Author: கலை
•3:51 AM
இந்த நத்தார் விடுமுறைக்கு ஒரு சின்ன சுற்றுலா போய் வந்தன். அதுல பொறுக்கின சில சொற்களும், கூடவே நினைவுக்கு வந்த சில பழைய சொற்களும் இங்க தாறன்.

உண்ணாணை

ஆச்சி சொல்லுவா, ‘உண்ணாணை நான் அங்க போட்டுத்தான் இப்ப வாறன்'. இதில, இந்த உண்ணாணை என்பது உன் + ஆணை, அதாவது 'உன்மேல் ஆணையாகச் சொல்கிறேன்' என்னும் பொருள்பட ஒரு சத்தியம் செய்வதுபோல சொல்லப்படுகிறது என நினைக்கிறேன். தற்போது இந்தச் சொல்லை யாராவது பயன்படுத்துகிறார்களா தெரியவில்லை.

அயத்துப் போனன்

இதுவும் ஆச்சி சொல்வதுதான். ”உண்ணாணை, அதை நான் அயத்துத் துலைஞ்சு போனன்”. அதாவது 'அதை மறந்துவிட்டேன்'.

அயந்துபோனன்

”நான் நல்லா அயந்துபோனன். அதில நீ வந்தது சத்தமே கேக்கேல்லை”. நான் நன்றாக நித்திரையாகி விட்டேன் / தூங்கி விட்டேன் என்ற பொருள்படும். 'தூங்கிறது' என்பதுகூட வேறு பொருள்தானே? ”அவள் தூங்கிட்டாளாம்” என்னும்போது, 'கழுத்தில சுருக்குப் போட்டு தற்கொலை செய்திட்டாளாம்' என்ற பொருள் படும்.

போந்த பொலிஞ்ச

ஒரு நல்ல வாட்ட சாட்டமான (குண்டான என்பதை இப்படி நாகரீகமாக சொல்லுறன்) ஒருவரைப் பார்த்து இன்னொருவர் கூறியது. “நீர் நல்ல போந்த பொலிஞ்ச Santa வாத்தான் இருக்கிறீர்”. நத்தார் காலமானதால், காலத்துக்கேற்ற படி (பகிடியாக) சொன்னார்.

கம்பி நீட்டிறது

அவளை தனிய விட்டால் கம்பி நீட்டினாலும் நீட்டிடுவாள்” என்றால், சொல்லாமல் கொள்ளாமல் ஓடிடுவாள் என்பதாகப் பொருள் வரும்.

பேய்.... உடன் வரும் சொற்கள் :)

கவனிக்க! பேய்க்கதை என்பது பேயைப்பற்றின கதையல்ல :). ”என்ன பேய்க்கதை கதைக்கிறாய்?, என்றாலோ அல்லது “சும்மா பேய்க்கதை கதையாதை” என்றாலோ, அதில 'பேய்க்கதை' என்பது 'விசர்க்கதை' அல்லது 'அர்த்தமற்ற கதை' என்பதாகப் பொருள்படும்.

அதே நேரம், ”அந்தாள் பேய்க்கடி கடிக்கும்” என்றாலோ, அல்லது “அந்தாள் பேய் அறுவை அறுக்கும்” என்றாலோ, ‘அந்த ஆள் நிறையவே வேண்டாத பேச்சுக்கள் பேசி நம்மை உண்டு, இல்லையெண்டு ஆக்கிவிடும்' என்பதாகப் பொருள்படும். அதாவது இந்த இடத்தில் ‘பேய்' என்பது, ‘நிறைய' என்ற பொருளில் வரும்.

(இதையெல்லாம் இங்க எழுதி நான்தான் இப்ப பேய் அறுவை அறுக்கிறேனோ தெரியேல்லை, ஹி ஹி. அதால இப்போதைக்கு நிப்பாட்டுறன்).


Author: Admin
•10:49 AM
தமிழர்களுக்கென்று சில கலை, கலாச்சார பாரம்பரியங்கள் இருக்கின்றன. அவை இன்று மறைந்து வருவதைக் காண முடிகின்றது. ஆனாலும் இவற்றைப் பற்றி எல்லாம் அறிவதிலே எனக்கு ஆர்வம் அதிகமே.

