Author: Unknown
•6:08 PM
குப்பை பரவுதல் எண்டால் என்னவோ ஒரு கெட்ட விசயம் எண்டமாதிரி நினைக்காதீங்கோ. இப்ப கிட்டடியில வீட்டாரோட கதைக்கேக்கை இந்தச் சொல் திரும்ப ஞாபகம் வந்தது பாருங்கோ. மற்றப் பாகங்களில என்ன மாதிரி எண்டு தெரியேல்லை, ஆனால் எங்கட ஊரில வயல் விதைப்புக் காலங்களில இந்தக் குப்பை பரவுதல் எண்ட சொல் அடிக்கடி அடிபடும். குப்பை தானாப் பரவாது பாருங்கோ. நாங்களாத்தான் பரவோணும்.

அனேகமா ஆவணிப் நடுப்பகுதி-புரட்டாசி காலகட்டத்தில நாங்கள் எங்கட பெரும்போக நெல் விதைப்புக்கு வயல்களை உழத் தொடங்கீடுவம். ஓம்...ஓம்... நீங்கள் விதைக்கிறதே ஒரு போகம்தான் அதுக்குள்ள என்ன பெரும்போகம் சிறுபோகம் எண்டு புழுகிறாய் எண்டு நீங்கள் சொல்லிறது கேக்குது பாருங்கோ. அப்பிடி உழ முன்னம் வயலுக்கு பசளை போடுற வேலைதான் இந்தக் குப்பை பரவுறது. குப்பை எண்டால், வெறும் குப்பைதான் பாருங்கோ. ஆனால் இந்தக் குப்பை சேக்கிறது பெரிய கதை.

ஒவ்வொரு நாளும் விடிய எழும்பி வீடு கூட்டிறது ஒராள் முத்தம் கூட்டிறது ஒராள் எண்டு மாறிமாறிச் செய்யிறனியள்தானே நீங்கள் எல்லாரும். (எங்கட வீட்டிலை அம்மாவும் அப்பாவும் எங்களை இது செய்ய விடேல்லை எண்டிறது வேற விசயம்). ஊரில முத்தம் கூட்டிறம் எண்ட பேரில வளவு முழுக்க கூட்டுவினம், சரிதானே. எங்கள் எல்லாருக்கும் தெரியும் எங்கட வளவுகளில ஒவ்வொரு நாளும் என்ன குப்பை சேர்றது எண்டு. என்ன சேர்றது?? சொல்லுங்கோ பாப்பம்?...கஞ்சல் அல்லது குப்பை எண்டு நாங்கள் சொல்லுற இலை குழையள் தானே. அதைத்தான் பாருங்கோ சேத்துவச்சு வயல் உழ முன்னம் வயலுக்குள்ள பரவிறது. இதுதான் நான் சொல்ல வந்த ‘குப்பை பரவுதல்'

மற்ற வீடுகளில எப்பிடியோ தெரியேல்லை, நாங்கள் குப்பை சேர்க்கிறது இப்பிடித்தான் பாருங்கோ. கீழ உள்ள படத்தை ஒருக்கா வடிவாப் பாருங்கோ.
இந்த அமைப்புத்தான் எங்கட வீட்டில குப்பை சேர்க்கிறதுக்குப் பயன் படுகிறது. வீட்டின்ர பின்பக்கம் இருக்கிற மதில் ஒரு பக்கமா இருக்க மிச்ச மூண்டு பக்கமும் நல்ல காய்ஞ்ச வடலி ஓலை அல்லது மூரி மட்டை வச்சு அடைப்பினம். ஒரு மூலையில மட்டும் ஒரு சின்ன வாசல் விடுவினம். மதிலும் வேலியும் சந்திக்கிற வாசலுக்கு எதிர்ப் பக்கமாய் இருக்கிற இடத்தில இருந்து, வளைவைக் கூட்டி அள்ளிற குப்பையை எல்லாம் கொண்டேக் கொட்டுவினம். மதில் முண்டு குடுக்கிற பக்கத்தில தொடங்கினால் கனக்கக் கொட்டலாம்தானே... அதுக்குத்தான் அந்த மூலையில் இருந்து தொடங்கிறது. சில பேர் ‘ட' பட மதில் சந்திக்கிற இடத்தில ரண்டு பக்கம் சின்ன வேலி போட்டுக் குப்பை கொட்டுவினம். அது சின்ன இடத்தில நிறையக் குப்பை கொட்டுறதுக்கு இன்னும் திறம் பாருங்கோ.

அங்கை என்ன பிளாஸ்ரிக்கும் பொலித்தீனுமா வளவுகளில கிடக்கிறது. எங்கையாவது அங்கை ஒண்டும் இங்கை ஒண்டும் இருக்கும். அதுகளை ஒரு பக்கமாய் இன்னொரு இடத்திலை எறிஞ்சிட்டு, வடிவா மக்கி எருவாகக் கூடிய இலை தழை போன்ற குப்பையளை மட்டும் நான் மேல கீறிக்காட்டின வடிவில இருக்கிற குப்பை கொட்டிற இடத்தில கொட்டுவம். இருந்திட்டு பஞ்சீல பொலித்தீன், கண்ணாடி, பிளாஸ்ரிக் எண்டு என்னத்தையாவது ஒண்டாய்க் கொண்டே கொட்டிறதை அப்பா கண்டா பேசுவார். அந்தப் பயத்திலையே சரியாக் கொட்டுறது. சில பேர் குப்பையோடு சேத்து மாட்டுச் சாணம், ஆட்டுப் புழுக்கை எல்லாம் கொட்டுவினம். நாங்களும் அப்பிடித்தான். சிலபேர் ரண்டையும் தனித்தனியாக் கொட்டிறவை.

வயல் உழுகிற காலத்துக்குக் கொஞ்ச நாளைக்கு முன்னால இந்தக் குப்பையளை ற்க்ரர் லையோ, லாண்ட் மாஸ்ரரிலையோ, மாட்டு வண்டிலிலையோ ஏத்தி வயலுக்குக் கொண்டுபோறது. நான் அறிஞ்ச காலத்தில நாங்கள் றக்ரர் இல்லையெண்டால் லாண்ட்மாஸ்ரர் மட்டும்தான் பாவிச்சனாங்கள். மாட்டு வண்டியிலை ஏத்திறது சரியான வேலை மினைக்கேடு பாருங்கோ. இதைக் ‘குப்பை ஏத்திறது' எண்டுதான் சொல்லிறனாங்கள். குப்பை ஏத்திறது எண்டால் சும்மா விசயமில்லைப் பாருங்கோ. ஒரு நாளும் ஒரு வீட்டுக் குப்பை வயலுகளுக்குக் காணாது. எவ்வளவு தட்டு வயல் கூட இருக்கோ, அவ்வளவுக்கு அவ்வளவு குப்பை கூட வேணும். இதனால எங்கட வீட்டுக் குப்பை மட்டுமில்லாமல், வயல் செய்யிறது கௌரவக் குறைவு எண்டு நினைக்கிற பலபேர் வீட்டுக் குப்பையையும் போய்க் கேட்டு வாங்கி வயலுக்குக் கொண்டுவந்து போடுவம். போட்டு கொஞ்சக்காலம் வயலுக்கை மக்கவிட்டு அதுக்குப் பிறகு உழுது பயிரிட, அனேகமா மழையும் கை கொடுத்தால் அமோகமா விளையும் நெல்.

இது தனிய நெல் வயலுக்கு மட்டும் செய்யிறேல்லை. கனபேர் தோட்டக் காணியளுக்கும் இதே முறையிலை குப்பை பரவிப் பண்படுத்திறவை. நாங்கள் வயல்க் காணியள் மட்டும்தான் செய்தனாங்கள். அதுவும் வெளிநாட்டுக்கும், கொழும்புக்கும் மாறிப் போனாக்கள் பராமரிக்கச் சொன்ன வயல்களை எல்லாம் பண்படுத்தி நெல் விதைச்சனாங்கள். சில காலங்களில சில வயல்களை (குளங்கரை, காவில், கிராய், வல்லை ஆகிய நாலு இடங்களில வயல் செய்தனாங்கள்) ஆருக்காவது குத்தகைக்குக் கொடுக்கச் சொல்லி உரிமையாளர்கள் சொன்னால், அந்தக் குத்தகைக் காசைப் பொறுப்பாக வாங்கிக் கொடுப்பதும் எங்கட வேலை. ஆனா அனேகமா நாங்கள்தான் அந்த வயல்களை விதைக்கிறது. ஆகக் குறைந்தது எங்கட உறவுகளின் 7 வீடுகளில் குப்பை ஏற்றுவதுண்டு.

நேரடியாக வயலில் இறங்கி நான் வேலை செய்யவில்லை. எல்லாம் அப்பாதான். ஆனால் இந்தக் குப்பை பரவுதல் எனக்கு ஏனோ பிடிச்சிருக்கு. உரம் போட்டுப் பண்படுத்திறம் எண்ட பேரில நிலத்தைப் புண்படுத்தாமல் இயற்கைப் பசளைகளை வீசி எறிந்து தன்னிச்சையாகவே நாங்கள் இயற்கை விவசாயம் செய்து வந்திருக்கிறோம். என்னதான் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாய் உரம் அது இது எண்டு எல்லாம் வந்தாலும், பயிரிடுவதுக்கு முன் நிலத்தைப் பண்படுத்த எங்கட ‘குப்பை பரவுதலுக்கு' நிகராக ஒண்டுமே கண்டுபிடிபடேல்லை எண்டதில பெருமையா இருக்குப் பாருங்கோ.

பி.கு-1: கனடாவிலையும் முத்தம் கூட்டுறனாங்கள், வின்ரரிலை. எல்ல குப்பை எல்லாம் வெள்ளையா, படு குளிரா இருக்கும் (ஸ்னோவைச் சொல்லுறன்). அடுத்தது வீட்டுக் குப்பைகளை அகற்ற எண்டு சொல்லி பச்சை, நீலம், சாம்பல் எண்டு மூண்டு கலரில மூண்டு கலன்கள் தந்திருக்கிறாங்கள் பாருங்கோ, வெள்ளிக்கு வெள்ளி தலையிடிதான். மற்றபடி கோடை காலத்தில Backyard இல சில பயிர்கள் போடுவினம். அதுவும் இல்லையெண்டால் அங்க வெயிலுக்க தோட்டம் செய்திட்டு இஞ்ச வந்த எங்கட சனம் முக்கால்வாசிக்கு விசர் பிடிச்சிடும்.

பி.கு-2: யாழ்ப்பாண மக்களை எங்களை விடுங்கோ. உந்த வன்னிச் சனம் மும்முரமாய் வயல் செய்யிறதுகள். இப்ப அதுகளுக்கு வாழ்க்கையே உடைஞ்ச மாதிரி. என்ர மச்சாளின்ர புருசன் சொன்னார், ‘எங்களை எங்கட சொந்த இடங்களுக்கு விட்டா வயல் செய்து இழந்த சொத்தெல்லாம் 5 வருசத்தில மீட்டிடுவன்' எண்டு. உண்மைதான் பாருங்கோ. வெளிநாடுகளுக்கு வந்து உழைக்கிறதை விட வயலை நம்பி உழைக்கலாம்தான். ஆனா எல்லாத்துக்கும் சில சில விசயங்கள் கூடி வரோணும்தானே. பாப்பம்..

விரைவில திரும்பவும் சந்திப்பம்....
Author: வர்மா
•8:01 AM
மலைமகளே மாதரசியே
கலையூர்தியே கற்பகமே
முக்கண்ணன் நாயகியே
முக்கனியே வந்திடம்மா

நாரணியே தரணிபோற்றும்
பூரணியே வந்திடம்மா
பகையைதீர்த்திடம்மா வெற்றி
வாகையைத்தந்திடம்மா


நண்ணார்மிடுக்கொடிக்க
மண்ணிலேவந்திடம்மா
எல்லையிலாநாயகியே
தொல்லைகளைப்போக்கிடம்மா

திருப்பாற்கடலில்தோன்றியவளே
திருமாலைத்துணையாய் தேர்ந்தவளே
திருவேஉருவாய் உடையவளே
கருணைக்கண்காட்டிடம்மா

செங்கமலநாயகியேதாயே
மங்காதசெல்வம் தந்திடம்மா
திருமகள் எனும்நாமத்தவளே
திரும்பியேகொஞ்சம்பாரம்மா


செல்வத்துக்கதிபதியே
செல்வியே முண்டகாசினி
பெருந்தன்மைகாத்திடவே
பெருமலையைத்தந்திடம்மா


கலைகளின் நாயகியே
கலைவாணியே வந்திடம்மா
முத்தமிழைத்தந்திடம்மா
பக்தர் நாம்சிறப்புறவே

நான்முகன் கிழத்தியே
வெண்தோடகத்தில் இருப்பவளே
பண் இசைபாடிடவே
நாவினில் வந்திடம்மா

வெண்டாமரைத்தேவியே
கண்மலர்ந்துபார்த்திடம்மா
கலையரசியேமாதேவி
நிலையாகநின்றிடம்மா

அங்கையற்கண்ணியே போற்றி
அர்த்தநாரீஸ்வரியே போற்றி
அலையிடைப்பிறந்தவளேபோற்றி
செல்வாம்பிகையே போற்றி
வித்தியார்த்திதேவியேபோற்றி
முப்பெரும்தேவியரே போற்றி
ஆதிபராசக்தியே போற்றி போற்றி

ரமணி
வீரகேசரி வாரவெளியீடு 28 09 09


ஈழத்துமுற்றத்துக்கு வந்து நாட்கள்பல கடந்துவிட்டன.நவராத்திரிக்காக கடந்தவருடம் நான் எழுதிபத்திரிகையில்வெளியான கவிதையைமீள்பதிவிடுகிறேன்.
Author: கானா பிரபா
•5:52 AM
ஈழத்தில் புழங்கும் பயன்பாட்டுச் சொற்கள் வரிசையில் சில தின்பண்டங்கள் குறித்துப் பயன்படுத்தும் சொற்களை இங்கே தருகின்றேன். இங்கே பலகாரங்கள் அல்லாத தீனிப்பண்டங்கள் சிலவற்றின் பயன்பாட்டுச் சொற்களைத் தருகின்றேன்.

