Author: சஞ்சயன்
•2:35 AM
விதி கிழிந்த குருவி பீரங்கி வாசல்ல கூடு கட்டிச்சுதாம். இந்த சொற்றொடரை யாராவது கேட்டிருக்கிறீர்களா?

எனது நண்பர் ஒருவர் அடிக்டி சொல்லும் சொற்றொடர் இது. அவரைத் தவிர வேறு யாரும்அதை சொல்லிக்கேட்டதில்லை.

இதை மாதிரி குரங்கிட்ட மூத்திரம் கேட்ட மாதிரி கொப்பு கொப்பா தாவுறான் என்றும் சொல்லுவான்.


இப்படி வித்தியாசமான விசயங்கள் இருந்தால் சொல்லுங்களன். கேப்பம்

அன்புடன்
சிட்னி வெய்யிலில் சட்னியாகிக் கொண்டிருக்கும்
சஞ்சயன்

நான் சிட்னி வந்திருப்பதும் விதி கிழிந்த குருவி பீரங்கி வாசல்ல கூடு கட்டின மாதிரி போல
Author: கானா பிரபா
•2:14 AM
ஈழத்தின் ஒவ்வொரு ஊருக்கும் விசேடமான அம்சங்கள் அவை உணவுப் பதார்த்தமாகட்டும் அல்லது இயற்கையோடு மையப்படுத்தியதாகட்டும், அல்லது கைத்தொழில் சார்ந்த விடயங்கள் ஆகட்டும் இவற்றை ஒரு பதிவில் அடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு எனக்குத் தெரிந்த தகவல்களோடு வருகின்றேன்.

உங்கள் பின்னூட்டங்கள் மூலம் விடுபட்டவையை அறியத் தந்தால் அவற்றை பிற்சேர்க்கையாக இணைத்துக் கொள்வேன்.

இணுவில் - மரவள்ளிக் கிழங்கு (எங்களை எல்லாம் கிழங்கு என்ற அடைமொழியோடு தான் மற்ற ஊர்க்காரர் அழைப்பார்கள்)
தாவடி - புகையிலை

மட்டுவில் - கத்தரிக்காய்

ஆனைக்கோட்டை - நல்லெண்ணை

நிலாவரை - வற்றாத கிணறு

பருத்தித்துறை - பருத்தித்துறை வடை (தட்டையாக மொறு மொறு என்று இருக்கும் பதத்தில் செய்தது)

பளை - தேங்காய் ( நிறைய தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டு தேங்காய் விளைவிக்கப்படும் ஊர்)

கீரிமலை - யாழ்ப்பாணத்தவர் பிதிர்க்கடன் தீர்க்கப் போகும் கடல், கூடவே விடுமுறை நாட்களில் நீச்சலடிக்கும் இடம்

கசூர்னா பீச் - கசூர்னா என்ற பெயரோடு அழைக்கப்படும் கடற்கரை

யாழ்ப்பாணப் பிரதேசம் - பனங்காய் பணியாரம், ஒடியற்கூழ், புழுக்கொடியல்

பரந்தன் - இரசாயனத் தொழிற்சாலை (ஒருகாலத்தில் இருந்தது)

ஆனையிறவு - உப்புத் தொழிற்சாலை (ஒருகாலத்தில் இருந்தது)

காங்கேசன் துறை - சீமெந்து தொழிற்சாலை (ஒருகாலத்தில் இயங்கியது)

வாழைச்சேனை - காகிதத் தொழிற்சாலை

மண்டைதீவு - சுருட்டு (வந்தியத்தேவன் பகிர்ந்தது)

மட்டக்களப்பு - தயிர் (மழை ஷ்ரேயா பகிர்ந்தது)

