Author: Unknown
•1:57 PM
எனக்குத் தெரியும். நான் ஏதோ பெம்பிளைப் பிள்ளையளுக்கு கண்ணாடி வளையல் வாங்கிக் குடுத்த கதை எழுதப் போறன் எண்டுதான் முக்கால்வாசிப் பேர் ஓடி வந்திருப்பியள் எண்டு. இது அதைப் பற்றின கதை இல்லைப் பாருங்கோ. அய்.. பாக்க வச்சேன் பழுக்க வச்சேன் பண்டிச் சோறு தின்னவச்சேன்.. வளீக்ஸ் வளீக்ஸ். இது வேற கதை.

உங்கள் எல்லாருக்கும் 'அங்கிறி' எண்டால் என்னெண்டு தெரியும்தானே. தெரியாட்டி உங்கட மரமண்டையளில எல்லாரும் ஒவ்வொரு குட்டு வச்சுக் கொள்ளுங்கோ. சின்ன வயசில நீங்கள் 'கோவம்' போட்டிருப்பியள் இல்லாட்டா ‘டூ' விட்டிருப்பியள், இல்லாட்டா ‘காய்' விட்டிருப்பியள். சரிதானே. இத வடிவா விளங்கப் படுத்த ஒராளைத் துணைக்குக் கூப்பிடுவமன். அந்தாள் எங்கடை வந்தியண்ணா. இப்ப நான் வந்தியரோட கோவம் போட்டால், வந்தியர்தான் என்ர அங்கிறி தெரிஞ்சுதோ.

பத்துப் பதினோராம் வகுப்பு வருகிற வரைக்கும் இந்த அங்கிறிப் பிரச்சினை இருக்கும். அங்கிறியின்ர சைக்கிள் என்ர சைக்கிளில முட்டினால், கன நாளா துடைபடாமல் தூசி படிஞ்சு கிடந்த சைக்கிள் அண்டைக்கு எண்ணை தண்ணி எல்லாம் போட்டுத் துடைபடும். அங்கிறியின்ர கொப்பியும் என்ர கொப்பியும் முட்டுப்பட்டால், என்ர கொப்பி உறை கிழியும். அங்கிறி என்ர உடுப்பில முட்டுப்பட்டால், உடுப்புக் கிழியும் எண்டு சொல்லுவன் எண்டு நினைச்சியளே, ‘உஃபு, உஃபு' எண்டு ஊதி விட்டுக்கொள்ளுவம். அதே போலத்தான் அங்கிறியின்ர உடம்பும், எங்கட உடம்பும் முட்டினாலோ, ஏன் அங்கிரி எங்களைக் கடந்து போகேக்க வாற காத்துப் பட்டாலோ ஒரே ‘உஃபு உஃபு' தான்.

இதில பெரிய பகிடி, அஞ்சாம் வகுப்புக்கு முன்னம் பெட்டையள், பொடியங்கள் (பெண்கள், ஆண்கள் எண்டு சொல்லோணும். சொல்லாட்டா ராசசுலோசனா ரீச்சரும், மாலியக்காவும் தோலுரிச்சுப் போடுவினம்) முட்டுப் பட்டாலும் இதே 'உஃபு உஃபு' கட்டாயம் இருக்கும். சில வேளை பொடியளின்ர கொப்பியளை பெட்டையளும், பெட்டையளின்ர கொப்பியளை பொடியளும் திருத்த வேண்டி வரும். அப்பிடித் திருத்தி திருப்பிக் குடுக்கிற கொப்பியளையும் ஊதித்தான் தீட்டுக் கழிப்பம். அதெல்லாம் ஒரு காலம்.

அது சரி, இந்த அங்கிறி, ‘உஃபு உஃபு' இதுக்கிள்ள வளையல் எங்க வந்தது எண்டு கேக்கிறியள் அப்பிடித்தானே. கதை சொல்லேக்கை நான் ஊரெல்லாம் சுத்தித்தான் வருவன். எங்க சுத்தினாலும் சுப்பற்றை கொல்லைக்கு வருவன். அதுவும் நாங்கள் ஆர் தெரியுமே? நேர நெத்தியில வைக்கிற பொட்டை தலையச் சுத்தி வந்து மூக்கில வைக்கிற ஆக்களெல்லே. அப்பிடிப்பட்ட ஒரு பாரம்பரியத்தில பிறந்த நான் சுத்தாமல் என்னெண்டு விஷயத்துக்கு வாறது பாருங்கோ. உப்பிடித்தான் 750 ரோட்டில போனால் 9 மைல் தூரத்தில இருக்கிற பள்ளிக்கூடத்துக்கு............ சரி சரி..நீட்டி முழக்காம விஷயத்துக்கு வா எண்டுறியளா? இப்பிடி நீட்டாட்டா கதை சின்னனாப் போடுமெல்லே. விஷயத்துக்கு வாறன்.

வளையல் எண்டத விளக்க திரும்பவும் வந்தியரைக் கூப்பிடுவம். வந்தியரும் நானும் இப்ப அங்கிறியள் சரியோ. ஆனா, அந்தாள் நல்ல மனிசன் தானே. அதனால அந்தாள் என்னோட ‘பழம்' விட்டுக் கதைக்க ஆசைப்படுகுது எண்டு வச்சுக் கொண்டால், இப்ப வந்தியர்தான் நான் சொல்ல வந்த ‘வளையல்'. அதாவது, இரண்டு அங்கிறியளுக்கை வளைந்து கொடுத்து சமாதானம் செய்ய வாற ஆள்தான் நான் சொல்ல வந்த வளையல். இந்த வளையலின்ர அங்கிறி வளைஞ்சு வரேல்லையோ, இவரின்ர மானம் கப்பலேறீடும். சில வேளை சில வளையல்கள் மற்ற அங்கிறியால் ‘கொம்மாண கொப்புவாண கதையாத' எண்டு அவமானப் படுத்தப்படுவதும் உண்டு. இந்தக் 'கொம்மாவாணக் கொப்புவாண கதையாத' எண்ட வார்த்தைதான் ஒரு வளையலுக்குக் கிடைக்கிற மெத்தப் பெரிய அவமானம்.

