Author: சினேகிதி
•7:41 PM
ஊரில பள்ளிக்கூடங்கள்ல என்னதான் ஒழுங்காப் படிப்பிச்சாலும் ரியூசன் போகாட்டால் நமக்கெல்லாம் விடிவில்லை.விடிய 5 மணிக்கெல்லாம் பனி கொட்ட கொட்ட நித்திரை தூங்க தூங்க போனது இங்கிலிஷ் ரியூசனுக்கு. 5 மணிக்கு தொடங்கிறது இரவு 7-8 மணி வரைக்கும் படிப்பு படிப்புத்தான். நாங்கள் கொஞ்சப்பேர் சேரந்து நாவலடியில இருக்கிற ஒரு மாஸ்டர் வீட்ட
இங்கிலிஷ் ரியூசனுக்குப் போவம். 4 பெட்டையளோட ஒரு பெடியன் வெளவால். அவன்ர அம்மா விடிய அரை இருட்டில அவனுக்கு பவுடர் எல்லாம் பூசி அனுப்பி விடுவா. பாவம் அவன் விதியே என்டு வருவான் எங்களோட.தனிய வரேக்க கதைக்க மாட்டான். நசுக்கிடாமல் இருப்பான். பிறகு பின்னேரம் மற்றப் பாடங்களுக்கு ரியூசனுக்கு வரேக்க மற்றப் பெடியங்களோட சேர்ந்த உடனதான் அவனுக்கு வாய் திறவடும். விடிய ரியூசனுக்குப் போட்டு வரேக்க அங்க பக்கத்தில இருக்கிற கொஞ்சம் பெரியண்ணாமார் எங்களோட வாயடிக்கிறதுக்காக பள்ளிக்கூடப் பட்டப் பெயர்களைச் சொல்லி இல்லாட்டி 'எடியே கறுப்பி கொக்காவையும் கூட்டிக்கொண்டு வாறது ரியூசனுக்கு' என்டுவினம். வெளவால் கொஞ்சம் தூரத்திலதான் வருவான். தனக்கு எதும் கேக்காதமாதிரி அப்பாவி மாதிரி மூஞ்சையை வைச்சுக்கொண்டு போவான். நாங்களும் நல்ல திறம்தானே. கறுவா கட்டக்கரி அம்மம்மாட்ட சொல்லி விடுறன் (அப்ப அம்மம்மாமார் பெடியங்களுக்கு காது முறுக்கிறது)இப்பிடி ஏதாவது சொல்லுவம். என்ன பிரச்சனையெண்டால் இந்த அண்ணைமார் ஏதொ ஒருவிதத்தில சொந்தக்காரர இருப்பினம். பெருசா வாய் விடேல்லாது. அளவுக்கு மீறினால் வீட்ட சொன்னால் அவை சொல்லுவினம் அங்கள் சும்மா ஆசைக்குச் சொல்றாங்கள். உங்களை ஆர் வாய்காட்டச் சொன்னதெண்டு.

பிறகு பின்னேரம் ரியூசனுக்குப் போனால் அங்க ஒரே சண்டைதான். ஒவ்வொருநாளும் புதுப்புது விதமான சண்டை வரும்.5ம் ஆண்டு ஸ்கொலர்சிப் வகுப்பெடுத்தது ஈசாக்கா.அநேகமா எல்லாருக்கும் விருப்பமான ரீச்சர். அவாக்கு எங்கட சண்டை தீர்த்து வைக்கிறதே பெரிய பாடு. அநேகமாச் சண்டையைத் தொடக்கிறது பெடியங்களாத்தானிருக்கும். சண்டை முற்றினால் சண்டை பிடிக்கிற பெடியனைப் பிடிச்சு பெட்டையளுக்கு நடுவில இருக்க விட்டிடுவா. பெட்டையளில முட்டக்கூடாதெண்டு வாங்கில்ல 2 பக்கமும் bag புத்தகங்கள் எல்லாம் எடுத்து வைச்சிட்டு மூஞ்சையைத் தூக்கி வைச்சுக்கொண்டு அடிக்கடி முறைச்சுக்கொண்டு இருக்குங்கள் மூஞ்சூறுகள். ஈசாக்கா வீட்ட ஸ்பெசல் கிளாஸ் அல்லது நாடகம் பழக எண்டு போய் அங்கயும் சண்டையெண்டால் பாவம் ஈசாக்கான்ர அம்மா கூட வந்து விலக்குப்பிடிப்பா சில நேரம்.