தமிழக வழக்கில் "சாக்லேட்" (chocolate) என்று பரவலாகப் பயன்படுத்தும் சொல்லை ஈழத்து மொழி வழக்கில் சொக்கிளேற் என்று பயன்படுத்துவர்.
Milk chocolate என்று ஆங்கிலத்தில் புழங்கும் இனிப்புப் பதார்த்ததை ஈழத்தில் பொதுவாக கண்டோஸ் என்று அழைப்பார்கள். அதற்குக் காரணம் Kandos என்ற பெயரில் பிரபல நிறுவனமே இந்த இனிப்புப் பதார்த்தங்களை அங்கே தயாரித்து விற்பனைக்காகச் சந்தைப்படுத்துகின்றது. பின்னாளில் 80 களிலே Edna என்ற நிறுவனம் போட்டியாக இந்தத் தொழிலில் இறங்கியிருந்தாலும் Edna வின் உற்பத்திகளையும் கண்டோஸ் என்று பொதுவழக்கில் சிலர் பயன்படுத்துவது இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.

தமிழக வழக்கில் பிஸ்கெட் (biscuit) என்று அழைப்பதை ஈழத்து மொழி வழக்கில் பிஸ்க்ற் என்றும் கிராமப்புறங்களில் விசுக்கோத்து என்றும் அழைப்பார்கள். (சிலரை கேலி பண்ண விசுக்கோத்து என்று அழைப்பது வேறு கதை ;-))

தமிழக சஞ்சிகைகளில் ரொட்டி என்று பழங்கும் சொல் கூடவே பிரெட் (bread) என்றும் பயன்படுத்தும் பண்டம் ஈழ வழக்கில் பாண் என்று மட்டுமே அழைக்கப்படும்.
பாண் என்ற இந்த உணவுப்பொருள் வழக்கமான வடிவில் கிடைக்கும் அதே வேளை, சப்பையாக இருக்கும் ஒரு வடிவிலும் இருப்பது என் அறிவுக்கு எட்டியவரை ஈழத்தில் மட்டுமே கிடைக்கின்றது இதை றோஸ் பாண் அல்லது சப்பட்டைப் பாண் என்றும் அழைப்பார்கள்.

ஈழத்தவர் ஒருவர் சென்னையில் இருந்த வேளை ஒரு மளிகைக்கடைக்குப் போய் "பாண் இருக்கா" என்று கேட்க மளிகைக்கடைக்காரர் பேந்தப் பேந்த முழித்தாராம். பிறகு அவர் கடையினுள் நோட்டம் விட்டு கண்ணாடிப்பெட்டியில் இருந்த அந்தப் பாணைக் கண்டு "இது தான் இதைத்தான் கேட்டேன்" என்று சொல்லவும், மளிகைக்கடைகாரர் "அட, பிரெட்ன்னு தமிழ்ழ சொல்ல வேண்டியது தானே" என்றாராம் என்று வேடிக்கையாகச் சொல்லும் கதை உண்டு.

தமிழக வழக்கில் பன் (bun)என்று பயன்படுத்தும் சொல், ஈழவழக்கில் பணிஸ் என்று அழைக்கப்படும். இனிப்பான, அல்லது இனிப்பு சேர்க்கப்படாத இந்தத் தின்பண்டம் பல வடிவில் கிடைக்கும். உருண்ட வடிவில் இருப்பது பொதுவாக பணிஸ் என்றும், நீள் கொம்பு வடிவாக இருப்பது கொம்பு பணிஸ் என்றும் அழைக்கப்படும்.

பாண், பணிஸ் பற்றி வந்தியத் தேவன் ஈழத்து முற்றத்தில் முன்பு எழுதிய சுவையான பதிவு இதோ காலையும் நீயே மாலையும் நீயே

தமிழக வழக்கில் மிட்டாய் (toffee) வழங்கும் பதார்த்தத்தினை ஈழத்துப் பேச்சு வழக்கில் ரொபி என்றே குறிப்பிடுவார்கள். கூடவே இனிப்புத் துண்டங்களாப் பொதி (pack)செய்யாமல் இருக்கும் பதார்த்தை "இனிப்பு" என்ற பொதுவான குறீயீட்டுப் பெயராக அழைக்கும் பண்பும் உண்டு. குறிப்பாக போத்தல்களில் நிரப்பியிருக்கும் தோடம்பழச் சுவை கொண்ட இனிப்புக்களை "தோடம்பழ இனிப்பு" என்று அழைப்பதோடு இவை விலையிலும் மலிவு என்பதால் குழந்தைகளின் விருப்புக்குரிய தேர்வாக இருக்கும்.

மில்க் ரொபி, புளுட்டோ ரொபி (ஞாபகப்படுத்திய பகீ இற்கு நன்றி) போன்றவை பெரும்பாலும் உள்ளூர் உற்பத்திகளாகச் செய்யப்பட்டுச் சந்தைப்படுத்தப்படும்.

மேலே படத்தில் இருப்பது பஞ்சு மிட்டாய் /பஞ்சு முட்டாஸ் படம் நன்றி: பதிவர் மீனாக்ஸ் வலைப்பதிவு

மேலே படத்தில் இருப்பது தும்பு முட்டாஸ் , நன்றி துஷ்யந்தினி கனகசபாதிப்பிள்ளை

பஞ்சு மிட்டாய் அல்லது பஞ்சு முட்டா என்ற இனிப்புப் பதார்த்தத்தை கோயில் திருவிழாக்காலத்தில் அதிகம் காணலாம். பொதுவாக மிட்டாய் என்ற சொற்பிரயோகத்துக்கு மாற்றீடாக ஈழமொழி வழக்கில் முட்டாஸ் என்ற சொல்லே பயன்பாட்டில் இருக்கின்றது. பஞ்சு முட்டாஸ் என்ற இனிப்புப் பதார்த்தை விட எங்கள் ஊர்க் கோயில்திருவிழாக்களில் தும்பு முட்டாஸ் எனப்படும் இனிப்புப் பண்டம் பெரும் கிராக்கியில் இருப்பதைச் சொல்லி வைக்க வேண்டும். காரணம் அதைக் கைக்கு அடக்கமான தாளில் சுற்றியே கொடுத்து விடுவார்கள். எடுத்துத் தின்பதும் இலகுவாக இருக்கும்.

அப்பளம் (ஞாபகப்படுத்திய சினேகிதிக்கு நன்றி) என்ற பெயரில் பல்வேறு நிறத்தில் தட்டையாகச் செய்யப்பட்ட பெரிய அப்பள வடிவில் இருக்கும் இனிப்புப் பதார்த்தமும் இருக்கின்றது, இது தமிழகத்தில் இருக்கின்றதா தெரியவில்லை. அதற்கான பதிலீட்டுச் சொல்லும் நான் அறியவில்லை.

விடுபட்ட சொற்கள் தொடரும்.
Author: வந்தியத்தேவன்
•5:17 AM
பாடசாலை நினைவுகள் எவ்வளவு பசுமையானதோ அதேபோல் ரியூசன் நினைவுகளும் அதே அளவு பசுமையானது. சினேகிதி எழுதிய "ரியூசன் பம்பல்கள்....ஏதோ ஏதோ ஞாபகங்கள் " ஒரு 8 ஆம் அல்லது 9 ஆம் வகுப்புடன் நின்றுவிட்டதுபோல் தெரிகிறது. ஆகவே உயர்தரத்தில் நாங்கள் செய்த குழப்பங்களும் பசுமையான நினைவுகளும் கொட்டில் காலத்து நினைவுகளாக, கொட்டில் என்றவுடன் கள்ளுக்கொட்டிலை நினைக்கவேண்டாம்.

உயர்தரம் படிக்கப்போகின்றோம் என்றவுடன் முதலில் எல்லோரும் கேட்கும் விடயம் எங்கையப்பு ரியூசன் போகப்போறாய்? மட்ஸ் என்றால் வெக்டரிடம் போ அவர் தான் சரியான ஆள் இது ஒருவர், இன்னொருவரோ "இல்லை இல்லை ஆரம்பத்தில் வெக்டரிடம் பார்க்க நல்லையா மாஸ்டரிடம் போ, அவர் தான் அடிப்படையில் இருந்து திறமாகச் சொல்லித் தருவார்" என வகுப்புகள் தொடங்கமுன்னரே குளப்பத் தொடங்கிவிடுவினம்.

ஆனால் அந்தக் காலத்தில் நாம் ஆற்றை பேச்சைக் கேட்டோம். அதனால் கூட்டாளிப் பொடியள் போற ரியூசன் தான் எனக்கும். சாதாரண தரம் வரை இன்னொரு ரியூசனில் படித்துவிட்டு வதிரியிலுள்ள "பீகொன்" என்ற தியேட்டருக்கு எங்கள் வானரப் படை இறங்கியது.

அங்கே ஆரம்பத்தில் புதிய ஆசிரியர்கள் புதிய இடம் என்பதால் கொஞ்சம் அமைதியாகவே இருந்தோம். என்னுடைய பாடசாலை நண்பர்கள், ஏனைய பாடசாலையில் படித்து முன்னைய ரியூசன் நண்பர்கள், அத்துடன் பல புதிய முகங்கள், பருத்தித்துறை, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை என பல இடங்களில் இருந்தும் வந்தவர்கள் தான் பலர்.

பெண்வரிசையில் பெண்கள் அவர்களுக்குப் பின்னால் ஆண்கள் என முதல் சில நாட்கள் அனைவரும் இருந்தோம். நாம் செய்த அட்டகாசங்களில் எங்களை முன்னுக்கு விட்டுவிட்டு பெண்களை பின்னால் இருத்திவிட்டார்கள். இந்தக் கொடுமை உயர்தரம் முடியும்வரை தொடர்ந்தது.

பெளதிகவியல் ஆசிரியர் திரு.வர்ணம் அவர்கள், சந்தேகம் எதுவும் இருந்தால் எழும்பிக்கேட்க வெட்கப்பட்டால் துண்டில் எழுதிக்கொடுங்கோ என்றார். இதுதான் சாட்டு என நம்மடை வாரணப் படை ஒருமுறை விஜய் படமான பூவே உனக்காகப் பாடலான "ஆனந்தம் ஆனந்தம் பாடும்" பாடலில் வரும் வரியான "காதலோடு வேதங்கள் 5 என்னுங்கள்" என்ற வரி சரியா நாங்கள் படிக்கின்ற காலத்தில் வேதங்கள் என்றால் 4 எனத் தான் படித்தோம் என எழுதிக்கொடுத்தால், மனிசன் யார் எழுதியது என்பதை அந்த துண்டை வந்தவழியே அனுப்பி கண்டுபிடித்து ஒரு கிழிதான். பெரும்பாலும் மாணவர்களை அவர் ஏசுவதில்லை.

இரசாயனவியல் ஆசிரியர் அன்பாக தில்லை என அழைக்கப்படும் திரு. தில்லைநாதன் ஆசிரியர், இவர் வல்லைவெளி தாண்டி வருபவர் என்பதால் எப்படியும் கொஞ்சம் லேட்டாகத் தான் வருவார். இதனால் இவர் பாடம் வரும்வரை எங்கள் சில்மிசங்களும் கொழுவல்களும் நடக்கும். எங்கடை வகுப்பில் சில பெண் பிள்ளைகள் தில்லை சேரின் பாடத்திற்க்கு இருப்பதில்லை அவர்கள் இன்னொரு ஆசிரியரிடம் இரசாயனவியல் படிக்கச் செல்பவர்கள். ஒருநாள் தில்லை சேர் வழக்குத்துக்கு மாறாக நேரத்துக்கு வந்துவிட்டார். முதல் பாடம் முடிய இவர்கள் கொட்டிலை விட்டு வெளியே செல்ல நாங்கள் சும்மா இருக்காமல் அவர்களின் பட்டப் பெயர்களைச் சொல்லிக் கத்த அதிலை ஒருத்தி எங்களுக்கு அடிப்பன் என கைகாட்டியதும் அதனைத் தில்லை சேர் பார்த்ததையும் நாங்கள் பார்க்கவில்லை.

அண்டைக்கு முழுநேரமும் எங்களுக்கு இரசாயனவியலுக்குப் பதிலாக எச்சும் பெண்களுடன் எப்படி நடக்கவேண்டும் என தில்லை சேர் பாடம் எடுத்தார். அப்படி ஒரு பேச்சு ஒருநாளும் நாங்கள் எந்த ஆசிரியரிடமும் கேட்கவில்லை. இதில் எனன் விசேடம் என்றால் அண்டைக்கு சகல பெண்களையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஆண்களை மட்டும் வைத்துக்கொண்டுதான் அர்ச்சனை நடந்தது.

பிறகு பேப்பர் கிளாஸ் காலங்களில் எங்கடை சங்கரலிங்கம்(ஆறரை அடி உயர மனிதர்) அண்ணையின் ரியூசனில் பின்னேரம் 6 மணிக்குத் தொடங்கி இரவு 7.30 மணிக்குத் தான் வகுப்பு முடியும். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் இருந்து வகுப்புக்கு வருகின்ற பெண்களை நாங்கள் தான் மெய்ப்பாதுகாப்பாளர்கள் போல் அவர்களின் வீடுவரை கொண்டு சென்று விடுவது. இத்தனைக்கும் அதுகள் எங்களுடன் கதையாதுகள், முன்னால் செல்வார்கள் நாங்கள் பின்னால் செல்லவேண்டும், ஏதாவது கதை கேட்டால் யாரும் பார்த்தால் பிரச்சனை என மெதுவாகச் சொல்வார்கள். ஒருக்கால் இருட்டிற்க்குள் இரும்பு மதவடி தோட்டத்திற்க்கை விழுந்து, நாய் திரத்தி என பல அனுபவங்கள் இருக்கின்றன. இப்போ அந்த நண்பிகள் குடும்பமாக வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் இருக்கின்றார்கள்.

