைக்கு அப்பத்தான் தான் இறங்கினது உசிராபத்தான காரியம் எண்டது  விளங்கினது. 


கரை ஏறுறதுக்கு குதிரையை ஏவி அடிச்சவன். கறுமப் பட்ட சீவன் அது என்ன செய்யும்?  வெள்ளம் எண்டால் கறுமா அருவிக்கு வா வா எண்டு கொற இழுவையாய் இழுத்தது. உந்த பெர்க்கு எண்டவன் தண்ணியிலை அடிபட்டுப் போனால் போகட்டும். அவனுக்கு அது வேணுந்தான். கடவுளே பாவம் அந்தக் குதிரை தப்பி விட வேணும். குதிரையும் பெர்க்கும் எங்கடை திக்கிலை வெள்ளத்திலை அள்ளுப்பட்ட படி வந்தவை. எக்கணம் எங்களைத் தாண்டிப் போச்சினம் எண்டால் பேந்து அங்காலை எட்டிப் பிடிக்கிறதுக்கு ஒரு மரக் கொப்பும் ஆத்துக்கு மேலாலை வளைஞ்ச படி இல்லை. ஒரேயடியாய் போக்கறப் போக வேண்டியதுதான். அந்த மொக்கன் பெர்க்கு மரண பயத்திலை பேய் முழி முழிச்சான்.


அண்ணரைத் திரும்பிப் பார்த்தன், விறைச்சுப் போனன். பயக் கெடுதியிலை "ஐயோ!" எண்டு கத்தினன். இவர் அண்ணர் என்ன காரியத்திலை இறங்கிறார்? தன்ரை கால் ரெண்டாலையும் மரக் கொப்பை இறுக்கிப் பிடிச்ச படி தலைகீழாய் தொங்கினவர். பெர்க்கு அவரை தாண்டி ஆத்து வெள்ளத்தோடை அள்ளுப்பட்டு போகமுன்னம் எட்டி ஒரு கொத்திலை அவன்ரை தலைமயிரைப் பிடிச்சிட்டார். மெள்ள மெள்ள அவனை மேலை இழுத்தவர். கடவுளே! ஒரு மாதிரியாய் அவனும் ஒரு கொப்பிலை தொத்திப் பிடிச்சு ஏறிட்டான். அண்ணரின்ரை கவனம் முழுக்க இப்ப குதிரையிலை.

"பரி! பரி! வா குட்டி! வா குட்டி!" எண்டு ஆதரவாய் கத்திக் கூப்பிட்டார். அது பாவம் தன்னாலை ஏலுமான மட்டிலை கரைக்கு வர தெண்டிச்சது. உந்த வெருளி பெர்க்கு அதின்ரை முதுகுக்குப் பாரமாய் இப்ப இல்லை தான், எண்டாலும் அதாலை ஒண்டும் செய்ய ஏலாமல் தண்ணிக்குள்ளை தாழ வெளிக்கிட்டது. நல்லகாலம் அண்ணர் கடிவாளக் கொடியை எட்டிப் பிடிச்சிட்டார். கடிவாளக் கொடியைப் பிடிச்சுத் தன்னாலை ஏலுமான வரை மூச்சைப் பிடிச்சு இழுத்தவர். வாழ்வோ சாவோ எண்ட இழுபறிப் போராட்டமாய் இருந்துது. 

என்னாலை தாங்க முடியேல்லை. பெர்க்கைப் பார்த்து,

" மரம் மாதிரி நிற்காமல் போய் ஒரு கை குடன். உன்ரை குதிரையைத்  தானே காப்பற்றுறதுக்கு அண்ணர் உந்தப் பாடு படுகிறார்?"எண்டு கத்தினன். அவன் அண்ணருக்குக் கிட்டத் தான் பத்திரமாய் ஒரு கொப்பிலை இருந்தவன். உதவி ஒத்தாசை செய்யப் போறானாக்கும் எண்டு நினைச்சால் அந்த விழுவான், அண்ணருக்குக் கிட்டை குனிஞ்சு,
" பேசாமல் கையை விடு அது போகட்டும். மேலை காட்டிலை ரெண்டு குதிரை மேயுது. அதிலை ஒண்டை நான் பிடிச்சுக் கொண்டு போறன். பேசாமல் விடு." எண்டெல்லோ சொன்னவன் ? கொதி கோவம் வந்தால் மனிசருக்கு இல்லாத பெலம் எல்லாம் எங்கினையோ இருந்து வரும் எண்டு கேள்விப் பட்டிருந்தனான். அது மெய்தான் எண்டதை அப்ப அண்ணரிலை பார்த்தன். பெர்க்கு மோடன் உதவி செய்யாவிட்டாலும் அண்ணர் சமாளிச்சு ஒரு மாதிரி இழுத்துப் பறிச்சுக் குதிரையைக் காப்பாற்றிப் போட்டார். நாலு காலும் பதறி உதற ஒரு பாடாய்க் குதிரை கரையேறி விட்டுது.

பேந்து பெர்க்குக்கு நல்ல பேச்சுக் குடுத்தார்.

"மரமண்டை மாதிரி மேல் வீடு கழண்ட கதை எல்லோ பறையிறீர்? என்ரை குதிரையை நீர் களவெடுத்துக் கொண்டு போறதுக்கோ உம்மை ஆத்து வெள்ளத்திலை இருந்து காப்பாற்றினநான்? ஒரு மனச்சாட்சி, ஒரு வெக்கம் எண்டு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லையே இப்பிடிக் கதைக்க? " 

உந்தப் பேச்சைக் கேட்டு பெர்க்கு வெக்கப் பட்டிருக்கலாம். நான் அவன்ரை மூஞ்சை எப்பிடி இருந்தது எண்டதைக் காணேல்லை. அவன் ஒண்டுமே பறையேல்லை. எங்களைப் பற்றி ஆர், எவர் எண்ட கதை கிதை , விளப்பம் ஒண்டும் கேட்கேல்லை. ஒரு ஒற்றைச் சொல் நன்றி கூட பறையேல்லை. கால் நடுங்கின படி நிண்ட குதிரையைத் தன்ரை பாட்டிலை பேசாமல்  கூட்டிக் கொண்டு மேலுக்கு நிண்ட தன்ரை கூட்டாளிமாரிட்டை போவிட்டான். கொஞ்சத்தாலை பார்த்தால் எல்லாருமே போவிட்டான்கள்.


நாங்கள் ரெண்டு பேரும் கறுமா அருவியடிக்குப் போனம். என்ன ஒரு பயங்கரமான வடிவு! "கடு பொடு " எண்டு ஒரு விதமான இடிமுழக்கம் போல இரைச்சல்..... வெள்ளைப் புகை கிளம்பின கணக்கிலை தூவானம் ..... அயலட்டை எல்லாம் அந்தத் தூவானம் நனைச்சடிக்க... அதிலை நனைஞ்சதாலை தண்ணி சொட்டச் சொட்ட நிண்ட  மரஞ்செடி, பாசி பிடிச்ச பாறை ....இப்பிடியிருக்க..... கறுமா அருவி போய் விழுகிற அடி எங்கை எண்டு தேடினால்..... அடி வயிறு கூசிக் கொண்டு வந்தது. அது எங்கினையோ கண்ணுக்கு எட்டாத தாழ்ப்பத்திலை இருட்டான பாதாளத்துக்குப் போய் விழுகுது.


கொஞ்சத்தாலை இருட்டத் தொடங்கினது. காற்றுக்கு ஒதுக்காக தூவானம் நனைக்காத ஒரிடம் பார்த்து பாசறைத்தீ மூட்டினநாங்கள். அந்த இராத்திரி நாங்கள் மூட்டின பாசறைத்தீ கணக்கிலை எந்த ஒரு காலத்திலையும், எந்த ஒரு உலகத்திலையும் இன்னுமொரு பாசறைத்தீ நிச்சயமாய் எரிஞ்சிருக்க மாட்டுது. 


அது ஒரு பயங்கரமான இடம். மனசுக்கு ஒரு திடுக்காட்டத்தை தந்துது. அதேநேரம் எந்த ஒரு வானம், எந்த ஒரு பூமி எங்கினையும் இப்பிடி ஒரு நல்ல வடிவான இடத்தைப் பார்க்கேலாது எண்டு நான் நினைச்சன். சுற்றவர இருந்த மலையளும்,வெள்ளம் பெருகிப் பாய்ஞ்ச ஆறும், ஆவேசமாய்க் குதிச்ச அருவியும் எல்லாமே 

பெரீ ஈ ஈ சாய் இருந்துது. அனக்கெண்டால் என்னவோ கனாவிலை மிதக்கிற மாதிரி ஒரு உணர்வு. அண்ணருக்கு சொன்னன்:
"உது ஒண்டும் உண்மை எண்டு நம்பேலாமல் கிடக்கு. உதெல்லாம் எதோ ஒரு பறணைப் பழங்காலத்திலை ஆரோ எவரோ கண்ட கனா ஒண்டின்ரை ஒரு பகுதி. "
அண்ணர் ஒரு புன்சிரிப்பு சிரிச்சார்.

அப்ப நாங்கள் கறுமண்யாக்காவையும், நஞ்சியாலாவையும் ரெண்டாய்ப் பிறிச்ச பறணைப் பழங்காலத்து ஆதித்தொன்ம நதிக்கு மேலாலை தெங்கில் கட்டுவிச்ச தொங்குபாலத்திலை நிண்டம்.  அந்தப் பாலம் கறுமா அருவிக்கு ஒரு சொட்டுத் தூரம் தான் தள்ளி இருந்தது. 


அண்ணரை ஆச்சரியத்தோடை கேட்டன்,

"எப்பிடித் தான் இந்தப் பாலத்தை அதுகும் இப்பிடியொரு படுபயங்கரப் பள்ளத்துக்கு மேலாலை கட்டி முடிச்சவங்கள்?"
"என்னெண்டு எனக்கும் அறிய விருப்பந்தான். உதைக் கட்டி ஒப்பேத்திறதுக்கு முன்னாலை எத்தினை உசிர் பலியாச்சோ? ஆவெண்டு அலறின படி ஆத்து வெள்ளத்திலை விழுந்து அள்ளுப் பட்டு கறுமா அருவியிலை எத்தினை ஆத்துமம் அடங்கிச்சுதோ?" எண்டு சொல்லி அண்ணர் இரக்கப்பட்டவர். உதைக் கேட்க அனக்கு தேகமெல்லாம் பதறினது. அந்த ஆவெண்ட அலறலின்ரை எதிரொலி எல்லாம் மலைச்சிவரிலை பட்டுத் தெறிச்சது மாதிரி அனக்கு கிடந்துது.

தெங்கிலின்ரை தேசத்துக்குக் கிட்ட நாங்கள் வந்திட்டம். பாலத்தின்ரை மறுகரையைப் பார்த்தால்.... அங்கினை ஒரு பாதை வளைஞ்சு, நெளிஞ்சு மலையிலை ஏறிப் போகுது. கறுமண்யாக்காவிலை இருக்கிற அந்தப் பறணைப் பழங்காலத்து ஆதி மலை!

"அந்தப் பாதையைப் பிடிச்சுப் போனால் தெங்கிலின்ரை கோட்டை வரும்." எண்டார் அண்ணர். அனக்கு இன்னும் தேகம் பதறினது. நாளைக்கு என்னெண்டாலும் நடக்கட்டுக்கும், இப்ப இந்த இராப் பொழுது அண்ணரோடை பாசறைத்தீயிலை குளிர் காய்ஞ்சபடி நிம்மதியாய்க் கழியட்டுக்கும் எண்டு நினைச்சன். 

பாசறைத்தீக்குப் பக்கத்திலை போய் இருந்தன். கறுமா அருவியைப் பார்க்கவும் பிடிக்கேல்லை, தெங்கிலின்ரை தேசத்துக்குப் போற பாதையைத் தொடங்கிற அந்தப் பாலத்தைப் பார்க்கவும் பிடிக்கேல்லை. கொழுந்து விட்டெரியிற அந்த நெருப்பையும், படபடத்து மேலை மலையைப் பார்த்துப் பறக்கிற பொறியையும் பார்த்தபடி இருந்தன். பார்க்கப் பார்க்க வடிவாயும் ஒரு வித பயங்கரமாயும் இருந்துது. சொலித்தும் மங்கியும் மாறி மாறி தெரிஞ்ச அந்த நெருப்பு வெளிச்சத்திலை அண்ணரின்ரை வடிவான, இரக்கமுள்ள முகத்தைப் பார்த்தன்; கொஞ்சம் தள்ளி ஓய்வாய்  நிண்ட குதிரை ரெண்டையும் பார்த்தன்.


"முந்தின தரம் நான் மூட்டினதை விட  இந்தத் தரம் மூட்டின பாசறைத்தீ இன்னுந் திறமாயிருக்கு. ஏனெண்டால் அண்ணர் உம்மோடை எல்லோ நானும் இப்ப நிற்கிறன்." எண்டு சொன்னனான். எங்கினைதான் நான் நிண்டாலும் அண்ணரும் என்னோடை நிற்கிறது ஒரு வித பாதுகாப்பு உணர்வைத் தந்தது. பூமி நச்சத்திரத்திலை நாங்கள் சீவிச்ச நாளையளிலை, உந்தப் பாசறைத்தீ  மூட்டிற நடப்புப்  பற்றி கனக்கக் கதை அண்ணர் அனக்குச் சொன்னவர் தானே? அந்தக் கதை எல்லாம் மெய் மெய்யாய் இப்ப அவரோடை சேர்ந்து அனுபவிக்கிறது அனக்கு ஒரு வகையிலை பெரிய புளுகமாய்த் தான் இருக்கு.


"ஞாவகம் இருக்கோ? அண்ணர்! பாசறைத்தீ பற்றி, மாயாசாலக் கதையள் உருவாகின காலங்கள் பற்றி எல்லாம் முன்னை ஒரு நேரம் சொன்னநீர் எல்லே?" எண்டு அண்ணரைக் கேட்டன்.

"ம்! சொன்னநான் தான். ஆனால் இஞ்சை நஞ்சியாலாவிலை இப்பிடியான பயங்கர சூனியக் கதையளும் உருவாகக் கூடும் எண்டு நான் அந்த நேரம் நினைச்சும் பார்க்க இல்லை." எண்டு பெருமூச்சு விட்டார் அண்ணர்.

"இப்பிடியே ஒரு மாற்றமும் இல்லாமல் நெடுகிலும் இருந்திடுமோ?" நான் கவலைப் பட்டன். அண்ணர் கொஞ்ச நேரம் ஒண்டும் பறையாமல் நெருப்புப் பொறியைப் பார்த்த படி இருந்தவர். பேந்து  

" உப்பிடியே நெடுகிலும் கேடுகாலம் மாறாமல் போய்விடாது. கடைசிப்போர் எண்டு ஒண்டு வரும். அதுக்குப் பிறகு, கடலும் கலங்கித் தெளிஞ்ச கணக்கிலை எல்லா தரித்திரியமும் விலகி  நஞ்சியாலாவுக்கும் ஒரு விடிவு காலம் வரும். அப்ப உருவாகப் போகிற கதையள் எல்லாம் நல்ல கதையாய், ஒரு ஆய்க்கினை அவத்தை தராத கதையாய், வடிவான பைம்பல் கதையாய் அமையும். அப்ப பார்த்தால் நஞ்சியாலாவிலை முன்னத்தையைப் போலை வாழ்க்கையை நல்ல மனநிம்மதியோடை வாழலாம்." எண்டு சொன்னார். 

தீ கொழுந்து விட்டு எரிஞ்சது. அந்த வெளிச்சத்திலை அவரின்ரை முகத்திலை எம்மளவு களைப்பும், கவலையும் இருக்குது எண்டு கண்டன்.

"ஆனால் சீனியப்பு! கடைசிப்போர் எண்டது ஒரே கொலை, வெட்டு, குத்து, சாவு, இழவு,செத்தவீடு எண்டு இனி இல்லை எண்ட பயங்கரக் கதையாய்த்தான் அமையப் போகுது. அதை ஒர்வார் தான் கொண்டு நடத்த வேணும்; நானில்லை. என்னதான் போர் எண்டாலும் கொலை செய்யிற அளவுக்கு நானில்லை." எண்டார், அண்ணர்.
"இல்லை அந்த அளவுக்கு நீர் போக மாட்டீர்" மனசுக்குள்ளை நினைச்சன். 