அன்று தமிழர்களிடையே பல சமயம் சார்ந்த சம்பிரதாய நிகழ்வுகள் இடம் பெற்று இருக்கின்றன. மந்திர, தந்திர, மாய வித்தைகள் ஒரு புறமிருக்க சமயம் சார்ந்த பல நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் அதன் எச்சங்களைகூட இன்று காண முடியவில்லை.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை சமய சம்பிரதாயங்கலிலே அதிக நம்பிக்கை கொண்டவர்களே. நான் நான் பலரிடம் கேட்டு அறிந்து கொண்டவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

நான் பிறந்து வளர்ந்தது ஒரு விவசாயக் கிராமம் எனது கிராமத்திலே அன்று நடை பெற்ற ஆனால் இன்று அதன் எச்சங்களே இல்லாத சில நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

எனது ஊரிலே பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்று இருக்கிறது. (மட்டக்களப்பு, களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம்) கிராம மக்களின் வயற்காணிகள் நிறைந்திருக்கும் பகுதியிலே ஆலயம் அமைந்திருக்கின்றது. ஆலயத்துக்கும் வயற்காணிகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

வேளாண்மைக்கு பூச்சி புழுக்களின் தாக்கம் ஏற்படும்போது கோவில் மடைப்பள்ளி சாம்பலை எடுத்துவயலுக்கு தூவினர். அதற்குக் கட்டுப்படாதவிடத்து பிள்ளையாரை அபிசேகம் பண்ணிய நீரை எடுத்து தெளித்தனர்

சமய ஆசாரத்துடன் பட்டினியாக இருந்த போடியார் ஒருவர் ஒரு பிடி மிளகை வாயினுள் அடக்கி தீர்த்தக் குடத்தை தொழிலோ, தலையிலோ சுமக்க ஏனைய போடிமார் அவருக்கு வெள்ளை மேற்கட்டி பிடிக்க, மணி ஓசையுடன் ஐயர் சங்கு ஊத, பறைமேளம் ஒலிக்க, வடக்கிலிருந்து தெக்கு நோக்கி நீர் பாச்சும் ஒவ்வொரு வாய்க்காலிலும் மிளகு கொஞ்சத்தை சப்பித் துப்பி தீர்த்த நிறையும் கொஞ்சம் ஊற்றுவர். இதுவே தீர்த்தமெடுத்தல் என்பதாகும்.

வயல் அறுவடைக்குத் தயாரானபோது குருக்கள், ஐயர், காவலாளிகள் சகிதம் சென்று வயத் போடிமாருக்கு பொங்கத் பிரசாதம் வழங்குவதுசம்பிரதாயமாகும். சிறுபோக நெல் விளைவுற்ற பருவத்தில் பன்றிக் காவலுக்கு இரவில் தகரம் கொண்டு செல்வதும் கடமையில் தவறியோருக்கு தண்டனை வழங்குவதும் இறுக்கமான கட்டுப்பாடாக இருந்திருக்கின்றது.

அறுவடையின் பின் ஆண்டுதோறும் பிள்ளையார் கோவிலடியில் வட்டை அமுது என்ற மாபெரும் அன்னதானம் நடைபெறும். போடிமார் தமது வயல் பரப்புக்கேற்ற அரிசி, தேங்காய், தயிர், மரக்கறி வகைகள், காசு என்பவற்றை எல்லாம் சேர்ப்பர்.

கோவில் குருக்கள் குளக்கட்டில் உள்ள ஒரு இடத்தில் அமர்ந்திருப்பார். போடிமார் குடை, மேளதாளம், மணியோசை, சங்கொலி என்பவற்றுடன் சென்று கோவித்த பாவனையில் இருக்கும் குருக்களை சமாதானப் படுத்தி திருவமுதுக்கு எழுந்தருளப் பண்ணுவார். திருவிழா ஊர்வலம் போல் நடைபெறும் இவ விழாவில் பொதுமக்களும் பங்குபற்றி மகிழ்வர்.
மறைந்து வரும் தமிழர் நம் சம்பிரதாயங்கள் இன்னும் பல அவ்வப்போது உங்களை வந்து சேரும்.
Author: Admin
•4:28 AM
ஒவ்வொரு பிரதேசத்துக்கும் சில தனித்துவமான. பேச்சுத் தமிழ் இருக்கின்றது. ஒருவர் பேசுகின்ற தமிழை வைத்தே அவர் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று கண்டு பிடித்து விடலாம். அதிலும் கிராமப் புறங்கள் என்றால் சொல்லவேண்டியதே இல்லை. சில பேச்சுத் தமிழ் சொற்கள் இன்று மறைந்து கொண்டு வந்தாலும் இன்றும் பல சொற்கள் பயன்பாட்டிலே இருப்பதோடு அச் சொற்கள் பேச்சுக்கு இனிமை சேர்ப்பதாக இருக்கின்றன.

