Author: வர்மா
•10:02 PM
கூடை மேல கூடை வைச்சு கூடலூரு போறவளே, உன் கூடக்கொஞ்சம் நானும் வாரன் கூட்டிக்கிட்டு போனால் என்ன’ வரிகளை கேட்டவுடன் ஆஹா என்ன அருமை பாடல் என்று சொல்லத்தோன்றும்.

நாயகி இடுப்பில் கூடையுடன் செல்கையில் இந்த பாடல் தொடங்கும், பாடல் தொடர்ந்து செல்கையில் கூடை என்ற சொல் வந்தாலும் நாயகியின் இடுப்பில் கூடை இருக்காது. இயக்குநர் கூடையை மறந்துவிட்டார்.

அவ்வாறு தான் எங்கள் ஊரிலும் கூடைகள் மறந்து கூடைக்காரிகளும் இல்லாமல் போய்விட்டனர்.


யாழ்ப்பாணத்தின் ஊர்களில் கூடைக்கார(காரி) வியாபாரிகள் கடந்த காலங்களில், குறிப்பாக சொல்ல போனால் இறுதி யுத்தம் முடிவடைவதற்கு முந்திய காலத்தில் வியாபார ரீதியில் கொடிகட்டி பறந்தவர்களாக காணப்பட்டனர்.

மீன்கள், பழங்கள், சிறிய அழகுசாதன பொருட்கள் சில வேளைகளில் புடவைகள் கூட கூடைக்காரிகளால் விற்பனை செய்யப்பட்டன.

கூடைக்காரிகளுக்கு தனிச்சிறப்பு இருந்தது. நம்பிக்கை, நாணயம் என்ற வியாபார அடையாளங்கள் யாரிடம் இருக்கின்றதோ தெரியவில்லை, இந்த கூடைக்காரிகளிடம் இருந்ததை காணமுடிந்தது. ஊரிலுள்ள குடும்பங்களுடன் நெருக்கமான உறவு முறையை பேணி ஒவ்வொரு வீட்டின் விடயங்கள், அந்தரங்கங்களை அறிந்தவர்களாக இந்த கூடைக்காரிகள் இருந்தனர்  

45 அல்லது 50 வயதுக்கு மேற்பட்ட பெண்மணியொருவர் தலையில் கூடைக்குள் 10 கிலோ எடையுள்ள பொருட்களை வைத்து ஊர் ஊராக சென்று விற்பனையில் ஈடுபடுவார். தலையில் கனம் குறையும் போது, அவரது இடுப்பிலுள்ள பையில் கனம் அதிகரிக்கும்.

தொடக்கத்தில் ‘மீன் வேணுமோ மீன்…. என்று தொடங்குபவர் நாட்கள் செல்ல, தங்கச்சி கமலா மீன் கொண்டு வந்திருக்கன் வாணய், அங்கால போகனும்’ என்ற அளவுக்கு வீடுகளில் உள்ளவர்களுடன் உறவுகள் அதிகரிக்கும்.

அவர்கள் கொண்டு வரும் மீன்கள் நல்ல மீன்களாக தான் இருக்கும். மீனின் செவியை இழுத்து பார்த்தால், மீனின் ப+, சமந்தா உதட்டுக்கு லிப்ஸ்ரிக் அடிச்சது போல் சிவந்து போய் இருக்கும். தரமான மீன். வேறு பேச்சுக்கே இடமில்லை. விலையும் கட்டுப்படியானதாக தான் கொடுப்பார்கள். 100 ரூபாயுக்கு மீனை மீனவரிடம் வாங்கிவரும் கூடைக்காரி 120ரூ பாவுக்கும் கொடுத்துவிட்டு செல்வார். ஆனால் வெளியில் அதே மீன், 150, 200ரூ பாய் கொடுத்துத்தான் வாங்க வேண்டும்.

இவர்களிடம் வாங்கினால் சிக்கனம். பணம் இல்லையென்று வீட்டுக்காரி வீட்டில் சமைக்காமல் இருக்க தேவையில்லை. கூடைக்காரி கடனுக்கும் மீன் தருவார். புதிதாக திருமணம் ஆன பொண்கள் எங்கேயாவது வீட்டில் இருந்தால், மீன் சமைத்து எப்படி கணவனை மடக்குவது என்பதையும் கூடைக்காரி சொல்லி கொடுப்பார்.


‘இஞ்சி, உள்ளிக்க போட்டு, ஊற வைச்சு, அதை தேசிக்காய் புளியில லேசா தடவிட்டு குழம்பு வை, பேந்து பாரனம்மா’ என்று கூடைக்காரி சொல்ல புது மணப்பெ

ண்களும் சமையல் கற்றுக்கொள்வார்கள்.

அது வியாபார தந்திரம், நல்லா சமைத்து கணவனுக்கு போட காலப்போக்கில் வீட்டில் ஆட்கள் கூடும், மீனும் கூட வாங்குவார்கள்… ‘நீண்டகால வியாபார திட்டமிடல்’ அது. பல்தேசிய கம்பனிகள் தான் அப்படி திட்டமிட முடியும் என்றும் இல்லைத்தானே.

கூடைக்காரியின் சமையல் குறிப்பால் சமையல் கற்றுக்கொண்டு, நல்ல சமையல்காரிகள் ஆகின பெண்கள் நிறை இருக்கிறார்கள்.

கூடைக்காரி மீனின் ரகங்கள், சுவைகள் சொல்ல எல்லாவற்றையும் சாப்பிட வேண்டும் போல் வாய் ஊறும். அப்படி வாயில் வெற்றிலையை போட்டு ரசிச்சு ருசிச்சு மீன்கள் பற்றி கூறுவார்கள்.

இதேபோல் தான் பழங்கள் விற்கின்றவர்களும். கூடுதலாக தென்மராட்சி பக்கம் இருந்து நிறை கூடைக்காரிகள் மாம்பழத்தோடு ஊருக்குள் திரிவார்கள். கறுத்தக்கொழும்பான் மாம்பழம், சுவை அதிகம். அதுவும் அவர்கள் சொல்லும் ‘கறுத்தக்கொழும்பான்’ என்ற வார்த்தையில் சுவை அதிகம்.

மருந்து மாத்திரை என்ற பேச்சுக்கே இடமில்லை. மரத்திலிருந்து லாவகமாக பிடுங்கி, வைக்கோல் போர்வைக்குள் பதுக்கி வைத்து பழுக்க வைத்த பழங்கள். கூடைக்குள் இருக்கும் பழங்களில் பழத்தின் பாலுடன் சேர்த்து வைக்கோல் ஒட்டியிருக்கும்.

பழம் தலைப்பக்கம் மெல்லிய மஞ்சளாக இருக்கும். கீழ் கொஞ்சம் பச்சையாக தான் இருக்கும். வைக்கோலில் பழுக்க வைக்கிற பழங்கள் முழுவதும் மஞ்சள் ஆவது கிடையாது. இப்படி 2 நிறத்தில் இருக்கும். மருந்தடித்தால் தான், ‘ஈமா வாற்சன்’ போல மஞ்சள் கலரில் இருக்கும்.


‘பழம் எல்லாம் செம மலிவு’ என்று கூடைக்காரி சொல்வாள். கிழமைக்கு 20 பழம் ஒவ்வொரு வீட்டிலும் விற்பனையாகும். நல்ல வியாபாரம். சீசனுக்கு மட்டும் வியாபாரம். சீசன் வியாபாரம் முடிய, வேறு விற்பனை. அழகு சாதனம், வேறு பழங்கள் உள்ளிட்ட விற்பனை என அவர்கள் வாழ்க்கை வியாபாரம், உறவுகள், சந்தோசம், பணம் என்று ஜாலியாக சென்றது.

