•3:32 PM
தென்புலத்தோர் வழிபாடு
ஒருவர் மோசம் போய்விட்டார் என்றால், யாழ்ப்பாணத்துப் பேச்சுவழக்கில் அவர் மோட்சம் போய்விட்டார் என்று விளக்கம். தென்புலத்தார் வழிபாடு தமிழர் வாழ்வில் மிக முக்கியமானது. இங்கே நான் கண்டுகேட்டு, கைக்கொண்ட சில பல எடுத்துக் காட்டுக்கள் சில.
தென்புலத்தார் என்று திருக்குறள் கூறும் மறைந்த மூதாதையரை வழிபடும் முறைகள் இடத்துக்கிடம், ஊருக்கூர் வேறுபடும். ஒருவர் இறந்தபின் அவர் உடலை, தலை தெற்குத் திசையில் இருக்க வளர்த்தி தலைமாட்டில் ஒரு விளக்கைக் கொளுத்தி வைப்பார்கள். இறந்தவர் உடல் எரியூட்டப் படும் வரை அந்த வீட்டில் அடுப்பு எரிக்கமாட்டார்கள். அதன்பின்னே அந்தியேட்டி வரை இறந்தவரை வளர்த்தி இருந்த இடத்தில் தெற்குப்பக்கமாக விளக்கு இராப்போலாய்( இரவு பகலாய்) எரியும். விளக்கடியில் ஒரு தண்ணீர்ச் செம்பு நாளாந்தம் மூன்றுநேரமும் புதிதாக வைக்கப்படும். மூன்றுநேரமும் விளக்கடியில் உணவு வகைகள் படைக்கப்படும். இறந்தநாளை முதலாவது நாளாகக் கொண்டு ஒற்றைப்பட்ட நாளில் அனேகமாக மூன்றாம் நாள் காடாற்று/பால்தெளித்தல்/சாம்பல் அள்ளுதல் செய்வர். அதேபோல ஒற்றைப்பட்ட நாளில் (5ம், 7ம் நாள்) எட்டு/ செலவு/எட்டுச்செலவுப் படையல் நடைபெறும். எட்டு =எள்+தூ அதாவது எள்தூவுதல் என்பதன் சுருக்கமே அன்றி எட்டாம்நாள் என்ற கருத்தல்ல. ஆனால் எள் தூவுதல் என்பது எட்டிலன்று இப்போது இல்லை. அந்தியேட்டி வரை விளக்கடியில் தங்களால் இயன்ற வசதிக்கு ஏற்றபடி தின்பண்டங்களைப் படைப்பர். அந்தியேட்டியில் மரக்கறி உணவு படைக்கப்படும். அதன்பின்னே அடுத்தடுத்த நாட்களில் அவரவர் வசதிக்கேற்ப மச்சப்படையல் வைப்பார்கள். இறந்தவர் மது, புகை பழக்கம் உள்ளவராயின் அவைகளும் படையலில் இடம் பெறும். வரியாவரியம் வரும் திவசங்களில் மரக்கறி உணவுப் படையலும், மறு தினங்களில் மச்சப்படையலும் இருக்கும்.
அதைவிட ஆடிப்பிறப்பன்று பனங்கட்டிக் கூழும், கொழுக்கட்டையும், பழங்களும் பிதிருக்குப் படைக்கப்படும். தீபாவளிக்கு முதல்நாளும் மச்சப்படையல் படைப்பார்கள். மார்கழி மாசம் பிதிர்கள் தவத்துக்குப் போகும் காலம் என்று சொல்லி அவர்கள் தவத்திற்குப் போகுமுன்னே விளக்கீட்டிலன்றும் பழங்களுடன் கொழுக்கட்டையும் படைக்கப்படும். தைப்பொங்கலன்று வெள்ளாப்பில் சூரியனுக்குப் பொங்கிய பின்னே, தவத்துக்குப்போன பிதிர்கள் திரும்பி வந்தனர் என்று சொல்லி செக்கலிலே மச்சப்படையல் குறிப்பாகக் கணவாய்க்கறியும் சோறும் படைக்கப்படும்.
தாயில்லாதவர்கள் சித்திராப்பருவத்திலும், தகப்பன் இல்லாதவர்கள் ஆடியமாவாசையிலும் விரதம் இருப்பார்கள். நீர்க்கரையில் எள்ளுந் தண்ணீரும் இறைத்தும், பெற்றவரின் பெயரில் மோட்ச அருச்சனை செய்தும் தென்புலத்தாரை வழிபடுவர். முன்னைய காலங்களில் ஆண்மக்கள் மட்டுமே கடைக்கொண்ட இவ்விரதங்களை, இன்று பெண்மக்களும் கடைப்பிடிப்பதைக் காணக் கூடியதாய் இருக்கிறது.
தாயில்லாதவர்கள் சித்திராப்பருவத்திலும், தகப்பன் இல்லாதவர்கள் ஆடியமாவாசையிலும் விரதம் இருப்பார்கள். நீர்க்கரையில் எள்ளுந் தண்ணீரும் இறைத்தும், பெற்றவரின் பெயரில் மோட்ச அருச்சனை செய்தும் தென்புலத்தாரை வழிபடுவர். முன்னைய காலங்களில் ஆண்மக்கள் மட்டுமே கடைக்கொண்ட இவ்விரதங்களை, இன்று பெண்மக்களும் கடைப்பிடிப்பதைக் காணக் கூடியதாய் இருக்கிறது.
நல்லநாள் பெருநாள் என்று சொல்லி, தைப்பொங்கல், சித்திரை வரியப்பிறப்பு, தீபாவளி நாட்களுக்கு முதல்நாள் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது இறந்தவரை நினைவு கூர்வர். பழஞ்சலிப்பு என்று சொல்லப்படும் இந்த வழமை நானறிய 70ம் ஆண்டுகள் வரை எங்கள் பக்கம் இருந்தது. இன்று அற்றுப்போய் விட்டது.
ஒரு சிறு குறிப்பு:
thenpulam> templum>temple
அதாவது தென்புலத்தாரை வழிபட்ட இடமே templum என்று இலத்தீன் மொழிக்கு மாறி ஆங்கிலத்தில் temple என்று ஆனதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
4 comments:
சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html
அரிதான செய்திகள்! வியக்க வைக்கும் தகவல்கள்!!
நன்றி யாழ்பவணன்! தீவ ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும், உங்கள் குடும்பத்தினருக்கும் உரித்தாகட்டும்! உங்களைச் சார்ந்தவர்களுக்கும் உரித்தாகட்டும்! ஊக்கமான வார்த்தைகளுக்கும் நன்றி!
நன்றி நிலாமகள்! மூத்த தலைமுறையிடம் மறந்தும், மறைக்கப்பட்டும் பல அரிய தகவல்கள் இருக்கக்கூடும். உங்கள் வீட்டு பெரியவர்களிடம் கதைவிட்டுக் கதைகேட்டுப் பாருங்கள். பல தகவல்கள் வெளிப்படக்கூடும்.
எடுத்துக்காட்டுக்கு, நலமுண்டு,சித்தாடை என்றால் என்ன? எப்படியிருக்கும்? யார் அவற்றைப் பாவித்தனர்?
அது கிடக்க, தீவாளியா நாத்து ஏன் ஆடு அடிச்சு இறைச்சிக்கறி வைக்கிறவை? ஆம்பிளையள் நிறை தண்ணியிலை மிதக்கிறவை?