திக்கம் - சாராய வடிசாலை (சயந்தன் பகிர்ந்தது)
Author: கரவைக்குரல்
•9:58 AM
ஒரு வேலையை சும்மா முடிக்கவே ஏலாது பாருங்கோ,அதைவிட அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் முடிக்க முடியாது எண்டால் அதிலை உண்மை இருக்குது பாருங்கோ,என்னதான் பெரிய திட்டம் போட்டு செய்தாலும் அதற்கு எதிரான கருத்துடையவர்கள் உருவாகுவது தவிர்க்க முடியாத விடயம்.நிகழ்வுகள் முடிந்த பின் அப்படியாக நிகழ்வுகள் சம்பந்தமாக அதை நிராகரித்து கருத்துரைப்பவர்களும் இருகிறார்கள்,அதேபோல ஆமோதித்து கருத்துரைபவர்களும் இருக்கிறார்கள்,அவையெல்லாம் நிகழ்வு அமைப்பாளர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்பதோடு எதிர்காலத்தில் சிறந்த முறையில் ஒழுங்கமைக்க உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை,
இப்படியாக நிகழ்வினால் வரும் எதிர்பார்க்கமுடியாத கஷ்டங்களாலும் தடங்கல்களாலும் சிலர் நிகழ்வினை ஒழுங்கமைத்துக்கொண்டிருக்கும்போது ”என்ன ஆக்கினை பிடிச்ச வேலையில் தலை குடுத்தேனோ” என்று மனம் கசந்து கொள்வார்கள் சிலர்.

அதுமட்டுமில்லாமல் எந்த ஒரு செயற்பாட்டுக்கும் வெற்றியும் உண்டு,தோல்வியும் உண்டு பாருங்கோ,வெற்றிபெற்றால் ”ஆகோ ஓகோ எண்டு வேலை போகுது” எண்டு சொல்லும் எங்கடை சனம், தோல்வியிலை போனால் “ஐயோ ஆக்கினை பிடிச்ச வேலையிலை தலை வைச்சு படுக்கிறதேயில்லை எண்டு தலையிலை கை வைப்பினம்,

இப்படியாக “ஆக்கினை” என்பது ”கஷ்டம் கொடுத்தல்” என்பதாகவும் அதனுடன் சேர்ந்து வரும் ”விழுந்த வேலை” என்பதற்கு தனியாக கருத்துக்கொடுக்காமல் ஆக்கினையில் அதாவது கஷ்டம் கொடுக்கும் வேலையில் பங்கெடுத்துவிடல் அல்லது முற்றுமுழுதாக ஈடுபட்டுவிடல்” என்றவறாக கருத்துக்கொடுக்க முடியும், அதை சிலர் "ஆக்கினை விழுந்த வேலை" என்பதை "ஆக்கினை பிடிச்ச வேலை" என்றும் சொல்லிக்கொள்வர்.

சிலருக்கு சிலர் எப்போதும் கஷ்டம் கொடுத்தபடியே இருப்பதாக அந்தச் சிலர் உணர்வார்கள்,அந்த வேளைகளிலும் கூட ”இவன் எப்பவும் ஒரே ஆக்கினை தான்”அல்லது ”ஒரே ஆக்கினை பிடிச்சவன்” எண்டு மனதோடு திட்டுவதும் உண்டு் எங்கடை சனம்.
அதைவிட அற்புதமாக ”ஆக்கினை விழுவானே” எண்டு முதியவர்கள் சிலர் கோவத்திலும் சிலர் நட்பிலும் மற்றவர்களை ஏசுவதுமுண்டு.

இப்படியாக ”ஆக்கினை” என்பது ஈழத்து வழக்கோடு ஒட்டிவிட்ட சொல்.இது வயது வந்த எம் முதியோர்களால் இப்போதும் அடிக்கடி கேட்ககூடியதாக இருக்கும்.
என்றாலும் நடுத்தர வயதானவர்களாலும் இளையோர்களலும் இடையிடையே இக்காலங்களில் சொல்லப்பட்டாலும் சிறியவர்களால் அது சொல்வது மிகக்குறைவு என்று சொல்லலாம்.என்றாலும் இந்த சொல் வழக்கொழியும் மற்றைய சொற்களைப்போல அல்லாமல் சிலகாலம் எம்மவர்கள் வாயில் நின்று நிலைக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது,இது சம்மந்தமான உங்கள் கருத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கோவன்.