அதெல்லாம் முடிஞ்சு அடுத்தடுத்த வகுப்புகளுக் வந்தால் படிப்பில போட்டி கூடிடும். பத்தாதக்கு வாத்திமார் வேற எரியுற நெருப்பில எண்ணையை விடுற மாதிரி அடிக்கடி போட்டி வைப்பினம். பெட்டையள் ஒரு ரீம். பெடியங்கள் ஒரு ரீம். எங்கட ரீமுக்கு கேட்ட கேள்விக்கு நாங்கள் பதில் சொல்லாட்டால் அவங்களுக்குப் போயிடும் கேள்வி. 1-2 மார்க்ஸ் இடைவெளியில வெற்றி வந்தால் நாங்கள் அவங்களை அலாப்பியெண்டுறது அவங்கள் எங்களை அலாப்பியெணடுவாங்கள். வெல்லுற ரீம் தோக்கிற ரீமை முறைச்சுக்கொண்டேயிருக்கும். அதுவும் பெட்டையள் கனக்க வாயடிச்சால் ஒரு சிரிப்புச் சிரிச்சுக்கொண்டே அப்பண்ணா சொல்லுவார் 'வாறவன் பாடு கஸ்டந்தான்' (அப்பண்ணா கணிதம் விஞ்சாம் சமூகக்கல்வி இப்பிடி எல்லாம் படிப்பிச்சவர் சதாபொன்ஸ்ல் - இப்ப உயிரோட இல்லை.அவரைப்பற்றித் தனிப்பதிவு போடணும்).

ஏதும் கணக்குத் தந்து போட்டு பெட்டையளின்ர மெதட்ல வேணுமென்டு பிழைகண்டுபிடிப்பார். பெடியங்களுக்குச் சப்போட் பண்றார் என்டு நாங்கள் கத்துவம். அவங்கள் அப்பண்ணா எங்களுக்குச் சப்போட் பண்றார் என்டு வாங்கிலுக்கு மேல ஏறி நிண்டுகொண்டு கத்துவாங்கள். இங்கயும் இந்தச் சொந்தக்காரப் பெடியங்கள் இருந்து துலைப்பாங்கள் அதால நாம என்ன செய்தாலும் சொன்னாலும் வீடுவரைக்கும் போயிடும்.

கொஞ்சக்காலம் தூரத்துச்சொந்தக்காரர் ஒராள் ரியூசனுக்கு director ஆ வந்திட்டார். அவற்ற மகன் வேற என்ர வகுப்பு.மனுசன் வகுப்புக்கு மேற்பார்வை செய்ய வரேக்க வாத்திமாரிட்ட வேற சொல்லிடும் இவள் எனக்கு மருமகள் என்டு. கறுமம் இதை இப்ப இங்க வந்துச் சொல்ல சொல்லி யாரு கேட்டது. பெடியங்கள் ஒருபக்கம் கத்துவாங்கள். எனக்குப் பயமா வேற இருக்கும். யாரும் குழப்படி செய்தாலும் சொந்தக்காரப்பிள்ளையளுக்குத்தானே அடி விழுறது. சொந்தமெண்டால் யாரும் கேக்கமாட்டினம்தானே. அதும் அவர் தன்ர மகன்களுக்கே ரத்தம் வாறளவுக்கு அடிக்கிற ஆள். இப்பிடி நான் ரியூசனில சுதந்திரமா இருக்கப் பல தடைகள் ஆனால் தடைகளைக் கண்டு துவளும் இனமா நாங்கள் :) எதையும் தாங்கும் இதயம் :)

