Author: கானா பிரபா
•1:37 AM

"ஏன் தம்பி! கோயில் பக்கம் காணேல்லை"
"என்ரை ஆச்சி செத்து ஒரு மாசம் ஆகேல்லை எல்லோ, எனக்கு துடக்கு அதுதான் வாறேல்ல"

"என்ன விமலா! வீட்டுக்கு வெளியாலை காணக்கிடைக்கிறேல்லை"
"ஓம் அன்ரி, மூன்று நாள் என்ர துடக்கு முடியேல்லை, அதுக்குப் பிறகு தான் வருவன்"

"தம்பிராசா! நாளைக்கு திருவெம்பாவை, கோயிலுக்கு வருவீர் தானே"
"இல்லையடா சிவம் இன்னும் குழந்தை பிறந்த துடக்குத் தீரேல்லை"

மேலே பார்த்த மூன்று வேறுபட்ட சம்பாஷணைகளிலும் வருகிறது பொதுவான ஈழ மொழி வழக்கான "துடக்கு" என்ற சொற்பதம்".

தமிழக மொழிவழக்கில் பெரிதும் பாவிக்கப்படும் "தீட்டு" என்ற சொல்லே ஈழ மொழி வழக்கில் "துடக்கு" என்று பரவலாகப் பயன்பட்டு வருகின்றது.

"துடக்கு" என்பது தமிழக மொழிவழக்கில் பயன்பாட்டில் உள்ளதா என்று அறியேன், இந்தச் சொல்லுக்கு ஆசூசம், கட்டு, சிக்கு, துடக்கென்னேவல், மகளிர் சூதகம் போன்ற சொற்களை ஒத்த சொற்களாகக் காட்டுகின்றது ஈழத்து அகராதி நூல்.

யாராவது ஒருவர் இறந்தால் குடும்ப உறவுகள் மட்டுமன்றி, அவரின் நேரடி
இரத்த சம்பந்தமுள்ளவர்களுக்கும் இந்த தீட்டு/துடக்கு என்பது ஏற்படும் என்பது முன்னோர் நம்பிக்கை. பொதுவாக இறப்பு வீட்டில் சாப்பிட்ட, நீர் அருந்திய இரத்த சம்பந்தமில்லாதோருக்கும் இந்தத் துடக்கு இப்படியானவகையில் தொடர்பு பட்டு வந்து விடுவதாகவும் கொள்ளப்படுகின்றது. எனவே குறித்த இறப்பு வீட்டில் "துடக்குக் கழித்தல்", அல்லது "தீட்டுக் கழித்தல்" முடியும் வரை சுபகாரியங்கள், கோயிலுக்குச் செல்வதைத் தவிர்த்து விடுவார்கள். கோயிலுக்கு நிதமும் செல்லும் வழக்கம் கொண்டோர் வெளி வீதியில் மட்டும் நின்று சுவாமி தரிசனம் செய்வார்கள். துடக்குக் கழித்தல் என்பது அந்தந்தப் பிரிவு மக்களைப் பொறுத்து வேறுபடுகின்றது. சிலர் 30 நாள் முடிவிலும், இன்னும் சிலர் அதுவும் அந்தணர்கள் 21 நாள் முடிவிலும் இப்படியான தீட்டுக் கழித்தலைச் செய்து முடிக்கின்றார்கள். குறித்த தீட்டுக் கழித்தல் நாளில் வீட்டுக்கு அந்தணர் வந்து சடங்கு செய்து இதை நிறைவேற்றுவார்.

அடுத்ததாக மகளிரின் மாதவிடாய் நாட்களிலும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு இப்படியான "துடக்கு" ஏற்படுவதாகவும் கொள்ளப்படுகின்றது.

மூன்றாவதாக ஒரு வீட்டில் பிள்ளை பிறந்தால் அந்தப் பிள்ளை பிறந்து முப்பது நாள் முடிவில் துடக்கு கழிக்கும் வரை "துடக்கு" இருப்பதாகக் கொள்ளப்படுகின்றது.

துடக்கு பற்றி இப்படி ஒரு விளக்கம் இருந்தாலும் இன்னொரு துடக்கும் இருக்கிறது . அது என்ன தெரியுமா?
ஒரு காரியத்தைத் "தொடக்குதல்" (ஆரம்பித்தல்) என்பதை துடக்குதல் என்றே ஈழ மொழி வழக்கில் பேச்சு வழக்காகப் பாவிப்பார்கள்.
"தொடங்கீட்டீங்களா" என்று ஒரு தமிழக நண்பர் சொன்னால் அதையே
"துடங்கீட்டீங்களோ" என்று ஈழ நண்பர் பேசுவார்.

படம் நன்றி: http://www.sulekha.com/

This entry was posted on 1:37 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

12 comments:

On December 1, 2009 at 2:06 AM , ஆயில்யன் said...

துடக்கு எங்க பகுதிகளில் தீட்டு என்றே காலிங்க்!

 
On December 1, 2009 at 2:52 AM , thiru said...

பிரபா,

குமரி மாவட்டத்தில் பல கிராமப் பகுதிகளில் இந்த சொல் பாவனை வழக்கத்திலிருக்கிறது. குறிப்பாக முந்தைய தலைமுறை ஆட்கள் அதிகமாக பயன்படுத்துவதை கேட்டிருக்கிறேன். அவர்கள் மலையாளம் படித்தவர்கள் அல்லது திருவிதாங்கூர் ஆட்சியின் கீழ் இருந்த மக்கள் என்பது ஒரு அவதானம். ஈழத்தில் பயன்படுத்தப்படுகிற சொற்கள் குமரிமாவட்டத்தில் சில பகுதிகளில் பேச்சு வழக்கில் இருக்கிறது. பிறமொழி, பிற இட வழக்குக்களில் தக்கத்தால் அவை மெல்ல மறைந்தும் வருகிறது.

