Author: ந.குணபாலன்
•11:27 AM






இது ஒரு சுவையான கவிதை. இதை எழுதியவர் நவாலியூர்ச் சோமசுந்தரப் புலவர் அவர்களின் மகனார் இளமுருகனார் ஆவார்.

செல்வஞ் செல்வாக்காய் வாழ்ந்த ஒரு சீமான். அவரைச் சார்ந்து வாழ வேண்டிய குமுகக் கட்டுப் பாட்டில் இருந்த பறை முழக்கம் செய்யும் ஒரு கலைஞர் .
பணத்தால் பெரியவர் மற்றவரை எதற்கோ கை நீட்டி அடித்து விட்டார். மற்றவரின் ஏலாத்தன்மை இங்கே கவிதையாகி வழிகிறது.

காரிரங்கும் கொடைமுதலி நீயொறு த்தால்
நானழுவேன், கலக்கமில்லை.
வாரிரங்கும் பறைமுகத்தில் வளைகோலால்
நின்மனையில் மெல்லத்தட்டில்....  
ஊரிரங்கும், உறவிரங்கும், மனையிரங்கும்,
பனையிரங்கும் உண்மை ஐயா!
ஓரிரங்கலன்றி மதி, திதி தோறும் 
இரங்கலெனில் யார் சமர்த்தன்?

விளக்கம்:
கொடையில் சிறந்த உம்மைக் கண்டு பொறாமை கொண்ட கருமுகில் அழும்.
அப்படிக்கொத்த இரக்க குணமுடைய குமுகத்தில் முதன்மையானவரே நீர் (ஒறுத்தால்)கோபித்தால் நான் அழுவேன், அதனால் ஒரு கலகமும் உருவாகாது.

எனது பறையை இழுத்துக் கட்டியிருக்கும் வார், நோக்காடு தாங்கேலாமல் அழுகின்றது. அப்படியான பறையின் முகத்திலே வளைந்த கோலால் நான் வந்து உமது  வீட்டிலே மெல்லத்தட்டினால் ( நீர் மண்டையைப் போடும் நேரம்)............

இந்த ஊரே அழும்,
உமது உறவுகள் அழும்,
உம்முடைய வீட்டார் அழுவர்,......


ஊரழும்..சரி...
உறவு அழும்..சரி...
வீட்டார் அழுவர்..சரி..

அதென்ன பனையிரங்கும்?
பனை அழுமாமோ ?
என்ன குறளிக் கதையிது?
கேளுங்கள் புலவரின் பகடியை....
பனை கள்+நீர்=கண்ணீர் சொரியுமாம். இவர் குடிக்க வேண்டிய கள்ளுத்தண்ணி  குடிப்பவர் இவர் இல்லாமல் வீனாகிச் சொரியுமாம்.

 
இது உண்மை ஐயா!
நீர் என்னை அடிக்க  நான் அழுவது ஒருமுறை மட்டுமே.
நான் பறையை அடித்தால் உம் வீட்டில் ஒருமுறை மட்டுமே ஒப்பாரிக்
குரல் கிளம்பும்? மாசாமாசம் வருகின்ற உமது செத்த திதிகளில் எல்லாம் ஒப்பாரிக் குரல் கிளம்புமே? அப்படிஎன்றால் யார் கெட்டிக்காரன்?

Author: மணிமேகலா
•2:43 AM



கடிதம் எழுதி, உறையிலிட்டு, முத்திரை ஒட்டி, முகவரி எழுதி, ஒரு செய்தி அனுப்பிய காலம் ஒன்று இருந்தது.

பதிலுக்காகக் காக்கி உடையோடு சைக்கிளில் வரும் தபாற்காரருக்காகக் காத்திருந்த காலங்களும் போயின.

தந்தி, தபாலட்டை, ஏரோகிறாம் முதலியன தொடர்பு ஊடகத்தின் ஆரம்ப கால செயல் பாட்டில் முக்கிய பங்கு வகித்தவை.  வீட்டுக்கு வீடு தொலைபேசி இல்லாதிருந்த காலத்தில் தபாலகம் ஒன்றே ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள இருந்த ஒரே வழி.

இன்றய சந்ததிக்கு தந்தி என்றால் என்னவென்றே தெரியாது என்னும் அளவுக்கு அது காலாவதி ஆகி ஆயிற்று பல வருடங்கள்.தொடர்பு சாதன வளர்ச்சி இல்லாதிருந்த காலத்தில் உடனடியாக ஒரு செய்தியை தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு அறிவிக்க இந்தத் தந்தி சேவை பயன் பட்டது. உதாரணமாக ஒரு அவசர செய்தியை தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு அனுப்ப வேண்டி இருந்தால் அனுப்புனர் தனக்கருகில் இருக்கும் தபாலகம் சென்று மிகச் சுருக்கமாக அனுப்ப இருக்கும் செய்தியையும் பெறுனரின் முகவரியையும் தபால் அலுவலருக்குத் தெரிவிப்பார்.தபால் அலுவலர் செய்தியைப் பெற்று சொற்களுக்கும் அனுப்பப் பட இருக்கும் இடத்துக்கும் (மைல் அளவு) ஏற்ற மாதிரியான கட்டணத்தினை அனுப்புனரிடம் இருந்து பெற்று பற்றுச் சீட்டை வழங்குவார்.