மட்டக்களப்பைப் பொறுத்தவரை சில சொற்களோடு "கா" சேர்த்து பயன் படுத்தும் வழக்கம் இருக்கின்றது. உதாரணமாக நாம் என்ன நடக்கிறது என்று கேட்பதனை என்னாகா நடக்கிறது என்று பேசுவார்கள். யார் - யாருகா, எப்போ - எப்போகா, வா - வாகா, தெரியுமா - தெரியுமாகா, சாப்பிட்டாச்சா - சாப்பிட்டாச்சாகா போன்று "கா" சேர்த்து பயன் படுத்தப்படுகிறது.

இங்கே பேசுகின்ற போது ஆணுடனோ, பெண்ணுடனோ பேசுவதாக இருந்தாலும் கா போட்டே பேசுகின்றனர். இப்போது இவ்வாறு கா போட்டுப் பேசுவது இளைய சமுதாயத்திடம் குறைவான பயன்பாட்டில் இருந்தாலும். வயது வந்தவர்களாலும், கிராமப்புறங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

என்ன என்பதற்கும் என்னகா என்பதற்கும் இடையிலே ஒரு அன்பு அல்லது பாசப்பிணைப்பு வித்தியாசங்கள் இருப்பதாக உணரப்படுகின்றது. என்ன என்பதனைவிட என்னகா என்பது பேசுபவர்களுக்கிடையே ஒரு நெருக்கத்தினை ஏற்படுத்துகின்றது. என்ன என்பது நாம் பேசும் தொனியிலே வித்தியாசப் படுகிறது. என்ன என்று கோபமாகவும் கேட்கலாம் சந்தோசமாகவும் கேட்கலாம். என்னகா எனும்போது பெசுபவர்களுக்குள்ளேயான உறவு அல்லது அன்பு நெருக்கமடைவதாக உணர்கின்றனர்.

இன்றும் கிராமப் புறங்களிலும், முதியவர்களாலும் கா சேர்த்து சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் பல பிரதேச பேச்சு வழக்குச் சொற்கள் இருக்கின்றன அவற்றையும் அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

சந்ரு
Author: வர்மா
•6:46 AM
தமிழ் எனநினைத்துதினமும் தமிழ் அல்லாதசொற்களை பேசுகிறோம் எழுதுகிறோம். கட்டில்,கதிரை,மேசை,யன்னல் இவைதமிழல்ல, ரெலிபோன்,றேடியோ,ரயில்,போன் இவை ஆங்கிலம் எனத்தெரிந்தும் தமிழ் போல்பாவிக்கிறோம் நான் படித்த சிலநல்லதமிழை ஈழத்துமுற்றத்தில் பதிகிறேன்,

கிழமை

ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
அறி
வியாழன்
வெள்ளி
காரி

மாதம்

தை - சுறவம்
மாசி - கும்பம்
பங்குனி - மீனம்
சித்திரை - மேஷம்
வைகாசி - விடை
ஆனி - ஆடவை
ஆடி - கடகம்
ஆவணி - மடங்கல்
புரட்டாதி - கன்னி
ஐப்பசி - துலை
கார்த்திகை - நளி
மார்கழி - சிலை