யார் கண் வைத்தார்களோ தெரியவில்லை. கூடை தூக்கி வியாபாரம் செய்வதற்கு புதிய கூடைக்காரிகள் முன்வரவில்லை. இருந்த கூடைக்காரிகளும் வயது போய் இயலாத நிலைமை, அதிகரித்த விலைவாசியில் குறைந்த விலையில் மீன்களை பெற்று, ஊர்களில் விற்பனை செய்ய முடியவில்லை. சந்தையில் அதிக விலைக்கு மீன்களை வாங்க வேண்டிய நிலை. சந்தையில் கேள்வி அதிகம். கூடவே கொழும்பு கம்பனிக்கும் மீன் ஏற்றுகின்றோம் என சிலர் மீன்களை விலையேற்றிவிட்டனர்.

அவர்களுடன் போட்டிபோட்டு மீனவர்களிடம் இருந்து மீன்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியவில்லை. அதிக விலைக்கு கொள்வனவு செய்தால் ஊரில் குறைந்த விலையில் வாங்கி பழக்கப்பட்டவர்கள் அறாவிலை கேட்கின்றனர்.

வியாபாரம் கைநழுவிவிட்டது. மீன்கள் கூடைக்காரிகளின் கூடைகளின் ஏற மறுக்க, கூடைகளை வீட்டு தவாரத்தில் கூடைக்காரிகள் தூக்கி போட்டுவிட்டனர்.

வீட்டு கதவுகள் இறுகப்பூட்டப்பட்டு கூடைக்காரிகளை வரவேற்க தயாராகவில்லை. ஏமாற்று வழிகள் வீடுகளுக்குள் நுழைவதால் வீட்டுக்காரர்கள் இவ்வாறான முடிவுகளை எடுத்தனர். இதனால் நல்லவர்களான கூடைக்காரிகள் இல்லாமல் போனார்கள்.

மாம்பழ மரங்களையே பழங்களின் மொத்த வியாபாரிகள் வாங்கிவிடுகின்றனர். 50 ரூபாயுக்கு குறைவாக கறுத்தக்கொழும்பான் யாழ்ப்பாணத்தில் கொள்முதல் செய்ய முடியாது. மாம்பழ வியாபாரிகளும் பின்வாங்கிவிட்டனர்.

பாரிய வியாபார நிலையங்கள், நிறுவனங்கள் வளர கூடைக்காரிகளின் தேவைகள் மக்களுக்கு இல்லாமல் போனது.

கூடைக்காரிகள் இல்லாமல் போனதால், புதுசா கலியாணம் செய்த பெண்களில் பலர் சமைக்க கஸ்ரப்படுகின்றனர். வீட்டில் சண்டை. சாப்பாடு சரியில்லையென. மாமியார் நாடகம் பார்க்க, சொல்லிக் கொடுக்க யாரும் இல்லை. பாவம் பெண்கள் சமையல் குறிப்பை இன்டர்நெட்டில் டவுன்லோட் செய்து பிறிண்ட் எடுத்து, சமையல் அறையில் மேல் றாக்கையில் செருகி வைத்து பார்த்து பார்த்து சமையல் செய்யும் நிலை.

கூடைக்காரிகள் மொத்தமாக இல்லாமல் போனது என்றில்லை. ஊருக்குள் ஒன்றிரண்டு கூடைக்காரிகள், ஏதோ ஒரு நம்பிக்கையிலும், பெறுமானத்தின் அடிப்படையிலும் தங்கள் தொழில்களை செய்கின்றனர்.

அப்படியொரு கூடைக்காரியை சந்தித்து பின்னரே இதனை எழுதவேண்டும் என்று தோன்றியது.

மக்களை அணுகிய வியாபார முறைகள் என சந்தைப்படுத்தல் கற்கைநெறிகளில் கத்தி கத்தி சொல்லி கொடுக்கின்றனர். ஆனால் மக்களை அணுகிய விற்பனை முறையை எப்போதிருந்தோ எமது கூடைக்காரிகள் மேற்;கொண்டுவிட்டனர் என்பதை உலகம் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
குணசேகரன் சுரேன்

Author: ந.குணபாலன்
•3:32 PM

தென்புலத்தோர் வழிபாடு 

ஒருவர் மோசம் போய்விட்டார் என்றால், யாழ்ப்பாணத்துப் பேச்சுவழக்கில் அவர் மோட்சம் போய்விட்டார் என்று விளக்கம். தென்புலத்தார் வழிபாடு தமிழர் வாழ்வில் மிக முக்கியமானது. இங்கே நான் கண்டுகேட்டு, கைக்கொண்ட சில பல எடுத்துக் காட்டுக்கள் சில.

தென்புலத்தார் என்று திருக்குறள் கூறும் மறைந்த மூதாதையரை வழிபடும் முறைகள் இடத்துக்கிடம், ஊருக்கூர் வேறுபடும். ஒருவர் இறந்தபின் அவர் உடலை, தலை தெற்குத் திசையில் இருக்க வளர்த்தி தலைமாட்டில் ஒரு விளக்கைக் கொளுத்தி வைப்பார்கள். இறந்தவர் உடல் எரியூட்டப் படும் வரை அந்த வீட்டில் அடுப்பு எரிக்கமாட்டார்கள். அதன்பின்னே அந்தியேட்டி வரை இறந்தவரை வளர்த்தி இருந்த இடத்தில் தெற்குப்பக்கமாக விளக்கு இராப்போலாய்( இரவு பகலாய்) எரியும். விளக்கடியில் ஒரு தண்ணீர்ச் செம்பு நாளாந்தம் மூன்றுநேரமும் புதிதாக வைக்கப்படும். மூன்றுநேரமும் விளக்கடியில் உணவு வகைகள் படைக்கப்படும். இறந்தநாளை முதலாவது நாளாகக் கொண்டு ஒற்றைப்பட்ட நாளில் அனேகமாக மூன்றாம் நாள் காடாற்று/பால்தெளித்தல்/சாம்பல் அள்ளுதல் செய்வர். அதேபோல ஒற்றைப்பட்ட நாளில் (5ம், 7ம் நாள்) எட்டு/ செலவு/எட்டுச்செலவுப் படையல் நடைபெறும். எட்டு =எள்+தூ அதாவது எள்தூவுதல் என்பதன் சுருக்கமே அன்றி எட்டாம்நாள் என்ற கருத்தல்ல. ஆனால் எள் தூவுதல் என்பது எட்டிலன்று இப்போது இல்லை. அந்தியேட்டி வரை விளக்கடியில் தங்களால் இயன்ற வசதிக்கு ஏற்றபடி தின்பண்டங்களைப் படைப்பர். அந்தியேட்டியில் மரக்கறி உணவு படைக்கப்படும். அதன்பின்னே அடுத்தடுத்த நாட்களில் அவரவர் வசதிக்கேற்ப மச்சப்படையல் வைப்பார்கள். இறந்தவர் மது, புகை பழக்கம் உள்ளவராயின் அவைகளும் படையலில் இடம் பெறும். வரியாவரியம் வரும் திவசங்களில் மரக்கறி உணவுப் படையலும், மறு தினங்களில் மச்சப்படையலும் இருக்கும். 