" அது சரி! ஏன் அந்தப் பெர்க்கு எண்டவனைக் காப்பாற்றினநீர்? அது என்ன நமக்கு நன்மை தருகிற காரியமே?" எண்டு கேட்டன்.

" அவனை காப்பாற்றினதாலை எங்களுக்கு நன்மை நடக்குமோ இல்லை தின்மை நடக்குமோ எனக்குத் தெரியாது. ஆனால் என்னதான் பகையாளி எண்டாலும் உசிராபத்தான நிலைமையிலை இருக்கிறவனைக் காப்பாற்ற வேண்டியது ஒரு மனிசனின்ரை கடமை. இல்லை எண்டால் நான் ஒரு மனிச சென்மம் இல்லை; வெறும் புழுக்கைக்குச் சமம்."
"எண்டாலும் ஒருக்கால் யோசிச்சுப் பாருமன்! தற்செயலாய் அவன் வந்து உம்மைப் பிடிச்சுக் கொண்டு போயிருந்தால்.....?" நானும் விடேல்லை.
"ஓ அப்பிடித்தான் பிடிச்சுக் கொண்டு போயிருந்தாலும், சிங்கநெஞ்சனைத் தானே பிடிச்சுக் கொண்டு போயிருப்பான்? ஒரு புழுக்கையைப் பொறுக்கிக் கொண்டு போயிருக்க மாட்டான் எல்லோ!"

பாசறைத்தீ கொஞ்சம் கொஞ்சமாய் அணைஞ்சு போனது . முதலிலை மங்கல் வெளிச்சத்திலை சுற்று வட்டாரம் எல்லாம் ஒரு மென்மையான, ஆதரவான தோற்றமாய் தெரிஞ்சது. பேந்து எல்லாம் ஒரே மையிருட்டு. ஒரு சின்ன பொறி மினுங்கல் வெளிச்சம் கூட இல்லை. கறுமா அருவியின்ரை பேயிரைச்சல் மட்டும் அந்த மையிருட்டுக்குள்ளை ஒரு பழக்கப் பட்ட துணை போலை கூட இருந்துது. 


அண்ணரை நல்லாய் நெருங்கி ஒட்டினபடி  இருந்தன். ரெண்டு பேரும் அந்த மையிருட்டுக்குள்ளை, பாறைச்சிவரிலை சார்ந்து இருந்து கொண்டு கதைச்சம். அனக்கு அந்தநேரம் ஒண்டுக்கும் பயமிருக்கேல்லை தான், எண்டாலும் என்னவோ சொல்லத் தெரியாத ஒரு குழப்பத்திலை மனசு கிடந்தது அல்லாடினது. நாங்கள் கொஞ்சத்துக்கு எண்டாலும் கண்ணுறங்க வேணும் எண்டு அண்ணர் சொன்னவர். 


அனக்கெண்டால் மனக்குழப்பத்திலை நித்திரையும் பிடிக்கேல்லை, கதைக்கவும் பிடிக்கேல்லை. உந்த மனக்குழப்பம் ஒண்டும் இருட்டை கண்டு கிளம்பேல்லை. ஏதோ என்னவோ வேறை ஒண்டு. என்னெண்டு தான் அனக்கும் பிடிபடேல்லை. இம்மளவுக்கும் அண்ணரும் அனக்குப் பக்கத்திலை தான் இருந்தவர்.


இருந்தாப் போலை எங்களுக்கு மேலாலை கறுமண்யாக்காப் பக்கமாய் ஒரு மின்னல் மின்னினது. மலைச்சிவர் நடுங்க இடி முழங்கினது. எக்கணம் புயல் அடிக்கப் போகுதோ? திரும்பவும் பறணைப் பழங்காலத்து ஆதித் தொன்ம மலையளுக்கு  இடையாலை இடி முழங்கினது. அந்த இடி முழக்கத்திலை கறுமா அருவியின்ரை பேயிரைச்சல் கூட காதிலை விழேல்லை. மாறி மாறிக் கிளம்பின மின்னல் எல்லாம் முந்தினதைப் பிந்தினது கலைச்சுப் பிடிச்ச சீர். இடைக்கிடை தீப்பிடிச்சு எரிஞ்ச மாதிரி மின்னல் தெரிஞ்சது. மின்னல் வராத இடைவெளியிலை பறணைப் பழங்காலத்து இரவு நேரத்து இருட்டு வந்து போர்த்தின கணக்கிலை ஒரே மையிருட்டு.


திரும்ப ஒரு மின்னல் கிளம்பிச்சுது, அனல் தெறிக்க நல்ல வெளிச்சமாய், நாலைஞ்சு நொடி நிண்டு நிலைச்சபடி!  உதென்ன ஒரு வினோதமான மின்னல் வெளிச்சமாய்க் கிடக்குது? அந்த வெளிச்சத்திலை சுற்று வட்டாரம் முழுக்க பகல் வெளிச்சமாய் சகலதும் தெரிஞ்சது. 

அந்த வெளிச்சத்திலை நான் கண்டது கத்துலா! அய்யோ கத்துலா!

                                    ( கொஞ்சம் பொறுங்கோ! பேந்து மிச்சக் கதைக்கு வாறன்.)

சொல்விளக்கம்:
அண்டிரவு- அன்றிரவு 
வெள்ளாப்பு- வெளிச்சம் பரவும் அதிகாலைப் பொழுது 
முழிப்பு- விழிப்பு 
எக்கணம்- எக்கணமும் - எந்த நேரத்திலும் 
சாதுவாய்- மெதுவாய் 
சுவாத்தியம் - மனநிறைவு 
தன்னிட்டவாரம் - தன்விருப்பப் படி 
வெளிவெட்டை < வெட்டவெளி 
விட்டாத்தி< விட்டாற்றி - இளைப்பாறுகை 
மரப்பத்தை< மரப்பற்றை-மரப்புதர் 
சீக்கை- சீழ்க்கை 
பங்கார்< பங்கை பார்- அங்கே பார் 
வியளம்- சேதி, தகவல் 
சாய்! - சே!
மேலிலை< மேலிலே- உடம்பிலே 
வெக்கை- வெப்பம், சூடு 
காங்கை- வெயில் வெக்கை 
திவ்வியமாய்- அமுதமாய் 
மொத்தமான, தொக்கையான - தடித்த 
கட்டை- குள்ளம் 
அங்கத்தையாலை- அங்கிருந்து 
அசம்பி - பயணிகள் தோட்பை 
மெத்த- நிறைய
யூர்குப்பார் பழம் - jordgubbar பழம் - stawberry  பழம் 
தாண்டு < தாழ்ந்து- அமிழ்ந்து 
கைவிரல் மொழி- கைவிரல் கணு, கைவிரல் மூட்டு 
இழுவுண்டு= இழு+உண்டு- இழுபட்டு 
உன்னியுன்னி- உந்தியுந்தி 
மோட்டு வேலை- மூட வேலை
வெருளி- சோளக்கொல்லைப் பொம்மை,
                 தோட்டத்தில் பறவைகளை, மிருகங்களைப் பயப்படுத்தக் கட்டிவைக்கும் பொம்மை, 
                  மூளையற்ற பேயன்  
மோடன்- மூடன் 
பிட்டி- திட்டி 
தெண்டித்தல்- முயற்சித்தல்  
மேல்வீடு கழண்ட கதை - மூளை இல்லாத பேச்சு 
தாழ்ப்பம்- ஆழம்
ஒப்பேத்திறது<  ஒப்பேற்றுவது- செய்து முடிப்பது 
பேந்து< பெயர்ந்து - பின்பு 
அல்லாடினது- அலைந்தது 
பிடிபடுதல்- விளங்குதல், சண்டைபிடித்தால் Author: ந.குணபாலன்
•12:00 PM


                                                                          மூலக்கதை
 : Bröderna Lejonhjärta


                                                       

                                                                         எழுத்தாளர் : அஸ்த்ரி   லிண்ட்கிறேன் , சுவீடன்  
                                                                              (ASTRID   LINDGREN ,     SWEEDEN)
                                                                  (14/11-1907 --- 22/01-2002)
                                                                    ஓவியர்:இலூன் வீக்கெலான்ட்
                                                                                             ( Ilon Wikeland)
                                                                      தமிழாக்கம் :  ந. குணபாலன்துடிப்பு பதினொன்று : பாதாளச் சுரங்கம் ரெண்டு மூண்டு நாளாய்த் திண்டு தள்ளின பண்டி இறைச்சி, குடிச்சு முடிச்ச சாராயம், பத்தும் பத்தாததுக்கு இருவது வெள்ளைக்குதிரை பரிசு எண்ட அறிவிப்பு எல்லாமாய்ச் சேர்ந்து அரணக்காறங்களை உசுப்பேத்தி விட்டுது. இப்ப எல்லாரும் அண்ணரைத் தேட வெளிக்கிட்டிட்டாங்கள். பொழுது விடிஞ்சதிலை இருந்து பொழுதறு மட்டும் தேடுதல் வேட்டை. அண்டைக்கு காட்டுறோசாப் பள்ளத்திலை அவங்கடை கால் மிதிபடாத ஒரு வீடு, ஒரு வளவு இல்லை. பத்தை செத்தை, பள்ளம் பறுகு, மூலை முடுக்கு, கிணறு, துலாமரம், பத்தல், தொட்டி ஏன் கனக்கப் பறைவான்? ஒரு மூத்திரக்கோடி தன்னும் தள்ளுபடியில்லை.  சிங்கநெஞ்சனைக் கண்டு பிடிக்காட்டாலும் ஒரு சின்னத் தடயம் எண்டாலும் கண்டுபிடிக்க வேணுமாம்.

கட்டாரும், வெட்டாரும் ஊரைச் சுற்றிக் குதிரையிலை போய்   என்ரை அண்ணரைப் பற்றிய  அறிவித்தலை கொம்பு வாத்தியத்தைப் பெலத்து ஊதி எல்லாருக்கும் கேட்க வாசிச்சவங்கள். என்ரை காதிலையும் அந்த அறிவித்தல் வந்து விழுந்தது தான். <எமது பெரு மதிப்புக்குரிய தெங்கில் நயினார் அவர்களுக்கு எதிராகச் செயற்படுபவன், எங்கள் எல்லோரதும் பகைவன், யோனத்தான் சிங்கநெஞ்சன் என்பவன் ,சட்ட விரோதமாக ஊருக்குள் புகுந்து விட்டான். இரகசியமாக எங்கோ ஒரு மறைவிடத்தில் பதுங்கி இதுவரையும் இருக்கிறான். கடுக்கண்ட வயசு, இளமஞ்சள் நிற தலைமுடி, கரு நீலக் கண்கள், மெல்லிய தேகம், செந்தளிப்பான  தோற்றமும், கண்கவர் அழகும் கொண்டவன். அவனை  ஒளித்து வைத்திருப்பவருக்கு மரணதண்டனை. கையும் களவுமாகப் பிடிக்க உதவி செய்பவருக்கு இருபது  வெள்ளைக் குதிரைகள்  வெகுமானம். >

உதெல்லாம் அண்ணரைப் பற்றிய யூச்சியின்ரை வருணனை விளக்கமாய்  இருக்க வேணும். பின்னை வேறை என்னவாம்? ஒரு அரணக்காறனுக்கும் அண்ணர் என்ன நிறம் எண்டு கூடித் தெரியாது.

கட்டாரும், வெட்டாரும் ஊர் சுற்றி கொம்பூதிச் சொன்ன படி இருக்கத் தக்கனவாய் இருக்க பெத்தய்யா வீட்டுக்கு, ஒருத்தர்,ரெண்டு பேராய்  அரணக்காறங்கள் கவனம் இல்லாத தருணங்கள் பார்த்து சனங்கள் மாறி மாறி வந்த சீர். முன்னுக்கு தெருப்பக்கத்துத் தலைவாசலாலை வராமல், பின்னுக்குக் கோடிப்பக்கம் இருந்த வேலிப் பொட்டுக்குள்ளாலை பார்த்துப் பதுங்கி வந்தவை. வந்த சனம் அண்ணருக்கு பயணம் சொல்லிப் போனதுகள்.  அண்ணர்  செய்த உதவியளுக்கு எல்லாம் மெத்தப் பெரிய உபகாரம் எண்டு நன்றி சொல்லிச்சினம். அனக்கு அடிதலைப்பு ஒண்டும் பிடிபடேல்லை. சொல்லப்போனால் நான் அறியாத கன சாதனை தான் அண்ணர் நடத்தியிருக்கிறார் போலை. ஒருத்தரும் வெறுங்கையோடை வரேல்லை. தங்கள் தங்களுக்கே சாப்பாடு ஆனவாகிலை இல்லாத நிலைமையிலும் ஒரு துண்டு பாண் எண்டாலும் கொண்டு வந்து தந்தவை. 

"உதென்ன இது? எனக்கேன் இம்மளவும்? முதலிலை நீங்கள் என்ன இண்டைக்குத் திண்டநீங்கள் எண்டு சொல்லுங்கோ" எண்டு அண்ணரும் ஒராள் விடாமல் கேட்டவர். அவையளின்ரை முகத்தை முறிக்கக் கூடாதெண்டு கொண்டு வந்த சாப்பாடுகளிலை கொஞ்சம் கொஞ்சம் வாங்கிக் கொண்டு மிச்சத்தை வலுக் கட்டாயமாய்த் திருப்பி விட்டவர்.  

"அது காரியமில்லை. நீர் வெளிக்கிடிற பயணம் எக்கச்சக்கமான பயணம். பதிவிலை மறைஞ்சு எவ்வளவு நேரம், எத்தினை நாள் கணக்கிலை காத்திருக்க வேணுமோ? உமக்கு தேவையான அளவு சாப்பாடு கைவசம் இருக்க வேணும் ராசா." எண்டு சொல்லிச்சினம். 

கண்ணிலை கண்ணீர் கசிய 

"உம்மை எங்களாலை எந்தக் காலத்திலையும் மறக்கேலாது யோனத்தான். சுகம்பெலமாய் எடுத்த காரியத்திலை வெற்றியோடை திரும்பிவாரும்." எண்டு சொல்லி அண்ணரை அணைச்சுப் பயணம் சொல்லிச்சினம்.
"ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ. உங்கடை புண்ணியத்திலை நான் நல்ல சுகமாய் இருப்பன். நானும் பத்திரமாய்ப் போட்டுவாறன்,  நீங்களும் பத்திரமாய் இருங்கோ. தீர யோசிக்காமல் உணர்ச்சி வசப்பட்டு நடந்து, உங்கடை உங்கடை குடும்பங்களுக்கு கயிட்ட துன்பத்தைக் குடுத்திடாதையுங்கோ!" எண்டு அண்ணரும் அன்போடை கதைச்சுப் பயணம் சொன்னவர். பேந்து அவசர அவசரமாய் கட்டார் வெட்டாரின்ரை அலப்பறையைக் கேட்க போச்சினம். எல்லாம் சும்மா ஒரு பைம்பலுக்குத் தான். 

எங்கடை மத்தியாசு வளவுக்கும் அரணக்காறங்கள் வந்து பூர்ந்தாங்கள். நான் அடுப்படியிலை ஒரு வாங்கிலிலை பேயடிச்ச மாதிரிப் பயத்திலை இருந்தன். என்னாலை அசைய முடியேல்லை. ஆனால் பெத்தய்யா சரியான கடுப்பிலை இருந்தவர்.

"என்ன மண்ணாங்கட்டியை இஞ்சை வந்து தடவுறியள்?" எண்டு கேட்டார்.
"உந்தச் சிங்கநெஞ்சன் புராணமெல்லாம் நான் நம்ப மாட்டன். எல்லாம் நீங்களாயே இட்டுக்கட்டின கதை. எங்களை எல்லாம் நிம்மதியாய் இருக்க விடாமல் வந்து எல்லாத்தையும் பிரட்டிக் கொட்டிறதுக்கு  உங்களுக்கெல்லாம் இது ஒரு சாட்டு." எண்டு பொரிஞ்சு தள்ளினார். மெய்தான் எல்லாத்தையும் பிரட்டிக் கொட்டினவங்கள். முதலிலை பெத்தய்யாவின்ரை படுக்கை அறைக்குப் போய் அலமாரியிலை கிடந்த உடுப்பு, படுக்கைச்சீலை எல்லாம் நிலத்திலை இறைச்சுக் கொட்டினவங்கள். சரியான மோடுகள். அண்ணர் என்ன அலமாரிக்கு உள்ளுக்கை போய் குடியிருக்கிறாராமே? 

