Author: ந.குணபாலன்
•3:34 PM
                                            மே 22 செவ்வாய்க்கிழமை 
                         ஏமிலின் தலையும் , கூழ்ச்சட்டியும்  
                                       
                                         
                                                         மூலக்கதை :"Emil i Lönneberga"
                                                         எழுத்தாளர் : அஸ்த்ரி   லிண்ட்கிறேன் , சுவீடன்  
                                                           (Astrid Lindgren, Sweeden)
                                                         (14/11-1907 --- 22/01-2002)
                                                       ஓவியம்: பியோர்ன் பெர்க், சுவீடன்   
                                                                (Björn Berg , Sweeden
                                                                    (17/09-1923 ---14/07-2008)
                                                             தமிழாக்கம்: ந.குணபாலன் 


பூனைக்கலட்டி வளவில் அன்றையநாளில் மதிய உணவாக இறைச்சிக்கூழ் காய்ச்சப் பட்டது. லீனா கூழை அந்தப் பூப்படம் போட்ட சட்டியிலே பரிமாறுவதற்காக மீட்டு வைத்திருந்தாள். எல்லாரும் சாப்பாட்டு மேசையைச் சுற்றி இருந்து கூழை விரும்பிக் குடித்தார்கள், குறிப்பாக ஏமில். ஏமிலுக்கு கூழ் நல்ல விருப்பம் என்பது அவன் பொச்சடித்துக் கூழைக் குடித்த வண்ணத்தில் தெரிந்தது.
"உப்பிடி பொச்சடிச்சுத் தான் சாப்பிடிறதே? என்ன பழக்கம் இது?" அம்மா அவனை அதட்டினா.
"இல்லையெண்டால் நான் கூழை விரும்பிக் குடிக்கிறன் எண்டதை எப்பிடிக் காட்டிறதாம்?" என்று தான் ஏமில் சொல்லத் தெண்டித்தான். ஆனால் அது,
"இல்தை யெந்தா நா கூலை விம்பி குறிக்குறன் எண்டற ஆப்பிடி காத்தூதறாம்" என்று கேட்டது. நாங்கள் உவனுடைய உந்தக் கொன்னைக்கதையைப் பற்றி ஆராய்வதை நிறுத்துவோம்.

வயிறு மெத்த எல்லாரும் சாப்பிட்டு, வெறுஞ்சட்டி மிஞ்சினது. ஆனால் ஏமிலுக்கு பொச்சம் அடங்கவில்லை. அடிச்சட்டியில் ஒரு எய்ப்பன் கூழ் இருந்தது.  அதை வழித்துத் துடைத்துத் தின்ன ஏமிலுக்கு சரியான கெடு. சட்டியைத் தூக்கித் தலைக்கு மேலே கவிழ்த்துப் பிடித்துக் குலுக்கினான். ம்கூம்.... அந்தச் சொட்டுக் கூழ் இறங்கி வந்தபாடாக இல்லை. சட்டிக்குள் முகத்தை விட்டு நாக்காலே ஒரு சுழாவு சுழாவி அந்த ஒரு சொட்டுக் கூழை நக்கி உறிஞ்சினான். உறிஞ்சல் சத்தம் நல்லாய்த்தான் கேட்டது.  தம்பிப் பிள்ளையார் இனிப் போதும் என்று சட்டியை விட்டுத் தலையை எடுத்தார்....இல்லையில்லை எடுக்கத் தெண்டித்தார். தலையை விட்டுச் சட்டி வரமாட்டேன் என்றது. சட்டி தலையிலே இறுகிப் போனது. ஏமிலுக்குப் பயம் தொட்டது. சாப்பாட்டுமேசையை விட்டு ஓட வெளிக்கிட்டான். நல்ல வண்ணமாகத் தான் சட்டி காது கண் எல்லாம் மூடி வாளியொன்று கவிழ்த்தது போல இறுக்கிக் கொண்டு கிடந்தது. ஏமில் இழுத்து, இழுத்துப் பார்த்தான். சட்டி அசைந்த பாடில்லை. பயக்கெடுதியில் "ஆத்தையரே!தாயாரே!" என்று குரையை வைத்தான். 

லீனாவுக்கும் பதகளிப்பாகப் போனது.
"அநியாயம்!அருமந்த சட்டி!" அவளின் கவலை அவளுக்கு.
"இனி எந்த இயத்திலை கூழை வார்த்து வைக்கிறது?"
எட! உந்தப் பொடியன் ஏமிலின் தலை சட்டிக்குள் சொருகுப்பட்டு விட்டதே என்ற கவலை அவளுக்கில்லை.
ஆனால் ஏமிலின் அம்மா அல்மாவுக்குத் தன்மகனின் தவிப்பைக் கண்டு பொறுக்க முடியவில்லை.
"இப்ப என்ன செய்யிறது? என்னெண்டு பெடியின்ரை தலையை வெளியாலை எடுக்கிறது?சாம்பல் கிளறுகிற கம்பியாலை சட்டியை அடிச்சுடைப்பம்" என்று கம்பியைத் தேடினா.
"உனக்கென்ன விசரே?" என்று சத்தம் போட்டார், ஏமிலின் அப்பா அந்தோன்.
"என்ன விலை போகுது உந்தச் சட்டி எண்டு ஒருக்கால் நினைச்சுப் பார்த்தியே? ஒரு நாலு குறோன் எண்டாலும் இருக்கும்."