நான் கனக்க அடிவேண்டினது தமிழ் படிப்பிச்ச மாஸ்டரிட்டதான்.அவருக்குப் பெட்டையள்ல ஏதோ கோவம். எங்கடா அடிக்கலாம் என்டு திரிவார். எங்களுக்கு மட்டுமில்ல பெரியக்காவைக்கும் அடிச்சிருக்கிறார். காதல் தோல்வியோ என்னவோ. யார் செய்ற பாவம் எப்பிடியெல்லாம் விளையாடுது. வகுப்புக்கு முன்னால தோட்டம். தோட்டத்தில வேலை செய்றாக்களை வாய் பார்த்துக்கொண்டிருந்ததுக்காக அவரிட்ட நான் அடி வாங்கியிருக்கிறன். பிறகு அந்த மாஸ்டர் நிர்வாகத்துடன் பிரச்சனைபட்டு அவரை வரவேண்டாம் என்டு சொல்லிட்டினமாம்.

எங்களோட படிச்ச பெடியங்கள் சில பேர் facebook இருக்கிறாங்கள். கிட்டடில ஒருத்தர் message பண்ணியிருந்தார். அதுவும் தன்ர பட்டப்பெயரைப் போட்டு ஞாபகம் இருக்கோ என்டு கேட்டு. ஓமோம் நீர் வைச்சிருந்த அந்த bag கூட ஞாபகம் இருக்கெண்டு பதில் போட்டன்.நிறையப்பேர் கொழும்பிலும் வெளிநாட்டிலும்தான் இருக்கிறாங்கள். என்னோட நடுக அராத்துப்படுற ஒரு பெயடின் இப்ப என்ன செய்றான் என்டு விசாரிச்சன் ..அவன் சிலோன் பாங்ல வேலை செய்றானாம்.அவன் சரியான கட்டைப்புட்டு ஆனால் சத்தமெண்டா தொண்டைகிழியக் கத்துவான் :)கையை வேற ஆட்டி ஆட்டிக் கதைப்பான். இப்பிடி 12 வருடங்களுக்குப்பிறகு பழைய வால்கூட்டங்களுடன் கதைத்தது சந்தோசமாத்தான் இருந்தது. ஆனால் அவங்கள் செஞ்ச அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமே. கிணத்தில தண்ணி குடிக்கப்போனால் பெட்டையள் வந்தால் தண்ணி ஊத்த மாட்டாங்கள். வாளியைப் பொத்தெண்டு வைச்சிட்டுப் போடுவாங்கள். இதை ஒருநாள் யாரோ ஒரு வாத்தியார் பார்த்திட்டு முறைப்பாடு செய்ததால பெட்டையள் என்டாலென்ன பெடியங்கள் என்டாலென்ன கிணத்தில இருந்து தண்ணியள்ளினா வாளில தண்ணிமுடியும் வரைக்கும் தண்ணிகுடிக்க வாறாக்களுக்கு ஊத்தோணும். இவங்கள் ஒருநாள் வாளிக்க குட்டிப்பாம்பு ஒண்டு நிண்டது கண்டிட்டும் காணாத மாதிரி ஒரு பிள்ளை தண்ணிகுடிக்க குனிஞ்சாப்பிறகு ஊத்திறமாதிரி ஊத்திட்டு பாம்பு என்டிட்டு ஓடிட்டாங்கள். அது பாவம் ஒரே அழுகை. சைக்கிள் சீட்ல வெடிகொளுத்திப்போட்டிருக்கிறாங்கள். தாங்கள் செய்ததெல்லாத்தையும் நாங்கள் செய்தது என்டு பொய் சொல்லி மாட்டி விடுவாங்கள். இதால எத்தின தரம் மொத்த வகுப்புக்கும் சேர்ந்து punishment கிடைச்சிருக்கு. அதும் அப்பண்ணா சரியான பிடிவாதக்காரன். தான் நினைச்ச பதில் வரும் வரைக்கும் விடவே மாட்டார். கோவத்தில வகுப்பெல்லாம் கூட கான்சல் பண்ணியிருக்கிறார். இப்ப அப்பண்ணாவும் இறந்த பிறகு ரியூசன் எப்படி நடக்குதோ தெரியா. என்ர அம்மா சித்தி மாமாக்கள் என எல்லாரும் படித்த ரியூசன் அது.