முத்துக்குறைவி//////////////// இளம் வயதில் நிறைந்த அறிவுடையவள்
பெரணிநார் /////////////////பனைமட்டையில் உரித்தநார்.
ஈரக்களி -//////////// பிரம்பு
நஞ்சோடை ////////////உப்பை வாரியபின் எஞ்சிய நீர்
வெளிச்செல்லும் ஓடை
மொழி மாறா ஓலை/////// - நம்பிக்கை இல்லாத் தீர்மானம்
ஆகூழ்///// வளர்ச்சி
போகூழ் //////அழிவு
அங்க பாடல்////// பொருள் ஒழித்து பாடுதல்
Author: `மழை` ஷ்ரேயா(Shreya)
•3:02 AM
உங்களுக்கு ஒதிய மரத்தைப் பற்றித் தெரியுமா? கண்டிருக்கிறீர்களா? (மரங்களைப் பற்றித் தொடர் போல ஆரம்பித்த வசந்தனுக்குத் தெரிந்திருக்கக்கூடும்)

நெடு நெடுவென்று வளருமாம்.. ஆனால் யாருமே இந்த மரத்தில் ஏற மாட்டார்களாம். ஏனா? ஏறினால் பலமில்லாத மரத்துக் கொப்பு முறிஞ்சு ஆள் கீழ மண்ணைக் கொஞ்சிக் கொண்டிருப்பார். கை கால் மேலெல்லாம் நோக, நகர இயலாமல் விழுந்து கிடப்பராம்.

அதனாலேயே ஆகவும் ஏலாமல் சவண்டு போய்க் கிடப்பவர்களைக் கண்டால் 'என்னடா ஒதிய மரத்தால விழுந்தவன் மாதிரிக் கிடக்கிறா?" என்று 'அன்பாக' விசாரிப்பார்களாம் ஊரவர்கள்.

எனக்கு ஒரு சந்தேகம்.. "ஒடியும் மரம்" தான் பேச்சு வழக்கில் ஒதிய மரம் என்று ஆனதா?

அ.பொ.சொ.வி:

கொப்பு - கிளை
மேல் - மேனி
ஆகவும் - அதிகமாக (ரொம்ப)
ஏலாமல் - இயலாமல் / முடியாமல்
சவண்டு -சோர்ந்து
Author: கானா பிரபா
•1:05 AM

இஞ்சை தங்கமக்கா ! எல்லுப் போல சீனி நல்லெண்ணை இருந்தாத் தாங்கோ, ஆனைக்கோட்டைக்கு இவர் வாங்கப் போயிட்டார், வந்தவுடனை தாறன்"

மேற் சொன்ன உதாரணத்தில் வரும் எல்லுப் போல என்ற சொற் பிரயோகம் கொஞ்சம் சிறிய அளவில், அல்லது தமிழக வழக்கில் பயன்படுத்துமாற் போல "கம்மியா" என்ற பொருட் பதத்திற்கு ஒப்பானது.

தாயகத்தில் இருக்கும் காலத்தில் பக்கத்து வேலியால் எட்டி நின்று சீனி, உப்பு, எண்ணெய் போன்ற சாமன்களைப் பக்கத்து வீட்டுக்காரரிடம் அவசரம், ஆபத்துக்கு என்று வாங்கும் போது இப்படியான "எல்லுப் போல" என்ற சொல் பயன்பாட்டில் இருக்கும். கொஞ்சம் அதிகப் படியாகக் கேட்கும் தொனியில் கேட்டால் பக்கத்து வீட்டுக்காரர் பயந்து விடுவார்களோ என்ற காரணமாக இருக்குமோ என்னமோ.

"எல்லு" என்பதற்கு அகராதியில் என்ன விளக்கம் கொடுத்திருக்கின்றார்கள் என்று பார்த்தால் "நாள்", "சூரியன்" என்று மட்டுமே விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே அகராதியின் விளக்கத்தை இங்கே பொருத்திப் பார்க்க முடியாது. "எள்ளுப் போல" என்பது மருவி "எல்லுப் போல" ஆகியிருக்கலாமோ என்னவோ.

ஜாஸ்தி என்று தமிழகத்தில் வழங்கும் சொற்பதத்துக்குச் சம அர்த்தமாக ஈழத்து மொழி வழக்கில் "கனக்க" என்பது அமையும்.

"கனக்கப் போசாதையும், கண்டீரோ"

"திருவிழாவுக்கு கன சனம் வந்தது"

"கன சாமான்கள் கடையில் வந்திருக்காம்"

போன்ற உதாரணங்கள் "கனக்க" என்பதற்குப் பொருத்திப் பார்க்கப்படும் வார்த்தைப் பிரயோகங்களாகும்.