"நான் ஒருக்கால் தெண்டிச்சுப் பார்க்கிறன்" என்று அல்பிறெட் முன்வந்தான். அல்பிறெட் நல்ல பலசாலி எல்லே? பாரமான பண்ணை வேலையெல்லாம் நாளாந்தம் செய்கின்றவன். அல்பிறெட் சட்டியின் கைபிடிகளைப் பிடித்து உயரத் தூக்கினான். ஏமிலும் இழுவுண்டபடி தூக்குப் பட்டான். அல்பிறெட் சட்டியைக் குலுக்கிப் பார்த்தான். கொஞ்சம் தன்னும் தலை அசையவில்லை. ஏமில் கால்களைப் போட்டு அடித்தபடி திமிறினான்.
"என்னை விடுங்கோ!, என்னை விடுங்கோ எண்டிறன் !......" என்று வீரிட்டுக் கத்தினான். அல்பிறெட்டும் பேசாமல் ஆளை இறக்கி விட்டான். இப்போது எல்லாருக்குமே கவலையாகிப் போனது.  அப்பா அந்தோன், அம்மா அல்மா, குட்டி ஈடா, லீனா, அல்பிறெட் எல்லாரும் அடுப்படியிலே ஏமிலைச் சுற்றவர நின்றபடி என்ன செய்து பொடியனின் தலையை மீட்கலாம் என்று மூளையைக் கசக்கினார்கள்.

"அண்ணா அழுகிறார்" ஒரு சில கண்ணீர்த்துளிகள் கன்னத்தில் இருந்து இறங்கிச் சட்டி விளிம்பில் கோர்த்து நின்றதைக் கண்ட ஈடா பரிதாபப் பட்டாள்.
"நானொண்டும் அழேல்லை. அது கூழ்த்தண்ணி.."என்று சளாப்பினான் வீரவான் ஏமில்.  தான்
துணிச்சலாக இருப்பதாக அவன் நடித்தான். எக்கணம் சட்டியைக் கழற்றவே முடியாமல் போய்விடுமோ? பாவம் எமில்! இனி எப்போது தான் தன்னுடைய தொப்பாக்கியைத் (தொப்பி) தலையில் மாட்டி வடிவு பார்க்க அவனால் முடியுமோ? 

அல்மாவுக்கு அழுகையும் தவிப்புமாக இருந்தது. திரும்பவும் சாம்பல் கிளறும் கம்பியாலே சட்டியை அடித்துடைக்க வெளிக்கிட்டா.
"தொடப்படாது. சொல்லிப் போட்டன் கண்டீரோ!" அப்பா சீறினார்.
"நாலு குறோன் சட்டியை உடைக்கிற நேரம் மரியான் தோப்பு பரியாரியாரிட்டை போவம் அவர் ஒரு மூண்டு குறோனை மிஞ்சி எடுக்கமாட்டார். அந்த வகையிலை ஒரு குறோன் மிச்சம் பிடிச்சுப் போடலாம்." 
அது ஒரு நல்ல புத்தியாக அல்மாவுக்கும் பட்டது. ஒருத்தர் ஒரு குறோன் காசு ஒவ்வொரு நாளும் சம்பாதிக்க முடியுமே? முடியாது. மிச்சம் பிடிக்கின்ற அந்த ஒரு குறோனுக்கு  ஈடாக்குட்டிக்கு என்னத்தையாவது வாங்கித் தரலாம் தானே? ஏமிலை கூட்டிக் கொண்டு போகின்ற இடத்துக்கு நானும் வருவன் என்று அடம் பிடிக்காமல் அந்தப் பிள்ளை சொல்லுவழி கேட்டு பேசாமல் வீட்டிலேயே இருக்கும். 

பூனைக்கலட்டி வளவிலே எல்லோரும் அந்தரப் பட்டனர். ஏமிலைக் கழுவித் துடைத்து வெளிக்கிடுத்த வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலயத்துக்குப் போகும்போது போடுகின்ற உடுப்பைப் போட்டு விடலாம்.... ஆனால்.... தலையையும் இழுத்து விடேலாது .... அத்தியாவசியமாக இருந்தாலும் காதடியையும் கழுவ முடியாது. அதுதான் அந்தச் சட்டி கவிழ்ந்து தலையை இறுக்கினபடி கிடக்கின்றதே?

அம்மா அல்மா ஒரு மாதிரியாக தன் ஆட்காட்டி விரலை சட்டி இடைவெளிக்குள் நுழைத்து காதடியை துடைக்கத் தெண்டித்தா. அது சும்மா இருக்கப்பட மாட்டாத காரியமாகிப் போனது. படுகின்ற அவத்தை காணாமல் இன்னும் அவத்தையாகிப் போனது. என்ன பம்பல் என்றால்..... இப்போது அல்மாவின் விரலும் அகப்பட்டுப் போனது.
"சரி சரி அம்மாவின்ரை விரலும் சொருகுப்பட்டுப் போச்சுது" என்று ஈடா சொன்னாள். அப்போது அந்தோனுக்குக் கொதி கிளம்பினது மற்றும்படிக்கு அவர் ஒருநல்ல மனிசன்.
" வேறை யார் இனி இருக்கிறீங்கள் சட்டியிலை சொருகுப்பட?" என்று கத்தினார்.
"அப்பிடிச் செய்ய விரும்பிகிறவையள் எல்லாம் சொருகி முடியுங்கோ. நான் ஒருமிக்க வைக்கோல் ஏத்துகிற வண்டிலைக் கொண்டு வாறன். கொத்தாய் ஏறிக் குந்துங்கோ ஒட்டுமொத்தப் பூனைக்கலட்டி வளவையும் ஒரேயடியாய் மரியான் தோப்பு பரியாரியிட்டை கூட்டிப் போறன்."