என்னடா ரியூசன் என்டாலே பெடியங்களைப் பற்றி மட்டும் எழுதியிருக்கிறன் என்டு நினைக்காதயுங்கோ. ரியூசனை நினைச்சால் வாற சந்தோசமான விசயங்கள் மட்டும் எழுதியிருக்கிறன். சோகங்களை உள்மனது ஞாபகம் வைத்துக்கொள்வதில்லையாம். நவசியண்ணா (இன்னுமொரு கணித ஆசிரியர் - அப்பண்ணாவின் அண்ணா) அவர் மந்திகை வைத்தியசாலையில் உடல் நலமற்று இருந்தது நாங்கள் பார்க்கப் போனது பிறகு அவர் ஒருநாள் இறந்துபோனது நாங்கள் எல்லாம் அந்த மாமரத்தின்கீழ் நின்று கதறிக் கதறி அழுதது இப்படி எல்லாமே ஞாபகம் வருது. அங்கு படித்த யாரும் இங்கு இருப்பின் தொடர்ந்து எழுதுங்கள்.
This entry was posted on 7:41 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

16 comments:

On September 22, 2009 at 9:36 PM , வந்தியத்தேவன் said...

எங்கட சினேகிதிப் பிள்ளை தன்ரை சின்னக் கால ரியூசன் கதைகளை எழுதியிருக்கிறார். உதைவிடப் பம்பல்கள் ஏஎல்காலத்திலை நடந்தவை அதோடை இண்டைக்கு நானும் வாறன். ஆனால் உண்மையான பெயர்கள் போடமாட்டேன் ஏனென்றால் எல்லோரும் பிறகு எனக்கு அடிச்சுப்போடுவாங்கள்.

 
On September 22, 2009 at 11:00 PM , Anonymous said...

நீங்கள் வடமராட்சியோ.. ஏன் என்டால், எனக்கும் ஈசாக்கா, அப்பண்ணை என்டு ஒரு வீட்டு ரியூசன்காரரைத் தெரியும். மட்டது அலாப்பி என்பது வடமராட்சியில் அதிகம் உபயோகிக்கும் சொல்.

 
On September 23, 2009 at 6:09 AM , கலை said...

நல்லாத்தான் சண்டை எல்லாம் போட்டிருக்கிறியள். நானெல்லாம் சண்டையே போடுறதில்லை. நான் ரொம்ப நல்ல பிள்ளை பாருங்கோ :)

 
On September 23, 2009 at 7:20 AM , Unknown said...

அலாப்பம் சிலாப்பம்... ம்ம் நடத்துங்கோ

 
On September 23, 2009 at 10:07 AM , கரவைக்குரல் said...

படிச்ச பொடிப்பயலுகள் பாவம் தான்,
நல்ல சுவாரஷ்யமாக அனுபவித்ததை சொல்லியிருக்கிறீர்கள்
அண்ணர் வந்தியாரும் வாறன் எண்டு சொல்லியிருக்கிறார்,
எப்படியும் நல்ல பதிலாக இருக்கும் எண்டு நினைக்கிறன்

 
On September 25, 2009 at 7:04 PM , மணிமேகலா said...

பிள்ள உன்ன ரியூசனுக்குப் படிக்கவெண்டெல்லோ அனுப்பினது.

உதுகள் தானோ உனக்கு ஞாபகத்தில இருக்கு?

எடடி அகப்பக் காம்ப!

 
On September 26, 2009 at 7:48 AM , சினேகிதி said...

உண்மையான பெயர் போடாட்டாலும் தெரிஞ்சாக்கள் கண்டுபிடிப்பினம்..எல்லாம் அனுபவம்தான்.

இந்தக்காலத்துக்குப்பிறகு மலையகத்தில் படிச்ச ரியூசன் கால நினைவுகள் இருக்குத்தான் பார்ப்பம் இன்னுமொரு சந்தரப்பத்தில் எழுதுவம்.

 
On September 26, 2009 at 7:50 AM , சினேகிதி said...

