Author: Unknown
•6:08 PM
குப்பை பரவுதல் எண்டால் என்னவோ ஒரு கெட்ட விசயம் எண்டமாதிரி நினைக்காதீங்கோ. இப்ப கிட்டடியில வீட்டாரோட கதைக்கேக்கை இந்தச் சொல் திரும்ப ஞாபகம் வந்தது பாருங்கோ. மற்றப் பாகங்களில என்ன மாதிரி எண்டு தெரியேல்லை, ஆனால் எங்கட ஊரில வயல் விதைப்புக் காலங்களில இந்தக் குப்பை பரவுதல் எண்ட சொல் அடிக்கடி அடிபடும். குப்பை தானாப் பரவாது பாருங்கோ. நாங்களாத்தான் பரவோணும்.

அனேகமா ஆவணிப் நடுப்பகுதி-புரட்டாசி காலகட்டத்தில நாங்கள் எங்கட பெரும்போக நெல் விதைப்புக்கு வயல்களை உழத் தொடங்கீடுவம். ஓம்...ஓம்... நீங்கள் விதைக்கிறதே ஒரு போகம்தான் அதுக்குள்ள என்ன பெரும்போகம் சிறுபோகம் எண்டு புழுகிறாய் எண்டு நீங்கள் சொல்லிறது கேக்குது பாருங்கோ. அப்பிடி உழ முன்னம் வயலுக்கு பசளை போடுற வேலைதான் இந்தக் குப்பை பரவுறது. குப்பை எண்டால், வெறும் குப்பைதான் பாருங்கோ. ஆனால் இந்தக் குப்பை சேக்கிறது பெரிய கதை.

ஒவ்வொரு நாளும் விடிய எழும்பி வீடு கூட்டிறது ஒராள் முத்தம் கூட்டிறது ஒராள் எண்டு மாறிமாறிச் செய்யிறனியள்தானே நீங்கள் எல்லாரும். (எங்கட வீட்டிலை அம்மாவும் அப்பாவும் எங்களை இது செய்ய விடேல்லை எண்டிறது வேற விசயம்). ஊரில முத்தம் கூட்டிறம் எண்ட பேரில வளவு முழுக்க கூட்டுவினம், சரிதானே. எங்கள் எல்லாருக்கும் தெரியும் எங்கட வளவுகளில ஒவ்வொரு நாளும் என்ன குப்பை சேர்றது எண்டு. என்ன சேர்றது?? சொல்லுங்கோ பாப்பம்?...கஞ்சல் அல்லது குப்பை எண்டு நாங்கள் சொல்லுற இலை குழையள் தானே. அதைத்தான் பாருங்கோ சேத்துவச்சு வயல் உழ முன்னம் வயலுக்குள்ள பரவிறது. இதுதான் நான் சொல்ல வந்த ‘குப்பை பரவுதல்'

மற்ற வீடுகளில எப்பிடியோ தெரியேல்லை, நாங்கள் குப்பை சேர்க்கிறது இப்பிடித்தான் பாருங்கோ. கீழ உள்ள படத்தை ஒருக்கா வடிவாப் பாருங்கோ.
இந்த அமைப்புத்தான் எங்கட வீட்டில குப்பை சேர்க்கிறதுக்குப் பயன் படுகிறது. வீட்டின்ர பின்பக்கம் இருக்கிற மதில் ஒரு பக்கமா இருக்க மிச்ச மூண்டு பக்கமும் நல்ல காய்ஞ்ச வடலி ஓலை அல்லது மூரி மட்டை வச்சு அடைப்பினம். ஒரு மூலையில மட்டும் ஒரு சின்ன வாசல் விடுவினம். மதிலும் வேலியும் சந்திக்கிற வாசலுக்கு எதிர்ப் பக்கமாய் இருக்கிற இடத்தில இருந்து, வளைவைக் கூட்டி அள்ளிற குப்பையை எல்லாம் கொண்டேக் கொட்டுவினம். மதில் முண்டு குடுக்கிற பக்கத்தில தொடங்கினால் கனக்கக் கொட்டலாம்தானே... அதுக்குத்தான் அந்த மூலையில் இருந்து தொடங்கிறது. சில பேர் ‘ட' பட மதில் சந்திக்கிற இடத்தில ரண்டு பக்கம் சின்ன வேலி போட்டுக் குப்பை கொட்டுவினம். அது சின்ன இடத்தில நிறையக் குப்பை கொட்டுறதுக்கு இன்னும் திறம் பாருங்கோ.