அதைவிட ஆடிப்பிறப்பன்று பனங்கட்டிக் கூழும், கொழுக்கட்டையும், பழங்களும் பிதிருக்குப் படைக்கப்படும். தீபாவளிக்கு முதல்நாளும் மச்சப்படையல் படைப்பார்கள். மார்கழி மாசம் பிதிர்கள் தவத்துக்குப் போகும் காலம் என்று சொல்லி அவர்கள் தவத்திற்குப் போகுமுன்னே விளக்கீட்டிலன்றும் பழங்களுடன் கொழுக்கட்டையும் படைக்கப்படும். தைப்பொங்கலன்று வெள்ளாப்பில் சூரியனுக்குப் பொங்கிய பின்னே, தவத்துக்குப்போன பிதிர்கள் திரும்பி வந்தனர் என்று சொல்லி செக்கலிலே மச்சப்படையல் குறிப்பாகக் கணவாய்க்கறியும் சோறும் படைக்கப்படும்.

தாயில்லாதவர்கள் சித்திராப்பருவத்திலும், தகப்பன் இல்லாதவர்கள் ஆடியமாவாசையிலும் விரதம் இருப்பார்கள். நீர்க்கரையில் எள்ளுந் தண்ணீரும் இறைத்தும், பெற்றவரின் பெயரில் மோட்ச அருச்சனை செய்தும் தென்புலத்தாரை வழிபடுவர். முன்னைய காலங்களில் ஆண்மக்கள் மட்டுமே கடைக்கொண்ட இவ்விரதங்களை, இன்று பெண்மக்களும் கடைப்பிடிப்பதைக் காணக் கூடியதாய் இருக்கிறது.

நல்லநாள் பெருநாள் என்று சொல்லி, தைப்பொங்கல், சித்திரை வரியப்பிறப்பு, தீபாவளி நாட்களுக்கு முதல்நாள் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது இறந்தவரை நினைவு கூர்வர். பழஞ்சலிப்பு என்று சொல்லப்படும் இந்த வழமை நானறிய 70ம் ஆண்டுகள் வரை எங்கள் பக்கம் இருந்தது. இன்று அற்றுப்போய் விட்டது.

ஒரு சிறு குறிப்பு: 
thenpulam> templum>temple
அதாவது தென்புலத்தாரை வழிபட்ட இடமே templum என்று இலத்தீன் மொழிக்கு மாறி ஆங்கிலத்தில் temple என்று ஆனதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
Author: யசோதா.பத்மநாதன்
•5:37 PM


 சிலப்பதிகாரத்தில்  ஒரு இடம் வருகிறது. மாதவி தன்னை அழகு படுத்துகிற இடம் அது. மாதவி அணிந்த நகைகள் பற்றிய பட்டியல் ஒன்று அதில் வருகிறது.அந்தப் பட்டியல் பாட்டில் சுமார் 30க்கு மேற்பட்ட நகைகளை அணிந்து அவள் தன்னை அழகு படுத்தி இருக்கிறாள்.



அந்தப் பாடல் வரிகள் இவைதான்.

”நலத்தகு மெல்விரல் நல்அணி செறீஇப்,
பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை
அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து, 85

குறங்கு செறிதிரள் குறங்கினில் செறித்து,
பிறங்கிய முத்தரை முப்பத்து இருகாழ்
நிறம்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇ,
காமர் கண்டிகை தன்னொடு பின்னிய
தூமணித் தோள்வளை தோளுக்கு அணிந்து, 90

மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திரச் சூடகம் செம்பொன் கைவளை
பரியகம் வால்வளை பவழப் பல்வளை
அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து,
வாளைப் பகுவாய் வணக்குஉறு மோதிரம் 95

கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம்
வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி
காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து,
சங்கிலி நுண்தொடர் பூண்ஞான் புனைவினை
அம்கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து, 100

கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி
செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்துஆங்கு
இந்திர நீலத்து இடைஇடை திரண்ட
சந்திர பாணி தகைபெறு கடிப்பிணை
அங்காது அகவயின் அழகுற அணிந்து, 105

தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி
தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்குஅணி
மைஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து,
கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்துப்
பாடுஅமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள், 110

இதைப்பார்த்ததும் ஈழத்தின் வடபுலத்தைச் சேர்ந்த பேராசிரியர். க. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய காதலியாற்றுப்படை என்ற புத்தகத்தில் - (1903 - 1968 ) நாட்டார் வாழ்வியலைப் பதிவு செய்த அந்தக் கவிதை இலக்கியத்தில் - வந்த அணியப்பட்ட நகைகள் பற்றிய பட்டியல் பாட்டு நினைவுக்கு வந்தது. அந்தப் பாடல் இது தான்.



” நன்னாள் பார்த்து பொன்னை உருக்கி
மணவினைக்கென்றே வரைந்திடு தாலியும்
அட்டியல், பதக்கம், பிலாக்கு, மூக்குத்தி,
பூரானட்டியல்,கீச்சிக் கல்லட்டியல்,
கடுகுமணிக்கொலுசு, கவுத்தோர் காதுப்பூ,
வாளி, சிமிக்கி, வளையல், தோடு,
பட்டணக்காப்பு, பீலிக்காப்பு,
பாதசரமொடு சங்கிலிச் சிலம்பு
தூங்கு கடுக்கண், நட்டுவக்காலி,
அரும்புமணிமுரு கொன்றப்பூவும்,
ஒட்டியாணம், மொழிபெறு நுதலணி
அரைஞாண் கயிறொடு அரைமூடிச் சலங்கை
சித்திர வேலை செய்திடும் போது........”

எனப் பட்டியல் இட்டபடி தொடர்கிறது இப்பாடல்.

பண்டய தமிழர் வாழ்வில் அணியப்பட்ட நகைகளின் பட்டியலைப் பார்க்கும் போது மலைப்பே மிஞ்சுகிறது.

1. அழகியலில் தமிழருக்கு இருந்த புலமை, நாட்டம் மற்றும் செய்நுட்பத் திறமை என்பது ஒன்று.

2. பெண்கள் எவ்வளவு தூரத்துக்கு புறத்தே தம்மை அழகுபடுத்திக் கொள்வதில் நாட்டமுடன் இருந்திருக்கிறார்கள் என்பது இன்னொன்று.

இந்தப் புற அழகு இரண்டு வகையாக இருக்கிறது. ஒன்று பொன்னகை. இரண்டு புன்னகை. முன்னதை விட பின்னது கொஞ்சம் செளகரிகம் என்ற போதும் இன்றும் அது மட்டும் போதும் என்று சொல்லும் பெண்ணோ ஆணோ இல்லை இல்லையா?





Author: மாயா
•7:45 AM
இன்று காலமான ஈழத்தின் நாடக, திரைப்படக்கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களின் தனிநபர் நகைச்சுவை நிகழ்சிகளின் சிறு தொகுப்பு...


Author: ந.குணபாலன்
•3:52 PM
ஐயே!

அப்பா! என்னைப் பெத்தவன்! அவனை நினைக்கின்ற தருணங்கள் ஒவ்வொண்டும் இன்பமும் துன்பமும் கலந்தே என்னை ஆட்டுவிக்கும். அவனது அன்பை நினைச்சுச்  சந்தோசமும், அவனது பிரிவை நினைச்சால் துக்கமுந்தான். ஆள் என்ன கொஞ்சம் கொதியன் தான். சரியான சுடுதண்ணி. ஆனால் அந்தக் கொதிக்குணத்துக்குப் பின்னாலை இருந்தது அவ்வளவும் சரியான பட்சம். பிள்ளைகள் எண்டு என்னிலையும் என்ரை சகோதரங்களிலையும் இனிமேல் இல்லை எண்ட வாரப்பாடு.