\\நீங்கள் வடமராட்சியோ.. ஏன் என்டால், எனக்கும் ஈசாக்கா, அப்பண்ணை என்டு ஒரு வீட்டு ரியூசன்காரரைத் தெரியும். மட்டது அலாப்பி என்பது வடமராட்சியில் அதிகம் உபயோகிக்கும் சொல்.

\\
அப்படியா?? நான் வடமராட்சிதான். நான் சொல்ற ஈசாக்கா கறுப்பு நல்ல உயரம் நல்ல மெல்லிஸ்...நீங்க சொல்ற ஈசாக்கா எப்பிடியிருப்பா?

 
On September 26, 2009 at 7:52 AM , சினேகிதி said...

\\நல்லாத்தான் சண்டை எல்லாம் போட்டிருக்கிறியள். நானெல்லாம் சண்டையே போடுறதில்லை. நான் ரொம்ப நல்ல பிள்ளை பாருங்கோ :)\\
நீங்க சொன்னா நாங்க நம்பிடுவமாக்கும்...அதான் பார்க்கிறமே நீங்க எப்பிடி அமைதியா இருந்தெ சண்டைபோடாமலே சாதிப்பீங்க என்டு:))

 
On September 26, 2009 at 8:01 AM , சினேகிதி said...

\\அலாப்பம் சிலாப்பம்... ம்ம் நடத்துங்கோ\\

துள்ளித்திரிந்த காலம் வாசிச்சே நான் மிரண்டு போயிருக்கிறன்...ரியூசன் அனுபவமெல்லாம் எழுதவேண்டாம்:)

 
On September 26, 2009 at 8:02 AM , சினேகிதி said...

\\படிச்ச பொடிப்பயலுகள் பாவம் தான்,
\\
அவங்கள் ஏன் பாவம்?? பாவியள் அவங்கள்.

 
On September 26, 2009 at 8:03 AM , சினேகிதி said...

\\பிள்ள உன்ன ரியூசனுக்குப் படிக்கவெண்டெல்லோ அனுப்பினது.

உதுகள் தானோ உனக்கு ஞாபகத்தில இருக்கு?

எடடி அகப்பக் காம்ப!

\\

எண ஏனண இந்தக்கொல வெறி? என்ர அம்மம்மா வெருட்டுறமாதிரியே இருக்குது.

 
On September 26, 2009 at 8:42 AM , கானா பிரபா said...

;) நல்லாத்தான் இருக்கு, கட்டைப்புட்டு பாங்கிலா வேலை

 
On September 28, 2009 at 7:22 AM , Saba said...

//அலாப்பி //

அளாப்பி !!!

 
On September 28, 2009 at 4:13 PM , Anonymous said...

கிகிகிகிகி

 
On October 15, 2009 at 9:48 PM , Anonymous said...

//அப்படியா?? நான் வடமராட்சிதான். நான் சொல்ற ஈசாக்கா கறுப்பு நல்ல உயரம் நல்ல மெல்லிஸ்...நீங்க சொல்ற ஈசாக்கா எப்பிடியிருப்பா?//

ஓம் ஓம்... நீங்கள் சொல்லுற ஈசாக்காவின்ட வீடு ஒரு ஒழுங்கைக்குள் தான இருந்தது. மெயின் றோட்டில் இல்லத்தான? அவன்ட வீட்டுக்கு அடுத்த ஒழுங்கையில் தான மணிலாக்கொட்ட ஆச்சியின்ட வீடு இருந்தது. 20 கச்சான் 1 ரூபாவுக்கு தாருவா. இங்களுக்கு ஞாபகம் இருக்கே. மெயின் றோட்டில் ஒரு தூபி ஒன்டு நீல நிறத்தில் இயக்கம் கட்டியது. அதுக்கு எதிர்புறம் தான், மலர் மாமியின்ட வீடும், இரண்டு மூன்டு வீடு தள்ளி தாம்பாலம் அக்கா என்ட பேமசான கிழவியின்ட வீடும் இருக்கு. அது என்ட அம்மம்மா. தம்பன் என்டு ஒரு டொக்டரும் அங்கன ஒரு ஒழுங்கையில் ஈசாக்கா வீட்டுக்கு கிட்ட இருந்தவர் தான?