Author: வந்தியத்தேவன்
•7:09 PM
ஈழத்தின் மூத்த கவிஞர் இ.முருகையன் பற்றிய தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியிட்ட நினைவு மலர் சில நாட்களும் முன்னர் வாசிக்க கிடைத்தது. அதனைப் பற்றிய சிறிய விளக்க குறிப்பே இந்தப் பதிவு.மூத்த கவிஞர் இ.முருகையன் என்ற தலைப்பில் தேசிய கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் திரு.சோ.தேவராஜாவின் குறிப்புடன் கவிஞர் முருகையனின் வாழ்க்கை குறிப்பு ஆரம்பிக்கின்றது.

முருகையனின் படைப்புலகும் மொழிச் சிந்தனையும் என்ற தலைப்பில் திரு.சி.சிவசேகரம் அவரது மொழி ஆற்றல் பற்றி எழுதியிருக்கிறார்.

" தமிழ்க் கலைச் சொல்லாக்கத்திற்க்கு முருகையன் ஆற்றிய பணியைப் பற்றி அவருடன் அரச கரும மொழித் திணைக்களத்திற் பணியாற்றியோர் மட்டுமே முழுமையாக அறிவர். தமிழில் விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் கற்பிக்கத் தேவையில்லை என்று நினைத்தோருக்கும் தமிழரின் வாயிற் புதிய கலைச் சொற்கள் நுழையாத விதமாக அவற்றைப் புனைவோருக்கும் நோக்கங்கள் வேறாயிருந்தாலும் அவர்களது போக்கிற் போக விட்டிருந்தால் நவீனச் சிந்தனைகளைத் தமிழிற் கூறுவது இயலாமலே போயிருக்கும். 1957 முதல் 1960களின் இடைப்பகுதிவரை முற்போக்கான பார்வையுடைய அறிஞர்களுடன் இணைந்து முருகையன் ஆற்றிய பணியின் விளைவாகத் தமிழ்க் கலைச் சொற்கள் வளமும் செழுமையும் பெற்றன."

இவ்வாறு திரு.சிவசேகரம் முருகையனின் மொழி ஆற்றலைப் பட்டியலிடுகின்றார்.

கவிஞர் கல்வயல்.வே.குமாரசாமியின் முருகையன் என்ற எண்சீர் விருத்தக் கவிதையும் இரண்டு வெண்பாக்களும் முருகையனின் சிறப்பை இயம்புகின்றன. (கவிதையில் நான் கொஞ்சம் பலவீனம் அந்தக் கவிதைகள் என் பார்வைக்கு வெண்பாவாகவும் எண்சீர் விருத்தமாகவும் தெரிந்தபடியால் அப்படி எழுதியிருக்கின்றேன்)

"கவிதை, கட்டுரை, நாடகம், பா நாடகம், பாட்டுக்கூத்து, வானொலி நாடகம், பாடநூலாக்கம், கலைச் சொல்லாக்கம், மொழி பெயர்ப்பு முதலான பல்வேறு துறைகளில் முருகையன் ஈடுபட்டார். செய்வன திருந்தச் செய்யும் சங்கற்பத்துடன் அவர் செயற்பட்டதால் அவர் தொட்டன யாவும் துலங்கின" என பேராசிரியர் எஸ்.தில்லைநாதன் தன்னுடய மானிட முன்னேற்றத்தை விழைந்த முருகையன் என்ற கட்டுரையில் முருகையனின் பல்வேறு துறைகள் பற்றி கூறியிருக்கின்றார்.

1960களின் தொடக்கத்தில் நன் எழுதத் தொடங்கிய காலத்தில் எனக்கு ஆதர்சமாக அமைந்த மூன்று முக்கியமான கவிஞர்களுள் முருகையனும் ஒருவர், மற்றவர்கள் நீலாவணன் ,மஹாகவி என ஈழத்தின் கவிதை மூம்மூர்த்திகள் பற்றி ஆரம்பித்து முருகையன் பற்றிய பல்துறை ஆய்வுகள் பற்றிய சுருக்கமான விடயங்களுடன் வீரகேசரியில் வெளிவந்த, பேராசிரிய எம்.ஏ.நுஃமானின் "தன் படைப்புகளால் நிலைத்து வாழும் முருகையன்" என்ற கட்டுரை மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கின்றது.

"முருகையன் பொதுவுடமை இயக்கத்தின் மாக்சிச லெனினிச நிலைப்பாட்டை முன்னெடுத்த கட்சியுடனும் அதன் தோழர்களோடும் நெருக்கமாக இருந்து வந்தார். கட்சியின் முடிவுகள் தீர்மானங்கள் பற்றி அறிந்துகொள்வதிலும் அவை பற்றிய தனது கருத்துகள் ஆலோசனைகளை முன் வைப்பதிலும் அவர் தனது பங்கை வகித்து வந்தார்" என்று சி.கா.செந்தில்வேல் முருகையன் அவர்கள் எப்படி ஒரு பொதுவுடமைவாதியாக இருந்தார் என்ற கருத்துகளை "பொதுவுடமை இயக்கத்திற்க்கு உரமிட்டு நின்றவர்" என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

"செம்மை+எளிமை= முருகையன்" என்ற தலைப்பில் சோ.பத்மநாதன் எழுதிய அவரின் கவிதைகள் பற்றிய சுருக்கமான கட்டுரையில்

"வாயடைத்துப்போனோம்
வராதாம் ஒரு சொல்லும் "

என்ற யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்டபோது பாடியது.
"இரண்டாயிரம் வருடப்
பழைய சுமை எங்களுக்கு "

என்பது ஓர் அற்புதமான கவிதை. தமிழர் சமுதாயம் மீது வைக்கபப்ட்ட துணிச்சலான விமர்சனம்.