அங்கை என்ன பிளாஸ்ரிக்கும் பொலித்தீனுமா வளவுகளில கிடக்கிறது. எங்கையாவது அங்கை ஒண்டும் இங்கை ஒண்டும் இருக்கும். அதுகளை ஒரு பக்கமாய் இன்னொரு இடத்திலை எறிஞ்சிட்டு, வடிவா மக்கி எருவாகக் கூடிய இலை தழை போன்ற குப்பையளை மட்டும் நான் மேல கீறிக்காட்டின வடிவில இருக்கிற குப்பை கொட்டிற இடத்தில கொட்டுவம். இருந்திட்டு பஞ்சீல பொலித்தீன், கண்ணாடி, பிளாஸ்ரிக் எண்டு என்னத்தையாவது ஒண்டாய்க் கொண்டே கொட்டிறதை அப்பா கண்டா பேசுவார். அந்தப் பயத்திலையே சரியாக் கொட்டுறது. சில பேர் குப்பையோடு சேத்து மாட்டுச் சாணம், ஆட்டுப் புழுக்கை எல்லாம் கொட்டுவினம். நாங்களும் அப்பிடித்தான். சிலபேர் ரண்டையும் தனித்தனியாக் கொட்டிறவை.

வயல் உழுகிற காலத்துக்குக் கொஞ்ச நாளைக்கு முன்னால இந்தக் குப்பையளை ற்க்ரர் லையோ, லாண்ட் மாஸ்ரரிலையோ, மாட்டு வண்டிலிலையோ ஏத்தி வயலுக்குக் கொண்டுபோறது. நான் அறிஞ்ச காலத்தில நாங்கள் றக்ரர் இல்லையெண்டால் லாண்ட்மாஸ்ரர் மட்டும்தான் பாவிச்சனாங்கள். மாட்டு வண்டியிலை ஏத்திறது சரியான வேலை மினைக்கேடு பாருங்கோ. இதைக் ‘குப்பை ஏத்திறது' எண்டுதான் சொல்லிறனாங்கள். குப்பை ஏத்திறது எண்டால் சும்மா விசயமில்லைப் பாருங்கோ. ஒரு நாளும் ஒரு வீட்டுக் குப்பை வயலுகளுக்குக் காணாது. எவ்வளவு தட்டு வயல் கூட இருக்கோ, அவ்வளவுக்கு அவ்வளவு குப்பை கூட வேணும். இதனால எங்கட வீட்டுக் குப்பை மட்டுமில்லாமல், வயல் செய்யிறது கௌரவக் குறைவு எண்டு நினைக்கிற பலபேர் வீட்டுக் குப்பையையும் போய்க் கேட்டு வாங்கி வயலுக்குக் கொண்டுவந்து போடுவம். போட்டு கொஞ்சக்காலம் வயலுக்கை மக்கவிட்டு அதுக்குப் பிறகு உழுது பயிரிட, அனேகமா மழையும் கை கொடுத்தால் அமோகமா விளையும் நெல்.

இது தனிய நெல் வயலுக்கு மட்டும் செய்யிறேல்லை. கனபேர் தோட்டக் காணியளுக்கும் இதே முறையிலை குப்பை பரவிப் பண்படுத்திறவை. நாங்கள் வயல்க் காணியள் மட்டும்தான் செய்தனாங்கள். அதுவும் வெளிநாட்டுக்கும், கொழும்புக்கும் மாறிப் போனாக்கள் பராமரிக்கச் சொன்ன வயல்களை எல்லாம் பண்படுத்தி நெல் விதைச்சனாங்கள். சில காலங்களில சில வயல்களை (குளங்கரை, காவில், கிராய், வல்லை ஆகிய நாலு இடங்களில வயல் செய்தனாங்கள்) ஆருக்காவது குத்தகைக்குக் கொடுக்கச் சொல்லி உரிமையாளர்கள் சொன்னால், அந்தக் குத்தகைக் காசைப் பொறுப்பாக வாங்கிக் கொடுப்பதும் எங்கட வேலை. ஆனா அனேகமா நாங்கள்தான் அந்த வயல்களை விதைக்கிறது. ஆகக் குறைந்தது எங்கட உறவுகளின் 7 வீடுகளில் குப்பை ஏற்றுவதுண்டு.

நேரடியாக வயலில் இறங்கி நான் வேலை செய்யவில்லை. எல்லாம் அப்பாதான். ஆனால் இந்தக் குப்பை பரவுதல் எனக்கு ஏனோ பிடிச்சிருக்கு. உரம் போட்டுப் பண்படுத்திறம் எண்ட பேரில நிலத்தைப் புண்படுத்தாமல் இயற்கைப் பசளைகளை வீசி எறிந்து தன்னிச்சையாகவே நாங்கள் இயற்கை விவசாயம் செய்து வந்திருக்கிறோம். என்னதான் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாய் உரம் அது இது எண்டு எல்லாம் வந்தாலும், பயிரிடுவதுக்கு முன் நிலத்தைப் பண்படுத்த எங்கட ‘குப்பை பரவுதலுக்கு' நிகராக ஒண்டுமே கண்டுபிடிபடேல்லை எண்டதில பெருமையா இருக்குப் பாருங்கோ.

