•10:37 PM
நினைக்கவே வெட்கமாக இருக்கிறது. ஈழத்து முற்றத்தில் இதுவரை 137 பதிவுகள் இடப்பட்டும் என்னால் ஒன்றைக் கூட வழங்கமுடியவில்லை.
இதுகூட ஏற்கெனவே என் தளத்தில் முன்பு பிரசுரிக்கப்பட்ட ஒரு பதிவே..
நண்பர் வந்தியத்தேவனின் அன்பான வற்புறுத்தல்,மிரட்டலான வேண்டுகோளின் காரணமாக ஈழத்து முற்றத்தில் மீள் பதிக்கிறேன்.
(எனது பதிவுத்தளத்தை விடவும் தொடர் மின்னஞ்சல்களாகவும் யாரோ எழுதியது என்றும் உங்களில் பலபேரை இது வந்து சேர்ந்திருக்கும் என்றும் நினைக்கிறேன்.. பல தடவை "வாசித்துப் பாருங்கள்.. நல்லா இருக்கு" என்றெல்லாம் எனக்கே வருவது வேடிக்கை..)
இதோ நான் வசிக்கும் கொழும்பில் தமிழர் தலைநகரான வெள்ளவத்தையின் தல புராணம்..
வெள்ளவத்தை
கொழும்பிலே தமிழர் மிகச் செறிவாக வாழும் -
அதிகமாகத் தமிழ் பேசுவோரே
வாழும் ஒரு செழிப்பான பகுதி! (கொழும்பு 06)
பல பிரபல ஆலயங்கள்,கடைகள்,சந்தை என தமிழரின் முக்கியமான இடங்கள் நிறைந்த இடம்.
வெள்ளவத்தை பற்றிய ஒரு குறிப்பு இது!
கவிதை மாதிரியான ஆனால் கவிதையாக அல்லாத ஒரு பதிவு!
நானும் ஒரு வெள்ளவத்தை வாசி என்ற காரணத்தால்
ஏனைய வெள்ளவத்தைவாசிகளும்
கோபப்படாமல் சிரித்துவிடுங்கள் என்னோடு சேர்ந்து!
எங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்
பெயரளவில் இது குட்டி யாழ்ப்பாணம்
எனினும்
பெருமளவு வெளிநாட்டுப் பணமும்
உள்நாட்டில் வாழும் தமிழரில் அதிகம்
பணம் உழைப்போரின செல்வாக்கையும் பார்த்தால்
இது ஒரு குட்டி லண்டன் அல்லது
டொரன்டோ(வேறேதாவது வெளிநாட்டு நகரங்களாயிருந்தாலும் போட்டுக்கலாம்)
அடுக்குமாடிகளின் (அபார்ட்மென்ட்) அணிவகுப்புகள்
ஒவ்வொரு வீதியிலும் இரண்டு மூன்று அடுக்குமாடிகள்
கிடைக்கும் சிறுதுண்டு நிலத்திலும்
ஒடுக்கி முடுக்கி ஒரு அபார்ட்மெண்ட் முளைவிடவைக்கும்
மூளை படைத்தோர் எங்கள் பொறியிலாளர்!
வீட்டிற்குள்ளே பைப்பில் நீர் வரத்து குறைவெனிலும்
மழை பெய்யும் காலத்தில் வீதியில் குளமே
கட்டிப் பாசனம் செய்யலாம்!
எங்கள் வெள்ளவத்தை வீதிகளில்
விலையுயர்ந்த வெளிநாட்டுக் கார்கள் ஒடும்!
பென்ஸ்,பீ எம் டபிள்யூ,பஜிரோ,லாண்ட்ரோவர்,பெராரி
இன்னும் ரோல்ஸ் ரோய்ஸ் கூடக் காணலாம்.
குண்டு குழி வீதிகளில் குலுங்காமல் இவை
பயணிக்க புதியதாய்
நுட்பங்கள் யாராவது உருவாக்க வேண்டும் இனி!