பிறகு நெல்லியடி மொடேர்னில் பெளதிகவியல் பேப்பர் கிளாஸ் கணேசன் ஆசிரியரிடமும் வெக்டர் ஆசிரியரிடமும் எங்களுக்கு முன்னைய பட்சுடன் போனோம். கணேசன் சேர் வகுப்பிலை யாரும் நித்திரை கொண்டால் உடனே அவரைத் தட்டிக்கேட்பார் "யார் கனவிலை வந்தது என", ஆண்கள் என்றால் மீனாவோ ரம்பாவோ எனக்கேட்பார், பெண்கள் என்றால் "ரஜனியோ, கமலோ" எனக் கேட்பார், ஒருக்கால் இப்படித்தான் ஒரு பெடியனைக் கேட்க அவன் "மீனாவும் ரம்பாவும் அல்ல, பக்கத்து லொஜிக் வகுப்பில் இருக்கும் சியாமளாதான் கனவில் வந்தாள்" என்றான் வகுப்பே சிரிப்புத் தான்(சேர் உட்பட).

உப்பிடி நிறையக் கதைகள் இருக்கின்றது, உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள். ஏனைய கதைகள் மீண்டும் வரும்.
Author: சினேகிதி
•7:41 PM
ஊரில பள்ளிக்கூடங்கள்ல என்னதான் ஒழுங்காப் படிப்பிச்சாலும் ரியூசன் போகாட்டால் நமக்கெல்லாம் விடிவில்லை.விடிய 5 மணிக்கெல்லாம் பனி கொட்ட கொட்ட நித்திரை தூங்க தூங்க போனது இங்கிலிஷ் ரியூசனுக்கு. 5 மணிக்கு தொடங்கிறது இரவு 7-8 மணி வரைக்கும் படிப்பு படிப்புத்தான். நாங்கள் கொஞ்சப்பேர் சேரந்து நாவலடியில இருக்கிற ஒரு மாஸ்டர் வீட்ட
இங்கிலிஷ் ரியூசனுக்குப் போவம். 4 பெட்டையளோட ஒரு பெடியன் வெளவால். அவன்ர அம்மா விடிய அரை இருட்டில அவனுக்கு பவுடர் எல்லாம் பூசி அனுப்பி விடுவா. பாவம் அவன் விதியே என்டு வருவான் எங்களோட.தனிய வரேக்க கதைக்க மாட்டான். நசுக்கிடாமல் இருப்பான். பிறகு பின்னேரம் மற்றப் பாடங்களுக்கு ரியூசனுக்கு வரேக்க மற்றப் பெடியங்களோட சேர்ந்த உடனதான் அவனுக்கு வாய் திறவடும். விடிய ரியூசனுக்குப் போட்டு வரேக்க அங்க பக்கத்தில இருக்கிற கொஞ்சம் பெரியண்ணாமார் எங்களோட வாயடிக்கிறதுக்காக பள்ளிக்கூடப் பட்டப் பெயர்களைச் சொல்லி இல்லாட்டி 'எடியே கறுப்பி கொக்காவையும் கூட்டிக்கொண்டு வாறது ரியூசனுக்கு' என்டுவினம். வெளவால் கொஞ்சம் தூரத்திலதான் வருவான். தனக்கு எதும் கேக்காதமாதிரி அப்பாவி மாதிரி மூஞ்சையை வைச்சுக்கொண்டு போவான். நாங்களும் நல்ல திறம்தானே. கறுவா கட்டக்கரி அம்மம்மாட்ட சொல்லி விடுறன் (அப்ப அம்மம்மாமார் பெடியங்களுக்கு காது முறுக்கிறது)இப்பிடி ஏதாவது சொல்லுவம். என்ன பிரச்சனையெண்டால் இந்த அண்ணைமார் ஏதொ ஒருவிதத்தில சொந்தக்காரர இருப்பினம். பெருசா வாய் விடேல்லாது. அளவுக்கு மீறினால் வீட்ட சொன்னால் அவை சொல்லுவினம் அங்கள் சும்மா ஆசைக்குச் சொல்றாங்கள். உங்களை ஆர் வாய்காட்டச் சொன்னதெண்டு.

பிறகு பின்னேரம் ரியூசனுக்குப் போனால் அங்க ஒரே சண்டைதான். ஒவ்வொருநாளும் புதுப்புது விதமான சண்டை வரும்.5ம் ஆண்டு ஸ்கொலர்சிப் வகுப்பெடுத்தது ஈசாக்கா.அநேகமா எல்லாருக்கும் விருப்பமான ரீச்சர். அவாக்கு எங்கட சண்டை தீர்த்து வைக்கிறதே பெரிய பாடு. அநேகமாச் சண்டையைத் தொடக்கிறது பெடியங்களாத்தானிருக்கும். சண்டை முற்றினால் சண்டை பிடிக்கிற பெடியனைப் பிடிச்சு பெட்டையளுக்கு நடுவில இருக்க விட்டிடுவா. பெட்டையளில முட்டக்கூடாதெண்டு வாங்கில்ல 2 பக்கமும் bag புத்தகங்கள் எல்லாம் எடுத்து வைச்சிட்டு மூஞ்சையைத் தூக்கி வைச்சுக்கொண்டு அடிக்கடி முறைச்சுக்கொண்டு இருக்குங்கள் மூஞ்சூறுகள். ஈசாக்கா வீட்ட ஸ்பெசல் கிளாஸ் அல்லது நாடகம் பழக எண்டு போய் அங்கயும் சண்டையெண்டால் பாவம் ஈசாக்கான்ர அம்மா கூட வந்து விலக்குப்பிடிப்பா சில நேரம்.

அதெல்லாம் முடிஞ்சு அடுத்தடுத்த வகுப்புகளுக் வந்தால் படிப்பில போட்டி கூடிடும். பத்தாதக்கு வாத்திமார் வேற எரியுற நெருப்பில எண்ணையை விடுற மாதிரி அடிக்கடி போட்டி வைப்பினம். பெட்டையள் ஒரு ரீம். பெடியங்கள் ஒரு ரீம். எங்கட ரீமுக்கு கேட்ட கேள்விக்கு நாங்கள் பதில் சொல்லாட்டால் அவங்களுக்குப் போயிடும் கேள்வி. 1-2 மார்க்ஸ் இடைவெளியில வெற்றி வந்தால் நாங்கள் அவங்களை அலாப்பியெண்டுறது அவங்கள் எங்களை அலாப்பியெணடுவாங்கள். வெல்லுற ரீம் தோக்கிற ரீமை முறைச்சுக்கொண்டேயிருக்கும். அதுவும் பெட்டையள் கனக்க வாயடிச்சால் ஒரு சிரிப்புச் சிரிச்சுக்கொண்டே அப்பண்ணா சொல்லுவார் 'வாறவன் பாடு கஸ்டந்தான்' (அப்பண்ணா கணிதம் விஞ்சாம் சமூகக்கல்வி இப்பிடி எல்லாம் படிப்பிச்சவர் சதாபொன்ஸ்ல் - இப்ப உயிரோட இல்லை.அவரைப்பற்றித் தனிப்பதிவு போடணும்).

ஏதும் கணக்குத் தந்து போட்டு பெட்டையளின்ர மெதட்ல வேணுமென்டு பிழைகண்டுபிடிப்பார். பெடியங்களுக்குச் சப்போட் பண்றார் என்டு நாங்கள் கத்துவம். அவங்கள் அப்பண்ணா எங்களுக்குச் சப்போட் பண்றார் என்டு வாங்கிலுக்கு மேல ஏறி நிண்டுகொண்டு கத்துவாங்கள். இங்கயும் இந்தச் சொந்தக்காரப் பெடியங்கள் இருந்து துலைப்பாங்கள் அதால நாம என்ன செய்தாலும் சொன்னாலும் வீடுவரைக்கும் போயிடும்.

கொஞ்சக்காலம் தூரத்துச்சொந்தக்காரர் ஒராள் ரியூசனுக்கு director ஆ வந்திட்டார். அவற்ற மகன் வேற என்ர வகுப்பு.மனுசன் வகுப்புக்கு மேற்பார்வை செய்ய வரேக்க வாத்திமாரிட்ட வேற சொல்லிடும் இவள் எனக்கு மருமகள் என்டு. கறுமம் இதை இப்ப இங்க வந்துச் சொல்ல சொல்லி யாரு கேட்டது. பெடியங்கள் ஒருபக்கம் கத்துவாங்கள். எனக்குப் பயமா வேற இருக்கும். யாரும் குழப்படி செய்தாலும் சொந்தக்காரப்பிள்ளையளுக்குத்தானே அடி விழுறது. சொந்தமெண்டால் யாரும் கேக்கமாட்டினம்தானே. அதும் அவர் தன்ர மகன்களுக்கே ரத்தம் வாறளவுக்கு அடிக்கிற ஆள். இப்பிடி நான் ரியூசனில சுதந்திரமா இருக்கப் பல தடைகள் ஆனால் தடைகளைக் கண்டு துவளும் இனமா நாங்கள் :) எதையும் தாங்கும் இதயம் :)

நான் கனக்க அடிவேண்டினது தமிழ் படிப்பிச்ச மாஸ்டரிட்டதான்.அவருக்குப் பெட்டையள்ல ஏதோ கோவம். எங்கடா அடிக்கலாம் என்டு திரிவார். எங்களுக்கு மட்டுமில்ல பெரியக்காவைக்கும் அடிச்சிருக்கிறார். காதல் தோல்வியோ என்னவோ. யார் செய்ற பாவம் எப்பிடியெல்லாம் விளையாடுது. வகுப்புக்கு முன்னால தோட்டம். தோட்டத்தில வேலை செய்றாக்களை வாய் பார்த்துக்கொண்டிருந்ததுக்காக அவரிட்ட நான் அடி வாங்கியிருக்கிறன். பிறகு அந்த மாஸ்டர் நிர்வாகத்துடன் பிரச்சனைபட்டு அவரை வரவேண்டாம் என்டு சொல்லிட்டினமாம்.

எங்களோட படிச்ச பெடியங்கள் சில பேர் facebook இருக்கிறாங்கள். கிட்டடில ஒருத்தர் message பண்ணியிருந்தார். அதுவும் தன்ர பட்டப்பெயரைப் போட்டு ஞாபகம் இருக்கோ என்டு கேட்டு. ஓமோம் நீர் வைச்சிருந்த அந்த bag கூட ஞாபகம் இருக்கெண்டு பதில் போட்டன்.நிறையப்பேர் கொழும்பிலும் வெளிநாட்டிலும்தான் இருக்கிறாங்கள். என்னோட நடுக அராத்துப்படுற ஒரு பெயடின் இப்ப என்ன செய்றான் என்டு விசாரிச்சன் ..அவன் சிலோன் பாங்ல வேலை செய்றானாம்.அவன் சரியான கட்டைப்புட்டு ஆனால் சத்தமெண்டா தொண்டைகிழியக் கத்துவான் :)கையை வேற ஆட்டி ஆட்டிக் கதைப்பான். இப்பிடி 12 வருடங்களுக்குப்பிறகு பழைய வால்கூட்டங்களுடன் கதைத்தது சந்தோசமாத்தான் இருந்தது. ஆனால் அவங்கள் செஞ்ச அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமே. கிணத்தில தண்ணி குடிக்கப்போனால் பெட்டையள் வந்தால் தண்ணி ஊத்த மாட்டாங்கள். வாளியைப் பொத்தெண்டு வைச்சிட்டுப் போடுவாங்கள். இதை ஒருநாள் யாரோ ஒரு வாத்தியார் பார்த்திட்டு முறைப்பாடு செய்ததால பெட்டையள் என்டாலென்ன பெடியங்கள் என்டாலென்ன கிணத்தில இருந்து தண்ணியள்ளினா வாளில தண்ணிமுடியும் வரைக்கும் தண்ணிகுடிக்க வாறாக்களுக்கு ஊத்தோணும். இவங்கள் ஒருநாள் வாளிக்க குட்டிப்பாம்பு ஒண்டு நிண்டது கண்டிட்டும் காணாத மாதிரி ஒரு பிள்ளை தண்ணிகுடிக்க குனிஞ்சாப்பிறகு ஊத்திறமாதிரி ஊத்திட்டு பாம்பு என்டிட்டு ஓடிட்டாங்கள். அது பாவம் ஒரே அழுகை. சைக்கிள் சீட்ல வெடிகொளுத்திப்போட்டிருக்கிறாங்கள். தாங்கள் செய்ததெல்லாத்தையும் நாங்கள் செய்தது என்டு பொய் சொல்லி மாட்டி விடுவாங்கள். இதால எத்தின தரம் மொத்த வகுப்புக்கும் சேர்ந்து punishment கிடைச்சிருக்கு. அதும் அப்பண்ணா சரியான பிடிவாதக்காரன். தான் நினைச்ச பதில் வரும் வரைக்கும் விடவே மாட்டார். கோவத்தில வகுப்பெல்லாம் கூட கான்சல் பண்ணியிருக்கிறார். இப்ப அப்பண்ணாவும் இறந்த பிறகு ரியூசன் எப்படி நடக்குதோ தெரியா. என்ர அம்மா சித்தி மாமாக்கள் என எல்லாரும் படித்த ரியூசன் அது.