" ஏன் அந்த சட்டிபானை அடுக்கி வைக்கிற அலமாரியை விட்டனீங்கள்?  அதையும் துப்பரவாக்கினால் நல்லதெல்லே?" எண்டு பெத்தய்யா சீண்டி விட்டார். அவங்களுக்கு எரிச்சல் கிளம்பினது. அடுப்படிக்குள்ளை வந்தாங்கள். எல்லாத்தையும் கீழை இழுத்துக் கொட்டினான்கள். நான் வாங்கிலை விட்டு அரங்கேல்லை. உள்ளாலை அனக்கு பயத்திலை காய்ச்சல் கிளம்பின மாதிரி  இருந்திச்சுது. அண்டிரவு தான் அண்ணரும் நானும் சுரங்கத்தாலை காட்டுறோசாப் பள்ளம் விட்டுப் போறது எண்டு திட்டம். ஐயோ இந்த நேரம் பார்த்துப் பிடிபட்டுப் போனார் எண்டால்? கடைசி நேரத்திலை எல்லாம் கொட்டிக் குலைஞ்சு போய்விடக் கூடாது.


பெத்தய்யா குடைவை மறைக்கிற அலமாரி முழுக்க பழைய உடுப்பு, கம்பளி ரோமம், கண்டது கடியது, கஞ்சல் குப்பை கசாகூளம் எல்லாம் போட்டு அடைஞ்சு வைச்சிருந்தவர். ஏனெண்டால், உள்ளுக்கை இருந்து ஒரு மெல்லிய சத்தம் கூடக் கசிஞ்சு வந்திடக் கூடாது எண்டுதான். அங்கை தானே அண்ணரின்ரை ஒளிச்சிருக்கிற இடம்? அவன் ஒரு அரணக்காறன் தன்ரை தோளை முட்டுக் குடுத்து அலமாரிய அரக்க வெளிக்கிட்டான். வீடு முழுதும் இடிஞ்சு தரை மட்டமாகக் கத்தவேணும் போலை கிடந்துது. அவனை மனசார திட்டினன். அவன்ரை தடிச்ச கையும், தொக்கையான  கழுத்தாங்குத்தியும், நெத்தியிலை இருந்த பாலுண்ணியும் பார்க்கப் பார்க்க வெறுப்பாய் இருந்திச்சுது. அலமாரியை அரக்கப்  போய் , குடைவின்ரை தட்டிக் கதவு அவன்ரை கண்ணிலை பட்டுது எண்டு கண்டால், கதை கந்தல்தான்.


இருந்தால் போலை கூச்சல் ஒண்டு கேட்டிச்சுது. பெத்தய்யா தான் கத்தினவர். 

"ஐயோ! நெருப்பு! நெருப்பு! உங்கடை தெங்கில் சொல்லி விட்டவனே வீடுகளுக்கும் நெருப்பு வையுங்கோடா எண்டு?" எப்பிடி நெருப்புப் பத்தினது எண்டு தெரியேல்லை. ஆனால் மெய்மெய்யா நெருப்பு பிடிச்சிட்டுது. நிலத்திலை அள்ளி வீசின கம்பளி ரோமம் அடுப்பு மேடைக்குக் கிட்டவாய்  கிடந்தது, அடுப்பிலை இருந்து பொறி பறந்திருக்க வேணும், புசு புசு எண்டு எரியத் தொடங்கினது. அரணக்காறங்கள் நெருப்பை மிதிச்சு அணைக்கப் பார்த்தாங்கள். ஆற்றாக் கடைசியிலை ஓடிப்போய்த் தண்ணியைப் பீப்பாயோடை  தூக்கிவந்து ஊத்தி அணைச்சாங்கள். நெருப்பு அணைஞ்சு போச்சு ஆனால் பெத்தய்யாவின்ரை கோவமும், திட்டும் குறையேல்லை. 


"ஒரு புறமறிவு எண்டது இல்லாத சென்மங்கள். கண்கடை இருக்க வேண்டிய இடத்திலை இல்லாமல் எங்கினை அடைவிலை போட்டுதாம்? இப்பிடியே ஒரு கவனமில்லாமல் ஆரும் கம்பளி ரோமத்தை அடுப்பு மேடைக்குக் கிட்ட விட்டு எறிவினம்?" பழஞ்சீலை கிழிஞ்ச மாதிரிப் பெத்தய்யா அவங்களைப் பேசினவர். அந்தப் பாலுண்ணி நெற்றிக்காறனுக்கு சினம் கிளம்பினது.

"வாயை மூடு கிழடா. இனியும் திறந்தாய் எண்டால் ஒரேயடியாய் மூட வைப்பன்." எண்டு அதட்டினான். அனக்குப் பயம் பயமாய்க் கிடந்துது. ஆனால் இந்தப் பெத்தய்யா எண்டால் ஒண்டுக்கும் வெருளேல்லை .

"அள்ளி எறிஞ்சதெல்லாம் ஆராம் உங்கடை குஞ்சியப்பனே வந்து எடுத்து அடுக்கிறது? பார்! பார்! சேறும் சுரியுமாய் பண்டி உழக்கின நிலம் மாதிரி கிடக்கு. ஒரு வீடு வாசல் மாதிரிக் கிடக்கே?" எண்டார். அவரின்ரை நோக்கம் எல்லாம் வலு கெதியிலை அவங்களைப் போக்காட்ட வேணும் எண்டதுதான். பற்றைக்கு எறிஞ்ச கல்லு முசலுக்குப் பட்ட மாதிரி பெத்தய்யாவின்ரை கதை கேட்ட அரணக்காறங்கள் 

"உன்ரை பண்டிக் கொட்டிலை நீயே வழிச்சுத் துடை." எண்டு சொல்லிவிட்டு நடையைக் கட்டினாங்கள்.

"நல்லகாலத்துக்குத் தான் நெருப்புப் பத்தினது. அண்ணருக்கும் நல்லகாலம்." எண்டு பெருமூச்சு விட்டன். பெத்தய்யா தன்ரை நுனி விரல்களை ஊதினார். 

" ஓம் சில சில நேரங்களிலை சின்னச் சின்ன நெருப்புக்களும் நல்லதுக்குத் தான். ஒரு அந்தர அவசரத்துக்கு வெறுங்கையாலை அடுப்பிலை இருந்து தணலை எடுக்கவும் மனிசர் பழகி இருக்க வேணும்." எண்டார் பெத்தய்யா. ஓகோ! அப்ப பெத்தய்யா தான் நெருப்புக்குக் காரணமோ? வந்த நெருக்குவாரம் இன்னும் முழுசாய்த் தீர்ந்த பாடில்லை. வீட்டை விட்டு வெளியேறின ரெண்டு அரணக்காறனும் குதிரைமாலுக்குள்ளை போய்த் தடவினான்கள். அந்தப் பாலுண்ணி நெற்றிக்காறன் பெத்தய்யாவிட்டை திரும்ப வந்தான். 

"உன்னட்டை ரெண்டு குதிரை நிக்குது கிழடா! ஒண்டுக்கு மேலை வைச்சிருக்க அனுமதி இல்லை எண்டது தெரியாதோ?" எண்டு கேட்டான். குதிரைமாலிலை வியாழரையும், வெள்ளியாரையும் ஒருமிக்கக் கண்டிட்டான். 
"இண்டிரவு அக்கரையிலை இருந்து ஆள் வரும். அப்ப அந்த வெள்ளை நெற்றிக் குதிரையைத் தெங்கில் நயினாருக்குக் குடுத்து அனுப்பு." எண்டான்.
"ஐயோ! அது இந்தப் பெடியின்ரை எல்லோ?" எண்டு மறுத்துப் பார்த்தார்.
" ஓகோ! அப்பிடியோ? சரி இனி அது தெங்கில் நயினாரின்ரை சொத்து." எண்டு விசமத்தோடை சொன்னான்.  

நான் எண்டால் வெள்ளியாரை நினச்சு அழ வெளிக்கிட்டன். ஐயோ இண்டைக்கு எண்டு பார்த்தெல்லோ அண்ணரும் நானும் வெளிக்கிடப் போறம்? அந்த நீளமான சுரங்கம் தோண்டி முடிஞ்சுது. இப்பத்தான் அனக்கு ஒரு கவலை தொட்டிச்சுது. நாங்களே ஊர்ந்து தவண்டு போற சுரங்கத்தாலை எப்பிடி வியாழரையும், வெள்ளியாரையும் கொண்டு போறதாம்? அதுகள் பாவம் எப்பிடி மனிசரைப் போலை தவழுங்கள்?  உது பற்றி முன்னை பின்னை ஒரு எப்பன் தன்னும் யோசிச்சே பாராத வெருளி வெங்காயம் தான் நான். பேசாமல் பெத்தய்யாவின்ரை பொறுப்பிலை தான் விட்டிட்டுப் போக வேணும். அது இன்னும் துன்பமான காரியமெல்லோ? வெள்ளியாரை தெங்கிலுக்கு எண்டு வந்து பிடிக்கப் போறாங்கள். 


பாலுண்ணி நெற்றிக்காறன் ஒரு சின்ன மரச்சில்லு ஒண்டை தன்ரை மடியிலை எடுத்துப் பெத்தய்யாவின்ரை மூக்குக்கு நேரை நீட்டினான். இன்னும் என்ரை நெஞ்சு வெடிக்குமாப் போலை சொன்னான். 

"இந்தா! இந்த இலச்சினையை பிடி."
"உது என்ன கலியாணத்துக்கு எனக்கு?" எண்டு பெத்தய்யா கேட்டார்.
"இரவைக்கு குதிரை பிடிக்க வாற ஆளுக்கு அடையாளம் தெரியிறதுக்காக இதை வாசல் கதவிலை தொங்க விடு. நீ குதிரையை மனம் விரும்பித் தான் தெங்கில் நயினாருக்குக் குடுக்கிறாய் எண்டதுக்கு இது அடையாளம்."
" கேகே! நான் ஒண்டும் விரும்பிக் குடுக்கேல்லை. விருப்பம் இல்லாமல் பறி குடுக்கிறன் எல்லோ?" பெத்தய்யா வாயடிச்சார். அப்ப அந்தச் சனியன் பிடிப்பான் வாளை உருவினான்.  

" நீ மனம் விரும்பித் தான் குடுக்கிறாய் கண்டியோ! வாற ஆளிட்டை இந்த இலச்சினையையும் குடுத்து அனுப்பு. அந்தாள் குதிரையோடை கறுமண்யாக்காவுக்குப் போய்  நீ மனம் விரும்பித் தந்ததுக்கு அத்தாட்சியாய் இந்த இலச்சினையைக் காட்ட வேணும். ஏனெண்டால் எங்கடை தெங்கில் நயினார் ஆரும் மனம் விரும்பித் தாற அன்பளிப்பைத் தான் ஏற்றுக் கொள்ளுவார். விளங்கிச்சோ கிழடா?"  எண்டு சொல்லிப் பெத்தய்யாவைப் பிடிச்சுக் கீழை விழத் தக்கனவாய் தள்ளிப் போட்டுப் போவிட்டான். நல்ல காலம் பெத்தய்யா விழுந்து அடிகிடி படாமல் சமாளிச்சிட்டார். அவங்கள் அடுத்த பக்கம்   தேடுதல் வேட்டைக்குப் போட்டாங்கள்." நல்ல பகிடி! தெங்கில் நயினாராமாம், அவருக்கு ஆருமாம் மனம் விரும்பிக் குடுக்கிறதாமாம்,  அன்பளிப்பாமாம்,   அதைத் தானாமாம்  ஏற்றுக் கொள்ளுவாராமாம்!" எண்டு பொரிஞ்சு தள்ளினார். பாவம் வேறை என்ன செய்யிறது? அவங்கள் சொன்னது மாதிரி வாசலிலை இலச்சினையைத் தொங்க விட்டார். 


அண்டு பின்னேரம் நாங்கள் மூண்டு பேரும் ஒண்டாயிருந்து கடைசியாய் சாப்பிட்டம். பெத்தய்யா கோதுமைக் கஞ்சி காய்ச்சித் தந்தவர். மூண்டு பேருமே கவலையாய் இருந்தம். நான் கூடுதலாய் துக்கப் பட்டு அழுதன். காடுமேடு குண்டுகுழி எல்லாம் தாண்டி என்னைப் பத்திரமாய்க் காவி வந்த வெள்ளியாரை நினைச்சு அழுதன். என்ரை சொந்தப் பேரனார் மாதிரி என்னைப் பராமரிச்ச பெத்தய்யாவைப் பிறிஞ்சு போறதை நினச்சு அழுதன். அரணக்காறன் தள்ளி விடேக்கை ஒண்டுமே செய்ய முடியாத ஒரு சின்னப் பொடியனாய்ப் போட்டேனே எண்டு அழுதன். 


அண்ணர் ஒண்டும் பறையாமல் எதோ கடுவலான யோசினையிலை இருந்தார். பேந்து முணுமுணுத்தார்.

"எனக்கு மட்டும் குறியீட்டுச்சொல்லு தெரிஞ்சுது எண்டால்....."
"என்ன குறியீட்டுச்சொல்லு?"
"பெருங்கதவத்தாலை போற வாற நேரம் தெங்கிலின்ரை ஆக்கள் சொல்லிறது. அதைச் சொல்லாமல் போகவரேலாது தெரியுமோ?"
"அனக்குத் தெரியும். குறியீட்டுச்சொல்லும் அனக்குத் தெரியும்."

 < சகல அதிகாரங்களும் வரந்தரும் தெங்கில் நயினார் ஒருவருக்கே!>

"யூச்சி சொல்லினதைக் கேட்டநான் எண்டு உங்களுக்குச்  சொல்ல இல்லையோ?"

அண்ணர் என்னைக் கொஞ்ச நேரம் கண்ணிமை வெட்டாமல் பார்த்தார். பேந்து சிரிக்க வெளிக்கிட்டார்.

"சீனியப்பு நீ எண்டால் எனக்கு நல்ல விருப்பம். உனக்குத் தெரியும் தானே?" எண்டார். குறியீட்டுச்சொல்லைக் கேட்டு அவருக்கு என்ன அப்பிடிப் புளுகு எண்டு அனக்கு பிடிபடேல்லை. உவர் தான் பெருங்கதவத்தாலை போகேலாதே? ஆனால் அம்மளவு கவலை இருக்கேக்கையும் அவரைக் கொஞ்சம் உற்சாகப் படுத்த அந்தக் குறியீட்டுச்சொல்லு உதவினதை இட்டு அனக்கும் திறுத்தி தான். 

பெத்தய்யா தன்ரை படுக்கை அறையை ஒதுக்கி அடுக்கப் போனார். அண்ணரும் பின்னாலை இழுபட்டார். என்னவோ குசுகுசுத்திச்சினம். பெரிசாய் அனக்கு ஒண்டும் கேட்கேல்லை. கடைசியிலை அண்ணர் சொன்னது சாதுவாய்க் கேட்டது.

"என்னாலை ஏலாமல் போச்சுது எண்டால் என்ரை தம்பியை நீங்கள் தான் பாதுகாக்க வேணும்." பேந்து அனக்குக் கிட்ட வந்தார்.
" சொல்லிறதைக் கவனமாய்க் கேள் சீனியப்பு! நான் முதலிலை கிளம்பிறன். என்ரை தகவல் வாற வரைக்கும் நீ பெத்தய்யாவோடை இருக்க வேணும். சிலநேரம் கொஞ்ச நாள் செல்லக் கூடும். நான் போய் ஒருசில காரியங்களை ஒழுங்கு படுத்த வேணும்."
ஓ ஓ ....   அனக்கு உந்தக் கதையே பிடிக்கேல்லை. ஆரையும் வருவினம் எண்டு காத்திருந்து அனக்குப் பழக்கமில்லை. அதுகும் இப்ப பயப்பிட்டபடி இருக்கிற நேரத்திலை. அண்ணருக்கு எந்த ஆபத்தும் கோட்டைச் சிவருக்கு அங்காலை வந்து சேராது எண்டது, ஆருக்குத் தெரியும்? அப்பிடி என்ன காரியம் செய்ய வெளிக்கிட்டவர்  ஒருவேளை அது ஏலாமல் போகிறதுக்கு? அப்பிடி ஏலாமல் போற கட்டத்திலை என்ன செய்வார்? 