அல்மா கெட்டிக்காரி. ஒருபாடாக விரலை வெளியே இழுத்து எடுத்து விட்டா. 
" நீ இண்டைப்பாட்டுக்கு காதொண்டும் கழுவத் தேவையில்லை ஏமில்!" என்று நசிந்து நொந்த விரலை வாயால் ஊதினபடி சொன்னா. அப்போது அந்தக் கூழ்ச் சட்டியின் விளிம்புக்கு வெளியே தெரிந்த ஏமிலின் வாயில் புன்னகை விரிந்தது. 
"இப்பத்தான் இந்தச் சட்டியாலை ஒரு நல்ல காரியம் நடந்திருக்குது"என்று திறுத்திப் பட்டான்.

அல்பிறெட்  குதிரை வண்டிலைப் பூட்டிக் கொண்டு வந்து வீட்டு வாசல் படியோடே நிற்பாட்டினான். அம்மா கையைப் பிடித்து பக்குவமாக ஏமிலைக் கூட்டி வந்தா. வரிவரியாகக் கோடிட்ட தேவாலயத்துக்குப் போடும் உடுப்பும், கறுப்புத் தெறி வைத்த நீளச் சப்பாத்தும், கத்தரி வெருளிக் கோலத்தில் தலையில் கவிழ்ந்த சட்டியுமாக ஏமில் வலு கலாதியாக இருந்தான். எக்கணம் புதுமோடியில் செய்யப்பட்ட தொப்பியோ என்றும் நினைக்க வைத்தது அந்தச் சட்டி. கடைசியாக ஒன்றேயொன்று மட்டும் சொல்லலாம், அந்தச் சட்டி ஏமிலின் காதையும் மூடிக் கவிழ்ந்து கிடந்தது. 

மரியான்தோப்புப் பரிகாரியார் வீட்டுக்கு வண்டில் கிளம்பினது. 
"நாங்கள் வரும்வரைக்கும் ஈடாவை பத்திரமாய்ப் பார்த்துக்கொள் லீனா" வண்டில் வெளிக்கிடும்போது அல்மா சொன்னா. அவ வண்டிலிலே முன்பக்க ஆசனத்திலே அந்தோனுக்குப் பக்கத்தில் இருந்தா. பின்பக்க ஆசனத்தில் ஏமில் அம்மளவு அவத்தைக்குள்ளேயும் தன்னுடைய தொப்பாக்கியையும் விடாப்பிடியாக கையிலே வைத்துக் கொண்டிருந்தான். அவன் வீட்டுக்குத் திரும்பி வரும்போது வெறுந்தலையாக வரக்கூடாது எல்லோ? 

"இரவைக்கு என்ன சமைக்க?" வண்டில் வீட்டுப்படலையைத் தாண்ட லீனா கத்தினாள்.
"உன்னுடைய இட்டப்படி செய்!" அல்மா திருப்பிக் கத்திச் சொன்னா.
" உதைவிட தலை வெடிக்கிற பிரச்சினையில்லை நான் இருக்கிறன்."
"ஆங் ... நான் அப்ப இறைச்சிக்கூழையே செய்யிறன்"என்று சொல்லி வாய்மூடு முன்னம் பூப்படம் போட்ட ஏதோ ஒன்று தன் கண்ணைவிட்டு மறைவதை லீனா உணர்ந்தாள். அப்போது தான் அவளுக்கு ஒரு விசயம் ஓடி வெளித்தது. ஆளுக்குக் கொடி தொங்கிப் போய் விட்டது. முகத்தைத் தொங்கப் போட்டபடி ஈடாவையும், அல்பிறெட்டையும் பார்த்தாள். 
"அரத்தக் கொழுக்கட்டைதான் இரவைக்குச் சாப்பாடு"

ஏமில் முன்னம் கனக்கத் தரம் மரியான்தோப்புக்குப் போய்வந்து இருக்கின்றான். வழமையிலே உயரமாக குதிரைமுதுகிலே சவாரி செய்தபடி வளைவும், முடக்குமான அந்தப் பாதையிலே போவது அவனுக்கு நல்ல விருப்பம். அந்தப் பாதை செல்லும் வழியில் அமைந்திருக்கும் வீடு வளைவுகளை, அங்கே வசிக்கும் குழந்தைகளை, கடவைகள் வழியே குலைக்கும் நாய்களை, மேய்ச்சல் தறையிலே மேய்கின்ற மாடுகள் குதிரைகளை எல்லாம் பார்த்தபடி போவது வழக்கமாய்  நல்ல பம்பலாக இருக்கும்.  இன்றைக்கு தலையிலே கவிழ்ந்து போன சட்டிக்குள் இருந்த அவன் கண்ணில் அவனது சொந்த சப்பாத்துக் கூடச் சரிவரத் தெரியயவில்லை. எந்தநேரமும் ஏமில் அப்பாவிடம்,
"இப்ப எவடம் வந்திட்டம்? உறொட்டியடி தாண்டியாச்சே? பண்டிச்சொறியல்  போட்டுதே? " என்று கேட்ட சீர்.