சரி இவன் என்ன ஆக்கினை விழுவான் சும்மா என்னடா உளறிகொண்டிருக்கிறான் எண்டு நினைக்கிறீங்க என்ன? உங்களுக்கும் ஆக்கினை தராமல் நானும் போட்டு வாறன்,இன்னுமொரு சொல் நினைவுவரேக்கை நான் வாறன், மற்றவைக்கு ஆக்கினை தராமல் இருப்போமாக.


குடுதேனோ- கொடுத்தேனோ எங்கடை- எங்களுடைய
நினைவுவரேக்கை- நினைவு வரும்பொழுது
Author: கானா பிரபா
•2:01 AM
"கண்ணுபடப்போகுதய்யா சின்னக்கவுண்டரே! சுத்தி போட வேணுமய்யா சின்னக்கவுண்டரே" இது ஒரு பிரபலமான தென்னிந்திய திரையிசைப்பாடல். இந்தப் பாடலை ஈழத்துப் பாடலாக்கும் வாய்ப்பு வந்தால் "கண்ணூறு படப்போகுதய்யா சின்னக்கவுண்டரே! நாவூறு கழிக்க வேணுமய்யா சின்னக்கவுண்டரே" இப்படித்தான் பாடவேணும் போல.


"கண்ணு படப்போகுது" என்று என்று தமிழக மொழிவழக்கில் பரவலாகப் பேசும் வார்த்தைப் பிரயோகம் ஈழத்து மொழி வழக்கில் "கண்ணூறு பட்டுடும்" என்றே புழக்கத்தில் பயன்படும். கண்ணூறு என்பதைப் பிரித்துப் பார்த்தாலே புரிந்து விடும் இந்த சொல் கொண்டு வரும் விளக்கம். கண்+ஊறு என்று பிரித்துப் பொருள் உணர்ந்தால் பிறரது கண்பார்வை பட்டால் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும் என்ற மூதாதய நம்பிக்கையே இது கொண்டு வரும் விளக்கம். பெரும்பாலும் குழந்தைகளைப் பாதுகாக்கவே இப்படியான சொற்பிரயோகமும் பயன்படுத்தப்படுகின்றது.

திருஷ்டி சுத்தி போட வேணும் என்று தமிழக வழக்கில் இருக்கும் சொற்பயன்பாட்டையே "நாவூறு கழிக்க வேணும்" என்று ஈழமொழி வழக்கில் பயன்படுத்துவார்கள். நாவூறு என்பதற்கு ஈழத்து மொழி அகராதியில் "நாத்தோஷம்" என்றே விளக்கப்படுகின்றது. அதாவது ஒரு அழகான குழந்தையைப் பார்த்து "ஆகா இந்தப் பிள்ளை கொழு கொழுவென்று எவ்வளவு அழகான, துறுதுறுப்பான பிள்ளையாக இருக்கிறதே" என்று ஒருவர் நாவூறு பட்டால் அந்தப் பிள்ளைக்கு தோஷம் வந்து விடும் என்ற மூதாதய நம்பிக்கையே இங்கே சுட்டப்படுகின்றது. பொதுவாக ஈழத்தின் வாழ்வியலில் ஒரு குழந்தை பிறந்து விட்டால், தேங்காச்சிரட்டையில் (கொட்டாங்குச்சி என்று தமிழக வழக்கில் சொல்லப்படுவது)கருநிறப் பொட்டைத் தயாரித்து குழந்தையின் நெற்றியில் ஒரு பெரும் பொட்டை இடுவதோடு கன்னத்தில் சின்னஞ்சிறு குட்டிப் பொட்டு எதுக்குப் போடுவார்கள் வேறு எதெற்கு நாவுறு படாமல் தான்....