"நீ இப்பிடிப் பயப்பிடக் கூடாது சீனியப்பு. நீ கார்ல் சிங்கநெஞ்சன் எண்டதை எக்காலமும் மறந்திடாதை!" பேந்து பெத்தய்யாக்கும் அனக்கும் பயணம் சொல்லிப் போட்டு சுரங்கத்திலை இறங்கினார்.  கடைசியாய் சுரங்கத்துக்குள்ளை அவரின்ரை கை அசைஞ்சு பிரியாவிடை சொன்னதைத் தான் கண்டம். இப்ப தனிச்சுப் போனம், நானும் பெத்தய்யாவும்.
"அகிளான் மாதிரி ஒருத்தன் இப்ப தனக்குக் கீழாலை போய்க் கொண்டிருக்கிறான் எண்டதை தடியன் தொடிக்கி கனவிலையும் நினைச்சுப் பார்த்திருக்க மாட்டான்." எண்டு பெத்தய்யா சிரிச்சார். 
"இல்லை. ஒருக்கால் யோசிச்சுப் பாருங்கோ. அகிளான் வெளியாலை தலையை நீட்டிற நேரம், கையிலை உள்ள ஈட்டியைக் குறி பார்த்து எறிய மாட்டானே?" எண்டு நான் கவலைப் பட்டன். 

அனக்கு ஒரே துக்கம் துக்கமாய் வந்துது. குதிரைமாலுக்கை வெள்ளியாரிட்டை போனன். வெள்ளியாரிட்டை ஆறுதல் தேடித் போறது எக்கணம் இதுதான் கடைசித் தரம். ஆனால் இனிமேலை அதைக் கண்கொண்டு காணவே முடியாது எண்ட நிலைமை வந்த பிறகு என்னத்தை நினைச்சு ஆறுதல் படுகிறது? 


பின்னேரத்துச் சாய்ஞ்ச வெய்யில் இன்னும் கோட்டை மதிலுக்குப் பின்னாலை மறையேல்லை. குதிரைமாலிலை உள்ளுக்கை   அரையிருட்டாய் இருந்துது. சின்ன யன்னல், அதுகும் கிழக்குப் பார்த்த படி, அதினாலை உள்ளுக்கை சரியான வெளிச்சம் இல்லை. அப்பிடி இருந்தும் என்னைக் கண்டதும் வெள்ளியார் ஆர்வத்தோடை என்பக்கம் திரும்பினதைக் கண்டன். நான் போய் அதின்ரை கழுத்தைக் கட்டிப் பிடிச்சன். இப்பிடி ஒரு நிலைவரத்தை நான் விரும்பி உருவாக்கவில்லை எண்டது வெள்ளியாருக்கு விளங்க வேணும் எண்டு விரும்பினன். 


"ஆனால் சிலநேரம் இந்த நிலைவரத்துக்கு நான்தான் பொறுப்பாளி." எண்டு சொல்லி அழுதன். 

"நான் செர்ரிப்பள்ளத்திலை பேசாமல் பறையாமல் இருந்திருந்தால் நீயும் தெங்கிலின்ரை கையுக்கை போகவேண்டிய கட்டாயம் வந்திருக்காது. என்ரை பிழையைப் பொறுத்துக் கொள்,வெள்ளியார்! அனக்கு எல்லாத்தையும் மறந்த மாதிரி இருக்க, நடக்கத் தெரியேல்லை."
என்ரை மனக்கவலை வெள்ளியாருக்கு விளங்கி இருக்க வேணும். தன்ரை மெதுமையான வாய்ப்பகுதியாலை என்ரை காதடியை தடவினது. அழ வேண்டாம் எண்டு என்னைக் கேட்குமாப் போலை இருந்திச்சுது. 

ஆனால் என்னாலை அழுகிறதை நிற்பாட்ட முடியேல்லை. கண்ணீர் வற்றும் வரைக்கும் அழுதன். வெள்ளியாரின்ரை மேலை சீப்பாலை உருவி தேய்ச்சு மெருகேத்தினன். கடைசியாய் மிஞ்சிக் கிடந்த அந்தக் கொஞ்சக் கொள்ளையும் ரெண்டு குதிரையும் தின்னட்டும் எண்டு குடுத்தன். வியாழரும் பாவந்தானே? வெள்ளியாரின்ரை மேலை உருவி மெருகேத்த மெருகேத்த என்ரை நினைப்பு முழுக்க முழுக்க நடக்கக் கூடாத நடப்புக்களை நினைச்சபடி.


வெள்ளியாரைக் கொண்டுபோக எண்டு வாறவன் சும்மா கீழை விழுந்து செத்துப் போகட்டும். ஆத்தங்கரைக்கு வரு முன்னமே செத்துத் துலையட்டன். நான் உண்மையிலையே இப்பிடி இன்னொருத்தன் சாக வேணும் எண்டு நினைக்கிறது எம்மளவு கொடுமை, பாவமும் தானே? அதுகும் எய்தவன் இருக்க அம்பை நொந்த மாதிரி.  நினைச்சாப் போலை என்ன எல்லாம் நடக்கப் போகுதே?சாய்ச் சாய்! அவன் இவ்வளவுக்கும் படகிலை ஏறி இருப்பான். கொள்ளை அடிக்கிற பொருள் எல்லாம் கொண்டு போய்ச் சேர்க்கிறது அந்தப் படகு தான். எக்கணம் இத்தறைக்கு கரைக்கு வந்திருப்பான். ஒருவேளை பெருங்கதவம் தாண்டி உள்ளிட்டிருக்கவும் கூடும். எந்த நொடியிலையும் அவன் இங்கை வரக்கூடும். ஓ  என்ரை வெள்ளியார்! நானும் , நீயும் இப்ப எங்கினையும் அரணக்காறங்கள் கண்ணிலை படாத இடமாய்ப் பார்த்து ஓடிப் பறிஞ்சம் எண்டால்?


இப்பிடி என்ரை யோசினை நினைப்பு எல்லாம் கண்டதையும் கடியதையும் நினைச்சுக் குழம்பின படி இருக்க, ஆரோ குதிரைமால் கதவைத் திறந்திச்சினம். பயக்கெடுதியிலை நான் குரையை வைக்க ஆயித்தம். பார்த்தால் வந்தது பெத்தய்யா தான். என்னடா இது இம்மளவு நேரமாய் இந்தப் பெடி குதிரைமாலிலை என்ன செய்யிறான் எண்டு யோசிச்சு இருப்பார் போலை. உள்ளை அரையிருட்டாய் இருந்ததிலை அனக்கு கொஞ்சம் திறுத்தியாய் இருந்தது. பெத்தய்யா நான் அழுததைக் காணேலாது தானே? எண்டாலும் அவருக்கு விளங்கீட்டுது.

"என்ரை குஞ்சன்! என்னாலை ஏதும் மேற்கொண்டு செய்யேலும் எண்டால் செய்து போடுவன். என்ன செய்யிறது இந்தப் பெத்தய்யாவாலை எந்த உதவியும் இல்லை. தேவையான மட்டிலை அழுது உன்ரை கவலையைத் தீர்."எண்டு என்ரை உச்சந் தலையிலை கொஞ்சினார். அப்ப யன்னலுக்கு வெளியாலை....... ஐயோ கடவுளே!  குதிரை பிடிக்கிறவனெல்லோ வாறான் ? மத்தியாசு வளவுக்குள்ளை.... விழுவான் தெங்கிலின்ரை அறுதல்படை அரணக்காறன்......ஐயோ வெள்ளியாரைப் பிடிக்கப் போறானே.

"அங்கை வாறான் பெத்தய்யா! அந்தா பாருங்கோ குதிரை பிடிக்கிறவன் வாறான்!" நான் கத்தினதைத் தாங்கேலாமல் வெள்ளியாரும் கனைச்சது. மறு நொடியிலை மாலின்ரை கதவு திறந்தது. அங்கை நிண்டான் அவன் கறுப்பு தலைக் கவசமும், கறுப்பு கம்பளி மேலங்கியுமாய். 
"இல்லை! ஐயோ வேண்டாம்!" எண்டு நான் குழறினன்.  ஆனால் அவன் அதுக்கிடையிலை அனக்குக் கிட்ட வந்து என்னைக் கட்டிப் பிடிச்சான். அண்ணர் தான் இப்பிடிக் கட்டி அணைச்சுப் பிடிக்கிறவர். அப்பிடியெண்டால் ....இது?.....

"உன்ரை சொந்த அண்ணனை உனக்கு அடையாளம் தெரியேல்லையோ?" எண்டு திமிறின என்னைப் பார்த்துச் சொன்னான். யன்னலுக்குக் கிட்ட என்னை இழுத்துப் போய் தன்ரை முகத்தை நான் குணமாய்ப் பார்க்கும் படி நிண்டான்...., நிண்டார். எண்டாலும் என்னாலை அது என்ரை அண்ணர் எண்டு நம்பக் கயிட்டமாய் இருந்துது. ஏனெண்டால் அவரைப் பார்க்கேலாமல் அருவருப்பான தோற்றமாய் இருந்தவர். இனி இல்லை எண்ட வடிவு, கண்கவர் அழகு எண்டு அவரைப் பற்றிச் சொன்னதெல்லாம் பொய் எண்ட மாதிரிப் போச்சு. அந்த வடிவான பொன் மஞ்சள் நிறத் தலைமயிர் நிறம் மாறி, அவரின்ரை முகத்துக்குப் பொருத்தம் இல்லாமல் செம்பட்டை நிறமடிச்சது. மேல் சொண்டுக்குள்ளை என்னத்தையோ அதக்கி வைச்சிருந்ததாலை அது வீங்கி அந்த இலச்சணமான முகத்தை கேவலமாக்கிச்சுது. இப்பிடிச் சின்னச்சின்ன மாறுதலாலை இம்மளவு தூரம் அவரின்ரை வடிவு கெட்டுப் போகும் எண்டு என்னாலை நம்ப முடியேல்லை. இனி எல்லாத்துக்கும் மேலாலை அவர் போட்டிருக்கிற அரணக்காறன் வேசம் பார்க்கவே வெறுப்பாய் இருந்துது. 

மற்றும்படிக்கு எண்டால் அவரின்ரை வேசம் வினோதம் எல்லாம் கண்டு சிரிச்சிருப்பன். அதுக்கெல்லாம் இப்ப நேரகாலம் பொருத்தமாய் இல்லை. அதோடை அண்ணருக்கும் நேரமில்லை.
"கெதியா, கெதியா! வலுசுறுக்கிலை நான் திரும்ப வேணும். அந்த கறுமண்யாக்காக்காறன்  எக்கணம் வரப்போறான். " பெத்தய்யாவிட்டை கைநீட்டிக் கேட்டார்.
"பெத்தய்யா! அந்த இலச்சினை எங்கை? தெங்கிலுக்கு உங்கடை குதிரையளை மனம் விரும்பித் தானே குடுக்கிறீங்கள்?"
"பின்னை என்னவாம் ? வேறை என்னத்தை நீ நினைக்கிறாய்?" எண்டு புன்சிரிப்போடை இலச்சினையைப் பெத்தய்யா குடுத்தவர். 
"பெருங்கதவத்திலை இருக்கிற காவலனுக்கு  நான் பொய் பறையேல்லை எண்டு ஒம்பிக்கிறதுக்கு இந்த இலச்சினை தேவை." 

நாங்கள் கடகடவெண்டு  குதிரை ரெண்டுக்கும் சேணம், கடிவாளம் எல்லாம் கட்டிவிட்டம்.  அதுக்கிடையிலை தான் எப்பிடிப் பெருங்கதவம் தாண்டி வந்தவர் எண்டு அண்ணர் பெத்தய்யாவுக்குச் சொன்னவர்.
"அது வலுசுகம். சீனியப்பு சொல்லித் தந்த குறியீட்டுச் சொல்லு எனக்கு இப்ப பாடம். கேளுங்கோ சொல்லிறன். தட்டிக்கதவுக்கு வந்தவுடனை காவலனிட்டை குறியீட்டுச் சொல்லைச் சொன்னன்.
சகல அதிகாரங்களும் வரந்தரும் தெங்கில் நயினார் ஒருவருக்கே!> உதைக் கேட்ட உடனை  
< எங்கத்தையாலை வாறாய்? என்ன காரியமாய் ஊருக்குள்ளை போறாய்?> எண்டு கேட்டாங்கள்.
< கறுமண்யாக்காவாலை வாறன். தெங்கில் நயினாருக்கு குதிரை பிடிக்க மத்தியாசு வளவுக்குப் போறன் > எண்டு சொன்னன். 
< உள்ளை வரலாம் > எண்டாங்கள். 
< நன்றி > எண்டு சொல்லீட்டு வந்திட்டன். இப்ப உங்களுக்கு முன்னாலை நிற்கிறன். ஆனால் நான் இப்ப நிண்டு மினைக்கெடாமல் போகவேணும். தெங்கிலின்ரை அடுத்த அரணக்காறன் குதிரை பிடிக்க எண்டு உள்ளை வந்திட்டான் எண்டால் நம்ம நிலைமை மோசமாய்ப் போடும்."

நாங்கள் குதிரையளை எம்மளவு வேகமாய் வெளியாலை கொண்டு வந்தம் எண்டதை அனக்கு விளங்கப் படுத்த முடியேல்லை. அம்மளவு கெதியிலை காரியங்கள் மளமளவெண்டு நடந்துது. அண்ணர் வியாழரிலை ஏறினார், ஒரு கையாலை வெள்ளியாரின்ரை கடிவாளக் கயிற்றைப் பிடிச்சார்.
"பத்திரம், பெத்தய்யா! அப்ப பேந்து சந்திப்பம்!" எண்டிட்டுக் குதிரையளோடை வெளிக்கிட்டார்.
"அப்ப நான்?" நான் கத்தினன்.
"நான் என்ன செய்யிறது?" 
அண்ணர் கையாட்டிப் பயணம் சொன்னார்.
"பெத்தய்யாவைக் கேள் சொல்லுவார்." எண்டு திருப்பிக் கத்தினார். நான் ஒரு பேயன் மாதிரி அவர் போறதை ஆவெண்டு பார்த்துக் கொண்டு நிண்டன். 

ஆனால் பெத்தய்யா விளப்பம் சொன்னவர்.
"நீ ஒண்டை விளங்கிக் கொள்ள வேணும் சீனியப்பு!, பெருங்கதவம் தாண்டி உன்னாலை போகேலாது. இண்டைக்கு சாமத்திலை யோனத்தான் தோண்டி வைச்ச பாதாளச் சுரங்கத்தாலை நீ வெளியேறலாம். யோனத்தான் அங்காலை உன்னைப் பார்த்துக் காத்திருப்பான்."
"அது நிச்சயம் நடக்கும் எண்டுறியளோ?" என்ரை வழக்கமான ஐமிச்சம் பிடிச்ச கேள்வி.
"கடைசி நேரத்திலை அண்ணருக்கு ஏதும் ஆபத்து எண்டால்?..."
"தெங்கில் இருக்கிற உலகத்திலை எதுகுமே நிச்சயம் இல்லை. அப்பிடி ஏதும் குழப்பம் எண்டால் போன வழியாலையே அப்பிடியே  திரும்பி பெத்தய்யாவிட்டை வா. பெத்தய்யாவோடை பத்திரமாய் இருந்து சீவிக்கலாம்." பெத்தய்யாவிட்டை இருந்து ஒரு பெரிய பெருமூச்சுப் பறிஞ்சது.

நான் எல்லாத்தையும் யோசிச்சுப் பார்க்கத் தெண்டிச்சன். முதல் பாதாளச் சுரங்கத்துக்கு உள்ளை ஊர்ந்து தவண்டு போக வேணும். அது மோசமானதாய் இருக்கும். பேந்து மதிலுக்கு அங்காலை இருக்கிற காடு. அங்கை எண்டால் அண்ணர் இருக்க மாட்டார். அவருக்காகக் காத்துக் காத்து இருக்க வேணும். கடைசியிலை நிலைமை கைமீறிப் போச்சு எண்டது தெரியவரும். பேந்தென்ன திரும்பிப் பாதாளச் சுரங்கத்துக்குள்ளாலை ஊர்ந்து வர வேணும். அண்ணர் இல்லாத கொடுமையான ஒரு சீவியத்தை மேற்கொள்ள வேணும்.