Author: கானா பிரபா
•2:33 AM
"எடியே! ஏனடி இடி விழுந்த மாதிரி கன்னத்திலை கை வச்சுக்கொண்டு யோசினை, கையை உப்பிடி கன்னத்திலை வச்சுக் கொண்டிருக்காதை, தரித்திரம் பிடிச்சுடும்".

மேற்கண்ட ஏச்சு வழக்கமாக ஈழத்துக் கிராமத்தின் பெரியவர்களால் சம்பாஷிக்கப்படும் ஏச்சுக்களில் ஒன்றாக இருக்கும்.

அடியே என்று தமிழக வழக்கில் இருப்பது தான் ஈழத்தில் எடியே என்று அமைந்து காணப்படும்.
எடியே என்பதற்கு ஒத்திசைவாக கேரளத்தின் மலையாளப் பேச்சு வழக்கிலும் "எடி" என்று வழங்கப்படுவதை மலையாளப் படங்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். அதே போன்று மலையாளத்தில் "எடா" என்று புழங்கப்படும் வார்த்தைப் பிரயோகம், தமிழகத்தில் "அடே" என்று வழங்கப்படும் அதே சமயம் ஈழத்தில் "எடேய்" என்று பயன்படுத்தப்படும்.

தமிழகத்தின் ஊர்களில் எடியே, எடி, எடே, எடேய் என்று ஈழத்தில் பயன்படுத்துவது மாதிரி வழக்கம் உண்டா தெரியவில்லை.

"எடேய் தம்பி" என்று அன்பாக வழங்கப்படும் சொல் அடிகளை கொஞ்சம் அழுத்திக் கடுமையாகப் பேசினால் அதுவே வன் சொல்லாக அமைகின்றது.

என்னடா இது ஈழத்து முற்றத்தில் எடியூரப்பா என்று நினைத்து வந்தவர்களுக்கு இப்போது விடை கிடைத்திருக்குமே ;)

படம் உதவி: விடை நோக்கி இணையத்தளம்
Author: யசோதா.பத்மநாதன்
•3:55 AM
உலகின் பழமையானதும் சிறப்பானதுமான மொழிகளில் தமிழும் ஒன்று.தமிழ் மொழி கணக்கினை இவ்வாறு அர்த்தப் படுத்துகிறது. இவற்றில் பல இன்று வழக்கொழிந்து போனாலும் கணக்கினைக் கையாளும் தமிழ் மொழியின் சிறப்பை ஒரு தகவல் கருதி இங்கு தருகிறேன்.

1 = ஒன்று
10 = பத்து
100 = நூறு
1000 = ஆயிரம்
10000 = பத்தாயிரம்
100000 = நூறாயிரம்
1000000 = பத்துநூறாயிரம்
10000000 = கோடி
100000000 = அற்புதம்
1000000000 = நிகற்புதம்
10000000000 = கும்பம்
100000000000 = கணம்
1000000000000 = கற்பம்
10000000000000 = நிகற்பம்
100000000000000 = பதுமம்
1000000000000000 = சங்கம்
10000000000000000 = வெள்ளம்
100000000000000000 = அந்நியம்
1000000000000000000 = அற்ட்டம்
10000000000000000000 = பறற்ட்டம்
100000000000000000000 = பூறியம்
1000000000000000000000 = முக்கோடி
10000000000000000000000 = மகாயுகம்

இது போல் அளவைகளுக்கும் வாய்ப்பாடுகள், பெயர் வழக்குகள் இருந்திருக்கின்றன.உதாரணமாக,

நீட்டல் அளவை

காதம் = 10 மைல்
ஓசனை = 4 காதம்
கல் = 1 மைல்
முழம் = முழங்கை முதல் நடுவிரல் நுனிவரை
சாண் = கட்டைவிரல் நுனி முதல் சிறுவிரல் நுனி வரை
ஒட்டைச் சாண் = கட்டைவிரலுக்கும் ஆள்காட்டிவிரலுக்கும் இடையில் உள்ள இடைவெளி.
சாட் கோல் = சாண் அளவுள்ள கோல்
அங்குட்டம்= கட்டை விரல் நீளம்
அடி= 12 அங்குட்டம்
காசாங்கிரம்= மயிர் நுனி அளவு
ஆள்= ஒரு மனிதனின் உயரம்