ஒவ்வொரு இடத்துக்கும் ஏமில் தன்பாட்டில் ஒவ்வொரு பெயர் வைத்திருந்தான். ஒருநாள் நல்ல குண்டுப் பிள்ளைகள் இருவர் தங்கள் வளவுப் படலையடியில் உறொட்டி தின்றுகொண்டு நின்றதைக் கண்டான். அன்று தொட்டு அந்தவளவு உறொட்டியடி ஆனது.  பன்றிகள் மேய்ந்த ஒரு இடத்தில் ஒரு பன்றிக்குட்டியின் முதுகைச் சொறிந்து விடுவது ஏமிலின் வழக்கம். அந்த இடத்துக்குப் பண்டிச்சொறியல் எனப் பேர் வைத்திருந்தான். இப்போது என்னடாவென்றால் உறொட்டி தின்னும் பிள்ளைகளையும் பார்க்கேலாது, முதுகு சொறிந்து சிநேகிதம் பிடித்த பன்றியையும் காணேலாது. பின்னே அவனாலே தொண தொணப்பதை விட்டு வேறென்ன செய்ய முடியும்?
"நாங்கள் இப்ப எங்கினை நிற்கிறம்? மரியான்தோப்பு இன்னும் வந்தபாடில்லையோ?"தலையில் கவிழ்ந்த சட்டியும், கோலமுமாக ஏமில் வந்தநேரம் மரியான்தோப்புப் பரிகாரியார் வீட்டுக் கூடத்திலே பல நோயாளர் காத்திருந்தனர். அவனது நிலைமையைக் கண்டு எல்லோரும் பரிதாபப் பட்டனர். விபரீதம் ஒன்று நடந்ததென்று விளங்கிக் கொண்டனர். ஒரேயொரு பகடி சேட்டை மெத்தின கிழவர் மட்டும் பக்குப்பக்கென்று அடக்க முடியாமல் சிரித்தார். 
"ஒ கோ கோ கோ ...... காதாவடி குளிரேல்லையோடா பெடி?"என்று கேட்டு நக்கலடித்தார்.
"சாய்ச்சாய்!" என்றான் ஏமில்.
"பேந்தேன் சட்டியைக் கவிட்டுப் போட்டிருக்கிறாய்?"என்று நொட்டை அடித்தார்.
"இல்லாட்டில் காதாவடி குளிரும் எல்லேயெணை அப்பு?" சின்னப்பொடியன் என்றாலும் தருணத்துக்கு ஏற்றபடி ஏமிலும் பகடி விடுவான்.

ஏமிலின் முறை வந்ததும் பரிகாரியாரின் அறைக்குள்ளே சென்றான். பரிகாரியார் ஒன்றும் அவனது நிலைமை கண்டு பகடிவிட்டுச் சிரிக்கவில்லை. 
"வணக்கம்! வாங்கோ! என்னப்பா நீ அங்கை உள்ளை என்ன செய்கிறாய்?" என்று கேட்டார். ஏமிலால் பரிகாரியாரைப் பார்க்க முடியாது தானே? இருந்தாலும் வலு பணிவாக தலைசாய்த்து வணக்கம் தெரிவிக்க தன்னால் ஏலுமானவரை கதியாக குனிந்தான். "படார்" என்றொரு சத்தம்.
சட்டி இரண்டாக உடைந்தது. என்ன நடப்பென்றால் ஏமில் குனிந்த வேகத்தில் பரிகாரியாரின் மேசையில் தலை பலமாக மோதுப்பட சட்டி உடைந்து போனது.

"ஐயோடா! நாலு குறோன் பறந்தான்." என்று அந்தோன் அல்மாவிடம் குசுகுசுத்தார். ஆனால் அது பரிகாரியாருக்குக் கேட்டுவிட்டது.
"மெய்தான்! எண்டாலும் ஒரு குறோன் சம்பாரிச்சு விட்டீங்கள். நான் வழக்கமாய் இப்பிடிக் கூழ்ச்சட்டியை விட்டுச் சின்னப் பொடியங்களின்ரை தலையைக் கழட்ட அஞ்சு குறோன் எடுக்கிறநான். ஏமில் அதுக்கு வழியில்லாமல் செய்திட்டார்."என்றார் பரிகாரியார்.

அப்போது அந்தோனுக்கும் மகிழ்ச்சியாகிப் போனது. ஏமில் தானே சட்டியை உடைத்து ஒரு குறோன் மிச்சம் பிடித்துத் தந்திருக்கின்றான் எல்லே? உடைந்த சட்டித் துண்டுகளைப் பொறுக்கினபடி பெண்சாதி பிள்ளையைக் கூட்டிக் கொண்டு வலு சுறுக்காக அந்த இடம் விட்டு அந்தோன் அகன்றார். எக்கணம் கொஞ்ச நேரேம் கூடுதலாக நின்று மினைக்கெட்டால் பரிகாரியார் காசேதும் கேட்டுவிட்டாலும் என்று நினைத்திருப்பாரோ? வெளியே தெருவுக்கு வந்தவுடன் அல்மா,
"பாருங்கோவன் நாங்கள் திரும்பவும் ஒரு குறோன் சம்பாரிச்சு விட்டம். அதுக்கு என்னத்தை வாங்குவம்?"
"ஒண்டுமே வாங்கிறதில்லை!"என்றார் அந்தோன்.
"அதை நாங்கள் மிச்சம் பிடிக்க வேணும்!" ஏமிலுக்கு அஞ்சு ஓரைதான் கிடைக்கும் உண்டியலில் சேர்த்து வைக்க. அந்தோன் தன் பணப் பையில் இருந்து ஒரு அஞ்சு ஓரை எடுத்து ஏமிலுக்கு நீட்டினார். வீட்டைப் பார்த்து வண்டில் திரும்பியது. ஏமிலுக்குப் பெரிய புளகம். பெரிய திறுத்தியோடு பின்பக்க ஆசனத்தில் உள்ளங்கையில் அஞ்சு ஓரையும், தலையில் அந்தப் பேர்போன தொப்பாக்கியோடும் இருந்தான். வழிவழியே அவன் பார்த்து இரசிக்கும்  அந்தக் குண்டுப் பிள்ளைகள், மாடுகள், குதிரைகள், பன்றிகள் எல்லாவற்றையும் பார்த்தபடி போனான்.