பின்னர் தபால் அலுவலர் அங்கிருந்து பெறுனரின் முகவரிக்கு அருகில் இருக்கும் தபாலகத்துக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு செய்தியையும் முகவரியையும் தெரிவிப்பார்.அங்கிருக்கும் அலுவலர் அதனைப் பெற்று உடனடியாக அந்தப் பெறுனரின் முகவரிக்குச் உரியவரை அனுப்பி செய்தியைக் கிடைக்கச் செய்வார். இதற்குச் சாதாரண தபால் கட்டணத்தை விட சற்று மேலதிகப் பணம் அறவிடப் படும். பொதுவாக திருமணவாழ்த்துச் செய்திகள்,பாராட்டுச் செய்திகள், ஏதேனும் ஒன்றின் முடிவுகள், குறிப்பாக மரண செய்திகள் இவ்வகையில் முக்கிய இடம் வகித்தன.

ஆனால் இன்று நான் குறிப்பாகச் சொல்ல வந்த விடயம் தபாலட்டை பற்றியது. தந்தி இப்போது வழக்கொழிந்து போய் விட்டதென்றால் தபாலட்டை வழக்கொழியும் தறுவாயில் இருக்கிறது என்றே தோன்றுகிறது.( இப்போதும் தபாலட்டை இருக்கிறதா?)

ஒரு நாட்டுக்குரிய வரலாறை, அழகை, தனித்துவத்தை,இயல்பை,கலைத்துவத்தை ஒரு புறத்தே படங்களாகக் கொண்டிருக்கிற தபாலட்டைகள் ஒரு விதம். அவை இன்றும் இருக்கின்றன.இனியும் இருக்கும் என்றே தோன்றுகிறது.




நான் சொல்ல வருவது அதுவுமல்ல.

இந்தத் தபாலட்டைகள் பகீரங்கமாகச் செய்தியைக் காவிச் செல்லும். உள்ளூருக்குள் உலா வருபவை.குறிப்பிட்ட விலைக்கு அவற்றைத் தபாலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.வெள்ளை நிற மட்டை. - அதன் மறு புறம் முகவரி எழுதுவதற்கான இடம் ஒரு புறமும் மேலும் செய்தி எழுதுவதற்கான இடம் மறு பாதியுமாக இருக்கும். அவற்றுக்கு முத்திரை ஒட்ட வேண்டியதில்லை. அதனை கொள்வனவு செய்யும் போதே முத்திரைக்கான பணமும் செலுத்தப் பட்டு விடும். ஆனால் காலப் போக்கில் அச்சடிக்கப் பட்ட தபாலட்டைகள் விற்பனை செய்து முடிவதற்கிடையில் அதன் பெறுமதி அதிகரித்து விடுவதால் மேலதிக முத்திரை ஒட்டி அனுப்பும் நிலைமையும் பின்னர் இருந்தது.

குறிப்பாக வானொலியில் பாடல்களை விரும்பிக் கேட்பதற்கு,போட்டி நிகழ்ச்சிகளுக்கான வினாக்களுக்கு விடை அளிப்பதற்கு,(குறிப்பாகப் போட்டி வைப்போர் இலகுவாகக் கணக்கிடவும் ,கண்டு கொள்ளவும், சேகரித்து வைக்கவும், நேர மிச்சத்துக்காகவும் சகாய விலை காரணமாகவும் இவை பெரிதும் வரவேற்கப் பட்டன; பயன்பட்டன.) அந்தரங்கமற்ற விடயங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு, மேலும் எல்லோரும் பார்க்கலாம் என்று எண்ணுகின்ற விடயங்களை குறைந்த செலவில் பரிமாறிக்கொள்வதற்கும் இவை நன்கு பயன் பட்டன.



அவை ஈழத்துக் கவிஞர்களுக்கும் நன்கு பயன் பட்டிருக்கின்றது என்பது தான் புதுச் செய்தி. அவை நம்மவரின் வாழ்வியலைப், பண்பாட்டை, ஒரு கால கட்டது மன இயலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருப்பதும்; அதற்குத் தபாலட்டை சிறந்த ஒரு ஊடகமாக இருந்திருக்கிறது என்பதும் தான் இன்றய ஈழமுற்றத்துச் செய்தி.