என முருகையனின் கவிதைகள் பற்றிய தன் எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்துகின்றார்.

"இரண்டாயிரம் வருடப்
பழைய சுமை எங்களுக்கு "

என்ற கவி வரிகளை வைத்து
"தமிழ் மக்களும், சிங்கள மக்களும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட, கவிஞர் முருகையன் குறிப்பிடும் "இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமையை" இறக்கி வைக்க இயலாதவர்களாக தமது வாழ்க்கைப் பயணத்தை இடர் மிகுந்த காட்டு வழியில் துயரங்கள் இழப்புகளுடன் தொடர நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்" என "கவிஞர் முருகையனின் ஒரு கவிதைப் படிமம்" என திரு. க.தணிகாசலம் குறிப்பிட்டுள்ளார்.

"பாடு பொருளையும் செய்யுள் வகைகளையும் பொறுத்தவரை, ஈழத் தமிழ் கவிதை, இலக்கியப் பரப்பில் விரிவும் ஆழமும் கொண்ட கவிதைகளைப் படைத்தோருள் அவர் முதன்மையானவர் என்பேன். அவரது பா நாடகங்களும் குறுங்காவியங்களும் ஈழத் தமிழ்க் கவிதைக்கு பெருமை சேர்ப்பன. அனைத்திலும் மேலாக அவரது செய் நேர்த்தி அனைவரும் பின்பற்ற உகந்தது. " என புதிய பூமியில் திரு.சிவா என்பவர்களால் எழுதப்பட்ட "முருகையனின் கவிதையின் உயர்வும் உன்னதமும்" என்ற ஆக்கமும் சுவையாக இருக்கின்றது.

இது தவிர தேசிய கலை இலக்கிய பேரவை வவுனியாக் கிளை, சிவநெறிக் கலாநிதி இராசையா ஸ்ரீதரன் , பயில்நிலம் மாணவர்கள், புதிய மலையகம் மகேந்திரன், எஸ்.டொன் பொஸ்கோ போன்றவர்களின் கண்ணீர் அஞ்சலிகளும், இதயராசன், பூமகன், மு.நாவலன், சிங்காரம் மலர், அழ பகீரதன் போன்றவர்களின் கவிதாஞ்சலிகளும் முருகையன் புகழ் பாடுகின்றன.

பின்னிணைப்பாக கவிஞர் முருகையனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கவிதைகளும் கட்டுரைகளும், அத்துடன் இவரின் நூல்களின் பட்டியல்களும் நாடகங்களின் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளன.

சிறிய நூலாக இருந்தாலும் முருகையனின் பெருமைகளை திறம்படச் சொல்லியிருக்கும் பாங்குக்கு தமிழ்பேசும் நல்லுலகம் என்றைக்கும் தேசிய கலை இலக்கியப் பேரவைக்கு நன்றியுடையவர்களாகவே இருக்கும்.

மூத்த கவிஞர் முருகையன் அவர்கள் தமிழ்க் கவிதைக்கு மிக்க வளஞ் சேர்த்தவர். அவரைக் "கவிஞர்க்குக் கவிஞர்"(A poet's Poet) எனப் பேராசிரியர் கைலாசபதி அழைத்தது வெறும் புகழுரையன்று. அது அவர் ஆய்ந்தறிந்து சொன்ன பேருண்மை. கவிஞர் என்ற வகையிலும் கவிதை சார்ந்த படைப்புகளுடுமே பலரும் முருகையன் அவர்களை அறிவர் என்பதாற் திறனாய்வு, மொழியியல், மொழி பெயர்ப்பு முதலாய பல்வேறு துறைகளிலும் அவரது சீரிய பங்களிப்புப் பற்றிப் பேசப்படுவது குறைவு. எனினும் முருகையன் அவர்களது பெருஞ் சிறப்பு மானிடஞ் சார்ந்த, விஞ்ஞான ரீதியான, மனித நேய உலக நோக்கு. அதுவே அவரை நெறிப்படுத்தியதும் நம்மனைவர்க்கும் இனிய ஒருவராக அவரை என்றென்றும் வைத்திருபதுமாகும். அவரது அமரத்துவமான ஆக்கங்களுடும் அதுவே நம்முடன் தொடர்ந்து வாழும்.
This entry was posted on 7:09 PM and is filed under , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On September 4, 2009 at 2:42 AM , வலசு - வேலணை said...

நல்லதொரு பகிர்வு. தொடர்ந்து பகிருங்கள்.

 
On September 4, 2009 at 5:36 AM , கானா பிரபா said...

முருகையன் என்னும் ஒப்பற்ற படைப்பாளி குறித்த அறிஞர்களின் பகிர்வைச் சிறப்பாகத் தொகுத்து அளித்ததற்கு மிக்க நன்றி வந்தி

 
On September 4, 2009 at 8:25 AM , Unknown said...

உருப்படியான வேலை வந்தி அண்ணா.. இன்னும் கொஞ்சம் இப்பிடி பகிருங்கோ..கனபேருக்கு பிரயோசனமா இருக்கும்