என்னடா ரியூசன் என்டாலே பெடியங்களைப் பற்றி மட்டும் எழுதியிருக்கிறன் என்டு நினைக்காதயுங்கோ. ரியூசனை நினைச்சால் வாற சந்தோசமான விசயங்கள் மட்டும் எழுதியிருக்கிறன். சோகங்களை உள்மனது ஞாபகம் வைத்துக்கொள்வதில்லையாம். நவசியண்ணா (இன்னுமொரு கணித ஆசிரியர் - அப்பண்ணாவின் அண்ணா) அவர் மந்திகை வைத்தியசாலையில் உடல் நலமற்று இருந்தது நாங்கள் பார்க்கப் போனது பிறகு அவர் ஒருநாள் இறந்துபோனது நாங்கள் எல்லாம் அந்த மாமரத்தின்கீழ் நின்று கதறிக் கதறி அழுதது இப்படி எல்லாமே ஞாபகம் வருது. அங்கு படித்த யாரும் இங்கு இருப்பின் தொடர்ந்து எழுதுங்கள்.
Author: சினேகிதி
•7:32 PM
கொஞ்சநாளாவே முத்தம் முந்தின மாதிரிக் கலகலப்பா இல்லை? என்ன செய்றீங்கள் எல்லாரும். நான்தான் ஏதோ வேலை நேரமில்ல என்டால் உங்களுக்கென்ன? உங்களுக்கென்ன வேலையா வெட்டியா ( பின்ன நாங்க மட்டும் என்ன மேமிலாந்திக்கொண்டே இருக்கிறம் என்று ஒருதரும் கேக்காதயுங்கோ)

எப்பவும் பம்பலடிச்சுக்கொண்டிருக்கிற மணியாச்சியையும் காணேல்ல. எண ஆச்சி எங்கண போட்டாய்? உன்ர செல்லக்காலால ஓடி வாணை :)

பழையபடி எல்லாரும் ஒவ்வொருநாளும் எழுதுங்கோ இல்லாட்டி நான் அகப்பைக்காம்பால அடி போடவேண்டி வரும் சொல்லிட்டன் :) அப்ப நான் போட்டு வரட்டே.
Author: shangar
•8:25 AM

நீண்ட கோடைக்குப் பின் மேகம் கறுத்து காற்று பலமாக வீசியது. நிலத்தில் இருந்த இலைச்சருகு, குப்பை கூளங்கள் யாவும் காற்றில் சுழன்று சுழன்று மேலே எழுந்தன. மரங்கள் காற்றில் முறிந்து விழும் என்ற நிலைக்கு ஆடின. பெரிய மழைத்துளிகள் பூமியில் விழுந்தன. அப்போது ஒரு வாசனை மூக்கைத் துளைக்கும். அதுதான் மண்ணின் வாசனை. இந்த வாசனை எங்கள் நாட்டிற்கு(குடாநாடு)தான் சொந்தமென நினைக்கிறேன். அப்போது அங்கே நுகரும் வாசனை அற்புதமாய் இருக்கும். நாம் வேறு இடங்களிலும் வசித்திருக்கிறோம். அப்படி ஒரு வாசனையை நுகர்ந்ததில்லை. அப்படி வாசனை வரும் என்றால் அது சாக்கடை வாசனையாய் தான் இருக்கும். மழைத்துளிகள் விழுந்ததும் மண் சிலிர்க்கும். புழுதி அடங்கும். வாட்டத்தில் இருக்கும் மரங்கள் மழைநீரைக்கண்டதும் சிலிர்த்து மேலெழும்.

மழைவரப்போகிறது என்றால் எங்கோ இரைச்சல் கேட்கும். மழை வரப்போகிறது என்பது விளங்கும். இந்த மழை இங்கே வர எவ்வளவு நேரம் எடுக்கும் என ஒரு கணிப்பு இருக்கும். அதற்கு தகுந்தபடி பக்கத்தில்மழை நிலத்தில் விழமுதல் எவ்வளவு வேகத்தில் போக முடியுமோ அவ்வளவு வேகத்தில் ஓடிச்சென்று வீட்டில் புகமுடியும். இதுதான் எங்கள் மண்ணின் வாசனை. இங்கே இரைச்சல் இல்லை. மழை வரும் அறிகுறியும் தென்படாது. மழை இல்லை என்று வெளியே சென்றால் ஐந்து நிமிடத்தில் மழை பெய்யும். நல்ல மழை பெய்யும்போது முற்றத்தில் மழை நீர் வெள்ளமாய் ஓடும். அதிலே மழைத்துளி வழிந்து நீர்க்குமிழி போடும். அவை பார்ப்பதற்கு மனோரம்மியமாக இருக்கும். அதிலே பழைய கொப்பி பேப்பர் எல்லாம் கப்பல் செய்வதற்கு பயன்படும். முற்றத்தில் கப்பல் ஓடும். கரை சேரும் தாழ்வாரத்தில்.இதுவும் எங்கள் மண்ணிற்கே உரித்தான வாசனைதான்.முற்றமோ மண்ணோ இல்லாத இடத்தில் அதன் அழகையோ வாசனையையோ உணர முடியுமா? நீண்ட மழைக்காலம் நீடிக்கும்போது சிவப்பு கம்பளிபூச்சிகள் வழி எங்கும் செல்லும். அவை பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சிதான். வண்டுகள் ரீங்காரமிடும். மின்மினிகள் ஒளியூட்டும்.

மார்கழி தை மாதத்தில் பனிக்காலம் வரும். அக்காலத்தில் இரவு நல்ல குளிராக இருக்கும். அந்தக்குளிரில் போர்த்திக்கொண்டு படுத்திருக்கும்போது இருக்கும் சுகம் எங்கும் கண்டதில்லை. அந்த பனிக்குளிரின் குளிர்காற்று அலாதியானது. இதுவும் எங்கள் மண்ணிற்கே உரித்தான மண்வாசனைதான்.

தடுக்கி வழும் இடமெல்லாம் கோவில் உண்டு. மக்கள் பக்தியுடன் கோவில் தரிசனம் செய்வரர்கள். எந்த நேரமும் அங்கு செல்லலாம். எப்போதும் திறந்திருக்கும். அங்கே வியாபாரம் இல்லை பக்தி மட்டுமே உண்டு. அதுவும் எங்கள் மண்ணின் வாசனையே.

சிறு கூடுநாம் கடடி

கூட்டினுள் தாம் இருந்த வேளை

கூட்டினைக் கலைத்தான்

எங்கள் வீட்டினைச் சிதைத்தான்.

மண்ணின் வாசனை அந்நியமாயிற்று.

அந்நிய வாழ்க்கை வேதனையாயிற்று.

கிணற்று நீர் இம்மண்ணிற்கே உரித்தானது. சுண்ணாம்புப்பாறையால் வடிகட்டப்பட்டு கீழே செல்கிறது. அவ்வண்ணம் சென்ற நீரை வெட்டுக்கிணறு,குழாய்க்கிணறு என்பவற்றின் மூலம் மேலே எடுத்து குடிப்பதற்கு, குளிப்பதற்கு, பயிர்களுக்கெனப் பயன்படுத்துகிறார்கள்.இந்த நீரில் அசுத்தம் ஏதும் இல்லை. அந்நீர் களைப்புக்கு நல்ல மருந்தாகும். அதனைக் குடித்ததும் உற்சாகமாய் இருக்கும். இதுவும் எங்கள் மண்ணின் வாசனையே.

Author: கரவைக்குரல்
•9:42 AM


ஆவணி மாதம் பிறந்துவிட்டால் தொண்டைமானாறு செல்வச்சந்நிதியானுக்கு திருவிழா என்று பொதுவாக வடமராட்சி எங்கும் எல்லோரும் கொண்டாட தயாராகிவிடுவார்கள்,நல்லூரானைத் தொடர்ந்து சந்நிதியானுக்குத்தான் திருவிழா பதினைந்து நாள்கள்,அன்னதானக்கந்தன் என்று உலகம் புகழ்பாடும் சந்நிதி முருகனை நோக்கி எல்லோரும் படையெடுப்பர்,சில அடியார்கள் பொதுவாக அங்கேயே இருந்துவிடுவதுண்டு,அங்கேயே இருந்து முருகன் புகழைப்பாடியபடியும் வேண்டிய வரங்களை பிரார்த்தித்தபடியும் கூடியிருப்பர் சந்நிதியின் சந்நிதானத்தில்,
தூக்குக்கவடிகள் பறவைக்காவடிகள் கரகங்கள் இழுவைக்காவடிகள் என்று காவடிகளுக்கும் குறைவில்லை.

குறைவில்லை என்று சொன்னால் அங்கு சென்றவர்களுக்கு தெரியும் ஒன்றுக்கு பின் ஒன்றாக தூக்கு காவடிகள் மற்றும் பறவைக்காவடிகள் வரிசைவரிசையாக வரும்,அவற்றைப்பார்க்கும்போது மயிர்கூர்ச்செறியும்,பக்திரசம் மேலிடும்,



கதிர்காமக்கந்தனுக்கும் செல்வச்சந்நிதிக்கும் நிறையவே தொடர்புகள் இருப்பதால் இதை சின்னக்கதிர்காமம் அல்லது பால கதிர்காமம் என்று கூட இதை அழைப்பார்கள்,இதை விட அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட கதிர்காமம் போன்ற தோற்றப்பாடுடன் கூடிய முகப்புத்தோற்றம் அழகுடன் அமைந்திருக்க முருகப்பெருமானுக்கு இந்தமுறைதிருவிழா சிறப்புடனே நடந்தேறியிருக்கிறது.





இந்த ஆலயத்தில் காணப்படும் விருட்சம் பூவரசு,

மிகவும் பழமை வாய்ந்ததாக காணப்படும் இந்த விருட்சமும் வணக்கத்துக்குரியதாகும்,எப்போதும் அடியவர்கள் அதனடியில் இருந்தவாறே முருகன் புகழைப்பாடியபடியே பிரார்த்திப்பர்.

அதைவிட பக்திரசச்சொற்பொழிவுகள்,மற்றும் முருகன் புகழ் பாடும் கீர்த்தனங்களின் இசை நிகழ்வுகள், என்று இன்னோரன்ன நிகழ்வுகள் முருகன் வீதிகளை அலங்கரித்துக்கொண்டிருக்கும்.குறிப்பாக தொண்டைமானாறு ச ந் நிதியான் ஆச்சிரமப்பேரவை இதில் முக்கிய பங்கை வகிப்பதுண்டு.ஆச்சிரமத்தில் ஒவ்வொரு நாளும் முருகப்பெருமானின் வீதிவலத்திற்குப்பின் ஏதாவது ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்திருக்கும்,அதில் முருகன் புகழ் பாடி அதனைத்தொடர்ந்து அன்னதானம் கொடுப்பர்,அவர்கள் பரம்பரை பரம்பரையாக தந்தை வழியில் இப்போது முருக பக்தன் மோகன் அவர்களால் இது பரிபாலிக்கப்பட்டு வருகிறது.இதை விட முருகன் சந்நிதானத்திலும் அடியார்களின் முருகன் இசைப்படலம் இசைக்கபட்டுக்கொண்டேயிருக்கும்.
இப்படியாக முழுவதும் பக்திமயமாக தொண்டைமானாறு முருகன் வீதியெங்கும் விளங்கும்,

இதைவிட இந்த ஆலயத்தின் பின் புறமாக உள்ள தொண்டைமானாறில் எல்லோரும் நீராடுவதுமுண்டு,
சிறுவர்களும் பெரியவர்களும் நீராடி முருகனின் இறையருளை பெற்றிட வேண்டுவர்.சற்று ஆற்றில் கும்மாளங்க்களுக்கும் குதூகலங்களுக்கும் குறைவில்லை.
அதைவிடசில பாடசாலைகள் சந்நிதியானின் தேர் மற்றும் தீர்த்ததிருவிழாக்கு விடுமுறை கூட அளித்துவிடும்,சிறியவர்கள் இதில் பெரிய மகிழ்ச்சி,
இப்படியாக சந்நிதியானுக்கு திருவிழா என்றால் பெரியவர்கள் சிறியவர்கள் என்று எல்லோருக்கு ஒரே மகிழ்ச்சியும் கொண்டாட்டமும்தான்,பக்தி பரவசங்களுடன் மகிழ்ச்சிகொண்டாட்டங்களுக்கும் குறைவேயில்லாமல் நிகழும் சந்நிதியான் தீர்த்தமாடி உலகெங்கும் வாழும் எம் தமிழ் மக்களுக்கு அருள்பாலிப்பாராக


பிற்குறிப்பு: இந்த சந்நிதியானின் புகைப்படங்களை எனக்கு அளித்த நண்பர் உமாசங்கார் அவர்களுக்கு நன்றி
Author: M.Rishan Shareef
•11:25 PM
        கோடை காலங்களில் எப்பொழுதாவது மின்சாரம் தடைப்படும் நாட்களில்தான் இரவுகளில் மொட்டைமாடியில் உறங்கும் எண்ணம் உதிக்கிறது. அதன் தரையும் வெப்பம் உமிழும்தான் எனினும் இரவில் நேரம் கடக்கும்போது தென்றல் சற்றுச் சினேகமாகி குளிராக வீசும். பகல் முழுதும் அனல் சுமந்தலைந்த காற்று, இரவாகுகையில் நிலவிடம் போய்க் குளிர்ச்சியை வாங்கிவருகிறது. இதமான ஒரு தாலாட்டினைப் போல உடல் தடவித் தடவி வீசிப் போகிறது.

        அப்படியான ஒரு நிலையில்தான் மொட்டைமாடி உறக்கம் வாய்த்தது. மொட்டைமாடிகள் அகலமான தொட்டில்கள். ஆட மாட்டாது. அசைய மாட்டாது. எனினும் மனதில் நிம்மதி நிறைந்திருப்பவர்களுக்கு அதன் பரப்பெங்கும் ஆழமான உறக்கத்தை ஏந்திவருகிறது. அறைக்குள் விடிகாலைவரை சிறு வெளிச்சமும் தன்னை அண்டாமல் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குபவர்களுக்கு மொட்டை மாடி உறக்கம் சரிப்பட்டுவராது என நினைக்கிறேன்.

        இங்கெல்லாம் விடிகாலை நான்கு மணிக்கே உலகின் முதல் கீற்று கண்தடவிப் பார்க்கிறது. பிறகு மரண வீட்டுக்குத் தொலைவிலிருந்து வரும் உறவுகள் போல, சிறிது சிறிதாகக் கீற்றுக்கள் சேர்ந்துவருகின்றன. அத்தோடு காற்றை விழுங்கிய வெயிலைப் பின்னாலேயே கூட்டிவருகின்றன.