ஒரு சராசரிப் பொடியனாக ஏமில் இருந்திருந்தால் அன்றைய மீதிப் பொழுது அமைதியாகப் போயிருக்கும். ஏமில் ஒரு சராசரிப் பொடியனே? இல்லையெல்லே? ஏமில், ....ஏமில் தான்!அவன் என்ன செய்திருப்பான் என்று ஊகிக்க உங்களால் முடியுமோ? அந்த அஞ்சு ஓரையை வாயில் போட்டுச் சூப்பிக் கொண்டிருந்தான். பண்டிச்சொறியல் தாண்டினபோது வண்டில் ஒரு சிறு குழியில் தடக்கி ஏறினது. அந்தக் குலுக்கத்தில் அந்த அஞ்சு ஓரை காசு தொண்டைக்குள் போய்விட்டது.
"ஒய்! " என்றான் ஏமில்.
"காசு வழுக்கிக்கொண்டு வயித்துக்குள்ளை போயிட்டுது "
ஏமிலுக்கு அம்மா அல்மா திரும்பவும் புலம்பத் தொடங்கினா.
"எடக்கடவுளே! என்னெண்டு காசைப் பெடியின்ரை வயித்திலை இருந்து போக்காட்டிறது? பரியாரியார் வீட்டுக்கு வண்டிலைத் திருப்புங்கோ!"
"ஓமோம் ஏன் சொல்லமாட்டீர்?" அப்பா அந்தோனுக்கு சினம் சினமாக வந்தது.
"அந்த அஞ்சு ஓரையை எடுக்கப் பரியாரிக்கு அஞ்சு குறோன் குடுக்கப் போறீரோ? பள்ளிக்கூடத்திலை கணக்குக்கு என்ன பெறுபேறு எடுத்தனீர்?"

ஏமில் அந்தரப்படவில்லை. வயிற்றை ஆறுதலாகத் தடவினபடி,
"உண்டியல் எண்டால் கத்தியை கித்தியை விட்டுத் தெண்டிக்கிண்டி காசை எடுக்கலாம். ஆனால் என்ரை வயித்துக்குள்ளை எண்டால் பக்குவமாய் இருக்குந் தானே?"என்றான். ஆனால் அம்மா அல்மா விட்டபாடாக இல்லை. திரும்ப ஏமிலை பரிகாரியாரிடம் கொண்டு போக வேண்டும் என்று விரும்பினா.
"சட்டைத் தெறிகளை அவன் விழுங்கின நேரம் நான் உங்களுக்கு உடனடியாய் ஒண்டுமே பறையாமல் பேந்து ஆறுதலாகச் சொன்ன நான் ஞாவகம் இருக்கே?" என்று நினைவு படுத்தினா. 
"சொல்லிறதைக் கேளுங்கோ! உது இலேசுப்பட்ட காரியமில்லை." அப்பா அந்தோனையும் பயமுறுத்துவதில் வெற்றி கண்டா. குதிரை வண்டிலும் மரியான் தோப்புக்கு மீண்டும் வந்தது. அப்பா அந்தோன்  நல்லாகத்தான் பயந்துபோனார். நெஞ்சு தொண்டைக்குள் வந்துவிட்டது போல அந்தரப் பட்டபடி மகனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக பரிகாரியாரிடம் உள்ளிட்டார்.


"என்ன? எதையாவது மறந்து போய் விட்டிட்டுப் போய்விட்டீங்களோ?" என்றார் பரிகாரியார்.
"இல்லை பரியாரியார் அது வந்து ஏமில் ஒரு அஞ்சு ஓரை காசுக்குத்தியை விழுங்கிப் போட்டான்.  வயித்தைக் கீறி எடுக்க வேணும் எண்டு கண்டால் ஒரு நாலு குறோன் மட்டிலை தாறன்......., இல்லையில்லை அந்த அஞ்சு ஓரைக்காசையும் நீங்களே வைச்சிருக்கலாம்......" என இழுத்தார் அந்தோன். அப்போது அப்பாவின் மேலங்கியைத் தொட்டிழுத்த ஏமில்,
"அது ஏலாது. அது என்ரை காசெல்லோ?" என்று தன் எதிர்ப்பை வெளியிட்டான்.

அந்த அஞ்சு ஓரையை ஏமிலிடம் இருந்து எடுக்கும் எண்ணம் பரிகாரியாருக்கு தொட்டுப் போலும் இல்லை. வயிற்றை கீற வேண்டிய தேவை இல்லை என்று சொன்னார். அஞ்சு ஓரைக்குற்றி   தன்பாட்டில் வெளியே வருமாம். ஒன்றிரண்டு நாட்கள் செல்லுமாம்.
"ஆனால் ஒரு அஞ்சு சீனியப்பம் சாப்பிடு. அப்பத்தான் அஞ்சு ஓரைக்குத்தி வயித்தக் கிழிக்காமல் கூட்டாளியோடை வெளியாலை வரும். " கட்டணம் எதுவும் பெறாது இப்போதும் அவர்களை அனுப்பி வைத்தார் நல்லதொரு பரிகாரியார். கனகாலம் நல்லாய் இருக்க வேண்டும்.