எங்களுக்கு ஒரு சின்னக் காயம் வந்திடக் கூடாது. ஒரு தலையிடி காய்ச்சல் சுகயீனம் எண்டு பிள்ளைகள் நாங்கள் முகஞ்சிணுங்கிடக் கூடாது. அவனாலை தாங்க ஏலாது. ஆயிரத்தெட்டுத் தரம் "காளியம்மாளே! காளியம்மாளே!" எண்டு சொல்லி அடிக்கடி ஏமஞ்சாமம் பார்க்காமல்  நித்திரைப்பாயிலையும் வந்து தொட்டுத் தடவிப் பார்ப்பான். காய்ச்சல் விட்டுக் குணப்பட்ட உடனை  முதல் வேலையாய் காளியம்மாள் கோயிலுக்கு கற்பூரக் கட்டி வாங்கிக் கொண்டு போய்  கொளுத்திக் கும்பிட வைப்பான். ஒருக்கால் எங்கடை வளவுக்குள்ளை ஆருடையதோ தெரியயேல்லை தெருவாலை மேயப் போற ஆடொண்டு உள்ளிட்டு தென்னம்பிள்ளையைக் கடிச்சுப் போட்டுது. கலைச்சுத் துரத்திக் கொண்டு போய் எட்டிப் பின்னங்காலைப் பிடிச்சிட்டன். ஆனால் என்ன ஒண்டு!, நான் வளவுக்குள்ளே, ஆடு தெருவிலே, இடையிலே முள்ளுக்கம்பி வேலி! ஆடு பின்னங்காலை ஒரு உதறு உதற   என்ரை  கையை முள்ளுக்கம்பி பதம் பார்த்தது. எனக்குப் பீச்சல் பயமாகிப் போச்சுது. அதொண்டும் அந்தக் கறள் கம்பி குத்தின காயத்தை நினைச்சு இல்லை. எக்கணம் அப்பாவின்ரை கண்ணிலே பட்டாலும் எண்ட பயந்தான். அந்தக் காயத்தில் நல்லாக வாயை வைச்சு அரத்தத்தை உறிஞ்சி எடுத்துத் துப்பினன். பத்தும் பத்தாததுக்கு அம்மா வந்து நோகநோகக் காயத்தைப் பிதுக்கி அரத்தத்தைத் துடைச்சார். பேந்து எதோ ஒரு மருந்தை வைச்சு கட்டிவிட்டார். அம்மாவும் கறள் கம்பி எண்ட  அளவிலே இடாக்குத்தரிடம் போய் ஏர்ப்புவலி வராமல் இருக்க ஊசி போடவேணும் எண்டு சொன்னவர்.
" அப்பா வந்து கண்டானெண்டால் சத்தம் போடப்போறான். நீ ஏனடா முள்ளுக்கம்பிக்குள்ளை கையை விட்டாய்?"
 அப்பா அடிக்கப் போகிற கூத்தை நினைச்சு அடிக்கொருதரம் கவலைப் பட்டார். அம்மாவும் நல்ல அன்பானவர் தான். ஆனால் அப்பாவைப் போலை உருகிவழியிறதில்லை.

"அப்பா வேலையால் களைச்சு விழுந்து வருவான். அவன்ரை கண்ணில் படுமாப்போலை முன்னடிக்கு  வந்து நில்லாதே! வந்த மனிசன் சாப்பிட்டுக் களையாறின பிறகு விசயத்தைச் சொல்லி இடாக்குத்தரிட்டை போகலாம்." எண்டு அம்மா படிச்சுப் படிச்சுச் சொல்லியிருந்தார். நானும் மண்டிக் கொண்டு அடுப்படிக்குள்ளையும், சாமியறைக்குள்ளையும் பின்வளவுக்குள்ளையும் மாறிச்சாறி மறைப்பிலை  இருந்தன்.   பின்னேரப்பாட்டுக்கு அப்பா வேலையாலை வந்தான். அந்த நேரம் பார்த்து மாமியும்  வந்திருந்தார்.
" இவன் நடராசன் வந்து எக்கணம் ஆத்தையரே! தாயாரே! எண்டு கத்தப் போறானே! இண்டைக்குத் திருவிழாத்தான் " எண்டு தன்ரை  பங்குக்குப் பயமுறுத்தினார். கிணற்றடிக்குப் போய் கால்மேல் கழுவி சாமியறைக்குப் போய் விபூதி சாற்றிக் கொண்டு வந்த அப்பா என்னமோ நினைச்சுக் கொண்டு  
"தம்பி மோனை பாலய்யா!" எண்டு என்னை கூப்பிட்டான். நெஞ்சு பக்குப்பக்கென்று அடிக்க முன்னுக்கு வந்தன். அடக் கடவுளே! உந்தக் கந்தறுந்த காயம் அவன் கண்ணில் பட்டுவிட்டுது.

" ஐயோ! எடேய் மோனை என்னடா  நடந்தது? இஞ்சருங்கோ மச்சாள், தம்பிக்கு என்னெண்டு காயம் வந்தது?" எண்டு குரையைவைச்சான்.
"கொஞ்சம் கத்தாமல் இருக்க மாட்டியே? ஏனடா இப்பிடிக் குரையை வைச்சு ஊருக்கெல்லாம் விளம்பரம் வைக்கிறாய்?" எண்டு அம்மா அதட்டினார்.
"அது முள்ளுக்கம்பி குத்திப் போட்டுது. இடாக்குத்தரிடம் போய் ஏர்ப்பூசி போடத்தான் வேண்டும். ஆனால் முதலிலை பறையாமல் சோற்றைச் சாப்பிட்டுவிட்டுக் கூட்டிக் கொண்டு போ" எண்டு அம்மா சொன்னார்.
"சோறும் , மண்ணாங்கட்டியும். சும்மா இருங்கோ மச்சாள்! முதலிலே இடாக்குத்தரிடம் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு போய் ஊசி போடுவிக்க வேணும்." என்று அந்தரப்பட்டான்.
"இவன் ஒருத்தனோடை  இருக்க, நிற்க வழியில்லை. தான் பிடிச்ச முயலுக்கு மூண்டு கால்தான் எண்டு  அடம் பிடிப்பான்." அம்மா அலுத்துக் கொண்டார்.
"அவன் அங்கை வெளிக்கிடட்டும். அதற்கிடையிலே சோற்றை குழைச்சுக் கவளமாகத் தாறன், சாப்பிடடா!" அம்மா கெஞ்சிக் கேட்டார்.
"இல்லையுங்கோ மச்சாள் என்னைத் தெண்டிக்காதையுங்கோ. எனக்கு மனசில்லை!" எண்டு அப்பா மறுத்தான்.

எங்கடை மாமியாருக்கு, அப்பான்ரை தங்கச்சியாருக்கு அப்பாவின் நடப்புக்களைப் பார்த்து எரிச்சல் கிளம்பினது.
" இவன் ஒருத்தன் மட்டும்தான் கண்டறியாத பிள்ளைகளைப் பெத்து வளர்க்கிறான். ஏன் ஊருலகத்திலே வேறே ஒருத்தரும் பிள்ளைகளைப் பெத்து வளர்க்கவில்லையாமே? பிள்ளைகள் எண்டால் சும்மா என்ன பாவைப்பிள்ளைகளே, பிடிச்சு வைச்ச பிள்ளையார் போலே இருக்கிறதுக்கு? ஓடி, ஆடி விளையாடேக்கை காயம்,கீயம் வருந்தானே? சத்தம் போடாமல் போய் மருந்தைக் கட்டுவிச்சுக் கொண்டு வாவனடா!"எண்டு புறுபுறுத்தார்.