பேரம் பேசாமல் கேட்பதை சந்தையில்
அள்ளிக் கொடுத்து
சாதாரண மரக்கறி விலைகளையும்
சர்வதேச சந்தை விலையாக உயர்த்தியவர்களும்
எங்கள் வெள்ளவத்தைத் தமிழரே!
எனினும்
தமிழ் மொழியாக்கத்தில் தீவிரமானவர்கள் நாம்!
காய்கறிக் கடைக்காரர் முதல்
காக்கிச் சட்டைக்காரர் வரை அனைவருமே
தமிழறிவர் வெள்ளவத்தையில்!
பஸ் கண்டக்டர் கூட
வெள்ளவத்தை வந்தால்
தமிழிலே பேசித்தான்
டிக்கெட் கொடுப்பார்!
பேச்சு வெற்றியளிக்கும் என்பது இங்கே மட்டும்
பெருமளவில் உண்மை!
பேசிப் பேசியே (தமிழன்) தமிழ் தெரியாதவரும்
தமிழிலேயே பேசுவர்!
எட்டுத்திசையும் அச்சமின்றித் தமிழ் முழங்கும்
தலைநகரின் தமிழ்த் தலைநகரம்
தடுக்கி விழுந்தால் ஆலயம்
தடுமாறி விழுந்தால் சைவக்கடை
ஊர் முழுவதும் நகைக்கடையும் புடவைக்கடையும்
நிரம்பி வழியும் எம்மவரின
வெளிநாட்டுப் பணத்தினால்!
பொலீஸ் பதிவுகளும் இங்குதான் அதிகம்
பொலீஸ் கைதுகளும் இங்கு தான் அதிகம்
வெள்ளை வான்களும் அதிகளவில் அலையும்
வீதிக்கு வீதி லொட்ஜ்களில் ரெய்டுண்டு
எனினும்
வீதிக்கு வீதி சந்திக்கு சந்தி
விடுப்புகள் பேசியும்
வீராப்பாய் விண்வீரம் பேசியும்
நிற்கும் எம் இளைஞர் கண்டால்
வாழ்வது நாம் வடக்கிலா கிழக்கிலா என்ற
எண்ணம் எட்டிப் பார்க்கும்!
அண்மைக்கால வெள்ளவத்தையில் புதியதோர் மாற்றம்
ஆன்டிமார் என்ன ஆச்சிமார் கூட
நைட்டிகளுடன் சொப்பிங் போகும் நிலை!
முழங்கால் கீழே கூட மூடியலைந்த காலம் போய்
முகம் தவிர வெறெதையும் மூடாத
புதிய மகளீர்
கண்களுக்கு விருந்தளிக்கும்
கவர்ச்சி catwalk இப்போது
எங்கள் வெள்ளவத்தையில் சாதாரணம்!
வெறெங்கு எந்த மொழியில் விளம்பரம் செய்தாலும்
வெள்ளவத்தையில் மட்டும்
தமிழ் இல்லையெனில்
வியாபாரம் படுத்துவிடும்!
வங்கி வட்டிக்கடை முதல் வாடகைக் கார் வரை!
(அதில் பாதித் தமிழ் தமிழாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை)
காலை வேளைகளில் கடற்கரையோரம் இன்னுமொரு வேடிக்கை..
நாள் முழுதும் சாப்பிட்டு சேர்த்ததெல்லாம் குறைக்க
காலில் சப்பாத்து அணிந்து அங்கிள்மாரும்,ஆன்டிமாரும்
அணிவகுத்து நடை பழகுவார்கள்..
உடல் மெலிவோ,கொழுப்போ
காலையில் பீச் வோக்கிங் போகாவிட்டால் பாஷன் இல்லைப் பாருங்கோ..
நம்ம வெள்ளவத்தைப் பெண்களின் தமிழே தனியான தமிழ் தான்..
ஆங்கிலேய அழகிகளும் தோற்றுப் போவர்
அவர்கள் ஆங்கில உச்சரிப்பில் ..
ஆனாலும் ஆங்கிலம் பாதி தமிழ் பாதி என்று மிக்ஸ் பண்ணி மிதப்புக் காட்டுவதில்
எங்கள் வெள்ளவத்தை பெண்மணிகளை யாருமே வெல்ல முடியாது
(நாங்களும் தான் அந்த ஸ்டைலில் டமில் பேசப் பார்க்கிறோம்..
