Author: வர்மா
•10:02 PM
கூடை மேல கூடை வைச்சு கூடலூரு போறவளே, உன் கூடக்கொஞ்சம் நானும் வாரன் கூட்டிக்கிட்டு போனால் என்ன’ வரிகளை கேட்டவுடன் ஆஹா என்ன அருமை பாடல் என்று சொல்லத்தோன்றும்.

நாயகி இடுப்பில் கூடையுடன் செல்கையில் இந்த பாடல் தொடங்கும், பாடல் தொடர்ந்து செல்கையில் கூடை என்ற சொல் வந்தாலும் நாயகியின் இடுப்பில் கூடை இருக்காது. இயக்குநர் கூடையை மறந்துவிட்டார்.

அவ்வாறு தான் எங்கள் ஊரிலும் கூடைகள் மறந்து கூடைக்காரிகளும் இல்லாமல் போய்விட்டனர்.


யாழ்ப்பாணத்தின் ஊர்களில் கூடைக்கார(காரி) வியாபாரிகள் கடந்த காலங்களில், குறிப்பாக சொல்ல போனால் இறுதி யுத்தம் முடிவடைவதற்கு முந்திய காலத்தில் வியாபார ரீதியில் கொடிகட்டி பறந்தவர்களாக காணப்பட்டனர்.

மீன்கள், பழங்கள், சிறிய அழகுசாதன பொருட்கள் சில வேளைகளில் புடவைகள் கூட கூடைக்காரிகளால் விற்பனை செய்யப்பட்டன.

கூடைக்காரிகளுக்கு தனிச்சிறப்பு இருந்தது. நம்பிக்கை, நாணயம் என்ற வியாபார அடையாளங்கள் யாரிடம் இருக்கின்றதோ தெரியவில்லை, இந்த கூடைக்காரிகளிடம் இருந்ததை காணமுடிந்தது. ஊரிலுள்ள குடும்பங்களுடன் நெருக்கமான உறவு முறையை பேணி ஒவ்வொரு வீட்டின் விடயங்கள், அந்தரங்கங்களை அறிந்தவர்களாக இந்த கூடைக்காரிகள் இருந்தனர்  

45 அல்லது 50 வயதுக்கு மேற்பட்ட பெண்மணியொருவர் தலையில் கூடைக்குள் 10 கிலோ எடையுள்ள பொருட்களை வைத்து ஊர் ஊராக சென்று விற்பனையில் ஈடுபடுவார். தலையில் கனம் குறையும் போது, அவரது இடுப்பிலுள்ள பையில் கனம் அதிகரிக்கும்.

தொடக்கத்தில் ‘மீன் வேணுமோ மீன்…. என்று தொடங்குபவர் நாட்கள் செல்ல, தங்கச்சி கமலா மீன் கொண்டு வந்திருக்கன் வாணய், அங்கால போகனும்’ என்ற அளவுக்கு வீடுகளில் உள்ளவர்களுடன் உறவுகள் அதிகரிக்கும்.

அவர்கள் கொண்டு வரும் மீன்கள் நல்ல மீன்களாக தான் இருக்கும். மீனின் செவியை இழுத்து பார்த்தால், மீனின் ப+, சமந்தா உதட்டுக்கு லிப்ஸ்ரிக் அடிச்சது போல் சிவந்து போய் இருக்கும். தரமான மீன். வேறு பேச்சுக்கே இடமில்லை. விலையும் கட்டுப்படியானதாக தான் கொடுப்பார்கள். 100 ரூபாயுக்கு மீனை மீனவரிடம் வாங்கிவரும் கூடைக்காரி 120ரூ பாவுக்கும் கொடுத்துவிட்டு செல்வார். ஆனால் வெளியில் அதே மீன், 150, 200ரூ பாய் கொடுத்துத்தான் வாங்க வேண்டும்.

இவர்களிடம் வாங்கினால் சிக்கனம். பணம் இல்லையென்று வீட்டுக்காரி வீட்டில் சமைக்காமல் இருக்க தேவையில்லை. கூடைக்காரி கடனுக்கும் மீன் தருவார். புதிதாக திருமணம் ஆன பொண்கள் எங்கேயாவது வீட்டில் இருந்தால், மீன் சமைத்து எப்படி கணவனை மடக்குவது என்பதையும் கூடைக்காரி சொல்லி கொடுப்பார்.


‘இஞ்சி, உள்ளிக்க போட்டு, ஊற வைச்சு, அதை தேசிக்காய் புளியில லேசா தடவிட்டு குழம்பு வை, பேந்து பாரனம்மா’ என்று கூடைக்காரி சொல்ல புது மணப்பெ

ண்களும் சமையல் கற்றுக்கொள்வார்கள்.