இடாக்குத்தரிட்டை போறவழியிலை
"நல்லா நோகுதோ மோனை?" எண்டு மயிலிறகாலை தடவுமாப் போலை அன்பா இதமாய் கேட்டான்.
"இல்லை அப்பா" எண்டன்.
"ஊசி போட வேணும். பயமாய்க் கிடக்கோ?"
"இல்லையடா! நீ தானடா சரியாப் பயப்பிட்டுக் குழறிப் போட்டாய்!"
"என்ன செய்யிறது மோனை? உங்களுக்கு ஒண்டெண்டால் என்னாலை தாங்கேலாமல் கிடக்கு."



ஐயே! இதுக்கு மிஞ்சி என்னாலை இந்தப் பாணியிலை எழுத ஏலாது!
ஈழத்தமிழ் உறவுகளே! உங்கள் சிந்தனைக்குச் சில:

ஏன் இந்தியக் எழுத்தாளர்களைப் பின்பற்றி;
தாயை, மற்றும் வயது மூத்த பெண் உறவினரைக் குறிப்பிடும் போது
"அம்மா கடிதம் எழுதினாள்.
அக்கா பாடம் சொல்லிக் கொடுத்தாள்.
பாட்டி கதை சொன்னாள். "
என்று பெண்பால் வினைமுற்றுச்சொல் வைத்து மரியாதையீனமாக எழுத என்று வரும்போது குறிப்பிடுகிறீர்கள்?
உங்கள் பேச்சு வழக்கில்
"அம்மா கடிதம் எழுதினா/எழுதினாவு
அக்கா பாடம் சொல்லிக் குடுத்தா/குடுத்தாவு .
பாட்டி கதை சொன்னா/சொன்னாவு. "என்றுதானே மரியாதையாகக் கதைக்கின்றீர்கள்?
ஒன்று மட்டும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
"எவுடி அவ?" என்ற திரைப்பட வசனத்தைக் கேட்ட பின் அவ என்று குறிப்பிடுவது  அவமரியாதையான சொல் என்று ஆகிவிடாது. அவள் என்பது தான் எங்கள் இயல்பான பண்புக்கு ஏற்காதது.
வயதில் இளைய பிறத்திப் பிள்ளைகளை, அறிமுகம் அதிகமில்லாத பிள்ளைகளை நீங்கள் போட்டுப் பலர்பால் வினைமுற்றுச்சொல் வைத்து மரியாதை கொடுத்துக் கதைப்பது எங்களில் பலரது பழக்கம். அதே போல
" பிள்ளை! கொப்பா வீட்டிலை நிற்குதோ?"
"அக்கா சட்டை தைச்சிட்டுது"
"அண்ணா தோட்டத்தாலை வந்தது, இப்ப கடைக்குப் போட்டுது" என மரியாதையான வடிவத்தில் தான் அங்கே ஒன்றன்பால் வினைமுற்றுச்சொல் பாவிக்கப் படுகிறது. இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது? பேச்சுவழக்கில் புழங்கும் மரியாதைச் சொற்களை உங்கள் எழுத்துக்கும் கொண்டு வாருங்கள்.
" அம்மா தேநீர் போட்டு தந்தாள் "என்பதை விட,
" அம்மா தேநீர் போட்டுத் தந்தா" என்பதும்
" அம்மா தேத்தண்ணி போட்டுத் தந்திச்சுது "என்பதும் எனக்கு இயல்பானதாகப் படுகின்றது.

பலநாட்களாக என் மனத்தில் இடறியபடி இருந்த கருத்தை உங்கள் முன் வைக்கின்றேன்.

அன்புடன்
ந. குணபாலன்



Author: வர்மா
•8:16 PM


கொங்குதேர் வாழ்க்கை அரசரத்தும்பி
காமஞ்செப்பாது, கண்டது மொழிமோ
பயிரிய கெழி இய நட்பின் மயிலியல்
செறி யெற்று சரிவை கூந்தலின்
நரியவும் உளவோ நீ அறியும் பூவே

 இது குறுந்தொகை என்றசங்கப்பாடலில் இடம் பெற்றுள்ளது. இதனை எழுதியவர் இறையனார் எனக்கருதப்படுகிறது.

மேற்கண்ட பாடலின் சொல் விளக்கத்தை இவ்வாறு கூறலாம்.
கொங்குதேர் வாழ்க்கைத்தேனைத் தேர்ந்தெடுத்து சுவைக்கும் அழகான சிறகுகளை உடைய தும்பிபோல எதனையும் தேர்ந்தெடுத்து ஆராயவேண்டும்.

காமஞ் செய்யாது கண்டது விருப்பு வெறுப்பற்ற விதத்தில் கூறுவாயோ

பயரிய‍  - -- பயிலுதல்
கெழிய  -  --இறுக்கமான
மயிலியல்- மயில் போன்ற சாயல்
அரிவை --  பெண் கூந்தலிலும் பார்க்க
நறியவும்-  நறுமணம் கலந்த

நீஅறிந்த பூக்களிலும் பார்க்க நறுமணம் உண்டோ?

கே.எஸ்.சிவகுமாரன்

சுடர் ஒளி

21/01/14
Author: யசோதா.பத்மநாதன்
•12:56 AM
நம்பிக்கையில் இயங்குகிறது உலகம்.

சோதிடத்தில் நம்பிக்கை இருக்கிறதா உங்களுக்கு?

உலகத்தின் பழம் பெரும் பண்பாடுகள் பலவற்றிலும் அத்தகைய நம்பிக்கைகள் பலவாறாக இருந்தன இன்னமும் இருக்கின்றன.

ஜனவரி ஒன்று ஆங்கிலப் புது வருடம்.

ஜனவரி 31ல் 2014க்கான புது வருடம் ஆரம்பிக்கிறது சீனருக்கு.




ஜனவரி 14ல் தமிழராகிய நமக்கு தைத்திங்கள் முதல் திகதி. ஆனால் ஏப்பிரல் 14 நமக்கான புது வருடமாகக் கணிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.


சந்தோஷமாக வாழப்பிரியப்படும் மனிதர்களிடம் சோதிட நம்பிக்கையும்  நாட்காட்டிக் கணிப்பீடுகளோடு தோற்றம் பெற்றது.





எதிர்வு கூறல்களும் எதிர்காலம் கணிப்பிடலும் அவ்வகைப்பட்டவையே.அது நாட்டுக்கு நாடு பண்பாட்டுக்கு பண்பாடு தனக்கான தனித்துவங்களோடு விளங்குகின்றன.


நாடுகள் பலவும் அவற்றை அங்கீகரித்து நாட்டின் சிறப்பாக; தம்முடய வளங்களில் ஒன்றாக அரச முத்திரைகளை வெளியிட்டு அவற்றை அங்கீகரித்திருக்கிறன. அந்த முத்திரையின் படங்களையே இப்பதிவில் ஆங்காங்கே காண்கிறீர்கள்.