பி.கு-1: கனடாவிலையும் முத்தம் கூட்டுறனாங்கள், வின்ரரிலை. எல்ல குப்பை எல்லாம் வெள்ளையா, படு குளிரா இருக்கும் (ஸ்னோவைச் சொல்லுறன்). அடுத்தது வீட்டுக் குப்பைகளை அகற்ற எண்டு சொல்லி பச்சை, நீலம், சாம்பல் எண்டு மூண்டு கலரில மூண்டு கலன்கள் தந்திருக்கிறாங்கள் பாருங்கோ, வெள்ளிக்கு வெள்ளி தலையிடிதான். மற்றபடி கோடை காலத்தில Backyard இல சில பயிர்கள் போடுவினம். அதுவும் இல்லையெண்டால் அங்க வெயிலுக்க தோட்டம் செய்திட்டு இஞ்ச வந்த எங்கட சனம் முக்கால்வாசிக்கு விசர் பிடிச்சிடும்.

பி.கு-2: யாழ்ப்பாண மக்களை எங்களை விடுங்கோ. உந்த வன்னிச் சனம் மும்முரமாய் வயல் செய்யிறதுகள். இப்ப அதுகளுக்கு வாழ்க்கையே உடைஞ்ச மாதிரி. என்ர மச்சாளின்ர புருசன் சொன்னார், ‘எங்களை எங்கட சொந்த இடங்களுக்கு விட்டா வயல் செய்து இழந்த சொத்தெல்லாம் 5 வருசத்தில மீட்டிடுவன்' எண்டு. உண்மைதான் பாருங்கோ. வெளிநாடுகளுக்கு வந்து உழைக்கிறதை விட வயலை நம்பி உழைக்கலாம்தான். ஆனா எல்லாத்துக்கும் சில சில விசயங்கள் கூடி வரோணும்தானே. பாப்பம்..

விரைவில திரும்பவும் சந்திப்பம்....
This entry was posted on 6:08 PM and is filed under , , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

7 comments:

On September 27, 2009 at 5:24 AM , யசோதா.பத்மநாதன் said...

வன்னிப் பகுதியளில இருந்து மாட்டெரு கொண்டு வந்து போடுறதும் இருக்கெல்லோ மோனை?

நாங்கள் வன்னியில இருக்கேக்க எங்கட மாட்டுப் பட்டி யாழ்ப்பாண றோட்டுக் கரையோட.

50 ரூவா 80 ரூவா எண்டு வந்து தந்து போட்டு எங்கட மாட்டுப் பட்டியையும் வடிவா கிளீன் பண்ணிப் போட்டுப் போவினம் யாழ்ப்பாண லொறி காறர்.

 
On September 27, 2009 at 5:33 AM , ஆயில்யன் said...

//உரம் போட்டுப் பண்படுத்திறம் எண்ட பேரில நிலத்தைப் புண்படுத்தாமல் இயற்கைப் பசளைகளை வீசி எறிந்து தன்னிச்சையாகவே நாங்கள் இயற்கை விவசாயம் செய்து வந்திருக்கிறோம்//

இது ரொம்ப புடிச்சிருக்கு!

 
On September 27, 2009 at 5:39 AM , கானா பிரபா said...

அப்பா ஆசிரியராக இருந்த போதும் தோட்டம் செய்தவர், இயற்கை உரம், குழை போடுதல் போன்றவற்றைப் பயன்படுத்துவதை எல்லாம் பார்த்து வளர்ந்தவன். அருமையான பதிவு

 
On September 27, 2009 at 9:04 AM , Unknown said...

மணியாச்சி.... மாட்டெரு வெளியில ஏத்திற தேவை எங்களுக்கு இருக்கேல்லை பாருங்கோ... வீட்டில மாடு இருந்தது... சொந்தக் காறர் சிலரும் மாடு வளத்தவை. வயல் செய்யாத அயலாரும் மாடு வளத்தவை... ஆக மாட்டெருவுக்கு தட்டுப்பாடு இருக்கேல்லை ஆச்சி

 
On September 27, 2009 at 9:04 AM , Unknown said...

நன்றி ஆயில்யன்

 
On September 27, 2009 at 9:06 AM , Unknown said...

பிரபா அண்ணா...
தோட்டக் காணியளுக்குக் குழை போடிற ஒரே நோக்கத்துக்காக உள்ள குழையெல்லாம் வெட்டிற ஆக்களும் இருக்கினம்... அதையும் பாத்தனான்... ஊரிலை என்ன தொழில் செய்தாலும் கமமும் ஒரு தொழிலாய் இருந்தது தானே அண்ணை.. (வெளிநாட்டில Full-time&Part-Time வேலை மாதிரி) :))

 
On September 30, 2009 at 5:52 AM , கிழட்டுப்பூசாரி said...

நல்ல கட்டுரை நண்பரே,
”குப்பை பரவுதல்” என்ற சொல்லைக் கேட்கும் போது சாதாரணமான அன்றாட நிகழ்வாகவே காணமுடியும். ஆனால் இச்செய்கையில் இயற்கைக்கு பாதகமான முறையில் செயற்படாது பயிர்ச்செய்கை நடத்திய எம்முன்னோர்களை நினைக்கும் போது ஆவலாக இருக்கிறது.