நிறுத்தல் அளவை

ஆழாக்கு = 1/8 படி
செவிடு = 1/5 ஆழாக்கு
சேர் = 5 ஆழாக்கு
வீசை = 1400 கிறாம்
இடா = முகத்தல் அளவை( எதுவென்று தெரியவில்லை)
உழக்கு = 1/4 படி
சின்னப் படி = 1/2 படி
பக்கா = 2 படி
லட்டி = 1 படி
வல்லம் = 2 அல்லது 4 படி
எத்துணை = எள் அளவு
கஃகு = 1/4 பலம்
பலம் = தோராயமாக (அண்னளவாக) 35 கிறாம்(1 மஞ்சாடி?)
இறாத்தல் = 13 பலம்

கோட்டை = 21 மரக்கால்
தூணி = 8 மரக்கால்
கலரை = 1 1/2 மரக்கால்
குருணி (மரக்கால்)= 8 படி

பரப்பளவு
குண்டு = 1089 சதுர அடி
குழி = 144 சதுர அடி
மா = 100 குழி
வேலி = 20 மா(6.67 ஏக்கர்)


கற்பம் = பிரம்மாவின் ஒரு நாள் 4,32,00,00,000 வருடம்
பதும கற்பம் = பிரம்மாவின் வாழ்க்கையின் முதல் பகுதி
உரி = அரை நாழி
கன்னல் = (நாழிகை)24 நிமிடங்கள்
கணம் = நொடிப் பொழுது / கண் இமைக்கும் பொழுது.
படலம் = செயல் நடக்கும் நேரம்

கால அளவு

யாமம் = 3 மணி நேரம் அல்லது 7 1/2 நாழிகை
மண்டலம் = 40 / 41 / 45 நாட்கள்
மாமாங்கம் = 12 வருடங்கள்.
Author: சஞ்சயன்
•10:38 PM
இந்த கிழம பிளமிங்டன் (சிட்னி) போன போது அங்க ஒரு கடையில (கானா பிரபா மாதிரி எந்தக் கடை என்றெல்லாம் கேக்கக் கூடாது...... அழுதுடுவன்) தமிழ் மரபு எண்டு ஒரு புத்தகம் வாங்கின நான். அதில கனக்க விசயமிருக்கு. வித்துவான் பொன். முத்துக்குமரன் பி.ஓ.எல் (யாழ்ப்பாணம்) எழுதின புத்தகம். என்னைப் போல தமிழ் வகுப்பை கட் அடித்து படம் பார்க்க போன அறிவுக் கொளுந்துகளுக்கு வயது வந்த பின் தமிழ் படிக்க நல்ல புத்தகம்..

அதில நாம கதைக்கிற இணை மொழிகள் கனக்க இருந்தது. அதில சிலது விளங்கேல்ல. தெரிந்த புண்ணியவான்கள் பதில் சொல்லுங்கோ (பாவிகளும் சொல்லலாம்).


1. கன்று காலி
2. கூட்டம் நாட்டம்
3. போக்குப் புகல்
4. விருந்தாள் வேற்றாள்
5. வேரும் தூரும்
Author: சஞ்சயன்
•10:24 PM
திடீர் என ஒரு சந்தேகம் வந்தது இப்ப..

யாராவது பதில் தொரிந்தால் சொல்லுங்க.. புண்ணியம் கிடைக்கும்

”கோதாரி விழுந்த” என்றால் என்ன?

பி.கு:

சிட்னிக்கு வந்தாப் பிறகு விசர்த்தனமான சந்தேகங்கள் வருது....ஒரு கிழமைக்கு முன் கொசுவுக்கு எத்தனை கால் என்ற சந்தேகம் வந்தது.. கொசுவை கலை, கலை என கலைத்து கடைசியா அதுக்கு 6 கால் என்று கண்டுபிடிச்சாப் பிறகு தான் நித்திர வந்தது..


அன்புடன்
சஞ்சயன்
Author: கலை
•1:30 AM
கொழுவல்!

.......................................