எண் சோதிடம்,கைரேகை சாஸ்திரம் என்பவற்றோடு ஒரு குழந்தை பிறந்த அந்த துல்லியமான நேரத்தை வைத்து பிள்ளையின் எதிர்காலத்தைக் கணிப்பிடும் முறை நம் பழந்தமிழ் பண்பாட்டில் இருக்கிறது.



சீனரிடம் புத்தபகவான் உருவாக்கியதாகச் சொல்லப்படும் ஒரு வித சோதிட நம்பிக்கை உண்டு. அது 12 மிருகங்களின் பெயரால் அழைக்கப்படுவதோடு  மரம். நெருப்பு, பூமி,உலோகம், நீர் ஆகிய 5 அடிப்படைகளில் இயக்கம் பெறுகிறதாக நம்புகிறார்கள். (அது பற்றி விபரமாக பின்னர் ஒரு தடவை பார்ப்போம்.)



அவுஸ்திரேலியர்களிடம் இன்னொரு விதமான சோதிட நம்பிக்கை உண்டு. அது 4 மூலக்கூறுகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது.அது பூமி, நீர், காற்று நெருப்பு ஆகியவையாகும். இவை 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டு மாத, திகதி அடிப்படையில் அவரவருக்கான இயல்புகள் சொல்லப்படுகின்றன.


பூமியும் நீரும் அது போல காற்றும் நெருப்பும் ஆகிய கூறுகளுக்குள் அடங்குபவர்கள் ஒருவரோடு ஒருவர் ஒத்துப் போவர் என்றும்: மாறாக நீரும் நெருப்பும் காற்றும் நிலமும் ஆகிய மூலக் கூறுகளுக்குள் அடங்குபவர்கள் ஒருவரோடு ஒருவர் பட்டுக் கொள்ளாமல் இருப்பர் என்றும் அவுஸ்திரேலிய சோதிட நம்பிக்கை கருத்துச் சொல்கிறது. ( நீர் பெருக நிலம் தேவை: நிலம் நீரால் செழுமை பெறும். நெருப்பு பரந்து விரிய காற்றுத்தேவை. பூமிக்கு காற்றால் எது பயனும் இல்லை. அது போல நீருக்குக் காற்றாலும் பயனெதுவும் விளைவதில்லை. மனிதப் பிரிவுக்குள்ளும் அதுவே அடிப்படை என்கிறது இவர்களது சோதிட ஞானம் மற்றும் நம்பிக்கை.



அந்த நம்பிக்கைகளைத் தமிழுக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் அறிமுகப்படுத்துவது இப்பதிவின் நோக்கமாகும்.



அதே நேரம் நீங்கள் புலம் பெயர்ந்து வாழ்பவராக இருந்தால் நீங்கள் வாழும் நாடுகளின் நம்பிக்கைகளை இங்கு பகிர்வதன் மூலம் இந்தப் பதிவை இன்னும் செழுமை பெறச் செய்யலாம்.

அவுஸ்திரேலிய பண்பாட்டு விழுமியங்களுக்குள் ஒன்றாகக் கருதப்படும் அவுஸ்திரேலிய சோதிட முறையை தைப்பொங்கல் வாழ்த்துக்களோடு இங்கே தருகிறேன். உங்களுக்கு அது எவ்வகையில் பொருந்திப்போகிறது என்பதையும் தான் ஒரு தடவை பாருங்களேன்.

கீழே வருபவை ஆங்கில ஆக்கம் ஒன்றின் தமிழாக்கம். பல விடயங்கள் சொல்ல இருக்கும் போதும் சுருக்கமும் செறிவும் கருதி சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.


மேடம்: 21 மார்ச் - 20 ஏப்பிரல் வரை.

மூலக்கூறு: நெருப்பு.
ஆளும் கிரகம் செவ்வாய்.
அதிஷ்ட தினம் செவ்வாய்,
பலம்: சக்தி, ஆர்வம், துணிச்ச, தன்னம்பிக்கை.
பலவீனம்: தன்னலம், கோபம், பொறுமை இன்மை.

இடபம்: 21 ஏப்பிரல் - 21 மே

மூலக்கூறு: நிலம்
ஆளும் கிரகம் வெள்ளி
அதிஷ்ட தினம்: வெள்ளி
பலம்: சார்ந்திருத்தல், இணைந்து செல்லுதல், மன உடல் உறுதி.
பலவீனம்: மாற்றங்களை எதிர் கொள்ளத் தயங்குதல்,


மிதுனம் 22 மே -21 ஜூன்

மூலக்கூறு: காற்று
அதிஷ்ட தினம்: புதன்
ஆளும் கிரகம்: புதன்
பலம்: மகிழ்வாய் இருத்தல், நல்ல தொடர்பாடல் திறன்,அனுசரித்து போகிற தன்மை
பலவீனம்: சுயநலம், அமைதியற்றிருத்தல், குழம்பிய மனநிலை



கடகம்: 22 ஜூன் - 23 ஜூலை

மூலக்கூறு: தண்ணீர்
அதிஷ்ட தினம்: திங்கள்
ஆளும் கிரகம்: சந்திரன்
பலம்: சூழலுக்கு தக்கவாறு தம்மை இசைவாக்கம் செய்து கொள்ளுதல், குடும்பத்தின் மீதான பற்றும் விசுவாசமும்.
பலவீனம்: தன் உணர்வுகளை வெளிக்காட்டாத தன்மை, சுடு சொல் பாவனை.


சிங்கம்: 24 ஜூலை - 23 ஓகஸ்ட்

மூலக்கூறு: நெருப்பு
ஆளும் கிரகம்: சூரியன்
அதிஷ்ட தினம்: ஞாயிறு
பலம்: இரக்கம், தலைமைத்துவத்தன்மை, இயல்பான உற்சாகம்
பலவீனம்: பொறாமை, விட்டுக் கொடாத தன்மை, அடக்கியாளும் தன்மை.


கன்னி: 24 ஓகஸ்ட் - 23 செப்ரெம்பர்

மூலக்கூறு: நிலம்
அதிஷ்ட தினம் புதன்
ஆளும் கிரகம் புதன்
பலம்: காரியத்தை முழுமையாகச் செய்து முடித்தல், புரிந்துணர்வு, சூழலுக்கேற்ப அனுசரித்துப் போதல்
பலவீனம்: எல்லாவற்றையும் மிக நுட்பமாக அவதானித்து பிழை காணுதல், அமைதியற்றிருத்தல், ஒரு காரியத்திற்கு இன்னொருவரில் தங்கியிருத்தல்.

துலாம்: 24 செப்ரெம்பர் - 22 ஒக்ரோபர்

(23 ஒக்ரோபர் வரை என சில குறிப்பிடுகின்றன)
மூலக்கூறு: காற்று
அதிஷ்ட தினம்: வெள்ளி
ஆளும் கிரகம்: வெள்ளி
பலம்: பொறுமை, சமநிலை பேணுதல், காதலும் மகிழ்ச்சியும்.
பலவீனம்: கவனமின்மை, அக்கறை இன்மை, உணர்வு வசப்படுதல்.

விருச்சிகம்: 23 ஒக்ரோபர் - 21 நவம்பர்  (22 ஒக்ரோபரில் இருந்து என சில குறிப்புகள் குறிக்கின்றன)

மூலக்கூறு: தண்ணீர்
அதிஷ்ட தினம்: செவ்வாய்
ஆளும் கிரகம்: புளூட்டோ
பலம்: நம்பத்தகுந்தவர்கள், விசுவாசம் உள்ளவர்கள், அன்பும் பொறுமையும் கொண்டவர்கள்.
பலவீனம்: பிடிவாதம், அன்பில் பொறாமை, உணர்வு வசப்படல்.