ம்கூம் முடியவே இல்லை.. அது எங்கள் பெண்களுக்கு மட்டுமே முடியுது)
குண்டுகள் எங்கு வெடித்தாலும்
குண்டுகளை எங்கே போட்டாலும்
கோவில்கள் எங்கள் பெண்களால் நிறையும்
அவருடல்களில் தங்கங்கள் விளையும்
உடல் தழுவிப் பட்டாடைகள் நெளியும்!
கல்யாணங்களோ காசால் களைகட்டும்
தமிழ்நாடும் தோற்றுப் போகும் தடல்புடலில்.
கிடைக்கும் நிலமெல்லாம்
கோடி கொடுத்து வாங்கவும்
நம்மவர் தயாரென்பதால்
இலங்கையின் வேறு பல கோடிகளுக்கு
ஓடிவிட்டார்கள் சிங்களவர்
வெகுவிரைவில் வெள்ளவத்தை முழுவதும்
தமிழொலிக்கம் (தமிழ் மட்டுமே)
கரையோரக் கிராமங்களில் சிங்களக் குடியேற்றம் என்று
நாம் பொங்கியெழுந்த காலம் போய்த்
தலைநகருக்குள்ளேயே
தட்டுத் தடங்கலின்றித் தமிழரின்
தொடரான குடியேற்றம் என்று
கொதித்தெழக் கூடும்
(கொட்டாஞ்சேனை மட்டக்குளி போன்றவையும்
இதற்கு பொருத்தமே)
மூலப் பதிவு - எங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்
4 comments:
32வது, 33வது லேன், லிற்றில் ஏசியா, ரொலெக்ஸ், நளபாகம் ரோயல் பேக்கரி, சமந்தா... இன்னும் எத்தினை?? இருந்த ஐந்து மாசத்தில 4 மாசம் லிற்றில் ஏசியாவிலையும் (பக்கத்தில ஒரு ஒழுங்கையில ஏதோ ரியூசன் இருக்காம்), வெள்ளவத்தை பீச்சிலையும் (பீச்தானே அது??) கழிஞ்சது
கலக்கலாத் தான் இருக்கு
//பல தடவை "வாசித்துப் பாருங்கள்.. நல்லா இருக்கு" என்றெல்லாம் எனக்கே வருவது வேடிக்கை//
ஒருவர் Facebook இல் இட்டிருந்தார். அதற்கு Comments ஆக உங்கள் URL இனை இட்டேன். Comments நீக்கப்பட்டுவிட்டது.
இந்தப் பதிவில் லோஷன் சில விடயங்களை விட்டுவிட்டார். அவை எவை என்றால்
பஸ் ஸ்டாண்டுகளில் சைட் அடிக்க நிற்கும் இளம் வயது வாலிபர்கள்.
அவர்கள் தங்களைப் பார்க்க வேண்டும் என பல நிமிடங்கள் நின்றுவிட்டு 5 பஸ்சை கொண்டக்டர் சரியில்லை என்று சொல்லி ஆறவது பஸ்சில் பயணம் செய்யும் வனிதையர்கள்.
ரியுசன் சென்டர்களில் படிக்கும் பொடியள் செய்யும் அட்டகாசங்கள். (மொட் ஸ்ரடி சென்டரில் நாம செய்யாததா).
நோ லிமிட்டில் ஷொப்பிங் செய்தால் தான் ஜீரணமாகும் என நினைக்கும் சிலர்.
வாரம் தோறும் தமிழ்ச் சங்கத்தில் ஏதோ ஒரு புத்தக வெளியீட்டு விழாவிலோ அல்லது கூட்டத்திலோ கலந்துகொள்ளும் முதியவர்கள்.
குழுக்களாக சண்டைபோடும் விடலைகள்
காலிவீதியிலோ அல்லது நளபாகத்திலோ சந்திக்கும் வலைப்பதிவர்கள்.
வெள்ளவத்தை கடற்கரையும் அடர்ந்த புதர்களும் குடைகளும்..