நாங்கள் இப்ப குதிரையள் இல்லாமல் வெறிச்சோடிப் போன மாலுக்கு வெளியாலை நிண்டம். அப்பத்தான் அனக்கு இன்னொரு காரியம் ஓடி வெளிச்சது. 
"கறுமண்யாக்காவிலை இருந்து வாறவனுக்கு என்ன சொல்லிறது பெத்தய்யா? ஒரு குதிரையும் மாலிலை இல்லை எண்டு கண்டால் என்ன ஆய்க்கினை தருவானோ?"
"அவன் வாறதுக்கிடையிலை இஞ்சை இப்ப ஒரு குதிரை நிற்கும். வியாழர் வந்தவுடனை நான் பக்கத்து வளவிலை கொண்டு போய் மறைச்சு வைச்ச என்ரை தங்கராசிக் குதிரையை இப்ப போய்க் கூட்டிவாறன்."எண்டார். 
"அப்பிடி எண்டால் உங்கடை குதிரையை எல்லோ பிடிச்சுக் கொண்டு போகப் போறான்?"
"மானம் கெட்டவன் என்ன செய்யிறான் எண்டு தான் பார்ப்பமே?" எண்டு சொல்லீட்டு குடுகுடெண்டு ஓடிப் போனார்.

பெத்தய்யா தங்கராசியைக் கொண்டுவந்து மாலிலை கட்டவும், வெள்ளியாரைக் கொண்டு போக வந்த தெங்கிலின்ரை  அரணக்காறனும் மத்தியாசு வளவுக்கு வரவும் சரியாய் இருந்திச்சுது. வந்த வரத்திலை தெங்கிலின்ரை அரணக்காறங்களின்ரை வழக்கப் படி அதட்டிக் கூப்பிட்டு கண்டபடி பேசினான். குதிரைமாலிலை ஒரு குதிரை மட்டும் தான் இருக்குது, அதையும் பெத்தய்யா தர மாட்டன் எண்டு சொல்ல ஆளுக்குக் கேந்தி இன்னும் ஏறிப் போச்சு. 
"இப்பத்தானே ஒரு குதிரை பிடிகாறன் வந்து குதிரையைப் பிடிச்சுக் கொண்டு போனவன்? பேந்து என்ன தாரை வார்ப்புக்கு எண்டு நீ இப்ப வந்து நிற்கிறாய்? எத்தினை பேர் இப்பிடிக் கிளம்பி  இருக்கிறியள்? எத்தினை குதிரை எண்டு பறிப்பீங்கள்? அப்பிடியெண்டால்  உனக்கு முதல் வந்தவன் ஆரின்ரை ஆள்? அவன் குதிரையோடை இலச்சினையையும் பிடுங்கிக் கொண்டு போட்டான். உனக்கு என்னத்தைப் பிடுங்கித் தாறது? ஒரு மரமண்டைக்கு மற்ற மரமண்டை என்ன செய்யுது, போக்குவரத்து  எண்டு தெரியாததுக்கு நானே பாடு? ஒரு குதிரை வைச்சிருக்கிறதுக்கு எனக்கு அனுமதி இருக்கு கண்டியோ!"

பெத்தய்யாவின்ரை நக்கல் நளினப் பேச்சு சிலசில அரணக்காறருக்கு கொதி கேந்தியை இன்னும் கிளப்பும். சிலசில பேரை வாயடைச்சுப் போகச் செய்யும். இப்ப வந்தவன் பெத்தய்யா இப்பிடித் துணிஞ்சு வாயடிப்பார் எண்டு எதிர்பார்க்க இல்லை. வெருட்டு விடலாம் எண்டு வந்தவர் அடங்கிப் போனார். 
"எங்கையோ ஒரு பிழை நடந்து போச்சுது" எண்டு முணுமுணுத்தபடி போனான். வந்த வேலையை சரியானபடி செய்து பேரெடுக்கலாம் எண்டு ஆசைப்பட்டு ஏமாந்து போனான். அந்த ஏமாற்றம் அவன்ரை முகத்திலை, சதிரத்தின்ரை அசைவிலை,  நடையிலை தெரிஞ்சது.

"பெத்தய்யா! உங்களுக்குப் பயமே இல்லையோ?" தெங்கிலின்ரை அரணக்காறன் கண்ணை விட்டு மறைஞ்ச உடனை கேட்டன்.
"ஏன் இல்லாமல்? இஞ்சை என்ரை நெஞ்சைத் தொட்டுப் பார். என்ன அடி அடிக்கிது எண்டு ? " என்ரை கையை தன்ரை நெஞ்சிலை வைச்சவர். தடதட எண்டு தாள வாத்தியந்தான் கையிலை தெரிஞ்சது.
"பயம் இல்லாதவை ஆருமே இல்லை. ஆனால் எங்கடை பயத்தை எதிரிக்குக் காட்டப்  படாது."

சாமம் ஆகிப் போனது. காட்டுறோசாப் பள்ளத்தை விட்டு நான் வெளியேற வேண்டிய நேரம் வந்திட்டுது. பெத்தய்யாவை விட்டுப் பிறியிற தருணம் வந்திட்டுது.
"போட்டுவா என்ரை குஞ்சன்! இந்தப் பெத்தய்யாவை மறந்திடாதை." எண்டு என்னை அணைச்சுக் கொஞ்சினார் பெத்தய்யா.
"எந்தக் காலத்திலையும் உங்களை மறக்க மாட்டன் பெத்தய்யா." எண்டு அவரின்ரை தாடி வளர்த்த முகத்திலை கொஞ்சினன். பேந்து பாதாளச் சுரங்கத்துக்கு உள்ளை இறங்கி விட்டன்.

இப்ப நான் மட்டும் தன்னந்தனிய இருட்டான இந்தப் பாதாளச் சுரங்கத்துக்குள்ளை. அனக்கு நானே கதை சொல்லிச் சொல்லி பயப்பிடாமல் அமைதியாய் ஊர்ந்து ஊர்ந்து போக தெண்டிச்சன். 
"கும்மிருட்டுத் தான். அதுக்கு என்ன? சாய்ச் சாய்! அது ஒண்டும் மூச்சடக்காது.....ஓ! மெய்தான் கழுத்தாங் குத்தியிலை தண்ணி சொட்டினது தான். எண்டாப்போலை? பேயா! சுரங்கப்பாதை முழுசாக இடிஞ்சு மூடப் போகுதே? இல்லை இல்லை! நீ சுரங்கத்தாலை மேலை மிதக்கிற நேரம் தடியன் தொடிக்கி உன்னைக் காணமாட்டான். கும்மிருட்டுக்குள்ளை பார்க்கிறதுக்கு அவன் என்ன பூனையோ? ஓமோம்! கொண்ணர் அங்கை காத்துக் கொண்டு இருப்பார். எந்தப் பயமும் இல்லை. நான் சொல்லிறது புத்தியிலை உறைக்குதோ? கொண்ணர் அங்கை நிற்கிறார் எண்டால் நிற்கிறார் தான் மறு பேச்சில்லை கண்டியோ!"

ஓம்! மெய்யாத்தான் அண்ணர் அங்கை நிண்டவர். இருட்டுக்குள்ளை ஒரு கல்லிலை இருந்தவர். கொஞ்சம் தள்ளி வியாழரும், வெள்ளியாரும் நிண்டதுகள்.

"ஆ கா கார்ல் சிங்கநெஞ்சன்! வா வா ஒரு வழியாய் வந்து சேர்ந்திட்டாய் தம்பிக்குட்டீ!" எண்டு அண்ணர்  என்னை வலு புளுகத்தோடை வரவேற்றார். 
                                                    ( பேந்து சந்திப்பம்)

சொல் விளக்கம்:

பொழுதறு மட்டும் = பொழுது + அறு மட்டும் - இருட்டும் மட்டும் 
பத்தை < பற்றை - புதர் 
செத்தை - குப்பை, உலர்ந்த சருகு, ஓலை வேலி 
பறுகு - சிறு புதர் 
பத்தல்- கிணற்றுடன் சேர்த்துக் கட்டியிருக்கும் தரை 
கோடி- வீடிருக்கும் வளவின் ஒதுக்கான இடம் 
மூத்திரக்கோடி- சலம் பெய்யும் கோடி 
கடுக்கண்ட வயசு < கடிக்கண்ட வயசு = கடி+கண்ட+ வயசு =விளக்கம் அறிந்த வயசு - பதின்மவயசு
செந்தளிப்பு < செந்தலிப்பு - செழிப்பு
வேலிப் பொட்டு - பக்கத்து வளவுக்குப் போய் வருவதற்காக வேலியில் இருக்கும் ஓட்டை
அலப்பறை - உரத்த அலட்டல்
பைம்பல்< பம்பல் - களிப்பு, மகிழ்ச்சி 
கடுப்பு - எரிச்சல் 
கஞ்சல் குப்பை கசாகூளம் - குப்பை குப்பை குப்பை 
தொக்கை - தடித்த 
கழுத்தாங்குத்தி < கழுத்தாங்குற்றி= கழுத்து +ஆம் + குற்றி - கழுத்தடி 
பாலுண்ணி - உடம்பில் தோன்றும் ஒரு வித சதை வளர்ச்சி 
புறமறிவு - புறத்தைப் பற்றிய அறிவு, சூழலைப் பற்றிய அறிவு 
அடைவு - அடகு 
பேசினவர் - ஏசின அவர் 
குஞ்சியப்பன் - சிற்றப்பன் 
சேறும் சுரியும் - சேறும் சேறும் 
நெருக்குவாரம் - நெருக்கடி 
பண்டி - பன்றி 
பெடி- சிறு பையன் 
எப்பன் - எள்ளளவு 
கடுவல் - கடுமை 
சாதுவாய் - மெதுவாய் 
இத்தறைக்கு - இந்நேரம் 
அகிளான் < அகழான் - வயல் எலி 
எக்கணம் < இக்கணம் - இந்நேரம் 
எக்கணம் - எந்நேரமும் 
ஓடிப் பறிதல் - ஓடி மறைதல் 
குணமாக - சரிவர, சரியாக 
சொண்டு - உதடு 
அதக்குதல்- குதப்புதல்,  வாயுள் அடைதல் 
ஒம்பித்தல் -  ஒப்புவித்தல், நிரூபித்தல் 
தவண்டு< தவழ்ந்து 
ஓடி வெளித்தது - எண்ணம் வந்தது 
கேந்தி- கடுங்கோவம் 
தாரைவார்ப்பு - இழத்தல், பறிகொடுத்தல் 


Author: geevanathy
•5:59 AM

ஆலயம்


13ஆம் நூற்றாண்டுக்குரியது என அறிஞர்களால் கருதப்படுகின்ற தமிழ்க்கல்வெட்டொன்று தம்கலகாமத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதன் ‘மைப்படியை’ 1930 ஆம் ஆண்டு எடுத்த தொல்பொருள் திணைக்களத்தினர் இச்சாசனம் திருகோணமலையிலுள்ள ‘தம்பலகாமம்’ என்னும் ஊரில் எடுக்கப்பட்டதாக தமது குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.இச்சாசனம் குறித்து பேராசிரியர் திரு.சி.பத்மநாதன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.’இச்சாசனம் கற்பலகை ஒன்றில் எழுதப்பட்டுள்ளது. எழுத்துக்கள் அமைந்துள்ள பகுதி 1அடி 7அங்குல நீளமானது.எழுத்துக்கள் ஓரளவு பெரியவை. இவை சராசரியாக 15 அங்குல உயரமும் அகலமும் கொண்டவை. இச்சாசனத்தை 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்குரிய ஆவணமாகக் கொள்ளலாம்.துண்டமாகிவிட்ட இச்சாசனத்தில் எல்லாமாகப் பதினொரு வரிகள் காணப்படுகின்றனவாம். முதல் நான்கு வரிகளும் சொற்கள் அடையாளம் காண்பதற்கு ஏற்றவாறு அமையவில்லையாம். 5ஆவது வரி முதலான சாசனப்பகுதி கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளதாகப் பேராசிரியர் திரு.சி.பத்மநாதன் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

5. உடையார் நிச்ச
6. யித்த ஜகதப்ப
7. கண்டன் தாநத்(து)
8. க்கு நிலையாக்(கித்)
9. தம்பலகாம ஊ
10. ரை நான் கெல்
11.லைக்கு தள எல்லை.


இந்தச் சாசனத்தில் முக்கியமான மூன்று விபரங்கள் காணப்படுகின்றன. முதலாவது ‘உடையார்’ என்ற சொல் எழுதப்பட்டுள்ளது. உடையார் என்ற சொல் சாசனவழக்கில் அரசர்களை அல்லது அரச பிரதானிகளைக் குறிக்கும் என்பது ஆய்வாளர்கள் கருத்தாகும்.இன்னொரு அதிமுக்கியமான விடயம் ‘தம்பலகாமம்’ என்ற பெயர் குறிக்கப்பட்டுள்ளமையாகும். தம்பலகாமம் என்னும் பெயர் புராதனமானது. அது ஏறக்குறைய எண்ணூறு வருடங்களுக்கு முற்பட்ட காலங்களிலிருந்து வழங்கி வருகிறது என்பது இச்சாசனித்தினூடாக உறுதியாகின்றது.சாசனத்தின் மூன்றாவது முக்கியமான அம்சம் ‘ஜகதப்ப கண்டன் தானம்’ என்பது பற்றிய குறிப்பாகும். ‘கண்டன்’ என்பது போர் வீரனைக் குறிக்கும் சொல்லாகும்.வரலாற்றுத்துறை பேராசிரியராகிய திரு.சி.பத்மநாதன் அவர்கள் இச்சாசனம் குறித்து ஆய்வுகள் செய்து இத்தகைய கருத்துகளை வெளியிட்டுள்ளார்கள்.பதினோராம் பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் திருகோணமலைப் பிரதேசத்தில் கந்தளாய் மயிலங்குளம் போன்ற இடங்களில் இத்தகைய படைகள் இருந்தன என்பது வரலாறாகும். இதே போன்று தம்பலகாமத்திலும் ‘ஜகதப்ப கண்டன்’ என்ற பெயரால் வழங்கிய படையொன்று இருந்துள்ளது என்பது இந்தச் சாசனத்தின் மூலம் அறியப்படுகிறது.கந்தளாய் கட்டக்குளப்பற்று, பதவியா, மன்னார் மாதோட்டம் ,புலச்சேரி, தேவபட்டினம் முதலிய இடங்களில் கலிங்கத்து மாகோன் தனது படை நிலைகளை அமைத்திருந்தான் எனப் பாளி சிங்கள வரலாற்று நூல்களில் சில குறிப்புகள் காணப்படுகின்றன.பழமையில் திருகோணமலைப் பிரதேசத்தில் தம்பலகாமப்பற்று ஒரு தனி வன்னிமையின் ஆட்சியின் கீழ் அமைந்திருந்தது. இது வன்னியர்கள் பற்றிய தமிழ் நூல்களிலும் ஒல்லாந்த பிரித்தானிய நிர்வாக அதிகாரிகளின் அறிக்கைகளிலும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.தம்பலகாமம் சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் அங்குள்ள ஆட்சியாளரின் ஏற்பாட்டின் பிரகாரம் ஒரு வீர பட்டினமாக வீரகணமொன்றின் காவலிலுள்ள வணிக நகராக இருந்ததா? என்ற சந்தேகங்களை வரலாற்றுப் பேராசிரியராகிய திரு.சி.பத்மநாதன் அவர்கள் தனது’தம்பலகாமத்துக் கல்வெட்டு’ ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.இவை குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும்போது இது தொடர்பான சில விபரங்களை தடையங்களை அல்லது செவிவழிமூலமான செய்திகளையும் ஆய்வுக்குத் துணையாக எடுத்துக்கொள்வது பயனள்ள ஒரு விடயமாக அமையும் என நாம் நம்புகிறோம்.போர்த்துக்கீசர் கோணேசர்கோயிலை இடித்து அழித்த பின்னர் 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் தோற்றம் பெற்றதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலுக்குப் பின்புறமாக உள்ள தம்பலகாமம் புதிய குடியேற்றக் காணிகளுக்குச் செல்லும் பாதையில் சுமார் 250 மீற்றர் தூரத்தில் சுமார் பத்து அல்லது15 ஏக்கர் விஸ்தீரணமுள்ள காட்டுப்பகுதி இன்றும் ‘கோட்டை’ என அழைக்கப்பட்டு வருகிறது. பழமையில் இது சிறிய கோட்டையாக இருந்ததாகவும் இக் கோட்டையைச் சுற்றி அகழிகள் இருந்ததாகவும் காலப்போக்கில் இவையெல்லாம் சிதைந்து அழிவுற்றுவிட்டன என்றும் வயதில் முதிந்தோர்கூறுகின்றனர்.கலிங்க மாகனின் படையணியொன்று இக்கோட்டையில் இருந்ததாகவும் ‘தம்பன்’ என்ற கலிங்கப்படைத் தளபதி இக்கோட்டையின் தளபதியாக இருந்ததாகவும் வீரஞ்செறிந்த அத்தளபதி கிழக்கிலங்கையில் மாகனுக்கெதிராகச் செயல்பட்டோரை புறங்கண்டு ‘தம்பன் கடவை’ வரையில் கலைத்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.‘தம்பன் கடவை’ என்பது பொலனறுவை ஊடாக மட்டக்களப்புக்குச் செல்லும் பாதையில் ‘மன்னம்பிட்டிக்கு’ அருகாண்மையில் அமைந்துள்ளது.இதேபோல தம்பலகாமத்திலிருந்து 6 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ‘கப்பல்துறையில்’தம்பலகாமத்து இளைஞர்கள் ‘திரைகடலோடியும் திரவியம் தேடினர்’என வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இந்தக்கடல் வாணிபத்தினூடாகவும் கப்பல்துறைக்கடலில் முத்துக்குளித்து பொருளீட்டிய காரணத்தினாலும் தம்பலகாமம் ஒரு பட்டினமாகக் காணப்பட்டது எனக்கருதுவதில் எவ்வித தவறுமில்லை.குளக்கோட்டன் காலத்தில் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் பாவநாசத் தீர்த்தம் கப்பல்துறை கடலோரமாக அமைந்திருந்தது.தற்பொழுது ஆலங்கேணிக் கிராமத்திற்கருகில் உள்ள கங்கையாற்றில் ஆதிகோணநாயகரின் தீர்த்தோட்சபம் நடைபெற்று வருகிறது எனினும் ஆதிகோணநாயகர் கோயிலில் வைராவியார் குடும்பத்தினர் பழமையில் நடைபெற்ற கிரிகைகளை ஞாபகத்தில் கொண்டு கப்பல்துறைக்குச் சென்று கடலோரத்தில் அமைந்துள்ள ஓர் இடத்தில் இச்சடங்குகளை வருடாவருடம்நிறைவேற்றி வருவது இன்றும் நடைமுறையிலுள்ளது.‘தம்பைநகர்’ எனப்புராணங்களிலும் கோணேசர் கல்வெட்டிலும் விளிக்கப்படும் தம்பலகாமம் கப்பல் துறையையும் தன்னகத்தே கொண்டது என்பது இவ்விடத்தில் சுட்டிக்காட்டுதல் மிகப் பொருத்தமானதாகும்.இவ்விடயங்களை எல்லாம் ஒருங்கிணைத்துப் பார்க்கும் பொழுது எண்ணூறு வருடங்களுக்கு முன்பு தம்பலகாமம் ஒரு வீர பட்டினமாக வீரகணமொன்றின் காவலிலுள்ள வணிகப் பெருநகராக விளங்கியிருக்க வேண்டும் என்பது வெள்ளிடைமலையாகும்.வே. தங்கராசா
தம்பலகாமம்
Author: ந.குணபாலன்
•3:05 AM