தணுசு: 23 நவம்பர் - 21 டிசம்பர்

மூலக்கூறு: நெருப்பு
ஆளும் கிரகம்; வியாழன்
அதிஷ்ட தினம்: வியாழன்
பலம்: அறிவு பூர்வமான சிந்தனை, உறவை மேம்படுத்தும் ஆற்றல் நேர்மை
பலவீனம்: கூர்மையான நாக்கு, மாறும் தன்மை, கவனமற்றிருத்தல்

மகரம்: 22 டிசம்பர் - 20 ஜனவரி

மூலக்கூறு: நிலம்
அதிஷ்ட தினம்: சனி
ஆளும் கிரகம்: சனி
பலம்: கடின உழைப்பு, பொறுப்புணர்வு, மனப்பலம், சுதந்திர மனப்பாண்மை
பலவீனம்: கோபம், தலைமைத்துவத்தை ஏற்க மறுத்தல், அடங்க மறுத்தல்.

கும்பம்: 21 ஜனவரி - 19 பெப்ரவரி

மூலக்கூறு: காற்று
ஆளும் கிரகம்: யுரேனஸ்
அதிஷ்டதினம்: சனி
பலம்: நட்புணர்வு, புத்திசாலித்தனம்,இரக்கமும் ஆதரவுமாயிருத்தல், நடைமுறையோடு ஒத்துப் போதல்
பலவீனம்: பொறுப்பற்றிருத்தல், முதல் தடவையில் எல்லாவற்றையும் எடை போட்டு விடுதல், தன் அபிப்பிராயத்தில் பிடிவாதமாயிருத்தல்.

மீனம்: 20 ஃபெப்ரவரி - 20 மார்ச்

மூலக்கூறு: காற்று
அதிஷ்ட தினம்: வியாழன்
ஆளும் கிரகம்: வியாழன்
பலம்: ஆடம்பர மோகமின்மை, அமைதியும் கோபம் வராத நிலையும், சிறந்த ஞாபக சக்தியும் புத்திக் கூர்மையும்.
பலவீனம்: உணர்வு நிலை ஊசலாடிக்கொண்டிருத்தல்,

Author: யசோதா.பத்மநாதன்
•2:39 PM
புத்தாண்டு வாழ்த்துக்கள்! 

புது வருஷத்தில் பிள்ளையார் சுழி போட்டு படலை திறக்கிறது ஈழத்து முற்றம்!



மாற்றங்கள் பல வந்து விட்டன. பண்பாட்டில், பழக்கவழக்கங்களில், அன்றாட வாழ்வில், வாழும் வழிகளில் என பல கூறுகளிலும் அது தன் இருப்பை காட்டி வருகிறது.

கால ஓட்டங்களில் பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பே! யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய வாழ்க்கை முறையில் சங்கடப் படலை என ஒரு வகையான வெளி வாசல் வேலியில் அமைக்கப்பட்டமுறை ஒன்று இருந்தது. இது ஒரு மறைந்து போகும் பாரம்பரிய அமைப்பு முறையாகும். நடை பயணமாக வரும் வழிப்போக்கர்களுக்குச்  சங்கடங்களை  தீர்க்கும் முகமாக அவை அமைக்கப்பட்டதால் அவை சங்கடப் படலை என காரணப் பெயர் பெற்றிருக்கலாம்.

அதன் அமைப்பு முறை படலைக்கு நிழல் கொடுக்கும்  வகையில் ஒரு கூரை அமைப்பு உயரத்திலும் பாதசாரிகள் இருந்தோ கிடந்தோ இளைப்பாறிப் போகும் வகையில் சீமேந்தினால் அமைக்கப்பட்ட மேடை கீழேயும் அமைந்திருக்கும். அருகில் மண்பானையில் குடி தண்ணீர் வைக்கப்பட்டிருந்தலும் மரபு. சில படலை அமைப்புகள் நிழல் மட்டும் கொடுத்த படி இருப்பதும் இயல்பு. அவை இப்போது வெகுவாக அருகி வருகின்ற போதும் சில இடங்களில் அவை இன்றும் புழக்கத்தில் இருக்கக் கானலாம். அவற்றின் சில படங்களைக் கீழே காண்க.

 (படங்கள்: நன்றி; கூகுள் இமேஜ்)











இவ்வாறே தெரு மூடி மடங்களும் அமைந்திருந்தன. தெருவையே மூடியவாறு அமைந்திருக்கும் கீழ்கண்ட இத்தகைய நிழலும் ஆறுதலும் தரும் அமைப்புடய வீதி ஒழுங்கைக் கொண்டிருந்த வாழ்க்கை முறை ஒரு கால கட்டத்தின் வடபகுதித் தமிழரின் ஒப்புரவான வாழ்க்கை முறைக்கு சாட்சியாக அமைந்துள்ளன.







கோயில் திருவிழாக்களின் போது தண்ணீர் பந்தல்கள் அவ்வாறான அமைப்பை ஒத்த வகையில் போடப்படுவதும் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு தாகசாந்தி செய்து அனுப்புதலும் தண்ணீர் பந்தல் போடும் தொண்டர்களின் சேவையின் பாற்படும்.



தண்ணீர் பந்தல் 

கூடவே தண்ணீர் தொட்டியும்  மாடுகள்முதுகு சொறிவதற்கான ஆவுரோஞ்சிக் கற்களும் (ஆ - மாடு, உரோஞ்சி - சொறிதல், கல் - கல்) ஆங்காங்கே பொது இடங்களில் சுமைகளோடு வரும் நடை பயணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த சுமைதாங்கிக் கற்களும் அம் மக்களின் வாழ்க்கை முறையினை சொல்லும் இன்னொரு அம்சமாகும். வாய் பேசா ஜீவன்களின் சங்கடங்களை அறிந்து அவைகளுக்கு தேவையான விடயங்களைப் பொது இடங்களில் அமைத்து வாழ்ந்து வந்த ஒரு வசந்த வாழ்க்கையினை சொல்லும் அந்த விடயங்கள் எல்லாம் இப்போது வெறும் காட்சிப் பொருளாக மாத்திரம் அமைந்து போனது காலத்தின் கட்டளை போலும்.




ஆவுரோஞ்சிக்கல்லும் மாடுகள் தண்ணீர் குடிப்பதற்கான தொட்டியும்

ஆனால், இந்தியாவிலோ சற்று வேறுபட்ட முறையில் அவை அமைக்கப் பட்டிருக்கின்றன. நம் ஊரில் காணப்பட்டிருக்கும் படலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் திண்ணை போன்ற அமைப்பு முறைகள் அங்கு வீட்டோடு சேர்த்து அமைக்கப்படிருப்பதை அவர்களின் பாரம்பரிய வீடுகளில் காணலாம்.

இந்திய வீட்டோடு கட்டப்பட்டுள்ள திண்னைகள்






ஆனால் நாற்சார வீடுகள் கேரளாவைப் போன்று இலங்கையிலும் சிங்கள தமிழ் மக்களிடையே பிரபலம் பெற்றிருந்த கட்டிடக்கலையாகும்....