அது வியாபார தந்திரம், நல்லா சமைத்து கணவனுக்கு போட காலப்போக்கில் வீட்டில் ஆட்கள் கூடும், மீனும் கூட வாங்குவார்கள்… ‘நீண்டகால வியாபார திட்டமிடல்’ அது. பல்தேசிய கம்பனிகள் தான் அப்படி திட்டமிட முடியும் என்றும் இல்லைத்தானே.

கூடைக்காரியின் சமையல் குறிப்பால் சமையல் கற்றுக்கொண்டு, நல்ல சமையல்காரிகள் ஆகின பெண்கள் நிறை இருக்கிறார்கள்.

கூடைக்காரி மீனின் ரகங்கள், சுவைகள் சொல்ல எல்லாவற்றையும் சாப்பிட வேண்டும் போல் வாய் ஊறும். அப்படி வாயில் வெற்றிலையை போட்டு ரசிச்சு ருசிச்சு மீன்கள் பற்றி கூறுவார்கள்.

இதேபோல் தான் பழங்கள் விற்கின்றவர்களும். கூடுதலாக தென்மராட்சி பக்கம் இருந்து நிறை கூடைக்காரிகள் மாம்பழத்தோடு ஊருக்குள் திரிவார்கள். கறுத்தக்கொழும்பான் மாம்பழம், சுவை அதிகம். அதுவும் அவர்கள் சொல்லும் ‘கறுத்தக்கொழும்பான்’ என்ற வார்த்தையில் சுவை அதிகம்.

மருந்து மாத்திரை என்ற பேச்சுக்கே இடமில்லை. மரத்திலிருந்து லாவகமாக பிடுங்கி, வைக்கோல் போர்வைக்குள் பதுக்கி வைத்து பழுக்க வைத்த பழங்கள். கூடைக்குள் இருக்கும் பழங்களில் பழத்தின் பாலுடன் சேர்த்து வைக்கோல் ஒட்டியிருக்கும்.

பழம் தலைப்பக்கம் மெல்லிய மஞ்சளாக இருக்கும். கீழ் கொஞ்சம் பச்சையாக தான் இருக்கும். வைக்கோலில் பழுக்க வைக்கிற பழங்கள் முழுவதும் மஞ்சள் ஆவது கிடையாது. இப்படி 2 நிறத்தில் இருக்கும். மருந்தடித்தால் தான், ‘ஈமா வாற்சன்’ போல மஞ்சள் கலரில் இருக்கும்.


‘பழம் எல்லாம் செம மலிவு’ என்று கூடைக்காரி சொல்வாள். கிழமைக்கு 20 பழம் ஒவ்வொரு வீட்டிலும் விற்பனையாகும். நல்ல வியாபாரம். சீசனுக்கு மட்டும் வியாபாரம். சீசன் வியாபாரம் முடிய, வேறு விற்பனை. அழகு சாதனம், வேறு பழங்கள் உள்ளிட்ட விற்பனை என அவர்கள் வாழ்க்கை வியாபாரம், உறவுகள், சந்தோசம், பணம் என்று ஜாலியாக சென்றது.

யார் கண் வைத்தார்களோ தெரியவில்லை. கூடை தூக்கி வியாபாரம் செய்வதற்கு புதிய கூடைக்காரிகள் முன்வரவில்லை. இருந்த கூடைக்காரிகளும் வயது போய் இயலாத நிலைமை, அதிகரித்த விலைவாசியில் குறைந்த விலையில் மீன்களை பெற்று, ஊர்களில் விற்பனை செய்ய முடியவில்லை. சந்தையில் அதிக விலைக்கு மீன்களை வாங்க வேண்டிய நிலை. சந்தையில் கேள்வி அதிகம். கூடவே கொழும்பு கம்பனிக்கும் மீன் ஏற்றுகின்றோம் என சிலர் மீன்களை விலையேற்றிவிட்டனர்.

அவர்களுடன் போட்டிபோட்டு மீனவர்களிடம் இருந்து மீன்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியவில்லை. அதிக விலைக்கு கொள்வனவு செய்தால் ஊரில் குறைந்த விலையில் வாங்கி பழக்கப்பட்டவர்கள் அறாவிலை கேட்கின்றனர்.

வியாபாரம் கைநழுவிவிட்டது. மீன்கள் கூடைக்காரிகளின் கூடைகளின் ஏற மறுக்க, கூடைகளை வீட்டு தவாரத்தில் கூடைக்காரிகள் தூக்கி போட்டுவிட்டனர்.