நீ ஏதோ பெரிய ஆள் மாதிரி கனக்க எல்லாம் எழுதிறாய், இந்த அங்கிறி வளையல் பற்றி உனக்கென்ன அனுபவம் இருக்கிறது எண்டு கேக்கிறியளே. இதில கலாநிதிப் பட்டம் பெறுமளவுக்க பல அனுபவம் இருக்கிறது, ஒவ்வொரு வகுப்பிலையும். தங்கவேலரின்ர கேம்பிறிட்ஜ் கொட்டிலில படிக்கேக்க, 7ம் வகுப்பில நான் மொனிற்றராய் இருந்தபோது, எங்கட வகுப்பில என்னைத் தவிர 42 பொடியள். அதில 39 பேர் எனக்கு அங்கிறியள், அவையளுக்கு நான் அங்கிறி. அவையள்ள சில பேருக்கு நான் வளையல், சில பேர் எனக்கு வளையல்கள். இப்ப சொல்லுங்கோ, எனக்கில்லாத தகுதியா.

பி.கு: எங்கட ஊர்ப் பொரி விளாங்காய் சாப்பிட்டிருக்கிறியளா? ஒரு சுப்பர் சாப்பாட்டுச் சாமான் அது. அது ஒரு காலத்தில் குழுமங்களுக்கிடையே வேறு அர்த்தத்தில் பயன்பட்டது. அது பற்றி ஈழத்து முற்றத்தில அடுத்ததாய் எழுதிறன்.
This entry was posted on 1:57 PM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 comments:

On October 1, 2009 at 8:21 PM , Anonymous said...

நல்லாத்தான் இருக்கு..அது சரி உங்க ஊர் எதுன்னு சொல்லவேயில்லை?

 
On October 1, 2009 at 11:48 PM , Chayini said...

:))

 
On October 2, 2009 at 1:17 AM , கவிக்கிழவன் said...

சிறந்த எழுத்து சிறந்த கருத்து

 
On October 2, 2009 at 5:00 AM , Unknown said...

தூயா...
அப்பா வழி ஊர் கரணவாய்.. அம்மா வழி ஊர் நவிண்டில்

 
On October 2, 2009 at 5:00 AM , Unknown said...

நன்றி சாயினி...
பதிவுகளும் ஊதி ஊதித்தான் வசிக்கிறியளா (இப்பவும்)..:))

 
On October 2, 2009 at 5:01 AM , Unknown said...

நன்றி கவிக்கிழவன்...
///சிறந்த எழுத்து சிறந்த கருத்து/// நக்கல் இல்லைத்தானே

 
On October 2, 2009 at 6:51 AM , யசோதா.பத்மநாதன் said...

நாங்கள் கோவம் எண்டா நாக்கை நீட்டிக் காட்டுவம். அதுக்கு வாற கோவம் இருக்கே!அது ஏனெண்டு இப்ப வரேக்கும் விளங்கேல்ல.

அது ஒரு காலம் ராசா!

பிறகு கொஞ்சக் காலம் போக பெரு விரலக் காட்டினம்.நேசம் எண்டா கடசி, சின்னவிரல்.

ஆனா முதல் பாடம் பெரு விரலக் காட்டினா இடைவேளையில சின்னவிரலக் காட்டிப் போடுவம்.

நீங்கள் ஃபூ ஃபூ எண்டெல்லாம் ஏதோ ஊதித் தள்ளியிருக்கிறியள்?:-)

நீங்கள் சொல்லுறது இன்னும் புதுசா எல்லோ இருக்கு!!

உந்தப் பிள்ளையள பள்ளிக்கும் ரியூசனுக்கும் படிக்கவெண்டு அனுப்ப அதுகளப் பாருங்கோ என்ன செய்து கொண்டு இருந்திருக்குதுகள் எண்டு?:-)

 
On October 2, 2009 at 9:38 AM , வந்தியத்தேவன் said...

நான் உன்னோடை கோபம் அதாலை என்டை பின்னூட்டம் பிறகுதான் போடுவன் முதலில் நீ நேசம் போடனும்

 
On October 4, 2009 at 11:47 AM , Unknown said...

///உந்தப் பிள்ளையள பள்ளிக்கும் ரியூசனுக்கும் படிக்கவெண்டு அனுப்ப அதுகளப் பாருங்கோ என்ன செய்து கொண்டு இருந்திருக்குதுகள் எண்டு?:-)///
என்ன செய்ய மணியாச்சி... எங்கட வயசு அப்பிடி

 
On October 4, 2009 at 11:48 AM , Unknown said...

///நான் உன்னோடை கோபம் அதாலை என்டை பின்னூட்டம் பிறகுதான் போடுவன் முதலில் நீ நேசம் போடனும்///

நேசம் போட வந்தா வளையல் எண்டு சொல்லக்கூடாது... விளங்கிச்சோ

 
On October 6, 2009 at 8:29 AM , Chayini said...

சீ.. சீ.. அந்தக் காலமே நான் ஊதினதாக எனக்கு நினைவில்லை.. அதாவது அதை எதிர்த்திருக்கிறேன்.. :))