சில மாதங்களுக்கு முன்னர் “ ஓலை” ( ஜூன் 2003) என்ற கொழும்புத் தமிழ் சங்க இதழ் ஒன்று தபாலட்டைகளில் கவிஞர்கள் தமக்கிடையே பரிமாறிக் கொண்ட செய்திகளை வெளியிட்டிருக்கக் கண்டேன். அதிலிருந்து சில சுவையான பகுதிகள் இங்கே மறு பிரசுரமாகிறது. ( இவை மகாகவி பல்வேறு சந்தர்ப்பங்களில் தன் சக கவிஞ நண்பர்களுக்கு எழுதியவை. இவற்றை அவர் தன் டயறியில் குறித்து வைத்திருந்தார் என்ற குறிப்புக் காணப்படுகிறது)

அது ஒரு கால கட்டத்தில் ஈழத்துக் கலைஞரிடம் பூத்திருந்த அந்நியோன்னத்தையும் ஆத்மார்த்த அன்பையும் கூட அவை சித்தரிப்பனவாக இருக்கின்றன.

அவற்றில் சில கீழே.

1.சொற்கணக்குப் போட்டுச்
சுவை எடுத்துக் காட்டுகின்ற
அற்புதத்தைக் கண்டேன்
அலமந்தேன்! நிற்க
இறந்தாரையே ஏற்றுகின்ற
எங்களவர் நாட்டில்
அறந்தானோ நீ செய்த அன்பு?

(செ.கணேசலிங்கனுக்கு; 03.08.1955)

2.மெச்ச என்னாலும்
முடியாது! மெய்யாக
அச்சுக் கலைக்கோர்
அழியாத - உச்சி
அமைத்தாய்! அதன் அழகை
ஆரச் சுவைக்க
இமைக்காத கண்ணெனக்கு.

(வரதருக்கு; 19.07.1955)

பாட்டெழுதச் சொல்லிப்
படித்து விட்டுப் போற்றி அதை
ஏட்டில் அழகாய் அச்
சேற்றுவையே! - கேட்டுக் கொள்
என்னை எழுத்துத் துறையில்
இறக்கி விட்ட உன்னை
மறக்காதுலகு.

(அ.செ.முருகானந்தனுக்கு 26.07.1955)

3.ஊருறங்கும் வேளை
உறங்காமல் நாமிருந்தும்
சேருகிறாள் இல்லைச்
செருக்குடையாள்! - வரா அவ்
வெண்டாமரையாள்
விரைந்தாளோ தங்களிடம்?
கொண்டாடு நண்பா
குதித்து!

(நீலாவாணனுக்கு பெண் மகவு பிறந்தமைக்கு 15.08.1957)

(மகாகவிக்கு 3 ஆண்பிள்ளைகள் என்பதும்; சேரன்,சோழன்,பாண்டியன் என்பது அவர்களது பெயர் என்பதும்; மகளவைக்கு இனியாள், ஒளவை என்ற பெயர்கள் என்பதும் பலரும் அறிந்ததே)

4.பாட்டுப் படைக்கும்
பெரியோரை மக்களுக்குக்
காட்டி அவர் தம்
கருத்துகளை - ஊட்டும்
பணியில் மகிழ்வெய்தும்
பண்பாளர்க்கெங்கே
இணை சொல்ல ஏலும் எனக்கு!

(கனக.செந்திநாதனுக்கு 09.12.1958)

5.உள்ளதற்கும் மேலே
உயரப் புகழ்கின்ற
வள்ளல்! என் நன்றி;
வரக் கண்டேன் - பள்ளத்தில்
ஓடும் நீர் போல
ஒழுகும் அருங்கவிதை
பாடும் நீர் யாத்துள்ள பாட்டு.

(முருகையனுக்கு 06.05.1958)

6.தேன் தோண்டி உண்டு
திளைத்திடுக;பேரின்ப
வான் தேடி நும் வீட்டு
வாயிலிலே வந்தடைக;
தான் தோன்றிப் பாடும்
தமிழ் போல வாழ்க; இவை
நான் வேண்டுவன் இந் நாள்.

(சில்லையூர்.செல்வராசனின் திருமணத்திற்கு 09.01.1960)

இப்போது மின் தபால், S.M.S என்றும் தொலைபேசி என்றும் ஸ்கைப் என்றும் பல சாதனங்கள் வந்து விட்டதாலும் சமூக வலைத்தளங்கள் பெருகி விட்டதாலும் பாரம்பரியத் தபால்களின் பண்பாட்டுப் பெறுமதி கால வெள்ளத்தோடு கரைந்து போகிறது.

பழையன கழிதலும் புதியன புகுதலுமாய் வாழ்வும் நகர்கிறது............................

ஈழமுற்றத்துச் சகோதர உள்ளங்களுக்கு புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்!






Author: கானா பிரபா
•2:13 AM
ஈழத்துச் சிதம்பரம் என்று போற்றப்படும் இலங்கையில் வடபால் அமைந்துள்ள காரைநகர்ச் சிவன் ஆலயத்தில் மார்கழித் திருவாதிரை நிகழ்வுகளில் இன்று ரதோற்சவ நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்வை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வாயிலாகச் சமகாலத்தில் நேரடி ஒலிபரப்பாக எடுத்து வந்திருந்தோம்.