வீட்டு கதவுகள் இறுகப்பூட்டப்பட்டு கூடைக்காரிகளை வரவேற்க தயாராகவில்லை. ஏமாற்று வழிகள் வீடுகளுக்குள் நுழைவதால் வீட்டுக்காரர்கள் இவ்வாறான முடிவுகளை எடுத்தனர். இதனால் நல்லவர்களான கூடைக்காரிகள் இல்லாமல் போனார்கள்.

மாம்பழ மரங்களையே பழங்களின் மொத்த வியாபாரிகள் வாங்கிவிடுகின்றனர். 50 ரூபாயுக்கு குறைவாக கறுத்தக்கொழும்பான் யாழ்ப்பாணத்தில் கொள்முதல் செய்ய முடியாது. மாம்பழ வியாபாரிகளும் பின்வாங்கிவிட்டனர்.

பாரிய வியாபார நிலையங்கள், நிறுவனங்கள் வளர கூடைக்காரிகளின் தேவைகள் மக்களுக்கு இல்லாமல் போனது.

கூடைக்காரிகள் இல்லாமல் போனதால், புதுசா கலியாணம் செய்த பெண்களில் பலர் சமைக்க கஸ்ரப்படுகின்றனர். வீட்டில் சண்டை. சாப்பாடு சரியில்லையென. மாமியார் நாடகம் பார்க்க, சொல்லிக் கொடுக்க யாரும் இல்லை. பாவம் பெண்கள் சமையல் குறிப்பை இன்டர்நெட்டில் டவுன்லோட் செய்து பிறிண்ட் எடுத்து, சமையல் அறையில் மேல் றாக்கையில் செருகி வைத்து பார்த்து பார்த்து சமையல் செய்யும் நிலை.

கூடைக்காரிகள் மொத்தமாக இல்லாமல் போனது என்றில்லை. ஊருக்குள் ஒன்றிரண்டு கூடைக்காரிகள், ஏதோ ஒரு நம்பிக்கையிலும், பெறுமானத்தின் அடிப்படையிலும் தங்கள் தொழில்களை செய்கின்றனர்.

அப்படியொரு கூடைக்காரியை சந்தித்து பின்னரே இதனை எழுதவேண்டும் என்று தோன்றியது.

மக்களை அணுகிய வியாபார முறைகள் என சந்தைப்படுத்தல் கற்கைநெறிகளில் கத்தி கத்தி சொல்லி கொடுக்கின்றனர். ஆனால் மக்களை அணுகிய விற்பனை முறையை எப்போதிருந்தோ எமது கூடைக்காரிகள் மேற்;கொண்டுவிட்டனர் என்பதை உலகம் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
குணசேகரன் சுரேன்

This entry was posted on 10:02 PM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On December 22, 2014 at 11:46 AM , ந.குணபாலன் said...
This comment has been removed by the author.
 
On December 22, 2014 at 11:49 AM , ந.குணபாலன் said...

இதெல்லாம் நடந்தேற வேண்டிய காலமாற்றங்கள். இன்னொரு எடுத்துக்காட்டு பருத்தித்துறையின் பேர்பெற்ற அப்பத்தட்டிக் கடைகள்! இப்போது காணக் கிடைப்பது மிகமிக அரிது. என்னுடைய சிறிய தாயார் ஒருவர் அந்த நாளைகளில் அப்பத்தட்டி திறந்து அப்பம் சுட்டு விற்றவ. பிள்ளைகள் ஆள்பட்டபின் வயதும் முதிர இப்போது அப்பம் சுட்டு விற்பதில்லை. அவவின் பிள்ளைகளுக்கும் அப்பம் சுட்டு விற்றுச் சீவிக்க வேண்டிய தேவையும் இல்லை. அந்த அப்பத்தட்டிகளிலே நம்பிக்கை,நேர்மை, நாணயம், நட்பு, அதற்கும் மேலாக வியாபாரி, வாடிக்கையாளர் என்றதையும் மீறி சுகநலம் விசாரிக்கும் நெருக்கம் எல்லாம் இருந்தது. எங்கள் வீடு வழியே வெங்காயம், குத்தரிசி, குரக்கன் என்று கொண்டுவந்து கொத்துக் கணக்கில் விற்க வந்த அந்த நம்பிக்கை,நாணயம், நட்பு மிக்க ஆச்சிகளையும் நினைக்க வைத்தீர்கள். நன்றி.

December 22, 2014 at 11:46 AM

 
On December 25, 2014 at 10:00 PM , வர்மா said...

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.இப்படிப்பட்ட பலதை நாம் இழந்துவிட்டோம்