தெருவுக்குத்  திரும்ப வந்து வண்டிலில் ஏறின அப்பா அந்தோனுக்கு வலு திறுத்தி! அதை அவரது பளபளத்த முகம் காட்டியது. அம்மா அல்மாவுக்கு என்றால்.... திருமதி அந்தர்சன் வெதுப்பகத்துக்குப் போய் சீனியப்பம் வாங்க ஆசை.
"மூச்சுக் காட்டாமல் வாங்கோ!" என்று எரிச்சல் பட்டார், அப்பா அந்தோன்.
"வீட்டை லீனா அளவு கணக்கில்லாமல் செய்த முந்தநாளையான் சீனியப்பம் கிடக்கும். அதை வீணாக்காமல் சாப்பிடலாம். கடையப்பத்துக்கு வீணாகக் காசு குடுக்க வேண்டாம்." உள்ளதைச்  சொல்லப்போனால் முந்தநாளையான் சீனியப்பம் எல்லாம் நேற்றே சாப்பிட்டு முடிந்து விட்டது.
ஏமில் நெளியத் துவங்கினான். அவன் கணக்குப் போடுவதில் கெட்டிக்காரன் தான் என்றாலும் அவனுக்குப் பசி கிளம்பி விட்டது. 
"என்னட்டை கிடக்கிற அஞ்சு ஓரை மட்டும் என்ரை கையிலை கிடைக்கும் எண்டால் நானே என்ரை பாட்டிலை சீனியப்பம்  வாங்கிப்போடுவன்." என்று முணுமுணுத்தான். பிறகு 
"அப்பா...ஆ...ஆ... எனக்கு ஒரு அஞ்சு ஓரை கடன் தாங்கோவன். ரெண்டு நாளையிலை என்ரை காசு வெளியாலை வந்தவுடனை திருப்பித் தருவன்தானே?" என்று கேட்டான்.

சரியென்று சொல்லி அந்தோனும் ஒத்துக் கொண்டார். மூவருமாகத் திருமதி அந்தர்சன் வெதுப்பகம் சென்றனர். நல்லாகப் பொங்கிப் பூத்த, சீனி தூவின, வட்டமான அஞ்சு சீனியப்பம் வாங்கப் பட்டது. ஒரே நிமிசத்தில் அஞ்சு சீனியப்பமும் எங்கே போனது என்றே தெரியவில்லை. ஏமிலே எல்லாவற்றையும் தின்று தீர்த்தான். 
"இம்மளவு காலத்திலை இப்பிடி ஒரு அருமந்த மருந்தை நான் சாப்பிட்டதில்லை." என்று ஏமில் திறுத்திப் பட்டான்.
"எண்டாலும் இண்டைக்கு நாங்கள் நல்லாய்க் காசு மிச்சப் படுத்திட்டம்." காசை  எண்ணியெண்ணி செலவழிக்கும் அப்பா அந்தோனும் எதோ ஒரு மயக்கத்தில் அஞ்சு ஓரைக்கு இனிப்பு , வீட்டில் இருக்கும் ஈடாவுக்கு என்று சொல்லி வாங்கிக் கொண்டார். அந்தக்காலத்தில் சின்னப்பிள்ளைகளுக்குக் கண்டபடி இனிப்புக் கொடுத்தால் அவர்களின் பல்லு சூத்தை குத்தி நாசமாகும் என்ற விளப்பம் எல்லாம் இல்லை. 


பூனைக்கலட்டி வளவுக்கு குதிரைவண்டில் வந்து சேர்ந்தது. அந்தோன் வீட்டுக்குள்ளே வந்ததும் வராததுமாக செய்த முதல்வேலை அந்த உடைந்து போன சட்டித் துண்டுகளை வச்சிரம் போட்டு ஒட்டியதுதான். அதொன்றும் பெரிய காரியமில்லை. சட்டி இரண்டு துண்டாகத் தான் உடைந்திருந்தது. சட்டி உருப்படியாக ஒட்டுப்பட்டதில் லீனாவுக்குத்தான் பெரிய புளுகு. மகிழ்ச்சி தாங்காமல் வண்டிலை விட்டுக் குதிரையை அவிழ்த்துக் கொண்டிருந்த அல்பிறெட்டைப் பார்த்துக் கத்தினாள், 
"பூனக்கலட்டி வளவிலை இனி இறைச்சிக்கூழ் கிடைக்கும் தெரியுமோ?" லீனா நல்லாகத் தான், தான் சொன்னதை நம்பிவிட்டாள். ஏமிலைப்  பற்றி மறந்தே போனாள். 

அன்று பின்னேரம் ஈடாவுடன் வழக்கத்தை விட நல்லாகச் சேர்ந்து விளையாடினான்.   குதிரை மேயும் தறையில் இரண்டு பெரிய கல்லுகள் இருந்தன. அதை இருபக்க சிவராக்கி  மூடி தடிதண்டு வைத்து விளையாட்டுக் கொட்டில் கட்டிக் கொடுத்தான். ஈடாவுக்கும் நல்ல பம்பல் முசிப்பாற்றியாக இருந்தது. ஈடா தனக்கு இனிப்பு தர வேண்டும் என்று சொல்லி ஏமில்  இடைசுகம் மெள்ள நுள்ளுவான்.