        கோடை காலக் காலை வெயில் சுளீரென அடிக்கும். அதன் மறைமுகக் கரங்களால் 'உறங்கியது போதும்.விழித்துக்கொள்' என உடல் தட்டித் தட்டி எழுப்பும். புருவங்கள் சுருக்கி, சிறிதாய் விழி திறந்துபார்க்க வானம் மிக அழகான நீல நிறத்தைத் தன் மேல் பூசிக் குளித்து, வெயிலில் காய்ந்துகொண்டிருக்கும். மொட்டை மாடிக்கருகில் மரங்களிருப்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள். இளங்காலையில் சிறு குருவிகள், பட்சிகள் அவற்றில் வந்தமர்ந்து ஏதேதோ பேசிக் கொண்டிருக்கும். கிளியின் ஓசையை 'கீ கீ' என்பது போல, பூனையின் ஓசையை 'மியாவ்' என்பது போல சில பட்சிகளின் ஓசையை என்னால் மொழிபெயர்க்க இயலவில்லை. அதன் ஒலியை உள்வாங்கும்போது இரசிக்கத் தெரிகிறது. ஆனால் தமிழின் எந்த எழுத்துக்களால் அதனைச் சுட்டி விளிப்பது எனத் தெரியவில்லை.

        பறவைகள் மனிதரை விடவும் அறிவார்ந்தவை என எண்ணுகிறேன். சில மனிதனின் மொழியை அப்படியே உள்வாங்கி மீளப் பேசுகின்றன. அதற்காக அவை எழுதி வைத்துக் கொள்வதில்லை. ஆய்வுகள் செய்வதில்லை. ஆனாலும் பேசுகின்றன. மனிதனால் இவ்வளவு வளர்ந்தும், இவ்வளவு கற்றும் பறவைகள் தங்களுக்குள் என்ன பேசிக் கொள்கின்றன என அதன் மொழியைக் கிரகிக்க முடியவில்லை. கற்றுக் கொள்ள முடியவில்லை.

        பறவைகளுக்கும் எனக்குமான உறவுகள் சிறுவயதிலிருந்தே வாய்த்தது. எனது சிறுவயதில் எங்கள் வீட்டுக்கு முன்பிருந்த வயலில் கோவணம் கட்டி வயலுழும் விவசாயியுடனும், ஏர் சுமக்கும் எருமை மாடுகளுடனும் சேர்ந்து சேற்றில் கால்கள் முழங்கால்வரை புதையப் புதைய அலைந்திருக்கிறேன். நாற்று முளைத்து பிடுங்கி நடும் காலங்களில் நானும் என் சிறுவிரல்களால் நாற்று, நாற்றாய்ப் பிரித்து சேற்றில் ஊன்றியிருக்கிறேன். அவ்வேளை காலுக்குக் கீழால் நண்டுகள் குறுகுறுக்கும். எனினும் கடித்து வைத்ததில்லை. வயல் அறுவடைக் காலங்களில் கூலிப் பெண்கள் வெட்டித் தரும் கதிர்களைக் கட்டுக் கட்டாகக் கொண்டு சேர்த்து அடுக்கியிருக்கிறேன். உடலெல்லாம் அரிக்கும். எனினும் அதிலோர் ஆனந்தம் இருக்கிறது. பின்னர் அக் கட்டுக்களையெல்லாம் ஒன்றாக அடுக்கி, மாடுகளைக் கொண்டு கதிர்களை மிதிக்கச் செய்வார்கள். எல்லாம் முடிந்த பின் நிலத்தில் கிடக்கும் நெல்லை மட்டும் கூட்டியெடுப்பார்கள். வைக்கோல் தனியாகக் குவியும்.

        அறுவடைக் காலங்களில் சில சமயம் வெட்டப்பட்ட கதிர் நாற்றுக்களுக்குள் சின்னஞ்சிறு குருவிக் கூடுகளிருப்பதைக் கண்டிருக்கிறேன். வயற்குருவி, நெல்லுக்குருவி அல்லது மழைக்குருவியின் கூடாக இருக்கலாம். அதற்குள் சில சமயம் முட்டைகளும், குஞ்சுகளும் கூட இருந்திருக்கின்றன. வண்ண வண்ண முட்டைகளை மூலையொன்றில் ஒன்றாகச் சேர்த்துவைத்திருக்கிறேன். குஞ்சுகளை தாய்ப்பறவை வந்து எடுத்துப் போகட்டுமென அப்படியே கூட்டுக்குள் விட்டு வைத்திருக்கிறேன். மொட்டையாகிப் போன வயலில் தாய்க் குருவிகள் வந்து இரைந்து இரைந்து தன் கூட்டினைத் தேடும். தாய்க் குருவிகளைக் கண்டதும் எனது கைக்குள் கூட்டினை வைத்து வான் நோக்கி ஏந்தி நிற்பேன். அவை ஒரு போதும் அருகினில் வந்து குஞ்சுகளை எடுத்துப் போனதில்லை.

        எங்கள் வீட்டுவேலியில் அடர்ந்து போய்க் குட்டையாகி பூக்காத, காய்க்காத எலுமிச்சை மரமொன்று இருந்தது. அதன் உட்புறத்தில் ஒரு முறை கொண்டைக் குருவிகள் கூடுகட்டி விட்டன. குருவிகள் அருகிலாச் சமயம் ரகசியமாக எட்டிப் பார்ப்பேன். நான் பார்த்திருக்க முட்டையிட்டு, குஞ்சு பொறித்து, அவையெல்லாம் பறக்கப் பழகியபின்பு கூடு வெறுமையாகிப் போகும். கூடும் இற்றுப் போய்விடும். பிறகோர் நாள் சோடிக் குருவிகள் மீண்டும் பறந்துவரும். புதிதாய்க் கூடு கட்டும். முட்டையிடும். குஞ்சு பொறிக்கும். எல்லாம் பறக்கப் பழகிய பின்பு கூடு இற்றுப் போகும். இப்படியாக ஒரு சுழற்சி முறையில் நடைபெற்று வருகையில் காய்க்காத குட்டை எலுமிச்சை மரம் முட்டைகளைப் பூவாகப் பூப்பது போலவும், குஞ்சுகளைக் காயாக்கிப் பார்ப்பது போலவும் தன்னை மலடென்று காட்டிக் கொள்ளாமல் மகிழ்வோடு காற்றில் அசைந்தாடும்.

        எல்லாம் நல்லபடியாகத்தான் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஓர் நாள் ஒரு திருட்டுப் பூனை அம் மரத்தின் கிளைகளுக்கிடையில் ஒளிந்திருந்த சிறு கூட்டைத் தன் பேய்நகங்களால் பிய்த்தெறிந்து குஞ்சுகளை ருசி பார்த்து விட்டது. சோடிப் பறவை வந்து குஞ்சுகளைத் தேடிக் கீச்சிட்டு மரத்தைச் சுற்றிச் சுற்றிப் பறந்தது. அவை மரத்திடம் இது குறித்து நியாயம் கேட்பது போலத் தோன்றியது. 'நல்லபடியாகப் பார்த்துக் கொள்வாயென்றுதானே உன்னிடம் விட்டுப் போனோம்' எனச் சண்டை பிடிப்பது போலிருந்தது. அதன் பிறகு எக்காலத்திலும் அக்குருவிகள் அம்மரத்தில் கூடு கட்டவென வரவில்லை. பின்னர் எந்தக் குருவிகளும் வரவில்லை. பின்னர் மரம் குற்றவுணர்வால் இற்றுப் போகத் தொடங்கியது.

        என் வீட்டில் சிறு குழந்தைகள் நடமாடத் தொடங்கிய நேரம், வீட்டுத் திண்ணையில் எப்பொழுதும் முறுக்குத் துண்டுகள், பிஸ்கட் துகள்கள் சிதறிக் கிடக்கும். இளங்காலையிலேயே சாம்பல் குருவிகளும், மைனாக்களும் வந்து அவற்றை இரையெனக் கொத்திக் கொண்டிருக்கும். இம் மைனாக்கள் வருவதை வீட்டுச் சிறுவர்கள் மிக நன்றாக அவதானித்திருக்கிறார்கள். சிறுவர்களின் அவதானம் நம்மை விடவும் கூர்மை வாய்ந்தது. மைனாக்களுக்கு முதலில் திண்ணையில் உணவிட்டு, பிறகு தலைவாசலில் உணவிட்டு, பிறகு சிறிது சிறிதாக வீட்டுக்குள்ளேயே வந்துபோகப் பழக்கியிருந்தார்கள். அவை வெகு இயல்பாக உள்ளே வந்து உணவுண்டு சென்றன. அவை வந்து அச்சமேதுமின்றி திருப்தியோடு உண்டு செல்வது வீட்டிலிருந்த எல்லோருக்குமே மிக ஆனந்தமாக இருந்தது. பிறகு வந்த அடைமழை நாட்களில் மைனாக்கள் வரவில்லை. பெய்த மழையில் அவை தங்கள் பழகிய தடங்களை மறந்து போயிற்று. மழை அழித்துப் போயிற்று.



        அதன் பிறகு ஒரு சேவலும் கோழிகளும் வளர்த்தோம். அது அதிகாரம் அதிகமிக்க சிவப்பும் மஞ்சள் நிறமும் கலந்த அழகுச் சேவல். பெரிய சேவல். வீட்டார் தவிர்ந்த வேறு யாராவது நமது வீட்டு எல்லைக்குள் நுழைந்தால் பழக்கப்படுத்திய காவல் நாயைப் போல விரட்டி விரட்டிக் கொத்தக் கூடியது. மேலே பாய்ந்து பாய்ந்து விரட்டக் கூடியது. அது போல இல்லை அதன் பெட்டைக் கோழி. மிகச் சாதுவானது. காலையில் கூட்டினைத் திறந்துவிட்டதும் எங்கோவெல்லாம் போய் மேயும். சரியாகப் பத்து மணிக்கும் பதினொரு மணிக்குமிடையில் வீட்டுக்கு வந்து முற்றத்தில் கிடந்த அதன் கூட்டுக்குள் ஏறி முட்டையிட்டுச் செல்லும். அதன் முட்டைகளைச் சேர்த்து வைத்து நாங்கள் ஒரு முறை அதனை அடைகாக்க வைத்து பன்னிரெண்டு குஞ்சுகளைப் பெற்றோம். கைக்கடக்கமான கோழிக் குஞ்சுகள் மிக அழகானவை. அவையும் பார்த்திருக்க வளர்ந்தன.

        எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருக்கின்றன என எண்ணி மகிழ்ந்த நாட்களில்தான் கூட்டுக்குள் அடைக்கப்பட்ட கோழிக் குஞ்சுகள் ஒவ்வொன்றாகக் குறையத் தொடங்கின. சில காலையில் எழுந்து பார்க்கும் பொழுது அனாதைப் பிணங்கள் போல உடலில் காயங்களோடு முற்றத்தில் இரத்தம் வடியச் செத்துக் கிடந்தன. பிறகுதான் இரவுகளில் திருடனைப் போல வரும் கீரிப் பிள்ளைகள் வேட்டையைக் காட்டுவது புரிந்தது. நாம் ஆசையாகப் பார்த்து இரசித்து வளரும் உயிர் கண்ணெதிரே செத்துக் கிடப்பதை காணச் சகிக்கமுடிவதில்லை ஒரு போதும். மிகுந்த கவலையடையச் செய்யும் கணம் அது. பிறகு எஞ்சியிருந்த எல்லாக் கோழிகளையும் அதன் குடும்பத்தோடு விற்றுவிட்டோம்.

        அதன் பிறகு நடந்ததுதான் சுவாரஸ்யமானது. முற்றத்தில் கோழிக்கூடு பாழடைந்து போய் வெறுமையாகச் சில மாதங்கள் அப்படியே கிடந்தன. நான் அதைப் புதுப்பித்தேன். கீரிப்பிள்ளைகள் வந்துபோன ஓட்டைகளை அடைத்தேன். நெளிந்திருந்த வலைக்கம்பிகளைச் சீரமைத்தேன். உயிர்கள் வாழ்ந்துபோன பரப்பு வெறுமையாகக் கிடக்கக் கூடாதென நான் வீட்டில் சொல்லி, கழுத்தில் சிவப்பு மாலையிட்ட பச்சைக் கிளியொன்றை கடையில் வாங்கிவந்து வளர்க்கத் தொடங்கினேன். அது பேசப் பழக்கும் பருவம் தாண்டிய கிளி. கூட்டுக்குள் தவறியேனும் விரலொன்றை இட்டால் கொத்திவிடும் முரட்டுக்கிளி. கொய்யாவும், பச்சை மிளகாயும், பழங்களும், பிசைந்த சோறும், பிஸ்கட்டும் இட்டுவளர்த்து வந்தோம். அதன் கூட்டுக்குள் எப்பொழுதும் பழங்களும் உணவுப் பொருட்களும் இறைந்து கிடக்கும்.

        இதுபோல கோடை நாளொன்றின் மாலைவேளையொன்றில் அந்தக் கிளிக் கூட்டிற்கு வெளியே அடைக்கப்பட்ட வலைக்கம்பிகளில் தொங்கியபடி இன்னுமொரு கிளியைக் கண்டோம். கூட்டுக்குள்ளிருந்த கிளி தன் உணவைக் கொத்தியெடுத்து, வெளியிலிருந்த கிளிக்குத் தன் சொண்டுகளால் ஊட்டிக் கொண்டிருந்தது. இது சில நாட்கள் தொடர்ந்தது. ஒரு நாள் கூட்டின் கதவை இலேசாகத் திறந்துவைத்து தூரத்திலிருந்து பார்த்திருந்தேன். பல நிமிடங்கள் கழிந்தபின்னர் வெளியிலிருந்த கிளி தானறியாமலே உணவின் மேல் ஈர்க்கப்பட்டு, அல்லது மற்றக் கிளியின் மேல் ஈர்க்கப்பட்டு கதவு வழியாகக் கூட்டுக்குள் வந்துவிட்டது. கதவை அடைத்து விட்டேன்.

        அவை இரண்டும் கூட்டுக்குள் இடைவிடாது காதல் செய்தன. இரண்டுமாகச் சேர்ந்து உணவிடும்போது,  தண்ணீர் வைக்கும் போது என் கைகளைக் கொத்திக் காயப்படுத்தின. இனி வளர்க்கச் சரிப்பட்டு வராது என உணர்ந்த நாளில் கூட்டினைத் திறந்து கிளிகளைப் பறக்கவிட்டேன். சடசடத்துப் பறந்த கிளிகள் அருகிலிருந்த மாமரத்தில் போய் நின்றன. பிறகு எங்கோ தொலைவு நோக்கிப் பறந்தன. எப்பொழுதாவது சில கிளிகள் மாம்பழம் கொத்த வருகையில் அவற்றுக்குள் அவையிரண்டையும் கண்களால் தேடுவேன்.