 
On December 1, 2009 at 3:04 AM , கானா பிரபா said...

ஆயில்யன் said...

துடக்கு எங்க பகுதிகளில் தீட்டு என்றே காலிங்க்!//

உறுதிப்படுத்தியமைக்கு நன்றி ஆயில்யன் ;)

 
On December 1, 2009 at 3:06 AM , கானா பிரபா said...

திரு/thiru said...

பிரபா,

குமரி மாவட்டத்தில் பல கிராமப் பகுதிகளில் இந்த சொல் பாவனை வழக்கத்திலிருக்கிறது. //

வணக்கம் திரு

மேலதிக தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி. மலையாளத்துக்கும் ஈழமொழி வழக்கிற்கும் எப்படியோ ஒரு நெருக்கமான பந்தம் இருக்கின்றது. இது தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டிய விடயம். இப்படியான இடுகைகள் மூலம் உங்களைப் போன்ற நண்பர்களால் இந்தச் சொற்களின் புழக்கத்தை உறுதிப்படுத்த முடிகின்றது. மிக்க நன்றி

 
On December 1, 2009 at 3:06 AM , சந்தனமுல்லை said...

ஆகா...வார்த்தைகள்தான் வேறே போல..ஆனால் பழக்கமெல்லாம் மாறாது போல இருக்கே!! :-)))

நல்ல இடுகை பாஸ்...அப்புறம் இந்த சிநேகிதி, தயிர் போஸ்ட் போட்ட ஷ்ரேயா வெல்லாம் எங்கே போயிட்டாங்க??

 
On December 1, 2009 at 3:50 AM , கானா பிரபா said...

வாங்க பாஸ்

பொதுவா சம்பிரதாயங்களில் ஒத்த தன்மை தான் இருக்கு இல்லையா.

அவங்க எங்கேயும் போயிடல, சொற்கள் தேடிட்டிருக்காங்க ;)

 
On December 1, 2009 at 6:38 AM , கலை said...

//யாராவது ஒருவர் இறந்தால் குடும்ப உறவுகள் மட்டுமன்றி, அவரின் நேரடி இரத்த சம்பந்தமுள்ளவர்களுக்கும் இந்த தீட்டு/துடக்கு என்பது ஏற்படும் என்பது முன்னோர் நம்பிக்கை.//

இந்த நேரடி இரத்த சம்பந்தத்துல மகளுக்கும், மகனுக்கும் வித்தியாசம் பார்க்கிறார்கள் என நினைக்கிறேன். தாயோ அல்லது தகப்பனோ இறந்தால், திருமணமானாலும் மகனுக்கு துடக்கு, ஆனால் திருமணமாகியிருந்தால் மகளுக்கு அந்த துடக்கு இல்லையாம்.

இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார்கள்? சிந்திக்க வேண்டிய விசயம்.

 
On December 1, 2009 at 8:35 AM , தமிழன்-கறுப்பி... said...

எட்டு வீட்டுல ஒரு பிடி பிடிச்சுட்டு அந்த துடக்கு போறதுக்கு அள்ளி முழுகின ஆக்கள் நாங்கள்.. அதெல்லாம் ஒரு காலம்.

:)

 
On December 1, 2009 at 6:29 PM , கானா பிரபா said...

கலை said...

இந்த நேரடி இரத்த சம்பந்தத்துல மகளுக்கும், மகனுக்கும் வித்தியாசம் பார்க்கிறார்கள் என நினைக்கிறேன். //

உண்மைதான், உண்மையில் ஏன் இந்தப் பாகுபாடு என்று தெரியவில்லை, அது போல் கொள்ளி வைக்கும் உரிமை கூட ஆண் மகனுக்குத் தானே போகிறது

 
On December 1, 2009 at 9:05 PM , கானா பிரபா said...

தமிழன்-கறுப்பி... said...
எட்டு வீட்டுல ஒரு பிடி பிடிச்சுட்டு அந்த துடக்கு போறதுக்கு அள்ளி முழுகின ஆக்கள் நாங்கள்.. அதெல்லாம் ஒரு காலம்.

:)
//

எனக்கு செத்த வீட்டில சாப்பிடுறதெண்டா பயம், பேய் துரத்தும் எண்டு ;)

 
On December 2, 2009 at 1:45 AM , கலை said...

இந்த துடக்கு என்ற நடைமுறை அந்தக் காலத்துல செத்தவீடு, குழந்தை பிறந்த வீட்டுல இருந்ததுக்கு நல்ல ஒரு காரணம் இருக்கு. ஆனா இங்க இப்பவும் அந்த ‘துடக்கு' என்னும் சம்பிரதாயம் பல இடத்திலும் தேவையே இல்லாமல் தொடர்ப்படுவதாகவே எனக்குத் தெரியுது.

 
On December 2, 2009 at 2:12 AM , Unknown said...

”தொடக்கு” என்ற காரணத்தால் நிறையவற்றை இழந்த சந்தர்ப்பங்களும் உண்டு. இது பற்றி அறிவில்லாதவர்கள் பெரியவர்களிடம் சென்று நாமும் தொடக்கு காக்க வேண்டுமா என்று கேட்பார்கள். ”தொடக்கு காத்தல்” என்ற சொல் வழக்கும் எம்மிடையே உள்ளது.