                                                                          மூலக்கதை
 : Bröderna Lejonhjärta


                                                       

                                                                         எழுத்தாளர் : அஸ்த்ரி   லிண்ட்கிறேன் , சுவீடன்  
                                                                              (ASTRID   LINDGREN ,     SWEEDEN)
                                                                  (14/11-1907 --- 22/01-2002)
                                                                    ஓவியர்:இலூன் வீக்கெலான்ட்
                                                                                             ( Ilon Wikeland)
                                                                      தமிழாக்கம் :  ந. குணபாலன்

துடிப்பு பத்து : கொலை பாதகன்


நான் ஒரு காலமும் கறுமண்யாக்காவின்ரை நயினார் தெங்கில் எண்டவனைப் போலை ஒரு கொடூரப் பிறவியைக் கண்டதில்லை. அந்த இறுகி உறைஞ்சு போன விடியாத பேய் மூஞ்சை, அதின்ரை பார்வை பட்ட சீவன் வாடி வதங்கி கருகிப் போடும். பறணைப் பழங்காலத்து ஆதித் தொன்ம நதியிலை தன்னுடைய தங்கப்படகிலை ஆள் அம்பு அரணப் படையோடை வந்து பெருந்தோணித்துறையிலை வந்திறங்கினான். நான் பெத்தய்யாவோடை பெருந்தோணித்துறையடிக்குப் போனநான். அண்ணர் தான் என்னை அனுப்பி வைச்சவர்.

"நீ நேரிலை அந்தத் தெங்கிலை ஒருக்கால் பார்க்க வேணும். அப்பத்தான் உனக்கு இன்னும் நல்லாய் விளங்கும். காட்டுறோசாப் பள்ளத்திலை அடிமைச் சேவகத்தாலையும், பசிபட்டினியாலையும் சாகிற சனங்கள்; நினைக்கிறதும், விரும்பிறதும் ஒரேயொரு காரியம் தான். காட்டுறோசாப் பள்ளத்தின்ரை விடுதலை மட்டுந்தான்." எண்டு அண்ணர் சொன்னவர்.

மேலை உசரத்திலை பறணைப் பழங்காலத்து ஆதித் தொன்ம மலையளின்ரை உச்சி மலையிலை தெங்கிலின்ரை கோட்டை இருந்தது. அங்கை தான் அவன் பாதுகாப்பாய் இருந்தவன். இடைசுகம் ஆத்து வழியாலை வந்து காட்டுறோசாப் பள்ளத்துக்கு வந்து தன்ரை கொடுமையான நடவடிக்கையளைக் காட்டிச் சனங்களை வெருட்டி அடக்கி வைச்சிருந்தவன். அவன்ரை கொடுமையளாலை  சனங்கள் ஒருத்தரும் அவனை மறக்கேலாமல் இன்னும் இன்னும் விடுதலையை நினைச்சு கனவிலையும், நினைவிலையும் ஏங்கினபடி; எண்டு அண்ணர் சொன்னவர்.


முதலிலை அனக்கு ஒண்டும் கண்ணிலை எத்துப் படேல்லை. அரணக்காறன்கள் நிறையப் பேர் நெருக்கியடிச்ச படி எங்களுக்கு முன்னாலை நிண்டவங்கள். நீளநீள வரிசையாய் அரணக்காறங்கள்  தெங்கிலின்ரை பாதுகாப்புக்கு எண்டு குமிஞ்சு போய் நிண்டாங்கள். அந்தளவுக்குப் பயம், நம்பிக்கையீனம் நயினாருக்கு! எங்கினையும் இருத்தாப்போலை ஒரு ஒற்றை அம்பு சீறிக் கொண்டு பாயக் கூடுமெல்லே? கொடுங்கோலனாய் இருக்கிறவங்களுக்கு  எந்த நேரமும் பயம் தான் எண்டு அண்ணர் சொன்னவர். தெங்கில் எண்டவன் மற்ற எல்லாரையும் விடப் பயங்கரமான பாதகன் எல்லோ? 


அனக்கும், பெத்தய்யாக்கும் முன்னுக்கு என்ன நடக்குதெண்டு ஒண்டும் தெரியேல்லை. பின்னை நான் ஒரு வழி கண்டு பிடிச்சன். குந்தி இருந்து அந்த விறைச்ச மண்டை அரணக்காறங்களின்ரை கால் இடைவெளியாலை பார்த்தன். பெத்தய்யாக்கு அப்பிடிக் குந்தியிருந்து பாக்கேலாமல் இருந்தது.

" உசிரிலை பதிஞ்ச வடுபோலை என்னென்ன பயங்கரமான சம்பவங்களுக்கு இண்டைக்கு நீ சாட்சியாய் இருக்கப் போறியோ?" எண்டு பெத்தய்யா கவலைப் பட்டார். 

இந்தப் பெருந்தோணித்துறைக் கதவம் தெங்கில் வாறதுக்காகத் தான் இப்ப திறந்து கிடக்கு. ஆனபடியால்தான் இப்ப பறணைப் பழங்காலத்து ஆதித் தொன்ம நதியைப் பார்க்கக் கூடியதாய் இருக்குது. ஒரு பெரிய வடிவான தங்கநிறமான படகு ஒண்டு ஆத்து நடுவிலை  வந்து கொண்டிருந்தது. கறுப்பு நிற சீருடை போட்டிருந்த படகுப்படைக்காறங்கள் துடுப்பு வலிச்சவங்கள். எத்தினை சோடி துடுப்பு எண்டதை  என்னாலை எண்ணி மாள முடியேல்லை. ஒவ்வரு தரமும் துடுப்புகள் ஒரே சீராய் மேலை தூக்குப் பட்ட நேரம் காலைமை நேரத்து வெய்யிலிலை பளிச்சிட்டது. துடுப்பு வலிச்சவங்கடை பாடு பெரிய பாடாய்க்  கிடந்துது. தோணித்துறைக்குக்குக் கொண்டு வந்து படகை அணைக்க சரியாய்க் கயிட்டப் பட்டவங்கள். ஆத்து நீரோட்டம் நடுக்கொள்ள அந்தளவுக்குக் கடும் வேகமாய் இருந்தது. படகை இழுத்துப் பறிச்சுக் கொண்டு போகுமாப் போலை நீரோட்டம் இருந்தது.  கொஞ்சத்தூரத்திலை ஒரு அருவி குதிக்கிற சத்தம் சோ எண்டு பெரிய இரைச்சலாய்க் கேட்டது. ஒருவேளை அந்த அருவி இழுக்கிற நீரோட்டம் தான் படகை தத்தளிக்க வைக்குதோ?

"கறுமாஅருவி தான் அது." எண்டு நான் கேட்டதுக்குப் பெத்தய்யா சொன்னார்.
"கறுமாஅருவியின்ரை மெட்டு காட்டுறோசாப் பள்ளச் சனங்களுக்கு தாலாட்டு மாதிரி. சின்னப் பிள்ளையள் தொட்டு பெரியாக்கள் ஈறாய் அதைக் கேட்டுக் கொண்டுதான் நித்திரை கொள்ளிறது." எண்டார். 

மற்றும்படிக்கு காட்டுறோசாப் பள்ளத்துச் சனம் ஆருமே ஆத்துத் தண்ணியிலை ஒரு தரம் கூடி கால் நனைக்க முடியாமல் பூட்டிக் கிடக்கும். நான் காட்டுறோசாப் பள்ளத்துச் சின்னப் பிள்ளையளை நினைச்சுப் பார்த்தன். ஆத்தங்கரை ஓரத்திலை நீரோட்டம் இல்லாமல் அமைதியாய் இருந்தது. ஒருநேரம் இந்த ஆத்தங்கரை ஓரத்திலை இந்தப் பிள்ளையள் தன்னிட்டவாரம் விளையாட்டுப் படகு விட்டு, கூழாங்கல்லுப் பொறுக்கி, மீன் பிடிச்சு, நீந்திக், குளிச்சு, கும்மாளமடிச்சு, நல்ல அமளியாய் விளையாடி இருக்குங்கள். தெங்கிலின்ரை ஆக்கிரமிப்பு வந்த பின்னாலை அந்தச் சுதந்திரம் பறி போயிருக்கும், பாவங்கள். இப்பத்தான் ஊரைச் சுற்றி கோட்டை மதில் எழுப்பிக் கட்டிப் போட்டாங்களே! ரெண்டே ரெண்டு வாசல் மட்டுந்தான் ஊருக்குள்ளை வாறது போறதுக்கு. ஒண்டு நான் உள்ளிட்ட கோட்டை வாசல் பெருங்கதவம் எண்டு பேர், மற்றது இப்ப நாங்கள் வந்து நிக்கிற இந்தப் பெருந்தோணித்துறைக் கதவம். எப்பவும் ரெண்டு வாசலும் பெலத்த காவலோடை. ஒரு இலையான், ஒரு எறும்பு கூடி தெங்கிலின்ரை அரணக்காறங்களைத்  தாண்டி வர, போக முடியாது. 


திறந்த பெருந்தோணித்துறைக் கதவத்தின்ரை இடைவெளியிலை   தெங்கிலின்ரை தங்கநிறப் படகு படகுத்துறையின்ரை மிதவைப் பாலத்திலை வந்து அணைஞ்சது தெரிஞ்சது. தெங்கில் படகிலை இருந்து  இறங்கினான். தங்க நிறச் சேணம் பூட்டின ஒரு கறுப்புக் குதிரையிலை வலு கலாதியாய் ஒரு அரணக்காறனின்ரை  முதுகிலை கால் வைச்சு ஏறினான்.  அவன்ரை குதிரை அனக்குக் கிட்ட வந்த நேரம் நல்ல வடிவாய் அவன்ரை முகம், கண், பார்க்கிற பார்வை எல்லாம் தெரிஞ்சது.  நச்சுப் பாம்பின்ரை அரத்த வெறி பிடிச்ச பார்வை.  அரத்தச் சிவப்பு கஞ்சுகம், தலையிலை இருந்த முடியிலை கூடி அரத்தத்திலை தோய்ச்சு எடுத்த கணக்கிலை பறவைச் செட்டை அலங்காரம்,  சிவப்புச் சாயம் போட்ட மாட்டுத்தோலாலை செய்த காலணி.  இப்பத்தான் ஆரையோ ஒரு அப்பாவியைக் கொலை செய்த இடத்திலை அந்த அரத்தம் தெறிச்ச மாதிரி அவன் போட்டிருந்த தங்க நகையிலை பதிச்ச  ரெத்தினக் கல்லுக்  கூட அனக்குத் தெரிஞ்சது. அனக்கு முள்ளந்தண்டு, கிண்டு எல்லாம் உறைஞ்சு போச்சு. 


அவன் ஒருத்தரையும் கண்ணெடுத்துப் பார்க்கேல்லை. அதுக்கெல்லாம் உந்தச் சனங்களுக்கு அருகதை இல்லை எண்டமாதிரி ஒரு  ஆணவம். கறுமண்யாக்காவின்ரை நயினார் தெங்கில் ஆன தானும் தனக்குத் தாளம் போடுற படையும் ஏதோ ஒரு தேவலோகத்திலை மிதக்கிற மாதிரியும், உந்தப் பாவப் பட்ட சனங்கள் அவன்ரை கண்ணிலை படாத மாதிரியும் ஒரு செட்டு. 

காட்டுறோசாப் பள்ளத்துச் சனங்களுக்கெல்லாம் ஊர்ச் சந்தைக்கு வரும்படி கட்டளை. குஞ்சு குருமான் தொடங்கி கிழடு கட்டை ஈறாய் எல்லாருமே வந்து நிண்டவை. தெங்கில் பிரசங்கம் செய்யிறதாம், எல்லாரும் அதைக் கேட்க வேணுமாம்.  நானும் பெத்தையாவும் சந்தையடிக்குப் போய்ச் சனத்தோடை சனமாய் நிண்டம். 

நல்ல வடிவான ஒரு சந்தை முற்றம். சுற்றவர வடிவான பழங்கால பாணி வீடு, கடை, கட்டிடம், கிட்டங்கி எல்லாம். ஒரு சத்தஞ் சலாரும் காட்டாமல் எல்லாரும் நிண்டம். ஆனால் ஒவ்வருத்தரின்ரை மனதிலையும் குமுறின கோவமும், துக்கமும் அனக்கு விளங்காமலில்லை. இந்தச் சந்தையடியிலை  ஒருநேரம் என்ன மாதிரி கலகலப்பாய் சனம் வந்து போயிருக்குங்கள். கோடைகாலத்து நீண்ட பின்னேரப் பொழுதுகளிலை, பானகப்பந்தல் வழிய பானகம் வாங்கிக் குடிச்சு, உந்த மரத்தடி வாங்கில் வழிய இருந்து கூடிக், கதைச்சுக், குலாவிக், கும்மாளம் அடிச்சு, ஆட்டமும் பாட்டமுமாய் இருந்திருக்குங்கள்.  