        பிறகு அதே கூட்டுக்குள் லவ்பேர்ட்ஸ் வளர்த்தேன். கிளிவகைதான் எனினும் சிறியவை. பல வர்ணங்களைக் கொண்டவை. விடிகாலையில் எழுந்ததுமே வாய் ஓயாத மனிதர்களைப் போலச் சத்தமாகக் கதைத்துக் கொண்டிருப்பவை. மிக அழகானவை. இரு சோடிகள் வாங்கிவந்து கூட்டினுள் இட்டேன். ஆணும் பெண்ணுமாகத் தனித்தனியே பிரிந்து அவை காதல் செய்தன. கொஞ்சிக் கொண்டன. பருகவென வைக்கும் நீரில் குளித்துக் கொண்டன. பட்சிகளை விற்றவரின் ஆலோசனைப் படி கூட்டுக்குள் செதுக்கித் துளையிட்டு மூடிய தேங்காய் மட்டைகள் இரண்டைத் தொங்கவிட்டேன். அவை முட்டைகளிட்டன. அடை காத்தன. குஞ்சுகள் பொறித்து அவையும் வளர்ந்து பெரிதாகின. இதில் ஒரு பிரச்சினை இருந்தது. ஆண் பட்சிக்கோ, பெண் பட்சிக்கோ சோடி இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. சோடியில்லையென்றால் அத் தனிப் பட்சி மற்ற எல்லாப் பட்சிகளோடும் மிக மூர்க்கமாக, இரத்தம் கசியச் சண்டையிடும். கொத்திக் கொள்ளும்.

        அதனால் கூட்டுக்குள் தனிப்பட்சி உருவாகினால் உடனே அதனை வேறு தனிக்கூட்டுக்கு மாற்றி அதை மட்டும் விற்றுவிடுவேன்.  இப்படியாகக் குருவிகள் பார்த்திருக்கப் பெருகிற்று. உணவிட்டுச் சமாளிக்க முடியவில்லை. அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஜோடிக்கும் தனித்தனியாக தேங்காய் மட்டைகளைத் தொங்கவிடக் கூட்டுக்குள் இடமற்றுப் போயிற்று. அதைவிடவும் முக்கியமாக, விடிகாலையில் எல்லாமாக எழுப்பும் சத்தத்தில் வீட்டில் எல்லோரினதும் உறக்கம் போயிற்று. பிறகு அவற்றை அக் கூட்டோடே விற்றுவிட்டோம். இப்பொழுது முற்றத்தில் எந்தக் கூடுகளும் இல்லை. வளர்ப்புப் பட்சிகளும் இல்லை.

        இவையெல்லாம் பல வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவங்கள். நாம் நேசித்துப் பாதுகாக்கும் எதுவும் நம்மை விட்டுப் பிரிந்துபோனால் எளிதில் மறந்துவிடுவதற்கில்லை. பறவைகள் வானில் பறக்கையில் தங்கள் தடங்களை விட்டுப் போவதில்லை. மனிதக் கண்ணுக்குப் புலப்படா வான்வெளிப் பாதைகளை அவை தம் விழிகளில், பறக்கப் பயன்படும் சிறகுகளில் ஒளித்துவைத்துக் கொண்டிருக்கின்றன.  சரியான திசையில், சரியான இலக்குகளுக்குப் போய்ச் சேர அப் பாதைகள் வழிகாட்டுகின்றன. பாதைகள் மட்டுமிருப்பினும் போதாது. பறக்கும் சுதந்திரம் வேண்டும். வாழும் சுதந்திரம் வேண்டும். தனது இருப்பைத் தான் தீர்மானிக்கும் உரிமை வேண்டும்.

        பட்சிகளுக்கே இப்படியென்றால் ஆதி முதல் ஒன்றாக வாழ்ந்து வரும் ஒவ்வொரு மனிதனிடமும் வாழ்வு குறித்தான எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும்? எவ்வளவு ஆசைகள் அவனை வழிநடத்தியிருக்கும்? சுதந்திரமாக, தனது இருப்பை, தனது பாதையைத் தேர்ந்தெடுத்த மனிதன் எவ்வளவு நிம்மதியாக இருந்திருப்பான்? அவனது வசிப்பிடங்களில் பிற ஏதேனுமொரு காரணியால் அவனது அமைதிக்குப் பங்கம் வரும்வரையில் நான் மேற்சொன்ன லவ்பேர்ட்ஸ் பறவைகள் போல ஒன்றாகச் சோடியாகக் கலந்து மகிழ்வாகப் பேசி மகிழ்ந்து, சிரித்து... ஒவ்வொரு மனிதனும் தன் கணங்களை மகிழ்வோடு நகர்த்தியிருப்பான்.

        அது போன்ற மனிதர்கள்தான் இன்று முள்வேலி திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு  நகர்த்தப்பட்டிருக்கிறார்கள். எனக்கே நான் நேசித்த பட்சிகள் குறித்தான நாட்கள் இன்னும் மறக்கவில்லை. நினைக்கும் கணந்தோறும் அவை வண்ணச் சிறகுகளை அசைத்தபடியும் அதன் மொழிகளை உதிர்த்தபடியும் மனம் முழுதும் பறந்துகொண்டே இருக்கின்றன. தனக்கான மண்ணில் அழகாகக் கூடுகட்டி வாழ்ந்து, ஆயுதங்களின் அறுவடை நாளில் தம் கூட்டினைக் குடும்பத்தைத் தொலைத்துத் தனித்துப் போன அப்பாவி வயற்குருவிகளாய் இன்று அடுத்தவேளை உணவை, நீரை அந்நியரிடம் எதிர்பார்த்தபடி பசியோடும், உடல் வருத்தங்களோடும் காத்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களின் மனங்களுக்குள் எத்தனை பட்சிகள் இருக்கும்? பட்சிகளை விடுவோம். அவர்களது பால்யங்களுக்குள், பழைய நாட்களுக்குள் வந்துபோனவர்கள் சுகமாயும், வலியாயும் எத்தனை தடங்களை விட்டுப் போயிருப்பார்கள் ? அந்த மனங்களுக்குள் தாம் நேசித்த எத்தனை எத்தனை மனிதர்கள் இருப்பார்கள்? தம் வாழ்வு குறித்தான எத்தனை எத்தனை கனவுகள், ஆசைகள் இருந்திருக்கும்? எல்லாம் பொசுங்கிப் போயிற்றா ?

        நான் ஒற்றைக்கிளிக்கு உணவிட்டுக் காட்டி, தந்திரமாக மற்றக் கிளியையும் பிடித்ததைப் போல, பத்து ஏக்கர் நிலத்துக்குள், பல இலட்சம் மக்கள் சேர்க்கப்பட்டு, இன்று அடைக்கப்பட்டிருக்கிறார்கள். முள்வேலி எல்லைக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். கோழியின் குஞ்சுகளைக் கீரிப் பிள்ளைகள் இழுத்துச் சென்று, இரத்தம் வடிய வடியக் கொன்று தின்றதைப் போல இளைஞர்கள், யுவதிகள் ஏதும் செய்யவியலாக் கதறல்களுக்கு மத்தியில் எந்தத் திசைக்கென்றறியாது, என்ன நோக்கங்களுக்கென்றறியாது இழுத்துச் செல்லப்படுகிறார்கள். வாழ்வு குறித்தான உரிமைகளும், ஆசைகளும், கனவுகளும் அப்படியே அழிந்து போக சடலங்களாகிப் போகிறார்கள். முள்வேலிக்குள் அகப்பட்டுக்கொண்டிருக்கும் எல்லா உயிர்களின் வாழும் உரிமையை, இருப்பின் அசைவுகளை அதைத் தாண்டிய ஆயுதக் கரங்கள் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன.

        நம் உடலில் சாதாரண ஒரு சிறு கீறலுக்கே எவ்வளவு துடித்துப் போகிறோம்? சிறு உராய்வு, குருதிக் கசிவுக்கே எத்தனை மருந்திடுகிறோம்? அங்கெல்லாம் அழிவாயுதங்கள் தம் பசி போகச் சப்பித் துப்பியவையாய் அங்கவீனர்களாக கை இழந்து, கால் இழந்து எஞ்சிய உயிரோடும், எஞ்சிய உடலுறுப்புக்களோடும் ஒழுங்கான மருத்துவ வசதிகளின்றி, வலிகளில் துடித்தபடி பல்லாயிரக் கணக்கானோர், ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகப் பரிதவித்துக் கிடக்கிறார்கள். உறவுகள் அழுதழுது ஓய்ந்து பார்த்திருக்கப் பலர் செத்துப் போகிறார்கள். இன்னும் ஒரு வேளை உணவின்றி, நீரின்றி பட்டினியால் பலர் செத்துப் போகத் தொடங்கியிருக்கிறார்கள். நாம் நேசிக்கும் உயிர்கள் நாம் பார்த்திருக்க உயிரற்றுப் போவதென்பது, அசைவற்றுப் போவதென்பது எவ்வளவு வேதனைக்குரிய விடயம்? எவ்வளவு துயரத்தை அது எடுத்துவரும்?

        அந்தத் துயரங்களையெல்லாம் மனதிலும் உடலிலும் சுமந்தவாறு அங்கு உங்கள் தாய், தந்தையரைப் போன்றே பெற்றவர்கள் இருக்கிறார்கள். உங்கள் நண்பர்களைப் போன்றே நண்பர்கள் இருக்கிறார்கள். உங்கள் பெண்களைப் போன்றே பெண்கள் இருக்கிறார்கள். உங்கள் குழந்தைகளைப் போன்றே குழந்தைகள் இருக்கிறார்கள். எல்லோருமாக மொத்தத்தில் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் இருக்கிறார்கள். எல்லோருக்குமாக வதைப்படவும் ஆயுதங்களாலும், பட்டினியாலும், நோயாலும் செத்துப் போகவும் இப்பொழுது இருப்பவர்கள் மட்டும் போதும்.

        இன்னும் முந்தைய வலிகளின்போது வடுக்கள் சுமந்து, உயிர் வாழவென அகன்றுபோய் வேற்று தேசங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களையெல்லாம் மீளவும் தம் தேசத்துக்கு அழைத்துக் கொள்ளப்போவதாகக் காற்றோடு வரும் செய்திகள் சொல்கின்றன. இருப்பவர்களுக்கே இடமற்று, உணவற்று, நீரற்றுப் போனநிலையில், இருப்பவர்களுக்கே வாழும் உரிமைகளற்ற நிலையில், எம் அகதிகளை ஏந்தியிருக்கும் நாடுகளே... அது மட்டும் உண்மையானால்,  உங்களையே நம்பிவந்த எம் மக்களை, உங்கள் சக மனிதர்களை இம் முட்சிறைகளுக்குத் திருப்பியனுப்பிவிடாதீர்கள்.  உங்கள் தேசத்தின் ஒரு மூலையில் அவர்கள் உயிருடனாவது வாழ்ந்துவிட்டுப் போகட்டும்.

        கொல்லும்போது வெறுமனே பார்த்திருந்தது போல, கொல்லப்படவும் மனிதர்களை அனுப்பி அவர்களது கண்ணீரால், இரத்தத்தால், உயிர்களால் உங்களுக்கான சாபங்களை நிரப்பிக்கொள்ளவேண்டாம்.
இறுதியாக எனது பழைய கவிதையொன்று !




எலும்புக்கூட்டு ராஜ்ஜியங்கள்


காற்றினைப் போல்
எங்கள் வாழ்க்கை
ஓரிலக்கில்லாமலும்...
அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டும்...

ஓடும் நதியினைப் போல்
எங்கள் பயணம்
ஓரிடத்தில் தரித்திருக்க முடியாமலும்...
திக்குதிசையின்றி பாய்ந்தோடிக்கொண்டும்...

வானவில்லினைப் போல்
எங்கள் சந்தோஷம்
நிலைத்து நிற்காமலும்...
உடனே கலைந்து போவதாயும்...

மயானபூமியைப் போல்
எங்கள் கனவுகள்
பயமுறுத்தும் அமைதியோடும்...
எலும்புக்கூடுகளின் ராஜ்ஜியங்களோடும்...

பாழடைந்த வீட்டினைப் போல்
எங்கள் எதிர்காலம்
எப்பொழுதும் பயமுறுத்திக்கொண்டும்...
எவராலும் கவனிக்கப்படாமலும்...

மீஸான்கட்டைகளைப் போல்
எங்கள் சமூகம்
அழிந்துகொண்டே இருப்பதாயும்...
அடையாளத்துக்காக வேண்டி மட்டுமாயும்...

மணல்மேட்டினைப் போல்
எங்கள் தேசம்
சரிந்துகொண்டே இருப்பதாயும்...
விலங்குகளின் எச்சங்களைச் சுமந்துகொண்டும்...

ஊசலாடும் ஒட்டடைகளைப்போல்
எங்கள் உயிர்கள்
எவராலும் வேண்டப்படாத குப்பையாயும்...
எப்பொழுதிலும் அறுந்துவிழக்கூடியதாயும்...

எங்களது உயிர்கள்
எடுக்கப்படும் கணப்பொழுதுகளில்
என்ன செய்துகொண்டிருப்பீர் தோழரே..
ஓர் அழகிய பாடலின்
ஆரம்ப வரிகளை
முணுமுணுத்துக் கொண்டிருப்பீரோ...?

* மீஸான் கட்டை - கல்லறை அடையாளம் / நடுகல்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


# நன்றி - யுகமாயினி இதழ் - ஜூலை, 2009

# நன்றி - புகலி இணைய இதழ்
# நன்றி - திண்ணை இணைய இதழ்
Author: வந்தியத்தேவன்
•7:09 PM
ஈழத்தின் மூத்த கவிஞர் இ.முருகையன் பற்றிய தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியிட்ட நினைவு மலர் சில நாட்களும் முன்னர் வாசிக்க கிடைத்தது. அதனைப் பற்றிய சிறிய விளக்க குறிப்பே இந்தப் பதிவு.