இலங்கை நேரம் காலை 7.30 மணி முதல் காலை 10 மணி வரை நடைபெற்ற இந்த நேரடி நிகழ்வை ஒருங்கமைத்து உதவியவர் நம் சக வலைப்பதிவர் விசாகன் குமாரசாமி. கடந்த ஆண்டும் இந்த நிகழ்வை வானொலியில் வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஈழத்தில் இருந்து சைவமணி திரு சண்முகரத்தினம் அவர்கள் வெகு சிறப்பாக நேரடி அஞ்சல் வர்ணனையைச் செய்து வழங்கியதோடு அவருடன், புலவர் குமாராசாமி அவர்களும், தமிழருவி சிவகுமாரன் அவர்களும் இணைந்து சிறப்பித்திருந்தனர்.

இந்த இரண்டரை மணி நேர நிகழ்வின் சில பகுதிகளை இங்கே தருகின்றேன்.

KaraiSivan by kanapraba




விசாகன் குமாரசாமி இந்த நேரடி ஒலிபரப்பில் வழங்கியிருந்த ஈழத்துச் சிதம்பரம் காரைநகர்ச் சிவனின் நடராஜ மூர்த்தம் குறித்த பகிர்வின் எழுத்து வடிவம்


நேரடி அஞ்சலை தாயகத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த விழாவின் நாயகன் கனகசபையின் கண் வீற்றிருந்து நல்லாட்சி அருளுகின்ற சிவகாம சுந்தரி சமேத சிவசிதம்பர நடராசப் பெருமான். அதுவும் ஈழத்துச் சிதம்பரத்தில் அமைந்திருக்கும் நடராஜ மூர்த்தம் மிகவும் பிரசித்தமானதும் அழகியல் நுட்பங்களையும் கொண்டது.

இடது பதம் தூக்கி ஆடுகின்ற மிடுக்கான, கம்பீரமான பேரெழில் கொஞ்சும் தோற்றம். திருநாவுக்கரசரின் குனித்த புருவம், கொவ்வைச் செவ்வாய், குமிண் சிரிப்பு, பனித்த சடை, பவளம் போன்ற மேனி, எடுத்த பொற்பாதம் என்ற பாடலின் பொருள் காரைநகர் சிவன் கோவில் நடராசர் சிலை என்றால் அது மிகையல்ல.

நடராஜர் சிலையில் 51 சுடர்கள் இருக்கின்றன. இவை திருவாசகத்தின் 51 பதிகங்களை நினைவூட்டுகின்றது. அபிசேகத்தின் போது உடுக்கை ஏந்திய கையிலும் அக்கினி ஏந்திய கையிலும் இருந்து வழிகின்ற திரவியங்கள் நேரே வியாக்கிரபாதர், பதஞ்சலி முனிவர்களது தலையில் வீழும். முயலகனை அழுத்தி இருப்பது அவரது வலது கால்ப் பெருவிரல் என்பது இங்கே மிக நுணுக்கமாக படைக்கப்பட்டிருக்கிறது.

இந்த எழிலுரு தோற்றத்தை தமிழகத்தில் வருகை தந்த பல அறிஞர்கள் கூட விதந்து போற்றினார்கள். மு. பாஸ்கரத் தொண்டைமான் என்கின்ற அறிஞர் இப்படியான அழகியல் நுணுக்கம் கொண்ட நடராஜர் சிலையை தான் வேறெங்கும் பார்த்ததில்லை என தமிழகத்தின் ஒரு சஞ்சிகையில் எழுதியுள்ளார்.

இந்த நடராசருக்கு அழகிய மஞ்சள் நிறத்திலான செவ்வந்தி மலர்களாலான சாத்துப்படி சிறப்பானது. முடியிலே 5 கொண்டை மாலைகளும், கையிலே தேசிக்காயும், இடையிலே புலித்தோல் போர்த்திய மேனியும், பல அடுக்குகளைக் கொண்ட செவ்வந்தி மலர் மாலைகளால் ஆன கீழ்ச்சாத்துப்படியும் இரட்டைத்திருவாசியும் கொண்ட தோற்றத்தை வர்ணிக்க வார்த்தைகளில்லை. காணக் கண் கோடி வேண்டும் என்பது இதனைத்தான் என்பது சாலப் பொருத்தமே.



புகைப்படம் நன்றி: காரை வசந்தம்
Author: வர்மா
•6:18 AM
வரலாற்றுச்சிறப்புமிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய‌த்தில் அமைக்கப்பட்ட‌ 33அடி உயரபிரமாண்டமானசிவன் சிலை