பொழுது இருட்டுப் படத் துவங்கினது. ஏமிலும், ஈடாவும் நித்திரைக்குப் போகும் நேரமானது. அம்மா எங்கே என்று அடுப்படிக்குள் வந்து பார்த்தார்கள். அங்கே அவவைக் காணவில்லை. வேறு யாரும் இல்லை. நாள் முழுக்க வெளியே குதிரை வண்டில் சவாரி போன அந்த ஒட்டுப்பட்ட கூழ்ச்சட்டி மட்டும் இருந்தது.
"ம்...கும்.....    மரியான் தோப்புக்கு போய் வந்திருக்கு இந்தச்சட்டி."என்ற ஈடா,
"என்னெண்டு அண்ணா அதுக்குள்ளே உங்கடை தலை போச்சுது?" என்று சும்மா இருக்கப் படமாட்டாமல் கேட்டாள்.
"பூ..... அதொண்டும் பெரிய காரியமில்லை ஈடா " என்ற ஏமில்,
"பார் இப்பிடித்தான்!" என்று சட்டியைத் தலையில் கவிழ்த்தான். சரி கணக்காக அம்மா அல்மா உள்ளே வந்தா. வந்தவவின் கண்ணிலே பட்டது ஏமிலின் தலை மீண்டும் சட்டிக்குள் சொருகுப் பட்டதுதான். ஏமில் தன்னால் ஏலுமானவரை சட்டியைப் பிடுங்கப் பார்த்தான். இப்போது ஈடா குழற, ஏமிலும் குழற ஒரே அமளியாகிப் போனது. 


                                                                                            


அல்மா ஓடிப்போய் அடுப்புச் சாம்பல் வழிக்கும் கம்பியை எடுத்து வந்து ஒரு போடு போட்டா. 
அந்த இராவிருட்டி நேரத்திலே "சளிங்" என்று சட்டி சில்லம் பில்லமாக உடைந்த சத்தம் மேப்பிள்பிட்டி முழுக்க கேட்டது.  மழை பெய்தது போல ஏமிலின் தலை, முகம், காது கன்னம் எல்லாம் சட்டியின் துகள். ஆட்டுக்கொட்டில் பக்கம் அலுவலாக நின்ற அந்தோன் சட்டி உடைந்த சத்தம் கேட்டுப் பறந்து வந்தார். வந்தவர் அடுப்படியின் கதவு நிலையடியில் நின்றார். பார்த்தால், அல்மா சாம்பல் வழிக்கின்ற கம்பியும் கையுமாக நிற்கின்றா.... ஏமில் என்றால் உடைந்த சட்டியின் துகள்கள் தலை முதல் கால் வரை புரண்டபடி முழிக்கின்றான்..... லீனாவுக்கு மிகவும் பிடித்த அந்தப் பூப்படம் போட்ட சட்டியோ ஆயிரம் சில்லாக உடைந்து கிடக்கின்றது. 

ஒரு வார்த்தை அந்த மனுசன் பறையவில்லை. பேசாமல் வந்த வழி திரும்பிப் போனார். ஆனால் இரு நாட்கள் செல்ல அவருக்கு அந்த அஞ்சு ஓரை குற்றிக்காசு ஏமிலிடம் இருந்து கிடைத்ததும் கொஞ்சம் ஆறுதல் பட்டார்.

இப்போது சாடை மாடையாக ஏமிலின் குணநலன் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இம்மளவும் அந்தப் பூப்படம் போட்ட கூழ்ச்சட்டியால் மே 22 ந் நடந்த புதினம். எக்கணம் இன்னும் கனக்கப் புதினங்கள் கேட்க உங்களுக்கு ஆவலாக இருக்கக் கூடும்.

                                                                (தொடரும்)

சொல்விளக்கம்:
பொச்சடித்தல்- சப்புக்கொட்டுதல் 
பொச்சம் - உண்ணும் ஆசை, கெடு,கெலி 
தெண்டித்தல் - முயலுதல் 
கொன்னைக்கதை - கொச்சைப்பேச்சு 
எய்ப்பு- தளர்ச்சி, இளைப்பு 
எய்ப்பன் - கொஞ்சம் 
பரியாரியார்< பரிகாரியார் - மருத்துவர் 
வெளிக்கிடுதல்- புறப்படுதல், துவங்குதல் 
வெளிக்கிடுத்துதல்- ஆடை, அலங்காரம் செய்தல் 
பதகளிப்பு- பதற்றம் 
இயத்து , ஏனம் - பாத்திரம் 
குரையை வைத்தல்- குழறுதல் 
பெடி, பொடியன் - பையன் 
விசர்-பைத்தியம் 
சளாப்பினான்- குழப்பினான், சமாளித்தான்
புதுமோடி- புதுவிதம், new fashion  
எக்கணம்-சிலவேளை 
பம்பல், முசிப்பாற்றி -பகடி, நகைச்சுவை 
இண்டைப்பாடு< இன்றையபாடு
கத்தரிவெருளி - சோளக்கொல்லைப் பொம்மை 
ஓடி வெளித்தது - ஞாவகம் வந்தது, விளங்கினது 
கொடி தொங்கிப்போதல் - உற்சாகம் இழந்து போதல் 
உறொட்டி - pancake 
சீனியப்பம் - buns 
சாய்ச்சாய் - சேச்சே, சீசீ 
காதாவடி- காதுப்பக்கம் 
100 ஓரை = 1 குறோன் 
பெறுபேறு-புள்ளிகள்,marks
புளகம்- மகிழ்ச்சி  
பேந்து<பெயர்ந்து-பின்பு 
இடைசுகம் -இடைக்கிடை 


Author: ந.குணபாலன்
•3:32 PM

தென்புலத்தோர் வழிபாடு 

ஒருவர் மோசம் போய்விட்டார் என்றால், யாழ்ப்பாணத்துப் பேச்சுவழக்கில் அவர் மோட்சம் போய்விட்டார் என்று விளக்கம். தென்புலத்தார் வழிபாடு தமிழர் வாழ்வில் மிக முக்கியமானது. இங்கே நான் கண்டுகேட்டு, கைக்கொண்ட சில பல எடுத்துக் காட்டுக்கள் சில.