மூத்த கவிஞர் இ.முருகையன் என்ற தலைப்பில் தேசிய கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் திரு.சோ.தேவராஜாவின் குறிப்புடன் கவிஞர் முருகையனின் வாழ்க்கை குறிப்பு ஆரம்பிக்கின்றது.

முருகையனின் படைப்புலகும் மொழிச் சிந்தனையும் என்ற தலைப்பில் திரு.சி.சிவசேகரம் அவரது மொழி ஆற்றல் பற்றி எழுதியிருக்கிறார்.

" தமிழ்க் கலைச் சொல்லாக்கத்திற்க்கு முருகையன் ஆற்றிய பணியைப் பற்றி அவருடன் அரச கரும மொழித் திணைக்களத்திற் பணியாற்றியோர் மட்டுமே முழுமையாக அறிவர். தமிழில் விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் கற்பிக்கத் தேவையில்லை என்று நினைத்தோருக்கும் தமிழரின் வாயிற் புதிய கலைச் சொற்கள் நுழையாத விதமாக அவற்றைப் புனைவோருக்கும் நோக்கங்கள் வேறாயிருந்தாலும் அவர்களது போக்கிற் போக விட்டிருந்தால் நவீனச் சிந்தனைகளைத் தமிழிற் கூறுவது இயலாமலே போயிருக்கும். 1957 முதல் 1960களின் இடைப்பகுதிவரை முற்போக்கான பார்வையுடைய அறிஞர்களுடன் இணைந்து முருகையன் ஆற்றிய பணியின் விளைவாகத் தமிழ்க் கலைச் சொற்கள் வளமும் செழுமையும் பெற்றன."

இவ்வாறு திரு.சிவசேகரம் முருகையனின் மொழி ஆற்றலைப் பட்டியலிடுகின்றார்.

கவிஞர் கல்வயல்.வே.குமாரசாமியின் முருகையன் என்ற எண்சீர் விருத்தக் கவிதையும் இரண்டு வெண்பாக்களும் முருகையனின் சிறப்பை இயம்புகின்றன. (கவிதையில் நான் கொஞ்சம் பலவீனம் அந்தக் கவிதைகள் என் பார்வைக்கு வெண்பாவாகவும் எண்சீர் விருத்தமாகவும் தெரிந்தபடியால் அப்படி எழுதியிருக்கின்றேன்)

"கவிதை, கட்டுரை, நாடகம், பா நாடகம், பாட்டுக்கூத்து, வானொலி நாடகம், பாடநூலாக்கம், கலைச் சொல்லாக்கம், மொழி பெயர்ப்பு முதலான பல்வேறு துறைகளில் முருகையன் ஈடுபட்டார். செய்வன திருந்தச் செய்யும் சங்கற்பத்துடன் அவர் செயற்பட்டதால் அவர் தொட்டன யாவும் துலங்கின" என பேராசிரியர் எஸ்.தில்லைநாதன் தன்னுடய மானிட முன்னேற்றத்தை விழைந்த முருகையன் என்ற கட்டுரையில் முருகையனின் பல்வேறு துறைகள் பற்றி கூறியிருக்கின்றார்.

1960களின் தொடக்கத்தில் நன் எழுதத் தொடங்கிய காலத்தில் எனக்கு ஆதர்சமாக அமைந்த மூன்று முக்கியமான கவிஞர்களுள் முருகையனும் ஒருவர், மற்றவர்கள் நீலாவணன் ,மஹாகவி என ஈழத்தின் கவிதை மூம்மூர்த்திகள் பற்றி ஆரம்பித்து முருகையன் பற்றிய பல்துறை ஆய்வுகள் பற்றிய சுருக்கமான விடயங்களுடன் வீரகேசரியில் வெளிவந்த, பேராசிரிய எம்.ஏ.நுஃமானின் "தன் படைப்புகளால் நிலைத்து வாழும் முருகையன்" என்ற கட்டுரை மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கின்றது.

"முருகையன் பொதுவுடமை இயக்கத்தின் மாக்சிச லெனினிச நிலைப்பாட்டை முன்னெடுத்த கட்சியுடனும் அதன் தோழர்களோடும் நெருக்கமாக இருந்து வந்தார். கட்சியின் முடிவுகள் தீர்மானங்கள் பற்றி அறிந்துகொள்வதிலும் அவை பற்றிய தனது கருத்துகள் ஆலோசனைகளை முன் வைப்பதிலும் அவர் தனது பங்கை வகித்து வந்தார்" என்று சி.கா.செந்தில்வேல் முருகையன் அவர்கள் எப்படி ஒரு பொதுவுடமைவாதியாக இருந்தார் என்ற கருத்துகளை "பொதுவுடமை இயக்கத்திற்க்கு உரமிட்டு நின்றவர்" என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

"செம்மை+எளிமை= முருகையன்" என்ற தலைப்பில் சோ.பத்மநாதன் எழுதிய அவரின் கவிதைகள் பற்றிய சுருக்கமான கட்டுரையில்

"வாயடைத்துப்போனோம்
வராதாம் ஒரு சொல்லும் "

என்ற யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்டபோது பாடியது.
"இரண்டாயிரம் வருடப்
பழைய சுமை எங்களுக்கு "

என்பது ஓர் அற்புதமான கவிதை. தமிழர் சமுதாயம் மீது வைக்கபப்ட்ட துணிச்சலான விமர்சனம்.

என முருகையனின் கவிதைகள் பற்றிய தன் எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்துகின்றார்.

"இரண்டாயிரம் வருடப்
பழைய சுமை எங்களுக்கு "

என்ற கவி வரிகளை வைத்து
"தமிழ் மக்களும், சிங்கள மக்களும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட, கவிஞர் முருகையன் குறிப்பிடும் "இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமையை" இறக்கி வைக்க இயலாதவர்களாக தமது வாழ்க்கைப் பயணத்தை இடர் மிகுந்த காட்டு வழியில் துயரங்கள் இழப்புகளுடன் தொடர நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்" என "கவிஞர் முருகையனின் ஒரு கவிதைப் படிமம்" என திரு. க.தணிகாசலம் குறிப்பிட்டுள்ளார்.

"பாடு பொருளையும் செய்யுள் வகைகளையும் பொறுத்தவரை, ஈழத் தமிழ் கவிதை, இலக்கியப் பரப்பில் விரிவும் ஆழமும் கொண்ட கவிதைகளைப் படைத்தோருள் அவர் முதன்மையானவர் என்பேன். அவரது பா நாடகங்களும் குறுங்காவியங்களும் ஈழத் தமிழ்க் கவிதைக்கு பெருமை சேர்ப்பன. அனைத்திலும் மேலாக அவரது செய் நேர்த்தி அனைவரும் பின்பற்ற உகந்தது. " என புதிய பூமியில் திரு.சிவா என்பவர்களால் எழுதப்பட்ட "முருகையனின் கவிதையின் உயர்வும் உன்னதமும்" என்ற ஆக்கமும் சுவையாக இருக்கின்றது.

இது தவிர தேசிய கலை இலக்கிய பேரவை வவுனியாக் கிளை, சிவநெறிக் கலாநிதி இராசையா ஸ்ரீதரன் , பயில்நிலம் மாணவர்கள், புதிய மலையகம் மகேந்திரன், எஸ்.டொன் பொஸ்கோ போன்றவர்களின் கண்ணீர் அஞ்சலிகளும், இதயராசன், பூமகன், மு.நாவலன், சிங்காரம் மலர், அழ பகீரதன் போன்றவர்களின் கவிதாஞ்சலிகளும் முருகையன் புகழ் பாடுகின்றன.

பின்னிணைப்பாக கவிஞர் முருகையனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கவிதைகளும் கட்டுரைகளும், அத்துடன் இவரின் நூல்களின் பட்டியல்களும் நாடகங்களின் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளன.

சிறிய நூலாக இருந்தாலும் முருகையனின் பெருமைகளை திறம்படச் சொல்லியிருக்கும் பாங்குக்கு தமிழ்பேசும் நல்லுலகம் என்றைக்கும் தேசிய கலை இலக்கியப் பேரவைக்கு நன்றியுடையவர்களாகவே இருக்கும்.

மூத்த கவிஞர் முருகையன் அவர்கள் தமிழ்க் கவிதைக்கு மிக்க வளஞ் சேர்த்தவர். அவரைக் "கவிஞர்க்குக் கவிஞர்"(A poet's Poet) எனப் பேராசிரியர் கைலாசபதி அழைத்தது வெறும் புகழுரையன்று. அது அவர் ஆய்ந்தறிந்து சொன்ன பேருண்மை. கவிஞர் என்ற வகையிலும் கவிதை சார்ந்த படைப்புகளுடுமே பலரும் முருகையன் அவர்களை அறிவர் என்பதாற் திறனாய்வு, மொழியியல், மொழி பெயர்ப்பு முதலாய பல்வேறு துறைகளிலும் அவரது சீரிய பங்களிப்புப் பற்றிப் பேசப்படுவது குறைவு. எனினும் முருகையன் அவர்களது பெருஞ் சிறப்பு மானிடஞ் சார்ந்த, விஞ்ஞான ரீதியான, மனித நேய உலக நோக்கு. அதுவே அவரை நெறிப்படுத்தியதும் நம்மனைவர்க்கும் இனிய ஒருவராக அவரை என்றென்றும் வைத்திருபதுமாகும். அவரது அமரத்துவமான ஆக்கங்களுடும் அதுவே நம்முடன் தொடர்ந்து வாழும்.
Author: Unknown
•1:24 PM
என்ர மூண்டு வில்லன்மாரைப் பற்றி இந்தப் பதிவில எழுதப்போறன். எனக்கு இண்டைக்கும் இவை மூண்டு பேரையும் நினைச்சா தூக்கிப் போடும் பாருங்கோ. ஏனோ தெரியேல்லை இவயளைக் கண்டா எனக்கு வெறுப்பும் பயமும் கலந்து ஒரு புதுவிதமான உணர்வு வரும்பாருங்கோ. இனி இவையளைப் பற்றிப் பாப்பம்.

மசுக்குட்டி
இவையள்ள எனக்குத் தெரிஞ்சு இரண்டு வகை. ஒருத்தர் இந்த முருங்கை, வாழை இதுகள்ள இருக்கிற வெள்ளை மசுக்குட்டி. மற்றவர் முள்முருங்கையை வதிவிடமா வச்சிருக்கிற கறுத்த மசுக்குட்டி. இவையள் பூவரசு மா போன்ற மற்ற மரங்களிலையும் இருப்பினம். வெள்ளை மசுக்குட்டி பற்றின ஞாபகம் 1991க்குப் போகும். நாங்கள் இந்தியாவுக்குப் போட்டு வீட்ட திரும்பின நேரம். அப்பர் கொழும்பிலை நிண்டவர். ஒரு நாள் படுத்திட்டு காலமை எழும்பிறன் உடம்பெல்லாம் தடிப்பு. நல்ல வெக்கை எண்டுட்டு கதவைத் திறந்து விட்டிட்டுப் படுத்தனாங்கள். ஞாயிற்றுக்கிழமை எண்டபடியால் அம்மா என்னைப் பிந்தி எழும்ப விட்டவ. கருமம் பிடிச்ச வெள்ளை மசுக்குட்டி பக்கத்திலை இருந்த முருங்கை மரத்திலை இருந்து, காலமை வெயிலுக்கு கூட்டமா இறங்கி, படுக்கை வரை வந்திட்டுது. தடிக்கவும் கடிக்கவும் தொடங்க ஐயோ ஆத்தேரோ எண்டு குழறினனான். அக்கா வெங்காயம் எல்லாம் பூசி என்னவோ எல்லாம் செய்துதான் ஒருமாதிரி கடியும், தடிப்பும் குறைஞ்சது. அண்டேல இருந்து மசுக்குட்டிக்கும் எனக்கும் உறவு தொடங்கீச்சுது.

1996ல கொஞ்சக் காலம் கரணவாயில எங்கட மாமி வீட்ட இருந்தனாங்கள். அங்க இரு கறுத்த மசுக்குட்டிப் பண்ணையே இருந்தது. எனக்கு வெள்ளை மசுக்குட்டியக் கண்டா அருவருப்பா இருக்கும். கறுத்த மசுக்குட்டியக் கண்டா கடிக்கவே தொடங்கீடும். இதுக்காகவே 11 வயதிலையும் என்னை மடியிலை வச்சிருப்பார் அப்பா. அந்தளவு பயம். அதுவும் இந்தக் கறுப்பு மசுக்குட்டி சரியான மொத்தம் வேறை. இதுக்காகவே நான் கரணவாய்ப் பக்கம் போறது குறைவு. கொஞ்ச நாள் பொறுத்து மாமி வீட்டச் சுத்தி இருந்த எல்லா முள்முருக்கு மரங்களையும் வெட்டி, முட் கிளுவை போட்டு அடைச்சவ. பேந்து தகரம் போட்டு அடைச்சவ.

மசுக்குட்டியள் என்னை வீட்டில மட்டும் பயப்படுத்தேல்லை. எங்கட பாலர் பள்ளிக்கூடத்திலை குப்பை பொறுக்கச் சொல்லி விடுறவை முந்தி. அதிலை ஒரு மாமரத்திலை மசுக்குட்டி இருந்து படுத்தின பாட்டை மறக்கேலாது. அதே போல குழவியடி அம்மனிலை ஒருமுறை காலமை வெய்யிலுக்கு முருங்கையில இருந்து இறங்கின மசுக்குட்டிப் படையையும் மறக்கேலாது. அதே போல் ஹாட்லீல படிக்கேக்க ஈசப்பாவின்ர விஞ்ஞானக் கொப்பியிலை மேலை இருந்து வந்து விழுந்த கறுத்த மசுக்குட்டியையும் மறக்கேலாது. இவேன்ர தொல்லை தாங்காமல் நான் வாழைப்பழம், முருங்கக்காய் கறி, முருங்கை இலை வறை இதெல்லாம் சாப்பிடிறதே இல்லை எண்டால் பாருங்கோவன்.