படஉதவி சேனையூர் அச்சுதன்


படஉதவி :சேனையூர் அச்சுதன்
Author: கரவைக்குரல்
•10:54 AM
கலை என்பது ஒரு ஊடகம் என்று கூட சொல்லலாம்,அவரவரின் ரசனைகளுக்கு தீனி போடும்படியாக கலைகள் அமைந்துவிடுவதும் அவையே மக்கள் மத்தியில் இடம்பிடித்துவிடுவது தான் வழமை,அப்படியான கலைகளும் மக்களுக்கு செய்திகளை கொண்டு செல்லும் ஒரு ஊடகமாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
அவை அதாவது மக்களுக்கு எடுத்துச்செல்லவேண்டிய கருத்துக்களை சாதாரணமாக பேச்சுக்களால் சொல்வதைவிடுத்து அவற்றை ஏதாவது இசைவடிவிலோ அல்லது ஏதாவது ஒரு கலை ஊடகத்தின் வாயிலாகவோ சொல்லுவதன் மூலம் அந்தந்த விடயங்கள் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைவதோடு ஆணித்தரமாக மனதில் இடம்பிடித்துவிடும் என்பதையும் மறுக்க முடியாது,
ஓவியங்கள்,நாடகங்கள்,வில்லிசைகள்,பல்வேறு கருத்துக்களை சுவாரஷ்யமாக அலசும்.பட்டிமன்றங்கள் போன்ற கலைகள் இவற்றில் முக்கியமாக நினைவில்வருகின்றன.

அந்த வகையில் தாயகத்தில் சிறந்த ஒரு கலை தான் வீதிநாடகம், நாடகங்களின் வகைகளுக்குள் இவற்றையும் அடக்கலாம் எனினும் இந்த வகையான நாடகங்களுக்கு ஒரு தனிப்பட்ட சிறப்பான இடம் உண்டு,சில வேளைகளில் எந்த வித அலங்காரங்களுமின்றியே நடிகர்கள் மேடையேறிவிடுவதுண்டு.உண்மையில் நாடக நடிகர்களுக்கு தங்கள் நடிப்புத்திறனை வெளிக்காட்டுவதில் வீதி நாடகத்தில் கொஞ்சம் சிரமம் என்று தான் நான் சொல்வேன்,ஏனென்றால் அதில் எந்த வித உடையலங்காரங்கள் மற்றும் மேடை அமைப்புக்களின்றி நடத்தும் நாடகமாதலால் கொஞ்சம் கடினம் தான்.தங்களை நடிகர்கள் என்று அடையாளப்படுத்துவதற்காக தங்கள் தலைகளிலோ அல்லது இடுப்பிலோ ஏதாவது நிறத்துடன் கூடிய துணியைக்கட்டிக்கொள்வர், கூடுதலாக மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறமுடைய துணிகளை கட்டியிருக்கவே கண்டிருக்கிறேன்.அதனோடே முடியும் வரை நடித்துவிட்டு வெளியேறுவர்,அதேபோலத்தான் அந்த அந்த பாத்திரங்களுக்கு ஏற்றபடியே சாதரண உடைகள் அணிந்து சிலர் வருவர் மேடைகளில்,
இதிலென்ன சிறப்பம்சமென்னவெனில் சிறிதளவும் ரசிகர்களை முகம் திரும்பாதபடி அவர்களின் நடிப்புத்திறன் இருக்கும்,அத்துடன் பார்வையாளர்கள் வட்டவடிவமாக சூழ்ந்து இருப்பதால் நடிக்கும் வேளைகளில் விடப்படும் எந்தவொரு சின்னத்தவறும் கூட பார்வையாளர்களால் உணரப்படுமென்பதால் மிகக்கவனமாக நடிகர்கள் இருக்க வேண்டும்,இதனாலேயே கொஞ்சம் சிரமம் என்றேன்,இவை எல்லாவற்றையும் விஞ்சி மக்களின் ரசனைக்கு ஏற்றபடியே நடித்து வெளியேறுவர் நடிகர்கள்.

பொதுவாக வீதி நாடகத்தின் கருவாக அந்த அந்த காலத்திற்கு ஒப்பான கருவையே தெரிந்தெடுப்பர்.சாதரணமாக நாடகங்களாக இருந்தால் இலக்கியக்கதைகளோ அல்லது புராணக்கதைகளோ அல்லது வாழ்வியல் கதைகளோ அவற்றை அலங்கரிக்கும்,ஆனால் வீதி நாடகங்களில் ஏதாவது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஊட்ட வேண்டும் என்றோ அல்லது அரசியல் நிலைகளை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்றோ சிந்திப்பதால்தான் வீதிநாடகத்தை தெரிவுசெய்வர் இயக்குனர்கள்.அது மட்டுமல்ல இலகுவாக விரைவாக கருத்துக்கள் மக்களை அடைய வேண்டும் என்று சிந்திப்பவர்கள் தெரிவுசெய்யும் கலைதான் இந்த வீதிநாடகம்.
உதாரணத்திற்கு சுற்றுச்சூழல் பாதிப்பு [பற்றி மக்கள் மத்தியில் அவசரமாக உணர்த்த வேண்டிய கட்டாயம் உணரப்படுமிடத்து இந்த வீதி நாடகம் தெரிவுசெய்யபடும் எனபதில் மறுப்பிற்கு இடமில்லை.