ரெண்டு பழைய பெரிய லிண்டென் மரங்களுக்கு நடுவிலை தன்ரை குதிரையிலை வந்து நிண்டான்.  சனக்கூட்டத்தைப் பாராமல் காற்றை மணந்து மோப்பம் பிடிக்குமாப் போலை அவன்ரை தலை நிமிர்ந்து இருத்துது. அவனுக்குப் பக்கத்திலை ஒருத்தன்   மண்டைக்கனம் பிடிச்சவன் ஒரு வெள்ளைக்குதிரையோடை நிண்டவன், பேர் பியூக்கையாம்,  முதல்மந்திரியாம். பெத்தையா சொன்னவர். கனநேரமாய் ஒரு சொல்லும் பறையாமல் பேசாமல் நிண்டவங்கள். சுற்றவர கறுப்பு தலைக் கவசம்,  கறுப்புச் சீருடை, ஏந்தின வாள் , வடிய வடிய வேர்வை இந்த கோலத்திலை அரணக்காறங்கள் காவலுக்கு நிண்டபடி. பின்னை வேர்த்து வடியாமல் என்ன செய்யும்? நல்ல வெய்யில் எறிச்சதேல்லோ?

"தெங்கில் என்ன சொல்லப் போறானாம்?" எண்டு பெத்தய்யாவைக் கேட்டன். 

"வேறை என்னத்தை பெரிசாய் மாற்றிச் சொல்லப் போறான். வழமையாய்ப் பாடிற புறணி தான். காட்டுறோசாப் பள்ளத்தாரின்ரை போக்கிலை திறுத்தியில்லை எண்டுதான் சொல்லுவான்." எண்டார். சொன்னால் போலை ஒரு சங்கதி தெங்கில் ஒண்டும் சொல்லிறதில்லை. அடிமையளோடை நயினார் பறைய மாட்டாராமெல்லே? பியூக்கையிட்டை தான் அவன்ரை வாயசையும். பியூக்கை தான் தொலுக்குமுதலி. 
" நீங்கள் ஒழுங்காக சுறுக்காக வேலை செய்யாமல் இழுத்தடிக்கிறீர்கள். எதிரிகளுக்கு உதவுகிறீர்கள். சிங்கநெஞ்சன் இன்னும் பிடிபட்ட பாடாயில்லை. இதனாலே எமது கருணையுள்ள தெங்கில் நயினார் காட்டுறோசாப் பள்ளத்துச் சனங்களிலை திறுத்தியீனமாய் இருக்கிறார். " எண்டு உரத்த குரலிலை பியூக்கை சொன்னான்.
"ஓமோம்  எனக்கு விளங்குது. எனக்கு விளங்குது." எண்டு அனக்குப் பக்கத்திலை ஒரு அனுங்கல் குரல் கேட்டுது. நல்லா வயசு போன ஒரு அப்பு ...., கட்டையான மெலிஞ்ச உருவம் ...., கந்தல் உடுப்பு ...., நரைச்ச தலைமயிர், தாடிமீசை. 

"...........எமது கருணைமிக்க நயினார் அவர்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு. வெகு விரைவில் அவர் ஆணைக்குக் கீழ்ப்படியாத இந்தக் காட்டுறோசாப் பள்ளத்தைக் கடுமையாகத் தண்டிப்பார். " எண்டு பியூக்கை இன்னும் வெருட்டினான்.

"மெய்தானே? நயினார் சொல்லிறதும் ஞாயம். நயினார்  செய்யிறதும் ஞாயம். " எண்டு அனக்குப் பக்கத்திலை நிண்ட அந்த அப்பு தாளம் போட்டது. அனக்கு விளங்கீட்டுது. உது ஆரோ மேல்வீடு கழண்ட சீவன். வயசு போக அறளை பேர்ந்த சென்மம்.
"............ ஆனால் எமது கருணைமிக்க நயினார்; குருதி பொங்கும் தண்டனையை உடனடியாக இந்நேரம் வழங்காமல் இன்னும் கொஞ்சக் காலம் அவகாசம் தருகின்றார், அத்துடன் ஒரு வெகுமதியையும் அறிவிக்கின்றார். அதாவது சிங்கநெஞ்சனை பிடித்துத் தருபவருக்கு இருபது வெள்ளைக் குதிரைகள் வெகுமதியாக வழங்கப் படும்"

"ஓ அப்ப நான் அந்த நரியைப் பிடிச்சுக் காட்டிறன்." எண்டு சொல்லி அந்த விசர் பிடிச்ச அப்பு என்னைஇடிச்சுத் தள்ளினது. அனக்கு வந்த கோவத்துக்கு செப்பட்டையைப் பொத்தி ஒரு அறை விடவேணும் போலை கிடந்துது. என்னதான் அறளைகிறளை பேர்ந்துபோன சீவன் எண்டாலும் கதைக்கிற கதையே இது?

"ஒரு வெக்கம் சிக்கு எண்டதுக்கு உம்மடை சீவியத்திலை இடமில்லையே?"  எண்டு கிசுகிசுத்துக் கேட்டன்.
"சாய்ச்  சாய்! அப்பிடி ஒண்டும் இப்போதைக்கு இல்லை." எண்டு ஒரு நக்கலாய் சொன்னபடி என்ரை கண்ணை ஊண்டி அந்த அப்பு பார்த்துது. அப்பத்தான் கவனிச்சன். உந்த வடிவான பளிச்சிடிற நீலக்கண் வேறை ஆரின்ரையாம்? என்ரை அண்ணரின்ரை எல்லோ?என்ரை நெஞ்சு பயத்திலை தாளவாத்தியக் கச்சேரி நடத்திச்சுது.  என்னதான் துணிச்சல் எண்டாலும் ஒரு அளவு கணக்கு வேண்டாமே? இப்பிடியே தெங்கிலின்ரை மூக்குக்கு முன்னாலை வந்து நிற்கிறது? ஆனால் ஒருத்தராலையும் அடையாளம் காணேலாது. அண்ணர் பெத்தய்யாவின்ரை முதுகிலை இடிச்சு 
"என்ன அப்புக்கிழவா நாங்கள் முன்னைபின்னை ஆளையாள் கண்டிருக்கிறமோ?" எண்டு பகிடியாய்க் கேட்கிறவரைக்கும் பெத்தய்யாவாலை கூட கண்டுபிடிக்க ஏலாமல் இருந்திச்சுது. அண்ணருக்கு வேசம் கட்டிறது எண்டால் ஒரு கலை. நாங்கள் பூமி நச்சத்திரத்திலை...., அம்மாவோடை சீவிச்ச நாளையளிலை...., பின்னேரங்களிலை...., அடுப்படியிலை...., நான் வருத்தத்திலை உத்தரிச்ச  பொழுதுகளிலை...., என்னைச் சிரிக்க வைக்கிறதுக்கு...., வேசம் கட்டி நாடகம் நடிச்சுக் காட்டிறவர். என்ரை ராசன் அடிக்கிற கூத்திலை சிரிச்சுச் சிரிச்சு வயிறு நோகும்.

ஆனால் பகிடி முசுப்பாற்றி விடிறதுக்கு இது ஏற்ற தருணமே? இந்த தறுகுறும்பு கொஞ்சம் கூடிப் போச்சு.

" என்ன நடப்பு எண்டதை நானும் பார்க்கத் தானே வேணும்?" எண்டு  தன்ரை நடப்புக்கு சிரிக்காமல் ஞாயம் சொன்னார். பின்னை சிரிக்கிற காரியமே இது?  காட்டுறோசாப்பள்ளத்து ஆம்பிளையள் எல்லாரையும் ஒரு பக்கம் வரிசையாய் நிற்க வைச்சான்கள். தெங்கில் மேற்பார்வை பார்த்து இன்னின்னார் எண்டு கையாலை காட்டினான். கைகாட்டுப் பட்டவை  எல்லாம் அடிமைச் சேவகத்துக்கு ஆத்தைக் கடந்து கறுமண்யாக்காவுக்கு போகவேணும். கறுமண்யாக்காவுக்குப் போனவை உசிரோடை தாய்தேப்பனிட்டை, பெண்சாதி பிள்ளையளிட்டை  மீண்டு வந்த கதை இல்லை.  பறணைப் பழங்காலத்து ஆதித் தொன்ம மலையளின்ரை உச்சி மலையிலை தெங்கில் தன்ரை கோட்டையைப் பெருப்பிச்சுக் கட்டிறான். எந்தக் காலத்திலையும் ஆராலையும் பிடிபடாமல் பத்திரமாய் இருக்க வேணும் எண்டது அவன்ரை விருப்பம். தன்ரை ஆசையை நிறைவேற்றுறதுக்கு அவனுக்கு நிறைய அடிமையள் தேவை. அந்தப் பாவப்பட்ட சனம் கல்லுக் காவிக் காவியே கந்தறுந்து போனது. சாகும் வரை கடுமையான கயிட்டமான வேலைதான். 

"வேலைக் கயிட்ட துன்பத்திலை வருத்தம் வந்திச்சுது    

  எண்டால்?..." முன்னம் ஒருக்கால் நான் ஐமிச்சப் பட்டுக் கேட்டனான்.
"ம்...கூம்! கடைசியிலை கத்துலாவுக்குத் தீன் தான்" எண்டு பெருமூச்சு விட்டபடி அண்ணர் சொன்னவர். அவரின்ரை  தேகத்திலை அப்ப ஒரு நடுக்கம் தெரிஞ்சது. அதை நினைச்சவுடனை அந்த வேகா வெய்யிலிலையும் அனக்கு பயத்திலை குளிர்ந்து நடுக்கம் வந்திச்சுது. கத்துலா எண்டது என்ன? எப்பிடி இருக்கும்? ஒரு விளக்கமும் இதுவரை அனக்குத் தெரியாது. எண்டாலும் கத்துலா எண்டது ஒரு பயங்கரமான காரியம் எண்ட மட்டிலை அனக்கு விளங்கிச்சுது. 

தெங்கில் கை காட்டத் தொடங்க பயங்கர அமைதியாய் இருந்திச்சுது. தெங்கிலுக்கு மேலாலை லிண்டென்மரக் கிளையிலை இருந்த குருவி ஒண்டு கீழை நடக்கிற பயங்கரம் ஒண்டையும் அறியாமல் தன்னிட்டவாரம் இனிமையாய் பாடினது கூட அவசுரமாய்க் கிடந்திது. தெங்கிலின்ரை கை காட்டின திக்கெல்லாம் அழுகைச் சத்தம். பிரியன்மாரைப் பறி குடுக்கிற பெண்டில்மாரின்ரை புலம்பல், தேப்பன்மாரை விட்டுப் பிறயிற  பிள்ளை குட்டியளின்ரை அலறல், பெத்த மகன்மார் தங்களுக்கு முன்னாலை உசிரோடை பலியாடாய்ப் போறதைத் தாங்கேலாமல் வயசு போன தாய்தேப்பன்மாரின்ரை கதறல் ஐயோ! கடவுள் எண்டு ஒண்டு இருக்கோ? எல்லாருமே அழுதிச்சினம். நானுந்தான்.


தெங்கில் ஆர் எவரின்ரை அழுகையையும் ஒரு கணக்கிலை 

எடுக்கேல்லை. குதிரையிலை கொலு இருந்தபடி ஆள் ஆளாய்க் காட்டக் காட்ட, அவன்ரை கைவிரல் மோதிரத்து ரெத்தினக் கல்லு நெருப்பு மாதிரி பளிச்சிட்டது. ஐயோ! என்ன கொடுவினை இது? தெங்கில் தன்பாட்டிலை தன்ரை ஆள்காட்டி விரலாலை ஒவ்வொருத்தருக்கும் மரணதண்டனை எல்லோ எழுதிட்டுப் போறான்? அப்பிடிக் காட்டுப் பட்ட ஒரு தேப்பன்காறனுக்கு தன்ரை பிள்ளையளின்ரை அழுகை கேட்டு மனசு தாங்கேலாமல் குழம்பிப் போச்சு. சடாரெண்டு வரிசையை முறிச்சுக் கொண்டு அரணக்காறங்கள் தடுக்கிறதுக்கு முன்னம் தெங்கிலை அண்டிக்  கிட்டவாய்ப் போய் விட்டார்.
"கொடுங்கோலா! கொலைகாறா! சாவெண்டது உன்னையும் ஒருநாளைக்குத் தேடி வரும் மறவாதை!" எண்டு கத்திப் போட்டு <பொளிச்> எண்டு தெங்கிலின்ரை மூஞ்சையிலை காறாப்பிச்சுத் துப்பினார்.

தெங்கில் கையை அசைச்சான். கிட்ட நிண்ட ஒரு அரணக்காறன் தன்ரை வாளை உருவி ஓங்கினான். அந்தக் கத்தி வெய்யிலிலை பளபளக்கக் கண்டன். ஆனால் அண்ணர் இழுத்து என்ரை   முகத்தை தன்ரை நெஞ்சுக்குள்ளை அணைச்சு மறைச்சுப் பிடிச்சார். நான் அந்தக் கொடுமையான கொடுமையைப் பார்க்கக் கூடாதெண்டு. ஆனால் அனக்கு கேட்டது. சொல்லப்போனால் அண்ணரின்ரை நெஞ்சுக்குள்ளை இருந்து ஒரு <அக்> எண்டு ஏங்கி வெடிச்ச  விம்மல்  சத்தம் மெள்ளக் கேட்டது. மனசெல்லாம் பாரமாய்க் கனத்தது. வெட்டுப் பட்டவரை இழுத்துக் கொண்டு போய் ஆத்திலை வீசினவங்கள்.  நாங்கள் வீட்டுக்கு உடனை   திரும்பாமல் ஊரைச் சுற்றி நடந்தம். அந்த நேரம் ஒண்டு கவனிச்சன்,  அண்ணரின்ரை முகத்தாலை கண்ணீர் வடிஞ்சது. சும்மா சும்மா தொட்டது துடைச்சதுக்கு எல்லாம் அழுகிற ஆள் அவரில்லை.


அண்டு நாள் முழுக்க காட்டுறோசாப்பள்ளம் முழுதும் இழவு வீடாய்ப் போச்சு. எல்லாருமே அழுதவை. ஆனால் பெலத்து அழுகிற உரிமையும் இல்லாமல் போச்சு. அரணக்காறங்கள் அழுகிற சனத்தை ஓய்ஞ்சு இருந்து ஒப்பாரி வைக்கவும் விடேல்லை. அதைச் செய் இதைச் செய் எண்டு தெல்லோட்டின படி வெந்த புண்ணிலை வேல் பாய்ச்சின மாதிரிக் கரைச்சல் குடுத்தாங்கள். அவங்களுக்கு என்ன கவலை? கொண்டாட்டம் எல்லோ? தெங்கில் காட்டுறோசாப்பள்ளம் வாற நேரத்திலை எல்லாம் அவங்களுக்கு விருந்து வைப்பான். சந்தையடியிலை வெட்டுப் பட்டுச் செத்தவன் பாவியின்ரை அரத்தம் காயேல்லை. அரணக்காறங்களின்ரை கும்மாளம் தொடங்கீட்டிது. பீப்பாய் பீப்பாயாய் சாராயம் வந்திச்சுது. ஊரிலை சனம் வளர்த்த பண்டி எல்லாம் கம்பிச் சட்டங்களிலை குறுக்காய்க் குத்துப் பட்டு நெருப்பிலை வெந்தபடி. அந்த பண்டி புலுண்டிற மணமும், நெருப்பாலை கிளம்பின புகாரும் ஊர் முழுதையும் அம்மிப் பிடிச்சது. வழமையிலை வாயூற வைக்கிற மணம், அண்டைக்கு ஓங்காளம் வரவைக்கிற நாத்தமாய் இருந்திச்சுது.


"காட்டுறோசாப்பள்ளத்துச் சனங்களிட்டை வெருட்டிப் பிடுங்கின பண்டியளை திண்டு திண்டு தான் உந்தக் காடை கடப்பளி எல்லாம் கொழுத்துப் போச்சுது. நாசமாய்ப் போவார் குடிக்கிறது கூட சனங்களை வருத்தி வடிச்ச சாராயந்தான். " பெத்தய்யா வீட்டுக்குப் போற வழியிலை சொல்லிப் புறுபுறுத்தார். தெங்கில் ஒண்டும் இந்தக் கொண்டாட்டங்களிலை கலந்து கொள்ளேல்லை. வந்தான், பியூக்கையைக் கதைக்க வைச்சு சனங்களை வெருட்டினான், கைகாட்டி அடிமைச் சேவகத்துக்கு ஆள் பிடிச்சான், ஒருத்தனை வெட்டுவிச்சான்  அம்மளவுந் தான். நயினாரின்ரை நீதி பரிபாலனம் முடிஞ்சுது. வந்த வழியிலை ஆத்தைக் கடந்து திரும்பிப் போட்டான்.