விடுப்பு (பூராயம்) கதைக்கிறவர் ஒருவர்: “அந்த கமலன் வீட்டில அண்ணனுக்கும், தம்பிக்குமிடையில நல்ல கொழுவலாம்”. (சிலபேர் இதை ஒருவித மகிழ்ச்சியுடன் சொல்வார்கள். மற்றவை கொழுவுப்படுறதில இவைக்கு அவ்வளவு மகிழ்ச்சி :)

(பூராயம் என்பது நல்ல பழங்காலத்தில பாவித்த ஒரு சொல் என்று நினைக்கிறன். ஆச்சி சொன்னதைக் கேட்டிருப்பதாக சின்ன ஞாபகம்.)

........................................

அம்மா மகனிடம்: “தங்கச்சியோட ஏன் நீ கொழுவிக்கொண்டு இருக்கிறாய். சும்மா உன்ரை வேலையைப் பாத்துக்கொண்டு போ பாப்பம்”
மகன்: “நானெங்கை கொழுவுறன். அவள்தான் என்னோட கொழுவலுக்கு வாறாள்”.

.........................................

நல்ல நோக்கமுள்ள ஒருவர்: “இவ்வளவுநாளும் நல்ல சினேகிதமா இருந்திட்டு, இப்ப சும்மா தேவையில்லாம கொழுவுப்பட்டுக் கொண்டு இருக்கிறாங்கள். நாந்தான் ஒருமாதிரி சமாதானம் பிடிச்சு விட்டனான்”

..........................................

எனக்கொரு சந்தேகம். 'கொழுவுதல்' என்பதை நேரடியாக யோசித்துப் பார்த்தால், ‘இணைதல் அல்லது இணைத்தல் என்ற பொருள்தானே வரும். அப்படியிருக்க, அதற்கு நேரெதிரான சண்டை பிடித்தல் என்னும் பொருளில் ஏன் ‘கொழுவுத' பாவிக்கப்படுகிறது?

...................................

பி.கு; என்ன கானா பிரபா ஏதாவது சந்தம் தொனிக்குதா? :). ஒரு ‘ழு' எழுத்து வருகுதெண்டு நினைக்கிறன் :)
Author: கலை
•6:41 AM
புழுகமும், புழுகுதலும்!

இந்தச் சொற்கள் எங்கெல்லாம் பாவிக்கிறவை எண்டு எனக்குத் தெரியாது. ஆனால் நான் கேள்விப்பட்டது தென்மராட்சியில.

1. புழுகம்/புழுகு = மகிழ்ச்சி

- இண்டைக்கு கானாப் பிரபாட இடுகைக்கு நிறைய பாராட்டு கிடைச்சதுல, ஆளுக்கு நல்ல புழுகம்.

- ஷ்ரேயாட வீட்டை அவடை பெரியண்ணா ஆக்கள் போயிருக்கிறதினால, அவ பெரிய புழுகில நிக்கிறாவாம்.

2. புழுகுதல் = மற்றவரைப் பாதிக்காத பொய்களைச் சொல்லுதல் அல்லது உண்மைகளையே மிகைபடச் சொல்லுதல் / பெரிதுபடுத்திச் சொல்லுதல்

- அவன், நல்லா புழுகுவான். அவன் சொல்லுறதில பாதியைத்தான் உண்மையெண்டு எடுக்கலாம்.

- அவள் புழுகுறதை கேட்டுக் கொண்டு நிண்டா, எனக்கு விசர்தான் (விசரெண்டா இந்த இடத்தில பையித்தியமில்லை, ஒரு எரிச்சல்) வரும். ஏதோ எங்களுக்கு ஒண்டும் தெரியாதெண்ட நினைப்பில புழுகிக் கொண்டே போறது.

சரி, இனி எப்பவாவது, இப்பிடி ஏதாவது ஒரு சொல்லு, அல்லது எங்கட ஊர்ப் பழக்கம் நினைவுக்கு வரும்வரை நான் போட்டு வாறன்.
Author: கானா பிரபா
•1:37 AM

"ஏன் தம்பி! கோயில் பக்கம் காணேல்லை"
"என்ரை ஆச்சி செத்து ஒரு மாசம் ஆகேல்லை எல்லோ, எனக்கு துடக்கு அதுதான் வாறேல்ல"

"என்ன விமலா! வீட்டுக்கு வெளியாலை காணக்கிடைக்கிறேல்லை"
"ஓம் அன்ரி, மூன்று நாள் என்ர துடக்கு முடியேல்லை, அதுக்குப் பிறகு தான் வருவன்"

"தம்பிராசா! நாளைக்கு திருவெம்பாவை, கோயிலுக்கு வருவீர் தானே"
"இல்லையடா சிவம் இன்னும் குழந்தை பிறந்த துடக்குத் தீரேல்லை"

மேலே பார்த்த மூன்று வேறுபட்ட சம்பாஷணைகளிலும் வருகிறது பொதுவான ஈழ மொழி வழக்கான "துடக்கு" என்ற சொற்பதம்".