அது மட்டுமல்லாமல் இவை மக்களை நோக்கி இது கொண்டு செல்லபடும்.பெரிய பெரிய நாடகங்கள் என்றாலோ அல்லது பெரிய பெரிய மேடைகளில் இடம்பெறும் நாடகங்கள் என்றாலோ அவற்றை சகல பாமர மக்களுக்கும் பார்ப்பதற்கோ அல்லது ரசிப்பதற்கோ கிடைக்கும் என்று சொல்ல முடியாது,அதனால் அப்படியான மக்களை நோக்கி இந்த வீதிநாடகம் வீதி வீதியாக சென்றுகொண்டிருக்கும்,இதன் மூலம் மக்களின் ரசனைக்கும் தீனி என்பதோடு அவர்களுக்கு செல்ல வேண்டிய கருத்தும் சென்றுவிடும் எனபது தயாரிப்பாளர்களின் யுக்தி,
அது மட்டுமல்லாமல் இந்த நாடகங்களில் இடம்பெறும் வசன நடைகள் ஒருபோதும் மக்களில் பேச்சுமொழியைவிட்டு விலகமாட்டாது.சாதரண வாழ்க்கையில் புழக்கத்தில் உள்ளவற்றை மட்டுமே நாடக உரையாடல்களில் அவதானிக்கமுடியும்,இவயெல்லாம் இந்நாடகத்தின் சிறப்புக்கள்

இவற்றிற்கெல்லாம் எப்பொழுது எங்கு இடம்பெறும் என்றெல்லாம் முதலே அழைப்புவிடுவதுமில்லை,பிரச்சாரம் செய்வதுமில்லை,சுவரொட்டி ஒட்டுவதுமில்லை,திடீரென ஒலிபெருக்கியில் ஒலிக்கும் ”அன்பார்ந்த ....... மக்களே இன்று மாலை மூத்தவிநாயகர் ஆலய முன்றலில் ”புதுயுகம் காண்போம்” வீதி நாடகம் இடம்பெறவிருப்பதால் அனைத்து மக்களையும் மிக வேகமாவே வந்து கூடுமாறு பணிவாக வேண்டுகிறோம்,அந்த அறிவித்தலை மீண்டும் ஒருமுறை அறியத்தருகிறோம்” என்றவாறாக உடனடி அழைப்பாக மீண்டும் மீண்டும் அழைக்கும் ஒலிபெருக்கி அழைப்பில் ஊர் மக்களெல்லோரும் ஒன்றாகிவிடுவர். வீதி நாடகங்களின் சுவாரஷ்யமும் அதனூடாக தரப்படும் சிறப்பான விடயங்களும் மக்களின் வேகமான வருகைக்கான முக்கிய காரணங்கள்.(இங்கு குறிப்பிட்ட விடயம் மற்றும் நாடகத்தின் பெயர் எல்லாம் அறிவித்தலின் நடையை குறிப்பிடும்போது அதன் படியே கூறப்பட்டதே ஒழிய இது உண்மையாக இடம்பெறும் என்று எல்லோரும் அங்கங்கு இருக்கும் மூத்தவிநாயகருக்கு சென்று விடாதீர்கள்,ஹிஹிஹி)

இந்த வீதிநாடகம் ஐரொப்பிய மண்ணிலும் எம்மவர்களால் அரங்கேற்றப்பட்டது 
பற்றி அறியக்கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது
உணர்வுகளையும் எம்மவர்களின் கருத்துக்களும் அதில் பிரதிபலித்ததாக அறிய முடிந்தது,வீதி நாடகம் அங்கும் வீதிகளில் இடம்பெற்றமை அதன் சிறப்புக்களையும் அதன்மூலம் மக்களுக்கு கருத்துக்களை 
இலகுவில் அடையச்செய்யலாம் என்பதையும் உறுதிபடுத்தியிருக்கிறது.

இவ்வாறாக ஈழத்தில் இடம்பிடித்த கலைகளில் வீதி நாடகத்துக்கும் ஒரு சிறப்பான இடம் இருக்கிறது என்பதை உணரமுடியும்.இப்படியான கலைகள் என்றும் அழியவிடாது பேணிக்காக்க வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம். என்னதான் நாகரிகமான கலைகள் மற்றும் வீட்டிலுருந்தவாறே எல்லாம் பார்த்துவிடலாம் என்றவாறாக அமைந்த சில சீரழிக்கும் கலைகள் வந்தாலும் இப்படியான கலைகள் என்றென்றும் வாழ எல்லோரும் தயாராக வேண்டும.தயாரிப்பாளர்கள் தயாராகும் அதேவேளை ரசிகர்களின் ரசனையும் இப்படியான கலைகளின் சிறப்பை உணர வேண்டும்.