தென்புலத்தார் என்று திருக்குறள் கூறும் மறைந்த மூதாதையரை வழிபடும் முறைகள் இடத்துக்கிடம், ஊருக்கூர் வேறுபடும். ஒருவர் இறந்தபின் அவர் உடலை, தலை தெற்குத் திசையில் இருக்க வளர்த்தி தலைமாட்டில் ஒரு விளக்கைக் கொளுத்தி வைப்பார்கள். இறந்தவர் உடல் எரியூட்டப் படும் வரை அந்த வீட்டில் அடுப்பு எரிக்கமாட்டார்கள். அதன்பின்னே அந்தியேட்டி வரை இறந்தவரை வளர்த்தி இருந்த இடத்தில் தெற்குப்பக்கமாக விளக்கு இராப்போலாய்( இரவு பகலாய்) எரியும். விளக்கடியில் ஒரு தண்ணீர்ச் செம்பு நாளாந்தம் மூன்றுநேரமும் புதிதாக வைக்கப்படும். மூன்றுநேரமும் விளக்கடியில் உணவு வகைகள் படைக்கப்படும். இறந்தநாளை முதலாவது நாளாகக் கொண்டு ஒற்றைப்பட்ட நாளில் அனேகமாக மூன்றாம் நாள் காடாற்று/பால்தெளித்தல்/சாம்பல் அள்ளுதல் செய்வர். அதேபோல ஒற்றைப்பட்ட நாளில் (5ம், 7ம் நாள்) எட்டு/ செலவு/எட்டுச்செலவுப் படையல் நடைபெறும். எட்டு =எள்+தூ அதாவது எள்தூவுதல் என்பதன் சுருக்கமே அன்றி எட்டாம்நாள் என்ற கருத்தல்ல. ஆனால் எள் தூவுதல் என்பது எட்டிலன்று இப்போது இல்லை. அந்தியேட்டி வரை விளக்கடியில் தங்களால் இயன்ற வசதிக்கு ஏற்றபடி தின்பண்டங்களைப் படைப்பர். அந்தியேட்டியில் மரக்கறி உணவு படைக்கப்படும். அதன்பின்னே அடுத்தடுத்த நாட்களில் அவரவர் வசதிக்கேற்ப மச்சப்படையல் வைப்பார்கள். இறந்தவர் மது, புகை பழக்கம் உள்ளவராயின் அவைகளும் படையலில் இடம் பெறும். வரியாவரியம் வரும் திவசங்களில் மரக்கறி உணவுப் படையலும், மறு தினங்களில் மச்சப்படையலும் இருக்கும். 

அதைவிட ஆடிப்பிறப்பன்று பனங்கட்டிக் கூழும், கொழுக்கட்டையும், பழங்களும் பிதிருக்குப் படைக்கப்படும். தீபாவளிக்கு முதல்நாளும் மச்சப்படையல் படைப்பார்கள். மார்கழி மாசம் பிதிர்கள் தவத்துக்குப் போகும் காலம் என்று சொல்லி அவர்கள் தவத்திற்குப் போகுமுன்னே விளக்கீட்டிலன்றும் பழங்களுடன் கொழுக்கட்டையும் படைக்கப்படும். தைப்பொங்கலன்று வெள்ளாப்பில் சூரியனுக்குப் பொங்கிய பின்னே, தவத்துக்குப்போன பிதிர்கள் திரும்பி வந்தனர் என்று சொல்லி செக்கலிலே மச்சப்படையல் குறிப்பாகக் கணவாய்க்கறியும் சோறும் படைக்கப்படும்.

தாயில்லாதவர்கள் சித்திராப்பருவத்திலும், தகப்பன் இல்லாதவர்கள் ஆடியமாவாசையிலும் விரதம் இருப்பார்கள். நீர்க்கரையில் எள்ளுந் தண்ணீரும் இறைத்தும், பெற்றவரின் பெயரில் மோட்ச அருச்சனை செய்தும் தென்புலத்தாரை வழிபடுவர். முன்னைய காலங்களில் ஆண்மக்கள் மட்டுமே கடைக்கொண்ட இவ்விரதங்களை, இன்று பெண்மக்களும் கடைப்பிடிப்பதைக் காணக் கூடியதாய் இருக்கிறது.

நல்லநாள் பெருநாள் என்று சொல்லி, தைப்பொங்கல், சித்திரை வரியப்பிறப்பு, தீபாவளி நாட்களுக்கு முதல்நாள் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது இறந்தவரை நினைவு கூர்வர். பழஞ்சலிப்பு என்று சொல்லப்படும் இந்த வழமை நானறிய 70ம் ஆண்டுகள் வரை எங்கள் பக்கம் இருந்தது. இன்று அற்றுப்போய் விட்டது.

ஒரு சிறு குறிப்பு: 
thenpulam> templum>temple
அதாவது தென்புலத்தாரை வழிபட்ட இடமே templum என்று இலத்தீன் மொழிக்கு மாறி ஆங்கிலத்தில் temple என்று ஆனதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.