தமிழக மொழிவழக்கில் பெரிதும் பாவிக்கப்படும் "தீட்டு" என்ற சொல்லே ஈழ மொழி வழக்கில் "துடக்கு" என்று பரவலாகப் பயன்பட்டு வருகின்றது.

"துடக்கு" என்பது தமிழக மொழிவழக்கில் பயன்பாட்டில் உள்ளதா என்று அறியேன், இந்தச் சொல்லுக்கு ஆசூசம், கட்டு, சிக்கு, துடக்கென்னேவல், மகளிர் சூதகம் போன்ற சொற்களை ஒத்த சொற்களாகக் காட்டுகின்றது ஈழத்து அகராதி நூல்.

யாராவது ஒருவர் இறந்தால் குடும்ப உறவுகள் மட்டுமன்றி, அவரின் நேரடி
இரத்த சம்பந்தமுள்ளவர்களுக்கும் இந்த தீட்டு/துடக்கு என்பது ஏற்படும் என்பது முன்னோர் நம்பிக்கை. பொதுவாக இறப்பு வீட்டில் சாப்பிட்ட, நீர் அருந்திய இரத்த சம்பந்தமில்லாதோருக்கும் இந்தத் துடக்கு இப்படியானவகையில் தொடர்பு பட்டு வந்து விடுவதாகவும் கொள்ளப்படுகின்றது. எனவே குறித்த இறப்பு வீட்டில் "துடக்குக் கழித்தல்", அல்லது "தீட்டுக் கழித்தல்" முடியும் வரை சுபகாரியங்கள், கோயிலுக்குச் செல்வதைத் தவிர்த்து விடுவார்கள். கோயிலுக்கு நிதமும் செல்லும் வழக்கம் கொண்டோர் வெளி வீதியில் மட்டும் நின்று சுவாமி தரிசனம் செய்வார்கள். துடக்குக் கழித்தல் என்பது அந்தந்தப் பிரிவு மக்களைப் பொறுத்து வேறுபடுகின்றது. சிலர் 30 நாள் முடிவிலும், இன்னும் சிலர் அதுவும் அந்தணர்கள் 21 நாள் முடிவிலும் இப்படியான தீட்டுக் கழித்தலைச் செய்து முடிக்கின்றார்கள். குறித்த தீட்டுக் கழித்தல் நாளில் வீட்டுக்கு அந்தணர் வந்து சடங்கு செய்து இதை நிறைவேற்றுவார்.

அடுத்ததாக மகளிரின் மாதவிடாய் நாட்களிலும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு இப்படியான "துடக்கு" ஏற்படுவதாகவும் கொள்ளப்படுகின்றது.

மூன்றாவதாக ஒரு வீட்டில் பிள்ளை பிறந்தால் அந்தப் பிள்ளை பிறந்து முப்பது நாள் முடிவில் துடக்கு கழிக்கும் வரை "துடக்கு" இருப்பதாகக் கொள்ளப்படுகின்றது.

துடக்கு பற்றி இப்படி ஒரு விளக்கம் இருந்தாலும் இன்னொரு துடக்கும் இருக்கிறது . அது என்ன தெரியுமா?
ஒரு காரியத்தைத் "தொடக்குதல்" (ஆரம்பித்தல்) என்பதை துடக்குதல் என்றே ஈழ மொழி வழக்கில் பேச்சு வழக்காகப் பாவிப்பார்கள்.
"தொடங்கீட்டீங்களா" என்று ஒரு தமிழக நண்பர் சொன்னால் அதையே
"துடங்கீட்டீங்களோ" என்று ஈழ நண்பர் பேசுவார்.

படம் நன்றி: http://www.sulekha.com/