படம் ஆழியூரானின் நடைபயணத்திலிருந்து வீதி நாடகத்தின் அமைப்பை உணர்த்த வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டது
இது ஈழத்துமுற்றத்துக்கான எனது மீள் பதிவு.உங்கள் கருத்துக்களையும் பதிவுசெய்யுங்கள்

Author: மாயா
•3:33 AM

ஒலிப்பேழை : விக்டர் அன் சன்ஸ் மியூசிக் சென்ரர்யாழ் நகர்
Dingiri and Sivaguru 02 by mayunathan
Author: விசரன்
•1:28 PM
1984 -85 ம் ஆண்டின் இறுதிக் காலங்கள், இழக்கப்போகும் பெறுமதிமிக்க  காலங்களைப் பற்றிய எதுவித அறிகுறிகளுமில்லாமல்  ஓடிக்கொண்டிருந்தது. ஊருக்குள் பிரச்சனைகள் மெதுவாய் தொடங்கியிருந்த காலம்.  19 - 20 வயதுக்கான எவ்வித முதிர்ச்சியும் இன்றி, எவ்வித கனவுகளும் இன்றி, பல்கலைக்கழக  அனுமதிக்கான பரீட்சை எழுதிவிட்டு, பெறுபேறுகளுக்காகக் காத்திருந்தேன்.


சிங்கள நண்பர்கள் பலர் ஊரைவிட்டு மெது மெதுவாய் இடம் பெயர, இஸ்லாமிய நட்புகளும் பிரச்சனைகளின்  காரணமாக தொலைந்து கொண்டிருந்தன. இருப்பினும் துணிந்தவர்கள் சிலரின் நட்புகள் மங்கலான மாலைப் பொழுதுகளில் தொடரத்தான் செய்தன.
ஒன்றாய் பழகிய மூவின நட்புகளும் தனித்தனியே தொடர்பில்லாது தம்வழியே சென்றுவிட்டாலும், நட்பு என்னும் சொல் மட்டும் தனது தன்மையை இழக்காதிருந்தது என்பது பல ஆண்டுகளின் பின் தான் எனக்குப் புரியும் என்பது எனக்கு அன்று தெரியாதிருந்தது.
ஒரு புறம் தமிழ் முஸ்லீம் கலவரங்கள், இராணுவத்தினரின் கெடுபிடிகள், இயக்கங்ளின் வீரப்பிரதாபங்கள் என எமது ஊரின் காற்றில் கூட விறுவிறுப்பு கலந்திருந்த காலமது. கைதுகளும், மரணங்களும் பழகிப்போயின. நண்பர்கள் தீடீர் என காணாமல் போய் முறுகிய உடம்புடன் இறுகிய பார்வையுடன் 4 -5 மாதங்களின் பின் பின்மாலைப் பொழுதுகளில் வந்து சந்தித்தனர். ஒரு சிலர் இடுப்பில் இருந்த சில ஆயுதங்களையும் காட்டினர். சிலர் கொள்கைப்பரப்புரைகளும் செய்தனர். 

சகோதர முறுகுநிலை தொடங்கியிருந்தது. நண்பர்களாய் இருந்தவர்களும் முறாய்த்துக்கொண்டனர். அல்லது முறாய்க்க கட்டளையிடப்பட்டனர்.

ஒரு நாள் மட்டக்களப்பு ரஷீடியாஸ் குளிர்பானக்கடையினுள் எமக்கும் ஒரு ”அண்ணர்” வகுப்பு எடுத்தார். தமிழீழ விடுதலை ராணுவம் என்றார். அரசியற்பிரிவு, ராணுவப்பிரிவு, முழுநேரப் போராளி, பகுதிநேரப் போராளி என்றார். நான் பகுதிநேரம் என்றேன். எனது பெயர் விபரம் எழுதிப் போனார். பின்பொருநாள் ஏறாவூர் ரயில்நிலையத்தருகில் ஒரு கைத்துப்பாக்கியையும் காட்டினார். அதன் பின்பு அவர் வரவும் இல்லை. அவர் வரவில்லை என்று நான் கவலைப்படவும் இல்லை.

ஒரு முறை ”ஹர்த்தால்” என்று சுவரொட்டி எழுதவேண்டியேற்பட்டது. அழகான கையெழுத்தை கொண்டிருந்த ஒரு நண்பனை காட்டுக்குள் அழைத்துப்போய் சுவரொட்டியை எழுதவைத்தோம். அதுவே அவன் தொழிலாகியது பின்னாலில். எல்லா இயக்கங்களுக்கும் அவனே சுவரொட்டி எழுதினான். அந்த சுவரொட்டியை ஒட்டுவதற்கிடையில் நான்கு தடவைகள் மூத்திரம் போயிருப்பேன்.