எரி புழு
இவருக்கு ஏன் இந்தப் பேர் வந்தது எண்டு தெரியேல்லை. ஆள் கறுப்பும் பச்சையும் கலந்த ஒரு கலரில பாக்க மயிர்க்கூச்செறியிற மாதிரி இருப்பர். புல்லுகளிலைதான் இவர் வாசம் செய்வார். ஆள் கடிப்பாரோ, அரிப்பாரோ ஒண்டும் தெரியாது. ஆனாப் பாத்தா நடுங்கும். ஏனெண்டு தெரியாது. இவர் முதல் நாலு மாசங்களுக்க, அதுவும் இந்த நெல்லு முத்திற காலத்துக்குக் கிட்ட வந்திடுவார். மூஞ்சைக்குக் கிட்ட சிவப்பா என்னவோ இருந்து இன்னும் பயப்பிடுத்தும். ஆளாலை இன்னொரு பெரிய தொல்லை இருக்கு. இவர்வந்து நெல்லை நாசம் பண்ணீடுவார் எண்டு சொல்லி அடிக்கடி இவற்றை காலத்திலை மருந்தடிக்க வேண்டி வாறது. மசுக்குட்டி அளவுக்கு இல்லை எண்டாலும், இவரும் எனக்கு ஒரு வில்லன்தான்.

அட்டை
மழைகாலம் எண்டால் தொடங்கீடும் இவேன்ர பிரச்சினை. இவையள்ள நான் பாத்தது மூண்டு வகை. சிவத்த அட்டை, சரக்கட்டை, பாக்கர் அட்டை. மழை காலம் எண்ட உடன அவ்வளவு காலம் எங்கை இருந்தினம் எண்டு தெரியாது, ஆனா வந்திடுவினம். சிவப்பு அட்டை எண்டுறவர் சிவப்பும் கறுப்பும் கலந்த உடம்பும் சிவப்புக் கால்களும் உள்ளவர். வீட்டுக்குள்ள வந்த இவரை ஈர்க்கால தட்ட வெளிக்கிட்டா, உடனை இந்தச் சக்கர வாணம் மாதிரி சுருண்டிடுவார். இவரில என்ன அருவருப்பு எண்டால் என்ர சித்தீன்ர பொடியன் ஒருத்தன் கொஞ்சக் காலம் எங்கட வீட்டில இருந்தவன். தாயும் தேப்பனும் கொழும்பில. ஒரு நாள் இந்த அட்டையைப் பிடிச்சு, இரண்டா பிரிச்சு ஆள் சாப்பிட ரெடி. நல்ல காலம் அக்கா கண்டு பறிச்சு எறிஞ்சது. அந்தப் பிஞ்ச அட்டையப் பாத்த நாள் தொடக்கம் எனக்கு அட்டை எண்டாலே அருவருப்பு.

சரக்கட்டை எண்டுறவர் கறுப்பும் மஞ்சளுக் கலந்த கலரில இருப்பார். ஆள் சிவப்பு அட்டையை விடச் சின்னவர். சிவப்பு அட்டை அளவுக்கு இவர் அருவருப்புத் தரமாட்டார். அருவருப்பின்ர உச்சம் எண்டால் பாக்கர் அட்டைதான். ஆண்டவா, என்ன பெரிய அட்டை அது. அந்த அட்டையப் பாத்த பிறகு பாக்கர் பேனையே எனக்குப் பிடிக்கிறேல்லை. பாக்கர் பேனை மாதிரி இருக்கிறபடியால்தான் இவரைப் பாக்கர் அட்டை எண்டு சொல்லிறவை எண்டு நினைக்கிறன். நான் பாக்கோணும் எண்டு நினைச்சுப் பாக்காம விட்டது இந்த மலைநாட்டு அட்டையளைத்தான். நுவரெலியா போனபோது ஒரு தேயிலைத் தோட்டத்துக்கும் போகேல்லை எண்ட குறை இருக்கு. போனா அட்டையையும் பாத்திருக்கலாமோ என்னவோ.

ஆனாப் பாருங்கோ, நான் உந்த மட்டத்தேள், பூரான் ஏன் புலிமிலச்சிலந்தியைக் கூட அடிச்சிருக்கிறன். கிழிஞ்ச கொப்பி மட்டைய மேல போட்டு புலிமிலச் சிலந்தியை நசுக்கி இருக்கிறன். ஆனா மசுக்குட்டி, எரி புழு, அட்டையை பெரிய தடியால தள்ளிவிடவே பயம் பாருங்கோ..... உங்களுக்கும் பயம்தானே??? சும்மா புழுகாதையுங்கோ.... இந்த மூண்டு பேரும் எல்லாருக்கும் வில்லன்மார்தான்... எனக்கு வடிவாத் தெரியும்......ஊரிலை வயல் விதைக்கினமாம், அதில எனக்கிருக்கிற அனுபவம் பற்றிப் பிறகு எழுதிறன்.

மசுக்குட்டி: மயிர்கொட்டி. வண்ணத்துப்பூச்சியின் பரிணாம வளர்ச்சியின் முதலாவதோ, இரண்டாவது வடிவம்.
எரி புழு: ஒரு புழு, பெயர்க் காரணம் தெரியாது
சரக்கு அட்டை: ஒரு வகை அட்டை
பாக்கர் அட்டை: ஒரு வகை அட்டை. பாக்கர் பேனா மாதிரி இருப்பதால் இந்தப் பெயர் என்று கேள்விப்பட்டேன். உண்மையா?
முள்முருக்கு, முட் கிளுவை, கிளுவை: வேலி அடைக்க கதியால்களாகப் பயன்படும் மரங்கள். சில இடங்களில் பூவரசங் கதியாலும் பயன்படும்
பேந்து: பிறகு
அண்டேல இருந்து: அன்றில் இருந்து
மட்டத்தேள்: ஒரு பூரான் வகை. (நாங்கள் பூரான் என்று சொல்வது ‘தேள்' என்று நினைக்கிறேன்)
புலிமிலச்சிலந்தி: புலி முகச் சிலந்தி என்ற சிலந்தி வகை.
Author: அருண்மொழிவர்மன்
•6:02 PM



அண்மையில் எனது பெரியம்மா கொழும்பு சென்று திரும்பியபோது எனது அம்மா அவவிடம் எனக்காக கொடுத்துவிட்ட பொருட்களில் நான் முக்கியமாக கருதுவது எனது ஒன்பதாம் ஆண்டு விஞ்ஞான பாட கொப்பி. இலங்கையில் க. பொ. த சாதாரண தர (11ம் ஆண்டு) பரீட்சைக்கான பாடத்திட்டம் ஆரம்பிப்பது ஓன்பதாம் ஆண்டில் இருந்து என்பதால் மிகுந்த உற்சாகமாக படிக்க தொடங்கியிருந்தோம். அப்போது நான் வாசித்த ஒரேயொரு ஆங்கில சஞ்சிகையான the sporststarன் நடுப்பக்கத்தில் அப்போது star poster என்று விளையாட்டு வீரர்களின் அழகிய வண்ணப்படம் வருவது வழக்கம். அதனை தான் நான் எனக்கு விருப்பமான் ஆசிரியர்களின் கொப்பிகளிற்கு உறையிடுவேன். அப்படியாக உறையிட்டு எனக்கு கிடைத்த கொப்பியை பார்த்ததும் எனது மனம் மழையில் நனைந்த துணி போல கனக்கத்தொடங்கியது.

எமக்கு ஒன்பதாம் ஆண்டு முதல் 11ம் ஆண்டு வரை விஞ்ஞானம் படிப்பித்தவர் திரு வை. க. தவமணிதாசன் அவர்கள். கண்டிப்புக்கு பெயர் போனவர். சின்னதாய் ஒரு கவிஞர். “வைகை” என்று ஒரு கவிதை தொகுப்பு வெளியிட்டவர். அதில்
“வைகை எந்தனுக்கு வாடிக்கை ஆனதற்கு
வைகை முறையே தலையும் தலையெழுத்தும்” என்று மாணவர்களை கடுமையாக கண்டிக்கும் தன் இயல்பு பற்றி ஒரு கவிதை எழுதியிருந்தார். அமிலத்துக்கும் காரத்துக்கும் இடையிலான நடுநிலையாக்கல் தாக்கம் பற்றி
அமிலம் + காரம் --> உப்பு + அப்பு (நீர்)
என்று எல்லாம் சுவரசியமாகக் கற்பிப்பார். (இவர் பற்றி முழுமையாக ஒரு தனி பத்தி எழுதவேண்டும். ஆனால் நான் இப்போது கூறவந்ததை முதலில் கூறிவிட்டு பிறகு இவர் பற்றி.) அவருடைய பாட கொப்பிக்கும் எனது வழக்கப்படியே உறையிட்டிருந்தேன். ஆனால் அந்த உறையை பார்த்ததும் என் மனம் பாதிக்கப்பட காரணம் அதில் இருந்த அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் டேமியன் மார்ட்டினின் படம். அது (92) அவர் அவுஸ்திரேலிய அணிக்காக கிரிக்கெட் விளையாட தொடங்கியிருந்த காலம். அந்த கொப்பி மீண்டும் எனது கை வந்து சேர்ந்தபோது அவர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றிருந்தார். என்னை பொறுத்தவரை நான் விட்டுவந்த யாழ்ப்பாணம் இப்போதும் என்மனதில் (10 ஆண்டுகளாகியும் கூட) (F)ப்ர்ட்ஜில் வைத்த பழம்போலதான் உள்ளது. ஆனால் நிஜத்தில் ஒரு தலைமுறை, அதுவும் நாம் பார்த்து, ரசித்து, பழகி, கற்று வளர்ந்த தலைமுறை எம்மை கடந்து போய்க்கொண்டிருக்கிறது. இந்த நாற்றாண்டின் அற்புத வீரர் என்று கொண்டாடப்பட்ட சச்சின் , லாரா, ஷான் வார்னே, மக்ராத், ட்ராவிட், இன்ஸமாம், பொலொக் என்று பெரும் சிங்கங்கள் எல்லாம் ஓய்வு பெறும் கால கட்டத்தில் உள்ளனர். கிட்டத்தட்ட சச்சினின் சர்வதேச அனுபவமும் எனது விளையாஅட்டு அனுபவமும் ஒரே கால அளவானவை.


சினிமாவில் கூட புதிய தலைமுறையினர் பொறுப்பேற்க தொடங்கிவிட்டமை குறிப்பிடத்தக்கது. பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திரா, இளையராஜா, வைரமுத்து, வாலி, போன்ற ஜாம்பவான்களிடமிருந்து செல்வராகவன், கௌதம், முருகதாஸ், நா. முத்துக்குமார், யுவன் ஷங்கர் ராஜா, ஹரிஷ் ஜெயராஜ் போன்றோர் கிட்டதட்ட பதவியேற்று கொண்டனர். எமது பதின்ம வயதுகளில் 27 வயதுகாரரை எல்லம் மிகுந்த மரியாதையுடன் அண்ணே என்று தான் அழைப்பதுடான் வழக்கம். இப்போது அதே 27 வயதில் நாம் இருக்கும்போது பதின்மவயதார் அண்ணே என்றழைக்கும்போது நட்புக்குள் வயதேது என்றுததன் சொல்ல தோன்றுகிறது.


நான் புத்தகம் வாசிக்கதொடங்கிய ஆரம்பகாலங்களில் மரபுக்கவிதைகளையும் கவிஞர்களையும் சாடி மு. மேத்தா, வைரமுத்து போன்றோர் பேசிவந்தனர். இப்போது அவர்கள் எழுதுவது கவிதையே இல்லை என்று பேசும் நவீன இலக்கியகாரர் வந்துவிட்டனர்.


காலம் ஒரு வற்றாத நெடுநதி போல ஒடிக்கொண்டேயிருக்கிறது. அதன் கரையில் அது விட்டுசெல்லும் தடங்கள் பற்றிய விமர்சனங்கள் நடந்துகொண்டிருக்கும்போதே அது பல மைல்களை கடந்து சென்று இன்னும் பல புதிய தடங்களை உருவாக்கிவிடுகிறது. சில மாதங்களின் முன்னே எனது நன்பனின் சித்தி மகனுடன் பேசிக்கொண்டிருந்தேன். நான் யாழ்ப்பாணத்தை விட்டு வரும்போது அவனுக்கு 6 அல்லது 7 வயது இருந்திருக்கும். எனது மனதளவில் அவன் பற்றிய விம்பம் சிறுவன் என்கிற அளவிலேயே பதிந்துள்ளது. ஏதோ பேசிக்கொண்டிருக்கும்போது அவன் சொன்னான், “நீங்கள் இங்க இருக்கேக்க உங்களுக்கு இப்ப எங்கட வயதுதானே” என்று. காலம் பயணிக்கும் வேகம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றோ என்று எனக்கு சந்தேகம் வந்தது.


எனது சக மாணவி ஒருத்தி, ஏறத்தாழ எமது வயதுடைய எல்லாராலும் காதலிக்கப்பட்டவள், ஆனால் யாரையும் காதலிக்காதவளுக்கு அண்மையில் திருமணம் நடந்தது. அது பற்றி எனது நண்பன் ஒருவன் சொன்னான் “நாங்கள் கல்யாணம் கட்டி பிள்ளை பெற்றாலும் வயசாச்சே என்ற நினைப்பு வராது, ஆனால் எங்களோட படிச்ச ஒருத்திக்கு கல்யாணம் என்றாலே வயசு போன மாதிரி இருக்கடா” என்றான். எமக்கே தெரியாமல் எம் வாழ்வில் பங்கெடுத்த விடயங்கள் கடந்து போகும் போது தான் புரிகிறது எத்தனை காலம் எம்மை கடந்து போய்விட்டது என்று.

பின்குறிப்பு -
இது ஒரு மீள்பதிவு. 2007ன் தொடக்கத்தில் எழுதப்பட்டது. ஈழத்தமிழ் பேச்சு வழக்கிற்கே உரிய சில சொற்கள் உள்ளதால் இங்கு பதிவிடுகிறேன்