ஆனால் இவ்வாறு இலங்கையின் வட பகுதியில் வீட்டுப் படலையோடு அமைக்கப்பட்டிருந்த கூரையும் திண்ணையும் சேர்ந்ததான அமைப்பு முறை அங்கு மட்டும் தனித்துவமாகக் காணப்பட அங்கு நிலவிய சாதி அமைப்பு முறையும் ஒதுக்கப்பட்ட மக்கள் தம் வீடுகளுக்கு வருவதைத் தடுப்பதற்காகவே அத்தகைய அமைப்புகள் அங்கு ஒரு கால கட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தன என்றும் தலித் எழுத்தாளர் டானியலும் பேராசிரியர்.சிவத்தம்பியும் கருதுவது இங்கு குறிப்பிடத்தக்கது. அவை ஆராய்ச்சி செய்து நிறுவுவதற்கு வேண்டியன.

இப்போது சிட்னி என் வசிப்பிடமாகி வருடங்கள் பலவாயிற்று. 30, 35 வருடங்களுக்கு முற்பட்ட பல வீடுகள் அழிக்கப்பட்டு அந்த இடங்களில் எல்லாம் தொடர்மாடி வீடுகள் முளைத்து வருகின்றன. இப்படியான மாற்றங்களை எதிர் கொள்வது பல வேளைகளில் சிரமமாக பார்க்க கவலை அளிக்கும் விடயமாக இருக்கிறது. 

என் வீடு அமைந்திருக்கிற பாதையில் உள்ள பல வீடுகளில் இருந்த பல மூதாதையர்கள் இடம்பெயர்ந்து மூதாதையர்கள் விடுதிகளுக்கு போகிறார்கள். போகிற போது இள வயதில் இருந்து தாம் வசித்து வந்த வீடுகளை தம் பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டோ, விற்று விட்டோ போகிறார்கள். கைமாறும் வீடுகள் மிக விரைவாகவே தன் சோபையை; பாரம்பரியத்தின் அழகை இழந்து அந்த இடத்தில் நவீன மோஸ்தரிலான வீடுகளும் தொடர்மாடிக் குடி இருப்புகளும் முளைத்து விடுகின்றன. கண்ணுக்கு முன்னால் நடைபெறும் இத்தகைய மாற்றங்களை பார்க்க பல வேளைகளில் கஸ்ரமாக இருக்கிறது.

நடந்து போகின்ற வேளைகளில் பூங்கன்றுகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டோ, களை பிடுங்கிக் கொண்டோ நிற்கும் மூதாட்டிகளை; புன்னகையோடு நலமா நீ என விசாரிக்கும் தோல் சுருங்கிய கிழவர்களை எல்லாம் இப்போதெல்லாம் காண முடிவதில்லை. அவர்கள் இருந்த இடங்களை போனோடு சல்லாபிக்கும் அருகாமைகளைக் கவனிக்காத; கவனிக்க விரும்பாத, கனவுகளில் மிதக்கும் இள முகங்களும் புது மோஸ்தரிலான வீடுகளும்.

அண்மையில் ஒரு வணிக சஞ்சிகையில் பார்த்தேன். ஒருவர் எழுதி இருந்தார்.தொழில்நுட்பம் வருவதற்கு முன்பான வாழ்க்கை முறையைக் கடசியாகச் சந்தித்த சந்ததி நாங்கள் தான் என்று. அதனால் தான் இதகைய வலியோ என்னமோ.

இரண்டையும்; இரண்டு விதமான வாழ்க்கை முறையையும் ஒரு வாழ்க்கைக் காலத்தில் - ஒரு மெலனியத்தில் சந்தித்திருக்கிறோம். 

இப்போதெல்லாம் அவற்றை அழிவதற்கிடையில் புகைப்படமாகச் சேமித்துக் கொள்ள தோன்றுகிறது. 

இவற்றை படமாக எடுக்கத் தோன்றியதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. அது இங்கு பிறந்த தமிழ் பிள்ளைகளுக்கு அவர்களுக்கு பிடித்த முறையில் தமிழையும் பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும் கற்பித்துக் கொடுக்க அவர்களுடய கண்களூடாக நம் நாட்டு வாழ்வியலைச் சொல்லிக் கொடுக்க நான் கையாள விரும்பும் ஒரு உத்தியும் இது வாகும். ( அது சம்பந்தமாகச் சேமிக்கத் தொடங்கிய பல புகைப்பட ஆவணங்கள் சேமிக்கப்பட்ட அரைவாசியில் நிற்கிறது. என் வாழ்க்கைக்காலத்துக்குள் அதனைச் செய்து முடித்து விட வேண்டும்.)

அவுஸ்திரேலிய பாரம்பரிய வீடுகளில் சில அதிசய ஒற்றுமைகள் உண்டு.(இனி வரும் படங்கள் நான் எடுத்தவை)

1. சங்கடப்படலை போன்ற அமைப்பு







படலைக்கு நிழல் தருவது போன்ற அமைப்பு இங்குள்ள பழைய வீட்டு அமைப்போடு கூடப் பிறந்தவை. ஆனால் அவை கொடி மலர்கள் படர வீற்றிருக்கும். அவற்றின் சில படங்களையே மேலே காண்கிறீர்கள்.

புகைக்கூடுகள்: அங்கும் இங்கும்

நம் ஊரிலும் புகைக்கூடுகள் இருக்கின்றன. இங்குள்ள பாரம்பரிய வீடுகளிலும் புகைக்கூடுகள் இருக்கின்றன. வெளித்தோற்றத்தில் புகைக்கூடுகள் துல்லியமாய் வெளித்தெரியும். ஆனால் இவை இரண்டுக்கும் உபயோகங்களில் பெருத்த வேறுபாடுண்டு. 

அங்குள்ள புகை போக்கிகள் சமையல் அறையில் இருந்து விறகடுப்பின் புகையை போக்க அமைக்கப்பட்டிருக்கும். இங்குள்ள புகை போக்கிகள் குளிர்காலத்து குளிரைப் போக்க வரவேற்பறைக்குள் விறகுகள் போட்டு எரிக்க பயன் பட்டு வந்தன. இவை கணப்படுப்புகள். இப்போதெல்லாம் இத்தகைய புகை போக்கிகளோடு வீடுகளை இங்கு யாரும் கட்டுவதில்லை. அதற்கான தேவையும் இல்லாது போயிற்று. அந்தப் பாரம்பரியத்தின் இடத்தை மின்சாரத்தில் இயங்கும் கணப்புகளும் குளிர் சாதனங்களும் நிரப்ப இப்போது வீட்டின் வெளிச் சுவர் புறமாக ஒரு சிறு கருவி மட்டும் வெளித்தெரிகிறது. 

அது வீட்டின் வெளிப்புற அமைப்பில் பாரிய வித்தியாசத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

இப்போதெல்லாம் மிக அபூர்வமாகக் காணப்படும் கணப்படுப்பு கொண்ட பாரம்பரிய அவுஸ்திரேலிய வீட்டின் படங்களைக் கீழே காண்கிறீர்கள்.






இவை எல்லாம்; இத்தகைய வீடுகள் எல்லாம் காலப்போக்கில்; இன்னும் என்ன மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு தசாப்தங்கள் கடந்தால் கூடக் காணக்கிட்டாது.



வெளி விறாந்தைகள் கொண்ட வீடுகள்




இவற்றோடு ஒத்ததான நம்மூர் வீடுகளின் படங்களை எடுக்க இன்னும் காலம் கனியவில்லை.



ஈழத்து முற்றத்திற்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நத்தார், புது வருட வாழ்த்துக்கள்! அன்பும் அமைதியும் சுபீட்சமும் எங்கும் நிறைவதாக!

     அன்பே சிவம் !