தினமும் ஒருவர் வீதிக் கம்பத்தில் தலை சரிந்து கிடந்தார். ஊராரும் சிவப்பு நிறத்தில் இருந்த நோட்டீஸ்களை நம்பத் தொடங்கயிருந்த காலம். வீதிக்கம்பத்தில் சரிந்திருந்தவர்கள் எல்லோரும் குற்றவாளியாக்கப்பட்டார்கள். அவர்களை சரித்தவர்களின் குற்றங்கள் பற்றி யாரும் பேசமுன்வரவில்லை. எவரும் கொல்லப்பட்டவர்களின் வலியை கண்டுகொள்ளவும் இல்லை.  கொலைசெய்யப்படுவதற்கு முன்னான வினாடியில் கூட தான் மன்னிக்கப்படலாம் என்று அவர்கள் எண்ணியிருக்கக்கூடும். துப்பாக்கியின் விசை அழுத்தப்படுதை காணும் போது அவர்கள் தமது குடும்பத்தை, குழந்தையை, காதலியை நினைத்திருக்கக்கூடும். சில வேளைகளில் ”நாசமாய்போவீர்கள்” என்றும் சபித்திருக்கவும் கூடும்.
ஒரு ‌முறை பெருங்கலவரம் மூண்டது தமிழர்களுக்கும், இஸ்லாமியர்க்கும் இடையில். எனது ஊர் எல்லையில் இருந்ததால், ஊரே இடம் பெயர்ந்தது. வந்தாறுமூலையில் உள்ள கிழக்குமாகாண பல்கலைக்கழகம் அகதிமுகாமனது. வீடு வீடாய் சென்று உணவு சேகரித்துவரக் கட்டளையிட்டார்கள் ”அண்ணா”க்கள். மாலையில் கத்தி, கோடாலி, அலவாங்கு, திருக்கைவால் போன்ற ஆயுதங்களுடன் செங்கலடிச்சந்ந்தியில் காவல் வேறு போட்டார்கள். நாங்கள் அருகே இருந்த ஒரு பேக்கரிக்குள் 304 விளையாடிக்கொண்டிருந்தோம்.
நண்பர்கள் சிலர் வெளிநாடு போயினர். சிலர் ”கப்பலுக்கு” போயினர். நாங்கள் சிலர் மட்டும் எங்கும் போகவில்லை. எங்கு போவது என்றும் எமக்குத் தெரிந்திருக்கவில்லை. நாம் குந்தியிருக்கும் சந்திக்கு ஆமி வரும்போது ஓடுவதும், அவர்கள் அங்கிருந்து அகன்றதும் நாம் திரும்பி வருவதும் வழமையாகியது.
இப்படியான நாட்களில் தான் ஊரில் இருந்தால் பிரச்சனை என்பதால் அம்மா என்னை இந்தியா அனுப்ப  யோசித்தார். இதை அறிந்த இரு நண்பர்களும் என்னுடன் இணைந்துகொள்ள இந்தியாப் பயணம் தொடங்கிற்று.
தெரிந்த பெரியவர் ஒருவருடன் நாம் கொழும்பு போய்,  அங்கிருந்து வீசா எடுத்து இந்தியா போவது போல் ஒப்பந்தமாகி நண்பர்களின் பெரும் பிரியாவிடையுடன் 1985ம் ஆண்டு கார்த்திகை  மாதத்தின் இறுதி நாட்களில் ஒரு நாள், காலைப் புகையிரதத்தில் கொழும்பு நோக்கிப் புறப்பட்டடோம். புகையிரதம் எமது Eravur United விளையாட்டுத்திடலைக் கடந்த போது, தரிசாய் கிடந்த நிலத்தை மூவின நண்பர்களும் சேர்ந்து செப்பனிட்டு விளையாடிக்களித்த நாட்கள் நினைவிலாடியது.

அன்றைய  அந்தப் பயணம் , ஒரு பெரும் பிரிவின் தொடக்கம் என்பதும், அதுவே என் வாழ்வினை நிர்னயிக்கப்போகிறது என்பதும் எனக்கு புரிந்திருக்கவில்லை அன்று. ஒரு சாதாரணப்பயணம் போலிருந்தது அது. பெரும் பயணங்கள் அனைத்தும் சாதாரணமாகவே தொடங்குகின்றனவோ என்னவோ?
வெய்யில் காய்ந்து, காற்றும் காய்திருந்திருந்த தென்னைமர தோட்டங்களினூடாகவும், வெட்ட வெளிகளினூடாகவும் புகையிரதத்தின் வேகத்தில் தலைமுடி காற்றிலாட, காலம் செய்யப் போகும் கோலத்தினை உணராமல் பயணித்துக்கொண்டிருந்தேன். புகையிரதம் எதையும் கவனிக்காமல் கட கட கடவென ஓடிக்கொண்டிருந்தது, வாழ்வைப்போல்.
இருபத்திஏழு ஆண்டுகளின் பின்பான இன்று இதை எழுதிக்கொண்டிருக்கும் போது ஊரின் வாசனையையும் காட்சிகளையும், நட்பின் ஈரத்தையும், காற்றின் வெம்மையையும் மனம் நுகர்ந்ததை உணர்கிறேன். ஏகாந்தமான அனுபவம், அது. என் குழந்தைகளின் வாசனையை நான், குழந்தைகளின் அருகாமையின்றியே அறிவது போன்றது அது.
காலமும், வாழ்வும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. நினைவுகளைச் சுமந்தபடி அவற்றுடன் பயணித்துக்கொண்டிருக்கிறேன் நான். நீங்களும்தான்.
இன்றைய நாளும் நல்லதே!.

visaran.blogspot.com