"காட்டுறோசாப் பள்ளத்துக்கு இண்டைக்கு ஒரு பாடம் படிப்பிச்சுப் போட்டன் எண்ட திறுத்தியோடை போய் தன்ரை கோட்டையிலை இருப்பான்." எண்டார் அண்ணர்.
" இஞ்சை இருக்கிறதெல்லாம் பயந்த அடிமைக் கூட்டம் எண்டு நினைப்பான்"

" அங்கை தான் ஆள் பெரிய பிழை விடுவார் கண்டியோ" எண்டார் பெத்தய்யா.

"அவனாலை விளங்கிக் கொள்ள முடியாததொரு சங்கதி என்னெண்டால், அடக்குமுறையாலை எந்த ஒரு சனத்தையும்  நீண்ட காலத்துக்கு அடக்கி வைச்சு ஆள முடியாதது எண்டது." நாங்கள் அப்பிள் மரங்கள் வீட்டைச் சுற்றி நிற்கிற ஒரு வளவைத் தாண்டிப் போனம். 
"உது தான் சந்தையிலை வெட்டுப் பட்டவன் வீடு" எண்டு காட்டினார் பெத்தய்யா. வீட்டுக்கு வெளியாலை கல்லுப் படியிலை ஒரு மனிசி இருந்தவ. பார்த்தவுடனை அனக்குத் தெரிஞ்சு போச்சு,  இவ தான் செத்தவர் பெண்டில் எண்டு. பிரியன்காறனை தெங்கில் கை காட்டினவுடனை குழறி அழுதவ எல்லோ? தன்ரை நீளமான இளமஞ்சள் நிறத் தலைமயிரைக் கத்திரிக்கோலாலை ஒட்ட நறுக்கிக் கொண்டிருந்தா. 
"அந்தோனியா! என்ன காரியமடி மேனை செய்யிறாய்?" எண்டு பரிதவிச்சுக் கேட்டார் பெத்தய்யா. 
" என்ரை பிரியனையே கொலை செய்து போட்டாங்கள் அம்மான். இனி இந்த தலைமயிரை வளர்த்து நான் என்ன செய்ய? வில்லின்ரை நாணுக்குக் கயிறாய்த் திரிச்சுக் குடுக்கப் போறன்." எண்டு ஒரு விறுமம் பிடிச்ச மாதிரி சொன்னா. அதுக்கு மிஞ்சி ஒண்டும் அவ பறையேல்லை. அந்த நேரம் கண்ட அவவின்ரை கண்ணையும், அதிலை தெரிஞ்ச அவலத்தையும், சினத்தையும் என்னாலை எந்தக் காலமும் மறக்கேலாது. பெத்தையாவும் அதுக்கு மேலை ஒண்டும் சொல்லேல்லை. அவவின்ரை பிள்ளையளை அங்கினை காணேல்லை. ஆரும் இனசனம் அதுகளின்ரை கவனத்தை மாற்ற, ஆறுதல் சொல்ல, பயத்தைப் போக்காட்ட எண்டு தங்களோடை கூட்டிப் போயிருக்கும். அங்காலை ஒரு அப்பிள் மரத்தடியிலை,  பாவம் செத்தவரின்ரை தாய்க்கிழவி தன்ரை பாட்டிலை தன்ரை மகனைப் பற்றிச் சொல்லிச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்துது. தெங்கிலையும் , அவன்ரை அரணக்காறங்களையும் மண்ணை அள்ளிக்கொட்டி திட்டி அந்த ஆச்சி அறம்பாடினது.

காட்டுறோசாப்பள்ளத்திலை கனக்கக் காரியங்களுக்குத் தண்டனை மரணதண்டனைதான் எண்டு அண்ணர் முன்னை சொன்னவர். எல்லாத்திலையும் ஆபத்தான காரியம் ஆயுதம் வைச்சிருக்கிறது தானாம்.  அதுக்குக் கடுமையான தடை. தெங்கிலின்ரை அரணக்காறரும் அம்புவில்லு, வாள், ஈட்டி எண்டு  தேடி ஆராயாத வளவுமில்லை, பூராத வீடுமில்லை, பிரட்டிப் பார்க்காத பெட்டியுமில்லை. ஒரேயொரு ஒற்றை ஆயுதம் கூட அவங்கள் கண்டு எடுத்ததில்லை. ஆனால் கடைசியிலை ஒரு ஆயுதப் போராட்டம் எண்டு வாறநேரம் தேவைப் படும் எண்டு சொல்லி, ஏதாவது ஒரு ஆயுதத்தை இரகசியமாய் செய்யாத வளவுமில்லை, பதுக்கி வைக்காத வீடுமில்லை எண்டு அண்ணர் சொன்னவர். 


அப்பிடி ஏதும் ஆயுதங்கள் பதுக்கி வைச்சு இருக்கிறதைக் காட்டிக் குடுத்தால் அதுக்கும் வெள்ளைக் குதிரை பரிசு எண்டு தெங்கில் அறிவிச்சு இருந்தவனாம்.

"முட்டாள்! காட்டுறோசாப் பள்ளத்திலை ஒரு  துரோகி இருக்கிறான் எண்ட நினைப்போ அவனுக்கு? ஒரேயொரு குருவியைத் தன்னும் காட்டிக் குடுக்கிற வேலைக்கு அவனாலை ஆரையும் வளைக்கேலாது." எண்டார் பெத்தய்யா.
"செர்ரிப்பள்ளத்திலை தான் ஒரேயொரு துரோகி இருக்கிறான்." எண்டு அண்ணர் கவலையோடை சொன்னார். அண்ணர் அனக்குப் பக்கத்தாலை தான் நடந்து கொண்டிருந்தவர். அவர் இப்ப போட்டிருக்கிற வேசமும், கந்தல் உடுப்பும், நரைச்ச சடையும், தாடியும் அது  அண்ணர்தான் எண்டு நம்பேலாமல் இருந்திச்சுது. 

"நாங்கள் அனுபவிக்கிற துன்பமும், வன்முறையும், கொடுவினையும்  நேரிலை தன்ரை கண்கொண்டு  யூச்சி கண்டதில்லை. கண்டான் எண்டால் பேந்து எந்த ஒரு காலத்திலையும் உந்தத் துரோக வேலை செய்ய மாட்டான்." எண்டு சொன்னார் பெத்தய்யா.

"சோபியா அக்கை பாடு எப்பிடி இருக்கோ? என்ன செய்யிறாவோ? தெரியேல்லை" எண்டு அண்ணர் கவலைப் பட்டார்.
"பியாங்கா ஒழுங்காய் உசிரோடை அவவின்ரை கைக்குப் போய்ச் சேர்ந்திச்சுதோ, என்னமோ?"
"அது நல்லபடி போய்ச் சேர்ந்திருக்கும் எண்டு நினைப்பமே! " நம்பிக்கையாய்ச்  சொன்னார் பெத்தய்யா. 
"யூச்சியையும் இம்மட்டிலை சோபியா தடுத்திருக்கும்."

நாங்கள் வீட்டுக்கு மத்தியாசு வளவுக்கு வந்தநேரம் தடியன் தொடிக்கியும் வேறை மூண்டு பேரும் காட்டுறோசாப் பற்றையளுக்கு நடுவிலை புல்லிலை படுத்துக் கிடந்த படி  தாயம் விளையாடினவங்கள். அண்டைக்கு அவங்களுக்கு வேலைக்கு விடுமுறை. பின்னேரம் முழுமனையும் அவங்கள் அந்த இடம் விட்டு அரங்கேல்லை. அடுப்படி யன்னலுக்குள்ளாலை அவங்கடை கூத்தையெல்லாம் பார்க்கக் கூடியதாய்க் கிடந்தது.  தாயம் உறுட்டிறதும், இறைச்சியைக் கடிக்கிறதும், சாராயம் அடிக்கிறதும் ஒரே அமளி. ஒரு முழுச் சாராயப் பீப்பாயை சந்தையடியிலை இருந்து தோளிலை தூக்கி ஓடிவந்த அவங்கடை புளுகத்தை எல்லோ பார்த்திருக்க வேணும்? கொஞ்சத்தாலை தாயம் உறுட்டிறதும் அலுத்துப் போச்சு. தின்னுறதும் குடிக்கிறதும், தின்னுறதும் குடிக்கிறதும் மட்டுந்தான். மற்றும் படிக்கு பீயுறுட்டி வண்டு போலை உந்தக் காட்டுறோசாப் பற்றையளை சுற்றிச்சுற்றி நிறைவெறியிலை உறுண்ட சீர்தான். அதுகும் மெத்திப் போக நாலு பேரும் நல்ல நித்திரை. 


அவங்கடை தலைக் கவசம், சீருடை, கம்பளி மேலங்கி எல்லாம் அங்கினை அங்கினை நிலத்திலை போட்டபடி. இப்பிடி ஒரு வெக்கையான காலநேரத்திலை எப்படா கழட்டிப் போடுவம் எண்டு காத்துக் கொண்டு இருந்தவங்களோ? 

"எக்கணம் தெங்கில் வந்து இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண வேணும், மச்சான்மாருக்கு சவுக்கடிதான்." எண்டு சொன்ன அண்ணரைத் திரும்பிப் பார்க்கக் காணேல்லை. நிண்ட இடத்துக்கும் பறையாமல் ஆள் எங்கினையோ பறிஞ்சிட்டுது.   இதென்னடா இந்த அண்ணர் எங்கை போட்டார் எண்டு நான் பயப்பிடுறதுக்கு இடையிலை புயல் அடிச்ச மாதிரி உள்ளை வந்தார். அவரின்ரை கையிலை அரணக்காறங்கடை ஒரு தலைக் கவசம், ஒரு சீருடை, ஒரு மேலங்கி, ஒருசோடி காலணி. ஒரு ஓட்டத்திலை ஓடிப்போய் இறாய்ஞ்சிக் கொண்டு பறந்து வந்திட்டார்.

"என்ன சீலம்பாயுக்கு உந்த கழுத்தறுக்கிற எளிய படையின்ரை உடுப்பு உனக்கு?" பெத்தய்யா எரிச்சலிலை கேட்டார்.

"இப்ப இல்லை. ஆனால் தேவை வாற நேரம் உதவியாய் இருக்கும்." எண்டார் அண்ணர். 
" அந்தநேரம் நீயுமெல்லோ ஆப்பிடப் போறாய்?" எண்டு கவலைப் பட்டார் பெத்தய்யா. அண்ணர் ஒண்டும் பறையேல்லை. தான் போட்டிருந்த கிழட்டு வேசத்தை உருவிப் போட்டிட்டு, அரணக்காறங்கடை  உடுப்பை மாட்டிப் பார்த்தார். பார்க்கப் பயமாய்க் கிடந்துது.  பெத்தய்யாவும் நடுக்கத்தோடை,
"கடவுளாணை உந்தக் கழுத்தை வெட்டிறவங்கடை உடுப்பை   உருவி குடைவுக்குள்ளை கொண்டுபோய் ஒளிச்சு வையடா மேனை" எண்டு கெஞ்சுமாப் போலை கேட்டார். அண்ணரும் அப்பிடித்தான் செய்தவர். 

மிச்சநாள் முழுக்க நித்திரை அடிச்சம். அதாலை தடியன் தொடிக்கியும் கூட்டாளிமாரும் வெறி முறிஞ்சு எழும்பின நேரம், ஆர் தலைக்கவசம் துலைச்சது, ஆரின்ரை சீருடை காணாமல் போச்சுது எண்டெல்லாம் ஆராய்ஞ்சு தங்களுக்கை நசுக்கிடாமல் அமளிப் பட்டது ஒண்டும் நமக்குத் தெரியாது. களவுக்கு வந்தவனைக் குளவி கொட்டின மாதிரி வாய்விட்டு ஒருத்தரட்டையும் ஒண்டும் பறையேலாது தானே? வெளியாலை பெரிய அதிகாரிக்குத் தெரிஞ்சாலே சவுக்கடிதான். அப்பிடி இருந்தும் ஒரு சின்ன அடிபிடிச் சத்தம் கேட்டு பெத்தய்யா நித்திரையாலை முழிச்சவராம். பார்த்தால் அடக்கின குரலிலை வசைபாடிறதும் ஒருத்தனை ஒருத்தன் போட்டுப் பிடிக்கிறதுமாய் முள்ளுப்பற்றை எல்லாம் தேகத்தைக் கிழிக்க உறுண்டு பிரண்டவங்களாம்.   


அண்டிரவு நாங்கள் தொடர்ந்து சுரங்கம் தோண்டிற வேலையைச்  செய்தம். 

"இன்னும் மூண்டே மூண்டு இரவுதான். அதுக்கு மிஞ்சி இல்லை." எண்டார் அண்ணர். 
"பேந்தென்ன நடக்கும்?" எண்டு கேட்டன்.
"பேந்தென்ன? நான் எதுக்கெண்டு இங்கினை வந்தநானோ அது நடக்கும்." எண்டார் அண்ணர்.
"எடுத்த காரியம் வெல்லுவனோ இல்லையோ, மறியல் உடைச்சு ஒர்வாரை விடுவிக்கிறது எண்டதிலை இருந்து நான் பின்னடிக்க மாட்டன்."
"அண்ணர் இனிமேல் என்னை விட்டிட்டு ஒரிடமும் நீர் போகேலாது. நீர் போற இடமெல்லாம் நானும் வாறது தான் மறு கதையில்லை." எண்டு அறுத்துறுத்துச் சொன்னன். கனநேரமாய் என்னை வைச்ச கண் வாங்காமல் பார்த்தார், பேந்து சிரிச்சார். 
"உண்மையிலையே உனக்கும் இட்டம் எண்டால், எனக்கும் இட்டம் தான்." எண்டார்.

                                                                                   (பேந்து சந்திப்பம்)


சொல்விளக்கம் :

இடைசுகம் - இடைக்கிடை 
அமளி - கலகலப்பு
அமளி - கைகலப்பு 
உள்ளிடுதல் - உள்ளே வருதல் 
இலையான் - ஈ 
வலு கலாதி - பெருங்கலகம் 
வலு கலாதி - நளினம்
கஞ்சுகம் - சட்டை 
செட்டு- திமிர் 
கிட்டங்கி - களஞ்சியம் 
புறணி - குறை கூறுதல் 
தொலுக்குமுதலி - மொழிபெயர்ப்பவர் 
அறளை பேர்தல்- ஞாபக மறதி நோய், alzheimer நோய் 
செப்பட்டை- கன்னம் 
வெக்கம்சிக்கு - சூடுசுரணை 
தறுகுறும்பு - பயமில்லாத குறும்பு 
இன்னின்னார்- இவரிவர் 
வருத்தம் - நோய் 
வேகா வெய்யில் - பொசுக்கும் வெய்யில் 
பிரியன்< புருசன் - கணவன் 
பெண்டில் - மனைவி 
தேப்பன் - தகப்பன் 
காறாப்பிச்சு < காறி + அப்பிச்சு - காறிச் சேர்த்து 
தெல்லோட்டுதல் - அலைக்கழித்தல் 
புலுண்டுதல் - மீன், இறைச்சி என்பவை பொசுங்குதல் 
புகார் - புகை 
அம்முதல்- மூடிப் பிடித்தல் 
ஓங்காளம்< ஓக்காளம் - சத்தி/வாந்தி வரும் உணர்வு 
காடை கடப்பளி < காடை கடப்பழி - காடையன் கீழானவன் 
அம்மான்- மாமா 
விறுமம்- பின் விளைவைப் பற்றி நினைக்காத கோவம் , பிடிவாதக் கோவம் 
அறம்பாடுதல் - சபித்தல் 
பூராத- புகாத 
பறிஞ்சு - ஓடி 
இறாய்ஞ்சுதல் - ஓடிப்போய் அல்லது பறந்துபோய் ஒரு பொருளைப் பறித்தல் 
சீலம்பாய்- கேவலம், துன்பம் 
ஆப்பிடுதல் < அகப்படுதல் 
நசுக்கிடாமல் - சத்தமின்றி 
போட்டுப்பிடித்தல்- அடிபிடிப் படுதல் 
அறுத்துறுத்து- அசையாத உறுதியாய் 
கயிட்டம் - துன்பம் 
இட்டம் - விருப்பம்